HOME      Khutba      துஆவும் ஈமானிய புத்துணர்ச்சியும் | Tamil Bayan - 1035   
 

துஆவும் ஈமானிய புத்துணர்ச்சியும் | Tamil Bayan - 1035

           

துஆவும் ஈமானிய புத்துணர்ச்சியும் | Tamil Bayan - 1035


துஆவும் ஈமானிய புத்துணர்ச்சியும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : துஆவும் ஈமானிய புத்துணர்ச்சியும்
 
வரிசை : 1035
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 16-01-2026 | 27-07-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் : 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய மகத்தான இறுதி இறைத் தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை — இறையச்சத்தை — நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு தஆலா நம்மை மன்னித்து அருள்வானாக! நல்லோரின் கூட்டத்தில் அல்லாஹு தஆலா நம்மை சேர்ப்பானாக!
 
அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையிலும், அவன் மீது உண்டான பயத்திலும், அவன் மீது கொண்ட அன்பிலும் அல்லாஹு தஆலா நம்மை எப்போதும் நிலைநிறுத்தி வைப்பானாக!
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை நாம் அணுக வேண்டாமா? அல்லாஹு தஆலாவிடம் நாம் பேச வேண்டாமா? அல்லாஹு தஆலா நாம் பேசுவதை கேட்க வேண்டாமா?
 
நமக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன? நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன? உள்ளங்களில் என்ன குழப்பங்கள் இருக்கின்றன? என்ன சந்தேகங்கள் உள்ளன?
 
குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறதா? பொருளாதாரத்தில் சிக்கல்கள் உள்ளனவா? அல்லது மார்க்க விஷயங்களில் குழப்பங்களும் தடுமாற்றங்களும் இருக்கின்றனவா?
 
இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவை அனைத்தையும் செவி ஏற்பதற்கும் கேட்பதற்கும் நம்முடைய ரப்பு இருக்கின்றான்.
 
“என்னை என் அடியான் அழைக்க மாட்டானா?” என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
அல்லாஹ்விடம் பேசுவதற்காக அல்லாஹு தஆலா கொடுத்த மிகப் பெரிய இபாதத்துதான் இந்த துஆ என்ற வணக்கம்.
 
ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலா, சூரத்துல் பகராவின் 186ஆம் வசனத்தில் மிக அற்புதமாக சொல்கிறான். அல்லாஹு தஆலா நம்மீது எவ்வளவு அருளும், கருணையும், அன்பும் பாசமும் வைத்திருக்கிறான் என்பதற்கு இதுவே ஒரு பெரும் சான்று.
 
யோசித்துப் பாருங்கள்! அல்குர்ஆனை நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால், அல்லாஹு தஆலாவின் ஒவ்வொரு வசனத்திலும் அவனுடைய ரஹ்மத் வெளிப்படுவதை காணலாம். அவனுடைய கருணை வெளிப்படுவதை உணரலாம்.
 
அல்லாஹு தஆலா தனது நபியிடம் பேசுகிறான்;
 
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
 
இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக! (அல்குர்ஆன் 2:186)
 
வசனத்தின் கருத்து : நபியே! என்னுடைய அடியார்கள் உங்களிடத்திலே என்னை பற்றி கேட்டு வருகிறார்கள். என்னிடத்திலே பேசுவதற்காக. எப்படி பேசுவது? அல்லாஹ்விடத்திலே சத்தமாக பேச வேண்டுமா? அவன் தூரமாக இருக்கின்றானா? சமீபத்தில் இருக்கின்றானா? மெதுவாக பேசினால் போதுமா? எப்படி அழைக்க வேண்டும்? எந்த பெயர்களைக் கொண்டு அழைக்க வேண்டும்? என்றெல்லாம் உங்களிடத்திலே கேட்டு வருகின்றார்கள். 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்;
 
فَاِنِّىْ قَرِيْبٌ
 
அறிஞர்கள் சொல்கிறார்கள், இந்த இடத்திலே அந்த வாக்கியத்தின் அமைப்பு;
 
فَقُلْ فَاِنِّىْ قَرِيْبٌ
 
என்று இருக்கும்.
 
நபியே உங்களிடத்திலே கேட்டு வருகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள். நான் அருகாமையில் இருக்கின்றேன் என்று. 
 
ஆனால், அல்லாஹு தஆலா அந்த “குல்” என்ற  சொல்லை இந்த இடத்திலிருந்து எடுத்துவிட்டான். அடியார்களே! என்று நேரடியாக அவன் நம்மிடத்திலே பேசுகின்றான்.
 
فَاِنِّىْ قَرِيْبٌ
 
நான் உங்களுக்கு நெருக்கத்தில் இருக்கிறேன். 
 
துஆ என்று வந்துவிட்டால் இன்று நம்மில் பலர் தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் அல்லவா! அப்படி அல்ல.
 
அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதற்கு, அவனைத் தவிர வேறு எந்தச் சிபாரிசும் நமக்கு தேவையில்லை. யாரும் எந்த இடைத்தரகரின் மூலமும், எந்த மனிதரின் துணையுமின்றி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கலாம். அல்லாஹ்விடத்தில் நேரடியாக கேட்க வேண்டும்.
 
அப்படித்தான் அல்லாஹு தஆலா விரும்புகின்றான். அவன் மகா கருணையாளன் கருணையாளர்களில் எல்லாம் மிகப்பெரிய கருணையாளன். அவனிடத்தில் பரிந்துரை செய்யப்படுவது அவனுடைய புகழைக் கொண்டு தான், அவனை போற்றுவதைக் கொண்டு தான், அவனை வணங்குவதைக் கொண்டு தான்.
 
அவனிடத்தில் கேட்பதற்கு இன்னொருவரின் துணை தேடப்படுவதில்லை. நம் ரப்புக்கும்  நமக்கும் இடையில் எந்த தடையும் இல்லை.
 
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌
 
எனக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. அற்புதமான தன்மைகள் இருக்கின்றன. அவற்றை கூறி என்னிடத்திலே கேளுங்கள் என்று அல்லாஹு தஆலா வழிகாட்டுகிறான். (அல்குர்ஆன் 7:180)
 
அல்லாஹு தஆலா அவன் புகழப்படுவதை விரும்புகிறான். அல்லாஹுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
ولَا أحَدَ أحَبُّ إلَيْهِ المِدْحَةُ مِنَ اللَّهِ، فَلِذلكَ مَدَحَ نَفْسَهُ
 
தான் புகழப்பட வேண்டும் என்பதை விரும்பக் கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4637.
 
அவன் அதற்கு தகுதியானவன். அவனுடைய அழகிய திருப்பெயர்களிலேயே அல் முத்தக்கப்பிர் —பெருமைக்குரியவன், அல் முதஆலி  — உயர்ந்தவன், உயர்ந்து கொண்டு இருப்பவன், தனது உயர்வை பெருமையாக பேசக்கூடியவன், அல் அளீம்‌ — மகத்தானவன்.
 
அல்லாஹு தஆலா அடியார்கள் தன்னிடத்தில் துஆ கேட்பதை விரும்புகிறான். நம்முடைய இறை நம்பிக்கை  அல்லாஹ்வின் மீது நாம் வைத்திருக்கக் கூடிய அந்த ஈமான், அந்த ஈமானிலே வலிமை வேண்டுமா? அந்த ஈமான் உற்சாகமடைய வேண்டுமா? அந்த ஈமானிலே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட வேண்டுமா? அந்த ஈமானிலே ஒரு பிரகாசம், ஒரு ஒளி, ஒரு உயிரோட்டம் ஏற்பட வேண்டுமா? கொஞ்ச நேரம் துஆவிலே கழியுங்கள். கொஞ்ச நேரம் அல்லாஹ்விடத்தில் தனிமையிலே உட்கார்ந்து, அல்லாஹ்வை நினைத்து மனமுருகி, அவனிடத்திலே கெஞ்சி, சில துஆக்களை கேட்டு, அவனுடைய வல்லமைகளை நினைத்து, அவனது புகழை நினைத்து, கொஞ்சம் கண்ணீர் சிந்துங்கள். கொஞ்சம் கண் கலங்குங்கள். உள்ளத்தால் உருகுங்கள்.
 
அல்லாஹ் நமக்கு நெருக்கமாகி விடுகின்றான். நம்மை அல்லாஹ் அவ்வளவு நெருக்கமாக்கி கொள்வது எப்பேர்ப்பட்ட மகத்தான பாக்கியம்! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
عَينانِ لا تمسُّهما النَّارُ: عينٌ بَكَت من خشيةِ اللَّهِ، وعَينٌ باتت تحرُسُ في سبيلِ اللَّهِ
 
இரண்டு கண்களை அல்லாஹு தஆலா நரகத்தின் மீது ஹராம் ஆக்கி விட்டான். 
 
(கண்களை என்றால் கண்களை மட்டுமா? அந்த கண்களை உடையவர்களையும்தான்.)
 
1. அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்.  
 
2. அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து காவல் காத்த கண்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மீதி, எண் : 1639.
 
அந்த அழுகை எப்போது வரும்? துஆவிலே வரும். அல்லாஹ்விடத்தில் சொல்ல வேண்டும். யா அல்லாஹ்! அன்று நான் அந்த பாவத்தை செய்து விட்டேனே! என்னை தண்டித்து விடாதே! நீ என்னை தண்டித்தால் நான் அதற்கு தகுதி உடையவன். நீ என்னை மன்னித்தால் என்னை மன்னிப்பதற்கு நீ தகுதி உடையவன்.
 
அறிஞர்கள் சொல்வார்கள்; யா அல்லாஹ்! உன்னிடத்திலே நான் சொர்க்கத்தை கேட்பதற்கு தகுதி உள்ளவன் அல்ல. ஆனால், நரகத்தை தாங்குவதற்கு என்னிடத்தில் சக்தியும் கிடையாது. எனது பாவத்தை மன்னித்து விடு! நீ பாவங்களை மன்னிக்க கூடிய மகத்தான இறைவன் அல்லவா!
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் அச்சத்தால் அழக்கூடிய அந்த அழுகை என்பது துஆவிலே வரும். அல்லாஹ்விடத்தில் பேசும் போது வரும். அல்லாஹ்வை நினைப்பது, அல்லாஹ்விடத்தில் சொல்வது, தன்னுடைய தேவையை சொல்வது, நாம் எதை பயப்படுகிறோமோ அதை அல்லாஹ்விடத்திலே சொல்வது. 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய உள்ளங்களுக்கு இந்த துஆவின் மூலமாக வலிமையை தருகிறான். ரப்புல் ஆலமீன் சொல்கிறான். 
 
فَاِنِّىْ قَرِيْبٌ
 
அடியார்களே! நான் சமீபமாக இருக்கிறேன். 
 
அவனைவிட  சமீபமானவர் யார் இருப்பார்? அவனைவிட அடியார்களுக்கு சமீபமானவர்கள் யார் இருப்பார்கள்? எல்லா வகையிலும் அவன் நெருக்கமானவன். நம்முடைய கூக்குரலை கேட்பதில் அவனைவிட சமீபமானவர் யாரும் இல்லை. நம்முடைய உள்ளங்களில் ரகசியங்களை அறிந்து கொள்வதில் அவனைவிட சமீபமானவர் யாருமில்லை. நமக்கு உதவுவதில், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் அவனைவிட சமீபமானவர் நமக்கு யாரும் இல்லை 
 
  اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ‏
 
நல்லறம் புரிவோருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை மிக சமீபமானதாகும். (அல்குர்ஆன் 7:56)
 
  نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ‌ 
 
(அதுதான்) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து (உங்களுக்கு) உதவியும் வெகு விரைவில் கிடைக்க இருக்கும் வெற்றியும் ஆகும். (அல்குர்ஆன் 61:13)
 
அல்லாஹ் அழைக்கிறான். எதன் பக்கம் அழைக்கிறான்? அவனுடைய கட்டளைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று அழைக்கிறான். எப்பேர்ப்பட்ட ரப்பு பாருங்கள்! 
 
அவன் நாடினால் நம்மிடத்தில் இருந்து நமக்கு எந்த கூலியும் கொடுக்காமல், எந்த வெகுமதியும் கொடுக்காமல் நம்மிடத்தில் வேலை வாங்கலாம் இல்லையா? யார் அவனிடத்திலே அதிகாரம் செய்ய முடியும். யாராவது செய்ய முடியுமா? யாரும் அவரிடத்தில் அதிகாரம் செலுத்த முடியாது. அவன் தொழு என்றால் நாம் தொழுது தான் ஆக வேண்டும்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நம்மிடத்திலே இபாதத்துகளை பெற்றுக் கொண்டு, அந்த இபாதத்துகளுக்கு கூலியும் தருகிறேன் என்று சொல்கிறான். அதுவும் எப்படிப்பட்ட கூலி?
 
நீ ஒன்றைக் கொண்டு வந்தால் பத்து மடங்காக ஆக்கித் தருகிறேன் என்று சொல்கிறான்.
 
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ 
 
எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. (அல்குர்ஆன் 6:160)
 
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ 
 
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை வழங்குபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணமாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2:261)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா அவன் அழைக்கிறான். எனக்கும் நீங்கள் கொஞ்சம் பதில் கொடுங்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள். அல்லாஹு தஆலா நம்மை துஆ கேட்க சொல்கிறான். பிறகு, இந்த ஈமானை அல்லாஹு தஆலா சொல்கிறான். இந்த துஆ என்பது நம்முடைய ஈமானை உறுதிப்படுத்துகின்றது. நமக்கு அல்லாஹ்வின் மீது உண்டான யகீனை உறுதிப்படுத்துகின்றது. 
 
அல்லாஹு தஆலா எப்படி கேட்கிறான் பாருங்கள்! சூரத்துல் நம்லுடைய 62 ஆவது வசனத்தை படித்துப் பாருங்கள். எப்படி எல்லாம் அல்லாஹு தஆலா நம்முடைய கவலைகளுக்கு மருந்திடுகிறான். காயப்பட்ட நமது உள்ளங்களை அவன் ஆற்றுகிறான் பாருங்கள்!
 
اَمَّنْ يُّجِيْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوْٓءَ وَيَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ‌  ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ  قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ‏
 
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 27:62)
 
அல்லாஹு தஆலா அதிகாரமாக கேட்கின்றான். எப்படி? சிரமத்தில் இருப்பவன், துன்பத்தில் இருப்பவன், பிரச்சினையிலே சிக்கிக் கொண்டவன் அழைத்தால் அந்த அழைப்புக்கு யார் பதில் கொடுப்பார்கள்? அவனுடைய கஷ்டத்தை, சிரமத்தை யார் போக்குவார்? இருக்கின்றார்களா? சவால் விட்டு கேட்கிறான்.
 
ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ
 
அல்லாஹ்வுடன் இன்னொரு கடவுளா? அல்லாஹ்வை தவிர வேறு ஒரு ஆண்டவனா? உங்களது கூக்குரலுக்கு பதில் கொடுப்பவன், உங்களது அழைப்பை ஏற்பவன், எப்படி நீங்கள் அவனை மறக்க முடியும்? எப்படி நீங்கள் அவனை நிராகரிக்க முடியும்? அவனை விட்டு எப்படி நீங்கள் தூரமாக முடியும்?
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நம்மிடத்திலே சொல்கிறான்;
 
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِيَّاهُ‌ 
 
இன்னும், கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. (அல்குர்ஆன் 17:67)
 
உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும் பொழுது அவனைத் தவிர நீங்கள் வேறு யாரையும் அழைப்பதில்லையே! நீங்கள் முன்னால் அழைத்துக் கொண்டிருந்த எல்லாம் மறைந்து விடுகின்றனவே! அப்படி இருக்கும்போது அந்த ரப்பை நீங்கள் எப்படி மறக்கலாம்? எப்படி அவனை விட்டு நீங்கள் தூரமாகலாம்?
 
அல்லாஹு தஆலா நம்மை அவனுக்கு அருகாமையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறான். எப்போதும் நம்முடைய பார்வை அவனை முன்னோக்கி கொண்டிருக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கள் அவனை முன்னோக்கி கொண்டிருக்க வேண்டும். அவனுடைய கஸானாவின் மீது நம்பிக்கை வைத்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
 
அன்பான சகோதரர்களே! நமக்கு ஏன் இந்த துஆவிலே ஈடுபாடு ஏற்படுவதில்லை என்றால், நாம் இந்த அஸ்பாபுகளை கொண்டே பழகிவிட்டோம். எந்த அளவு பழகிவிட்டோம் என்றால், அல்லது அல்லாஹ்விடமிருந்து எந்த அளவு தூரம் ஆகிவிட்டோம் என்றால், காரணங்களின் மீது நமக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை அதிகமாகவும், உறுதியாகவும், வலிமையாகவும் இருக்கிறது. அல்லாஹ்வின் மீது உண்டான நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது. குறைவாக இருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பானாக!
 
நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்? காரணங்களை எல்லாம் செய்து கொண்டு அல்லாஹ்வை அழைத்தால் தான் அல்லாஹ் பதில் கொடுப்பான் என்று நம்முடைய  புரிதல்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! கண்டிப்பாக மனிதர்களாகிய நாம், படைப்புகளாகிய நாம் காரணங்களை ஒருபோதும் புறந்தள்ள கூடாது. மறுக்கக்கூடாது. ஒதுக்க கூடாது. மருந்தும் சாப்பிட வேண்டும். துஆவும் கேட்க வேண்டும். சிகிச்சையும் எடுக்க வேண்டும். துஆவும் கேட்க வேண்டும். உடலால் உழைத்து சிரமப்பட்டு ரிஸ்கை தேட வேண்டும். அல்லாஹ்விடத்தில் ரிஸ்கை கேட்கவும் வேண்டும். 
 
ஆனால், நம்முடைய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்றால், நம்முடைய யகீன் எப்படி இருக்க வேண்டும் என்றால், எனது ரப்பு எனக்கு இதை அவனுடைய அருளால் கொடுத்தான். என்னுடைய முயற்சியால் அல்ல. என்னுடைய ரப்பு எனக்கு இதை அவனுடைய கருணையால் கொடுத்தான். என்னுடைய திறமையால் அல்ல. 
 
என்னுடைய ரப்பு எனக்கு இந்த நோயை அவனுடைய கருணையால் சுகப்படுத்தினான். இந்த மருந்தால் அல்ல! என் பசியை போக்கியவன் அல்லாஹ்! இந்த உணவு அல்ல! என் தாகத்தை தீர்த்தவன் அல்லாஹ்! இந்த நீர் அல்ல! என்னுடைய நோயை குணப்படுத்தியவன் அல்லாஹ்! இந்த மருந்தல்ல! ஆயிரம் பேர் உதவி செய்திருக்கலாம். அந்த உதவிகள் எல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாக நம்ப வேண்டும். 
 
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ‌ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏
 
இன்னும், உங்களுக்கு நற்செய்தியாகவும், அதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைவதற்காகவும் தவிர அல்லாஹ் அதை (-வானவர்களை இறக்கிவைப்பதை) ஏற்படுத்தவில்லை. இன்னும் உதவி வராது, மிகைத்தவனும் ஞானவானுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர. (அல்குர்ஆன் 3:126)
 
உதவி அல்லாஹ்வின் புறத்திலிருந்து பல போர்க்களங்களில் . பத்ரிலே அல்லாஹ் வானவர்களை இறக்கி உதவி செய்தான். உஹதிலே உதவி செய்தான். அஹ்ஸாபிலே அல்லாஹ் உதவி செய்தான். ஹுனைனிலே உதவி செய்தான். தபூக்கிலே அல்லாஹ் உதவி செய்தான். இப்படி அல்லாஹு தஆலா அவனது வானவர்களின் படைகளைக் கொண்டும் இன்னும் நாம் அறியாத எத்தனையோ அவனுடைய பல இராணுவங்களைக் கொண்டு அல்லாஹ் உதவி செய்வான். உதவி செய்கிறான். உதவி செய்தான், செய்து கொண்டே இருப்பான். ஆனால், எல்லா உதவிகளும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து.    
 
எட்டு ஆண்டுகள் சாதாரணமான தியாகமா? எத்தனை தோழர்களை தியாகம் செய்திருப்பார்கள்? எப்பேர்ப்பட்ட திட்டங்கள், தொடர் போர்கள் எல்லாம் ஒரு பக்கம், மக்காவிற்கு செல்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களாக, பயந்த நிலையில் தப்பிப்பதற்கு ஒரு இடம் கிடைக்காதா என்று ஓடிய முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அதே மக்காவிற்குள் நுழையும் பொழுது, 
 
எனக்கு இந்த வெற்றியை கொடுத்தவன் அல்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனது வாக்கை நிறைவேற்றினான். 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1905.
 
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ‏
 
(அல்லாஹ்வின் தூதரை எதிர்க்கும்) இந்த கூட்டங்கள் எல்லாம் விரைவில் தோற்கடிக்கப்படுவார்கள். இன்னும், புறமுதுகு காட்டுவார்கள். (அல்குர்ஆன் 54:45)
 
கண்டிப்பாக முஸ்லிம்களுக்கு முன்னால் எதிரிகள் தோற்பார்கள் என்று அல்லாஹ் சொன்னான். அந்த வாக்கை அல்லாஹ் நிறைவேற்றினான். எல்லா நிஃமத்துகளையும் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்தார்கள்.
 
அன்பு சகோதரர்களே! இன்று நமக்கு அந்த யகீன் இருக்கிறதா? சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் என்னுடைய திறமையால் சேர்த்தது என்று நம்பிக்கை வைத்துக்கொண்டு, துஆ கேட்டால் எப்படி அந்த துஆ, என்னுடைய அறிவால், திறமையால், என்னுடைய அனுபவத்தால் எனது படிப்பால், நான் என்னை செட்டில் ஆக்கிக் கொண்டேன். இந்த துன்யா எல்லாம் நான் தேடியது. என் தகப்பன் கொடுத்தது. என் குடும்ப சொத்து. எனது திறமை. எனது அறிவு.
 
அன்பு சகோதரர்களே! காரூனுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எல்லாம் எனது திறமை என்று சொன்னான்.
 
قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ 
 
எனது திறமையால் எனக்கு கொடுக்கப்பட்டது என்று சொன்னான். எனது அறிவால் நான் சம்பாதித்தது என்று சொன்னான். (அல்குர்ஆன் 28:78)
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நமக்கு இந்த துஆவிலே ஏன் ஈடுபாடு ஏற்படுவதில்லை. நமக்கென்று ஒரு அறிவு இருக்கிறது. நமக்கென்று ஒரு திட்டம் இருக்கிறது. நமக்கென்று ஒரு திறமை இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியும். எனக்கு அறிவு இருக்கிறது. என்னை சுற்றி குடும்பம் இருக்கிறது. கை கொடுப்பார்கள். என்னை சுற்றி அவர் இருக்கிறார். எனக்கு அவரை தெரியும். இவரை தெரியும். இப்படி எல்லாம் நமக்கு நாமே அல்லாஹ் அல்லாதவர்களை கொண்டு நமக்கு ஒரு வலையை பின்னி வைத்திருக்கிறோம். 
 
அவர்களோடு நம்முடைய நம்பிக்கைகளை பகிர்ந்து கொண்டோம். அவர்களோடு நமது உள்ளத்தின் தொடர்புகளை ஆழப்படுத்திக் கொண்டோம்.
 
அன்பு சகோதரர்களே! எப்போது துஆவிலே நம்பிக்கை வரும்? எப்போது துஆவிலே அந்த ஈமானிய உள் உணர்வு, ஈமானுடைய புத்துணர்ச்சி, ஈமானிய அந்த அழுத்தம் ஏற்படும்? இவர்கள் யாரும் எனக்கு உதவ முடியாது. அல்லாஹ் நாடினால் தவிர. எனக்கு யாரும் இல்லை. ரப்பே உன்னை தவிர. எல்லாம் இருக்கும்போது எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்புவது அதுதான் அந்த யகீன்.
 
மூஸா நபி இடத்திலே அதே கைத்தடி இருந்தது. எந்த கைத்தடி? அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட போது, பாம்பாக மாறியதோ எந்த கைத்தடி. ஃபிர்அவ்னின் சமூகத்துக்கு முன்னால் கைத்தடியாக மாறியதோ அதே கைத்தடி இருந்தது. ஆனால், அந்த கைத்தடியிடத்திலே அவர்கள் உதவி தேடவில்லையே!
 
ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்து செல்லும்போது மூஸா நபியின் நம்பிக்கை கைத்தடியின் மீது இருந்திருக்குமேயானால் தன்னுடைய முஃஜிசாவின் மீது இருந்திருக்குமேயானால் அந்த கைத்தடியை தூக்கி எறிந்திருப்பார்கள். பாம்பாக மாறி ஃபிர்அவ்னை அச்சுறுத்து; அவனுடைய படையை திருப்பு என்று.
 
சகோதரர்களே! அப்படித்தான். எல்லாப் படைப்புகளும். அல்லாஹ் நாடினால் அது கைத்தடியாக இருக்கும். அல்லாஹ் நாடினால் அது பாம்பாக மாறும்.
 
செய்யக்கூடியவன் அவன் (ரப்புல் ஆலமீன்). செய்யக்கூடியவன் அவன். நிகழ்த்தக் கூடியவன் அவன். காரியங்களை அவன் முடிவு செய்கிறான். காரியங்களை அவன் நிர்வகிக்கிறான். எல்லா பாதைகளும் அடைத்து விட்டன. மூஸா நபியின் நம்பிக்கையோ எப்போதும் ஒரே மாதிரி இருந்தது. 
 
நாம் எப்படி? வசதி இருந்தால் வசதியின் மீது நம்பிக்கை, செல்வம் இருந்தால் செல்வத்தின் மீது நம்பிக்கை, உடல் ஆரோக்கியம் இருந்தால் ஆரோக்கியமான உடலின் மீது நம்பிக்கை. குடும்பமும் உற்றார் உறவுகளும் நமக்கு ஆதரவாக இருந்தால் அவர்கள் மீது நம்பிக்கை. இல்லை என்றால் வேறு வழியே இல்லாமல் அப்போதும் கூட அவ நம்பிக்கை. எப்படி அல்லாஹ்வுடைய உதவி வரும்? இப்படி இருந்தால் எப்படி அந்த துஆ பலிக்கும்? எப்படி அந்த துஆவிலே நீங்கள் பிரதிபலிப்பை பார்ப்பீர்கள்?
 
மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் எப்போதும் ஒரே நம்பிக்கை. எனக்கு எந்த நிலையிலும் உதவக்கூடியவன் அல்லாஹ். நான் ஃபிர்அவ்னின் சபையில் நிற்கும் போதும் எனக்கு உதவியவன் அல்லாஹ். இப்போது நான் தப்பித்து ஓடும்போது எனக்கு உதவக் கூடியவன் அல்லாஹ். கூட்டத்தார்கள் சொன்னார்கள், மூஸாவே மாட்டிவிட்டுட்டியே! மூஸாவே சிக்க வைத்து விட்டாயே! என்று
 
اِنَّا لَمُدْرَكُوْنَ‌‏
 
உன் பேச்சை நம்பி வந்து மாட்டிக்கொண்டோமே என்று சொன்னார்கள். (அல்குர்ஆன் 26:61)
 
كَلَّا‌  اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏
 
(மூஸா) கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு (விரைவில்) வழிகாட்டுவான். (அல்குர்ஆன் 26:62)
 
அன்பு சகோதரர்களே! அதுதான் யகீன். இருக்கும் பொழுதும் உதவக்கூடியவன் அல்லாஹ்! இல்லை என்றாலும் உதவக்கூடியவன் அல்லாஹ்! எனது ரப்பு எனக்கு இருக்கிறான். அவன் என்னை சூழ்ந்து கொள்வான். அவன் என்னை பாதுகாத்துக் கொள்வான். அவன் என்னை அரவணைப்பான்.
 
சகோதரர்களே! துஆ அவ்வளவு அற்புதமான ஒன்று. நபிமார்களை பற்றி அல்லாஹு தஆலா எங்கெல்லாம் சொல்கின்றானோ, அந்த இடங்களில் அவர்களுடைய துஆவை அல்லாஹ் சொல்லிக் கொண்டே போகிறான். அந்த நபிமார்களுடைய ஈமான், யகீன் அவர்களுடைய துஆவின் மூலமாக பிரதிபலித்ததை அல்லாஹு தஆலா நமக்கு படிப்பினையாக சொல்கிறான்.
 
அன்பு சகோதரர்களே! வாழ்க்கையில் இதை நாம் அனுபவமாக பார்க்க வேண்டும். கண்டிப்பாக அல்லாஹு தஆலா நமக்கு ஈமானுடைய அத்தாட்சிகளை காட்டிக் கொண்டே இருப்பான். 
 
நல்லா கவனிங்க. அல்லாஹு தஆலா உங்கள் மீது பாசம் வைத்து, உங்களை நெருங்குவதற்காக, உங்களை நெருக்கமாக்குவதற்காக, உங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஒரு ஆழமான அன்பும், பாசமும், பிடிப்பும் அல்லாஹுவுடைய அந்த கயிறை நீங்கள் பிடித்துக் கொள்வதற்காக, உங்களுக்கு சில கராமத்துகளை அல்லாஹ் கொடுப்பான்.
 
 கராமத் என்றால் ஏதோ காட்டில போய் உட்கார்ந்து பல வருஷமா தவம் கிடந்ததான் கராமத் நடக்கும்னு நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள். 
 
நீங்க சிந்தித்துப் பார்த்தால், உணர்ந்து பார்த்தால், உங்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பாக கராமத்துகள் அல்லாஹ்வுடைய அற்புதங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். நாம்தான் அதை உணர்வதில்லை. நாம் தான் அதை அல்லாஹ்வோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பதில்லை. அல்லாஹ்வுடைய உதவி என்று பார்ப்பதில்லை. அல்லாஹ் என் துஆவிற்கு பதில் அளித்து விட்டான் என்று அல்லாஹ்வை நினைப்பதில்லை.
 
அல்லாஹு தஆலா அதுபோன்ற சில சந்தர்ப்பங்களை கொடுத்து நம்மை பார்க்கிறான். என் அடியான் என்னை புகழ்கிறானா? என்னை பெருமைப்படுத்துகிறானா? என்னை மதித்து பேசுகிறானா? என்னை தூக்கி பேசுகிறானா? என்னைப் பற்றி எல்லாரிடத்திலும் சொல்லுகின்றானா?
 
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏
 
ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக! (அல்குர்ஆன் 93:11)
 
فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
 
எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார். (அல்குர்ஆன் 3:101)
 
அல்லாஹ் சொல்கிறான்; யார் அல்லாஹ்வை உறுதியாக, பலமாக, வலிமையாக பற்றிப் பிடிப்பாரோ அவர் கண்டிப்பாக நேரான பாதையில் வழிகாட்டப்படுவார். அதற்கு பிறகு அல்லாஹ்வை அப்படியே அந்த அடியான் பிடித்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடத்திலே பேசிக்கொண்டு, சொல்லிக்கொண்டு, கேட்டுக் கொண்டு, அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டு, அல்லாஹ்விடத்திலே கெஞ்சிக் கொண்டே இருக்கும் பொழுது அல்லாஹு தஆலா அவனுக்கு தொடர்ந்து அவனுடைய உதவிகளை, அவனுடைய அத்தாட்சிகளை காட்டிக் கொண்டே இருப்பான். 
 
அந்த நம்பிக்கையில் அலட்சியம் செய்து விடக்கூடாது. அந்த அற்புதங்களை அல்லாஹ் தஆலா காட்டியதற்கு பிறகு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. எப்படி? இஸ்ரவேலர்கள் வானத்திலிருந்து ஒரு உணவு தட்டை கேட்டார்கள். ஈசா அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள். கிடைக்கப் பெற்றதற்கு பிறகு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டால் அல்லாஹ்வுடைய தண்டனை கடுமையாக இருக்கும் என்று. மீண்டும் கேட்டார்கள் அப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லிய பிறகு அல்லாஹ் இறக்கினான்.
 
அப்பேற்பட்ட அத்தாட்சியை உணவுத் தட்டை பார்த்ததற்கு பிறகு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள்.  அவர்களே தங்களுடைய பிரச்சினையை வாங்கிக் கொண்டார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அருள், அல்லாஹ்வுடைய கருணை ரசூலுல்லாஹ் ﷺ உம்மத்திற்கு அப்படிப்பட்ட அதாபை அல்லாஹ் கொடுக்க மாட்டேன் என்று வாக்கு கொடுத்து விட்டான். 
 
அல்லாஹ் தஆலா இப்படி நமக்கு நம்முடைய துஆக்களை ஏற்றுக் கொள்வதின் மூலமாக, அன்றாடம் நமது வாழ்க்கையிலே பல கராமத்துகளை நமக்கு அல்லாஹ் காட்டிக் கொண்டிருக்கிறான். நாம் தான் அதை உணர்வதில்லை.
 
உங்களுக்கு கிடைத்த அருட்கொடை அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தது என்பதை நாம் உணர்வதில்லை. 
 
وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ‌
 
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. (அல்குர்ஆன் 16:53)
 
சிலவற்றை நம் பக்கம் சேர்த்துக் கொள்கிறோம். சிலவற்றை குடும்பத்தின் பக்கம், சிலவற்றை நண்பர்களின் பக்கம், ஹாலிக்கை படைத்தவனை  நினைக்க வேண்டிய புகழ வேண்டிய இடத்தில் மக்லூக்குகளை படைப்புகளை நினைத்துக் கொண்டு புகழ்ந்து கொண்டு மக்லூக்குகளை பெருமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அந்த நிலை மாற வேண்டும். நம்முடைய ஈமான் யகீன் அல்லாஹ்வின் மீது எல்லா நிலையிலும், இருந்தாலும் கொடுப்பவன் அல்லாஹ் தான். கொடுத்தவன் அல்லாஹ்தான். இல்லை என்றாலும் கொடுத்தவன், கொடுப்பவன் அல்லாஹ் தான். எல்லா சூழ்நிலையிலும் என்னுடைய ரப்பு எனக்கு. நான் அவனை மட்டுமே முன்னோக்குவேன் எனக்கு அவன் போதுமானவன். 
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் நெருப்பு குண்டத்தில் தூக்கிப் போடப்படும் போது சொன்னார்கள், ஹஸ்பியல்லாஹ் அதே வார்த்தையை தான் நபியும், நபியுடைய தோழர்களும் உஹது மைதானத்தில் சொன்னார்கள். 
 
உஹது போருக்கு பின் சொன்னார்கள். எல்லா நேரங்களிலும் சொன்னார்கள். ஹஸ்புனல்லாஹ் - அல்லாஹ் போதுமானவன்.
 
سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ
 
அல்லாஹ் அவனுடைய அருளிலிருந்து எங்களுக்கு கொடுப்பான். (அல்குர்ஆன் 9:59)
 
என்று சொன்னார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொட்டிக் கொடுத்தான்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நமக்கு கொடுப்பானா? நமது துஆவை ஏற்பானா? நாம் கேட்டால் நடக்குமா? சிபாரிசு கேட்கலாமா? ஆரம்பத்தில் உங்களுக்கு சொன்னேன். பிறருடைய வஸீலாவை தேடுவது, அவருடைய பொருட்டால் இவருடைய பொருட்டால் என்று. 
 
இப்படிப்பட்ட அவநம்பிக்கை, எதை செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் நம்முடைய ஈமானும் பலவீனப்பட்டு கொண்டிருக்கிறது. நம்முடைய இபாதத்துகளிலே ஒரு சுவை இருப்பதில்லை. நம்முடைய இபாதத்துகளிலே நமக்கு ஈடுப்பாடு இருப்பதில்லை. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்த மிகப்பெரிய அற்புதமான ஒரு ஈமானிய சக்தி இந்த துஆ. இது நம்முடைய உள்ளத்தை உறுதிப்படுத்துகின்றது. 
 
அல்லாஹ்வுடைய தொடர்பில், அல்லாஹ்வுடைய நம்பிக்கையிலே, நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலை தருகிறது. இந்த துஆவை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. துஆவுக்காக அதிக நேரம் கொடுக்க வேண்டும். இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும், நம்முடைய தனிமைகளிலும், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடத்திலே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
 
அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வ தஆலா அவனிடத்திலே கேட்பவர்களை விரும்புகின்றான். தவ்பா செய்பவர்களை விரும்புகின்றான். இஸ்திக்ஃபார் செய்பவர்களை அல்லாஹு தஆலா விரும்புகிறான். அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் உறுதியான ஈமானை யகீனை தந்தருள்வானாக! நம்முடைய நம்பிக்கைகளில் குழப்பங்கள், சந்தேகங்கள் கலந்து விடுவதில் இருந்து பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
لا أحَدَ أغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذلكَ حَرَّمَ الفَوَاحِشَ ما ظَهَرَ منها وما بَطَنَ، ولَا أحَدَ أحَبُّ إلَيْهِ المِدْحَةُ مِنَ اللَّهِ، فَلِذلكَ مَدَحَ نَفْسَهُ. الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 4637 | خلاصة حكم المحدث : [صحيح]
 
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4637.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/