முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் | Tamil Bayan - 974
முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
வரிசை : 974
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 27-06-25| 02-01-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு, தக்வாவை உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணி பாதுகாக்குமாறு, அல்லாஹ் தடுத்த சிறிய பெரிய குற்றங்கள், பாவங்கள், அநியாயங்கள், உறவுகளை முறித்து வாழுதல், இணைவைத்தல், அனாச்சாரங்கள் செய்தல் ஆகிய அனைத்து செயல்களிலிருந்தும் விலகி இருக்குமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்விடத்தில் நமக்காகவும், உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்காகவும் இம்மை–மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக, அல்லாஹ்வின் நற்பாக்கியங்களை வேண்டியவனாக, அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பை வேண்டியவனாக, இந்த மார்க்கத்திற்கு உயர்வையும் வெற்றியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னித்து அருள்வானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! காலங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. பல மாற்றங்களை நாம் பார்த்து வருகின்றோம். குறிப்பாக இந்த ஜுமுஆவில், முஹர்ரம் மாதத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இன் ஷா அல்லாஹ் நாம் பார்ப்போம்.
இன்றைய முஸ்லிம்களாகிய நாம், நம்முடைய வியாபாரம், நம்முடைய தொழில்துறை, நம்முடைய இதர உலக அலுவல்கள், வேலைகள் ஆகியவை எந்த அளவுக்கு நம்முடைய சிந்தனையை ஆக்கிரமித்து விட்டன என்றால், மார்க்கத்தில் என்ன நடக்கிறது? உம்மத்திற்கு என்ன நடக்கிறது? என்ற கவனம் நமக்குள் உருவாவதற்கு அவையெல்லாம் தடையாகி விட்டன.
நம்மில் எத்தனை பேருக்கு, நாம் இப்போது எந்த மாதத்தில் இருக்கின்றோம் என்று கேட்டால், ஆங்கில மாதத்தையே சொல்வார்கள்; ஆனால், இஸ்லாமிய மாதம் எது என்று சொல்லத் தெரியாது. ஹிஜ்ரி ஆண்டு எது? என்றும் சொல்லத் தெரியாது.
காலங்களை அறிவது நம்முடைய மார்க்கக் கடமைகளில் ஒன்று. எப்படி தொழுகைக்காக நேரங்களை நாம் அறிய வேண்டுமோ, அதுபோன்று காலங்களை அறிவதும் நம்முடைய மார்க்க இபாதத்துகளோடு தொடர்புடையது.
நாட்களை அறிய வேண்டும். சிலர், “எனக்கு மணியும் தெரியாது, நாளும் தெரியாது; நான் வேறு ஒரு உலகத்தில் மூழ்கி இருக்கிறேன்” என்று சொல்வார்கள். அதற்கான அர்த்தம் என்ன? அவர் இறைவழிபாட்டில் சிந்தனை உள்ளவராக இல்லை என்பது தான்
இறைவழிபாட்டில் சிந்தனை உள்ளவருக்கு கண்டிப்பாக நேரம் தெரியும். கண்டிப்பாக காலம் தெரியும். கண்டிப்பாக மாதமும் தெரியும்.
ஏனென்றால், தொழுகை, நேரங்களோடு தொடர்பு படுத்தப்பட்ட ஒரு வணக்கம்.
اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا
நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4:103)
ஃபஜ்ருடைய நேரம் எப்போது, பிறகு இஷ்ராக்குடைய நேரம் எப்போது, பிறகு லுஹாவின் நேரம் எப்போது, பிறகு லுஹருடைய நேரம் எப்போது, பிறகு அஸர், இப்படியாக ஒரு முஃமின் நேரங்களுக்கு பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான்.
காரணம் என்ன? இந்த நேரங்களுக்கு பின்னால் ஓடக்கூடியவன் தான், அவனுக்கு மரணம் வருவதற்கு முன்னால் மரணத்திற்கான அமல்களைச் சேகரித்துக் கொண்டவனாக இருப்பான்.
அல்லாஹு தஆலா நமக்கு, நம்முடைய நேரங்களோடு நம்முடைய இபாதத்துகளை தொடர்புபடுத்தி, “மனிதனே! உன்னுடைய வாழ்க்கையை பயனுள்ளதாக நீ கழி; உன்னுடைய நேரங்களை நீ வீணாக்காதே” என்ற அறிவுரையை நமக்கு வழங்குகிறான்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிக வெறுக்கப்பட்ட செயல்களில் ஒன்று: நேரங்களை வீணடிப்பது, செல்வத்தை வீணடிப்பது, மனிதன் தன்னுடைய உடல் வலிமையையும் ஆற்றலையும் வீணடிப்பது.
இதைத்தான் நாம் இன்று செய்து கொண்டே இருக்கின்றோம். முஸ்லிம்கள் ஏன் பின்தங்கினார்கள்? அவர்கள் தங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கினார்கள். திருமணம் — அதற்கு மேலாக பெயர் சூட்டுவதற்கு விழா, கத்னாவுக்கு விழா, காஃபிர்களைப் போல வீட்டில் ஒரு பெண் பிள்ளை பெரியவளாக ஆகிவிட்டால் அதற்கு விழா — இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் விழாக்கள் வைத்து, அதற்கு செலவுகளை கொட்டி வீணடிக்கிறார்கள்.
பிறகு ஆடை உடைகளிலும் இப்படி செல்வங்களை வீணடிப்பது. இப்படி செல்வத்தை வீணடிக்கும் போது, கண்டிப்பாக அங்கு நேரங்களும் வீணடிக்கப்படும்; கண்டிப்பாக மனிதனுடைய ஆற்றலும் திறமைகளும் வீணடிக்கப்படும்.
இன்று, பிற சமூக மக்கள் நம்மை முந்திவிட்டார்களே! நம்மை மிகைத்துவிட்டார்களே! நாம் பின்தங்கி விட்டோமே! என்று கவலைப்படுகின்றோம், ஏங்குகின்றோம். குறை நம்மிடத்தில்தான் இருக்கிறது. அதற்கான காரணத்தை நான் தேடிக் கொண்டேன் என்ற அந்த புத்தி நமக்கு வருவதில்லை. அல்லாஹ் மன்னிப்பானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! எங்கு அல்லாஹ் தொழுகையை சொல்கின்றானோ அங்கே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:1-3)
முஃமின்கள் வெற்றி பெற்றார்கள், எந்த முஃமின்கள்? படிப்பிலே சிறந்தவர்களா? பட்டம் வாங்கியவர்களா? நீ ஆயிரம் பட்டம் வாங்கினாலும் படித்தாலும், ஆயிரம் செல்வ செழிப்பிலே நீ கொடி கட்டி பறந்தாலும் உன்னிடத்திலே தொழுகை இல்லை என்றால் அந்த தொழுகையில் உள் அச்சம் இல்லை என்றால் நீ வேஸ்ட்.
ஈமான் உள்ளவர்கள் வெற்றி பெற்றார்கள். (அல்குர்ஆன் 23:1)
முஸ்லிம் என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது. முஸ்லிம் என்ற பெயரோடு சேர்த்து யாருடைய உள்ளத்தில் ஈமான் குடிகொண்டதோ, தான், கொண்ட ஈமானுக்கு தன்னை அர்ப்பணிக்கின்றாரோ அந்த ஈமானுக்கு முரணான ஒவ்வொரு சொல் செயல் ஆகியவற்றிலிருந்து தன்னை தூரமாக்கிக் கொள்கிறாரோ அவர் முஃமின்.
ஒரு முஃமின் யார்?
لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிற மக்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்களை (மார்க்க சட்டங்களை எதிர்ப்பவர்களை) நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். (மார்க்க சட்டத்தை எதிர்க்கிற) அவர்கள் தங்கள் தந்தைகளாக; அல்லது, தங்கள் பிள்ளைகளாக; அல்லது, தங்கள் சகோதரர்களாக; அல்லது, தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! இத்தகையவர்கள்தான் - இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஈமானை உறுதிபடுத்திவிட்டான். இன்னும் அவர்களை தன் புறத்திலிருந்து உதவியைக் கொண்டு பலப்படுத்தினான். இன்னும், அவன் அவர்களை சொர்க்கங்களில் நுழைய வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வான். (அவர்களினால் மகிழ்ச்சி அடைவான்.) அவர்களும் அவனை பொருந்திக் கொள்வார்கள். (அவர்களும் அவனால் மகிழ்ச்சி அடைவார்கள்.) அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியினர்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.” (அல்குர்ஆன் 58:22)
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வோடு அல்லாஹ்வுடைய ரசூலோடு யுத்தம் செய்பவர்களிடத்தில் நேசம் பாராட்ட மாட்டான். அவன் முஃமின். அல்லாஹ்விடத்தில் விரோதம் காட்டுபவன் அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே சண்டை செய்பவன், தன்னை பெற்று எடுத்த சொந்த தகப்பனாக இருந்தாலும், தான் பெற்ற சொந்த பிள்ளையாக இருந்தாலும், தன்னோடு பிறந்த சொந்த சகோதரனாக இருந்தாலும், தனது உற்ற குடும்பமாக இருந்தாலும் ஒருபோதும் அவர்களை நேசிக்க மாட்டான்.
அல்லாஹு தஆலா சொல்கிறான்; அந்த முஃமின்கள் அவர்களுடைய அடையாளம் என்ன? தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். தொழுகையில் உள் அச்சம் வர வேண்டும் என்றால் தொழுகையில் கவனம் வர வேண்டும் என்றால் அந்த முஃமின்கள் என்ன செய்ய வேண்டும் அடுத்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
சூரத்துல் முஃமினூன் படித்துப் பாருங்கள். சிந்தனையோடு படியுங்கள். படிப்பினையோடு படியுங்கள். ஒவ்வொரு வசனமும் பிந்தி உள்ள வசனத்தோடு முந்தி உள்ள வசனத்தோடு எப்படி தொடர்பு படுகிறது என்று ஆராய்ச்சியோடு படியுங்கள்.
தொழுகையாளி முஃமின்கள் வெற்றி பெற்றார்கள். அந்த முஃமின்கள் யார்? தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். வெறும் தொழக்கூடியவர்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. தொழுபவர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. அந்தத் தொழுகை எப்படி நிதானமாக ருகூஃ, சுஜூது, கியாமோடு இருக்கின்றதோ, அதோடு சேர்ந்து அந்தத் தொழக்கூடியவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் பயம் இருக்க வேண்டும். மறுமையின் பயம் இருக்க வேண்டும்.
அந்த மறுமையின் பயம் அவனுக்கு தொழுகையில் அதிகமாகி அதிகமாகி, அல்லாஹ்வுடைய அன்பு அவனுக்கு தொழுகையில் அதிகமாகி, சொர்க்கத்தின் அன்பு தொழுகையில் அதிகமாகி, நபியின் மீது உண்டான பாசம் தொழுகையில் அவனுக்கு அதிகமாகி, அவன் தொழுது முடித்து செல்லும் போது, மஸ்ஜிதிலிருந்து வெளியே செல்லும் போது, அவனுடைய வாழ்க்கை ஈமானிய வாழ்க்கையாக மாற வேண்டும்.
இன்று எப்படி என்றால்? (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) இணை வைப்பவர்கள் குற்றம் செய்வதற்கு முன்பு தங்களுடைய வணக்கஸ்தலங்களுக்கு செல்வார்கள். குற்றம் செய்ததற்குப் பிறகு தங்களுடைய வணக்க ஸ்தலங்களுக்கு செல்வார்கள். ஆனால் குற்றங்களை விட்டு விலக மாட்டார்கள்.
நான் பெயரை குறிப்பிடவில்லை. பொதுவாக இணை வைப்பவர்கள், இந்த தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாதவர்கள், குற்றம் செய்வதற்கு முன்பே அவர்கள் நம்புகிற கடவுளை வேண்டிவிட்டு குற்றம் செய்யச் செல்வார்கள். குற்றம் செய்ததற்குப் பிறகும் குற்றத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, கடவுளை வேண்டிக் கொள்வார்கள். குற்றம் இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காக, இந்த குற்றத்தால் எனக்கு தண்டனை வந்து விடக் கூடாது என்பதற்காக கடவுளை வேண்டிக் கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் தான் செய்கின்ற குற்றத்தை விட்டு விலகுவதற்காக , திருந்துவதற்காக வணக்க ஸ்தலங்களுக்கு செல்ல மாட்டார்கள். மீண்டும், மீண்டும் அந்தக் குற்றத்தில் நீடித்திருப்பதற்காக வணக்க ஸ்தலங்களுக்கு செல்வார்கள்.
அப்படித்தான் இன்றைய முஸ்லிம்களில் பலரும் இருக்கிறார்கள். ஹஜ்ஜுக்கு செல்வதற்கு முன்பு எதை செய்தாரோ, எந்த பாவத்தோடு இருந்தாரோ, எந்த ஹராமோடு வாழ்ந்தாரோ, எந்த குற்றச் செயல்களில் இருந்தாரோ — தொழிலிலோ அல்லது சமூக வாழ்க்கையிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ — ஹஜ்ஜுக்கு பிறகும் அதையே தொடர்வார்கள்.
“என்ன, ஹஜ்ஜுக்கு போயிட்டா கொஞ்சம் அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைக்கும். தண்டனை கிடைக்காது. கொஞ்சம் சமாளிக்கலாமே” என்ற எண்ணம்.
அதுபோன்றுதான் தொழுகைகள். தொழுகை ஏன்?
اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ
நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது. (அல்குர்ஆன் 29:45)
தொழுகைக்குப் பிறகு தொழுகைக்கு முன்பு அவர் செய்த பாவங்கள் அவருக்கு அந்த தொழுகையிலே அதை உணர வேண்டும். நான் இப்படிப்பட்ட குற்றத்தை செய்துவிட்டு வந்து விட்டேன் என்ற கவலை அவருக்கு தொழுகையில் வரவேண்டும். தவ்பா செய்ய வேண்டும். இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். தொழுது முடித்து செல்லும் போது அந்த ஈமானிய கவலையோடு சென்று அந்தப் பாவத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். அது தான் அந்த உள்ளச்சம். அத்தகைய முஃமின்கள் வெற்றி அடைவார்கள்.
சரி, அடுத்து அல்லாஹ் என்ன சொல்கிறான்? இதுவெல்லாம் ஒரு முஃமினிடத்திலே வரவேண்டும் என்றால்;
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
அவர்கள் வீணானவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 23:3)
யாரிடத்தில் வீணான காரியங்கள் அவருடைய நேரத்தை, அவருடைய அறிவை, அவருடைய ஆற்றலை ஆக்கிரமித்துக் கொண்டனவோ அவர் எப்படி தொழுகையில் உள்ளச்சம் உடையவராக, கவனம் உடையவராக இருப்பார்?
அவருடைய உள்ளம் எப்படி அல்லாஹ்வின் அன்புக்காக ஏங்கும்? அவருடைய உள்ளம் எப்படி சொர்க்கத்திற்காக ஏங்கும்? அவருடைய உள்ளம் எப்படி ரசூலுல்லாஹ் அவர்களின் அன்பில் துடிக்கும்? அவருடைய உள்ளம் எப்படி மார்க்கத்தில் கவனம் செலுத்தும்? சிந்தித்துப் பாருங்கள்!
ஏன்? அவருடைய நேரம், அவருடைய அறிவு, அவருடைய சிந்தனை எல்லாம் வீணான விஷயங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. மேட்ச் நடக்கும்போது அதை பார்க்க வேண்டும் என்ற வெறி, அதிலே அவர்களுடைய சிந்தனை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதை. வீண் விளையாட்டுகள், எந்த விளையாட்டுகள் நமக்கு இந்த மார்க்கத்தை பலவீனப்படுத்தக் கூடியதாக இருக்கிறதோ, நம்முடைய அறிவை, திறமையை, ஆற்றலை வீணடிக்கக் கூடியதாக இருக்கிறதோ, அதில் எப்படி மோகம் கொண்டு அலைகிறார்கள் பாருங்கள்.
இப்படி ஒரு நிலையில் இருக்கும் ஒரு முஃமின், ஆகிரத்துக்காக தன்னை எப்படி ஒதுக்கிக் கொள்வான்? ஆகவே, ஒரு முஃமின் ஒருபோதும் கவனம் அற்றவனாக இருக்க மாட்டான். நான் எந்த நேரத்தில் இருக்கின்றேன்? நான் எந்த மாதத்தில் இருக்கின்றேன்? இப்போது அல்லாஹ்வின் கடமை என்ன? என்பதை அவன் உணர்வான்.
காலையில் காலை துஆக்கள் ஓத வேண்டும். மாலையில் மாலை துஆக்கள் ஓத வேண்டும். இரவில் துஆக்கள் ஓத வேண்டும். தூங்குவதற்கு முன்பு, தூங்கி எழுந்த பின்பு, தொழுகைக்குப் பின்பு—எல்லா நேரங்களும் இபாதத்தோடு தொடர்புபட்டவை.
அல்லாஹ்வின் தூதர் ﷺ மாதங்களை கவனித்தார்கள், கண்காணித்தார்கள். மாதங்களுக்கான சட்டங்களை அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
ரப்புல் ஆலமீன் அல்லாஹ் அவனுடைய கண்ணியமிக்க வேதம் அல்குர்ஆனிலே நமக்கு இதை உணர்த்துகிறான். ரப்புல் ஆலமீன் சூரத்துத் தவ்பா உடைய 36 வது வசனத்தில் சொல்கிறான்.
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)
அந்த பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் மிக புனிதமானவை; கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை. அதற்குரிய மரியாதை, அதற்குரிய கண்ணியம், அதற்குரிய கட்டுப்பாடுகள் பேணப்பட வேண்டியவை என்று அல்லாஹு தஆலா வலியுறுத்துகின்றான்.
இப்படி சொன்னதற்குப் பிறகு எனக்கு மாதங்களை அறிய தேவையில்லை என்று ஒருவன் சொல்வானேயானால் அல்லாஹ் சொல்லி இருக்கக் கூடிய அந்த புனிதத்தை அவன் அலட்சியம் செய்கிறான்.
அய்யாமுல் ஜாஹிலிய்யா உடைய அரேபியர்கள் இந்த புனித மாதங்களை குழப்புவதற்காக அதை ஹலாலாக ஆக்கிக் கொள்வதற்காக மாதங்களை முன்னும் பின்புமாக ஆக்கிக் கொள்வார்கள். முஹர்ரமுடைய இடத்தில் ஸஃபரை கொண்டு வந்து விடுவார்கள். ஸஃபருடைய இடத்தில் முஹர்ரமை மாற்றி விடுவார்கள். இப்படியாக மாதங்களை குழப்பிக் கொண்டே இருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றார்களோ மக்கா வெற்றி கொள்ளப்பட்டது எட்டாவது ஆண்டிலே அந்த ஆண்டில் ரசூல்லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை. அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பினார்கள். அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜுக்கு வருகிறார்கள்.
அந்த ஆண்டு அரேபியர்கள், முன்பு மாதங்களை முன் பின்னாக ஆக்கி வைத்திருந்தார்கள் அல்லவா அந்த நிலைமை மாறி துல்ஹஜ் மாதம் அதற்குரிய அந்த காலத்திலே வந்தது. அப்போது தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜுக்காக வந்தார்கள் சொல்கிறார்கள்,
إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ، وَذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ، مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى، وَشَعْبَانَ
நிச்சயமாக காலம் இப்போது சுற்றி அதனுடைய இடத்திற்கு வந்துவிட்டது. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும் போது எப்படி இருந்ததோ, அந்த அமைப்பிற்கே காலம் இப்போது வந்துவிட்டது. மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவற்றில் மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. முதலாவது துல்கஃதா, இரண்டாவது துல்ஹிஜ்ஜா, மூன்றாவது அல்முஹர்ரம், நான்காவது ரஜப். ஜுமாதுல் உக்ராவுக்கும் ஷஅபானுக்கும் இடையே இருக்கக்கூடிய ரஜப் மாதம்.
அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4662.
தூரதூரமான இடங்களில் இருந்து வருவதற்காக ஹஜ்ஜுக்கு முன்பாக உள்ள ஒரு மாதத்தை அல்லாஹ் புனிதமாக்கினான். பிறகு ஹாஜிகள் தங்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பிச் செல்வதற்காக அதற்கு அடுத்துள்ள முஹர்ரம் மாதத்தை அல்லாஹு தஆலா புனித மாதமாக ஆக்கினான். இது அல்லாஹு தஆலாவின் ஏற்பாடுகளில் உள்ள ஹிக்மத்துகளில் ஓன்று.
இந்த முஹர்ரம் மாதம், அல்லாஹ்வுடைய மாதம். இதை அல்லாஹ்வுடைய மாதம் என்று அல்லாஹ்வின் பக்கம் இணைத்து இதனுடைய சிறப்பை சொன்னார்கள். மக்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு மாதத்தைப் பற்றி அந்த மாதத்தில் நன்மைகளைப் பற்றி அதுதான் அல்லாஹ்வுடைய மாதம் ஷஹருல்லாஹில் முஹர்ரம் - முஹர்ரம் மாதம் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த புனிதமிக்க கண்ணியமிக்க மாதத்தினுடைய சிறப்பை சொன்னார்கள்:
أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ
நோன்புகளிலே சிறந்த நோன்பு ரமழான் மாத நோன்பு. பிறகு ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பிற்குப் பிறகு நோன்புகளிலே சிறந்த நோன்பு நீங்கள் முஹர்ரம் என்று அழைக்கிறீர்களே அந்த மாதத்தில் நீங்கள் நோற்கக்கூடிய நோன்பு.
(அது ஆஷுராவுடைய உடைய பத்தாவது நோன்பாக இருக்கட்டும். அல்லது அது போக மற்ற நஃபிலான நோன்புகள்; இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுமேயானால் அந்த நோன்புகளாக இருக்கட்டும். ரமழான் மாதத்தின் ஃபர்ளான நோன்புகளுக்கு பிறகு இந்த முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படக்கூடிய நஃபிலான நோன்புகள் சிறந்த நோன்புகள்.)
அது போன்று ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு தொழுகையிலே சிறந்தது இரவில் தொழப்படும் இரவு தொழுகை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
சரி, இந்த முஹர்ரம் மாதம் முதலாவதாக பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். அதிகமாக வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். நஃபிலான நோன்புகள் நோற்க வேண்டும். அதுபோக இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் மிக பேணப்பட வேண்டிய கண்ணியப்படுத்தப்பட வேண்டிய நோன்பை கொண்டு சிறப்பிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமலை பற்றி அறிவிக்கப்படுகின்றது.
قَدِمَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ المَدِينَةَ فَرَأَى اليَهُودَ تَصُومُ يَومَ عاشُوراءَ، فَقالَ: ما هذا؟ قالوا: هذا يَوْمٌ صَالِحٌ؛ هذا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إسْرَائِيلَ مِن عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى. قالَ: فأنَا أحَقُّ بمُوسَى مِنكُمْ، فَصَامَهُ، وأَمَرَ بصِيَامِهِ.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா வந்தார்கள். அங்கே யூதர்கள் முஹர்ரம் மாதத்தின் இந்த பத்தாவது நாளிலே நோன்பு நோற்பதை பார்த்தார்கள், ஏன் இவர்கள் இந்த நாட்களில் நோன்பு வைக்கிறார்கள்? என்பதாக கேட்டார்கள். அப்போது சொல்லப்பட்டது;
இது ஒரு நல்ல நாள். காரணம், , மூஸா அலைஹிஸ்ஸலாமையும் பனீ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதாவது இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளிலே அல்லாஹுத்தஆலா இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாத்தான். அந்த நாளிலே நோன்பு வைத்தார்கள் என்று சொன்னவுடன்;
(அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள். எப்பேர்ப்பட்ட நபியை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்றான் பாருங்கள். அவர்களுடைய பார்வை சிந்தனை அவருடைய ஞானம்)
சொன்னார்கள்; அப்படியா? உங்களைவிட மூஸாவை பற்றி பேசுவதற்கு, உங்களை விட மூஸாவை மதிப்பதற்கு, உங்களை விட மூஸாவை சொந்தம் கொண்டாடுவதற்கு நான் உரிமையாளன்; நான் தகுதியானவன் என்று கூறி அந்த பத்தாவது நாளிலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றார்கள். அது மட்டுமல்ல, அந்தப் பத்திலே தங்களது மக்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண்: 2004, முஸ்லிம் எண்: 1130.
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ
அரஃபா நாளில் நோன்பு நோற்பது; (பிறை ஒன்பது என்று சொல்லவில்லை. அரஃபாவுடைய நாளில் நோன்பு நோற்பது என்று சொன்னார்கள்) நான் நன்மையை கருதுகின்றேன். அல்லாஹ்விடத்தில் இந்த நோன்புக்கு பதிலாக இந்த அரஃபாவுடைய நோன்புக்கு முந்தைய ஒரு ஆண்டுடைய பாவங்களையும் அதற்கு பிந்தைய ஓராண்டு பாவங்களையும் அல்லாஹு தஆலா போக்க வேண்டும் என்று அதற்குரிய சிறப்பை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு தஆலா எப்பேர்ப்பட்ட ரஹ்மான்! எவ்வளவு பெரிய கருணையாளன்!
அடியான் இது போன்ற புனித மாதங்களை இது போன்ற மகத்தான நாட்களை அல்லாஹ்வுக்காக தேடிக் கொண்டிருந்து, அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்து, இந்த நன்மையை ஆதரவு வைத்து, அந்த அமலை செய்யும்போது அல்லாஹ்வுடைய பேரருள் எப்படி பொங்குகிறது பாருங்கள். அல்லாஹு தஆலா அந்த அடியாருடைய பாவங்களை எல்லாம் மன்னிக்கின்றான்.
இது சாதாரணமாக கிடைத்து விடாது. அங்கே உள்ளத்திலே தேடல் இருக்க வேண்டும். அந்த நன்மைக்கான ஆசை இருக்க வேண்டும். அந்த நன்மையை எதிர்பார்க்க வேண்டும். இந்த புனிதத்தை மதிக்கக் கூடியவராக அவர் இருக்க வேண்டும்.
இன்று பலர் செய்கிறார்கள். கண்டிப்பாக, அல்லாஹ்விடத்திலே அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்பது வேறு ஒரு விஷயம்.
ஆனால், அல்லாஹ் சொல்கிறான். இபாதத்துகள் என்பது ஆசையோடு என்னை வணங்குங்கள். பயத்தோடு என்னை வணங்குங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் நன்மைகளை சொல்லும்போது; ஓர் அடியான் , அல்லாஹ்வே நீ வாக்களித்த நன்மை எனக்கு வேண்டும். உன்னுடைய தூதரின் நாவினால் நீ சொல்லிய அந்த நன்மைக்காக நான் இதை செய்கிறேன். உன்னுடைய மன்னிப்புக்காக நான் செய்கிறேன். உன்னுடைய அன்புக்காக நான் செய்கிறேன். மறுமையில் வெற்றிக்காக நான் இதை செய்கிறேன் என்று அந்த பேராசை அல்லாஹ்வுடைய அருளின் பக்கம் தேவை உள்ளவனாக அல்லாஹ்வுடைய மன்னிப்பின் பக்கம் தேவை உள்ளவனாக இதை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
அடுத்து ஆஷுரா உடைய நோன்பை வைப்பது. நான் அல்லாஹ்விடத்தில் இதற்கான நன்மையை எதிர்பார்க்கிறேன். இது இதற்கு முந்தைய ஆண்டுடைய பாவங்களையும் போக்கிவிடும் என்று.
அறிவிப்பாளர் : அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
அல்லாஹ்வின் அடியார்களே! என்னென்ன சிறப்புகள் இங்கு சொல்லப்பட்டு இருக்கின்றனவோ இந்தப் பாவங்களை போக்குவது என்பது எல்லா சிறு பாவங்களையும் எடுத்துக் கொள்ளும். பெரும்பாவங்களை பொருத்தவரை;
(பெரும் பாவங்கள் என்றால் என்ன? எந்தப் பாவத்தை குறித்து தண்டனையோடு எச்சரிக்கையோடு அல்குர்ஆனிலோ அல்லது அல் ஹதீஸிலோ செய்யப்பட்டதோ அவை அனைத்தும் பெரும்பாவங்களிலே வரும்.)
அந்த பெரும்பாவங்களை பொறுத்தவரை அடியான் தவ்பாவும் கேட்க வேண்டும். அதற்காக வருந்த வேண்டும். அதிலிருந்து விலகுவேன் என்ற அந்த ஒரு உறுதியும் அவரிடத்திலே ஏற்பட வேண்டும். அப்போதுதான் அந்த பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
என்னென்ன சிறப்புகள் நமக்கு வந்திருக்கின்றனவோ நன்மைகளைப் பற்றி நன்மைகள் பாவங்களை மன்னிக்கும் என்பதாக அது எந்த பாவங்களை குறித்து? அறிஞர்களுக்கு மத்தியிலே ஒருமித்த கருத்து, நம்முடைய சிறு பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். பெரும் பாவங்களை பொறுத்தவரை அந்த பெரும் பாவங்களுக்கான மன்னிப்பு என்பது அதற்காக தவ்பா இஸ்திஃபார் வேண்டும்.
அடுத்து, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலும் ஒரு கட்டளையை கொடுத்தார்கள்.
சரி, யூதர்கள் நோன்பு வைத்தார்கள் நோக்கம் நல்ல நோக்கம். அமல் சரியான அமல். எனவே அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்பற்றினார்கள்.
அடுத்த இங்கேதான் நாம் கோட்டை விடுகிறோம். இங்கேதான் நாம் தவறிழைக்கிறோம். எப்படி ஒரு நல்ல விஷயத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அஹ்லுல் கிதாப் - வேதக்காரர்களை பின்பற்றும்போது கூட மிக கவனமாக இருந்தார்கள். மிக உஷாராக இருந்தார்கள்.
ஒரு நன்மையில் அல்லாஹ்வுடைய அனுமதியோடு பின்பற்றும்போது கூட அந்த யூதர்களைப் போன்று இருக்கக் கூடாது என்று.
இன்று நன்மை ஒரு பக்கம் முற்றிலுமாக அது கணக்கில் எடுக்கப்படாமல் ஆகிவிட்டது. இன்றைய முஸ்லிம்கள் பாவத்தில் யூதர்கள் நசராணிகளை பின்பற்றுகிறார்கள். வழிகேடுகளிலே பின்பற்றுகிறார்கள். அனாச்சாரங்களிலே பின்பற்றுகிறார்கள். ஆபாசங்களிலே பின்பற்றுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரின் எச்சரிக்கை உண்மையாகி விடுமோ என்று பயப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:
இஸ்ரவேலர்களிலே ஒருவன் தன்னுடைய தாயிடத்திலே விபச்சாரம் செய்திருப்பானேயானால் உங்களிலும் ஒருவன் அப்படி தோன்றுவான் என்பதாக. (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2641.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
மேலும், சொன்னார்கள் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் சென்றிருந்தாலும் நீங்களும் அந்த பொந்திற்குள் செல்ல முயற்சி செய்வீர்கள் என்பதாக. (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3456.
யாருடைய அந்த வழித்தோன்றலை அல்லாஹு தஆலா அவர்களின் பாவங்களின் காரணமாக பன்றிகளாக குரங்குகளாக மாற்றினானோ எந்த பாவங்களின் காரணமாக சபிக்கப்பட்டார்களோ அவர்களின் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் : அவர்கள் வட்டி வாங்கினார்கள். நபிமார்களை கொன்றார்கள். லஞ்சம் வாங்கினார்கள். மார்க்கத்தில் ஹராமானதை சாப்பிட்டார்கள். மார்க்கத்தை புரட்டி மக்களை ஏமாற்றி மார்க்கத்தை தொழிலாக்கி மக்களிடம் இருந்து ஹராமானதை சாப்பிட்டார்கள் என்று சொல்கிறானே!
அதை இந்த உம்மத்து செய்து கொண்டிருக்கின்றது. வட்டி இல்லாத முஸ்லிம் நாடுகள் இல்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக! இசையும் ஆபாசங்களும் நடனங்களும் காஃபிர்களின் நாடுகளில் இருப்பதை விட அதிகமாக முஸ்லிம்களுடைய நாடுகளிலே மலிந்துவிட்டன.
இந்த ஆபாசங்களுக்காக இந்த அநியாயங்கள் அக்கிரமங்களுக்காக காஃபிர்கள் முஸ்லிமுடைய நாடுகளை தேடி வருகிறார்கள். அந்த அளவு நிலைமை மோசம் ஆகிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரர்களே! பயப்பட வேண்டும். அல்லாஹ்வைப் பொறுத்தவரை அல்லாஹு தஆலா ஈமான் அமல்களை கொண்டு தான் முடிவு செய்வானே தவிர, முஸ்லிம் என்று நாம் பெயர் வைத்துக் கொள்கின்ற காரணத்தினால் அல்லாஹ்வுடைய உதவி கிடைத்துவிடும் என்று எண்ணி விடாதீர்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لئِن بقيتُ إلى قابلٍ، لأَصُومنَّ التَّاسِعَ
அந்த யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அதற்கு முன்பாக ஒரு நாள் நீங்கள் நோன்பு வையுங்கள். நான் அடுத்த ஆண்டு நான் ஹயாத்தாக இருப்பேனேயானால் பிறை ஒன்பதிலும் நோன்பு வைப்பேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1134.
அதுபோக கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த முஹர்ரம் மாதத்தில் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதை சம்பந்தப்படுத்தி இதற்காக இந்த முஹர்ரம் பத்தாவது நாளிலே துக்கம் அனுசரிப்பது, பஞ்சா கொண்டாடுவது, தீ மிதிப்பது இன்னும் என்னென்ன சடங்குகள் செய்யப்படுகின்றனவோ இது ஷியாக்களின் மூலமாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அனாச்சாரங்கள். இவற்றிலே பல ஷிர்கிலே அல்லது பெரும் பாவத்திலே தள்ளக்கூடிய மிகப்பெரிய வெறுக்கப்பட்ட குற்றங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவுத்திற்கு பிறகு அவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர இந்த மாதத்தினுடைய சிறப்பு என்பது அதைக் கொண்டு அல்ல. அல்லது பிறை பத்திலே நாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதால் நாம் அந்த நாளிலே சந்தோசப்படக்கூடாது. அல்லது அந்த முஹர்ரம் மாதத்தினுடைய 10 நாட்களை துக்கம் அனுசரிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வது இஸ்லாமிய மார்க்கத்திலே அனுமதிக்கப்படாத ஒன்று.
ஒரு மய்யத்திற்காக துக்கம் அனுசரிப்பதாக இருந்தால் அந்த மய்யத்துடைய உறவினர்கள் மூன்று நாட்களுக்கு அவர்கள் துக்கம் அனுசரிக்கலாம். மனைவியாக இருந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கலாமே தவிர, இப்படி ஆண்டிற்கு ஒரு முறை அந்த இறந்த நாளை அல்லது கொல்லப்பட்ட நாளை துக்க நாளாக கொண்டாடுவது இஸ்லாமிய மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானவை.
ஆக, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்ற வேண்டும். சரியான முறையிலே பின்பற்ற வேண்டும். நடுநிலையான முறையிலே பின்பற்ற வேண்டும், கல்வி கற்று ஆதாரங்களின் அடிப்படையிலே பின்பற்ற வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நம்முடைய உம்மத்திற்கு நல்வழிகாட்டுவானாக! நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய புனிதங்களையும் நம்முடைய உம்மத்தையும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக!
இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிராக அவர்களின் சூழ்ச்சிகளை திருப்பி விடுவானாக! முஸ்லிம்களுடைய நிலங்களையும், புனிதங்களையும், அவர்களுடைய செல்வங்களையும், மார்க்கத்தையும், அவர்களுடைய உயிர்களையும், பொருள்களையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
ليأتينَّ على أمَّتي ما أتى على بني إسرائيل حَذوَ النَّعلِ بالنَّعلِ، حتَّى إن كانَ مِنهم من أتى أُمَّهُ علانيَةً لَكانَ في أمَّتي من يصنعُ ذلِكَ، وإنَّ بَني إسرائيل تفرَّقت على ثِنتينِ وسبعينَ ملَّةً، وتفترقُ أمَّتي على ثلاثٍ وسبعينَ ملَّةً، كلُّهم في النَّارِ إلَّا ملَّةً واحِدةً، قالوا : مَن هيَ يا رسولَ اللَّهِ ؟ قالَ : ما أَنا علَيهِ وأَصحابي الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم : 2641 | خلاصة حكم المحدث : حسن
பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக எனது சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவர்.
பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று மார்க்கமுடையவர்களாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2641.
குறிப்பு: (2)
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا: يا رَسُولَ اللَّهِ، اليَهُودَ وَالنَّصَارَى؟ قالَ: فَمَنْ؟ الراوي : أبو سعيد الخدري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் (அப்படியே) பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் கூட, நீங்களும் அதில் நுழைவீர்கள்."
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "(அவர்களைத் தவிர) வேறு யார்?" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3456.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/