சூரா தஹ்ரின் இறுதிப் பகுதியும் சொர்க்க அமல்களும்! | Tamil Bayan - 982
சூரா தஹ்ரின் இறுதிப் பகுதியும் சொர்க்க அமல்களும்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : சூரா தஹ்ரின் இறுதிப் பகுதியும் சொர்க்க அமல்களும்!
வரிசை : 982
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 18-7-2025| 22-01-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை, தக்வாவை உபதேசம் செய்தவனாக, மறுமை வாழ்க்கைக்காக நன்மைகளைச் சேகரித்துக் கொள்ளும்படி, அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் நற்கருமங்களைச் செய்து, மரணத்திற்கு தயாராக இருக்கும்படியும், சொர்க்கத்தைப் பெறுவதற்கு தயாராக இருக்கும்படியும் உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
வெள்ளிக்கிழமைக்காக ரசூலுல்லாஹ் ﷺ எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதையும், குறிப்பாக தொழுகைகளில் ஓதுவதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த சூராக்களையும், அந்த சூராக்களில் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதையும், இதற்கு முந்தைய இரண்டு ஜுமுஆக்களில் நாம் பார்த்தோம்.
குறிப்பாக, சூரா தஹ்ரை இரண்டு ஜுமுஆக்களில் பார்த்தோம். அதற்கு முன்பு சூரா சஜ்தாவையும் பார்த்தோம். இன் ஷா அல்லாஹ், இன்று சூரா தஹ்ர் எனப்படும் 76-வது அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை பார்க்கவிருக்கிறோம்.
அதனைத் தொடர்ந்து, அல்லாஹு தஆலா நமக்காக தயாரித்து வைத்திருக்கக்கூடிய அந்த அற்புதமான சொர்க்கத்தின் வர்ணனையை இந்த சூராவில் நாம் செவியுற்றோம், கேட்டோம். அந்த சொர்க்கத்தைப் பெறுவதற்காக ரசூலுல்லாஹ் ﷺ கற்றுக் கொடுத்த சில முக்கியமான, இலகுவான சொர்க்க அமல்களை இன் ஷா அல்லாஹ் பார்த்து, உரையை நிறைவு செய்வோம்.
ரப்புல் ஆலமீன் பேசுகிறான்;
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا
நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். (அல்குர்ஆன் 76:23)
இந்த அத்தியாயத்தின் இறுதியில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது நபியிடத்தில் நேரடியாக பேசுகிறான். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ மிகப்பெரிய சோதனைகளுக்கும் சிரமங்களுக்கும் இடையில் இந்த தாவா பணியை செய்து வந்தார்கள்.
இன்று நாம் இருப்பது போன்று ரசூலுல்லாஹ் ﷺ இருக்கவில்லை. இன்று நாம் எல்லாம் கூடி வந்தால், எல்லாம் சௌகரியமாக அமைந்தால் மார்க்கத்தைப் பின்பற்றுவோம், மார்க்கப் பணியை செய்வோம். இல்லையென்றால் தீனை நடுத்தெருவில் விட்டுவிட்டு, தன்னோடு தனது குடும்பத்தோடு ஓடி விடுவோம்.
அது ஒரு யதீமான குழந்தையை வளர்ப்பது போல. நம்முடைய குழந்தைகளுக்கு பிறகு மிச்சம் மீதி இருந்தால் யதீமான குழந்தைக்கு கொடுப்போம்; இல்லையென்றால் அந்த யதீமான குழந்தையை நடுத்தெருவில் விட்டுவிட்டு, நம்ம குடும்பத்தோடு ஓடிப் போவது போல, இன்று நாம் நம் மார்க்கத்தோடு நடந்து கொள்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், இன்று நமக்கு இருக்கக்கூடிய குடும்பத்தை விட மிகப் பெரிய குடும்பத்தைச் சுமந்தவர்கள். அதுபோன்று அவர்களைப் பின்பற்றிய தோழர்கள்—ஒருவர் அல்ல, இருவர் அல்ல—நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோழர்களின் பொறுப்புகளை சுமந்திருந்தார்கள். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்; இஸ்லாமை ஏற்று, தனது குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும், ஊர்களையும் எல்லாம் துறந்து, “அல்லாஹ் தான் கதி, அல்லாஹ் தான் மீளும் இடம்” என்று அல்லாஹ்வுடைய தூதரிடம் யார் ஒதுங்கினார்களோ, அவர்களை அரவணைக்க வேண்டும்; மதீனாவை பாதுகாக்க வேண்டும்.
இத்தனை சிரமங்களையும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ பொறுமையுடன் தாங்கினார்கள்.
ஒருமுறை கூட “நான் இவ்வளவு சிரமப்படுகிறேனே, எப்படி தாவா செய்வேன்?” என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ முறையிடவில்லை.
அன்பானவர்களே! ஒரு முஃமினுக்கு சிரமங்கள்தான் அவனை பக்குவப்படுத்தக்கூடியவை; அவனுடைய ஈமானை சுத்தப்படுத்தக்கூடியவை; அவனுக்கு அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அளிக்கக்கூடிய பாதைகள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இத்தகைய மகத்தான பணியை சிறப்பாகச் செய்தார்களே! அல்லாஹு தஆலாவின் இந்த வழிகாட்டுதலை ஏன் இந்த செய்தியாக உங்களிடம் சொல்லுகிறேன் என்றால், இந்த வசனம் அப்போதுதான் முழுமையாகப் புரியும்.
உங்களுடைய தூதர் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்: “நபியே! நீங்கள் சப்ர் செய்ய வேண்டுமா? சகித்துக்கொள்ள வேண்டுமா? உறுதியாக நிலைத்திருக்க வேண்டுமா? உங்களுடைய தாவா பணியில் வெற்றி பெற வேண்டுமா? ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டுமா? கவலைப்படாதீர்கள்! நாம் உங்களுக்கு இந்தக் குர்ஆனை கொடுத்து விட்டோம். அதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 76:23)
குர்ஆன் அதற்காக கொடுக்கப்பட்டது. எதற்காக அல்ல? கத்தம் ஃபாத்திஹா ஓதுவதற்காக அல்ல. போட்டிகள் வைப்பதற்காக அல்ல. பட்டங்கள் கொடுப்பதற்காக அல்ல. குர்ஆன், இதை கொண்டு தஃவா செய்வதற்காக. இதைக் கொண்டு சமூகத்தை உருவாக்குவதற்காக, இதைக் கொண்டு உன்னதமான மக்களை புடம் போட்டு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களை முஃமின்களாக, முஸ்லிம்களாக, அழைப்பாளர்களாக, உருவாக்குவதற்காக குர்ஆன் கொடுக்கப்பட்டது.
குர்ஆன் அழகிய எழுத்துக்களால் எழுதப்பட்டு சுவர்களில் மாட்டுவதற்காக அல்ல. இன்று நாம் செய்வது போல. குர்ஆனை கொண்டு நமது வாழ்க்கையை அலங்கரிப்பதை விட, குர்ஆனை கொண்டு மஸ்ஜித்களின் சுவர்களையும், நமது வீடுகளின் சுவர்களையும் அலங்கரிக்கக் கூடிய முஸ்லிம்களாக இன்று நாம் மாறிவிட்டோம்.
அல்லாஹ்வுடைய உதவி வர வேண்டுமா? 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்து அந்தக் குர்ஆன் வசனத்தை ஃப்ரேமில் மாற்றி வைத்து பரக்கத் தேடுகிறார்கள்.
அல்லாஹ் இப்படிச் சொல்லியிருக்கிறானா? ரசூலுல்லாஹ் ﷺ இப்படிச் வழிகாட்டியிருக்கிறார்களா? அந்த நூறு ரூபாயை கொண்டு ஒரு ஏழை, ஒரு மிஸ்கீனுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். அல்லாஹ் அதில் பரக்கத் தருவான். பசியாற்றுங்கள், உணவளியுங்கள் — ஆனால் அதை செய்ய மாட்டார்கள். அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்!
சகோதரர்களே! இந்த குர்ஆன் அவ்வளவு அற்புதமானது. அல்லாஹ் நபியவர்களிடம் சொல்கிறான்:
“நபியே! இதோ சொர்க்க வாழ்க்கை. இதோ வெற்றிக்கான வழி. இந்த உம்மத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்று பயப்படாதீர்கள். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டியதில்லை. குர்ஆனை படியுங்கள். குர்ஆனில் எல்லாம் இருக்கிறது.”
அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு சிறந்த ஆட்சியாளராக உருவாக்கியது யார்? — அல்குர்ஆன்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு மகத்தான நீதிமானாக உருவாக்கியது யார்? — அல்குர்ஆன். ஸஹாபாக்களை உருவாக்கியது யார்? — அல்குர்ஆனும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களும்.
இந்த குர்ஆனை நாம் வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிக் கொண்டோம். அல்லது சடங்குகளுக்காக ஓதப்படும் ஒரு மந்திரமாக மாற்றிக் கொண்டோம்.
ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள், இந்த குர்ஆனை வாழ்க்கையை மாற்றுவதற்கான தத்துவங்களாகவும், ஞானங்களாகவும், ஒழுக்கப் போதனைகளாகவும் வைத்திருந்தார்கள். ஸஹாபாக்களும் அதேபோல்தான் அந்தக் குர்ஆனை பின்பற்றினார்கள்.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا
வசனத்தின் விளக்கம் : நபியே! சாதாரணமான வேதமல்ல. இந்த வேதத்தை நாம் இறக்கினோம். எப்படி? தன்ஜீலா. அதாவது, எப்போது, எந்த வசனத்தை, எந்த சூழ்நிலையில் இறக்க வேண்டுமோ, எப்போது எந்த உபதேசத்தை கொடுக்க வேண்டுமோ அப்படி நாம் கொடுத்தோம். அல்லாஹு அக்பர்!
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு ஒவ்வொரு வசனமும் அவர்களுடைய உள்ளத்தை பக்குவப்படுத்தியது. அவர்களுடைய குணத்தை பக்குவப்படுத்தியது. அவர்களுக்கு பொறுமையைக் கொடுத்தது. அவர்களுக்கு சகிப்பைக் கொடுத்தது. அல்லாஹு தஆலா இந்த குர்ஆனின் மூலமாக அவர்களுக்கு கல்வி ஞானத்தை கொடுத்தான்
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ
இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். (அல்குர்ஆன் 4:113)
அல்லாஹ்வின் அடியார்களே! முதலிலே குர்ஆனிலே கல்வியை தேட வேண்டும், குர்ஆனிலே ஞானத்தை தேட வேண்டும். அல்லாஹ் சொல்கிறான் நபியே! கவலைப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் தீர்வு இந்த குர்ஆனிலே இருக்கிறது.
இன்று, குர்ஆன் மனனம் செய்யக்கூடிய மதரஸாக்கள் இருக்கின்றன. ஆனால் குர்ஆனுடைய சட்டங்களை வாழ்க்கையில் பின்பற்றி, அதன்படி நடப்பதற்கான பயிற்சி பாசறைகள் இல்லை. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ குர்ஆனுடைய வாசகங்களை மட்டும் சஹாபாக்களுக்கு மனப்பாடம் செய்து கொடுக்கவில்லை. அந்த குர்ஆனை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதையும் பயிற்சியாக கற்றுக் கொடுத்தார்கள்.
மஸ்ஜிதுன் நபவி என்பது குர்ஆனை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கான ஒரு பயிற்சி கூடமாக இருந்தது. ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் பயணம், போர், சமாதானம், குடும்ப வாழ்க்கை — ஒவ்வொன்றும் சஹாபாக்களுக்கு குர்ஆனை வாழ்க்கையில் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கற்றுத் தரும் உயிருள்ள பாடங்களாக இருந்தன. குர்ஆனின் ஒழுக்கங்களையும், குர்ஆனின் சட்டங்களையும் வாழ்க்கையில் எப்படி கொண்டு வர வேண்டும் என்பதற்கான எதார்த்தமான, செயல் ரீதியான, பிராக்டிகல் பயிற்சியாகவே அது அமைந்தது.
இன்று எங்களுடைய மதரஸாக்களிலும், உலகம் முழுவதும் உள்ள பல மதரஸாக்களிலும், வார்த்தைகள் சொல்லித் தரப்படுகின்றன; பொருள்கள் சொல்லித் தரப்படுகின்றன. ஆனால் அமல்கள் சொல்லித் தரப்படுவதில்லை.
ஏன் இன்று முஸ்லிம் சமுதாயம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது? காரணம் — நாம் அமல்களோடு வாழவில்லை; வார்த்தைகளோடு மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ் சொல்கிறான்: நபியே! என்ன செய்ய வேண்டும்? குர்ஆன் இருக்கிறது. இனி என்ன செய்ய வேண்டும்?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا
ஆக, உமது இறைவனின் கட்டளைக்காக (-அவன் உம்மீது கட்டாயமாக்கிய கடமைகளையும் சுமத்திய பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்) நீர் பொறுமையாக இருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்! (அல்குர்ஆன் 76:24)
வசனத்தின் விளக்கம் : உலகமே சேர்ந்து ஒரு பாதையை காட்டினாலும், உலகமே சேர்ந்து ஒரு பாதையின் பக்கம் உங்களை அழைத்தாலும், உங்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்தாலும், உங்களை அச்சுறுத்தினாலும், பயமுறுத்தினாலும் எவன் பேச்சையும் கேட்காதீர்கள்.
அல்லாஹ்வுடைய அந்த آثم-ஆசிம், كفور-கஃபூர் இரண்டு வார்த்தை. அதாவது ஆபாசங்களையும், அசிங்கங்களையும், அனாச்சாரங்களையும், அநாகரிகத்தையும், பரப்புவதை மட்டுமே யார் கொள்கையாக, கோட்பாடாக வைத்திருக்கிறானோ, அவர்கள் தான் ஆசிம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
மேற்கத்தியர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு ஏதாவது ஒழுக்கம் தெரியுமா? அவர்களுக்கு ஏதாவது அழகிய வெட்கம் பண்பாடு தெரியுமா? மானம் கெட்டவர்கள். மிருகத்தை விட கேவலமானவர்கள். அவர்களுடைய அந்த கலாச்சாரம் ஷிர்க் உடைய கலாச்சாரம். அது அவர்களுடைய சிலுவை கலாச்சாரங்கள். இப்படி அவர்களுடைய எந்த சமூக கலாச்சாரமும் நபியே உங்களை மிகைத்து விட வேண்டாம். உங்களை நிர்பந்தப்படுத்திவிட வேண்டாம். உங்களுக்கு குர்ஆன் வந்துவிட்டது.
எவ்வளவு பெரிய பாவி, எவ்வளவு பெரிய அக்கிரமக்காரர்கள் வந்து உங்களை எந்த வகையில் நிர்பந்தித்தாலும் சரி, அவன் பேச்சை கேட்காதீர்கள். குர்ஆனிலே இறைவனுடைய சட்டத்திலே உறுதியாக இருங்கள்.
அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு என்ன தேவை? ஈமான் தேவை. யகீன் தேவை. அந்த உள்ளம் பண்பட வேண்டும். உள்ளத்திலே அப்படிப்பட்ட உறுதி இருந்தால்தான் அல்லாஹ்வுக்காக உலகத்தையே எதிர்த்து நிற்க கூடிய அந்த ஈமானிய வலிமை ஏற்படும். அப்படி இல்லை என்றால், சென்றவன், வருபவன், யாருக்காகவும் உடனே தன்னுடைய மார்க்கத்தை மாற்றிக் கொள்வார்கள். வறுமையை பயந்து மார்க்கத்தை மாற்றுவார்கள். செல்வத்தின் மீது ஆசைப்பட்டு மார்க்கத்தை மாற்றுவார்கள். அற்ப எதிரிகளை பயந்து மார்க்கத்தை மாற்றுவார்கள்.
அல்லாஹ் அதற்கு சொல்லி காட்டுகிறான்; ஈமானை பலப்படுத்துங்கள். ஈமான் எப்படி பலம் பெறும்? நடன விடுதிகளை திறப்பதின் மூலமாகவா? சமூகத்திற்கு பொருளாதாரம் வேண்டும் என்று ஆபாசங்களை திறப்பதின் மூலமாகவா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا
இன்னும், உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 76:25)
கருத்து : நபியே தொழுகையை நிலை நிறுத்துங்கள். தொழுகையிலே காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வுடைய திக்ரை நீங்கள் துதியுங்கள். அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூருங்கள்.
தொழுகை நிலை நிறுத்தப்பட வேண்டும். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
இன்று, தொழக்கூடியவர்கள் கூட தொழுகையை ஒரு பெயருக்கான அற்ப சடங்காக மாற்றி விட்டோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! எதுவரை இந்த தொழுகை உயிரோட்டம் உள்ள தொழுகையாக ஆகாதோ நம்மால் எந்த எதிரியையும் மிகைக்க முடியாது.
ஏன்? எதிரிகளை எதிர்த்து நிற்கக்கூடிய நெஞ்சுக்கு நேர் எதிரிகள் நிற்கக்கூடிய நேரத்திலும் கூட தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹு தஆலா கட்டளையிடுகிறான்.
ஒரு ரக்அத்தையாவது தொழுது விட வேண்டும். நான்கு ரக்அத் ஃபர்ளுகளை ஒரு ரக்அத்தாக அல்லாஹ் சுருக்கி இருக்கிறான் என்றால் இந்த தொழுகைக்கும், இந்த தொழுகையை சரியாக நிறைவேற்றுவதற்கும், முஸ்லிம் உம்மத் வெற்றி பெறுவதற்கும், முஸ்லிம் உம்மத் ஓங்குவதற்கும் இடையிலே விவரிக்க முடியாத மிகப்பெரிய ஒற்றுமை, மிகப் பெரிய உறுதியான தொடர்பு இருக்கிறது.
وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا
இன்னும், இரவில் அவனுக்காக சிரம் பணிந்து (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) தொழுவீராக! இன்னும், நீண்ட நேரம் (உபரியான தொழுகைகள் மூலம்) அவனை தொழுது வணங்குவீராக! (அல்குர்ஆன் 76:26)
விளக்கம் : மஃரிபு தொழுகை, இஷா தொழுகை, பிறகு இரவு நேரத்திலே நஃபிலான, உபரியான வணக்க வழிபாடுகள், சுஜூது, திக்ர் என்று நம்முடைய ஈமானை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் அடியார்களே! அவமானம், கேவலம், அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! முஸ்லிம் நாடுகளில் இஷா தொழுகை முடிந்து பத்து நிமிடங்களிலேயே மஸ்ஜிதுகள் பூட்டப்படுகின்றன. முஸ்லிம் முஹல்லாக்களிலே மஸ்ஜிதுகள் பூட்டப்பட்டு விடுகின்றன.
திறந்து இருப்பது எது? எது திறந்திருக்கிறது? எங்கே ஆபாசங்களும், அசிங்கங்களும், எங்கே அல்லாஹ்வுடைய சட்டங்கள் மீறப்படுகின்றனவோ அவை இரவெல்லாம் திறக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றன. மஸ்ஜிதுகள் பூட்டப்பட்டு எங்கே ஷைத்தானுடைய ஆதிக்கம் இருக்குமோ அது திறக்கப்பட்டால் அனுமதிக்கப்பட்டால் பிறகு எப்படி சமுதாயம் உருப்படும்? சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ் சொல்கிறான்: இந்த ஈமானுக்கு தேவை இந்த யகீனுக்கு தேவை அந்த வணக்க வழிபாட்டிலே இருக்கக்கூடிய ஈடுபாடு. அல்லாஹ் அதை எப்படி சொல்லுகிறான்? நபியே உங்களுடைய ரப்புடைய பெயரை காலையிலும், மாலையிலும் துதியுங்கள். இரவிலும் நீங்கள் துதியுங்கள். சுஜூது செய்யுங்கள். ரப்புக்காக நீண்ட நேரம், நீண்ட இரவு அல்லாஹ்வை தொழுது பழகுங்கள். ஃபஜ்ருடைய தொழுகை, இஷாவுடைய தொழுகை, மஹ்ரிபுடைய தொழுகை என்று அந்த தொழுகைகளை நீங்கள் சரி செய்யுங்கள். தஹஜ்ஜுத் உடைய தொழுகையை நீங்கள் தொழுது வாருங்கள். மறுமைக்காக வாழுங்கள்.
اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا
நிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள். இன்னும், அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகிறார்கள். (அல்குர்ஆன் 76:27)
இவர்கள் உலகத்தை தான் நேசிப்பார்கள். யாரைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறான்? இந்த ஈமானையும், குர்ஆனுடைய பாதையையும் தேர்ந்தெடுக்காதவர்கள். அவர்களுக்கு தேவை இந்த அவசரமான உலக வாழ்க்கை மட்டும் தான். மறுமை அவர்களுக்கு முக்கியம் அல்ல. எந்த மறுமை மிகக் கடினமான நாளோ அந்த மறுமையை விட்டு விடுகின்றார்கள்.
மிகப்பெரிய எச்சரிக்கை அல்லாஹ் சொல்கிறான். இந்த உலகத்துக்காக யார் வாழ்ந்தார்களோ, மறுமையை மறந்தார்களோ, அவர்கள் அற்பமான அவசரமான உலக வாழ்க்கையை தேடினார்கள். மிகப்பெரிய கடினமான நாளாகிய மறுமையை மறந்து விட்டார்கள்.
அடுத்து, அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا
நாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்ற மனிதர்களை ( அமல்களால் அவர்களுக்கு மாற்றமானவர்களை அவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம். (அல்குர்ஆன் 76:28)
விளக்கம் : நாம்தாம் இந்த மக்களை படைத்தோம். இவர்களுக்கு நாம் தான் வலிமையை கொடுத்தோம். நாம் நாடினால் இவர்கள் அல்லாத வேறு சமூகத்தையும் கொண்டு வருவோம். நபியே! அல்லாஹ்வுடைய ஆற்றலிலே நீங்கள் நிராசை அடைந்து விடாதீர்கள். அல்லாஹ்வுடைய வல்லமையிலே நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வுடைய நம்பிக்கையிலே அல்லாஹ்வுடைய யகீனிலே உறுதியாக இருந்தால், திரும்பவும் அல்லாஹ் சொல்கிறான். நபியே!
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا
நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆக, யார் (வெற்றி பெற) நாடுகிறாரோ அவர் தனது இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 76:29)
இந்த குர்ஆன் உங்களுக்கு ஒரு உபதேசமாக வந்திருக்கிறது. யார் விரும்புகிறாரோ அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைய வேண்டும் என்று, மறுமையின் வெற்றியை அடைய வேண்டும் என்று, அவர் இந்த குர்ஆனை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் பாதையை தேடிக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் பக்கம் தனது பாதையை அமைத்துக் கொள்ளட்டும்.
அல்லாஹ்வின் அடியார்களே! இதைவிட சிறந்த பாக்கியம் என்ன இருக்கிறது? நமது பாதை அல்லாஹ்வை நோக்கியதாக, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நோக்கியதாக ஆனதற்கு பிறகு உலகம் நமக்கு கிடைத்தால் என்ன? உலகத்தை நாம் இழந்தால் என்ன? ஆகவே தான் முஸ்லிம்களிலே போர்களில் கொல்லப்படுபவர்கள் தோற்றவர்களே அல்ல. காஃபிருக்குத்தான் போரிலே கொல்லப்படுவது தோல்வி. முஸ்லிம்களைப் பொறுத்தவரை வெற்றி அல்லது சொர்க்கம்.
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَاۤ اِلَّاۤ اِحْدَى الْحُسْنَيَيْنِ
(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? (அல்குர்ஆன் 9:52)
விளக்கம் : காபிர்களே! நிராகரிப்பாளர்களே! மறுப்பாளர்களே! எங்களுக்கு இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? இரண்டு நன்மைகளில், இரண்டு அழகிய முடிவுகளில் ஒன்றைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?
ஒன்று அல்லாஹ்வின் பாதையிலே வீர மரணம். வாழ்ந்தால் இந்த உலகத்திலே வெற்றி. முஃமினை பொறுத்தவரை யார் அல்லாஹ்வுக்காக தன்னை ஆக்கிக் கொண்டார்களோ அவர்களுக்கு ஒருபோதும் நஷ்டமே இல்லை. அவர்களுக்கு ஒருபோதும் இழப்பே இல்லை.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்: பயப்படாதீர்கள். யார் தனது ரப்பின் பக்கம் தன் பாதையை அமைத்துக் கொள்கிறார்களோ அவர் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் நாடமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். (அல்குர்ஆன் 76:30)
விளக்கம் : அடுத்து அல்லாஹு தஆலா ஒரு எச்சரிக்கையை செல்கிறான். ஒரு பெரிய எச்சரிக்கையை சொல்கிறான். ஒரு பயத்தை சொல்கிறான். நாம் முஃமின்கள், நாம் முஸ்லிம்கள் என்று பெருமை வந்து விடக்கூடாது.
அல்லாஹ்விடத்தில் இறுதிவரை பயந்து கொண்டே இருக்க வேண்டும். யா அல்லாஹ்! உனது அருளையும், உன்னுடைய தவ்ஃபீக்கையும் கொடு. என்னை நேரான பாதையில் உறுதிப்படுத்து என்று அல்லாஹ்வின் பக்கம் பயந்தவர்களாக, அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாகவே இருக்க வேண்டும்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ وَالظَّالِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا
அவன் யாரை நாடுகிறானோ அவரை தனது அருளில் அவன் நுழைய வைக்கிறான். அநியாயக்காரர்கள் - துன்புறுத்தும் தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன் 76:31)
இப்படியாக அன்பிற்குரியவர்களே! அல்லாஹு தஆலா இந்த சூராவை நிறைவு செய்கிறான். மக்காவிலே இறக்கப்பட்ட இந்த அத்தியாயம் எப்படிப்பட்ட ஒரு மனநிலையை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு சஹாபாக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும்!
இன்று அல்குர்ஆனுடைய அத்தியாயங்களை ஓதுகிறோம். அது எங்கே இறக்கப்பட்டது? எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது? அது எந்த செய்தியை சொல்கிறது? இது எல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.
சிலர், பரக்கத்துக்காக ஓதுகிறார்கள். சிலர், ஏதோ கடமைக்காக ஓதுகின்றார்கள். இல்லை அன்பானவர்களே! அல்குர்ஆன் ஓதப்பட வேண்டும். நேர்வழிக்காக. இந்த அத்தியாயத்துடைய இறுதியிலே அல்லாஹ் சொல்கிறான் அல்லவா! சொர்க்கத்தை பற்றி அல்லாஹு தஆலா அவனுடைய ரஹ்மத் அதாவது சொர்க்கத்திலே அல்லாஹு தஆலா அவன் விரும்பியவர்களை நுழைப்பான் என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொர்க்கத்துக்கான மிக இலகுவான சில அமல்களை சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
من قرأ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} أحد عشر مرات بنى الله له بيتا في الجنة
யார் குல் ஹுவல்லாஹு என்ற சூராவை பத்து முறை ஒரு நாளைக்கு ஓதுவாரோ அவருக்கு சொர்க்கத்திலே ஒரு வீடு அல்லாஹு தஆலா கட்டித் தருகிறான்.
அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 6472.
எவ்வளவு இலகுவான அமல். மேலும் சொன்னார்கள்:
"من سَدَّ فُرجةً؛ رفعه الله بها درجة، وبنى له بيتاً في الجنة"
யார் ஸஃப்ஃபில் வரிசையிலே இருக்கும் போது இடைவெளி இல்லாமல் இருக்கக்கூடிய அந்த இடைவெளியை பூர்த்தி செய்து விடுவாரோ அல்லாஹ் அவருக்கு ஒரு தரஜாவை உயர்த்துகிறான். சொர்க்கத்திலே அவருக்கு ஒரு வீட்டை கட்டித் தருகிறான்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹுத் தர்ஹீப், எண் : 505.
மேலும், சொன்னார்கள்:
«من بنى لله مسجدا ولو كمفحص قطاة أو أصغر بنى الله له بيتا في الجنة»
யார் அல்லாஹ்வுக்காக ஒரு மஸ்ஜிதை கட்டுவாரோ அது ஒரு பறவை முட்டை போடக் கூடிய அளவுக்கு உண்டான சின்ன இடத்திற்கான உதவி செய்தாலும் சரி, அதற்காக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்திலே வீடு கட்டித் தருகிறான்.
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 6128.
மேலும், ரஸூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்:
من صلى الضحى أربعا وقبل الأولى أربعا بني له بيت في الجنة
யார் லுஹாவுடைய தொழுகை நான்கு ரக்அத் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொர்க்கத்திலே ஒரு வீட்டை கட்டித் தருகிறான்.
அறிவிப்பாளர் : அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 6340.
மேலும், ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்:
«من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد: أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا»
யார் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சொல்வாரோ, தன்னுடைய முஸ்லிமான சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்க செல்வாரோ, வானத்திலிருந்து ஒரு வானவர் அழைக்கின்றார். நீ ரொம்ப நல்லவர். நீ செல்லக்கூடிய நோக்கமும் நல்ல நோக்கம். நீ சொர்க்கத்திலே உனக்கு ஒரு வீட்டை கட்டிக்கொண்டாய்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 6387.
மேலும், ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
"إذا ماتَ ولَدُ العبدِ قال الله لملائكَتِه: قبضْتُمْ وَلدَ عبْدي؟ فيقولونَ: نَعَمْ. فيقولُ: قبَضْتُم ثَمْرةَ فؤادِه؟ فيقولونَ: نَعمْ. فيقول: ماذا قالَ عبْدِي؟ فيقولونَ: حمِدَكَ واسْتَرْجعَ. فيقولُ [الله تعالى]: ابْنُوا لِعبْدي بَيتاً في الجنَّةِ، وسَمُّوهُ بيتَ الحَمْدِ".
ஒரு அடியானுடைய குழந்தை அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு சிறிய பிள்ளை இறந்து விடுகிறது என்றால் அல்லாஹு தஆலா மலக்குகள் இடையே சொல்லுவான்: என்னுடைய அடியானின் குழந்தையின் உயிரை கைப்பற்றி விட்டீர்களா? மலக்குகள் சொல்வார்கள்: ஆம் இறைவா. அவருடைய ஈரக் குலையை நீங்கள் கைப்பற்றி விட்டீர்களா? மலக்குகள் சொல்வார்கள்: ஆம் இறைவா.
அல்லாஹ் கேட்பான்: எனது அடியான் என்ன சொன்னான்? என்று. அல்லாஹு தஆலாவிற்கு எல்லாம் தெரியும். அந்த மலக்குகள் சொல்வார்கள்; ரப்பே உனது அடியான் புகழ்ந்தான். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறினான்.
அல்லாஹ் சொல்லுவான்: என்னுடைய அடியானுக்காக சொர்க்கத்திலும் ஒரு வீட்டை கட்டுங்கள். அந்த வீட்டுக்கு பைத்துல் ஹம்து என்று பெயர் வையுங்கள்.
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹிஹீத் தர்ஹீப், எண் : 2012.
அல்லாஹு அக்பர்! ரப்பு எவ்வளவு பெரிய அருளாளன் என்று பாருங்கள்.
மேலும், ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
«ما من عبد مسلم توضأ فأسبغ الوضوء ثم صلى لله في كل يوم ثنتي عشرة ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة»
யார் அழகிய முறையிலே உளூ செய்து உளூவை சுத்தமாக செய்து, பிறகு, ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் ஃபர்ளு அல்லாத 12 ரக்அத்துகள், அதாவது முன் பின் சுன்னத்துகள் பஜ்ருக்கு முன்னால் இருக்கக்கூடிய சுன்னத்கள், ளுஹருக்கு முன்னால் இருக்கக்கூடிய சுன்னத்துக்கள், ளுஹருக்கு பின்னால் இருக்கக்கூடிய சுன்னத்துக்கள், பிறகு மகரிபுக்கு பின்னால் இஷாவுக்கு பின்னால் இந்த 12 ரக்அத்துகளை தொழுவாரோ, அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்திலே ஒரு வீட்டை கட்டித் தருகிறான்.
அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹிஹீல் ஜாமிஃ, எண் : 5736.
மேலும், ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
யார் கடை தெருவுக்கு செல்வாரோ, வியாபாரத்துக்காகவோ தேவைக்காகவோ நாம் கடைத்தெருவுக்கு செல்லும் பொழுது இந்த திக்ரை கூறினால் அல்லாஹு தஆலா அவருக்கு கொடுக்கக் கூடிய தரஜாக்கள் என்ன? 10 லட்சம் நன்மைகள். 10 லட்சம் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். 10 லட்ச தரஜாக்களை அல்லாஹ் உயர்த்துகிறான். சுப்ஹானல்லாஹ்.
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير
ஒரு தடவை கடை தெருவுக்கு செல்லும் பொழுது இந்த திக்ரை சொன்னால் 10 லட்சம் நன்மைகள் எழுதப்பட்டு 10 லட்சம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு 10 லட்சம் தரஜாக்கள் உயர்த்தப்பட்டு சொர்க்கத்திலே அல்லாஹ் அவருக்கு ஒரு வீட்டையும் கட்டி தந்து விடுகிறான்.
அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹிஹீல் ஜாமிஃ, எண் : 6231, தரம் : ஹஸன்.
மேலும், ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ
யார் தர்க்கம் செய்வதை விட்டு விடுகிறாரோ, வாக்குவாதம் செய்வது சும்மா சும்மா சண்டை போடுவது, பேச்சுல குதர்க்கம் பண்ணுவது, இதை யாரு விட்டுறாங்களோ அவர்களிடத்தில் உண்மை இருந்தாலும், யார் தர்க்கம் செய்வதை விடுவாரோ, அவருக்காக நான் சொர்க்கத்தின் ஓரத்திலே ஒரு வீட்டுக்கு பொறுப்பாளி.
யார் பொய் பேசுவதை விட்டு விடுவாரோ அது விளையாட்டுக்காகவும் பொய் பேசாமல் இருக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீட்டுக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்.
அதுபோன்று யாருடைய குணம் அழகாகி விட்டதோ, யார் நற்குணம் உடையவராக ஆகிவிட்டாரோ சொர்க்கத்தின் உயர்ந்த இடத்திலேயே அவருக்கு ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
அறிவிப்பாளர் : அபூ உஸாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4800.
மேலும், ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
إنّ في الجنة غرفاً يُرى ظاهرُها مِن باطِنِها، وباطنُها من ظاهرِها، أعدَّها الله لِمَنْ أطعم الطعامْ، وأفشى السلامْ، وصلى بالليل والناسُ نيامْ
சொர்க்கத்திலே பால்கனி அறைகள் அவ்வளவு இருக்கும்.
அதை யாருக்கெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறான் என்றால், யார் ஏழைகளுக்கு உணவளித்தாரோ, சலாமை பரப்பினாரோ, மக்கள் தூங்கும் பொழுது இரவிலே தொழுதாரோ அவர்களுக்காக அல்லாஹு தஆலா அந்த சொர்க்கத்திலே அவ்வளவு உயர்ந்த அறைகளை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.
அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுத் தர்ஹீப் , எண் : 618.
ஆகவே, அன்பிற்குரியவர்களே! அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய இந்த உலக வாழ்க்கை ஒரு தற்காலிகமானது. மறுமைக்காக கொடுக்கப்பட்டது. நாமும் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றியவர்களாக வாழ வேண்டும். அல்லாஹ்வுடைய தீனை நிலை நிறுத்த வேண்டும். இதன் பக்கம் அழைக்க வேண்டும்.
இதுதான் நம் வாழ்க்கை. இதற்குத்தான் நாம் படைக்கப்பட்டோம் என்று அந்த கொள்கையோடு ஈமானோடு வளர வேண்டும். வாழ வேண்டும். நாம் துன்யாவை சம்பாதிப்பது, துன்யாவை சேகரிப்பது, பிறகு விட்டு விட்டு சென்று விடுவது, இதற்காக அல்ல முஸ்லிம்கள்.
மற்றவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். படிப்பது, வேலை செய்வது, சம்பாதிப்பது, பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பது, பிறகு செத்து விடுவது, இதைத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் செய்கிறான் என்றால் இந்த முஸ்லிமுக்கும் அந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஒரு தீனை கொடுத்து இருக்கிறான். இந்த தீனை நிலை நிறுத்துங்கள் உங்களது வாழ்க்கையில். இந்த தீனை மக்களுக்கு பரப்புங்கள். இதன் பக்கம் அழையுங்கள். இதற்காக அர்ப்பணிப்பு செய்யுங்கள் என்பதாக.
ஆகவே, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்து கொள்வோமாக! நாம் எதற்காக இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம்? ஏன் நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம்? என்று புரிந்து அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி அந்த கருத்துக்களை நேர்வழிகளை சிந்தித்து நமது வாழ்க்கையை மாற்றுவோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/