ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 1 | Tamil Bayan - 978
ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 1
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ ஃபஜ்ரில் ஸூரா 76 அத் தஹ்ர் - கூறும் செய்திகள்! அமர்வு 1
வரிசை : 978
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 04-07-2025 | 09-01-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கு நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய இறையச்சத்தை (தக்வாவை) உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதும்படியும், அதை சிந்திக்கும்படியும், அதன் படி செயல்படும்படியும், அதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லும்படியும் உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் நமது காசா முஸ்லிம்களுக்கு அருள் புரிவானாக! அவர்களில் கொல்லப்பட்டவர்களை அல்லாஹ் ஷஹீத்களாக ஏற்றுக் கொள்வானாக! அவர்களுக்கு உணவளிப்பானாக! யஹூதிகளை அந்த புனித பூமியிலிருந்து இழிவடைந்தவர்களாக அல்லாஹ் வெளியேற்றுவானாக! ஆமீன்.
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்குர்ஆனை சிந்திப்போம்; அல்குர்ஆனோடு நமது தொடர்புகளைப் புதுப்பிப்போம் என்ற அடிப்படையில் சில ஜுமுஆக்களில், ரசூலுல்லாஹ் ﷺ குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து, சில தொழுகைகளில் சில நாட்களில் தேர்ந்தெடுத்து ஓதிய ஸூராக்களை நாம் பார்த்து வருகிறோம்.
அதில் ஒன்றுதான்: வெள்ளிக்கிழமையில் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ காலை ஃபஜ்ர் தொழுகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முதல் ரக்அத்தில் முழுமையாக ஸூரத்துஸ்-ஸஜ்தாவை ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸூரா அத்-தஹ்ர், அதாவது ஸூரத்துல் இன்ஸான் என்று அறியப்படக்கூடிய 76-ஆவது அத்தியாயத்தை ஓதுவார்கள். இது 29-ஆவது ஜுஸ்உவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸூராவை ஓதுவது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் தொடர்ச்சியான வழக்கமாக (சுன்னா) இருந்தது. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் வாழ்நாளில் ஒருமுறை செய்தாலே அதை நாம் கவனமாக பேண வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும், இறுதி நாள் வரை தொடர்ந்து பேணிய சுன்னாவை நாம் எவ்வளவு பேண வேண்டும் என்பதை கவனமாக சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இவ்வாறு குறிப்பிட்ட ஸூராக்களை தொழுகையில் தேர்ந்தெடுத்து ஓதுவதன் மூலம் நமக்கு சில முக்கியமான செய்திகளை அறிவிக்க விரும்புகிறார்கள்.
நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இஸ்லாமிய இறை மார்க்கத்திற்கும், பிற மத சடங்குகளுக்கும் இடையில் தெளிவான, முழுமையான வேறுபாடு இருக்க வேண்டும்.
பிற மதங்களில் உள்ளவர்கள், பல விஷயங்களை சடங்காக, கண்மூடித்தனமான பழக்கங்களாக, ஆதாரமற்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் செய்வார்கள். ஆனால் இஸ்லாம் அப்படியல்ல.
அல்லாஹு தஆலா, அத்தகைய கண்மூடித்தனமான, அர்த்தமற்ற, ஆதாரமற்ற நம்பிக்கைகளிலிருந்து நம்மை பாதுகாத்துள்ளான்.
قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ
வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மெளடீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) (அல்குர்ஆன் 2:256)
அல்லாஹ் நமக்கு வழங்கிய மார்க்கம், தெளிவான கல்வியை தரக்கூடியதும், உண்மையான ஆன்மிகத்தை போதிக்கக்கூடியதும், ஒரு மனிதனை மனிதனாகவும், அல்லாஹ்விற்கு நெருக்கமான நல்லடியாராகவும் ஆக்கக்கூடிய வழிபாடுகளும் தத்துவங்களும் கொண்ட மார்க்கமாகும்.
அந்த அடிப்படையில், அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்துள்ள வணக்க வழிபாடுகள், அதில் நாம் அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும், எப்படி துதிக்க வேண்டும் என்பதற்கான திக்ருகளும் திலாவத்துகளும் உள்ளன.
ஒவ்வொரு திக்ரிலும் அல்லாஹ்வை புகழ்வதும் இருக்கும்; அதே நேரத்தில் அடியான் தன் உள்ளத்தை சுத்தப்படுத்துவதும் இருக்கும். ஆனால் பரிதாபம் என்னவென்றால், நாம் திக்ர் செய்யும் போது அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
ஒரு அடியான் ஸுஜூதில் சென்று “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்று சொல்வான் என்றால், அல்லாஹ் மிக உயர்ந்தவன் என்று ஒப்புக்கொண்டு, அவனுக்கு முன்னால் தன் பெருமைகள் அனைத்தையும் கழற்றி எறிய வேண்டும். “யா அல்லாஹ்! உனக்கு முன்னால் நான் ஒரு தாழ்ந்த அடியான்” என்ற உணர்வு அவனுக்குள் உருவாக வேண்டும்.
ஒரு பக்கம் அல்லாஹ்வுடைய துதி, இன்னொரு பக்கம் தன் உள்ளத்தை சுத்தப்படுத்துதல் – இந்த இரண்டு அம்சங்களும் ஒவ்வொரு திக்ரிலும் இருக்க வேண்டும்.
“அல்லாஹு அக்பர்” என்று சொல்லும்போது, அல்லாஹ் மிகப் பெரியவன்; நான் மிகச் சிறியவன்; உலக வஸ்துக்கள் எல்லாம் சிறியது; எனக்கு எந்தப் பெருமையும் இல்லை; எல்லாப் பெருமையும் அல்லாஹ்விற்கே – என்ற உணர்வோடு அல்லாஹ்வை மகிமைப்படுத்துவதோடு, தன் உள்ளத்தின் அழுக்குகளையும் அவன் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படித்தான் தொழுகையில் அல்லாஹ்வை வணங்குவதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தேர்ந்தெடுத்த ஸூராக்களில், அல்லாஹ்வை வணங்குவதும் இருக்கும்; அதே நேரத்தில் நம்மை சீர்திருத்துவதற்கும், நல்ல முஸ்லிமாக உருவாவதற்கும் தேவையான வழிகாட்டல்களும் இருக்கும். இந்த இரண்டையும் சிந்தித்தே நாம் ஓத வேண்டும்.
குர்ஆனை ஓதும்போது, “இந்த ஓதுதல் அல்லாஹ்வுக்கான ஒரு இபாதத்” என்ற உணர்வோடு ஓத வேண்டும். பிறகு, இந்த குர்ஆனில் அல்லாஹ் எனக்கு சொல்கின்ற செய்தியை நான் கேட்டு, புரிந்து, சிந்தித்து, என்னை அல்லாஹ் விரும்பிய நல்லடியானாக மாற்றிக் கொள்வேன் என்ற உறுதி இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில், நம்முடைய தூதர் ﷺ ஸூரத்துல் தஹ்ர்-ஐ ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்பதை சிந்தித்தால், மனிதனுடைய தொடக்கம் எப்படி இருந்தது? அல்லாஹ் காட்டிய நேர்வழி என்ன? நரகமும் சொர்க்கமும் எவை? பாவிகள் யார்? சொர்க்கவாசிகள் யார்? என்பதை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
ஒரு முஃமின் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எந்த வாழ்க்கை நிலையானது? எதற்காக அவன் பாடுபட வேண்டும்? என்பதையும் இந்த ஸூரா இறுதியில் நமக்கு விளக்குகிறது. அல்லாஹ்விற்கு பயந்து, அவனிடத்தில் நேர்வழியை கேள், பணிந்து சரணடை என்று இறையச்சத்தை வளர்க்கிறது.
“எனக்கு எல்லாம் தெரியும்” என்ற பெருமை வராமல் இருக்க வேண்டிய எச்சரிக்கையையும் இந்த ஸூரா தருகிறது. இந்த ஸூராவின் மொத்த கருத்து, ஒரு முஃமினின் வாழ்க்கைக்கு தேவையான முழுமையான வழிகாட்டுதலாக இருக்கிறது.
இது மக்காவில் இறக்கப்பட்ட வசனம். குறிப்பாக மக்காவில் இறக்கப்பட்ட வசனங்களில் அல்லாஹு தஆலா அங்கே மறுமையை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருப்பான்.
மறுமை நம்பிக்கை இல்லாமல் அல்லாஹ்வுடைய நம்பிக்கை பற்றி பேசுவது போலியாக ஆகிவிடும். மறுமை நம்பிக்கை இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றி பேசக்கூடியவன் அல்லாஹ்வைப் பற்றி வேண்டுமானால் பேசுவான்; ஆனால் அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்ற மாட்டான். இபாதத்துகளுக்கு வர மாட்டான். ஹலாலை ஹலாலாகவும், ஹராமை ஹராமாகவும் ஏற்றுக் கொள்ள வர மாட்டான். மன இச்சையின் வாழ்க்கையிலே செல்வான்.
யார் மறுமையின் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறாரோ, அவரால் மட்டுமே அல்லாஹ்வை அவனுடைய கட்டளைகளோடு ஏற்றுக் கொள்ள முடியும். மறுமை நம்பிக்கை, சொர்க்கத்தின் நம்பிக்கை, நரகத்தின் நம்பிக்கை இல்லையென்றால் நன்மைகளை செய்யவும் முடியாது; மன இச்சைகளை, ஆசாபாசங்களை, ஹராம்களை விட்டு விலகவும் முடியாது.
ஆகவே, மக்காவில் இறக்கப்பட்ட இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் ﷺ மதீனா வாழ்க்கையிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டாவது ரக்அத்தில் முழுமையாக ஓதினார்கள் என்றால், நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் மனிதனைப் பார்த்து எப்படி கேட்கிறான்?
மனிதனே! உனக்கு என்ன அவ்வளவு பெருமையா? அவ்வளவு ஆணவமா? உன்னுடைய பதவியால், உன்னுடைய செல்வத்தால், உன்னுடைய வாலிபத்தால், உன்னுடைய ஆற்றலால் உன்னை உயர்வாக நினைத்து விடாதே. உன்னுடைய ஆரம்பத்தை சிந்தித்துப் பார். நீ எப்படி இருந்தாய்? உன்னுடைய தொடக்க நிலையை சொல்லுவதற்கே மக்கள் நாவு கூசுவார்கள். நாணுவார்கள்.
هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ
காலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூரப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லையா? (அல்குர்ஆன் 76:1)
வசனத்தின் கருத்து : மனிதனே காலத்தில் ஒரு நேரம் வரவில்லையா? சொல்லப்படக்கூடிய ஒரு பொருளாகவே இல்லையே? ஒரு வஸ்துவாகவே நீ இல்லையே? ஒன்றுமே இல்லாமல் இருந்தாய் அடுத்து எப்படி உருவானாய்? அல்லாஹ் கேட்கிறான்:
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًا بَصِيْرًا
நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கிறோம். ஆக, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை ஆக்கினோம். (அல்குர்ஆன் 76:2)
நீ எங்கிருந்து படைக்கப்பட்டாய்? ஒரு ஆண் பெண் இந்திரியத்தில் இருந்து நீ படைக்கப்பட்டாய். உன்னை நான் அப்படித்தான் படைத்தேன். உன்னுடைய படைப்பை சிந்தித்துப் பார்.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாயிலாக அறிவிக்கப்படுகிறது. மனிதனே! உனக்கு எதைக் கொண்டு பெருமை? ஏன் இந்த ஆணவம்?
ஏன் உனக்கு இந்தத் தலைக்கனம்? நீ இரண்டு முறை அசுத்தமான வழியிலிருந்து வந்திருக்கிறாய். உன்னுடைய தாயின் வயிற்றுக்குள் நீ சென்றபோதும் சரி, பிறகு நீ துன்யாவிற்கு வந்தபோதும் சரி, ஒரு அசுத்தமான வழியிலிருந்தே வந்தாய். உன்னுடைய வயிற்றில் நீ சுமந்து கொண்டிருப்பதும் ஒரு அசுத்தமே. பிறகு நீ இறந்துவிட்டால் ஒரு செத்த பிணம். நீ ஒரு செத்த பிணமாக ஆகிவிடுகிறாய். இந்த நிலையில் உனக்கு எதற்கு பெருமை? உனக்கு எதற்கு ஆணவம்?
அல்லாஹ்வின் அடியார்களே! பெருமை குஃப்ரில் கொண்டு சென்று விடும். பெருமை ஒரு மனிதனை மார்க்கத்தை மீற வைத்துவிடும். பெருமை, ஆணவம் தனது உறவுகளை துண்டிக்க வைத்து விடும். தனது சகோதரனை மறக்க வைத்து விடும். தனது நண்பர்களை மறக்க வைத்து விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக! எதைக் கொண்டும் யாரும் பெருமை அடிக்க முடியாது.
காஃபிர்கள் நிராகரித்தார்களே. ஃபிர்அவ்ன் நிராகரித்தான். நம்ரூத் நிராகரித்தான். காரூன் நிராகரித்தான். ஹாமான் நிராகரித்தான். இன்னும் அக்காலத்திலும், இக்காலத்திலும் நிராகரிக்கிறார்களே.
முஸ்லிம்களிலும் பலர் பெரிய நிராகரிப்பை செய்யவில்லை என்றாலும், சிறிய நிராகரிப்புகளை செய்து கொண்டே இருக்கிறார்களே.
என்ன காரணம்? அந்த பெருமை. செல்வம் வந்துவிட்டவர்களுக்கு ஹலால், ஹராம் பற்றி பேசினால், அவர்களுடைய முகம் சுருங்கி விடுகிறது. மாற்றாளர்களின் கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு, யஹூதி, நஸ்ராணிகளின் கலாச்சாரத்தில் பழகியவர்களுக்கு, இஸ்லாமிய கலாச்சாரம், இஸ்லாமிய ஒழுக்கம், இஸ்லாமிய பண்பாடு, ஆண்கள் இப்படி இருக்க வேண்டும், பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று பேசினால், அவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறது. அருவருப்பு அவர்களுக்கு அழகாக ஆகிவிட்டது. அழகிய ஒழுக்கம் அவர்களுக்கு பழமைவாதமாக, முற்காலத்தில் பின்பற்றப்பட்டது, பிற்காலத்தில் பின்பற்றமுடியாத ஒன்றாக, இன்றைய காலத்திற்குப் பொருந்தாத சட்டமாக ஆகிவிட்டது.
எந்த மக்களுக்கு இந்தத் தீய கலாச்சாரம் வேண்டாம் என்று மேற்கத்தியர்கள் காரி துப்பக்கூடிய, அவர்களுக்குள்ளேயே உள்ள நீதவான்கள்“இது வேண்டாம்” என்று வாந்தி எடுத்த கலாச்சாரம், இன்று முஸ்லிம்களுக்கு, முஸ்லிம் நாடுகளுக்கு, மிகவும் இனிக்க ஆரம்பித்துவிட்டது, ருசிக்க ஆரம்பித்துவிட்டது, அதன் பக்கம் ஓடுகின்றார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரின் அழகான பண்பாடு, வாழ்க்கை நெறிகளில் சிறந்த நெறி முஹம்மது ﷺ காட்டிய நெறி—அது பிடிக்கவில்லை. ஆனால் சடங்குகளுக்கு மட்டும் குறைவில்லை. ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் முடி என்று சொல்லி ஒரு விழா; அது உண்மையிலேயே ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் முடி என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
இன்னும் எத்தனையோ விஷயங்களை ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் பெயரால் சடங்குகளாக கொண்டாடுகிறார்களே தவிர, ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் மார்க்கத்தை கொண்டாடத் தயாராக இல்லை. ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் குர்ஆனிய வழிகாட்டலை சரியாக பின்பற்றத் தயாராக இல்லை.
குர்ஆனை ஓதி, அதன் கிராஅத்துகளை வைத்து கொண்டாடுவார்கள்; ஆனால் குர்ஆனின் சட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வமில்லை. “நாங்கள் குர்ஆனிய சமுதாயமாக உருவாகிவிட்டோம்” என்று சொல்வதில் பெருமை இல்லை. சட்டங்களில் குர்ஆனை தூக்கி எறிந்து மிதிக்கிறார்கள்; ஓதுவதால் மட்டும் குர்ஆனை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
யாருக்கு இது தேவை? அல்லாஹ் இப்படிப்பட்ட குர்ஆனை இறக்கவில்லை. வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய குர்ஆனைத்தான் அல்லாஹ் இறக்கினான்.
அல்லாஹ் கேட்கிறான்:
மனிதனே! உனக்கு என்ன அவ்வளவு திமிர்? இது இரண்டு தரப்பினருக்கும் பொருந்தும். ஒரு பக்கம், காஃபிர்களுக்கு இது நேரடியாகச் சொல்கிறது.
அதே நேரத்தில், “நான் முஸ்லிம், நான் முஃமின்” என்று சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியாமல், பெருமையும் ஆணவமும் காரணமாக அல்லாஹ்வின் மார்க்கத்தை புறக்கணித்து பாவத்தில் மூழ்கும் மனிதனுக்கும் இது பொருந்தும். சிந்தித்துப் பார்.
அல்லாஹ் கூறுகிறான்:“மனிதனை நாம் கலக்கப்பட்ட இந்திரியத்திலிருந்து படைத்தோம்.”
ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் கலந்த அந்த நிலையிலிருந்து தான் நீ படைக்கப்பட்டாய். அதுவே உன்னுடைய ஆரம்பம்.
மனிதனே! உம்மை நாம் சோதிக்கிறோம்.
நீ இந்த உலகத்திற்கு அனுபவிப்பதற்காக அல்ல; சோதிக்கப்படுவதற்காக இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டாய். கேட்கக்கூடிய ஆற்றலையும், பார்க்கக்கூடிய ஆற்றலையும் நான் உனக்கு கொடுத்திருக்கிறேன்.
எதற்காக? என்னுடைய அத்தாட்சிகளை நீ பார்ப்பதற்காக; என்னுடைய வேத வசனங்களை நீ கேட்பதற்காக. (அல்குர்ஆன் 76:2)
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا
நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று, அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு; அல்லது, நன்றி கெட்டவனாக இருப்பதற்கு. (அல்குர்ஆன் 76:3)
மனிதனுக்கு முன்னால் இரண்டு பாதைகளை நாம் தெளிவுபடுத்தி விட்டோம். இரண்டே இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று, படைத்த இறைவனுக்கு நன்றி உள்ளவனாக ஆகிவிடுவது. அல்லாஹு அக்பர்! இது மகத்தான வழி, சொர்க்கத்தின் வழி. இந்த உலகத்தில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, இதுவே வெற்றிமிக்க வழி. ஒருவன் ஒரு நாள் இப்படியே வாழ்ந்து விட்டு இறந்து விட்டால்கூட போதும். முடிந்தது – அவ்வளவுதான். அவன் உலகத்தில் வாழ்ந்தான், பிறகு இறந்து விட்டான்; அவன் வாழ்ந்த காலம் ஒரு நாளாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இருந்தாலும் அதில் மாற்றமில்லை.
இரண்டாவது வழி, இந்த உலகத்தில் எப்படிப்பட்ட நெருக்கடிகளில் வாழ்ந்தாலும் சரி. இன்று காசா மக்கள் அனுபவித்து வரும் நெருக்கடிகளை விடவா? அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் முஃமின்களுக்கு எத்தனையோ வரலாறுகளை எடுத்துரைக்கிறான். ஃபிர்அவ்னின் வரலாறு, நம்ரூதின் வரலாறு, அஸ்ஹாபுல் உக்தூத் உடைய வரலாறு, ஆது, சமூது ஆகிய சமுதாயங்களின் வரலாறுகள், மேலும் எல்லா சமுதாயங்களிலும் நபிமார்கள் அனுபவித்த துன்பங்கள்—இவை அனைத்தும் இன்று முஹம்மது நபி ﷺ அவர்களின் உம்மத்தாகிய நமது சகோதரர்கள் கண் முன்னே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் அங்கு நேரடியாக இல்லையென்றாலும், அந்தச் சோதனையில் நாமும் இருப்பது போன்ற உணர்வு நமக்கு வர வேண்டும். ஏனெனில் அவர்கள் நம் முஃமின் சகோதரர்கள். ஒரு முஃமின், பிற முஃமினின் வலியை உணரவில்லை என்றால், அவர்களுக்காக துஆ செய்யவில்லை என்றால், தன்னால் முடிந்த உதவியை செய்யவில்லை என்றால், அவன் தன்னை முஸ்லிம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
அல்லாஹு தஆலா அந்த மக்களை சோதித்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் பொறுமையை அல்லாஹ் பார்க்கிறான். ரப்புல் ஆலமீன் வழங்கும் சோதனைகளுக்குப் பின்னால் பல ஹிக்மத்துகள், பல ஞானங்கள் இருக்கின்றன.
அல்லாஹு தஆலா சில அடியார்களுக்கு கொடுத்து சோதிப்பான்—அவர்கள் அல்லாஹ்விற்காக கொடுக்கிறார்களா, ஏழைகளுக்கு வழங்குகிறார்களா என்பதை அறிய. மேலும், யாரால் சோதனைகளை தாங்க முடியும் என்று அல்லாஹ் அறிந்திருக்கிறானோ, அவர்களுக்கே கடுமையான சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். அந்த அடியார்கள், இந்த சோதனைகளை அல்லாஹ்விற்காக பொறுமையுடன் தாங்கும்போது, அது அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானதாகிறது.
அல்லாஹு தஆலா கேட்கிறான்:
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ
பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது’) போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் நுழைய நினைத்தீர்களா? (அல்குர்ஆன் 3:142)
கருத்து : சொர்க்கத்திற்கு எளிதாக சென்று விடுவீர்களா? அல்லாஹ் இன்னும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றானே. நினைத்துப் பார்த்தீர்களா? முஜாஹிதுகள் யார். அல்லாஹ்விற்காக உயிர் பொருளை அர்ப்பணிப்பவர்கள் யார்? கஷ்ட காலங்களில் சோதனை காலங்களில் சகிப்போடு இருப்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் பிரித்தறிய விரும்புகிறான்.
وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்! (அல்குர்ஆன் 2:177)
இது எதார்த்தமான ஈமான், பிராக்டிக்கல் ஆன ஈமான். ஒரு மனிதன் தொழும் போது அவன் அழுது விடலாம், தொழுது விடலாம். இந்த தொழுகைகளுக்கெல்லாம் மேலான, கஷ்டமான ஒரு சட்டம் என்னவென்றால், அல்லாஹ்வின் பாதையில் உயிரையும் பொருளையும் கொடுப்பது தான். எதிரிகள் தாக்கும் போது ஈமானில் உறுதியாக இருந்து அவர்களை எதிர்த்து நிற்பதும் அதில் அடங்கும். அல்லாஹுதஆலா அந்தச் சோதனைக்காகவே அவர்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய அடியார்களில் யாரை எதற்காக வேண்டுமானாலும் அல்லாஹ் சோதிப்பான்.
ஆனால், நம்முடைய நிலைமை எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும். அவர்களின் வலியை உணர வேண்டும். அல்லாஹ்விடத்தில் மன்றாட வேண்டும். ஆனால் இன்று சிலர் அவர்களை ஏசி, பேசி, ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் மன்னிப்பானாக, பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா இரண்டு வழிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். ஒரு வழி என்னவென்றால், நன்றி உள்ளவனாக இருப்பது. அல்லாஹ் அதைத்தான் எதிர்பார்க்கிறான். துன்யாவை நீ அனுபவிக்காதே என்று அல்லாஹ் சொல்லவில்லை. குர்ஆன் வசனம் எப்படி சொல்கிறது என்பதை கவனியுங்கள்…
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ ۚ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் யார் தடைசெய்தார்?” “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும். மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும் அது) தனிப்பட்டதாக குறிப்பிட்டதாக இருக்கும்” என்று கூறுவீராக. புரிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். (அல்குர்ஆன் 7:32)
அல்லாஹு தஆலா அனுபவிக்காதே என்று சொல்லவில்லை. நன்றி உள்ளவனாக அனுபவி என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து பிறகு அல்லாஹ் கொடுத்ததை, உன்னுடைய உறவுகளுக்கு அண்டை வீட்டார்களுக்கு உன்னுடைய நண்பர்களுக்கு ஏழைகளுக்கு கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.
இரண்டாவது என்ன? நன்றி கெட்ட வாழ்க்கை. நிராகரிப்புடைய வாழ்க்கை. இந்த இரண்டு வாழ்க்கை எப்படி என்பதை உனக்கு முன்னால் விவரிக்கப்பட்டு விட்டது. யார் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களோ அல்லாஹ் அவர்களுக்கு அப்படி நடந்து கொள்வான்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நன்மையை நேர்வழியை நன்றியின் பாதையை தேர்ந்தெடுப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!
அல்லாஹு தஆலா அடுத்து சொல்கிறான்; மனிதனுடைய பிறப்பு எப்படி என்பதை அல்லாஹ் விளக்குகிறான். பிறப்பிலேயே அந்த மனிதனை எவ்வாறு நான் சோதிக்கிறேன் என்பதையும் அல்லாஹ் சொல்கிறான். இரண்டே இரண்டு பாதைகள்தான்; மூன்றாவது ஒரு பாதை இல்லை. ஒன்று அல்லாஹ்வுடைய அடியானாக வாழ்வது; இல்லையென்றால் இப்லீஸின் அடியானாக வாழ்வது.
இரண்டே இரண்டு வழிகள்தான். ஒன்று, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு கட்டுப்படுவது; இல்லையென்றால் தனது நஃப்ஸிற்கு கட்டுப்படுவது. அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு கட்டுப்பட்டால் ரஹ்மானுடைய அடியானாக ஆகிறான். அப்படி ஆனால் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்லிக் காட்டுகிறான்.
ஷைத்தானுக்கு அடிமையாக ஆகிவிட்டால், நஃப்ஸ் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன நடக்கும்? என்பதையும் அல்லாஹ் விளக்கிக் காட்டுகிறான்.
முதலாவதாக, நஃப்ஸின் பாதையிலும் ஷைத்தானின் பாதையிலும் சென்றால் என்ன ஆகும் என்பதை அல்லாஹு தஆலா சுருக்கமாக ஒரே ஒரு வசனத்தில் சொல்லி முடித்துவிடுகிறான். அதன் பிறகு வரும் வசனங்களில்—ஏறக்குறைய ஐந்தாவது வசனத்திலிருந்து இருபத்தி இரண்டாவது வசனம் வரை—யார் அந்த மக்கள்? அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாக ஆனவர்கள், நன்றியின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள். அவர்களை அல்லாஹ் புகழோ புகழ் என்று புகழ்கிறான்.
அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுடைய குணங்கள் எப்படி, அவர்களுடைய செயல்கள் எப்படி, அவர்களுக்காக நான் எந்தெந்த வெகுமதிகளை வைத்திருக்கிறேன் என்பதையெல்லாம் அல்லாஹு தஆலா தொடர்ந்து விளக்கிக் கொண்டே செல்கிறான். அவர்களின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே செல்கிறான்; அவர்களின் உயர்ந்த நற்குணங்களையும், உயர்ந்த செயல்களையும் அல்லாஹ் அழகாக வர்ணித்துக் கொண்டே போகிறான்.
முதலாவதாக பாவிகள்; நன்றி கெட்டவர்கள்; அவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லி முடித்து விடுகின்றான்.
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا
நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியக்கூடிய நெருப்பையும் தயார் செய்துள்ளோம். (அல்குர்ஆன் 76:4)
கருத்து : நிச்சயமாக நாம் தயார் செய்து விட்டோம். யாருக்கு? நிராகரிப்பாளர்களுக்கு; நன்றி கெட்டவர்களுக்கு; அல்லாஹ்வை, மறுமையை, மார்க்கத்தை நிராகரித்தவர்களுக்கு. சாதாரணமான சங்கிலிகள் அல்ல.
ஸூரத்துல் ஹாக்காவை படித்துப் பாருங்கள்.
ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ
“பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.) (அல்குர்ஆன் 69:32)
70 முழம் நீளமான சங்கிலிகள். அந்த சங்கிலிகள் அவருடைய வாய்க்குள் நுழைக்கப்பட்டு அவனுடைய பின் வழியாக வெளியே கொண்டு வரப்படும். நரக நெருப்பிலே கடுமையாக பழுக்கக் காய்ச்சப்பட்ட சங்கிலிகள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
ஒரு இரும்பை சிறிது நேரம் நெருப்பில் சூடாக்கி நமது கையிலே வைக்க முடியுமா? துடித்து விடுவோம். ஒரு சிறிய ஊசியை நெருப்பிலே வைத்து நமது கையிலே வைக்க முடியுமா சில நேரங்களில் துணிக்கு அயன் செய்யும் பொழுது அயன் பாக்ஸ் செய்வது கையிலே பட்டு விடும். எப்படி துடிக்கிறோம்! அல்லாஹ் பாதுகாப்பானாக! நரக நெருப்பு எத்தனை பயங்கரமான நெருப்பு!
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
உங்களுடைய உலகத்தின் நெருப்பை விட 70 அல்லது 60 மடங்கு அந்த நெருப்பு இன்னும் கடுமையாக்கப்பட்டது. ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! இந்த நெருப்பையே தாங்க முடியவில்லையே! இதைவிட அதிகமா? அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்: ஆம். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3265.
அந்த நரக நெருப்பிலே, பழுக்கக் காய்ச்சப்பட்ட அந்த நரகம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே அந்த சங்கிலிகள் அதிலே அப்படியே நெருப்பாகக் கங்குகளாக மாறி இருக்கும். இது துன்யாவின் இரும்பைப் போல அல்ல. துன்யாவின் இரும்பு எப்படி? ஒரு கட்டத்திற்கு மேலே சென்றால் அந்த நெருப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமோ அப்படியல்ல. அது அப்படியே இருக்கும்; அதே நேரத்தில் அதில் சூடு ஏறிக்கொண்டே இருக்கும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அத்தகைய சங்கிலிகளை நாம் வைத்திருக்கிறோம். அதுமட்டுமா? அவர்களுக்கு விலங்குகளையும் நாம் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். கைகளுக்கு விலங்கு, கால்களுக்கு விலங்கு, அவர்களுடைய கழுத்துகளுக்கு அரிக்கண்டங்கள். அல்லாஹ் சொல்கிறான். இந்த இரண்டு அதாபுகளை அல்லாஹ் சொல்லிவிட்டு, கொழுந்துவிட்டு எரியக்கூடிய நெருப்பையும் நாம் அவர்களுக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பத்து நிமிடத்திற்கு நமது கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தால், அல்லது ஐந்து நிமிடத்திற்கு நமது கைகள் பின்பக்கமாக விலங்கிடப்பட்டிருந்தால், நமது கால்கள் நெருக்கமாக விலங்கிடப்பட்டிருந்தால், ஒரு கற்பனை செய்து பாருங்கள். இந்த நிலையில் அந்த விலங்குகள் சூடு குறையாத அளவிற்கு காய்ச்சப்பட்டு விலங்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
சாதாரணமான கை விலங்குகளைக் கொண்டு கூட, ஐந்து நிமிடம், பத்து நிமிடம் கூட நம்மால் சகிக்க முடியாது; தாங்கிக்கொள்ள முடியாது. நமது நிலைமை அப்படிப்பட்ட மன நெருக்கடியான நிலையில் ஆகிவிடும். அப்படியிருக்க, ஒரு மனிதன் நரகத்தில் முடிவில்லாத காலம், நிரந்தரமாக கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு, அதுவும் அந்த விலங்குகளோ நரக நெருப்பால் சுடப்பட்ட நிலையில், முழு நரகத்திலேயே இருப்பான் என்றால், அது எப்படிப்பட்ட அதாப். நோவினை, வேதனை.?
காரணம் என்ன? இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை நிராகரித்த காரணத்தினால்.
ஹதீஸ் குதுஸிலே வருகிறது;
நாளை மறுமையில் அடியான் வரும் போது அல்லாஹ்விடத்தில் சொல்வான்:
“யா அல்லாஹ்! என்ன வேண்டுமானாலும் என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள். என்னை நீ மீண்டும் உலகத்திற்கு அனுப்பு; நான் எல்லாவற்றையும் உனக்கு தியாகம் செய்து விடுகிறேன்” என்று.
அப்போது அல்லாஹ் கேட்பான்:
“அடியானே! நீ துன்யாவில் இருந்தபோது உன்னிடத்தில் நான் ரொம்ப லேசான ஒன்றை மட்டும் கேட்டேன். ‘எனக்கு நீ இணை வைக்காதே’ என்று தான் சொன்னேன். அதையும் நீ மறுத்துவிட்டாயே!” (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3334.
அல்லாஹ்வின் அடியார்களே! ஷிர்க் என்பது அவ்வளவு பயங்கரமான பாவம். இன்று இந்த முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் அறியாமல் செய்து கொண்டிருக்கக் கூடிய ஷிர்க் வகைகளை கவனியுங்கள்.
கடந்த வாரம் நம்முடைய சகோதரர்கள் கிராம தாவாவிற்கு சென்றார்கள். கிராமங்களில் முஸ்லிம் வீடுகளை சந்தித்த போது, “நம்முடைய நபியின் பெயர் என்ன?” என்று கேட்டார்கள். ஒரு கிராமத்தில் கேட்டபோது யாருக்கும் நபியின் பெயர் தெரியவில்லை.
“நபி” என்றால் தெரிகிறது; ஆனால் நம்முடைய நபியின் பெயர் என்ன என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அஸ்தக்ஃபிருல்லாஹ்!
நம்முடைய நிகழ்ச்சிகளுக்காக, விழாக்களுக்காக, எத்தனையோ வீணான அற்பமான காரியங்களுக்காக காசையும், பணத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்மில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூடிய அழைப்பாளராக மாறினால், சமுதாயத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வரலாம்!
கிறிஸ்தவர்களை பாருங்கள்! அவர்களில் ஒவ்வொருவரும் தாஈகளாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அழைப்பாளராக இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலிருந்தே சர்ச்சுகளில் பைபிள் வகுப்புகள் நடக்கின்றன. பைபிளை கையில் எடுத்துக்கொண்டு, வெயில்–மழை–குளிர் எதையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக ஏறி இறங்குகிறார்கள்.
ஆனால் நமக்கோ—எங்கே கல்யாணம், எங்கே கூட்டம், எங்கே ஆட்டம், பாட்டம்— இதில்தான் நம்முடைய நேரங்களும், பணங்களும் செலவழிக்கப்படுகின்றன. நம்முடைய சமுதாயத்தில் சீர்திருத்தம் பற்றியோ, பிற மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தாவா பற்றியோ சிந்திப்பதற்கே நமக்கு நேரமில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
சகோதரர்களே! அல்லாஹு தஆலா இரண்டு பாதைகளை வைத்திருக்கிறான். அந்த இரண்டு பாதைகளில், யார் நிராகரிப்பின் பாதையில் செல்கிறார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை இருக்கிறது என்பதை அல்லாஹ் ஒரே வரியில் சுருக்கமாக சொல்லி முடிக்கிறான். (அல்குர்ஆன் 76:4)
குர்ஆனுடைய ஏனைய மற்ற மற்ற வசனங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக நரக தண்டனைகளை விவரிக்கும் பொழுது இந்த ஸூராவிலே இந்த ஒரு வரியில் அல்லாஹ் இப்படி சொல்லுகின்றான். காஃபிர்களுக்கு அவர்களை தண்டிப்பதற்காக நரகத்தில் சூடு காட்டப்பட்ட சங்கிலிகள் இருக்கும். கட்டப்பட்ட கைகளுக்கும் கால்களுக்கும் கழுத்துக்கும் விலங்குகள் அரிகண்டங்கள் இருக்கும். அதுபோக கொழுந்து விட்டு எரியக்கூடிய நெருப்பிலே அவர்கள் இருப்பார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அடுத்த ஐந்தாவது வசனத்திலிருந்து அல்லாஹு தஆலா சொர்க்கவாசிகளை பற்றி, நன்றி உள்ளவர்களை பற்றி, மார்க்கத்தின் பாதையை அல்லாஹ்விற்கு பொருத்தமான பாதையை தேர்ந்தெடுத்தவர்களை பற்றி சொல்லுகின்றான். இன் ஷா அல்லாஹ் முடிந்தால் அடுத்த ஜுமுஆவிலே பார்ப்போம்.
அல்லாஹு தஆலா, ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய சுன்னாவை பின்பற்றுவதற்கு அவர்களுடைய மார்க்கத்தை பேணி நடப்பதற்கு நமக்கு அருள் புரிவானாக! முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஒற்றுமையும் அன்பையும் உறுதியையும் ஏற்படுத்தி தருவனாக! பாவங்களை விட்டு ஷிர்க்குகளை விட்டு அனாச்சரங்களை விட்டு விலகி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித் தந்த அடிப்படையிலே பின்பற்றி அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் வெற்றியும் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: نَارُكُمْ جُزْءٌ مِن سَبْعِينَ جُزْءًا مِن نَارِ جَهَنَّمَ، قيلَ: يا رَسولَ اللَّهِ، إنْ كَانَتْ لَكَافِيَةً، قالَ: فُضِّلَتْ عليهنَّ بتِسْعَةٍ وسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3265 | خلاصة حكم المحدث : [صحيح]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3265.
குறிப்பு: (2)
إنَّ اللَّهَ يقولُ لأهْوَنِ أهْلِ النَّارِ عَذابًا: لو أنَّ لكَ ما في الأرْضِ مِن شيءٍ كُنْتَ تَفْتَدِي بهِ؟ قالَ: نَعَمْ، قالَ: فقَدْ سَأَلْتُكَ ما هو أهْوَنُ مِن هذا وأَنْتَ في صُلْبِ آدَمَ، أنْ لا تُشْرِكَ بي، فأبَيْتَ إلَّا الشِّرْكَ. الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3334 | خلاصة حكم المحدث : [صحيح]
மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான்.
அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3334.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/