அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. தாருல் ஹுதாவை அறிமுகம் செய்வதன் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் தாருல் ஹுதாவின் நோக்கத்தையும் அதன் பணிகளையும் விவரிப்பதுடன் அதன் இன்றைய தேவைகளையும் தங்கள் முன் வைக்கிறோம்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாவர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப் பிடித்து, ஸகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாக வும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 9 : 71)
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். (அல் குர்ஆன் 3 : 104)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விடட்டும்). இது ஈமானின் (நம்பிக்கையின்) குறைந்தபட்ச அளவாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: நம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும், கருணை காட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் உதாரணம் ஒரே உடலைப்போல. உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன. (ஸஹீஹுல் புகாரி)
இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும் முறையான வழி காட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் மற்றும் நபி மொழிகளுக்கிணங்க சமுதாயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து, அல் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை திருப்தியை அடையவேண்டும் என்ற தூய எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் தாருல் ஹுதா.