HOME      Khutba      உள்ளங்களை பக்குவப்படுத்தும் ஹஜ்! | Tamil Bayan - 888   
 

உள்ளங்களை பக்குவப்படுத்தும் ஹஜ்! | Tamil Bayan - 888

           

உள்ளங்களை பக்குவப்படுத்தும் ஹஜ்! | Tamil Bayan - 888


உள்ளங்களை பக்குவப்படுத்தும் ஹஜ்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளங்களை பக்குவப்படுத்தும் ஹஜ்!
 
வரிசை : 888
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 31- 05- 2024 | 23-11-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக; தக்வாவை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று அதைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேண வேண்டும் என்றும் உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய பாலஸ்தீன சகோதரர்களுக்கு அல்லாஹு தஆலா அவனுடைய அருளையும் உதவியையும் தீவிரப்படுத்துவானாக! விரைவுப்படுத்துவானாக! அந்த மக்களை இத்தகைய சோதனைக்கு உள்ளாக்கிய யூதர்களுக்கு தோல்வியையும் இழிவையும் அவமானத்தையும் அல்லாஹு தஆலா இம்மையிலும் மறுமையிலும் தருவானாக! அந்த புனித பூமியில் இருந்து அல்லாஹு தஆலா அவர்களை இழிவுபடுத்தப்பட்டவர்களாக வெளியேற்றுவானாக! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய வீட்டை நோக்கி ஹாஜிகள் எல்லாம் புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா  யாருக்கு அந்த வாய்ப்பை நாடினானோ அல்ஹம்து லில்லாஹ்! கண்டிப்பாக அவர்கள் அல்லாஹ்வால் அருளப்பட்டவர்கள். அந்த வாய்ப்புக்காக நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். கேட்க வேண்டும். அதற்காக நாமும் முயற்சி செய்ய வேண்டும். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அது போன்று கண்ணியத்திற்குரிய நபிமார்கள் இவர்களுடைய நல்ல வணக்கங்கள் நல்ல பழக்கங்கள் நல்ல துஆக்களில் ஒன்று என்னவென்றால், இப்போது எப்படி நாம் நம்முடைய துன்யா தேவைகளுக்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடுகின்றோமோ எப்போது கையை தூக்கினாலும் நம்முடைய உலகத் தேவைகளை மட்டுமே அல்லாஹ்விடத்திலே கூறி அழுகின்றோமோ அந்த சான்றோர் அந்த நல்லோர் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்கான அருளை வேண்டி அழுது கொண்டிருந்தார்கள். 
 
இன்று, நாம் எப்படி நம்முடைய உணவுக்காக உடைக்காக உறைவிடத்திற்காக அல்லாஹ்விடத்திலே அழுகின்றோம் அல்லவா, மன்றாடுகின்றோம் அல்லவா, அவர்கள் இவற்றைப் பற்றி கவலை பட்டதில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாளைக்கு இரு வேளையோ  இரண்டு நாள்களோ தொடர்ந்து அவர்கள் வயிறார சாப்பிட்டதில்லை. இந்த நிலையிலும் அல்லாஹ்வை அவர்கள் குறைபட்டதில்லை. 
 
என்னை  பட்டினியாக போடுகிறாயே என்று. அவர்கள் நான் வறுமையில் இருக்கிறேன், நான் கஷ்டத்தில் இருக்கிறேன், நெருக்கடியில் இருக்கிறேன் என்று புலம்பியது கிடையாது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாமும் துஆ செய்து தமது தோழருக்கும் துஆ செய் என்று கூறினார்கள். 
 
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
 
என் இறைவா! உன்னை நான் நினைவுகூர்ந்தவனாக வாழ்வதற்கு எனக்கு உதவி செய்! உன்னை மறக்காத வாழ்க்கை வேண்டும். உன்னுடைய நினைவை கொண்டு வாழ்வதற்கு எனக்கு உதவி செய்! உனக்கு நன்றி செலுத்துவதற்கு எனக்கு உதவி செய்! 
 
அறிவிப்பாளர்: முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபு தாவூத், எண் : 1522.
 
இன்று அல்லாஹு தஆலா கொடுத்ததை நினைத்துப் பார்க்காமல் பிறரிடத்தில் இருப்பதை பார்த்து ஏங்கிய நம்முடைய வாழ்க்கை தொலைந்து கொண்டிருக்கிறது. 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌  لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌  وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ  اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
 
உங்களில் சிலரை விட சிலரை நாம் மேன்மை ஆக்கி வைத்திருப்பதை பார்த்து உங்களில் சிலருக்கு கொடுக்காமல் சிலருக்கு அதிகமாக கொடுத்திருப்பதை பார்த்து ஏங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அப்படி நீங்கள் பேராசை படாதீர்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை அல்லாஹ்விடத்தில் நேரடியாக கேளுங்கள்! (அல்குர்ஆன் : 4:32)
 
அவனை பார்த்து இவனை பார்த்து எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்காதீர்கள்! யா அல்லாஹ் எனக்கு வீடு தேவை கொடு யா அல்லாஹ்! அவனுக்கு பங்களா இருக்கிறது எனக்கு பங்களா இல்லையே! எனக்கும் பங்களாவை கொடு யா அல்லாஹ்! அவன் இவ்வளவு சம்பாதிக்கிறான் எனக்கு அவ்வளவு சம்பாத்தியம் இல்லையே! அவ்வளவு சம்பாத்தியத்தை கொடு! அப்படி கேட்காதீர்கள். 
 
உங்களுக்கு என்ன தேவையோ அதை அல்லாஹ்விடத்தில் நேரடியாக கேளுங்கள்! அல்லாஹ்விடத்தில் அவனுடைய அருளைக் கேளுங்கள்! அவன் உங்கள் ரப்பு. அவன் உங்கள் மௌலா -உங்கள் எஜமான், உங்களை படைத்தவன். அவன் உங்களுக்காகவே அவனது கஜானாக்களை வைத்திருக்கிறான். நீங்கள் கேட்பதை அவன் எதிர்பார்த்து ஆசைப்பட்டு கொண்டிருக்கிறான். நீங்கள் கேட்கவில்லை என்றால் தான் அவன் கோபப்படுவான். 
 
ஆகவே, அவனிடத்திலே இவனை சொல்லி அவனை சொல்லி துன்யாவை கேட்காதே! உனக்கு வேண்டியவற்றை என்னிடத்திலே நேரடியாக கேள்! கொடுத்ததற்கு நன்றி செலுத்து! 
 
وَحُسْنِ عِبَادَتِكَ
 
யா அல்லாஹ் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கு உதவி செய்! 
 
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தான தர்மம், திக்ர் இவற்றில் சில நம்மிடத்தில் இருக்கலாம். இருக்கின்றன. ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியது போன்று அழகிய முறையில் இருக்கின்றதா? அழகிய முறை என்றால் அதைக் கொண்டு அல்லாஹ் திருப்தி பட வேண்டும். 
 
இன்று, நாம் நம்முடைய வணக்கத்தை கொண்டு நாம் திருப்தி அடைந்து சென்று விடுகிறோம். அல்லாஹ் எனது வணக்கத்தை கொண்டு திருப்தி பட்டானா? என்று நாம் சிந்திப்பதில்லை. அந்த அச்சம் வருவதில்லை. உள்ளத்திலே அந்த துடிப்பு வருவதில்லை. 
 
அந்த பயம், அந்த அச்சம், அந்த துடிப்பு அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்த காரணத்தினால் தான் அவ்வளவு பொறுமையாக நிறுத்தி நிதானமாக உச்சரிப்பாக சரியாக ஒவ்வொரு ருக்னையும் தொழுது முடித்ததற்கு பிறகு கூட, அவர்கள் சலாம் சொன்னவுடன் அவர்கள் கேட்ட முதல் துஆ, அஸ்தஃபிருல்லாஹ். 
 
யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு! ஒருமுறை அல்ல, மூன்று முறை அஸ்தஃபிருல்லாஹ் அஸ்தஃபிருல்லாஹ். இந்த தொழுகையில் நான் எத்தனை தவறுகள் செய்திருப்பேனோ! அல்லாஹ் என்னை மன்னித்துவிடு!
 
அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 591.
 
சகோதரர்களே! இன்று நம்மில் பலருக்கு நினைவே இல்லாமல் தொழுகை ஆரம்பிக்கப்பட்டு முடிந்து விடுகிறது. என்ன ஓதினோம்? ருகூவில் என்ன உச்சரித்தோம்? சுஜூதிலே எத்தனை தஸ்பீஹ் சொல்கிறோம்? எந்த உணர்வும் இல்லாமல் தக்பீர் கட்டிய வேகத்திற்கு சலாம் வரை முடிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்! 
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், எத்தகைய மாபெரும் நபி! அவர்கள் அல்லாஹ்விடத்திலே கெஞ்சினார்கள் என்றால் அல்லாஹ்விடத்திலே மன்றாடினார்கள் என்றால் எதற்காக?
 
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
 
இந்தத் தொழுகையை உருப்படியாக தொழக்கூடியவனாக என்னை ஆக்கு! 
 
அல்லாஹ்வுடைய கலீல் இப்ராஹிம், அந்த நபி அல்லாஹ்விடத்திலே அழக்கூடிய அழுகை எதற்காக?  யா அல்லாஹ் என்னை உருப்படியான தொழுகையாளியாக, தொழுகையை உருப்படியாக நிலை நிறுத்தக் கூடியவனாக, தொழுகையை சரியாக தொழக் கூடியவனாக என்னை ஆக்கி விடு! என் சந்ததிகளையும் அப்படி ஆக்கு! (அல்குர்ஆன் : 14:40)
 
சகோதரர்களே! எனக்கும் உங்களுக்கும் ஏன் இதை நினைவூட்டுகிறேன் என்றால் இன்று ஹஜ் செய்யப்படுகிறது. ஹஜ் உடைய நோக்கத்தை உணராமலேயே ஹஜ்ஜுக்காக மூட்டை கட்டியவர்கள் பணத்தை செலுத்தியவர்கள் ஏராளம் பேர்! சென்று வந்தார்கள், ஹஜ்ஜுக்கா அல்லது சுற்றுலாவிற்கா?
 
எத்தனை ஹாஜிகள் தெரியுமா? தங்களை அழைத்துச் செல்லக்கூடிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் வைத்திருக்கக் கூடிய அளவுகோல், 5 ஸ்டார் ஹோட்டலிலே தங்க வைப்பார்களா? பஃப்பே உணவு தமிழ்நாடு உணவு கிடைக்குமா? அதிலே என்னென்ன வகையான உணவு கிடைக்கும்? 
 
இன்னும் சில பேர், மினாவிலே தனி டாய்லெட் கிடைக்குமா? இப்படி எல்லாம் நிபந்தனைகளை கேட்டதற்கு பிறகு தான் அவர்கள் ஹஜ்ஜுக்கான நிறுவனத்தையே தேர்ந்தெடுப்பார்கள். அதற்குப் பிறகு வழிகாட்டுதல், ஹஜ் செய்தல் அதெல்லாம் பார்த்துக்கலாம். நமக்கு தெரியாததா? 
 
பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து பயணத்தை முடிக்கின்ற வரை தங்களுடைய செல்வத்தைப் பற்றி, பணத்தைப் பற்றி, வியாபாரத்தை பற்றி, தொழிலை பற்றி, தங்களுடைய ஆடம்பரத்தை பற்றி பேசி இருப்பார்களே தவிர, அவர்கள் கூறிய தல்பியா அவர்களுடைய உள்ளத்திலே இறங்கி இருக்காது. தல்பியாவை மனப்பாடம் செய்யாமலேயே ஹஜ்ஜுக்கு வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். 
 
அப்படியே பலர் மனப்பாடம் செய்திருந்தாலும் அந்த தல்பியா எந்த ஈமானை எந்த யக்கீனை எந்த இக்ளாசை அல்லாஹ்வோடு இருக்கக்கூடிய அந்த எஜமானன் அடிமை என்ற உணர்வை ஊட்டுகிறதோ உன்னை அல்லாஹ்விற்காக மறுமைக்காக மாற்றக்கூடிய பயணம் இது, நீ மாறிவிடு.
 
உன்னுடைய தொழுகையை நோன்பு ஹஜ் உனக்கு அல்லாஹ்விற்காக மறுமைக்காக இருப்பதை போன்று, இந்த வணக்கம் அவை அனைத்தையும் சேர்த்த வணக்கம். மறுமையை காட்டக் கூடிய வணக்கம் இது; அல்லாஹ்வுடைய வீட்டிற்கு நேரடியாக உன்னை அழைத்துச் செல்லக்கூடிய வணக்கம் இது; அல்லாஹ்விடத்தில் நேரடியாக அரஃபா மைதானத்திலே உன்னை கேட்க வைக்க அவன் இறங்கி பதில் சொல்லக்கூடிய பயணம் இது; 
 
அவனுடைய அடியார்கள் வெள்ளையர்கள் கருப்பர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அரசர்கள் சாதாரண மக்கள் என்று அனைவரையும் ஒரே பூமியிலே சமமாக படுக்க வைத்து, நீங்கள் எல்லாம் என்னுடைய அடிமைகள் நான் உங்களுடைய எஜமானன் என்று அல்லாஹ்வுடைய உறவை உணர்த்தக்கூடிய பயணம் இது. 
 
உன்னுடைய இஹ்ராமுடைய ஆடை மட்டும் கழட்டப்படுவது அல்ல. உன்னுடைய ஆடை ஆபரணங்கள் மட்டும் கழட்டப்படுவது அல்ல. உன்னுடைய பெருமை அங்க கழட்டப்பட வேண்டும். உன்னுடைய ஆணவம் நான் நான் கல்வியால் செல்வத்தால் பதவியால் எது உன்னிடத்திலே நான் என்ற அந்த ஆணவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறதோ அனைத்தையும் கழட்டிவிட்டு நான் என்னுடைய ரப்புடைய அப்து.
 
பசி பட்டினிலே வாடி இருக்கக்கூடிய ஒரு பிச்சைக்காரன், ஒரு செல்வந்தன் இடத்திலே எப்படி பசிக்காக கதறுவானோ அழுவானோ துடிப்பானோ தனது தேவைக்காக அதை விட அதிகமாக நீ,
 
 لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك 
 
என்னிடத்திலே மன்றாடு கதறு என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவில் இருந்து புறப்பட்டார்கள். எத்தகைய ஒரு ஆன்மீகப் பயணமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! உலகத்திலே ரசூலுல்லாஹ்வை விட ஒரு சிறந்த ஹஜ் வழிகாட்டியை பார்த்திருக்க முடியுமா? அல்லாஹ்வுடைய தூதரின் அந்த தோழர்களை விட சிறந்த ஒரு ஹஜ் குழுவை பார்த்திருக்க முடியுமா? 
 
இபாதத் என்றால் அவர்களுக்கு உயிர் ஆயிற்றே! அதுவும் கஃபா நோக்கிய பயணம் ஆயிற்றே! கர்ப்பிணி பெண் வயிற்றிலே குழந்தையை சுமந்து இருக்கிறாள். நாளையோ மறுநாளோ குழந்தை பிறந்து விடும் அந்த நிலையில் அல்லாஹ்வுடைய தூதரே! நான் உங்களோடு ஹஜ்ஜுக்கு வர வேண்டும் என்று ஓடோடி வருகிறாள் என்றால் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,  வா என்று அழைத்துக் கொண்டார்கள். 
 
ஹஜ்ஜுக்காக இன்னும் தல்பியா ஓதவில்லை. துல்ஹுலைஃபாவிலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கி இருக்கிறார்கள். வரவேண்டிய பலர் வந்து விட்டார்கள் இன்னும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். 
 
எல்லா தோழர்களும் வருவதற்கு முன்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துல்ஹுலைஃபாவிலே அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் முடிந்து விட்டது. மறுநாள் புறப்பட வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் தங்களது தோழர்களை பார்க்கிறார்கள்; யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று. 
 
இங்கே பார்த்தால் அஸ்மா அவர்கள் குழந்தை பெற்றெடுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்ன செய்வது? பரவாயில்லை, சுத்தமாகிக்கொள். குளித்துக் கொள். பிரசவ உதிரத்துடைய பெண் எப்படி துணி வைப்பாளோ அப்படி துணி வைத்துக் கொள்! தல்பியா சொல்லி புறப்படு! 
 
யோசித்துப் பாருங்கள்! சகோதரர்களே! என்ன வசதி இருந்திருக்கும் அந்த காலத்திலே? பிரசவ உதிரப்போக்கிலே ஒரு பெண் எப்படி இருப்பாள்? எப்பேர்பட்ட கஷ்டத்திலே இருப்பாள்? பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். தன்னுடைய பலவீனம் எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும்? அந்த நிலையில் கூட அல்லாஹ்வுடைய தூதரோடு அந்த ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அஸ்மா துடித்தார்கள் என்றால் அவர்களுடைய ஆர்வம் அப்படி இருந்தது. 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1905.
 
இங்கே நம்முடைய ஆர்வம் எங்கே? இன்று கூட நம்மில் பலர் பல செல்வந்தர்கள் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். ஹஜ்ஜுக்கு போவோமா? எப்போ போறது? எப்படி போறது? சிரமமாய் இருக்குமாம்ல? நிறைய கூட்டமா இருக்குமாம்ல?  சிலருக்கு மினா அரபா முஸ்தலிஃபாவை நினைத்தால் பயம். செஞ்சா ஒரு ஹஜ்ஜே போதும்டா என்று பயந்து ஓடக்கூடியவர்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! சிரமத்தில் தான் நீங்கள் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும். சுகத்திலும் இன்பத்திலும் அல்லாஹ்வை தேடுவது பெருசல்ல. சிரமத்தில் அல்லாஹ்வை பொருந்தி கொள்கிறீர்கள் அல்லவா! அந்த இன்னல்களில் அல்லாஹ்விற்காக சகித்துக் கொள்கிறீர்கள் அல்லவா! அதை பார்த்து அல்லாஹ் திருப்தி படுவது  அதுதான் பெரிய திருப்தி. அது நமக்கு  புரிவதில்லை. 
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் இடத்திலே கேட்டார்கள்; யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வுடைய பாதையிலே போருக்கு சண்டைக்கு செல்வதை பற்றி இவ்வளவு சிறப்பு சொன்னீர்களே? நாங்கள் பெண்கள் நாங்களும் ஜிஹாது செய்ய வேண்டும். எங்களுக்கும் அனுமதி கொடுங்கள். 
 
எத்தகைய வீர பெண்மணி பாருங்கள்! இன்று, நம்முடைய பெண்களுக்கு பயான் வைத்திருக்கிறோம். வகுப்பு வைத்திருக்கிறோம். வந்து மார்க்க கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்றால் நூறு போலி சாக்குகளை சொல்கிறார்கள். கால் வலியிலிருந்து கை வலியிலிருந்து மண்டை வலியிலிருந்து அது போக, அவர் வருகிறார், இவர் வருகிறார், உற்றார் வருகிறார், உறவு வருகிறார், நேற்று தான் சென்று வந்தேன் என்று பொய்யான நூறு சாக்குகளை சொல்கிறார்களே தவிர, கல்வி என்று ஓடி வருவார்களா?
 
இன்று, பெண்களுக்கு மஸ்ஜிதில் தொழுவதற்கு இடம் இல்லை என்று சொல்கிறார்கள். இடத்தை வைத்துக்கொண்டு அழைத்தால் வருவதற்கு ஆள் இல்லை. 
 
உகாண்டா என்ற ஒரு நாட்டிற்கு சென்றேன். ஸுப்ஹு தொழுகைக்கு சொல்கிறேன். ஆண்களின் எண்ணிக்கை அளவிற்கு பெண்கள் சுப்ஹு தொழுகைக்கு ஜமாஅத்திற்கு வருகிறார்கள். எத்தகைய ஈமான் இருக்கும் பாருங்கள்! 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ்விடத்திலே கேட்டவுடன் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: ஆயிஷா நான் உங்களுக்கு ஒரு ஜிஹாதை கற்றுத் தருகிறேன். அதிலே நேரடியான சண்டை இருக்காது. அதுதான் ஹஜ் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா எண் :2901, புகாரி, எண் : 2875.
 
இந்த வார்த்தையை ஆயிஷா அவர்கள் கேட்டதிலிருந்து வாழ்நாள் வரை ஹஜ்ஜை அவர்கள் விட்டதே இல்லை. தன்னுடைய தந்தை அபூ பக்கர் அவர்களிடத்திலே சென்று கேட்கிறார்கள். தந்தையே ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும். மகளே! எப்பேர்பட்ட குழப்பம் இஸ்லாமிய நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது! எப்படி பாதுகாப்பாக ரசூலுல்லாஹி மனைவிமார்களை நான் அனுப்புவது? பொறு! என்று சொல்கிறார்கள். 
 
இரண்டு ஆண்டுகளிலேயே அபூபக்கர் இறந்து விடுகிறார். பிறகு கலிஃபா உமர் உடைய காலம். குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கப்படுகின்றன. கலிஃபா உமருடைய நான்காவது ஆண்டு ஆரம்பமாகிறது. கலிஃபா! எங்களுக்கு அனுமதி கொடுங்கள்! அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்கள் நாங்கள் ஹஜ் செய்ய வேண்டும். கலீபா உமருல் பாரூக் ஒரு பெரிய ஏற்பாடு செய்கிறார். 
 
ரசூலுல்லாஹ் உடைய மனைவிமார்களை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்காக ஒரு பெரிய குழுவை தயார் செய்கிறார்கள். அந்த மனைவிமார்களை நடுவில் விட்டு முன்னும் பின்னும் பாதுகாப்பான ஒரு பயணக் கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களுடைய மீதம் உண்டான ஆறு ஆண்டுகள் அல்லாஹ்வுடைய தூதரின் மனைவிமார்களை ஹஜ்ஜுக்கு அழைத்து செல்கிறார்கள். 
 
அதற்குப் பிறகு உஸ்மான் ஆட்சிக் காலம். பிறகு அலீ உடைய ஆட்சி காலம். இத்தனை காலங்களிலும் தொடர்ந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ஒரு ஆண்டை கூட ஹஜ்ஜை தவறவிட்டதில்லை. நடந்தவர்களாக சென்றார்கள்.
 
(இன்றைய பயணத்தை போன்று சொகுசுப் பயணங்களாக இருக்கவில்லை.) ஒட்டகத்தில் சென்றால் நடந்தே ஒட்டகம் களைத்து விடும். நாம் தான் ஒட்டகத்தை இழுத்துச் செல்ல வேண்டும்.
 
எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், இன்று மக்களுக்கு பயம், ஹஜ் என்றால் பயம். எந்த பயம் இருக்க வேண்டும்? என்னுடைய ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்க வேண்டுமே! அல்லாஹ் விரும்பக்கூடிய ஹஜ்ஜாக இருக்க வேண்டுமே! என்ற பயம் இருக்க வேண்டுமே தவிர, நான் எப்படி செல்வது? தனியாக சென்றால் என்ன செய்வது? என்னை யார் பாதுகாப்பது? 
 
அன்பான சகோதரர்களே! பாதுகாப்பு அளிக்கக்கூடிய அல்லாஹ்வின் வீட்டிற்கு செல்லும்போது, ரப்புடைய விருந்தாளியாக நீங்கள் செல்லும்போது எதை பயப்படுகிறீர்கள்? புரியவில்லை. சிலர் கேட்பது, எங்க அத்தா அம்மா தனியா வராங்க. அவங்களுக்கு ஏதாச்சும் ஆயிருச்சுன்னா? என்னப்பா ஆகப் போகுது. ஆனா ஷஹாதத். பாக்கியம் கிடைக்குமே! பாக்கியம் சாதாரண பாக்கியமா? 
 
யார் இஹ்ராமுடைய நிலையில் இறந்து போவாரோ, அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: 
 
اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْه وَلَا تُحَنِّطُوهُ ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّياً
 
அவரை நீங்கள் அப்படியே கஃபனிட்டு விடுங்கள். அவர்களுடைய முகத்தை மறைக்காதீர்கள். தலையை மறைக்காதீர்கள். நறுமணம் பூசாதீர்கள். அவர் எழுப்பப்படும் பொழுது,
 
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك بالملك لا شريك لك 
 
என்ற தல்பியா ஓதியவராக எழுப்பப்படுவார். 
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1206.
 
எப்பேர்பட்ட பாக்கியம்! நமக்கு என்ன பயம்?
 
وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
 
பாதுகாப்பு அளிக்கக்கூடிய நகரம் அது. (அல்குர்ஆன் : 95:3)
 
அந்த ஊருக்கு போவதற்கு பயமா? ரப்பிடத்திலே செல்கிறீர்கள். அழைத்தவன் ரப்பு. அவனுடைய விருந்தாளியாக செல்கிறீர்கள். இக்லாசும் அல்லாஹ்வுடைய பயமும் இபாதத்துடைய இல்மும் இருந்தால் போதுமானது. யாரைப் பற்றியும் எந்த கவலையும் உங்களுக்கு இருக்க வேண்டியதில்லை. 
 
உணவளிப்பவன் அல்லாஹ். உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ். உங்களை எங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ சேர்ப்பவன் அல்லாஹ். 
 
எத்தனையோ மக்கள் மொழியே தெரியாத அவர்களுடைய தாய் மொழியைத் தவிர, எழுதத் தெரியாது படிக்கத் தெரியாது அவர்களுடைய ஊர்காரர்களை தவிர வேறு யாரிடத்திலும் தொடர்பு கொள்ளத் தெரியாது. 
 
அல்லாஹு அக்பர்! அதிலும் எத்தனை பேர் ஊனமானவர்கள்! தன்னுடைய தாயை தந்தையை உறவுகளை சுமந்தவர்கள்! எத்தனை பேர் அங்கே கைகள் இல்லாமல் கால்கள் இல்லாமல் தவழ்ந்து வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
 
எத்தனை பேர் பார்க்கிறோம். இருந்தாலும் அந்த நம்பிக்கை நமக்கு வருவதில்லை. காரணம் என்ன? அவ்வளவு சொகுசு வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி இருக்கிறோம். நம்முடைய உள்ளத்திலே துன்யா அவ்வளவு குடிகொண்டு இருக்கிறது. 
 
அன்பான சகோதரர்களே! இந்த ஹஜ் என்பது இபாதத் மட்டுமல்ல. இது ஒரு தர்பியா. இது ஒரு தஸ்கியா. இபாதத்துனுடைய உச்சகட்டம் இது. கஃபதுல்லாவிலே நீங்கள் தொழுகிறீர்கள். அல்லாஹ்வின் நேரடி பார்வை உள்ள வீடு அது. அல்லாஹ்வுடைய வேதம் இறங்கிய பூமி. நபிமார்களுடைய பூமி. மலக்குகளாலும் நபிமார்களாலும் கட்டப்பட்ட அல்லாஹ்வுடைய இல்லம் அது. அல்லாஹ்விற்கு உலகத்திலேயே பிரியமான பூமி.
 
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ‏
 
எந்த நகரத்தின் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்ததில்லை. மக்காவின் மீது சத்தியம் செய்கிறான். இந்த நகரத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் : 90:1)
 
وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا‌ ‏
 
அல்லாஹ் சொல்கிறான்: மக்கா தான் முதலாவது பூமி என்று. இங்கிருந்து தான் பூமியின் நகரங்கள் உருவாகின. ஊர்களின் தாய் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 6:92)
 
அந்த ஊரின் மீது அல்லாஹ்விற்கு பிரியம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய நபி அவர்கள் பிரியப்பட்ட பூமி. இப்ராஹிம் நபி தேர்ந்தெடுத்த பூமி. 
 
அன்பான சகோதரர்களே! அந்த ஊருக்கு அல்லாஹ் அழைக்கிறான். ஹஜ் என்பது ஏதோ காசு இருக்கிறது பணம் இருக்கிறது மார்க்க கடமைகளில் ஒன்று முடித்து விடுவோம் என்பதற்காக மட்டும் செய்யப்படக்கூடிய வணக்கம் அல்ல. 
 
இந்த ஹஜ் உள்ளத்தை மாற்ற வேண்டும். உள்ளத்தில் இருக்கக்கூடிய கெட்ட குணங்களை களைந்தெரிய வேண்டும். முகஸ்துதி, பெயர், புகழை விரும்புதல், ஆடம்பரத்தை விரும்புதல், உலகத்தின் மீது மோகம் கொண்டு உலகத்தின் பக்கம் அப்படியே சாய்ந்து விடுதல் இவற்றையெல்லாம் அடியார்களின் உள்ளங்களில் இருந்து களைய வேண்டும் என்பதற்காக ஹஜ். 
 
ஆகவே தான் ஹஜ்ஜை ஆரம்பிக்கும் போதே யா அல்லாஹ் உனக்காக ஹஜ் செய்கிறேன். 
 
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 
 
அல்லாஹ்விற்காக ஹஜ் செய்யுங்கள். அல்லாஹ்விற்காக உம்ராவை நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் : 2:196)
 
அதற்குப் பிறகு, அந்த தல்பியாவின் வாசகத்தை பாருங்கள்! சுபஹானல்லாஹ்! இந்த இபாதத்திற்காக தனியாக ஒரு வாசகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? 
 
ஒவ்வொரு இபாதத்திற்கு அல்லாஹ் ஒன்றை வைத்து இருக்கிறான் விசேஷமாக. இந்த ஹஜ்ஜுக்கான விசேஷமான வாசகம் என்ன? அந்த தல்பியா உடைய வாசகம். எவ்வளவு பாசத்தோடு இன்பத்தோடு சுகத்தோடு ஈமானிய சுகம் ஈமானிய இன்பம் இறை அச்சத்தின் இன்பம். அல்லாஹ் உடைய பயத்தால் உள்ளத்திற்கு ஏற்படக்கூடிய ஒரு இன்பம். 
 
பயத்தால் மனிதனுக்கு பெரும்பாலும் வெருட்சி ஏற்படும். ஒரு விதமான மனதிலே நெருக்கடி ஏற்படும். ஆனால், அல்லாஹ்வுடைய பயம் இருக்கிறதே அந்த பயத்தால் உள்ளத்திற்கு இன்பம் ஏற்படும். அந்த பயத்தால் உள்ளத்திற்கு ஒரு ஈமானிய சுவை கிடைக்கும். 
 
யார் அல்லாஹ்வை அதிகம் பயப்படுவார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய பாதுகாப்புக்கு அவ்வளவு தகுதியானவர்கள். 
 
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك 
 
அல்லாஹ்விற்கு முன்னால் ரப்பே நான் பணிந்து விட்டேன். வந்து விட்டேன். எனக்கென்று எதுவும் இல்லை. புகழ் உனக்கு. ஆட்சி உனக்கு. எல்லா செல்வங்களும் உனக்கு. உனக்கு இணையில்லை துணையில்லை. ரப்பே உன்னுடைய அழைப்பை கேட்டு நான் வந்து விட்டேன். நான் வந்து விட்டேன். ஓடி வந்து விட்டேன். 
 
அப்பேர்பட்ட உணர்வை அங்கே ஏற்படுத்த வேண்டும். இஹ்ராமுடைய ஆடை என்பது அது சாதாரணமான ஆடை அல்ல. உணர்வுகளோடு பயத்தோடு அணியப்படக்கூடிய ஆடை தக்வாவோடு அணியப்படக்கூடிய ஆடை. 
 
இன்று, அன்பான சகோதரர்களே வழிபாடு இருக்கிறது. ஆனால் வழிபாட்டின் நோக்கங்கள் மறைந்து விட்டன. ஹஜ்ஜிற்கான கூட்டங்கள் அதிகமாகிவிட்டது. ஆனால் அதை உணர்வோடு செய்யக்கூடியவர்கள் எங்கே? அந்த உள்ளச்சத்தை இந்த இபாதத்தின் மூலமாக தேடக்கூடியவர்கள் எங்கே? 
 
பலருக்கு பல நோக்கங்களிலே இந்த ஹஜ் செய்யப்படுகிறது. ஆனால், யார் அல்லாஹ்வுடைய அச்சத்திற்காக தன்னை மாற்ற வேண்டும், மறுமைக்கான ஹஜ் ஆக இருக்க வேண்டும், என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான ஹஜ்ஜாக இருக்க வேண்டும், இனி என்னுடைய வாழ்க்கை மறுமை வாழ்க்கைக்காக மாற வேண்டும், அல்லாஹ்வுக்காக என்னை அர்ப்பணித்து நான் என்னுடைய பாவங்களை விட்டு விலகி, ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படக்கூடிய ஹஜ்ஜாக இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஹாஜிகள். அதுதான் உண்மையான ஹஜ். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த ஈமானிய உணர்வை தந்தருள்வானாக! ஹஜ் உடைய நசீபை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! யார் ஹஜ்ஜுக்கு செல்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் தஆலா இந்த இக்லாஸை இந்த ஈமானிய உணர்வுகளை தந்தருள்வானாக! 
 
நம்முடைய குடும்பத்தில் யார் ஹஜ்ஜுக்கு செல்கிறார்களோ நல்ல உபதேசங்களை நல்ல உணர்வுகளை நமக்கு தெரிந்த அறிவுரைகளை அவர்களுக்கு சொல்லி நாம் வழி அனுப்ப வேண்டும்.
 
மாலை போட்டு அனுப்புவது, ஷால் போர்த்தி அனுப்புவது, விழாக்கள் வைப்பது இவை எல்லாம் அனாச்சாரங்கள். சடங்குகள். அவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய நான்கு நல்ல அறிவுரை தக்வாவின் அறிவுரை. இதுதான் அவர்களுக்கு அந்த ஹஜ் உடைய நோக்கத்தை புரிய வைக்கும். 
 
அல்லாஹ் சுபஹானஹு வத ஆலா நமக்கு அருள் புரிவானாக! நம்முடைய ஒவ்வொரு சிறிய பெரிய பாவத்தையும் மன்னிப்பானாக! நேர் வழியிலே நம்மை உறுதிப்படுத்துவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/