நன்மைகள் மிகுந்த ஷஅபானும் புண்ணியங்கள் நிறைந்த ரமழானும் | Tamil Bayan - 1036
நன்மைகள் மிகுந்த ஷஅபானும் புண்ணியங்கள் நிறைந்த ரமழானும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : நன்மைகள் மிகுந்த ஷஅபானும் புண்ணியங்கள் நிறைந்த ரமழானும்
வரிசை : 1036
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 23-01-2026 | 04-08-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் முன்னிலையில் அகிலங்களின் இறைவன் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை — தக்வாவை — நினைவூட்டியவனாக இந்த ஜுமுஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நம் மீது தனது கருணையைப் பொழிவானாக! நல்லோரின் கூட்டத்தில் அல்லாஹு தஆலா நம்மையும் சேர்த்து அருள் புரிவானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா மாபெரும் அருளாளன் — அர்ரஹ்மான், அர்ரஹீம் — நிகரற்ற அன்புடையவன். அது மட்டுமல்ல;
அவன் அர்ரஊஃப் — தனது அடியார்களிடம் மிகுந்த பாசம் காட்டுபவன். அவன் அல்வதூது — தனது அடியார்களை ஆழமாக நேசிப்பவன்.
இவ்வாறாக நமது ரப்பு தனக்கென அழகிய திருநாமங்களையும், உயர்ந்த பண்புகளையும் கொண்டவனாக இருக்கின்றான். நம் மீது கருணை காட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்தது; நம்மை தண்டிப்பது அல்ல.
அல்லாஹு தஆலா தனது கண்ணியத்திற்குரிய வேதமான அல்குர்ஆனில் கேட்கிறான்:
مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا
நீங்கள் நன்றி செலுத்தினால், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை தண்டனை செய்து அவன் என்ன பலன் அடையப்போகிறான்? அல்லாஹ் நன்றி அறிபவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:147)
உங்களை தண்டிப்பதால் அல்லாஹ்வுக்கு என்ன லாபம்? நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருந்தால், நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் அவன் ஏன் உங்களை தண்டிக்கப் போகிறான்?
அல்லாஹு தஆலா நன்றி அறியக் கூடியவன். அடியார்களின் செயல்களுக்கு அவர்கள் செய்ததை விட அதிகமாக கூலி கொடுப்பவன். நன்கு அறிந்தவன். நமது எண்ணங்களை அறிந்தவன். நம்முடைய நோக்கங்களை அறிந்தவன். எண்ணங்களுக்கு ஏற்ப அவன் கூலிகளை பெருக்குவான். அதற்கு அளவு கிடையாது. அளவு போட முடியாது. மனிதர்களின் கணக்குகள் எல்லாம் தோற்றுவிடும்.
அல்வஹ்ஹாப் - கொடுப்பவன். வழங்கக் கூடியவன். அவனுடைய அன்பளிப்பை அவனுடைய கொடையை யாரும் மட்டிட முடியாது. கணக்கிட முடியாது.
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். (அல்குர்ஆன் 16:18)
அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ்வுடைய அருட்கொடையை நீங்கள் கணக்கு போட முடியுமா? அல்லாஹ் கேட்கிறான், ஒருபோதும் முடியாது. உங்களால் கணக்கிட முடியாது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்மை இந்த துன்யாவிலே நிரந்தரத்திற்காக படைக்கவில்லை. சொற்ப காலத்திற்காக நம்மை படைத்திருக்கின்றான். ஆனால், அந்தோ பரிதாபம்! முட்டாள்களாகிய நமக்கு, வீணர்களாகிய நமக்கு இந்த உலக வாழ்க்கை பெரிதாக தெரிகிறது.
நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களை நாம் மறந்து விட்டோம். நமக்கு பின்னால் வரப்போகிறவர்களையும் நாம் நினைக்கவில்லை. நாம் என்னமோ நாம்தான் இந்த உலக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமக்கு மரணம் இருக்கிறது என்பதை ஒரு நாளைக்கு எத்தனை முறை நினைக்கிறோம்? சிந்தித்துப் பாருங்கள்! காலையில் எழுந்தவுடன் இன்று எனக்கு ஒரு வாய்ப்பை அல்லாஹ் கொடுத்து விட்டான் என்ற ஈமானிய உணர்வு வருகிறதா? கண்கள் கலங்குகின்றனவா? அல்லாஹ்வுடைய நிஃமத்தை நினைத்து,
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எங்களை இறக்கச்செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6324.
கருத்து : அல்லாஹ்வே! என் ஆண்டவனே! என் இறைவனே! நீ நாடி இருந்தால் என் உயிரை கைப்பற்றி இருக்கலாமே! கண் விழிக்கும் வாய்ப்பை கொடுத்தாயே! என் பெற்றோரை, என் மனைவி மக்களை, இந்த உலக வாழ்க்கையை பார்க்க வாய்ப்பு கொடுத்தாயே!
இன்று நான் மரணிக்கவில்லை என்றாலும் நாளை ஒரு நாள் மரணிப்பேன். இறைவா! உன்னிடம் நான் எழுப்பப்படுவேன்.
அன்பு சகோதரர்களே! இஸ்லாமிய மார்க்கம் நாம் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய இந்த தீனுடைய அடிப்படை, நமக்கு மறுமையை நினைவூட்டி கொண்டே இருக்கும். ஆகிரத்தை நினைவூட்டி கொண்டே இருக்கும். நாம் இந்த துன்யாவுக்காக வரவில்லை. துன்யாவிற்கு வந்திருக்கிறோம். ஆகிரத்துக்காக, மறுமைக்காக வந்திருக்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ காலை எழுந்தவுடன் மேலும் ஒரு துஆவை சொல்லுங்கள் என்று நமக்கு வழி காட்டினார்கள்.
என் அல்லாஹ்வே! என் இறைவனே! எனக்கு இந்த உயிரை கொடுத்தாயே! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை கொடுத்தாயே! உன்னை நினைப்பதற்கு எனக்கு அனுமதி அளித்தாயே! (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3401.
நமது கண்கள் மூடியது மூடியபடி இருந்திருந்தால், யார் எழுப்புவதின் மூலமாக நாம் எழுந்திருக்க முடியும்? நினைத்து பாருங்கள்! பாசமுள்ள மனைவி எழுப்பினால் மையத்து எழுந்து விடுமா? அன்புள்ள பெற்றோர் எழுப்பினால் மையத்து எழுந்து விடுமா? அன்பால் துடிக்கும் குழந்தைகள் கதறினால் மையத்து எழுந்து விடுமா?
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நமக்கு வாழ்க்கையை கொடுப்பது மறுமைக்காக என்று புரிந்து கொள்ள வேண்டும். புத்திசாலிகள் அவர்கள் தான்.
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான். (அல்குர்ஆன் 67:2)
இந்த வாழ்க்கை உங்களுக்கு கொடுக்கப்பட்டது உங்களுடைய அமல்களை சோதிப்பதற்காக. உங்களுடைய செயல்களை சோதிப்பதற்காக. நாமோ என்ன செய்கிறோம்? அல்லாஹு தஆலா இறை மறுப்பாளர்களைப் பற்றி சொன்னானே, மறுமையை நம்பாத பாவிகளை பற்றி சொன்னானே, அவர்களைப் போன்று மாறிக்கொண்டே இருக்கிறோம்.
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ
அறிந்து கொள்ளுங்கள்! “உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (அல்குர்ஆன் 57:20)
நிராகரிப்பாளர்களை பார்த்து வர்ணிக்கிறான். அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை விளையாட்டு, வேடிக்கை, சொத்து சேர்ப்பது, சுகம் அடைவது. யாரிடத்தில் சொத்து அதிகமாக இருக்கிறது என்று பெருமை பேசுவது, முடிந்துவிட்டது அதுதான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் மறுமையை அறியாதவர்கள், சொர்க்கத்தை நம்பாதவர்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் விசாரணையை நம்பாதவர்கள். அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் இல்லை.
اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ
வாழ்க்கை என்பது நமது உலக வாழ்க்கையைத் தவிர (இதற்கு பின்னர் வேறு வாழ்க்கை) இல்லை. நாம் (சிறிது காலத்திற்கு பின்னர்) இறந்து விடுகிறோம். நாம் (இப்போது) வாழ்கிறோம். (-நம்மில் சிலர் இறந்துவிட புதிதாக சிலர் பிறந்து வாழ்வார்கள். அவ்வளவுதான். நமது மரணத்திற்கு பின்னர்) நாம் எழுப்பப்பட மாட்டோம். (அல்குர்ஆன் 23:37)
எங்கள் உலக வாழ்க்கை, நாங்கள் என்ஜாய் பண்ணுவோம் யார் எங்களை கேட்பதற்கு? அவ்வளவுதான் செத்தால் முடிந்தது எல்லாம், என்ற நம்பிக்கை உள்ளவர்கள் குஃப்ஃபார்கள். ஒரு இறை விசுவாசி அப்படி அல்ல.
அவனுக்கு எப்போது ஈமான் தெரிந்ததோ “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” ﷺ என்ற தூய திருக் கலிமாவை அறிந்து, புரிந்து, நம்பிக்கையோடு உச்சரித்தானோ, அன்றே அவன் இந்த உலக வாழ்க்கையை காலில் போட்டு மிதித்து விட்டான். அன்றே இந்த உலக வாழ்க்கை நான் இதை அனுபவிப்பதற்காக எனக்கு கொடுக்கப்படவில்லை. இங்கிருந்து நான் மறுமைக்கான அமல்களை எடுத்துக் கொள்வதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்பதை அவன் புரிந்து கொள்வான்.
அல்லாஹு தஆலா கொடுத்தது எதற்காக? நம்முடைய வாழ்க்கை, நம்முடைய உயிர், நம்முடைய நேரம், நம்முடைய செல்வம் இவற்றின் மூலமாக நம்முடைய மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தை கட்டி எழுப்பி கொள்வதற்காக அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
எதற்காக அல்ல? கட்டிடங்களை கட்டிவிட்டு, சொத்துக்களை சேர்த்து விட்டு, அந்தோ பரிதாப நிலையிலே எதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் செல்கிறார்களே, தங்களுக்கான அமல்களை முற்படுத்தாமல், தர்மங்களை முற்படுத்தாமல், நல்ல அமல்களை முற்படுத்தாமல் அதற்காக அல்ல.
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73:20)
வசனத்தின் விளக்கம் : அடியானே! உனக்கு என்ன பயம்? நீ செய்யக்கூடிய அமல், நீ கொடுக்கக் கூடிய தர்மம், என்னிடத்திலே வருகிறது.
உங்களுடைய தொழுகை, உங்களுடைய நோன்பு, உங்களுடைய தர்மம், அல்லாஹ்விடத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லாஹு தஆலா அதை பாதுகாக்கிறான். அடியானே! என்னிடத்திலே வா, உனக்கு நான் உனது அமல்களை பாதுகாத்து வைத்திருக்கிறேன். நீ செய்ததை விட சிறந்ததாக, நீ செய்ததை விட அதிகமாக உனக்கு கூலி கொடுக்கப் போகிறேன்.
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமை மகத்தான கூலி உடையது. அல்லாஹ்வுடைய மறுமை சொர்க்கம் மகத்தான கூலி. அஜ்ருன் அளீம், அஜ்ருன் கரீம் - கண்ணியமான கூலி.
நமக்கு புரியவில்லை. இந்த உலக வாழ்க்கையில் மூழ்கியவர்கள் இதிலிருந்து வெளியே வர முடியாமல் நாம் திக்கு முக்காடி கொண்டிருக்கிறோம். திகைத்துக் கொண்டு இருக்கிறோம்.
தொழுகையில் நிற்கும் போது கூட துன்யா நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறது. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
அன்பு சகோதரர்களே! ஏன் இந்த விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன் என்றால், இன்னும் சில வாரங்களில் மகத்தான ஒரு மாதத்தை நாம் சந்திக்கப் போகிறோம். ரமழான் என்ற மகத்தான மாதம். அல்லாஹ்வின் அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். அல்லாஹ்வின் இறுதி இறை வேதம் இறக்கப்பட்ட மாதம்.
அல்லாஹ்வின் நபிமார்களிலேயே மிக சிறந்தவரை தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் கலாம்களிலேயே சிறந்த கலாமை அல்லாஹு தஆலா அந்த நபிக்கு சிறந்த உம்மத்துக்கு இறக்கினானே அந்த மாதத்தை நாம் அடையப் போகிறோம்.
எப்பேர்பட்ட மகிழ்ச்சி இருக்க வேண்டும் தெரியுமா? ஆம் நாமும் மகிழ்கிறோம். அதற்காகத்தான் இப்போது இருந்தே இஃப்தாருக்கு என்ன பார்ட்டி செய்யலாம்? ஸஹருக்கு என்ன உணவு சாப்பிடலாம் என்ற திட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் ரமழான் எப்படி ஆகிவிட்டது? வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்பு அடிக்க வேண்டும். பெயிண்ட் அடிக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு லைட் போட வேண்டும். புதுப்பிக்க வேண்டும்.
ரசூலுல்லாஹி ﷺ ஸஹாபாக்களுடைய ரமழான் அப்படி அல்ல. அவர்களுடைய ரமழான் ஆன்மீக ரமழானாக இருந்தது. ஈமானுடைய ரமழானாக இருந்தது. தக்வா உடைய ரமழானாக இருந்தது தர்மத்திற்கான ரமழானாக இருந்தது.
எங்கேயாவது படித்திருக்கிறீர்களா? ஒருஹதீஸை காட்ட முடியுமா? லட்சக்கணக்கான ஹதீஸ்களில் ஒரு பலவீனமான ஹதீஸை காட்ட முடியுமா? ரசூல் ﷺ அவர்களோ, சஹாபாக்களோ ரமழான் மாதம் வருகிறது என்பதற்காக வீட்டை எல்லாம் சுத்தம் செய்து ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள் என்று பார்க்கிறோமா?
ஏன்? நாம் இந்த வயிறுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், நம்முடைய நாவின் ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், ரமழானையும் பட்டினி கிடக்க வேண்டிய ரமழானையும் அதற்காகவே ஆக்கிக்கொண்டோம்.
நோன்பு என்றால் என்ன? சாப்பிடுவது என்று அர்த்தமா? நோன்பு என்றால் என்ன பொருள்? சாப்பிடுவது, குடிப்பது, ருசி காண்பது என்றா பொருள். நோன்பு என்றால் சாப்பிடாமல், குடிக்காமல், பட்டினி போடுவது என்று பொருள்.
அன்றாடம் சாப்பிடக் கூடிய உணவுகளிலேயே, அந்த உணவையே எவ்வளவு சாதாரணமாக ஆக்கிக் கொள்ள முடியுமோ அப்படி ஆக்கி கொள்ள வேண்டும். செய்கிறோமா? சாதாரண நாட்களை விட விசேஷமான நாளாக ரமளானுடைய நாட்களை ஆக்கிக் கொண்டோம் உணவு சாப்பிடுவதிலே.
ஏதோ பேருக்கு ராத்திரியில் ஒரு கியாமுல்லைல் என்று தொழுதுட்டு நாமெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், எல்லாம் பத்ரு போருக்கு போற மாதிரி அல்லது போயிட்டு வந்த மாதிரி நினைச்சுட்டு இருக்கோம்.
எப்படி நினைக்கிறோம்? நம்ம வைக்கிற நோன்பையும், நம்ம தொழுகிற தொழுகையையும் நமக்கு என்ன நினைப்பு வருது. நாமெல்லாம் தபூக் போருக்கு போனதைப் போன்று, ஏறக்குறைய 410 கிலோமீட்டர் தூரம் பசியோடு ரசூல் ﷺ நடந்தார்களே, காலில் பலருக்கு செருப்பு இல்லாமல், உணவு இல்லாமல் பட்டினியோடு, ரமழான் மாதத்திலே மக்காவை வெற்றி கொள்வதற்காக நடைப்பயணமாக மதீனாவில் இருந்து நடந்தார்களே! மதீனாவில் இருந்து நோன்பு நோற்றவர்கள் மக்காவில் நாளை எதிரிகளை சந்திக்கின்ற வரை நோன்பு நோற்றவர்களாகவே அல்லாஹுவின் பாதையில் ஜிஹாதிலே சென்றார்கள்.
ரசூல் ﷺ சில சஹாபாக்களின் நிலையை பார்த்து, நோன்பை விடலாம் என்று சொன்னார்கள். அல்லாஹ்வும் அனுமதி அளித்திருந்தான். பயணத்திலே நோன்பை விடலாம் என்று. ஆனால், அல்லாஹ்வுடைய இந்த ரமழானுடைய நோன்பு நமக்கு ஜிஹாதிலே கிடைக்கிறதே என்று தோழர்கள் அந்த நோன்பை விட நினைக்கவில்லை.
சிலர் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள். அப்போதுதான் சொன்னார்கள், வேண்டாம் போதும் நிறுத்திக் கொள்ளுங்கள். பயண களைப்பு நாளை நாம் எதிரிகளை சந்திக்க இருக்கிறோம். நாளை யாரும் நோன்பு நோற்க வேண்டாம் என்று அல்லாஹ்வுடைய தூதர் கட்டளை போடுகின்ற வரை அல்லாஹ்வின் பாதையிலே ஜிஹாதிலே நோன்பிருந்தவர்களாக சஹாபாக்கள் சென்றார்கள். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1119,1120.
அன்பு சகோதரர்களே, ஆன்மீக பழக்கம் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம். நஃப்ஸுக்கு தர்பியத் கொடுக்காமல் இருக்கின்றோம். இந்த நஃப்ஸ் எப்படி தெரியுமா? இதை நீங்கள் எதற்கு பழக்கப்படுத்துகின்றீர்களோ அதை இந்த நஃப்ஸ் பழகிக் கொள்ளும். பிறகு, அந்த நஃப்ஸ் அதை தனக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளும். பிறகு அந்த நஃப்ஸுக்கு அதுதான் பிடிக்கும். அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அந்த நஃப்ஸு அதை விடுவதற்கு தயாராகாது. இதுதான் நம் நஃப்ஸுடைய நிலை.
நீங்கள் பாருங்கள்! இந்தப் பளு தூக்குவார்கள். ஒரு சாதாரண மனிதனால் ஒரு 50 கிலோ வரை ஈசியாக தூக்கலாம். கொஞ்சம் கஷ்டப்பட்டு 100 கிலோ வரை தூக்குகிறார்கள் இல்லையா. 150 கிலோ தூக்குகிறார்கள். அதற்காக பயிற்சி எடுக்கிறார்கள். எடுத்ததற்கு பிறகு, அது அவர்களுக்கு இலகுவாகிறதா இல்லையா.
ஒரு மனிதன் ஓடுகிறான். எவ்வளவு தூரம் விரைவாக ஒரு மனிதனால் சாதாரணமாக ஓட முடியும். கொஞ்சம் ஓடுவான், அதற்கு பிறகு மூச்சு இரைக்கும். சிரமப்படுவான். ஆனால், அதற்காக தன்னை பழக்கப்படுத்திக் கொண்டவன், அதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டவனுக்கு அந்த ஓடுதல் என்பது ஒரு பெரிய காரியம் அல்ல.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வின் தூதர் ﷺ சஹாபாக்களுக்கு இபாதத்துடைய பயிற்சி கொடுத்தார்கள். ஈமானுடைய பயிற்சியை கொடுத்தார்கள். அஹ்லாக் - நற்குணத்தினுடைய பயிற்சியை கொடுத்தார்கள். ஒழுக்கத்தினுடைய பயிற்சியை கொடுத்தார்கள். அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளுக்காக சிரமப்படுவதுடைய பயிற்சியை கொடுத்தார்கள்.
நாம் எப்படி? துன்யாவுக்காக சிரமப்படுவதற்கு பயிற்சி தானாக எடுத்துக் கொண்டோம். துன்யா என்றால் சிரமப்பட்டால் தான் கிடைக்கும் என்று நமக்கு நாமே புத்தி சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால், மறுமை என்று வந்துவிட்டால் எவ்வளவு அதை அலட்சியம் செய்ய முடியுமோ, எவ்வளவு அதை குறைத்து செய்ய முடியுமோ, அதுதான் நம்முடைய நிலைப்பாடாக இருக்கிறது.
அல்லாஹ்வின் அடியார்களே, ரமழான் வரப்போகிறது என்றால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட போகின்றன. அல்லாஹு அக்பர்! சொர்க்கம் அலங்கரிக்கப்பட போகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்பட போகின்றன. லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவை அல்லாஹு தஆலா வைத்திருக்கிறான். ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அந்த இரவு கிடைக்கப்பெற்றால் நன்மை எல்லாம் நமக்கு கிடைத்து விட்டது. அந்த இரவின் நன்மை கிடைக்கவில்லை என்றால் எல்லா நன்மைகளையும் அடியார் இழந்து விடுகின்றான். எப்பேர்பட்ட ரமழான் அது!
உணவுக்காக உள்ள ரமழான் அல்ல. சஹர் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இஃப்தார் கொஞ்சம் செய்து கொள்ளுங்கள். அல்லாஹு தஆலா நமக்கு சில தேவைகளை வைத்திருக்கிறான். அந்த தேவைகளை தேவைகளின் அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தேவைகளை தேவைகளின் அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தேவையை அளவுக்கு அதிகமாக நாம் தேடுகின்ற காரணத்தினால் தான் அதிலே வகைவகையாக விசாலமாக்கிக் கொள்கின்ற காரணத்தினால் தான் நம்மால் இபாதத் செய்ய முடியவில்லை.
இபாதத்திலே நம்முடைய மனம் ஈடுபடுவதில்லை. இபாதத் ருசியாக தெரிவதில்லை. ஏன் தெரியுமா? இந்த கல்பு இருக்கிறதே, இது ஒரு பாத்திரத்தை போன்று.
அறிஞர் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்; இந்த கல்பு ஒரு பாத்திரத்தை போல. இதிலே ஒன்று துன்யாவை வைக்க முடியும் அல்லது ஆகிரத்தை வைக்க முடியும். இரண்டையும் ஒன்று சேர்த்து வைக்க முடியாது. உங்களுடைய கவனம் ஒன்று மறுமையில் இருக்கும் அல்லது துனியாவில் இருக்கும்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களும் ரமழானை எதிர்பார்த்தார்கள். நாம் எதிர்பார்ப்பது போன்றா?
நாம் எப்படி? பாவங்கள் மன்னிக்கப்பட்ட அந்த தூதர் எப்படி? நினைத்துப் பாருங்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்.
உசாமா இப்னு ஜைது, ரசூலுல்லாஹ்வின் பாசத்திற்குரிய அந்த நேசர் (ஹிப்பு ரசூலில்லாஹ், இப்னு ஹிப்பு ரசூலில்லாஹ்) அல்லாஹ்வின் தூதரே! வேறு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஷஅபான் மாதத்திலே நோன்பு வைக்கிறீர்களே.
பார்த்தீர்களா. ரமழானை எப்படி வரவேற்பது? ஷஅபானில் நோன்பு வைப்பது மூலமாக தான். குறைந்தபட்சம் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வைக்கலாம் அல்லவா? குறைந்தபட்சம் அந்த மாதத்தின் அய்யாமுல் ஃபீழ் அந்த மூன்று இரவுகளிலே வைக்கலாம் அல்லவா?
இன்று பலர் அவர்களுடைய நிலையை பார்த்தால் பரிதாபம் ஆகிவிடும். முதல் நோன்பிலே லுஹரிலே மயக்கடித்து கீழே விழுந்து விடுவார்கள். அதோட ஃபிளாட். அஸர் நேரத்துல முக்காவாசி பேரு ஃபிளாட். ஏன்? அந்த வருஷம் ஃபுல்லா நோன்பு வச்சிருக்க மாட்டாங்க.
சொல்லுவாங்க; அது முதல் நோன்பு. ஃபர்ஸ்ட் நோன்பு அட்டாக் பண்ணிவிட்டது. ஏன் அவர் பசியாக இருந்து பழகவே இல்லை. நஃபிலான நோன்புகள் வைத்து அவர் தன்னை பழக்கப்படுத்தவில்லை. அதனால் முதல் நோன்பு அவ்வளவு சிரமமாக இருக்கும்.
அல்லாஹ்வின் அடியார்களே, யாருக்கு சிரமமாக இருக்கும்? யார் எப்பொழுதும் தன்னுடைய வயிறை ஒரு ஆடு மாட்டுக்கு தீனி போடுவதைப் போல தீனி போட்டு, ஆண்டு முழுவதும் வைத்திருந்தாரோ அவருக்கு சிரமமாக இருக்கும்.
யார் திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைத்தாரோ, அவர்களுக்கு நோன்புடைய எந்த சிரமமும் தெரியாது.
உசாமா ரலியல்லாஹு அன்ஹு கேட்கின்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த மாதத்தில் இவ்வளவு நோன்பு நோற்கிறீர்களே நீங்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதை பாருங்கள்.
இந்த மாதத்தில் மக்கள் நோன்பை மறந்து விடுகிறார்கள். இந்த மாதம் ரஜபுக்கும் ரமழானுக்கும் இடையில் இருக்கிறது.
சகோதரர்களே, இங்கே இன்னும் ஒன்றை சேர்த்து சொல்லிக் கொள்கிறேன். நம்முடைய முஸ்லிம் வாலிபர்கள் பலருக்கு இஸ்லாமிய மாதங்களே தெரிவது கிடையாது. ரமழான் தெரியும் பலருக்கு. நோன்பு வைக்கனும். இஸ்லாமிய மாதங்களை முதல் மாதத்தில் இருந்து இறுதி மாதம் வரை அந்த 12 மாதங்களை சொல்லுங்கள் என்றால் தெரியுமா?
நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அந்த மாதங்களில் நான்கு மாதங்கள் மிகப் புனிதமான மாதங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே. அதன் புனிதமான மாதங்கள் தெரியுமா? அந்த புனிதமான மாதங்களில் ஒன்றுதான் ரஜப் மாதம்.
புனிதமான மாதங்களில் வணக்க வழிபாடுகள் செய்வது, அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. ஆக ரஜபிலே வணக்க வழிபாடுகள் செய்தார்கள். பிறகு ரமழான் வரப்போகிறது என்று பலர் இந்த ஷஅபானை மறந்து விடுகிறார்கள், அலட்சியம் செய்து விடுகிறார்கள் என்று அல்லாஹுவின் தூதர் ﷺ சொன்னார்கள்.
மேலும் சொன்னார்கள்; ஏன் இந்த மாதத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இந்த மாதத்திலே நம்முடைய அமல்கள் அல்லாஹ்விடத்திலே உயர்த்தப்படுகின்றன.
அல்லாஹு அக்பர்! ரசூலுல்லாஹ் ﷺ உடைய பணிவை பாருங்கள்! மகத்தான அந்த இறைத்தூதருடைய பயத்தை பாருங்கள். இரவெல்லாம் கால் வலிக்க நின்று வணங்கிய அந்த ரசூலுல்லாஹ் உடைய பயத்தை பாருங்கள். தனது வாழ்நாளில் எல்லாம் தாவாவிலே, ஜிஹாதிலே, ஹிஜ்ரத்திலே, உபரியான வணக்க வழிபாடுகளிலே, அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்மை செய்வதிலே கழித்த அந்த மகத்தான முத்தகீன்களுடைய தலைவரின் அந்த பயத்தை பாருங்கள்.
சொன்னார்கள் என்ன தெரியுமா? என்னுடைய அமல் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்பட வேண்டும். நான் நோன்பாளியாக இருக்கும்போது.
ஒவ்வொரு நாளும் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு நாள் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. பிறகு வருடத்தில் ஒருமுறை அமல்கள் உயர்த்தப்படுகின்றன. அது இந்த ஷஅபானுடைய மாதம். எந்த நாள் என்று தெரியாது. ஆகவே, அந்த ஷஅபானுடைய மாதத்தில் என்னுடைய அமல்கள் உயர்த்தப்படக்கூடிய நேரத்தில் நான் நோன்பிலே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நோன்பு இந்த ஷஅபானிலே வைக்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள். (குறிப்பு:3)
அறிவிப்பாளர் : உஸாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 2356.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள், ரசூலில்லாஹி ﷺ அவர்களுக்கு நோன்பிலேயே பிரியமான நோன்பு ஷஅபானுடைய நோன்பு.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 13403.
ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை பற்றி அவர்களுடைய மனைவிமார்கள் சொல்கிறார்கள், ரமழானை தவிர வேறு மாதத்தில் முழுமையாக ரசூலுல்லாஹ் ﷺ நோன்பு வைக்க மாட்டார்கள். ஆனால் ஷஅபானைத் தவிர. ஷஅபான் மாதத்தில் மிகுந்த அதிகமான அளவு இந்த மாதம் முழுக்க நோன்பிலே இருப்பார்கள். (குறிப்பு:4)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1969.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ எந்த அளவுக்கு என்றால், ஷஅபானையும் ரமழானையும் இரண்டு மாதங்களையும் நோன்பிலேயே கழித்து விடுவார்கள்.
அதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? எப்படி ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்னால் முன் பின் சுன்னத் இருக்கிறதோ, அதுபோன்றுதான் ரமழானுக்கு முன்பாக அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இந்த ஷஅபானுடைய நோன்பை கொடுத்திருக்கின்றான்.
அதற்குப் பிறகு ஷவ்வாலிலே 6 நோன்பு வைக்கிறோம் அல்லவா. அது ஃபர்ளான தொழுகைக்கு பின்னால் இருக்கக்கூடிய அந்த சுன்னத்தான தொழுகையை போன்று ரமழானுக்கு பிறகு ஆறு நோன்பை அல்லாஹ் கொடுத்தான்.
அதற்கு முன்னால் ரமழானுக்கு முன்பாக இந்த மாதம் எல்லாம் நோன்பு வைப்பதை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ விரும்பினார்கள். வலியுறுத்தினார்கள். அதற்கான சிறப்பை சொன்னார்கள். மக்கள் எல்லாம் இதை மறந்து விடுவார்கள். அல்லாஹ்வை மறந்து இருக்க கூடிய நேரத்தில் இபாதத்தை மறந்திருக்கக்கூடிய நேரத்திலே அல்லாஹ்வை வணங்குவது அல்லாஹ்விற்கு மிக பிரியமானது.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ் நமக்கு கொடுத்த இந்த வாழ்க்கையை இந்த இபாதத்திற்கு பயன்படுத்துவதற்கும், அல்லாஹ்வை திருப்தி படுத்தக் கூடிய அமல்களில் நம்முடைய மறுமைக்காக சேகரித்துக் கொள்வதற்கும் அருள் புரிவானாக!
பாவங்களில் இருந்து, கெட்ட செயல்களில் இருந்து, கெட்ட கொள்கைகள், கெட்ட குணங்கள் கெட்ட காரியங்களில் இருந்து அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது சமுதாயத்தையும் பாதுகாத்து அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
3401 - حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ [ص:473] إِزَارِهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدُ، فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ، فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ " وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَعَائِشَةَ،: " وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ وَقَالَ: فَلْيَنْفُضْهُ بِدَاخِلَةِ إِزَارِهِ " [حكم الألباني] : حسن سنن الترمذي ت شاكر (5/ 472)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனது படுக்கையிலிருந்து எழுந்து, பிறகு மீண்டும் அங்கு திரும்பினால், அவர் தனது ஆடையின் ஓரத்தைக் கொண்டு (படுக்கையை) மூன்று முறை உதறட்டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் அதில் (பூச்சிகள் போன்றவைகளில்) என்ன புகுந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
அவர் படுக்கும்போது இவ்வாறு கூறட்டும்: பிஸ்மிக ரப்பீ வளஃது ஜன்பீ, வ பிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்ஸல்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹீ இபாதகஸ் ஸாலிஹீன்.
(பொருள்: அல்லாஹ்வே! உனது பெயரால் எனது விலாவைப் படுக்கையில் வைத்தேன். உனது உதவியாலேயே அதை உயர்த்தவும் (எழுந்திருக்கவும்) செய்வேன். நீ எனது உயிரை (தூக்கத்தில்) கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள்புரிவாயாக! அதை நீ மீண்டும் அனுப்பி வைத்தால் (உயிர் வாழச் செய்தால்), உனது நல்லடியார்களை எதனைக் கொண்டு பாதுகாப்பாயோ அதைக் கொண்டு இதையும் பாதுகாப்பாயாக!)
பிறகு அவர் விழித்தெழும்போது இவ்வாறு கூறட்டும்: அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீ ஜஸதீ, வ ரத்த அலய்ய ரூஹீ, வ அதின லீ பிதிக்ரிஹி.
(பொருள்: எனது உடலில் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்து, எனது உயிரை என்னிடம் திருப்பித் தந்து, அவனைத் துதிப்பதற்கு எனக்கு அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3401.
குறிப்பு: (2)
كُنَّا مع النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ في السَّفَرِ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا المُفْطِرُ، قالَ: فَنَزَلْنَا مَنْزِلًا في يَومٍ حَارٍّ، أَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ الكِسَاءِ، وَمِنَّا مَن يَتَّقِي الشَّمْسَ بيَدِهِ، قالَ: فَسَقَطَ الصُّوَّامُ، وَقَامَ المُفْطِرُونَ، فَضَرَبُوا الأبْنِيَةِ وَسَقَوْا الرِّكَابَ، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: ذَهَبَ المُفْطِرُونَ اليومَ بالأجْرِ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : أنس بن مالك | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1119 التخريج : أخرجه البخاري (2890) بمعناه، ومسلم (1119) واللفظ له
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர்; நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதிருந்தவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன (ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1119,1120.
குறிப்பு: (3)
يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ الراوي : أسامة بن زيد | المحدث : الألباني | المصدر : صحيح النسائي الصفحة أو الرقم: 2356 | خلاصة حكم المحدث : حسن
உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பது போல் வேறு எந்த மாதத்திலும் (இவ்வளவு அதிகமாக) நோன்பு நோற்க நான் கண்டதில்லை' என்று கூறினேன். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'அது ரஜப் மற்றும் ரமளானுக்கு இடையில் உள்ள ஒரு மாதம்; மக்கள் அதைப் பற்றி கவனக்குறைவாக இருக்கிறார்கள். அது அகிலங்களின் இறைவனிடம் அமல்கள் உயர்த்தப்படும் மாதமாகும். எனவே, நான் நோன்பாளியாக இருக்கும் போது எனது அமல்கள் உயர்த்தப்படுவதை நான் விரும்புகிறேன்.'"
அறிவிப்பாளர் : உஸாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 2356.
குறிப்பு: (4)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَصُومُ حتَّى نَقُولَ: لا يُفْطِرُ، ويُفْطِرُ حتَّى نَقُولَ: لا يَصُومُ، فَما رَأَيْتُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إلَّا رَمَضَانَ، وما رَأَيْتُهُ أكْثَرَ صِيَامًا منه في شَعْبَانَ. الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1969 | خلاصة حكم المحدث : [صحيح]
(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1969.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/