பொருளாசை | Tamil Bayan - 971
பொருளாசை!
ஜுமுஆ குத்பா தலைப்பு : பொருளாசை
வரிசை : 971
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 16-12-2024 | 05-06-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை (தக்வாவை) நினைவூட்டுபவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பின்பற்றி, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி, அல்லாஹ்வுடைய வேதத்தை கற்று, ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய சுன்னாவைக் கற்று, அதன்படி செயல்பட வேண்டும்; இந்த மார்க்கத்தில் புதிதாக நூதனமாக உருவாக்கப்பட்ட அனாச்சாரங்கள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் விட்டு விலகி இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா நமக்கு ஹராம் ஆக்கிய இணைவைத்தல், நிஃபாக் (நயவஞ்சகம்), முகஸ்துதி, ரியா (புகழை விரும்புதல்) போன்ற மற்ற பெரும் பாவங்கள் மற்றும் சிறு பாவங்கள் அனைத்தையும் விட்டு விலகி, நம்முடைய வாழ்க்கையை அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்தும், அல்லாஹ்வுடைய சாபத்திலிருந்தும் பாதுகாக்க வேண்டும்; சொர்க்க வாழ்க்கையை, சொர்க்கத்திற்குரிய அமல்களுடைய வாழ்க்கையாக, இந்த உலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா, நல்ல கருத்துக்களையும் நல்ல செய்திகளையும் கேட்டு அதன்படி செயல்படக்கூடிய மக்களாக என்னையும் உங்களையும், நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! மனிதனுக்கு ஏற்படக்கூடிய இச்சை சார்ந்த ஆபத்துகளில் ஒன்று தான், அவனுடைய உடல் ஆசை. அதை ஹராமில் அவன் பயன்படுத்தினால், ஹராமை தேடி இந்த ஆசைக்காக அவன் சென்றால் எத்தகைய இழிவை இம்மையிலும் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் எத்தகைய தண்டனைகளையும் சந்திப்பான் என்பதை சென்ற ஜுமுஆக்களிலே பார்த்தோம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா, சூரா ஆலு இம்ரானிலே 14 வது வசனத்திலே எப்படி இந்த ஷஹ்வத்துல் ஃபர்ஜ் -மனிதனுடைய அந்த (மறை உறுப்பு) மர்ம ஸ்தானத்தால் அவனுக்கு ஏற்படக்கூடிய அந்த இச்சையினால் உள்ள ஆபத்தை சுட்டிக் காட்டுகிறானோ அதற்கு அடுத்ததாக அல்லாஹு தஆலா பொருள் ஆசையை சொல்லிக் காட்டுகிறான்.
எப்படி மனிதனுக்கு உடல் ஆசை அவனை நரகத்தில் தள்ளிவிடுவது போலவே, இந்த செல்வத்தின் மீது, பொருளின் மீது, பொருளாதாரத்தின் மீது அளவுகடந்த மோகம், அதன் மீது உள்ள வெறி, அந்த பொருளாசை, பணத்தாசை ஆகியவை அவனைப் பெரிய ஆபத்தில் தள்ளிவிடும். நாளை மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவனாகவும், அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியவனாகவும் அவனை மாற்றிவிடும்.
இந்த செல்வத்தின் மூலமாக மனிதன் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும், அல்லாஹ்வுடைய சொர்க்கத்தையும் எப்பொழுது அவன் அடையலாம்?
முதலாவது, அந்த செல்வம் நமக்கு சேரக்கூடிய வழி ஹலாலாக இருக்க வேண்டும். பிறகு அந்த செல்வத்தை ஹலாலான வழிகளிலே வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்விற்கு விருப்பமான வழிகளிலே செலவு செய்ய வேண்டும்.
ஒரு அடியான் தன்னுடைய செல்வத்தை ஹலாலிலே சம்பாதித்து, பிறகு அதன் மூலமாக அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளைத் தேடுவதற்கு அந்த பொருளாதாரத்தை செல்வத்தை பயன்படுத்தினால் (அல்ஹம்து லில்லாஹ்) அவன் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய வெற்றியாளன். அல்லாஹு தஆலா அந்த அடியானுடைய மதிப்பை, அந்தஸ்தை, தரஜாவை உயர்த்தி விடுகிறான். மிகப்பெரிய நன்மைகளை சொர்க்கத்தின் பெரிய பதவிகளை அவனுக்கு வழங்குகிறான்.
அதே நேரத்தில் ஒரு மனிதன் அந்த செல்வத்தை ஹலாலிலே சம்பாதிக்கிறான். ஆனால், ஹராமிலே செலவு செய்கிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அதுபோன்று, இன்னொருவன் சம்பாதிப்பதும் பொருள் ஈட்டுவதும் பொருள் தேடுவதும் ஹராமான வழிகளில். அதை செலவு செய்வதும் ஹராமான வழிகளில்.
சகோதரர்களே! இவர்கள் நாளை மறுமையிலே மிகப்பெரிய ஆபத்திற்குரியவர்கள். அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய தண்டனைக்குரியவர்கள். அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு எச்சரிக்கிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு எச்சரிக்கிறார்கள்.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் குர்ஆனை கொண்டு சுன்னாவைக் கொண்டு மிக அழகிய முறையில் தர்பியா கொடுக்கப்பட்டார்கள். இந்த செல்வத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும்? இந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? என்று அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அவர்களுடைய (நஃப்ஸு) உள்ளத்திற்கு தர்பியா - பயிற்சி கொடுக்கப்பட்டது.
உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். எவ்வளவு எதார்த்தமாக அல்லாஹ்விடத்தில் பேசுகிறார்கள்.
அல்லாஹு தஆலா செல்வத்தைப் பற்றி அல்குர்ஆனிலே சொல்லும்பொழுது,
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا
செல்வமும் ஆண் பிள்ளைகளும் இந்த உலக வாழ்க்கையின் அலங்காரங்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.
இதை குறித்து உமர் அல் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்விடத்தில் பேசுகிறார்கள்: அல்லாஹ்வே! நீ எதை எங்களுக்கு அலங்காரமாக ஆக்கினாயோ அதைக் கொண்டு திருப்தி அடையாமல் அல்லது அதைக் கொண்டு மகிழ்ச்சி அடையாமல் நாங்கள் எப்படி இருக்க முடியும்! எங்களுக்கு முடியாது. அல்லாஹ்வே! நீ எங்களுக்கு அலங்கரித்ததை கொண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்து விடுகிறோம்.
اللهم إني أسالك أن أنفقه في حقه
யா அல்லாஹ்! செல்வத்தை அதற்குரிய வழியில் செலவழிக்கக்கூடிய பாக்கியத்தை அதனுடைய ஹக்கிலே அதை எங்கு செலவு செய்யப்பட வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, நீ முஃமின்களுக்கு கட்டளை இட்டயோ அந்த வழியிலே நான் அந்த செல்வத்தை செலவழிக்க வேண்டும் என்று உன்னிடத்திலே கேட்கிறேன் என்று துஆ கேட்டார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய ஈமானிய பலவீனமான நிலையை சொல்கிறேன். நாம் அல்லாஹ்விடத்தில் செல்வத்தை கேட்கிறோம். அழுது கேட்கிறோம். கவலையோடு கேட்கிறோம். தொடர்ந்து கேட்கிறோம். அல்லாஹ்விடத்தில் வற்புறுத்துகிறோம்.
யா அல்லாஹ்! எனக்கு செல்வத்தை கொடு! எனக்கு செல்வத்தில் அதுவும் குறிப்பிட்ட அளவை சொல்லி எல்லாம் கேட்பவர்கள் இருக்கிறார்கள். எனக்கு இவ்வளவு செல்வம் வேண்டும்; இப்படி வேண்டும் என்று. அப்படி நாம் கேட்கும் பொழுது யா அல்லாஹ்! நீ கொடுக்கக்கூடிய செல்வத்தை நீ விரும்பிய வழியில் செலவழிக்க எனக்கு வாய்ப்பு கொடு! என்று கேட்கின்றோமா?
யா அல்லாஹ்! நீ எனக்கு கோடியை கொடு! என்று கேட்பது தப்பில்லை. அல்லாஹ்விடத்தில் கேட்காமல் யாரிடத்தில் கேட்பது?! யா அல்லாஹ்! அந்த கோடியை, ஒரு மஸ்ஜிதுக்கு, ஒரு மதரஸாவிற்கு, நாலு எத்தீம்களுக்கு, நாலு ஏழைகளுக்கு, தேவை உள்ள உறவுகளுக்கு அள்ளிக் கொடுக்க எனக்கு மனசை கொடு! அதைக் கேட்கின்றோமா?
செல்வத்தை கேட்கிறோம். ஆனால், அல்லாஹ்விடத்தில் சதக்கா கொடுப்பதற்குரிய தர்மம் கொடுப்பதற்குரிய ஜக்காத் கொடுப்பதற்குரிய (தவ்ஃபீக்கை) வாய்ப்பை, அல்லாஹ்விடத்தில் கேட்பதில்லை. ஏழைகளுக்கு உறவுகளுக்கு தேவை உள்ளவர்களுக்கு அவர்கள் கேட்பதைவிட அதிகமாக கொடுக்க வேண்டும், அந்த பாக்கியத்தை எனக்கு கொடு! அந்த தாராளமான விசாலமான உள்ளத்தை எனக்கு கொடு! கருமித்தனம் கஞ்சத்தனத்திலிருந்து என்னை பாதுகாத்து விடு!
وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
கருமித்தனத்திலிருந்து யாருடைய உள்ளம் பாதுகாக்கப்பட்டதோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்! (அல்குர்ஆன் 59:9) (அல்குர்ஆன் 64:16)
உள்ளத்தில் அந்த கருமித்தனம் இல்லாத கொடை வள்ளல்களில் ஒருவனாக என்னை ஆக்கிவை! என்று அல்லாஹ்விடத்திலே கேட்கிறோமா?
நீ மட்டும் கொடுத்துக்கிட்டே இரு! அதிலிருந்து எங்களுக்கு விருப்பப்பட்ட… கொஞ்சமா… யாருக்காவது… எப்பயாவது குடுத்துட்டு.. அதிலேயே ரொம்ப பெருமை கொள்வது.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சஹாபாக்கள் இந்த துன்யாவை சம்பாதித்தார்கள். இந்த துன்யாவில் அவர்கள் தாங்கள் சம்பாதித்த செல்வத்திலிருந்து இந்த துன்யாவில் அவர்கள் விட்டுச் சென்றதை விட மறுமைக்காக அவர்கள் எடுத்துச் சென்றது அதிகம். அவர்களுடைய வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்!
சகோதரர்களே! இன்று, ஏன் நம்முடைய உள்ளம் இப்படி இந்த செல்வத்தின் மீது கருமித்தனத்தால் கஞ்சத்தனத்தால் உலோபித்தனத்தால் வெறி கொண்டு இருக்கிறது? காரணம், அல்லாஹ்விடத்தில் இந்த உள்ளத்தை சுத்தப்படுத்த சொல்லி துஆ கேட்பதில்லை. எப்படி பணத்திற்காக செல்வத்திற்காக வசதியான வாழ்க்கைக்காக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறோமோ, அதே நேரத்தில் யா அல்லாஹ்! செல்வத்தை கொடு! ஆனால் அந்த செல்வத்தின் மீது எனக்கு மோகத்தை ஏற்படுத்தி விடாதே! அந்த செல்வத்தின் மீது எனக்கு கஞ்சத்தனத்தை ஏற்படுத்தி விடாதே! நீ கொடுத்ததை உனது அடியார்களுக்கு கொடுத்து மகிழ்வதற்கு அவர்களை மகிழ்விப்பதற்கு எனக்கு அருள் புரி! என்று அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.
இதுதான் உமருல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த துஆ நமக்கு உணர்த்துகிறது.
யா அல்லாஹ்! நீ கொடுத்த செல்வத்தை கொண்டு மகிழ்ச்சி அடையாமல் எங்களால் இருக்க முடியாது. ஆனால், அந்த செல்வத்தை அதற்குரிய ஹக்கிலே நான் செலவழிப்பதற்கு அதற்குரிய தவ்ஃபீகை உன்னிடத்திலே கேட்கிறேன்.
நூல் : புகாரி.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான். சூரா அத் தகாபுனுடைய 15 ஆவது வசனம்;
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ
உங்களது செல்வங்கள் உங்களது பிள்ளைகள் உங்களுக்கு ஃபித்னா -குழப்பம். (அல்குர்ஆன் 64:15)
உங்களை தடுமாற செய்துவிடும். குழப்பம் என்றால் என்ன? ஈமானுக்கு குழப்பம். அமலுக்கு குழப்பம். தக்வாவிற்கு குழப்பம். நம்முடைய பயபக்திக்கு நம்முடைய மார்க்க பேணுதலுக்கு குழப்பம்.
எத்தனை பேர் நல்லவர்களாக இருந்தார்கள். செல்வத்தால் கெட்டு இருக்கிறார்கள் தெரியுமா? ஏழ்மையால் கெட்டவர்களை விட, வறுமையால் கெட்டவர்களை விட வசதியால் கெட்டவர்கள் அதிகம்.
இன்று, உலகமெல்லாம் ஆடல் பாடல், இசை, ஆபாச செயல்கள் என்று மக்கள் ஓடுகிறார்களே! அல்லாஹ்வுடைய வேதம் கொடுக்கப்பட்டவர்கள்! யாருடைய மொழியிலே இந்த பரிசுத்தமான வேதம் இறக்கப்பட்டதோ, யாருடைய சமுதாயத்தில் இறுதி இறைத்தூதர் அனுப்பப்பட்டு உலக மக்களுக்கெல்லாம் ஒழுக்கத்தை, சத்தியத்தை, மார்க்கத்தை, நேர்மையை, நீதத்தை மறுமையின் வாழ்க்கையை போதித்தார்களோ, அந்த கூட்டம் அந்த சமுதாயம் இன்று இப்படி வழிகெடுகிறார்களே என்ன காரணம்? வறுமையினாலா? இல்லை, செல்வத்தினால்.
இதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள்:
فَوَاللَّهِ لا الفَقْرَ أَخْشَى علَيْكُم، ولَكِنْ أَخَشَى علَيْكُم أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كما بُسِطَتْ علَى مَن كانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ
உங்கள் மீது நான் வறுமையை பயப்படவில்லை. வறுமையால் நீங்கள் மார்க்கத்தை விட்டு விலகி விடுவீர்கள் என்று நான் பயப்படவில்லை. உங்கள் மீது நான் இந்த உலகை (துன்யாவை) தான் பயப்படுகிறேன். உங்களுக்கு இந்த துன்யாவை விசாலமாக வசதியாக கொடுக்கப்பட்டு அந்த துன்யாவிலே நீங்கள் போட்டி போடுவீர்கள்.
உன்னை விட நான் பெரிய பணக்காரன்; உனது நாட்டை விட எனது நாடு செல்வ செழிப்பான நாடு; நீ வருமானம் ஈட்டுவதை விட நான் மிகப்பெரிய வருமானம் ஈட்டுவேன் என்று அதிலே நீங்கள் போட்டி போடுவீர்கள். உங்களுக்கு முன் உள்ளவர்களை இந்த துன்யா அழித்தது போன்று உங்களையும் அழித்துவிடும் என்று நான் பயப்படுகிறேன். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு அவ்ஃப் அல்முஸனீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3158.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டினான்:
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ
உங்களது செல்வங்கள் உங்களது பிள்ளைகள் உங்களுக்கு (ஃபித்னா) பிரச்சனை, சிக்கல், குழப்பம். அல்லாஹ்விடத்தில் தான் மகத்தான கூலி (மகத்தான நன்மை சொர்க்கம்) இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
உங்களது செல்வம் உங்களுக்கு சொர்க்கத்திற்குரிய காரணமாக வழியாக இருக்கிறதா? அல்ஹம்து லில்லாஹ்! உங்களது செல்வம் உங்களை நரகத்தில் தள்ளக்கூடியதாக இருக்கிறதா? பார்த்துக் கொள்ளுங்கள்! அதுதான் அல்லாஹு தஆலா உடைய இந்த வசனத்தின் எச்சரிக்கை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
إنَّ لكلِّ أمَّةٍ فتنةً، وإنَّ فتنةَ أُمَّتي المالُ
ஒவ்வொரு சமுதாய(உம்ம)த்திற்கும் அல்லாஹு தஆலா ஒரு சோதனையை வைத்தான். என் சமுதாய(உம்ம)த்துடைய சோதனை செல்வமாகும்.
அறிவிப்பாளர்: கஅப் இப்னு இயாழ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2336.
அல்லாஹ் பாதுகாப்பானாக! கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நாளை மறுமையிலே ஒவ்வொரு மனிதனிடத்திலும் விசாரிக்கப்படும். அல்லாஹ்விடத்தில் விசாரணைக்கு அவன் பதில் கூறாமல் நகர முடியாது.
அபூ பர்சா அல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
لا تزولُ قدَما عبدٍ يومَ القيامةِ حتَّى يسألَ عن عمرِهِ فيما أفناهُ ، وعن عِلمِهِ فيمَ فعلَ، وعن مالِهِ من أينَ اكتسبَهُ وفيمَ أنفقَهُ، وعن جسمِهِ فيمَ أبلاهُ
நாளை மறுமையிலே ஒரு அடியானின் பாதம் அல்லாஹ்வின் சமூகத்தில் இருந்து நீங்காது. நகராது,
அவனுடைய வாழ்க்கையை எப்படி கழித்தான்?
அவன் தெரிந்த மார்க்க இல்மைக் கொண்டு கற்றபடி எப்படி செயல் பட்டான் அமல் செய்தான்?
அவனுடைய செல்வத்தை எங்கு சம்பாதித்தான்? எங்கு செலவு செய்தான்?
அவனுடைய உடலை எப்படி வருத்தினான்? இதற்கான பதிலை அவன் கொடுத்து ஆக வேண்டும் . அனைத்து வினாவுக்கும் விடை தர வேண்டும்.
அறிவிப்பாளர் : அபூ பர்ஸா அல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் :2417
உன்னுடைய செல்வம் எங்கிருந்து சம்பாதிக்கப்பட்டது? யாரும் நினைத்து விடாதீர்கள்! இந்த துன்யாவிலே அதற்குரிய வருமானவரித்துறை நமக்கு கணக்கு கேட்கிறதோ இல்லையோ; அந்த துறைக்கான வரியை நாம் கட்டுகிறோமோ இல்லையோ; மேலிருந்து ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
உன்னுடைய அக்கவுண்டில் வரக்கூடிய ஒரு நயா பைசாவாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய வானவர்கள் அதை கணக்கிட்டு எழுதாமல் இருக்க மாட்டார்கள். அதை நீ எங்கு செலவு செய்கிறாய்? என்பதையும் அவர்கள் எழுதிக்கொள்வார்கள்.
யாருக்கும் தெரியாது என்று நினைத்து விட வேண்டாம். முந்தைய காலத்திலே நமது ஊர்களிலே ஒரு பழக்கம் இருந்தது. இப்போது கூட சில இடங்களிலே இருக்கிறது. பல நாடுகளிலும் இருக்கிறது. வாழ்நாளெல்லாம் ஹராமிலே சம்பாதிப்பது. ஹராமே சளைத்து விடும். இவனுடைய ஹராமித் தனமான வேலையை பார்த்து ஹராமே சளைத்து விடும். அந்த அளவுக்கு போட்டி போட்டு என்ன வியாபாரம் பார்க்க முடியுமோ அதில் எந்த ஹராமையும் விடுவது கிடையாது.
கடைசியில ஒரு 55 வயசு 60 வயசு ஆன உடனே, வெள்ளை கைலி வெள்ளை சட்டையை போட்டுக்கிட்டு, ஒரு உம்ரா அல்லது ஒரு ஹஜ்ஜை பண்ணிட்டு வந்துட்டு, ஹாஜியார் ஆகிட்டு, பள்ளிவாசலுக்கு முத்தவல்லி ஆயிட்டு, எல்லாத்தையும் ஹலால் பண்ணியாச்சுன்னு நினைப்பு. எல்லாவற்றையும் ஹலால் ஆக்கிவிட்டார்கள். முடிஞ்சு போச்சு. இப்படி ஒரு காலம் இருந்தது.
அன்பான சகோதரர்களே! ஒரு மனிதன் ஹராமை விட்டு விலகுகிறான் என்றால், அந்த ஹராமை செய்யும் போது அவன் அறிந்த நிலையில் செய்தானா? அல்லது அதை ஹராம் என்று அறியாமல் செய்தானா? அவனுக்கு அதை ஹராம் என்று சொல்லப்பட்டதா இல்லையா? அதையெல்லாம் அல்லாஹு தஆலா கணக்கில் வைப்பான்.
இன்று, முஸ்லிம்களில் பலர், மது விற்பனை மது வியாபாரம் செய்கிறார்கள். வட்டி தொழில் செய்கிறார்கள். சினிமா தொழில் செய்கிறார்கள். பல முஸ்லிம் ஊர்களில் முஸ்லிம்களுடைய பெயர்களிலே சினிமா கொட்டகைகள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் ஓனர்கள். ஆனால், ஆச்சரியம் என்ன தெரியுமா? அவர்களையும் முஸ்லிம்களிலே அவர்களுடைய செல்வத்தால் ஒரு முக்கியமான பிரமுகர்களாக அவர்கள் மதிக்கப்பட்டு அவர்களிடத்திலும் மஸ்ஜிதிலே ரமழான் மாசத்திலே கஞ்சிக்காக வேண்டியும், மஸ்ஜிதுக்காக நன்கொடை வாங்குவதற்காகவும் செல்கிறார்களே! எந்த அளவு முஸ்லிம்களுடைய மார்க்கப் பற்று வலுவிழந்து கிடக்கிறது. அல்லது அவர்கள் அறியாமையிலே இருக்கிறார்கள்.
அன்பான சகோதரர்களே! யார் பகிரங்கமாக பாவங்களை செய்கிறார்களோ அவர்கள் சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட வேண்டும். அவன் எவ்வளவு தான் செல்வத்தால் கொடி கட்டி பறந்தாலும் அவனுக்கு சபைகளிலே இடம் கொடுக்கக் கூடாது.
ஆனால், இன்று நம்முடைய ஈமானிய கோட்டையிலே விழுந்த ஓட்டை , பலவீனம், ஒருவனிடத்திலே காசு சேர்ந்து விட்டால் அவனே கேட்காமல் அவனுக்கு மதிப்பை தேடி சென்று கொடுக்கின்றோம்.
ஒருவன் இடத்திலே காசு பணம் சேர்ந்து விட்டால் அவனே கேட்கவில்லை என்றாலும் அவனை தேடி சென்று அவனுக்கு மதிப்பை அவனுக்கு பதவியை கொடுத்து அவனை சபையிலே கொண்டு வருகிறோம்.
பிறகு என்ன சொல்வது பாருங்கள்! அதற்குப் பிறகு அவனிடத்திலே கை நீட்டி காசை வாங்கி விட்டால் அவ்வளவுதான் முடிந்தது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
அன்பான சகோதரர்களே! நாளை மறுமையிலே கேள்விகள் கேட்கப்படும் பொழுது, உனது வாழ்க்கையை எப்படி செலவு செய்தாய்? உன்னுடைய கல்வியை கொண்டு என்ன அமல் செய்தாய்? உன்னுடைய செல்வத்தை எப்படி சம்பாதித்தாய்? எப்படி செலவு செய்தாய்? கணக்கு உண்டு.
விரும்பியபடி எல்லாம் செலவு செய்ய முடியாது. ஹலாலாக இருந்தாலும் அளவாகத்தான் நீ அனுபவிக்க வேண்டும். ஃபிர்அவ்னைப் போன்று காரூனை போன்று ஹாமானை போன்று நீ செய்ய முடியாது.
உன்னுடைய உடலை எங்கே வருத்தினாய்? யோசித்துப் பாருங்கள். இது ஒரு முக்கியமான கேள்வி. என்னுடைய உடல் இந்த பொருளாதாரத்தை ஈட்டுவதற்காக களைத்தது போன்று அல்லாஹ்வுடைய இபாதத்துக்காக களைத்ததா? யோசித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: எவ்வளவு பெரிய எச்சரிக்கை பாருங்கள்! இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி பதிவு செய்கிறார்கள்.
உசாமா இப்னு சைது ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதாக:
قُمْتُ علَى بابِ الجَنَّةِ، فَكانَ عامَّةَ مَن دَخَلَها المَساكِينُ، وأَصْحابُ الجَدِّ مَحْبُوسُونَ، غيرَ أنَّ أصْحابَ النَّارِ قدْ أُمِرَ بهِمْ إلى النَّارِ، وقُمْتُ علَى بابِ النَّارِ، فإذا عامَّةُ مَن دَخَلَها النِّساءُ
நான் சொர்க்கத்தின் வாசலிலே நின்று பார்த்தேன். அதில் பலர் நுழைந்து கொண்டே இருந்தார்கள். நுழைந்து கொண்டே இருந்தார்கள். யார் நுழைகிறார்கள் என்று பார்த்தபோது, எல்லாம் ஏழைகளாக பாமரர்களாக, சாதாரணமான மக்களாக இருந்தார்கள். செல்வந்தர்கள் எங்கே? எனது உம்மத்திலே என்று தேடினேன். அவர்கள் எல்லாம் தடுக்கப்பட்டார்கள். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5196.
இவர்கள் எல்லாம் ஹலாலிலே சம்பாதித்து ஹலாலிலே செலவு செய்தார்கள். விசாரணைக்காக தடுக்கப்பட்டு இருந்தார்கள். யார் இவர்கள் அந்த செல்வந்தர்கள் யார்? கணக்கு கொடுங்க அதுக்கு அப்புறமா போலாம் என்று அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தார்கள்.
அந்த இரண்டு வகை யார் ஹலாலிலே சம்பாதித்தார்கள். செலவு செய்தது ஹராமில் அல்லது சம்பாதித்ததும் ஹராம்; செலவு செய்ததும் ஹராம்.
அவர்களெல்லாம்,
يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِىْ وَ الْاَقْدَامِ
குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். ஆக, நெற்றி முடிகளோடு கால் பாதங்களையும் (இறுக்கமாக) பிடிக்கப்ப(ட்டு நரகத்தில் வீசி எறியப்ப)டும். (அல்குர்ஆன் 55:41)
يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍ
அ(ந்)த (நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள். (அல்குர்ஆன் 55:44)
அல்லாஹ் பாதுகாப்பானாக! இந்தப் பக்கம் ஜக்காத் கொடுக்காதவனை. ஜக்காத் கொடுக்கப்படாத அவனுடைய ஒட்டகம், அவனுடைய மாடு ஆடு அவனை மிதித்து நசுக்கி கொண்டே இருக்கும்.
எல்லாம் மஹ்ஷரிலேயே அவர்களுக்கு ஆரம்பம் ஆகிவிடும்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்தவ அறிஞர்களில் இன்னும் துறவிகளில் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு என்ற கெட்டசெய்தியை கூறுவீராக.
மறுமை நாளில், அவற்றை (-அந்த தங்கம் வெள்ளிகளை) நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும். ஆக, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளுக்கும், அவர்களுடைய விலாக்களுக்கும், அவர்களுடைய முதுகுகளுக்கும் சூடு போடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (-அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.” (என்று அவர்களுக்கு கூறப்படும்.) (அல்குர்ஆன் 9:34,35)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனிதர்களுடைய நிலையை சொல்லிக் காட்டினார்கள். இந்த பொருளின் மீது உண்டான பேராசை மனிதனுக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லிக் காட்டினார்கள். அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். தொடர்ந்து நாம் ஓதக்கூடிய வசனம். எச்சரிக்கையோடு அல்லாஹ் சொல்கிறான்.
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا
கருத்து : காசு காசு, பணம் பணம் பணம் என்று இந்த செல்வத்தின் மீது ஏன் இவ்வளவு வெறிபிடித்து அலைகிறீர்கள்? (அல்குர்ஆன் 89:20)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لَوْ كانَ لِابْنِ آدَمَ وادِيانِ مِن مالٍ لابْتَغَى ثالِثًا، ولا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إلَّا التُّرابُ، ويَتُوبُ اللَّهُ علَى مَن تابَ
மனிதனுக்கு இரண்டு பள்ளத்தாக்கு, (ஒரு பள்ளத்தாக்குனா ரெண்டு மலைக்கு இடையில் இருக்கக்கூடிய ஒரு பெரிய ஓபன் கிரவுண்ட். இதில் ரெண்டு பள்ளத்தாக்கு என்பது இரண்டு பெரிய ஓபன் கிரவுண்ட்) அளவுக்கு மனிதனுக்கு செல்வம் இருந்தாலும் மூன்றவதாக ஒன்றையும் ஆசைப்படுவான் அவன் திருப்தி அடைய மாட்டான். அஸ்தஃபிருல்லாஹி அழீம்.
ஒரு முஃமினை பற்றி சொல்லவில்லை. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யார் மறுமையை தெரியாமல் இருக்கிறார்களோ ஆகிரத்தை தெரியாமல் இருக்கிறார்களோ அத்தகைய மனிதனுடைய நிலையை சொன்னார்கள்:
ஆதமின் மகனுக்கு செல்வத்திலிருந்து இரண்டு பள்ளத்தாக்குகள் இருந்தாலும் மூன்றாவது ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுவான்.
இன்று, அதுதானே பிரச்சனை. அல்லாஹு தஆலா ஒரு நாட்டிலே செல்வமாக கொட்டிக் கொடுக்கின்றான். பத்தவில்லை போதவில்லை அடுத்த நாட்டில் இருக்கக்கூடிய செல்வத்தையும் அபகரிக்க வேண்டும் என்பதற்காக கலவரங்கள் தூண்டப்படுகின்றன. இன்று உலகத்தினுடைய முக்கியமான கலவரங்களுடைய உள்நாட்டு போர்களுடைய முக்கிய காரணம், இந்த பொருளாசைதான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதனுடைய வயிறு இருக்கிறதே இதை கடைசியில் மண் தான் நிரப்பும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண்: 6436, முஸ்லிம், எண் : 1050.
மனிதன் வெறிபிடித்து சம்பாதித்தானே! எங்கெல்லாம் இந்த செல்வத்திற்காக அலைந்தான்? எத்தனை பேரை ஏமாற்றினான்?
இன்று, இன்னொரு விஷயம் முந்தைய காலத்திலும் செல்வந்தர்கள் இருந்தார்கள். பெரிய வசதியானவர்கள் இருந்தார்கள். அவர்களெல்லாம் உழைத்து சம்பாதித்து பலரையும் செல்வந்தர் ஆக்கி செல்வந்தர் ஆனவர்கள். அவர்களால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களைப் போன்று நூற்றுக்கணக்கான செல்வந்தர்களை உருவாக்கி செல்வந்தர்களாக ஆனவர்கள்.
இன்றும் சில செல்வந்தர்கள் நமது சமுதாயத்திலே இருக்கிறார்கள். ஊரையெல்லாம் ஏழையாக போண்டியாக ஆக்கிவிட்டு, ஊருடைய ஹக்குகளை எல்லாம் அபகரித்து விட்டு, இவர் பணக்காரராக இருப்பார்.
ஒரு கடையை மட்டும் திறந்தா போதும். இவருடைய இன்வெஸ்ட்மென்ட். சப்ளையருடைய காசு எல்லாம் இவருடைய காசு மாதிரி மாறி விடும். எத்தனை சப்ளையர்கள் உடைய பணங்களை எல்லாம் அவர்களுக்கு கொடுக்காமல் இவர் கட்டிடம் வாங்கி இருப்பார். அப்பார்ட்மெண்ட் வாங்கி இருப்பார். இவர் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருப்பார். இவருடைய சாதாரண கார் ஆடம்பர காராக மாறிவிடும். எல்லாம் மாறி இருக்கும்.
எல்லாம் யாருடைய காசு? இவருடைய காசா? இவருக்கு பொருள்களை கொடுத்தவர்களுடைய பணம். அவங்க எல்லாம் வரிசையில வந்து நின்னுகிட்டு இருப்பாங்க. வாரக்கணக்கா மாசக்கணக்கா அலஞ்சுகிட்டு இருப்பாங்க. செக்கு கொடுப்பாரு செக்கு கொடுப்பாரு. அவங்க பொருளை கொடுத்தாங்க. இவர் ஒண்ணுமே இல்லாத பேப்பரை கொடுப்பாரு. டேட் போட்டு அதுக்கப்புறம் போன் பண்ணுவாரு. இந்த டேட்ல போட்டுறாதீங்க. அடுத்து ஒரு மாசம் கழிச்சு போடுங்கன்னு.
எத்தனை முஸ்லிம் செல்வந்தர்களுடைய வரலாறுகளை பார்த்தீர்களேயானால் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களால் லாபம் அடைந்தவர்களை விட, அவர்களால் வாழ்ந்தவர்களை விட. அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம், அல்லாஹ் பாதுகாப்பானாக!
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
يَكْبَرُ ابنُ آدَمَ ويَكْبَرُ معهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وطُولُ العُمُرِ
மனிதன் பெரியவனாக ஆகிறான். வயோதிகனாக ஆகிறான். அவனோடு சேர்ந்து இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் வளரும் பொழுது அவனுடைய வயது மட்டும் உயர்வது அல்ல, அவனுடைய வயது மட்டும் பெரிதாகுவது அல்ல, அவனோடு சேர்ந்து, பொருளாசை இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை இரண்டும் பெரிதாகிறது. வளர்கிறது.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6421.
அன்பான அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தாருடைய நிலை எப்படி மாறிவிடும்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்காமல் அல்லாஹ்வுடைய பயத்தை உள்வாங்காமல் மரணத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருக்கின்றோமே! நம்முடைய கண்ணுக்கு முன்னால் தந்தையை அடக்கம் செய்தோமே! நம்முடைய கண்ணுக்கு முன்னால் தாயை அடக்கம் செய்தோமே! நம்முடைய கண்ணுக்கு முன்னால் எத்தனை உறவுகளை அடக்கம் செய்தோம்! இந்த கப்ருக்குத்தானே நானும் வரவேண்டும் என்பதை உணராமல் மக்கள் எப்படி இந்த துன்யாவிலே மூழ்குவார்கள் என்றால்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ
ஒரு காலம் வரும். மக்கள் மாறிவிடுவார்கள் என்றால் அவர்களுக்கு காசு தான் குறிக்கோளாக இருக்கும். அவர்கள் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். ஹலாலா ஹராமா? எந்த வழியில் வருகிறது? என்று பார்க்க மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2083.
இன்று பல நிறுவனங்களிலே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்திற்காக இரவு பகல் எல்லாம் உழைத்து அந்த நிறுவனத்தையும் மேம்படுத்துவதற்காக வேண்டி பல முதலீட்டாளர்களை அழைத்து வரவழைத்து அந்த முதலீடுகளை எல்லாம் போட்டு அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் சம்பாதிப்பதை விட அந்த நிறுவனத்தில் இருக்கக்கூடிய மேனேஜர்கள் கமிஷன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.. உள்ளே ஒரு பொருள் வர மேனேஜருக்கு கமிஷன். அந்த பொருளை சப்ளை செய்தவருக்கு செக் பாஸ் பண்ணுவதாக இருந்தாலும் அந்த செக்கிலே பர்சன்டேஜ் கமிஷன் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலாக, நான் பார்த்த எனக்குத் தெரிந்த இடங்களில் இதை முஸ்லிம்களுடைய நிறுவனங்களிலே அங்கு வேலை பார்க்கக்கூடிய முஸ்லிம் மேனேஜர்கள் முஸ்லிம் கணக்காளர்கள் அதை செய்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. எதற்காக? தரமான பொருளை அந்த நிறுவனத்தில் கொண்டு வருவதற்காக. அதை பார்ப்பதில்லை. யார் கமிஷன் அதிகம் கொடுக்கின்றானோ பொருளை வைத்துக்கொள். அதற்குப் பிறகு 40 நாளுக்கு பிறகு இரண்டு மாசத்திற்கு பிறகு சப்ளையருக்கு நீ செக்கு கொடுக்க வேண்டும். கம்பெனியிலிருந்து கொடுக்க மாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். அதிலிருந்து அவருக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டாலே தவிர. எத்தனை நாடுகளில் முஸ்லிம்களுடைய மேனேஜர்கள் மீது கணக்காளர்கள் மீது கேஸ் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரர்களே! இப்படி எத்தனை வழிகளிலே ஹராமை ஈட்டுகின்றார்கள்.
பொருளை எப்படி எடுத்தான்? எப்படி பெற்றுக்கொண்டான்? ஹலாலில் இருந்தா? ஹராமில் இருந்தா? என்பதை பார்க்க மாட்டார்கள். அத்தகைய ஒரு மோசமான காலம் மக்களுக்கு வந்தே தீரும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டுகின்றார்கள்:-
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2083.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய தொழுகையை கொண்டு மட்டும் நாம் பெருமை அடைந்து விட முடியாது. அந்த தொழுகைக்கு வரும்பொழுது ஹலாலான உணவை உண்டு வந்தோமா? அல்லாஹ்விடத்திலே கேள்வி உண்டு. அந்த ஹலாலான வியாபாரத்திலிருந்து தொழுகைக்கு வந்தோமா? தொழுது விட்டு ஹலாலான ஒரு வியாபாரத்தை நோக்கி போகின்றோமா? ஹலாலான செல்வத்தை நோக்கி போகின்றோமா? அல்லாஹ்விடத்தில் கேள்வி உண்டு.
இன்று, பல ஹராமான வழிகளிலே பொருளீட்டக்கூடியவர்கள் இப்படித்தான் திருப்தி அடைகிறார்கள். நான் தொழுது விட்டேன், அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து விடுவான். நான் ரமலான் நோன்பிலே சில தர்மங்களை செய்து விட்டேன், அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து விடுவான்.
சில நாடுகளில் சில மக்கள், அத்தனை ஹராமான செயல்களை, இசை நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் இவற்றையெல்லாம் நடத்தி விட்டு எல்லாம் முடிந்தவுடன் உடனே உம்ராவிற்கு கிளம்பி விடுவார்கள்.
ஹாஜியார் எங்க போயிருக்கிறார்? உம்ராவுக்கு போயிருக்கிறார். நேத்து தான் சினிமா நிகழ்ச்சி நடத்தினார். நேத்து தான் இசை கச்சேரி நடத்தினார். இன்று எங்கே? மக்காவுக்கு. உம்ராவுக்கு போனா அல்லாஹ் பாவங்கள் எல்லாத்தையும் மன்னித்து விடுவானே என்று சொல்கிறார்கள்.
எப்படி மார்க்கத்தை நம்பி கொண்டார்கள் என்றால், நஸ்ராணிகள் எல்லா பாவங்களையும் வாரமெல்லாம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையிலே வந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு ஏசப்பா பாவத்தை மன்னி என்று சொன்னால் மன்னித்து விடுவார், என்று நம்பி இருக்கிறார்கள் அல்லவா அந்த மாதிரி நம்முடைய மார்க்கத்தை நினைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ
அவர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கிறார்கள். தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 4:142)
அல்லாஹ்வின் அடியார்களே! இன்னும் பல செய்திகள் இருக்கின்றன. இன் ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம். அல்லாஹ்விடத்திலே நாம் பாதுகாப்பு தேடியவர்களாக பயந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த செல்வமானது அது நமக்கு வரும்பொழுது, ஹலாலிலே வருகிறதா? என்று பயப்பட வேண்டும். எப்படியோ எனக்கு வந்துவிட்டது என்று பெருமை அடிக்கவோ, அதைக் கொண்டு மகிழ்ச்சி அடையவோ கூடாது. அதற்கு பிறகு அந்த செல்வத்தைக் கொண்டு நான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடினேனா? என்னுடைய ஹலாலான தேவை, என்னுடைய குடும்பத்தின் ஹலாலான தேவை, என்னுடைய உறவுகளின் ஹலாலான தேவையை என்னை சுற்றி இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு அவர்களுடைய ஹக்கை கொடுத்தேனா என்று நாம் பார்க்க வேண்டும்.
அப்போதுதான் அந்த செல்வம் நம்முடைய சொர்க்கத்திற்கான விலையாக இருக்கும். இல்லையென்றால் அல்லாஹ் பாதுகாப்பானாக! அந்த செல்வம் எப்படி ஒரு பெரும் பாவம் ஒரு ஜினா அல்லது ஒரு திருட்டு அல்லது ஒரு பெரும் குற்றம் எப்படி நரகத்திற்கான விலையோ அது போன்று அந்த செல்வம் நரகத்திற்கான விலையாக ஆகிவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹ் நம்முடைய செல்வங்களை பாதுகாப்பானாக! ஹலாலான முறையிலே பொருளீட்டி, ஹலாலான முறையிலே அல்லாஹ் விரும்பக்கூடிய முறையிலே அந்த செல்வத்தை செலவு செய்து இந்த துன்யாவில் அல்லாஹ் கொடுத்த செல்வத்தைக் கொண்டு நாம் அனுபவித்ததை விட அல்லாஹ் விரும்பிய பாதையிலே அல்லாஹ் விரும்பிய நல்ல காரியங்களில் அந்த செல்வத்தை செலவழிக்க கூடிய தவ்ஃபீகை -வாய்ப்பை , அருளை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بنَ الجَرَّاحِ إلى البَحْرَيْنِ يَأْتي بجِزْيَتِهَا، وكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ هو صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وأَمَّرَ عليهمُ العَلَاءَ بنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأنْصَارُ بقُدُومِ أَبِي عُبَيْدَةَ، فَوَافَتْ صَلَاةَ الصُّبْحِ مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا صَلَّى بهِمُ الفَجْرَ انْصَرَفَ، فَتَعَرَّضُوا له، فَتَبَسَّمَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ رَآهُمْ، وقالَ: أَظُنُّكُمْ قدْ سَمِعْتُمْ أنَّ أَبَا عُبَيْدَةَ قدْ جَاءَ بشيءٍ؟، قالوا: أَجَلْ يا رَسولَ اللَّهِ، قالَ: فأبْشِرُوا وأَمِّلُوا ما يَسُرُّكُمْ، فَوَاللَّهِ لا الفَقْرَ أَخْشَى علَيْكُم، ولَكِنْ أَخَشَى علَيْكُم أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كما بُسِطَتْ علَى مَن كانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ. الراوي : عمرو بن عوف المزني | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3158 | خلاصة حكم المحدث : [صحيح]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் அல்-ஜர்ராஹ் (ரழி) அவர்களை ஜிஸ்யாவை (வரி) வசூலித்து வருவதற்காக பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பஹ்ரைன் மக்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்திருந்தார்கள்; மேலும் அல்-அலா பின் அல்-ஹள்ரமீ (ரழி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அபூ உபைதா (ரழி) அவர்கள் நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்தார். அபூ உபைதா (ரழி) அவர்களின் வருகையைப் பற்றி அன்சாரிகள் கேள்விப்பட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்துகொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை முடித்துத் திரும்பியதும், அவர்கள் அவருக்கு முன்னால் வந்து (தங்களைக் காட்டிக்கொள்ளும் விதமாக) நின்றார்கள். அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், "அபூ உபைதா (ரழி) அவர்கள் ஏதோ கொண்டு வந்திருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்கள். அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நற்செய்தி பெறுங்கள்! உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதையே (எதிர்பார்த்து) நம்புங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்கள் மீது வறுமையை அஞ்சவில்லை. மாறாக, உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு உலகம் (தாராளமாக) விரிக்கப்பட்டது போன்று உங்களுக்கும் விரிக்கப்படுவதையும், அவர்கள் அதற்காகப் போட்டியிட்டது போன்று நீங்களும் அதற்காகப் போட்டியிடுவதையும், அது அவர்களை அழித்தது போலவே உங்களையும் அழித்துவிடுவதையுமே நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுகிறேன்."
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு அவ்ஃப் அல்முஸனீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3158.
குறிப்பு: (2)
قُمْتُ علَى بابِ الجَنَّةِ، فَكانَ عامَّةَ مَن دَخَلَها المَساكِينُ، وأَصْحابُ الجَدِّ مَحْبُوسُونَ، غيرَ أنَّ أصْحابَ النَّارِ قدْ أُمِرَ بهِمْ إلى النَّارِ، وقُمْتُ علَى بابِ النَّارِ، فإذا عامَّةُ مَن دَخَلَها النِّساءُ. الراوي : أسامة بن زيد | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 5196 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (5196)، ومسلم (2736)
"நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றேன், அங்கு நுழைந்தவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகளாக இருந்ததையும், அதே சமயம் செல்வந்தர்கள் (கணக்குகளுக்காக) வாசலில் நிறுத்தப்பட்டிருந்ததையும் கண்டேன். ஆனால், நரகவாசிகள் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட கட்டளையிடப்பட்டார்கள். பிறகு நான் நரகத்தின் வாசலில் நின்றேன், அங்கு நுழைந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாக இருந்ததைக் கண்டேன்."
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஸைது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5196.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/