HOME      Khutba      கத் அஃப்லஹ மன் ஸக்காஹா! | Tamil Bayan - 904   
 

கத் அஃப்லஹ மன் ஸக்காஹா! | Tamil Bayan - 904

           

கத் அஃப்லஹ மன் ஸக்காஹா! | Tamil Bayan - 904


கத் அஃப்லஹ மன் ஸக்காஹா!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : கத் அஃப்லஹ மன் ஸக்காஹா!
 
வரிசை : 904
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 23-08- 2024 | 13-02-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கு மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய இறுதி இறை தூதர் நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் இறையச்சத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம்முடைய உள்ளங்களை பரிசுத்தப்படுத்துவானாக! நேர்வழியில் நம்மை உறுதிப்படுத்துவானாக! தூய்மையான உள்ளத்தோடு எல்லா அமல்களையும் அல்லாஹ்வுடைய திருமுகத்திற்காகவே செய்து அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்து வாழ்ந்து அல்லாஹ்வை சந்திக்க கூடிய சொர்க்க பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் அல்லாஹு தஆலா தந்துருள்வானாக! ஆமீன்.
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! பொதுவாக இன்று நாம் நம்முடைய உடை சுத்தம் உடல் சுத்தம் நம்முடைய உறைவிடம் சுத்தம் இதற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை நம்முடைய உள்ள சுத்தத்திற்கு கொடுக்கின்றோமா? 
 
ஆடையில் நஜிஸ் இல்லாமல் இருப்பது என்பது வேறு, இன்று நாம் அதையும் தாண்டி நம்முடைய ஆடை அழுக்குகள் இல்லாமலும் பார்த்துக் கொள்கிறோம். கறைகள் படாமல் பார்த்துக் கொள்கிறோம். சிறிய ஒரு உணவுக்கறை உடையிலே பட்டுவிட்டால் கூட, உடனே அந்த உடையை நாம் மாற்ற முயற்சிக்கிறோம். 
 
நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்கள் எல்லாம் சாதாரண மண்ணில் தான் தொழுதார்கள். மழை பெய்தாலும் அதே மண் சேற்றிலே  தான் தொழுதார்கள்.
 
இன்று, நாம் சாதாரண மண் தரையில் உட்காருவதே இல்லை. வீட்டில் எவ்வளவு தான் அழகான பலுங்கிக்கற்கள் போடப்பட்டிருந்தாலும் மார்பள் போடப்பட்டிருந்தாலும் டைல்ஸ் போடப்பட்டிருந்தாலும் சுத்தமாக இருந்தாலும் அதில் நாம் உட்காருவதில்லை. ஏன்? ஆடை அழுக்காகி விடுமோ, கறைப்பட்டு விடுமோ என்றெல்லாம் பயப்படுகிறோம். 
 
சகோதரர்களே! நம்முடைய உள்ளம் எவ்வளவு கறைபட்டுக் கொண்டிருக்கிறது! சிந்தித்தோமா? நம்முடைய கல்பு எவ்வளவு அழுக்கடைந்து கொண்டிருக்கிறது? அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய பேச்சினால் நாம் பேசக்கூடிய பேச்சின் காரணமாக அல்லாஹ்வை மறந்து நாம் பேசக்கூடிய பேச்சுகளை நினைத்துப் பாருங்கள்! 
 
நான் நான் நான் என்று எத்தனை பேச்சுகளை பேசுகிறோம்! ஒரு மனைவியிடத்தில் கூட நான் உனக்கு இதை கொடுத்தேன் என்று சொல்வது அல்லாஹ்விற்கு பிரியமானதல்ல. மாறாக அல்லாஹ் தான் கொடுத்தான். கொடுப்பதற்கு நீ யார்? நீ ஒரு கருவி, அல்லாஹ் கொடுக்க வைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டுமே தவிர, நான் கொடுத்தேன் என்று பெருமை அடிப்பதற்காக நீ கொடுத்தாயேயானால், சொல்லிக் காட்டுவதற்காக நீ கொடுத்தாயேயானால் நாளை மறுமையிலே நீ எப்படி அதற்காக அல்லாஹ்விடத்தில் கூலி எதிர்பார்க்க முடியும்! சிந்திக்க வேண்டும். 
 
நம்முடைய சொற்களினால் பிறரை காயப்படுத்தும் படியாக, பிறரை ஏளனப்படுத்தும் விதமாக, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய எத்தனை சொற்களை நாம் சொல்கிறோம்! இதுவெல்லாம் நம்முடைய உள்ளத்தை கறைபடுத்துகிறது. உள்ளத்தை அழுக்கடைய செய்கிறது. உள்ளத்தை அல்லாஹ்விடமிருந்து தூரம் ஆக்குகிறது. நம்முடைய சொற்களோடு, நம்முடைய செயல்களோடு, இந்த கல்புக்கு பெரிய தொடர்பை அல்லாஹ் வைத்திருக்கிறான். நாம் எதை பார்க்கிறோமோ, எதைக் கேட்கிறோமோ, எதை செய்கிறோமோ அந்த செயல்களோடு இந்த கல்புக்கு மிகப்பெரிய ஆழமான தொடர்பு இருக்கிறது. 
 
அல்லாஹு தஆலா இந்த கல்பை நோக்கி பேசுகிறான். இந்த கல்பும் இந்த கல்பை ஆட்டிப்படைக்க கூடிய மனிதனுடைய ஆற்றல் அறிவும் தான் நம்முடைய மார்க்கத்தினுடைய சட்டங்கள், ஒரு மனிதன் மீது கடமையாகுவதற்கு அல்லது கடமையாகாமல் இருப்பதற்குரிய அடிப்படை. 
 
பைத்தியக்காரர் இடத்திலே கை, கால், கண் இருக்கிறது. ஆனால், அவன் மீது தொழுகை கடமையில்லையே! அவன் மீது மார்க்க சட்டங்கள் கடமையில்லையே! 
 
காரணம், அவனால் அந்த கல்பை கண்ட்ரோல் செய்யக்கூடிய அவருடைய அறிவை பயன்படுத்தக்கூடிய சக்தி இல்லை. அல்லாஹ் மன்னித்து விட்டான். 
 
அல்லாஹு தஆலா இந்த கல்பை நோக்குகிறான். இந்த கல்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாழ்த்துகிறான். இல்லை கண்டிக்கின்றான். இந்த கல்பை அல்லாஹ் நேசிக்கிறான். இல்லை அல்லாஹ் வெறுக்கிறான். 
 
மனிதன் இந்த கல்பை மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான். நஜிஸிலிருந்து அசுத்தங்களிலிருந்து, எந்த அசுத்தம் இபாதத்தை கெடுக்குமோ அந்த அசுத்தத்திலிருந்து நம்முடைய உடை நீங்கி இருப்பது, நம்முடைய உடல் நீங்கி இருப்பது கட்டாயம். அதற்குப் பிறகு அதிகப்படியான சுத்தம், வாசனை. இதுவெல்லாம் நாம் நம்முடைய விருப்பத்திற்கு நம்முடைய இயல்புக்கு நாம் தேடிக் கொள்ளக்கூடிய உபரியான விஷயங்கள். இதற்கும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடினால் அல்லாஹ் அதற்கும் கூலி தருவான்.
 
அன்பான சகோதரர்களே! இப்படித்தான் இந்த கல்பு அசுத்தத்தில் இருந்து சுத்தமாக்கப்பட்டு இருக்க வேண்டும். நிய்யத் என்று ஒன்று இருக்கிறதே! சிந்தித்து பார்த்திருக்கிறோமா? தொழுகையிலே (திலாவத்) குர்ஆன் ஓதுதல் என்று கொண்டிருக்கிறது. (கியாம்) நிலை நிற்பது இருக்கிறது. (ருகூஃ) முதுகும் தலையும் சமமாக வைத்து குனிந்து  நிற்பது இருக்கிறது. (சுஜூது) நெற்றியை தரையில் வைப்பது இருக்கிறது.
 
இதுவெல்லாம் நம்முடைய உடல் உறுப்புகளால் நாம் செய்யக்கூடிய செய(அம)ல்கள். இந்த எல்லா அமல்கள் ருக்ன்கள் ஷர்த்துகளை நிறைவேற்றுவதற்கு முன்பாக தொழுகை என்ற  இபாதத்துக்கு மட்டுமல்ல, எந்த இபாதத்தாக இருந்தாலும் முதலிலே கல்பு ஒரு அமலை செய்தாக வேண்டும். அதுதான் நிய்யத். 
 
அந்தக் கல்பு அந்த அமலை செய்யவில்லை என்றால் உங்களுடைய அத்தனை கியாம் ருகூஃ ஸுஜூத் இன்னும் என்னென்னவோ அவை அனைத்துமே வெறும் அசைவுகளாக மட்டுமே இருக்குமே தவிர அமல்கள் (நற்செயல்கள்) ஆகாது. 
 
அமல்களாக எப்போது ஆகும்? எப்பொழுது மாறும்? உங்களுடைய நிய்யத்தைக் கொண்டு. அல்லாஹ்விற்காக நான் தொழுகிறேன் என்று நீங்கள் நினைத்து வைத்தால்தான் உங்களுடைய நிலை நிற்பது நீங்கள் ஓதுவது, நீங்கள் குனிவது, நீங்கள் சிரம்பணிவது எல்லாம் இபாதத்தாக மாறும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! 
 
அப்படி என்றால் கல்பு எவ்வளவு முக்கியம் என்று. எது எவ்வளவு முக்கியமோ அதை நாம் அவ்வளவு மறந்திருக்கிறோம். 
 
தொழுகையிலே நிலையிலே நிற்கிறோம். சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். நம்மிலே எல்லோருக்கும் சரியான உச்சரிப்போடு சூரத்துல் பாத்திஹா வருகிறதா? ஏதாவது ஒரு சிறிய பெரிய குறைபாடு இருக்கும். 
 
தஸ்பீஹ் உச்சரிப்பதிலே, ருகூஃ சுஜூத் எப்படி சரியாக அமைதியாக  நிதானமாக இஃதிதாலோடு எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வளைந்தார்கள்? எப்படி நிமிர்ந்தார்கள்? எந்த அளவுக்கு சமப்படுத்தினார்கள்? இப்படி எல்லாம் நாம் செய்கிறோமா? செய்ய வேண்டும். ஆனால் செய்கிறோமா குறை இருக்கிறதா இல்லையா? இந்த குறைகளை எல்லாம் அல்லாஹுத்தஆலா மன்னிப்பான் மன்னிக்கக் கூடியவன். 
 
ஆனால், கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இந்த அமல்களின் குறைகளை எல்லாம் அல்லாஹு தஆலா மன்னித்துக் கொண்டே இருக்கிறான். 
 
அல்லாஹ்வுக்காக என்று கல்பிலே இக்லாஸ் இருக்க வேண்டும். அந்த நிய்யத்திலே கொஞ்சம் சமரசம் செய்தால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அந்த அமல் ஒப்புக்கொள்ளப்படாது.
 
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏
 
அந்த தொழுகையாளிகள் நாசமாகட்டும், யார் தொழுகைகளை அலட்சியம் செய்கிறார்களோ, பிற மக்களுக்கு காட்டுவதற்காக தொழுகிறார்களோ. (அல்குர்ஆன் 107:4-6)
 
முடிஞ்சது அவ்வளவுதான். நிய்யத்திலே ஒரு சின்ன கோளாறு வந்தது. மொத்தத் தொழுகையும் அல்லாஹு தஆலா வீணாக்கி விட்டான். அவன் சூரத்துல் பகராவை அப்படியே அழுத்தம் திருத்தமாக ஓதினாலும் சரி, கால் வலிக்க நின்று வணங்கினாலும் சரி, நெற்றி காய அவன் சுஜூது செய்தாலும் சரி, அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 
 
நாளை மறுமையிலே ஒரு மனிதன் வருவான். அல்லாஹு தஆலா அந்த மனிதனுக்கு சொல்லுவான்: உனக்கு நான் செல்வத்தை கொடுத்தேனா? ஆம். எவ்வளவு கொடுத்தேன்? கணக்கு வழக்கு இன்றி. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2382.
 
தன்னுடைய பாக்கெட்டில் இருக்கக்கூடிய காசை எடுத்து பிறருக்கு கொடுப்பது என்பது நப்சுக்கு ரொம்ப கஷ்டமான ஒரு செயல். ரொம்ப சிரமமான ஒரு செயல். தர்மம் கொடுப்பது அதனாலதான் அல்லாஹு தஆலா தொழுகையை முதலில் ஆக்கி ஜக்காத்தை இரண்டாவதாக ஆக்கினான். 
 
எது லேசோ அத முதலாவதாக வச்சிட்டான். ஷஹாதா சொல்றது லேசு. அத அல்லாஹ் முதல்ல வச்சுட்டான். அடுத்த லேசு தொழுகை. அதுக்கடுத்தது இப்படியாக சிரமத்தில் இருந்து கொஞ்சம் சிரமம் கொஞ்சம் சிரமம் இப்படியாக அல்லாஹு தஆலா ஹஜ் வரைக்கும் கொண்டு செல்கிறான்.
 
சகோதரர்களே! இப்பேர்பட்ட சிரமத்தை அவன் செய்தாலும் அங்கே உள்ளம் சுத்தமாக இல்லை. மொத்த சொத்தையும் அல்லாஹ்வுடைய பாதையிலே செலவழித்ததற்கு பிறகு கூட நாளை மறுமையிலே அவன் எங்கே செல்கிறான்? முகம் குப்புற நரக நெருப்பிலே வீசி எறியப்படுகிறான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
இந்த கல்பை சுத்தப்படுத்துவது என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. முகஸ்துதியிலிருந்து சுத்தப்படுத்த வேண்டும்.  பெருமை புகழ், நான் என்ற அகம்பாவம் என்ற கருவம் என்ற ஆணவம் என்ற தலைகனம் தற்புகழ்ச்சி செய்வது நான் ஆலிம் நான் கொடைவள்ளல் நான் சிறந்தவன் நான் தாயீ நான் பெரிய சுத்தமானவன் எனக்கு தெரியும் நான் என்று அந்த அனாணியத்! தான் என்ற அகம்பாவம்  இப்லீஸின் குணம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
அல்லாஹ் எதை ஹராமாக்கி விட்டானோ அதை ஆசைப்படுவது. உங்களது உடல் சார்ந்த பொருள் சார்ந்த விருப்பம் சார்ந்த எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அதிலே நமக்கு அனுமதிக்கப்பட்டது இருக்கிறது. அனுமதிக்க படாததும் இருக்கிறது. 
 
இரண்டு சகோதரர்கள், தந்தையுடைய சட்டை பாக்கெட் அவரவருக்கு தேவையானதை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இன்று 10 மணிக்கு தந்தை இறந்து விடுகிறார். பத்து ஐந்துக்கு ஒரு சகோதரர் தன்னுடைய தந்தையின் பாக்கெட்டில் இருந்து அவருடைய கல்லாவில் மற்ற சகோதர சகோதரிகளின் அனுமதி இல்லாம் எடுத்தானேயானால் அவன் ஹராமை எடுத்து விடுகின்றான். 
 
வாரிசுகளுடைய ஹக் அங்கே சம்பந்தப்பட்டு விடுகிறது. உங்களுடைய தந்தையின் சொத்துக்களில் இருந்து நீங்கள் சாப்பிடலாம் என்று உன்னுடைய தந்தை வாழும் வரை அல்லாஹ் அனுமதித்து விட்டான்.. 
 
இதுதான் மார்க்கம். இதற்கு தான் நம்முடைய இஸ்லாம். மனிதனுடைய உடலை உயிரை பொருளை அறிவை சமூகத்தை பாதுகாக்க கூடியது, நம்முடைய மார்க்கம். மார்க்கத்தைக் கொண்டுதான் நம்முடைய சமூகத்தை சுத்தப்படுத்த முடியும். நம்முடைய கல்பை சுத்தப்படுத்த முடியும். நம்முடைய ஈமானை இஸ்லாமிய சமுதாயத்தை நம்முடைய சமுதாய வாலிபர்களை பெண்களை ஆண்களை குழந்தைகளை பாதுகாக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு மார்க்கத்தை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்வார்கள்: 
 
اللَّهُمَّ أَصْلِحْ لي دِينِي الذي هو عِصْمَةُ أَمْرِي
 
யா அல்லாஹ்! எனக்கு என்னுடைய மார்க்கத்தை சீர்படுத்தி கொடு! 
 
என்ன அர்த்தம்? என்னை மார்க்கத்தை சரியாக பின்பற்றக் கூடியவனாக ஆக்கு! அல்லாஹ்! எனக்கு இந்த மார்க்கத்தை கொண்டு தான் பாதுகாப்பு இருக்கிறது. என்னுடைய எல்லா காரியங்களின் பாதுகாப்பும் இந்த தீனை கொண்டு தான் இருக்கிறது. 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் :  முஸ்லிம், எண் : 2720.
 
இன்று மக்கள் என்ன நினைக்கிறார்கள் மார்க்கம் சிரமமாக நெருக்கடியாக இடையூறாக நினைக்கக் கூடிய அளவிற்கு அவர்களுடைய தவறான புரிதல் இந்த மார்க்கத்தின் மீது இருக்கிறது. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்: சூரத்துஷ் ஷம்ஸ் 91 வது அத்தியாயத்தை படித்து பாருங்கள். அல்குர்ஆனுடைய சூராக்களில் வேறு எங்கும் அல்லாஹு தஆலா இத்தனை சத்தியங்களை செய்யவில்லை. 11 சத்தியங்களை அல்லாஹ் செய்கிறான்.
 
وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا (5) وَالْأَرْضِ وَمَا طَحَاهَا (6) وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
 
சூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
 
சந்திரன் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது பின்தொடரும்போது!
 
பகலின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது)!
 
இரவின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது மூடும்போது!
 
வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!
 
பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!
 
ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!
 
ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
 
(நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் பாதுகாத்து, நல்லமல்களை கொண்டு) யாரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினானோ அவர் திட்டமாக வெற்றிபெற்றார்.
 
யாருக்கு அதை (-அவரது ஆன்மாவை பாவத்தில்) அல்லாஹ் மறைத்துவிட்டானோ (-வழிகேட்டில், பாவத்தில் விட்டுவிட்டானோ) அவர் திட்டமாக நஷ்டமடைந்தார். (அல்குர்ஆன் : 91:1-10)
 
வசனத்தின் கருத்து : இந்த நப்ஸு இந்த கல்பு இந்த ஆத்மாவை பற்றி அல்லாஹ் பேசும்போது 11 சத்தியங்களை செய்கிறான். மனிதனே உனது ஆன்மாவிற்குள் நல்லதை புரிய வைத்திருக்கின்றோம். கெட்டதையும் புரிய வைத்திருக்கிறோம். உன்னுடைய கல்புக்கு அந்த அறிவை கொடுத்திருக்கிறோம். அந்த ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி நீ வெற்றியை தேடு! அந்த ஆன்மாவை பாவங்களிலே புதைத்து நீ நஷ்டம் அடைந்து விடாதே! கேவலப்பட்டு விடாதே! மறுமையில் அசிங்கப்பட்டு விடாதே! 
 
அல்குர்ஆனுடைய ஆயிரக்கணக்கான வசனங்களில் வேறு எந்த ஒன்றுக்கும் அல்லாஹ் இத்தனை சத்தியங்களை செய்யவில்லை. ஒரே ஸூராவிலே 11 சத்தியங்களை செய்து அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா இந்த நப்ஸை பற்றி சொல்கிறான். 
 
இந்த கல்பு அப்படி தான். இதிலே ஈமான் நற்குணங்கள் இறையச்சம் தக்வா நல்லொழுக்கம் நல்ல குணங்கள் வந்துவிட்டால் இது சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும். இல்லையென்றால் உடல் அழகாக இருக்கலாம். உடை அழகாக கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உள்ளமோ வெறுக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். 
 
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் பற்றி ஹசன் பசரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள். ஹபஷா நாட்டை சேர்ந்த ஒரு நீக்ரோ அடிமையாக இருந்தவர் லுக்மான். ஆனால் அல்லாஹ்விடத்தில் எவ்வளவு கண்ணியமானவர்! நபிமார்களை பற்றி பெருமையாக பேசுவதைப் போன்று அல்லாஹு தஆலா லுக்மானை பற்றி பெருமையாக பேசுகிறான்:
 
وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ
 
(அல்குர்ஆன் : 31:12)
 
ஒரு சூராவை அவருடைய பெயரிலே அல்லாஹ் அமைத்து விட்டான் என்றால், அவருடைய அறிவுரைகளை சிலவற்றை அல்லாஹ் நினைவு கூர்கிறான் என்றால் எந்த அளவு உள்ளத்தை அவர் தூய்மைப்படுத்தி இருப்பார்! 
 
சகோதர்களே! இன்று நாம் மறந்து விடுகிறோம். நமக்கு அந்த உணர்வே வருவதில்லை. என்னுடைய பார்வை என்னுடைய கல்பை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குகிறதா இல்லையா? நான் எதைக் கேட்கிறேனோ அது என்னை அல்லாஹ்விடமிருந்து தூரம் ஆக்குகிறதா இல்லையா? நான் யாரிடம் பழகுகிறேனோ அவன் ஒரு ஒன்று என்னை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்க கூடியவனாக இருப்பான். இல்லை என்னை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்கக் கூடியவனாக இருப்பான். 
 
நாளை மறுமையிலே ஒரு கூட்டம் வருவார்கள். தங்களுடைய விரல்களை கடித்து கடித்து கை முழங்கை வரை கடித்து துப்பி விடுவார்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்: 
 
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا‏
 
நான் தூதரோடு நட்பை ஏற்படுத்தி இருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் : 25:27)
 
[அல்லாஹ்வுடைய தூதர் இப்போது நமக்கு இல்லை, நபிமார்கள் இல்லை. ஆனாலும் நாம் அவர்களோடு நட்பை ஏற்படுத்தலாம். எப்படி? அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாம் அமல் செய்வோமேயானால் அவர்களை நேசிப்போமேயானால் அவர்களுடைய அமல்களை அவர்களுடைய தீனை பின்பற்றுவோமேயானால்.]
 
يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏
 
அந்த மனிதன் சொல்வான்: நான் அவனை எனது நண்பனாக எனது சகோதரனாக எனது உற்ற தோழனாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டுமே! என்னை வழி கெடுத்து விட்டானே! (அல்குர்ஆன் 25:28)
 
சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள்! எத்தனை நல்லவர்கள் கெட்ட தோழமையால் கெட்டு இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வுடைய தூதர் நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சூராவுடைய வசனத்தை ஓதும் போது இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக ஒரு அறிவிப்பு வருகிறது. இமாம் தபரி பதிவு செய்கிறார்கள். 
 
அல்லாஹ்விடத்திலே உடனே இறைஞ்சுவார்கள்.
 
اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
 
யா அல்லாஹ் என்னுடைய உள்ளத்திற்கு தக்வாவை கொடு! நீதான் இந்த உள்ளத்தினுடைய இந்த நப்ஸுடைய பொறுப்பாளனாக பாதுகாவலனாக இருக்கிறாய். இதனுடைய எஜமானனாக இருக்கிறாய். இந்த உள்ளத்தை சுத்தப்படுத்தக் கூடியவர்களிலேயே நீயே மிகச்சிறந்தவனாக இருக்கிறாய். 
 
அறிவிப்பாளர்: ஸைது இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2722.
 
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) என்ற வசனத்தை ஓதிய போது அல்லாஹ் என்னுடைய நப்ஸுக்கு தக்வாவை கொடு!   என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 11191, தரம் : பலவீனமானது.
 
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்விடத்திலே நாம் கேட்க வேண்டிய நமது தேவைகளில் மிகப்பெரிய தேவை இந்த உள்ளத்தின் சீர்திருத்தம். இந்த கல்புடைய வெற்றி. இந்த ஆன்மாவின் வெற்றி. இந்த ஆன்மாவுக்கு தேவையான நன்மைகள் நல்ல ஒழுக்கங்கள் நல்ல பண்புகள். 
 
உடலுக்கு தேவையான உணவை கேட்கிறோம். காசை கேட்கிறோம். செல்வத்தை கேட்கிறோம். வசதியை கேட்கிறோம். ஆனால், இந்த கல்புக்கு தேவையானதை எந்த அளவு அக்கறையோடு வலியுறுத்தி அல்லாஹ்விடத்திலே கேட்கிறோம்! 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆக்கள் எல்லாவற்றையும் நீங்கள் தொகுத்து பாருங்கள். அவர்கள் கேட்டது மறுமைக்காக மட்டுமே. அவர்கள் கேட்டது இந்த கல்புடைய சீர்திருத்தத்திற்காக மட்டுமே. 
 
அதிகப்படியாக உலகத்திற்காக அவர்கள் கேட்டது என்ன தெரியுமா? யா அல்லாஹ் கடன்சுமை பெருகிவிடுவதிலிருந்து பாதுகாப்பாயாக! மனிதர்களின் ஆதிக்கம் என் மீது ஏற்படுத்துவதில் இருந்து என்னை பாதுகாப்பாயாக! 
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் :  அபூதாவூது, எண் :5487.
 
அதாவது உலகத்தில் எவ்வளவு குறைவான தேவையை கேட்க முடியுமோ அவ்வளவு குறைவானதை கேட்டார்கள். மறுமைக்கு கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாமோ மறுமைக்கு எவ்வளவு குறைவாக கேட்க முடியுமோ அவ்வளவு குறைவாக கேட்கிறோம். துன்யாவுக்கு எவ்வளவு அதிகமாக கேட்டுக்கொண்டே இருக்க முடியுமோ அவ்வளவு கேட்டுக் கொண்டே இருக்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்வார்கள்: யா அல்லாஹ் என்னுடைய நப்ஸுக்கு தக்வாவை கொடு! இந்த உள்ளத்தை சுத்தப்படுத்து! நீதான் இதை சுத்தப்படுத்த கூடியவர்களில் மிகச்சிறந்தவன். நீ இதனுடைய பொறுப்பாளன். பாதுகாவலன். நீ இதனுடைய தலைவனாக இருக்கிறாய். 
 
அறிவிப்பாளர்: ஸைது இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2722.
 
ஒருமுறை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோடு அவருடைய வீட்டில் இருக்கும் பொழுது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இரவிலே எழுந்தவர்கள். எங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய உடம்பை காணவில்லையே ஒரே பாயிலே படுத்து இருக்கும் பொழுது உடலை காணவில்லையே என்று கையால் இப்படி தட்டி தடவி பார்க்கிறார்கள். 
 
கடைசியிலே பார்த்தால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தலையின் மீது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவுடைய கை படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஜ்தாவிலே இருக்கிறார்கள். ஏதோ சொல்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா காதுகொடுத்துக்கேட்கிறார்கள். அங்கே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
 
اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
 
என்ற துஆவை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேரம் தஹஜ்ஜத் உடைய தொழுகை சுஜூதிலே அல்லாஹ்விடத்திலே கேட்கிறார்கள்: 
 
என் இறைவா என் நப்ஸுக்கு தக்வாவை கொடு! இந்த உள்ளத்தை சுத்தப்படுத்து! 
 
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் :  முஸ்னது அஹ்மது, எண்: 25757.
 
எந்த அளவு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து கவலைப்பட்டு இருப்பார்கள்! 
 
அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். (அல்குர்ஆன் : 48:2)
 
அவர்களே இத்தகைய துஆக்களுக்கு இவ்வளவு அதிகம் தேவை உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால் நம்முடைய நிலைமையை நினைத்து பாருங்கள்! நமக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்களை நினைத்துப் பாருங்கள்! 
 
நல்ல மாற்றம் ஒரு வருஷத்திலே நமக்கு ரொம்ப சிரமப்பட்டு ஒன்று வந்தால் ஒரே நாளில் 100 கெட்ட மாற்றங்கள் வந்து விடுகின்றன. அந்த அளவுக்கு கெட்டதோடு பழகி கெட்டதை பார்த்து கெட்டதை கேட்டு அந்த சூழ்நிலையிலிருந்து எப்படி பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடி வருமோ அந்த மாதிரி நம்முடைய ஆன்மாக்கள் கெட்டதை தீயதை அசிங்கத்தை தவறானதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
நமக்கு எவ்வளவு முக்கியம் இந்த துஆக்களை ஓதுவது. நம்முடைய கல்புனுடைய சுத்தத்தின் மீது நாம் கவனம் செலுத்துவது. நம்முடைய தொழுகை அப்போதுதான் பரிசுத்தம்  அடைகிறது.
 
நம்முடைய நோன்பு இந்த கல்பு சுத்தமாக இருப்பதைக் கொண்டுதான் அல்லாஹ்விடத்திலே உயருகிறது. எந்த இபாதத்தாக இருந்தாலும் சரி இந்த கல்புடைய சுத்தத்தோடு அது கலக்கும்போது சுபஹானல்லாஹ் அதுதான் உண்மையான அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறைவான ஒரு இபாதத்தாக மறுமைக்கான வெற்றிக்கான இபாதத்தாக மாறுகிறது. 
 
ஆகவே, ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடத்தில் நல்ல துவாக்களை கேட்க வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கைக்கு கேட்பதைவிட நம்முடைய கல்புக்காக அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டும் நம்முடைய கல்பை நாம் பரிசோதிக்க வேண்டும். 
 
என்னிடத்திலே என்ன கெட்ட குணம் இருக்கிறது? நான் என்ன தவறு செய்கிறேன்? என்னிடத்திலே என்ன தீய பண்பு இருக்கிறது? என்று ஒவ்வொன்றையும் ஹதீஸ் குர்ஆனின் வாயிலாக உணர்ந்து படித்து அந்த அறிவுரைகளைக் கொண்டு நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். 
 
அல்லாஹு ஸுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் பரிசுத்தமாக்கப்பட்ட உள்ளத்தை தந்தருள்வானாக! அல்லாஹ்வுடைய பொருத்தத்தைக் கொண்டு அல்லாஹ் விரும்பக்கூடிய நற்குணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கல்பை நப்ஸை அல்லாஹ் தந்தருள்வானாக! அல்லாஹ் வெறுக்கக்கூடிய கெட்ட தீய குணங்கள் பண்புகளிலிருந்து அல்லாஹு சுபஹானஹு வ தஆலா நம் அனைவருடைய உள்ளங்களையும் பரிசுத்தப்படுத்துவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/