ஹஜ் வணக்கமும் ஈமானிய உணர்வுகளும்! | Tamil Bayan - 890
ஹஜ் வணக்கமும் ஈமானிய உணர்வுகளும்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் வணக்கமும் ஈமானிய உணர்வுகளும்!
வரிசை : 890
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-06-2024 | 01-12-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் இம்மை மறுமையின் வெற்றியை துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் பொருந்திக்கொண்ட ஏற்றுக்கொண்ட நல்லோரில் என்னையும் உங்களையும் நமது குடும்பத்தாரையும் தாய் தந்தையையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா மிகச்சிறந்த ஒரு புனித மாதத்தில் நம்மை வைத்திருக்கின்றான்.
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ
ஹஜ்ஜுக்காக அல்லாஹ்விடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறியப்பட்ட மாதங்கள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 2:197)
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா எப்படி தொழுகைக்கு சில நேரங்களை குறிப்பிட்டானோ, நோன்புக்கு ரமழான் மாதத்தை அல்லாஹு தஆலா தேர்ந்தெடுத்தானோ அதுபோன்று ஹஜ்ஜுக்காக அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இடத்தையும் தேர்ந்தெடுத்தான். காலத்தையும் தேர்ந்தெடுத்தான்.
தொழுகை நீங்கள் எங்கு இருந்தாலும் தொழுக வேண்டும். பறந்தாலும் தண்ணீரிலே சென்றாலும் உள்ளூரிலே இருந்தாலும் தொழுகை என்பது மூமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமை. ஐந்து நேர தொழுகையை ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கையில் அந்தந்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். பிறகு ரமழான் உடைய நோன்புக்காக அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்தான்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களில் ஐந்தாவது தூணான இந்த ஹஜ் வணக்கத்திற்கு அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா அதற்காக காலத்தையும் தேர்ந்தெடுத்தான் இடத்தையும் தேர்ந்தெடுத்தான் என்றால் இந்த ஹஜ் வணக்கம் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு மகத்தானது! முக்கியமானது! என்பதை நாம் இதன் மூலமாக புரிய முடியும்.
அல்லாஹு தஆலா இந்த பூமியிலே சிறந்த பூமியாகிய, பூமியின் தாயாகிய எந்த ஊரை தன்னோடு சேர்த்து சொல்லி அல்லாஹு தஆலா பெருமைப்படுகிறானோ, அந்த ஊரின் புனிதங்களை யார் பாழாக்குவாரோ கடுமையான தண்டனையை நான் அவருக்கு சுவைக்க வைப்பேன் என்று அல்லாஹ் தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றான்.
وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ
மக்காவின் புனிதத்திலே யாராவது விளையாண்டால் அங்கே அத்துமீறினால் அநியாயம் செய்தால் கடுமையான வலியுடைய வேதனையை நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம் (அல்குர்ஆன் 22:25)
என்று அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்தானே. எந்த ஊரின் மீது அல்லாஹ் ஒன்றுக்கு பலமுறை அவனது கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனிலே சத்தியம் செய்தானோ, அந்த புனித பூமி மக்காவை நபிமார்களின் ஊரை நபிமார்களுடைய இமாம் ஹலீலுல்லாஹ் -அல்லாஹ்வுடைய நண்பருடைய ஊரை மக்காவை தேர்ந்தெடுத்தான்.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அந்த வீட்டிற்கு வருவதற்காக பிறகு காலத்தையும் நிர்ணயம் செய்தான். அந்த வணக்கத்தை இரண்டு வணக்கங்களாக அல்லாஹு தஆலா நமக்கு பிரித்துக் கொடுத்தான். குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படும் இபாதத்தாக ஹஜ்ஜை வைத்து பிறகு யாருக்கு எந்த காலத்தில் முடியுமோ அவர் அவருடைய வசதிக்கு ஏற்ப வருவதற்காக உம்ரா வணக்கத்தையும் அல்லாஹு தஆலா நமக்கு வழங்கினான். அல்லாஹு தஆலாவுடைய ரஹ்மத்தின் வெளிப்பாடு இது.
இந்த ஹஜ் வணக்கம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக சில குறிக்கோளுக்காக செய்வார்கள். அல்லாஹ் எந்தக் குறிக்கோளுக்காக எந்த நோக்கத்திற்காக ஹஜ் செய்ய சொன்னானோ அந்த நோக்கத்திற்காக ஹஜ் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஹஜ் உடைய சிறப்பு கிடைக்கும்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜுக்கு சொன்ன அத்தனை நற்செய்திகளும் யாருக்கு கிடைக்கப் பெறும்? யார் அந்த ஹஜ்ஜை அல்லாஹ் கூறிய நோக்கத்திற்காக நிறைவேற்றினார்களோ, நபியவர்கள் கற்பித்த நோக்கங்களுக்காக செய்தார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக அந்த சிறப்புகள் கிடைக்கும்.
சாதாரணமான சிறப்பா? எவ்வளவு பெரிய வார்த்தை!
والحَجُّ المَبْرُورُ ليسَ له جَزَاءٌ إلَّا الجَنَّةُ
அல்ஹஜ்ஜுல் மப்ரூர் -நன்மையாக்கப்பட்ட ஹஜ் அதாவது அவர் பாவமான பேச்சை பேசவில்லை. ஆசை இச்சைகளை கொண்டு அந்த ஹஜ்ஜை முறிக்கவில்லை. அந்த ஹஜ்ஜை உலக நோக்கத்திற்காக ஆக்கவில்லை. அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காகவே ஹஜ்ஜிற்கு வந்து ஒவ்வொரு அமலையும் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காகவே செய்து அழுது பாவமன்னிப்பு தேடி பாவ மன்னிப்பு கிடைக்கப் பெற்றவராக வந்தார் அல்லவா, அவருடைய ஹஜ் அல் ஹஜ்ஜுல் மப்ரூர்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இந்த ஹஜ் மப்ரூர் நன்மையாக்கப்பட்ட ஹஜ் அந்த ஹஜ்ஜுவிலே பாவமே இல்லை. அலட்சியம் இல்லை. மறதி இல்லை. குற்றமில்லை. அல்லாஹுடைய சட்டங்கள் மீறப்படவில்லை. அந்த ஹஜ்ஜுக்கு அல்லாஹ்விடத்திலே கூலி சொர்க்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1773.
எவ்வளவு உயர்ந்த மகத்தான நற்செய்தி யோசித்துப் பாருங்கள்! இந்த உலகத்தில் ஒருவன் வாழ்ந்து இறக்கும்போது அவன் சொர்க்கவாசியாக முடிவு செய்யப்பட்ட நிலையில் இறக்கவில்லை என்றால் இந்த உலகத்தில் அவன் வாழ்ந்து சம்பாதித்து அனுபவித்து சொத்துக்களை சேகரித்து என்ன பலன்?
எல்லாம் இங்கே விட்டுவிட்டு நாம் செல்லக்கூடியவை. அந்த சொர்க்கம் கிடைக்காமல் ஒருவர் இறந்து விட்டால் அவனை விட பெரிய துர்பாக்கியவான் யாருமில்லை.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
யார் ஹஜ் செய்வாரோ கெட்டப் பேச்சுகளை பேசவில்லையோ இச்சைகளான செயல்களை செய்யவில்லையோ தர்க்கம் செய்யவில்லையோ அத்தகையவர் திரும்ப வரும்போது அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் எப்படி (குற்றமற்றவராக) இருப்பாரோ அப்படி திரும்ப வருவார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1521,1819.
சகோதரர்களே! ஹஜ் என்பது ஒரு பேன்சியான சுற்றுலா அல்ல. ஹஜ் என்பது ஒரு ஆடம்பரமான உல்லாச பயணம் அல்ல. ஹஜ் என்பது ஒரு விளையாட்டு அல்ல. ஹஜ் என்பது அல்லாஹ் பொருந்திக் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூணாக ஆக்கி இருக்கின்ற மிக மகத்தான வணக்கம் என்பதை புரிய வேண்டும்.
இந்த வணக்கத்திலே தொழுகை இருக்கிறது. இந்த வணக்கத்திலே குர்பானி இருக்கிறது. இந்த வணக்கத்திலே நோன்பு இருக்கிறது. ஓர் அடியான் அல்லாஹ்விற்காக தன்னை எப்படி எல்லாம் சிரமப்படுத்தி கொள்கிறான், அல்லாஹ்விற்காக எல்லா வகையான இழப்புகளையும் சிரமங்களையும் அசௌகரிகங்களையும் எப்படி தாங்கிக் கொள்கிறான், ஏற்றுக் கொள்கிறான் என்பதை அல்லாஹ் வெளிப்படையாக சோதித்து அறிய விரும்பும் இபாதத் இது.
சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏன் நம்முடைய முன்னோர் அல்லாஹ்வுடைய தூதரிலிருந்து அதற்கு முன்னாடி நபிமார்களிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் சஹாபாக்களில் இருந்து தாபியின்களில் இருந்து உலகத்தை அல்லாஹ் படைத்த நாளிலிருந்து ஹஜ் செய்யப்படுகிறது. இது ஒரு சாதாரணமான விஷயமா?
وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ
இப்ராஹீமே! உலக மக்களை எல்லாம் ஹஜ்ஜுக்காக அழையுங்கள். (அல்குர்ஆன் : 22:27)
அல்லாஹு தஆலா அழைப்பதற்கு இப்ராஹிம் நபியை தேர்ந்தெடுத்தான். நபியை தவ்ஹீதுக்காக ஈமானுக்காக கட்டப்பட்ட அந்த இறை இல்லத்தை வந்து பார்க்குமாறு அங்கே தங்கி அவர்கள் இபாதத் செய்வதற்காக, அங்கே என்னை நினைவுகூர வேண்டும் என்பதற்காக நீங்கள் அவர்களை அழையுங்கள்.
இங்கு வரக்கூடியவர்களுக்கு என்ன கிடைக்கும்? அதையும் அல்லாஹ் சொல்கிறான்:
لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ
எண்ணற்ற பலன்களை அவர்கள் அடைவதற்கு அவர்களை அழையுங்கள். குர்பானி பிராணிகளை கொண்டு வந்தோ, அல்லது அங்கே வாங்கியோ அந்த குர்பானி பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதற்காக அவர்களை அழையுங்கள். அந்த புனித நாட்களில் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காக அவர்களை அழையுங்கள். (அல்குர்ஆன் : 22:28)
அல்லாஹ் மன்னிக்க வேண்டும்! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்ற சிலரைத் தவிர, பலருடைய நிலைமை என்னவென்றால் அல்லாஹு தஆலா தன்னை நினைவு கூர்வதற்காக, ஓங்கி உயர்ந்து உரத்த குரலில் சத்தமாக திக்ரு செய்வதற்காக மினாவிலே அரஃபாவிலே முஸ்தலிஃபாவிலே தங்க சொல்கிறான்; அல்லாஹ்விடத்தில் அழுது பிரலாபித்து மன்றாடி துஆ கேட்பதற்காக அங்கே அடியார்களை அல்லாஹுத்தஆலா அழைக்கிறான்.
ஆனால், இங்கும் அங்குமாக சுற்றுவது, பல ஊர்களிலிருந்து வந்தவர்களை சந்திக்க செல்வது. பிறகு தங்களுக்கு மத்தியிலே உரையாட ஆரம்பிப்பது. இப்படியாக ஹாஜிகளுடைய தவறுகளை பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் என்பது இதுவல்ல. எந்த ஹஜ்ஜிலே அல்லாஹ் நினைவு கூரப்படுகிறானோ அது ஹஜ். எங்கே அல்லாஹ்வுடைய தக்வா மேலோங்குகிறதோ அது அல்லாஹ்விடத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்.
அல்லாஹு தஆலா இந்த ஹஜ்ஜுக்காக வாருங்கள் என்று சொல்லும் பொழுது உங்களுடைய செலவுகளை நீங்கள் எடுத்து வாருங்கள். யாசகம் கேட்காதீர்கள்.
وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى
நீங்கள் எடுத்து வர வேண்டிய கட்டு சாதங்களில் மிகச்சிறந்தது உங்களோடு இறையச்சத்தை எடுத்து வாருங்கள் என்று அல்லாஹுத்தஆலா நினைவூட்டுகிறான். (அல்குர்ஆன் : 2:197)
இன்று நாம் ஹஜ் உடைய நோக்கத்தை புரிய வேண்டும். ஹஜ் என்பது ஈமானுக்காக. ஹஜ் என்பது இஸ்லாமுக்காக. ஹஜ் என்பது இக்லாஸுக்காக. நம்முடைய ஈமான் அதிகரிக்க வேண்டும் ஹஜ்ஜை கொண்டு. நம்முடைய இக்லாஸ் நம்முடைய மனத்தூய்மை அதிகரிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பயம் அதிகரிக்க வேண்டும்.
ஏதோ நான் புறப்பட்டு விட்டேன் வந்தேன் சென்றேன் என்று தங்கி விட்டு வருவதற்காக அல்ல. ஒவ்வொன்றும் ஒரு குறிக்கோளுக்காக ஒரு லட்சியத்திற்காக அங்கே நமக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஜம்ராத்திற்கு செல்கிறோமே, அரஃபாவிற்கு செல்கிறோமே, மினாவிலே தங்குகிறோமே, முஸ்தலிஃபாவிலே தங்குகிறோமே, இதெல்லாம் எதற்காக? அல்லாஹ்வின் தூதரே!
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ
அல்லாஹ்வுடைய நினைவை நிலை நிறுத்துவதற்காக.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 902. தரம் : இமாம் திர்மிதி இந்த ஹதீஸை ஹஸன் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த உள்ளங்கள் அல்லாஹ்வுடைய நினைவை தனக்குள் பரிபூரணமாக கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய நினைவால் இந்த உள்ளங்கள் பசுமையாக இருக்க வேண்டும். அதைக் கொண்டுதான் ஈமான் அதிகரிக்கும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
அல்லாஹ்வுடைய திக்ரை கொண்டு உள்ளங்கள் அமைதி அடைய வேண்டும். (அல்குர்ஆன் 13:28)
யார் எந்த அளவு அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளை பண்புகளை புரிந்தவர்களாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்களோ அவர்களுடைய உள்ளம் அந்தளவு நிம்மதி பெறுகிறது.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நமக்கு அழைப்பு கொடுக்கின்றானே, அதற்காக இடத்தை காலத்தைத் தேர்ந்தெடுத்தானே, நம்முடைய செல்வத்தை அதற்காக செலவழிக்க சொல்கிறானே, சிரமங்களை அதற்காக தாங்கிக் கொள்ள சொல்கிறானே, தூரமான இடங்களில் இருந்து வாருங்கள் எனது வீட்டை நோக்கி; அங்கே தங்குங்கள் என்று அல்லாஹ் அழைக்கிறானே.
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ
இந்த ஹஜ்ஜின் மூலமாக ஒவ்வொரு அடியானின் உள்ளத்திலும் ஹுலூஸ் -நான் கலப்பற்ற முறையில் அல்லாஹ்விற்காக, அதற்கு பிறகு தான் எனது மனைவி மக்கள் பெற்றோர் குடும்பம் எல்லாம். நான் அல்லாஹ்வுடைய அடிமை அல்லாஹுவிற்காக பிறகு என்னுடைய வணக்க வழிபாடுகள் எல்லாம். அல்லாஹ்விற்காக.
ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக நீங்கள் முழுமைப்படுத்துங்கள். அல்லாஹ்விற்காக ரப்புக்காக வாருங்கள். (அல்குர்ஆன் 2:196)
யாருடைய நிர்பந்தத்தாலும் அல்ல. யாருடைய வலுக்கட்டாயத்திற்காகவும் அல்ல. அல்லது எல்லோரும் சொல்கிறார்களே, செல்லாமல் இருந்தால் என்ன ஆவது? அதற்காக அல்ல. வேறு பெயர் புகழுக்காக அல்ல.
இக்லாஸ் -அல்லாஹ்விற்காக. அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அந்த ஹாஜிகளிடமிருந்து வாக்குகளை வாங்குகிறான். நீங்கள் தொழுகையை அல்லாஹ் அக்பர் என்று ஆரம்பிப்போம். அதற்குப் பிறகு குர்ஆன் ஓதுவது மற்ற மற்ற திக்ருகள் என்பதாக அங்கே மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால், அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா ஹஜ்ஜிலே எப்படி அமைத்திருக்கிறான். தல்பியாவை கொண்டு ஆரம்பித்த ஹஜ், அந்த தல்பியாவை தான் ஹஜ்ஜை முடிகின்ற வரை நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் ஹஜ்.
ஹாஜிகளுக்கு புரியவில்லை. இரண்டு முறை மூன்று முறை சொல்லிவிட்டு நான்கு முறை சொல்லிவிட்டு அவ்வளவுதான் பிறகு பேச்சு. அப்படியே பொழுதுபோக்குகள் அப்புறம் எல்லாம் வேடிக்கை. மற்றது.. மற்றது...
ஹஜ்ஜிலே சிறந்தது உரக்க அதிகம் தல்பியா சொல்லப்பட்ட ஹஜ். குர்பானி கொடுக்கப்பட்ட ஹஜ், தல்பியாவை கொண்டு அடியார்களுடைய உள்ளத்தை அல்லாஹு தஆலா சுத்தப்படுத்த விரும்புகிறான்.
ஒருவருடைய வீட்டுக்கு சென்றால் என்ன சொல்வீர்கள்? அவர் உங்களை வரவேற்பார். நீங்கள் அல்ஹம்து லில்லாஹ் சொல்வீர்கள். உங்களது வீட்டிற்கு வந்திருக்கிறேன், நீண்ட நாள் ஆசை வந்து விட்டேன் என்று சொல்வீர்கள்.
இந்த தல்பியாவிலே, நாம் மீக்காத்திலே ஆரம்பிக்கின்ற அந்த தல்பியாவை அல்லது பிறை எட்டிலே ஆரம்பிக்கிற அந்த தல்பியாவை பிறை 8 பகல் பிறகு அரஃபாவிலே பிறகு முஸ்தலிஃபா உடைய இரவிலே பிறகு ஜமராத்திலே வந்து கல் எரிகின்ற வரை,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك
ஒரு பைத்தியம் பிடித்தது போன்று, அல்லாஹ்வே நான் வந்து விட்டேன். அல்லாஹ்வே நான் வந்து விட்டேன். அல்லாஹ்வே உன்னிடம் வந்து விட்டேன். அல்லாஹ்வே உன்னிடம் வந்து விட்டேன். உனக்கு இணை இல்லை துணை இல்லை. எனக்கு கொடுத்த எல்லா நிஃமத்துகளும் உனக்கு சொந்தமானது. ஆட்சி அதிகாரம் உனக்கு சொந்தமானது. உனக்கு இணையே இல்லை. அல்லாஹ் உன்னிடம் வந்து விட்டேன். அல்லாஹ் உன்னிடம் வந்து விட்டேன். அல்லாஹ் உன்னிடம் வந்து விட்டேன். அல்லாஹ் உன்னிடம் வந்து விட்டேன்.
அந்த ஒரு தல்பியாவிலே எத்தனை முறை லப்பைக் என்று யோசித்துப் பாருங்கள்! அதை எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அல்லாஹ் என்ன விரும்புகிறான், இந்த அடியானுடைய உள்ளம் துடிக்கிறதா? என்னுடைய அன்பு என்னுடைய ஈமான் அளவு அவனுடைய உள்ளத்திலே அதிகரிக்கிறதா என அல்லாஹ் அறிய விரும்புகிறான்
இதற்காகத்தானே இத்தகைய ஹஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வுடைய தூதர் அழுதார்கள். தல்பியா என்பது சாதாரணமான ஒன்று அல்ல. அது போன்று தவாஃப் இருக்கிறது. சஃயி இருக்கிறது. மினாவிலே தங்குவது, அரஃபாவில் தங்குவது, முஸ்தலிஃபிவிலே தங்குவது, தல்பியா ஓத வேண்டும். கை ஏந்தி அல்லாஹ்விடத்திலே மன்றாட வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவாஃபை ஆரம்பித்தார்கள் என்றால் முடிக்கின்ற வரை திக்ரும் துஆவும் தான். முடிக்கின்ற வரை அல்லாஹ் அக்பர் என்று ஆரம்பித்து, அந்த தவாஃபை முடிக்கின்ற வரை அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டே இருப்பார்கள். துஆ கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பிறகு ஜம்ஜம் நீர் குடிக்க வந்தால் அங்கே துஆ, பிறகு அவர்கள் ஸஃபா நோக்கி ஓடினால் லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.
பிறகு ஸஃபாவிலே நின்று கொண்டு,
لا اله الا الله والله اكبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده وصدق وعده ونصر عبده وهزم الأحزاب وحده
பிறகு மர்வாவை நோக்கி இறங்கி ஓடுகின்றார்கள். அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக திக்ர் செய்தவர்களாக அந்த சஃபாவிலே நின்று கொண்டு மர்வாவிலே நின்று கொண்டு நாம் அறிவிப்பிலே பார்க்கிறோம் பெரிய பெரிய சூராக்களின் அளவு எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நேரம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2872.
யோசித்துப் பாருங்கள்! இந்த ஹஜ் சாதாரணமான வணக்கம் அல்ல. ஈமானை கொடுக்கக் கூடிய வணக்கம். இக்லாஸை கொடுக்கக் கூடிய வணக்கம். ஒவ்வொரு வணக்கத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எல்லா வணக்கங்களின் நோக்கங்களும் தனக்குள் கொண்டிருக்க கூடிய வணக்கம் தான் இந்த ஹஜ் வணக்கம்.
அடியானுடைய தர்பியத்திற்கு தன்னை அல்லாஹ்விற்காக ஒரு பரிசுத்தமான அடிமையாக ஆக்குவதற்கு உரிய பயணம் தான் இந்த ஹஜ் பயணம். ஈமான் அதிகரிக்க வேண்டும் பயணத்தினுடைய ஒவ்வொரு கட்டங்களிலும் தல்பியாவை ஆரம்பிப்பதற்கு முன்னால் இஹ்ராம் உடைய நிலை, இதிலே அடியான் அல்லாஹ்வை நினைத்துப் பார்க்க வேண்டும். தன்னுடைய மரணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகத்தை விட்டு பிரிகிற நேரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
தான் சம்பாதித்தது எதுவுமே தனக்கு சொந்தமானது அல்ல, கஃபன் துணியை தவிர என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் நாடினால் அவன் கொடுப்பான், அவன் எடுப்பான், எல்லாம் நடக்கலாம் என்ற மறுமை நினைவு, இஹ்ராம் உடைய நேரம் இந்த உலகம் நிரந்தரமற்றது நிலையற்றது என்பதை நினைவுபடுத்த வேண்டிய நேரம்.
அன்பான சகோதரர்களே! ஈமானுக்காக செய்யப்படுகிற பயணம் ஹஜ் உடைய பயணம். அது ஒரு விளையாட்டான பயணம் அல்ல. அடியானுக்கு பயம் ஏற்பட வேண்டும். அல்லாஹ்வுடைய வீடு சாதாரணமான ஒன்றா? நம்முடைய முன்னோர்கள் அந்த கஅபாவை பார்க்கும் பொழுது செய்கின்ற துஆக்களிலே ஒன்று, யா அல்லாஹ் இந்த வீட்டுக்கு மேலும் எனது உள்ளத்திலே கண்ணியத்தை ஏற்படுத்து! மேலும் மகத்துவத்தை ஏற்படுத்து!
எந்த வீட்டை அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா உலகத்தின் முதல் நாளிலிருந்து இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறானோ தன்னுடைய நபிமார்களை அனுப்பி அந்த வீட்டை அல்லாஹு தஆலா உயர்த்தி கட்டினானோ
وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
உலகத்திலேயே ஒரு வீடு கட்டப்படுவதை பற்றி குர்ஆனிலே சொல்லப்படுகிறது என்றால் அல்லாஹ்வுடைய வீடு மக்காவில் இருக்கக்கூடிய இறை ஆலயம் கஅபத்துல்லாஹ்தான் அது.
மாபெரும் இரண்டு நபிமார்களை தேர்ந்தெடுத்து அந்த வேலையை செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அவ்வளவு துஆவோடு அந்த இப்ராஹிம் நபி ஒவ்வொரு கல்லையும் அங்கே உயர்த்துகிறார்கள்.
பிறகு அல்லாஹ்விடத்தில் யா அல்லாஹ்! கட்டி விட்டோம்; எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்! எங்களை மன்னித்துவிடு! என்று துஆ செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 2:127)
இந்த ஊரை சுற்றி இருப்பவர்களுக்காக நீ உணவளி என்று துஆ செய்கிறார்கள். அவர்கள் மீது மக்களுடைய நேசத்தை ஏற்படுத்த துஆ செய்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: அல்லாஹ்வே! இப்ராஹீம் மக்காவுக்காக துஆ செய்தார். நீ அதை புனிதம் ஆக்கினாய். நான் மதினாவுக்காக துஆ செய்கிறேன். மதினாவை புனிதமாக்கு என்று.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2129.
அத்தகைய ஒரு புனிதமான ஊருக்கு செல்கிறோம். நம்முடைய ஈமானை உறுதிப்படுத்துவதற்காக. நம்முடைய ஈமானை சுத்தப்படுத்துவதற்காக. அல்லாஹ்வுடைய தொடர்பை அதிகப்படுத்துவதற்காக. இக்லாஸுக்காக ஈமானுக்காக தக்வாவுக்காக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக. நம்முடைய மறுமை வெற்றிக்காக செல்கிறோமே தவிர, உலகத்துடைய எந்த நோக்கமும் இருக்கக் கூடாது.
ஆனால், மிக வருத்தமான செய்தி என்னவென்றால், சொல்வதற்கு நிறைய இருக்கிறது, சிலர் கேட்பார்கள் என்னிடத்திலே; ரிட்டன் எப்பொழுது? என்று.
என்னடா கேள்வி இது? அல்லாஹ்வுடைய வீட்டுக்கு செல்லும் பொழுது துஆ செய்து நல்ல முறையில் இபாதத் செய்யுங்கள்; தக்வாவை சம்பாதியுங்கள் என்று சொல்லி வழி அனுப்ப வருகிறவர்கள் ரிட்டன் எப்ப? அப்படின்னு. வேண்டாத இடத்திற்கு விருப்பமில்லாமல் செல்பவர்கள் தானே ரிட்டன் எதிர்பார்ப்பார்கள்.
நம்முடைய உலகத்தை குடும்பத்தை சொத்தை சுகத்தை வாழ்க்கையில் மறந்து அல்லாஹ்வின் இன்பத்திலே ஈமானிலே அந்த ஈமானிய இன்பத்தின் அல்லாஹ்வின் அன்பின் கடலிலே மூழ்குவதற்காக செல்லும் பொழுது ஃபிளைட் எப்ப போய் இறங்கும்? அங்கே ஏர்போர்ட்ல வைஃபை கிடைக்குமா? ஹோட்டல்ல வைஃபை இருக்குமா? சிம் கார்டு கிடைக்குமா?
என்கிட்ட கேக்குறவங்க கிட்ட சொல்லுவேன்; நாங்க இறங்கலைனா உங்களுக்கு செய்தி வந்துரும். உலகம் ஃபுல்லா செய்தி போய்விடும். செய்தி வரலைனா நாங்க பாதுகாப்பா இருக்கிறோம் என்று அர்த்தம். முடிஞ்சிடுச்சு அவ்வளவுதான்.
செய்தி வரலைனா நாங்க எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களை விட்டுடுங்க. எந்த ரப்பிடத்திலே சென்றோமோ திருப்பி இழுக்காதீர்கள். எங்களை அனுப்பி விட்டீர்கள் அல்லவா? அல்லாஹ் எங்களை உங்களிடத்திலே திருப்பி அனுப்புகின்ற வரை நீங்கள் எங்களை அல்லாஹ்வுடைய அமானிதத்தில் விட்டு விட்டீர்கள். பொறுமையாக இருங்கள். துஆ செய்யுங்கள் எங்களுக்காக. நீங்களும் அல்லாஹ்வை நினையுங்கள், நாங்களும் அல்லாஹ்வை நினைக்கிறோம்.
ஏன் செல்கிறோம்? என்ன நோக்கத்திற்காக அங்கே செல்கிறோம்? இத்தனை லட்சங்களை செலவு செய்து அல்லாஹ்விடத்தில் பேசுவதற்காக ரப்பிடத்திலே உள்ளங்களை பறி கொடுப்பதற்காக குர்ஆன் ஓதுவதற்காக துஆ செய்வதற்காக அந்த இடங்களின் புனிதங்களை உணர்ந்து நம்முடைய அன்பை அந்த நபிமார்களுடைய நினைவுகளை நினைத்து அந்த வரலாறுகளை நினைத்து அதற்காக அந்த நாள்களை எல்லாம் அந்த காலங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து நம்முடைய ஈமானிய உணர்வுகளை அந்த காலங்களுக்கு கொண்டு செல்வதற்காகவா? திரும்பத் திரும்ப இங்கேயே இந்த ஆசைகளில் சுற்றி கொண்டிருப்பதற்காகவா?
இன்னும் பல விதமான குழப்பங்களை எல்லாம் நீங்கள் அங்கே பார்ப்பீர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அப்படிப்பட்ட பயணம் அது ஹஜ் அல்ல, அது ஒரு சுற்றுலா பயணம். கொஞ்சம் வணக்கத்தை சேர்த்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். மற்றபடி அது ஒரு ஹஜ் ஆக ஆகாது.
அரஃபாவிலே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றால் தல்பியாவின் நாளிலிருந்து தயாராகி அரஃபாவுடைய அந்த மாலையிலே நீங்கள் கை தூக்கும்போது தான் அது பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக ஆகும்.
சகோதரர்களே! அல்லாஹு தஆலாவிடத்திலே நாம் தவ்பா செய்ய வேண்டும். ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்பது வசதியால் அல்ல. நம்முடைய ஈமானிய உணர்வுகளால் செல்ல வேண்டும். தக்வாவை எடுத்துச் செல்ல வேண்டும். ஹஜ்ஜை படித்துச் செல்ல வேண்டும். ஹஜ்ஜின் படிப்பினைகளை அறிந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் இதை நான் செய்தேனா? சரியாக செய்தேனா? அதைப்பற்றிய கவலை மிகைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு வணக்கத்தையும் செய்து முடித்தவுடன் இந்த வணக்கத்தைக் கொண்டு என்னுடைய ஈமான் உயர்ந்ததா? தக்வா உயர்ந்ததா? என்னுடைய உள்ளத்திலே அல்லாஹ்வுடைய அன்பு வந்ததா? நான் அல்லாஹ்வை பயந்தேனா? மறுமையின் நினைவு வந்ததா? என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
நாங்க ஹஜ்ஜை முடிச்சிட்டோம். தவாஃபை முடிச்சிட்டோம். மொட்டைய போட்டுட்டோம். இந்த பாருங்க செல்போனில் வீடியோ. அப்படிப்பட்ட ஒரு பயணமாக நமது பயணம் இருக்க வேண்டாம்.
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் தக்வாவுடைய ஹஜ்ஜை இக்லாஸுடைய ஹஜ்ஜை ஈமானுடைய ஹஜ்ஜை நசீபாக்குவானாக! அல்லாஹ்வுடைய திருமுகத்திற்காகவே செய்யப்பட்டு, அல்லாஹ்வுடைய அன்பிற்காகவே செய்யப்பட்டு, மறுமையின் சொர்க்கத்திற்காகவே செய்யப்பட்டு, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் அல்லாஹ்வுடைய வீட்டுக்கு வரக்கூடிய ஒவ்வொரு ஹாஜிக்கும் நசீபாக்குவானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/