HOME      Khutba      வெற்றிகரமான வாழ்க்கை!! | Tamil Bayan - 893   
 

வெற்றிகரமான வாழ்க்கை!! | Tamil Bayan - 893

           

வெற்றிகரமான வாழ்க்கை!! | Tamil Bayan - 893


வெற்றிகரமான வாழ்க்கை!!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வெற்றிகரமான வாழ்க்கை!!
 
வரிசை : 893
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05-07-2024 | 29-12-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பையும் இம்மை மறுமை வெற்றியையும் மறுமையின் சொர்க்கத்தின் வீட்டையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மையும் நமது பெற்றோரையும் மூமின்கள் முஸ்லிம்கள் அனைவரையும் மன்னிப்பானாக! அல்லாஹ்வை பயந்து கொண்டு இம்மையின் வாழ்க்கையை மறுமைக்காக யார் அமைத்துக் கொண்டார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! நாளுக்கு நாள் நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள், நமக்குத் தெரிந்த நண்பர்களின் மரணங்கள், நமக்குத் தெரிந்த தோழர்களின் மரணங்கள், நம்முடைய உறவுகளின் மரணங்கள் இப்படியாக நம்முடைய வயதை விட குறைவானவர்கள் அவர்களின் மரண செய்திகளை எல்லாம் நாம் கேட்கும்போது நாமெல்லாம் ஒரு போனஸில் இருந்து கொண்டிருக்கிறோம்.
 
அதிகப்படியாக நமக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் எண்ண தோணுகிறது. நம்மை விட ஆரோக்கியமாக இருந்தவர்கள், நம்மை விட எல்லா வகையிலும் திடகாத்திரமாக இருந்தவர்கள், திடீரென்று அவர்களின் மரண செய்தியை ஓர் இரவிலே கேட்கிறோம்; திடீரென பகலிலே கேட்கிறோம். 
 
கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்! இந்த உலக வாழ்க்கை எவ்வளவு ஒரு அற்பமான வாழ்க்கை! எத்தகைய சில நொடிகளிலே அந்த வாழ்க்கை முடிந்து விடுகிறது. மனிதன் கண்ட கனவுகள், அவன் கட்டிய கோட்டைகள், அவன் வைத்திருந்த எதிர்பார்ப்புகள், அனைத்தும் அந்த மரணத்தோடு முடிந்து விடுகின்றன. 
 
அன்பான சகோதரர்களே! நம்முடைய மூதாதையர்களின் மரணத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்! நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக நமது பாட்டன் பூட்டன் நமது பாட்டிகள் முப்பாட்டிகள் அவர்களுடைய மரணத்தை பார்த்திருப்போம் அல்லது அவர்களுடைய மரணத்திற்குப் பிறகுதான் நாம் பிறந்திருப்போம். 
 
பிறகு நம்முடைய வாழ்க்கையிலே நம்மை பெற்றெடுத்த, பாசத்தோடு நம்மை வளர்த்த, நமக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த, நம்மை எல்லா வகையிலும் நமது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி, நமக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்த நம்முடைய பெற்றோர்களில் பலரை நாம் இழந்திருக்கலாம். 
 
இப்படியாக நமது குடும்பத்திலும் மரணத்தை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சகோதரர்களே! அந்த மரணத்தை நினைத்து மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக நாம் நம்முடைய இந்த உலக வாழ்க்கையை எடுத்துக்கொண்டோமா? அப்படி யார் எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் தான் மரணத்தைக் கொண்டு படிப்பினை பெற்றவர்கள். அவர்கள்தான் புத்திசாலிகள். 
 
இந்த உலக வாழ்க்கை எத்தனை நாளுக்கு? எத்தனை ஆண்டுகளுக்கு? எல்லாம் ஒரு கற்பனையாக முடிந்து விடுகின்றன. அல்குர்ஆனுடைய வசனங்களில் அதிகமான வசனங்கள் உதாரணங்களைக் கொண்டு விளக்கப்படுகிறது என்றால் அது இந்த அற்பமான உலக வாழ்க்கையை பற்றி தான். 
 
وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَيٰوةِ الدُّنْيَا 
 
நபியே, மக்களுக்கு நீங்கள் உலக வாழ்க்கையின் உதாரணத்தை சொல்லுங்கள்! (அல்குர்ஆன் : 18:45)
 
எத்தனை இடங்களில் அல்லாஹு தஆலா இந்த உலக வாழ்க்கையின் அற்பத்தன்மை நிலையற்ற தன்மை போலியான, பகட்டான, வேடிக்கையான, விளையாட்டான, , நிரந்தரமற்ற, ஏமாற்றக்கூடிய இந்த உலக வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொண்டே வருகிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் படிப்பினை பெறுகிறோமா? இல்லை, மறதியாளர்களின் ஆகியிருக்கிறோமா? என்பதுதான் நம்முடைய சுயபரிசோதனையாக இருக்க வேண்டும். 
 
நம்மில் பலருடைய நிலை என்ன? ஏதோ அல்ஹம்து லில்லாஹ் தொழுகைக்கு வந்து விட்டோம் அல்லது வருகிறோம். ஏதோ சில வணக்க வழிபாடுகள் நம்மோடு ஒட்டிக்கொண்டன அல்லது நாம் அதோடு ஒட்டிக் கொண்டிருக்கிறோம். 
 
இப்படித்தான் நம்முடைய வாழ்க்கை போகிறதே தவிர, வணக்கத்திற்காகவே, வழிபாட்டுக்காகவே இபாதத்துக்காகவே, அல்லாஹுவிற்காகவே வாழ்க்கையை மாற்றிக் கொண்டோமா? என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்விற்காக; என்னுடைய வாழ்க்கை வணங்குவதற்காக. 
 
நேற்றைய நாளை விட இன்றைய நாளில் நான் அதிகமாக அல்லாஹ்வை வணங்கினேன்; அல்லாஹ்வை திக்ரு செய்தேன்; தொழுகையில் நேற்றைய தினத்தை விட இன்று அதிகம் பேணுதலாக இருந்தேன்; நேற்றைய தினத்தை விட இன்று அதிகமாக குர்ஆன் ஓதினேன்; குர்ஆனை சிந்தித்தேன்; புரிந்தேன்; நேற்று நான் அல்லாஹ்விடத்திலே அழுததை விட இன்று அதிகமாக அழுதேன் என்று அல்லாஹ்வை நோக்கி விரைகிறோமா? அல்லாஹ்விடத்திலே நெருங்குகிறோமா? அல்லாஹுவிடத்தில் ஆசை கொள்கிறோமா? 
 
அவனிடத்தில் இருக்கக்கூடிய அந்த நிலையான இன்பம் மிகுந்த அந்த சொர்க்கத்தின் மீது ஆசையை அதிகரித்திருக்கிறோமா? அல்லாஹ்வுடைய அன்பால் அல்லாஹ்வுடைய அச்சத்தால் உள்ளம் நடுங்குகிறதா? மறுமையின் தேடல் அதிகமாக இருக்கிறதா? மரணத்தின் நினைவு காலையிலும் மாலையிலும் இரவிலும் பகலிலும் நமக்கு வந்து போகிறதா? அப்படி வரும்போது உடனடியாக தவ்பாவை புதுப்பித்து கொண்டோமா? ஈமானை புதுப்பித்துக் கொண்டோமா? எத்தனை அடியார்களின் உரிமைகள் நம் மீது இருக்கின்றனவே? எத்தனை பேரிடத்திலே கடன் வாங்கி இருக்கிறோம்? எத்தனை பேரிடத்தில் ஒப்பந்தம் செய்து மீறி இருக்கிறோம்? வாக்குகள் கொடுத்து நிறைவேற்றாமல் இருக்கிறோம். 
 
திடீரென மரணம் வந்தால் என் நிலை என்ன ஆக போகிறது? வசியத்தை எழுதி வைத்திருக்கிறோமா? உறவுகளுக்கு சேர வேண்டியவை, நண்பர்களுக்கு சேர வேண்டியவை, பங்காளிகளுக்கு சேர வேண்டியவை, இப்படியாக எத்தனை உரிமைகளை நம் மீது சுமந்து கொண்டு வாழ்கிறோம். நம்முடைய மரணத்திற்கு பின்னால் அந்த உரிமைகள் நமது உறவுகளால் வாரிசுகளால் மறுக்கப்பட்டால் நம்முடைய கப்ருடைய நிலை என்னவாகும்? யோசித்துப் பாருங்கள்! 
 
இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்து, மிக உயர்ந்த தரஜாவாகிய சித்தீக்குகளுக்கு அடுத்து ஒரு தரஜா மூமின்களிலே இருக்கிறது என்றால், அது ஷஹீத் உடைய தரஜா. அத்தனை இறைநேசர்களையும் ஒன்று சேர்த்தாலும் சரி, யார் பகலெல்லாம் நோன்பு வைத்தார்களோ இரவெல்லாம் வணங்கினார்களோ, மார்க்க கல்வியை கற்பதிலே கற்பிப்பதிலே ஹலாலான காரியங்களோடு ஹராமையும் விட்டு விலகி இப்படியாக வாழ்ந்த ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று சேர்த்தாலும் அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்ட ஒரு ஷஹீதுக்கு அவர்கள் சமமாக மாட்டார்கள். 
 
இத்தகைய ஷஹீதை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إلَّا الدَّيْنَ
 
ஷஹீதுகள் இறந்துவிட்டால் அவருடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும் கடனைத் தவிர. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1886.
 
எவ்வளவு கடன்களை சுமந்து கொண்டு வாழ்கிறோம்! ஏதாவது எழுதி வைத்திருக்கிறோமா! வசிய்யத் செய்து வைத்திருக்கிறோமா? எத்தனை நபர்களின் வாரிசுகள் கடனாளிகள் அவர்களது வீட்டை தேடிச் சென்றால் எங்களிடத்தில் கேட்டா கடனை கொடுத்தீர்கள்? எங்களை சாட்சி ஆக்கினீர்களா? எங்களுக்கு என்ன பொறுப்பு அதிலே? 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தின்படி ஒரு மையத் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய கஃபனுக்கான செலவுகள், அவருடைய கப்ரு குழி தோண்டுவதற்கான செலவு செய்யப்பட்டதற்கு பிறகு இரண்டாவதாக அவருடைய கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும். 
 
அதற்கு பிறகு அவருடைய வசியத்துகள் நிறைவேற்றப்பட வேண்டும். நான்காவதாகத்தான் அவருடைய வாரிசுகளுக்கு அந்த சொத்துக்கள் பங்கு வைக்கப்படும். 
 
இன்று, இஸ்லாமிய சமூகத்திற்கு மத்தியிலே அப்படியே தலைகீழாக இருக்கிறது. நாங்கள் பங்கு போட்டதற்குப் பிறகு மிச்சம் இருந்தால் பார்ப்போம்; ஏதாவது ஒதுங்கினால் பார்ப்போம் என்கின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
மறுமை நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த உலக வாழ்க்கையில் வெற்றி எதில் இருக்கிறது? நான் அல்லாஹ்வுடைய அடியானாக அடிமையாக அப்தாக அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்டேனா? அதை நாம் பார்க்க வேண்டும். 
 
படித்துப் பட்டம் வாங்கி விட்டால் என்ன இருக்கிறது? அது எந்த பட்டமாக இருக்கட்டும், ஆலிம் பட்டமாக இருக்கட்டும், முஃப்தி பட்டமாக இருக்கட்டும், காரி பட்டமாக இருக்கட்டும், எம்பிபிஎஸ் ஆக இருக்கட்டும், பிஏ எந்த பட்டமாக இருந்தாலும் சரி, எந்த தொழிலாக இருந்தாலும் சரி, நான் அல்லாஹ்வுடைய அப்தாக அல்லாஹ்வுடைய அடிமையாக ஆகிவிட்டேனா? 
 
யார் அடிமை? யாரை அல்லாஹ் அவனுடைய அடிமையாக ஏற்றுக் கொள்வான்? யார் தன்னுடைய ஆசையை விட தனது எஜமானுடைய ஆசையை நிறைவேற்றுகிறானோ, யார் தன்னுடைய எஜமானின் கட்டளையை நிறைவேற்றுகிறானோ, யார் தன்னுடைய எஜமானன் தடுத்த காரியங்களை விட்டு விலகிக் கொள்கிறானோ அவன் அல்லவா ஒரு உண்மையான அடிமையாக ஆக முடியும். அவனல்லவா ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிமையாக ஆக முடியும். 
 
நாம் படைப்பால் அல்லாஹ்வுடைய அடிமையாக இருக்கலாம். படைப்பால் நாம் அல்லாஹ்வுடைய அடிமை. காஃபிரும் அல்லாஹ்வுடைய அடிமை. ஆனால், ஒரு காஃபிரை அல்லாஹு தஆலா என்னுடைய அடியார் என்று சொல்வானா? நபிமார்களை அல்லாஹ் சொல்கிறான். ரசூல்மார்களை அல்லாஹ் சொல்கிறான் சில தன்மைகளை கூறி. 
 
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏
 
(அல்குர்ஆன் 25:63)
 
சில நல்லவர்களை கூறி, இவர்கள் என்னுடைய அடியார்கள் இவர்கள் அல்லாஹ்வின் அடியார்கள், இவர்கள் ரஹ்மானின் அடியார்கள் என்று அல்லாஹ் பெருமை பேசுகிறானே! அந்த அடியார்களில் ஒருவனாக நான் இருக்கிறேனா?
 
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏
 
அவர்கள் மீது பயமில்லை. அவர்கள் இந்த உலகத்தில் விட்டுவிட்டு வருவதைவிட கப்ரிலும் மறுமையிலும் மிகப்பெரிய சுகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள். எனவே அவர்கள் மீது எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்  10:62)
 
தனக்குப் பிறகு தனது பிள்ளைகளுக்கு என்ன ஆகும் என்பதை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்... ஏன் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் ? அவர்களுடைய குடும்பத்துடைய பொறுப்பை அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். நீங்கள் அவர்களிடத்தில் ஈமானை தக்வாவை கொடுக்காமல் சென்றால் நீங்கள் சேர்த்து வைத்த சொத்தை கொண்டு உங்களுடைய சந்ததிகள் நிம்மதியாக வாழ மாட்டார்கள். அடித்துக் கொள்வார்கள் அதற்காக சண்டை போட்டுக் கொள்வார்கள். அதற்காக பகைத்துக் கொள்வார்கள். 
 
பல ஜனாஸாக்களிலே கலந்து கொள்கிறோம். ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய பிள்ளை தான் ஜனாஸா தொழுகை வைக்க வேண்டும் என்று புதிய நவீன தவ்ஹீதிலே ஒரு சட்டம். குர்ஆனிலும் அப்படி சட்டம் இல்லை. ஹதீசிலும் அப்படி சட்டம் இல்லை. 
 
பொதுவாக எல்லா தொழுகைக்கு என்ன சட்டம் இருக்கிறதோ அந்த சட்டம் தான் இருக்கிறது. உங்களிடம் மார்க்கத்தை கற்றவர் குர்ஆனை அதிகம் கற்றவர் ஹதீஸை அதிகம் கற்றவர் தொழவைக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறதே தவிர, ஜனாஸா தொழுகை தந்தை இறந்து விட்டால் மகன் இறந்துவிட்டால் தந்தை தொழ வைக்க வேண்டும் என்று அல்லது உறவுகள் தான் அதிகாரம் உள்ளவர்கள் என்று குர்ஆனிலும் இல்லை ஹதீஸிலும் இல்லை. 
 
இதுவரை தேடிக் கொண்டிருக்கிறோம் கிடைக்கவில்லை. நவீன தவ்ஹீதில் சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால் கற்றுக் கொடுக்கட்டும். இன்று பிள்ளைகள் வருகிறார்கள் நான் தான் தொழ வைப்பேன். சரிப்பா. தொழ வைப்பா. அந்த இடத்தில் எதுக்கு பிரச்சனை? ஜனாஸா தொழ வைக்க வேண்டும். தொழுகை முறை. அல்ஹம்து சூரா ஓதுங்கள். ஸலவாத்து ஓத வேண்டும். ஓதுங்கள் கரெக்ட். அதன் பிறகு தமிழிலே துஆ கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கு பிறகு அவரவர் தமிழிலே துஆ கேட்டுக் கொள்ளுங்கள். பிறகு தக்பீர் சலாம் கொடுத்து விடுங்கள் முடிஞ்சு போச்சு. 
 
இந்த நிலையிலே சந்ததிகளை விட்டு செல்லக்கூடியவர்கள். ஒரு துஆ இரண்டு வரிகளுடைய ஒரு துஆ. 
 
اللَّهُمَّ اغفِر لحيِّنا وميِّتِنا وصغيرِنا وَكبيرِنا وذَكَرِنا وأنثانا وشاهدِنا وغائبِنا اللَّهُمَّ مَن أحييتَه منَّا فأحيِهِ علَى الإيمانِ ومَن تَوفَّيتَه مِنَّا فتوفَّهُ على الإسلامِ اللَّهُمَّ لا تحرِمنا أجرَه ولا تُضِلَّنا بعدَه
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3201.
 
இந்த இரு வரி துஆக்களை தனது பெற்றோருக்காக தனது உறவுக்காக மனனம் செய்து வைத்திருக்காதவனா தனது தந்தை என உரிமைகளை கொடுத்து விடப் போகிறான்! தனது தந்தையின் உறவுகளை சேர்த்துக் கொள்ளப் போகிறான்! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! வெற்றி எதிலே இருக்கிறது? நான் அல்லாஹ்வுடைய அடியானாக ஆகிவிட்டேனா? எப்படிப்பட்ட அடியான்? அல்லாஹ் என்னுடைய எஜமானன் நான் அவனை பொருந்தி கொண்டேன். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலையிலும் மாலையிலும் ஒரு துஆவை நாம் ஓத வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறார்கள். எவ்வளவு அழகான துஆ! 
 
ஆனால் நாமோ நமக்குத் தேவையானதை..அதிலும் அதுவும் துன்யாவுக்கு தேவையானதை மட்டும் அல்லாஹ்விடத்தில் கேட்பதில்தான் மும்முரமாக இருக்கிறோம். நமக்குத் தேவையானதில் கூட மறுமை இதைவிட நமக்கு அதிகம் தேவை என்பதை தெரிந்து இருந்தாலும் அந்த அக்கறையோடு மறுமைக்காக துஆ செய்தால் தானே அழுகை வரும். பயம் வரும். துஆ கேட்டு போனதற்கு பிறகு அமல்களில் ஏதாவது திருத்துவோம். சரி செய்வோம். 
 
எத்தனையோ துஆக்களை கேட்போம். சின்சியரா கேட்போம். எல்லாம் சுருக்கி பார்த்தால் கூட்டி கழித்து பெருக்கி வகுத்து பார்த்தால் அங்கே வந்து நிற்பது துன்யா தான். ஆகிரத் எங்கே ?. அதான் கேட்டோமே அதிலே இருக்கு. 
 
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
 
(அல்குர்ஆன் 2:201)
 
முடிஞ்சிடுச்சு. அல்லாஹ்வே நரகத்தின் தண்டனையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக!என்று சொல்லும்போது உள்ளம் நடுங்க வேண்டாமா? எத்தனை பாவங்களை செய்து அந்த நரகத்திற்கு தகுதியானவனாக இருந்து கொண்டு, அந்த நரகத்தின் தண்டனையிலிருந்து ரப்பே என்னை பாதுகாப்பாயாக என்று சொல்கிறேனே! நான் எந்த தகுதியோடு சொல்வேன்? 
 
யா அல்லாஹ், உன்னுடைய அருளால் என்னை பாதுகாப்பாயாக! உன்னுடைய கருணையால் என்னை பாதுகாத்து விடு! என்ற துடிப்பு இருந்தால்தானே அங்கே அழுகை வரும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுவை திருப்தி படுத்துவதற்காக சில துஆக்களை சொன்னார்கள். கவனிக்க வேண்டும். 
 
எப்போது நாம் எனது ரப்புடைய திருப்தி எனது ரப்புடைய விருப்பம் எங்கே? எதிலே என்று தேடுவோமோ, அதற்கு பின்னால் அலைவோமோ அப்போதுதான் நாம் அல்லாஹ்வுடைய அப்தாக அடிமையாக முடியும். அப்போதுதான் ஏதாவது மறுமைக்காக நாம் சேர்த்துக் கொள்ள முடியும். இந்த உலகத்தின் அற்ப தன்மையை புரிய முடியும். இந்த உலகத்தின் நிலையற்ற தன்மையை நாம் விளங்க முடியும்.
 
நமது ஆசைகளுக்கு பின்னால், நமது விருப்பங்களுக்கு பின்னால், எனக்குத் தேவை, எனக்கு ஆசை, எனக்கு பிடித்திருக்கிறது, என் மனைவி என் பிள்ளைகளுக்கு பிடித்திருக்கிறது, இப்படியே நாம் அலைந்து கொண்டிருந்தால் ஒன்றும் புரியாது. குர்ஆனும் புரியாது ஹதீஸும் புரியாது. ஆகிரத்தும் புரியாது. சொர்க்கத்தின் மதிப்பு தெரியாது. நரகத்தின் பயம் வராது. 
 
கொஞ்சம் அலைவோம்; கொஞ்சம் தேடுவோம்; கொஞ்சம் துடிப்போம்; அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக. என்னுடைய ரப்புடைய பொருத்தத்திற்காக. எனது ரப் ஒருவன் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் சொல்கிறான்: 
 
اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ‏
 
இறையச்சம் உள்ளவர்களோடு இஹ்ஸான் உள்ளவர்களோடு நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 16:128) 
 
 اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
 
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:153)
 
 فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
 
தக்வா உள்ளவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் : 3:76)
 
இதெல்லாம் நம்மிடத்திலே கொஞ்சமாவது வந்திருக்கிறதா? யோசிக்க வேண்டாமா? அல்லாஹ்வுடைய தூதர் ஒரு துஆவை கற்றுக் கொடுத்தார்கள். காலையில் மாலையிலும் சொல்லுங்கள். 
 
رَضيتُ باللَّهِ ربًّا، وبالإسلامِ دينًا، وبِمُحمَّدٍ رسولًا، وجَبت لَهُ الجنَّةُ
 
அல்லாஹ்வை நான் ரப்பாக இறைவனாகவும். இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும் திருப்தி கொண்டேன். 
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1529.
 
நமக்கு அல்லாஹ்வின் மீது திருப்தி வந்திருக்கிறதா? அமல்களை ஒரு பக்கம் எடுப்போம், ஒவ்வொரு அமலிலும் ஓட்டை. மொத்த அமலும் ஓட்டை. அல்லாஹ் மன்னித்து ஏற்றுக் கொண்டாலே தவிர. எந்த அமலுக்காவது மார்க் போட முடியுமா? என்று தெரியவில்லை. 
 
இது ஒரு பக்கம். இன்னும் ஒரு பக்கம், அல்லாஹ்வுடைய நிஃமத்திற்கு நன்றி செலுத்தினாயா? உனது கண்ணுக்கு விலை போட முடியுமா? உனது செவித்திறனுக்கு விலை போட முடியுமா? உனக்கு நான் கொடுத்திருக்கக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு விலை போட முடியுமா? என்று அல்லாஹ் கேள்வி கேட்டால் எத்தனை கோடிகள் கொட்டி கிடக்கின்றன! நமது உடலுக்குள்ளே? 
 
நன்றி செலுத்தினாயா? ஷுக்ர் இருந்ததா? சின்ன சோதனை வந்துவிட்டாலே விரக்தி அடைந்து விடுகிறோமே! அல்ஹம்துலில்லாஹ் என்று மனப்பூர்வமாக சொல்ல மனம் வரவில்லையே! அந்த சோதனைக்கு முன்பிருந்த தொழுகை அதற்குப் பின்னால் இருந்த தொழுகையில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. 
 
என்ன நீ நன்றியுள்ள அடியான்? ஷுக்ரும் இல்லை, சப்ருமில்லை. நன்றியும் இல்லை, பொறுமையும் இல்லை. ஏதோ சின்ன புள்ள அம்மா கிட்ட கோச்சுக்கிற மாதிரி,  விவரம் தெரியாத சின்ன புள்ள அத்தா அம்மாகிட்ட கோச்சிக்கிற மாதிரி, சாக்லேட் கொடுத்தா சிரிக்கும்; கொடுக்கலைன்னா அழுதுகிட்டு கோச்சிக்கிற மாதிரி, நீ ரப்புடைய உறவை ஆக்கிக் கொண்டாயே? 
 
சின்னப் பிள்ளை கிட்ட இருக்கக்கூடிய அறிவு ஒரு கால்நடையின் அறிவு. அதுக்கு நீங்கள் உணவு கொடுத்தால் உங்களை அது  சுற்றி சுற்றி வரும். அதை நீங்கள் சில காலம் கவனிக்கவில்லை என்றால் அது உங்களை கண்டுகொள்ளாமல் சென்று விடும். அதிலும் கூட நாய் அப்படி இல்லையாம். எத்தனையோ வருஷத்திற்கு முன்னாடி உணவு கொடுத்திருந்தால் கூட அவரைப் பார்த்து விட்டால் திரும்ப ஓடி வருமாம். அந்த ஒரு நாயினுடைய விசுவாசம் கூட நமக்கு இல்லையே! 
 
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நம்முடைய வருங்காலம் நிச்சயமற்றது. நம்முடைய கடந்த காலம் அதனுடைய ஏடுகள் மூடப்பட்டு விட்டன. மடிக்கப்பட்டு விட்டன. அதில் எவ்வளவு நன்மைகள் பதிவாகி இருக்கின்றன. அதில் எத்தனை பக்கங்கள் எனக்கு சொர்க்கத்திற்காக இருக்கின்றன? கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? 
 
இருக்கக்கூடிய இந்த நிலைதான் நமக்கு சொந்தமானது. அதிலே நாம் கவனிக்க வேண்டியது அல்லாஹ்வுடைய அடியானாக அப்தாக இருக்கிறேனா? அல்லாஹ்வுக்கு விருப்பமானதை நிறைவேற்றுகிறேனா? அல்லாஹ் நீ என்னை பொருந்திக் கொண்டாயா? எந்த நிலையிலும் யாஅல்லாஹ் உன்னுடைய பொருத்தத்தை தவிர எதுவும் தேவையில்லை. நீ பொருந்திக் கொண்டால் என் காரியமெல்லாம் சீராகிவிடும். 
 
உலகமே எனக்கு எதிராக நின்றாலும் எனது உடலில் பொருளில் எத்தனை குழப்பங்கள் சோதனைகள் ஏற்பட்டாலும் அல்லாஹ் பாதுகாப்பான் அல்லாஹ்விடத்திலே ஆஃபியத்தை கேட்க வேண்டும். நீ என் மீது கோபமாக இல்லை என்றால், நீ என் மீது அதிருப்தியாக இல்லை என்றால். எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சோதனைகள் ஏற்பட்டாலும் எல்லா சோதனைகளும் எனக்கு இலகுவாகிவிடும். ரப்பே உன்னுடைய பொருத்தம் எனக்கு போதுமானது. நான் உன்னுடைய ஹக்கை உன்னால்  கடமையாக்கபட்டதை நிறைவேற்றினேனா? உனது கட்டளையை நிறைவேற்றினேனா? நீ தடுத்ததில் இருந்து விலகிக் கொண்டேனா? படைப்புகள் விருப்பப்பட்டாலும் சரி, படைப்புகள் ஏற்றுக் கொண்டாலும் சரி, படைப்புகள் நிராகரித்தாலும் சரி, என் மீது அதிருப்தி கொண்டாலும் சரி, எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ரப்பே நீ போதுமானவன் என்ற நிலைக்கு நாம் வந்தோமா? 
 
இன்று, மனைவியின் விருப்பத்திற்காக, பிள்ளைகளின் விருப்பத்திற்காக, நண்பர்களின் விருப்பத்திற்காக இன்னும் தோழர்களின் விருப்பத்திற்காக, ஏன் அறிமுகமானவர்களின் விருப்பத்திற்காகவெல்லாம் அல்லாஹ்வின் விருப்பத்தை விட்டுக் கொடுக்கக்கூடிய, அல்லாஹ் விரும்பாததை செய்யக்கூடிய நிலையில் தானே நாம் ஒரு அடிமையாக இருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒவ்வொரு நாளும் நமக்கு எண்ணப்படுகிறது. நேற்று நம்முடைய நண்பருக்கு வந்த மலக்குல் மவுத் நமக்கும் வருவார்; நம்முடைய கதவையும் தட்டுவார்; நம்முடைய ஆரோக்கியம் நம்மை ஏமாற்றிவிட வேண்டாம். நம்முடைய சுகமான உடல் நம்மை ஏமாற்றிவிட வேண்டாம். 
 
அல்லாஹ்விடத்திலே முடிவு செய்யப்பட்டு விட்டது. யார் மரணத்திற்கு பிறகு இந்த வாழ்க்கைக்காக அல்லாஹ்விற்காக வாழ்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். அல்லாஹுவை திருப்தி படுத்துவதிலே யார் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அமைத்துக் கொண்டார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்ற அல்லாஹ்வுடைய அடிமை. 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா என்னையும் உங்களையும் ஏமாற்றத்தை விட்டும், குழப்பங்களை விட்டும், அல்லாஹ் பொருந்தி கொண்ட யார் நிரந்தரமான வெற்றியாளர்கள் சொர்க்கவாசிகள் என்று முடிவு செய்தானோ அந்த நல்லோரில் ஆக்கி அருள்வானாக! 
 
இஸ்லாமை விட்டு, ஈமானை விட்டு, இஹ்லாசை விட்டு தடம் புரளுவதில் இருந்து அல்லாஹு தஆலா என்னை உங்களையும் பாதுகாப்பானாக! நம்முடைய ஈமானை உறுதிப்படுத்துவானாக! இக்லாசை அதிகப்படுத்துவானாக! அல்லாஹ் பொருந்திக்கொள்ளக்கூடிய நல்ல அமல்களிலே நம்முடைய கவனங்களை ஆசைகளை அல்லாஹு தஆலா திருப்பி வைப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/