ஷைத்தானின் வழிகேடுகள் | Tamil Bayan - 896
ஷைத்தானின் வழிகேடுகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஷைத்தானின் வழிகேடுகள்
வரிசை : 896
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 19-07-2024 | 13-01-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுவை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்விடத்தில் அவனுடைய அருளையும் அன்பையும் மன்னிப்பையும் வேண்டியவனாக; இந்த மார்க்கத்தில் உறுதியாக இருக்கக் கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக; ஷைத்தானின் வழிகேடுகள் ஊசலாட்டங்கள் குழப்பங்கள் அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காகவும் எனக்காகவும் பாதுகாப்பு தேடியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுபஹானஹு வ தஆலா நம்மை பொருந்தி கொள்வானாக! அவனை கொண்டு பொருந்தி கொண்ட அவனுடைய வணக்க வழிபாட்டுக்காக அவனுடைய மார்க்கத்திற்காக வாழக்கூடிய நன்மக்களில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலக வாழ்க்கை நமக்கும் ஷைத்தானுக்கும் இடையில் உண்டான ஒரு பெரிய போர்க்களமாக இருக்கிறது. நம்முடைய இறுதி மூச்சு வரை இந்த உலகத்தை விட்டு நாம் பிரிகின்ற வரை இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நாம் இருந்தவர்களாக வாழ்வோம்;மரிப்போம்.
இந்த ஷைத்தான் நமக்கு எதிரி. ஒருபோதும் அவன் நமக்கு நல்லதை சொல்லவே மாட்டான். அவன் நல்லதை தூண்டவே மாட்டான். நம்மை வழி கெடுப்பது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து நம்மை சருக வைப்பது, நம்முடைய நம்பிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்துவது, நம்முடைய அமல்களில் சீர்கேடுகளை ஏற்படுத்துவது, நமது நற்குணங்களை கெடுப்பது, நமக்குள் பகைமைகளை சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவது, குடும்பத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவது, பிரிப்பது, பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளை மாற்றுவது, இப்படியாக ஷைத்தானுக்கும் நமக்கும் இடையில் தொடர்ந்து இறுதி வரை இந்த போர் இந்த யுத்தம் நடந்து கொண்டே இருக்கும்.
யார் ஷைத்தானுடைய விஷயத்தில் அச்சமற்றவர்களாக ஆகிவிட்டார்களோ என்னை வழி கெடுக்க முடியாது என்று நினைப்பார்களோ அல்லது நாமெல்லாம் மிகச் சரியானவர் என்று நினைப்பார்களோ அல்லது ஷைத்தான் எப்படி எல்லாம் வழிகெடுப்பான் என்பதையே அறியாமல் இருக்கிறார்களோ அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அல்லாஹ் பாதுகாத்தாலே தவிர. கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவார்கள்,
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு தஆலா நம்முடைய ரப்; நம்முடைய ரஹ்மான், ஒரு விஷயத்தை குறித்து குர்ஆனிலே மீண்டும் மீண்டும் நமக்கு அறிவுறுத்துகிறான். உணர்த்துகிறான். அஞ்சும் படி கூறுகிறான். என்னிடத்திலே இதற்காக நீங்கள் பாதுகாப்பு தேடுங்கள் என்று வலியுறுத்துகிறான் என்றால் நாம் எவ்வளவு உஷாராக இருந்திருக்க வேண்டும்! ஆனால் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம்!
தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஆரம்பிப்பதற்கு முன்பாக கண்டிப்பாக,
أعوذ بالله من الشيطان الرجيم
ஓதிவிட்டுத்தான் நாம் அந்த சூரத்துல் பாத்திஹாவை ஆரம்பிக்க வேண்டும். அது, சூரத்துல் பாத்திஹாவுடைய வாஜிபுகளிலே ஒன்று,
فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ
நபியே நீங்கள் தொழுகையில் குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வின் கருணையிலிருந்து எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள். (அல்குர்ஆன் : 16:98)
சகோதரர்களே! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் இந்த கட்டளை குர்ஆனுடைய தொடக்கமே ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடி நீங்கள் இந்த குர்ஆனை ஓத ஆரம்பியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். இந்த குர்ஆன் நம்மை நல்வழிப்படுத்துவதற்காக. நம்மை நேர்வழிப்படுத்துவதற்காக. அல்லாஹ்வுடைய நேசர்களாக ஆகுவதற்காக, நாமெல்லாம் சொர்க்கவாசிகளாக ஆகுவதற்காக இந்த குர்ஆன் இறக்கப்பட்டது.
ஆனால், இந்த ஷைத்தான், உன்னுடைய அடியார்களை வழிகெடுப்பேன். அவர்களை நரகவாசிகளாக ஆக்குவேன். அவர்களை உன்னுடைய எதிரிகளாக மாற்றுவேன் என்று. அல்லாஹ்விடத்தில் சத்தியம் செய்து விட்டு வந்திருக்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! எவ்வளவு பயப்பட வேண்டும். இது குறித்து. எவ்வளவு கவனமாக நாம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன்பாக இது ரஹ்மானை திருப்திப்படுத்துகிறதா? இல்லை ஷைத்தானை திருப்தி படுத்துகிறதா? என்னுடைய செயல் என்னுடைய ரஹ்மானை ரப்பை கோபப்படுத்தி விடுமோ! ஷைத்தானை திருப்திப்படுத்தி விடுமோ! என்ற பய உணர்வு, ஈமானிய உணர்வு நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இன்று அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்! இபாதத்திற்கு வரும்பொழுது ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்ற இந்த மார்க்கத்திலே, மக்கள் அல்லாஹ்வுடைய பயம் இல்லாமல் ஷைத்தானுடைய ஆசைகளுக்கு ஷைத்தானுடைய ஊசலாட்டங்களுக்கு அடிமையாகி எவ்வளவு துணிவாக பாவத்தை செய்கிறார்கள்! எவ்வளவு துணிவாக ஹராமாக்கப்பட்ட இச்சைகளிலே அளவு கடந்து செல்கிறார்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமையை நினைத்துப் பார்க்க வேண்டாமா? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலே நடந்த போராட்டத்திலே நம்முடைய தந்தைக்கு அல்லாஹு தஆலா கூறிய அறிவுரையை நினைத்து பார்க்க வேண்டாமா?
ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொர்க்கலோகத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்ட போது அல்லாஹ் அவர்களுக்கு கூறிய அறிவுரையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? அல்குர்ஆனிலே எத்தனை இடங்களில் அல்லாஹ் இந்த ஷைத்தானை பற்றி நமக்கு எச்சரிக்கிறான்! அவற்றையெல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
அல்லாஹு தஆலா-35-06 ஸூரா ஃபாத்திருடைய வசனங்களில் சொல்லுகிறான்:
اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ
அல்லாஹ்வை விட நமக்கு நன்மையை நாடக்கூடியவர், நம் மீது கருணை உள்ளவர், அவன் படைத்த சொர்க்கத்தில் தனது அடியார்கள் வரவேண்டும் என்று ஆசை படக்கூடிய அந்த ரப்பு, என்னுடைய அடியார்கள் பாவிகளாக நரகவாசிகளாக ஆக கூடாது என்று நம் மீது அக்கறை உள்ள கருணை உள்ள இரக்கமுள்ள அந்த ரப்பு சொல்கிறான்:
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். அவனை நீங்கள் எப்போதும் எதிரியாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஏன் தெரியுமா? அவன் தன்னுடைய கட்சிக்காரர்களை, தன்னுடைய கூட்டங்களை, தன்னோடு சேர்ந்து கொண்டவர்களை அவர்களெல்லாம் நரகவாசிகளாக வேண்டும் என்பதற்காக அவன் அழைத்துச் செல்வான் (அல்குர்ஆன் 35:6)
அல்லாஹ்வின் அடியார்களே! ஷைத்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து இன்று வரை உள்ள எல்லா மக்களையும, எல்லா நபிமார்களுடைய பிரச்சாரத்தை பார்த்தவன். யாரை எப்படி வழி கெடுக்க வேண்டும் என்ற திட்டம் அவனிடத்திலே தெளிவாக இருக்கும். ஷிர்க்கிலே , குஃப்ரிலே , நயவஞ்சகத்திலே தள்ள பார்ப்பான். தப்பித்து விட்டால் அடுத்து அவனிடத்திலே பெரும் பாவங்களின் வாசல்கள் ஏராளம் இருக்கின்றன.
நாம் தான் ஷிர்க் செய்வதில்லையே, நாம் தர்காவிற்கா செல்கிறோம்? கப்ரை நாம் வணங்குகிறோமா? இல்லையே. இப்படி எல்லாம் நினைக்கலாம்.
ஷிர்க் குஃப்ர் மிகப்பெரிய பாவம்; அல்லாஹ் மன்னிக்காத பாவம். ஆனால், அதே நேரத்திலே ஷிர்க்கிலே குஃபூரிலே தள்ளக்கூடிய பெரும் பாவங்கள் இருக்கின்றன. இன்னும் பல பெரும் பாவங்கள் இருக்கின்றன. நப்ஸ் அந்த பெரும் பாவங்களை விரும்பும். ஆசைப்படும். அந்த பெரும் பாவங்களை நோக்கி நஃப்ஸ் ஓடும். அந்த பெரும் பாவங்களை நமக்கு அலங்கரித்துக் காட்டும்.
அதை ஆகுமாக்குவதற்கான வழிகளை ஷைத்தான் சொல்லித் தருவான். பெரும்பாவங்களை அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குவதற்குரிய வழிகளை ஷைத்தான் சொல்லித் தருவான். அந்த நேரத்திலே தன்னை அறியாமல் அடியான் குஃப்ரிலே விழுந்து விடுவான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
எத்தனையோ பெரும்பாவங்கள், சாதாரணமான பெரும் பாவங்களா! அல்லாஹ்வின் மிகப்பெரிய எச்சரிக்கைக்குரிய பெரும் பாவங்கள். அதிலே அவனை தள்ளுவான். அல்லாஹ் கடமையாக்கிய ஃபர்ளான கடமைகளிலிருந்து அவனை திசை திருப்புவான். முஸ்லிம்களுக்குள்ளே கலகங்களை, சண்டை சச்சரவுகளை, பொறாமைகளை, குரோதங்களை, மோசடிகளை, சூழ்ச்சிகளை உண்டாக்குவான்.
இந்த ஷைத்தான் மனிதர்களை நரகத்தில் தள்ளுவதற்காக யாரை எப்படி வழி கெடுக்க வேண்டுமோ எந்த வழியிலே கொண்டு போய் அந்த நாச படுகுழியில் தள்ள வேண்டுமோ ஒருபோதும் அவன் ஓய மாட்டான்.
ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் சொல்லியதைப் பாருங்கள்:
قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ
(இப்லீஸ்) கூறினான்: “ஆக, நீ என்னை வழிகெடுத்ததின் காரணமாக அவர்களுக்காக உன் நேரான பாதையில் நிச்சயம் உட்காருவேன்.” “பிறகு, அவர்களுக்கு முன்பும், அவர்களுக்கு பின்பும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.” (அல்குர்ஆன் 7:16,17)
ஆகவேதான் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலா நமக்கு சொல்கிறான்:
وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை ஷைத்தானுடைய எந்த வழிகளையும் நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்! (அல்குர்ஆன் : 2:168,169)
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் பின்பற்றுவதற்கு, ஏற்று நடப்பதற்கு நேசிப்பதற்கு படிப்பதற்கு பரப்புவதற்கு சிந்திப்பதற்கு அல்லாஹ் அல்குர்ஆனையும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் கொடுத்திருக்கிறான். இவைதான் நாம் பின்பற்றுவதற்கு தகுதியானது. நம்முடைய கவனம் எல்லாம் இதில் தான் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய வேதத்தை சுற்றியே ஒரு முஸ்லிமின் வாழ்க்கை இருக்க வேண்டும். தொழுகையில் ஓதுவான். தொழுகைக்கு வெளியிலே ஓதுவான். அதை படிப்பான். அதை பரப்புவான். அதன் பக்கம் மக்களை அழைப்பான். அதனுடைய உபதேசங்களை கொண்டு நல்லறிவு பெறுவான். அதனுடைய உபதேசங்களை பிற மக்களிடத்திலே சொல்லுவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவை படிப்பான். பரப்புவான். திரும்பத் திரும்ப அதை பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பான். தனக்கு நினைவூட்டி கொண்டே இருப்பான்.
இன்று மக்களுக்கு மத்தியிலே பரவி இருக்கிறதல்லவா! ஆடல் பாடல் இசை இந்த கலாச்சாரம் ஷைத்தானுக்கு மிகப் பிரியமான வழிகள். நஃப்ஸ்க்கு ரொம்பவும் ஈர்ப்புடைய வழிகள். இந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய இச்சைகளை ஆசைகளை கெட்ட எண்ணங்களை தூண்டக் கூடியவை. ஒரு மனிதனுடைய தொழுகையை நாசமாக்க வேண்டுமா? ஒரு மனிதனுடைய தொழுகையில் அவருடைய உள்ளச்சத்தை நாசமாக்க வேண்டுமா? ஒரு மனிதனுடைய இபாதத்திலே அவனுடைய மன ஓர்மையை நாசமாக்க வேண்டுமா?
ஒரு மனிதன் அல்லாஹ்வின் அச்சத்தால் அழக்கூடிய அவருடைய அழுகையை நிறுத்தி அவருடைய உள்ளத்தை கல்லாக்க வேண்டுமா? கல்பிலே ஈமானுடைய ஒளியை பறித்தெடுக்க வேண்டுமா? குஃப்ருடைய ஷிர்க்குடைய நயவஞ்சகத்துடைய இருள்களை கொண்டு கல்பை நிரப்ப வேண்டுமா? இதற்கு ஷைத்தான் வைத்திருக்கக் கூடிய வழிகள் தான்; இந்த ஆசா பாசங்கள், ஆடல் பாடல், இசை, நடனங்கள், கூத்து கும்மாளம் எல்லாம்.
இன்று சினிமாக்களின் மூலமாக சீரியல்கள் மூலமாக எல்லாருடைய வீடுகளுக்கும் எல்லாருடைய கைகளுக்கும் ஷைத்தானுடைய நேசர்களால் பரப்பப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்! நான் தொழுகையாளி தானே என்று இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது.
ஒரு மனிதன் ஷைத்தானுடைய இந்த ஆபாச அசிங்கமான வலைகளிலே சிக்கியதற்கு பிறகு அவனுடைய தொழுகை தொழுகையாக இருக்காது. அந்தத் தொழுகை உணர்வுள்ள தொழுகையாக இருக்காது.
அவருடைய கலிமாவுடைய அந்த பலம் அந்த வலிமை இருக்காது. ஏன்? உள்ளத்தை அல்லாஹ்வுடைய அன்பில் இருந்து வெறுமையாக்கி விடுவான். அல்லாஹ்வுடைய அன்பு இல்லாமல் லாயிலாஹ இல்லல்லாஹ் வேலை செய்யாது. முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நபியின் மீது அளப்பரிய மாபெரும் பாசம் நேசம் அந்த முஹப்பத் இல்லாமல் முஹம்மது ரசூலுல்லாஹ் வேலை செய்யாது. காப்பாற்றாது.
ஆபாசங்களை, அசிங்கங்களை, நடனங்களை, இசைகளை, ஆடல் பாடல்களை ஹராம் ஆக்கிய தடுத்த அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய ரசூலுடைய அன்பும் அவற்றை ஆகுமாக்கிக் கொண்டு மனிதர்களை அவற்றின் மூலமாக வழி கெடுக்கக் கூடியவர்களுடைய அன்பும் ஒரு உள்ளத்திலே ஒன்று சேர முடியுமா? ரஹ்மானுடைய அன்பும் ஷைத்தானுடைய அன்பும் உள்ளத்தில் ஒன்றே சேர முடியுமா? இன்று பெரும் பாவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எச்சரித்தார்கள்:
يدرُسُ الإسلامُ كما يدرُسُ وَشيُ الثَّوبِ حتَّى لا يُدرَى ما صيامٌ، ولا صلاةٌ، ولا نسُكٌ، ولا صدَقةٌ، ولَيُسرى على كتابِ اللَّهِ عزَّ وجلَّ في ليلَةٍ، فلا يبقى في الأرضِ منهُ آيةٌ، وتبقَى طوائفُ منَ النَّاسِ الشَّيخُ الكبيرُ والعجوزُ، يقولونَ: أدرَكْنا آباءَنا على هذِهِ الكلمةِ، لا إلَهَ إلَّا اللَّهُ، فنحنُ نقولُها فقالَ لَهُ صِلةُ: ما تُغني عنهم: لا إلَهَ إلَّا اللَّهُ
பூமியிலே இஸ்லாம் மங்கிக் கொண்டே போகும். ஒரு காலம் வரும்; நோன்பு என்றால் தொழுகை என்றால் ஹஜ் என்றால் தர்மம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. அல்லாஹ்வின் வேதம் ஒரே இரவில் முழுமையாக எடுக்கப் பட்டு விடும். பூமியில் ஒரு வசனம் கூட இருக்காது. அதை தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இருக்க மாட்டார்கள். மக்களிலே சில கூட்டம் இருப்பார்கள். வயது முதிர்ந்தவர்கள் சொல்வார்கள்: எங்களுடைய மூதாதைகள் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம் அதை நாங்கள் சொல்கிறோம் அவ்வளவுதான். அந்த அளவு மார்க்கத்தை அறியாதவர்களாக மக்கள் மாறி விடுவார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைபா இப்னு யமான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3289.
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் பயப்பட வேண்டும். நம்முடைய வரக்கூடிய சமுதாயம் அவர்களுக்கு நாம் பொருளாதார கல்வியை கற்று கொடுத்தோம். வாழ்க்கையிலே பணத்துக்கு தேவையான வசதிக்கு தேவையான செல்வத்துக்கு தேவையான கல்வியை கற்றுக் கொடுத்தோம்.
அவர்களுக்கு சொர்க்கத்திற்கான வழியை கற்றுக் கொடுத்தோமா? மௌத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்கான வழியை அவர்களுக்கு காண்பித்தோமா? அல்லாஹ்வுடைய வேதத்தை அவர்களுக்கு போதித்தோமா? நபிமார்களுடைய பாதையை அவர்களுக்கு காட்டி கொடுத்தோமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இஸ்லாமின் மீது பற்று குறைந்து கொண்டே போகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! சில கூட்டங்கள் சில மக்கள் இஸ்லாமின் மீது பற்று உள்ளவர்களாக தங்களையே இந்த மார்க்கத்திற்காக அர்ப்பணிப்பவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணிக்கையை பாருங்கள். சமுதாயத்திலே இந்த மார்க்கத்தை மறந்த இந்த மார்க்கத்தை புறக்கணித்த இந்த மார்க்கத்தை விட்டு விலகி இருக்கக்கூடிய பெருங்கூட்டத்தை பாருங்கள்.
நம்முடைய பிரச்சனை என்ன தெரியுமா? இதை பார்த்து பார்த்து சலித்தவர்களாக ஏற்றுக்கொண்டவர்களாக ஆகிவிட்டோம். இந்த ஆபாசங்களும் அசிங்கங்களும் கேவலமான ஒரு செயலாக இருந்தது போய், அசிங்கமான வெறுக்கத்தக்க செயலாக இருந்தது போய், இந்த சமுதாயத்தால் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய செல்வத்தாலும் இறை நிராகரிப்புடைய மக்களுக்கும் மத்தியிலே அவர்களுக்கு இருக்கக்கூடிய கண்ணியத்தாலும் முஸ்லிம் சமுதாயமும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறிவிட்டார்கள்.
அவர்களிடத்தில் இஸ்லாமிய பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏதோ அவர்களும் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்பதற்காகவே சமூகமாக அவர்களோடு உறவாடக்கூடிய மக்களாக, அவர்களை நேசக்கூடிய மக்களாக, சமூகத்திலே முற்படுத்தக்கூடிய மக்களாக, அவர்களை வரவேற்கக் கூடிய மக்களாக ஆகிவிட்டார்கள்.
அல்லாஹ்விடத்தில் ஒரு பாவியை கண்ணியப்படுத்துவது மிக பயங்கரமான ஒரு குற்றம். அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்:
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ
மூமின்களுக்கு மத்தியில் ஆபாசங்கள் அசிங்கங்கள் பரவ வேண்டும் என்று யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு கடுமையான வலிமிக்க தண்டனை இருக்கிறது. (அல்குர்ஆன் : 24:19)
யோசித்துப் பாருங்கள்! சினிமாக்களின் மூலமாக உங்களுக்கு அவர்கள் குர்ஆனை சொல்லித் தர வருவர்களா? அல்லாஹ்வுடைய தக்வாவை சொல்லித் தர வருகிறார்களா? அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் இணைந்து இருக்கக்கூடிய அந்த சினிமா சீரியல் ஆபாச கலாச்சாரங்களை கொண்டு மூமினை உருவாக்கப் போகிறார்களா? அல்லது முனாஃபிக்கை உருவாக்கப் போகிறார்களா? அல்லது முஸ்லிம் என்ற பெயரில் இருந்து கொண்டு குஃப்ரை ஷிற்கை நயவஞ்சகத்தை பாவங்களை உருவாக்கக்கூடிய இஸ்லாமிய விரோதிகளை அவர்கள் உருவாக்கப் போகிறார்களா?
அவர்களுக்கு சமூகத்திலே கண்ணியம், அவர்களுக்கு வரவேற்பு, அவர்களுக்கு மதிப்பு, கொடுக்கிறது இந்த சமுதாயம் எந்த அளவுக்கு சொரணை இல்லாத சூடு சொரணை இல்லாத உணர்வில்லாத சமுதாயமாக மாறிவிட்டது என்று நினைத்துப் பாருங்கள்.
இஸ்ரவேலர்களுடைய அழிவு இதைக்கொண்டு தான் ஏற்பட்டது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள்: இஸ்ரவேலர்கள் அவர்களிலே பாவம் செய்பவர்களை முதல் நாள் தடுப்பார்கள். இரண்டாம் நாள் தடுப்பார்கள். மூன்றாம் நாள் அவனைப் பார்த்தால் அவனோடு சேர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அவனோடு பழக ஆரம்பித்து விடுவார்கள். இறுதியாக அவர்களின் சிலருடைய உள்ளங்களை மற்ற சிலருடைய உள்ளங்களைப் போன்றே அல்லாஹ் மாற்றி விட்டான். அதாவது கெட்டவர்களுடைய உள்ளங்களைப் போன்று நல்லவர்களின் உள்ளங்களையும் அல்லாஹ் மாற்றி விட்டான். பிறகு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4336.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தீனை பற்றி பிடிப்பது, அல்லாஹ்வுடைய ஹலால் ஹராமுடைய அந்த கோட்டுக்குள் நிற்பது, நம்மால் முடிந்த அளவு நம்முடைய வாழ்க்கையை வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்குவது இதை விட நமக்கு வெற்றி எதிலும் இல்லை.
இதுதான் நம்முடைய வெற்றி. நான் என்னுடைய வாழ்க்கையில் எந்தளவு ஹலாலை பேணுகிறேன்? ஹராமை விட்டு விலகி இருக்கிறேன்? என்னால் முடிந்த அளவு எனது வாழ்க்கையில் பெரும்பாலான அதிகமான நேரங்களை அல்லாஹ்வை வணங்குவதற்கு நான் கழிக்கிறேனா?
என்னுடைய குடும்பத்தார்களுடைய வாழ்வாதாரத்திற்கு நான் செலவு செய்தது போக மீதி உண்டான நேரங்களை என்னுடைய ரப்புக்காக நான் எப்படி கொடுக்கிறேன்? ஷைத்தானுடைய வழிகேட்டிலிருந்து என்னை எப்படி பாதுகாத்துக் கொள்கிறேன்? என்னுடைய குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறேன்? என்னுடைய சமூகத்தை எப்படி பாதுகாக்கிறேன்?
இது தான் மார்க்கப்பற்று. வெறும் இஸ்லாம் இஸ்லாம் என்று பேசுவதிலே மார்க்கப்பற்று முழுமையாகி விடாது. அல்லாஹு தஆலா சொல்கிறான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
மூமின்களே நரக நெருப்பிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! உங்கள் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதனுடைய எரிபொருள் மக்களும் கற்களுமாக இருக்கிறார்கள். அந்த நரகத்திலே உங்களை வேதனை செய்வதற்காக கடின குணம் கொண்ட முரட்டு குணம் கொண்ட மலக்குகள் இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய கட்டளையை அவர்கள் மீறமாட்டார்கள். (அல்குர்ஆன் : 66:7)
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய மார்க்கப்பற்று பரிசுத்தமாக வேண்டும் என்றால், நம்முடைய ஈமான் முழுமை அடைய வேண்டுமென்றால், நம்முடைய தக்வா முழுமை அடைய வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய முஹப்பத் ரசூல் உடைய முஹப்பத் நம்முடைய உள்ளங்களில் உண்மையாக நிறைவடைய வேண்டும் என்றால் ஷைத்தானின் பாதையிலிருந்து வழி கேட்டிலிருந்து நாம் விலகியே ஆக வேண்டும்.
ஷைத்தானுடைய ஊசலாட்டங்கள் ஷைத்தானுடைய ஆபாச வழிகள் ஷிர்க்கிலிருந்து குஃப்ரிலிருந்து நயவஞ்சகத்திலிருந்து இன்னும் எத்தனை பெரும் பாவங்களை மக்களை வழி கெடுப்பதற்காக வலைவிரித்து வைத்திருக்கிறானோ அத்தனை வழிகளிலிருந்தும் நம்முடைய மறுமைக்காக நம்முடைய சொர்க்கத்திற்காக நாம் தூரமாக்கி விலக்கி நம்மை பாதுகாத்தே ஆக வேண்டும்.
அதன் மூலமாகத்தான் அல்லாஹ்விடத்திலே அவனுடைய அருளை அன்பை மறுமையிலே சொர்க்கத்தின் வெற்றியை அடைய முடியும். அதற்காக அல்லாஹ்விடத்திலே துஆவும் செய்ய வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் இஸ்திஃபார் செய்து கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய தவறுகளை நாம் திருத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
என்னுடைய ஒவ்வொரு செயலையும் குர்ஆன் சுன்னாவோடு ஒப்பிட்டுப் பார்த்து, எது குர்ஆன் சுன்னாவோடு அங்கீகரிக்கப்பட்டதோ அதை மட்டுமே நாம் நெருங்க வேண்டும். எது நமக்கு எச்சரிக்க பட்டதோ எது குறித்து நமக்கு அல்லாஹ்வுடைய வேதத்தில் தடுக்கப்பட்டிருக்கிறதோ அதை விட்டு நாம் தடுக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தார்களை நம்முடைய சகோதரர்களையும் நம்மோடு நட்போடு இருக்கக்கூடியவர்களையும் நம்முடைய சமூகத்தையும்.
இந்த நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது என்பது, இது நம்முடைய ஈமான், நம்முடைய மார்க்க பற்றுக்கு அடிப்படையான ஒன்று. நான் என்னைப் பற்றி கவலைப்படுவேன் பிறரை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் ஒரு மூமினாக இருக்க முடியாது.
كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
இந்த இஸ்ரவேலர்களுடைய மகா மோசமான கெட்ட குணமே மக்களுக்கு மத்தியில் பரவக்கூடிய தீமையை அவர்கள் தடுக்காமல் இருந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். (அல்குர்ஆன் 5:79)
ஆகவே, அல்லாஹ்விடத்திலே நாம் உண்மையான முழுமையான கண்ணியத்தை மன்னிப்பை இந்த மார்க்கத்தினுடைய அந்த பரிபூரணத்தை நாம் அடைய வேண்டும் என்றால் அதற்காக நாம் நம்முடைய ஆகிரத்தை முன்வைத்து குர்ஆன் காட்டக்கூடிய ஸுன்னா காட்டக்கூடிய வழியிலே நாம் பயணிக்க வேண்டும்.
அதற்காக இந்த வாழ்க்கை நமக்கு ஒரு போராட்டமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அற்பமான இந்த உலக வாழ்க்கையை ஷைத்தானுடைய ஆசா பாசங்கள் அவன் நமக்கு அலங்கரித்துக் காட்டக்கூடிய அந்த மாய வலைகளிலே விழுந்து நம்முடைய வறுமையை நாசமாக்கிக் கொள்ளாமல் இருப்போமாக!
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஷைத்தானுடைய ஊசலாட்டங்களிருந்து வழிகேடுகளிலிருந்து பாதுகாப்பானாக! நம் மீது அவனுக்கு ஆதிக்கம் ஏற்படுத்தாமல் அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/