அல்லாஹ் தான் நாடியதை செய்கிறான் | Tamil Bayan - 625
بسم الله الرحمن الرّحيم
அல்லாஹ் தான் நாடியதை செய்கிறான்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இது நம்முடைய கல்வி அமர்வு.
அல்லாஹ்வின் வல்லமையை, அல்லாஹ்வுடைய சக்தியை நினைவூட்டிக் கொள்வதற்காக, நம்முடைய ரப் உடைய ஆற்றல், வலிமை,அவனது ஒவ்வொரு செயலிலும் அவனுக்கு இருக்கக்கூடிய ஹிக்மத் -ஞானத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டி கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வு இது.
இன்றைய நம்முடைய அமர்வுடைய தலைப்பு ;
إِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَاءُ-நிச்சயமாக அல்லாஹு தஆலா தான் நாடியதை செய்வான் ;
كَذَلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ
அல்லாஹ் அவன் நாடியதை செய்வான்.(அல்குர்ஆன் 3:40)
إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் அவன் எதை நாடுகிறானோ அதை செய்வான்.செய்து முடிப்பான். (அல்குர்ஆன்22 : 18)
إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِمَا يُرِيدُ
நபியே! நிச்சயமாக உங்களுடைய இறைவன் அவன் எதை நாடுகிறானோ, விரும்புகிறானோ, அதை செய்து முடிப்பவன்.செய்தே தீருவான். (அல்குர்ஆன்11 : 107)
فَعَّالٌ لِمَا يُرِيدُ
நிச்சயமாக அவன் தான் எதை நாடி விட்டானோ அதை கண்டிப்பாக செய்து முடித்து விடுவான். (அல்குர்ஆன்85 : 16).
சூரா ஆலுஇம்ரானுடைய 40 வது வசனம்,அதுபோல்சூரத்துல் ஹஜ் உடைய 18வது வசனம் அதுபோன்று, சூராஹூத் உடைய 107வது வசனம், அதுபோன்றுசூரா அல்புரூஜ் உடைய 16வது வசனம் ஆகிய இந்த வசனங்களில் அல்லாஹுத்தஆலா நமக்கு ஈமானுடைய ஒரு பாடத்தை எடுக்கின்றான்.
அல்லாஹ்வை நம்பக்கூடிய அடியார்கள், அல்லாஹ் தான் எனது ரப்பு நான் அவனை வணங்குகிறேன். அவன் என்னுடைய எஜமானன். அவன் தான் خَالِقٌஇந்த பிரபஞ்சம் அனைத்தையும் அவன் தான் படைத்தான்.
அல்லாஹ்வுடைய அர்ஷிலிருந்து, குர்ஸியிலிருந்து, ஏழு வானங்களிலிருந்து, அந்த ஏழு வானங்களில் உள்ளவர்கள், பிறகுஏழு வானங்களுக்கு கீழே ஏழு பூமிகள், ஏழு பூமிகளில் உள்ளவர்கள், அந்த பூமிக்கு மேலே, இப்படி இந்த உலகம் அண்ட சராசரங்களில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் அந்த ரப்பு தான் படைத்தான் என்று நாம் நம்பிக்கை கொள்கின்ற அந்த நேரத்தில் அந்த ரப்பு உடைய ஷிஃபத்தாகிய அவன் நாடியதை அவன் செய்வான்; அவனுடைய செயலை யாரும் தடுக்க முடியாது; அவன் செய்ததை ஏன் செய்தாய்?என்று கேட்க முடியாது.
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
அவன் செய்வதை பற்றி நீ ஏன் இதை செய்தாய்? என்றும் யாரும் அவனிடத்தில் ஆட்சியேபனை செய்யமுடியாது. (அல்குர்ஆன் 21 : 23)
என்ற இந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் மீது அவன் ஒருவன் வணக்கத்துக்குரியவன் என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் அந்த ரப்புல் ஆலமீன் உடைய செயல்கள் கண்டிப்பாக ஒரு ஞானத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவன் ஒரு திட்டத்தின் அடிப்படையில் அவனுடைய செயலை செய்கிறான். அவனுடைய செயல் ஒவ்வொன்றும் ஹிக்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
அவன் தன்னுடைய அடியார்கள் விஷயத்தில் எதைச் செய்கிறானோ அது கண்டிப்பாக நீதமாக இருக்கும். அல்லாஹு தஆலா அநியாயம் செய்யக்கூடியவன் அல்ல. அவனுடைய செயல் அறிவுக்கு அப்பாற்பட்டது அல்ல என்ற நம்பிக்கைநமக்கு இருக்க வேண்டும்.
ஒரு மனிதர் அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜூது செய்கிரார்; அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டுகிறார்;அவர் நிற்கிறார்;ருகூ செய்கிறார்;ஸுஜூது செய்கிறார்;ஆனால் அல்லாஹ்வுடைய செயலின் மீது அவர் ஆட்சியேபனை செய்வாரேயானால், ரப்பு உடைய ஒரு திட்டத்தின் மீது அவர் கேள்வி கேட்பாரேயானால் அவர் இஸ்லாமை விட்டு ஈமானை விட்டு வெளியேறி விடுவார். அவருடைய இந்த தொழுகை என்பது இது வெறும் ஒரு அசைவாக இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரு முஃமினுடைய உள்ளம், அதுவும் முஃமினாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வல்லமையின்மீது, அல்லாஹ்வுடைய விதியின் மீது, அல்லாஹ்வுடைய செயலின் மீது, அந்த செயலில் உள்ள 'ஹிக்மத்' மீது அந்த கல்புக்கு ஈமான் இருக்கவேண்டும். ஈமான் என்பது நாவினால் மட்டும் மொழியப்படக்கூடிய "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற கலிமா அல்ல.
நாவினால் அந்த கலிமா மொழியப்படுவதுடன், நாவினால் அந்த கலிமா உச்சரிக்க படுவதுடன், அந்தக் கலிமா உடைய அர்த்தத்தை, பொருளை, அதனுடைய தாத்பரியத்தை இந்தக் கல்பு முழுமையாக நம்பிக்கை கொண்டு இருக்க வேண்டும்.
அல்லாஹ் என்னுடைய இறைவன்; அவன் திட்டமிடுகிறான்; அவன் விதியிலே அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறான்; இந்த வானத்தை அவன் படைத்தான்;எப்படி படைக்க வேண்டும் என்று அவன் யாரிடத்திலும் ஆலோசனை கேட்கவில்லை. கேட்கவேண்டிய தேவையும் இல்லை.
மலக்குகளை அவன் படைத்தான்;ஜின்களை படைத்தான்;மனிதர்களை படைத்தான்;இந்த உலகத்தில் உள்ள பறவைகள், மிருகங்கள், காடுகள், கடல்கள், இப்படி பிரபஞ்ச படைப்புகளின் எண்ணிக்கைகளை எண்ணிக்கொண்டே செல்லுங்கள். இந்த ஒவ்வொரு படைப்பையும் அவனே அழகிய முறையில் படைத்தான்.
الَّذِي خَلَقَ فَسَوَّى
அவன் படைத்தான். படைத்ததை சிறப்பாக, செம்மையாக, அழகாக, முறையாக படைத்தான். (அல்குர்ஆன் 87 : 2)
هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ
அல்லாஹ்வைத் தவிரபடைப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா? கண்டிப்பாக இல்லவே இல்லை. (அல்குர்ஆன் 35 : 3)
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நம்முடைய படைப்பாளன், அந்த ரப்புக்கு முன்னால்நாம் சரணடைந்துவிடவேண்டும். அவனுடைய செயலில் நாம் கேள்வி கேட்கக் கூடாது. நோயை கொடுப்பான்;சுகத்தை கொடுப்பான்; வெயிலை அனுப்புவான்; குளிரை அனுப்புவான்; மழையை பெய்ய வைப்பான்;மழையை தடுத்தும் வைப்பான்;மரணத்தைக் கொடுப்பான்;ஹயாத்தை கொடுப்பான். அவன் நாடினால் மழையை இறக்குவான்;அவன் நாடினால் மழையை தடுப்பான்;இந்தப் பிரபஞ்சம் அவனுக்கு சொந்தமானது.
நாம் அவனுடைய அடிமைகள். அவன் எதை வேண்டுமானாலும் இந்தப் பிரபஞ்சத்தில் நிகழ்த்துவான். அவனுக்கு சொந்தமானதில் அவன் செய்கிறான். அவனுடைய ஞானத்தின் அடிப்படையில்.
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
அல்லாஹ்வை விட ஒரு மிகப்பெரிய ஞானவான், மிகப்பெரிய நீதிவான் இருக்கின்றானா? அல்லாஹு தஆலா தீர்ப்பளிப்பவர்களில் மிகப்பெரிய தீர்ப்பளிப்பவனாக, நீதிவான்களின் மிகப்பெரிய நீதிவானாக அல்லாஹ் இல்லையா? என்று ரப்புல் ஆலமீன் கேட்கிறான். (அல்குர்ஆன்95 : 8)
இன்று நம்மிலே பலர் நம்முடைய நாவால் முஸ்லிமாக இருக்கிறோம். ஆனால், நம்முடைய உள்ளத்தாலும் முஸ்லிமாக இருக்கிறோமா?நாவு சொல்கிறது நான் முஸ்லிம்.
முஸ்லிம் என்றால் என்ன?
சில அடையாளங்கள் மட்டுமா முஸ்லிம்?சில வெளிப்படையான வார்த்தைகள் மட்டுமா முஸ்லிம்?முஸ்லிம் என்பவன் இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கூறினான் அல்லவா!
إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ
இப்ராஹிமுக்கு (அலை) அவனுடைய இறைவன் கூறினார். இப்ராஹீமே! பணிந்து விடு, கட்டுப்படு, எனக்கு முன்னால் சரணடைந்து விடு. இப்ராஹிம் (அலை) கூறினார்; என் இறைவா! அகிலங்களின் இறைவனாகிய உனக்கு நான் பணிந்துவிட்டேன். சரணடைந்துவிட்டேன். (அல்குர்ஆன்2 : 131)
ரப்புக்கு முன்னால் முற்றிலுமாக பணிந்து அவனுடைய ஒவ்வொரு செயலையும் ஏற்றுக்கொண்டு, அவனுடைய ஒவ்வொரு விதியையும் ஏற்றுக்கொண்டு, நம்மீது என்ன கடமையோ அதை செய்து, நம்மீது எது தடுக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி அல்லாஹு உடைய பொருத்தத்தை, அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய மகிழ்ச்சியை தேடுவதுதான் அடியார்கள் செய்யவேண்டிய கடமை.
தன்மீது உண்டான கடமையை விட்டு விட்டு தான் செய்யவேண்டிய அந்த பொறுப்பை விட்டுவிட்டு,அடிமை என்ற அந்த குணத்திலிருந்து வெளியேறி, இன்று நம்மிலே சிலர் ரப்பின் மீது கேள்வி கேட்கிறார்கள். ரப்பிடம் ஆட்சியேபனை செய்கிறார்கள். ரப்புடைய செயலுடைய 'ஹிக்மத்தை' இவர்கள் ஆராய்ந்து அதிலே இவர்கள் சரிகான நினைக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இத்தகையவர்கள் எத்தனை ரக்அத்துகள் தொழுதாலும் சரி, எத்தனை ஹஜ்ஜுகள் செய்தாலும் சரி, எத்தனை ரமலான் மாதங்கள் நோன்பு வைத்தாலும் சரி, இவர்களுடைய 'இபாதத்' எந்த புண்ணியத்தையும் கொடுக்காது. மறுமையிலே இவர்கள் நரகத்திலே எறியவேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்விற்கு முன்னால் சரணடையாதவர்கள், அல்லாஹ்வின் விதியை நம்பாதவர்கள், அந்த விதியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அந்த விதியிலே அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடாதவர்களுடைய தொழுகை, வணக்க வழிபாடுகளை, அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
சகோதரர்களே! இன்று உலகமெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நோயை, நாம் ஒரு படிப்பினையாக எடுத்துப் பார்ப்போம், ஒரு பாடமாக எடுத்துப் பார்ப்போம், இதில் அல்லாஹ்வுடைய 'ஹிக்மத்' என்ன என்று நாம் தேடிப்பார்ப்போம்.
அல்லாஹுத்தஆலா இந்த நோயின் மூலமாக இந்த நோயை சாட்டியதின் மூலமாக என்னிடத்திலே என்ன எதிர்பார்க்கிறான் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
அதை விட்டுவிட்டு இந்த நோய் ஏன் வந்தது? எதற்கு வந்தது? மக்களெல்லாம் இப்படி அவதிப்படுகிறார்களே இப்படி அல்லாஹ் மக்களை கஷ்டப்படுத்தவேண்டுமா என்று அல்லாஹ்வுடைய செயலிலே குறைக்கண்டு கொண்டிருக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய செயலின் மீது ஆட்சியேபனை செய்து கொண்டிருக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய செயலில் தவறு கண்டுபிடிக்கக்கூடியசிலரையும் இந்த சமுதாயத்திலே பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அவர்களிடத்தில் கேட்டால் சும்மா பேசினோம்,பேச்சுக்காக பேசினோம்,இதெல்லாம் தப்பா என்று கேட்கிறார்கள். இது தப்பு என்பதல்ல. அதையும் தாண்டி அடியானை ஈமானை விட்டு விலகி வெளியேற்றிவிடக்கூடியது. அவனுடைய ஈமானை 'நிஃபாக்' நயவஞ்சகமாக மாற்றக்கூடியது. 'குஃப்ராக' மாற்றக்கூறியது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒரு சில சம்பவங்களை கூறி நாம் நம்முடைய தலைப்புக்குள் செல்வோம். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) இந்த குர்ஆனை கற்றுத்தேர்ந்த அறிஞர், ரசூலுல்லாஹ் உடைய பணியாளர், அல்லாஹ் புகழ்ந்த மூத்த நபித்தோழர்.
அவர்கள் சொல்கிறார்கள்; எந்த அளவு அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது, அல்லாஹ்விற்க்கு முன்னால் சரணடைவது, ரப்புக்கு முன்னால் பணிந்துவிடுவதில்அவர்கள் கவனமாக இருந்தார்கள். அதுதான் ஈமானின் உச்சநிலை, உயர்ந்த நிலை, என்பதை புரிந்து வைத்திருந்தார்கள்.
ஸுஜூது செய்வது மட்டுமல்ல;ஸுஜூதிலே நீண்ட நேரம் இருப்பது மட்டுமல்ல;அந்த ஸுஜூத் உடைய தாத்பரியத்தோடு நீண்ட நேரம் ஸுஜூத் செய்யப்பட வேண்டும்.
இன்று நாமும் ருகூஃ செய்கிறோம்;சாஹாபாக்களும் ருகூஃ செய்தார்கள்.நாமும் ஸுஜூது செய்கிறோம், சஹாபாக்களும் ஸுஜூது செய்தார்கள். நாமும் அல்லாஹ்வுக்கு முன்னால் கை உயர்த்தி, கைகட்டி, கையேந்தி, ஒரு அடிமையாக நிற்கிறோம். சஹாபாக்களும் நின்றார்கள். நம்முடைய அந்த கியாமுக்கும் சஹாபாக்கள் உடைய அந்த கியாமுக்கும், நம்முடைய ருக்கூவிற்க்கும் சஹாபாக்களுடைய ருக்கூவிற்க்கும், நம்முடைய ஸுஜூதுக்கும் சஹாபாக்கள் உடைய ஸுஜூதுக்கும் இடையிலே, வித்தியாசம் இருக்கின்றதா இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றது.
நாம் இதை வெறும் ஒரு ருக்குனாக, ஒரு செயலாக, ஒரு அசைவாகமட்டுமே செய்கின்றோம். அதனுடைய அந்தரங்கத்தை நாம் புரிந்துகொண்டு செய்கிறோமா என்றால் நம்மிலே பெரும்பாலானவர்களுக்கு, அதனுடைய அந்தரங்கமே தெரியாது. அல்லாஹ் மன்னிப்பானாக!
அடிமையாக நிற்க்கின்ற ஒருவன் தன்னுடைய எஜமானனுடைய செயலிலே ஆட்சியேபனை செய்யலாமா? நீதான் என்னுடைய எஜமானன் என்று அவனுக்கு முன்னால் குனிந்த ஒருவன் அந்த ரப்புடைய செயலில் எப்படி கேள்வி கேட்பான்?
நீதான் என்னுடைய எஜமான் என்று அவனுக்கு முன்னால் மண்ணில் தலைசாய்த்தவன்,தலையை பணியவைத்தவன், அவன் எப்படி தன்னுடைய ரப்புடைய செயலின்மீது மீது அதிருப்தி கொள்ள முடியும்?
இதுதான் நமக்கும் சஹாபாக்களுக்கும், நமக்கும் நல்லவர்களுக்கும்இடையிலே இருந்த வித்தியாசம். அவர்கள் உடல் மட்டும் பணியவில்லை. அவர்களுடைய உள்ளம் பணிந்தது. அவர்களுடைய உடல் மட்டும் அல்லாஹ்விற்க்கு முன்னால் அடிமையாக நிற்க்கவில்லை. அவர்களுடைய உள்ளம் அடிமைத்தனத்தையும் உணர்ந்தது. ருக்கூ செய்யும்போது அந்த அடிமைத்தனத்தை உணர்ந்தது, ஸுஜூது செய்யும் போது அந்த அடிமைத்தனத்தை உணர்ந்தது.
சகோதரர்களே! இன்று நம்மிடத்திலே அந்த அடிமைத் தன்மை அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் அடிமை என்ற அந்த அப்தியத்தை நாம் உணராமல் இருக்கிறோம். அதுதான் இன்றைய நம்முடைய வாழ்க்கையிலே பிரச்சனை. சுகமாக வைத்திருக்கும்போது, இன்பமாக இருக்கும் பொழுது, அல்லாஹ்வின் மீது நமக்கு திருப்தி இருக்கிறது.
ஏதாவது கஷ்டம் வரும்போது,சோதனைகள் வரும்போதுதடுமாறி விடுகின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் மன்னிப்பானாக!
அல்லாஹுத்தஆலா இப்படி தடுமாறக்கூடியவர்களை காஃபிர்களுடைய பட்டியலிலே சொல்கிறான். ஆனால், இன்று முஃமீன்கள் என்று சொல்லக்கூடிய நாம் காஃபிர்களுடைய குணத்தில்அல்லவா இருக்கிறோம்.
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான். ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான். (அல்குர்ஆன் 89 : 15, 16)
சகோதரர்களே! அந்த குணம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு அவ்வப்போது வந்து எட்டிபார்த்துக்கொண்டு செல்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சொல்வதை கூறுகிறார்கள்;
قَالَ ابْنُ مَسْعُودٍ: " لَأَنْ أَلْحَسَ جَمْرَةً أَحْرَقَتْ مَا أَحْرَقَتْ، وَأَبْقَتْ مَا أَبْقَتْ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُولَ لِشَيْءٍ كَانَ: لَيْتَهُ لَمْ يَكُنْ، أَوْ لِشَيْءٍ لَمْ يَكُنْ: لَيْتَهُ كَانَ "
நெருப்புக் கங்கை நக்கி அது என்னுடைய நாக்கை எரித்து விடுவது எனக்கு விருப்பமானது.எதைவிட?நிகழாத ஒன்று,நடக்காத ஒன்று,எனக்கு கிடைக்காத ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமே! நடந்திருக்க வேண்டுமே! எனக்கு கிடைத்திருக்க வேண்டுமே! என்று நான் சொல்வதை விட.
அதுபோன்று எனக்கு நிகழ்ந்துவிட்ட ஒன்று, எனக்கு கிடைத்து விட்ட ஒன்று, அதைப் பார்த்து இது இப்படி ஏற்பட்டு இருக்ககூடாதே, இப்படி நிகழ்ந்து இருக்க கூடாதே, என்று நான் சொல்வதைவிட நெருப்பு கங்கை நக்குவது எனக்கு விருப்பமானது.
நூல் : அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்
சகோதரர்களே! இன்று நம்முடைய நிலையை எடுத்துப் பாருங்கள். காலையிலிருந்து மாலை வரை இன்று நம்மிலே பலருக்கு ஆண்கள், பெண்கள் குறிப்பாக இதிலே பெண்கள் மிகவும் சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அல்லாஹ்வை குறை கூறுவது, அல்லாஹ்வைப் புலம்புவதை தவிர அவர்களுக்கு வேறு வேலையே இல்லை.
கொடுத்த நிஃமத்துகளை சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். அல்லாஹ் சோதித்த ஒரு சோதனையை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
ரப்பு சொல்கிறான்;
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை எண்ணிப்பார்த்தால் எண்ணி முடிக்க முடியாது. (அல்குர்ஆன் 16 : 18)
எத்தனை நிஃமத்துக்கள்! அதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹு தஆலா ஒரு சோதனையை கொடுத்து விட்டால்அந்த சோதனையை பற்றி பேசுவார்கள் பேசுவார்கள், என்னம்மோ வாழ்க்கையிலே இவர்கள் சோதனையை தவிர வேறு எதையுமே பார்க்காதது போன்று.
யஹ்யா இப்னு முஆத் என்ற மிகப்பெரிய தாபியீ அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது;
قال يحيى بن معاذ لما سئل: متى يبلغ العبد إلى مقام الرضا؟ قال: "إذا أقام نفسه على أربعةِ أصولٍ يُعامِل بها ربه، يقول: إن أعطيتني قبلتُ، وإن منعتني رضيتُ، وإن تركتني عبدتُ، وإن دعوتني أجبتُ"
ஓர் அடியான் அல்லாஹ்வுடைய பொறுத்தத்துக்கு தகுதியான அந்தஸ்துக்கு எப்போது வருவான் என்று.
சொல்கிறார்கள்;நான்கு உஸுல்களை தன்னுடைய ரப்பு இடத்திலே அவன் கடைப்பிடிக்க வேண்டும்.
(இன்று சிலருக்கு சஹாபாக்கள் உடைய கூற்று தாபீயீன்களுடைய உடைய கூற்று என்றால் கசக்கிறது.
ஆனால், இவர் கூறினார்,அவர் கூறினார் என்று சமகாலத்தில் ஒருவரை பற்றி கூறினால், அப்படியே முகமெல்லாம் மலர்ந்து கேட்கிறார்கள். காரணம் என்ன?
உள்ளத்திலே நயவஞ்சக நோய் இருக்கிறது. சஹாபாக்கள் குர்ஆனை புரிந்தவர்கள் தாபீயீன்கள் குர்ஆனை புரிந்தவர்கள். நாமும் ஓதுகிறோம் அவர்கள் புரிந்ததை. நாம் புரிந்தோமா?)
அவர்கள் சொல்வதைப் பாருங்கள்;
நான்கு உஸுல்களோடு அல்லாஹ்விடத்திலே நாம் இருக்க வேண்டும். ஒன்று ;
إن أعطيتني قبلتُ
என் இறைவா! நீ எனக்கு கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன். அல்லாஹ் கொடுத்ததை மறுக்கக்கூடாது.
وإن منعتني رضيتُ
நீ எனக்கு ஒன்றைக் கொடுக்காமல் தடுத்து விட்டால், நான் பொருந்திக்கொள்வேன்.
நம்முடைய நிலை அப்படியே உல்டா. அல்லாஹ் எதை கொடுத்தானோ அதை வேண்டாம் என்று மறுப்போம். அதிலே குறை காணுவோம். அல்லாஹ் எதை கொடுக்கவில்லையோ அதுதான் வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கேட்டு அடம்பிடிப்போம்.
அல்லாஹ்வுடைய பொருத்தத்தினுடைய மகாம் என்ற தரஜாவுக்கு என்ன ஈமான் வேண்டும்?
என் இறைவா! நீ எதை கொடுத்தாயோ அதை நான் ஏற்றுக் கொள்வேன். அல்லாஹுத்தஆலா ஒரு குழந்தையை கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் எனக்கு கொடுத்த குழந்தை இது. அல்லாஹுத்தஆலா ஒருவருக்கு ஒரு மனைவியை கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் இவளை எனக்கு தேர்ந்தெடுத்தான். இவனை அல்லாஹ் எனக்கு கணவனாக தேர்ந்தெடுத்தான்.
ஒரு உத்தியோகமா ஒரு வேலையா ஒரு படிப்பா எதுவாக இருந்தாலும் சரி. எது நமக்கு வந்துவிட்டதோ, கிடைத்துவிட்டதோ, எது நமக்கு ஹலாலாக இருக்கிறதோ, அவ்வளவு தான் யாஅல்லாஹ்! நீ கொடுத்ததை நான் ஏற்றுக்கொண்டேன்.
நாம் ஒன்றை விரும்புகிறோம்.ஆனால் நமக்கு அது கிடைக்கவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்;
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
சகோதரர்களே! அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள் அது உங்களுக்கு தீமையாக இருக்கும். நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள் அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். (அல்குர்ஆன் 2 : 216)
அல்லாஹ் தான் நமக்கு எது நன்மை எது தீமை என்பதை அறிவான். அதில் உள்ள சாதக பாதகங்களை அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
இதைத்தான் யஹ்யா இப்னு முஆத் அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள். ரப்பிடத்திலே நான் இப்படி இருக்க வேண்டும். ஓர் உண்மையான அடிமையாக.
யா அல்லாஹ்!நீ கொடுத்தால் நான் வாங்கிக் கொள்வேன். எவ்வளவு கொடுத்தாலும் சரி. சில்லரை காசை கொடுத்தாலும் சரி.
உண்மையான அடியான் எப்படி தன்னுடைய எஜமானன் சில சில்லறைகளை கொடுத்தாலும் கூட அதை நன்றியோடு,ரொம்ப பணிவோடு,தான் அடிமை என்பதை வெளிப்படுத்தி,உன் பக்கம் நான் தேவை உள்ளவன் என்பதை வெளிப்படுத்தி,அங்கீகரித்து,பார்வையை தாழ்த்தி அவரிடத்திலிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீ எனக்கு கொடுக்காமல் ஒன்றை தடுத்து விட்டால் நான் அதை பொருத்திவிடுவேன். நான் உன்மீது ஆட்சியேபனை செய்யமாட்டேன்.
அல்லாஹு தஆலா சில நேரங்களில் நாம் விரும்பாததை கொடுத்து சோதிப்பான். பொறுமையாக இருக்கிறோமா? நாம் எப்படி இருக்கிறோம் என்று.
சில நேரங்களில் நாம் விரும்பியதை தடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதிப்பான். இரண்டும் சோதனை தான். விரும்பியது கொடுக்கப்பட்டாலும் சோதனை, விரும்பியது தடுக்கப்பட்டாலும் சோதனை.விரும்பியதற்க்கு மாற்றமாக வேறு ஒன்று கொடுக்கப்பட்டாலும் சோதனை, விரும்பியதே கொடுக்கப்பட்டாலும் சோதனை.
அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்து விடுவது என்பதுதான் அடியானுடைய ஈமானாக, அவனுடைய நிலைமையாக இருக்க வேண்டும்.
அடுத்து. மூன்றாவது சொல்கிறார்கள்;
وإن تركتني عبدتُ
இந்த உலகத்தில் என்னை நீ விட்டு விட்டால், (எனக்கு உணவில்லாமல், தொழில் இல்லாமல், என்னை விட்டு விட்டாலும்)நான் உன்னை வணங்கிக் கொண்டே இருப்பேன்.
என்னுடைய மரணம் உன்னை வணங்குகின்ற நிலையில் வருகின்ற வரை. அல்லாஹு அக்பர்!
சகோதரர்களே! எப்படிப்பட்ட ஈமான் என்பதை சொல்லிக் காட்டுகிறார்கள். நீ என்னை விட்டு விட்டால்,எப்படி?உணவில்லாமல் வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் விட்டுவிட்டால் நான் கோபித்துக் கொள்வேனா?உன்னை விட்டு விலகி சென்று விடுவேனா?அதிருப்தி கொள்வேனா?உன்னுடைய வணக்க வழிபாடுகளை குறைத்துவிடுவேனா?இல்லை. என்னுடைய மரணம் வரை உன்னுடைய இபாதத்திலே நான் மரணிக்கும் வரை.
இன்று நம்முடைய நிலைமை என்ன தெரியுமா? இந்த சின்ன பிள்ளைகள் மாதிரி மிட்டாய் காட்டினால் பாசமா விரும்பிவருவார்கள். மிட்டாய் காட்டவில்லனா முகத்தை திருப்பி காட்டிபோய்டுவாங்க.
இந்த மாதிரி தான் அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கும் தொடர்பு. அல்லாஹ் பாதுகாப்பானாக!
மின்னுகின்ற இந்த உலகம் நம்மை நோக்கி வரும்போது நாம் பல் இழித்தவர்களாக, முகம் செழிப்பாக இருப்பவர்களாக இருப்போம். இந்த உலகம் நம்மைவிட்டு மறையும்போது இதனுடைய செல்வம் நம்மை விட்டு மறையும் போது அவ்வளவுதான் இபாதத்தை ஒரு பக்கம் நாம் மூட்டை கட்டிவிட்டு நாம் ஏதோ ஒரு கவலையிலே, இந்த உலகத்தின் கவலையிலே, இந்த பொருளாதாரத்தின் கவலையிலே, அல்லாஹ்வை மறந்திருப்போம்.
சகோதரர்களே! அல்லாஹ்விற்க்கு முன்னால் பணிந்து சரணடைந்து அவனை வணங்கி அவனிடத்திலே கேள்வி கேட்காமல் எந்த பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியும் என்று நினைத்துப் பாருங்கள்.
உலகத்தின் பிரச்சனையா? மறுமையின் பிரச்சனையா? உடலில் நோயின் பிரச்சனையா? பொருளாதார பிரச்சனையா? குடும்ப பிரச்சனையா? எந்த பிரச்சனையாக இருந்தாலும் அல்லாஹ்விடமிருந்து அதற்கு தீர்ப்பு வராமல் நம்மால் எந்த தீர்வை கொண்டு வர முடியும்.
சகோதரர்களே! எல்லா தீர்வும் அல்லாஹ்விடத்திலே இருக்கிறது. அவனிடத்தில் எல்லாவற்றுக்கும் உண்டான சாவியும் இருக்கிறது. அதை இப்பாதத்தின் மூலமாக பணிவின் மூலமாக பெற்றுக்கொள்ளவேண்டும்.
எப்படி அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தன்னுடைய நபிக்கு கூறினான்;
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
நபியே! உங்களுக்கு மவுத் வருகின்ற வரை அல்லாஹ்வை வணங்கிக் கொண்டே இருங்கள். இபாதத்தில் இருந்து கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 15 : 99)
இன்று இபாதத் ஏதோ எட்டிப் பார்ப்பது போல நம்முடைய நிலைமை இருக்கிறது அவ்வளவுதான். இபாதத்திற்க்குல் இறங்கினோமா மூழ்கினோமா இபாதத்திற்க்குள் அப்படியே கரைந்தோம்மா என்றால் இல்லை.நம்முடைய உடல் ஒருபக்கம்,நம்முடைய உள்ளம் ஒரு பக்கம்,நம்முடைய சிந்தனை ஒரு பக்கம்,நம்முடைய பார்வை ஒரு பக்கம்,நாவால் ஓதுவது ஒன்றை, சிந்திப்பது ஒன்றை, பார்ப்பது ஒன்றை, உள்ளம் விரும்புவது ஒன்றை, இப்படிப்பட்ட ஒரு பெரிய மனநெருக்கடியிலே அதாவது ஈமானை கவனித்து இஸ்லாமை கவனித்து எதிலுமே பண்படாத ஒரு நிலையிலே இருக்கின்றோம்.
நாம் 60வருடங்களாக 50வருடங்களாக 40, 30வருடங்களாக நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், முஸ்லிம்களாக இருக்கிறோம்என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, இபாதத்துடைய ரூஹை அடையப்பெற்றோமா? ரமலான் உடைய அந்த தக்வாவை அடையப்பெற்றோமா? இப்படி ஒவ்வொன்றையும் எடுத்துப் பாருங்கள்;
யஹ்யா இப்னு முஆத் (ரழி) சொல்கிறார்கள்;
وإن دعوتني أجبتُ
நீ என்னை எப்போது எந்தக் காரியத்துக்கு கூப்பிட்டாலும் சரி நான் உன்னுடைய அடியானாக ஓடோடி வந்து நிற்ப்பேன்.
அல்லாஹ் எனக்கு எதையுமே கொடுக்கவில்லை. ஏழையாக வைத்திருக்கிறான், நோய் நொடியில் வைத்திருக்கிறான், எல்லா பிரச்சனைகளும் இருக்கிறது, இந்த நேரத்திலே நீ என்னை அழைத்தால் நான் உடனே ஓடோடி வந்து நிற்பேன் ரப்பே!
அல்லாஹு தஆலா அய்யூப் (அலை) அவர்களை நமக்கு எடுத்துக் கூறுகிறானே! யூனூஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை எடுத்துக் கூறுகிறானே! ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, மூஸா, ஹாரூன் இப்படிஎத்தனை நபிமார்கள் வரலாறுகளை சொல்கிறானே! படித்துப் பாருங்கள். அந்த நபிமார்களின் வரலாறுகளில் நான்கு பண்புகளை மிகத் தெளிவாக பார்ப்பீர்கள்.
நான்கு பண்புகள் என்ன? நான்கு உஸுல்கள் என்ன?
1. நீ எனக்கு கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன். அதிலே நான் எந்தக் குறையும் சொல்ல மாட்டேன். அதிலே திருப்தி கொள்வேன்.
இன்று நம் வாழ்க்கையில் பரக்கத் இல்லாததற்க்கு மிகப்பெரிய காரணம் என்ன தெரியுமா? எவ்வளவு கிடைத்தாலும் சரி பத்தாது. என்ன கிடைத்தாலும் சரி இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்கும். கையில் இருப்பதை அவர்கள் பார்க்கமாட்டார்கள். கையில் இல்லாததை இன்னும் கொஞ்சம் கிடச்சிருந்தா எப்படி இருக்கும். இந்த நிலையில் எங்கிருந்து அல்லாஹ் பரக்கத் செய்வான்.
2. நீ என்னை தடுத்தால் நான் பொறுத்துக் கொள்வேன்.
3. நீ எனக்கு எதையும் கொடுக்காமல் என்னை விட்டுவிட்டால் நான் உன்னை வணங்கிக் கொண்டே இருப்பேன்.
4. நீ என்னை எப்போது எந்தக் காரியத்துக்கு கூப்பிட்டாலும் சரி நான் உன்னுடைய அடியானாக ஓடோடி வந்து நிற்ப்பேன்.
நூல் : ஹில்யதுல் அவ்லியா
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் மீது ஒரு அடியாருக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை இதுதான்
என்னுடைய ரப்பு அல்லாஹ். அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். எப்படி வேண்டுமானாலும் செய்வான். அவன் விரும்பியவர்களுக்கு அவன் கொடுப்பான். அவன் விரும்பியவர்களுக்கு அவன் தடுப்பான்.
என்னுடைய வேலை என்ன? நான் அவனுடைய 'அப்தாக' -அடிமையாக இருக்கின்றேனா? அவன் என் மீது கடமையாக்கியதை செய்தேனா? அவன் என் மீது தடுத்ததை விட்டு நான் விலகினேனா?
அல்லாஹ்வின் அடியார்களே! இன்னொரு சம்பவத்தை நாம் பார்த்து இன்ஷா அல்லாஹ் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கங்களுக்கு நாம் செல்வோம்.
பிஷ்ர் இப்னு பஷ்ஷார் அல்முஜாஷய்யி (ரஹி) அவர்கள் மிகப்பெரிய வணக்கசாலி. அவர்கள் சொல்கிறார்கள்;
நான் ஒருமுறை பைத்துல் முகத்தஸுக்கு சென்றபோது அங்கு மூன்று வணக்கசாலிகள் சுஜூதில் வணங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களில் ஒவ்வொருவரிடமும் சென்று எனக்கு உபதேசம் செய்யுமாறு கேட்டேன். அல்லாஹு அக்பர்.
(இந்த இடத்தில் பொதுவாக நான் இது போன்ற வரலாறுகளை கூறும் போது, எனக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் நினைவூட்டிக்கொள்ளக்கூடிய ஒன்று. நம்முடைய பழக்கம் என்னவென்று தெரியுமா?யாராவது ஒரு ஆலிமை பார்த்தாலோ, யாராவது ஒரு நல்ல மனிதரை பார்த்தாலோ, உடனே துஆ செய்யுங்கள் சொல்வோம். அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால், நாம் என்ன சொல்வோம் கொஞ்சம் குடும்பத்தின் பரக்கத்துக்கு துஆ செய்யுங்க. காசு பணத்துக்கு துவா செய்யுங்க. வியாபாரத்துக்கு துவா செய்யுங்க. இதுதான் நம்ம கேட்கக்கூடிய பெரும்பாலான கோரிக்கை.
இப்படி துன்யாவுக்காக நம்முடைய சஹாபாக்கள் ரசூலுல்லாஹ்விடமோ, நம்முடைய தாபியீன்கள்கள் சஹாபாக்களிடமோ கேட்டதாக நானும் இது வரை ஹதீஸ்களை தேடிக்கொண்டே இருக்கிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கிடைக்கவேயில்லை. உங்களுக்கு கிடைத்தால் கொடுங்கள். அவர்களுடைய கவலை எல்லாம் மறுமை தான். அதற்கு உண்டான தயாரிப்பு, அதற்கு உண்டான கவலைதான்)
இங்கு பாருங்கள்; இந்த சம்பவத்தில் அந்த நல்லவர்களைப் பார்த்து அவர்களில் ஒருவரைப் பார்த்து சொல்கிறார்கள்;எனக்கு நீங்கள் கொஞ்சம் உபதேசம் செய்யலாமே நான் உபதேசம் கேட்க வந்திருக்கிறேன். அதற்கு அவர்கள் சொல்வதைப் பாருங்கள்;
ألق نفسك مع القدر حيث ألقاك فهو أحرى أن يفرغ قلبك وأن يقل همك ، وإياك أن تسخط ذلك فيحل بك السخط وأنت عنه في غفلة لا تشعر به
நீ உன்னை விதியிடம் விட்டு விடு! அது உன்னை எங்கு போட்டாலும் சரி.
நீ விதியிடம் உன்னை ஒப்படைத்து விட்டால், உன்னுடைய உள்ளம் நிம்மதியாக இருக்கும்;கவலைகளை விட்டு நீங்கிவிடும்.
அல்லாஹ்வுடைய செயலிலே நீ அதிருப்திபடுவதை விட்டு உன்னை எச்சரிக்கை செய்கிறேன். பயந்து கொள்! அப்படி அதிருப்திப்பட்டால்,உன் மீது அல்லாஹ்வுடைய அதிருப்தி வந்துவிடும்.
அல்லாஹ் உன்னை அதிருப்தி கொண்டுவிட்டான் என்பதை அறியாமல் இருக்கின்ற நிலைமையில்உனக்கு மரணம் வந்துவிடும்.
அல்லாஹ் பாதுகாப்பானாக! மிக மோசமான நிலை.
இதற்கு என்ன விளக்கம் : என்ன சொல்கிறார்கள்? முதலாவது நல்லடியார், விதியிடம் உன்னை ஒப்படைத்து விடு, அப்படி ஒப்படைத்து விட்டால், உன்னுடைய கல்பு எப்போதும் சுமை இல்லாமல், கவலை இல்லாமல்இருக்கும். விதியை நீ அதிருப்திகொண்டு விடாதே!
அல்லாஹ்வுடைய அதிருப்தி உன் மீது இறங்கி விடும். நீ அலட்சியத்தில் இருக்கும் பொழுது நீ அதை உணராமல் இருக்கும்பொழுது உனக்கு மரணம் வந்துவிட்டால், அல்லாஹ் பாதுகாப்பானாக! உனது முடிவு மிக பயங்கரமாக இருக்கும்.
இரண்டாமவரிடத்தில் சென்று கேட்கிறார்கள்;எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. அவர் சொல்கிறார்;
الْتَمِسْ رِضْوَانَهُ فِي تَرْكِ مَنَاهِيهِ فَهُوَ أَوْصَلُ لَكَ إِلَى الزُّلْفَى لَدَيْهِ
அல்லாஹ் உன்மீது தடுத்த காரியங்களை விட்டு விலகுவதில் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுவாயாக!
சுபஹானல்லாஹ்! இது மிகப்பெரிய ஒன்று. அல்லாஹ் தடுத்த காரியங்களை விட்டு விலகி முற்றிலுமாக அந்தப் பாவங்களை விட்டு விலகி நின்று அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாம் தேட வேண்டும்.
இன்று நம்முடைய நிலைமை என்ன தெரியுமா? ரப்புல் ஆலமீன் சொல்வதுபோல;
خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا
கொஞ்சம் நன்மை, கொஞ்சம் பாவம் இப்படி கலந்து கலந்து செய்து கொண்டிருக்கிறார்கள். நன்மையை தீமையோடு அதுபோன்று நல்ல காரியங்களை பாவங்களைக் கொண்டு கலந்து கலந்து செய்கிறார்கள். (அல்குர்ஆன் 9:102)
ஆகவேதான் இந்த நல்லது உடைய ஈமானை இந்தப் பாவத்துடைய இருள் அழித்துவிடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! அதனுடைய அந்த ரூஹை இது கொன்றுவிடுகிறது.
சஹாபாக்கள் உடைய தக்வாவை இபாதத்தை பார்க்கிறோம். அவர்கள் எப்படி கடமையாக்கப்பட்டதை செய்தார்களோ அது போன்று அல்லாஹ் தடுத்ததையும் விட்டார்கள்.
அல்லாஹ்வை வணங்குவது என்பது தொழுகையை நிறைவேற்றுவது மட்டுமல்ல. இன்று எத்தனையோ தொழுகையை நிறைவேற்றக் கூடிய வணக்கசாலிகள் வட்டியை விட்டார்களா? மதுவை விட்டார்களா? பொய்பேசுவதை விட்டார்களா?புறம் பேசுவதை விட்டார்களா?மக்களை ஏமாற்றுவதை விட்டார்களா?வஞ்சகம் செய்வதை விட்டார்களா?உறவை முறிப்பதை விட்டார்களா?வரதட்சணை வாங்குவதை விட்டார்களா?இன்னும் எத்தனையோ பாவங்களை எண்ணிக் கொண்டே போகலாம்.
தொழுது கொண்டிருப்பார்கள்;ஆனால் இந்த பாவங்களில் ஒன்றை சேர்த்து செய்து கொண்டிருப்பார்கள். நோன்பு இந்த பாவங்களில் ஒன்றை சேர்த்து. ஹஜ் இந்த பாவங்களில் ஒன்றை சேர்த்து. இதுதான் மிகப்பெரிய முஸீபத்.
இந்த நிலையில் எப்படி அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும். வணக்க வழிபாடுகளை செய்வதால் மட்டும் அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைத்துவிடாது. வணக்க வழிபாடுகளை செய்வதோடு பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
முஃமின்களே! பரிசுத்தமான முறையிலே, கலப்பற்ற முறையிலே, நீங்கள் தவ்பா கேட்டுவிட்டு விலகுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 66 : 8)
அதைத்தான் அந்த நல்லடியார்கள் சொல்கிறார். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேட வேண்டுமா? அவன் தடுத்த பாவங்களை விட்டு விலகுவதிலே நீ தேடு. இது அல்லாஹ்விடம் உன்னை மிக மிக நெருக்கமாக கொண்டு போய் சேர்த்துவிடும்.
இப்போது புரிந்து கொள்ளுங்கள்; நமக்கு ஏன் அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைப்பதில்லை? அதை நாம் ஏன் உணர்வதில்லை? நம்முடைய உள்ளத்திலே அந்த நெருக்கத்தின் உணர்வு நமக்கு ஏன் கிடைப்பதில்லை என்று சொன்னால் (அல்லாஹ் மன்னிப்பானாக!)இபாதத் இருக்கிறது. இபாதத்தில் ஓரளவு பழகிக் கொண்டோம். கொஞ்சம் தொழுகை, கொஞ்சம் நோன்பு, கொஞ்சம் குர்ஆன், என்று இபாத்துகளை பழகிக் கொண்டோம். ஆனால் பாவத்திலே நமக்கு ஒரு பங்கு வைத்துக் கொண்டே இருக்கிறோம்.
மூன்றாமவரிடத்திலே செல்கிறார்; அவரிடத்திலே கேட்கிறார்; எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. அவர் அழுகிறார்; அழுகிறார்; அழுகிறார்; அழுதுவிட்டு சொல்கிறார்;
لَا تَبْتَغِ فِي أَمْرِكَ تَدْبِيرًا غَيْرَ تَدْبِيرِهِ فَتَهْلِكَ فِيمَنْ هَلَكَ وَتَضِلَّ فِيمَنْ ضَلَّ
உன்னுடைய காரியத்தில் அல்லாஹ்வுடைய திட்டத்திற்கு மேலாக அல்லாஹ்வுடைய திட்டத்தை தவிர்த்து விட்டு இன்னொரு திட்டத்தை இன்னொரு ஒரு ஏற்பாட்டை நீ தேடாதே!
அப்படி தேடினால் அழிந்தவர்களில் நீயும் அழிந்துவிடுவாய். வழி கெட்டவர்களில் நீயும் வழிகெட்டு விடுவாய்.
நூல் : ஹில்யதுல் அவ்லியா
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த இடத்தில் நாம் நம்முடைய ஈமான் உடைய நிலையை புரிய வேண்டும். நம்முடைய யகீன் அல்லாஹ்வுடைய குத்ரத்தின் மீது, அல்லாஹ்வுடைய வல்லமையின் மீது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய ரூபூபியத்தின் மீது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய செயலின் மீது அது நமக்கு மிக ஆழமாக இருக்க வேண்டும். அல்லாஹ் ரப்பில் ஆலமீனை நாம் முற்றிலுமாக பொருந்திக் கொள்ள வேண்டும். எப்படி நாம் அல்லாஹ்வை பொருந்திக் கொள்ளாமல் இருக்க முடியும் என்று சொல்லுங்கள். யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹு தஆலா உடைய ஸிஃபத்துக்களிலே ஒன்று அர்ரஹ்மான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் மீது கருணை காட்டுவதை விட ரப்புல் ஆலமீன் தன்னுடைய அடியார்கள் மீது கருணை உள்ளவன். ரஹ்மத்தை நூறாக ஆக்கி ஒன்றைத்தான் இந்த உலகத்தை படைத்த நாளிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் கியாமத் நாள் வரை அல்லாஹ் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அந்த ஒன்றை கொண்டு தான் உலக ஜீவராசிகள் எல்லாம் கருணை காட்டி கொண்டிருக்கிறது என்றால் தன்னிடத்திலே 99ஐ வைத்திருக்கக் கூடிய அந்த ரஹ்மான் எவ்வளவு பெரிய கருணையாளனாக இருப்பான்?! (1)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6000.
அவனுடைய செயலிலே நாம் குறை சொல்லலாமா?அவனுடைய திட்டத்திலே நாம் குறைகாணலாமா?அவனுடைய சோதனையிலே நாம் குறை காணலாமா?சிந்தித்துப் பாருங்கள்.
அடுத்து அல்லாஹு ரப்புல் ஆலமீன் அல்அழீம் -அனைத்தையும் நன்கறிந்தவன். தன்னுடைய அடியார்களுக்கு நல்லது கெட்டது எது என்பதை அறிந்தவன்.
நாம் யார்? நம்முடைய காலுக்கு கீழே உள்ளதை காலை தூக்காமல் நம்மால் சொல்ல முடியுமா? நம்முடைய முதுகுக்கு பின்னால் உள்ளதைதிரும்பிப் பார்க்காமல் நம்மால் சொல்ல முடியுமா? அந்த அளவுக்கு பெரிய ஜாஹில் நாம்.
அப்படி இருக்கும் பொழுது, என்னுடைய இறைவன் அறிந்தவன். அவன் ஒரு செயலை செய்தால், இல்மோடு செய்வான். அதனுடைய நன்மை அவனுக்கு தெரியும் என்று நாம் அல்லாஹ்வை பொருந்திக் கொள்ள வேண்டும்.
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ
அல்லாஹு தஆலா மிகமிக மென்மையானவன். மிக நுணுக்கமானவன். (அல்குர்ஆன் 42:19)
அவன் சோதனைகளை, நோய்களை, வறுமையை, பசி பட்டினியை, பஞ்சத்தை கொடுக்கிறான் என்றால்அவன் நம்மை சுத்தப்படுத்துகின்றான்.
அல்லாஹுத்தஆலா நம்மை பரிசுத்தப்படுத்த நினைக்கின்றான். எனவே, அல்லாஹ்வை நாம் எப்படி பொருந்திக் கொள்ளாமல் இருக்க முடியும். அல்லாஹ்வுடைய செயலிலே நாம் எப்படி ஆட்சேபனை செய்யமுடியும்.
அல்லாஹு தஆலா "அல்வதூத்" -மிக பாசக்காரன். ரப்புல் ஆலமீன் அருட்கொடைகளை கொடுத்து கொடுத்து நாமும் அவன் மீது பாசம் வைக்க வேண்டும். அன்பு வைக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அப்படிப்பட்ட இறைவன் நமக்கு அநியாயம் செய்வான் என்று நாம் எண்ணி விடலாமா? அவனுடைய செயல்களிலே நாம் குறை காணலாமா? என்று யோசித்துப் பாருங்கள். சகோதரர்களே!
அல்லாஹு சுப்ஹானஹு வதலா, அவனுடைய அந்த ருபூபியத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்;அல்லாஹ்வுடைய அந்த ரூபூபியத்தை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்;அல்லாஹ்வுடைய இஸ்லாமை நாம் நம்முடைய மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்;முஹம்மது (ஸல்) அவர்களை நம்முடைய ரசூலாக பொருந்தி கொள்ள வேண்டும்.
அதுபோன்று அல்லாஹு தஆலா நம்மை இந்த உலகத்தில் எந்த நிலையில் வைத்திருக்கிறானோ நம்முடைய உருவம் இப்படி அமைந்து விட்டதே, என்னுடைய குரல் இப்படி இருக்கிறதே, என்னுடைய வாழ்க்கை இப்படி இருக்கிறதே, என்னுடைய பொருளாதாரம் இப்படி இருக்கிறதே, நான் இந்த ஊரில் பிறந்து விட்டேனே, எனது வீடு இப்படி இருக்கிறதே, எனது வருமானம் இப்படி இருக்கிறதே, எந்த ஒன்றாக இருந்தாலும் சரி. எனக்கு அல்லாஹ் விதியில் எதை எழுதிவிட்டானோ, அதை நான் பொருந்திக்கொண்டேன். அது எதுவாக இருந்தாலும் சரி.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் மூஸா (அலை) அவர்களுக்கு சொல்வதைப் பாருங்கள் ;
فَخُذْ مَا آتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ
மூஸாவே! உமக்கு நாம் கொடுத்த மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பீராக!நன்றி உள்ளவர்களில் நீ இருப்பீராக! (அல்குர்ஆன் 7 : 144)
மூஸா (அலை) அவர்களிடத்தில் என்ன துன்யா இருந்தது? நம்மிடத்தில் இருந்த வீடு இருந்ததா, நம்மிடத்தில் இருந்த உடைகள் இருந்ததா, மூஸா (அலை) அந்த மிஸ்ரிலிருந்து மதியனுக்கு ஓடினார்களே! காலில் செருப்பில்லாமல் ஓடினார்கள். ஒரு சில ஆடுகளை வைத்துக்கொண்டு மனைவியை வைத்துக்கொண்டு பரதேசியாக பல நாட்கள் நடந்து வருகிறார்கள். அவர்களிடத்திலே அவர் உடுத்திய ஆடை அவர்களிடத்திலே இருந்த அசா அவ்வளவுதான் இருந்தது.இதுதான் அவர்களுடைய மொத்த வாழ்க்கையே.
கண்ணியத்திற்குரியவர்களே! ஒருவர் இன்று இந்த உலகத்தில் அனுபவிக்கக்கூடிய செல்வத்திற்கு அல்லாஹ் கேள்வி கேட்டால் என்ன சொல்வோம். யோசித்துப் பாருங்கள். பசி இல்லாமல் அல்லாஹ் வைத்திருக்கிறான். நிறைவான ஆடையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
கொஞ்சம் நீங்கள் சஹாபாக்களுடைய வாழ்க்கையைப் படித்து யோசித்துப் பாருங்கள். உஹது போரிலே ஷஹீதானவர்களை பற்றி அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) சொல்கிறார்கள்; ஒரு நாளைக்கு 200திர்ஹமுக்கு ஆடை அணிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) பற்றி அப்துர் ரஹ்மான் (ரழி) சொல்கிறார்கள்; முஸ்அப் ஷஹீத் ஆனார்; முஸ்அப் அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டார். அவரை நாங்கள் அடக்கம் செய்வதற்கு அவர் மீது கஃபன் போத்தினால் அவருடைய தலையை மறைத்தால் கால் தெரிந்தது.அவருடைய காலை மறைத்தால் தலை தெரிந்தது.(2)
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1275.
ரசூலுல்லாஹ்விடத்தில் நாங்கள் முறையிட்டோம். எப்படி இருக்கும் நபி (ஸல்) அவர்களுடைய மனது! தன்னுடைய கண் பார்வைக்கு முன்னால் ஒரு செல்வ சீமாட்டியுடைய மகனாக, மக்காவில் ஒரு பெரிய செல்வந்தராக, ஒரு நாளைக்கு 200திர்ஹம் மதிப்புள்ள அந்த ஆடையை அவர் போடக்கூடிய அந்த நறுமணம் அத்தர் அவ்வளவு உயர்ந்தது. அப்படிப்பட்ட ஒரு செல்வந்தர் அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய தீனுக்காக, தன்னை அப்படியே அர்ப்பணித்து அவருடைய நிலைமை ஒரு பரிதேசியாக, ஃபகீராக மாறியது. மதீனாவிலே உஹது போரிலே கொல்லப்படுகிறார். சுபஹானல்லாஹ்!
அவருடைய கஃபனுக்கு ஆடை இல்லையே! யோசித்துப் பாருங்கள். அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான் ;
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
அல்லாஹுத்தஆலா சொல்கிறான்;நாம் ஒவ்வொன்றையும் ஒரு ஏற்பாட்டோடு, ஒரு திட்டத்தோடு, ஒரு அமைப்போடு, ஒரு அளவோடு, படைத்திருக்கிறோம். அந்தத் திட்டத்தின்படி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் செய்து கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 54 : 49)
وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا
அல்லாஹ்வுடைய ஒவ்வொரு காரியமும் அது எழுதப்பட்ட விதிக்கப்பட்ட ஒரு விதியாக இருக்கிறது. அதன்படி நடந்து கொண்டே இருக்கிறது. (அல்குர்ஆன்33 : 38)
நோய் பரவுகிறதா? அதுவும் அல்லாஹ்வுடைய திட்டத்தின்படி பரவுகிறது. யார் இந்த நோயில் மரணிக்கிறார்களோ அல்லாஹ்வுடைய விதியின் படி மரணிக்கிறார்கள். அவர்கள் முஃமினாக முஸ்லிமாக சாலிஹாக இருந்தால் அவர்களுக்கு இந்த மரணம் ஒரு ஷஹாதத்தாக இருக்கும். பாவிகளுக்கு இது தண்டனையாக இருக்கும். பாவம் செய்யக்கூடிய முஸ்லிம்களுக்கு இது அவர்களை பரிசுத்தப்படுத்தக்கூடிய ஒரு குற்றப் பரிகாரமாக இருக்கும்.
அல்லாஹ்வை நிராகரித்த மக்களுக்கு அல்லாஹ்வுடைய தண்டனையாக இருக்கும். பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். நல்லவர்களையும் அல்லாஹ் சோதிப்பான். பாவிகளையும் அல்லாஹ் சோதிப்பான். ரப்புல் ஆலமீன் இந்த உலகத்திலே நல்லவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டால், பிறகு சொர்க்கம் எதற்கு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.
இன்று இதுதான் பெரிய சந்தேகமாக கேள்வியாக மக்களுக்கு இருக்கிறது. சரி காஃபிர்களை அல்லாஹ் தண்டிக்கட்டும் பாவிகளை அல்லாஹ் தண்டிக்கட்டும். நான் தொழுகிறேனே!நோன்பு வைக்கிறேனே எனக்கு ஏன் பிரச்சனை என்பதாக.
சகோதரர்களே! அப்படியிருந்தால் உலகத்தில் எல்லோரும் ஒரே நாளில் முஸ்லிம் ஆகிவிடுவார்கள். தாவா செய்ய தேவையில்லை. எல்லோரும் இபாதத் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்களுக்கு கோரோனா வரவில்லை நாம் எல்லோரும் பள்ளிக்கு போகலாம். சுபஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்.
சகோதரர்களே! இது ஈமான் அல்ல. இது பார்த்து ஈமான் கொள்வது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஏன் அய்யூப் (அலை) அவர்களை நோயிலே போட்டு புரட்டி எடுக்கவில்லையா?
18ஆண்டுகள் நோயிலே புரட்டிப் போட்டான் அல்லாஹு தஆலா ஒரு வார்த்தை அல்லாஹ்வின் மீது அதிருப்தியாக சொல்லி இருப்பார்களா, ஒரு வார்த்தை, சின்ன ஒரு இஷாரா சொல்லி இருப்பார்களா?
நூல் : இப்னு கசீர்
சகோதரர்களே! இந்த இடத்திலே இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்களை நினைவு கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய வாழ்நாளில் ரசூலுல்லாஹ்விடத்தில் (ஸல்) இவர்கள் தனக்கு இருந்த அந்த மூல நோயைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.
யா ரசூலல்லாஹ்! இந்த மூல நோயால் நான் கஷ்டப்படுகிறேன். நான் எப்படி தொழ வேண்டுமென்று. ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்; உன்னால் நின்று தொழ முடியுமென்றால் நின்று தொழு. இல்லை என்றால் உட்கார்ந்து தொழு. இல்லை என்றால் படுத்துத்தொழு என்று.(3)
நூல் : புகாரி, எண் : 1117.
30ஆண்டுகள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) படுத்த படுக்கையில் இருந்தார்கள். 30ஆண்டுகள் மூல நோயால் அவதிப்பட்டார்கள். படுத்த படுக்கையில் இருந்தார்கள். சந்திக்க வருபவர்கள் எல்லாம் சந்தித்து விட்டு செல்லும் பொழுது அதிலே நெருக்கமான ஒருவர் இப்படி நீங்கள் கஷ்டப்படுகிறீர்களே! என்று அவர் சொல்கிறார்; (அல்லாஹு அக்பர். அதுதான் சகோதரர்களே! அந்த சஹாபாக்களுடைய ஈமான் அந்த சஹாபி சொல்கிறார்) எனது நண்பரே! அப்படி சொல்லி விடாதே! நான் இருக்கின்ற நிலைமையில் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டிருக்கிறேன். என்னை சுற்றி மலக்குகள் உடைய சலாமை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சுபஹானல்லாஹ்.
சகோதரர்களே! சோதனையில் பண்படாமல் அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்குமென்று எண்ணிக் கொண்டிருக்கிறோமா!
சஅத் இப்னு அபி வக்காஸ் (ரழி) அஷரத்துல் முபஷ்ஷராவிலே ஒருவர். மிகப்பெரிய ஒரு சஹாபி. ரசூலுல்லாஹ் (ஸல்) உடைய விசேஷமான துஆ அவர்களுக்கு உண்டு. சஅதே!நீ கேட்கக்கூடிய துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பான் என்று. அவர்கள் எது கேட்டாலும் சரி சூரியன் விடிவதைப் போல அந்த துஆ கபூல் ஆகும்.
மக்களெல்லாம் அவர்களிடத்தில் தங்களுடைய ஹலாலான ஹாஜத்களுக்கு துஆ கேட்டு வருவார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பார்கள். அந்தத் தேவை நிறைவேறிக் கொண்டே போகும்.
அவருடைய மாணவர் ஒருவர் வருகிறார், உஸ்தாத் அவர்களே! உங்களுடைய தள்ளாடக்கூடிய வயோதிகத்தில் உங்களுடைய பார்வை குறைந்து விட்டதே, பார்வை மங்கிவிட்டதே, நீங்கள் உங்களுக்காக அல்லாஹ்விடத்திலே துஆ செய்யலாம் அல்லவா?மக்களுக்காக நீங்கள் துஆ செய்கிறீர்கள். அவர்கள் சுகம் பெறுகிறார்கள். அவர்களுடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி கொடுக்கிறான்; நீங்கள் உங்களது பார்வைக்காக துஆ செய்தால் என்ன?
அல்லாஹு அக்பர்!அவர்கள் சொல்லியதைப் பாருங்கள்; அல்லாஹ் எனக்கு விதித்துவிட்டதை பொருந்திக் கொண்டேன். சுப்ஹானல்லாஹ்! இதுதான் ஈமான் .
இந்த நேரத்தில் அந்த ஜின்னுடைய தாக்கத்தால் வலிப்பு வரக்கூடிய மயக்கம் வரக்கூடிய அந்தப் பெண்ணுடைய சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். யா ரசூலல்லாஹ்!(ஸல்) எனக்கு வலிப்பு வருகிறது; ஜின்னுடைய அந்த தாக்கம் ஏற்படுகிறது; என்னை அறியாமல் நான் என்னென்னமோ செய்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எனக்கு நீங்கள் துஆ செய்யுங்கள்.
நபி (ஸல்) சொன்னார்கள்; முஸ்லிமான முஃமினான பெண்ணே! துஆ செய்கிறேன்; அல்லாஹ் உன்னை குணப்படுத்துவான். நீ பொறுமையாக இருந்து பொருந்திக் கொண்டால் உனக்கு சொர்க்கம் என்று. ஒரே வார்த்தை சொன்னார்கள்; யாரசூலல்லாஹ் நான் பொறுமையாக இருக்கிறேன்; பொருந்திக் கொண்டேன். எனக்கு அல்லாஹ்விடத்திலே துஆ செய்யுங்கள். அப்படி வரும்பொழுது என்னுடைய ஆடை களையக்கூடாது என்று. நபியும் அப்படி துஆ செய்கிறார்கள், அவர்களுடைய ஆடை கலைவதில்லை.(4)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5652.
சகோதரர்களே! சகோதரிகளே! இது ஈமான். இது அல்லாஹ் அவன் நாடியதை செய்வான் என்று குர்ஆனிலே நாம் படித்ததை நம்பிக்கை கொண்டதற்க்குண்டான அடையாளம் இது.
நம்மைப் போன்றா, ஒவ்வொரு நொடியிலும் அல்லாஹ்வின் மீது குறைகளை அப்படியே அள்ளி வீசிக்கொண்டே இருப்பது. ரப்பு என்று அவனை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்று புரியவில்லை.
சிறந்த எஜமானன் வாயால் சொல்வது மட்டுமா? எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது. என்ன ஒரு சூழ்நிலையாக இருந்தாலும், எந்த ஒரு நிலையாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுடைய அந்த விதியை பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய அந்த திட்டத்தை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் எதை நாடுகின்றானோ அதை அவன் செய்து முடிப்பான். அவனுடைய அந்த செயலிலே நாம் எந்த விதத்திலும் குறை கண்டு விடக்கூடாது.
உபாதா இப்னு சாமித் (ரழி) இவர்களும் ரசூலுல்லாஹ்விடத்திலே மினாவிலே பையத் செய்துகொடுத்த உக்கபா எப்படி பத்ர் சஹாபாக்கள் உஹது சஹாபாக்கள் அதுபோன்று பையத்து ரிழ்வானுடைய சஹாபாக்களுக்கு அந்தஸ்தோ அதுபோன்று உக்கபா மினா உடைய ஒப்பந்தத்திலே கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது.
அந்த சஹாபி மரணத்தருவாயிலே இருக்கிறார்கள். அவர்களுடைய மகனார் தன்னுடைய தந்தைக்கு அருகிலே நின்றுகொண்டு எனது தந்தையே!
எனக்கு நீங்கள் ஒரு வசீயத்து (மரண உபதேசம்) செய்து தாருங்கள். எனக்கு நீங்கள் மிகவும் வலியுறுத்தி ஒரு விஷயத்தை புரிய வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.
அப்போது உபாதா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்; என்னை உட்கார வை. உட்காரவைக்கிறார் . சொல்கிறார்;
يَا بُنَيَّ إِنَّكَ لَنْ تَطْعَمَ طَعْمَ الْإِيمَانِ، وَلَنْ تَبْلُغْ حَقَّ حَقِيقَةِ الْعِلْمِ بِاللَّهِ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ
மகனே!ஈமானுடைய ருசி உனக்கு கிடைக்காது,அல்லாஹ்வுடைய அறிவு உனக்கு கிடைக்காது,அல்லாஹ்வுடைய அறிவின் யதார்த்தம் உண்மை நிலையை நீ அடைய முடியாது,எதுவரை விதியில் உள்ள நன்மையையும் தீமையையும் நீ அறியமாட்டாயோ! எதுவரை விதியிலுள்ள நன்மையையும் தீமையையும் நீ நம்பிக்கை கொள்ள மாட்டாயோ!
மகனார் கேட்கிறார்;தந்தையே! நான் எப்படி விதியில் உள்ளதை நன்மையா தீமையா என்று நான் எப்படி தெரிந்துக்கொள்வது. தந்தை சொல்கிறார்;
تَعْلَمُ أَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، وَمَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ
நீ அறிந்துகொள்!எது உனக்கு கிடைக்கலையோ அது உனக்கு கிடைக்கக் கூடியதாக இல்லை. அதனால்தான் அது உனக்கு தவறிப் போனது. அதை நீ புரிந்துக்கொள்.
எது உனக்கு கிடைக்க வேண்டுமென்று விதியிலே இருக்குதோ அது உனக்கு கிடைக்காமல் போகாது. அதனால் பொறுமையாக இரு.
என்னுடைய மகனே அல்லாஹ்வுடைய தூதர் கூற நான் செவியுற்றேன்;
" إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ، ثُمَّ قَالَ: اكْتُبْ فَجَرَى فِي تِلْكَ السَّاعَةِ بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "
அல்லாஹ் முதலாவதாக படைத்தது கலம் –பேனா. பிறகு அந்த கலமுக்கு கூறினான் ;
நீ எழுது என்று!
மறுமை நாள் வரை என்ன நிகழ வேண்டுமோ அவை அனைத்தையும் அந்த விதி எழுதி விட்டது.
يَا بُنَيَّ إِنْ مِتَّ وَلَسْتَ عَلَى ذَلِكَ دَخَلْتَ النَّارَ
இந்த ஒரு ஈமானுடைய நிலை அல்லாத நிலையில் நீ இறந்து விட்டால் நீ நரகத்தில் தான் நுழைவாய். அல்லாஹ் பாதுகாப்பானாக!
நூல் : முஸ்னது அஹ்மது,எண் : 22705.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இதுதான் அல்லாஹ்வின் செயலின் மீது நமக்கு இருக்க வேண்டிய நம்பிக்கை. அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ஒவ்வொரு காலத்திலும் அவனுடைய வல்லமையை காட்டிக் கொண்டே இருப்பான்.
சூரியன் அல்லாஹ்வுடைய வல்லமை. அல்லாஹுத்தஆலா சந்திரனை படைத்தான். அது அல்லாஹ்வுடைய வல்லமை. காற்று அல்லாஹ்வுடைய வல்லமை. குளிர் அல்லாஹ்வுடைய வல்லமை. வெயில் அல்லாஹ்வுடைய வல்லமை. சுகமும் அல்லாஹ்வுடைய வல்லமை. நோயும் அல்லாஹ்வுடைய வல்லமை.
செல்வமும் அல்லாஹ்வுடைய குத்ரத்திலே ஒன்று. வறுமையும் அல்லாஹ்வுடைய குத்ரத்திலே ஒன்று. அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்போது எதை நிகழ்த்த வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறானோ அந்தத் திட்டத்தின் அடிப்படையிலே நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.
அடியார்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வுடைய கடமைகளை நிறைவேற்றினோமா சோதனைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும் அல்லாஹ்வுடைய செயல்கள் அது மாறும் பொழுது நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்று இப்படியும் சிலர் பேசுகிறார்கள்;எப்படி ரொம்ப வணக்கசாலி மாறி காட்டுகிறார்கள்;என்னை பொறுத்த வரைக்கும் நல்லவங்களா இருந்தா குறை சொல்றேன்னு எண்ணிக்கொள்ள வேண்டாம் அல்லது இது தப்பா இருந்துச்சுன்னா விட்ருங்க.
எப்படின்னா பள்ளிவாசல்ல தொழுக முடியலன்னு ரொம்ப கவலையா இருக்கு. அப்படின்னு சொல்றாங்க. இல்லை இப்படியும் சொல்றாங்க.
சகோதரர்களே! அல்லாஹு தஆலா சோதனையை கொடுத்திருக்கிறான்.இந்த சோதனையிலே எங்கு அல்லாஹ் எப்படி வணங்கச் சொன்னானோ அந்த நிலையிலேயே வணங்கி அல்லாஹ்வுக்காக வணங்க கூடியவர்களாக, அந்த நிலையிலே வணங்கி நாம் திருப்திப்பட வேண்டும்.
அல்லாஹ்விடத்திலே கேட்கலாம்;யா அல்லாஹ்! இந்த நிலையை மாற்றி உன்னுடைய மஸ்ஜிதிற்கு வரக்கூடிய பாக்கியத்தை கொடு என்று.
ஆனால், எப்படிப் பேசுகிறார்கள் என்றால் ஏதோ அல்லாஹ்வுக்கு நம்ம பள்ளிவாசலுக்கு வராதது எல்லாம் பிடிக்காத மாதிரி தடுத்திட்ட மாதிரியும்,அல்லாஹ் பள்ளிவாசலை பூட்டி போட்ட மாதிரியும்.அஸ்தஃபிருல்லாஹல் அழீம்.
சகோதரர்களே! அல்லாஹு தஆலா உலகத்தின் நிலைமைகளை மாற்றிக் கொண்டே இருப்பான் எப்படி வேண்டுமோ அவன் மாற்றுவான்.கியாமத் நாள் உடைய இறுதியிலே குர்ஆன் இருக்கும். ஆனால், அந்த குர்ஆனிலே குர்ஆனுடைய எழுத்துக்கள் இருக்காது. கஃபத்துல்லாஹ் இடிக்கப்பட்டுவிடும், மஸ்ஜிதுந்நபவி வீணாகிவிடும்.பயப்பட வேண்டிய நிலையிலே இருக்கிறோம்.
அல்லாஹ்வை உண்மையிலேயே வணங்கக்கூடியவர்கள் எந்த நிலையிலும் வணங்குவார்கள், மஸ்ஜிதிலும் வணங்குவார்கள்;வீட்டிலும் வணங்குவார்கள். அல்லாஹ்வை புகழக்கூடியவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று நாம் சொல்கிறோம்.ரப்பில் ஆலமீனுடைய அந்த வார்த்தை எதை சொல்கிறது?அவன் படைத்தவன்;பரிபாலிப்பவன்; இயக்கக் கூடியவன்; திட்டமிடக்கூடியவன்.
ஒருவன் நோயை குறை கூறுவாரேயானால் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள் ;
لَا تَسُبِّي الْحُمَّى
காய்ச்சலை,நோயை ஏசாதீர்கள் திட்டாதீர்கள் என்று. (4)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2575.
ஒவ்வொன்றையும் இன்று நாம் ஏசிக் கொண்டிருக்கிறோம். வெயிலை ஏசுகிறோம்;குளிரை ஏசுகிறோம்; காலத்தை ஏசுகிறோம்.
அல்லாஹ் கூறினான்;
أَنَا الدَّهْرُ
மனிதன் காலத்தை ஏசுகிறான்.நான்தான் காலத்தை இயக்க கூடியவன் என்று.(5)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2246.
அன்பிற்குரிய சகோதரர்களே! இது நமக்கு மிகப்பெரிய ஈமானுடைய ஒரு பாடம்;ஒரு படிப்பினை.இந்த சோதனை சாதாரணமான சோதனை அல்ல, நல்லவர்கள் யார்? உண்மையாளர்கள் யார்? உறுதியானவர்கள் யார்? நிலையானவர்கள் யார்? அல்லாஹ்வுக்கு விருப்பமானவர்கள் யார்? எல்லா நிலையிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள கூடிய சோதனை.
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 9 : 112)
சகோதரர்களே! ஆகவே, பொறுமை காப்போமாக! அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்குவோமாக!அல்லாஹ்விற்கு முன்னால் முற்றிலுமாக சரணடைந்து ரப்புக்கு முன்னால் பணிந்து, தவ்பா செய்து, இஸ்திக்ஃபார் செய்து,
யா அல்லாஹ்! எங்களுடைய நிலையை நீ ஒரு அழகிய நிலையாக மாற்றி தருவாயாக! உன்னுடைய ஈமானோடு இஹ்லாஸோடு தக்வாவோடு வாழக்கூடிய நல்ல சூழ்நிலையை எங்களுக்கு மாற்றி தருவாயாக! என்று அல்லாஹ்விடத்திலே துஆ செய்வோமாக!
அல்லாஹ்வை குறை சொல்வதை விட்டும், அவனுடைய விதியை குறை சொல்வதை விட்டும், அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو اليَمَانِ الحَكَمُ بْنُ نَافِعٍ البَهْرَانِيُّ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلْقُ، حَتَّى تَرْفَعَ الفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ»(صحيح البخاري 6000 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ إِبْرَاهِيمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أُتِيَ بِطَعَامٍ وَكَانَ صَائِمًا، فَقَالَ: " قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَهُوَ خَيْرٌ مِنِّي، كُفِّنَ فِي بُرْدَةٍ، إِنْ غُطِّيَ رَأْسُهُ، بَدَتْ رِجْلاَهُ، وَإِنْ غُطِّيَ رِجْلاَهُ بَدَا رَأْسُهُ - وَأُرَاهُ قَالَ: وَقُتِلَ حَمْزَةُ وَهُوَ خَيْرٌ مِنِّي - ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ - أَوْ قَالَ: أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا - وَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا، ثُمَّ جَعَلَ يَبْكِي حَتَّى تَرَكَ الطَّعَامَ"(صحيح البخاري 1275 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ: حَدَّثَنِي الحُسَيْنُ المُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»)صحيح البخاري (1117 -
குறிப்பு 4)
حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ» (صحيح مسلم (2575
குறிப்பு 5)
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: " يُؤْذِينِي ابْنُ آدَمَ يَقُولُ: يَا خَيْبَةَ الدَّهْرِ فَلَا يَقُولَنَّ أَحَدُكُمْ: يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنِّي أَنَا الدَّهْرُ، أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ، فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا"( صحيح مسلم(2246
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/