முஹர்ரம் மாதத்தின் புனிதம் பேணுவோம்! | Tamil Bayan - 894
முஹர்ரம் மாதத்தின் புனிதம் பேணுவோம்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஹர்ரம் மாதத்தின் புனிதம் பேணுவோம்!
வரிசை : 894
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12 -07- 2024 | 06-01-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவருடைய மன்னிப்பையும் அருளையும் சொர்க்கத்தையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய அமல்களை அவனுடைய திருமுகத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்ற பரிசுத்தமான அமல்களாக ஆக்கி வைப்பானாக! பாவங்களை விட்டு அல்லாஹு தஆலா நம்மை தூரமாக்குவானாக! பாவங்களிலிருந்து அல்லாஹு தஆலா நம்மை சுத்தப்படுத்துவானாக! மன்னித்து அருள்வானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனின் அடியார்கள் மீது அவன் செய்திருக்கக் கூடிய மாபெரும் அருளுடைய வெளிப்பாடுதான் அல்லாஹு தஆலா சில காலங்களை நமக்கு கொடுத்திருப்பது.
அது என்ன காலங்கள்? அமல்களை அதிகமாக செய்து கொள்வதற்காக, அல்லாஹ்வை திருப்தி படுத்துவதற்காக, நம்முடைய மறுமை வாழ்க்கையை நாம் செழிப்பாக்கி கொள்வதற்காக.
அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த முழு உலக வாழ்க்கையே மறுமைக்காக தான் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, அதே நேரத்தில் அதிலே சில விசேஷமான காலங்களை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறான்.
எதற்காக? அல்லாஹ்வை அதிகம் அதிகம் நாம் நினைவு கூற வேண்டும் என்பதற்காக. அல்லாஹ்வை அதிகம் அதிகம் நாம் வணங்க வேண்டும் என்பதற்காக. யார் மறுமையின் பாதையிலே பயணிக்கின்றார்களோ, யார் ஆகிரத்திற்காக தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ, யாருடைய தேடல் சொர்க்கமாக இருக்குமோ, யாருடைய தேடல் அல்லாஹ்வுடைய பொருத்தமாக இருக்குமோ, அவர்களுக்குத்தான் இந்த காலங்கள் எல்லாம் ஒரு பொன்னான காலங்களாக, பாக்கியமிக்க காலங்களாக நன்மைகளை சேகரித்துக் கொள்ளக்கூடிய காலங்களாக தெரியவரும்; புரியவரும்.
யாருடைய சிந்தனையில் உலகம் மட்டும் நிரம்பி இருக்கிறதோ அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. அவர்களுக்கு அல்லாஹ்வுடைய புனிதங்களும் புரியாது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் வணக்க வழிபாடுகள் புரியாது. அவர்களுக்கு நன்மையைப் பற்றிய எந்த அக்கறையும் இருக்காது.
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ (37) وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ (38) ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ (39) وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ (40) تَرْهَقُهَا قَتَرَةٌ (41) أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
கருத்து : அந்த நாளில் எல்லோரும் விரண்டு ஓடத்தான் பார்ப்பார்கள். தகப்பனை பார்த்து மகன் ஓடுவான். மகனை பார்த்து தகப்பன் ஓடுவார். கணவனை பார்த்து மனைவி ஓடுவாள். மனைவியை பார்த்து கணவன் ஓடுவான். பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து, சகோதரன் சகோதரனிடமிருந்து இப்படி வெருண்டு ஓடக்கூடிய அந்த மறுமை நாளில் சில முகங்கள் சிரித்துக்கொண்டிருக்கும். சந்தோஷமாக இருக்கும். அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய நற்செய்திகளை பெற்றுக் கொண்டிருக்கும். அப்படியே அல்லாஹு தஆலா அந்த முகங்களின் மீது போட்ட ஒளியினால் அப்படியே மின்னிக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 80 : 34-42)
யார் அவர்கள்? யார் இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்விற்காக தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். இந்த துன்யாவுக்காக களைத்துப்போனதை விட ஆகிறத்துக்காக மறுமைக்காக களைத்துப்போனவர்கள்; தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அவர்கள் உழைத்ததை விட தங்களுடைய இபாதத்திற்காக அல்லாஹ்வை வணங்குவதற்காக உழைத்தவர்கள். அவர்களுடைய கால்கள் உலகத் தேவைக்காக நிற்பதை விட அல்லாஹ்விற்காக நிற்பதிலே களைத்திருக்கும். அவர்களுடைய உடல் இந்த ரிஸ்க்கை தேடுவதில் சோர்வுற்றதை விட அல்லாஹ்வுடைய இபாதத்திலே அல்லாஹ்வின் பாதையிலே மார்க்கத்திற்காக சோர்வுற்றிருக்கும். அவர்களுக்கு அத்தகைய பாக்கியம் கிடைக்கும்.
இந்த உலகத்தில் சிரமப்பட்டவர்கள் மறுமையிலே மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரப்பை திருப்தி படுத்துவதற்காக. இந்த உலகம், நம்முடைய சொர்க்கத்தை கட்டி எழுப்புவதற்காக நம்முடைய சொர்க்கத்தை தேடுவதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம்.
இந்த உலகத்தில் நம்முடைய தேவைகளுக்காக வீடுகளை கட்டுகிறோம்; கட்டடங்களை கட்டுகிறோம். இவையெல்லாம் ஒரு அற்பமான ஒரு சிறிய கால வாழ்க்கைக்காக. நிரந்தர வாழ்க்கையை அல்லாஹு தஆலா ஒரு முஃமினுக்கு சொர்க்கத்திலே வைத்திருக்கிறான். இன்பமான வாழ்க்கையை அல்லாஹு தஆலா சொர்க்கத்திலே வைத்திருக்கிறான். இந்த சொர்க்கத்திற்காக வேண்டி வாழக்கூடியவர்கள் தான் இந்த துன்யாவை சரியாக புரிந்து கொண்டவர்கள். அவர்களால் தான் இந்த மார்க்கத்தை பின்பற்ற முடியும்.
யாருக்கு சொர்க்கம் புரியவில்லையோ, யாருக்கு நரகத்தின் பயம் இல்லையோ அவர்களுக்கு இந்த மார்க்கம் பிரச்சனையாக இருக்கும். பிடிக்காதவர்களுக்கு ஹலால் பிடிக்காது, ஹராம் பிடிக்கும். அல்லாஹ்வுடைய கட்டளைகள் சொல்லப்பட்டால் ஏதோ மலையை சுமக்க சொல்வது போல அப்படியே அவர்கள் சோம்பேறிகளாக அல்லது பெரிய சிரமமான ஒன்றை சுமக்க சொல்வது போல அலட்டிக் கொள்வார்கள்.
அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு கூற்றை இங்கே கூறுகிறேன். நாம் ஆகிரத்தை புரிந்து இருக்கின்றோமா? இல்லையா? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلبَكَيْتُمْ كَثِيرًا
நான் அறிந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் குறைவாக சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்..
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1044.
அம்ரு பின் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமல்ல. இப்படித்தான் ஒவ்வொரு நபித்தோழரும். குர்ஆனுடைய வசனத்திற்குள்ளே சென்று அதை புரிய முயற்சித்தார்கள். ஒவ்வொரு வசனத்தையும் நின்று நிதானமாக ஓதி அது தனது உள்ளத்தில் பதிந்ததா? இன்னும் பதிய வேண்டுமா? என்று அதை திரும்பத் திரும்ப ஓதி அதனுடைய உணர்வுகளை கொண்டு வந்தார்கள். அதன் மீது யக்கீனை கொண்டு வந்தார்கள்.
இன்று, நாம் அப்படியே கடந்து செல்வதில் தான் ஓடுவதில் தான் கவனமாக இருக்கிறோம். ஓதுவதில் கவனமாக இல்லை. அந்த குர்ஆனை புரிவதிலே ஆழ்ந்து சிந்திப்பதிலே எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்.
அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்:
நீங்கள் நரகத்தைப் பற்றி தெரிந்து கொள்வீர்களேயானால், நீங்கள் நரகம் எத்தகையது என்று தெரிந்து கொள்வீர்களேயானால் அழுது அழுது உங்களுடைய கண்களின் கண்ணீர் தீர்ந்து போய் இரத்தம் வந்திருக்கும். அல்லாஹ்வுடைய அச்சத்தால் நின்று தொழுது தொழுது உங்களுடைய முதுகே கூனிக்குறுகி உடைந்திருக்கும். நீங்கள் நரகத்தை புரிந்து கொண்டு இருப்பீர்களேயானால்,
வசனத்தின் கருத்து : எத்தனையோ மைல்கள் தூரமாக இருக்கும்போதே அந்த நரகத்தினுடைய வெப்பம் மனிதனுடைய இதயத்தை பொசுக்கி உருக வைத்து விடும். அந்த நெருப்புக்குள்ளேயே ஒரு மனிதன் கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டவனாக போடப்பட்டு நெருக்கமான இடத்திலே அடைக்கப்பட்டு தூண்களில் கட்டப்பட்டால் அவனுடைய நிலைமை எப்படி இருக்கும்? (அல்குர்ஆன் : 104 : 6-9)
யாருடைய குடிபானம் நரகவாசிகளின் சீழ் சலமாக இருக்குமோ, யாருடைய உணவு நரகத்தின் நெருப்பு கள்ளிச்செடியாக இருக்குமோ, யாரை தண்டிப்பதற்காக மலக்குகள் இரும்பு சம்மட்டியை கொண்டு எதிர் பார்த்து இருப்பார்களோ, அந்த நரகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்!
இன்னொரு பக்கம், சொர்க்கத்தின் இன்பங்கள் அல்லாஹு தஆலா அந்த சொர்க்கத்தை அலங்கரித்து வகை வகையான இன்பங்களை அங்கே ஏற்பாடு செய்து வைத்துள்ளான்!
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ
(அல்குர்ஆன் : 41:31)
يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ وَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ وَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَ
(அல்குர்ஆன் : 43:71)
வசனத்தின் கருத்து : எத்தனை இடங்களிலே எத்தனை வகையாக அந்த சொர்க்கத்தின் இன்பங்களை சொல்கிறான். உங்களுடைய நஃப்சுக்கு பிடித்ததெல்லாம் அங்கே இருக்கும். நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு அங்கே கொடுக்கப்படும். மனதிற்கு விருப்பமானது அந்த சொர்க்கத்திலே இருக்கிறது. கண்கள் பார்த்து இன்புறக்கூடிய இன்பங்கள் அங்கே இருக்கிறது. என்று கூறி
அல்லாஹு தஆலா அவனது அடியார்களை சொர்க்கத்தின் பக்கம் வாருங்கள் என்று அழைக்கிறான். நரகத்தில் இருந்து பயந்து கொள்ளுங்கள்; எனது பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான். (அல்குர்ஆன் 2:221)
அன்பான சகோதரர்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நமக்கு ரமழானை கொடுத்தான். ஹஜ்ஜுடைய மாதத்தை கொடுத்தான். அப்படித்தான் இந்த முஹர்ரம் மாதம் இதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!
நம்முடைய முஸ்லிம் சமுதாயத்திற்கு அரபி மாதங்கள் தெரிவதில்லை. இஸ்லாமிய மாதங்கள் தெரிவதில்லை. அதுவே ஒரு பெரிய கேவலம். இஸ்லாமிய மாதங்களை சொல்லுங்கள் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்? அதில் நான்கு மாதங்கள் புனித மாதங்கள்.
நோன்பு நோற்று இரவிலே வணக்க வழிபாடு செய்து ரமழான் எப்படி பேணப்பட வேண்டியதோ, அதை போன்று தான் மற்ற மாதங்களும், ஏனைய இபாதத்துகளை கொண்டு பேணப்பட வேண்டிய மாதங்கள்.
இந்த புனிதமான நான்கு மாதங்கள்; (1)-துல்கஃதா,(2)-துல்ஹிஜ்ஜா, (3) முஹர்ரம்,(4) ரஜப். இந்த நான்கு மாதங்கள் அவ்வளவு முக்கியமான மாதங்கள். ஹதீஸிலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழமையைப் பற்றி கூறுகிறார்கள்:
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ
ரமழானுக்கு பிறகு அல்லாஹ்விடத்திலே நீங்கள் உபரியாக வைக்கக்கூடிய நோன்புகளில் மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். ரமழான் உடைய ஃபர்ளான நோன்புகளுக்குப் பிறகு நஃபிலான உபரியான நோன்புகளில் முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படக்கூடிய நோன்பு மிகச்சிறந்தது என்று சொன்னார்கள்.
அதுமட்டுமா இந்த மாதத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடும்போது அல்லாஹ்வுடைய மாதம் என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
அல்லாஹு தஆலா ஒன்றை தன்னோடு சேர்த்து சொல்கிறான் என்றால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்றை அல்லாஹ்வோடு சேர்த்து சொல்கிறார்கள் என்றால் அதனுடைய சிறப்பை மதிப்பை அதனுடைய கண்ணியத்தை நாம் புரிய வேண்டும்.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
سُئِلَ- أي النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم- أيُّ الصَّلاةِ أفضَلُ بعد المكتوبةِ؟ وأيُّ الصِّيامِ أفضَلُ بعد شَهرِ رمضانَ؟ فقال: أفضَلُ الصَّلاةِ بعد الصَّلاةِ المكتوبةِ، الصَّلاةُ في جَوفِ اللَّيلِ. وأفضَلُ الصِّيامِ بعد شَهرِ رَمَضانَ، صِيامُ شَهرِ اللهِ المُحَرَّم
கேட்கப்படுகிறது; அல்லாஹ்வின் தூதரே பர்ளான தொழுகைக்குப் பிறகு உபரியான தொழுகைகளில் அல்லாஹ்விடத்திலே சிறந்த தொழுகை எது?
பலமுறை நாம் கேட்டு இருக்கிறோம். நினைவூட்டி இருக்கிறோம். ஸஹாபாக்களுடைய கேள்விகள் எல்லாம் அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே எதைப் பற்றித்தான் இருக்கும்? ஆகிரத்தை பற்றி தான் இருக்கும். சொர்க்கத்தைப் பற்றி மறுமையைப் பற்றி அல்லாஹ்விடத்திலே அன்பை எப்படி அடைவது நன்மைகளைப் பற்றி இருக்கும்.
நம்மை போன்று அவர்கள் துன்யாவுக்காக வாழ்ந்தவர்கள் அல்ல. ஆகிறத்திற்காக வாழ்ந்தவர்கள். துன்யாவை ஆகிறதிற்காக விற்றவர்கள்.
அன்பான சகோதரர்களே! என்ன ஒரு கவலை என்று சொன்னால் நாம் தீனில் கூட, இபாதத்தில் கூட எந்த இபாதத்திற்கு எந்த தீனுடைய அமலுக்கு துன்யாவுடைய சிறப்புகளும் சேர்த்து சொல்லப்பட்டு இருக்கிறதோ அதை தான் தேடுவோம். அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம்.
இதற்கு என்ன சிறப்பு? இதனால என்ன பரக்கத் கிடைக்கும்? எல்லா அமல்களையும் நீங்கள் பாருங்கள். இன்று மக்களிடத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நடைமுறை அமல்கள் பேணுதலாக செய்யப்படக்கூடிய அமல்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிலே அதிகமானவை அல்லது முழுமையானவை மிக பலவீனமான ஹதீஸ்களின் மீது அமைக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் ஏன் அந்த அமல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றால் அங்கே துன்யா உடைய தேவை, பரக்கத் சொல்லப்பட்டிருக்கும்.
யார் மக்ரிபுக்கு பிறகு வாக்கிஆ சூரா ஓதுவார்களோ வறுமை வராது. அதை விடாமல் பின்பற்றுவார்கள். வாக்கியா சூராவை மக்ரிபுக்குப் பிறகு அவ்வளவு பக்தியாக ஓதுவார்கள். எதற்காக அதிலே சொர்க்கம் சொல்லப்பட்டு இருக்கிறதே! நரகம் சொல்லப்பட்டு இருக்கிறதே! அந்த பயத்திற்காகவா? இல்லை. ஒரு பலவீனமான ஹதீஸ். அதை ஓதினால் வறுமை வராது. அதற்காக ஓதுகிறார்கள்.
காலையில் யாசீன் ஓதினால் மாலை வரை தேவை மாலையில் யாசீன் ஓதினால் காலை வரை தேவை நிறைவேற்றப்படும். ரொம்ப பக்தியாக செய்வார்கள். எதற்காக குர்ஆனின் மீது உள்ள பக்திக்காக அல்ல. அதிலே சொல்லப்பட்டு இருக்கக்கூடிய செய்திகளை சிந்திப்பதற்காக அல்ல. அதை கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக அல்ல.
அந்த சூரா யாசீனில் அல்லாஹ்வின் வல்லமை சொல்லப்படுகிறதே. தாவா சொல்லப்படுகிறதே. அல்லாஹ்வுக்காக உயிரை கொடுப்பதின் சிறப்பு சொல்லப்படுகிறதே. மறுமை சொல்லப்படுகிறதே. நரக வாழ்க்கை சொல்லப்படுகிறதே. அதைக் கொண்டு தன்னுடைய உள்ளத்தை ஈமானை கொண்டு நிரப்புவதற்காக அல்ல.
யாசீன் ஓதினால் அன்றைய தேவை நிறைவேற்றப்படும். காலையில் ஓதினால் மாலை வரை மாலையில் ஓதினால் காலை வரை அவ்வளவுதான், அதற்காகத்தான் யாசீன். அது ஆதாரமற்ற மிக பலவீனமான செய்தி.
இப்படியாக நீங்கள் எடுத்துப் பாருங்கள்! இந்த உம்மத்துடைய பெரும்பாலானவர்கள் ஒரு அமலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அங்கே அந்த அமல் துன்யாவோடு சேர்ந்து அதற்கு ஒரு சிறப்பு சொல்லப்பட்டு இருக்கும். அதுவும் பலவீனமான ஹதீஸாக இருக்கும்.
நூற்றுக்கணக்கான ஸஹிஹான ஹதீஸ்களிலே சொல்லப்பட்ட அமல்கள் எங்கே? மறுமை மட்டும் கூறப்படும் அமல்கள் எங்கே? இந்த உம்மத் அதை கண்டு கொள்ளவே கொள்ளாது. அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்கள்.
எங்கே பரக்கத், எங்கே காசு பணத்தை பற்றி துன்யாவின் தேவைகளை பற்றி சொல்லப்படுகிறதோ அதை வைத்து கொண்டாடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! ஃபர்லான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை எது? ரமழான் உடைய மாதத்திற்கு பிறகு சிறந்த நோன்பு எது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ஃபர்லான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவின் நடுப்பொழுதிலே நடுநிசியிலே தொழக்கூடிய தொழுகை. ரமழானுக்குப் பிறகு நோன்புகளில் சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் நோற்கக்கூடிய நோன்பு.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1163.
குறிப்பாக இந்த முஹர்ரம் மாதத்திலே பத்தாவது நாள் இருக்கிறது. மிக சிறப்பான நாள். ஆகிரத்தை தேடக் கூடியவருக்கு, தங்களது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே வேண்டி கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய புனிதமான கண்ணியமான சிறப்பான நாட்களிலே ஒன்று, முஹர்ரமுடைய பத்தாவது நாள்.
இந்த முஹர்ரமுடைய பத்தாவது நாள் நோன்பு இருக்கிறதே ايام الجاهلية லே குறைஷிகள் நோன்பு வைத்துக் கொண்டு இருந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்று இருக்கிறார்கள். ரமழான் உடைய மாதம் கடமையான போது அந்த நோன்பை விட்டு விட்டார்கள்.
هَذَا الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللهُ فِيهِ مُوسَى، وَبَنِي إِسْرَائِيلَ عَلَى فِرْعَوْنَ، فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْكُمْ فَأَمَرَ بِصَوْمِهِ
அதற்குப் பிறகு யூதர்கள் அந்த நோன்பை மிகப் பேணுதலாக வைப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்கள். கேட்டார்கள்; ஏன் இந்த நாளிலே நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள்? அப்போது
இந்த நாளிலேயே அல்லாஹு தஆலா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான். ஃபிர்அவ்னுக்கு எதிராக இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹு தஆலா வெற்றியை கொடுத்தான்.. எனவே இந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாங்கள் இந்த நாளிலே நோன்பு நோற்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உங்களை விட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்; உரிமையானவர்கள். அவர்களை நேசிக்கக் கூடியவர்கள் நாங்கள் என்று கூறிவிட்டு உடனே அந்த நாளிலே நோன்பு நோற்கும்படி தங்களது தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண்: 1130.
மற்றும் ஒரு ஹதீஸிலே வருகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்சாரிகளுடைய கிராமங்களுக்கு ஆள் அனுப்பி.... யாரெல்லாம் இன்றைய தினத்திலே நோன்பு இல்லாமல் இருக்கிறார்களோ, மீதம் உண்டான நாளை நோன்பாளியாக அவர்கள் பூர்த்தி செய்யட்டும். யார் நோன்பாளியாக இருக்கிறாரோ அவர் நோன்பை தொடரட்டும் என அறிவிக்கச்சொன்னர்கள்.
அறிவிப்பாளர் : ருபய்யிஃ இப்னு முஅவ்வித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 1960.
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பிறகும் நாங்கள் இந்த நாளிலே நோன்பு நோற்றவர்களாக இருந்தோம். எங்களுடைய சிறுவர்களையும் நாங்கள் நோன்பு நோற்க வைப்போம். பஞ்சில் விளையாட்டு சாமான்களை செய்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு பசித்தால் அவர்கள் உணவை தேடி வந்தால் அந்த விளையாட்டு சாமான்களை கொடுத்து அவர்களை விளையாட வைப்போம். இஃப்தார் வரை அந்த பிள்ளைகளை இப்படியாக நாங்கள் ஈடுபடுத்தி வைத்து இந்த இபாதத்தை நிறைவு செய்ய வைப்போம் என்பதாக கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மாதத்திலே ஆஷுரா உடைய நோன்பு எவ்வளவு ஒரு மகத்தான நோன்பு!
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது; அரஃபாவுடைய நாளில் நோன்பு நோற்பதை பற்றி சொன்னார்கள்:
سُئل عن صوم يوم عرفة، فقال: يُكفِّر السنة الماضية والباقية، وسُئل عن صوم يوم عاشوراء، فقال: يُكفِّر السنة الماضية
சென்ற ஆண்டு உடைய பாவங்களை போக்கிவிடுகிறது. வரக்கூடிய ஆண்டு உடைய பாவங்களை போக்கிவிடுகிறது.
அறிவிப்பாளர் : அபு கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
ஒரு நஃபிலான நோன்பு வைக்கப்பட்டாலே நம்முடைய கடந்த ஆண்டுகள் உடைய ஒரு ஆண்டினுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது. இது அவர் செய்த எல்லா சிறு பாவங்களும் இதற்குள் அடங்கும். அதற்குப் போக தவ்பா உடைய உள்ளத்தோடு தான் செய்த பெரும் பாவங்களுக்கும் இந்த நோன்பு கஃப்பாராவாக அமைய வேண்டும்.
அல்லாஹ் என்னை மன்னித்துவிடு என்ற அந்த மன உறுதியோடு அந்த நோன்பை வைத்தாரேயானால் அவருடைய பெரும்பாவங்களுக்கும் இந்த நோன்பு கஃப்பாராவாக ஆகிவிடும்.
மேலும், அபு கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மற்றோர் அறிவிப்பிலே வருகிறது;
صيامُ يومِ عاشُوراءَ، أحتسِبُ على اللهِ أن يكَفِّرَ السَّنةَ التي قَبْلَه
ஆஷுரா நாளுடைய நோன்பு அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன்; அதற்கு முன்புள்ள ஒரு ஆண்டுடைய பாவங்களை அது போக்கிவிடும் என்பதாக.
அறிவிப்பாளர் : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1162.
மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அதாவது எந்த அளவு ஹதீஸினுடைய வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன என்பதை கவனிக்க வேண்டும். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்:
مَا عَلِمْتُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ عَلَى الْأَيَّامِ إِلَّا هَذَا الْيَوْمَ وَلَا شَهْرًا إِلَّا هَذَا الشَّهْر
எனக்கு தெரிந்தவரை நான் பார்த்தவரை நான் அறிந்தவரை ஒரு நாளில் நோன்பு நோற்பது இவ்வளவு உகப்பானது சிறந்தது என்று தேடி அந்த நாளை எதிர்பார்த்து இருந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றார்கள் என்றால், அது இந்த நாளை தவிர வேறு நாளில்லை. அதாவது ஆஷுரா உடைய நாளை தவிர.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2006.
இதற்குத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். மறுமையைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், ஆகிரத்தை தேடிக் கொண்டிருப்பவர்கள், அல்லாஹ்விடத்திலே நெருங்குவதற்கான ஒரு வழியை தேடிக் கொண்டிருப்பவர்கள், எனக்கு வாய்ப்பு கிடைக்காதா? அதிலே நான் அல்லாஹ்விடத்திலே கொஞ்சம் நெருங்கிக் கொள்வேனே! எனது பாவங்களுக்கான மன்னிப்பை தேடி கொல்வேனே! என்ற தேடல் யாருடைய உள்ளத்தில் இருக்குமோ அவர்களுக்குத்தான் இது புரிய வரும்.
யாருடைய உள்ளத்தில் எப்போதும் திர்ஹமும் தீனாரும் காசும் பணமும் நிரம்பி இருக்கிறதோ அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானுக்குப் பிறகு ஒரு மாதத்திலே அதிகம் நோன்பு நோற்பதற்காக அந்த மாதத்தை தேடுவார்கள் என்றால் அது இந்த முஹர்ரம் மாதத்தை தவிர வேறு மாதம் இல்லை.
ரமழானில் கண்டிப்பாக பிறை பார்த்ததிலிருந்து பார்க்கின்ற வரை அல்லது மாதத்தை முழுமைப்படுத்துகின்ற வரை வைத்தே ஆக வேண்டும். அது போக உபரியான நோன்புக்காக உபரியான நபிலான நோன்புகளை வைப்பதற்காக ஒரு மாதத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேடிக் கொண்டு இருந்தார்கள் என்றால் அது இந்த மாதத்தை தவிர அதாவது முஹர்ரம் மாதத்தை தவிர வேறு மாதம் இல்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த முஹர்ரம் மாதத்தின் உடைய ஆஷுரா உடைய நோன்பை பற்றி குறிப்பிடும்போது, இங்கே யூதர்கள் அந்தப் பத்திலே நோன்பு வைக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு மாறு செய்யும் விதமாக நான் அடுத்த ஆண்டு உயிரோடு இருப்பேனேயானால் கண்டிப்பாக ஒன்பதிலும் நான் நோன்பு நோற்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1134.
ஆகவே ஆஷூராவுடைய நோன்பை நோற்பவர்கள் பிறை ஒன்பதிலும் சேர்த்து நோன்பு வைப்பது மிக சிறந்தது, ஏற்றமானது. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக.
அதுபோக அல்லாஹ்வின் அடியார்கள்! இன்று மக்கள் செய்யக்கூடிய குழப்பங்கள் பித்அத்துகள் அனாச்சாரங்கள் அசிங்கங்கள் உங்களுக்கு தெரியும். ஒருபக்கம் ஷியா ராஃபிதாக்கள், யார் கண்ணியத்திற்குரிய தோழர்களின் பாதைகளை விட்டு பிரிந்து சென்றார்களோ, யார் போலியாக ஹசன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா, அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போற்றுகிறோம் என்று இந்த உம்மத்தை பிளந்து இந்த உம்மத்தை சீர்கெடுத்து விட்டு பிரிவினை செய்துவிட்டு சென்றார்களோ, அவர்கள் செய்யக்கூடிய முஷ்ரிக்குகள் உடைய கலாச்சாரம்.
தங்களை காயப்படுத்திக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, மார்களிலே அடித்துக் கொள்வது, ரத்தங்களை சிந்துவது.
இதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபிக்கப்பட்ட செயல்கள். ஷைத்தானின் தூண்டுதலால் செய்யப்படக்கூடிய ஜாஹிலியத்துடைய செயல்கள். அதுபோக இந்த கப்ரை வணங்கக்கூடிய மக்கள் தர்காவை பூஜிக்க கூடிய மக்கள், பஞ்ஜா வைத்துக் கொண்டு ஹசன் ஹுசைன் பாத்திமா அலி என்று பஞ்சா வைத்துக் கொண்டு தீ மிதிப்பது போன்ற செயல்களை அவர்களிடமிருந்து காப்பியடித்து வந்திருக்கிறார்கள்
அதாவது எப்படி ஒரு கோவிலில் ஒரு திருவிழா நடந்தால் ஒரு சடங்கு நடந்தால் என்னென்ன நடக்குமோ அத்தனை அசிங்கங்களையும் சடங்குகளையும் மார்க்கத்தின் பெயரால் புனிதத்தின் பெயரால் ஆஷுராவை கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரால் செய்கிறார்கள்.
இன்னும் பலர் இந்த ஆஷுரா உடைய முதல் பத்திலே மாமிசம் சாப்பிட கூடாதாம். இன்னும் பல விதமான நம்பிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த நாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக!
அவர்கள் இந்த நாளிலே இந்த மாதத்திலே கொல்லப்பட்டது என்பது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வஃபாத்திற்கு பின்னால் ஏற்பட்ட ஒரு நிகழ்வு. அதற்கும் இந்த மாதத்திலே நாம் நோற்கக் கூடிய நோன்புக்கும் இந்த மாதத்தை நாம் கண்ணியப்படுத்துவதற்கும் சம்பந்தமில்லை.
இவ்வளவு கண்ணியப்படுத்த வேண்டிய மாதத்தை இன்று பலர் இதை துக்க மாதமாக இதை ஒரு சோகத்தை அனுசரிக்க கூடிய மாதமாக ஆக்கிக் கொண்டு மாரடித்துக் கொள்வது. இன்னும் பல கெட்ட சடங்குகளை செய்வது இது கண்டிக்கத்தக்கது. அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே வெறுக்கத்தக்கது என்பதை நாம் புரிந்து கொண்டு நம்முடைய நம்மை சுற்றி இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டும்.
இந்த நாளை நான் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்தவர்களாக இந்த நோன்புக்காக எதிர்பார்த்து இருந்து இந்த நோன்பை பேணுதலாக நாம் நோற்போமாக! இதுபோக வந்திருக்கக்கூடிய மற்ற ஹதீஸ்கள் 10 அல்லது 11 அல்லது 9, 10, 11 இந்த ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முடிந்த அளவு பிறை ஒன்பதிலே பிறகு பத்திலே நோன்பு நோற்பது. ஏதாவது காரணத்தால் ஒன்பதை தவறவிட்டால் பத்திலே கண்டிப்பாக நோன்பு நோற்பது. இது கண்டிப்பாக மிகச்சிறந்த உயர்ந்த வணக்கம் என்பதை நாம் நினைவில் வைப்போம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் எல்லைகளை பேணுவதற்கும் சட்டங்களை பேணுவதற்கும் அல்லாஹ்வுடைய தீனை நிலை நிறுத்துவதற்கும் அந்த தீனின் பக்கம் மக்களை அழைப்பதற்கும் அந்த தீனிலே உறுதியாக இருப்பதற்கும் அதற்காகவே வாழ்ந்து அதற்காகவே மரணிப்பதற்கும் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/