பெற்றோருடன் சான்றோர் | Tamil Bayan - 899
பெற்றோருடன் சான்றோர்
ஜுமுஆ குத்பா தலைப்பு : பெற்றோருடன் சான்றோர்
வரிசை : 899
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 02-08-2024 | 27-01-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக; தக்வாவை உபதேசம் செய்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை பேணுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய அன்பையும் அவனுடைய மன்னிப்பையும் அவனுடைய அருளையும் மறுமை வெற்றியையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய குறைகளை பொறுத்தருள்வானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்று முறையாக அதை பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய சிறப்பிற்குரிய சான்றோர், சஹாபாக்களிடத்திலே கல்வி பயின்ற அவர்களோடு வாழ்ந்த அவர்களுடைய மாணவர்கள் தாபிவூன் என்று அழைக்கப்படுகிறார்கள்.
சஹாபாக்களை நல்ல வழியில் பின்பற்றி வந்த நல்ல மக்கள், தங்களுடைய பெற்றோர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள்? குர்ஆன் ஹதீஸை எப்படி தங்களது பெற்றோர்கள் விஷயத்தில் செயல் வடிவிலே கொண்டு வந்தார்கள்? என்பதை தான் நாம் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! அதற்கு முன்பாக சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம். இன்று பொதுவாக நம்முடைய நிலைமை என்னவென்றால், ஒரு ஹதீஸை படிக்கும் போது அதை புரிய வேண்டும்; பின்பற்ற வேண்டும்; என்னுடைய வாழ்க்கையில் அதை செயல்படுத்த வேண்டும் என்ற தேடல் மிக குறைவாக இருக்கிறது. அல்லாஹ் அருள் புரிந்த சிலரிடத்திலே தவிர.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள், அவர்கள் வழியிலே வந்த நல்லவர்களை பொறுத்தவரை அமலுக்காக ஹதீஸை படித்தார்கள். மார்க்கத்தை அமலுக்காக கற்றார்கள். பின்பற்றுவதற்காக கற்றார்கள். வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்காக மார்க்கத்தை கற்றார்கள்.
கல்வியை கல்விக்காக மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. கல்வியை அமலுக்காக கற்றார்கள். தங்களை சீர்திருத்த வேண்டும்; இந்த மார்க்கத்தின் படி தங்களை உருவாக்க வேண்டும். ஒரு சட்டம் மனதுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், அதை மனதிற்கு விருப்பமாக்ககூடியவர்களாக அந்த சான்றோர்கள் இருந்தார்கள்.
ஒரு காரியம் மனதிற்கு எவ்வளவு விருப்பமானதாக பிரியமானதாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் இருந்து தடுக்கப்பட்டு விட்டால் அதன் மீது வெறுப்பை கொண்டு வந்தார்கள். அதிலிருந்து விலகி ஓடினார்கள்.
இன்று, நம்மிடத்திலே மார்க்க கல்வி அதிகம் இருக்கிறது. ஆனால், அமல் எங்கே இருக்கிறது? கேட்கிறோம். புரிகிறோம். ஆனால், மஸ்ஜிதை விட்டு வெளியே போகும்போது கேட்டதில் சில விஷயங்களை மனதிலே நிறுத்திக் கொண்டு இதை உடனடியாக எனது வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்று அதற்குரிய இடங்களை நேரங்களை தேடுகிறோமா?
உடனே உலக காரியங்களிலே மூழ்கி கேட்டதை எல்லாம் மறக்கக் கூடிய சமுதாயமாக நாம் இருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா பெற்றோர்களைப் பற்றி சொல்கிறான்:
وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ
மனிதனுக்கு அவனுடைய பெற்றோரை பேணும்படி நாம் கட்டளை கொடுத்துள்ளோம். (அல்குர்ஆன் 31:14)
எப்பேர்ப்பட்ட வாசகம் இது! தக்வாவை இதே வாசகத்தை கொண்டு அல்லாஹ் சொல்கிறான். நீதத்தை இதே வாசகத்தை கொண்டு அல்லாஹ் சொல்கிறான். பெற்றோரை பேணும்படி அதே வாசகத்தை கொண்டு அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹுவாகிய என்னுடைய வசியத் -என்னுடைய உபதேசம், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய பெற்றோரை பேணும்படி.
வசனத்தின் கருத்து : மனிதனே உன்னுடைய தாய் உன்னை எப்படி கர்ப்பத்தில் சுமந்தாள் தெரியுமா? அவ்வளவு பலவீனத்திற்கு மேல் பலவீனத்தோடு உன்னை சுமந்தாள்.
உனக்கு இரண்டு ஆண்டுகள் பால் கொடுத்தாள். சொல்லிவிட்டு அல்லாஹ் சொல்கிறான்: மனிதா எனக்கு நன்றி உள்ளவனாக இரு! உன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றி உள்ளவனாக இரு!
மனிதா நீ எங்கே போயிருவ? நீ பணக்காரனா? நீ பெரிய செல்வந்தனா? பெரிய அரசனா? உன்னுடைய மமதை, பெருமை, கர்வம், ஆணவம் உன்னுடைய இந்த ஆடம்பரமாக அகம்பாவ வாழ்க்கை எத்தனை நாளைக்கு? எவ்வளவு காலத்திற்கு? நீ எங்கே சென்றாலும் என்னிடம் தான் திரும்ப வர இருக்கிறது. கணக்கு வழக்கு என்னிடத்திலே இருக்கிறது. பயந்து கொள்! உன் பெற்றோரை மறந்து விடாதே! புறக்கணித்து விடாதே! (அல்குர்ஆன் 31:14)
எவ்வளவு அழுத்தமான வசனத்தை அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒருவர் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே!
مَن أحَقُّ النَّاسِ بحُسْنِ صَحَابَتِي؟ قالَ: أُمُّكَ، قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أُمُّكَ، قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أُمُّكَ، قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أبُوكَ
நான் பழகுவதற்கு, நேசிப்பதற்கு, நான் சேர்ந்து வாழ்வதற்கு, உதவி உபகாரங்கள் செய்வதற்கு மக்களிலேயே மிகவும் உரிமை உள்ளவர்கள் யார்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உன்னுடைய தாய். பிறகு யார்? என்று கேட்டார். உன்னுடைய தாய். பிறகு கேட்டார்; யார்? உன்னுடைய தாய். பிறகு யார்? அல்லாஹ்வின் தூதரே! சொன்னார்கள்: உன்னுடைய தந்தை.
அறிவிப்பாளர் : அபு ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5971.
சகோதரர்களே! ஒரு தாய்க்கு ஒரு மகன் நன்றி செலுத்தி விட முடியாது. வணக்க வழிபாடுகளை செய்து, எப்படி அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு அடியான் நன்றி செலுத்த முடியாதோ அது போன்றுதான் ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு செய்த அந்த பணிவிடைகளுக்கு அந்த பிள்ளைகள் தன்னுடைய தாய்க்கு எத்தகைய பிரதி உபகாரங்களை செய்தாலும், அவர்கள் தன்னுடைய தாய் பட்ட சிரமத்திற்கு தன்னை வளர்ப்பதில், தன்னை பேணிப் பாதுகாப்பதில், தன்னை உருவாக்குவதில், தன்னுடைய சுய நலனிலே அக்கறை செலுத்தியதில் அந்த தாய் பட்ட சிரமத்திற்கு எந்த ஒரு மகனும் மகளும் நன்றி செலுத்தி விட முடியாது.
மூன்று முறை அந்த மனிதர் கேட்கிறார். பிறகு யார்? பிறகு யார்? பிறகு யார்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உனது தாய் தான் உனது தாய் தான் உனது தாய் தான்.
அன்பான சகோதரர்களே! நமக்கு புரியவில்லை. நாம் ஒரு வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வணக்க வழிபாடுகளையே மறக்க கூடிய சமுதாயமாக நாம் மாறி இருக்கிறோமே.
பெற்றோர்களை மறப்பதெல்லாம் இந்த சமுதாயத்திலே ரொம்ப சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அல்லாஹ் மன்னிப்பானாக! பாதுகாப்பானாக!
கண்ணியத்திற்குரிய சான்றோர் அந்த சஹாபாக்களுடைய வரலாறுகளை பாருங்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, அவர் குர்ஆனின் விரிவுரையாளர், சொல்கிறார்கள்:
யாரிடத்தில் அவருடைய இரண்டு பெற்றோரும் இருக்கிறார்களோ காலையிலும் மாலையிலும் அந்த பெற்றோருக்கு அவன் உதவி உபகாரம் செய்கிறானோ அல்லாஹு தஆலா அவனுக்கு சொர்க்கத்திலிருந்து இரண்டு வாசல்களை திறந்தே வைத்து விடுவான்.
அல்லாஹு அக்பர்! மேலும் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா சொல்கிறார்கள்: இப்போது நாம் பார்த்த சூரா லுக்மானுடைய 14 வது வசனத்தின் விரிவுரையிலே; எனக்கு நன்றி செலுத்து; உன்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா;
நீ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாய். அதாவது வணக்க வழிபாடுகளை செய்தாய். உனது பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தவில்லை. அதாவது அவர்களுக்கு பணிவிடை செய்யவில்லை. அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்கவில்லை. அவர்களை பராமரிப்பதற்கு செலவு செய்யவில்லை. அவர்களோடு உட்காருவதற்கு பேசுவதற்கு நேரம் கொடுக்கவில்லை. அவர்களோடு அன்பாக பழகவில்லை. இப்படி நீ அவர்களுக்கு நன்றி செலுத்தவில்லை என்றால் உன்னிடமிருந்து முதலாவது நன்றியும் ஏற்றுக் கொள்ளப்படாது.
நீ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாய். ஆனால் உன்னுடைய பெற்றோருக்கு நன்றி செலுத்தவில்லை என்றால் உன்னுடைய முதலாவது நன்றி ஏற்றுக் கொள்ளப்படாது. அது என்ன? நீ அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும் என்று இபாதத்து செய்தாய் அல்லவா. அது ஏற்றுக்கொள்ளப்படாது. எவ்வளவு நுணுக்கமான விளக்கத்தை சொல்கிறார்கள்.
ஏன்? இங்கே فعل என்ற கட்டளை ஒன்று, கட்டளை கொடுக்கப்படக்கூடிய செய்திகள் இரண்டு. ##எனக்கு நன்றி செலுத்து## **உன் பெற்றோருக்கு நன்றி செலுத்து** என்று தனித்தனியாக அல்லாஹ் பிரிக்கவில்லை. அல்லாஹ் இரண்டுக்கும் ஒரே கட்டளை. {{நன்றி செலுத்து}} [[எனக்கும் உன்னுடைய பெற்றோருக்கும்]] என்று அல்லாஹ் சேர்த்தே சொல்கிறான்..
எனவே, நீ அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அது உன்னுடைய பெற்றோருக்கு நீ செய்யக்கூடிய நன்றியோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
அன்பான சகோதரர்களே! அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா மேலும் சொல்கிறார்கள்: நம்முடைய பெற்றோரிடத்திலே எப்படி நாம் பணிவாக அடக்கமாக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால், கடின குணம் உள்ள முரட்டு சுபாவம் உள்ள ஒரு எஜமானி (முதலாளியி) டத்திலே குற்றம் செய்த (தொழிலாளி) அடிமை எப்படி பணிவாக பயந்து நடப்பானோ அப்படி நீ உன்னுடைய பெற்றோருக்கு முன்னால் பணிவாக பயந்தவனாக அடக்க மிக்கவனாக இருக்க வேண்டும்.
நம்மில் பலர் பெற்றோரை விட தங்களது குரலை எப்போதுமே உயர்த்திப் பேசுகிறார்கள். பெற்றோரை மிரட்டுகிறார்கள். அதட்டுகிறார்கள். பிள்ளைகள் தங்களது பெற்றோர்களிடத்திலே கோபித்துக் கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய அக்கிரமம் யோசித்துப் பாருங்கள்!
பிள்ளை தனது தாய் தந்தையிடத்திலே கோபிக்கிறார். அவர்களை இவர் வெறுக்கிறார். புறக்கணிக்கிறார். அல்லாஹ்வுடைய சாபத்திற்கு எவ்வளவு நெருக்கமாக ஆகிறார்கள்! பாருங்கள்!
அலி ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: ஹதீஸ்களிலே வருகிறது; பெரும் பாவங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பெற்றோருக்கு மாறு செய்வது என்று.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5977.
அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்: உங்களுடைய தாய் தந்தை கவலைப்படும்படி அவர்களுக்கு நீங்கள் ஒரு கவலையை கொடுத்து விட்டால் அவர்களுக்கு நீங்கள் நோவினை செய்து விட்டீர்கள். அவர்களுக்கு நீங்கள் மாறு செய்து விட்டீர்கள்.
அல்லாஹ் அக்பர்! عقوق الوالدين என்றால் என்ன? அவர்களை நீங்கள் கவலைப்படுத்துவது.
மேலும், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: மனிதனே நீ பெற்றோரைப் பார்த்து அவர்களை சீ, போ என்று சொல்லாதே பேசி விடாதே என்று அல்லாஹ் சொல்கின்றானே. இதை விட ஒரு கடுமையான வார்த்தை இருக்குமேயானால் அதை அல்லாஹு தஆலா சொல்லி இருப்பான்.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:
ஹாரிஸ் இப்னு நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு தனது தாயாரிடத்திலே எப்படி நடப்பார்கள் என்றால் பெரிய சஹாபி. இவரே ஒரு வயதானவர். தனது அன்னைக்கு அவர்கள் தனது கரத்தால் உணவு ஊட்டி விடுவார்கள்.
அது மட்டுமல்ல தாயாரிடத்திலே பேசிக் கொண்டு இருந்தால் மறுப்பேச்சு பேசுவது மட்டுமல்ல, அந்த தாய் ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டால் நீங்கள் என்ன சொன்னீர்கள்? இப்போது என்ன பேசினீர்கள்? என்று திரும்பக்கேட்க மாட்டார்கள்.
தன்னுடைய தாயை அவர்கள் சொன்னதை திரும்ப சொல்ல வைப்பது கூட அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்காக அவர்கள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருந்துவிட்டு வெளியே வந்தவுடன் உடன் இருந்தவர்களிடத்திலே எங்க அம்மா என்ன சொன்னாங்க புரிஞ்சிச்சா அதை எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்பார்கள்.
எந்த அளவு மதித்தார்கள்! தன்னுடைய தாய்க்கு அவர்கள் செய்த அந்த ஈடுபாட்டை பாருங்கள்! ஒரு வார்த்தையை திரும்ப சொல்ல வைப்பது கூட தனது தாய்க்கு சிரமத்தை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக சரிமா சரிமா என்று சொல்லிவிட்டு, வெளியே வந்தவுடன் பக்கத்தில் இருந்தவர்களிடத்திலே எங்க அம்மா என்ன சொன்னாங்க என்று கவனிச்சீங்களா நான் புரிந்து கொண்டது சரிதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வார்கள் என்றால் எந்த அளவு தாயிடத்திலே பணிவு உள்ளவர்களாக திகழ்ந்துள்ளார்கள்.
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சொல்கிறார்கள்: நான் இஸ்லாமை ஏற்றதிலிருந்து எனது தாயை நான் முறைத்துப் பார்த்ததில்லை. அவர்கள் சொல்லியதை நான் செய்வதற்கு தயங்கியதில்லை. அவர்கள் விஷயத்தில் அவர்களுக்கு உபகாரம் செய்வதில் நான் யோசித்தது இல்லை.
அல்லாஹு அக்பர்! எத்தகைய மரியாதையை தனது தாய்க்கு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கினார்கள் பாருங்கள்!
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு.. எவ்வளவு பிரியத்திற்குரிய பாசத்திற்குரிய அந்த ஸஹாபி. என்ன செய்தார்கள் தெரியுமா? வீட்டில் இருந்து புறப்பட்டால் வெளியே செல்லும்போது வாசலிலே நின்று கொண்டு
السلام عليك يا اماه ورحمة الله وبركاته
என் அம்மாவே! அதுவும் என் பாசத்திற்குரிய அன்னையே! என்று அழைத்து அவர்களுக்கு சலாம் கூறுவார்கள். தாயார் சொல்வார்கள்:
وعليك السلام ورحمة الله وبركاته
பிறகு என்ன செய்வார்கள் என் அம்மா என் சிறு பிராயத்தில் நீங்கள் என்னை வளர்த்தீர்கள் அல்லவா. அதற்காக அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! கருணை காட்டுவானாக!
அதற்கு அந்த அம்மா சொல்லுவாங்க: அல்லாஹ் உனக்கும் கருணை காட்டுவானாக! நான் இப்போது வயது முதிர்ந்து விட்ட போது என்னோடு நீ இப்படி உபகாரமாக நடந்து கொள்கிறாயே.
அதுபோன்றுதான் வீட்டிற்கு உள்ளே வந்தாலும், வாசலிலே நின்று கொண்டு இந்த சலாமையும் இந்த துஆவையும் சொல்லிவிட்டு தான் உள்ளே வருவார்கள்.
ஆனால் இன்று நம்முடைய கலாச்சாரம் மாறி விட்டது. நாம் இஸ்லாமை ஏற்று இருக்கின்றோமே தவிர, முஸ்லிம்களுடைய கலாச்சாரமாக நமது கலாச்சாரத்தை மாற்றினோமா நம்முடைய முன்னோர்கள் சுபஹானல்லாஹ் அவர்களை குறை சொல்ல முடியாது. அவ்வளவு அழகாக உருவாக்கினார்கள்.
ஆனால், இப்போது இந்த குஃப்பார் சமூகத்தோடு கலந்து கலந்து, நாம் நம்முடைய அடையாளங்களை நம்முடைய கலாச்சாரங்களை நம்முடைய சமூக ஒற்றுமைகளை நம்முடைய குடும்ப உறவுகளை எல்லாம் சிதைத்து விட்டோம். சிதைத்து கொண்டே இருக்கிறோம்.
சுதந்திரம், தனிநபரின் உரிமை, எனக்கென்று ஒரு விருப்பம் இல்லையா? இப்படி எல்லாம் குஃப்பாரின் கலாச்சார பேச்சு நம்முடைய சிந்தனைகளிலே புகுத்தப்பட்டு புகுத்தப்பட்டு, பெற்றோர் ஒன்று சொன்னால் அதற்கு மாற்றம் செய்வது தான் நம்முடைய உரிமை என்று நினைக்கக்கூடிய அளவுக்கு சிந்தனை சீர்கெடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் சொல்லி நான் கேட்க வேண்டுமா? நான் என்ன அவர்களுக்கு அடிமையா?
அது போன்று தான், கணவன் மனைவி விஷயத்தில் பெண்ணியம் பேசுகிறார்கள். என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்? முட்டாள்கள் மடையர்கள் வீணர்கள் புத்திகெட்டவர்கள். புருஷன் சொல்லிட்டா அதை நீ ஏற்றுக்கொள்வதா! நீ என்ன அவனுக்கு அடிமையா? உனக்குன்னு ஒரு விருப்பத்தை உண்டாக்கு என்று குடும்பத்தை கெடுத்தார்கள். குடும்பத்தை பிரித்தார்கள்.
அதன் காரணமாகத்தான் மேலை நாடுகளிலே திருமணம் செய்வதற்கே பயப்படுகிறார்கள். திருமணம் செய்யாமலேயே குழந்தை. அதற்குப் பிறகு 100 நபர்களில் திருமணம் முடிக்காமல் குழந்தை பெற்று வாழ்ந்தவர்களில் ஐந்து நபர் தான் அடுத்து திருமணம் வரை செல்கிறார்கள். இது தான் மேலை நாடுகளுடைய நிலைமை.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பார்க்கிறார்கள். ஒரு நபர் கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தாய் அவருடைய புஜத்திலே அமர்ந்திருக்கிறார்கள்.
அவர் இப்னு உமரை பார்த்த உடனே சொன்னார்கள்: இப்னு உமரே நான் என்னுடைய தாய்க்கு கைமாறு செய்து விட்டேனா? உங்கள் கருத்து என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சொன்னார்கள்: இல்லை செய்ய முடியாது. உன்னுடைய தாய்க்கு ஒரு உபகாரம் செய்து இருக்கிறீர். ஒரு நன்மை செய்து இருக்கிறீர். அவ்வளவுதான். இந்த குறைவான நன்மைக்கும் அல்லாஹ் அதிகமான கூலியை கொடுப்பான்.
உர்வத் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு சஹாபாக்கள் இடத்திலே கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ. ஜுபைர் இப்னு அவ்வாம் -அல் அஷ்ரத்துல் முபஷ்ஷரா உடைய மகனார். அவர்கள் சொல்கிறார்கள்:
(நீங்க உங்க தாய் தந்தைக்கு கொட்டி கொடுக்குறீங்க. காசு கேக்குறது எல்லாம் கொடுக்குறீங்க. வசதியான வீட்ல வச்சிருக்கீங்க. எல்லாம் சிறப்பான உணவு கொடுக்கிறீர்கள். ஆனால், அவர்களை நீங்கள் அன்போடு பார்ப்பதில்லை. அன்போடு பேசுவதில்லை. உங்களுடைய பார்வையிலே ஒரு பணிவு, ஒரு பாசம் ஒரு நேசம் ஒரு ஈடுபாடு ஒரு அக்கறை இல்லை. நீ செய்த நன்மை எல்லாம் வேஸ்ட்.
சொன்னார்கள்: யார் தன்னுடைய தாய் தந்தையை முறைத்துப் பார்ப்பானோ அவன் தன்னுடைய தாய் தந்தைக்கு ஒருபோதும் நன்மை செய்தவன் அல்ல.
முஹம்மது இப்னுல் முன்கதிர், இவர்களும் சஹாபியின் பிள்ளை. மிகப்பெரிய தாபியீ. மதினாவின் மிகப்பெரிய கல்விமான்களிலே ஒருவர். தன்னுடைய கன்னத்தை தரையில் வைத்துக்கொண்டு கீழே படுத்துக்கொண்டு அம்மா! உன்னுடைய பாதத்தை என்னுடைய கன்னத்தின் மீது வை என்று தனது தாயிடத்தில் சொல்வார்கள்.
ஏன்? நப்ஸுக்கு பணிவு வரனும். பெருமை வந்து விடக்கூடாது. அல்லாஹ்விற்கு முன்னால் அடியான் பெருமை அடிப்பது அவனுடைய சாபத்திற்கு உரிய, அவனுடைய துர்பாக்கியத்திற்குரிய செயலோ அதுபோன்றுதான் ஒரு மனிதன் தன்னுடைய பெற்றோருக்கு முன்னால் பெருமை அடிப்பதும்.
பெருமை கல்வியினால் வரலாம்; காசு பணத்தினால் வரலாம்; பதவியினால் வரலாம். தனக்கு இருக்கக்கூடிய பிரபலத்தினால் வரலாம். அத்தகைய பெருமை போவதற்கு தான் முஹம்மது இப்னு முன்கதிர் கீழே படுத்துக்கொண்டு எனது கன்னத்திலே நீ கால் வை! அதற்குத்தான் நான் தகுதியானவன். உன்னுடைய காலுடைய மிதிக்குத்தான் இந்த முஹம்மத் இப்னு முன்கதிர் தகுதியானவன்.
ஹஜர் இப்னு அதீ ரஹிமஹுல்லாஹ் இவர்களும் பெரிய தாபியீ. அம்மாவை இரவில் உறங்கவைப்பதற்கு முன் அந்த விரிப்பை ஒன்றுக்கு பல தடவை தடவி தடவி பார்ப்பாங்களாம். ஏன்? அந்த விரிப்புல ஏதாவது உடலை உறுத்தக்கூடிய வருத்தக்கூடிய சிறிய கற்கள், மண்கள் இருந்து விடக் கூடாது என்பதற்காக. முழுவதும் தடவி பார்த்துட்டு கூட அதற்குப் பிறகு கூட மனசு திருப்தி படாமல் அந்த படுக்கையிலே படுத்து உருண்டு பார்ப்பார்களாம். எங்கேயாவது கல் உறுத்துகிறதா என்று. அதற்கு பிறகு தான் அம்மாவை அழைத்து அதிலே படுக்க சொல்வார்களாம்.
எந்த அளவு தாய்க்கு அனுசரணை காட்டி நலம்பேணி இருக்கிறார்கள்! தாய்க்கு அக்கறை கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்!
முஹம்மது இப்னு சீரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அம்மாவுக்கு ஆடை வாங்க போனா ஆடைகளிலேயே ரொம்ப காஸ்ட்லியான டிரஸ் ரொம்ப மென்மையான டிரஸ்ஸை வாங்கிட்டு வருவார்கள்.
இன்றைய பிள்ளைகளை போன்று அல்ல. தனக்கு வாங்கினால் உள்ளதிலேயே சிறந்தது, அம்மாவுக்கு வாங்கினால் அவங்களுக்கு என்ன வயசு ஆச்சு, அவங்களுக்கு என்ன தேவை இருக்கு? அவங்களுக்கு இதெல்லாம் தேவையா?
அட முட்டாளே, அட பைத்தியக்காரனே! உன்னுடைய செல்வத்திற்கு அந்த செல்வத்தை கொண்டு நீ உபயோகப்படுத்துவதற்கு உன்னை உரிமையாளனாக நீ நினைப்பதை விட, உன்னை தகுதியானவனாக நீ நினைப்பதை விட, உன்னுடைய தந்தை உன்னுடைய தாய் உன்னுடைய செல்வத்திற்கு தகுதியானவர்கள்; உரிமை உள்ளவர்கள். புரிந்து கொள்! முட்டாளே மடையனே!
முஹம்மத் இப்னு ஸீரீன் பெரிய இமாம். நடந்து சென்றால் ஆயிரம் பேர் கூட போவாங்க. அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர். அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர். ஈராக் கூஃபா பசராவினுடைய முஃப்தி, ஃபக்கீஹ் -சட்ட வல்லுநர்.
தாயிடத்தில பேசுவதை அருகில் இருக்கிற மாணவர்கள் அல்லது புதுசா வந்தவங்க பார்த்துட்டாங்கன்னா, ஏதோ முஹம்மது இப்னு சீரினுக்கு நோய் போல இருக்கு, பேசுறதுல தடங்கல் போல இருக்கு, அதான் இப்படி பேசுறார் என்று புரிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு தாயிடத்திலே பணிவாக சத்தம் இல்லாமல் பொறுமையாக பேசுவார்கள்.
ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே ஒருவர் வந்தார். உஸ்தாத்! நான் ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்தேன். ஃபர்லான ஹஜ் முடிஞ்சிருச்சு. அடுத்து இது நபிலான ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்தேன். எங்க அம்மா கிட்ட கேட்டேன் எங்க அம்மா பர்மிஷன் கொடுத்தாங்க போயிட்டு வந்தேன்.
ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னார்கள்: அட மாணவனே! நீ உன்னுடைய தாயாருகில் உணவு விரிப்பிலே சிறிது நேரம் அவரோடு நீ உட்காருவது நீ செய்த ஹஜ்ஜை விட எனக்கு விருப்பமானது.
ஏன்? பர்ளு ஹஜ் முடிஞ்சிருச்சு. உன்னுடைய வயதான தாய்க்கு நீ பணிவிடை செய்வது ஃபர்லல்லவா? அவரை ஆதரிப்பது அனுசரிப்பது பணிவிடை செய்வது அவருக்கு நேரம் கொடுப்பது உனக்கு ஃபர்ல். நீ செய்த ஹஜ்ஜை விட அது எனக்கு மிக விருப்பமானது.
நம்ம மண்டைக்கு இதெல்லாம் விளங்காது. ஏன்னா அவ்வளவு பெருமை, ஆணவம், கர்வம், அகம்பாவம் இந்த மண்டைக்குள்ளார புகுந்து இருக்கு. காசுனால பணத்தினால தனக்கு இருக்கக்கூடிய வாய்ஸ்னால குஃப்ரியத் மண்டைக்குள்ள புகுந்திருக்கிறது. நான் என்ற பெருமை இந்த மண்டையிலே புகுந்திருக்கிறது.
உமர் இப்னு அப்துல் அஜீஸ் மிகப் பெரிய தாபியீ, ஐந்தாவது கலீஃபா என்று அழைக்கப்பட்டவர். அவர்கள் தன்னுடைய சக தோழர்கள் இடத்திலே சொன்னார்கள்:
பெற்றோருக்கு மாறு செய்யக் கூடிய நபரோடு ஒருபோதும் நீ பழகி விடாதே! அவனை நண்பனாக எடுத்துக் கொள்ளாதே! ஏனென்றால் அவன் ஒருபோதும் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் தனது பெற்றோருக்கே மாறு செய்திருக்கிறான்.
அன்பான சகோதரர்களே! இப்படியாக நம்முடைய சான்றோர்கள் தங்களுடைய பெற்றோர்களோடு மிக அன்பாக, பணிவாக, அல்லாஹ்வுடைய சட்டங்களை செயல்படுத்தியவர்களாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸிலே வந்திருப்பதைப் போன்று அந்த ஒழுக்கங்களை பின்பற்றியவர்களாக இருந்தார்கள்.
இமாம் அபூ ஹனிஃபா ரஹிமஹுல்லாஹ்வின் ஒரு சம்பவம். இமாம் அபூ ஹனிஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களை அப்பாசிய மன்னர்கள் நீதிபதியாக்க விரும்பினார்கள். அபூ ஹனிஃபா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை அப்பாசிய மன்னர்கள் பொது மக்களுக்கு மத்தியிலே சிறையில் தள்ளி சாட்டையால் அடித்தார்கள்.
பிறகு அவர்கள் விடுதலையாகி வந்தபோது இமாமே! இந்த சிரமத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்? என்று மக்கள் கேட்டார்கள். என்ன சொன்னார்கள் தெரியுமா?
எனக்கு இந்த கசையடியோ சட்டையடியோ சிறையோ பிரச்சனையில்லை. இதனைகேள்விப்பட்ட என்னுடைய அன்னை துடித்தார் அல்லவா? அதனால் கவலை கொண்டார் அல்லவா அதுதான் எனக்கு மிகப்பெரிய வலியை வேதனையை ஏற்படுத்தியது.
என்னுடைய அன்னைக்கு ஏற்பட்ட அந்த மனக்கவலை தான் எனக்கு கஷ்டமாக இருந்ததே தவிர, இவர்கள் அடித்த சாட்டை அடிகளோ, இந்த சிறையோ எனக்கு பெரிதாக இருக்கவில்லை என்றால் தன்னுடைய அன்னையின் உள்ளத்தை எந்த அளவு அவர்கள் நலம்பேணியிருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள்.
அன்பான அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய மார்க்கம் தொழுகையில் மட்டுமில்லை. நாம் வைக்கக்கூடிய தாடியில் மட்டுமில்லை. நமது சகோதரிகள் பேணுதலாக போடக்கூடிய ஹிஜாபுகளில் முகத்திரைகளில் மட்டுமல்ல.
மார்க்கம் என்பது, இன்னும் இதையெல்லாம் தாண்டி நம்முடைய குணங்களில் பண்பாடுகளில் ஒழுக்கங்களில் நம்முடைய உள்ளத்தின் வெளிப்பாடுகளிலே இருக்கிறது. சமநிலையோடு மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்.
தொழுகையில் நாம் சரியாக இருப்பதற்கு முயற்சி செய்வது போன்று குணத்தையும் சரி செய்ய வேண்டும். நம்முடைய கொடுக்கல் வாங்கலையும் சரி செய்ய வேண்டும். நம்முடைய சமூக பழக்க வழக்கங்களையும் சரி செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் அல்லாஹ்விடத்திலே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையான முஸ்லிமாக வெற்றி பெற்ற முஸ்லிமாக அல்லாஹ் பொருந்தி கொண்ட முஸ்லிமாக ஆக முடியும்.
அல்லாஹு சுபஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! நம்முடைய பெற்றோரை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக! நம்முடைய பெற்றோருக்கு அல்லாஹ் நன்மை செய்தருள்வானாக!
அவர்களில் யார் அல்லாஹ்விடத்தில் மறுமைக்கு சென்று விட்டார்களோ அவர்களுடைய கப்ருகளை அல்லாஹு தஆலா பிரகாசமாக்குவானாக! அவர்களை நல்லோரோடு அல்லாஹு தஆலா சேர்த்து வைப்பானாக! அவர்கள் செய்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்களுக்கு நாம் செய்த குறைகளை தவறுகளை அல்லாஹு தஆலா மன்னித்து அருள்வானாக! நம்மையும் அவர்களையும் அல்லாஹு தஆலா ஜன்னத்துல் பிர்தவ்ஸிலே ஒன்று சேர்ப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/