சூரதுல் ஜுமுஆவும், யவ்முல் ஜுமுஆவும் | Tamil Bayan - 985
சூரதுல் ஜுமுஆவும், யவ்முல் ஜுமுஆவும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : சூரதுல் ஜுமுஆவும், யவ்முல் ஜுமுஆவும்
வரிசை : 985
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 25-7-2025| 30-01-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, இறையச்சத்தை உபதேசம் செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்மை மன்னித்து அருள்வானாக! காஸா முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக! அவர்களை எதிர்க்கக்கூடிய ஜியோனிஸ்ட் யஹூதிகளுக்கு கடும் தோல்வியையும், சேதத்தையும், அழிவையும் ஏற்படுத்துவானாக இஸ்லாமை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகளுக்கு அவமானத்தையும் கேவலத்தையும் தருவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹி ﷺ வெள்ளிக்கிழமைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பார்த்து வருகிறோம். நம்மைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமைக்கு என்ன முக்கியத்துவம் என்றால், கறிக்கடையில் மட்டன் வாங்க வேண்டும், பிரியாணி போட வேண்டும், நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதுதான். இதுதான் நம்மில் பலர் வெள்ளிக்கிழமைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம். அல்லாஹ் மன்னிப்பானாக!
எவ்வளவு பெரிய, மகத்தான நாள் இது! பயப்பட வேண்டிய நாளும்கூட. வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், இது உலகத்தின் முடிவு நாளாக இருக்குமோ என்று படைப்புகள் எல்லாம் அஞ்சுகின்றன. ஏனென்றால், வெள்ளிக்கிழமையில்தான் மறுமை நாள் நிகழும். இப்படி உலகப் படைப்புகள் அஞ்சிக் கொண்டிருக்கின்றன.
மற்றொரு பக்கம், முஃமின்களுக்கு நன்மைகளைத் தேடுவதற்காக அல்லாஹ் கொடுத்த மகத்தான நாள். வாய்ப்பு இது. அல்லாஹ்விடம் தங்களது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக, பாவமன்னிப்பு விசேஷமாகப் பெறுவதற்காக, மகத்தான நற்கூலிகளை அல்லாஹ்விடத்தில் வாரிக் கொள்ளுவதற்காக வழங்கப்பட்ட நாள்.
ஆனால் இன்று, இந்த நாள் விருந்துக்காகவும், சில உலக விஷயங்களுக்காகவும் மட்டுமே ஆக்கப்பட்டிருப்பது எவ்வளவு வேதனையான ஒன்று!
அல்லாஹ்வின் அடியார்களே! உண்பதை அல்லாஹ் குறை சொல்லவில்லை. மகிழ்ச்சியாக இருப்பதையும் அல்லாஹ் குறை சொல்லவில்லை. மறுமையை மறந்து உண்பது, மறுமையை மறந்து உலக மகிழ்ச்சியில் மூழ்குவது—அதைத்தான் அல்லாஹு தஆலா குறை சொல்கிறான். ஆகிரத்தை மறந்து, அதற்கான தேடல் இல்லாமல் உலக இன்பங்களை மட்டும் தேடுவதை அல்லாஹு தஆலா பழிக்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ﷺ இந்த வெள்ளிக்கிழமைக்கு கொடுத்த முக்கியத்துவங்களில் ஒன்று, இந்த வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக சில சூராக்களைத் தேர்ந்தெடுத்து ஓதியதுதான். அதில் ஒன்றுதான் வெள்ளிக்கிழமையின் விசேஷமான தொழுகையான ஸலாத்துல் ஜுமுஆ.
இந்த ஜுமுஆ தொழுகைக்காக ரசூலுல்லாஹ் ﷺ குர்ஆனில் இருந்து நான்கு அத்தியாயங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். ரசூலுல்லாஹ் ﷺ ஜுமுஆ தொழுகையில், முதல் ரக்அத்தில் சூரத்துல் ஜுமுஆவை ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் அதற்கு அடுத்த சூராவாகிய சூரத்துல் முனாஃபிகூன் ஓதுவார்கள். அல்லது சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (சூரத்துல் அஃலா) ஓதுவார்கள். அதன்பின், ஹல் அதாக ஹதீஸுல் காஷியா (சூரத்துல் காஷியா) ஓதுவார்கள்.
இந்த நான்கு சூராக்களை ரசூலுல்லாஹ் ﷺ வெள்ளிக்கிழமையுடைய அந்த விசேஷமான தொழுகையில் ஓதுவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் ﷺ தமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஓதிவந்தார்கள்.
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். நம்மில் எத்தனை பேர் குறைந்தபட்சம் இந்த இந்த சூராக்களுடைய பொருளையாவது ஒன்றுக்கு இரண்டு முறை படித்து அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்து இருப்போமா?
இன்று, இன்னும் அவமானம் என்னவென்றால் இந்த சூராக்களை கூட முழுமையாக தொழுகையில் ஓதக் கூடிய அளவுக்கு மக்கள் நிற்பதற்கு தயார் இல்லை. சில இடங்களில் பார்த்தால்;
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ
என்று அத்தியாயத்தின் (சூராவின்) பாதியிலிருந்து ஆரம்பிப்பார்கள்.
பின்பு, அடுத்த ரக்அத்தில்;
اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِبِلِ كَيْفَ خُلِقَتْ
என்று அதேபோல் அத்தியாயத்தின் (சூராவின்) பாதியிலிருந்து ஆரம்பிப்பார்கள். முடிந்தது.
பிறகு, சூரா ஜுமுஆவை;
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ
என்று அத்தியாயத்தின் (சூராவின்) பாதியிலிருந்து ஆரம்பிப்பார்கள்.
அடுத்து சூரா முனாஃபிகூனிலே; அதேபோல் அத்தியாயத்தின் (சூராவின்) பாதியிலிருந்து ஆரம்பிப்பார்கள்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ
ஓதி முடித்து விடுவார்கள்.
எந்த அளவிற்கு இன்று நாம், எந்த இபாதத்திற்காக இந்த வெள்ளிக்கிழமை சிறப்பிக்கப்பட்டதோ, அந்த இபாதத்தையே நாசமாக்கி வைத்திருக்கிறோம்!
ஒரு கறிக்கடையில் கறி வாங்குவதற்காக அரை மணி நேரம் வரிசையில் நிற்க முடிகிறதே! தங்களுடைய தேவைகளை வாங்கிக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் போது கால்வலி தெரியவில்லை. வேறு வேலைகள் நினைவுக்கும் வருவதில்லை. எத்தகைய அவமானம்! நாம் எல்லாம் எப்படிப்பட்ட முஸ்லிம்கள்?
அல்லாஹ்விற்கு முன்னால், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில், விசேஷமான ஒரு இபாதத்திற்காக நின்றவுடன் மட்டும், நமக்கு வேறொரு வேலை நினைவுக்கு வருகிறது. கால்வலி தெரிகிறது. “ஏன் இவ்வளவு நீட்ட வேண்டும்?” என்று நமக்குள்ளேயே கேள்வி எழுகிறது.
இதெல்லாம் எதை காட்டுகிறது என்றால், நாம் எந்த நிலையில் உள்ள முஸ்லிம்களாக இருக்கிறோம் என்பதைத்தான். அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை அனுபவிக்கும் போது மட்டும், “யா அல்லாஹ்! கணக்கில்லாமல் கொடுத்து கொண்டே இரு” என்று கேட்போம்.
ஆனால், அல்லாஹ்விற்காக நிற்கும் நேரத்தில் மட்டும், அத்தனை வலிகளும், அத்தனை வேதனைகளும், அனைத்து சிரமங்களும் நமக்கு ஞாபகம் வருகிறது. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹி ﷺ வெள்ளிக்கிழமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இபாதத்துக்காக அந்த சிறப்பான நாளில் அல்லாஹ்வை சிறப்பாக வணங்குவதற்காக. அதில் ஒன்றுதான் இந்த தொழுகையில் ஓதுவதற்காக சூரத்துல் ஜுமுஆவை தேர்ந்தெடுத்தார்கள்.
அப்படி இந்த சூராவில் என்ன சொல்லப்படுகிறது? சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வை புகழப்படுகிறது. அல்லாஹ்வின் பெருமை பேசப்படுகிறது. முஃமின்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் பெருமையும், அல்லாஹ்வின் புகழும், அல்லாஹ்வின் ஸிஃபத்துகள் மீது உண்டான நம்பிக்கையும் உறுதியாகிவிட்டால் அவர்தான் உண்மையான முஃமின். அவர்தான் இப்லீசை ஷைத்தானை எதிர்த்து போர் செய்ய முடியும். அத்தகைய முஃமின்கள் முஸ்லிம்களை பார்த்து தான் எதிரிகள் பயப்படுவார்கள்.
எந்த முஃமின்கள் எந்த முஸ்லிம்கள் உள்ளத்தில் துன்யா குடிகொண்டு இருக்கிறதோ, உலக சக்திகள் பெருமை கூடி இருக்கின்றதோ, அந்த முஸ்லிம்களை பார்த்து எதிரிகள் பயப்பட மாட்டார்கள்.
சஹாபாக்களிடத்திலே என்ன ஆயுதம் இருந்தது? என்ன ஆடம்பரமான வாழ்க்கை இருந்தது? ஒன்றுமில்லை. ஆனால் உள்ளத்தில் ஈமான் இருந்தது. உள்ளத்திலே தீன் இருந்தது. பாரசீகப்பேரரசு வீழ்ந்தது. ரோம பேரரசு வீழ்ந்தது. வெறும் 150, 200 வீரர்களை அழைத்துக் கொண்டு சென்று இலட்சக்கணக்கான வீரர்களை தோற்கடித்துவிட்டு வந்தார்கள். 200, 300, 400 வீரர்களை அழைத்துக் கொண்டு சென்று இலட்சக்கணக்கான வீரர்களை தோற்கடித்துவிட்டு நாடுகளை வெற்றி கொண்டார்கள். எப்படி சாத்தியமானது.!
காரணம் என்ன? அவர்களுடைய உள்ளத்திலே அல்லாஹ் இருந்தான். அவனுடைய ஸிஃபத்துகளை குணங்களை தன்மைகளை நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நாம் இன்று சொல்வோம், தக்பீர் கட்டும்போது அல்லாஹு அக்பர்! என்று. ஆனால் பலருடைய உள்ளத்திலே அமெரிக்கா அக்பர்! என்று கூறுவார்கள். இப்லீஸ் அக்பர்! என்று இருக்கும். யஹூதியை பெருமைப்படுத்தி கொண்டிருப்பார்கள். நஸ்ரானியை பெருமைப்படுத்தி கொண்டிருப்பார்கள். இவர்களுடைய நாவில் இருந்து வரக்கூடிய அல்லாஹ் அக்பர் என்ன மாற்றத்தை கொடுக்கும்? அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா இந்த சூராவின் முதல் வசனத்திலே சொல்கிறான்:
يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பேரரசனாகிய, மிக பரிசுத்தவனாகிய, மிகைத்தவனாகிய, மகா ஞானவானாகிய அல்லாஹ்வை துதித்து தொழுகின்றன. (அல்குர்ஆன் 62:1)
விளக்கம் : மூஃமின்களே! நீங்கள் எந்த ரப்பை வணங்குகிறீர்கள் என்பது தெரியுமா? வானத்தில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தும் அந்த ரப்பை தான் வணங்குகின்றன. போற்றுகின்றன. துதிக்கின்றன. அவன் எப்படிப்பட்டவன்? அல் மலிக் -அரசன். முழுமையான நிறைவான யாரிடத்திலும் தேவையற்ற அரசன்.
உலக அரசர்கள் எல்லாம் படையின் பக்கம், தளபதிகளின் பக்கம், மந்திரிகளின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹு தஆலாவுக்கு மந்திரியும் தேவையில்லை, படைகளும் தேவையில்லை, ஆயுதங்களும் தேவையில்லை. அவன் எந்தத் தேவையும் இல்லாதவன்; எல்லா சக்திகளையும் கொண்ட முழுமையான அரசன். அவன் ஒன்றை ஆக்க நாடினால், யாராலும் அதைத் தடுக்க முடியாது.
அல்-மலிக் — அல்லாஹ் அப்பேர்ப்பட்ட அரசன்.
அல்-குத்தூஸ் — அவன் பரிசுத்தமானவன்; அவனிடத்தில் எந்தக் குறையும் இல்லை.
அல்-அஜீஸ் — யாவரையும் மிகைத்தவன்; அவனை யாரும் மிகைக்க முடியாது.
அல்லாஹ்வின் கட்டளையை யாராலும் எதிர்க்க முடியாது.
அல்-ஹகீம் — எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை முழு ஞானத்துடன் அறிந்தவன்.
அத்தகைய ரப்பை நீங்கள் வணங்குகிறீர்கள். முஸ்லிம்களே! முஃமின்களே! அந்த ரப்பை நீங்கள் பெருமைப்படுத்துங்கள். வானத்தில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அனைத்துப் படைப்புகளும் அந்த ரப்பை பெருமைப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அல்லாஹு அக்பர்!
ஒரு முஃமின் தக்பீர் கட்டி தொழுகும்போது, அல்லாஹ்வுடைய இந்த ஸிஃபத்துகள் ஓதப்படும் போது, ஒரு பக்கம் அந்த முஃமினுடைய உள்ளத்திலே அல்லாஹ்வின் அன்பின் அலைகள் எழ வேண்டும்; இன்னொரு பக்கம், அந்த ரப்புடைய பயம் அவனுடைய உள்ளத்திலே மேலோங்க வேண்டும்.
அல்லாஹு தஆலா இந்த அத்தியாயத்திலே எவ்வளவு பெருமையாக தன்னை வர்ணிக்கிறான். தன்னுடைய பெருமையை, தன்னுடைய புகழை, தன்னுடைய மகத்துவத்தை, தன்னுடைய மகிமையை அல்லாஹ் சொல்லி, முஃமின்களுக்கு ஈமானிய புத்துணர்ச்சியையும், ஈமானிய உற்சாகத்தையும் கொடுக்கிறான்.
முஃமினே! நீ சோர்ந்து விடாதே. முஃமினே! யாருக்கும் முன்னாலும் பலவீனம் அடைந்து விடாதே. உலக சோதனைகள், உலக குழப்பங்கள் எது வந்தாலும், உன்னுடைய ரப்போடு இரு. உன்னுடைய ரப்பை நம்பியவனாக இரு. அவன் உனக்கு போதுமானவன்.
அல்லாஹு தஆலா தன்னுடைய பெருமையை கூறியதற்குப் பிறகு, முஃமின்களே, என் பக்கம் உங்களை சேர்த்ததற்குப் பிறகு, என் பக்கம் உங்களை அழைப்பதற்காக, என்னுடைய அன்பிற்குரியவர்களாக நீங்கள் ஆக வேண்டும் என்பதற்காக, நீங்கள் அனைவரும் சொர்க்கவாசிகளாக ஆக வேண்டும் என்பதற்காக, நான் ஒரு தூதரை அனுப்பி இருக்கின்றேன் என்று சொல்கிறான். அந்த தூதரை அறிந்து கொள்ளுங்கள்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62:2)
வசனத்தின் விளக்கம் : அரபு மக்களிடையே அல்லாஹ் ஒரு தூதரை அனுப்பினான். அவர்களிலிருந்து ஒரு தூதரை அனுப்பினான். அந்த தூதர் எதற்காக அனுப்பப்பட்டார்?
குர்ஆனுடைய வசனங்களை மக்களுக்கு ஓதி காட்டுவார்.
அவர்களை சுத்தப்படுத்தி எடுப்பார். அவர்களை பரிசுத்தப்படுத்துவார்.
உலக சமுதாயத்தில் இருந்த அத்தனை சீர்கேடுகளும் அந்த அரேபிய சமூகத்தில் இருந்தன. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அந்த மக்களில் இருந்து தான் அபூ பக்ரையும். உமரையும் உஸ்மானையும், அலியையும் உருவாக்கினார்கள். எந்த சஹாபாக்களின் பெயர் சொல்லப்பட்டால் ரலியல்லாஹு அன்ஹும் வ ரளூ அன்ஹு -உலக வரலாற்றில் ஒரு சமூகத்தைப் பற்றி போற்றி புகழ்ந்து உயர்வாக மட்டுமே எழுதப்பட்டு இருக்கும் என்றால் அது சஹாபாக்கள் சமுதாயம் தான்.
எதிரிகள் கூட அவர்களைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு தவறாக எழுத நாடினால் அவர்களால் எழுத முடியாது. அந்த அளவுக்கு உண்டான மகத்துவ மிக்க மா மனிதர்களாக, மனித குலத்தின் வழிகாட்டிகளாக அல்லாஹ்வின் தூதர் ﷺ உருவாக்கி விட்டு சென்றார்கள்.
எதைக்கொண்டு? இந்த குர்ஆனை கொண்டு. இந்த குர்ஆனை ஓதி இதனுடைய போதனைகளை கொண்டு அந்த மக்களை அப்படியே பரிசுத்தப்படுத்தி எடுத்தார்கள்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
இந்த அரேபிய சமூகம் இதற்கு முன்னால் மிகத் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.
அப்பேற்பட்ட சீர்கேடுகள் அவர்களிடம் குடியிருந்தன. ஆனால், இந்த குர்ஆனை கொண்டு அவர்கள் நேர்வழி பெற்றார்கள். பூமியிலிருந்து அவர்களைப் பற்றி வானத்திலுள்ள இறைவன் அவர்களுடைய புகழை, நிறைவை பேசினான்.
அல்லாஹு தஆலா அடுத்து சொல்கிறான்:
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
இன்னும், அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அந்த நபியை அனுப்பினான்). அவர்கள் இவர்களுடன் (இப்போது) வந்து சேரவில்லை. (ஆனால், அவர்கள் இந்த நபித்தோழர்களுக்கு பின்னர் வருகிற அடுத்த தலைமுறையினர் ஆவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 62:3)
நபியே! நீங்கள் அரபு சமூகத்திற்கு மட்டும் உண்டான தூதர் அல்ல. இன்னும் இவர்கள் அல்லாத பலர் இருக்கிறார்கள். நம்மையெல்லாம் அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். அரபு அல்லாத எல்லா சமூகத்தையும் அல்லாஹ் சேர்த்துக் கொண்டான்.
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ
இவர்கள் அல்லாதவற்றில் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் நீங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ உலக மக்களுக்கெல்லாம் அனுப்பப்பட்ட தூதர். அரபிகளில் இருந்து எடுக்கப்பட்ட தூதர். ஆனால் அனுப்பப்பட்டதோ உலக மக்களுக்காக. அல்லாஹ்வின் தூதர் ﷺ உலக மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, உலக மக்களுக்குண்டான வழிகாட்டியாக குர்ஆனை கொண்டு அல்லாஹ் அனுப்பினான்.
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ
அடுத்து இன்னொரு கூட்டம், ஆனால், அவர்கள் உங்களது காலத்தில் உங்களை வந்து சேரவில்லை. உங்களைப் பார்க்கவில்லை. ஆனால், பின்னால் வருவார்கள். உங்களது மார்க்கத்தை பின்பற்றுவார்கள். உங்களது நேர்வழியை பின்பற்றுவார்கள். உங்களை நேசிப்பார்கள். அல்லாஹு அக்பர்!
அல்லாஹு தஆலா பின்னால் வரக்கூடிய முஃமின்களாகிய நமக்கும் அல்லாஹ் இந்த சூராவில் நற்செய்தியை வைத்தான். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு முன்னால் சல்மான் ஃபாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தார்கள். ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்.
ஈமான் ஸுரைய்யாவிலே இருந்தால் இந்த நபருடைய சமுதாயம் அந்த ஈமானை பெற்றுக் கொள்வார்கள் என்று. (குறிப்பு:1)
இப்படியாக அல்லாஹ்வின் தூதர் ﷺ உலக மக்களுக்கான தூதராக அவர்களை நேர்வழியின் பக்கம் அழைக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள்.
இந்த செய்தியை அல்லாஹ் நமக்கு தருகிறான். அல்லாஹ் இந்த இரண்டு வசனங்களில் நமக்கு என்ன சொல்கிறான்? முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுடைய மகத்துவத்தை உள்ளத்தில் நிறுத்துங்கள். ஈமானை யகீனை சரி படுத்துங்கள். இந்த தூதருடைய வழிமுறையைப் பற்றிப் பிடியுங்கள். இந்த தூதருக்கு பின்னால் நீங்கள் செல்லுங்கள். நீங்கள் கண்ணியப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் வெற்றி கொள்வீர்கள். உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது.
அல்லாஹ் சொல்கிறான்
ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
உண்மையான சிறப்பு என்ன? அல்லாஹ்வின் மகத்தான அருள் என்ன? ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது அம்மனிதன் அல்லாஹ்வின் பக்கம் சேர்பிக்கப்படும் பாதையில் செல்வது. அதுதான் அல்லாஹ் நாடியவருக்கு அந்த (சிறப்பு இயல்பு) ஃபள்லை தருகின்றான். இந்த உலக செல்வமோ, உலகத்தின் வசதியான வாழ்க்கையோ, அல்லது ஆடம்பரமோ இது அல்லாஹ்வுடைய ஃபள்லு அல்ல. அல்லாஹ் இந்த துன்யாவை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பான். அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டஉயர்ந்த படித்தரம், எந்த உயர்ந்த படித்தரத்தால் மறுமையிலும் அல்லாஹ்வுடைய நெருக்கத்தை அல்லாஹ்விடம் சிறப்பை அடைய முடியுமோ அந்த உயர்ந்த படித்தரம் என்பது அல்லாஹ்வுடைய மார்க்கம். அல்லாஹ் சொல்கிறான்,
ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் நாடுகிறவர்களுக்கு அதை கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 62:4)
அன்பான சகோதரர்களே! அல்லாஹு தஆலா இதற்கு பிறகு மிக முக்கியமான ஒரு வரலாறை ஒரு படிப்பினையை நமக்கு சொல்கிறான். அல்லாஹு தஆலா எங்கெல்லாம் முஃமின்களுடைய மகத்தான நேர்வழியை, மகத்தான வெற்றியை சொல்கிறானோ, முஃமின்களுக்கான மகத்தான கண்ணியத்தை அல்லாஹ் வர்ணிப்பானோ அந்த இடத்தில் அவர்கள் வழி தவறினால், அவர்கள் தடம் புரண்டால், அவர்கள் நேர்வழியில் இருந்து விலகினால் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அதற்கு தான் யூதர்களை அல்லாஹு தஆலா அடுத்த வசனத்தில் உதாரணமாக சொல்கிறான்.
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. இன்னும், அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 62:5)
விளக்கம் : தவ்ராத் கொடுக்கப்பட்டு தவ்ராத்தை மனனம் செய்து கொண்டு தவ்ராத்தை படித்துக் கொண்டு பிறகு அதன்படி செயல்படாமல் இருக்கிற யூதர்களுக்கு உதாரணம் புத்தகங்களை தனது முதுகிலே சுமந்து செல்லக்கூடிய கழுதைகளைப் போல இருக்கிறார்கள். அவர்களே உதாரணம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இன்று நம்முடைய நிலை அப்படி தான் ஆகிவிட்டது போல. எந்த உதாரணத்தைக் கூறி இப்படிப்பட்ட கேவலமான நிலைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்தானோ அந்த நிலையை நோக்கி தான் முஸ்லிம்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
தவ்ராத் கொடுக்கப்பட்டு, அதை மனனம் செய்துவிட்டு, அதை படித்துவிட்டு அதன்படி செயல்படாதவர்களுக்கு உதாரணம் என்ன? புத்தகங்களை சுமக்க கூடிய கழுதைகளைப் போல. அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிக்க கூடியவர்களுக்கு உதாரணம் கெட்ட உதாரணம்.
சகோதரர்களே! யூதர்கள் தவ்ராத்தை பொய்ப்பிக்கவில்லை. தவ்ராத்தின் வசனங்களை நம்பினார்கள். அதன் சட்டங்களை செயல்படுத்தவில்லை. அதை அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்தவர்களின் உதாரணம் கெட்டதாக இருக்கின்றது என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
இன்று நம்மில், அல்லது நம்மில் ஒரு கூட்டத்திற்கு, இந்த வசனம் எப்படி பொருந்துகிறது என்று பாருங்கள். ஆட்சியாளர்களாக, மக்களாக, தீர்ப்பாளர்களாக, பொது ஜனங்களாக—இன்று நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது?
குர்ஆனுடைய வசனங்களை தொழுகையில் ஓதுகிறோம். ஆனால் வாழ்க்கையில் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். குர்ஆனுடைய வசனங்களை மனப்பாடம் செய்கிறோம்; அவை ஓதப்படும்போது கேட்கிறோம்; அதற்காக பெருமைப்படுகிறோம். ஆனால் அதே நேரத்தில், அதன் சட்டங்களை அங்கீகரிப்பதில்லை.
அது என்னென்ன சட்டங்களை, ஒழுக்கங்களை சொல்லியதோ, அவற்றை பின்பற்றுவதில்லை. ஏனென்றால் நமக்கு அவ்வளவு விருப்பமில்லை. சிலருக்கு தயக்கம், சிலருக்கு வெட்கம், சிலருக்கு “இதெல்லாம் தேவையா?”, “இது ஒரு பழமைவாதம் இல்லையா?” என்ற கேள்விகள் எழுகின்றன.
அல்லாஹு தஆலா இவர்களுக்கெல்லாம் தான் உதாரணம் சொல்லுகிறான். அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த அவர்களின் உதாரணம் மிகக் கெட்டது.
وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
இத்தகைய அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர் வழிகாட்ட மாட்டான்.
கொடுக்கப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டு, புரிந்ததற்குப் பிறகு ஒருவன் மனமுரண்டாக உலக ஆசையினால் வழி கெடுவானேயானால் அவனுக்கு நேர் வழி கிடைக்காது.
அடுத்து அல்லாஹ் யூதர்களை எச்சரிக்கின்றான். யூதர்களின் உதாரணத்தை சொல்லிவிட்டு நேரடியாக அந்த யூதர்களிடத்திலே அல்லாஹ் பேசுகின்றான். யூதர்களே! தவ்ராத்தைக் கொண்டு பெருமை அடிப்பவர்களே! உண்மையில் உங்களுக்கு அல்லாஹ்வுடைய நெருக்கம் இருக்கின்றது. அல்லாஹ் உங்களை நேசிக்கிறான். நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கிறீர்கள். உலக மக்களை விட நீங்கள் தான் அல்லாஹ்விற்கு வேண்டியவர்கள் என்று நீங்கள் பெருமை பேசுவதில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
قُلْ يَاأَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
(நபியே!) கூறுவீராக! “யூதர்களே! நிச்சயமாக நீங்கள்தான் அல்லாஹ்வின் நண்பர்கள், மற்ற மக்கள் அல்ல, என்று நீங்கள் பிதற்றினால், நீங்கள் (உங்களது இந்த கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை ஆசைப்ப(ட்டு காட்)டுங்கள்!” (அல்குர்ஆன் 62:6)
விளக்கம் : ஒன்றே ஒன்று செய்யுங்கள். அல்லாஹ்விடத்திலே மௌத்தை கேட்டு துஆ செய்யுங்கள் பார்க்கலாம். மரணத்தின் மீது ஆசைப்படுங்கள்.
நீங்கள் உங்களது கூற்றிலே உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். இந்த ஷைத்தான்களா மௌத்தை ஆசைப்படுவார்கள்? ஒருபோதும் மௌத்தை அவர்கள் வேண்டவே மாட்டார்கள். ஆசைப்படவே மாட்டார்கள்.
وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ
அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக ஒரு போதும் அவர்கள் அதை ஆசைப்பட மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 62:7)
காரணம், அவர்கள் அவ்வளவு பாவங்களை செய்து வைத்திருக்கின்றார்கள். அவ்வளவு அக்கிரமங்களை செய்து வைத்திருக்கிறார்கள். உலக மக்களின் அக்கிரமங்களை எல்லாம் தராசின் ஒரு தட்டிலும், யூதர்கள் செய்யக்கூடிய அக்கிரமங்களை மற்றொரு தட்டிலும் வைத்தால், யூதர்களுடைய அக்கிரமங்கள் அவ்வளவு அதிகம் இருக்கும்.
அல்லாஹ்வின் அடியார்களே! முந்திய மக்கள் நபிமார்களை பொய்ப்பித்தார்கள். ஆனால் யூதர்கள் நபிமார்களை பொய்ப்பித்தது மட்டுமல்லாமல் நபிமார்களை கொலையும் செய்தார்கள். முந்திய மக்கா முஷ்ரிக்குகள் நபிமார்களை பொய்ப்பித்தார்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்கள். இந்த யூதர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வையே ஏசினார்கள்.
அல்லாஹ்வையே ஃபக்கீர் என்று சொன்னார்கள். அல்லாஹு தஆலா எங்களிடத்திலே யாசகம் கேட்கிறான் என்று திமிரு பேசினார்கள். அவ்வளவு அயோக்கியர்கள் அவர்கள்.
இத்தகைய அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கு தெரிந்து. அறிந்து வைத்திருக்கிறான்.
அல்லாஹ் உங்களுக்கு சொல்கிறான்: யூதர்களின் விஷயத்தில் உஷாராக இருங்கள். ஆனால் இன்று சிலருக்கு அவர்களுடைய பொருளாதாரம், அவர்களுடைய சுகமான வாழ்க்கை, அவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள், அவர்களின் வாழ்வாதாரம், அவர்களிடத்தில் இருக்கக்கூடிய வசதி, அதன் மீது மோகம் கொண்டு மார்க்கத்தை துறந்து விட்டு அந்த யூதர்களுக்கு பின்னால் ஓடுகின்றார்கள்.
முஸ்லிம்களின் நேசத்தை விட யூதர்களின் நேசம் அவர்களுக்கு பெரிதாக இருக்கிறது. முஸ்லிம்களிடத்தில் மதிப்பை தேடுதை விட யூதர்களிடத்தில் மதிப்பை தேடுவது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமாக இருக்கிறது.
அடுத்து, அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன் 62:8)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா ஈமானைப் பற்றி சொல்லக்கூடிய நேரத்தில், ரசூலுல்லாஹ்வைப் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய நேரத்தில், வழிகெட்டுப் போன யூதர்களை எடுத்துக்காட்டி நமக்கு படிப்பினை தரக்கூடிய நேரத்தில், உங்களுக்கு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையின் மீது உறுதியான யகீன் வர வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்த இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருக்க முடியும்.
உலக சிற்றின்பங்களை துறக்கக்கூடியவர்களாகவும், உலகத்தில் வரும் சோதனைகளை தாங்கிக்கொள்ளக்கூடியவர்களாகவும், உலக ஆசைகளை மறுமைக்காக தூக்கி எறியக்கூடியவர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.
கண்டிப்பாக மரணம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். செல்வந்தருக்கு ஏழைக்கு அரசனுக்கு சாதாரண மனிதனுக்கு ஆரோக்கியமானவனுக்கு நோயாளிக்கு வாலிபனுக்கு வயோதிகருக்கு சிறுவனுக்கு ஆக அனைவருக்கும் மரணம் உண்டு.
மரணத்தை நினைத்து பார்ப்பதே போதுமானது. ஒரு மனிதனுக்கு ஈமான், யகீன் வருவதற்கு, அற்ப இன்பங்களை காலடியில் போட்டு மிதிப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை தலையில் தூக்கி வைப்பதற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சிந்தித்தால் போதும் — மௌத் இருக்கிறது.
மௌத்திற்கு பிறகு அல்லாஹ்விடத்தில் இந்த தீனைப் பிடித்துக் கொண்டால்தான் வெற்றி என்ற இந்த உறுதியை (யகீன்) மனிதன் கொண்டுவந்துவிட்டானேயானால், உலகத்தில் எந்த சக்திகளையும் அவன் எதிர்கொள்ள முடியும். உலக சக்திகள் அனைத்தும் சேர்ந்து ஒரு முஃமினை துன்புறுத்தினாலும், அந்த துன்புறுத்தல் எதுவரை? அவனுடைய மரணம் வரைக்கும் தான் — அவ்வளவுதான்.
அந்த மரணத்திற்குப் பிறகு, அவனுக்காக அல்லாஹ்விடத்தில் நிஃமத்துகள் நிறைந்த ஒரு நிரந்தரமான வாழ்க்கை இருக்கிறது
அல்லாஹு தஆலா அடுத்து நம்மை நோக்கி பேசுகின்றான்:
“முஃமின்களே! உங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த வெள்ளிக்கிழமை எவ்வளவு அற்புதமான ஒரு நாள் என்று தெரியுமா?”
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 62:9)
விளக்கம் : முஃமின்களே! வெள்ளிக்கிழமைகளில் பாங்கு-அதான் சொல்லப்பட்டு உங்களை பள்ளிவாசல்களுக்கு அழைக்கப்பட்டால், நீங்கள் அல்லாஹ்வுடைய உபதேசத்தை கேட்பதற்கு விரைந்து வாருங்கள். பேசக்கூடிய ஹதீப், சொல், வார்த்தை, வாக்கியம், சட்டம் அவர்களுடையது. ஆனால் சொல்லப்படக்கூடிய உபதேசம் அல்லாஹ்வுடையது.
எனவே அல்லாஹ் சொல்கின்றான், அல்லாஹ்வின் உபதேசத்தின் பக்கம் நீங்கள் விரைந்து வாருங்கள்.
உங்களது வர்த்தகங்கள், அலுவல்கள், உங்களது உலக தேவைகளை எல்லாம் நீங்கள் விட்டுவிட்டு இந்த தொழுகைக்காக, இந்த சிறப்பு பயானை கேட்பதற்காக, குத்பாவை கேட்பதற்காக வாருங்கள்.
எதற்காக? கேட்பதற்காக. எதற்காக அல்ல? தூங்குவதற்காக இல்லை. எதற்காக அல்ல? இங்கே உட்கார்ந்து கொண்டு வேறு விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்காக அல்ல.
இன்று நம்முடைய நிலைமை எவ்வளவு பரிதாபமாக ஆகிவிட்டது தெரியுமா? எந்த ஒரு குத்பாவிற்கு, எந்த ஒரு உபதேசத்தை கேட்பதற்கு அல்லாஹ் அழைக்கிறானோ அந்த உபதேசம் தான் நமக்கு தூங்குவதற்கான நேரமாக இருக்கிறது. கேட்டால் பள்ளிவாசலுக்கு வந்தால் நமக்கு சகீனத்தா இருக்குது. ராஹத்தா இருக்குது தூக்கம் வந்துடுது.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: நீங்கள் வியாபாரத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வுடைய உபதேசத்தை கேட்க வாருங்கள். அதுதான் உங்களுக்கு சிறந்தது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்
அது மட்டுமா! அல்லாஹ்வுடைய மார்க்கம் எவ்வளவு அருளும், அன்பும், கருணையும், விசாலமும் மிக்க மார்க்கம். தொழுது முடித்து விட்டால் உங்களுடைய துன்யாவிற்கு நீங்கள் செல்லுங்கள்.
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஆக, தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் (இரண) அருளைத் தேடுங்கள்! நீங்கள் வெற்றி அடைவதற்காக நீங்கள் அல்லாஹ்வை அதிகம் (புகழ்ந்தும் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்தியும்) நினைவு கூருங்கள்! (அல்குர்ஆன் 62:10)
கருத்து : பூமியிலே சென்று நீங்கள் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை, அல்லாஹ்வுடைய ரிஸ்குகளை நீங்கள் தேடுங்கள். ஆனால், நீங்கள் உலக வியாபாரங்களில், தொழில்களில் வேலைகளில் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும் அல்லாஹ்வை நினைப்பதை மறந்து விடாதீர்கள். சொல்லிக் கொண்டே இருங்கள். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லா யிலாஹ இல்லல்லாஹ்.
அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்ந்து கொண்டே இருங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வசனத்திற்கு விளக்கங்களை அறிஞர்கள் பலர் எழுதுகிறார்கள். ஜுமுஆவை தொழுது விட்டு சென்று செல்லக்கூடிய அந்த வியாபாரத்தில் அல்லாஹ் மிகப்பெரிய பரக்கத்தை ரிஸ்க்கை வைத்திருக்கின்றான்.
ஸஹாபாக்களிலே ஒரு சஹாபி தொழுகை முடித்துவிட்டு பள்ளிவாசலுக்கு வெளியே வந்து நின்று கொண்டு, அல்லாஹ்! நீ அழைத்தாய் வந்துவிட்டேன். நீ கட்டளையிட்டாய் தொழுது விட்டேன். மீண்டும் நீ சொல்கிறாய்; உன்னுடைய ரிஸ்கை தேடி செல்வதற்கு. நான் செல்கிறேன். என்னுடைய ரிஸ்கையே தேடி செல்கிறேன். என்னுடைய ரிஸ்கில் பரக்கத் செய் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அவ்வளவு ரிஸ்கில் பரக்கத்தை அல்லாஹ் கொடுக்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! அதே நேரத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; தீனை துன்யாவிற்காக யார் விடுகின்றார்களோ, இபாதத்தை உலக ஆசைகளுக்காக யார் விடுகின்றார்களோ அவர்களுடைய எச்சரிக்கை அல்லாஹு தஆலா சொல்லி இந்த சூராவை முடிக்கின்றான்.
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ
இன்னும், (முஸ்லிம்களில் சிலர் இருக்கிறார்கள்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளதுதான் (உலகத்தின்) வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.” (அல்குர்ஆன் 62:11)
விளக்கம் : சிலர் இப்படியும் இருப்பார்கள். வியாபாரத்தை பார்த்து விட்டாலோ, வேடிக்கைகளை பார்த்து விட்டாலோ, நபியே அதன் பக்கம் ஓடி விடுகின்றார்கள். உங்களை பயான் செய்யக்கூடிய நிலையிலே குத்பா செய்யக்கூடிய நிலையிலே விட்டுவிட்டு அதை நோக்கி சென்று விடுகின்றார்கள்.
மக்களில் சிலர் பலவீனமானவர்களும் இருப்பார்கள். அவர்களையும் நீங்கள் நேர்வழி படுத்த வேண்டும். அவர்களையும் நீங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு அல்லாஹு தஆலா இத்தகைய மக்களுக்கு அறிவுரை சொல்கிறான்.
யாருடைய உள்ளத்திலே துன்யாவின் வேடிக்கைகள் பக்கம், கேளிக்கைகள் பக்கம், ஆசைகளின் பக்கம் மோகம் இருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உணர்த்துகின்றான்.
முஃமின்களே! முஸ்லிம்களே! அல்லாஹ்விடத்தில் இருக்கின்ற, அல்லாஹ்வுடைய சொர்க்கம், அல்லாஹ்வுடைய பொருத்தம், மறுமையின் மகத்தான வாழ்க்கை அது உங்களுக்கு சிறந்தது. எதைவிட? மறுமையை தொழுகையை, இபாதத்தை விட்டுவிட்டு வேடிக்கைகளை, கேளிக்கைகளை நோக்கி, எந்த வியாபாரத்தை நோக்கி ஓடுகின்றீர்களோ! அதைவிட அல்லாஹ்விடத்தில் சிறந்தது.
தாழ்ந்ததை சிறந்ததற்காக விட்டு விடுபவன் புத்திசாலியே தவிர சிறந்ததை தாழ்ந்ததற்காக விடுபவன் புத்திசாலி அல்ல.
அல்லாஹ் சொல்லுகின்றான்; பயப்படாதீர்கள். முஃமின்களே! முஸ்லிம்களே! எவ்வளவு அருமையான வாக்கியத்தை சொல்லி அல்லாஹ் இந்த சூராவை நிறைவு செய்கின்றான்.
பலருக்கு இன்று என்ன பிரச்சனை? ஹலாலான வியாபாரம் பார்த்தா நம்மளால எப்படி நிறைய சம்பாதிக்க முடியும்? ஏதாவது ஒரு நாலு பொய் சொல்ல வேண்டாமா? ஏதாவது ஒரு நாலு பேரை ஏமாற்ற வேண்டாமா? நாலு வாக்கு மீற வேண்டாமா? ஒரு நாலு பேரோட பொருள கலப்படம் செய்ய வேண்டாமா? யாருக்காவது ஒரு ஆட்டைய போட வேண்டாமா?
காரணம்? காசு!. நிறைய காசு பார்க்க வேண்டாமா? அல்லாஹ் தஆலா தெளிவா சொல்லி முடிக்கிறான்? அட முட்டாளே! நீ என்னுடைய கட்டளையை பின்பற்று.
وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ
ரிஸ்க்கு அளிப்பவர்களில் அல்லாஹ் சிறந்தவன்.
நீ என் மீது யகீன் வைத்து நான் சொல்லக்கூடிய வழியில் ரிஸ்க்கை தேடு. நான் உனக்கு பரக்கத் செய்கிறேன்.
அப்துல் ரஹ்மானுக்கு அல்லாஹ் பரக்கத் செய்தான். ஜுபைருக்கு அல்லாஹ் பரக்கத் செய்தான். எத்தனை கண்ணியமிக்க நபித்தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அல்லாஹ் கண்ணியம் செய்தான். அவர்களுடைய ஹலாலான வியாபாரங்களை இன்றைய உலக வரலாற்றிலே வர்த்தகங்களில் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்க கூடியவர்கள் எல்லாம் அந்த காலத்தில் உள்ள வியாபாரத்தை எட்ட முடியாது.
அல்லாஹு தஆலா அவர்களுடைய உண்மைக்கு கொடுத்த பரக்கத், அவர்களுடைய நேர்மைக்கு கொடுத்த பரகத். அவருடைய சதக்காத், ஹைராத் தர்மங்களுக்கு கொடுத்த பரகத்.
இங்கு ஒரு கூட்டம் என்ன? ஹராமை கொண்டு சம்பாதி. இன்னொன்று , சம்பாதித்தது எல்லாம் தனக்கும், தனது குடும்பத்துக்கும் வைத்திருக்கிறேன். செலவு செய்வதற்கு மனம் வருவதில்லை. இந்த ரெண்டு பேரும் அழிந்தே தீருவார்கள். நாசமாகியே தீருவார்கள். கேவலமடைந்தே தீருவார்கள்.
வெற்றி பெற்றவர்கள் யார்? கண்ணியமானவர்கள் யார்? ஹலாலான வழியில் மட்டும் தேட கூடியவர்கள். நேர்மையான வழியில் மட்டும் தேடக்கூடியவர்கள். பிறகு அந்த நேர்மையான வழியில் தேடியதையும், ஹலாலான வழியில் தேடியதையும் அல்லாஹ் தங்களுக்கு அனுமதித்த அளவு அதைத் தாங்களும் பயன்படுத்திக் கொண்டு மீதம் உண்டான செல்வங்களை சொத்துகளை மஸ்ஜிதுகளுக்கு கொடுத்தார்கள். மதரஸாக்களுக்கு கொடுத்தார்கள், அல்லாஹ்வின் பாதையில் கொடுத்தார்கள், உறவுகளுக்கு கொடுத்தார்கள், யதீம்களுக்கு கொடுத்தார்கள், ஏழைகளுக்கு கொடுத்தார்கள், அண்டை வீட்டார்களுக்கு கொடுத்தார்கள், தேவையுள்ள நண்பர்களுக்கு இப்படி அள்ளி அள்ளி கொடுத்தார்களே அவர்கள் வெற்றியாளர்கள்.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். ரிஸ்க்கை கொடுப்பது அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது. அவன் ரிஸ்க்கு கொடுப்பவர்களில் சிறந்தவன். எனவே அவனுடைய சட்டத்தை நம்பி அவனுடைய வாழ்வாரத்தை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.
உங்களது ரிஸ்க்கு யஹூதிகளிடத்தில் இல்லை. நஸ்ரானியர்களிடத்தில் இல்லை. உங்களுடைய ரிஸ்க்கு ஹராமான வழிகளில் இல்லை. தவறான பாதையிலே செல்வதிலும் இல்லை. அல்லாஹ் எந்த வழியை உங்களுக்கு ஹலால் ஆக்கினானோ, எந்த வழியை உங்களுக்கு அனுமதித்தானோ அதிலே நீங்கள் செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தான ரிஸ்க்கை கொடுப்பான் என்று அல்லாஹு தஆலா இந்த சூராவை முடிக்கின்றான்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சூராவை வெள்ளிக் கிழமையிலே தேர்ந்தெடுத்ததில் அவ்வளவு செய்திகள் இருக்கின்றன. சிந்திப்போமாக! படிப்பினை பெறுவோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம் அனைவரையும் அல்குர்ஆனை ஓதக்கூடியவர்களாகவும், அதனை சிந்திக்கக்கூடியவர்களாகவும், அதை கொண்டு நல்ல படிப்பினை பெறக் கூடியவர்களாகவும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، فَأُنْزِلَتْ عليه سُورَةُ الجُمُعَةِ: {وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ} [الجمعة: 3] ، قالَ: قُلتُ: مَن هُمْ يا رَسولَ اللَّهِ؟ فَلَمْ يُرَاجِعْهُ حتَّى سَأَلَ ثَلَاثًا، وفينَا سَلْمَانُ الفَارِسِيُّ، وضَعَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم يَدَهُ علَى سَلْمَانَ، ثُمَّ قالَ: لو كانَ الإيمَانُ عِنْدَ الثُّرَيَّا، لَنَالَهُ رِجَالٌ -أوْ رَجُلٌ- مِن هَؤُلَاءِ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 4897 | خلاصة حكم المحدث : [صحيح]
நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62ஆவது) அத்தியாயத்தில், ‘‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அப்போது, ‘‘அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் ‘சில மனிதர்கள்’ அல்லது ‘இவர்களில் ஒருவர்’ அதை அடைந்தே தீருவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4662.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/