HOME      Khutba      வகத் காப மன் தஸ்ஸாஹா | Tamil Bayan - 906   
 

வகத் காப மன் தஸ்ஸாஹா | Tamil Bayan - 906

           

வகத் காப மன் தஸ்ஸாஹா | Tamil Bayan - 906


வகத் காப மன் தஸ்ஸாஹா
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வகத் காப மன் தஸ்ஸாஹா
 
வரிசை : 906
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-08- 2024 | 26-02-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணுங்கள்! அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றி படியுங்கள்! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை உறுதியாக பிடியுங்கள்! 
 
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் இந்த மார்க்கத்தில் சென்ற அதே பாதையில் பயணிப்போம் என்று உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்து இந்த நல்ல உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டி இந்த குத்பாவை ஆரம்பிக்கிறேன். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! இந்த மார்க்கத்தில் நிலைத்திருந்து முஃமின்களாக முஸ்லிம்களாக இருக்கும் நிலையிலேயே அல்லாஹு தஆலா நம்முடைய உயிர்களை கைப்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கோரி; மறுமையில் சொர்க்கத்தின் மகத்தான வெற்றியை எனக்கும் உங்களுக்கும் நமது முஸ்லிமான முஃமினான மூதாதையர்களுக்கும் நம்முடைய பெற்றோருக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் அல்லாஹுத்தஆலா தரவேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டிக் கொள்கிறேன். 
 
அன்பான சகோதரர்களே! சூரத்துஷ் ஷம்ஸுடைய ஒரு வசனத்தின் விளக்கத்தை சென்ற குத்பாவிலே பார்த்தோம். (அல்குர்ஆன் 91:9)
 
இதைத் தொடர்ந்துள்ள வசனத்திலே அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ‏
 
யார் இந்த ஆன்மாவை புதைத்து விட்டானோ அவன் திட்டமாக நஷ்டம் அடைந்து விட்டான் என்று அல்லாஹுத்தஆலா எச்சரிக்கிறான். (அல்குர்ஆன் 91:10)
 
நம்முடைய உள்ளங்களை, நம்முடைய ஆன்மாவை சுத்தப்படுத்துவதற்கு, நம்முடைய உள்ளங்களை வளர்ச்சி அடைய செய்வதற்கு நமக்கு நற்குணங்கள் வணக்க வழிபாடுகள் அவசியம். அதுபோன்றுதான் இந்த நஃப்ஸை நாம் பாதுகாக்கவும் வேண்டும். 
 
ஒரு மரத்தை ஒரு செடியை வளர்ப்பதாக இருந்தால் அதற்கு நாம் நீரும் ஊற்ற வேண்டும். அந்த மரத்தை அந்த செடியை அழிக்கக்கூடிய பூச்சிகளில் இருந்து அதை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். அப்படித்தான் இந்த ஆன்மாவும். 
 
இந்த ஆன்மாவை கெடுக்கக்கூடிய செயல்கள் இந்த ஆன்மாவை அழிக்கக்கூடிய எண்ணங்கள் குணங்கள். பண்புகள். பேச்சுகள் இருக்கின்றன. அந்த குணங்கள் மற்றும் செயல்களிலிருந்து இந்த ஆன்மாவை நாம் காக்க வேண்டும். பரிசுத்தமாக்க வேண்டும். தூரமாக்க வேண்டும். 
 
இல்லையென்றால் நம்முடைய அறிஞர்கள் உதாரணம் சொல்வார்கள்: ஓட்டை பையிலே போடப்பட்ட காசுகளைப் போல ஆகிவிடும்? ஒரு பக்கம் அமல் செய்து கொண்டே இருப்போம். ஆனால் அந்த அமல்கள் எல்லாம் பலன் இல்லாதவையாக போய்விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்; தங்களது தோழர்களிடத்திலே பரம ஏழை என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா? தோழர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் உடைய தூதரே இது எல்லோருக்கும் தெரிந்தது தானே. 
 
யாரிடத்தில் எந்தவிதமான பைசாக்கள் இல்லையோ பொருள்கள் இல்லையோ அவர் தானே பரம ஏழை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
إنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ
 
இல்லை. என்னுடைய உம்மத்தில் பரம ஏழை யார் தெரியுமா? அவர் மறுமையில் தொழுகையோடு ஜகாத்தோடு ஹஜ்ஜோடு வருவார். ஆனால் அதே மனிதர் அதே நேரத்திலே இன்னாரை ஏசினார்; இவரை திட்டினார்; இவரை அடித்தார்; இவருடைய பொருளை எடுத்துக் கொண்டார்; இவரை கொலையும் செய்தார். இப்படியாக பல குற்றங்களை சுமந்து வருவார். 
 
பிறகு சொன்னார்கள்: அந்த நாளிலே நஷ்ட ஈடு வழங்குவதற்கு திர்ஹங்கள் தீனார்கள் இருக்காது. அங்கே அமல்கள் மட்டும்தான். இவனுடைய அமல்கள் எல்லாம் எடுத்து அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கும். பிறகு இவனுடைய அமல்கள் எல்லாம் தீர்ந்து போனதற்கு பிறகு எதிராளியின் பாவங்களை எடுத்து இவனுடைய தலையின் மீது சுமத்தப்படும். 
 
பிறகு என்ன நடக்கும்? அவ்வளவு தான். நன்மைகள் தீர்ந்து விட்டன. பாவங்களால் இவன் தள்ளப்பட்டு விட்டான். சூழப்பட்டுவிட்டான். அழுத்தப்பட்டு விட்டான். பிறகு அவனுடைய முன்னேற்றி முடியை உள்ளங்காலை ஒருசேர பிடித்து நரக நெருப்பிலே வீசி எறியப்படும். இவன்தான் பரம ஏழை முஃப்லிஸ்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4678.
 
அன்பான சகோதரர்களே! தொழுகையோ இபாதத்தோ திக்ரோ நோன்பு மற்ற நபிலான வணக்கங்களோ இன்று நாம் அமல்களில் செலுத்தக்கூடிய அதே கவனத்தை அல்லது அதைவிட அதிகமான கவனத்தை அந்த நன்மைகளை அழித்து விடாமல் இருப்பதற்கு பாவங்களை விட்டு விலகுவதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாப்பு தேடினார்கள்:
 
أعوذُ بكَ مِن شرِّ نفسي
 
என் இறைவா! என்னுடைய நப்ஸுடைய தீங்கிலிருந்து கெடுதியிலிருந்து எனது நப்ஸ் எனக்கு கெடுதி செய்வதிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3392. 
 
அது எப்படி நம்முடைய நஃப்ஸ் நமக்கு கெடுதி செய்யுமா? ஆம். கெடுதி செய்யும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்பு தேடினார்கள்:
 
اللَّهمَّ إنِّي أعوذُ بِكَ مِن شرِّ سمعي، ومِن شرِّ بصَري، ومِن شرِّ لِساني، ومِن شرِّ قلبي، ومن شرِّ مَنيِّي يَعني فرجَهُ
 
யா அல்லாஹ்! என்னுடைய பார்வை எனக்கு தீங்கு செய்வதிலிருந்து, என்னுடைய செவி எனக்கு தீங்கு செய்வதிலிருந்து, என்னுடைய நப்ஸு எனக்கு தீங்கு செய்வதிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்.
 
இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்: யா அல்லாஹ் என்னுடைய இந்திரியத்தின் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். என்னுடைய மர்மஸ்தானத்தின் உணர்ச்சிகளில் இருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று. 
 
அறிவிப்பாளர் : ஷகல் இப்னு ஹுமைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் : 3492.
 
இந்த தீன் என்பது ஒரு பரிசுத்தமானது. நாளை அல்லாஹ்வை சந்திக்கும்போது பரிசுத்தமான உள்ளங்களோடு வரவேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்கிறான்.
 
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏ اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ‏
 
வசனத்தின் கருத்து : அந்த நாளில் உங்களது பிள்ளைகள் உங்களுக்கு பலன் தர மாட்டார்கள். செல்வங்கள் உங்களுக்கு பலன் அளிக்க மாட்டாது. யார் அல்லாஹ் வெறுத்த குணங்களை விட்டு குற்றச்செயல்களை விட்டு பாதுகாப்பு பெற்ற உள்ளத்தை கொண்டு வந்தாரோ பாதுகாப்பு பெற்ற உள்ளம் அந்த உள்ளத்தை அவர் பாதுகாப்பாக வைத்திருந்தார் ஷிர்க்கான எண்ணங்களிலிருந்து ஷிர்க்கான கொள்கையிலிருந்து அல்லாஹ்விற்கு பிரியம் இல்லாத பிடிக்காத எந்த ஒன்றையும் நேசிப்பதிலிருந்து அந்த உள்ளத்தை பாதுகாத்து அல்லாஹ்விடம் கொண்டு வந்தாரோ அவர்தான் நாளை மறுமையில் வெற்றி அடைவார். (அல்குர்ஆன் : 26: 88,89)
 
இந்த தீன் இதனுடைய முழுமையே அதற்காகத்தான். ஒரு மனிதனை சுத்தப்படுத்த வேண்டும் நன்மைகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கெட்ட குணங்கள் கெட்ட செயல்களிலிருந்து அவனை நீக்க வேண்டும். அதை கொண்டு தான் ஒரு மனிதன் முழுமை அடைகிறான்.
 
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ‏
 
அல்லாஹ் சொல்கிறான்: யார் இந்த ஆன்மாவை புதைத்து விட்டானோ அவன் நஷ்டம் அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91:10)
 
ஆன்மாவை புதைப்பது என்றால் என்ன? அல்லாஹ் தடுத்த பாவத்தை செய்வது. அல்லாஹ் வெறுத்த காரியத்தை செய்வது. அது கொள்கையாக இருக்கட்டும், குணங்களாக இருக்கட்டும், செயல்களாக இருக்கட்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்பு தேடிய அந்த துஆக்களை கவனியுங்கள்!
 
اللَّهمَّ إنِّي أعوذُ بِكَ من منكراتِ الأَخلاقِ والأعمالِ والأَهْواءِ
 
யா அல்லாஹ் கெட்ட குணங்களை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். கெட்ட ஆசைகளை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ் கெட்ட வெறுக்கத்தக்க குணங்களை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். கெட்ட ஆசைகளை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். 
 
அறிவிப்பாளர் : குத்பா இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3591.
 
நம்முடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். எப்படி எல்லாம் அல்லாஹ்விடத்தில் அழுது இருக்கிறார்கள்! மன்றாடி இருக்கிறார்கள் 
 
நம்முடைய குணங்களால் நம்முடைய நஃப்ஸ் கெட்டுப் போகிறது என்பது நமக்கு புரியவில்லை. ஹராமானதை பார்ப்பதால், ஹராமானதை செய்வதால், பொறாமை படுவதால், பேராசைப்படுவதால், பிறர் மீது கெட்ட எண்ணம் வைப்பதால் நம்முடைய உள்ளம் கெட்டுப் போகிறது. 
 
உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே ஒரு சட்டம் இருக்கிறது. சூரா நூரிலே அல்லாஹ் சொல்கிறான்: 
 
وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏
 
முஃமினான பத்தினியான ஒழுக்கமான பெண்கள் மீது தவறான குற்றம் சுமத்தி பிறகு அதற்கு நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையென்றால் அவர்களுக்கு 80 கசையடி கொடுங்கள். அவர்களுடைய சாட்சிகளை வாழ்நாள் முழுதும் ஒப்புக் கொள்ளாதீர்கள். அவர்கள் பாவிகள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 24:4)
 
எப்பேர்பட்ட சட்டம் யோசித்துப் பாருங்கள்! ஒரு முஃமினான பெண் மீது பழி சுமத்துவது அந்த அளவு அவனுடைய நஃப்ஸை கெடுத்து விடுகிறது. தப்பான எண்ணம் வருகிறது பிறகு அந்த எண்ணத்தை அவனுடைய நாவு வெளிப்படுத்துகிறது. 
 
அவனுடைய கையும் காலும் அவனுடைய உடலும் துணிந்து வந்து ஒரு அதிகாரியிடத்திலே சாட்சி சொல்கிறது. இப்படிப்பட்டவன் மோசமானவன். சமுதாயத்தில் இவனை முன்னிலைப்படுத்தப்படவே கூடாது. ஒரு மஜ்லிஸிலே உட்காருவதற்கே தகுதியற்றவன். ஒருபோதும் இவனுடைய சாட்சி ஏற்கபடக்கூடாது. 
 
நம்முடைய பேச்சு நம்முடைய உள்ளத்தை கெடுக்கும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
بحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أنْ يَحْقِرَ أخاهُ المُسْلِم
 
தன்னுடைய முஸ்லிமான சகோதரனை பார்க்கும் பொழுது அவருடைய ஆடையை வைத்து அவரை மதிப்பது. அவருடைய பொருள்களை வைத்து அவரை மதிப்பது. இழிவாக பார்ப்பது. தரக்குறைவாக பார்ப்பது. இது போதும் அவன் கெட்டவன் என்பதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை.
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.
 
சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அறியாதவர்களுக்கு சலாம் சொல்ல மாட்டார்கள். பாதையிலே போக வரக்கூடியவர்களை பார்த்து புன்முறுவல் பூத்தால் இவர்கள் முகம் மலர மாட்டார்கள். அப்படியே முறைச்சிக்கிட்டே போயிடுவாங்க. ஏன் நாமும் பதிலுக்கு சிரித்து விட்டால் ஏதாவது கேட்டு விடுவார்களோ, சலாமுக்கு பதில் சொல்லிவிட்டால் நம்மை நெருங்கி ஏதாவது தேவைகளை சொல்வார்களோ. இது அந்த முஸ்லிமை மட்டமாக இளக்காரமாக பார்ப்பது. 
 
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே இது எவ்வளவு பெரிய பாவம் தவறு என்பதை புரியாமலேயே நாம் இருக்கிறோம். தொழுது விட்டு செல்கிறோம். எத்தனை மிஸ்கின்கள் நம்மை சந்திக்கிறார்கள். அல்லாஹ் என்ன சொல்கிறான்? முடிந்தால் கொடு அவ்வளவுதான். நீ கொடுப்பது கட்டாயம் அல்ல. ஆனால் அவனைப் பற்றி நீ தவறாக நினைக்க கூடாது. உனக்கு அந்த உரிமை இல்லை. அவன் என்னுடைய அடிமை என்னுடைய அடியானுக்கும் உனக்கும் உணவளிப்பவன் நான்.
 
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْ‏
 
யாசகம் கேட்பவர்களை அதட்டாதீர்! கடின வார்த்தைகளை அவர்களுக்கு கூறாதீர்! (அல்குர்ஆன் : 93:10)
 
وَفِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ‏
 
முஃமின்கள் அவர்களது சொத்திலே ஒரு பங்கை, கேட்டு வருபவர்களுக்கும் கேட்காதவர்களுக்கும் ஒதுக்கி விடுவார்கள்.. (அல்குர்ஆன் 51:19)
 
இப்படி அல்லாஹ் உன்னை புகழ்ந்து இருக்க, இப்படி அல்லாஹ் உன்னை உயர்த்தி இருக்க, உன்னுடைய வீட்டு வாசலை தேடி வந்தவனை நீ தரக்குறைவாக பார்க்கிறாய் என்றால் மட்டமாக பேசுகிறாய் என்றால் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்! எவ்வளவு பெரிய கெட்ட செயலை நீ செய்கிறாய் என்று. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதரனை இளக்காரமாக பார்ப்பது இது போதும் அவன் கெட்டவன் என்பதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் :  முஸ்லிம், எண்: 2564.
 
தன்னுடைய முஸ்லிமான சகோதரனை இழிவாக மட்டமாக குறைவாக மதிப்பிடுவது அந்த முஸ்லிமுக்கு போதும் அவன் அல்லாவிடத்தில் கெட்டவனாக ஷர் ஒரு தீய சக்தியாக ஆகிவிட்டான் என்பதற்கு. 
 
இப்படி நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நம்முடைய கல்போடு சம்பந்தப்படுகிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
ஒரு பார்வையை அடுத்த பார்வையை கொண்டு நீங்கள் பின் தொடர்ந்து விடாதீர்கள். பார்வை ஷைத்தானுடைய அம்புகளிலே ஒரு அம்பு என்று. 
 
அறிவிப்பாளர் : புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல் :  அபூ தாவூத், எண்: 2149.
 
அல்லாஹு தஆலா, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல இடங்களிலே ஒரு சட்டத்தை பொதுவாக சொல்லிவிடுவான். அது முஸ்லிமான முஃமினான எல்லாருக்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் ஆண்களே என்று அல்லாஹ் அழைத்து சொல்வான். பெண்களே என்று அல்லாஹ் அழைத்து சொல்வான். குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட சில சட்டங்களில். 
 
அப்படித்தான் இந்த பார்வையை பாதுகாப்பது தாழ்த்துவது என்ற சட்டம் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
 
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌  ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ‏
 
நபியே! முஃமினான ஆண்களுக்கு சொல்லுங்கள்; அவர்கள் தங்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களுடைய மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுதான் அவர்களை சுத்தப்படுத்தக் கூடியது. (அல்குர்ஆன் 24:30)
 
அன்பான சகோதரர்களே! தொழுகை மட்டும் போதாது உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கு. புரிந்து கொள்ளுங்கள்! நம்முடைய நோன்பு, ஜக்காத், ஹஜ், தான தர்மங்கள் மட்டும் போதாது. இது ஒரு பக்கம் தேவை. இன்னொரு பக்கம் எதை செய்யக்கூடாதோ அதை செய்யாமல் இருப்பது தேவை. 
 
அவர்கள் பார்வையை தாழ்த்தினால் அவர்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்தால் அவர்களுடைய உள்ளம் சுத்தமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
 
 ق وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ
 
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக்கூடிய (ஹிஜாபின் வெளிப்புறத்)தைத் தவிர எதையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். (அல்குர்ஆன் : 24:31)
 
யோசித்துப் பாருங்கள்! நம்முடைய வாழ்க்கையிலே அல்லாஹ்வை எந்த நேரத்தில் சந்திப்போம் என்று யாருக்கு தெரியும். நம்முடைய கல்பு சுத்தமாகவில்லை என்றால் இந்த உலகத்திலிருந்து எதை நாம் கொண்டு போவோம்? 
 
அல்லாஹ்வுடைய தூதர் வாழ்நாள் எல்லாம் இதற்காக அல்லாஹ்விடத்திலே கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்த துஆவிலே சில நேரம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீருக்கு பிறகு இந்த துஆவை ஓதுவார்கள். அல்லாஹ்விடத்திலே கேட்பார்கள்; 
 
وَاهْدِنِي لأَحْسَنِ الأخْلَاقِ، لا يَهْدِي لأَحْسَنِهَا إلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إلَّا أَنْتَ
 
யா அல்லாஹ்! எனக்கு நற்குணங்களுக்கு வழிகாட்டு! அழகிய குணங்களுக்கு எனக்கு வழிகாட்டு! வழிகாட்டுவதற்கு நற்குணங்களை சொல்லிக் கொடுப்பதற்கு நற்குணங்களின் பக்கம் என்னை இழுத்து செல்வதற்கு நற்குணங்களிலே என்னை வழிநடத்துவதற்கு உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு இல்லை.
 
அறிவிப்பாளர் : அலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 771.
 
பிறகு சொன்னார்கள்: நற்குணம் மட்டும் இருந்தால் போதுமா? அழகிய குணங்கள் மட்டும் இருந்தால் போதுமா? கெட்ட குணங்கள் இருக்கக்கூடாது. 
 
நீங்கள் பாருங்கள்; குர்ஆனிலே நீங்கள் நீதமாக தராசை நிறுங்கள் என்று மட்டும் இருக்காது. நீதமாக தராசை நிறுங்கள். அதிலே அளவையில் குறைவு செய்து விடாதீர்கள் என்றும் அல்லாஹுத்தஆலா கட்டளையிட்டு இருப்பான். 
 
நன்மையை ஏவுகின்ற அதே இடத்தில் தீமையை அல்லாஹு தஆலா கண்டித்திருப்பான். உண்மை பேசுங்கள் என்று சொன்ன இடத்திலே பொய்யர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் அடுத்து கேட்டார்கள்; யா அல்லாஹ் என்னிடமிருந்து கெட்ட குணங்களை எல்லாம் திருப்பிவிடு! வெளியாக்கி விடு! ஏனென்றால் உன்னை தவிர வேறு யாரும் என்னிடமிருந்து கெட்ட குணங்களை நீக்க முடியாது. 
 
யாரால் நீக்க முடியும்? பெற்ற தந்தை பிள்ளைகளுடைய கெட்ட குணங்களை நீக்கிவிட முடியுமா? ஒரு கணவன் மனைவியின் கெட்ட குணத்தை நீக்கிவிட முடியுமா? மனைவி கணவனின் கெட்ட குணத்தை நீக்கிவிட முடியுமா? 
 
சொல்ல முடியும் அவ்வளவுதான். வழிகாட்ட முடியும். உபதேசிக்க முடியும். 
 
நம்முடைய முன்னேற்றி முடி அல்லாஹ்வின் கையிலே இருக்கிறது.
 
நம்மில் அல்லாஹ்வுடைய தீர்ப்பு செல்லுபடியாக கூடியது. அல்லாஹ் கரம் பிடித்து நம்மை பாதுகாக்கவில்லை என்றால் நம்மில் யாரும் பாதுகாப்பு பெற்றவர்களாக ஆக முடியாது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹமது, எண்: 3712 ,4318.
 
நப்ஸுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தருகிறார்கள். 
 
இன்று நாம் எந்த அளவு குர்ஆனிலே இந்த நப்ஃஸை பற்றி கல்ப்பை பற்றி இதை பாதுகாக்க வேண்டும், இது சீரழிந்து விடாது கவனமாக இருக்க வேண்டும். அல்குர்ஆனிலே சுன்னாவிலே வலியுறுத்தப்பட்ட போதிக்கப்பட்ட அளவு கவனமாக பாதுகாக்க வேண்டும்.  ஆனால் நாமோ மிக அலட்சியமாக இருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! 
 
ஒரு நாளைக்கு ஒரு நற்குணத்தை கற்றுக்கொண்டு அதை செயல்படுத்துகிறோமா? அது போன்று ஒரு கெட்ட குணம் அது கஞ்சத்தனமோ கருமித்தனமோ கெட்ட வார்த்தைகளை பேசுவதோ ஆபாசமான வார்த்தைகளை பேசுவதோ இன்று எவ்வளவு பேர் சர்வ சாதாரணமாக அசிங்கமான வார்த்தைகளை நாவு கூசும் படியான வார்த்தைகளை செவியால் கேட்பதற்கு வெட்கப்படும்படியான வார்த்தைகளை சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். கேட்டா இது இங்க வழக்கத்துல நாங்கெல்லாம் பிரெண்ட்ஸ்ங்க பேசி பேசி பழகி விட்டோம். அஸ்தஃபிருல்லாஹ் 
 
ஒரு முஃமின் அசிங்கமான வார்த்தைகளை பேச மாட்டான். அசிங்கமான செயல்களை செய்ய மாட்டான். 
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 1977.
 
எவ்வளவுதான் நட்பாக இருந்தாலும், எவ்வளவுதான் ஆழமான பழக்க வழக்கமாக இருந்தாலும் அது கெட்ட பேச்சுகளை நமக்கு ஆகுமாக்கி விடாது. அசிங்கமான ஆபாசமான செயல்களை நமக்கு ஆகுமாக்கி விடாது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் அலியை பார்த்து சொன்னார்கள்: அலி இன்னொரு ஆணுடைய தொடையை நீ பார்க்காதே! 
 
அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 2798, இப்னு மாஜா – 1460.
 
(இந்த ஹதீஸின் தரம் குறித்து அறிஞர்கள் சர்ச்சை செய்துள்ளனர். இருப்பினும் இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்  தொடர் வாயிலாக வந்திருக்கின்ற காரணத்தால் ஒரு தொடர் இன்னொரு தொடரை வலு சேர்ப்பதாகவும் சில அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆக இந்த ஹதீஸுகளின் தொடர்களை மொத்தமாக கவனித்து இந்த ஹதீஸை சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இமாம் அஹ்மத், இமாம் மாலிக், இமாம் ஷாஃபியீ மற்றும் பெரும்பாலான அறிஞர்கள் தீர்ப்பு கூறியிருக்கிறார்கள்.)
 
அவ்வளவு ஒழுக்கமான மார்க்கம் இது. அவ்வளவு பண்பாடான மார்க்கம் இது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு நமக்கு வலியுறுத்தினார்கள், இந்த கல்பை பற்றி நஃப்ஸை பற்றி. 
 
இப்படி ஒரு நாளைக்கு ஒரு விஷயத்தை தெரிந்து என்னிடத்திலே என்ன கெட்ட குணம் இருக்கிறது? அதை நான் எங்கெங்கே பயன்படுத்துகிறேன் என்பதை உணர வேண்டும். பிறகு அதை திருத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்விடத்திலே துஆ கேட்டவர்களாக. 
 
அதைக் கொண்டுதான் அல்லாஹ்விடத்தில் நமக்கு வெற்றி கண்ணியம் இருக்கிறது. இந்த கல்பு சுத்தமாகி நாம் இந்த (அமல்) நற்செயல்களை செய்யும் போது, அதற்குப் பிறகு நம்முடைய தொழுகைக்கு நோன்புக்கு நம்முடைய ஜக்காத்துக்கு அல்லாஹ்விடத்திலே கிடைக்கக்கூடிய மார்க் அந்த தகுதி அந்த கண்ணியம் இருக்கிறதே அதை நாம் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது. 
 
اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏
 
யாருடைய உள்ளங்கள் தக்வாவால் புடம் போடப்பட்டு விட்டதோ அவர்களிடத்திலிருந்து தான் அல்லாஹ் சிறப்பாக அமல்களை ஏற்றுக் கொள்கிறான். (அல்குர்ஆன் : 5:27)
 
சஹாபாக்களின் தொழுகை குறைவாக இருக்கலாம். அவர்களுடைய தர்மங்கள் குறைவாக இருக்கலாம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நீங்கள் உஹது மலை அளவு தர்மம் செய்தாலும் சரி, என்னுடைய தோழர் ஒரு கரத்தால் கொடுத்ததற்கு சமமாகாது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 3673.
 
ஏன்? அவர்களது உள்ளங்கள் அவ்வளவு பரிசுத்தமானவை. அவர்களது உள்ளங்கள் அல்லாஹ்விற்கு அவ்வளவு நெருக்கமானவை. 
 
ஆகவே, அல்லாஹ்விடத்தில் நாம் மீள்வோமாக! நம்முடைய உள்ளங்களை சுத்தப்படுத்துவதற்கு கவனம் செலுத்துவோமாக! அல்லாஹு சுபஹானஹு வ தஆலா பரிசுத்தமாக்கப்பட்ட உள்ளத்தை நமக்கு தந்தருள் புரிவானாக! நம்முடைய உள்ளங்களை நற்குணங்களை கொண்டு அலங்கரிப்பானாக! ஒவ்வொரு தீய கெட்ட வெறுக்கத்தக்க குணங்களிலிருந்து என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/