இஸ்லாமின் வளர்ச்சியில் பெண்களின் தியாகம் | Tamil Bayan - 935
இஸ்லாமின் வளர்ச்சியில் பெண்களின் தியாகம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்லாமின் வளர்ச்சியில் பெண்களின் தியாகம்
வரிசை : 935
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 03-01-2025 | 28-07-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிகக் கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழி-கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றிபிடித்து வாழுமாறு அல்லாஹ்வுடைய வேதமாகிய அல்குர்ஆனை கற்று, அதனுடைய சட்டங்களை அறிந்து, அதனுடைய ஹலால் ஹராமை அறிந்து, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸ்களில் என்னென்ன சட்டங்கள் கடமைகள் ஒழுக்கங்கள் மற்றும் தடைகள் நமக்கு கூறப்பட்டு இருக்கின்றனவோ அவற்றையும் கற்று, அவற்றின்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா நன்மையானவற்றை நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹ் பொருந்திக் கொண்ட நல்லோரில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அல்குர்ஆனிலே பெண்களுக்கு கொடுத்திருக்கின்ற முக்கியத்துவம், ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதில் கட்டி காப்பவதில் பெண்களின் பங்களிப்பு எத்தகைய மகத்தானது; எந்த அளவு அவர்கள் சமுதாய சீர்திருத்தத்தில், சமூகத்தை இறையச்சம் மிக்க ஒழுக்கமிக்க அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் அறிவுடைய சமுதாயமாக உருவாக்குவதில் அவர்களுக்கு பங்களிப்பு இருக்க வேண்டும்!
பெண்களுக்கு இந்த இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதில், இஸ்லாமிய மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதிலே எத்தகைய உயர்ந்த பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை அல்குர்ஆன் நமக்கு அழகிய முறையில் வழிகாட்டுகிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னா வழிகாட்டுகிறது. ஸஹாபாக்கள் வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது.
ஆனால், அந்தோ பரிதாபம்! நாம் இன்று நம்முடைய பெண்களை வீட்டிலே சமையல் வேலைக்காக மட்டும் வைத்திருப்போம் அல்லது வீட்டிலே இன்ன சில வேலைகளுக்காக மட்டுமே அவர்களை வைத்திருக்கிறோம். அல்லது முற்றிலுமாக அவர்களை துன்யாவிற்கு திறந்து விட்டு விட்டோம்.
அவர்கள் அல்லாஹ்வுடைய இந்த தீனை தவிர, எந்த படிப்பை வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் படிக்கலாம். நான் சமூகமாக மொத்த சமுதாயத்தை சொல்கிறேன். இதிலே எந்த தனி நபருடைய குற்றத்தையும் சொல்லவில்லை. சமூகமாக நாம் எல்லாம் பொறுப்பாளர்கள். நம் மீது உண்டான கடமையை நாம் மொத்த சமுதாயமும் அலட்சியம் செய்து விட்டோம்.
இஸ்லாமிய பெண்கள் கல்வி படிப்பதற்கு அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை எங்கேயாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? என்னுடைய மகள் காலேஜுக்கு போனால் அங்கே போய் என்ன நடக்கிறது? அவளால் தொழ முடிந்ததா? அவளுடைய தொழுகை இல்லாத காலங்களில் சுத்தத்தை அவள் பேணுவதற்கு அங்கே அதற்குண்டான வசதி இருக்கிறதா? எதைப் பற்றியாவது சிந்திக்கிறோமா?
ஆண்களும் பெண்களும் கலந்திருக்கக்கூடிய பாடசாலைகள். அங்கே நமது பிள்ளைகளை அனுப்புகிறோமே அவர்கள் எப்படி அங்கே நடத்தப்படுகிறார்கள்? இஸ்லாமிய பெண்ணுக்கு அவளுடைய அடிப்படை ஹிஜாபை பேணுவதற்கு கூட உரிமை இல்லாத நிலையில் இன்று நாம் சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மதசார்பற்ற நாடு என்றால் அவரவர் அவரவருடைய மதங்களை எல்லா இடங்களிலும் சுதந்திரமாக பின்பற்றி கொள்ளலாம் என்பதுதான் மதசார்பற்ற நாடு என்பதன் பொருள். இன்று அந்த பொருள் எப்படி மாற்றப்பட்டுவிட்டது? எல்லோரும் அவரவருடைய மத அடையாளங்களை பேணலாம்; பின்பற்றலாம்; வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு முஸ்லிமான பெண் தன்னுடைய கல்வி நிலையங்களுக்கு பள்ளிக்கூடத்திற்கு ‘ஹிஜாபோடு வர முடியாத நிலை’ மட்டுமல்ல “வரக்கடாது” ! என இந்திய ஜன நாயக அடிப்படைக்கு எதிராக அதிகாரத்தில் இருப்போரின் வாய்மொழி கட்டளைகள் முட்டாள்தனமாக அசட்டு துணிச்சலுடன் பிறப்பிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்படுகின்றன. முஸ்லிம்கள் பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளிலே பெரும்பாலான இடங்களிலே அவர்களுக்கு தொழ முடிவதில்லை. எத்தனை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி நிலையங்களில் வெள்ளிக்கிழமை அன்று வேண்டுமென்றே ஜுமுஆவுடைய நேரத்திலே தேர்வு- டெஸ்ட் பரிட்சை வைப்பதை நாம் பார்க்கிறோம்.
இப்படி எல்லாம் நம்முடைய சமுதாயத்திற்கு பல நெருக்கடிகள் மார்க்க ரீதியாக தரப்படுகின்றன. ஆனால், நமக்கு மார்க்கத்தைப் பற்றி அக்கறை இல்லை. மார்க்கம் எப்படி சீர்கெட்டாலும் பரவாயில்லை. எங்களுக்கு தேவை, நாங்கள் கல்வியிலே பொருளாதாரத்திலே முன்னேற வேண்டும். அதற்கு மார்க்கத்தை சமரசம் செய்ய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளத் தயார்.
சகோதரர்களே! அங்கு படிக்கக்கூடிய பெண்களை குறை சொல்லவில்லை. அந்த மாணவ மாணவிகளை குறை சொல்லவில்லை. இன்று சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய நாம் அதற்குண்டான பாதுகாப்பை அதற்குண்டான உத்தரவாதத்தை அங்கு ஏற்படுத்தி கொடுத்தோமா? சிந்தித்துப் பாருங்கள்!
இதனால் என்ன நிலைமை ஏற்படுகிறது? அங்கே மார்க்கத்தை பின்பற்றி நடப்பதற்கு உண்டான பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்று சிலர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதில்லை. அல்லது பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரி படிப்புக்கு அனுப்புவதில்லை. காரணம் இதுதான்.
ஒரு முஸ்லிமான பெண் மருத்துவம் படிக்க தகுதி உள்ளவளாக இருந்தால் முழுமையாக மார்க்க ஒழுக்கங்களை பேணியவளாக அவளால் மருத்துவத்தை படித்து முடிக்க முடிகிறதா?
இஸ்லாமிய சமுதாயத்திலே ஆலிம் ஒரு ஊரிலே ஒரு ஆலிம் இருப்பது எப்படி கட்டாய கடமையோ அதுபோன்று முஸ்லிம் மருத்துவர் இருப்பது ஃபர்ழு கிஃபாயா. அப்படி இல்லை என்றால் ஊர் மக்கள் அனைவரும் குற்றவாளிகளாக ஆகுவார்களோ அதுபோன்று ஒரு ஊரிலே இஸ்லாமிய மருத்துவர் ஆண்களுக்கு பெண்களுக்கு இல்லை என்றால் அந்த மொத்த ஊர்வாசிகளும் குற்றவாளிகள்.
ஒரு ஏழை பெண் கல்வி இருந்து, படிக்க தகுதி இருந்து, அவளிடத்திலே அந்த படிப்பை திறம்பட செய்வதற்கான அறிவு ஆற்றல் இருக்குமேயானால், நம்முடைய ஜக்காத் உடைய காசை கொடுத்தாவது அந்த பெண்ணை மருத்துவர் ஆக்குவது முஸ்லிம் சமுதாயத்தின் கடமை. அது எத்தனை கோடி செலவு செய்தாலும் சரி.
ஆனால், நமக்கு இதெல்லாம் புரியாது. கல்யாணத்திற்கு கோடிகளை செலவு செய்வார்கள். ஆடம்பரத்திற்கு கோடிகளை செலவு செய்வார்கள். விருந்திற்கு பல கோடிகளை செலவு செய்வார்கள். தங்களுடைய வீடுகளை கட்டுவதற்கு பல கோடிகளை செய்வார்கள்.
முஸ்லிம் சமுதாயத்தில் மாணவ மாணவிகளின் கல்விக்கு செலவு செய்யாத ஒரு மட்டமான சமுதாயம் இருக்கிறது என்றால் அது முஸ்லிம் சமுதாயம் தான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! மன்னிக்க வேண்டும்!
பெரிய வசதி உள்ளவர்களுக்கு எல்லா வகையான படிப்பும் கிடைத்து விடுகிறது. ஆனால், இன்று ஏழை மாணவர்கள் வட்டிக்கு அரசாங்கத்தினுடைய அந்த உதவி தொகை வட்டியோ அல்லது நேரடியாக பேங்கின் மூலமாகவோ கடன் வாங்கி படிக்கின்றார்கள்.
முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம், சமுதாயமாக சிந்திக்காததுடைய ஒரு மிகப்பெரிய வீழ்ச்சி, நாம் ஒவ்வொருவரும் தனிநபராக தன்னை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறோமே தவிர, சமுதாயமாக சிந்தித்து சமுதாயமாக நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை. சமுதாயமாக நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவில்லை. பலப்படுத்திக் கொள்ளவில்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆன் பெண்களை பாதுகாக்கிறது. அல்குர்ஆன் பெண் பிள்ளைகளை முன்னேற்றுகிறது. அல்குர்ஆன் பெண்களுக்கான அறிவுக் கண்களை திறக்கிறது.
ஒரு பெண்ணை வெறும் வீட்டில் வேலை செய்யக்கூடிய கணவனுடைய துணையாளாக மட்டும் பார்ப்பதில்லை. அல்லது ஒரு தகப்பனுக்கு மகளாக மட்டும் பார்ப்பதில்லை. எப்படி ஒரு ஆணுக்கு பல பொறுப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்தார்களோ, கட்டாயமாக்கினார்களோ அதேபோன்று பெண்களுக்கு அல்லாஹு தஆலா பொறுப்புகளை கொடுத்திருக்கிறான். பல கடமைகளை அல்லாஹு தஆலா கொடுத்திருக்கிறான்.
கண்ணியத்திற்குரிய சஹாபாக்களின் சமுதாயத்தை பாருங்கள்! அவர்களது காலத்திலே நடந்த ஒவ்வொரு நிகழ்வும் எதார்த்தமாக நாம் படித்துவிட்டு கடந்து சென்றுவிட முடியாது.
நாம் எப்படி சஹாபாக்களின் சரிதையைப் படிப்போம்? படித்துவிட்டு ஆஹா என்று உச்சி கொட்டிவிட்டு அப்படியே கடந்து சென்று விடுவோம். அவர்களுடைய தியாகத்தை படிப்போம். பெண்கள் செய்த வீர தீரத்தை கல்வியை சமூகப் பொறுப்புகளை படிப்போம்.
இத்தகைய பொறுப்பு என்னுடைய மனைவிக்கும் இருக்கிறது அவளுக்கு நான் என்ன செய்தேன்? இத்தகைய பொறுப்பு என்னுடைய சகோதரிக்கு இருக்கிறதே! இத்தகைய பொறுப்பு நான் பெற்றெடுத்த மகளுக்கு இருக்கிறதே! என்று எங்கேயாவது சிந்தித்து இருக்கிறோமா?
அல்லாஹ்வின் அடியார்களே! வாழ்க்கை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அலட்சியம்; அலட்சியம்; அலட்சியம். அலட்சியத்திலேயே மிகப்பெரிய அலட்சியம் என்னவென்றால் சமூக ரீதியாக இஸ்லாமிய சமூகத்தை பாதுகாப்பதில் உயர்த்துவதில் இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான அடிப்படைகளை செய்து இந்த இஸ்லாமிய சமுதாயம் இஸ்லாத்தோடு ஒரு நாட்டிலே உரிமைகளோடு கடமைகளோடு வாழக்கூடிய அந்த பாதுகாப்பை உருவாக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் அவர்களுடைய தலைவர்களும் மிகப்பெரிய குற்றவாளிகள்.
மஸ்ஜிதை கட்டி விட்டால் போதுமா? இன்று பெரிய பெரிய மஸ்ஜிதுகள் உள்ளன. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னது போன்று;
لَتُزَخْرِفُنَّها كما زخرَفَتِ اليهودُ والنصارى
ஒரு காலம் வரும் பள்ளிகளை உயர்த்தி கட்டுவதிலேயே நீங்கள் பெருமை அடிப்பீர்கள். நீங்கள் போட்டி போட்டுக் கொள்வீர்கள். அந்தப் பள்ளிகளை அலங்கரிப்பீர்கள். யூதர்களும் கிறிஸ்தவர்களும் செய்தது போன்று நீங்களும் செய்வீர்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண்: 448.
ஒரு பள்ளிக்கு எத்தனை கோடியிலே மினாரா கட்டப்படுகிறது. இன்று பெருமை பேசுகிறார்கள். அடிப்படை வசதிகளுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன். பள்ளியை விசாலமாக கட்டுவது தப்பல்ல. பள்ளிகளிலே தொழுகையாளிகள் நிம்மதியாக தொழுவதற்கு தேவையான அந்த வசதிகளை குளிக்குமிடமோ கழிவறையோ பாத்ரூமோ, உளூ செய்யக்கூடிய இடங்களோ அவற்றை செய்வது தவறில்லை. தங்களுடைய ஊரின் முஹல்லா உடைய பணக்காரர்களின்பண வசதியை காட்டுவதற்காக செய்யப்படக்கூடிய அதிகப்படியான திமிருத்தனமான செலவுகள். அவ்வளவு அலங்காரங்கள். இதெல்லாம் கியாமத்துடைய அடையாளங்கள். எப்படி யூதர்கள் செய்தார்களோ கிறிஸ்தவர்கள் செய்தார்களோ அதுபோன்று நீங்களும் செய்வீர்கள்.
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய மஸ்ஜிதிலே பெண்களுக்கு கொடுத்த பொறுப்பை நாம் கொடுத்திருக்கிறோமா?
எங்கிருந்து தக்வா உடைய பாடங்கள் படிக்கப்பட வேண்டுமோ, எங்கிருந்து ஒரு இஸ்லாமிய பெண் உருவாக்கப்பட்டு, ஒரு நல்ல தாயாக, ஒரு நல்ல மனைவியாக, ஒரு சமுதாயத்தின் கல்வி பணிகளை, சமுதாய தலைமுறையை உருவாக்கக் கூடிய ஒரு சீர்திருத்தவாதியாக உருவாக்கப்பட வேண்டுமோ, அப்படிப்பட்ட முஸ்லிம்களுடைய மஸ்ஜிது, இவ்வளவு செலவோடு கட்டப்பட்ட மஸ்ஜிதுகள், அந்த மஸ்ஜிதுக்கும் நமது சமுதாய பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.
ஒரு பெண், இருபாலின கலப்பு பள்ளிக்கூடங்களுக்கு படிக்க செல்லலாம். டிகிரி வாங்கலாம். பல இடங்களில் ஆண்களோடு கலந்து வேலை செய்யலாம்.
எல்லா ஹராமையும் ஹலால் ஆக்கிக் கொண்டோம். எதற்காக? துன்யாவிற்காக. அல்லது ஹராமிலே கொஞ்சம் சலுகைகளை தேடிக் கொண்டோம்.
ஆனால், அந்தப் பெண்ணுக்கு இஸ்லாமிய மார்க்க சார்பாக சுமத்தப்பட்ட கடமையை அந்தப் பெண் செய்து, ஒரு ஆக்கபூர்வமான பெண்மணியாக உருவாகி, ஒரு சிறந்த இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம்முடைய பெண்களுக்கு நாம் என்ன செய்தோம்?
அல்லாஹு தஆலா உடைய வேத வசனத்தை பாருங்கள்!
அல்லாஹு தஆலா சூரா அஹ்ஸாப் ( 33 : 35 ) வது வசனத்திலே சொல்லக்கூடிய இந்த ஒரு வசனத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதுபோக, பெண்களுக்கான ஒழுக்கங்களை தர்பியாவை கொடுப்பதற்காக. பெண்களின் பெயரிலே சூரத்துல் நூர் என்று தனி அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கினான்.
பிறகு, அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா பெண்களில் சிறந்த பெண்களை குர்ஆனிலே உதாரணமாக சொன்னான். அந்தப் பெண்மணி மர்யம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம். அவர்களின் பெயரிலே தனி ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் வைத்தான்.
மூமின்களுக்கான எடுத்துக்காட்டாக, ஒரு ஒழுக்கமிக்க, ஈமானிய வீரமிக்க, தக்வா மிக்க, அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய பற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளக்கூடிய, மறுமை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழக்கூடிய உம்மத்தாக நீங்கள் உருவாக வேண்டும் என்பதற்கு அல்லாஹு தஆலா பெண்களைத் தான் நமக்கு உதாரணமாக சொன்னான்.
ஒரு உம்மத் மறுமைக்காக மட்டுமே, அல்லாஹுக்காக மட்டுமே, எதையும் இழக்க கூடிய ஒரு உம்மத்தாக, துன்யாவின் இழப்பை ஒரு இழப்பாக நினைக்காமல் மகிழ்ச்சியோடு, அன்போடு, பாசத்தோடு, அல்லாஹ்வின் மீது உண்டான ஏக்கத்தோடு, சொர்க்கத்தின் மீது உண்டான தேடலோடு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் முஸ்லிம் சமுதாயம் என்பதற்கு அல்லாஹு தஆலா நபிமார்களை உதாரணமாக சொல்லவில்லை. (நபிமார்களின் வரலாறுகளை சொல்லி இருக்கிறான்) ஆனால், குறிப்பிட்டு அல்லாஹு தஆலா சொல்கிறான்:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ
இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் இறைவா! உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எனக்கு அமைத்துத் தா! இன்னும், ஃபிர்அவ்னை விட்டும் அவனது செயல்களை விட்டும் என்னை பாதுகாத்து விடு ! இன்னும், அநியாயக்கார மக்களை விட்டும் என்னை பாதுகாத்து விடு!”
இன்னும், இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான்). அவள் தனது மறைவிடத்தை பேணி பாதுகாத்துக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நாம் படைத்த உயிரிலிருந்து ஊதினோம். இன்னும், அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும், அவள் மிகவும் பணிந்தவர்களில் உள்ளவளாக இருந்தாள். (அல்குர்ஆன் 66:11, 12)
கருத்து : அல்லதீன ஆமனு -என்பதிலே நான் மட்டுமல்ல, அபூபக்கரும் வருவார். உமரும் வருவார். உஸ்மானும் வருவார். ஏன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வருவார்கள்.
மூமின்களுக்கு என்று அல்லாஹ் சொல்கிறான். மூமின்களுக்கு இரண்டு பெண்களை அல்லாஹு உதாரணமாக சொல்கிறான். யார் மீது இறக்கப்படுகிறது இந்த வசனம்? முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உம்மத்துடைய மூமின்களின் தலைவர். அவருக்கும் சேர்த்து அல்லாஹ் சொல்கிறான். மர்யமை உதாரணமாக சொல்கிறான். மிகப்பெரிய தியாகியாகிய ஃபிர்அவுனுடைய மனைவியை அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களிலே உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா இருந்தார்கள். மிகப்பெரிய அறிவாளி. அல்லாஹ்வின் தூதருக்காக பல அழகிய ஆலோசனைகளை, சமூகத்தை ஒற்றுமை படுத்துவதற்கும், சமூகத்தை நபியின் வழியிலே நடத்துவதற்கும் அவர்கள் மிகப்பெரிய அர்ப்பணிப்பை பங்களிப்பை செய்த மகத்தான பெண்மணி.
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்கள் மட்டும் செய்யக்கூடிய ஜிஹாதுடைய பயணத்திலே பெண்களை அழைத்து சென்றார்கள் என்றால் இந்த சமூகத்தை உருவாக்குவதில் பெண்களின் தேவை பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலே. உம்ராவிற்கு சென்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் மற்றும் சஹாபாக்கள் 1400 பேர் தான். மதினாவில் இருந்து மக்கா வரை எதிரிகள். எதிரிகளின் ஆபத்தால் சூழப்பட்ட பாதையில். அதுவும் மக்காவிற்குள் நுழைவோமா? தடுக்கப்படுவோமா? போர் நிகழுமா? உயிரோடு திரும்பி வருவோமா? எந்த ஒன்றுக்கும் அங்கே கேரண்டி உத்தரவாதம் கிடையாது. இந்த நிலையிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களோடு தங்களுடைய மனைவிமார்களை, சஹாபாக்கள் தங்களோடு தங்களுடைய மனைவிமார்களை அழைத்துக் கொண்டு அந்த ஆபத்தான உம்ரா பயணத்தை மேற்கொண்டார்களே! சிந்தித்துப் பாருங்கள்!
பெண்கள் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு தேவை! அவர்கள் எப்படிப்பட்ட உருவாக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்! எந்த பெண்ணுக்கு சமைக்க மட்டும் தெரியுமோ அவள் அல்ல. சமூகத்திற்கு தியாகம் செய்ய வேண்டும்.
சஹாபாப் பெண்மணிகளும் சமைத்தார்கள். அவர்களது குடும்பத்திற்கு மட்டுமா? போரிலே வந்து அங்கே ஜிஹாதிலே கலந்து கொண்ட முஜாஹிர்களுக்கு சமைத்துக் கொடுத்தார்கள்.
இன்று நம்முடைய குடும்பத்திலே ஒரு நாள் விருந்தாளி வந்து, அடுத்த நாள் விருந்தாளி வந்தா அவ்வளவுதான். இல்லா மா ஷா அல்லாஹ் -சிலருடைய குடும்பம் இருக்கலாம்.
நாலு மிஸ்கின்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். சமைத்துக் கொடு என்று சொன்னால் அவ்வளவுதான். இந்த கடை இருக்கிறதே வாங்கிக்கொண்டு போய் கொடுங்கள்.
இன்று பலருக்கு உணவு வெளியில் இருந்து வாங்கி வரக்கூடிய அளவிற்கு குடும்பம் மாறிவிட்டது என்பதை நாம் அறிகிறோம்.
كُنَّا مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَسْقِي وَنُدَاوِي الجَرْحَى، وَنَرُدُّ القَتْلَى إلى المَدِينَةِ.
சஹாபிய பெண்மணிகள் ஜிஹாதிற்கு செல்வார்கள். போர் மைதானத்திற்குள் புகுந்து காயப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்கக்கூடிய சஹாபாக்களை தூக்கிச்சுமந்து கூடாரத்திற்கு கொண்டு வருவார்கள் எவ்வளவு தைரியம் இருந்திருக்கும்! அந்த சஹாபாக்களுக்கு மருந்து போடுவார்கள். கட்டுப் போடுவார்கள். அந்த சஹாபாக்களில் யார் தன்னுடைய இறுதி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். சஹாபாக்களுக்கு தேவையான அந்த வில்லு அம்பு ஈட்டி என்னென்ன தேவையோ அவற்றை எடுத்துக்கொண்டு அந்த முக்கியமான போர் மைதானத்திற்குள் ஓடி சென்று கொடுப்பார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 2882.
சிவப்பு நிறத்தை பார்த்தாலே இரத்தம் என்று மயங்கி விழும் இக்கால ஆண்கள், ரத்தக்காயம் ,வெட்டு குத்து என்றாலே ஓடி ஒளியும் பெண்மக்கள் பயில வேண்டும் படிக்க வேண்டும். நம்முடைய பெண்களுடைய வீரத்தை தியாகத்தை கொஞ்சம் நாமே கணக்கு போட்டு பார்ப்போம். நாம் அவர்களை உருவாக்கி இருக்கிறோமோ? அவர்களை சொல்லி என்ன தப்பு? குற்றம் நம் மீது தான். எல்லா வகுப்புக்கும் அனுப்பினோம்.
இன்று, முஸ்லிம் சமுதாயம் தங்களுடைய பிள்ளைகளை இசை கல்லூரிக்கு, இசை வகுப்புக்கு அனுப்புகிறோம். எவ்வளவு கேவலம் பாருங்கள்! இன்னும் பல இடங்களிலே ஆடல் பாடல்களுக்கு கூட அனுப்புகிறார்கள். இதெல்லாம் ஜீரணிக்க கூடிய சமுதாயமாக ஆகிவிட்டது. செய்திகளிலே ஒரு இஸ்லாமியருடைய பெயர் இசையிலோ சினிமாவிலோ ஆடல் பாடல்களில் வந்தால் ஒட்டுமொத்த சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் கலாச்சார சேவைக்கு இஸ்லாமியரின் பங்கு என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.
லா யிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் சொன்ன ஒரு முஸ்லிம் இப்படி ஆடல் பாடல் இசையிலே கூத்துக் கும்மாளத்திலே இஸ்லாமுடைய பெயரை, முஸ்லிம்களுடைய பெயரை கெடுக்கின்றானே! வீணாக்கின்றானே! அவனுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுக்க வேண்டும்! என்று அந்த ஈமானிய உணர்வு வர வேண்டும்.
இன்று இந்த உணர்வோ எவ்வளவு தூரம் செத்துப் போய் வெட்கம் கெட்டுப் போய் அவர்களின் பெயர்களை சொல்லி பெருமை அடிக்கக்கூடிய சமுதாயமாக மாறி இருக்கிறது. சமூக நிகழ்ச்சிகளில் அவர்களை கூப்பிட்டு அழைத்து மஜ்லிஸ்களிலே மஸ்ஜிதுகளிலே உட்கார வைத்து கௌரவ படுத்தக்கூடிய அளவிற்கு சமுதாயத்தினுடைய ஈமானிய ரோஷம் உணர்வற்று மங்கிப் போய் கிடக்கிறது.
அல்லாஹு தஆலா சொல்கிறான்: சூரத்துல் நூர் 24 ஆவது அத்தியாயத்தின் 19 வது வசனத்தில்
اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
நிச்சயமாக (விபச்சாரம், ஆபாசங்கள், பழிபோடுதல் போன்ற) அசிங்கமான செயல்(கள்) நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை எவர்கள் விரும்புவார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இம்மையிலும் மறுமையிலும் உண்டு. அல்லாஹ்தான் (உங்களுக்கு நன்மை தரும் சட்டங்களை) நன்கறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 24:19)
கருத்து : எந்த மக்கள் மூமின்களுக்கு மத்தியிலே ஹராமான தொடர்புகள் விபச்சாரம் சம்பந்தமான, ஆடல் பாடல் இசை சம்பந்தமான கெட்ட செயல் பரவ வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு துன்யாவிலும் கடுமையான அல்லாஹ்வுடைய அதாபு இருக்கிறது. ஆகிறத்திலும் அல்லாஹ்வுடைய அதாபு இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்! மார்க்கம் என்பது சாதாரணமானதல்ல!. கடந்து போக முடியாது. !
அல்லாஹ்வின் அடியார்களே! எந்த இசைக்கருவிகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹராம் ஆக்கினார்களோ, எது குர்ஆனின் மூலமாக ஹராமாக்கப்பட்டதோ முஸ்லிம் சமுதாயம் அதை கொண்டு பெருமை அடிக்கிறது.
குர்ஆனை பரப்பிக் கொண்டிருந்த சமுதாயம், குர்ஆனின் திலாவத்துகளைக் கொண்டு பெருமை சேர்த்துக் கொண்டிருந்த சமுதாயம், இப்போது இசையை கொண்டு ஆடல் பாடலை கொண்டு பெருமை அடிக்கிறது. எப்படி கீழ்தரமாக மாறிவிட்டோம் பாருங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே வருகிறார்கள். சஹாபிய பெண்மணிகளின் சார்பாக.
أنَّها أتتِ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقالت ما أرى كلَّ شيءٍ إلَّا للرِّجالِ وما أرى النِّساءَ يُذكَرنَ بشيءٍ فنزلت هذهِ الآيةَ إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الآية
அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் அல்லாஹ்வை வணங்குகிறோம். நோன்பு நோற்கிறோம். ஜக்காத் கொடுக்கிறோம். ஹஜ் செய்கிறோம். ஜிஹாது செய்கிறோம். ஆனால், குர்ஆனிலே அல்லாஹு தஆலா பேசும்போது,
يا أيها الذين آمنوا
என்று பேசுகிறானே! ஈமான் கொண்டவர்களே என்று அழைக்கிறானே?
அரபியிலே الذين امنوا என்பது ஆண்களைப் பார்த்து சொல்லக்கூடிய வார்த்தையாச்சே? எங்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்ல மாட்டானா?
அல்லாஹ் அக்பர்! எப்படிப்பட்ட தேடல் பாருங்கள்! அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த பாசத்தை பாருங்கள்! அல்லாஹ்வின் சொல்லால் அவர்கள் பேசப்பட வேண்டும்; அல்லாஹ்வின் வேதத்தில் அவர்கள் கூறப்பட வேண்டும் என்ற அந்த ஆசை.
அந்த பெண்களுடைய அந்த கேள்விக்கு பதிலாக அல்லாஹு தஆலா இந்த வசனத்தையே இறக்கினான்.
அறிவிப்பாளர்: உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 3211.
ஒரு முழு வசனம். குர்ஆனுடைய நீண்ட வசனங்களிலே பெரிய வசனங்களிலே ஒன்று. அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 33:35)
வசனத்தின் கருத்து : இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஆண்கள்; இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பெண்கள்; அல்லாஹ்விற்கு கீழ்ப்படிய கூடிய ஆண்கள்; அல்லாஹ்விற்கு கீழ்ப்படியக் கூடிய பெண்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆண்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள கூடிய பெண்கள்; அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு பணிந்து நடக்கக்கூடிய ஆண்கள்; அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து பணிந்து நடக்கக்கூடிய பெண்கள்; உண்மையான ஆண்கள் தங்களது சொல்லில் செயலில் ஈமானில் உறுதியில் உண்மையான ஆண்கள்.
ஸஹாபாக்களுடைய புகழ்களில் அல்லாஹுத்தஆலா சொல்லக்கூடிய புகழ்கள். இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளுங்கள்! பெரும்பாலும் நமக்கு நம்முடைய சிந்தனையில் வருவதென்ன? சஹாபா என்று சொன்னால் அபூ பக்கர் வருவார். உமர் வருவார். உஸ்மான் வருவார். ரலியல்லாஹு அன்ஹும். இப்படி ஆண்களில் பல சஹாபாக்களை எண்ணிவிட்டு அதோடு மறந்து விடுவோம்.
அப்படி இல்லை. அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அல்லாஹ் அன்ஹு அவர்கள் இஸ்லாமிய வரலாற்றை எப்படி நினைவு கூர்வதற்கு தகுதியானவர்களோ அதுபோன்றுதான் அவர்கள் பெற்றெடுத்த பரிசுத்தமான மகள்களான ஆயிஷா அவர்களும். அஸ்மா அவர்களும். ரலியல்லாஹு அன்ஹுமா
ஒரு சஹாபி(தோழர்) என்றால் அந்த சஹாபியோடு ஒரு சஹாபியா (தோழி) இருப்பார். உமரை மட்டும் சொல்ல முடியாது. உமருக்கு அப்துல்லாஹ் இப்னு உமரை பெற்று கொடுத்த அவர்களுடைய மனைவியை நினைவு கூருங்கள்!
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸை மட்டும் சொல்ல முடியாது. அமர் இப்னு ஆசுக்கு அப்துல்லாஹ்வை பெற்றுக் கொடுத்த அந்த மனைவியை நினைவு கூர வேண்டும். நினைத்துப் பாருங்கள்!
எப்படி சஹாபாக்கள் என்றால் ஆண்கள் இருக்கிறார்களோ அதுபோன்று பெண்மணிகள் இருக்கிறார்கள் சஹாபியாத்து ரசூல் -ரசூல் உடைய சஹாபிய பெண்மணிகள்.
அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, நாம் நம்முடைய பெண்களை நடத்துவது போன்று அல்ல. சமூகப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள். சமூகத்தினுடைய அங்கீகாரம் பெற்றவர்கள்.
இன்று, பலர் இஸ்லாமின் மீது குற்றம் சுமத்துகிறார்களே உண்மையிலே அவர்கள் முட்டாள்கள். ஆனால் அவர்களுடைய முட்டாள் தனத்திற்கு துணை போன குற்றவாளிகள் நாம். அவர்கள் உண்மையிலேயே ஆட்சேபனை செய்ய வேண்டும் என்றால் யார் மீது ஆட்சேபனை செய்ய வேண்டும் முஸ்லிம்கள் மீது இஸ்லாமை பின்பற்றாத, இஸ்லாமை நடைமுறைப்படுத்தாத, இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றாத, இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தாத முஸ்லிம்களை குறை சொல்ல வேண்டும்.
ஆனால், இஸ்லாம் என்றால் அவர்கள் என்ன குர்ஆனை திறந்து படிப்பார்களா? ஹதீஸை திறந்து படிப்பார்களா? இஸ்லாம் என்றால் முஸ்லிமை பார்க்கிறார்கள். இந்த முஸ்லிம்கள் இடத்தில் இருப்பது என்று நம்பிக்கை கொண்டு இஸ்லாம் இப்படி சொல்கிறது; இஸ்லாம் அப்படி செய்கிறது என்று ஆட்சேபனை செய்கிறார்கள்.
அதற்கு காரணம் என்ன? இஸ்லாமிய ஒழுக்கங்களை, இஸ்லாமிய மாண்புகளை, இஸ்லாமிய கலாச்சாரங்களை கெடுத்து நாசமாக்கி, அதை உருமாற்றி, குழப்பி நம்முடைய மன இச்சைக்கு ஏற்ப நாமே ஒரு இஸ்லா உருவாக்கி வைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு இஸ்லாம். மதராசுக்கு ஒரு இஸ்லாம். மன்னார்குடிக்கு ஒரு இஸ்லாம். கீழக்கரைக்கு ஒரு இஸ்லாம். காயல்பட்டினத்திற்கு ஒரு இஸ்லாம். அதிராம்பட்டினத்திற்கு ஒரு இஸ்லாம். ஊருக்கு ஊர் ஒரு இஸ்லாம்.
இங்கே உள்ள இஸ்லாத்தை அங்கே போய் பேச முடியாது. எங்களுக்கென்று ஒரு ஜமாத் இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது. அதை பேசுங்கள். குர்ஆனிலே இருக்கிறது ஹதீஸிலே இருக்கிறது என்றால் மூடி அங்கே வைத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லுவார்கள்.
எப்படிப்பட்ட ஒரு பரிதாபமான நிலை பாருங்கள்! அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சஹாபிய பெண்கள் அல்லாஹ்வுடைய இந்த குர்ஆனிலே எப்படி புகழப்படுகிறார்கள்!
ஆண்கள் மட்டுமா உண்மையானவர்கள்?
وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ
(அல்குர்ஆன் 33:35)
அந்த உண்மையை உறுதிப்படுத்திய பெண்கள். ஆண்களில் கூட ஒரு சிலரை உதாரணம் சொல்லலாம். சில ஆண்கள் இஸ்லாமிலிருந்து மதம் மாறிவிட்டார்கள். ஆனால் சஹாபிய பெண்களில் ஒருவர் கூட இஸ்லாமிலிருந்து மதம் மாறவில்லை. இந்த இஸ்லாமிற்காக முதல் முதலாக தனது உயிரை துச்சமாக மதித்த அந்த உன்னத நபர் யார்?
ஒரு எளிமையான, நலிந்த, வயது முதிர்ந்த தனது வாலிபத்தை முடித்து வயோதிகத்தை அடைந்த ஒரு மிகப்பெரிய ஒரு பலவீனமான பெண்மணி சுமையா ரலியல்லாஹு அன்ஹா நினைத்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் மார்க்கத்தில் முதன்முதலாக இஸ்லாமுக்காக கொல்லப்பட்டவர். ஒரு பெண் நினைத்துப் பாருங்கள்! அதுவும் சாதாரணமாகவா கொல்லப்பட்டார்? நீ அல்லாஹ்வை நிராகரிக்க வேண்டும், இல்லை என்றால் நபியை நீ ஏச வேண்டும். அவளுடைய வாலிபமான மகனார் அம்மாரால் அந்த அதாபை தாங்க முடியவில்லை. குரைஷி குஃபார்கள் கொடுத்த அதாபை சுமையா உடைய மகன் அம்மாரால் தாங்க முடியவில்லை.
ஒரு சில வார்த்தையை சொல்லிவிட்டு தப்பித்து ஓடி வந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே மண்டியிட்டு விடுகிறார். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்திலே எனக்கு மன்னிப்பு கேளுங்கள்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் தாங்க முடியவில்லை. அவர்களின் கொடுமைகளை. ஆகவே அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு எதிராக சில வார்த்தைகளை சொல்லி விட்டேன். அல்லாஹ்விடத்திலே எனக்காக மன்னிப்பு கேளுங்கள்!
அதற்காகவே அல்லாஹு தஆலா அம்மாருக்காக ஒரு வசனத்தை இறக்கினான்.
யார் நிராகரிப்பிலே நிர்பந்திக்கப்பட்டு ஆனால் அவருடைய உள்ளம் ஈமானில் இருக்கிறதோ அவர் மன்னிக்கப்பட்டவர் என்பதாக. (அல்குர்ஆன் 16:106)
நூல் : ஃபத்ஹுல் பாரி - (12/ 312)
ஆனால், அவருடைய தாய் வயதானவர், கிழவி என்று சொல்லலாம். குரைஷி குஃபார்கள் சேர்ந்து அடிக்கிறார்கள். துன்பத்திற்கு மேல் துன்பம். சாட்டையால் அடித்தால் வாங்க முடியுமா? எத்தனை அடி ஒன்றா? இரண்டா? ஒரு நாளைக்கா? இரண்டு நாளைக்கா? எத்தனை வாரங்களுக்கு.
இறுதியாக அபூ ஜஹல் ஈட்டியை கொண்டு (எவ்வளவு பெரிய கொடூரனாக கொடுமைக்காரனாக அரக்கனாக இருப்பான்) ஒரு வயதான மூதாட்டி பெண்மணியின் மர்மஸ்தானத்திலே குத்துகிறான் அவள் கலிமா சொன்ன ஒரே காரணத்திற்காக.
நூல் : அல்பிதாயா வன்னிஹாயா - (4 / 147)
எப்படி இருக்கும் அந்த நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு முன்பெல்லாம் யாசிர் உடைய குடும்பத்தை அவர்கள் அதாபு செய்யப்படுவதை கடந்து செல்லும் பொழுது, அப்போது அவர்களுக்கு சக்தி இல்லை.
صَبْرًا يَا آلَ يَاسِرٍ، فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ
யாசிரின் குடும்பமே பொறுத்துக் கொள்ளுங்கள்! பொறுத்துக் கொள்ளுங்கள்! நானும் நீங்களும் இன் ஷாஃ அல்லாஹ் சொர்க்கத்திலே சந்திப்போம். நமக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம். அங்கே நமக்கு இடம் இருக்கிறது என்று அந்த குடும்பத்தை தேற்றுவார்கள். உறுதிப்படுத்துவார்கள்.
நூல் : ஹாகிம், எண் : 5646.
அல்லாஹுத்தஆலா அடுத்து சொல்கிறான்:
وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திற்காக சகித்த பொறுத்த உறுதியாக இருந்த ஆண்கள். உறுதியாக சகித்துக் கொண்டு மார்க்கத்திலே உறுதியாக இருந்த பெண்கள்.
ஸப்ருடைய அர்த்தத்தை புரிய வேண்டும். ஸப்ர் என்றால் யாராவது இறந்து விட்டால் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வது அல்ல.
அதுவும் ஒரு நாள் கழித்து ஓதுவோம். சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு, திட்ட வேண்டியவர்களை எல்லாம் திட்டிவிட்டு, குறை சொல்ல வேண்டியதை எல்லாம் குறை சொல்லி முடித்துவிட்டு, சரி பரவாயில்லை, அல்லாஹ்கிட்ட போயிட்டாரு, போக வேண்டிய நேரம், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வது.
அந்த செய்தி கிடைத்தவுடன் சொல்ல வேண்டும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று. அதுதான் ஸப்ர். அது மட்டுமா? இஸ்லாமிற்காக இழப்பை சந்திக்கும் போது உறுதியாக இருக்க வேண்டும் அது ஸப்ர்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸப்ர் பற்றி சொல்லும் பொழுது;
الصَّبْرُ نِصْفُ الْإِيمَانِ
ஸப்ர் -பொறுமை ஈமானுடைய சமபாதி என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண்: 8544.
அத அப்படியே சுருக்கி சுருக்கி கொண்டு வந்து, மவுத்தா போனவங்க வீட்டுல இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் சொல்றதோட நிப்பாட்டியாச்சு. அதை கூட உருப்படியா சொல்றது இல்ல.
அல்லாஹ்வின் அடியார்களே! ஜாலூத்தை எதிர்கொள்ளும் போது தாலூத்துடைய குடும்பம், தாலூத்துடைய போர்வீரர்கள் சொன்னார்களே!
وَلَمَّا بَرَزُوْا لِجَـالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَ
இன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 2:250)
அது ஸப்ர். இன்று காசா மக்கள் இருக்கிறார்களே அது ஸப்ர் அவர்கள் பொறுமையாளர்கள். நாம் அல்ல.
அது மட்டுமல்ல, வடநாடுகளிலே அந்த குஃபார்கள், எதிரிகள் எவ்வளவு சொன்னாலும், ஈமானை இஸ்லாமை விட மாட்டோம் என்று அந்த உறுதியோடு நிற்கின்றார்களே! எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்! நம்முடைய சகோதரர்களிலே எத்தனை பேர் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்! எத்தனை பேர் உயிர் பிரிகின்ற வரை அடிக்கப்பட்டார்கள்!
அந்த வரலாறு இன்றும் நாம் பார்க்கிறோம். எவ்வளவு நடந்தாலும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஒரே சொல்லிலே இருக்கின்றார்களே! அது ஈமான். அது பொறுமை.
காசா மக்களை பாருங்கள்! சுகபோகத்திலும் உலக மோகத்திலும் சுற்றி இருக்கக்கூடிய அரபு நாடுகள் யஹூதிக்கு ஜுயுனிச பயங்கரவாத எதிரிக்கு எதிராக ஒரு வார்த்தையை சொல்வதற்கு கூட பயந்து கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வுடைய தீனிற்காக, மஸ்ஜித் அக்சாவிற்காக, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மிஃராஜுக்காக இரவில் அழைத்து செல்லப்பட்ட இடத்தி (மஸ்ராவி)ற்காக இவ்வளவு இழப்புகளை தாங்கி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர் கை கால்களை இழக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களிலே ஒருவரிடத்திலே கேளுங்கள்
حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير
என்று சொல்வார்கள். இது ஈமான் இல்லை என்றால் வேறு எது ஈமான்? சொல்லுங்கள்! நல்லா கோழி பிரியாணி மந்தி பிரியாணி சாப்பிட்டு அல்ஹம்துலில்லாஹ் சொல்றது மட்டும்தான் நமக்கு ஈமானாக தெரிகிறது.
நாம் அப்படி பழகி விட்டோம். இஸ்லாமின் பெயரால் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து விட்டு அல்லாஹ்வை புகழத் தெரியுமே தவிர, இஸ்லாத்திற்காக வேண்டி இழந்து விட்டு அல்லாஹ்வை புகழக்கூடிய அந்த ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்று அழ வேண்டும்.
இஸ்லாமின் பெயரால் நான் எதை இழந்தேன்? எனக்கு எல்லா சுகமும் கிடைக்கிறது. ஒருவேளை பட்டினியாக இருந்திருப்போமா? அந்த மக்களை பாருங்கள்! அவர்களுக்கு என்ன? அவர்கள் விரும்பி இருந்தால் அந்த யஹூதியோடு அந்த நஸ்ராணிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே! கோடி கோடியாக கொட்டுவதற்கு தயார். அதுதான் ஈமான்.! உலகமா? ஆகிறத்தா? சொர்க்கமா? அல்லது இந்த சுகபோக வாழ்க்கையா? அல்லாஹ்வுடைய ஹலால் ஹராம் மார்க்கமா? அல்லது யூதர்கள் நசராணிகள் காண்பிக்க கூடிய இச்சையின் வாழ்க்கையா?
அல்லாஹ் சொல்கிறான்:
وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْـنِکُمْ اِنِ اسْتَطَاعُوْا
இந்த யஹூதிகள் நசராணிகள் உங்களை உங்களுடைய மார்க்கத்தில் இருந்து வழி கெடுக்காத வரை திருப்பி விடாத வரை அவர்கள் உங்களோடு சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:217)
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً
அவர்கள் காஃபிராக இருப்பது போன்று நீங்களும் காஃபிராக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முடிவு விருப்பம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 4:89)
அல்லாஹ்வின் அடியார்களே! ஸப்ர் என்றால் என்ன? இஸ்லாம் ஈமானுக்காக ஒன்றை இழக்கும் போது இருக்கக்கூடிய மன உறுதி. எத்தனை ஸஹாபிய பெண்கள் போர்களிலே அவர்களுடைய கணவன்மார்கள் கொல்லப்பட்டார்களே. பிள்ளைகள் கொல்லப்பட்டார்களே. தந்தைமார்கள் கொல்லப்பட்டார்களே. ஒரு வார்த்தை அல்லாஹ்வுடைய தூதர் இடத்திலே வந்து குறை சொல்லி இருப்பார்களா? ஒரு வார்த்தை ஆட்சேபனை செய்திருப்பார்களா? உங்களோடு போருக்கு சென்றபோது. என்னுடைய தந்தை கொல்லப்பட்டு விட்டாரே, இனி எங்களின் வாழ்வுக்கு என்ன செய்வது என்று கேட்டிருப்பார்களா?
ஹன்ளலா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நேற்று திருமணம் ஆகிறது. காலையில் இன்னும் குளிக்கவில்லை. உஹது போர்க்களத்தில் இருந்து சத்தம் வருகிறது. ஓடுகிறார் குளிக்காமல். ஷகிதாகி விடுகின்றார். அவரை குளிப்பாட்டுவதற்காக மலக்குகளை அல்லாஹ் இறக்குகிறான்.
நூல் : சீரா இப்னு ஹிஷாம் - பக்கம் 75
எங்கேயாவது வரலாற்றிலே சீராவிலே படித்திருக்கிறீர்களா? ஹன்ளலா உடைய மனைவி ரசூல்லாஹ்விடத்திலே வந்து ஆட்சேபனை செய்தார்கள் என்று. குறை சொன்னார் என்று.
وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ
அல்லாஹ்வுடைய தீனுக்காக அள்ளிக் கொடுத்த தர்ம சாலி ஆண்கள். அள்ளிக் கொடுத்த தர்ம சாலி பெண்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 33:35)
ஆண்கள் மட்டுமா? அபூபக்கர் மட்டுமா அள்ளி கொடுத்தார்? எத்தனை பெண்கள் தங்களது முழு சொத்துகளை செல்வங்களை இந்த தீனுக்காக கொடுத்தார்கள்.
وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ
நோன்பு நோற்ற ஆண்கள். நோன்பு நோற்ற பெண்கள். (அல்குர்ஆன் 33:35)
நம்ம ரமலான் மாசத்துல ஸஹர் எப்படின்னு சொன்னால், அச்சச்சோ நாம டிபன் சாப்பிடுவது இல்லையே! அச்சச்சோ நாம லஞ்ச் சாப்பிட போவது இல்லையே! என்று சொல்லி நிறைய ஸஹர் சாப்பிடுவது. வருமுன் சேமிப்பு.! அதுக்கு அப்புறம் இப்தார் எப்படி செய்வது? அச்சச்சோ டிபன் சாப்பிடலையே அச்சச்சோ லஞ்ச் சாப்பிடலையே என்று சொல்லி (விட்டதை பிடிப்பது) இப்தார். அதுக்கு அப்புறமா தராவிஹ்க்கு முன்னாடி ஒரு இப்தார். அதுக்கு அப்புறமா தராவீஹ்க்கு பின்னாடி ஒரு இப்தார்
இது எந்த நோன்பாளிகளை அல்லாஹ் சொல்கிறான்? அல்லாஹ்வுடைய பாதையிலே போருக்கு போகும் போது நோன்பு வைத்தார்கள். பத்ரு போர் எப்போது நடந்தது? மக்கா வெற்றி எப்போது நடந்தது? மதினாவில் கிளம்பும்போது நோன்பு நோற்றவர்களாக கிளம்பினார்கள். மக்காவிலே சென்று நாளை எதிரிகளை சந்திக்கின்ற அந்த தருணம் வரை நோன்போடு இருந்தார்கள்.
இதோ காசா மக்களை பாருங்கள். சென்ற ஆண்டு ரமலானில் நோன்பு வைத்தார்கள். அடுத்த ரமலான் வரப்போகிறது ஸஹரே கிடையாது. தண்ணீரே இல்லை. உப்புத்தண்ணி. இப்தார் கிடைத்தால் உண்டு இல்லை என்றால் இல்லை.
யாராவது நோன்பை விட்டார்களா? தங்களிடம் உள்ளதை பரிமாறிக் கொண்டு அந்த ரமலானுடைய நோன்பை நோற்றார்கள். தக்பீர் கூறியவர்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். உடைக்கப்பட்ட சிதைக்கப்பட்ட அந்த வீடுகளுக்கும் இடையிலே. அது தான் ஈமான்! சகோதரர்களே.
وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ
கண்காணிப்பாளர் யாரும் இல்லாமல், கேட்கக்கூடியவர் யாருமில்லாமல், இருந்தும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை நினைத்து தங்களுடைய ஒழுக்கத்தை கற்பை பாதுகாத்துக் கொண்ட ஆண்கள்; கற்பை பாதுகாத்துக் கொண்ட பெண்கள்.
وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
சதாவும் அல்லாஹ்வை நினைத்து வாழக்கூடிய ஆண்கள். அல்லாஹ்வை நினைத்து வாழக்கூடிய பெண்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவி முசல்லாவிலே தஹஜ்ஜத்து தொழுகையிலே நின்றால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லுஹா உடைய நேரத்திலே வெளியிலே சென்று திரும்பி வருகிற வரை அந்த இடத்திலே வணங்கிக் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பாளர்: ஜுவைரியா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண்: 2726.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தனக்கு இரவு தொழுகை நடத்துவதற்காகவே ஒரு குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடிய அடிமையை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் தொடர்ந்து இரவுத் தொழுகையை நீண்ட ரக்அத்துகளைக் கொண்டு தொழுது வந்தார்கள்.
நூல் : ஃபத்ஹுல் பாரி (2/ 216 - 217)
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவியார் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா தூக்கம் மிகைத்து விழுந்து விடாமல் இருப்பதற்காக பள்ளியிலே ஒரு கயிறை கட்டிக்கொண்டு அந்த கயிறிலே தனது கையை போட்டுக் கொண்டு தொழுவார்கள். காரணம், தூக்கம் மிகுதியால் விழுந்து விடக்கூடாது என்பதற்காக.
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 1150.
அல்லாஹ் சொல்கிறான்: இத்தகைய சமுதாய மக்களுக்கல்லவா அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.
கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி வீரமிக்க இந்த சமுதாயத்தை உருவாக்கிய, எப்படி ஆண் சஹாபாக்கள் இருக்கிறார்களோ, அவர்களுடைய பங்கு இஸ்லாமை பரப்புவதிலும் சமூகத்தை உருவாக்குவதிலும் எப்படி இருந்ததோ, அது போன்று சஹாபிய பெண்களின் பங்களிப்பும் இருக்கிறது. அவர்களுடைய தியாகம் இல்லை என்றால் பல ஆண்களால் சமூகத்திற்கான இஸ்லாமிற்கான இந்த பங்களிப்பை செய்திருக்க முடியாது.
ஆகவே, நம்முடைய சஹாபிய பெண்களைப் பற்றிய அறிவும் அவர்களைப் பற்றி நமது குடும்பப் பெண்களுக்கு சொல்வோம். அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்வோம். அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அத்தகைய நற்பாக்கியத்தை தருவானாக! நம்முடைய பெண்களை ஈமானை அடைந்த பெண்களாக, ஈமானுக்காக வாழக்கூடிய பெண்களாக, ஈமானை கற்று ஈமானை பரப்பக்கூடிய ஒரு முழுமையான மூஃமினான முஸ்லிமான பெண்களாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/