இக்லாஸிலே வாழ்க்கையின் இன்பம் காண்போம் | Tamil Bayan - 919
இக்லாஸிலே வாழ்க்கையின் இன்பம் காண்போம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இக்லாஸிலே வாழ்க்கையின் இன்பம் காண்போம்
வரிசை : 919
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 04-10-2024 | 01-04-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய நண்பர், அல்லாஹ்வுடைய இறுதி இறைத்தூதர், நபிமார்களின் முத்திரை, அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர், அகில உலக மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்தவர், நம்முடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக;
அவர்களுடைய குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் அன்பையும் பொருத்தத்தையும் வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே அன்பையும் மன்னிப்பையும் அருளையும் வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்றுகிற நல்ல மக்களிலே என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! அல்லாஹ்விற்காகவே வாழக்கூடிய அல்லாஹ்வுடைய அன்புக்காக அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக அல்லாஹ்வுடைய மன்னிப்புக்காக ஏங்கக்கூடிய, அதற்காகவே அமல் செய்யக்கூடிய, முஹ்லிஸீன் என்று அல்லாஹ்வால் போற்றப்பட்ட அந்த நன்மக்கள் கூட்டத்தில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அன்பான சகோதரர்களே! இந்த உலக வாழ்க்கையிலே மனிதன் தேடுகின்ற எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன.
اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰى
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 92:4)
قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا
(நபியே!) கூறுவீராக! ஒவ்வொருவரும் தனது பாதையில் (தனது போக்கில்) செயல்படுகிறார். ஆக, மார்க்கத்தால் மிக நேர்வழி பெற்றவர் யார் என்பதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 17:84)
அரபியிலே சொல்வார்கள்: மக்களுக்கு அவர்கள் விரும்புகிற, அவர்கள் தேடுகிற பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை தேடி அவர்கள் ஓடுகிறார்கள். அதற்கான வழிகளை அவர்கள் ஆராய்கிறார்கள்.
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!” (அல்குர்ஆன் 41:30)
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்? (அல்குர்ஆன் 41:33)
அவர்களுக்கு வேலை என்ன? அந்த அகிலத்தின் அதிபதி அர்ஷுடைய இறைவன் அல்லாஹ்வின் பக்கம் அல்லாஹ்வுடைய அடியார்களை அழைப்பது. அழைத்துக்கொண்டே இருப்பது. அவனைப் பற்றி பேசுவது. அவனை புகழ்வது. அவனுடைய மார்க்கத்தின் சிறப்பை, உயர்வை, மதிப்பை, நன்மையை. நீதத்தை, நேர்மையை உலக மக்களுக்கு எடுத்து சொல்வது.
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا
இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 17:111)
வசனத்தின் கருத்து : அவர்களது பேச்சு அல்லாஹ்வை பெருமைப்படுத்துவதாக இருக்கும். அவர்களுடைய செயல் அல்லாஹ்வை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பெருமைப்படுத்துவதாக இருக்கும். அவர்களுடைய வணக்க வழிபாடுகள் மட்டும் அல்ல, அவர்களுடைய கொடுக்கல் வாங்கல், வியாபாரம், தொழில் துறை, அவர்களது தோற்றம், அவர்களது குடும்பம் என்று அனைத்தையும் அப்படியே அல்லாஹ்விற்காகவே ஆக்கிக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய பொருத்தம், அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு, அல்லாஹ்வுடைய பாசம், அல்லாஹ்வுடைய மகிழ்ச்சி, இதுதான் அவர்களின் வாழ்க்கையின் தேடலாக இருக்கும். இதற்காக எதையும் செய்ய அவர்கள் துணிவார்கள். எதற்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள். அவர்கள் தான் மூஃமின்கள்.
வேஷத்தைக் கொண்டு அல்ல. வெறும் தாடியை வைத்து அல்ல. வெறும் புர்காவை வைத்து அல்ல. இதுவெல்லாம் ஈமானின் நூற்றுக்கணக்கான கிளைகளிலே ஒன்று. அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, அதுவும் உள்ளம் காலியாக இருக்கும் நிலையில் ஒருவர் தன்னை மூஃமின் என்று முஸ்லிம் என்று சொல்வாரேயானால் அவர் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
அல்லாஹு தஆலா மூஃமின்களை அல்குர்ஆனிலே எப்படி பேசுகிறான்! எப்படி வர்ணிக்கிறான்!
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும், இவர்கள்தான் (சொர்க்கத்தைக் கொண்டு) வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 9:20)
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள்தான். பிறகு அவர்கள் சந்தேகிக்கவில்லை. இன்னும், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்கள். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள். (அல்குர்ஆன் 49:15)
அவர்களுக்கு ஈமானில் மார்க்கத்தில் எந்த சந்தேகமும் இருக்காது. அல்லாஹ்வுடைய தீன் ஒன்றுதான் இம்மை மறுமையின் வெற்றிக்கு வழி. இதை நான் நம்புகிறேன். இதுதான் என்னுடைய கொள்கை.
அல்லாஹ்வுடைய தீன் ஒன்றுதான் உண்மையானது. அல்லாஹ்வுடைய சட்டம் ஒன்றுதான் நீதமானது. நேர்மையானது. உண்மையானது. சத்தியமானது. உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. இதுதான் என்னுடைய நம்பிக்கை. இதன் மீது வாழ்வேன். இதன் மீதே சாவேன்.
உலகமே ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், உலகமே ஒரு பாதையிலே சென்றாலும், அது அல்லாஹ் இறக்கிய தீனுக்கு மாற்றமாக இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர்கள் கொண்டு வந்த நேரான வழிமுறைக்கு மாற்றமாக இருந்தால் நான் அதற்கு எதிரி.
اَفَحُكْمَ الْجَـاهِلِيَّةِ يَـبْغُوْنَ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ
ஆக, அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? (அல்லாஹ் உடைய சட்டங்களின் நீதியை சிந்தித்து புரிந்து அவற்றை) உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)
வசனத்தின் கருத்து : அல்லாஹ் கேட்கிறான்: அறிவாளிகளா? புத்திசாலிகளா? சிந்தனைவாதிகளா? தத்துவவாதிகளா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு சட்டத்தால் அல்லாஹ்வை விட மிக அழகானவன் யார்!?
صِبْغَةَ اللّٰهِ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً
அல்லாஹ்வை விட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? (அல்குர்ஆன் 2:138)
அல்லாஹ்வின் தீனை விட கொள்கையால், செயல்பாடுகளால், குணங்களால், பண்புகளால், ஒழுக்கங்களால், சீர்திருத்தங்களால், சமுதாய சட்டங்களால், அழகிய சட்டங்களை, சீர்திருத்தத்தை உடைய வேறு ஒரு மார்க்கம் இருக்க முடியுமா?
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ
அல்லாஹ் கேட்கிறான்: அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தை அவர்கள் தேடுகிறார்களா? (அல்குர்ஆன் 3:83)
وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ
இப்ராஹீம் கொண்டு வந்த அந்த கொள்கை இப்ராஹீம் கொண்டு வந்த அந்த மார்க்கம் அதிலிருந்து ஒருவன் விலகுவானேயானால் அவன் முட்டாளாக இருப்பான். மூடனாக இருப்பான். அயோக்கியனாக இருப்பான். கேடுகெட்ட ஒரு புத்தியற்றவனாக இருப்பான். (அல்குர்ஆன் 2:130)
அல்லாஹ் கேட்கிறான்: இப்ராஹீம் கொண்டு வந்த அந்த கொள்கை அதுவல்லவா நபிமார்களின் கொள்கை. முஹம்மது ரசூலுல்லாஹ்வின் கொள்கை. அல்லாஹ் வானத்தில் இருந்து இறக்கிய கொள்கை.
சகோதரர்களே! இந்த உலகத்திலே பல இன்பங்கள் இருக்கின்றன. பல சுகங்கள் இருக்கின்றன. மனதுக்கு விருப்பமானது. கண்ணுக்கு குளிர்ச்சியானது. உடலுக்கு சுகமானது. பெயருக்கும் புகழுக்கும் உகந்தது என்று மனிதர்கள் எத்தனையோ இன்பங்களை, சுகங்களை, தேடல்களை, ஆசைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், மூமின்களுக்கு உள்ள ஆசை, இன்பம், மூமின்களுடைய பேரானந்தம், மூமின்களுடைய உள்ளத்தின் மகிழ்ச்சி எது தெரியுமா? என்னுடைய ரப் என்னை பொருந்தி கொள்ள வேண்டும். என்னுடைய ரப்பு என்னுடைய அல்லாஹ் என் மீது மகிழ்ச்சி அடைய வேண்டும்.
என்னுடைய தொழுகையை கொண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைய வேண்டும். என்னுடைய தர்மத்தை கொண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைய வேண்டும். என்னுடைய குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை இப்படி அனைத்தும் என்னுடைய ரப் ஒருவனுக்குத்தான். அவனுடைய மகிழ்ச்சிக்காகத்தான் நான் செய்கிறேன்; அல்லது விடுகிறேன். எதை செய்தாலும் அந்த ரப்புடைய மகிழ்ச்சிக்காக. எதை விட்டாலும் அந்த ரப்புடைய மகிழ்ச்சிக்காக.
مَن أحبَّ للهِ ، وأبغَضَ للهِ ، وأَعْطَى للهِ ، ومنَعَ للهِ ، فقد استَكْمَلَ الإيمانَ
கொடுக்கிறாயா? அல்லாஹ்விற்காக கொடு! தடுக்கிறாயா? அல்லாஹுவுக்காக தடு! நேசிக்கிறாயா? அல்லாஹ்வுக்காக நேசி! வெறுக்கிறாயா? அல்லாஹ்வுக்காக வெறு! ஈமானை முழுமை அடைய செய்து கொள்வாய்.
அறிவிப்பாளர் : அபூ உமாமா அல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4681.
அல்லாஹு தஆலா அனுப்பிய இறைத்தூதர்கள் ஒருவரா? இருவரா? எத்தனை ஆயிரம் லட்சங்களை தாண்டி அவர்களுடைய தேடல்கள் எல்லாம் அந்த அல்லாஹ் திருப்தி அடைய வேண்டும் என்பதாகவே இருந்தது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் 950 ஆண்டுகள் உழைத்தார்கள்.
இன்று ஒரு நாளைக்கு தாவாவிற்கு கூப்பிட்டாலே ஓடிப் போயிடுறாங்க. ஒரு நாளைக்கு தாவாவிற்கு வந்துட்டு இவ்வளவு கஷ்டமா? வேறு வழியை பார்த்துட்டு போயிடறாங்க. காசு செலவழிக்கணுமா? வெயில்ல நிக்கணுமா? என்று யோசிக்கிறார்கள்.
இவங்க கல்யாணத்துக்கு இன்விடேஷன் கொடுக்கிறதுக்கு மட்டும் வீடு வீடா ஏறுவாங்க. தெருத்தெருவா அலைவாங்க. எங்க வேணாலும் போவாங்க. அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் இன்விடேஷன் கொடுப்பதற்கு உள்ளம் சுருங்கி விடுகிறது. பாக்கெட்டில் இருந்து காசு வருவது கிடையாது.
ஒரு காலடி எடுத்து வைப்பது கிடையாது. வியர்வைத் துளிகளும் சிந்துவது கிடையாது. ஆனால், அல்லாஹ் மட்டும் பிடிக்கும். உனக்கு வேணும்னா உன் பேச்சுக்கு அல்லாஹ் உனக்கு பிடிக்கும் என்று சொல்லலாம். அல்லாஹ்வுக்கு உன்னை பிடிக்காது. ரப்புக்கு உன்னை பிடிக்காது. ஏன்? அல்லாஹ்வுடைய தீனுக்கு நீ கருமித்தனம் காட்டுகிறாய்.
அல்லாஹ் சொல்கிறான்:
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
நீங்கள்தான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். ஆக, உங்களில் கருமித்தனம் செய்பவரும் இருக்கிறார். எவர் கருமித்தனம் செய்வாரோ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் அவருடைய (கருமித்தனம் நிறைந்த) ஆன்மாவின் காரணமாகத்தான். (அவருடைய ஆன்மா கொடைத் தன்மையுடையதாக இருந்திருந்தால் அவர் கருமித்தனம் செய்திருக்க மாட்டார். மாறாக, அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்திருப்பார்.) அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன், யாருடைய தேவையுமற்றவன் ஆவான். நீங்கள்தான் (எல்லா வகையிலும்) தேவையுள்ளவர்கள் (ஏழைகள்) ஆவீர்கள். இன்னும், (நமது நபி முஹம்மத் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை விட்டு) நீங்கள் விலகிச்சென்றால் நீங்கள் அல்லாத ஒரு சமுதாயத்தை அவன் மாற்றி கொண்டுவருவான். பிறகு, அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)
கருத்து : நீ விலகினால் புறக்கணித்தால், என்னுடைய தீனுக்காக உன்னுடைய உயிரை பொருளை செல்வத்தை உனது வாழ்க்கையை உனது அறிவை உனது திறமையை செலவு செய்வதிலிருந்து நீ விலகினால் உன் தொழுகை எதுக்கு?
நீ சொர்க்கத்திற்கு போவதற்கு தொழுதுதான் ஆகணும். நீ ஒரு மூஃமின் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றால் அமல்களை நீ செய்தாக வேண்டும்.
எந்த தீனுக்காக நபிமார்கள் கொல்லப்பட்டார்களோ, எந்த தீனுக்காக நபிமார்களின் பிள்ளைகள் கொல்லப்பட்டார்களோ, எந்த தீனுக்காக நபிமார்கள் வாழ்நாள் எல்லாம் தெருத்தெருவாக அலைந்தார்களோ, எந்த பிரச்சாரத்திற்காக நாடோடிகளாக இந்த உலகத்தை சுற்றி வந்தார்களோ, உடுத்திய உடையுடன் மூசா நபி ஓடுகிறார். இங்கிருந்து அங்கிருந்து இப்ராஹிம் நபி ஓடுகிறார். நாடு நாடாக அலைகிறார்.
ஈசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் வேலையே இந்த பூமியிலே சுற்றித்திரிவது தான். அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தவராக. உடுத்திய உடையைத் தவிர உளூ செய்வதற்குரிய பாத்திரத்தை தவிர இந்த பூமியிலே அவருக்கு சொந்தமானது எதுவும் இல்லை.
دخلتُ على عائشةَ فأخرجتْ إلينا إزارًا غليظًا مما يُصنعُ باليمنِ وكساءً من التي يُسمُّونها المُلبَّدَةَ ، فأقسمت باللهِ أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ قُبِضَ في هذيْنِ الثوبيْنِ
முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறக்கிறார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ரெண்டு துணியை கொண்டு வராங்க. உங்க நபி விட்டுட்டு போன சொத்து இதுதாங்க. மேலே போர்த்துவதற்கு கீழே உடுத்துவதற்கு சேர்த்து இரண்டு ஆடைகள். இதுதான் உங்கள் நபி விட்டுட்டு போன சொத்து.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூ தாவூத், எண் : 4036.
تُوُفِّيَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ ودِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ، بثَلَاثِينَ صَاعًا مِن شَعِيرٍ. وقالَ يَعْلَى، حَدَّثَنَا الأعْمَشُ: دِرْعٌ مِن حَدِيدٍ
அவர்களுடைய உணவுக்காக மனைவி மக்களின் பசி பட்டினிக்காக அவர்களின் ஜிஹாதுடைய உருக்கு சட்டை இரும்பு சட்டை ஒரு யூதன் இடத்தில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. 30 சாஉ கோதுமையை வாங்கியதற்காக. அதை மீட்ட முடியாமல் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2916.
எதற்காக? இந்த தீனுக்காக. இந்த மார்க்கத்திற்காக. இப்படி நடந்தால் தான் அல்லாஹ்வுடைய அன்பு அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும். அதில் அல்லவா இன்பம் இருக்கிறது! அது அல்லவா சுகம்!
என்னை நான் அல்லாஹ்வுக்காக அழித்துக் கொள்வதிலே. என் செல்வத்தை, என் குடும்பத்தை, என்னுடைய மானம் மரியாதையை, எனக்கு அல்லாஹ் கொடுத்த அறிவை, எனக்கு அல்லாஹ் கொடுத்த திறமையை, என்னுடைய ரப்புக்காக நான் கொடுப்பதிலே; அவன் திருப்தி அடைவதற்காக; அவன் என்னை மன்னிப்பதற்காக; அவன் என்னை பொருந்தி கொள்வதற்காக. இது அல்லவா உண்மையான இன்பம். இதுவல்லவா உண்மையான சுகம். நபிமார்கள் தேடிய இன்பம் இதுதான்.
وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ
வசனத்தின் கருத்து : யாருடைய அன்பையாவது நீங்கள் தேட வேண்டுமா? யாருடைய பாசத்தையாவது பொருத்தத்தையாவது மகிழ்ச்சியாவது நீங்கள் தேட வேண்டுமா?
அல்லாஹ் சொல்கிறான்: அறிவாளிகளா! புத்திசாலிகளா! என்னுடைய அன்பை தேடுங்கள்! நீங்கள் பொருத்தமாகுவதற்கு, நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்வதற்கு, நீங்கள் சந்தோஷப்படுத்துவதற்கு, நீங்கள் திருப்தியை தேடுவதற்கு அல்லாஹ் அல்லவா மிக தகுதியானவன். அவனுடைய ரசூல் அல்லவா மிகத் தகுதியானவர்கள். (அல்குர்ஆன் 9:62)
இன்றைக்கு அந்த ரெண்டு பேருடைய பாசம், நேசம், அன்பு, தேடல் ஒன்றுமே உள்ளத்தில் கிடையாது.
தான் ஓதக்கூடிய அந்த சூராக்கள் வசனங்களின் பொருளை தெரியாமல், அர்த்தத்தை உணராமல், எதை ஓதுகிறோம்? என்று நினைவே இல்லாமல் தக்பீர் கூறி ஸலாம் கூறி முடித்து விடுகிறார். இவர் எந்த பாசத்தில் தொழுது கொண்டிருக்கிறார்??
فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 21:90)
இன்றைக்கு கஅபாவை தவாஃப் செய்யும் போதே செல்ஃபியோடு தானே தவாஃப் செய்றாங்க. அல்லாஹ்வின் மகத்துவமிக்க அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கும்போது கூட உள்ளங்கள் நடுங்கவில்லை என்றால், கண்களில் கண்ணீர் வரவில்லை என்றால் இந்த கல்பு எப்படி இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்!
என்றைக்காவது ஒரு நாள் தனியா தொழும்போது கண்களில் இருந்து அழுகை வந்திருக்கிறதா? அப்படி அழுகை வரக்கூடிய அளவுக்கு பொறுமையா ரெண்டு ரக்அத்து தொழுவுறதுக்கு நமக்கு நேரம் இருக்கிறதா? ஒதுக்கி இருக்கிறோமா? எல்லாம் அவசரம்.
அடுத்தடுத்து துன்யா. வரிசையா பட்டியல் போட்டு வைத்திருக்கோம். ஆனால் எல்லாம் மண்ணில் போகக் கூடியது.
அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் உடைய அந்த சூனியக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். அதை நினைத்துப் பாருங்கள்!
ஃபிர்அவ்னின் எண்ணிக்கையில் அடங்கா சொத்துக்கள், பதவிகள் அனைத்தையும் துறந்தார்கள். ஃபிர்அவ்ன் சொன்னான்: உங்களுக்கு செல்வம் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, உங்களை மாறுகை மாறுகால் வெட்டப் போகிறேன். உங்களுடைய பின் துவாரத்திலே ஈட்டியால் குத்தி நெஞ்சு வரை கொண்டு வந்து கழு மரத்திலே உங்களை தொங்கவிடப் போகிறேன்.
அப்போது அவர்கள் சொன்னார்கள்:
قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا
(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)” (அல்குர்ஆன் 20:72)
اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَ
எங்கள் ஆசை எல்லாம் இந்த ஈமானுக்குப் பிறகு எங்கள் இறைவன் எங்களை மன்னிக்க வேண்டும் என்று ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 26:51)
அவன் கொடுத்த உயிரை அவனுக்காக நாங்கள் கொடுப்பதிலே எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்ன இன்பத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்!
ஒருவரல்ல, இருவரல்ல, மொத்தம் 70 ஆயிரம் சூனியக்காரர்கள் ஈமானை ஏற்றார்கள். அவர்களில் ஒருவர் கூட மதம் மாறவில்லை. தான் சொன்ன அந்த கலிமாவில் இருந்து அவர்கள் திரும்பவில்லை. 70,000 சூனியக்காரர்கள் மாறுகை மாறுகால் வெட்டப்பட்டார்கள். பின் துவாரத்திலே ஈட்டியால் குத்தப்பட்டு, நெஞ்சுவரை கொண்டுவரப்பட்டது. பிறகு கழு மரத்திலே அப்படியே கழுகுகளும் பறவைகளும் கொத்தி தின்னும் படி விடப்பட்டார்கள். யாருக்கும் தண்ணீரும் கொடுக்கப்படவில்லை. உணவு கொடுக்கப்படவில்லை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற சொல்லியவாறே ஒவ்வொருவரும் உயிர் நீத்தார்கள். ஒருவர் கூட வலி தாங்காமல் அல்லது அந்த துன்பத்தால் அந்த இன்னல்களால் அந்த வலியால் என்னை இறக்கி விடுங்கள் என்று சொல்லவில்லை.
அதற்கான காரணம், அந்த ஈமானிலே உலகத்தில் எதுவும் இல்லாத சுகத்தை இன்பத்தை அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் பாசம் உலகத்தின் அத்தனை நேசங்களை விட மிகைத்து விட்டது.
அல்லாஹ்வின் அடியார்களே! அது தான் ஈமானுடைய தேடல். அதை நோக்கித்தான் நம்முடைய பயணம் இருக்க வேண்டும். இன்பங்களை அல்லாஹ்வுடைய இபாதத்திலே, ஈமானிலே, அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வதில் தேட வேண்டும்.
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா உங்களுக்கும் எனக்கும் நமது சந்ததிகளுக்கும் அத்தகைய ஈமானை இக்லாஸை கொடுப்பானாக! நமது சமூக மக்களுக்கு மத்தியிலே ஒற்றுமையை, அன்பை, பரஸ்பர பாசத்தை, ஒருவர் ஒருவருக்கு உதவி செய்யக்கூடிய அந்த உற்ற சகோதரத்துவத்தை அல்லாஹு தஆலா தந்தருள்வானாக! அல்லாஹ் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த ஒவ்வொரு சிறிய பெரிய பாவங்களை மன்னித்து அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/