துஆ மனதிற்கு வலிமை தருகிறது | Tamil Bayan - 1034
துஆ மனதிற்கு வலிமை தருகிறது
ஜுமுஆ குத்பா தலைப்பு : துஆ மனதிற்கு வலிமை தருகிறது
வரிசை : 1034
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-01-2026 | 20-07-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தையும் தக்வாவையும் நினைவூட்டியவனாக, உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நமது பெற்றோர்களுடைய, குடும்பத்தாருடைய, முஃமீன்கள் அனைவருடைய பாவங்களையும் அல்லாஹு தஆலா மன்னித்து அருள்வானாக!
அல்லாஹ்வின் மீது நமக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது நமக்கு அன்பை அதிகப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது நமக்கு பயத்தை அதிகப்படுத்துவானாக! அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நமக்கு அதிகப்படுத்துவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு அடியான் அல்லாஹ்வை நெருங்குவது, அல்லாஹ்வை நேசிப்பது, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது என்றால் என்ன?
“அல்லாஹ் என்று ஓர் இறைவன் இருக்கிறான், அல்லாஹ் என்று ஓர் ஆண்டவன் இருக்கிறான், ஒரு ரப் இருக்கின்றான்” என்று அறிவது மட்டும் போதுமானதா? அது நம்பிக்கையாக ஆகிவிடுமா என்றால் ஆகாது.
இந்த அறிவு இப்லீஸிடத்திலும் இருந்தது. இந்த அறிவு ஃபிர்அவுனிடத்திலும் இருந்தது.
அல்லாஹ்வை ரப்பாக அறிவது மட்டும் போதாது. அந்த அறிவோடு சேர்ந்து அவன் மீது உறுதியான ஈமான், யகீன் நமக்கு தேவை. அவனுடைய உயர்ந்த தன்மைகளின் மீது நம்பிக்கை தேவை. அல்லாஹ்வை அவனுடைய சிஃபத்துகளோடும், அவனுடைய மகத்தான பண்புகளோடும் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வை நேசித்து நம்ப வேண்டும். அல்லாஹ்வை பயந்து நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? அது அல்லாஹ்வுடைய நேசத்தோடு அல்லாஹ்வுடைய பயத்தோடு கலந்திருக்க வேண்டும். அது அல்லாஹ்வுடைய உயர்ந்த தன்மைகளின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையோடு கலந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஈமானைத்தான் அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் நமக்கு போதிக்கின்றான். அந்த ஈமானின் பக்கம் தான் நபிமார்கள் தங்களுடைய உம்மத்துகளை அழைத்தார்கள்.
இதை நீங்கள் பல வசனங்களில் பார்க்கலாம்.
وَيَاقَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ
‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! பிறகு, (எல்லா பாவங்களை விட்டும்) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள்! மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். இன்னும், உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், (உபதேசங்களை புறக்கணித்த) குற்றவாளிகளாக விலகி சென்று விடாதீர்கள்.” (அல்குர்ஆன் 11:52)
என் மக்களே! அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேடுங்கள். அவன் மிகப்பெரிய மன்னிப்பாளானாக இருக்கின்றான். உங்களது பாவங்களை மன்னிப்பான் என்று ஈமானின் பக்கம் அழைத்த நூஹ் நபி அங்கே சொன்னார்கள்.
அல்லாஹ் என்று சொல்லும் பொழுது, இன்று நமக்கும், அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கக்கூடிய ஈமான் -நம்பிக்கை, யகீன் அது இத்தகைய ஒரு தன்மைகளோடு சேர்ந்து இருக்கிறதா? இந்த உணர்வுகளோடு ஒன்றியதாக இருக்கிறதா?
اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ
அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூரப்பட்டால், அல்லாஹ்வை பற்றி பேசப்பட்டால், அவர்களது உள்ளங்கள் நடுங்கும். (அல்குர்ஆன் 8:2)
ْوَجِل என்று சொன்னால் பயந்து, அன்பால், பாசத்தால், நேசத்தால், ஒருவிதமான வர்ணிக்க முடியாத மரியாதையால், சொல்ல முடியாத கண்ணியத்தால் உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஒரு அச்ச உணர்வு. ஒரு பக்கம் அச்சம் இருக்கும். ஒரு பக்கம் அன்பு இருக்கும். ஒரு பக்கம் ஆதரவு இருக்கும். இன்னொரு பக்கம் பயம் இருக்கும். அப்பேர்ப்பட்ட ஒரு விதமான ஈமானிய உறவு அது.
وَجِلَتْ قُلُوْبُهُمْ
முஃமின்கள் யார்? அல்லாஹ்வை பற்றி அவர்களுக்கு முன்னால் பேசப்படும் பொழுது அவர்களது உள்ளத்திலே ஈமானிய உணர்வுகள் வெளிப்படும் என்று அல்லாஹ் சொல்கின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நமக்கு தொழுகையை கொடுத்தான். அல்லாஹ்விடத்தில் பேசுவதற்காக கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான இபாதத் தொழுகை.
إنَّ أحَدَكُمْ إذَا قَامَ في صَلَاتِهِ فإنَّه يُنَاجِي رَبَّهُ
அடியான் தொழுகைக்கு நின்றால் அவனுடைய ரப்பிடத்திலே அவன் இரகசியம் பேசுகிறான்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405.
அந்த உணர்வில்லாத தொழுகை அது தொழுகையே இல்லை. அல்லாஹு தஆலா ஹதீஸ் குத்ஸியிலே சொல்கிறான்.
அல்லாஹ் சொல்கின்றான்;
{الْحَمْدُ لِلَّهِ رَبِّ العالَمِينَ}
என்று சொன்னவுடன் அல்லாஹ் சொல்கிறான்; என் அடியான் என்னை புகழ்கிறானே!
{الرَّحْمَنِ الرَّحِيمِ}
என்று சொல்லும் பொழுது, என் அடியான் என்னை போற்றுகின்றானே!
{مالِكِ يَومِ الدِّينِ}
என்று சொல்லும் பொழுது, என் அடியான் என்னை மகிமைப்படுத்தி விட்டான். கண்ணியப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் சொல்கின்றான்.
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
என்று சொல்லும் பொழுது, இது எனக்கும் உனக்கும் இடையில் உள்ள ஒரு ஒப்பந்தம். பிறகு
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
என்று சொல்லும் பொழுது, என் அடியான் கேட்டது அவனுக்கு கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 395.
அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகைய மகத்தான ஒரு வணக்கம் தொழுகை. தொழுகை என்பது அதனுடைய தொடக்கத்திலிருந்து இறுதிவரை துஆவும் திக்ரும் கலந்த ஒரு அற்புதமான ஒரு வணக்க வழிபாடு. தொழுகை என்பது திக்ரும் துஆவும் கலந்த ஒரு அற்புதமான வழிபாடு.
ஆனால், அந்தோ ஒரு பரிதாபம்! இந்த இரண்டில் இருந்தும் நமக்கு எந்த பங்கும் இல்லை. நம்முடைய தொழுகையில் இந்த இரண்டில் இருந்தும் நமக்கு எந்தப் பங்கும் இல்லை.
அல்லாஹ்வை நினைக்காமலேயே தொழுது விடுகிறோம். நாவால் மட்டும் நினைக்கிறோம். எப்படி நினைக்கிறோம்? நாவால் மட்டும் உச்சரிக்கிறோம். உள்ளம் அல்லாஹ்வை நினைப்பதில்லை. உள்ளம் வேறு யாரையோ, வேறு எதையோ, எதை அல்லாஹ் குப்பை என்று சொன்னானோ துன்யா, எதை ஒரு செத்த ஆட்டுக்கு சமம் என்ற அல்லாஹ்வுடைய தூதர் வர்ணித்தார்களோ, எந்த துன்யா மறுமையை கவனித்து ஒரு அற்பமான வஸ்து என்று அல்லாஹ் சொன்னானோ, எந்த துன்யா கொசுவின் இறக்கைக்கு சமமாக இருந்திருந்தால் ஒரு காஃபிருக்கு அல்லாஹு தஆலா ஒரு மிடறு தண்ணீரை கூட குடிக்க கொடுத்திருக்க மாட்டான் என்று அல்லாஹ் வர்ணித்தானோ, எந்த துன்யாவை அல்லாஹு தஆலா சபித்தானோ அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதில் ஹலாலை மட்டுமல்ல, முஸீபத் ஹராமையும் சேர்த்து நினைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி? ஹலாலை மட்டும் அல்ல. ஏன்? எதை பார்த்தோமோ, எதைக் கேட்டோமோ, எதை நினைப்போமோ, எதை செய்வோமோ, அது நினைவுக்கு வரும் தொழுகையில்.
அன்பு சகோதரர்களே! இன்று அவ்வளவு ஹராம் மிகைத்திருக்கிறது. அவ்வளவு கெட்டவை வாழ்க்கையில் நிறைந்திருக்கிறது. பிறகு, எது தொழுகையில் நமக்கு நினைவுக்கு வரும்? ஆக தொழுகிறோம் ஆனால் திக்ரு இல்லாமல்.
وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ
தொழுகையை நிலை நிறுத்து. என்னுடைய நினைவுக்காக. (அல்குர்ஆன் 20:14)
என்று அல்லாஹ் கூறியுள்ளானே! தொழுகை யாருக்காக? அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வை நினைப்பதற்காக. ஆனால், நாமும் தொழுது விடுகிறோம். அல்லாஹ்வை நினைக்காமலேயே. வாயால் நாவால் நினைக்கின்றோம். நம்முடைய உச்சரிப்புகளால் நினைக்கின்றோம். நம்முடைய மனங்கள் அல்லாஹ்வை நினைப்பதில்லை.
ஒரு மனிதர் தொழுகையிலே அசைகிறார். தன்னுடைய உறுப்புகளை எல்லாம் இங்கும் அங்குமாக அசைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து ஸயீத் இப்னுல் முஸய்யப் சொன்னார்கள்;
அவருடைய உள்ளம் அச்சம் கொண்டிருந்தால் அவருடைய உறுப்புகள் அமைதியாக இருக்கும்.
நூல்: முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக்.
உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் ஆழத்திலிருந்து எழுவது. அது இல்லாமல் போனதால் சிந்தனைகள் சிதறுகின்றன. உறுப்புகள் இங்கும் அங்குமாக அசைகின்றன. நினைவுகள் பறக்கின்றன.
அடுத்து, அல்லாஹ்வின் அடியார்களே! தொழுகை என்பது துஆவுடைய பொக்கிஷம். அதிலே மகத்தான துஆ, நாம் கேட்க கூடிய சூரத்துல் ஃபாத்திஹா. யாராவது இந்த சூரத்துல் ஃபாத்திஹாவை துஆவுடைய நிய்யத்தில் ஆழமாக, அழுத்தமாக, கெஞ்சிய நிலையில் அல்லாஹ்விடத்தில் மன்றாடிய நிலையில் ஓதுகிறோமோ? கேட்கிறோமோ?
தொழுகையில் ஓதுகிற கிராஅத், திலாவத் ருக்னுகளிலே ஒன்று. அதிலே சூரத்துல் பாத்திஹா கண்டிப்பாக ஓதியே ஆக வேண்டும்.
لَا صَلَاةَ لِمَن لَمْ يَقْرَأْ بفَاتِحَةِ الكِتَابِ
யார் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதவில்லையோ அவருக்கு தொழுகையே இல்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் வர்ணித்தார்கள்.
அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 756.
இது என்ன சடங்கா? ஏதாவது ஒரு அர்த்தம் புரியாத, கருத்துகள் இல்லாத, மனித அறிவுகளால் சிந்திக்க முடியாத உணர்வற்ற மந்திரங்களா? அல்லாஹ்வுடைய வேதம் அப்படியா? அல்குர்ஆனில் வர்ணிக்கப்பட்டு இருக்கின்றது.
ஹுதா - நேர்வழி. ஷிஃபா - உங்களுடைய உள்ளத்தின் நோய்களைப் போக்கக்கூடிய மருந்து. ரஹ்மா - அல்லாஹ்வுடைய கருணை. தப்ஸிரா - உங்களுடைய குறைகளை உங்களுக்கு புலப்பட வைக்கக்கூடிய அற்புதமான ஒரு சக்தி இது. ஓதுகிறோம் ஓதுகிறோம். திக்ருமில்லை துஆவும் இல்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! அதற்கு முன்பு பாருங்கள். அதற்கு பின்பு பாருங்கள். தொழுகையுடைய ஒவ்வொரு அமைதியிலும், அசைவிலும் திக்ரும் துஆவும் இருந்து கொண்டே இருக்கும். ஏன் அல்லாஹு தஆலா அவனுடைய வணக்க வழிபாடுகளிலேயே மிக மகத்தான வணக்கமாக தொழுகையை வைத்துள்ளான்.
كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ
(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக - வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அல்லாஹ்வை துதிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 24:41)
وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ
ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 17:44)
அப்படிப்பட்ட ஒரு மகத்தான வணக்கம் தொழுகை. அந்த தொழுகையில் அல்லாஹு தஆலா துஆ என்ற ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறான்.
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ
தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று ஏன் அல்லாஹு தஆலா சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:45)
உங்களுக்கு என்ன வேண்டும்? எல்லாத்தையும் அல்லாஹு தஆலா தொழுகையில் வைத்திருக்கிறான். உங்களுக்கு என்ன வேண்டும். அல்லாஹு தஆலா உங்களுக்கு துஆவை வைத்திருக்கிறான். ஒரு அடியானை, அர்ஷுடைய இறைவனோடு வெகு விரைவில்! எப்படி? ஜிப்ரீல் அர்ஷிலிருந்து பூமிக்கு இறங்கி வருவதை விட வேகமாக அல்லாஹ் தஆலாவை ஒரு முஃமினான அடியான் தொடர்பு கொள்ள முடியும் துஆவின் மூலமாக. எப்பேர்பட்ட சக்தியை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்!
وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
இன்னும், அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!” (அல்குர்ஆன் 21:83)
எத்தனை நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்கிறான். இந்த துஆ அதை அல்லாஹ்வின் பக்கம் உயர்த்துவதற்கு எந்த வானவருடைய தேவையும் இல்லை.
அல்லாஹு தஆலா மிகத் துல்லியமாக கேட்கக்கூடியவன். அல்லாஹு தஆலா மிக நுணுக்கமாக கேட்கக் கூடியவன். எந்த எழுத்தும் தவறாது. உங்களுடைய மொழிகள் மாறுவதால் அவனுக்கு புரியாமல் போகும் என்ற பயம் இல்லை. உங்களின் வார்த்தைகளை உங்களின் நோக்கங்களுடன் அறியக் கூடியவன்.
நீங்கள் நாவினால் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கேட்பதற்கு முன்பே அறிந்தவன். இன்றைய நமது தேவைகளையும் அறிந்தவன். நாளைய நமது தேவைகளையும் அறிந்தவன். சென்று விட்ட காலங்களில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும் அறிந்தவன். தீர்வு அவனிடம் தான் இருக்கிறது துஆவின் மூலமாக.
அற்புதமான ஒரு தொடர்பை அல்லாஹ் கொடுத்தான். அடியானே! நான் இருக்கிறேன், உனது ரப்பிடத்திலே உனது ஆண்டவனிடத்திலே, உன்னை படைத்தவனிடத்திலே, உனது இரட்சகனிடத்திலே, உன்னுடைய அரசனிடத்திலே கேள்.
எதை கேட்கலாம்? எல்லா தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் கேட்கலாம். அல்லாஹ்விடத்தில் கேட்பதால் என்ன?
இன்று மனிதர்களை பார்க்கிறோம். எல்லோரும் ஏதாவது ஒரு கஷ்டத்தில், ஏதாவது ஒரு மன உளைச்சலில், ஏதாவது ஒரு சிந்தனை குழப்பங்களில் இருக்கின்றோமா? மன குழப்பங்கள் அதுவும் குறிப்பாக இன்று துன்யாவை மட்டுமே! எதை? நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நான் மறுமையை முன்வைத்து மட்டுமே வாழ்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு ஆகிரத்து தான் அதற்கு பிறகு தான் துன்யா என்று நம்மில் யாராவது சொல்ல முடியுமா? நாம் எப்படி என்றால், (அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக!) அந்த கூட்டத்தில் சேர்ந்து விடுவோமோ என்று பயப்படக்கூடிய நிலையில் இருக்கிறோம். எந்த கூட்டம் ஆகிரத்தை விட்டுவிட்டு துன்யாவை வாங்கிக் கொண்டார்களே, அல்லாஹ்வுடைய மன்னிப்பை விட்டு விட்டு அல்லாஹ்வுடைய தண்டனையை வாங்கிக் கொண்டார்களே!
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ
அவர்கள் எத்தகையோர் என்றால் மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கினார்கள். எனவே, அவர்களை விட்டு (நரக) தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:86)
அல்லாஹ் கேட்கிறான், மனிதர்களே! உங்களால் நரகத்தை தாங்க முடியுமா? சகிக்க முடியுமா? உங்களுக்கு என்ன துணிவு பிறந்து விட்டது? என்னுடைய தண்டனையை தாங்கிக் கொள்வதற்கு, என்னுடைய தண்டனையை எதிர்கொள்வதற்கு. நான் மறுமையை தர காத்திருக்கிறேன். நீங்கள் அதை புறக்கணித்து ஓடுகின்றீர்களே, நிரந்தரமான மறுமை உங்களுக்கு நான் தயாரித்து வைத்திருக்கிறேன். நீங்களோ துன்யாவை தேடுகின்றீர்களே!
எனது விசாலமான மன்னிப்பை கொடுக்க நான் காத்திருக்கிறேன். நீங்களோ எனது தண்டனையை நோக்கி ஓடுகின்றீர்களே! உங்களுக்கு எப்படி அப்படிப்பட்ட ஒரு துணிவு பிறந்தது என்று அல்லாஹ் கேட்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்முடைய நிலையை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதிசயமாக இருக்கிறது. ரப்பு ஒருவன் எனக்கு இருக்கிறான். அவன் சர்வ வல்லமை உடையவன். மகத்தான ஆற்றல் உடையவன்.
எனது ரப்பு எப்படிப்பட்டவன்! அவன் ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்று சொல்வோம் நம்பிக்கை இருக்கிறதா? அந்த யகீனோடு கேட்கிறோமா? எனது ரப்பு யார்? இப்ராஹீமுக்கு நெருப்பை குளிர்வித்தான்.
قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
(இப்ராஹீமை அவர்கள் நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” (அல்குர்ஆன் 21:69)
நெருப்பே! என் படைப்பே! என்னுடைய ஹலீலுக்கு நீ குளிர்ச்சியாக பாதுகாப்பாக ஆகிவிடு என்று அல்லாஹ் சொன்னவுடன், நெருப்பு குளிர்ச்சியாக பாதுகாப்பாக ஆகிவிட்டது என்பதை நம்புகிறோம், சொல்கிறோம்.
ஆனால் அந்த நம்பிக்கையுடன் நாம் துஆ கேட்கிறோமா? அந்த நம்பிக்கையோடு அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கிறோமா? அல்லாஹுவால் எல்லாம் முடியும் என்று சொல்லுவோம். அல்லாஹ் எனக்கு போதுமானவன் என்று சொல்வோம். ஆனால், அந்த நம்பிக்கை எங்கே சென்றது? அந்த நம்பிக்கையோடு துஆ எங்கே சென்றது? துஆவை ஆரம்பிக்கும்போதும் அவநம்பிக்கை. துஆவிலும் அவநம்பிக்கை. நமது துஆக்கள் நம்பிக்கையோடு இருந்திருக்குமேயானால் கண்கள் கலங்கி இருக்கும்.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً
தாழ்மையாகவும் மறைவாகவும் உங்கள் இறைவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். (அல்குர்ஆன் 7:55)
எப்படி சொல்கிறான்? பணிந்து, பயந்து, கெஞ்சி உருகி கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே, வந்திருக்கிறதா? கொடுத்தால் கொடு, கொடுக்காட்டி போ. எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை.
நீ தான் எனக்கு கொடுக்க வேண்டும். உன்னை தவிர எனக்கு யாரு இருக்கிறார் என்று அந்த யகீனோடு சொல்லி கேட்கிறோமா? சொல்வதை உணர்ந்து இருக்கிறோமா? உணர்ந்தால் நமது உள்ளம் எப்படி மாறி இருக்கும்? எத்தனை இடங்களில் அல்லாஹ் சொல்கின்றான். கெஞ்சுங்கள் என்று சொல்கிறான்.
فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ
ஆக, நம் தண்டனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான். (அல்குர்ஆன் 6:43)
நமது சோதனைகள் வரும் பொழுது அவர்கள் நம்மிடத்தில் கெஞ்சி இருக்க வேண்டுமே! அவர்கள் நம்மிடத்தில் மன்றாடி இருக்க வேண்டுமே! அவர்களது உள்ளங்கள் இறுகி விட்டதே!
எங்கே நாம் வாழ்கிறோம்? ஏதோ அப்படி தனியாக இருக்கிறது. தொட்டும் தொடாமல், பட்டும் படாமல் ரப்புடைய யகீன், ரப்பின் மீது உண்டான அந்த ஆழமான நம்பிக்கை, என் ரப்பீ என்று சொல்லும் பொழுது அந்த உரிமை நமக்கு இருக்கின்றதா?
ஒவ்வொரு நபியும் எப்படி சொன்னார்கள்? என் ரப்பே! என் இறைவா! எனது ரப்பே என்று கேட்டார்கள். நாம் எப்படி கேட்கிறோம்? ஏதோ வானத்துக்கு இறைவன் போல இருக்கு நீ அவனுக்கு யார்?
யா அல்லாஹ்! நீ என்னை படைத்தாய். நான் உனது அடிமை. நீ எனது ரப்பு, எனது எஜமான் நீ, எனது ஆண்டவன், நீ எனது அரசன், நீ என் உரிமையாளன், எனக்கு சொந்தக்காரன், என்னை முழுமையாக நிர்வகிப்பவன் நீ தான். எனக்கு வேறு யார் இருக்கிறார்? லா யிலாஹ இல்லல்லாஹ். உன்னை தவிர வேறு இறைவன் எனக்கு யாரும் இல்லையே!
யா அல்லாஹ் நான் உனது அடிமை. உனது அடிமையின் அடிமை. நீ படைத்த அடிமை பெண்ணின் அடிமை. எனது உச்சி முடி உன் கையிலே இருக்கிறது. உன் தீர்பு என்னிலே செல்லுபடியாகும். நீ எனக்கு நடத்துவதெல்லாம் நீதமாக தான் இருக்கும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 3712, 4318, புகாரி : 6306.
எப்பேர்பட்ட யகீனோடு அல்லாஹ்வை நெருங்க வேண்டும்!
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً
பயந்து கேளுங்கள். பணிந்து கேளுங்கள். கெஞ்சி கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
நாம் எப்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம்? துஆ கேட்பதற்கு நம்மிடத்தில் நேரமே இல்லை. தொழுகையை தவற விட்டோம். அதிலும் துஆக்கள் இல்லை. சுஜூதிலே துஆ இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு அடியான் ஃபர்ளான, நஃபிலான தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்தில் இரண்டு சுஜூதை செய்கிறான். ரப்பிக்ஃபிர்லீ - என் ரப்பே என்னை மன்னிக்க மாட்டாயா என்று கேட்காமல் எப்படி தலையை உயர்த்த முடியும்?
اللَّهمَّ إنِّي أسألُكَ الجنَّةَ ، وأَعوذُ بِكَ منَ النَّارِ
ரப்பே! எனக்கு சொர்க்கத்தை கொடுத்து விடு. நரகத்திலிருந்து என்னை பாதுகாத்துக் கொள் என்று அந்த ரப்பிடத்திலே இரகசியம் சொல்லாமல் எப்படி அவன் தலையை தூக்குகிறான்?
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 835.
என்ன உணர்வு அவனுக்கு இருக்கிறது? தொழுதால் ஆகிரத்துடைய நம்பிக்கை இல்லாத தொழுகை. ஆகிரத்துடைய பயமில்லாத தொழுகை. நாளை மறுமையிலே நிற்க வேண்டுமே ரப்புக்கு முன்னால், அந்த பயம் இருந்திருந்தால், அந்த தொழுகையில் எப்படி மன்றாடி இருப்போம். அல்லாஹ்வுடைய தூதர் பாதுகாப்பு தேட சொன்னார்கள்.
பாதுகாப்பு தேடி விட்டு விருப்பமான துஆவை கேளுங்கள் என்று சொன்னார்கள். தனது தோழர்களுக்கு தொழுகைக்கு பின்னால் கேட்க வேண்டிய துஆக்களை கற்றுக் கொடுத்தார்கள்.
முஆதே! உன்னை நேசிக்கிறேன், உனக்கு ஒரு துஆவை சொல்லி தருகிறேன்.
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
யா அள்ளாஹ் உன்னை நினைப்பதற்கு, உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கு, உனக்கு நன்றி செலுத்துவதற்கு எனக்கு நீ உதவி செய்.
அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1522.
இறைவா! என் ரப்பே! என் ஆண்டவனே! எனது அரசனே! எனது உரிமையாளனே! என்னை படைத்தவனே! என்னை வளர்ப்பவனே! என்னை பரிபாலிப்பவனே! அப்பேர்ப்பட்ட மகத்தான அர்த்தங்களைக் கொண்டது ரப்பு என்ற வார்த்தை. நாம் அப்படியே சொல்லிக் கொண்டு போகிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு தெரியுமா? அல்லாஹு தஆலா துஆவை கொண்டு அவ்வளவு சந்தோஷப்படுகிறான். பெருமைப்படுகிறான் ரப்பு.
ஒரு சபையிலே முஃமின்கள் உட்கார்ந்து பேசினால் மலக்குகள் சபை முடிந்து செல்லும் பொழுது என்ன பேசிக் கொண்டார்கள்? எதை கேட்டார்கள் என்று அல்லாஹ் கேட்பானாம்
யா அல்லாஹ்! சொர்க்கத்தை பற்றி பேசினார்கள். சொர்க்கத்தை கேட்டார்கள் என்று மலக்குகள் சொல்வார்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள். அவர்கள் கேட்டதை கொடுத்து விட்டேன் என்று அல்லாஹு தஆலா மலக்குகளை சாட்சியாக்கி சொல்வான்..
பிறகு என்ன செய்தார்கள்? யா அல்லாஹ்! நரகத்தை பற்றி பேசினார்கள். நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடினார்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள். அவர்கள் பயந்ததில் இருந்து நான் அவர்களை பாதுகாத்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்வானாம்.
பிறகு என்ன? உனது மன்னிப்பை பற்றி பேசினார்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள். நான் அவர்களை மன்னித்து விட்டேன்.
ஒரு மலக்கு சொல்லுவார், யா அல்லாஹ்! வேற ஒரு தேவையா அந்த பக்கம் ஒருத்தர் போனாரு. அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போயிட்டாரு. அந்த சபையிலே கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு நோக்கம் அல்ல.
அல்லாஹ் சொல்வானாம்; அவர்கள் யார் தெரியுமா? அவர்களோடு யார் உட்கார்ந்தாலும் அவர்களுக்கும் துர்பாக்கியம் கிடைக்காது. அவனையும் மன்னித்து விட்டேன். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6408.
எப்பேர்பட்ட சபை! அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அல்லாஹ்விடத்தில் கேட்கக் கூடிய சபை. உலகத்தில் இஸ்லாமிய ஷரீயா சட்டத்திட்டங்களில் முஸ்லிம்களுடைய வணக்க வழிபாடுகளில், முஸ்லிம்களுடைய தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், எல்லா வணக்க வழிபாடுகளிலும் மிக மகத்தான ஒரு நாள். மிக மகத்தான அற்புதமான ஒரு நாள். அரஃபா மைதானம். சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நினைத்து பார்த்திருக்கிறோமா?
அந்த நாளின் மகத்துவம் என்ன? எல்லா நாளிலும் எல்லாம் நடக்கிறது. ஆனால், எந்த நாளிலும் நடக்காத அற்புதமான ஒரு இபாதத், அல்லாஹ்வின் வீட்டுக்கு அருகில் அல்லாஹ்வின் அடியார்கள் எல்லாம் தங்களை ஒரு மிஸ்கீனாக, ஒரு ஃபக்கீராக, மன்னனாக இருந்தாலும் சரி, மந்திரியாக இருந்தாலும் சரி, எல்லா பெருமைகளையும் உடையால் கழற்றி விட்டு, உள்ளத்தில் இருந்தும் அதை நீக்கி வைத்து விட்டு, அந்த மைதானத்திலே ஒன்று கூடி கை தூக்குகின்றார்களே! அந்த துஆ என்ற மகத்தான வணக்கம். உலகத்திலேயே ஒவ்வொரு ஆண்டும் அந்த ஒரு நாளில் மட்டுமே நடக்கின்றது. அதைவிட மகத்தான ஒரு நாள் இல்லை.
அரஃபா நாள். அதற்கு ஏன் அவ்வளவு சிறப்பு?
إنَّ اللهَ يُباهي بأهلِ عرفاتٍ ملائكةَ السماءِ ، فيقولُ : انظُروا إلى عبادي هؤلاءِ ، جاءوني شُعْثًا غُبْرًا
அல்லாஹு தஆலா முதல் வானத்திற்கு இறங்கி வந்து இந்த அடியார்கள் என்ன கேட்கிறார்கள், என்ன விரும்பினார்கள்? என்று அல்லாஹ் கேட்கிறான். அவர்களது முடியை பாருங்கள், அவர்களது உடையை பாருங்கள், புழுதி அடைந்தவர்களாக யாரை தேடி வந்திருக்கின்றார்கள்? எதை கேட்க வந்திருக்கின்றார்கள்? நான் அவர்களை மன்னித்து விட்டேன்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 1132.
மன்னிக்கின்றான். அந்தோ பரிதாபம் தன்னுடைய நிலையை நினைத்து ஷைத்தான் தன் மீது மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கிறான்..
அல்லாஹ்வின் அடியார்களே அப்பேர்பட்ட ஒரு பொக்கிஷம் இந்த துஆ என்பது. கேட்பதால் சந்தோஷப்படுகின்றான். கேட்டுக் கொண்டே இருப்பதால் சந்தோஷப்படுகின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள், நாடினால் கொடு என்று கேட்காதீர்கள். யா அல்லாஹ் கொடு என்று கேளுங்கள். கட்டளை அல்ல. கெஞ்சுதல், விண்ணப்பித்தல். வேறு யார் நமக்கு இருக்கின்றார்கள்?
وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? (அல்குர்ஆன் 3:135)
இந்த உலகத்தின் பொக்கிஷங்கள் எல்லாம் யாருடைய கையில் இருக்கிறது? அல்லாஹ்வுடைய கையில். கஜானா அல்லாஹ்வுடைய கஜானா. வானம் அல்லாஹ்வுடைய வானம். வானத்திலிருந்து பொழிவதும், அல்லாஹ்வுடையது. பூமி அல்லாஹ்வுக்கு உரியது. பூமியில் இருந்து விளைவதும் அல்லாஹ்விற்கு உரியது. எல்லா சுரங்கங்களும், எல்லா தொழில்களும் எல்லாம் அல்லாஹ்வுக்கு சொந்தமானவை. அல்லாஹ்விற்கு உரிமையானவை. எதுவும் நமக்கு லாபத்தை கொடுக்க முடியாது. அல்லாஹ்விடத்திலே கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லகிறான். கேளுங்கள். கேளுங்கள்.
அன்பு சகோதரர்களே! துஆ, அடியானை அல்லாஹ்விற்கு நெருக்கமாக்குகிறது. அல்லாஹ்வின் மீது உண்டான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ்வுடைய சிஃபத்துகள் மீது உண்டான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது. நபிமார்கள் முடியாததை கேட்டார்கள். யாருக்கு முடியாததை? மனிதர்களால் முடியாததை. அல்லாஹ்வுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை. கேட்டுவிட்டு சொன்னார்கள்;
اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ
வயோதிகம், தள்ளாட கூடிய வயது, உடலில் ஒரு முடி கூட வெளுக்காமல் இல்லை. எல்லாம் வெளுத்து விட்டது. மனைவியோ மலடி, கேட்டுவிட்டு சொன்னார்கள்;
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 3:38)
அல்லாஹ் கேட்டுவிட்டான். சமீஃ, அளீம், கரீம், முஜீப். நீங்கள் துஆக்களுடைய வசனங்களை எல்லாம் பாருங்கள். அல்லாஹு தஆலாவை இதை கொண்டு புகழ்வதாக இருக்கும்.
அல்லாஹு தஆலாவை எப்படி கேட்கிறோமோ, அல்லாஹ்விடத்தில் என்ன கேட்கிறோமோ, அதற்காக ஒரு சிஃபத்தை அல்லாஹ் வைத்திருப்பான். மூசா நபி மன்னிப்பு கேட்டார்கள் அல்லாஹ்விடத்தில். கேட்டுவிட்டு சொன்னார்கள். மன்னிப்பவர்களில் நீ சிறந்தவன் என்று சொன்னார்கள். (அல்குர்ஆன் : 2:128)
அன்பிற்குரிய அடியார்களே! இன்று நம்முடைய உள்ளங்கள் இறுக்கமாகிவிட்டன. குழப்பங்களில் தீர்வுகளை தேடுகின்றோம். ஆனால் யாரிடத்திலே தேடுவது? எப்படி தேடுவது? இந்த உள்ளத்தை எப்படி வலிமையாக்குவது? இந்த உள்ளத்திற்கான நோய்களை எப்படி குணப்படுத்துவது? எல்லா இடத்திலும் நமக்கு பிரச்சனை. பிரச்சனை இல்லாத இடங்களே இல்லை.
அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதை கொண்டு அல்லாஹு தஆலா அதற்கான சரியான வழிகளை காட்டுகின்றான். மனதிலே உறுதியை தருகிறான். யகீனை தருகிறான். நம்முடைய பார்வையில், செயல்களில், நம்முடைய சொல்லில், செயலில் அல்லாஹ் ஒரு உறுதியை ஏற்படுத்துகின்றான். அந்த துஆவுடைய சக்தியை கொண்டு இந்த உலகத்தில் எல்லா பிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ள முடியும். தாங்கிக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவன் தான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன்.
என்னுடைய துஆவால் என்ன நடக்கப் போகிறது என்று ஒரு அவநம்பிக்கை ஒருவனுக்கு வருமேயானால், நான் துஆ கேட்டு அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்ற ஒரு சந்தேகம் அவனுக்கு இருக்குமேயானால், இந்த துஆ எனக்கு என்ன செய்யும்? நான் கேட்டு இவ்வளவு நாளாக கேட்கிறேனே! எனக்கு எதுவும் நடக்கவில்லையே என்ற நிராசை ஒருவனுக்கு வருமேயானால் அவன் உண்மையான நம்பிக்கையாளராக ஆக முடியாது.
அவன் அல்லாஹ்வை சோதிக்க பார்க்கிறான். அல்லாஹ்தான் சோதிப்பானே தவிர அல்லாஹ்வை யாரும் சோதிக்க முடியாது. கடைசி வரை மன்றாடி கொண்டே இருக்க வேண்டும். கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நிராசை ஒருபோதும் ஆகக்கூடாது.
அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகைய துஆவை நாம் நினைவு கூர வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இபாதத்திலும், துஆவுக்கான அந்த நேரத்தை ஒதுக்க வேண்டும். நோன்பு நேரம் வரப்போகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லிய அந்த மகத்தான விஷயம் நோன்பு நேரம் முழுக்க துஆவுடைய நேரம். நோன்பாளி துஆ, நோன்பாளியுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஸஹருடைய துஆ, இஃப்தாருடைய துஆ, நம்முடைய தொழுகையில் துஆ, வாகனத்தில் வரும்போது, செல்லும்போது, , எங்கிருந்தாலும் சரி அல்லாஹ்விடத்தில் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் கேட்பதற்காக ஒவ்வொரு நாளும் தனியாக ரகசியமாக ஒரு நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் யாரும் இருக்கக் கூடாது. அல்லாஹ்வும் நீங்களும் மட்டும்தான் இருக்க வேண்டும்.
அல்லாஹ்விடத்தில் சொல்லுங்கள், உங்களது உள்ளத்தில் உள்ள குறைகளை சொல்லுங்கள். உங்களது உடல்களில் உள்ள நோய்களை சொல்லுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை சொல்லுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். மறுமையை கேட்க வேண்டும். சொர்க்கத்தை கேட்க வேண்டும். நேர் வழியை கேட்க வேண்டும். நல்ல முடிவை கேட்க வேண்டும். ஆகிரத்தை கேட்க வேண்டும்.
அது போக இந்த துன்யாவில் ஹலாலான ரிஸ்கை கேட்க வேண்டும். பிறருக்கு கொடுக்கக்கூடிய நற்பாக்கியத்தை கேட்க வேண்டும். எந்த நோய் இபாதத்தை விட்டு நம்மை பலவீனப்படுத்தி விடுமோ அந்த நோயிலிருந்து பாதுகாப்பு தேட வேண்டும். அல்லாஹ்வின் மீது அன்பை ஆசையை கேட்க வேண்டும். மார்க்கப்பற்றை கேட்க வேண்டும். இஸ்லாமை கேட்க வேண்டும். இஸ்லாமின் மீது உண்டான உறுதியை கேட்க வேண்டும்.
என் அடியான் நல்லதை இபாதத் எனக்கு பிரியமானதை என்னிடத்திலே கேட்க வேண்டும் என்று அல்லாஹ் நேசிக்கின்றான். நாமோ நமக்குத் தேவையானதை மட்டும் கேட்டுவிட்டு நின்று விடுகிறோம்.
என்ன டிஃபரென்ட்? யா அல்லாஹ்! சொத்துக் கொடு, யா அல்லாஹ்! பில்டிங் கொடு, யா அல்லாஹ்! பிள்ளைக்கு படிப்பு கொடு, யா அல்லாஹ்! வெளிநாட்டில் என் பிள்ளைக்கு சீட்டு கொடு, எல்லாத்தையும் கொடு. நமக்கு எது தேவையோ எல்லாத்தையும் கேட்டு, அல்லாஹ்வுக்கு பிரியமானது என்று ஒன்று இருக்குமே அது எது? நமக்கு ஆகிரத்துக்கு தேவையோ அது அல்லாஹ்வுக்கு பிரியமானது. எது உங்களுடைய சொர்க்கத்துக்காக உங்களுக்கு தேவையோ அது அல்லாஹ்வுக்கு பிரியமானது. எப்படிப்பட்ட ரப்பு பாருங்க!
அவனுக்கு நம்முடைய ஏதாவது தேவை இருக்கிறதா? நம்முடைய தேவை எதுவுமே இல்லை. அவனுக்கு பிரியமானதை அலட்சியமாக கேட்டுவிட்டு சென்று விடுகிறோம். பாவ மன்னிப்பைக் கேட்டு கெஞ்சுகிறோமா? அழுகிறோமா? அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கேட்டு கெஞ்சுகிறோமா? அழுகிறோமா? இதுதான் நம்முடைய பலவீனம் சகோதரர்களே.
நபிமார்கள் பாவமன்னிப்புக்காக அழுதார்கள். பாவமே செய்யாதவர்கள் பாவமன்னிப்புக்காக அழுதார்கள். இப்படி நாம் பார்க்கிறோம் குர்ஆன் நெடுக்க நபிமார்களுடைய துஆக்கள். மனப்பாடம் செய்ய வேண்டும். நல்ல துஆக்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்விடத்திலே அவனுடைய இபாதத்துக்களை கொண்டு நெருங்குவதற்குரிய ஈமானை, யகீனை, அதற்குரிய தவ்ஃபீக்கை அல்லாஹ் தஆலா தந்தருள்வானாக! நம்மையும், நம்முடைய சந்ததிகளையும், குடும்பத்தார்களையும், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா அழகிய சீர்திருத்தம் செய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
إنَّ لِلَّهِ مَلائِكَةً يَطُوفُونَ في الطُّرُقِ يَلْتَمِسُونَ أهْلَ الذِّكْرِ، فإذا وجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنادَوْا: هَلُمُّوا إلى حاجَتِكُمْ قالَ: فَيَحُفُّونَهُمْ بأَجْنِحَتِهِمْ إلى السَّماءِ الدُّنْيا، قالَ: فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ -وهو أعْلَمُ منهمْ- ما يَقولُ عِبادِي؟ قالوا: يَقولونَ: يُسَبِّحُونَكَ ويُكَبِّرُونَكَ، ويَحْمَدُونَكَ ويُمَجِّدُونَكَ، قالَ: فيَقولُ: هلْ رَأَوْنِي؟ قالَ: فيَقولونَ: لا واللَّهِ ما رَأَوْكَ، قالَ: فيَقولُ: وكيفَ لو رَأَوْنِي؟ قالَ: يقولونَ: لو رَأَوْكَ كانُوا أشَدَّ لكَ عِبادَةً، وأَشَدَّ لكَ تَمْجِيدًا وتَحْمِيدًا، وأَكْثَرَ لكَ تَسْبِيحًا، قالَ: يقولُ: فَما يَسْأَلُونِي؟ قالَ: يَسْأَلُونَكَ الجَنَّةَ، قالَ: يقولُ: وهلْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ لو أنَّهُمْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لو أنَّهُمْ رَأَوْها كانُوا أشَدَّ عليها حِرْصًا، وأَشَدَّ لها طَلَبًا، وأَعْظَمَ فيها رَغْبَةً، قالَ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ قالَ: يقولونَ: مِنَ النَّارِ قالَ: يقولُ: وهلْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ لو رَأَوْها؟ قالَ: يقولونَ: لو رَأَوْها كانُوا أشَدَّ مِنْها فِرارًا، وأَشَدَّ لها مَخافَةً، قالَ: فيَقولُ: فَأُشْهِدُكُمْ أنِّي قدْ غَفَرْتُ لهمْ، قالَ: يقولُ مَلَكٌ مِنَ المَلائِكَةِ: فيهم فُلانٌ ليسَ منهمْ، إنَّما جاءَ لِحاجَةٍ، قالَ: هُمُ الجُلَساءُ لا يَشْقَى بهِمْ جَلِيسُهُمْ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 6408
அல்லாஹ்விடம் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால், “உங்கள் தேவையைப் பூர்த்திசெய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்துகொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். -அவ்வானவர்களைவிட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான்.- “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக்கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றார்கள்?” என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று கேட்பான். அதற்கு வானர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதைப் பார்த்ததில்லை” என்பர்.
அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?” என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பர். இறைவன், “அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?” என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதை அவர்கள் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்று கேட்பான்.
வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், “ஆகவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (நற்பேறு பெறுவானே தவிர,) நற்பேறற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6408.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/