HOME      Lecture      அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள் | Tamil Bayan - 745   
 

அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள் | Tamil Bayan - 745

           

அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள் | Tamil Bayan - 745


அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள்
 
வரிசை : 745
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-07-2021 | 16-09-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ் தஆலாவுடைய மாபெரும் அருளினால் இந்த ஒரு மார்க்க நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! எல்லா நன்மைகளும் அல்லாஹ்வை கொண்டே பூர்த்தி அடைகின்றன. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா யாரை நாடுகிறானோ அவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்.
 
யாரை அல்லாஹு தஆலா வழிகேட்டிலே விட்டு விடுகிறானோ அவர்களுக்கு நேர்வழிகாட்டுபவர் யாருமில்லை. அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! இன்றைய அமர்வுடைய தலைப்பு அல்லாஹ் தஆலாவுடைய ஒரு கண்ணியமான வாக்கியம்
 
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
 
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் 51 : 50)
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த வசனத்தை கண்ணிய மிகு அல் குர்ஆனிலே குறிப்பிடுகிறான். நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடி சென்று விடுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தெளிவான எச்சரிக்கை செய்யக் கூடிய நபியாக இருக்கிறேன்,
 
என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நம்மை நோக்கி கூறும்படி கட்டளையிட்டிருக்கிறான். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு தெரியும் நபித்துவம் கிடைக்கப் பெற்ற பொழுது எல்லா மக்களையும் அழைத்தார்கள் ஸஃபா மலையில் நின்று கொண்டு மக்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வார்த்தை
 
قالَ: فإنِّي نَذِيرٌ لَكُمْ بيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ
 
கடுமையான அல்லாஹ்வுடைய தண்டனை வருவதற்கு முன்னால் உங்களை நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த குரைஷிகளை நோக்கி சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 4770 குறிப்பு (1)
 
அன்பு சகோதரர்களே! மனிதர்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான், அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இந்த உலகத்தின் மாய வலையிலிருந்து, உலகத்தினுடைய குழப்பங்களிலிருந்து, உலகத்துடைய ஆசாபாசங்களிலிருந்து, அவர்களை பாதுகாத்து அவர்களை அதிலிருந்து காப்பாற்றி, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடு, மறுமைக்கான ஏற்பாடு, அந்த சொர்க்கத்துடைய அமல்களிலே அவர்களை ஈடுபடுத்துவதற்காக இது தான் நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கம்.
 
இன்று நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாம் கொடுக்கப்பட்ட நேர்வழி, நாம் எந்தளவு அல்லாஹ்வை மறந்தவர்களாக இருக்கிறோம், மறுமையை மறந்தவர்களாக இருக்கிறோம், சொர்க்கத்துடைய இன்பத்திலே ஆசை இல்லாதவர்களாக இருக்கிறோம், நரகத்தின் மீது பயமில்லாதவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
 
இன்று உலகம் அதனுடைய ஆசாபாசங்களோடு இந்த உலகம் அதனுடைய கவர்ச்சியான, அலங்கரிக்கப்பட்ட, இந்த மாட மாளிகைகள், அலங்காரங்கள் இப்படியான உலக வஸ்துக்களைக் கொண்டு இந்த உலகம் நம்மை இழுத்துவிட பார்க்கிறது, அல்லாஹ்விடமிருந்து பறித்து விட பார்க்கிறது. குழந்தைகளை திருடக்கூடியவர்கள் தாயிடமிருந்து குழந்தையை திருடுவதற்காக எவ்வளவு தந்திரங்கள் செய்வார்கள்,
 
எப்படியெல்லாம் திட்டம் போடுவார்கள் அந்த குழந்தைக்கு எப்படியெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறி, மிட்டாய்களை கொடுத்து, இனிப்புகளை கொடுத்து, விளையாட்டு சாமான்களை கொடுத்து, அந்த பிள்ளையை கடத்த முயற்சிப்பார்களோ அது போன்று தான் சகோதரர்களே! சகோதரிகளே! இந்த இப்லீஸ் அவனுடைய வழித்தோழர்கள், ஷைத்தான்கள் இந்த உலகம் நம்மை அல்லாஹ்விடமிருந்து பறிக்கப் பார்க்கின்றன.
 
இப்லீஸும், இந்த உலகமும் நம்மை அல்லாஹ்விடமிருந்து பறிக்கப் பார்க்கிறது, நம்மை நம்முடைய மறுமையிலிருந்து பறிக்கப் பார்க்கிறது, நம்முடைய இபாதத்துகளிலிருந்து நம்மை தூரமாக்க, நம்மை விலக்கி உலக சாக்கடைகளிலே நம்மை மூழ்கடிக்கும் படியாக உலக சாக்கடைகளிலே நம்மை மூழ்கடிக்க முயற்சி செய்கின்றன. அல்லாஹ் பாதுகாத்த அந்த நல்லவர்களை தவிர யாரும் இந்த உலகத்தின் மாயையிலிருந்து, மயக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியாது.
 
இமாம் புகாரி (ரஹி) அவர்கள் தங்களுடைய ஸஹீஹ் நூலிலே ஒரு பாடம் வைத்திருப்பார்கள். 6:22 அல்லாஹ் யாரை பாதுகாத்தாரோ அவர் தான் பாதுகாக்கப்பட்டவர் என்று. அன்பு சகோதரர்களே!
 
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே எவ்வளவு பயந்து பணிந்து மன்றாடி துஆ கேட்டார்கள். உள்ளங்களை புரட்டக்கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தின் மீது உறுதிபடுத்துவாயாக! என்று அல்லாஹ்விடத்திலே துஆ செய்தார்கள். பயந்தார்கள் இந்த உள்ளம் அல்லாஹ்வை முன்னோக்க வேண்டும், இந்த உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு மிகைத்திருக்க வேண்டும், 
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2140
 
இந்த உள்ளத்திலே மறுமையை பற்றிய தேடல், சொர்க்கத்தின் மீது உண்டான பேராசை மிகைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த உள்ளம் சுத்தமான உள்ளமாக, உண்மையான உள்ளமாக அல்லாஹ்வுடைய திருப்பொருத்தம் இறங்குவதற்கு தகுதியான உள்ளமாக இருக்கும், நறுமணமிக்க உள்ளமாக இருக்கும்,
 
இந்த உள்ளத்திலிருந்து நற்குணங்கள் வெளிப்படும். இந்த உள்ளத்தை சுமந்திருக்கக் கூடிய உடலிலிருந்து நல்ல அமல்கள் வெளிப்படும். அன்பான சகோதரர்களே! சகோதரிகளே! இந்த உள்ளம் உலக இச்சையை கொண்டு உலக அலங்காரங்களின் மோகத்தை கொண்டு, உலக வஸ்துக்களின் தேடலைக் கொண்டு,
 
உலகத்தின் மீதுண்டான பிரியத்தை கொண்டு ஹராமான ஆசைகளை உடைய அந்த ஈடுபாட்டை கொண்டு இப்படியாக பாவங்களை கொண்டோ, மரதிகளை கொண்டோ, அல்லாஹ்விடமிருந்து தூரமாகி விடுவதை கொண்டோ இந்த உள்ளம் கெட்டுவிடுமேயானால் இந்த உள்ளத்திலே அல்லாஹ்வுடைய மறதி, மறுமையின் மீதான நம்பிக்கையின்மை, நரகத்தின் மீதுண்டான பயமின்மை,
 
சொர்க்கத்தின் மீதுண்டான ஆசையின்மை இது இந்த உள்ளத்திலே வந்துவிடுமேயானால் இந்த உள்ளத்தை சுமந்திருக்கக் கூடிய உடல் இருக்கிறதே அதிலிருந்து வெளிப்படக்கூடிய அமல்கள், அதிலிருந்து வெளியாகக்கூடிய அந்த செயல்பாடுகள் அல்லாஹ்விற்கு வெறுப்பை ஏற்படுத்தக் கூடியதாக நரகத்திற்கான செயல்பாடுகளாக,
 
நரகத்திற்கான அமல்களாக ஆகும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகவே தான் பயந்தார்கள் உள்ளத்தின் மீது பயந்தார்கள். நபி (ஸல்) நமக்கு நபியாக அனுப்பப்பட்டது நம்முடைய கல்பை சுத்தப்படுத்துவதற்காக.
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
 
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
இந்த நபி மூன்று பொறுப்புகளை கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிறான். குர்ஆனை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் குர்ஆனை ஓதிக் காட்ட வேண்டும். அவர்களுடைய உள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டும் குர்ஆனுடைய ஹதீஸுடைய சட்டங்களை ஹலால் ஹராமுடைய சட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுத்து மார்க்கத்தின் படி வழி நடத்த வேண்டும்.
 
மூன்று மகத்தான பணிகளை கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக அனுப்பட்டார்கள். அதிலே இரண்டாவது முக்கிய பணிதான் கல்பை உள்ளங்களை சுத்தப்படுத்துவது. சகோதரிகளே! சகோதரர்களே! இந்த உள்ளம் அது சுத்தப்படுத்தப்பட்டால் இந்த உள்ளத்திலே அல்லாஹ்வை முன்னோக்குதல், அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல், அல்லாஹ்விற்கு கட்டுப்படுதல் அல்லாஹ்விற்கு கீழ்படிதல்.
 
அல்லாஹ்வுடைய தீனுக்கு முற்றிலுமாக பணிந்து விடுதல். இத்தகைய உயர்வான அந்த ஈமானிய குணங்கள் அதோடு தக்வா அல்லாஹ்வை பயப்படுதல். கண்ணியமிக்க, உயர்வுமிக்க, மதிப்புமிக்க அந்த இரட்சகனை அர்ஷுடைய அதிபதியை பயப்படுதல், அவன் மீது அன்பு வைத்தல். நம்முடைய இந்த உலக வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக் கூடிய இந்த நிஃமத்துகளை எல்லாம் நமக்கு வாரி வழங்கினானே அந்த ரஹ்மான் அந்த அல்லாஹ்வின் மீது அளவற்ற அன்பு வைத்தல்.
 
உலக மக்களின் மீது நமக்கு இருக்கக் கூடிய அன்புகளை எல்லாம் அந்த அன்பு மிகைத்து விட வேண்டும், அந்த பாசம் மிகைத்து விட வேண்டும்.
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
 
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
 
முஃமின்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ்வை பற்றி அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும், அவர்களுக்கு அச்சம் வரும் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது அன்பு பாசம் பொங்கி வரும். சகோதரர்களே! சகோதரிகளே! அத்தகைய உள்ளங்களை உருவாக்குவதற்கு, அத்தகைய உள்ளங்களையுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்கள்.
 
அவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை எப்படி அமைத்தார்கள். ஒன்று மனிதர்களை உருவாக்குதல், இரண்டாவது அந்த மனிதர்களை வழி நடத்துதல். சகோதரர்களே! சகோதரிகளே! இந்த இரண்டையும் இன்று நாம் இழந்திருக்கிறோம். இந்த இரண்டும் நம்முடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்கிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் அல்லாஹ்வுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை உருவாக்கினார்கள் ஸஹாபாக்களை அவர்கள் வழி நடத்தினார்கள்.
 
அதற்கு பிறகு தாபியீன், தபஅ தாபியீன் அந்த தாபியீன்களை ஸஹாபாக்கள் உருவாக்கினார்கள், ஸஹாபாக்கள் வழி நடத்தினார்கள். தபஅ தாபியீன்களை தாபியீன்கள் உருவாக்கினார்கள் வழி நடத்தினார்கள். இன்று நாம் மேய்க்கக் கூடிய மேய்ப்பாளர் இல்லாத ஆடுகளை போல சிதறி கிடக்கிறோம். நமக்கு அல்லாஹ்வை கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக் கூடிய ஒரு அழைப்பாளர் நம்முடைய சொல்லை செயலை நம்முடைய குணங்களை கண்கானித்து நம்மை அல்லாஹ்வின் பக்கம் திருப்பக்கூடிய ஒரு ஒழுக்கப் பயிற்சியாளர் ஒரு முர்ஷித், ஒரு நாசிஹ் நமக்கு உபதேசம் செய்யக் கூடியவர்.
 
அத்தகைய வழிகாட்டுதலை நாம் இழந்து நிற்கிறோம். நாமாவது உள்ளத்திலே அந்த ஆசையை கொண்டு வருவோமா ? நம்முடைய உள்ளங்களில் அந்த ஆசையை நாம் எடுத்து வருவோமா ? என்றால் நாம் சிறுபிள்ளையிலிருந்து வாலிப வயது வரை படித்த அந்த உலகம் சார்ந்த அந்த கல்வி நம்முடைய சிந்தனையை அப்படியே சிமெண்ட் போடப்பட்ட காங்கிரேட்டுகள் எப்படி தனக்குள் உள்ளதை அடக்கி மறைத்துக் கொள்ளுமோ,
 
அதுபோன்று இந்த பொருளாதார கல்விகள் இம்மை மறுமையின் கல்வி இல்லாத, ஆகிரத்துடைய கல்வி இல்லாத குர்ஆன் ஹதீஸுடைய அந்த கலத்தல் இல்லாத பொருளாதாரத்தை அடிப்படையாக மட்டுமே இருக்கக் கூடிய இந்த கல்வியானது நம்முடைய உள்ளங்களை இறுகச் செய்திருக்கிறது.
 
அதற்கு பிறகு பொருளாதார தேடல் உலக வாழ்க்கையிலே இப்படி மக்களை பார்க்கிறோம் எல்லோரும் வசதிகளை நோக்கி ஓடுகிறார்கள். வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் போட்டிப் போடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் முந்தய வருடத்தை விட செல்வத்தில் வாழ்க்கை வசதியிலே தான் முன்னேறி இருக்க வேண்டும் அது தான் முன்னேற்றம் என்பதாக அவர்கள் இந்த உலக வசதிகளை பெருக்கிக் கொள்வதிலே அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
மறுமை, ஆகிரத், தீன் என்று வரும் பொழுது அங்கே குறைந்து குறைந்து கடைசியில் இன்று அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும் நம் மீது கருணை காட்ட வேண்டும். நம்முடைய நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால் ஏதோ ஐந்து வக்திற்காக அவசர அவசரமாக விழுந்து தலையை பூமியில் வைத்து தொழுகை போன்ற அசைவுகளை செய்து விட்டாலே இதுவே இந்த காலத்திற்கு பெரியது.
 
சில நோன்புகளை வைத்து விட்டாலே ரமழானுடைய நோன்பை நோற்று விட்டாலே அது பெரிய ஒரு அமலாக முடிந்து விடுகிறது. அது எப்படி நோக்கப்படுகிறது என்பது வேறு, எப்படி தொழப்படுகிறது என்பது வேறு. இப்படியாக வணக்க வழிபாடுகளிலே அவற்றுடைய பெயர்கள் தான் நம்மிடத்திலே மீதமாக இருக்கின்றன. அந்த வணக்க வழிபாடுகள் போதிக்கக் கூடிய ரூஹ் நம்மிடத்திலே இல்லாமல் போய் விட்டது.
 
மீண்டும் நம்முடைய தலைப்பிற்கு ஆரம்பத்திலே வாருங்கள். அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! இந்த உள்ளங்களை நம்முடைய கல்பை அல்லாஹ்வோடு இணைத்து இந்த கல்பை அல்லாஹ்வுடைய தொடர்போடு அல்லாஹ்வுடைய முஹப்பத்தோடு, அல்லாஹ்வுடைய அன்போடு, அல்லாஹ்வுடைய பயத்தோடு, அல்லாஹ்வுடைய பாசத்தோடு, அந்த அல்லாஹ்வுடைய நெருக்கத்தோடு நம்முடைய நம்முடைய கல்பை தொடர்பு படுத்தி இந்த கல்பிலே மறுமை பயம், சொர்க்கத்தின் மீது ஆசை, நரகத்தின் மீது பயம் இப்படியாக மறுமை சார்ந்த நற்பண்புகளை உள்ளத்தில் நிரப்பி உலகம் சார்ந்த கெட்ட குணங்களை பெருமைபடுவது, பொறாமைபடுவது, உலக மோகங்களின் போது இச்சை கொள்வது.
 
இப்படியாக கெட்ட குணங்களை எல்லாம் உள்ளத்திலிருந்து அந்த அசுத்தங்களை எல்லாம் உள்ளத்திலிருந்து வெளியாக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி நம்முடைய செயல்களை எல்லாம் அல்லாஹ்விற்கு விருப்பமான, அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல்களாக மாறுகின்ற அந்த மார்க்கத்தை தான் ரஸூலுல்லாஹி (ஸல்) கொடுத்தார்கள். இதை தான் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய நபிக்கு சொல்லிக் காட்டுகிறான்.
 
يَاأَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.) (அல்குர்ஆன் 33 : 45, 46)
 
நபியே! நீங்கள் யார் தெரியுமா? நீங்கள் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூடிய அழைப்பாளர். இவர்கள் என்னுடைய அடியார்கள் இப்பொழுது என்னை அறியாமல் இருக்கிறார்கள் அல்லாஹ் என்றால் யார் என்று தெரியாமல் இருக்கிறார்கள் படைத்தவனை அறியாமல் இருக்கிறார்கள். மறுமையை அறியாமல் இருக்கிறார்கள் இவர்களுக்காக நான் தயாரித்து வைத்திருக்கக் கூடிய சொர்க்கத்தை அறியாமல் இருக்கிறார்கள். அல்லாஹு தஆலா எப்படி சொல்கிறான், ஒரு ஹதீஸை நினைவு கூர்ந்து செல்வோம். அல்லாஹ் சொல்வதாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அல்லாஹ் சொல்கிறான்:
 
، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ، مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ " قَالَ أَبُو هُرَيْرَةَ: " اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ
 
நான் என்னுடைய நல்லடியார்களுக்காக தயாரித்து வைத்திருக்கிறேன் ஏற்பாடு செய்து விட்டேன். படைத்து அலங்கரித்து வகை வகையான இன்பங்களை கொண்டு எத்தகைய இன்பங்கள் எந்த கண்களும் இந்த உலகத்திலே அத்தகைய இன்பங்களை பார்க்க முடியாது. எந்த செவியும் அத்தகைய இன்பங்களை பற்றி கேள்விபட்டிருக்க முடியாது. எந்த மனிதருடைய உள்ளத்திலும் அத்தகைய இன்பங்களை கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது. அத்தகைய இன்பங்களை நான் ஏற்பாடு செய்து விட்டேன்.
 
தயாரிப்பு செய்து விட்டேன் யாருக்காக இங்கே கவனியுங்கள் சகோதரிகளே! சகோதரர்களே! அல்லாஹ் சொல்வதாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், என்னுடைய ஸாலிஹான அடிமைகளுக்காக, என்னுடைய ஸாலிஹான அடியாருக்காக.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4770
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு நபியும் அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க அனுப்பப்பட்டார்கள். நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை தவிர, அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவதை தவிர நமக்கு வேறு வழியில்லை சகோதரர்களே! சகோதரிகளே! இந்த உலகம் எத்தனை நாள் உங்களை வைத்துகொள்ளும். சிந்தித்துப் பாருங்கள் வார்த்தைகளை மனதில் பதிய வையுங்கள்.
 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
 
ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே,வாழ்க்கையை சுவைத்த ஆன்மா கண்டிப்பாக மரணத்தையும் சுவைத்து தான் ஆக வேண்டும். இந்த உலகம் நம்மை எத்தனை நாளுக்கு வைத்திருக்கும். (அல்குர்ஆன் 3 : 185)
 
சகோதரிகளே! கண்டிப்பாக ஒரு நாள் இந்த உலகம் அதனுடைய முதுகிலிருந்து நம்மை அதனுடைய வயிற்றுக்குள் இழுத்துக் கொள்ளும். நம்முடைய உறவுகளெல்லாம் நாம் எப்படி நம்முடைய முன்னோர்களை புதைத்தோமோ, இந்த பூமியின் வயிற்றுக்குள் தள்ளினோமோ நம்முடைய உறவுகள் நம்முடைய வாரிசுகள் நம்மை இந்த பூமியின் வயிற்றுக்குள் வைத்து மூடிவிடுவார்கள்.
 
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
 
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன் 20 : 55)
 
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
இந்த மவ்த்தை சந்திக்காமல் நாம் இருக்க முடியாது. “நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும். (அல்குர்ஆன் 62 : 8)
 
சகோதரர்களே! சகோதரிகளே! நமக்கு அல்லாஹு தஆலா சொல்லிக் கொடுக்கக் கூடிய ஒரு துஆ சோதனைகளின் போது அந்த துஆவை நாம் சொல்கிறோம் அதனுடைய அர்த்தத்தை நாம் உணர்கிறோமா  அது என்ன துஆ ?
 
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعون
 
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்ப செல்வோம். (அல்குர்ஆன் 2 :156)
 
நாம் அல்லாஹ்விடத்திலிருந்து வந்திருக்கிறோம் அல்லாஹ் நம்மை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறான். இந்த உலகத்திற்கு அல்லாஹ் அனுப்பிருக்கிறான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை வாழ்வதற்காக. அல்லாஹ்விற்காக வாழ வேண்டும் அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழ வேண்டும், மறுமைக்காக வாழ வேண்டும், இந்த உலகத்தில் ஆகிரத்திற்காக நான் வாழ வேண்டும்.
 
அப்படி இந்த உலகத்தில் அல்லாஹ்விற்காக, மறுமைக்காக, ரப்புக்காக வாழ்ந்தால் ஆகிரத்துடைய அந்த மறுமை வாழ்க்கை இருக்கிறதே அந்த வாழ்க்கையை அல்லாஹ் நமக்கு அமைத்துக் கொடுப்பான். இதை தான் அல்லாஹு தஆலா நபிக்கு சொல்கிறான். நபியே! இந்த அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்துவிடுங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் அழைத்து வந்து விடுங்கள்.
 
அல்லாஹ்வுடைய இபாதத்தின் பக்கம் அழைத்து வந்துவிடுங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் அல்லாஹ்வின் பக்கம் ஓடி வருவதென்றால் அல்லாஹ்வின் பக்கம் விரைந்து வருவதென்றால் என்ன என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமுடைய மார்க்கத்திலே துரவரம் இல்லை இஸ்லாமிய மார்க்கத்திலே வியாபாரத்தில் முற்றிலுமாக நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையிலிருந்து ஓடி ஒளிந்து கொண்டு மனங்களிலோ அல்லது சன்னியாச ஸ்தலங்களிலோ அல்லது போலி ஸூபிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற அந்த மடங்களிலோ சென்று நாம் நம்மை அடைத்துக் கொள்வதல்ல இந்த அல்லாஹ்வின் பக்கம் ஓடி வருவது என்பது.
 
இந்த உலகத்தில் தான் நாம் வாழ வேண்டும். இந்த வியாபாரத்தில் தான் நாம் இருக்க வேண்டும் நம்முடைய குடும்பத்தில் தான் நாம் இருக்க வேண்டும். ஆனால், இந்த உள்ளம் அல்லாஹ்வுடைய தொடர்போடு இருக்க வேண்டும். நம்முடைய உள்ளத்திலே தக்வா பசுமையாக இருக்க வேண்டும். நம்முடைய நாவு அல்லாஹ்வுடைய நினைவிலே நனைந்ததாக இருக்க வேண்டும். நம்முடைய அமல்கள் அல்லாஹ்விற்கு பிரியமான இபாதத்துகளாக இருக்க வேண்டும்.
 
நம்முடைய சொல் உண்மையாக, நீதமாக, தக்வாவாக இருக்க வேண்டும். நம்முடைய வணக்க வழிபாடுகள் ஃபர்ளான வணக்க வழிபாடுகளும் இருக்க வேண்டும், நபிலான வணக்க வழிபாடுகளும் இருக்க வேண்டும், உபரியான வணக்க வழிபாடுகளும் இருக்க வேண்டும். நாம் உலகத்திற்காக செலவழிக்கக் கூடிய நேரத்தை விட நம்முடைய மறுமைக்காக ஆகிரத்திற்காக எங்கே போய் நிரந்தரமாக இருக்க போகிறோமோ அந்த ஆகிரத்திற்காக செலவழிக்கக் கூடிய நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.
 
இது தான் அல்லாஹ்வின் பக்கம் ஓடி வந்து விடுங்கள் என்று அல்லாஹ் அழைக்கிறானே அதற்கு இது தான் பொருள். வியாபாரத்திற்கு அதற்கு என்ன நேரமோ அதற்கு என்ன அவசியமோ நம்முடைய மனைவி, நம்முடைய பிள்ளைகள், நம்முடைய ஓய்வு, பொருளாதாரம் அதற்கு என்ன தேவையோ இவற்றையெல்லாம் நாம் கணக்கிட்டு பார்த்து அழியக்கூடிய இந்த உலகத்திலே,
 
விட்டுப் போகக் கூடிய இந்த உலகத்திலே, நிரந்தரமற்ற இந்த உலகத்திலே நான் இவ்வளவு நேரங்களை செலவழிக்கிறேனே என்னுடைய மறுமை ஆகிரத்துடைய சொர்க்க வாழ்க்கைக்காக எங்கே நான் நிரந்தரமாக இருக்க வேண்டுமோ, எங்கே நான் நிரந்தரமான இன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ அந்த மறுமை வாழ்க்கைக்காக எவ்வளவு நேரத்தை கொடுக்கிறேன்.
 
என்னுடைய மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினருக்காக இவ்வளவு நேரங்கள் என்றால் இவர்களை விட என் மீது பாசம் உள்ள, என் மீது நேசமுள்ள, என் மீது கருணைக் காட்டக் கூடிய, என் மீது அன்பு வைத்திருக்கக் கூடிய என்னுடைய ரப்புக்க நான் எவ்வளவு நேரத்தை ஒதுக்குவது. சிந்தித்துப் பார்க்க வேண்டும் இது தான் அல்லாஹ்வின் பக்கம் ஓடி வந்து விடுங்கள் அல்லாஹ் அழைக்கிறான்.
 
என் அடியார்களே! நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு தஆலா குர்ஆனிலே நம்மிடத்திலே பேசுகிறான், ஹதீஸ் குதிஸியிலே அல்லாஹ் நம்மிடத்திலே பேசுகிறான். ஒவ்வொரு ஹதீஸ் குதிஸியும், ஒவ்வொரு ஆயத்தும், நம்மை பார்த்து என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு சிஸ வசனங்களை இந்த அமர்வோடு தொடர்பு படுத்தி பார்ப்போம்.
 
அல்லாஹு தஆலா சூரா அஜ்ஜுமருடைய 53 வது வசனத்திலே சொல்கிறான். இந்த வசனத்தை நான் முதலாவதாக சொல்வதற்கு என்ன காரணம் என்றால் அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிக்க வேண்டும். நான் பொதுவாக என்னை பற்றி தான் பேசுவது வழக்கம் பாவங்களிலே மூழ்கிவிட்டோம் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி அல்லாஹ்வை மறந்து இருந்து விட்டோம். எத்தனையோ நேரங்களை வீணடித்து விட்டோம்.
 
அல்லாஹ்வுடைய இபாதத்துகளிலிருந்து தூரமாக இருந்தது எவ்வளவு நேரம் ? பாவங்களை செய்தது எவ்வளவு நேரம் ? இன்னும் எத்தனை எத்தனை குற்றங்களை நம்மீது அடுக்கலாமோ அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக! சகோதரர்களே! என்னை போன்றவர்களுக்காக அல்லாஹு தஆலா சொல்கிறான்,
 
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا  إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39 : 53)
 
இது முதலாவது வசனம் அல்லாஹு தஆலா நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சொல்கிறான், நபியே! நீங்கள் சொல்லுங்கள் யாரிடத்திலே சொல்லுங்கள்? என்னுடைய அடியார்களிடத்திலே சொல்லுங்கள். அந்த அடியார்கள் எத்தகையவர்கள் ? வரம்பு மீறி பாவம் செய்தவர்கள் அல்லாஹு அக்பர்.
அன்பான சகோதரர்களே! சகோதரிகளே! நாம் பாவம் செய்யக்கூடியவர்கள் தான். நம்முடைய ரப்பு அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன், கணக்கின்றி பாவங்களை மன்னிக்கக் கூடியவன். உங்களுடைய பாவங்கள் வானம் பூமியினுடைய அளவை எட்டியிருந்தாலும் சரி அல்லாஹு தஆலா சொல்கிறான் அடியானே! என் இறைவா என்னை மன்னித்து விடு என்று நீ சொன்னால் நான் உன்னை மன்னித்து விடுவேன் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது.
 
அல்லாஹு அக்பர்! எத்தகைய மன்னிக்கக் கூடிய இறைவனை நாம் பெற்றிருக்கிறோம் யோசித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா சொல்கிறான், நபியே! என்னுடைய அடியார்களுக்கு சொல்லுங்கள், அவர்கள் பாவம் செய்த காரணத்தால் அநியாயங்கள் செய்த காரணத்தால் இந்த உலக ஆசாபாசங்களிலே மூழ்கிவிட்ட காரணத்தால் அவர்கள் என்னை விட்டு தூரமாக சென்று விட்டார்கள்.
 
ஷைத்தான் அவர்களை தட்டிப் பறித்து சென்றிருக்கிறான் உலகம் அவர்களை இழுத்து சென்றுவிட்டது உலக மோகங்கள் அவர்களை மூழ்க வைத்திருக்கிறது. அவர்களிடத்தில் எல்லாம் சென்று என்னை பற்றி அவர்களுக்கு சொல்லுங்கள் பயப்பட வேண்டாம் அவர்கள் நிராசையடைய வேண்டாம். அவர்கள் என்னை விட்டு அப்படியே ஒதுங்கி விட வேண்டாம் தவ்பா செய்ய சொல்லுங்கள், பாவ மன்னிப்பு தேட சொல்லுங்கள்.
 
என்னுடைய கருணையிலிருந்து நிராசையடைய வேண்டாம் என்று அவர்களுக்கு சொல்லுங்கள். பாவம் செய்து விட்டவர்களே! நீங்கள் பாவம் செய்தால் என்ன உங்களுடைய பாவங்களை மன்னிக்கக் கூடிய ரப்பிடத்திலே நீங்கள் வந்து விடுங்கள் அவன் உங்களை மன்னித்து உங்களை அரவனைத்து கொள்வான். அவன் எல்லா பாவங்களையும் மன்னித்து விடுவான்.
 
அன்பான சகோதரர்களே! சகோதரிகளே! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒன்றாக இருக்குமேயானால் அதை மன்னிப்பதற்கு அல்லாஹு தஆலா ஆயிரம் வழிகளை வைத்திருக்கிறான். இந்த வழிகளில் எந்த ஒன்றிலாவது அடியான் அவனுடைய பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளலாம். அப்படி இருந்து ஒரு மனிதன் தன்னுடைய பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளவில்லையென்றால், அந்தோ அவனுடைய கைசேதமே ! நஷ்டமே!
 
ஒரு பக்கம் வணக்க வழிபாடுகளின் பொருட்டால் அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறான். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தர்மங்களின் மூலமாக அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறான். துஆக்களின் மூலமாக அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறான், தவ்பாவின் மூலங்களாக அல்லாஹ் பாவங்களை மன்னிக்கிறான். எத்தனை வழிகளை அல்லாஹு தஆலா விசாலமாக திறந்து வைத்திருக்கிறான்.
 
அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள் என்று அல்லாஹ் அழைக்கிறானே நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள் இதுவெல்லாம் பெரிய பெரிய அவ்லியாக்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தை, பெரிய பெரிய இறைநேசருக்கு சொல்லப்பட்ட வசனம் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இவையெல்லாம் ஸஹாபாக்கள், தாபியீன்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருக்கலாம் நான் எங்கே அல்லாஹ்விடத்திலே நெருங்குவது நான் பாவத்தால் தூரமாகி இருக்கிறேனே பாவ சாக்கடைகளில் மூழ்கி நாற்றம் பிடித்தவனாக இருக்கிறேனே என்று உங்களை நீங்களே ஏசிக் கொண்டு அல்லாஹ்விடமிருந்து விலகிவிடாதீர்கள்.
 
நம்மை போன்றவர்களை தான் அல்லாஹ் அழைக்கிறான் பாவிகளே! நீங்கள் பாவம் செய்தால் என்ன? வரம்பு மீறி குற்றம் செய்து கொண்டால் என்ன ? நான் உங்களை கணக்கின்றி மன்னிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய அடியார்களே! என் பக்கம் வந்து விடுங்கள் என்னை விட்டு வழி தவறி சென்றவர்களே! உங்களுடைய ரப்பு நானாக இருக்கிறேன் என் பக்கம் வந்து விடுங்கள்.
அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள், அல்லாஹு தஆலா நம்முடைய நபிக்கு சொல்கிறான், நபியே! முஃமின்களுக்கு சொல்லுங்கள். முஃமின்களே! பரிசுத்தமான கலப்பற்ற முறையிலே தவ்பா செய்து சுத்தமான உள்ளத்தோடு அல்லாஹ்வை முன்னோக்கி வந்து விடுங்கள். அல்லாஹு தஆலா நம்முடைய தவ்பா அல்லாஹ் நான் திருந்தி விட்டேன் என்னுடைய பாவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
 
أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ كانَ يقولُ: في سُجُودِهِ اللَّهُمَّ اغْفِرْ لي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ، وجِلَّهُ، وأَوَّلَهُ وآخِرَهُ وعَلانِيَتَهُ وسِرَّهُ
 
நம்முடைய நபி (ஸல்) சொன்னார்கள் அல்லவா ? யா அல்லாஹ்! என்னுடைய எல்லா பாவங்களையும் நான் ஒப்புக் கொண்டேன். யா அல்லாஹ் என்னுடைய எல்லா பாவங்களையும் நான் தனிமையில் செய்த பாவங்கள், கூட்டத்தில் செய்த பாவங்கள், சிறிய பாவங்கள், பெரிய பாவங்கள், துள்ளியமான பாவங்கள், வெளிப்படையான பாவங்கள், மறதியிலே செய்த பாவங்கள், வேண்டுமென்று விடாப்பிடியாக செய்த பாவங்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 483 
 
இப்படி எல்லா பாவங்களும் என்னிடத்திலே இருக்கின்றன அல்லாஹ் என்னை மன்னித்து விடு என்று ஒரு அடியான் அல்லாஹ்விடத்திலே மன்றாடுவானேயானால் அல்லாஹ்வை மன்னிப்பவன் என்று நம்பிக்கை கொண்டு அல்லாஹ்விடத்திலே தவ்பா செய்வானேயானால் அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா மன்னித்து விடுகிறான்.
 
எப்படி மன்னித்து விடுகிறான் அவனுடைய பாவங்களை முற்றிலுமாக கழுவி விடுகிறான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய ஏடுகளை அல்லாஹு தஆலா முற்றிலுமாக கழுவி வெண்மையான ஏடாக அல்லாஹு தஆலா ஆக்கி விடுகிறான். பாவங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடுகின்றன மன்னிக்கப்படுவது என்றால் என்ன இருக்கிறதே அதனுடைய அடிப்படை பொருள் மறைத்தல் என்பதிலிருந்து வருகிறது.
 
அதாவது நம்முடைய ஏடுகளிலிருந்து பாவங்களை அல்லாஹு தஆலா மறைத்து முற்றிலுமாக இல்லாமலாக்கி சுத்தமான ஏடுகளாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான். அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வாருங்கள் அதனுடைய முயற்சி என்ன தவ்பா இஸ்திஃபார்.
 
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
 
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். (அல்குர்ஆன் 71 : 10)
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்ன அந்த ஒரு கட்டளையை எல்லா நபிமார்களும் தங்களது உம்மத்துகளுக்கு சொன்னார்கள் உங்களுடைய ரப்பிடத்திலே பாவமன்னிப்பு தேடுங்கள் அவன் உங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான். ஆகவே நம்முடைய உள்ளங்கள் இந்த உலக மோகத்திலே மூழ்கியிருக்கிறதா உலக ஆசாபாசங்களிலே மூழ்கியிருக்கிறதா பெரும் பாவங்களிலே மூழ்கியிருக்கிறதா 
 
சிறு பாவங்களிலே மூழ்கியிருக்கிறதா அல்லது மறதி என்ற நோயினால் நாம் பீடிக்கப்பட்டிருக்கிறோமா என்னென்ன குறைகள் நம்மிடத்தில் இருக்கிறதோ எல்லா குறைகளையும் அல்லாஹ்விடத்திலே ஒன்றன் பின் ஒன்றாக கூறி அல்லாஹ்வித்திலே இஸ்திஃபார் செய்யுங்கள். அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்போமாக! கண்டிப்பாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டு நம்மை அல்லாஹு தஆலா திருந்த செய்வான்.
 
 கவனியுங்கள் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதன் அடையாளம் என்ன அடியான் திருந்தி வாழ்தல். அல்லாஹு தஆலாவுடைய பெயர்களிலே ஒன்று பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவன். அடியானுக்கும் தாயிப் என்பதாக சொல்லப்படும் பாவங்களிலிருந்து திருந்தி வாழக்கூடியவன். அடியான் தாயிபாக இருக்கிறான் அல்லாஹு தஆலா அவனை திருந்தி வாழ வைக்கக் கூடிய ரப்பாக இருக்கிறான்.
 
இந்த முதலாவது நெருக்கம் இருக்கிறதே அல்லாஹ்வின் பக்கம் வருவதற்கு அன்பான சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வுடைய கோபம் நம்மீது இறங்குவதற்கு காரணமாக இருக்கூடிய அல்லாஹ்வுடைய லஃனத் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் அல்லாஹ்வுடைய சாபம் நம்மீது இறங்குவதற்கு காரணமாக இருக்கக் கூடிய பெரும்பாவங்கள் சிறுபாவங்களை விட்டு நாம் விலக வேண்டும்.
 
இது அல்லாஹ்வின் பக்கம் ஓடி வரக்கூடிய அடியானுடைய முயற்சி. இதை கவனமாக மனதிலே பதிய வையுங்கள். இன்று நாம் இந்த நிபந்தனையை மறந்துவிட்டோம். எப்படி ? நாம் என்ன நினைத்துக் கொள்கிறோம் என்றால் ஒரு கூட்டம் மொத்தமாக இபாதத்துகளை விட்டு விட்டு அப்படியே மனம் போன வாக்கிலே மறதியாளர்களுடைய வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
அவர்களுடைய வாழ்க்கையிலே எப்படி இபாதத்துகளை விட்டார்களோ இபாதத்துகளை விடுவதை விட பெரும் பாவங்கள் வேறொன்றும் இல்லை. ஒரு மனிதனுடைய விபச்சாரம் கூட மன்னிக்கப்படலாம் அல்லாஹ் பாதுகாப்பானாக! அது பெரும் பாவமாக இருப்பதோடு ஆனால், தொழுகையை விடுதல் என்ற செயல் இருக்கிறதே அது பெரும் பாவமல்ல அது குஃப்ரான பாவம் இறைநிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய பாவம்.
 
சிலர் என்ன விளங்கியிருக்கிறார்கள் என்றால் தொழாதவர்கள் நோன்பு வைக்காதவர்கள் நாம் இபாதத் செய்யவில்லையென்றால் என்ன ஆகப்போகிறது நாங்கள் ஒன்றும் பெரும்பாவங்கள் செய்யவில்லையே, நாம் யாரையும் ஏமாற்றவில்லையே என்பதாக. அன்பானவர்களே! இப்படி எண்ணக்கூடியவர்கள் புரிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டு அந்த ரப்புக்கு சுஜூது செய்யாமல் இருப்பதை விட கொடிய பாவம், கொடிய அநியாயம் இந்த உலகத்திலே வேறொன்றும் இருக்க முடியாது.
 
ஒரு மனிதன் தன்னை படைத்த இறைவனுக்கு முன்னால் ஐந்து நேரம் பணிந்து குனிந்து நின்று வணங்கி வழிபாடு செய்யவில்லை என்றால் அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஆகவே சிலருடைய இந்த தவறான எண்ணத்தை நீக்க வேண்டும். இபாதத்தை விடுவது பெரும்பாவங்களை விட பயங்கரமானது. காரணம் என்ன ? பெரும் பாவம் ஒரு மனிதனை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நரகத்திற்கு தள்ளும் ஆனால் ஃபர்ளான இபாதத்துகளை விடுவது ஒரு மனிதனை நிரந்தரமாக நரகத்திலே தள்ளிவிடும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
முதலாவதாக நம்முடைய முழு முயற்சி என்னவாக இருக்க வேண்டும். பாவங்களிலிருந்து விலகி அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்வது, அல்லாஹ் நம்முடைய உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவது, நம்முடைய மறுமைக்கான பாதையிலே நாம் வந்து விடுவது. யா அல்லாஹ் நான் உலகத்திலே மூழ்கிவிட்டேன் உன்னை மறந்திருந்தேன் உன்னிடத்திலே தவ்பா செய்கிறேன்.
 
என்னுடைய நேரங்கள் உனக்காக, என்னுடைய வாழ்க்கை உனக்காக, என்னுடைய அறிவு திறமை உனக்காக, உன்னுடைய வேதத்தை படிப்பதற்காக புறிவதற்காக, உன்னுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்காக, கற்றுக் கொள்வதற்காக. இப்படியாக நாம் முதலாவதாக அல்லாஹ்வை நோக்கி நாம் முதல் எட்டு வைக்க வேண்டும் எதன் மூலமாக தவ்பாவின் மூலமாக. ஹதீஸ் குத்ஸியிலே என்ன வருகிறது பாருங்கள்.
 
يقولُ اللَّهُ تَعالَى: أنا عِنْدَ ظَنِّ عَبْدِي بي، وأنا معهُ إذا ذَكَرَنِي، فإنْ ذَكَرَنِي في نَفْسِهِ ذَكَرْتُهُ في نَفْسِي، وإنْ ذَكَرَنِي في مَلَإٍ ذَكَرْتُهُ في مَلَإٍ خَيْرٍ منهمْ، وإنْ تَقَرَّبَ إلَيَّ بشِبْرٍ تَقَرَّبْتُ إلَيْهِ ذِراعًا، وإنْ تَقَرَّبَ إلَيَّ ذِراعًا تَقَرَّبْتُ إلَيْهِ باعًا، وإنْ أتانِي يَمْشِي أتَيْتُهُ هَرْوَلَةً
 
இந்த ஹதீஸை இன்ஷா அல்லாஹ் முழுமையாக பார்ப்போம். ஹதீஸ் குத்ஸியிலே அபூ ஹீரைரா (ரழி) அவர்கள் அறிவிக்க இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் ஒரு ஜான் நெருங்கினால் அல்லாஹ் ஒரு முழம் நெருங்கி விடுவான். நாம் அல்லாஹ்வின் பக்கம் ஒரு முழம் நெருங்கி விட்டால் அல்லாஹு தஆலா ஒரு டஜன் நெருங்கி விடுகிறான்.
 
நாம் அல்லாஹ்விடத்திலே நடந்து செல்ல ஆரம்பித்து விட்டால் அல்லாஹ் நம் பக்கம் ஓடி வர ஆரம்பித்து விடுகிறான். இது எதை குறிக்கிறது அல்லாஹ்வின் பக்கம் இந்த அடியான் ஓடி வர தயாராகி விட்டால் முதலாவதாக தவ்பா செய்யவான். பிறகு என்ன செய்ய வேண்டும் சகோதரர்களே! சகோதரிகளே! ஆம் நம்முடைய மார்க்கம் நமக்கு வழிகாட்டியிருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7405
 
وما تَقَرَّبَ إلَيَّ عَبْدِي بشَيءٍ أحَبَّ إلَيَّ ممَّا افْتَرَضْتُ عليه
 
ஹதீஸ் குதிஸியிலே அல்லாஹ் சொல்வதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னுடைய அடியான் என்னை நெருங்குவதாக இருந்தால் அல்லாஹு அக்பர் அல்லாஹ்வுடைய நெருக்கம் ஓடி வரக்கூடியவர்கள் அமல்களிலே போட்டிப் போட்டு முந்தக்கூடியவர்கள் தான் நெருக்கமானவர்கள் அல்லாஹ்வை நெருங்கிக் கொண்டவர்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6502
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கும் அல்லாஹ் அர்ஷுக்கு மேலே உயர்ந்திருக்கிறான். அல்லாஹு தஆலா ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷுக்கு மேலே உயர்ந்திருக்கிறான் பரிசுத்தமான அந்த இறைவன். நாமோ இந்த பூமியிலே இருக்கிறோம் ஆனால், அல்லாஹ்வுடைய நெருக்கம் நமக்கு கிடைக்கும் அல்லாஹ் நம்மை நெருக்கமாக்கி கொள்வான். சொல்கிறான் அல்லவா!
 
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
 
நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான். (அல்குர்ஆன் 71 : 10)
 
அல்லாஹ் தஆலா யாரோடு நெருக்கமாக இருக்கிறான் தெரியுமா  தக்வா உள்ளவர்களோடு நெருக்கமாக இருக்கிறான். யாரோடு அல்லாஹ் நெருக்கமாக இருக்கிறான் தெரியுமா இஹ்ஸான் மனத்தூய்மை உள்ளவர்கள் நன்மை செய்பவர்கள், இபாதத் செய்பவர்களோடு அல்லாஹு தஆலா நெருக்கமாக இருக்கிறான் என்று. இப்படியாக அல்லாஹ்வுடைய மஹியத் இலாஹி என்று சொல்வார்கள் அல்லாஹ்வுடன் இருத்தல் நம்மோடு அல்லாஹ் இருப்பது.
 
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ 
 
நீங்கள் மார்க்கத்தில் உறுதியாக இருக்கிறீர்களா சோதனையை பொருந்திக் கொண்டு என்னுடைய ரப்புடைய அனுமதி இல்லாமல் எனக்கு எந்த சோதனையும் வராது. இந்த சோதனை எனக்கு என்னுடைய ரப்பின் புரத்திலிருந்து எனக்கு என்னுடைய ரப்பு இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
 
நான் அல்லாஹ்வை நம்பக்கூடியவன் எந்க தர்ஹாக்களும் எனக்கு உதவி செய்யாது அல்லாஹ் உதவி செய்வான். உலகத்துடைய எந்த சக்திகளும் எனக்கு உதவி செய்யாது அல்லாஹ் என்னோடு இருக்கிறான் என்னை பாதுகாப்பான். அந்த அல்லாஹ்வுடைய மஹிய்யத் அன்பானவர்களே! ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் சொல்கிறான், என்னுடைய அடியார்கள் முதலாவதாக என்ன செய்ய வேண்டும் ?
 
அல்லாஹ்வின் பக்கம் ஓடி செல்ல விரைந்து செல்ல அல்லாஹ்வுடன் இருக்கக் கூடிய அந்த வாய்ப்பை அடைவதற்கான ஆசை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் முதலாவதாக ஃபர்ளான வணக்க வழிபாடுகளை சரியாக செய்ய வேண்டும். நீங்கள் ஃபர்ளுகளை வீணாக்கி விட்டு உபரியான வணக்க வழிபாடுகளை செய்வதால் உங்களுக்கு பிரச்சனை தான் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
வேண்டுமென்றே ஒரு மனிதன் ஃபர்ளிலே அதாவது மோசடி செய்வானேயானால் அது பயங்கரமான ஆபத்தான ஒன்று. அவன் முயற்சி செய்கிறான் அவனை அறியாமல் அவனுடைய சக்தியை மீறி சில நேரங்களிலே அவனுக்கு இந்த ஃபர்ளுகளிலே சோர்வு ஏற்பட்டு விடுகிறது அது அல்லாஹு தஆலா மன்னிக்கப் போதுமானவன். ஆனால், வேண்டுமென்றே ஃபர்ளான இபாதத்துகளை இவனுடைய அலட்சியத்தால் வீணடிப்பது அது ஆபத்தான ஒன்று.’
 
சரி வாருங்கள் அதாவது அல்லாஹ்வின் பக்கம் நாம் ஓடோடி செல்ல வேண்டுமென்றால் முதலாவதாக தவ்பா இஸ்திஃபார் செய்ய வேண்டும் ஷிர்கிலிருந்து, குஃப்ரிலிருந்து , பெரும்பாவங்களிலிருந்து, சிறு பாவங்களிலிருந்து தவ்பா இஸ்திஃபார் செய்ய வேண்டும். நன்றாக கவனியுங்கள் நாம் செய்த பாவங்களை நினைவுக்கு கொண்டு வந்து அல்லாஹ்விடத்திலே அந்த பாவத்தை சொல்லி அந்த பாவத்திற்காக தவ்பா இஸ்திஃபார் செய்வது.
 
இரண்டாவது என்ன அல்லாஹு தஆலா நம்மீீது என்னென்ன கட்டாய கடமைகளை கடமையாக்கி இருக்கிறான் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் பிறகு அதை நாம் செயல்படுத்த வேண்டும். முதலாவதாக வணக்க வழிபாடுகள் ஐந்து நேரத் தொழுகை, ரமழான் மாதத்துடைய நோன்பு, வசதியானவர்களாக இருந்தால் செல்வத்திலே ஜகாத், ஹஜ் இவையெல்லாம் ஃபர்ளான வணக்க வழிபாடுகள்.
 
இபாதத்திலே இங்கே ஏன் இந்த வார்த்தைகளை அழுத்தமாக சொல்கிறேன் என்றால் நம்மில் இருக்கக் கூடிய சில அறிவீனர்கள் என்று கூட சொல்லலாம் அல்லது மார்க்க விளக்கமில்லாதவர்கள். அவர்கள் ஃபர்ளான கடமைகள் என்றால் இபாதத்துகள் என்று விளங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மற்ற மற்ற சட்டங்களில் உள்ள ஃபர்ளுகளை அவர்கள் வீணடித்து விடுகிறார்கள்.
 
கவனியுங்கள் மற்ற மற்ற ஃபர்ளுகளிலே இருக்கக் கூடிய, மற்ற மற்ற சட்டங்களிலே இருக்கக் கூடிய பர்ளுகளை வீணடித்து விடுகிறார்கள். எப்படி உதாரணமாக, உங்களுடைய பெற்றோரை கவனிப்பது நீங்கள் சம்பாதித்த செல்வத்தை கொண்டு உங்களுடைய பெற்றோரை அரவணைப்பது. உங்களுடைய செல்வத்தில் உங்களுடைய மனைவி உரிமை பெறுவதை விட உங்களுடைய செல்வத்தில் உங்களுடைய பிள்ளைகள் உரிமை பெறுவதை விட உங்களுடைய பெற்றோர்கள் உரிமை பெறுகிறார்கள்.
 
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا 
 
இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்; இன்னும், தாய், தந்தைக்கும் கருணையுடன் உதவி செய்யுங்கள் மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (அல்குர்ஆன் 4 : 36, 17 : 23)
 
அவர்களுடைய உணவு, அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய மருத்துவம் போக மிஞ்சியது தான் உங்களுடைய மனைவிக்கு, உங்களுடைய பிள்ளைகளுக்கு இதை நம்பிக்கை கொண்டு செயல்படுத்தக் கூடியவன் தான் முஃமின் முஸ்லிம். பெற்றோர்களை புறக்கணிப்பவர் அவர் ஒரு உண்மை முஃமினாக, உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது. பெற்றோர்களை அலட்சியம் செய்யக்கூடியவர் உண்மை முஃமினாக முஸ்லிமாக இருக்க முடியாது.
 
பெற்றோர்களை வீணாக்கியவர், பாழாக்கியவருடைய இபாதத்துகள் அல்லாஹ்விடத்திலே நிறுத்தி வைக்கப்பட்டு விடும். நாளை மறுமையிலே அமல்களை கொண்டு சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று இருக்கக் கூடிய நிலையிலே பெற்றோர்களின் காரணமாக, பெற்றோர்களை பாழாக்கியதின் காரணமாக மனிதன் நரகத்திற்கு சென்று கொண்டிருப்பான்.
 
رَغِمَ أنْفُ، ثُمَّ رَغِمَ أنْفُ، ثُمَّ رَغِمَ أنْفُ، قيلَ: مَنْ؟ يا رَسولَ اللهِ، قالَ: مَن أدْرَكَ أبَوَيْهِ عِنْدَ الكِبَرِ أحَدَهُما أوْ كِلَيْهِما فَلَمْ يَدْخُلِ الجَنَّةَ
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், அதாவது யார் ஒருவர் தன்னுடைய பெற்றோர்கள் இருவரையோ அல்லது ஒருவரையோ வயோதிகத்திலே பெற்று அவர்கள் அவனை சொர்க்கத்திற்கு அனுப்பவில்லையோ அவன் நாசமாகட்டும் என்பதாக அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஆகவே உதாரணத்திற்கு இந்த விஷயத்தை சொன்னேன் அதாவது ஃபர்ளுகள் என்று எடுத்துக் கொண்டால் வெறும் வணக்க வழிபாடுகளில் உள்ள ஃபர்ளுகளை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2551 
 
இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு மனிதனின் மீது ஃபர்ழாக்கப்பட்ட எல்லா சட்டங்களும் அது அவருடைய இபாதத்துடைய வாழ்க்கையாக இருக்கட்டும், அவருடைய குடும்ப வாழ்க்கையாக இருக்கட்டும், அவருடைய சமூக வாழ்க்கையாக இருக்கட்டும், அவருடைய பொருளாதாரங்களாக இருக்கட்டும். இப்படி ஃபர்ளு என்பது கட்டாயக் கடமை என்பது நம்முடைய வாழ்க்கை அனைத்திலும் பரவியிருக்கிறது அதை வெரும் இபாதத் என்று சுறுக்கி விடக் கூடாது.
 
وما يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ
 
அடுத்ததாக அல்லாஹ் சொல்கிறான், யார் என்னுடைய ஃபர்ளுகளை செய்து என்னிடத்திலே நெருங்கிக் கொண்டே வருகிறார்களோ அதற்கு பிறகு அவர்கள் என்னிடத்திலே நெருக்கம் அடைவது என்னுடைய உபரியான வணக்க வழிபாடுகளை கொண்டு உபரியான வணக்க வழிபாடுகளின் மூலமாக அவன் நெருங்கிக் கொண்டே வருவான் அல்லாஹு அக்பர்!
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6502
 
ஃபர்ளான தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், அது போன்று ஃபர்ளான ஜகாத், அது போன்று நஃபிலான தான தர்மங்கள், அது போன் தொழுகையிலே குர்ஆன் ஓடுவது ஃபர்ளு தொழுகைக்கு வெளியிலே குர்ஆன் ஓதுவது நஃபில், தொழுகையிலே அல்லாஹ்வை நினைவு கூர்வது ஃபர்ளு, தொழுகைக்கு வெளியிலே அல்லாஹ்வை நினைவு கூர்வது நஃபிலாக இருக்கிறது.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا, وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ
 
முஃமின்களே! அல்லாஹ்வை அதிகம் அதிகமாக திக்ர் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள். (அல்குர்ஆன் 33 : 41, 33 : 35)
 
அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யக் கூடிய ஆண்கள், அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யக்கூடிய பெண்கள். ஒரு முஃமின் காலை மாலை திக்ருகளை செய்வான், காலை மாலை துஆக்களை ஓதுவான், தூங்குவதற்கு முன்னால் உள்ள துஆக்களை ஓதுவான். அவனுடைய பயணம் அவனுடைய நடை அவனுடைய எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) கற்றுக் கொடுத்த அந்த துஆக்களை அந்த திக்ருகளை சொல்லிக் கொண்டே இருப்பான்.
 
அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இருக்கக் கூடிய திக்ர் அந்த கயிறு இருக்கிறதே, அந்த உறவு இருக்கிறதே அது அறுபட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
அல்லாஹ்வை மறக்குமி பொழுதெல்லாம் உடனே திக்ரை கொண்டு தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்வுடைய நினைவிலே தனித்துத் கொண்டே இருப்பான்.
 
அதுபோக அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு பணிவிடை செய்தல், அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு சேவை செய்தல். எப்படி அல்லாஹ்வுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
السَّاعِي علَى الأرْمَلَةِ والمِسْكِينِ، كالْمُجاهِدِ في سَبيلِ اللَّهِ، أوِ القائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهارَ
 
 யார் விதவைகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறானோ, விதவைகளுக்காக அவன் முயற்சி செய்கிறானோ, அவர்களை பாதுகாக்கிறானோ அவர் யார் தெரியுமா அல்லாஹ்வுடைய பாதையிலே போர் செய்பவரை போல. அவர் நின்று வணங்கக் கூடியவரை போல, அவர் விடாமல் நோன்பு வைக்கக் கூடியவரை போல இப்படியாக சமூகத்தில் இருக்கக் கூடிய அநாதைகளை அதாரிப்பது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5353
 
قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அல்லவா: நானும் அநாதைகளை பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடியவரும் எப்படி தெரியுமா  இந்த இரண்டு விரல்களை போன்றிருப்போம் என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : ஸஹ்லு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5304
 
இப்படியாக நஃபிலான வணக்க வழிபாடுகள் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) தொழுகையில் சொன்னது, நோன்பில் சொன்னது, திங்கள் கிழமை நோன்பு, வியாழக் கிழமை நோன்பு, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள், முஹர்ரமுடைய பத்தாவது நோன்புகள், அரஃபாவுடைய நோன்பு, இப்படியாக நபிலான நோன்புகள், அதற்கு பிறகு தான தர்மங்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
 
தான தர்மத்துடைய வாசல்கள் விசாலமாக இருக்கிறது. அல்லாஹ் சொல்கிறான், இந்த நல்லவர்களுடைய செல்வத்திலே ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்பட்டிருக்கும் யாருக்காக ? யாசகம் கேட்டு வரக்கூடியவர்களுக்காகவும், யாசகம் கேட்காமல் இருக்கக்கூடிய வரியவர்களுக்காகவும் கொடுத்துக் கொண்டே இருப்பான்,
 
தன்னுடைய உறவுகளுக்கு கொடுப்பான், தன்னுடைய சகோதரர்களுக்கு கொடுப்பான், தனது சகோதரிகளுக்கு கொடுப்பான், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பான், தன்னுடைய தாய்வழி தந்தை வழி உறவுகளுக்கு கொடுப்பான், தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்கு கொடுப்பான், தன்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கு கொடுப்பான்.
 
இப்படியாக அல்லாஹ் கொடுத்த செல்வத்தை அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு வாரி வழங்குவதிலே அவனுடைய உள்ளம் ஆனந்தமடையும். கறுமித்தனமாக கஞ்சத்தனமாக செல்வத்தை தனக்கு என சேமித்துக் கொண்டு அந்த ஹவா நஃப்ஸ் பிடித்த நிலையிலே இறந்து சாவதை விட அந்த செல்வத்தை கொண்டு அவன் உறவுகளை சேர்த்து ஏழைகளை சேர்த்து எதீம்களை சேர்த்து அல்லாஹ்வுடைய அன்பை பெற்று விசாலமான உள்ளம் உடையவனாக மாறுவான்.
 
இப்படியாக இந்த நஃபிலான வணக்க வழிபாடு என்பது தொழுகையிலே இருக்கலாம், நோன்பிலே இருக்கலாம், ஸதகாவிலே இருக்கலாம், ஹஜ் உம்ராவிலே இருக்கலாம், அதுபோக அல்லாஹ்வுடைய அடியார்களின் ஹக்குகளிலே நாம் செய்ய வேண்டிய, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நாம் செய்ய வேண்டிய அந்த பணிவிடைகளை, உதவிகள், ஒத்தாசைகள் இவையெல்லாம் அந்த வணக்க வழிபாடுகளிலே வரும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதற்கு மிகப் பெரிய ஒரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கான சிறப்புகளை சொன்னார்கள். ஒரு முஸ்லிமுடைய கவலையை நீக்குவது, ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவது, கடனிலே சிக்கியவருடைய அந்த கடன் சுமையை நீக்கிக் கொடுப்பது இவையெல்லாம் சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உயர்ந்த வணக்க வழிபாடுகள்.
 
இப்படியாக அன்பான சகோதரர்ரளே! சகோதரிகளே! இந்த வாழ்க்கையை நாம் இந்த உலகத்திலே வாழும் பொழுதே இன்னா லில்லாஹி நிச்சமாக நாம் அல்லாஹ்விற்காகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் வ இன்னா இலைஹி ராஜிஊன் நிச்சமாக அல்லாஹ்வின் பக்கமே திரும்பக்கூடியவர்கள். அல்லாஹ்வின் பக்கம் ஓடி வாருங்கள் நாம் விபரம் தெரிந்ததிலிருந்து நம்முடைய வணக்க வழிபாடுகள் மூலமாக, இபாதத்துகள் மூலமாக, திக்ருகள் மூலமாக, துஆவின் மூலமாக இந்த கல்பை அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வைப்பதின் மூலமாக அல்லாஹ்வின் பக்கம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
يَاأَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي
 
எப்பொழுது நமக்கு மரணம் வருமோ அந்த நேரத்திலே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பாளர் சொல்வார் அமைதி பெற்ற ஆத்மாவே! திருப்தி அடைந்த ஆத்மாவே! எதில் திருப்தி அடைந்த ஆத்மா ? இபாதத்துகளிலே திருப்தி அடைந்த ஆத்மா, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளிலே திருப்தி அடைந்த ஆத்மா, (அல்குர்ஆன் 89 : 27, 29)
 
இந்த தீனை பின்பற்றுவதிலே திருப்தி கண்ட ஆத்மா. உலகத்தில் சேர்ப்பதில் அல்ல, உலக செல்வங்களை குவிப்பதிலே அல்ல, துன்யா துன்யா என்று அழைவதிலே அல்ல.
துன்யாவை மைன்டிலும் வைத்துக் கொண்டான் மனிதன் மனதிலும் வைத்துக் கொண்டான் அல்லாஹ்வுக்கு எங்கே இடம் வைத்திருக்கிறான், 
 
அன்பானவர்களே! இப்படியாக அல்லாஹ்விற்காக வாழ்ந்து அல்லாஹ்வின் பக்கம் ஓடியவர்களை நோக்கி அல்லாஹு தஆலா இறுதி அழைப்பிலே சொல்வான் என்னுடைய அடியானே! திருப்தி அடைந்தாய் அல்லவா என்னை கொண்டு, என்னுடைய மார்க்கத்தை கொண்டு, என்னுடைய இபாதத்தை கொண்டு. இப்பொழுது என்னிடத்திலே வந்து விடு உனது ரப்பாகிய என்னிடத்திலே வந்து விடு. நீயும் என்னை கொண்டு திருப்தி நானும் உன்னை கொண்டு திருப்தி என்னுடைய அடியார்களோடு சேர்ந்து கொள் என்னுடைய சொர்க்கத்திலே நீ உள்ளே வந்து விடு என்பதாக அல்லாஹ் அழைப்பான்.
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
 
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!” (அல்குர்ஆன் 41 : 30, 31)
 
அந்த நேரத்திலே மலக்குகள் வருவார்கள் மலக்குமார்கள் இறங்குவார்கள் அந்த நல்லடியார்கள் மீது பயப்படாதீர்கள் மறுமையிலே உங்களுக்கு அங்கே வேதனை இருக்காது. உங்களுடைய இந்த உலகத்திலே விட்டு வரக்கூடிய உங்களுடைய மனைவி உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய கணவனை பற்றி, உங்களுடைய சந்ததிகளை பற்றி கவலைப்படாதீர்கள் அவர்களை அல்லாஹ் பொறுப்பேற்று அவர்களை செழிப்பாக்கி வைப்பான். 
 
அன்பானவர்களே! என்னுடைய சகோதரர்களே! சகோதரிகளே! இந்த பயானின் இறுதியிலே ஒரு முக்கியமான விஷயத்தை நான் கோடிட்டு காட்ட விரும்புகிறேன். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்காக இரவு பகலாக உழைத்து உழைத்து செல்வத்தை சேமித்து வைத்து, கட்டிடங்களை கட்டி வைத்து, சொத்துகளை சேகரித்து வைத்து, பேலன்சுகளை வைத்து விட்டு இவையெல்லாம் என்னுடைய பிள்ளைகளை பாதுகாக்கும் என்று நினைக்கிறீர்களே இவையெல்லாம் உங்களுடைய பிள்ளைகளை அழித்து விடும் நாசமாக்கி விடும். அல்லாஹ்வுடைய கருணை இபாதத் இல்லையென்றால்,
 
நீங்கள் இபாதத்தாலியாக, நல்லவர்களாக, தக்வா உள்ளவர்களாக, ஈமான் உள்ளவர்களாக, இறையச்சம் உள்ளவர்களாக இருந்து உங்களுடைய பிள்ளைகளையும் தக்வா உள்ளவர்களாக, இபாதத் உள்ளவர்களாக, ஈமான் உள்ளவர்களாக நீங்கள் ஆக்கியிருந்தால் அல்லாஹ் உங்களுடைய பிள்ளைகளை வளர்க்க அவர்களை செழிப்பாக்க, அவர்களை பாதுகாக்க போதுமானவன்.
 
அல்லாஹ் அவர்களை அழிய விட்டு விட மாட்டான் அவர்களுக்கு அல்லாஹ் செல்லத்தை கொட்டி கொடுப்பான் அவர்களுடைய வாழ்க்கையை அல்லாஹ் செழிப்பாக்குவான். அல்லாஹ் செழிப்பாக்க நாடினால் எப்படி வேண்டுமானாலும் ஹலாலானதை கொண்டு செழிப்பாக்குவான். 
 
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ,وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
 
இன்னும், அவர் நினைத்துப் பார்க்காத விதத்திலிருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 65 : 2, 3) 
 
அல்லாஹ்வுடைய தக்வா வந்துவிடுமேயானால் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ் அவருக்கு உணவளிப்பான், அவர் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அல்லாஹ் அவருக்கு ரிஜ்கை கொடுப்பான்.
 
ஆகவே அன்பான சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வர வேண்டும் அந்த மறுமை வாழ்க்கை நமக்கு செழிப்பாக வேண்டும். அந்த மரண நேரம் நமக்கு அல்லாஹ்வுடைய சுபச் செய்தி பெறக்கூடிய நேரமாக ஆக வேண்டும். அதற்கு இந்த உலகத்திலே வாழும் பொழுதே நம்முடைய உலக தேவைகளுக்கு எப்படி நேரங்களை ஒதுக்குகிறோமோ,
 
நம்முடைய வியாபாரத்திற்கு, நம்முடைய தொழிலுக்கு, நம்முடைய சந்திப்புகளுக்கு, உலகத்தில் நாம் பெறக்கூடிய இன்பங்களுக்கு எப்படி நாம் நேரத்தை ஒதுக்குகிறோமோ அதை விட அதிகமாக நம்முடைய ரப்புக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் நம்முடைய அல்லாஹ்விற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
 
நம்முடைய சொர்க்கத்திற்காக மறுமைக்காக ஒதுக்க வேண்டும். அதிலே முதலாவதாக தவ்பா, இரண்டாவதாக ஃபர்ழான வணக்க வழிபாடுகள். அந்த ஃபர்ளான வணக்க வழிபாடுகள் என்பது இபாதத்தில் மட்டுமல்ல எல்லா சட்டங்களிலே இருக்கிறது என்பதை கவனத்திலே கொள்ள வேண்டும். அதுபோன்று மூன்றாவதாக நஃபிலான வணக்க வழிபாடுகள் அதுவும் பெரும் இபாதத்துகளிலே மட்டுமில்லை எல்லா சட்டங்களிலும் நஃபிலான இறை வணக்கங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு அவற்றிலும் நம்முடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.
 
இப்படியாக அல்லாஹ்வை நாம் நெருங்குவோமேயானால் அல்லாஹு தஆலா என் பக்கம் ஓடி வாருங்கள் என்ற அழைப்பை கேட்டு அந்த அழைப்புக்கு பதில் சொன்ன நல்லடியார்களிலே அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை சேர்த்து கொள்வான், நம்மை அரவணைத்துக் கொள்வான். அவன் எப்பொழுதும் நம்மை அரவணைக்க காத்துக் கொண்டிருக்கிறான்.
 
அல்லாஹ்வின் பக்கம் ஓடி வருவோமாக! அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவோமாக! தவ்பா செய்வோமாக! ஃபர்ழான வணக்க வழிபாடுகளை பாழாக்காமல் பரிசுத்தமாக மனத்தூய்மையோடு, மன ஓர்மையோடு அந்த வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவோமாக! அதுபோன்று நஃபிலான வணக்க வழிபாடுகளையும் நாம் அதிகம் அதிகம் செய்து அல்லாஹ்வுடைய அன்பை நெருக்கத்தை பெறுவோமாக!
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த உரையிலே நாம் கேட்ட நல்ல விஷயங்களிலே அமல் செய்வதற்கு, எடுத்து நடப்பதற்கு அருள் புரிவானாக! நம்முடைய அமல்களிலே, நம்முடைய இபாதத்துகளிலே, நம்முடைய கொள்கைகளிலே வழிகேடுகள், வழிதவறல்கள் வந்து விடுவதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வை நமக்கு மறக்க வைக்கக் கூடிய செல்வத்திலிருந்து, அல்லாஹ்வை நமக்கு மறக்க வைக்கக் கூடிய ஒவ்வொரு சோதனையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய குடும்பத்தார்களை நமக்கு கண் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பானாக! நம்முடைய பிள்ளைகளிலே நமக்கு கண் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பானாக! நம்முடைய துன்யாவை நம்முடைய மறுமைக்கான செலவழிக்கக் கூடிய கட்டுச்சாதமாக அல்லாஹு தஆலா இந்த துன்யாவை ஆக்கி வைப்பானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு(1)
 
مسند أحمد مخرجا  (5/ 17)
 
2801 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214] ، قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّفَا، فَصَعِدَ عَلَيْهِ، ثُمَّ نَادَى: «يَا صَبَاحَاهْ» فَاجْتَمَعَ النَّاسُ إِلَيْهِ، بَيْنَ رَجُلٍ يَجِيءُ إِلَيْهِ، وَبَيْنَ رَجُلٍ يَبْعَثُ رَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي لُؤَيٍّ يَا بَنِي يَا بَنِي. . . َرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِسَفْحِ هَذَا الْجَبَلِ، تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ، صَدَّقْتُمُونِي؟» قَالُوا: نَعَمْ قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ» فَقَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ، أَمَا دَعَوْتَنَا إِلا لِهَذَا؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} [المسد: 1]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/