HOME      Khutba      பொய்களால் நிரம்பிய மவ்லித் புத்தகம்! | Tamil Bayan - 909   
 

பொய்களால் நிரம்பிய மவ்லித் புத்தகம்! | Tamil Bayan - 909

           

பொய்களால் நிரம்பிய மவ்லித் புத்தகம்! | Tamil Bayan - 909


பொய்களால் நிரம்பிய மவ்லித் புத்தகம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : பொய்களால் நிரம்பிய மவ்லித் புத்தகம்!
 
வரிசை : 909
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 14-09-2024 | 11-03-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கு மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தாரும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அன்பையும் சொர்க்கத்தையும் வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னித்து அருள்வானாக! நன்மைகளோடு நம்மை நெருக்கமாக்கி வைப்பானாக! பாவங்களை விட்டும் ஒவ்வொரு சிறிய பெரிய குற்றத்தை விட்டும் அல்லாஹ் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
 
சென்ற (908) குத்பாவிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைப்பது என்றால் என்ன? அந்த அன்பின் வெளிப்பாடாக இன்று மக்கள் செய்யக்கூடிய மௌலிதுகள் மீலாது விழாக்கள் போன்ற அனாச்சாரங்கள் ஏன் கூடாது? என்பதை பற்றி சுருக்கமாக பார்த்தோம். 
 
இன்று, மௌலித் கிதாப் என்ற ஒரு அரபி புத்தகத்தை சினிமா பாடல் ராகங்களில் பாட்டாக படிக்கிறார்கள். இந்த கிதாபிலே இருக்கக்கூடிய பெரும்பாலான செய்திகள் முழுக்க முழுக்க கற்பனையானவை; இட்டுக்கட்டப்பட்டவை; பொய்யானவை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் வைப்பது அன்பு கொள்வது ஈமான். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாற்று கருத்துக் கொள்ள முடியாது. நபியை விட இந்த உலகத்தில் வேறு யாராவது ஒருவரை நேசித்தால் அவர் முஃமினாகவே இருக்க மாட்டார்.
 
அல்லாஹ்வுடைய நேசத்திற்கு பிறகு நபி உடைய நேசமும் ஈமானுடைய நிபந்தனையில் உள்ளது. அல் குர்ஆனின் பல வசனங்கள், நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் இதை உறுதி செய்கின்றன. ஒரு முஃமினுக்கு இதில் எந்த சந்தேகமும் வரக்கூடாது. 
 
குறிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபியிடம் கற்ற மாணவர்களை நபித்தோழர்களை ‘’முதலாம் தலைமுறை’’ என்றும் நபியை காணாத நபியின் மறைவுக்குப்பின் நபிதோழர்களிடம் கற்ற மாணவர்களை ‘’தாபியீ- இரண்டாம் தலைமுறை’’ என்றும்  நபித்தோழர்கள் மறைவுக்குப்பின் தாபியீ- என்ற இரண்டாம் தலைமுறையினரிடம் கற்ற மாணவர்களை ‘’தபவுத் தாபியீ- மூன்றாம் தலைமுறை’’ என்றும் நாம் புரிந்துகொள்ள வகைப்படுத்திக்கொள்ளலாம்.
 
இந்த மௌலிது பாடல்கள் பாடுவதை, மீளாது கொண்டாடுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைக்கின்ற அன்பின் வெளிப்பாடாக ஆக்குவது அறவே ஏற்க முடியாத. மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட முடியாத ஒரு செயல். 
 
அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலே முதலாவது காரணம் இது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் யாருமே செய்யாத செயல். அவர்களோ சஹாபாக்களோ தாபியீன்களோ செய்யாத செயல். அத்துடன் கண்ணியத்திற்குரிய இமாம்களோ ஹதீஸ் கலை அறிஞர்களோ இவர்களில் யாருமே இப்படிப்பட்ட ஒரு செயல் மார்க்கத்தில் இருப்பதாக சொல்லித் தரவில்லை. 
 
ஹிஜ்ரி 400 நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவான ஒரு சடங்கான சம்பிரதாயமான ஒரு புறக்கணிக்கப்பட வேண்டிய செயலை தவிர, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டான அன்பின் வெளிப்பாடாக ஒருபோதும் ஆகாது; ஆக  முடியாது  ஏற்க முடியாது.
 
சகோதரர்களே! ஒரு சில செய்திகளை சுருக்கமாக பார்ப்போம். இந்த மௌலித் ஹிஜ்ரி 400 இருந்து 500 உள்ள காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி பிறகு ஹிஜ்ரி 500 களில் பெரிய அளவிலே அரசர்களால் செய்யப்படுகிறது. 
 
ஆனால், இந்த கிதாபுடைய தொடக்கத்திலே அரபுத் தமிழில் இவர்கள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால், எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருக்குமேயானால் அதை மௌலூது ஓதுவதற்காக தான் நான் செலவு செய்வேன் என்று சஹாபாக்களுடைய மாணவர் ஹஸன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர் சொன்னதாக எழுதி வைத்திருக்கிறார்கள். 
 
மறுப்பு : எடுத்த எடுப்பிலேயே மனிதர்களுக்கு ஒரு பொய்யை போட்டு எப்படிப்பட்ட நம்பிக்கை உண்டாக்குகிறார்கள் பாருங்கள். 
 
ஹஸன் பசரி என்பவர் சஹாபாக்களுடைய மாணவர். ஹதீஸிலே ஃபிக்ஹிலே தப்ஸீரிலே மார்க்க ஞானத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாபியீ. அவர் பெயரால் ஒரு பொய்யை முதலாவதாக அவிழ்த்து விடுகிறார்கள். 
 
அறிஞர்கள் மீது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது, சஹாபாக்கள் மீது எப்படி பொய் சொல்லி இருக்கிறார்கள்? 
 
அடுத்து ஆறாவது நூற்றாண்டிலே வாழ்ந்த ஜுனைத் அல் பக்தாதி, இவரும் மிகப்பெரிய கல்விமான். மக்களுக்கெல்லாம் உபதேசம் செய்த ஒரு பெரிய மேதை, அவர்கள் மௌலூது மஜ்லிஸ்க்கு ஒருவர் மதிப்போடு பக்தியோடு வருவாரானால் அவர் ஈமானை பெற்றுக் கொள்வார் என்று அவர்கள் சொல்வதாக புளுகி இருக்கிறார்கள்:
 
அடுத்து மஃரூபுல் கர்ஹீ, இவர் இமாம் அஹமது இப்னு ஹம்பல் உடைய காலத்தில் உள்ளவர். மிகப்பெரிய ஒரு கல்விமான் அவர்கள் சொல்வதாக அள்ளி விடுகிறார்கள்: அதாவது, மௌலூது சபைக்கு யார் தன்னுடைய செல்வத்தை செலவு செய்கிறார்களோ, அதற்காக விளக்கு எரிக்கிறார்களோ, புத்தாடை அணிந்து வருகிறார்களோ அப்படி மௌலூது சபையை கண்ணியப்படுத்தினால் அவர் நாளை மறுமையில் ஈமானோடு எழுப்பப்படுவார். அதுமட்டுமல்ல, இல்லியீன் என்ற சொர்க்கத்திலே பெரிய மாளிகையில் அவர் தங்க வைக்கப்படுவார். அவருக்கு ஒருபோதும் வயோதிகம் ஏற்படாது. அது மட்டுமல்ல, வாழ்நாளெல்லாம் பரக்கத் அவரை விட்டு நீங்காது. அதுதான் ஹைலைட். 
 
ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டதுதான். மக்களிடம் மறுமையை பற்றி உண்டான எந்த சிறப்பாக இருந்தாலும் அதற்கு அங்கே முக்கியத்துவம் இல்லை. துன்யாவில் பரக்கத் கிடைக்குமா? துன்யாவில் காசு கிடைக்குமா? பணம் கிடைக்குமா? அதற்கு அங்கே முக்கியத்துவம் கிடைக்கும்.
 
கீழக்கரை என்ற ஊரில் மௌலூது ரொம்ப விமர்சையாக கொண்டாடப்படும். பணக்காரர்கள் எல்லாம் அதற்காக வெளிநாடுகளிலிருந்து லீவ் போட்டு 12 நாளும் சரியான செலவு செய்து, விருந்து கொடுத்து கொண்டாடுவார்கள்.
 
அங்கே ஒரு பெரிய பணக்கார குடும்பம், அவர்கள் என்னடா வருஷம் வருஷம் இதுக்காக அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் இவ்வாறு பல நாடுகளிலிருந்து லீவு போட்டுட்டு வந்து ஓதணுமே? ரொம்ப சிரமமா இருக்குதே? அப்படின்னு ஆள்கள வச்சு நீங்களே செஞ்சிக்கோங்க என்று சொல்ல, அவங்களும் வரல. செஞ்சவங்க கொஞ்சம் சாதாரணமா செஞ்சுட்டாங்களாம். அந்த வருஷம் பிசினஸ் படுத்து போச்சாம். ஏதோ கதை என்று நினைக்காதீர்கள். அவர்களின் வாயால் சொன்னது. அந்த வருஷம் அவர்களுக்கு வியாபாரம் படுத்து விட்டது. இது ஏறக்குறைய ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. 
 
அன்றிலிருந்து இன்று வரை அந்த பயத்தில் ஏற்கனவே செய்ததை விட பல மடங்கு செலவு செய்து இன்று மெனக்கெட்டு அதற்காக ஊருக்கு வந்து, அந்த வைபவத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
மறுப்பு : தொழுகையின் மீது இல்லாத நம்பிக்கை, துஆவின் மீது இல்லாத நம்பிக்கை, ஜக்காத்தின் மீது இல்லாத நம்பிக்கை, சதக்காவின் மீது இல்லாத நம்பிக்கை, ஒரு சடங்கின் மீது எப்படி புகுத்தப்படுகிறது பாருங்கள்! 
 
ஹைலைட் என்ன? யார் ஒருவர் மௌலூது சபையை அலங்கரித்து செலவு செய்து அதற்காக இப்படி ஓதுவாரோ அவரை விட்டு பரக்கத் நீங்கவே நீங்காது. 
 
அடுத்து.. ஒருவர் மௌலூது சபையை நாடி வருவாரேயானால் அவர் சொர்க்க பூங்காவை நாடி வருகிறார். சிர்ரி அஸ்ஸகதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியதாக அவர்கள் மீது பொய் வீச்சு இது.
 
இமாம் சுயூத்தி பெரிய கல்விமான். அவர் சொல்வதாக எழுதியுள்ளார்கள்: மௌலூது ஓதக்கூடிய சபைகளுக்கு மலக்குகள் வந்து சூழ்ந்து கொள்வார்களாம். ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல், அர்ஷை சுமந்து இருக்கக்கூடிய வானவர்கள் அதைவிட அல்லாஹ்வுக்கு நெருக்கமான வானவர்கள் எல்லாம் அந்த அடியான் மீது ஸலவாத்து ஓதுவார்களாம். அவர்கள் மீது பொய் வீச்சு இது.
 
அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஹைலைட் அங்க பாக்கணும். அவருடைய வீட்டில் பஞ்சம் வராது. சுத்தி சுத்தி அங்க வந்துருவாங்க? எங்க சுத்தினாலும் சரி, மலக்குமார்கள் சலவாத் ஓதுறது என்ன! அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், ஹைலைட் என்ன? பஞ்சம் வராது. அவருடைய வீட்டுக்கு முசீபத் வராது. 
 
அப்புறம் முன்கர் நக்கிருடைய கேள்விகளுக்கு பதில் அவருக்கு எளிதாகிவிடும். நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்தில் நெருக்கமான (சூரா அல் கமர்ல அல்லாஹ் சொல்லுவான்) ரொம்ப உயர்ந்த ஒரு சன்னிதானம் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அந்த சன்னிதானத்திலே அவர் போய் அமர்ந்து கொள்வார். 
 
இப்படி கதைகள் பாமரர்களுக்கு சொல்லப்பட்டால் என்ன ஆகும்? எப்பேர்பட்ட ஒரு பக்தி அவர்களுக்கு ஏற்பட்டு, சுத்தமாக மூளையை அடகு வைத்து அதற்குப் பிறகு என்ன சொன்னாலும் சரி, அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
இதுவரை சொன்னது ஒரு துளி. இந்த கிதாபை இவர்கள் ஆரம்பிக்கும் பொழுதே ஒரு ஹதீஸை எழுதுவார்கள். அதற்குப் பிறகு அந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அதற்கு ஒரு சனது போட்டுக் கொள்வார்கள். 
 
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து யார் அறிவித்தார்? அவர்களிடமிருந்து யார் அறிவித்தார்? பிறகு எந்த கிதாபிலே பதிவு செய்யப்பட்டது? அதெல்லாம் அங்கே இருக்காது. 
 
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள். எங்கே சொன்னார்கள்? யாரிடம் சொன்னார்கள்? 
 
அதாவது, அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா படைப்புகளில் 
 
அல்லாஹ் முதலாவதாக படைத்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒளியை. 
 
எப்பேர்பட்ட நம்பிக்கையை கொண்டு வருகிறார்கள் பாருங்கள்! இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி; இல்லாத செய்தி. 
 
மேலும் சொல்கிறார்கள்: ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹுத்தஆலா நபியினுடைய ஒளியை படைத்து விட்டான். அந்த ஒளி அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தது. ரசூலுல்லாஹ் தஸ்பீஹ் செய்ய, மலக்குகள் எல்லாம் சேர்ந்து, கூட தஸ்பீஹ் செய்து கொண்டு இருந்தார்கள். 
 
மறுப்பு : அங்கேயும் பைத்து ஓத வச்சுட்டாங்க. மலக்குகள் எல்லாம் தனித்தனியாக இபாதத் செய்கிறார்கள் என்று தான் குர்ஆனிலும் வருது ஹதீஸிலும் வருது. ஆனா பாருங்க இது எங்க வரைக்கும் கொண்டு போயிட்டாங்க? ரசூலுல்லாஹ்வுடைய ஒளி தஸ்பீஹ் செய்ய, மலக்குகள் எல்லாம் அந்த தஸ்பிஹோடு சேர்ந்து அவர்களும் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்களாம். 
 
அதற்குப் பிறகு அடுத்த ஹைலைட், ஆதம் அலைஹிஸ்ஸலாத்தை அல்லாஹு தஆலா படைத்த உடனே அப்படியே தனியா இருந்த ஒளி டிரான்ஸ்பர் ஆகி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குள் புகுந்து கொண்டது. 
 
அல்லாஹ் பாதுகாக்கணும்! சொல்றதுக்கே பயம் வர வேண்டாம். 
 
அடுத்த ஒரு மிகப்பெரிய பொய்யான செய்தி. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்ததற்கு பிறகு அவங்க கண்ணை திறந்து பார்த்தால் சொர்க்கத்தின் வாசல்ல லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் எழுதி இருந்ததாம். 
 
அப்ப அவங்க கேக்குறாங்க; உனது பெயரை இவரோடு சேர்த்து எழுதி இருக்கிறாயே இவர் யாரென்று? அல்லாஹு தஆலா சொல்லியதாக சொல்கிறார்கள்; இவர்தான் உன்னுடைய பரம்பரையில் வரக்கூடியவர். கடைசி காலத்திலே இவரை அனுப்புவேன். (அடுத்த ஹைலைட் பாருங்க இவர் இல்லை என்றால் உன்னையே நான் படைத்திருக்க மாட்டேன்.)
 
இது எந்த குர்ஆன்ல இருக்கு? எந்த தவ்ராத்தில இருக்கு? எந்த இன்ஜீளில் இருக்கு? எப்படி எல்லாம் கற்பனையை அவர்கள் ஓட விடுகிறார்கள் பாருங்கள்! 
 
அதற்குப் பிறகு ஆதம் அலைஹிஸ்ஸலாம் பூமிக்கு இறங்கின உடனே இந்த மகனுடைய பொருட்டால் இந்த தகப்பனுக்கு நீ பாவ மன்னிப்பு செய் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியதால் அல்லாஹ் அவரை மன்னித்தான். 
 
மறுப்பு : அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: ஆதம் தவறு செய்தார். பூமிக்கு இறக்கப்பட்டார்.
 
فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
 
ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் தேட சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். (அவற்றைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்.) ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 2:37)
 
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
 
ஆதமும் ஹவ்வாவும் சொன்னார்கள்: எங்கள் ரப்பே நாங்கள் எங்களுடைய நஃப்ஸுக்கு தீங்கிழைத்துக் கொண்டோம். நீ மன்னிக்கவில்லை என்றால் கருணை காட்ட வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம். (அல்குர்ஆன் : 7:23)
 
ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று. எவ்வளவு அழகான துஆவை அல்லாஹ் கற்றுக் கொடுத்து ஆதம் கற்றுக் கொண்டார். அந்த துஆவை கேட்டதால் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை உறுதிப்படுத்துகின்றார்கள், தப்ஸீர்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு முரணான எந்த ஒரு செய்தியையும் ஸஹீஹான ஹதீஸ்களிலே தப்ஸீர்களிலே இல்லை. 
 
ஆனால், இவர்கள் கற்பனையாக எழுதுகிறார்கள்; ஆதம் அலைஹிஸ்ஸலாம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு உடைய பொருட்டால் துஆ கேட்டதால் தான் மன்னிக்கப்பட்டார்கள் என்று. 
 
அது மட்டுமல்ல, அடுத்த கற்பனையை பாருங்கள்; 
 
(சொல்வதற்கு பயமாய் இருக்கிறது. ஏன்னா பொய்யான செய்தியை எடுத்து சொல்றதுக்கே பயமா இருக்கு. அதை நம்பிக்கை கொண்டு இவ்வளவு துணிவாய் எழுதி வைத்து ஒரு உம்மத்தை நம்ப வைத்து இதை நம்ப கூடியவர்கள் தான் ஒரிஜினல் சுன்னத் வல் ஜமாத் ஒரிஜினல் முஸ்லிம் என்று சொல்கிறார்களே?)
 
அடுத்து இவர்கள் சொல்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒளி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முதுகிலே இருந்தது. அவர்கள் கப்பலிலே ஏறிய போது அதன் புண்ணியத்தால் தான் கப்பல் பெரிய அலைகளை கடக்க முடிந்தது. 
 
அதற்குப் பிறகு, அந்த ஒளி இப்ராஹீம் நபியுடைய முதுகுக்கு வந்தது. அந்த ஒளியின் பொருட்டால்தான் இப்ராஹீம் நெருப்பிலிருந்து தப்பித்தார். அந்த ஒளியின் பொருட்டால் தான் இப்ராஹீம் நபிக்கு அந்த நெருப்பு குளிர்ச்சியாக சலாமத்தாக ஆனது. 
 
மறுப்பு : குர்ஆன் சொல்லக்கூடிய வரலாறு என்ன? அல்லாஹ்வுடைய வஹி என்ன சொல்கிறது? 
 
قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏ وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ‌‏
 
இப்ராஹீமுக்கு பெரும் சூழ்ச்சியை நாடினார்கள். சூழ்ச்சி செய்தவர்களை நஷ்டவாளிகளாக ஆக்கினோம். அந்த நெருப்புக்கு நாம் கூறினோம்; நெருப்பே! நீ குளிர்ச்சியாக ஆகிவிடு. சலாமத்தாக ஆகிவிடு. (அல்குர்ஆன் : 21: 69,70)
 
அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான். இவர்கள் சொல்கிறார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு உடைய ஒளி இப்ராஹீம் நபியுடைய முதுகில் இருந்ததால் அந்த நெருப்பு குளிர்ச்சியானது; சலாமத்தானது; இப்ராஹீம் தப்பித்தார். அந்த ஒளியினுடைய பரக்கத்தால் தான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தப்பித்தார்கள் என்று சொல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
அதற்குப் பிறகு அந்த முதுகு தண்டுகளிலே அந்த ஒளி அப்படியே மாறி மாறி வந்து கடைசியாக ஆமினா உடைய அப்துல்லாஹ்வுடைய முதுகு தண்டுக்கு வந்ததாக கதையை கொண்டு போகிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மை மார்க்கம். சத்திய மார்க்கம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
مَن كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
 
யார் என் மீது வேண்டுமென்று பொய் சொல்வானோ அவன் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் வைத்துக் கொள்ளட்டும். 
 
மேலும், சொன்னார்கள்: உங்களில் ஒருவர் என் மீது பொய் சொல்வது இது உங்களில் ஒருவர் இன்னொருவர் மீது சொல்லக்கூடிய பொய்யைப் போன்று அல்ல. 
 
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1291.
 
பொய்யே சொல்லக்கூடாது. ஒருவர் மற்றவர் மீது அவர் சொல்லாததை சொல்லக்கூடாது ஆனால் அதுவும் என் மீது நீங்கள் சொல்வது இருக்கிறதே அது சாதாரணமானது அல்ல. யார் என் மீது பொய் சொல்வாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். 
 
அடுத்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக தொடர்ச்சியாக எழுதுகிறார்கள்; அதாவது அல்லாஹ்வுடைய அர்ஷினுடைய ஒளி, குர்சியினுடைய ஒளி, லவ்ஹு, கலம், சூரியன், சந்திரன் எல்லாமே ரசூலுல்லாஹ் உடைய ஒளியிலிருந்து தான் படைக்கப்பட்டன. 
 
அதுபோன்று அக்ல் -அறிவு, பார்வை இவை எல்லாவற்றினுடைய ஒளியும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஒளியிலிருந்து படைக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஒளியை கொண்டுதான் உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஒளிகளும் வெளிச்சம் பெறுகின்றன. 
 
அடுத்ததாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக; 
 
(ஞானத்தை கொண்டு கல்வியை கொண்டு அறியப்படுகின்ற சஹாபிகள் எல்லோரின் மீதும் இப்படிப்பட்ட பல இட்டுக்கட்டல்கள்.) 
 
சொல்கிறார்கள்; அல்லாஹுத்தஆலா உலகத்தை படைக்க நாடிய போது தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு ஒளிக்கீற்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான். அல்லாஹ்வுடைய வெளிச்சத்திலிருந்து ஒரு சுடர் ஏற்பட்டது. பிறகு, அந்த வெளிச்சமானது அல்லாஹ் மறைவாக வைத்திருந்த சில உருவங்களுக்கு நடுவிலே சென்று விட்டது. அந்த ஒளியின் உருவம் தான் நபியினுடைய உருவமாக மாறியது. 
 
படைப்புகள் எல்லாம் ஒரு மறைவான ஒன்றாக இறைவன் உருவாக்கி வச்சிருந்தான். தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு ஒளியை வெளிப்படுத்தினான். என்ன கதை சொல்ல வருகிறார்கள் புரிகிறதா? அல்லாஹ்வுடைய ஒரு பகுதியாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இத்தகைய ஷைத்தானிய சிந்தனையிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களிடத்திலே பேசியதாக; 
 
(அல்லாஹ் ஒரு நபியிடத்தில் பேசி இருந்தால் மலக்கிடத்திலே பேசியிருந்தால் அந்த செய்தி எங்கே இருக்கனும்? குர்ஆனில் இருக்கணும். ஸஹிஹான ஹதீஸ்களில் இருக்கணும்.)
 
சொல்கிறார்கள்; அல்லாஹ் அந்த நபியை பார்த்து; நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உங்களுடைய ஒளியின் பொக்கிஷம் கஜானா என்னிடத்திலே இருக்கிறது. 
 
பிறகு, அல்லாஹு தஆலா வானங்களை படைத்தான். காலங்களை விரித்தான். பற்பல தண்ணீர்களை படைத்தான். காற்றுகளை வீச வைத்தான். கடைசியாக அல்லாஹுத்தஆலா மலக்குகளுடைய ஒளியை அந்த ஒளியிலிருந்து படைத்தான். தன்னுடைய தவ்ஹீதோடு நபியினுடைய நுபுவ்வத்தை சேர்த்தான். 
 
இறுதியாக, அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடைசி நபியாக அனுப்பினான். 
 
செய்தியை முதல்ல எங்க கொண்டு போறாங்க? அல்லாஹ்வுடைய ஒளியிலிருந்து ஒரு ஒளியை வெளிப்படுத்தி அந்த ஒளி உருவங்களுக்கு மத்தியிலே இருந்ததாக. பிறகு அந்த ஒளி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த உருவத்தை பெற்றதாக. 
 
அதற்குப் பிறகு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த அந்த வரலாற்றைப் பற்றி அவர்கள் சொல்லும் பொழுது; 
 
(ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தாயார் , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சிறுவயதா இருக்கும்போதே இறந்து போயிட்டாங்க.)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய பிறப்பு வந்த போது மலக்குகள் தக்பீர் சொன்னார்கள், வானங்கள் எல்லாம் தஸ்பீஹ் செய்ய ஆரம்பித்தன. சொர்க்கங்கள் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டன. (ஹுர்கள்) சுவனத்து பெண்கள் எல்லாம் அலங்கரித்துக் கொண்டார்கள். சொர்க்கத்தில் உள்ள பிள்ளைகள் எல்லாம் அலங்காரம் பெற்றார்கள். 
 
பிறகு, ஆமினா அவர்களுக்கு பிரசவ வலி வந்த போது பொதுவாக மற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய எந்த வலியும் அவர்களுக்கு ஏற்படவில்லையாம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தார்கள் சிரித்தவர்களாக விரலை வானத்தை நோக்கி நீட்டியவர்களாக கத்னா செய்யப்பட்டு. தலைக்கு எண்ணெய் தேய்க்கப்பட்டு. சுர்மா போடப்பட்டு பிறந்தார்களாம். 
 
மறுப்பு : அல்லாஹ்வுடைய தூதரின் மீது உண்டான முஹப்பத் என்றால் இப்படி அவர்கள் மீது பொய் சொல்வதற்காகவா? சொல்லுங்கள் பார்க்கலாம். 
 
ஒரே வார்த்தை அல்லாஹ் சொல்லிட்டான்: 
 
وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏
 
நபியே உங்கள் மீது அல்லாஹ்வுடைய கண்ணியம் அல்லாஹ்வுடைய சிறப்பு மிக மகத்தானது. (அல்குர்ஆன் 4:113)
 
இந்த படைப்புகளில் அல்லாஹ்விடத்திலே எந்த நிபந்தனையும் இல்லாமல் சிறந்தவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவ்வளவுதான். அல்லாஹ்வுடைய அப்து அடிமை. அல்லாஹ்வுடைய ரசூல் எல்லா நபிமார்களுக்கும் இறுதி முத்திரை. எல்லா ரசூல்மார்களுக்கும் நபிமார்களுக்கும் இமாம். அதைவிட வேறு என்ன சிறப்பு தேவை இருக்கிறது? 
 
அது மட்டுமல்ல, அதாவது ஆமினா உடைய வீட்டுக்கு மலக்குகள் எல்லாம் வந்து விட்டார்களாம். சொர்க்கத்தில் இருந்து சுவனத்து பெண்கள் (ஹுர்கள்) வந்து பிரசவம் பார்த்தார்களாம். காபிர்கள் முஸ்ரிகுகள் செய்கின்ற சொல்கின்ற கற்பனைகளுக்கு சற்றும் குறையாத கட்டுக்கதைகள். இஸ்லாமிய பெயரை தாங்கிய சூழ்ச்சிக்காரர்களின் கைவரிசை.
 
அன்பான சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் நிறைய விரிவான செய்திகளை பார்ப்போம். 
 
என்ன நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மார்க்கம் என்றால் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் தேவை. அந்த மார்க்க ஆதாரம் சொல்லப்பட்டதாக இருக்கும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் செய்யப்பட்டதாக, சஹாபாக்களால் செய்யப்பட்டதாக வழிகாட்டப்பட்டதாக இருக்குமே தவிர கற்பனைகளுக்கு , தனிப்பட்ட சிந்தனைகளுக்கு இந்த தீனிலே இடமிருக்காது. 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான் நேர்வழிக்கு உத்தரவாதம். இதைத் தவிர எந்த ஒரு கற்பனையும் அது நம்மை நேர்வழியில் பக்கம் இழுத்துச் செல்லாது. வழிகேட்டின் பக்கம் தான் இழுத்துச் செல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக! இத்தகைய சடங்குகளில் இருந்து கலாச்சாரங்களில் இருந்து நமது சமுதாயத்தை அல்லாஹு தஆலா மீட்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/