மரணத்தைப் பற்றி மாமறை அல்குர்ஆன் | Tamil Bayan - 877
மரணத்தைப் பற்றி மாமறை அல்குர்ஆன்
ஜுமுஆ குத்பா தலைப்பு : மரணத்தைப் பற்றி மாமறை அல்குர்ஆன்
வரிசை : 877
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12-04-2024 | 03-10-1445
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மற்றும் அவர்களை பின்பற்றிய நல்லோர் அனைவரும் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக தக்வாவை நினைவூட்டியவனாக; அல்லாஹ்விடத்தில் உங்களுக்கும் எனக்கும் பாவமன்னிப்பை வேண்டியவனாக; அல்லாஹ்வுடைய கருணையை வேண்டியவனாக; காஜா (GAZA) முஸ்லிம் சகோதரர்களுக்காக விரைவான மகத்தான வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்மிடம் இருந்து ஏற்றுக்கொள்வானாக! நமது பாவங்களை மன்னிப்பானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கும் உங்களுக்கும் மரணத்தை பற்றிய சில நினைவூட்டல்களை செய்து கொள்ள விரும்புகிறேன். நாம் எவ்வளவு பேசினாலும் அது குறைவுதான். அது போன்று ஆகிரத்தைப் பற்றி சொர்க்க நரகத்தைப் பற்றி எவ்வளவு நாம் நினைவுகூர்ந்தாலும் அது குறைவுதான்.
நம்முடைய பெற்றோர் நம்மை பெற்றவர்கள் வளர்த்தவர்கள், நாம் வாழ்வதற்காக தங்களை கரைத்துக் கொண்டவர்கள், நம்முடைய நன்மையில் நம்மை விட அதிகமாக அக்கறை செலுத்தியவர்கள் அவர்களைப் பற்றி நாம் எவ்வளவு நினைவு கூர்ந்தாலும் அதுவும் குறைவுதான்.
அது போன்று தான் இந்த மரணமும் இந்த மரணத்தைப் பற்றி நாம் எவ்வளவு நினைவு கூர்ந்தாலும் அது குறைவுதான். ஏன்? இந்த மரணத்தை நினைவு கூரும் போது தான் நம்முடைய உள்ளங்களில் இருக்கக்கூடிய அலட்சியம் நமது வாழ்க்கையில் இருக்கக்கூடிய கவனக்குறைவு ஒரு விதமான சோம்பேறித்தனம் குறிப்பாக மறுமையின் விஷயத்தில் பாவங்களை விட்டு தவ்பா செய்வதில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதில் நமக்கு இருக்கக்கூடிய அலட்சியம் மறதி கவனக்குறைவு இவற்றையெல்லாம் நாம் துடைத்தெறிய முடியும்.
அல்லாஹுத்தஆலா இந்த மரணத்தில் மிகப்பெரிய ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறான். மிகப்பெரிய ஒரு தத்துவத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மரணம் சாதாரணமான ஒன்று அல்ல மரணத்தை குறித்து குர்ஆன் தொடர்ந்து பேசுகிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களிலே இந்த மௌத்தை குறித்து பல கருத்துகளை நமக்கு சொல்கிறார்கள்.
அதுபோன்று நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்கள் சமூக சீர்திருத்த நல்லுபதேசம் செய்கிற அந்த சான்றோர் மரணத்தை குறித்து நமக்கு பல விஷயங்களை விளக்கி இருக்கிறார்கள்.
அன்பானவர்களே! இந்த மரணம் நம்மை நம்முடைய நிழல் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. யாரும் இந்த மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்று அல்குர்ஆன் மூலமாக அல்லாஹுத்தஆலா நமக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். எந்த அரசனும் சரி, உடல் வலிமையுள்ள எப்பேர்பட்ட வாலிபனாக இருந்தாலும் சரி, உலக மருத்துவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரி, அல்லாஹ் எந்த உயிரை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டானோ அந்த உயிரை அவர்களால் பாதுகாக்க முடியாது; தக்க வைக்க முடியாது; பிடித்து வைத்திருக்க முடியாது.
அந்த உயிர் பிரிந்தே தீரும். எப்படி உயிர் ஊதப்படுகிற நேரம் அல்லாஹ்வின் கட்டளைப்படி அது நடக்கிறதோ அது போன்று தான் உயிர் பிரியக்கூடிய நேரமும் அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நடந்தே தீரும். அல்லாஹ் தஆலா மரணத்தை நமக்கு மறைத்து வைத்து விட்டான்.
ஒவ்வொரு ஆண்டும் ரமலானின் கடைசி 10 பத்தின் ஓர் இரவிலே அந்த லைலத்துல் கத்ர் இரவிலே இந்த ஆண்டு யார் மரணிப்பார் யார் பிறப்பார் யாருக்கு என்ன நடக்கும் என்ற விசாலமான விரிவான அத்தனை விதிகளையும் அல்லாஹுத்தஆலா மலக்குகளுக்கு அறிவித்து விடுகிறான். அந்த மலக்குகள் அல்லாஹ் கொடுத்த அந்த குறிப்பை கொண்டு அதை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
எத்தனை பேருக்கு இன்று இந்த ஆண்டிலே மரணம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்தவன். அல்லாஹுவால் அறிவிக்கப்பட்ட அந்த மலக்கை தவிர உலகத்தில் யாரும் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியாது.
அந்த மரண தருவாயில் வேண்டுமானால் சில அறிகுறிகளை அவர் காணலாமே தவிர, எனக்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் மரணம் வரும் என்பதாக யாரும் சரியாக சொல்ல முடியாது. அந்த முன்கூட்டி அறியும் ஆற்றலை (இல்மை) அல்லாஹு வைத்திருக்கிறான்.
ரப்புல் ஆலமீன் நமக்கு எச்சரிக்கிறான் மிரட்டல் தொனியிலே
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! இன்னும், அவர்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகிறார்கள். (நபியே) நீர் கூறுவீராக: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன).” ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக (இலகுவாக) விளங்குவதில்லையே! (அல்குர்ஆன் : 4:78)
போர் செய்யாமல், அல்லாஹ்வுடைய பாதையில் மார்க்கத்தை பாதுகாக்காமல், அல்லாஹ்வுடைய தீனை ஏற்றதற்காக முஸ்லிம்களாக இருப்பதற்காக எதிரிகளால் படுகொலை செய்யப்படக்கூடிய அப்பாவி முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு போர் செய்யாமல் கோழைகளாக இருக்கக்கூடியவர்களை பார்த்து அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தை இறக்கினான்.
போருக்கு சென்றால் மரணம் வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? யுத்தத்திற்கு சென்றால் நீங்கள் செத்து விடுவீர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் எங்கிருந்தாலும் சரி மரணம் உங்களை வந்து பிடித்துக் கொள்ளும்.
அல்லாஹ் சொல்கிறான்: உயரமான பலமான கோட்டைகளுக்குள் நீங்கள் இருந்தாலும் கோபுரங்களுக்குள் இருந்தாலும் மரணம் உங்களை பிடித்துக் கொள்ளும்.
மேலும், அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ
ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். (அல்குர்ஆன் : 3:185)
பல முறை இந்த வசனங்களை நாம் கேள்விப்படுகிறோம்; செவியுறுகிறோம். ஆனால், நமக்கு நெருக்கமானவர்களில் உறவுகளோ நண்பர்களோ அன்றாடம் நாம் பழகக் கூடியவர்களிலே இந்த மௌத்தை பார்க்கும் போது தான் இந்த வசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிய முடிகிறது.
ஏதோ செய்திகளாக அங்கே அத்தனை பேர் மரணம்; இங்கே இத்தனை பேர் மரணம்; இங்கே இவர் மரணித்து விட்டார். அங்கே அவர் மரணித்து விட்டார் என்று மரண செய்திகளை நாம் வெறும் செய்திகளாக செவியேற்று கடந்து சென்று விடுகிறோம்.
அந்த செய்திகளை கேட்கும் போது நானும் இப்படித்தானே ஒரு நாள் மரணிப்பேன்; எனது செய்தியும் இப்படி தானே பரிமாறப்படும்; ஒருத்தருக்கு ஒருத்தர் மூலமாக மற்றவருக்கு பகிரப்படும் என்பதை மறந்து விடுகிறோம்; நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
சகோதரர்களே! யார் இப்படி நினைப்பார்களோ அவர்கள் தான் சுதாரித்துக் கொள்வார்கள்; அவர்கள் தான் தங்களை திருத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் அல்லாஹ்வுடைய பயத்தை பெறுவார்கள்.
இந்த உலகமே கதி, உலகம் தான் எல்லாம் என்று மறுமையை மறந்து இருப்பவர்களுக்கு அல்லாஹ் சொல்கிறான்: இந்த உலகத்தில் பிறந்தால் அடுத்து உறுதியான மறுக்கப்பட முடியாத உண்மை என்ன? பிறந்த உயிர் ஒவ்வொன்றிற்கும் மரணம் இருக்கிறது. மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்: உங்களுக்கு கண்டிப்பாக மறுமை வாழ்க்கை உண்டு. அந்த மறுமை வாழ்க்கையிலே உங்களது அமல்களுக்குரிய கூலி கொடுக்கப்படும். வெற்றியாளர் யார்? நற்பாக்கியம் பெற்றவர் யார்? என்பதை அல்லாஹுத்தஆலா விளக்குகிறான்.
நாம் என்ன நினைப்போம்? இந்த உலகத்தில் வசதியான வாழ்க்கை இந்த உலகத்திலே நாம் விரும்பிய படி செல்வம் நமக்கு கிடைப்பது மக்களால் போற்றப்படுவது மதிக்கப்படுவது. இவையெல்லாம் குப்பை, ஒன்றுமே இல்லை. என்று அல்லாஹ் சொல்கிறான்: எது நற்பாக்கியம்? எது மிகப்பெரிய வெற்றி? யார் நரக நெருப்பிலிருந்து தூரமாக்கப்படுகிறாரோ சொர்க்கத்திற்கு நுழைவிக்கப்படுகிறாரோ சொர்க்கத்தில் செல்வதற்கு சொர்க்கத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறாரோ அவர்தான் பாக்கியம் பெற்றுவிட்டார்.
அன்பானவர்களே! இந்த உலகத்தினுடைய எந்த இழப்பை கொண்டும் கவலைப்படாதீர்கள்; துக்கப்படாதீர்கள்; கைசேதப்படாதீர்கள். இந்த ஒவ்வொரு இழப்புக்கும் அல்லாஹுத்தஆலா நமக்கு மறுமையிலே நன்மையை தர போதுமானவன்.
اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
என்று தன்னுடைய துக்கத்தை தாங்கிக் கொள்ளும் போது நான் அல்லாஹ்விற்காக அல்லாஹுவின் பக்கம் திரும்பப் போகிறேன் என்று தன்னுடைய உள்ளத்தை பொறுமையைக் கொண்டு ஆதரவு கொடுத்து கொள்ளும்பொழுது அல்லாஹுத்தஆலா விசேஷமான வாழ்த்துகளை கருணையை ரஹ்மத்துகளை பாவ மன்னிப்புகளை அந்த அடியான் மீது இறக்கி வைக்கிறான். (அல்குர்ஆன் : 2: 156,157)
இன்று பாருங்கள்! உலகம் கண்டிராத மிகப்பெரிய இனப்படுகொலையை காஜா GAZA காஸா மக்கள் சந்திக்கிறார்கள். அன்றாடம் அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு அங்கே கை போகிறது கால் போகிறது கண் போகிறது.
அல்லாஹ்வின் அடியார்களே! இது உலகத்திலே வேறு பகுதியில் மாற்றார்களின் நிலத்திலே நடந்து இருக்குமேயானால் அவர்களுடைய நிலைமையே அங்கு வேறாக இருந்திருக்கும்.
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
(அல்குர்ஆன் : 3:173)
نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் : 8:40)
என்ற அந்த உயர்ந்த மந்திரம், அந்த உயர்ந்த வார்த்தை மழையை விட வலிமையான பொறுமையை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது.
அல்லாஹு அக்பர்! அதை பார்த்து இந்த நேரத்தில் இறைவனை புகழ்கிறார்களே! இவர்கள் இந்த நிலையில் அல்லாஹ்வை தொழுகிறார்களே! அல்ஹம்து லில்லாஹ்! எங்களது வீட்டிலே ஒரு ஷஹீதை அல்லாஹ் கொடுத்தானே! என்று அல்லாஹ்வை புகழ்கிறார்களே! இவர்களது ஈமானை பார்த்து கொடிய காஃபிர்கள் மனம் உருகி இஸ்லாமிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமை ஏசியவர்கள், நபியை திட்டியவர்கள், முஸ்லிம்களை பகைத்தவர்கள் முஸ்லிம்களுடைய பொறுமையால் இத்தகைய துன்பங்களை இஸ்லாம் சொல்லியிருக்கக்கூடிய அந்த விதத்தில் அவர்கள் அணுகுகின்ற அந்த அணுகுமுறை காஃபிர்களின் உள்ளங்களை தவிடுப்பொடி ஆக்கிவிட்டது. கரையாத உள்ளங்களை எல்லாம் கரைத்து விட்டது.
குர்ஆனை படிக்கிறார்கள்; நான் முஸ்லிமாகிவிட்டேன்; நான் இப்போது முஸ்லிம்; தொழுகிறேன்; மஸ்ஜித்திற்கு செல்கிறேன் என்று அவர்கள் வீடியோ வெளியிடுகிறார்கள். அல்லாஹ் அக்பர்! அந்த காஜா மக்களுக்கு அவர்களோடு அந்த துக்கத்திலே பங்கு பெறுவதற்கு அத்தனை மேலை நாட்டவர்கள் ஓடோடி வந்து சேவை செய்வதற்கு எங்களுக்கும் அங்கே ஒரு ஷஹாதத் பாக்கியம் கிடைக்க வேண்டுமே என்று ஓடி வருகிறார்கள்.
பார்க்கிறோம்; முஸ்லிம் நாடுகள் அங்கே குவிவதை விட பிற நாட்டிலிருந்து அந்த மக்களுக்கு பொது சேவை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வரிசையில் நிற்கிறார்கள்.
சகோதரர்களே! இதுதான் நமக்கு குர்ஆன் கற்றுக்கொடுத்த அந்த தைரியம், மனவலிமை. அந்த அழகிய அணுகுமுறை. எத்தகைய துன்பம் வந்தாலும் சரி, எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் சரி, நாம் அல்லாஹ்வை மறக்க மாட்டோம்; அல்லாஹ்வை ஏச மாட்டோம்; அல்லாஹ் எனக்கு இப்படி ஏன் செய்தான் என்று நாம் சொல்ல மாட்டோம்.
نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
எனது எஜமானன் சிறந்த எஜமானன் அவன் சிறந்த பொறுப்பாளன். (அல்குர்ஆன் : 8:40)
போராளிகளின் தலைவருடைய மூன்று குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் கொல்லப்படுகிறார்கள். நோயாளிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற அவருக்கு அந்த செய்தி சொல்லப்படுகிறது, உங்களுடைய மூன்று பிள்ளைகளும் உங்களுடைய பேரக்குழந்தைகளும் நேரடியாக ஒரே வாகனத்தில் வைத்து வான்வெளித் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டு உறுப்புகளே கிடைக்காத அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டார்கள், அப்படியா! அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக! அல்லாஹ் அவர்களுக்கு லேசாக்கி கொடுப்பானாக! என்னுடைய பிள்ளைகளுக்கு ஷஹாதத்தை கொடுத்த அல்லாஹ்விற்கு அல்ஹம்து லில்லாஹ்!
எனது வீட்டிலே இவர்கள் மட்டுமல்ல இன்னும் 60 பேர் ஷஹீதாகி இருக்கிறார்கள். அந்த காசாவின் மற்ற பிள்ளைகள் எப்படியோ அப்படித்தான் என்னுடைய பிள்ளைகளும். எங்களது உயிர் அல்லாஹ்வுடைய தீனுக்காக, மஸ்ஜிதுல் அக்சாவிற்காக என்று சொல்லி அந்த செய்தியை கேட்டு தாங்கிக்கொள்ளக்கூடிய உள்ளம் அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், சகோதரர்களே அதுதான் ஈமான்; அதுதான் யக்கீன்; அதுதான் மறுமையின் நம்பிக்கை.
இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், அதே ஜியோனிச இஸ்ரேலிய எதிரிகளில் ஓர் எதிரி கொல்லப்பட்டு விட்டால் அவர்கள் அலறக்கூடிய அலறலை பாருங்கள்! அவர்கள் வைக்கக்கூடிய ஒப்பாரியை பாருங்கள்! பைத்தியம் பிடித்து விடுகிறது.
நாம் மன வலிமையோடு சிரித்தவர்களாக இருக்கிறோம். அவர்களோ மன நோய்க்கு ஆளாகி பல்லாயிரக்கணக்கானவர்கள் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்திற்கு அவர்கள் அழைப்பு கொடுக்கின்றார்கள்; எங்களது போர் வீரர்கள் எங்களது மக்கள் மனநோயாளியாக ஆகிவிட்டார்கள். மனநோய் மருத்துவர் எங்களுக்கு தேவை. பல லட்சம் டாலர் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
அவர்களோ பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஊரை விட்டு ஓடுகிறார்கள். இவர்களோ எப்போது தாக்குதல் நடத்தப்பட்டு எத்தனை குடும்பங்கள் கொல்லப்படுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். ஆனால், யாரும் ஊரை விட்டுப் போகத் தயார் இல்லை. அதுதான் ஈமான் சகோதரர்களே, அதுதான் யக்கீன்.
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
இந்த வசனத்தில் யாரைக் குறித்து அல்லாஹ் சொல்கிறான்? அல்லாஹ்வுடைய பாதையில் போருக்கு போகாமல், முஃமின்களை முஸ்லிம்களை இஸ்லாமை பாதுகாக்காமல் இஸ்லாமை எதிர்க்கக்கூடிய எதிரிகள் இடத்திலே சண்டை செய்யாமல் கோழையாக போரை பார்த்து பயந்து ஓடுகிறார்கள் அல்லவா அவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறான்;
எந்த மரணத்தை பார்த்து நீங்கள் பயந்து ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களை சந்திக்கத்தான் போகிறது. பிறகு நீங்கள் மறைவையும் தெளிவான வெளிப்படையான விஷயங்களையும் அறிந்த அல்லாஹ்விடத்திலே நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள். அது நடக்கத்தான் போகிறது. நீங்கள் செய்த அத்தனை அக்கிரமங்களையும் அவன் உங்களுக்கு அறிவிக்கத்தான் போகிறான். (அல்குர்ஆன் : 62:8)
அன்பான சகோதரர்களே! ஒரு முஃமின் மரணத்தை பயப்பட மாட்டான். மரணத்தை பயந்து அவன் தனது மார்க்கத்தை விட மாட்டான்.
சுமையா ரலியல்லாஹு அன்ஹா இந்த மார்க்கத்தின் முதல் ஷஹீத். எப்பேர்பட்ட படிப்பினையை நமக்கு கொடுத்து சென்று இருக்கிறார்கள்? ஒரு பெண் ஒரு முஃமினான ஈமானிய பெண்ணுடைய வீரம் அப்படி என்றால் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் யோசித்துப் பாருங்கள்!
அத்தனை காஃபிர்களும் சேர்ந்து அடிக்கிறார்கள்; ஏசுகிறார்கள்; என்னென்னவோ துன்பங்களை கொடுக்கின்றார்கள்! இறுதியாக அபூ ஜஹல் அந்தப் பெண்மணியே நிராகரிக்க தூண்டுகிறான்.
அடிக்கிறான். இம்சை செய்கிறான். அவர்கள் அடிக்க அடிக்க அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த கலிமாவை உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வயதான பெண் என்று கூட பார்க்காமல் ஈட்டியால் அவர்களின் மறை உறுப்பிலே குத்திக் கொள்கிறான். அந்த நேரத்தில் கூட அவர்கள் ஈமானை விடவில்லை கலிமாவை மொழிந்தவர்களாகவே இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்கள் என்றால் சகோதரர்களே அதுதான் ஈமான். அதுதான் யக்கீன்.
ஒரு முஃமினுக்கு அவனுடைய கொள்கை பெரியது. ஒரு முஃமினுக்கு அல்லாஹ் அக்பரை விட வேறு ஒன்றும் இல்லை. ஒரு முஃமினுடைய உயிர் பொருள் செல்வம் வாழ்க்கை எல்லாம் அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய பாதையிலே துச்சமானது. இங்கே நாம் கொடுத்தால் மறுமையிலே சிறந்ததை வாங்கிக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் மௌத்தை நினைவுகூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
மவுத் சாதாரணமான ஒன்று அல்ல. அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நினைவூட்டினான்.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ
நபியே உங்களுக்கு முன்னால் வந்த எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தியது கிடையாது யாரும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை நீங்கள் இறந்துவிட்டால் அவர்கள் மட்டும் நிரந்தரமாக இருந்து விடுவார்களா? (அல்குர்ஆன் : 21:34)
اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ
நீங்களும் மரணிப்பீர்கள் அவர்களும் மரணிக்கத் தான் போகிறார்கள். (அல்குர்ஆன் : 39:30)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய இறுதி எல்லை ஆகிறத் மறுமை இருக்கிறது. அந்த ஆகிறத்துக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்? நம்முடைய தொழுகை வணக்க வழிபாடு நம்முடைய ஹலாலான வாழ்க்கை ஹராமை விட்டு விலகி இருப்பது. இப்படியாக ஆகிறத்தை நோக்கிய பயணத்திலே அந்தப் பயணத்துக்கான அந்த ஆஹிரத்துக்கான தயாரிப்பிலேயே இருக்க வேண்டும்.
இன்று ஐந்து நேர தொழுகைகளை எப்படி தொழுதேன்? இன்று எவ்வளவு குர்ஆன் ஓதினேன்? இன்று ஏதாவது அல்லாஹ்வுடைய பாதையிலே தர்மம் கொடுத்தேனா? இன்று ஒரு ஏழைக்கு நான் உணவளித்தேனா? இப்படி நன்மைகளை கணக்கிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
நாம் சம்பாதித்த சம்பாதிப்பை நம்மிடத்தில் இருக்கக்கூடிய சேமிப்பை இன்று நாம் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதையெல்லாம் நாம் கணக்கு பார்க்கிறோமோ அது நமக்கு மறுமையில் வராது. எதை அல்லாஹ்வுடைய பாதையிலே கொடுத்தோமோ
وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا
அல்லாஹ்வுடைய பாதையில் நன்மையும் நீங்கள் எதை செலவழிப்பீர்களோ அதைத்தான் நீங்கள் அல்லாஹ்விடத்திலே பெறப் போகிறீர்கள். (அல்குர்ஆன் : 73:20)
இன்று நமக்கு உயிரும் நாம் சம்பாதித்த செல்வமும் நமக்கு பெருசாக தெரிகிறதோ இந்த உயிரும் இந்த செல்வமும் ஸஹாபாக்களுக்கு மிக அற்பமாக இருந்தது. ஒருபோதும் அவர்கள் இந்த உயிரை இந்த செல்வத்தை அல்லாஹ்வின் பாதையிலே செலவழிப்பதிலே அவர்கள் கருமித்தனம் கஞ்சத்தனம் காட்டியது கிடையாது.
அவர்கள் செய்த அந்த யுத்தம் அவர்கள் செய்த அந்த தியாகத்தின் பொருட்டால்தான் அல்லாஹுத்தஆலா இன்று நம்மை முஸ்லிம்களாக வைத்திருக்கிறான். உலகமெல்லாம் இன்று இஸ்லாம் இருக்கிறது என்றால் அவர்களுடைய தியாகம்.
இன்று உலகமெல்லாம் இஸ்லாம் நசுக்கப்படுகிறது, முஸ்லிம்கள் நசுக்கப்படுகிறார்கள், இஸ்லாமின் மீது பழிச்சொல் சொல்லப்படுகிறது. ஆனால் அதை எதிர்த்து கேட்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. முஸ்லிம்களுக்கு கொடுமைகள் இன்னல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லை என்றால் அதற்கு காரணம் இந்த உயிரையும் செல்வத்தையும் பொருளையும் நம்முடைய உலக வாழ்க்கையையும் நாம் கவ்வி பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
இதன் மீது நமக்கு இருக்கக்கூடிய ஆசை, இதன் மீது நமக்கு இருக்கக்கூடிய பெருமை அல்லாஹ்வுடைய தீனிலே நமக்கு இல்லை.
அன்பானவர்களே! எதுவரை என்னுடைய உயிரும் என்னுடைய செல்வமும் என்னுடைய வாழ்க்கையும் அல்லாஹ்வுக்காக என்று இல்லையோ இந்த உயிருக்கும் செல்வத்துக்கும் அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இருக்காது.
அல்லாஹுத்தஆலா சோதிப்பான். இன்று சொல்லப்படுகிறது; காஜா மக்களுக்கு நஷ்டம் என்பதாக நஷ்டம் அவர்களுக்கு இல்லை. அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே முஃமின்கள் முஸ்லிம்கள் அவர்களுக்கு நஷ்டம். அவர்களை கைவிட்டார்களே அவர்களுக்கு தோல்வி. அவர்களை மறந்தார்களே அவர்களுக்கு தோல்வி. அவர்களுடைய எதிரிகளோடு நட்பு வைத்து நட்பு பாராட்டினார்களே அவர்கள் நஷ்டவாளிகள். கொல்லப்பட்டவர்கள் நஷ்டவாளிகள் அல்ல. நசுக்கப்பட்டவர்கள் நஷ்டவாளிகள் அல்ல.
புரிந்துகொள்ளுங்கள்! அநீதி இழைக்கப்பட்டவன் ஒருபோதும் நஷ்டவாளி அல்ல. அநீதி இழைப்பவனும் அநீதி இழைப்பவனுக்கு துணை போகக்கூடியவன்தான் நஷ்டவாளி. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மரணத்தை விட பெரிய ஒன்று இல்லை. சஹாபாக்கள் சொன்னார்கள்: நபி வந்தார்களே மதினாவிற்கு அதைவிட வெளிச்சமான ஒரு நாளை நாங்கள் பார்க்கவில்லை. நபி இறந்தார்களே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைவிட இருளான ஒரு நாளை நாங்கள் பார்த்ததில்லை எல்லாருடைய மரணத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்தை நினைப்பதை கொண்டு நமக்கு ஆறுதல் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட அந்த நபியே இமாமுல் முர்ஸலீன் அவர்களே இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டார்கள் என்றால் நாம் எல்லாம் யார் என்ன?
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய முஃமினான மக்கள் யாரெல்லாம் இறந்தார்களோ அவர்களுக்காக நாம் நல்ல துஆக்கள் செய்வதோடு நம்முடைய மரணத்திற்கான தயாரிப்புகளை நாம் மறந்துவிட கூடாது. ஒவ்வொரு நேரத்திலும் யா அல்லாஹ்! எனக்கு அழகிய முடிவைக் கொடு! எனக்கு அழகிய முடிவை கொடு! நல்ல மவுத்தை கொடு! எனக்கு நற்பாக்கியத்தை கொடு! அல்லாஹ்விடத்திலே துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சக்ராத்தை எனக்கு லேசாக்கி கொடு! கடைசி நேரத்தை எனக்கு லேசாக்கி கொடு! கெட்ட மௌத்திலிருந்து என்னை பாதுகாத்திடு! கெட்ட முடிவிலிருந்து என்னை பாதுகாத்திடு! என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக! நம்முடைய முஃமினான முஸ்லிமான சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா பாவ மன்னிப்பை தந்தருள்வானாக!
காசா முஸ்லிம்களுக்கு சிறந்த பிரதிபலனை தந்தருள்வானாக! அவர்களிலே கொல்லப்பட்டவர்களை ஷஹீதுகளாக அல்லாஹுத்தஆலா ஏற்றுக் கொள்வானாக! அங்கே இருக்கக்கூடிய முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பையும் விரைவான வெற்றியையும் தந்தருள்வானாக! அவர்களுக்கு உதவக்கூடிய முஸ்லிம் ஆட்சியாளர்களை முஸ்லிம் உம்மாவை அல்லாஹுத்தஆலா உருவாக்கி தருவானாக! நமக்கு மத்தியிலே ஒற்றுமையும் அன்பையும் பரஸ்பர நேசத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக! இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அல்லாஹுத்தஆலா ஓங்க வைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/