HOME      Khutba      அல்லாஹ்வின் தண்டனை அநியாயக்காரர்களுக்கு | Tamil Bayan - 932   
 

அல்லாஹ்வின் தண்டனை அநியாயக்காரர்களுக்கு | Tamil Bayan - 932

           

அல்லாஹ்வின் தண்டனை அநியாயக்காரர்களுக்கு | Tamil Bayan - 932


அல்லாஹ்வின் தண்டனை அநியாயக்காரர்களுக்கு
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் தண்டனை அநியாயக்காரர்களுக்கு 
 
வரிசை : 932
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 27-12-2024 | 26-06-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு; அவனுடைய மார்க்கத்தை பின்பற்றி, அவனுடைய கட்டளைகளை மதித்து, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை கற்று, பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்மை பொருந்தி கொள்வானாக! அல்லாஹ்வுடைய நேர்வழியின் மீது உறுதியோடு நிலைத்திருக்க, இறுதி மூச்சு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் ஈமானில் நீடித்திருக்க, அல்லாஹு பொருந்தி கொண்ட நிலையில் இந்த உலகத்தை விட்டு பிரிய, அல்லாஹ் பொருந்தி கொண்ட நிலையில் அவனை சந்திக்க அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் அருள் புரிவானாக! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! முதலாவதாக ஒரு ஹதீஸ் குதுசியிலிருந்து இன்றைய உரையை ஆரம்பம் செய்வோம். அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா தன்னுடைய நபியிடத்திலே சொல்கிறான். 
 
நாம் சென்ற வாரத்தில் பேசிக் கொண்டிருந்தோம். நீதத்தை நாம் பேண வேண்டும். எந்த நிலையிலும் நீதத்திற்கு நேர்மைக்கு மாற்றமாக முஸ்லிம்கள் நடந்து விடக் கூடாது. தனிமனிதரும் சரி, சமூகமும் சரி இஸ்லாமிய ஆட்சி அதிகாரமும் சரி. அநீதம் அக்கிரமம் செய்வது; பிறருடைய உரிமைகளை பறிப்பது; அவர்கள் மீது எல்லை மீறுவது; அவர்களை அடிப்பது; அவர்களை கொலை செய்வது; அவர்களுடைய உரிமைகளை பறிப்பது. இவையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகப்பெரிய பாவங்களாக மிகப்பெரிய குற்றங்களாக கருதப்படுகின்றன. 
 
அந்த தொடரில் தான் இன்று இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் பல செய்திகளை பல ஆதாரங்களை பார்க்க இருக்கிறோம். 
 
அதிலே முதலாவதாக இந்த ஹதீஸ் குதுசி. அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார். 
 
அல்லாஹு தஆலா தனது அடியார்கள் இடத்திலே பேசுகிறான்: 
 
يا عِبَادِي، إنِّي حَرَّمْتُ الظُّلْمَ علَى نَفْسِي، وَجَعَلْتُهُ بيْنَكُمْ مُحَرَّمًا، فلا تَظَالَمُوا  
 
என் அடியார்களே! பிறருக்கு அநீதி இழைப்பதை அநியாயம் புரிவதை நான் எனக்கு நானே தடுத்துக் கொண்டேன். ஹராமாக்கிக் கொண்டேன்.
 
(அல்லாஹு தஆலா செய்தால் யாரால் எதிர்த்து கேட்க முடியும்? எந்த வானவருக்கு சக்தி இருக்கிறது? அல்லாஹ்வுடைய செயலை தடுப்பதற்கு எதிர்த்து பேசுவதற்கு.)
 
அல்லாஹ் சொல்கிறான்: அநீதி இழைப்பதை நான் என் மீது ஹராம் ஆக்கிக் கொண்டேன். உங்களுக்கு மத்தியிலும் அந்த செயலை ஹராமானதாகதான் வைத்திருக்கிறேன். அநீதி இழைப்பது - அது உங்களுக்கும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு குற்ற செயலே. தடுக்கப்பட்ட செயலே. தடுக்கப்பட்ட பாவமே. ஆகவே நீங்கள் ஒருவர் ஒருவருக்கு அநீதி இழைக்காதீர்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அக்கிரமம் அநியாயம் செய்யாதீர்கள். எல்லை மீறாதீர்கள். 
 
பிறருடைய உரிமையில், பிறருடைய சொத்தில், பிறருடைய கண்ணியத்தில், பிறருடைய உடமையில், பிறருடைய மான மரியாதையில் எதிலும் நீங்கள் எல்லை மீறாதீர்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577. 
 
அல்லாஹு அக்பர்! கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய மார்க்கம் ஒரு பரிசுத்தமான நீதமான மார்க்கம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நீதமான சமுதாயத்தை உருவாக்கி, நீதமான தலைமைத்துவத்தை உருவாக்கிவிட்டு இந்த உலகத்திலிருந்து சென்றார்கள். 
 
உலக மக்களை எப்படி வழி நடத்த வேண்டும்? எந்த வழிமுறையால் உலக மக்கள் இஸ்லாமின் பக்கம் கவரப்படுவார்கள்? நேசிப்பார்கள்? அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை உருவாக்கிவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சென்றார்கள். 
 
அந்த தலைமைத்துவத்திடத்திலே தொழுகை இருந்தது. அந்தத் தலைமைத்துவத்திடத்திலே இபாதத் இருந்தது. அந்த தலைமைத்துவத்திடத்திலே சுன்னா இருந்தது. அஹ்லாக், மார்க்கப்பற்று இருந்தது. நீதம் நேர்மை இருந்தது. ஒழுக்கம் இருந்தது. 
 
ஆட்சியாளராக இருப்பவர் மக்களிலேயே அதிகம் அல்லாஹ்வை பயப்பட கூடியவராக இருப்பார். ஆட்சியாளராக இருப்பவர் மக்களிடையே அதிகம் அல்லாஹ்வை வணங்கக் கூடியவராக இருப்பார். ஆட்சியாளராக இருப்பவர் மக்களிலேயே மக்களுக்கு மிகவும் கருணை செலுத்துபவராக, மக்கள் மீது அன்பு வைப்பவராக, மக்களுடைய உரிமைகளை பேணக் கூடியவராக இருப்பார். 
 
அப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை மக்களுக்கு உருவாக்கி, மொழி, இனம், நிலம் வேறுபாடு பார்க்காமல் அந்த மதினாவின் தலைமைத்துவத்தை உலகமே ஏற்கும் அளவுக்கு போற்றப்படக்கூடிய ஒரு உன்னதமான தலைமைத்துவமாக ஆக்கிவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சென்றார்கள்.  
 
மதீனாவில் இருந்து ஒரு கலிஃபா ஆட்சி செய்கிறார் என்றால், அங்கே அவர் அரபி ஆயிற்றே? பாரசீக பூமியில் இருக்கிற நான் ஏன் அவரது தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்? என்று கூற மாட்டார்.
 
மதினாவில் இருந்து ஆட்சி செய்பவர்தான் ஏமனுக்கும் ஆட்சியாளர். பஹ்ரைனுக்கும் ஆட்சியாளர். இராக்கும். ஈரானுக்கும். ஷாமுக்கும் ஆட்சியாளர். அங்கிருந்து தொடர்ந்து அப்படியே இன்றைய ரஷ்யா உடைய மிகப்பெரிய ஒரு நிலப்பரப்புக்கு எல்லாம் அவர்கள் தான் ஆட்சியாளர்கள். 
 
அந்தத் தலைமைத்துவத்தை மக்கள் நிறம் இனம் மொழி என்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் ஏற்று அந்த தலைமைத்துவத்துக்கு கீழ் இருப்பதை பெருமையாக நினைத்தார்கள். 
 
இது எதனால்? பரிபூரணமான இஸ்லாமை கொண்டு அவர்கள் ஆட்சி செய்தார்கள். எதிலே தவ்ஹீதும் இருந்ததோ, எதிலே சுன்னாவும் இருந்ததோ, எதிலே இபாதத்தும் இருந்ததோ, எதிலே ஆட்சி முறையில் நீதமும் நேர்மையும் சமத்துவமும் இருந்ததோ அத்தகைய ஒரு ஆட்சி முறையை அத்தகைய ஒரு தலைமைத்துவத்தைக் கொண்டு இந்த சமுதாயத்தை வழி நடத்தினார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுக்கு பின்னால் வரக்கூடிய சில தலைமைத்துவத்தை சில அமைப்புகளை எச்சரிக்கையும் செய்தார்கள். இத்தகைய ஒரு தலைமைத்துவம் இந்த உம்மத்திற்கு வந்து விடக்கூடாது; அப்படி வந்து விட்டால் இந்த உம்மத் உலக மக்களுக்கு மத்தியிலே அசிங்கப்பட்டு விடும். இஸ்லாம் என்ற இந்த ஏகத்துவ முழக்கத்தை உலகத்திற்கு மத்தியிலே ஓங்கி ஒலிக்க வைக்க முடியாது. இதன் பக்கம் மக்களை அழைக்க முடியாது. எனவே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள். 
 
எத்தனை ஹதீஸ்களை சொன்னார்கள் பாருங்கள்! இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.
 
إنَّه يُسْتَعْمَلُ علَيْكُم أُمَراءُ، فَتَعْرِفُونَ وتُنْكِرُونَ، فمَن كَرِهَ فقَدْ بَرِئَ، ومَن أنْكَرَ فقَدْ سَلِمَ، ولَكِنْ مَن رَضِيَ وتابَعَ، قالوا: يا رَسولَ اللهِ، ألا نُقاتِلُهُمْ؟ قالَ: لا، ما صَلَّوْا. أَيْ مَن كَرِهَ بقَلْبِهِ وأَنْكَرَ بقَلْبِهِ. وفي رواية: بنَحْوِ ذلكَ، غيرَ أنَّه قالَ: فمَن أنْكَرَ فقَدْ بَرِئَ، ومَن كَرِهَ فقَدْ سَلِمَ. وفي رواية: فَذَكَرَ مِثْلَهُ، إلَّا قَوْلَهُ: ولَكِنْ مَن رَضِيَ وتابَعَ لَمْ يَذْكُرْهُ
 
உங்களுக்கு மத்தியிலே சில நேரங்களில் சில ஆட்சியாளர்கள் வருவார்கள் அவர்களிடம் சில நல்ல செயல்களையும் காண்பீர்கள். பல கெட்ட செயல்களையும் பார்ப்பீர்கள். 
 
(ஒருவர் நமக்கு ஆட்சியாளராக ஆகிவிட்டார் என்பதற்காகவே கண்மூடித்தனமாக அவரை ஆதரிக்காதீர்கள். அவர் சொல்வதை எல்லாம் கேட்டு உங்களது மார்க்கத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.) 
 
யார் வெறுப்பாரோ, அவரின் செயலை, அவருடைய மார்க்கத்திற்கு முரண்பட்ட செயலை யார் வெறுப்பாரோ அவர் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வார். 
 
யார், அவருடைய குற்றத்தை எதிர்த்துப் பேசுவாரோ அவர் அல்லாஹ்விடத்தில் ஈடேற்றம் பெற்று விட்டார். அடுத்து மூன்றாவது ஒரு கூட்டத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
(இன்று, அந்த கூட்டம் எவ்வளவு அதிகமாகிவிட்டது பாருங்கள்!) 
 
யார் அந்த அநியாயக்கார அரசர்கள்? அந்த மார்க்கத்திற்கு முரணாக செல்லக்கூடிய ஆட்சியாளர்களுடைய செயல்களை திருப்தி கொள்கிறாரோ, அதற்கு ஆதரவு தருகிறாரோ, அதற்கு சப்போர்ட் ஒத்துழைப்பு செய்கிறாரோ முடிந்தது அவருடைய காரியம். 
 
சஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய ஆட்சியாளர்களிடத்திலே நாங்கள் போர் செய்ய வேண்டாமா? யுத்தம் செய்ய வேண்டாமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
அவர்கள் உங்களுக்கு தொழுகையை நிலை நிறுத்தி, உங்களுக்கு தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் காலமெல்லாம் விட்டு விடுங்கள்! அல்லாஹ்விடத்திலே திரும்புங்கள். ஆனால் சீர்திருத்தத்தை கைவிட்டு விடாதீர்கள். கண்டிப்பாக கைவிட்டு விடாதீர்கள். எச்சரிப்பதை விட்டு விடாதீர்கள். 
 
யார், தன்னுடைய உள்ளத்தால் வெறுப்பார்களோ, தன்னுடைய உள்ளத்தால் மறுப்பார்களோ, அவர்கள் பாவத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். 
 
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1854. 
 
அன்பான சகோதரர்களே! இன்று நிலைமை எப்படி மாறுகிறது? ஆட்சியாளர்கள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கொண்டு ஆட்சி செலுத்துவதற்கு அவர்கள்  படைக்கப்பட்டவர்களே தவிர, தங்களுடைய மன இச்சையின் படி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மாற்றுவதற்கு அல்ல.
 
அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கொண்டு வழி நடத்துவதற்காக அல்லாஹ் அவர்களுக்கு பொறுப்பை அதிகாரத்தை கொடுத்திருக்கிறானே தவிர, தன்னுடைய மன இச்சையின் படி வழிநடத்துவதற்கு அல்ல. 
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
ما مِن نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ في أُمَّةٍ قَبْلِي إلَّا كانَ له مِن أُمَّتِهِ حَوارِيُّونَ، وأَصْحابٌ يَأْخُذُونَ بسُنَّتِهِ ويَقْتَدُونَ بأَمْرِهِ
 
எனக்கு முன்னால் அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் அந்த நபிமார்களின் உம்மத்துகளிலே விசேஷமான சிறப்பான தோழர்கள் இருப்பார்கள். அந்த நபிக்கு என்று சஹாபாக்கள் இருப்பார்கள். அந்த நபியின் சுன்னத்தை அப்படியே பற்றிப் பிடித்து நடப்பார்கள். அந்த நபியின் கட்டளைபடி அவர்கள் வழி நடப்பார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 50. 
 
கண்ணியத்திற்குரிய சஹாபாக்களை போன்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த தோழர்களை போன்று. அல்லாஹ் இந்த பூமியிலே அவர்களுக்கு கொடுத்த ஆட்சியை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு மத்தியிலே நீதம் செலுத்துவதற்காகவும் அவர்கள் அந்த ஆட்சியை பயன்படுத்தினார்கள் தவிர, தங்களுடைய குடிசைகளை கோட்டைகளாக மாற்றுவதற்கு அல்ல. தங்களுடைய எளிய வாழ்க்கையை ஆடம்பர வாழ்க்கைகளாக மாற்றுவதற்காக அல்ல. தன்னுடைய சொந்த பந்தங்கள் தன்னுடைய உறவுகளை சுகபோக வாழ்க்கைக்காக கொண்டு செல்வதற்கு அல்ல. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு, கலிஃபா அபூ பக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத்துடைய பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு மிம்பரிலே ஏறி மக்களுக்கு மத்தியிலே சொன்ன வார்த்தையை பாருங்கள்! 
 
அல்லாஹு தஆலா எனக்கு இந்த ஆட்சியை கொடுத்தானே எதற்காக? அநீதி இழைக்கப்பட்டவனின் உரிமையை அநீதி இழைத்தவனிடமிருந்து பெற்று தருவதற்காக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கிறேன். 
 
உங்களில் வலிமை மிக்கவன் பலவீனமானவனை கொடுமை செய்து பிழைக்கிறான் அல்லவா! அந்த பலவீனமானவனை அவனுக்கு கொடுமை இழைக்கக் கூடிய அந்த வலிமை மிக்கவனிடமிருந்து பாதுகாப்பதற்காக நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். 
 
நூல் : அல் முஜாலஸா வ ஜவாஹிருல் இல்ம் (4/112)
 
சகோதரர்களே! இதெல்லாம் உள்ளம் கவர்   வசனமாக பேசுவதற்கு அவர்கள் சொல்லியது அல்ல. எவ்வளவோ பேசலாம்! செய்து காட்டினார்கள். அதுதான் அவர்களுடைய சொல் செயலாக இருந்தது. செயல் சொல்லாக இருந்தது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் சொன்னார்கள்: 
 
ثُمَّ إنَّها تَخْلُفُ مِن بَعْدِهِمْ خُلُوفٌ يقولونَ ما لا يَفْعَلُونَ، ويَفْعَلُونَ ما لا يُؤْمَرُونَ
 
அதற்குப் பின்னால் ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் சொல்லுவார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு மார்க்கத்தில் என்ன கட்டளை கொடுக்கப்பட்டதோ அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். எது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 50. 
 
இன்று உரிமைகள் பேசப்படுகின்றன. தனிமனித விருப்பம் பேசப்படுகிறது. எதற்காக? அல்லாஹ் தடுத்த ஹராமை ஹலால் ஆக்குவதற்காக. ஆனால், அந்த உரிமைகளும், அந்த தனிமனித விருப்பங்களும் ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்ற நினைத்தால் மட்டும் அங்கே அனுமதி இல்லை. 
 
அவருடைய விருப்பத்திற்கு தாடி வைப்பதற்கோ, அவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப சுன்னாவான முறையிலே உடை உடுத்துவதற்கோ, அவனுடைய வணக்க வழிபாடுகளுக்கோ அங்கே அனுமதி இல்லை. 
 
ஆனால், எந்த பாவத்தின் காரணமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தையே கடும் தண்டனையால் தண்டித்தானோ, பல குற்றவாளிகளை ஒரு தண்டனையை கொண்டு அல்லாஹ் தண்டித்து அழித்து விட்டானோ. அந்த ஹராமை செய்வதற்கு மட்டும், உரிமைகள், தனிமனித விருப்பங்கள் பேசப்படுகின்றன
 
ஆனால், உலகத்திலேயே பல தண்டனைகளை கொண்டு அல்லாஹு தஆலா ஒரு கூட்டத்தை தண்டித்தான் என்றால் அது லூத் அலைஹிஸ்ஸலாம் உடைய கூட்டத்தை. 
 
இந்த உலகத்தில் மனித சமுதாயம் கண்டிராத ஒரு மோசமான காரியத்தை உலக மக்களுக்கு மத்தியில் பரப்பினார்கள். ஆண் ஆணோடு சேர்வதை, பெண் பெண்ணோடு சேர்வதை.
 
அல்லாஹு தஆலா அவர்களுக்காக கடுமையான வேதனையை இறக்கினான். கண்களை குறுடாக்கினான். அவர்களுடைய பூமியை அப்படியே தலைகீழாக அல்லாஹ் புரட்டினான். அதற்கு முன்னால் கடுமையான சூடேற்றப்பட்ட, (கல்மழை) கல்மாரி அவர்கள் மீது பொழிந்தன. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் கடுமையான சத்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 11:82, 15:74)
 
இப்படி பல (அதாபு)வேதனைகளை ஒரே நேரத்திலே அந்த சமுதாயத்தினர் மீது இறக்கினான். 
 
இன்று முஸ்லிம் (!) நாடுகளின் பாராளுமன்ற அவைகளில் அது தனிமனித உரிமை, அதற்கு நம்முடைய நாடுகளிலேயே அனுமதி அளிக்க வேண்டும் என்று பேசப்படக்கூடிய அளவுக்கு மட்டும் அல்ல, சட்டமாக அனுமதிக்கப்படக்கூடிய அளவுக்கு மாறிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
இதை எதிர்த்து கேட்பவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் உனக்கு தண்டனை. 
 
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
فمَن جاهَدَهُمْ بيَدِهِ فَهو مُؤْمِنٌ، ومَن جاهَدَهُمْ بلِسانِهِ فَهو مُؤْمِنٌ، ومَن جاهَدَهُمْ بقَلْبِهِ فَهو مُؤْمِنٌ، وليسَ وراءَ ذلكَ مِنَ الإيمانِ حَبَّةُ خَرْدَلٍ
 
யார், இவர்களிடத்திலே தன்னுடைய கரத்தால் போர் செய்கிறானோ அவன் மூமினாக இருப்பான். யார் இவர்களிடத்திலே தன்னுடைய நாவினால் போர் செய்கிறானோ அவன் மூமினாக இருப்பான். யார் அவர்களிடத்திலே தன்னுடைய உள்ளத்தால் போர் செய்கிறானோ அவன் மூமினாக இருப்பான். இதற்கு பின்னால் ஈமானிலே ஒரு எள் அளவு கூட அங்கே இடமில்லை. அத்துடன் முடிந்தது அவ்வளவுதான்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 50. 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் என்பது நீதத்தின் மார்க்கம். ஒழுக்கத்தின் மார்க்கம். அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு இந்த பூமியிலே ஆதிக்கத்தை, மதிப்பை, மரியாதையை, கண்ணியத்தை, வீரத்தை, துணிவை அவர்களைப் பார்த்தால் எதிரிகள் பயப்படக்கூடிய அந்த தன்மையை கொடுப்பது அவர்களுடைய நீதத்தின் காரணமாகத்தான். 
 
இமாம் இப்னு தைய்மியா ரஹிமத்துல்லாஹி அலைஹி அவர்கள், குர்ஆன் ஹதீஸினுடைய மிகப்பெரிய அழைப்பாளர். அழகாக சொல்கிறார்: 
 
அல்லாஹு தஆலா காஃபிர்கள் முஷ்ரிக்குகளின் ஆட்சியைக் கூட, அவர்கள் நீதமாக ஆட்சி செய்யும் போது.  ஒரு நிலையான ஆட்சியாக அல்லாஹ் அமைத்து விடுவான், அல்லாஹு தஆலா அநியாயக்காரர்களின் ஆட்சியை அல்லாஹ் அழித்து விடுவான் அவர்கள், மூமினாக முஸ்லிமாக இருந்தாலும் சரியே. 
 
இன்று, நம்முடைய நிகழ்கால வரலாறுகள் அதற்கு மிகப்பெரும் சாட்சிகளாக இருப்பதை பார்க்கிறோம். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய மார்க்க அறிஞர்கள் நம்முடைய முற்கால இஸ்லாமிய மன்னர்கள், ஆட்சியாளர்கள், கலிஃபாக்களுக்கு பிறகு வந்தவர்கள், அது மன்னர் ஆட்சியாக இருக்கட்டும், அல்லது ஷூராவின் ஆட்சியாக இருக்கட்டும், அவர்கள் நீதத்தை அடிப்படையாக வைத்தே வாழ்ந்தார்கள். 
 
உலகத்தை வெல்வது என்பது, உலக மக்களை ஆட்சி செய்வது என்பது, அவ்வளவு சாதாரணமானதல்ல. நீதமில்லை என்றால் மக்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
 
நம்முடைய ஆட்சியாளர்கள், கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, பனு உமையா மன்னர்களிலே மிகப் பிரபலமானவர். தங்களுடைய அதிகாரிகளுக்கு அவர்கள் எழுதிய கடிதங்களிலே ஒன்று, மக்கள் மீது அதிகாரம் படைத்த ஒரு அதிகாரியாக நீ இருப்பது அவர்களுக்கு நீ அநீதி இழைக்க உன்னை தூண்டுமேயானால் (என்னை யார் கேட்க முடியும்? என்னை யார் தடுக்க முடியும்? என்று உன்னுடைய மனம் உனக்கு சொல்லுமேயானால்) அல்லாஹ் உன் மீது வைத்திருக்கக் கூடிய பேராற்றலை நினைத்துப் பார்! 
 
மேலும், சொன்னார்கள்: நீ இவர்களுக்கு செய்யக்கூடிய அநியாயம் அக்கிரமம் ஒரு காலத்தில் முடிந்து தான் போகும். நாளை மறுமையில் நீ செய்த அக்கிரமங்களை எல்லாம் கொண்டு வந்து அல்லாஹ்விடத்திலே முறையிடுவார்களே! அது உன்னை விட்டு பிரியாமல் நாளை மறுமையில் உனக்கு மிகப்பெரிய தண்டனையாக நரகத்தில் நீடித்திருக்குமே! அதை நீ பயந்து கொள்! 
 
இது யார் யாருக்கு செய்கிற உபதேசம்? ஒரு ஆட்சியாளர் ஒரு ஜனாதிபதி தங்களுக்கு கீழ் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு. 
 
அல்லாஹு அக்பர்! இன்று யார் என்னை பற்றி பேசுகிறார்கள்? யார் என்னை பற்றி  என் ஆட்சியை பற்றி குறை சொல்கிறார்கள்? கண்டுபிடியுங்கள். அவர்களை எல்லாம் சிறையில் தள்ளுவோம். இதுதான் இன்றைய மன்மத ராஜாக்களின்  உபதேசமாக இருக்கிறது. 
 
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆட்சிக்காலம் ...
 
நம்முடைய நாட்டை பாதுகாப்பதற்கு நமக்கு பெரிய பலமான கோட்டை மதில் சுவர்கள் தேவைப்படுகின்றன. அந்த எல்லை மதில் சுவர்களை நாங்கள் பெரிதுபடுத்தி பலமாக கட்டி கொள்ளலாமா? என்று குறிப்பாக பாரசீக பூமியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கேட்டு கடிதம் வரைகின்றனர்.
 
கலிஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அவர்களின்) நம்முடைய முன்னோர்களின் உபதேசத்தை பாருங்கள்!  தங்களுடைய அதிகாரிகளுக்கு பதில் கடிதம் எழுதினார்கள்.
 
 அட அறிவாளிகளே! உங்களுடைய நாட்டை நீதத்தைக் கொண்டு பலப்படுத்துங்கள்! பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதற்கு கோட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீதத்தை கொண்டு கோட்டை கட்டுங்கள். அநியாயத்திலிருந்து அதன் பாதைகளை சுத்தப்படுத்துங்கள்! மக்கள் உங்களை ஒருபோதும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். 
 
கலிஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு ஒருமுறை படுத்திருக்கிறார்கள். எங்கே? கோட்டையிலா? ஆடம்பரமான பங்களாவிலா? இல்லை. 
 
இரண்டு மஜூசிகள் பாரசீக நாட்டில் இருந்து மதீனாவிலே கோட்டை எங்கேயாவது இருக்குமா? கலிஃபாவின் கோட்டை எங்கே என்று தேடி. கலிஃபாவை தேடி மன்னர் சார்பாக வருகிறார்கள்.
 
அந்த பள்ளிவாசலுக்கு போங்க என்று மக்களெல்லாம் சொன்னார்கள்.  என்னே உங்களுடைய ஜனாதிபதி பள்ளிவாசலிலா? பள்ளிவாசலில் வந்து பார்த்தால் அங்கேயும் காணோம். பள்ளிவாசலில் காணுமே? எங்கே இருப்பார்? எங்கேயாவது அக்கம் பக்கம் போய் தேடிப் பாருங்க; அசதியா இருந்தா படுத்து தூங்கிட்டு இருப்பார். 
 
பார்த்தால் மணலில், பாலைவன மணல் அதை கொஞ்சம் அப்படி உயர்த்தி அதையே தலையணை மாதிரி வச்சிக்கிட்டு அதுல படுத்து தூங்கிட்டு இருக்காரு. 
 
ஸுபஹானல்லாஹ்! அப்பொழுது அந்த இரண்டு பாரசீக தூதுவர்களும் சொன்னார்கள்: (ஒரே வார்த்தை இன்று வரை வரலாற்றிலே பதியப்படுகிறது.) நீ நீதமாக நடக்கிறாய். நீ பாதுகாப்பு பெற்று விட்டாய். உனக்கு எந்த பாதுகாவலரும் தேவையில்லை. நீ நீதமானவன் நீ பாதுகாப்பு பெற்றவன். 
 
பிறகு அவர் எழுந்திருக்கிறவரை எதிர்பார்த்து இருக்கிறார்கள். யாரும் அங்கே கலீஃபாவை பாதுகாப்பதற்கு செக்யூரிட்டி இல்லை. தனி ஆளாக அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார். 
 
ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இவரும் உமவியாக்களுடைய ஒரு பெரிய மன்னர். அந்த காலத்து மன்னர்கள் எப்படி என்றால் அறிஞர்களிடத்தில் உபதேசம் கேட்பார்கள். தங்களை சுற்றி மார்க்க அறிஞர்களாக வைத்துக் கொள்வார்கள். தங்களுடைய செயல்களை திருத்தி கொடுப்பதற்காக, தங்களை நீதத்தின் பக்கம் தூண்டுவதற்காக அறிஞர்களை தேடி செல்வார்கள். அவர்களுடைய உபதேசங்களை கேட்பார்கள். தங்களை திருத்திக் கொள்வார்கள். 
 
ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் ரஹமத்துல்லாஹி அலைஹி, அறிஞர் தாவூஸ் (மிகப்பெரிய மார்க்க அறிஞர், தாபியீன்) அவரை சந்தித்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று சொல்கிறார். 
 
(இன்று உபதேசம் செய்தாலே உனக்கு பத்து ஆண்டு தண்டனை. உனக்கு 20 ஆண்டு தண்டனை. கடுங்காவல் தண்டனை.) 
 
மன்னர் சொல்கிறார்; எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. ஒரே வார்த்தை சொன்னார்கள்: அரசரே! அதானுடைய நாளை பயந்து கொள்ளுங்கள்! அறிவிக்கப்படும் நாளை பயந்து கொள்ளுங்கள்! 
 
மன்னருக்கு புரியல. அது என்ன அறிவிக்கப்படும் நாள்? சொன்னார்கள்: நாளை மறுமையிலே அறிவிக்கும் வானவர் அறிவிப்பு செய்வார்: யாரெல்லாம் அடியார்களுக்கு அக்கிரமம் அநியாயம் செய்து விட்டு வந்தீர்களோ அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வுடைய சாபம் இறங்கட்டும் என்று நாளை மறுமையிலே வானவர் செய்யக்கூடிய அந்த அறிவிப்பு நாளை பயந்து கொள்ளுங்கள்! 
 
அவ்வளவுதான் ஹிஷாம் மன்னர் மயக்கமுற்று விழுந்து விட்டார். முடிஞ்சு போச்சு. அறிஞர் கண்டுகொள்ளவில்லை. சொன்னார்கள்; அந்த நாளுடைய தன்மையை பற்றி கேட்டதற்கே இந்த நிலை என்றால், அந்த நாளை கண்கூடாக பார்த்தால் என்ன நடக்கும்! 
 
அபு ஜாஃபர் அல் மன்சூர் அப்பாசிய மன்னர்களின் முதல் மன்னர். மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். தன்னுடைய மகனார் மஹ்தி அவர்களுக்கு உபதேசம் செய்கிறார். அடுத்து வரக்கூடிய முஸ்லிம்களுடைய அமீருக்கு- கலிஃபாவுக்கு சொல்லக்கூடிய உபதேசத்தை பாருங்கள்!
 
நீ ஒரு காரியத்தை நாடினால் நன்கு சிந்தித்துக் கொள்! ஒரு புத்திசாலி சிந்திப்பது அது அவனுக்கு கண்ணாடியை போல. அதில் தான் எந்த காரியத்தை செய்ய நினைக்கிறானோ அதில் உள்ள நல்லதையும் அது அவனுக்கு காட்டும். கெட்டதையும் அவனுக்கு காட்டும். 
 
எனக்கு பின்னால் கலீஃபாவாக ஆகக்கூடிய என் மகனே! உனக்கு நான் செய்கிற இந்த உபதேசத்தை கேட்டுக்கொள்! அல்லாஹ்வுடைய பயம்- இறையச்சம் மட்டும் தான் அரசரை சீர்திருத்தம் செய்ய முடியும். சரிப்படுத்த முடியும். அல்லாஹ்வை பயந்து கொள். 
 
அடுத்து சொன்னார்: நீ மக்களுக்கு மத்தியிலே பெரிய அதிகாரம் படைத்த பேரரசனாக ஆகிறாயா? முதலில் அல்லாஹுவிற்கு கீழ்ப்படிந்து கொள்! அல்லாஹுவின் ரசூலுக்கு கீழ்ப்படிந்து கொள்! மார்க்கத்திற்கு கீழ்படிவது தான் அவனை சரிப்படுத்தும். 
 
நீதமான, நேர்மையான ஒரு ஆட்சியை, தனக்கு பாதுகாப்பான, மக்களுக்கு பாதுகாப்பான, எல்லா நிலைகளிலும் ஒரு நிம்மதியை தரக்கூடிய ஒரு ஆட்சியை ஒரு மன்னர் கொடுக்க வேண்டும் என்றால் அவரிடத்திலே தக்வா இருக்க வேண்டும். அவரிடத்திலே அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ் படியக்கூடிய தாஅத் இருக்க வேண்டும். 
 
அடுத்து சொன்னார்கள்: நீ மக்களை சரி செய்ய வேண்டுமா? (உன்னுடைய உளவு படையை வைத்து அல்ல. உன்னுடைய ஜெயிலை வைத்து அல்ல. உன்னுடைய படைகளை வைத்து அல்ல. ராணுவப் படைகளோ, போலீஸ் படைகளை கொண்டோ அல்ல.) 
 
நீதம் ஒன்று மட்டும் தான் மக்களை சீர்படுத்தும்.
 
மேலும் சொன்னார்கள்: மக்களிலேயே மிகப்பெரிய மன்னிப்பாளர் யார் தெரியுமா? தண்டிப்பதற்கு சக்தி இருந்தும் மன்னிப்பவர். தன்னுடைய மகனுக்கு சொல்கிறார்; நீ பெரிய கலிஃபாவாக ஆகிவிடலாம். உன்னுடைய தனிப்பட்ட கோபத்தால் மக்களை பழிவாங்கி விடாதே! உன்னுடைய மரியாதைக்காக மக்களை தண்டித்து விடாதே! 
 
அடுத்து சொன்னார்கள்: மிகப்பெரிய புத்தி கெட்டவன், ரொம்ப மட்ட புத்தியுடையவன் யார் தெரியுமா? தனக்கு கீழ் இருப்பவர்கள் மீது அக்கிரமம் செய்பவன். 
 
ஸுஃப்யான் ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இன்னொரு அதிகாரிக்கு உபதேசம் செய்கிறார்கள். என் சகோதரனே! இந்த ஆடம்பர வாழ்க்கையை மனம் போன வாழ்க்கையை வாழ்கிறார்களே! அவர்களைப் பார்த்து பொறாமை பட்டுவிடாதே! அவர்கள் இருக்கக்கூடிய இன்பங்களை பார்த்து பொறாமை பட்டு விடாதே! அவர்களுக்கு முன்னால் ஒரு நாள் இருக்கிறது. அந்த நாளில் அவர்களுடைய பாதங்கள் எல்லாம் தடுமாறி விடும். உள்ளங்கள் எல்லாம் நடுங்கி விடும். நிறங்கள் எல்லாம் மாறிவிடும். நீண்ட நாள் அங்கு நிற்க வேண்டியது இருக்கிறது. விசாரணை கடுமையாக இருக்கும். உள்ளங்கள் எல்லாம் பறந்து விடும். அந்த நாளில் இவர்கள் இந்த உலக வாழ்க்கைக்காக, ஆடம்பர சுகபோக வாழ்க்கைக்காக மக்களுடைய செல்வங்களை சுரண்டினர்களே அபகரித்தார்களே! அக்கிரமம் செய்தார்களே! மக்களையெல்லாம் பசியிலே  சிக்கவைத்து மாட்டிவிட்டு தான் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே! அதற்காக அவர்கள் கவலைப்படுவார்கள். 
 
இன்று உலகமெல்லாம் இதுதான் நடக்கிறது. மக்கள் எல்லாம் பசியிலே பட்டினிலே பஞ்சத்திலே. அவர்களுக்கு மருத்துவம் இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுகிறார்கள். ஆனால் ஆட்சியிலே இருப்பவர்களோ அதிகாரத்திலே இருப்பவர்களோ மிகப்பெரிய ஆடம்பரமான மிக மிக சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
அடுத்து சொன்னார்கள்: அநீதி செய்வதிலிருந்து உன்னை எச்சரிக்கிறேன். அது மட்டும் அல்ல, உனக்கு மேல் உள்ள ஒரு அரசன், உனக்கு மேல் உள்ள ஒரு அதிகாரி யாருக்கு கீழ் நீ வேலை செய்கிறாயோ அந்த அநியாயக்காரனுக்கு உதவியாளனாக நீ இருந்து விடாதே! 
 
அவனிடத்திலே நீ சேர்ந்து விடாதே! அவர்களோடு அமர்ந்து சாப்பிடாதே! அவனைப் பார்த்து சிரித்து விடாதே! அவனிடத்திலிருந்து எந்த உலக ஆதாயத்தையும் பெற்று விடாதே! அப்படி செய்தால் நீ அவனுக்கு அவனுடைய அக்கிரமத்திலே உதவி செய்தவனாக ஆகி விடுவாய், உதவியாளனும் இந்த குற்றத்திலே சமமான பங்காளியாக ஆகிவிடுவான். 
 
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிய ஒரு ஹதீஸை கூறி, சிறைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சிறைவாசி இமாம் அஹ்மது இடத்திலே விளக்கம் கேட்கிறார். 
 
(இமாம் அஹ்மத் அவர்களை சிறைபடுத்தப்பட்டது சில காரணங்களுக்காக.) 
 
இமாம் அவர்களே! அநியாயக்காரனுக்கு உதவாதீர் என்று ஹதீஸ்லே வந்திருக்கிறதே? ஆட்சியாளன் அநியாயமாக உங்களை ஜெயிலிலே போட்டு இருக்கிறார். நானோ வேலை செய்யக்கூடிய ஒரு ஜெயில் காவலாளி. அவர்தான் அநியாயக்காரர். எனது வேலை தானே நான் செய்கிறேன். இந்த ஹதீஸ் எனக்கு பொருந்தாது அல்லவா? 
 
இமாம் அவர்கள் சொன்னார்கள்: அநியாயக்காரனுக்கு உதவியாளனாக இருக்காதே என்றால் அந்த அநியாயக்காரனுக்கு டிரஸ் துவச்சு கொடுக்கிறது, சாப்பாடு சமைச்சு கொடுக்கிறது, அந்த வேலையை கூட  செய்யாதிங்க என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க. நீயோ அந்த அநியாயக்காரர்களில் ஒருவனாகவே இருக்கிறாய்  என்று சொன்னார்கள். 
 
ஸியர் அஸ் ஸலஃப் அஸ் ஸாஹிஹீன் - பக்கம் – 1059.
 
அநியாயக்கார அரசனுக்கு காவல் வேலை செய்கிறவர்களோ இராணுவத்தில் இருப்பவர்களோ போலீசில் இருப்பவர்களோ அவர்கள் எல்லாம் அநியாயக்காரர்களில் வருவார்கள்.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் என்பது அவ்வளவு ஒரு பரிசுத்தமான மார்க்கம். இந்த மார்க்கம் நீதத்தைக் கொண்டு கட்டி அமைக்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கம் சத்தியத்தை கொண்டு கட்டியமைக்கப்பட்ட மார்க்கம். 
 
மக்களுடைய உள்ளங்களை இந்த தவ்ஹீதை கொண்டு, சுன்னாவைக் கொண்டு, இந்த நீதத்தைக் கொண்டுதான் அவர்களை அல்லாஹ்வின் பக்கம் நாம் அழைக்க முடியும். நீதமில்லை என்றால் மக்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள். உதறி தள்ளுவார்கள். எந்த மார்க்கத்தை நீங்கள் கொண்டு வருகிறீர்கள்? அக்கிரமங்களும் அநியாயங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, ஏழைகள் வஞ்சிக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்படுகிற மார்க்கத்தையா? 
 
அல்லாஹு தஆலா முதல் நாளிலிருந்து இந்த நீதத்தின் மீதே இந்த உலகத்தின் நிரந்தரத்தை, இந்த உலகத்தின் நிம்மதியை பாதுகாப்பை வைத்திருக்கிறான். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விடத்திலே நாம் துஆ செய்ய வேண்டும். நாமும் நீதவான்களாக, நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வியாபாரத்தில், நம்முடைய தொழில்துறையில் நீதத்தை பேண வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் அருளால் இன்ஷா அல்லாஹ் நம்மில் இருந்தே ஒரு நல்ல ஆட்சியாளர்கள் உருவாகுவார்கள். 
 
நீதம் என்பது மக்களுக்கு மத்தியிலே பரவ வேண்டும். அது ஒரு சிந்தனையாக, அது ஒரு செயல்பாட்டாக, அநியாயத்தை வெறுக்க கூடியவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அதை ஜீரணிக்க கூடியவர்களாக, ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, சகித்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கக்கூடாது. 
 
அல்லாஹ் ஸுபஹானஹு தஆலா உலகம் எங்கும் நீதமான, நேர்மையான, ஒழுக்கமான ஆட்சியை நிலை நிறுத்தி தருவானாக! மக்களுடைய வறுமைகளை போக்கக்கூடிய, மக்களுடைய சிரமங்களை மக்களுடைய துன்பங்களை போக்கக்கூடிய, அதை உணர்ந்து மக்களுக்காக நீதத்தை நேர்மையை செலுத்தக்கூடிய, அவர்கள் மீது பரிவோடும், அன்போடும், கருணையோடும் அவர்களை நடத்தக்கூடிய நல்ல ஆட்சியாளர்களை உலகமெங்கும் அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக! இஸ்லாமும் ஈமானும் ஓங்குவதற்கு உயர்வதற்கு பரவுவதற்கு அல்லாஹு தஆலா உதவி செய்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/