HOME      Khutba      அல்லாஹ்விடம் சரணடையுங்கள்! மறுமையை தேர்ந்தெடுங்கள்! | Tamil Bayan - 885   
 

அல்லாஹ்விடம் சரணடையுங்கள்! மறுமையை தேர்ந்தெடுங்கள்! | Tamil Bayan - 885

           

அல்லாஹ்விடம் சரணடையுங்கள்! மறுமையை தேர்ந்தெடுங்கள்! | Tamil Bayan - 885


அல்லாஹ்விடம் சரணடையுங்கள்! மறுமையை தேர்ந்தெடுங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்விடம் சரணடையுங்கள்! மறுமையை தேர்ந்தெடுங்கள்!
 
வரிசை : 885
 
இடம் : மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோவை.
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 24-05 -2024 | 16-11-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக; அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்விடத்தில் மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக; அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அல்லாஹ்வுடைய அருளையும் அன்பையும் கருணையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு சுப்ஹான ஹு வ   தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நம் மீது அருள் புரிவானாக! அல்லாஹுத்தஆலா நமக்கும் நமது சந்ததிகளுக்கும் அல்லாஹ்வுடைய தீனை உறுதியாகப் பின்பற்றி அல்லாஹ்வுடைய பயத்தோடு வாழ்ந்து மூஃமின்களாக முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் மரணிக்கின்ற வாய்ப்பை அருளை அல்லாஹுத்தஆலா தந்த அருள்வானாக! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலக வாழ்க்கை அல்லாஹுத்தஆலா நமக்கு ஒரு குறிக்கோளுக்காக ஒரு லட்சியத்திற்காக கொடுத்திருக்கின்றான். அல்லாஹ் தஆலா இந்த உலக வாழ்க்கையில் நமக்கு தேவையான அத்தனை அருள்களையும் அவன் வழங்கி இருக்கின்றான்.
 
وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌  وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا  اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ‏
 
நீங்கள் கேட்பதை எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் : 14:34)
 
அல்லாஹுத்தஆலா நாம் விரும்பியதை கொடுத்திருக்கிறான். நாம் கேட்டதை கொடுத்து இருக்கின்றான். இன்னும், நமக்கு எதை கொடுக்க வில்லையோ அதைவிட சிறந்த ஒன்றை அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுப்பதற்காகதான் அதை கொடுக்கவில்லை. அல்லாஹ் நமக்கு ஒன்றை தடுத்து இருக்கிறான் என்றால் நிச்சயமாக அதிலே ஒரு நன்மை இருக்கிறது என்று நாம் அல்லாஹ்வை பொருந்திக் கொள்ள வேண்டும். 
 
நம்முடைய தேவைகளை நம்முடைய நன்மைகளை நம்மை விட அவற்றுடைய முடிவைக் கொண்டு அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் இப்படி துஆ கேட்பார்கள்; 
 
اللَّهمَّ إنِّي أسألُكَ مِنَ الخيرِ كلِّهِ عاجلِهِ وآجلِهِ ، ما عَلِمْتُ منهُ وما لم أعلَمْ ، وأعوذُ بِكَ منَ الشَّرِّ كلِّهِ عاجلِهِ وآجلِهِ ، ما عَلِمْتُ منهُ وما لم أعلَمْ ، اللَّهمَّ إنِّي أسألُكَ من خيرِ ما سألَكَ عبدُكَ ونبيُّكَ ، وأعوذُ بِكَ من شرِّ ما عاذَ بِهِ عبدُكَ ونبيُّكَ ، اللَّهمَّ إنِّي أسألُكَ الجنَّةَ وما قرَّبَ إليها من قَولٍ أو عملٍ ، وأعوذُ بِكَ منَ النَّارِ وما قرَّبَ إليها من قولٍ أو عملٍ ، وأسألُكَ أن تجعلَ كلَّ قَضاءٍ قضيتَهُ لي خيرًا
 
யா அல்லாஹ்! எனக்கு நன்மைகளை கொடு யா! அல்லாஹ் எனக்கு நல்லவற்றை கொடு! 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா,  நூல் : இப்னு மாஜா, எண் : 3116.
 
இன்று, நம்மில் சிலர் இந்த வியாபாரத்தை; சிலர் இந்த தொழிலை; இதுதான் எனக்கு வேண்டும் என்று அவர்களாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு அவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களே அப்படியல்ல. உலக வஸ்துக்களில் அல்லாஹ்விடத்தில் இதுதான் எனக்கு வேண்டும்; இது வேண்டாம் என்று கேட்கக் கூடாது.
 
சில வாலிபர்களை பார்க்கலாம். ஒரு பெண்ணை விரும்பி விடுவார்கள். அந்த பெண்ணு தான் எனக்கு வேண்டும் என்று நிற்பார்கள். சில பெண்கள் சில ஆண்களை விரும்பி விடுவார்கள். அந்த வாலிபன் தான் எனக்கு கிடைக்க வேண்டும். அவன் கிடைத்தால் தான் எனக்கு வாழ்க்கை நன்றாக அமையும்.  என்று பிடிவாதமாக இருப்பார்கள். நான் சொல்வது ஹராமான விருப்பத்தை அல்ல. அது எப்போதுமே தடுக்கப்பட்ட ஒன்று. அதற்குத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு இஸ்திகாராவை கற்றுக் கொடுத்தார்கள்:
 
யா அல்லாஹ்! எனக்கு இது நன்மையாக இருந்தால் என்னுடைய இம்மை  வாழ்க்கைக்கு என்னுடைய மறுமை வாழ்க்கைக்கு என்னுடைய முடிவுக்கு இது நன்மையாக இருந்தால் 
 
எனக்கு இதை நீ உனது விதியிலே எழுதி கொடு! எனக்கு இதை நீ லேசாக்கி கொடு! என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆவை கற்றுக் கொடுத்தார்கள். யா அல்லாஹ் எனக்கு இது தீமையாக இருந்தால் எனது உலக காரியங்களுக்கோ எனது மறுமையின் காரியங்களுக்கோ என்னுடைய முடிவுக்கோ அது தீமையாக இருந்தால் என்னை அதிலிருந்து திருப்பி விடு! யா அல்லாஹ் அதையும் என்னிடமிருந்து திருப்பி விடு! அல்லாஹ் எனக்கு எங்கே நன்மை இருக்குமோ அதை எனக்கு நீ எளிதாக்கி கொடு! அதைக் கொண்டு பொருந்தி கொள்ளக்கூடியவனாக ஆக்கு! அல்லாஹ் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய இஸ்திகாராவின் துஆவை கற்றுக் கொடுத்தார்கள். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் கேட்பார்கள்: 
 
اللَّهُمَّ إنِّي أسْتَخِيرُكَ بعِلْمِكَ، وأَسْتَقْدِرُكَ بقُدْرَتِكَ، وأَسْأَلُكَ مِن فَضْلِكَ العَظِيمِ؛ فإنَّكَ تَقْدِرُ ولَا أقْدِرُ، وتَعْلَمُ ولَا أعْلَمُ، وأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أنَّ هذا الأمْرَ خَيْرٌ لي في دِينِي ومعاشِي وعَاقِبَةِ أمْرِي - أوْ قالَ: عَاجِلِ أمْرِي وآجِلِهِ - فَاقْدُرْهُ لي ويَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لي فِيهِ، وإنْ كُنْتَ تَعْلَمُ أنَّ هذا الأمْرَ شَرٌّ لي في دِينِي ومعاشِي وعَاقِبَةِ أمْرِي - أوْ قالَ: في عَاجِلِ أمْرِي وآجِلِهِ - فَاصْرِفْهُ عَنِّي واصْرِفْنِي عنْه، واقْدُرْ لي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أرْضِنِي
 
யா அல்லாஹ் நன்மையை வேண்டுகிறேன். அதிலே எது உடனடியாக இருக்கிறதோ அந்த நன்மையை கொடு! நன்மைதான்  தாமதமாக வரப்போகிறது, பரவாயில்லை, அந்த தாமதமான நன்மையையும் எனக்கு கொடு! வெளிப்படையான நன்மையையும் எனக்கு கொடு! மறைவான நன்மையையும் எனக்கு கொடு! நான் அறிந்த நன்மையையும் கொடு! நான் அறியாத நன்மையையும் எனக்கு கொடு! 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1162. 
 
எவ்வளவு அழகிய துஆக்கள்! மேலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் துவா செய்வார்கள்:
 
யா அல்லாஹ்! எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பை தேடுகிறேன். உடனடியான அவசரமான தீமையாக இருக்கலாம் அல்லது தாமதமாக வரக்கூடிய தீமையாக இருக்கலாம்; வெளிப்படையான தீமையாக இருக்கலாம் மறைவான தீமையாக இருக்கலாம்; நான் அறிந்த தீமையாக இருக்கலாம் . நான் அறியாத தீமையாக இருக்கலாம். இவை எல்லா தீமைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா,  நூல் : இப்னு மாஜா, எண் : 3116.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ஒன்றை நன்மையாக நினைப்போம் அது நமக்கு தீமையாக இருக்கும். நாம் ஒன்றை நமக்கு தீமையாக கெடுதியாக நினைப்போம். அது நமக்கு நன்மையாக இருக்கும். 
 
மார்க்கத்தின் அளவுகோலை கொண்டு தான் ஒன்றை நாம் அளக்க வேண்டுமே தவிர நம்முடைய ஆசையை கொண்டு அல்ல; நம்முடைய விருப்பத்தை கொண்டு அல்ல.
 
كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
 
கருத்து : நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; இது எனக்கு கிடைத்தால் எனது வாழ்க்கையே சிறப்பாகி விடும் என்றெல்லாம் என்று நினைக்கலாம். அதுவோ உங்களுக்கு தீமையாக இருக்கும். (அல்குர்ஆன் 2:216)
 
எத்தனையோ ஏழைகள் செல்வத்தை ஆசைப்பட்டார்கள். அந்த செல்வம் அவர்களை மார்க்கத்தில் இருந்து புரட்டி விட்டது. எத்தனையோ வாலிபர்கள் சில பெண்களை ஆசைப்பட்டார்கள். அந்த பெண்கள் அந்த வாலிபர்களை மார்க்கப்பற்றிலிருந்து வழிகெடுத்து விட்டார்கள். எத்தனையோ நண்பர்கள் நண்பர்களை வழிகெடுத்து இருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விடத்தில் அவனுடைய பொருத்தத்தை கேட்க வேண்டும். எதிலே அவனுடைய பொருத்தம் இருக்கிறதோ அதை கொண்டு நாம் பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்விடத்திலே அடியான் சரணடைந்து விட வேண்டும். அல்லாஹ்விடத்தில் அடியான் தன்னை ஒப்படைத்து அவனுடைய விருப்பத்திற்கு சரணடைந்து விட வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவிலே தூங்கும் பொழுது ஒரு அழகிய துஆவை ஓதுவார்கள். துஆவின் மூலமாகவே நமக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பல ஈமானிய பாடங்களை நற்குணத்தின் பாடங்களை ஒழுக்கத்தின் பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
 
பார்ப்பதற்கு அது துஆவாக இருக்கும். அல்லாஹ்விடத்தில் மன்றாட கூடியதாக இருக்கும். அதிலே நமக்கு ஈமானிய பாடங்கள் படிப்பினைகள் ஒழுக்கங்கள் வழிகாட்டுதல்கள் அவ்வளவு நிறைந்திருக்கும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவிலே தூங்கும் போது சொல்வார்கள்: 
 
اللَّهُمَّ أسْلَمْتُ وجْهِي إلَيْكَ، وفَوَّضْتُ أمْرِي إلَيْكَ، وأَلْجَأْتُ ظَهْرِي إلَيْكَ، رَغْبَةً ورَهْبَةً إلَيْكَ، لا مَلْجَأَ ولَا مَنْجَا مِنْكَ إلَّا إلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بكِتَابِكَ الذي أنْزَلْتَ، وبِنَبِيِّكَ الذي أرْسَلْتَ
 
யா அல்லாஹ்! எனது முகத்தை நான் உனக்கு முன்னோக்க வைத்து விட்டேன். யா அல்லாஹ் என்னை உன்னிடத்திலே ஒப்படைத்து விட்டேன். எனது காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். எனது முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னை நான் ஆசைப்படுகிறேன். உன்னை நான் பயப்படுகிறேன். யா அல்லாஹ்! நான் எங்கே தப்பித்து செல்வேன்? நான் எங்கே சென்று ஒதுங்குவேன்? உன்னை தவிர வேறு இடமில்லை நான் ஒதுங்குவதற்கும் நான் பாதுகாப்பு பெறுவதற்கும். உன்னிடம் இருந்து உன்னை தவிர வேறு இடமில்லை. என் இறைவா! நீ இறக்கிய வேதத்தை நான் நம்பிக்கை கொண்டேன். நீ அனுப்பிய ரசூலை நான் ஈமான் கொண்டேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னை முழுமையாக அல்லாஹ்விடத்திலே ஒப்படைத்துவிட்டு அல்லாஹ்வை பொருந்தி கொண்ட நிலையிலே அவர்கள் இரவிலே தூங்குவார்கள்.
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 247.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! எதற்காக சொல்கிறேன் என்றால், இன்று நம்மிலே சிலர் இருக்கிறார்கள்; அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அல்லாஹ்வுடைய விதி இருந்தால் அவர்கள் தொழுவார்கள்; நோன்பு வைப்பார்கள்; அல்லாஹ்வை புகழ்வார்கள். 
 
ஆனால், எப்போது அவர்களுடைய விருப்பத்திற்கு மாற்றமாக ஒன்று நடக்குமோ, அவர்கள் குடும்பத்தில் ஒரு மரணமோ அல்லது வியாபாரத்தில் ஒரு நஷ்டமோ அல்லது பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியோ இப்படி ஏதாவது சோதனை ஏற்பட்டால் அவர்கள் அல்லாஹ்வை விட்டு முகத்தை திருப்பி விடுவார்கள். அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்வார்கள். அல்லாஹ்விற்கு பிரியமற்ற வார்த்தைகளை பேசுவார்கள். அல்லாஹ்வின் மீது கோபித்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் மீது சடைவடைந்து கொள்வார்கள். 
 
நான் வணங்கி என்ன பிரயோஜனம்? நான் துஆ கேட்டு என்ன பிரயோஜனம்? நான் உம்ராவிற்கு சென்று துஆ கேட்டேனே! கஅபத்துல்லாஹ்வின் திரையைப் பிடித்துக் கொண்டு அழுதேனே! எப்படி எல்லாம் நான் அழுதேனே! தொழுதேனே! எனக்கு நீ இப்படி செய்து விட்டாயே! என்னை நீ அவமானப்படுத்தி விட்டாயே! இழிவுபடுத்தி விட்டாயே!
 
அஸ்தஃபிருல்லாஹல் அலீம். யாரிடத்திலே கோபிக்கிறார்கள்? யாரை கோபிக்கிறார்கள்? யார் மீது அதிருப்தி கொள்கிறார்கள்? ரஹ்மான், ரஹீம், அல் அலீம், அல் கபீர், அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனை விட நம் மீது இரக்கமுள்ள கருணை உள்ள யாரும் இந்த பிரபஞ்சத்திலே இருக்க முடியாது.
 
கருணை காட்டுபவர்களுக்கு மேலாக கருணை காட்டக் கூடியவன். அல்லாஹுத்தஆலா தன்னுடைய ரஹ்மத்தில் ஒரே ஒரு பகுதியைத்தான் இந்த பூமியில் இறக்கி இருக்கிறான். மொத்த உலகத்திற்கு மொத்த உயிரினங்களுக்கு மீதத்தை அல்லாஹுத்தஆலா தனக்கு விசேஷமாக வைத்திருக்கிறானே அந்த ரஹ்மானிடத்திலா கோபித்துக் கொள்கிறீர்கள்!
 
يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ ‏
 
அல்லாஹ்  உங்களுக்கு இலகுவை தான் நாடுவான். அல்லாஹ் உங்களுக்கு சிரமத்தை நாட மாட்டான். (அல்குர்ஆன் : 2:185)
 
அல்லாஹ் உங்களுக்கு சிரமத்தை நாட மாட்டான் என்று தன்னை பற்றி அந்த உண்மையாளன் கூறுகின்றானே! அவன் இடத்திலா கோபம்! அவனிடத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு யாரிடத்திலே செல்ல முடியும்? அவனை நீங்கள் யாரிடத்திலே முறையிட போகிறீர்கள்? எல்லா முறையீடுகளும் அவனிடத்தில்தான் சமர்ப்பிக்கப்படுமே தவிர அவனைப் பற்றி யாரிடத்திலும் முறையிட முடியாது.
 
அடக்கி ஆளக்கூடிய சர்வ வல்லமை உடைய பேரரசன்; அவன் அர்ஷுடைய அதிபதி; ஜிப்ரீல் அவனுடைய கட்டளைக்கு அவனுடைய உத்தரவுக்கு மாற்றமாக செயல்பட முடியாது. எப்பேர்பட்ட வானவர்! அர்ஷை சுமந்து இருக்கக்கூடிய வானவர்கள் இஸ்ராஃபீல் மீகாயில் அல்லாஹ் படைத்த பிரபஞ்ச படைப்புகளிலேயே மிகப்பெரிய படைப்புகள்! அந்தப் படைப்புகளும் அல்லாஹ்விடத்திலே வாய் திறக்க முடியாதே!
 
وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ ‏
 
ரஹ்மானுக்கு முன்னால் யாரும் பேச முடியாது அவனுடைய அனுமதியில்லாமல். (அல்குர்ஆன் : 20:108)
 
அந்த ரஹ்மானை பற்றியா? அந்த அருளாளனை பற்றியா பிறரிடத்திலே நீங்கள் முறையிடுகிறீர்கள்? அனைத்தையும் அறிந்த, வெளிப்படையானதையும் மறைவானதையும் அறிந்து, அடியார்களுக்கு நன்மை செய்யக்கூடிய அந்தப் பேரரசனாகிய ரப்புல் ஆலமீனை பற்றியா நீங்கள் கோபப்படுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர்!!
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் நமக்கு நன்மையை கொடுக்கின்றான். இந்த அடியான் அல்லாஹ்விடத்தில் சோதிக்கப்படுகின்றான். இவனுடைய ஈமான் சோதிக்கப்படுகிறது. இவனுடைய தக்வா சோதிக்கப்படுகிறது. இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு ஒவ்வொன்றும் சோதனையாக இருக்கின்றது. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ (16) كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ (17) وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (18) وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا (19) وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
 
ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’’ எனக் கூறுகிறான். ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’’ எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! மாறாக, நீங்கள் அனாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அனாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை). இன்னும், ஏழையின் உணவுக்கு (நீங்கள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை. இன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் ஆகியோரின் செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.) இன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள். (அல்குர்ஆன் : 89:15-20)
 
மனிதனின் நிலையை அல்லாஹ் இந்த வசனத்தில் விவரிக்கின்றான். உண்மையான முஃமின், ஓரத்திலே வணங்கக்கூடிய முஃமின், இஸ்லாமிலே உறுதியாக இருப்பவன், இஸ்லாமிய தடுமாற்றத்தில் இருப்பவன், அல்லாஹ்விற்கு இணை வைத்து வணங்கக்கூடிய முஷ்றிக்குகள், சிலை வணங்கிகள், அந்த சிலை வணக்கம் எந்த உருவத்தில் இருந்தாலும் சரி, தர்காக்கள் உருவத்தில் இருந்தாலும் சரி, கபருகளில் உருவத்தில் இருந்தாலும் சரி, எல்லாம் அந்த சிலை வணக்கம் என்ற அந்த ஒரே பட்டியலில் தான் வரும். 
 
இவர்களைப் பொறுத்தவரை அல்லாஹ் சொல்கிறான்: இவர்கள் யார் தெரியுமா? இவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அல்லாஹ் இவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தால், அல்லாஹ் இவர்களை கவனித்துக் கொண்டே இருந்தால், இவர்களுக்கு வசதியான வாழ்க்கையை கொடுத்தால் இவர்கள் அல்லாஹ்வை புகழ்வார்கள். என் ரப்பு என்னை கண்ணியமாக வைத்திருக்கிறான். எனக்கு எந்த குறையும் இல்லை. இறைவன் அருளால் நான் நன்றாக இருக்கின்றேன். சுகமாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 
 
இதுல வேற சொல்லிக் கொள்வான்: நான் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; நான் ரொம்ப நல்லா இருப்பேன் என்று. இப்போ இவர் தொழுவுறது, நோன்பு வைப்பது எல்லாம் இவர்களுடைய வியாபார லாபத்திற்காக. இவருடைய விருப்பம் நிறைவேறுவதற்காக தானே தவிர, சொர்க்கத்திற்காக அல்ல. அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக அல்ல. 
 
அன்பானவர்களே! துன்யாவையும் அல்லாஹ்விடத்தில் தான் கேட்க வேண்டும். ஆகிரத்தையும் அல்லாஹ்விடத்தில் தான் கேட்க வேண்டும். இந்த இபாதத்துகள் மறுமைக்காகவா? துன்யாவிற்காகவா? நாம் தொழக்கூடிய ஒவ்வொரு தொழுகையும் நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு திக்ரும், நாம் ஓதக்கூடிய குர்ஆன், நாம் செய்யக்கூடிய தர்மம் இது ஜன்னத் என்ற சொர்க்கத்திற்காகவா அல்லது இந்த துன்யா என்ற உலகிலே நமக்கு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவா? யோசித்துப் பார்க்க வேண்டும்! 
 
சிலர், வணக்க வழிபாடுகளை கொண்டு துன்யாவை மட்டுமே நாடுவார்கள். அல்லாஹ் சொல்கிறான்: இவர்கள் இப்படித்தான். உலகத்தை நான் அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அடுத்து அல்லாஹ் சொல்கிறான்: பிறகு, இன்னொரு சோதனையை கொண்டு வருவான். அவர் மீது அவனுடைய வாழ்வாதாரத்தை அவனுக்கு அல்லாஹ் சுருக்கி விடுவான். சில நெருக்கடிகளை அல்லாஹ் கொடுப்பான். அவன் விரும்பியது நடக்காமல் போகும். அவன் கேட்டது கிடைக்காது. அவன் எது வேண்டாம் என்றானோ அதுதான் அவனுக்கு கிடைத்திருக்கும். எதை பயந்தானோ அதுதான் நடந்திருக்கும். 
 
உடனே அவன் சொல்வான்: என் ரப் என்னை கைவிட்டு விட்டான். அல்லாஹ் என்னை கவனிக்கவில்லை. அல்லாஹ் எனக்கு மோசம் செய்து விட்டான். நான் அவனுக்கு நல்லது தான் செய்தேன். அவன் எனக்கு கெடுதி செய்து விட்டான் என்று அல்லாஹ்வை பற்றி புலம்புவான். 
 
யாரைப் பார்த்தாலும் சரி அல்லாஹ்வைப் பற்றி முறையிடுவான். எனக்கு அப்படி நடந்து விட்டது, இப்படி நடந்து விட்டது, எனக்கு இவ்வளவு பிரச்சனை என்று புழம்பிக் கொண்டே இருப்பான்.
 
அல்லாஹு தஆலா இவனுக்கு எத்தனையோ நன்மைகளை செய்து இருக்கிறான். முன்பு அந்த நன்மைகளை எல்லாம் அடியார்களிடத்திலே சொல்லவில்லை. ஒரு தீமை ஏற்பட்டு விட்டால் எல்லோரிடத்திலும் சென்று அந்தத் தீமையை பற்றி முறையிடுகிறான்.
 
وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏
 
வசனத்தின் கருத்து : இவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? ஓரத்திலே வணங்கக் கூடியவர்கள். ஈமானிலே இஸ்லாமிலே ஓரத்திலே இருப்பவர்கள். வணங்குவார்கள். ஆனால், அவர்களுக்கு நன்மை கிடைத்தால் மட்டுமே திருப்தி படுவார்கள். அல்லாஹ்வை கொண்டு அவர்களுக்கு ஒரு சோதனை வந்துவிட்டால் உடனே முகம் திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள். இவர்கள் உலகத்திலும் நஷ்டவாளிகள். மறுமையிலும் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் : 22:11)
 
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா மனிதர்களுடைய அந்த நிலைமையை விவரித்து அடுத்து சொல்கிறான். 
 
இந்த உலக வாழ்க்கை எதற்காக? அல்லாஹ்வோடு ஈமானிய தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? தக்வா எப்படி இருக்க வேண்டும்? ஒரு அடியானுக்கு அல்லாஹ்வோடு தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? அல்லாஹ்வின் மீது அவனுக்கு நம்பிக்கை இக்லாஸ் ஈமான் தக்வா அல்லாஹ் உடைய பயம் அனைத்தும் கொண்ட அந்த பரிசுத்தமான உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? 
 
அல்லாஹ் விவரிக்கிறான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
كَلَّا‌ بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ‏
 
ஒரு மனிதனை அல்லாஹுத்தஆலா கண்ணியப்படுத்துவது இந்த உலக வாழ்க்கையின் செல்வத்தை கொண்டு அல்ல. அதை புரிந்து கொள்ளுங்கள் كَلَّا‌ இந்த ஒரு வார்த்தையிலே அவ்வளவு அர்த்தத்தை அல்லாஹுத்தஆலா அங்கே வைத்துவிட்டான். كَلَّا‌ மனிதனே! நீ நினைத்தது போன்று அல்ல. நீ எண்ணியது போன்று அல்ல. (அல்குர்ஆன் 89:17)
 
செல்வம் தான் உனக்கு கண்ணியம் என்பதாகவும், வறுமையோ பொருளாதார நெருக்கடியோ உனக்கு இழிவு என்பதாக நீ நினைத்தாய் அல்லவா? ஒருபோதும் அப்படி அல்ல. 
 
பலர் இன்று அப்படித்தான் நினைத்திருக்கிறார்கள். குஃப்பார்களுடைய நம்பிக்கை, மக்காவின் முஷ்ரிக்குகளுடைய நம்பிக்கை, அதற்கு முன்னால் வாழ்ந்த முஷ்ரிக்குகளுடைய  நம்பிக்கை இன்றைய முஸ்லிம்களிடத்திலும் இருக்கிறது. 
 
சூரத்துல் கஹ்ஃபிலே இரண்டு நண்பர்களை பற்றி அல்லாஹ் சொல்வான். நல்ல வசதியான வாழ்க்கையுடைய காஃபிர் ஒருவர், மற்றவர் முஃமின் நெருக்கடியிலே சிரமத்தில் இருப்பவர். இந்த வசதியான வாழ்க்கை உடைய அந்த காஃபிர் -நிராகரிப்பவர் சொல்வார்: நீ சொல்வதைப் போன்று ஒரு ரப் இருந்தான் என்றால் கூட என்னை செல்வத்தில் வைத்திருக்கிறான் என்றால் அவன் என் மீது தானே பிரியம் உள்ளவனாக இருக்கின்றான் என்று பொருள்.
 
وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآٮِٕمَةً  ۙ وَّلَٮِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّىْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا‏
 
கருத்து : ஒருவேளை நீ சொல்வதை போன்று மறுமை என்று ஒன்று இருந்து அங்கே நான் திரும்ப கொண்டு செல்லப்பட்டால் கூட உலகத்திலேயே எனக்கு இவ்வளவு வசதிகளை கொடுத்தவன் அங்கும் அந்த வசதியை கொடுப்பான். (அல்குர்ஆன் : 18:36)
 
உன்னை ஏழ்மையில் இங்கு வைத்திருப்பவன் உன்னை மறுமையிலும் ஏழ்மையிலும் சிரமத்திலும் தான் வைத்திருப்பான். இதே வார்த்தையை தான், ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே  அபூஜஹல் சொன்னான். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே; முஹம்மதே நீ உன்னை அல்லாஹ்வுடைய அடிமை என்பதாக, ஈமான் இஸ்லாம் என்பதாக சொல்கின்றாயே? நீயோ வறுமையிலே பிரச்சனையிலே சிரமத்தில் இருக்கிறாயே? நானோ எவ்வளவு செல்வ செழிப்பிலே இருக்கிறேன் பார்! அதே வார்த்தையை தான் அபூலஹப் சொன்னான்
 
சூரா முத்தஸ்ஸிர் ஆரம்பத்திலே அல்லாஹ் விவரிக்கிறான். அன்பானவர்களே! சில முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டார்கள்; இந்த உலகத்திலே வசதியான வாழ்க்கை கிடைப்பது நாம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டோம் என்பதற்கு அடையாளம். ஒரு மனிதன் நெருக்கடியிலே சிரமத்தில் இருப்பது அவன் அல்லாஹ்விடத்தில் கைவிடப்பட்டு விட்டான் என்பதற்குரிய அடையாளம் என்பதாக. 
 
ஒருபோதும் அப்படி அல்ல. அந்த எண்ணத்தை அடியோடு அல்லாஹ் மறுக்கிறான். செல்வம் எனது விருப்பத்தால் நான் ஒருவருக்கு கொடுக்கிறேன் என்பதல்ல. நான் ஒருவரை வறுமையில் வைத்திருந்தால் அவர் மீது நான் கோபமுற்று இருக்கிறேன். அவர் மீது நான் அதிர்ச்சியாக இருக்கிறேன்  என்பதற்கு அடையாளம் அல்ல. 
 
அப்படி பார்த்தால் நபிமார்களிலே லட்சக்கணக்கானவர்கள் நபிமார்களிலே பெரும்பாலானவர்கள் வறுமையில் இருந்தார்கள். சிரமத்தில் இருந்தார்கள். இந்த உலகத்திலேயே அல்லாஹ்விற்கு மிக பிரியமான நபி, எல்லா நபிமார்களுக்கும் காத்தமாக இறுதி முத்திரையாக இமாமாக அனுப்பப்பட்டவர்கள், நம்முடைய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா இந்த உலகத்திலே ஒருவர் நெருக்கடியை வறுமையை பசி பட்டினியை சந்தித்திருக்க முடியும்? 
 
அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் ஒரு நாளில் இரண்டு முறை அவர்கள் வயிறார உண்டதில்லை . இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர்கள் சாப்பிட்டதில்லை. அவர்கள் இறுதியாக மரணிக்கும் போது கூட அவர்களுடைய உடலில் இருந்த ஆடையைத் தவிர அவர்களுக்கு வேறு ஆடைகள் இந்த உலகத்திலே சொந்தமாக இருக்கவில்லை. 
 
அவர்களுடைய உருக்குச்சட்டை, கவச ஆடை 30 சாஉ கோதுமைக்காக ஒரு யூதனிடத்திலே அடைமானம் வைக்கப்பட்டு இருந்தது. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2916.
 
பின்குறிப்பு : ஒரு சாஉ என்பது நான்கு கைப்பிடிகள் அல்லது ஒரு நபரின் இரு கைகளால் அள்ளக்கூடிய அளவு என்ற ஒரு அளவீட்டைக் குறிக்கிறது, மேலும் இது ஸகாதுல் பித்ர் போன்ற தான தர்மங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே சாஉ என்பது அரபி மற்றும் தமிழ் மொழியில் பயன் படுத்தப்படும் சொல் என்று விளங்க முடிகிறது.
 
இத்தனை நெருக்கடியில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்தார்களே அவர்களை விட இந்த பூமியிலே அல்லாஹ்வின் பொருத்தத்தை அன்பை பாசத்தை கருணையை ரஹ்மத்தை பெற்றவர் ஒருவர் இருக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்! 
 
ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் எவ்வளவு பெரிய செல்வ செழிப்பை பெற்றவர்கள்! எவ்வளவு பெரிய ஆடம்பரமான வாழ்க்கையை பெற்றவர்கள்! ஒருவனிடத்திலே மிகப்பெரிய ஆட்சி ஒருவனிடத்திலே பதவி இன்னொருவனிடத்திலே மிகப்பெரிய செல்வம் அவனுடைய செல்வத்தின் கஜானாக்களின் சாவிகளை சுமப்பதற்கே ஒரு பெரிய கூட்டம் தேவை என்றால் அங்கே கஜானாக்கள் எவ்வளவு இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்! 
 
அன்பான சகோதரர்களே! அல்லாஹ் சொல்கிறான்: கல்லா  كلا ஒருபோதும் அப்படி அல்ல. செல்வத்தைக் கொண்டு அல்லாஹ் உங்களை நேசித்து விட்டான் என்று நினைத்து விடாதீர்கள். வறுமையினால் அல்லாஹ் உங்களை கைவிட்டு விட்டான் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். 
 
உண்மையான கண்ணியத்தை உண்மையான இழிவை அல்லாஹுத்தஆலா எதில் வைத்திருக்கிறான்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அல்லாஹு சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அவனுடைய அருளை மார்க்கத்தின் விளக்கத்தை தந்தருள்வானாக! 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா அதைத்தான் அடுத்த தொடர் வசனத்திலே சொல்கிறான்:
 
كَلَّا‌ بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ‏
 
நீங்கள் யத்தீம்களை கண்ணியப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன் : 89:17)
 
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ‏
 
மிஸ்கின்களுக்கு உணவளிப்பதற்கு ஒருவர் மற்றவரை தூண்டுவதில்லை. (அல்குர்ஆன் : 89:18)
 
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ‏
 
நீங்கள் வாரிசு சொத்துகளை இறந்தவர் விட்டு சென்ற சொத்துகளை உங்களுடைய பங்குகளையும் எடுத்துக் கொள்கிறீர்கள். பிறருடைய சொத்துகளையும் பிறருடைய பங்குகளையும் வாரி சுருட்டி கொள்கிறீர்கள். (அல்குர்ஆன் : 89:19)
 
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ‏
 
இந்த செல்வத்தின் மீது உங்களுக்கு பேராசை இருக்கிறது. (அல்குர்ஆன் : 89:20)
 
நான்கு தன்மைகளை அல்லாஹ் சொல்கிறான். இரண்டு எச்சரிக்கைகளை அல்லாஹ் செய்கிறான். எத்தீம்களை கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். அதை நீங்கள் செய்வதில்லை. 
 
நீங்கள் ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதை நீங்கள் செய்வதில்லை இந்த செல்வத்தை விரும்புகிறீர்கள் வாரிசு சொத்துகளை முறையாக பங்கு வைத்து உரியவருக்கு கொடுக்காமல் நீங்கள் முழுமையாக அபகரித்துக் கொள்கிறீர்கள். 
 
உங்களுக்கு யாரிடத்திலே ஆதிக்கம் அதிகாரம் இருக்கிறதோ அல்லது அந்த சொத்து யார் இடத்திலே இருக்கிறதோ அல்லாஹுத்தஆலா என்ன சொல்கிறான் என்றால் அல்லாஹ்வுடைய கண்ணியம் அல்லாஹ்வுடைய தாஅத்திலே இருக்கிறது. வணக்க வழிபாட்டிலே இருக்கிறது. 
 
அல்லாஹு தஆலா ஒருவரை இழிவு படுத்துகிறான் என்றால் அது பாவத்திலே இருக்கிறது. யார் அல்லாஹ் தடுத்த பாவங்களை செய்கிறாரோ அவர்தான்  இழிவுக்குரியவர். 
 
எவ்வளவு பெரிய செல்வ செழிப்பிலே இருந்தாலும் சரி, சமுதாயத்தில் பதவியில் இருந்தாலும் சரி, சமூகத்தில் வேறு எதிலாவது அவர் பெரிய கண்ணியமானவராக மதிக்கப்பட்டவராக கருதப்பட்டாலும் சரி, யார் அல்லாஹ் தடுத்த பாவத்தை செய்கிறாரோ அவர்தான் அல்லாஹ்விடத்திலே இழிவானவர். அவரைத்தான் அல்லாஹ் இழிவு படுத்தி விட்டான். 
 
யார் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ, யார் அல்லாஹ்வின் கட்டளையின்படி தனது வாழ்க்கையை செயல்படுத்துகிறாரோ, பாவங்களை விட்டு விலகி இருக்கிறாரோ, அல்லாஹ்வை பயந்தவராக வாழ்கிறாரோ அதுதான் கண்ணியம். அதுதான் அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்தி இருக்கிறான். அவரின் மீது அல்லாஹ்வின் அன்பு கருணை இருக்கிறது என்பதற்கு உரிய அடையாளம். 
 
பாவம் இதுதான் ஒருவனை அல்லாஹு தஆலா கைவிட்டு விட்டான். அவனை அல்லாஹ் வெறுத்து விட்டான் என்பதற்குரிய அடையாளம். 
 
அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே எப்படி சொல்கிறான்:
 
اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏
 
உண்மையிலேயே அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமானவர் யார்? உங்களிலே யார் அதிகம் அல்லாஹ்வை பயந்து கொள்கிறாரோ அவர் தான். (அல்குர்ஆன் : 49:13)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய ஹஜ்ஜத்துல் விதா, தாங்கள் செய்த அந்த இறுதி ஹஜ்ஜிலே உலக மக்களை எல்லாம் முன்னோக்கி சொன்னார்கள்: 
 
لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى
 
மக்களே! ஒருவர் அரபியாகப் பிறந்து விடுவதால் அவருக்கு அரபி அல்லாதவரை விட எந்த மேன்மையும் கிடையாது. ஒரு அஜமி, அரபி அல்லாதவர் அவர் எவ்வளவுதான் திறமையிலும் கல்வியிலும் வேறொன்றிலும் அவர் பெரியவராக ஆகிவிட்டாலும் ஒரு அரபியரை விட அவருக்கு எந்தவிதமான மேன்மையும் கிடையாது. அரபியருக்கு அரபி அல்லாதவரை விட அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, வெள்ளையருக்கு கருப்பரை விட கருப்பருக்கு வெள்ளையரை விட எந்த மேன்மையும் கிடையாது இறையச்சத்தை கொண்டே தவிர. 
 
நீங்கள் எல்லாம் ஆதமிலிருந்து வந்தவர்கள். அரபியர்களாக இருக்கட்டும், அஜமிகளாக இருக்கட்டும், வெள்ளையராக இருக்கட்டும் கருப்பராக இருக்கட்டும், யாராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, நீங்கள் எல்லாம் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து வந்தவர்.
 
அறிவிப்பாளர் : அபூ நழ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண்: 23489.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நம்மிடத்தில் இதைத்தான் விரும்புகிறான். நம்முடைய வணக்க வழிபாடு தொழுகை இதன் மூலமாக ஒன்று அல்லாஹ்வை நாம் வணங்குகிறோம். அல்லாஹ் என்னுடைய மஃபூத், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி சொன்னோமே அந்த சாட்சியத்தை இந்த இபாதத்தை கொண்டு நாம் உண்மைப்படுத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! 
 
தொழுகை எதற்காக? அல்லாஹ் என்னுடைய ரப்பு, நான் அவனுடைய அடிமை என்பதை உறுதிப்படுத்துவதற்காக. இந்த தொழுகையை கொண்டு நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன். இந்த தொழுகையை கொண்டு நான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுகிறேன். அல்லாஹ் என்னை பொருந்தி கொள்ள வேண்டும் என்பதற்காக நான் நிற்கிறேன். ருகூஃ செய்கிறேன். நான் சுஜூது செய்கிறேன். நான் அவனுடைய வேதத்தை ஓதுகிறேன். 
 
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
 
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.” (அல்குர்ஆன் : 6:162)
 
இந்த இபாதத்தை அல்லாஹ் அல்லாத ஒன்றுக்காக வைத்து விடாதீர்கள்! ஏற்படுத்தி விடாதீர்கள்! சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; தர்காக்களை வணங்குவது மட்டும் தான் ஷிர்க் என்பதாக. எப்படி முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்குவதை மட்டும் ஷிர்க்காக நினைத்துக் கொண்டார்களோ, நம்மில் சிலர் தர்காக்களில் செல்வதை மட்டுமே ஷிர்க்காக நினைத்துக் கொண்டார்கள். 
 
அன்பான சகோதரர்களே! நம்முடைய வணக்க வழிபாடுகளை கொண்டு அல்லாஹ் அல்லாத அல்லாஹ்வுடைய முகத்தை தவிர வேறொன்றை நாடுவதும் ஷிர்க் என்பதாக புரிந்து கொள்ளுங்கள்! 
 
قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ‏
 
நபியே சொல்லுங்கள் நபியே நீங்கள் உங்களைப் பற்றி சொல்லுங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை மக்களுக்கு சொல்லுங்கள் நான் அல்லாஹ்வை வணங்குவேன் என்னுடைய வழிபாடுகளை எல்லாம் அவனுக்காக மட்டுமே அவனுடைய பொருத்தத்திற்காக மட்டுமே கலப்பற்ற முறையில் ஆக்கியவனாக! (அல்குர்ஆன் : 39:11)
 
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ‏
 
அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும். (அல்குர்ஆன் : 98:5)
 
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى (21)
 
யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது.  எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார். இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார். (அல்குர்ஆன் : 92:19-21)
 
நம்முடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் நம்முடைய சமூகப் பணிகளாக இருக்கட்டும். விளம்பரப்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றப்படுவதற்காக அல்ல, மக்களிடத்திலே புகழை பெறுவதற்காக அல்ல, எந்த ஒரு செயலாக இருக்கட்டும், மஸ்ஜிதுகளுடைய பணிகளாக இருக்கட்டும், சமூகப் பணிகளாக இருக்கட்டும், தொழுகை நோன்பு எந்த ஒன்றாக இருக்கட்டும், அல்லாஹ் உன்னுடைய திருமுகம் தான் எனக்கு நோக்கம். உன்னுடைய பொருத்தம் தான் எனக்கு நோக்கம். சொர்க்கம் எனக்கு வேண்டும் நரகத்திலிருந்து என்னை நீ பாதுகாக்க வேண்டும்.
 
ஏன் அல்லாஹ்வுடைய தூதரை இப்படி சொன்னார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! 
 
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
 
பேரித்தம் பழத்தின் ஒரு பகுதியை கொடுத்தாவது நரகத்திலிருந்து பயந்து கொள்ளுங்கள்! நரகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்! 
 
அறிவிப்பாளர் : அதி இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1417.
 
ஒவ்வொரு இபாதத், ஒவ்வொரு தான தர்மம், ஒவ்வொரு சொல் அனைத்தின் நோக்கம் அல்லாஹ்வுடைய பொருத்தமாக இருக்க வேண்டும். 
 
பலர் ஹஜ்ஜுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் செல்லப் போகிறார்கள். எத்தனை பேர், பேருக்காகவும், புகழுக்காகவும், திரும்ப வரும் பொழுது மஸ்ஜிதிலே நமக்கு ஒரு பதவி கிடைக்கும் ஹாஜி என்ற பெயரிலே மக்கள் புகழ்வார்கள், போர்வை போற்றுவார்கள், மாலை போடுவார்கள், நடக்கின்றதா இல்லையா? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஹஜ் செய்தார்கள். யா அல்லாஹ்! எவ்வளவு பெரிய மகத்தான பரிசுத்தமான உள்ளத்துடைய அந்த நபி அல்லாஹ்வால் சான்றளிக்கப்பட்டவர். அவர்கள் ஹஜ் உடைய தல்பியாவை ஆரம்பிக்கும் பொழுது என்ன சொன்னார்கள் தெரியுமா?
 
اللَّهمَّ حَجَّةٌ لا رياءَ فيها ولا سُمعةَ
 
யா அல்லாஹ்! இந்த ஹஜ்ஜை உனக்காக செய்கிறேன். யாருடைய புகழுக்காகவோ, யாரும் என்னை போற்றுவதற்காகவோ, யாருடைய முகத்திற்காகவும் நான் செய்யவில்லை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி தல்பியாவை ஆரம்பித்தார்கள் என்றால் நமக்கு எத்தகைய பாடத்தை அவர்கள் அங்கே படித்துக் கொடுக்கிறார்கள் பாருங்கள்! 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 2355.
 
அல்லாஹ் அல்லாதவருடைய முகத்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாடுவார்களா? அல்லாஹ் அவர்களை பாதுகாத்து இருந்தானே! எவ்வளவு பரிசுத்தமான உள்ளம் உள்ளவர்கள்! அந்த நபி தக்வாவின் உச்சம்! 
 
சகோதரர்களே! இதுதான் இறையச்சத்தின் உச்சம். அது தான் அல்லாஹ்வுக்காக நான் வாழ்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதனுடைய அடையாளம் என்ன? எனக்கு மறுமையின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு சொர்க்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நரகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஒருவன் சொன்னால் அதனுடைய அடையாளம் என்ன? அவன் தன்னுடைய அமல்களை அல்லாஹ்விற்காக மட்டுமே வைத்துக் கொள்வது. அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக மட்டுமே வைத்துக் கொள்வது. 
 
ஆகவேதான், முனாஃபிக்குகள் யாருடைய உள்ளத்திலே அல்லாஹ்வின் அந்த நம்பிக்கை இல்லையோ, சொர்க்கத்தின் மீது ஆசை இல்லையோ, நரகத்தின் மீது பயம் இல்லையோ அவர்கள் எதை செய்தாலும் சரி, பிறருக்காகவே செய்வார்கள். காண்பிப்பதற்காக செய்வார்கள். 
 
اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌  وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏
 
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள். (அல்குர்ஆன் : 4:142)
 
அல்லாஹ் அவர்களுக்கு முக்கியமானவனாக இருக்க மாட்டான் சொற்ப அளவிலே தவிர. மக்களுக்கு காட்டுவது, மக்களிடத்திலே பிரபலத்தை தேடுவது, மக்களிடத்திலே புகழை தேடுவது, முகஸ்துதியை விரும்புவது, இதுதான் அந்த முனாஃபிக்குகள் உடைய செயல் என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். 
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வாழ்க்கை அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கிறான். நம்மிலே இறந்து விட்டவரை நினைத்துப் பாருங்கள்! நம்முடைய தாய் தந்தை யாருக்கு இறந்து விட்டார்களோ அவர்களை நினைத்து பாருங்கள்! நம்முடைய பாட்டன் முப்பாட்டனை நினைத்து பாருங்கள்! நம்முடைய நண்பர்களை நினைத்துப் பாருங்கள்! கப்ருக்கு சென்று விட்டவர்களை நினைத்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ் நமக்கு வாய்ப்பை கொடுத்து இருக்கிறான். நாம் வாழக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் நாளும் அல்லாஹ்வால் நமக்கு கொடுக்கப்பட்ட மறு வாய்ப்பு. எத்தனை ஆபத்துகள் வந்து நம்முடைய நண்பர்கள் எல்லாம் அதிலே அழைக்கப்பட்டு விட்டார்கள். அல்லாஹ்விடத்தில் அல்லாஹ் நமக்கு வாழ்க்கையை கொடுத்திருக்கின்றானே, இதை அல்லாஹ்விற்காக பரிசுத்தமாக ஆக்க வேண்டும்.
 
வணக்க வழிபாடுகளை அடிப்படையாக வைத்து நம்முடைய வாழ்க்கையை அமைக்க வேண்டும். ஹலால் அது மட்டும் தான் என்னிடத்திலே இருக்கும். ஹராமை விட்டு விலகி ஓடுவது, பாவத்தை விட்டு விலகி ஓடுவது, நம்முடைய கல்பை பரிசுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, உறவுகளை சேர்த்து வாழ்வது, ஏழைகளோடு இணக்கமாக நமக்கு அல்லாஹ் கொடுத்ததை அவர்களுக்கு கொடுத்து வாழ்வது, சமூக மக்களோடு பரஸ்பர அன்போடு உறவோடு நட்புறவோடு வாழ்வது, அல்லாஹு தஆலா அதைத்தான் நமக்கு விரும்புகிறான்.
 
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ‏
 
மூமின்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு பணிந்து கொண்டே இருங்கள்! ருகூஃ செய்து கொண்டே இருங்கள்! முஃமின்களே அல்லாஹ்விற்கு சுஜூது செய்து கொண்டே இருங்கள்! மூமின்களே எல்லா வகையிலும் உங்களுடைய ரப்பை வணங்கிக் கொண்டே இருங்கள்! உங்களுடைய சமூகத்திற்கு சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து கொண்டே இருங்கள் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 22:77)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா அந்த வெற்றியை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! நம்முடைய சமுதாய மக்களை இந்த மார்க்கத்தின் பக்கம் முழுமையாக அல்லாஹ் திருப்புவனாக! காஸா மக்களுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அவர்களுடைய மார்க்கத்தை பலப்படுத்துவானாக! அவர்களுடைய நிலத்தை அல்லாஹுத்தஆலா மீட்டு தருவானாக! 
 
அவர்கள் மீது அநியாயம் அக்ரமம் செய்யக்கூடிய யூதர்களுக்கு எதிராக அவர்களுக்கு மகத்தான வெற்றியை மகத்தான அருளை அல்லாஹ் பொழிந்தருவானாக! அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்மிடம் இருந்து நன்மைகளை ஏற்றுக் கொள்வானாக! நம்மை அல்லாஹ் மன்னிப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/