ரமழான் நம்மை மாற்றுவதற்கான மாதம்! | Tamil Bayan - 950
ரமழான் நம்மை மாற்றுவதற்கான மாதம்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் நம்மை மாற்றுவதற்கான மாதம்!
வரிசை : 950
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-02-2025 | 08-08-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவையாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் பொருந்திக் கொண்ட நல்ல மூமின்களில் அல்லாஹ்வை பயந்து கொண்ட நல்லோரில் என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அல்லாஹு தஆலா நமக்கு இன்னும் இந்த உலகத்திலே வாழும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்! ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும்;
الحَمْدُ لِلَّهِ الذي أحْيَانَا بَعْدَ ما أمَاتَنَا
யா அல்லாஹ் எங்களுக்கு நீ மரணத்தை கொடுத்ததற்கு பிறகு மீண்டும் இன்றைய தினத்திலே எங்களை நீ உயிர்ப்பித்தாய் என்று அல்லாஹ்வை புகழ்கிறோம்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6324.
இது சிந்திக்க வேண்டிய அழகிய துஆ. இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எப்போது எந்த இடத்தில் எந்த தருணத்தில் மரணம் வரும் என்பதை நாம் அறியாமல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் நமக்கு அடுத்தடுத்து வாழ்க்கை நீட்டப்படுவது, அடுத்த நேரம் நமக்கு கிடைப்பது, இது அல்லாஹ்வுடைய ஒரு பெரிய அருள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
உலகத்திலே எதை வேண்டுமானாலும் மனிதர் அவருடைய செல்வத்தை செலவழித்து வாங்கிவிடலாம். ஆனால், வாழ்க்கையை வாங்க முடியுமா? உயிரை விலை கொடுத்து வாங்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
யார் நம்மை விட்டு பிரிந்து விட்டார்களோ இறந்துவிட்டார்களோ அவர்களிடத்திலே கேட்கப்படுமேயானால்; அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுமேயானால் இந்த உலகத்தில் வருவதற்கு அவர்கள் வீண் விளையாட்டுகளிலே, வேடிக்கைகளிலே, தடுக்கப்பட்ட காரியங்களிலே ஈடுபடுவார்களா? யோசித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கப்ருடைய வாழ்க்கையை பற்றி என்ன சொன்னார்களோ, மறுமையைப் பற்றி என்ன சொன்னார்களோ அது நிச்சயம் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உலகத்தில் நாம் கண்ணால் பார்ப்பதில் காதால் கேட்பதில் கூட மாற்றம் ஏற்படலாம். கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்;
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையை பற்றி என்ன சொன்னார்களோ அது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது. அதிலே எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் எப்படி சொன்னார்களோ அப்படி கண்டிப்பாக நடக்கும். அல்லாஹ்வின் வேதம் அது விளையாட்டு அல்ல. சிந்திக்க வேண்டும் இந்த வசனத்தை!
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ وَّمَا هُوَ بِالْهَزْلِ
மனிதர்களே! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட மூமின்களே! இது தீர்க்கமான பேச்சு. இது உண்மையான நீதமான தீர்க்கமான முடிவான உறுதியான சத்தியமான பேச்சு. இது விளையாட்டு அல்ல. (அல்குர்ஆன் 86:13, 14)
இது ஏதோ வீணாக பேசுவதற்காகவோ பயமுறுத்துவதற்காகவோ அல்லது ஏதோ ஒன்றுக்காக சொல்லப்பட்ட ஒரு சாதாரணமான செய்தி அல்ல. அல்லாஹ் எத்தனை இடங்களிலே கேட்கிறான்!
சூரா கியாமாவை படித்துப் பாருங்கள்! சூரா தாரிக்கை படியுங்கள்! அன்றாடம் நாம் கேட்க கூடிய வசனங்கள். நாம் ஓதக்கூடிய அத்தியாயங்கள்.
اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًى
மனிதன் என்ன எண்ணிக் கொண்டான்? அவன் சாதாரணமாக விடப்பட்டு விடுவானா? அவனுக்கு மரணத்திற்கு பிறகு எதுவும் நடக்காதா? இந்த உலக வாழ்க்கையோடு முடிந்து விட்டதா? (அல்குர்ஆன் 75:36)
சூரத்துல் முஃமினுடைய இறுதி வசனங்களை படியுங்கள்! இதுவெல்லாம் நம்மை மறதியில் இருந்து தட்டி எழுப்பக்கூடிய வசனங்கள். நம்முடைய அலட்சியத்தில் நமக்கு மண்டையில் கொட்டி நமக்கு சொரணை வரும்படி புத்தி வரும்படி எச்சரிக்க கூடிய வசனங்கள்.
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
வசனத்தின் கருத்து : நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்கள்? உங்களுக்கு என்ன நினைப்பு? நாம் உங்களை வீணாக படைத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் நம்மிடம் திரும்பி வர மாட்டீர்களா? உங்களை கொண்டு வரப்படாதா? என்ன நினைப்பிலே நீங்கள் வாழ்கிறீர்கள்? (அல்குர்ஆன் 23:115)
நம்மிடத்திலே அல்லாஹ்வுடைய நேரடியான கேள்விகள். என்ன பதில் இருக்கிறது.?மறதி..மறதி.. அலட்சியம் செல்வத்தை எந்த அளவு சேர்க்க வேண்டுமோ அதிலே நாம் சோர்வடைவதில்லை. நம்முடைய இன்பங்களை நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நமக்கு களைப்பு ஏற்படுவதில்லை.
அதில் ஏற்படக்கூடிய சிரமங்களை சகித்துக் கொள்ள தாங்கிக்கொள்ள பொறுத்துக் கொள்ளத் தயார். துன்யாவிற்காக, உலக வாழ்க்கையின் மோகத்துக்காக சுகத்துக்காக இன்னும் அதிகப்படியான சிரமத்தை கூட தாங்கிக் கொள்ள தயார்.
ஆனால், மறுமை ஆகிரத் என்று வந்துவிட்டால் எவ்வளவு அற்பமாக சொற்பமாக செய்ய முடியுமோ அது உடல் ரீதியான வணக்க வழிபாடுகளாக இருக்கட்டும்; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தான தர்மமாக இருக்கட்டும்; அவ்வளவு குறைவாக சொற்பமாக அற்பமாக செய்துவிட்டு இது நமக்கு போதும்; இது நமக்கு அதிகம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
இன்று நாம் ஓதுகிறோம். ஆனால் நமக்கு நம்பிக்கை வருவதில்லை.
وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا وَاسْتَغْفِرُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
மூமின்களே! நீங்கள் எதை செய்தாலும் அதற்கு மிகச் சிறந்த நற்கூலியை, மிகச்சிறந்த பகரத்தை, நீங்கள் செய்ததை விட மகத்தான கூலியை அல்லாஹ்விடம் பெறுவீர்கள் என்று அல்லாஹுத்தஆலா வாக்களிக்கிறான். (அல்குர்ஆன் 73:20)
நாம் கொடுக்கக்கூடிய தர்மம் நமக்கு தான். நாம் கொடுக்கக்கூடிய கொடைகள் உதவிகள் எல்லாம் நமக்கு மறுமையிலே பலனளிக்க கூடியது.
அதற்குரிய கூலியை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே நீங்கள் பெறுவீர்கள்.
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
அல்லாஹ்வின் பாதையிலே தர்மம் செய்பவர்களுக்கு உதாரணம் ஒரு வித்துவை போல ஒரு விதையைப் போல. அதை பூமியிலே விதைத்தால் அது ஏழு கதிர்களை முளைபிக்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள். ஒன்றுக்கு 700. தான் நாடியவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பன்மடங்காக பெருக்கிக் கொடுக்கின்றான். (அல்குர்ஆன் 2:261)
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ
யார் ஒரு நன்மையை செய்வாரோ அவருக்கு 10 நன்மைகள். அதற்குரிய 10 பிரதிப் பலன்கள் 10 கூலிகள் அவருக்கு கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 6:160)
இந்த உலக வாழ்க்கை ஆகிறத்துக்காக. அல்லாஹு தஆலா இபாதத்தை கொடுத்தான். அல்லாஹுத்தஆலா நமக்கு சில காலங்களை கொடுக்கிறான். சில நேரங்களை அல்லாஹ் கொடுக்கின்றான். சில இடங்களுக்கு அல்லாஹ் அழைக்கின்றான்.
அத்தகைய மகத்தான ஒரு பருவ காலம்; ஒரு வசந்த காலம்; ரமளான் என்ற சீசன் தான் நம்மை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய முன்னோர் கண்ணியத்திற்குரிய சஹாபா, தாபியின் ரமழானை அவ்வளவு ஆர்வத்தோடு எதிர்பார்த்தார்கள். இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் ஏழாவது நூற்றாண்டிலே வாழ்ந்த ஒரு பெரிய கல்விமான். நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்!
இஸ்லாம் புரியப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது எப்படி? இன்று எப்படி மாறி இருக்கிறது? உதாரணத்திற்கு ஒரு செய்தியை பாருங்கள். ஃபஜ்ர் தொழுகை ஃபஜர் நேரத்தில் கடமையா? அல்லது வேற நேரத்தில் கடமையா? ஃபஜ்ர் தொழுகை ஃபஜர் நேரத்தில் தான் கடமை. ஃபஜர் தொழுகையை நான் ஜும்ஆவுடைய நேரத்திலே தொழுவேன். ஜும்ஆவுடைய நேரம் சிறப்பானது என்று யாராவது தள்ளிப் போடலாமா? தள்ளிப் போடுவது கூடுமா? கூடாது.
எந்த அமலை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் செய்தாக வேண்டும். இன்னொரு நேரத்திற்கு தள்ளி போடக்கூடாது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
இன்று, பலர் என்ன செய்கிறார்கள்? ரமழான் என்பதை தங்களுடைய ஜகாத்துக்கான மாதமாக ஆக்கிக் கொண்டார்கள். தங்களுக்கு ஜகாத் எந்த மாதத்தில் கடமையாகிறது என்ற உணர்வோ சிந்தனையோ அறவே இருக்காது. ஜக்காத் ஒரு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கடமையாக நமது சமுதாயத்தில் ஆகிவிட்டது.
சகோதரர்களே! நீங்கள் இன்கம் டேக்ஸ் வருமான வரித்துறையை பயப்படுவதை விட, நீங்கள் உங்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு பயப்படுவதை விட, எத்தனையோ ஆயிரம் மடங்குகள் லட்சம் மடங்குகள் அல்லாஹ்வுடைய ஜகாத்தின் விஷயத்தில் விசாரணைக்கு பயந்தாக வேண்டும். சாதாரணமான விஷயம் அல்ல அது.
தொழுகையும் ஸகாத்தும் பிரிக்க முடியாத கடமை. எப்படி தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமோ, அது போன்று தான் ஜகாத் அதற்குரிய அரபி மாதங்களின் எண்ணிக்கையின் படி (ஆங்கில மாதம் அல்ல) 12 மாதங்கள் பூர்த்தியாகும் போது கண்டிப்பாக அதற்குரிய ஜக்காத்தை நாம் கொடுத்தாக வேண்டும்.
சகோதரர்களே! அந்த செல்வம் உங்களுக்கு துல்ஹஜ் மாதத்திலே வந்தால் அடுத்த துல்ஹஜ் வருவதற்கு முன்னால் நீங்கள் கொடுக்க வேண்டும். ஷாபான் மாதத்திலே வந்திருந்தால் நீங்கள் ரமழான் மாதத்திற்கு தள்ளி போடக்கூடாது.
இன்று பலருக்கு ரபியுல் அவ்வளிலே ஸகாத் கடமையாகி இருக்கும். ரமழானிலே சேர்த்துக் கொடுப்போம் என்பதாக நமது ரமழான் வரை அந்த ஜகாத் உடைய காசை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
இது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதல்ல. இது ஒரு தவறான பழக்கம். ஜக்காத்தை பொறுத்தவரை முன்கூட்டியே நீங்கள் கொடுக்கலாமே தவிர, அதற்குரிய நேரம் வந்ததற்குப் பிறகு அதை தாமதிக்கக்கூடாது.
பைத்துல்மாலாக இருக்குமேயானால் தாமதிப்பதற்கு அனுமதி. அடுத்த ஆண்டுக்குள் அந்த ஜகாத்தை அதாவது கலெக்ட் பண்ண ஜகாத்தை அவர்கள் நிறைவேற்றலாம். இது பைத்துல் மால். ஒரு இஸ்லாமிய நிறுவனமோ ஒரு இஸ்லாமிய அரசாங்கமுமோ, ஜகாத்தை யார் கலெக்ட் பண்ணி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதி.
தனி நபரை பொறுத்தவரை ஜக்காத் தன்னிடத்திலே இருக்குமேயானால் அதற்குரியவர்களை தேடி அதை அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இப்னு ரஜப் ஹன்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்.
ஏழைகள் தேவை உள்ளவர்கள் ரமழானை டென்ஷன் இல்லாமல் சிரமம் இல்லாமல் நெருக்கடி இல்லாமல் இபாதத்திலே கழிக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய முன்னோர்கள் ரமழான் மாதம் வருவதற்கு முன்பதாகவே தங்களுடைய தான தர்மங்களை ஏழைகளுக்கு சேர்ப்பித்து விடுவார்கள். தங்களுடைய ஜகாத்துகளை சேர்ப்பித்து விடுவார்கள்.
அது மட்டுமா? ரமழானுக்காக ஷாபான் மாதத்திலிருந்து அவர்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா? நஃபிலான நோன்புகளை அதிகப்படுத்தி விடுவார்கள். இதெல்லாம் எதற்காக? ரமழானின் தயாரிப்புக்காக எதிர்பார்ப்புக்காக.
இன்று, நாம் அப்படியே தலைகீழாக இருக்கிறோம். ரமழானிலே குர்ஆன் ஓதலாம் என்று ஒரு வருடமாக குர்ஆனை திறப்பதில்லை. இப்படி ஒரு கூட்டம். தான தர்மங்கள் விஷயத்திலே ரமழானிலே கொடுக்கலாம் என்று தள்ளிப் போட்டு ஒரு கூட்டம்.
இன்று என்ன ஆனது? மஸ்ஜிதை சேர்ந்தவர்களும். மதராஸாக்களை வைத்திருப்பவர்களும். எத்திம்கானா நடத்தக்கூடியவர்களும். அல்லது பொது நிறுவனங்கள் நடத்துபவர்களும். அல்லது தேவை உள்ள தனிப்பட்ட ஏழைகள் வறியவர்களும். தங்களுடைய ரமழானுடைய நாட்களை வீணடித்துவிட்டு முஸ்லிம்கள் இடத்திலே ஜகாத்தையும் சதக்காவையும் கலெக்ட் பண்ணுவதற்காக சேகரிப்பதற்காக சுற்ற வேண்டிய ஒரு கட்டாயத்திற்கும் நிர்பந்தத்திற்கும் அவர்களை நாம் ஆளாக்கி வைத்திருக்கிறோம்.
அந்த ஜகாத்தை அந்த சதக்காவை ரமழானுக்கு முன்பே நாம் செலுத்தி விடுவோமேயானால், அவர்களுக்கு கொடுத்து விடுவோமேயானால் அவர்களும் தங்களுடைய ரமழானில் நிம்மதியாக இபாதத்துகளிலே ஈமானுடைய வணக்கங்களிலே அவர்கள் செலவழிப்பார்கள்.
இப்போது அடுத்த ஒரு கேள்வி வரும். நாம் எப்போதுமே ஆதாரங்களை மாற்றுவோம். நாம் ஒரு புரிதல் வைத்திருப்போம்.
மக்கள் என்ன சொல்கிறார்கள்; ரமழான் மாசத்திலே தர்மம் செய்தால் ஒன்றுக்கு நிறைய நன்மை இருக்கு. ஒரு நபிஃலுக்கு ஒரு ஃபர்லுடைய நன்மை. அந்த மாதிரி எல்லாம் சில ஹதீஸ். அதனால ரமழானை எதிர்பார்த்து இருக்கிறோம்.
ஆம். எதிர்பார்க்கலாம். எதற்காக வேண்டி? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போன்று உபரியான தான தர்மங்களுக்காக நஃபிலான தான தர்மங்களுக்காக.! எதற்காக அல்ல? கடமையாகி விட்ட, கொடுத்து விடுவதற்கு உரிய நேரம் வந்துவிட்ட, தான தர்மங்களை தள்ளி வைத்து ரமழானிலே கொடுப்பதற்காக அல்ல.
அதற்குத்தான் அந்த ஒரு உதாரணம் சொன்னேன். சுபுஹ் உடைய தொழுகையை சுபுஹுடைய நேரத்திலே தொழ வேண்டுமே தவிர, ஜும்ஆவுடைய நேரம் சிறப்பான நேரம் அந்த நேரத்திலே தொழுகிறேன் என்று ஒருவன் தள்ளி வைத்தால் எப்படி தவறோ அது போன்று தான்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் ஒரு சாதாரணமான மாதம் அல்ல. நாம் எல்லாவற்றையுமே சாதாரணமாக கடந்து சென்று விடுகிறோம். குர்ஆனுடைய வசனங்களாக இருக்கட்டும். எச்சரிக்கைகளாக இருக்கட்டும். இபாதத்துகளாக இருக்கட்டும். இது ஒரு மகத்தான மாதம். அல்லாஹ்வை நெருங்குவதற்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அற்புதமான மாதம்.
அந்த மாதத்திற்காகவே இந்த ஷாபானுடைய மாதத்திலிருந்தே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஷாபானுடைய மாதத்திலே இன்று பலர் நஃபிலான நோன்புடைய பழக்கமில்லாததால் பலருடைய நிலைமை ரமழானின் முதல் நோன்பிலேயே மிகப்பெரிய சிரமம் ஆகிவிடும். சிக்கலாகிவிடும்.
என்ன சொல்லுவாங்க: முதல் நோன்பு பிடிச்சுகிச்சு. ஃபர்ஸ்ட் நோன்புல. பல பேரு லுஹர் லேயே களைப்பால் படுத்து விடுவார்கள். முடியல சில பேர் அஸரோட ஃபிளாட் படுத்து விடுவார்கள். முடிஞ்சு போச்சு. மஃரிபுடைய நேரத்துல மொத்தமா முடிஞ்சுடும் கதை.
என்ன ஆகிவிட்டது? இன்றைக்கு நம்முடைய பிரச்சனை என்ன? நோன்பு திறக்கும் பொழுது எப்படி நோன்பு திறக்கிறோம்? எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் தோழர்களுடைய காலத்திலும் நோன்பு திறக்கப்பட்டது?
நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம். இவ்வளவு நேரம் பட்டினியாக கிடந்தோம். அதையெல்லாம் வைத்து நோன்பு திறக்கும் பொழுது ஒரு கட்டு கட்டிடனும். இவ்வளவு நேரம் எம்டியா (empty) இருந்த வயிற டோட்டலா ஹவுஸ் ஃபுல் போட்டு அடைத்து விட வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில் மகரிபே தொழ முடியாது என்று இருக்கும் பொழுது, மகரிபுடைய தொழுகையை நிம்மதியா நிறைவேற்ற முடியாமல் இருக்கும் பொழுது பிறகு இஷா தொழுகைக்கு எப்படி சரியாக வர முடியம்? இஷா தொழுகை ஏன் தவறாது?!
வேற வழி இல்ல. மக்ரிப் பள்ளிவாசலில் நோன்பு திறக்கிறதுனால மக்ரிப் தொழுது விடுகிறோம். இஷாவுக்கு எப்படி நேரத்தில் வர முடியும்? அதற்குப் பிறகு தராவீஹிலே எப்படி நம்முடைய மனம் ஒன்றும்? யோசித்துப் பாருங்கள்!
வயிற்றை போட்டு இப்படி நிரப்பி வச்சிருந்தா அது உள்ளார ஒரு மிஷின் இருக்கா? இல்லையா? அது அது வேலையை செய்து கொண்டே இருக்கும். அதற்கு தண்ணீர் தேவைப்படும். அது கேசை வெளியாக்கும். ஏன் நம்மால் அந்த தராவீஹை நிம்மதியாக தொழ முடியவில்லை? கடைசியா இந்த குரங்கு ஆப்பத்தை பங்கு வச்ச கதையா ரமழானுடைய தராவீஹை வெட்டி வெட்டி கொதறி கொதறி பிச்சி பிச்சி பிச்சி ஒரு மணி நேரத்துல சலபியா இருந்தாலும் சரி, அஹ்லே ஹதிசா இருந்தாலும் சரி, நீ எந்த ஜமாத்தை சேர்ந்திருந்தாலும் சரி, அல்லது குராபி ஜமாத்தை சேர்ந்திருந்தாலும் சரி, எல்லாம் ஒரு மணி நேரத்துல முடிச்சிருங்க ஆலிம்சா.
எட்டு ரக்அத் தொழுகை வைத்தாலும் சரி, 20 ரக்அத் தொழுகை வைத்தாலும் சரி, ஒரு மணி நேரத்துல முடிச்சிருங்க ஆலிம்சா! முடிஞ்சா அதுல ஒரு பத்து நிமிஷம் பயான் பண்ணி விட்டுடுங்க ஆலிம்சா!
சகோதரர்களே! இதற்காகவா ரமழான் கொடுக்கப்பட்டது? இதுவா நமக்கு பாவமன்னிப்பை தேடி தரக்கூடிய ரமழான்? இதுவா நமக்கு சொர்க்கத்தின் வாசலை திறந்து தரக்கூடிய ரமழான்? இதுவா நமக்காக சொர்க்கத்தை அலங்கரிக்க கூடிய ரமழான்? இதுவா நரகத்தின் வாசலை அடைக்கப்பட கூடிய ரமழான்?
பசிக்காக வேண்டி, விழித்திருப்பதற்காக வேண்டி, நம்மை நாமே வருத்தி வணக்க வழிபாடுகளை செய்வதற்காக வேண்டி கொடுக்கப்பட்ட ரமழானையும் தின்பதற்காக உண்பதற்காக இன்ன பிற தேவைக்காக வைத்து விட்டோம்.
தான தர்மங்களையாவது சரியாக செய்கின்றோமா என்றால் அதிலும் ஏழைகளையும், வறியவர்களையும் அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அதற்குத்தான் இந்த செய்தியை நான் இங்கு அழுத்தமாக சொல்கிறேன்.
இப்போதிலிருந்து நம்முடைய ஜக்காத்தை சரியான முறையில் கணக்கிட்டு கொடுக்க தயாராக வேண்டும். முதலாவதாக நம்முடைய உறவுகள், நம்முடைய ரத்த உறவுகள் தாய் வழி தந்தை வழியிலே தூரம் வரைக்கும் அந்த உறவுகளிலே யார் வறியவர்களாக தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள்; அதற்குப் பிறகு நம்முடைய நண்பர்கள், நம்மோடு படித்தவர்கள், நம்முடைய அண்டை வீட்டார்கள் இப்படியாக அவர்களுடைய குடும்பம் எவ்வளவு தேவையில் இருப்பார்கள்; வறுமையில் இருப்பார்கள்; அவர்களால் சொல்ல முடியாது.
யாசகம் கேட்பவர் ரோட்டிலே சென்று அவர் எதையாவது கேட்டு விட்டு வாங்கி பசியை ஆற்றி விட்டு சென்று விடுவார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
ليسَ المِسْكِينُ الذي يَطُوفُ علَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ واللُّقْمَتَانِ، والتَّمْرَةُ والتَّمْرَتَانِ، ولَكِنِ المِسْكِينُ الذي لا يَجِدُ غِنًى يُغْنِيهِ، ولَا يُفْطَنُ به، فيُتَصَدَّقُ عليه، ولَا يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ
மிஸ்கின் அவர் அல்ல. யார் ஒரு பேரித்தம் பழம் இரண்டு பேரித்தம் பழம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறாரே அவர் அல்ல மிஸ்கின். மிஸ்கின் யார் தெரியுமா? யார் கையேந்தாமல் ஒழுக்கமாக, பேணுதலாக, மக்களிடம் யாசிக்காமல் தங்களை காத்துக் கொள்கிறார்களோ அவர் மிஸ்கின். அவரை தேடி செல்ல வேண்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1479.
சகோதரர்களே! இந்த தர்மம் என்பது இதை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! இப்படியாக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், நம்முடைய தூரத்து உறவுகள், நம்முடைய பாட்டன் வழியிலே உள்ள உறவுகள் இவர்களை எல்லாம் தேடி அவர்களுக்கு அந்த செல்வத்தை ரமழானுக்கு முன்பாகவே நாம் அனுப்பி வைத்து விட வேண்டும். அவர்கள் ரமழானை சந்தோஷமாக நிம்மதியாக வணக்க வழிபாடுகளிலேயே கழிக்க வேண்டும் என்பதற்காக.
இன்னும் பெரிய அக்கிரமம் அநியாயம் என்ன தெரியுமா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! ரமழானிலும் ஆரம்பத்தில் கூட இல்லாமல் கடைசி பத்திற்காக வேண்டி இன்னும் அதிலும் ஒரு கூட்டம் என்னவென்றால் ஒத்தை படையில் கொடுத்தால் நன்மை என்று. ஜகாத்தையும் சதக்காவையும் தள்ளி போடக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது.
அட அறிவாளிகளா! ஒத்தைப்படை இரவிலே இரவு வணக்கம் செய்வது இபாதத். அது நீங்கள் தர்மம் கொடுப்பதற்கான இரவு அல்ல. பகலிலே தர்மம் கொடுங்கள். இரவு கியாமுல்லைல் -நின்று வணங்குவதற்காக உள்ளது.
இன்று பார்த்தால், செல்வந்தர்களுடைய வீடுகளிலே இரவெல்லாம் கூட்டம் மக்கள் வரிசையிலே கூட்டம் கூட்டமாக நிற்பார்கள். சேலையை கொடுக்கிறது; கைலியை கொடுக்கின்றது; பேண்ட் சட்டையை கொடுக்கின்றது; காசு கொடுக்கிறது; அஞ்சு ரூபா பத்து ரூபா என்று சில்லரையாக மாற்றி வைத்துக்கொண்டு.
அல்லாஹ்வின் அடியார்களே! இதெல்லாம் நாம் பழக்கப்படுத்திய பழக்கப்படுத்தி விட்ட கெட்ட நடைமுறைகள். ரமழானின் இரவை நாமும் வீணடிக்கின்றோம். பிற மக்களையும் ரமழானுடைய இரவுகளை வீணடிக்கும்படி நாம் செய்து விடுகிறோம்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! இந்த ரமழான் ஒரு அற்புதமான ரமழான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழானை எப்படி வரவேற்றார்கள்! யா அல்லாஹ்! நாங்கள் ரமழானை அடைய வேண்டும் என்று கண்ணியத்திற்குரிய தோழர்கள் ரமழானுக்காக துஆ செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வளவு துஆ செய்வார்கள். ஆர்வப்படுவார்கள். ரமழானின் ஒவ்வொரு நாளும் நமக்கு மிக அற்புதமான நாள். அல்லாஹு தஆலா அதிலே நோன்பை தந்திருக்கிறான். அல்லாஹு தஆலா அந்த ரமழானுடைய மாதத்திலே நமக்காக சொர்க்கத்தை அலங்கரிக்கிறான்.
அல்லாஹு தஆலா அவனுடைய ஹதீஸ் குத்ஸியில் சொல்கிறான்:
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ له، إلَّا الصِّيَامَ؛ فإنَّه لي، وأَنَا أجْزِي به
ஆதமுடைய மகன் செய்யக்கூடிய அமல்கள் எல்லாம் அது அவனுக்காக.
எல்லா அமலும் அல்லாஹ்வுக்காக செய்கிறோம். அமல்களுடைய பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். அல்லாஹ் என்ன செய்கிறான்? ஆதமுடைய மகன் மனிதர்கள் செய்யக்கூடிய அமல்கள் எல்லாம் அவர்களுக்காக, நோன்பைத் தவிர. அது எனக்காக விசேஷமானது. அதற்கு நான் கூலி கொடுக்கப் போகிறேன்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1904.
ஒரு நோன்பாளி மீது அல்லாஹ் வைத்திருக்கக்கூடிய அந்த ஈடுபாடு, அந்த அன்பு.
இந்த ஹதீஸ் நமக்கு பொருந்தாது. ஏன்னா நம்ம டிபன் லஞ்ச் எல்லாம் சேர்த்து மொத்தமாக (ஹோல் சேல்) சஹர்ல முடித்து விடுகிறோம். பசி தெரிவதற்கு முன்பே நமக்கு இஃப்தார் வந்து விடுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:
நோன்பாளி பசித்து இருப்பதால் வயிற்றிலிருந்து துர்வாடையாக இருக்கும் ஒரு விதமான காற்று வாய் வழியாக வரும். அது அவங்க பேசினாங்கன்னா அந்த வாயிலிருந்து ஒரு விதமான அது நுகர முடியாத வாசமா வரும். துர்வாடையாக இருக்கும் அது பக்கத்தில் உள்ளவர்களுக்கு அது ஒரு தொந்தரவாக இருக்கும்
ஆனால், யாருக்காக நோன்பு வைக்கப்பட்டதோ, யாருக்காக பசித்திருந்தானோ, தாகித்திருந்தானோ அந்த ரஹ்மான் அந்த அல்லாஹ்விடத்திலே கஸ்தூரியை விட நீங்கள் எதன் நறுமணத்தை அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய அதை நுகர்கிறீர்களோ அந்த கஸ்தூரியை விட நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை தான் அல்லாஹ்வுக்கு மிக உயர்ந்தது; மிகப் பிரியமானது; மிகச்சிறந்தது.
அப்ப எந்த அளவு அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அந்த நோன்பாளிகளை நேசிப்பான் என்று யோசித்துப் பாருங்கள்!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகப்பெரிய கருணையாளர்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடியார்களுக்காக வேண்டி துஆ செய்பவர். பாவமன்னிப்புக்காக துஆ கேட்பார்கள்.
ஆனால், ஒரு சிலருக்காக மட்டும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாபம் விட்டார்கள். அவர்கள் மீது தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்காக (பத்துஆ-) அல்லாஹ்விடத்தில் கெட்ட பிரார்த்தனை செய்தார்கள். யார் தெரியுமா அந்த மூன்று பேர்?
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
رغِمَ أَنفُ رجلٍ ذُكِرتُ عندَهُ فلم يصلِّ عليَّ ، ورَغِمَ أنفُ رجلٍ دخلَ علَيهِ رمضانُ ثمَّ انسلخَ قبلَ أن يُغفَرَ لَهُ ، ورغمَ أنفُ رجلٍ أدرَكَ عندَهُ أبواهُ الكبرَ فلم يُدْخِلاهُ الجنَّةَ
அவன் நாசமாகட்டும்! அவனுக்கு முன்னால் என்னை பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் அவன் எனக்கு சலவாத்து சொல்லவில்லை. அந்த மனிதனும் நாசமாகட்டும்! யார்? ரமழான் அவனிடம் வருகிறது. அவனுக்கு பாவ மன்னிப்பு கிடைப்பதற்கு முன்னால் ரமழான் அவனை விட்டு கழண்டு விடுகிறது சென்று விடுகிறது. அவனும் நாசமாகட்டும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3545.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானை வீணடித்தவர்கள் மீது எந்த அளவு வேதனை பட்டு இருப்பார்கள்.
ஆனால் ரமழானின் நேரங்களை நோன்பை அதற்குரிய பேணுதல் இல்லாமல், அதற்குரிய இறையச்சம் இல்லாமல், அதற்குரிய ஒழுக்கம் இல்லாமல் வீணடித்தவர்கள் மீது எந்த அளவு மன வேதனை அடைந்திருந்தால் இவ்வளவு ஒரு பெரிய வார்த்தையை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!
அடுத்து மூன்றாவதாக சொன்னார்கள்; ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கியம் மிக அற்புதமானது. அல்லாஹ் அக்பர்! தன்னுடைய வயோதிகத்தை அடைந்த பெற்றோர்களை பெற்றிருந்தும் அந்த இருவரும் அவனை சொர்க்கத்திற்கு அனுப்பவில்லை.
ஒருவரிடத்திலே அவனுடைய பெற்றோர்கள் வயோதிகத்தை அடைந்தார்கள். அந்த இருவரும் அவனை சொர்க்கத்திற்குள் நுழைய வைக்கவில்லை என்றால் அவனும் நாசமாகட்டும்!
என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் உங்களது பெற்றோருக்கு பணிவிடை செய்து விட்டாலே குறிப்பாக வயோதிகத்தை அடைந்த பெற்றோருக்கு பணிந்து கருணையோடு அவர்களுக்கு நீங்கள் பணிவிடை செய்து விட்டாலே உங்களுக்கு சொர்க்கம் கன்ஃபார்ம். அவர்கள் உங்களை சொர்க்கத்தில் சேர்த்து விட்டார்கள்.
அல்லாஹ்விற்கு அவ்வளவு பிடித்தமான வணக்கம். அல்லாஹ்விற்கு அவன் வணங்கப்படுவது எவ்வளவு விருப்பமோ, அவனை தொழுவது அவனுக்கு எவ்வளவு விருப்பமோ, அவனுக்காக கஅபாவை தவாப்ஃ செய்வது அல்லாஹ்வுக்கு எவ்வளவு விருப்பமோ, அவனுக்காக உயிரை கையில் ஏந்தி எதிரிகளுக்கு முன்னால் அந்த உயிரை துச்சமாக மதித்து அந்த உயிர் கொல்லப்படும் வரை அல்லாஹ்வுடைய பாதையிலே போரிடுவது அல்லாஹ்வுக்கு எவ்வளவு விருப்பமோ, ஹஜ் எவ்வளவு அல்லாஹ்வுக்கு விருப்பமோ அது போன்று ஒரு அடியான் தனது பெற்றோரை கவனிப்பது, பெற்றோரைப் பேணுவது, அவர்களிடத்திலே இரக்கமாக அன்பாக கனிவாக பாசமாக பேசுவது, அவர்களை அன்போடு பார்ப்பது, அவர்களுக்கு பணிவிடை செய்வது அவ்வளவு அல்லாஹ்விற்கு விருப்பம்.
நினைத்துப் பாருங்கள்! நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். அது ஒரு இபாதத்தாகவே நமக்கு தெரிவதில்லை. பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது அது ஒரு இறைவணக்கம் இபாதத். பெற்றோர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்விற்கு மாறு செய்வதாகும். பெற்றோர்களை அதிருப்தி படுத்துவது அல்லாஹ்வை அதிருப்தி படுத்துவதாகும்.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழானை வரவேற்றார்கள். ரமழானுக்கான ஒழுக்கங்களை சொன்னார்கள். ரமழான் மாதம் என்பது வெறும் பசித்திருப்பதற்கான மாதம் அல்ல. நம்மை ஒழுங்குபடுத்துவதற்கான மாதம். தக்வாவை கொண்டு வருவதற்கான மாதம்.
நம்முடைய நாவை பாதுகாப்பதற்காக, நம்முடைய கண்களை பாதுகாப்பதற்காக, நம்முடைய ஆசைகளை பாதுகாப்பதற்காக, ஹராமிலிருந்து நம்மை தடுப்பதற்கான பயிற்சிக்கான மாதம்.
யார் இப்படி இல்லாமல் ரமழானை வீணடிப்பார்களோ அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ربَّ صائمٍ ليسَ لَه من صيامِه إلَّا الجوعُ وربَّ قائمٍ ليسَ لَه من قيامِه إلَّا السَّهرُ
பல நோன்பாளிகள் அவர்களுக்கு பசி மட்டும்தான் மிஞ்சும். இரவிலே நின்று வணங்கிய பல நோன்பாளிகளுக்கு இரவில் விழித்திருந்தது மட்டும்தான் கிடைக்கும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1380.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَن لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ والعَمَلَ به، فليسَ لِلَّهِ حَاجَةٌ في أنْ يَدَعَ طَعَامَهُ وشَرَابَهُ
யார் பாவமான காரியங்களை செயல்களை விடவில்லையோ, பாவமானவற்றை பேசுவதை விடவில்லையோ அவர் உணவை குடிப்பை (உண்ணுதல் பருகுதல் ) விட்டிருப்பதிலே அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1903.
ஆகவே, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! வரக்கூடிய ரமழானை நாம் பேண வேண்டும். அதற்காக முதலாவதாக மனதளவிலே தயாராக வேண்டும். வணக்க வழிபாடுகளை நாம் இப்போதிலிருந்தே வழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். ஐந்து நேரத் தொழுகைகளை ஜமாத்தோடு அதற்குரிய நேரத்திலே தொழுவதற்கான பயிற்சியை இப்போதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முன் பின் சுன்னத்துகளை தொழுவது, குர்ஆனை இப்போதிலிருந்து நாம் எடுத்து விட வேண்டும்.
நம்முடைய சலஃபுகள் ரமழானுக்காக இப்போதிலிருந்தே குர்ஆனை ஓத ஆரம்பித்து விடுவார்கள். அது போன்று தான தர்மங்களுக்கான ஒரு பட்டியலை ஏற்பாடு செய்து நம்முடைய செல்வத்தில் எவ்வளவு அதிகம் முடியுமோ அதிலே நம்முடைய உறவுகள் தாய் தந்தையின் வழியிலே நம்முடைய சாச்சாக்களின் நம்முடைய அண்ணன் தம்பி சகோதரியின் வழியிலே இப்படியாக தேவை உள்ளவர்களை அறிந்து ரமழானுக்கு முன்பே அவர்களுக்கான ஹக்குகளை அவர்களுக்கான கடமைகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.
அது போக நம்மை சுற்றி இருக்கக்கூடிய மஸ்ஜிதுகள், மதரஸாக்கள் அங்கு இருக்கக்கூடிய ஏழைகள், வறியவர்கள், அவர்களுக்கான ஹக்குகளையும் நாம் மறந்து விடக்கூடாது. இப்படி ஒரு சிறப்பான ரமழானை அடைவதற்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/