ரமளானும் தானதர்மமும்!! | Tamil Bayan - 874
ரமளானும் தானதர்மமும்!!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமளானும் தானதர்மமும்!!
வரிசை : 874
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-03-2024 | 19-09-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை, மறுமையின் சிறந்த சொர்க்க வாழ்க்கையை, அல்லாஹ்வுடைய மன்னிப்பை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்விடத்தில் நம்முடைய சகோதரர்கள் பாலஸ்தீன மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக அவர்களின் நல்வாழ்வுக்காக அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் அரவணைப்புக்காக அல்லாஹ்விடத்திலே துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா இந்த மக்களை பாதுகாப்பானாக! அவர்களுடைய எதிரிகளுக்கு எதிராக அவர்களுடைய பாதங்களை உறுதிப்படுத்துஆனாக! அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா விரைவான வெளிப்படையான மிகைத்த வெற்றியை தந்தருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே ரமளானை இப்போதுதான் சந்தித்தோம் என்று இருக்கும் போது அடுத்து மூன்றாவது 10 நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் அந்த மூன்றாவது பத்துக்குள் நாம் சென்று விடுவோம். அல்லாஹு அக்பர்!
கண்ணியத்திற்குரியவர்களே! இதுதான் வாழ்க்கை. நாட்கள் இப்படியே கடந்து கொண்டே செல்கின்றன. நமக்கு எத்தனை வயதுகள் ஆண்டுகள் முடிந்திருக்கின்றன என்று நாம் அறியாமல் இருக்கிறோம். ஏதோ புனித தினங்கள் புனித மாதங்களின் புனித நாள்களில் சில நாள்கள் தான் நமக்கு நினைவில் இருக்கிறது.
அன்பான சகோதரர்களே இந்த ரமளானுடைய இறுதி பத்து வருகிறது. ஆனால் இன்று கவலையான செய்தி என்ன அதாவது வாழ்க்கையே வணக்க வழிபாடுகளுக்காக, அதை மறந்து விட்டோம்! அதில் குறிப்பாக ரமளானை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அல்லாஹுத்தஆலா நமக்கு விசேஷமாக கொடுக்கிறான்.
அதிலே இறுதி பத்தையாவது குறைந்தபட்சம் நீங்கள் உங்களது வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்குங்கள். அதன் இரவில் நின்று வணங்குங்கள். மஸ்ஜிதிலே இஃதிகாஃப் இருங்கள் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் வலியுறுத்துகிறார்கள்.
சகோதரர்களே! அதையும் நாம் எவ்வளவு அலட்சியமாக கடந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் நமக்கு சிறந்த முன்மாதிரி அழகிய முன்மாதிரி. அவர்களுடைய வாழ்க்கை தான் நமக்கு படிப்பினையான வாழ்க்கை. மறுமையை முன் வைக்காமல் மறுமையை நினைக்காமல் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்தால் ஒரு நொடி கூட நாம் நேர்வழியில் நிலைத்திருக்க முடியாது. நமது மன இச்சைகளை கட்டுப்படுத்த முடியாது; பாவங்களை விட்டு விலக முடியாது; நன்மையில் நாம் உறுதியாக இருக்க முடியாது; மறுமையின் நினைவு மறுமையின் உறுதி மறுமையின் ஆசை மறுமையின் தேடல் நமக்கு அந்த அளவுக்கு முக்கியமானது.
மறுமை மறுமை, எனது சொர்க்கம் எனது சொர்க்கம் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டுமே! விசாரணை நாள் இருக்கிறதே! அமல்கள் தானே அங்கே நமக்கு பலன் தரும்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
கருத்து : அல்லாஹ் கேட்கிறான்; மறுமை என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொண்டீர்களா? யாரும் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது! யாரும் யாருக்கும் பக்கத்தில் வந்து நின்று கொண்டு சிபாரிசு செய்ய முடியாது. அந்த நாளில் அதிகாரம் எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே அவனுக்கு முன்னால் பணிந்து பயந்து தலை குனிந்தவர்களாக நிற்பார்கள். அழுது கொண்டிருப்பார்கள்; அழுகையிலே மூழ்கிக் கொண்டிருப்பார்கள்; வேர்வையிலே மூழ்கிக் கொண்டிருப்பார்கள்; அல்லாஹ்வுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அங்கும் இங்கும் பாதங்கள் நகர முடியாது. (அல்குர்ஆன் : 82:19)
அந்த மறுமையை, அந்த ஆகிரத்தை உறுதி கொண்டவர்களுக்கு இந்த ரமளான் மாதம். இந்த இறுதி பத்து. அங்கே சொர்க்க வாழ்க்கையை விரும்பியவர்களுக்கு இந்த ரமளான், இந்த இறுதி பத்து. யாருக்கு மறுமையின் நம்பிக்கை பலவீனமாக இருக்கிறதோ பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியத்தில் இருக்கிறார்களோ, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று அந்த இறுமாப்பிலே இருக்கிறார்களோ அவர்களை பொறுத்தவரை இந்த அமல்கள், இபாதத், வணக்க வழிபாடு, அதிலே ஏற்படக்கூடிய சிரமத்தின் இன்பம், அதில் ஏற்படக்கூடிய உடல் அசௌகரியங்களின் அந்த ஈமானிய சுகம், இதுவெல்லாம் அவர்களுக்கு புரியாது.
அவர்களுக்கு புரிவது எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக சிரமப்பட்டால் அதிலே பலன் உண்டு. இங்கே துன்யாவை சம்பாதிப்பதற்காக சிரமப்பட்டால் அங்கே அதற்கான பலனை நம்முடைய இறுதி காலத்திலே அனுபவிக்கலாம். பணக்காரன் பெரிய செல்வந்தன் என்று போற்றப்படலாம். பேசப்படலாம். சபைகளிலே மதிக்கப்படலாம் என்ற ஒரு எண்ணம் துன்யாவின் சிரமங்களை அவர்களுக்கு எளிதாக்கி விடும்.
சகோதரர்களே! இந்த இபாதத்துடைய சிரமங்கள் யாருக்கு எளிதாகும்? அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்: அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடியவர்கள், அல்லாஹ்வுடைய அன்புக்காக ஏங்கக்கூடியவர்கள் அவர்களுக்கு இபாதத்துகள் சிரமமாக இருக்காது. அவர்களுக்கு நோன்பு சிரமமாக இருக்காது; அல்லாஹ்வின் பாதையிலே போர் செய்வது அவர்களுக்கு சிரமமாக இருக்காது; தான தர்மங்களை கொடுப்பது சிரமமாக இருக்காது; இரவிலே நின்று கால் வீங்க வணங்குவதும் கண்கள் பொங்க அழுவதும் அவர்களுக்கு சிரமமாக இருக்காது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள்! ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
இந்த ரமளானுடைய இறுதி பத்து வந்துவிட்டால் அந்த இறுதி பத்திலே ரமளானுடைய மற்ற நாட்களில் எடுத்துக் கொள்ளாத கடின சிரமத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமளானில் இறுதி பத்திலே எடுத்துக் கொள்வார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு நாளின் வணக்க வழிபாட்டை கூட நாம் செய்ய முடியாது. சாதாரண நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வை வணங்கினார்கள் அல்லவா ஃபர்ளான தொழுகையில் இருந்து, சுன்னத்தான தொழுகையில் இருந்து, நஃபிலான தொழுகையில் இருந்து, திக்ரு துஆக்கள் இஸ்திக்ஃபார் லிருந்து என்ன செய்தார்களோ அந்த ஒரு நாள் வணக்கத்தை கூட வாழ்க்கையின் நம்முடைய வாழ்க்கைப் பகுதிகளிலே நாம் மெனக்கெட்டு கவனம் எடுத்து செய்ய முடியாது. பலவீனப்பட்டு விடுவோம்.
அப்படிப்பட்ட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமளானிலே கூடுதல் கவனம் எடுக்கிறார்கள். ரமளானிலே கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு பிறகு மூன்றாவது 10 வந்த உடன் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள் என்றால் எந்த அளவு அவர்கள் இபாதத்திலே அல்லாஹுவின் நெருக்கத்தை தேடுவதிலே மூழ்கி இருப்பாருங்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா உடைய அந்த வார்த்தையின் ஆழத்தை அந்த வார்த்தையின் அழகை கவனியுங்கள்.
كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَجْتَهِدُ في العَشْرِ الأوَاخِرِ، ما لا يَجْتَهِدُ في غيرِهِ
வேறு நாட்களில் சிரமம் எடுக்காத அளவிற்கு இந்த இறுதி இரவுகளிலேயே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரமம் எடுப்பார்கள் மேலும் சொன்னார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ரமளானின் இறுதி இரவுகள் வந்துவிட்டால் இரவை முழுமையாக அவர்கள் உயிர்ப்பித்து விடுவார்கள்; தூங்கவே மாட்டார்கள். ரமளானின் மற்ற இரவுகளில் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமளானுடைய இறுதி இரவுகள் வந்துவிட்டால் 10 இரவுகளிலே தூங்கவே மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1175.
இன்று நம்முடைய இரவு வணக்கத்தைப் போன்று அல்ல. சொல்லப்போனால் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! இந்த குறைவை அல்லாஹுத்தஆலா ஏற்று, நிறைவாக்கி நமக்கு அருள் புரிவானாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி பத்து இரவுகளிலே வணக்க வழிபாடுகள் என்பது மக்ரிபில் இருந்து ஆரம்பமாகும். மக்ரிப் தொழுகையில் இருந்தே இபாதத்திலே ஈடுபட்டு விடுவார்கள்.
நாம் அப்படியல்ல மக்ரிபு தொழுகை சுருக்கமாக பிறகு நீண்ட இஃப்தார் அல்லது மக்ரிபு தொழுகைக்கு முன்பு நீண்ட இஃப்தார் அதற்குப் பிறகு சுருக்கமாக தொழுகை. இரவு தொழுக போகிறோம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு தனி ஒரு சாப்பாடு, தெம்பு சாப்பாடு, அதற்குப் பிறகு ஓய்வு ரெஸ்ட் இப்படி எல்லாம் எடுத்துவிட்டு பிறகு 10:00 மணிக்கு தொழுவதற்காக வருவோம். இரவினுடைய ஒரு சமபகுதியோ அல்லது மூன்றில் ஒரு பகுதியோ முழுமையாக முடிந்ததற்குப் பிறகு இரவு தொழுகைக்கு வருவோம்.
எவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் பாருங்கள். நாம் யாரை ஏமாற்றுகிறோம்? நம்மை நாமே ஏமாற்றுகிறோம். இன்னொரு கூட்டம் இஷா தொழுகையை சுருக்கமாக தொழுவார்கள். ஒரு கூட்டம் என்ன சொல்வார்கள்? இந்த தொழுகையில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்! நாங்கள் இரவிலே வந்து தொழுவோம்! ரெண்டு மணிக்கு என்று சொல்லிக்கொண்டு இஷா தொழுது விட்டு தூங்குவதற்கோ சுத்துவதற்கோ சென்று விடுவார்கள். அதற்குப் பிறகு ரெண்டு மணிக்கு வந்து மூன்று மணி வரை தொழுது விட்டு நாங்கள் கடைசி பத்திலே இரவு தொழுகை தொழுது விட்டோம்! அதோடு முடிந்ததோ இல்லையோ மூன்றில் இருந்து நான்கு வரை சஹர்.
யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்? இந்த அமல்கள் நாம் யாருக்காக செய்கிறோம்? நினைத்து பார்த்தீர்களா? இந்த அமல்களை கொண்டு பலன் பெறக்கூடியவர்கள் யார்? அல்லாஹ்வுக்காக இந்த நன்மையை நம்முடைய மறுமையின் வெற்றிக்காக செய்கிறோமா? அல்லது வேறு ஒருவருக்காக செய்கிறோமா? யோசித்துப் பாருங்கள்!
كانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وأَحْيَا لَيْلَهُ، وأَيْقَظَ أهْلَهُ
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி இரவு அந்த பத்து வந்துவிட்டால் முழு இரவையும் ஹயாத் ஆக்குவார்கள். மஹரிப்பிலிருந்து ஃபஜ்ர் தொழுகை முடிக்கின்ற வரை இபாதத் தான். அது மட்டுமா? தன்னுடைய மனைவிமார்கள் பொதுஆக பெண்கள் பலவீனமாக இருக்கலாம்; அவர்களுக்கு தங்கடங்கள் இருக்கலாம்; இருந்தும் அவர்கள் தொழுகை இல்லாத நேரத்தில் இருந்தாலும் கூட இந்த இரவின் நன்மையை இழந்து விடக்கூடாது என்று திக்ருகள், துஆக்கள், இஸ்திஃபார்கள், குர்ஆன் ஓதுவது போன்ற வணக்க வழிபாடுகளிலே ஈடுபடலாம் என்பதற்காக தனது மனைவிமார்களையும் எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2024.
இன்று சில பெண்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மாத தொடக்கு வந்துவிட்டால் மொத்தமாக இபாதத்தே செய்யக்கூடாது என்று, தூங்க வேண்டும் அல்லது வெட்டி வேலைகளிலே ஈடுபட வேண்டும் வேறு எதுவுமே நமக்கு இல்லை என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அப்படி சொல்லவில்லை சகோதரர்களே! பகல் காலங்களிலே நோன்பு பெண்களுக்கு தடுக்கப்பட்டது; மன்னிக்கப்பட்டது; நோன்பை கழா செய்ய வேண்டும்! ஐந்து நேர ஃபர்ளான தொழுகையை அவர்கள் தொழக்கூடாது! அவர்களுக்கு சிரமம் என்பதற்காக அது அவர்களுக்கு மன்னிக்கப்பட்டது. தொழுகையை கழா செய்யக்கூடாது. இது அந்த நேரம் அவர்களுக்கு சிரமமான நேரம் என்பதற்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய இபாதத்தில் நோன்பைத் தவிர தொழுகையைத் தவிர அல்லாஹுவை நெருங்குவதற்கு இன்னும் பல இபாதத்துகள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய அன்பை பாசத்தை பெறுவதற்கு ஏராளமான வணக்கங்கள் இருக்கின்றன. திக்ருகள் இருக்கின்றன. துஆக்கள் இருக்கின்றன. வெறும் ரப்பிக்ஃபிர்ளி என்ற துஆவை ஒரு நாளின் 24 மணி நேரமும் அதனுடைய ஒவ்வொரு நொடியிலும் ஒரு அடியான் உச்சரித்துக் கொண்டிருந்தாலே அல்லாஹ்வுக்கு மிக பிரியமான நேசராக மாறி விடுவான்.
ரப்பிக்ஃபிர்ளி... இறைவா என்னை மன்னித்துவிடு! என் இறைவா என்னை மன்னித்துவிடு! அல்லாஹ்விற்கு அவ்வளவு பிரியமான துஆ இது!
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நமக்கு தெரியவில்லை. துஆவை சடங்காக ஆக்கிவிட்டோம். ஏதோ தொழுது முடித்ததற்கு பிறகு உணர்ந்தோ உணராமலோ புரிந்தோ புரியாமலோ சில வார்த்தைகளை சொல்லிவிட்டு ஓடி விடுவது தான் துஆ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது கை தூக்கி ஒரு இடத்தில் உட்கார்ந்து கேட்பதுதான் துஆ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இல்லை சகோதரர்களே! அது துஆவினுடைய ஒரு பகுதி. அவ்வளவுதான் துஆ என்பது திக்ரை போல இஸ்திஃபாரை போல நம்முடைய நாவில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கக்கூடிய இபாதத். அது அல்லாஹ்விடத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் அவர்கள் மீது அவ்வளவு பாசத்தையும் நேசத்தையும் பொழிந்தானே அவர்களை தன்னுடைய நண்பராக ஏற்றுக் கொண்டானே அதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே ஒன்று அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ
இப்ராஹிம் (கஸீரு துஆ) அதிகமாக துஆ கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மிக அதிகமாக துஆ கேட்டுக் கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் : 11:75)
நீங்கள் நடங்கள்; உங்களது வேலைகளை செய்யுங்கள்; வாகனத்தை ஓட்டுங்கள்; எந்த நேரத்தில் நீங்கள் இருந்தாலும் சரி உள்ளத்தில் நாவில் யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு. யா அல்லாஹ் என் மீது கருணை காட்டு. யா அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை கொடு. யா அல்லாஹ் . என்னுடைய கப்ருடைய வாழ்க்கையை சிறப்பாக்கு, என்று அல்லாஹ்விடத்திலே வேண்டிக் கொண்டே இருப்பீர்களேயானால் இந்த துஆ அல்லாஹ்விடத்தில் உங்களை நெருக்கமாக்கும்
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ
கருத்து : என்னை அழையுங்கள்; அழைத்துக் கொண்டே இருங்கள்; அழைக்கப்படுவதை அல்லாஹ் அவன் அழைக்கப்படுவதை விரும்புகிறான்; அதைக் கொண்டு அவன் பெருமைப்படுகிறான்; அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அவனை கண்ணியப்படுத்திய மாபெரும் நன்மை இந்த துஆவிலே இருக்கிறது. (அல்குர்ஆன் : 40:60)
ஆகவே, பெண்கள் இந்த கடைசி பத்திலே அவர்களுக்கு தொழுகை நோன்பு வைக்கக் கூடிய அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் உடனே தூக்கத்தில் கழித்து வீண் வேலைகளிலே நேரங்களை வீணாக்க வேண்டாம். குர்ஆன் ஓதுங்கள். பல அறிஞர்கள் குர்ஆன் ஓதுவதை தடுக்கவில்லை. அதாவது ஹைல் உள்ள பெண்கள் நிஃபாஸ் உள்ள பெண்கள் குர்ஆனை தவிர்க்க வேண்டும் என்று வரக்கூடிய பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்கள் ஆதாரத்திற்கு தகுந்த ஹதீஸ்கள் அல்ல.
அந்த நேரங்களிலே குர்ஆனை ஓதலாம்; அந்த நேரங்களிலே அவர்கள் திக்ருகள் செய்யலாம்; இஸ்திஃபார் செய்யலாம்; துஆக்களிலே ஈடுபடலாம்; மார்க்க கல்விகளை அவர்கள் படிக்கலாம்; குர்ஆனுடைய வசனங்களை மனப்பாடம் செய்யலாம்; ஓதப்படுகிற குர்ஆனை அவர்கள் கேட்கலாம்.
இப்படியாக கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய எல்லா மனைவிமார்களையும் எழுப்பி விடுவார்கள். மற்ற நாட்களில் அப்படி சிரமப்படுத்த மாட்டார்கள். அவர்களை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது கொண்டு இருப்பார்கள்.
ஆனால் இந்த ரமளான் உடைய இறுதி பத்து வந்துவிட்டால் தூங்கிக் கொண்டிருக்கக் கூடிய, ஓய்வில் இருக்கக்கூடிய, அசதியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு அந்த நேரத்திலே எவ்வளவு பலவீனம் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்தவர்கள். அப்படி இருந்தும் கூட இந்த இரவின் நன்மை அவர்களுக்கு தவறி விடக்கூடாது என்பதற்காக அவர்களை எழுப்பி விடுவார்கள். கடின முயற்சி எடுப்பார்கள். தங்களுடைய கீழாடையை இறுக கட்டிக் கொள்வார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இறுதிப் பத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? சாதாரணமான விஷயம் அல்ல. இந்த இறுதி பத்தில் தான் லைலத்துல் கத்ர் என்ற இரவு இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். ரமளான் உடைய இறுதி பத்தின் ஒற்றை இரவுகளிலே நீங்கள் நீங்கள் லைலத்துல் கத்ரை தேடுங்கள்
கண்ணியத்திற்குரியவர்களே இந்த லைலத்துல் கத்ரை தேடி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அது தவறி விடக்கூடாது என்பதற்காக ரமளானிலே இஃதிகாஃப் இருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமளான் உடைய இறுதி பத்திலே இஃதிகாஃப் இருப்பார்கள், அவர்களை அல்லாஹுத்தஆலா உயிர் கைப்பற்றுகின்ற வரை இந்த சுன்னாவை தொடர்ந்து செய்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2026.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு ரமளானிலும் 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். எந்த ஆண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயிர் கைப்பற்றப்பட்டார்களோ அந்த ஆண்டிலே 20 நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஃதிகாஃப் இருந்தார்கள் என்று அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2044.
அபூ சயீது அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலாவதாக ரமளானிலே முதல் பத்திலே இஃதிகாஃப் இருந்தார்கள், பிறகு இரண்டாவது பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள், பிறகு சொன்னார்கள், அல்லாஹ்வின் அடியார்களே நான் முதல் பத்திலே இஃதிகாஃப் இருந்தேன், லைலத்துல் கத்ரை தேடி பிறகு இரண்டாவது பத்தில் இஃதிகாஃப் இருந்தேன், எனக்கு சொல்லப்பட்டது அந்த லைலத்துல் கத்ர் ரமளான் உடைய இறுதி பத்திலே இருக்கிறது என்பதாக, ஆகவே யார் உங்களில் என்னோடு இஃதிகாஃப் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் இஃதிகாஃப் இருக்கட்டும் என்று சொன்னார்கள். மக்கள் எல்லாம் அந்த இறுதி பத்திலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இஃதிகாஃப்பிலே கலந்து கொண்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூ சயீது அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1167.
கண்ணியத்திற்குரியவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த கவனத்தை பாருங்கள்! எந்த அளவு இந்த ரமளானை பயன்படுத்த வேண்டும், அதிலே இந்த இறுதி பத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கவனமாக இருந்தார்கள் என்று.
நம்மிலே இந்த சிறப்புகளும் இந்த நன்மைகளும் இதன் முக்கியத்துவங்களும் தெரியாத காரணத்தால் நம்மிலே பலர் ஊர் சுற்றுவதிலே கழிக்கிறார்கள், பலர் ஷாப்பிங்கிலே கழிக்கிறார்கள். பலர் இங்கும் அங்கும் அலைவதிலே வெட்டியான வேலைகளிலே இப்படியாக நேரங்களை மிக மோசமாக வீணடிக்க கூடிய பெரும்பாலான மக்கள் நமக்கு மத்தியிலே இருக்கிறார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அதுபோன்று சகோதரர்களே! இந்த ரமளானுடைய மாதத்தில் குறிப்பாக இறுதி பத்திலே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அமல்களிலே ஒன்று சதக்கா -தானதர்மம். அல்லாஹ்வின் பாதையிலே தான தர்மம் செய்வது ஜகாத்தை சரியாக கொடுப்பது உபரியான தான தர்மங்களை கொடுப்பது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமளானிலே அதிகமாக வேகமாக வீசக்கூடிய காற்றை விட அவர்கள் அதிகம் தர்மம் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த தர்மத்தின் நன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தர்மம் அல்லாஹ்விடத்திலே எவ்வளவு மகத்துவம் மிக்கது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மில் ஒவ்வொருவரும் தனக்கு செலவழிப்பதை விரும்புவதை விட தன் பசிக்கோ தன்னுடைய சுய தேவைக்கோ அல்லது தன்னுடைய அதிகப்படியான வசதியான தேவைக்கோ செலவழிப்பதை விட ஏழை எளியவர்களுக்கு எத்தீம்களுக்கு செலவழிப்பதை நாம் விரும்பாதவரை நாம் ஈமானின் ருசியை அடைய முடியாது.
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِه عَلِيْمٌ
நீங்கள் உங்களுக்காக விரும்பக்கூடிய செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு தர்மம் கொடுக்காத வரை நீங்கள் நன்மையின் முழுமையை அடைய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 3:92)
لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَوَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِوَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ
கருத்து : செல்வத்தின் மீது பிரியம் இருந்தும் ஆசை இருந்தும் அதன் தேவை இருந்தும் அந்த செல்வத்தை யார் ஏழைகளுக்கு கொடுக்கின்றார்களோ யார் எத்தீம்களுக்கு கொடுக்கின்றார்களோ உறவுகளுக்கு கொடுக்கின்றார்களோ, கடனாளிகளுக்கு கொடுக்கின்றார்களோ, அடிமைகளுக்கு கொடுக்கின்றார்களோ, அல்லாஹுவின் பாதையில் கொடுக்கின்றார்களோ அவர்கள்தான் நன்மையை பெற்றவர்கள். அவர்கள்தான் உண்மையான முஃமின்கள். அவர்கள் தான் தக்வா உள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:177)
அன்பானவர்களே! நம்முடைய நிலைமை எப்படி? நாம் நமக்கு செலவு செய்வோம்; அவசியமான செலவு, பிறகு உபரியான தேவை, பிறகு ஆடம்பரமான செலவுகள், இவற்றையெல்லாம் செலவழித்து விட்டு மிஞ்சினால் பார்ப்போம், யாருக்கு அண்டை வீட்டாருக்கு கொடுக்க உறவுகளுக்கு கொடுக்க ஏழைகளுக்கு கொடுக்க அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு கொடுக்க மஸ்ஜித்திற்கு கொடுக்க மதரசாக்களுக்கு கொடுக்க மிஞ்சினால் பார்ப்போம்.
இப்படி பார்த்தால் சைத்தான் நம்மை விடுவானா அவன் இறுதி வரை நமக்கு ஒரு தேவை கொண்டு வந்து கொண்டே இருப்பான். நமக்கு சில பாவனைகளை காட்டிக்கொண்டே இருப்பான். அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை தடுத்துக் கொண்டே இருப்பான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தர்மத்தை பற்றி சொல்லும் பொழுது சொன்னார்கள்;
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை பொழுதை அடையும் பொழுது இரண்டு மலக்குகள் வருகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்விடத்திலே துஆ செய்கிறார்கள்; யா அல்லாஹ் தர்மம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலனை கொடு! மற்ற ஒருவர் சொல்கிறார், யா அல்லாஹ் தர்மம் செய்யாமல் கருமித்தனம் கஞ்சத்தனம் காட்டக்கூடியவனுக்கு, கையை தடுத்துக் கொள்ளக் கூடியவனுக்கு நாசத்தை கொடு என்று அந்த மலக்குகள் துஆ செய்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1351.
அதுமட்டுமா, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ما نَقَصَتْ صَدَقةٌ مِن مالٍ، وما زادَ اللَّهُ عَبْدًا بعَفْوٍ إلَّا عِزًّا، وما تَواضَعَ أحَدٌ للَّهِ إلَّا رَفَعَهُ اللَّهُ
தர்மத்தால் செல்வம் குறையாது; தர்மம் செல்வத்தை குறைக்கவே செய்யாது; பிறரை மன்னிப்பதால் மன்னிப்பவர்களுக்கு அல்லாஹ் கண்ணியத்தை தான் அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக பணிபவர்களை அல்லாஹ் உயர்த்துகின்றான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2588.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; நன்மைகளை அதிகமாக செய்வது புண்ணியங்களை அதிகமாக தேடி கொள்வது கெட்ட ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. தீமைகள் மற்றும் அழிவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. யார் நன்மைகளை செய்கிறார்களோ அவர்கள் தான் மறுமையிலே நன்மைகளுக்கு தகுதியானவர்கள்.
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 3796.
அல்லாஹ்வின் அடியார்களே, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஒரு அடியான் சுத்தமான ஹலாலான செல்வத்திலிருந்து தர்மம் செய்தால் அல்லாஹுத்தஆலா ஹலாலை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறான். அதை நீங்கள் கவனத்தில் வையுங்கள். அந்த ஹலாலான தர்மத்தை ரஹ்மான் தனது வலது கையிலே வாங்கிக் கொள்கிறான். நீங்கள் செய்யக்கூடிய அந்த ஹலாலான தர்மத்தை அல்லாஹ் வலது கையிலே வாங்கிக் கொள்கிறான். அது ஒரு பேரீத்தம்பழமாக இருந்தாலும் சரி, பிறகு அந்த தர்மம் ரஹ்மானுடைய கரத்திலே வளர்கிறது.,.,. வளர்கிறது.,.,., வளர்கிறது.,.,., மலையை விட பெரியதாக வளர்ந்து விடுகிறது. உங்களில் ஒருவர் தன்னுடைய குதிரையின் குட்டியை எப்படி பேணி பாதுகாத்து வளர்ப்பாரோ அல்லாஹுத்தஆலா அந்த தர்மத்தை அப்படி அவருக்கு வளர்ச்சி அடைய செய்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7430.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: தர்மம் பாவங்களைப் போக்கி விடுகிறது; தர்மம் பாவங்களை அழித்து விடுகிறது; எப்படி தண்ணீர் நெருப்பை அணைக்கிறதோ அதுபோன்று.
அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனிலும் ஹதீஸிலும் ஏராளமான நன்மைகள் சிறப்புகள் இருக்கின்றன. தர்மங்கள் செய்வதை அது ஜகாத்தாக இருக்கட்டும், உபரியான தான தர்மங்களாக இருக்கட்டும், இதை எங்கெல்லாம் அல்லாஹுத்தஆலா முஃமின்களை முஸ்லிம்களை ரஹ்மானின் அடியார்களை இந்த ஈமானில் உயர்ந்தவர்களை புகழ்கிறானோ அந்த எல்லா இடங்களிலும் அந்த முஃமின்கள் முஸ்லிம்கள் ரஹ்மான் உடைய அடியார்களின் அடையாளங்களாக அல்லாஹுத்தஆலா தர்மத்தை மிக அழகாக வெளிப்படுத்தி உறுதிப்படுத்தி மையப்படுத்தி கூறுகிறான்.
சகோதரர்களே! நபிமார்களின் குணம் தர்மம். அல்லாஹ்வின் இறைநேசர்களின் குணம் தர்மம். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடியவர்களுடைய குணமாக இந்த தர்மம் இருக்கிறது. அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா இந்த ரமளானுடைய மாதத்திலே இந்த குறிப்பாக இந்த இறுதி பத்திலே இந்த தர்மத்தையும் அதிகமாக செய்து இந்த ரமளானுடைய முழு நன்மையை நாம் பெற்றுக் கொள்வோமாக!
லைலத்துல் கத்ர் உடைய இரவை தவற விடாமல் கடைசி பத்திலே இஃதிகாஃப் இருந்து மேலும் பல இபாதத்துகளிலே, தொழுகை, இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, இஸ்திக்ஃபார் செய்வது, போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இந்த ரமளானுடைய நன்மையை முழுமையாக அடைவதற்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெறுவதற்கு அல்லாஹ்வுடைய அன்பை பெறுவதற்கு எனக்கும் உங்களுக்கும் நம்முடைய குடும்பத்தார்களுக்கும் சந்ததிகளுக்கும் எல்லா முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லாஹுத்தஆலா தந்துருள்வானாக! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/