நல்லறங்களினால் ரமழானை சிறப்பாக்குங்கள்! | Tamil Bayan - 951
நல்லறங்களினால் ரமழானை சிறப்பாக்குங்கள்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : நல்லறங்களினால் ரமழானை சிறப்பாக்குங்கள்!
வரிசை : 951
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 28-02-2025 | 28-08-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிகக் கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழி-கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்தவனாக; அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்துகளும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய அருளையும் மன்னிப்பையும் வேண்டியவனாக; மறுமையின் மகத்தான வெற்றியாகிய சொர்க்கத்தை வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக இந்த ஜுமுஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா வரக்கூடிய ரமழானை நமக்கு எளிதாக்கி தருவானாக! அமல்களைக் கொண்டு நன்மைகளைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இந்த ரமழானை நமக்கு அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக!
அல்லாஹு தஆலா அவனுடைய அடியானுக்கு வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அவன் ரஹ்மான் ரஹீம் என்பதற்கு நமக்கு அத்தாட்சிகளை காண்பித்துக் கொண்டே இருக்கிறான். அல்லாஹ்வுடைய மாபெரும் அருள்களில் மகத்தான கருணையில் ஒன்று, அவன் ஒருபோதும் தன்னுடைய அடியார்களை நிராசை அடைய செய்யவே மாட்டான்.
காரணம், அவன் ரஹ்மான், ரஹீம், கரீம், ரஊஃப் -மிக பாசத்திற்குரியவன் அல் வதூத் -அன்பிற்குரியவன். இப்படிப்பட்ட பெயர்களை தனக்கு வைத்துக் கொண்டிருக்கிற அல்லாஹு தஆலா அவன் நம்மை அழைத்துக் கொண்டே இருக்கிறான். இப்படி ஒரு ரப்பு யார் இருக்க முடியும் அவனை தவிர!
فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ
அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடி வாருங்கள். (அல்குர்ஆன் 51:50)
என்னை தவிர உங்களுக்கு எல்லாம் குழப்பம் தான். ஆபத்துதான். பிரச்சனை தான். அல்லாஹ் ஒருவன் தான் நமக்கு கார்மானம். நமக்கு நிம்மதி. நமக்கு பாதுகாப்பு.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆவின் மூலமாக தங்களுக்கு தாங்களே நினைவூட்டி உம்மத்துக்கு இந்த அறிவுரையை வழங்கினார்கள். ஒவ்வொரு நாளும் இரவிலே அவர்கள் தூங்கும் போது;
لا مَلْجَأَ ولَا مَنْجَا مِنْكَ إلَّا إلَيْكَ
யா அல்லாஹ்! உன்னிடமிருந்து நான் உன்னிடமே தவிர எங்கு ஒதுங்குவேன்? நான் எங்கு தப்பித்து செல்வேன்?. தப்பிப்பதற்கு ஒதுங்குவதற்கு உன்னை தவிர வேறு இடமே இல்லை.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 247.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அவனுடைய ரஹ்மத்தை நூறாக பிரித்து அதில் ஒன்றைத்தான் உலகப் படைப்புகளுக்கு எல்லாம் கொடுத்து இருக்கிறான் என்றால், 99 ரஹ்மத்துகளை தனக்காக விசேஷமாக வைத்திருக்கிறான் என்றால் அவன் அடியார்கள் மீது எவ்வளவு பாசம் உள்ளவனாக கருணை உள்ளவனாக இருப்பான் யோசித்துப் பாருங்கள்!
ஆனால் கை சேதம் என்ன தெரியுமா? அந்த பாசத்திற்குரிய ரஹ்மானை அந்த அன்பிற்குரிய அந்த ரஹீமை நாம்தான் அந்த பாசத்தோடு தேடுவது கிடையாது. அந்த அன்போடு பாசத்தோடு அவனை முன்னோக்குவதில்லை. தொழும்போது அவன் முன்னால் நிற்கும் போது கூட நம்முடைய உள்ளம் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறது.
அல்லாஹு தஆலா நமக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளில் எப்படி இந்த தொழுகையோ அதேபோன்றுதான் இந்த ரமழானுடைய மாதம். இந்த ரமழான் வருவதற்கு சில இரவுகளுக்கு முன்பாக சில பகல்களுக்கு முன்பாக நம்மோடு வாழ்ந்த எத்தனையோ சகோதரர்கள் சகோதரிகள் சென்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பொருந்தி கொள்வானாக! அவர்களுடைய கப்ரை அல்லாஹு தஆலா பிரகாசமாக்கி வைப்பானாக!
அல்லாஹு தஆலா யாருக்கு இந்த ரமழானை கொடுக்கிறானோ இது அவர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு. சென்ற ரமழானை விட இந்த ரமழான் எனக்கு மிக சிறப்பாக அமைய வேண்டும் என்ற தேடலும் மன உறுதியும் ஆசையும் நமக்குள் இருக்க வேண்டும்.
ஒரு உண்மையான வியாபாரி, பொருளை உணர்ந்தவர், லாபத்தை உணர்ந்தவர், செல்வத்தின் மதிப்பை அறிந்தவர் என்ன செய்வார்? சென்ற சீசனை விட இந்த சீசன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிடுவார். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சிறந்த வியாபாரம் நடக்க வேண்டும் என்பதாக அவர் ஆசைப்படுவார். தேடுவார். அதற்கான முயற்சிகளை செய்வார். திட்டங்களை வகுப்பார்.
வியாபாரத்தில் சிறந்த வியாபாரம் எது தெரியுமா? அல்லாஹ்விடத்திலே அடியான் செய்கிற புண்ணியங்கள் நன்மைகள் தான் வியாபாரத்தில் சிறந்த வியாபாரம்.
அல்லாஹு தஆலா அவனுடைய பாதையிலே ஒரு அடியான் உயிரையும் பொருளையும் செலவழித்து போருக்கு செல்லும் பொழுது அந்த போரை அல்லாஹுத்தஆலா ஒரு வியாபாரம் என்று சொல்லிக் காட்டுகின்றான்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ
கடுமையான வலி கொடுக்கக்கூடிய நரக வேதனையிலிருந்து உங்களை பாதுகாக்கும் வியாபாரத்தை நான் உங்களுக்கு சொல்லித் தரட்டுமா? என்ன தெரியுமா அது? அல்லாஹ்வின் பாதையிலே உங்களது உயிராலும் பொருளாலும் நீங்கள் ஜிஹாதுக்கு செல்வது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது. (அல்குர்ஆன் 61:10)
அது போன்று தான் சூரா ஃபாதிரியிலே அற்புதமான ஒரு வசனத்தை அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ
(அல்குர்ஆன் 35:29)
அல்லாஹ்வின் வேதத்தை அறிந்து உணர்ந்து புரிந்து ஓதக் கூடியவர்கள்.
اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ -குர்ஆனே கதி என்று இருப்பவர்கள். குர்ஆனே வாழ்க்கை என்று இருப்பவர்கள். அதை ஓதுவதிலே அவர்களுக்கு இன்பம். அதை படிப்பதிலே அதை கற்பதிலே அவர்களுக்கு ஒரு இன்பம். குர்ஆனை பற்றி பேசுவதிலே மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலே ஒரு இன்பம். இப்படி குர்ஆனோடு வாழக்கூடியவர்கள்.
இன்று எத்தனை பேர் குர்ஆனோடு தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? குர்ஆனைத் திறந்து படித்தே பலருக்கு பல மாதங்கள் ஆகி இருக்கலாம்
அல்லாஹு தஆலா தொழுகையில் குர்ஆனை ஓதுவதை மூமின்களுக்கு கட்டாயமாக ஃபர்லாக ஆக்கிவிட்டான். தொழுகையில் குர்ஆன் ஓதாமல் தொழுகை அவர்களுக்கு நிறைவேறாது.
அந்த அடிப்படையில் தான் பலருக்கு குரஆனோடு தொடர்பு இருக்கிறது என்றால் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாக இருக்காது. புரிந்திருப்பீர்கள்; தொழுகையில் ஓதக்கூடிய குர்ஆனைத் தவிர அதற்குப் பிறகு அவர்கள் குர்ஆனை திறப்பதே இல்லை. அதை ஓதுவதே படிப்பதே இல்லை. அதில் சொல்லப்பட்ட செய்திகளை தேடுவதில்லை. அதில் சொல்லப்பட்ட நேர்வழியை அறிந்து கொள்வதில்லை.
தொடர்ந்து குர்ஆனை பொருளோடு உணர்ந்து ஓதக் கூடியவர்களாக இருந்திருந்தால் இந்த குர்ஆன் நமக்கு கண்டிப்பாக பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். எப்படி ஏற்படுத்தாமல் போகும்?
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ
இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது நபியே நாம் இறக்கி இருந்தால் அந்த மலை வெடித்து சிதறி விடும் என்று அல்லாஹ் சொல்கிறானே! (அல்குர்ஆன் 59:21)
அப்பேற்பட்ட தத்துவங்களை மாற்றங்களை அதாவது கடினமான ஒன்றை உருக்கக் கூடிய ஒரு சக்தியை கொண்ட குர்ஆன் மனிதனுடைய உள்ளத்தை மாற்றாதா? மேலை நாடுகளிலே, இங்கும் கூட பலர் இஸ்லாமுக்கு வருகிறார்களே அவர்களை சந்தித்து பாருங்கள். அவர்களிடத்திலே பேசிப் பாருங்கள்.
அவர்களை இஸ்லாமை நோக்கி ஈர்த்தது எது? நம்முடைய வாழ்க்கையா? பொய் பேசக்கூடிய, ஏமாற்றக்கூடிய, தில்லுமுல்லு வேலை செய்யக்கூடிய, கடமைகளை சரியாக செய்யாத எத்தனை குற்றங்களை குழப்பங்களை நமக்குள் வைத்திருக்கிறோம்! நம்முடைய வாழ்க்கையா அவர்களை இஸ்லாமின் பக்கம் ஈர்த்தது?
நாமே இன்னும் சரியாக முஸ்லிமாக இல்லை. காலையில் முஸ்லிம் என்றால் பள்ளி வாசலில் முஸ்லிம் என்றால் பள்ளிவாசலை விட்டு வெளியே சென்றால் நமக்குள் இஸ்லாமை தேட வேண்டும். சொல்லிலே இஸ்லாம் இருக்கிறதா? பார்வையிலே இஸ்லாம் இருக்கிறதா? பேச்சிலே இஸ்லாம் இருக்கிறதா? கொடுத்த வாக்குகளிலே இஸ்லாம் இருக்கிறதா? கொடுக்கல் வாங்கலிலே இஸ்லாம் இருக்கிறதா? வாக்குகள் ஒப்பந்தங்களிலே இஸ்லாம் இருக்கிறதா? அண்டை வீட்டாரோடு நமக்கு இஸ்லாம் இருக்கிறதா? ஏன் சொந்த பெற்றோரோடு நம்மிடத்திலே இஸ்லாம் இருக்கிறதா? நம்முடைய சகோதரர்களோடு நம்மிடத்திலே இஸ்லாம் இருக்கிறதா? அது ஒரு தனியாக கழற்றி வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஏதோ நமக்கு அரபி பெயர்களை கட்டாயமாக வைத்து விட்டார்கள். சஹாபாக்களுக்கு அந்தக் காலத்து தாபியீன்களுக்கு இருந்த பெயர்களை எல்லாம் நம்மோடு பிறக்கும்போதே ஒட்டி விட்டார்கள். அது ஒன்றுதான் மிச்சமாக ஒட்டிக் கொண்டிருக்கிறதே தவிர, குணங்களில் கொடுக்கல் வாங்கலில் குடும்பத்தில் நட்பில் எதைக் கொண்டு என்னிடத்தில் இஸ்லாம் இருக்கிறது என்று நாம் பெருமை பேச முடியும்!? அல்லாஹ் மன்னிப்பானாக!
இன்று, இஸ்லாத்திற்கு வரக்கூடிய பலரிடத்திலே பேசினால் ஒவ்வொருவரும் ஒரு வசனத்தை எடுத்து வைக்கிறார்கள். ஸுப்ஹானல்லாஹ்! இந்த வசனத்தை படித்தேன்; உணர்ந்தேன். இந்த வசனத்தை படித்தேன் சிந்தித்தேன் இஸ்லாமை ஏற்று கொண்டேன் என்று.
ஒரு வசனம் ஒரு மனிதரை பிறப்பிலிருந்து எவ்வளவு காலம் வரை குஃப்ரிலே இருந்த ஒரு மனிதரை மாற்றுகிறது என்றால் கண்டிப்பாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒருவனை எப்படி இந்த வசனம் மாற்றாமல் இருக்கும்?! அந்தத் தேடலோடு அந்த தக்வாவோடு படித்தால் கண்டிப்பாக மாற்றும்.
ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
(அல்குர்ஆன் 2:2)
அந்த இறையச்சத்தோடு இந்த குர்ஆனை தொடும்பொழுது யா அல்லாஹ் இந்த குர்ஆனை கொண்டு எனக்கு நேர்வழி காட்டு! இந்த குர்ஆனை கொண்டு என்னுடைய உள்ளத்தை பிரகாசப்படுத்து! இந்த குர்ஆனை கொண்டு எனக்கு உள்ளச்சத்தை ஈமானை ஏற்படுத்து! என்ற துஆவோடு இந்த குர்ஆனை நாம் அணுகினால் கண்டிப்பாக இந்தக் குர்ஆன் நமக்கு வழிகாட்டும்.
சூரா ஃபாத்தீர் உடைய அந்த வசனத்திற்கு மீண்டும் செல்வோம். அல்லாஹ் சொல்கிறான்:
اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ
யார் இந்த வேதத்தை ஓதுகின்றார்களோ, யார் தொழுகையை நிலை நிறுத்துகிறார்களோ, நாம் அவர்களுக்கு கொடுத்ததில் இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ இவர்கள் எத்தகையவர்கள் தெரியுமா? அழியாத நஷ்டமே ஏற்படாத மிகப்பெரிய ஒரு வியாபாரத்தை இவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். (அல்குர்ஆன் 35:29)
இன்றைக்கு பலர் ராத்திரியில தூங்கும் பொழுது இன்னைக்கு ஸஹர் என்ன என்பதை சிந்தித்துக்கொண்டு தான் தூங்குறோமே தவிர, சஹர் உணவு மிஸ் ஆயிடக் கூடாது; சஹர் உணவு பரக்கத் என்ற ஹதீஸ் எல்லாம் ஞாபகத்துக்கு வரும். நமக்கு சாதகமா என்னென்ன ஹதீஸ் இருக்கோ அதெல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணிடுவோம்.
அதேபோலத்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவு வணக்கத்தை பற்றி சொன்னார்கள். ரமழானிலே நீண்ட நேரம் தொழுங்கள் என்று சொன்னார்கள். ரமழானிலே குர்ஆனை அதிகமாக ஓதுங்கள் என்று சொன்னார்கள். கருமித்தனத்தை பயப்படாமல் தாராளமாக தான தர்மங்களை செய்யுங்கள் என்று சொன்னார்கள்.
அதெல்லாம் அப்படியே ஸ்கிப் பண்ணிடுவோம். நமக்கு சாதகமா எங்க ஹதீஸ் வருதோ அத அப்படியே புடிச்சுக்குவோம். ஸஹரை பற்றி இருக்கக்கூடிய கவலை தஹஜ்ஜத்தை பற்றி இருக்கிறதா?
اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ
(சொர்க்கத்திற்கு தகுதியான) அவர்கள் பொறுமையாளர்களாக, உண்மையாளர்களாக, (இறைவனுக்கு) பணிந்தவர்களாக, தர்மம் செய்பவர்களாக, இரவின் இறுதிகளில் மன்னிப்புக் கோருபவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 3:17)
சஹர் நேரத்திலே உணவு மட்டுமா நமக்கு வணக்கம்? சஹர் நேரத்திலே அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்பு தேடி உட்கார வேண்டும் என்பதும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இல்லையா? குர்ஆனுடைய வழிகாட்டுதல் இல்லையா? அதை மறந்து விடுவோம்.
அது மட்டுமா? அந்த இரவு தொழுகை நம்முடைய முந்தைய இரவில் தொழக்கூடிய தொழுகை மட்டுமல்ல, அந்தப் பிந்திய இரவு அல்லாஹ் இறங்கி வந்து அல்லாஹு தஆலா அடியார் இடத்திலே கேட்கிறான்; மற்ற மாதங்களை விட ரமழான் உடைய மாதம் இரவுத் தொழுகைக்காகவே உள்ள மாதம்.
ஆகவேதான் அந்த உணர்வு அந்த நிய்யத் நமக்கு ரொம்ப முக்கியம். ரமழானில் நோன்பு வைப்பது என்பது அந்த ஈமான் நம்பிக்கையோடு விசுவாசத்தோடு இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக நான் பசித்திருக்கிறேன் அந்தப் பசியை உணரும் அளவுக்கு தான் நம்முடைய ஸஹருடைய உணவு இருக்க வேண்டும்.
கொஞ்சம் சிரமம் இருக்கும்தான். கடின உழைப்பாளிகள், வெயிலிலே அதிகமாக சுற்றக்கூடியவர்கள், கடினமான சிரமமான வேலை செய்யக்கூடியவர்கள் அவர்கள் அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ப உணவு சாப்பிடுவதிலே தவறு கிடையாது. மயக்கம் ஏற்படாத அளவிற்கு தனது உள்ளத்திலே பலவீனம் ஏற்படாத அளவிற்கு.
ஆனால், ருசிக்காக வேண்டி பசியே நமக்கு தெரியக்கூடாது என்பதற்காக வேண்டி பல வகையான உணவுகளையும் அதிகமான உணவுகளையும் எடுத்துக் கொள்கிறோமே. அது எப்படி அல்லாஹ்விடத்திலே ஈமானுடைய நோன்பாக ஆகும்?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இந்த நோன்பை கொண்டு இஹ்திஸாப் நன்மையை தேடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த அந்த நன்மைக்காக நோன்பிருங்கள். இது சடங்குகள் அல்ல.
مَن قَامَ رَمَضَانَ إيمَانًا واحْتِسَابًا، غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ
யார் ரமழானிலே ஈமானோடு இஃதிசாபோடு விசுவாசத்தோடு நம்பிக்கையோடு நன்மையை எதிர்பார்த்து இரவிலே நிற்பாரோ நின்று வணங்குவாரோ (அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய வாக்கை கவனியுங்கள்) அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
எப்பேற்பட்ட பாக்கியமிக்க மாதம் இது. அல்லாஹுத்தஆலா நமக்கு இதை அடையக்கூடிய அதை முழுமைப்படுத்த கூடிய நற்பாக்கியத்தை தருவானாக!
ஒரு ரமழானில் இருந்து இன்னொரு ரமழான் வரை நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கக்கூடியது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 233.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஷாபான் மாதம் வந்துவிட்டாலே ஷாபானுடைய பிறையை அவர்கள் என்ன ஆரம்பித்து விடுவார்கள்.
أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ
ரமழானுக்காக வேண்டி ஷாபானுடைய பிறையை இப்போதே நீங்கள் எண்ண ஆரம்பித்து விடுங்கள்.
இன்று ஷாபானுடைய பிறை பிறந்து விட்டது. ஒன்று அடுத்து இரண்டு மூன்று இப்படியாக ஷாபானை எத்தனை பிறை என்பதை அல்லாஹ்வுடைய தூதர் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். கடைசியாக 29 வரும் பொழுது அடுத்த நாள் பிறையைத் தேடுங்கள் என்று சொல்வார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 687.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தெளிவான வழிகாட்டுதல். ரமழான் உடைய முக்கியமான அமல்களிலே ஒன்று என்ன? ஷாபானுடைய பிறையை எண்ணிக் கொண்டு இருப்பது. ரமழானுக்காக வேண்டி.
பிறகு ரமழானின் பிறையை பார்ப்பது.
صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ
ரமழானுடைய பிறையை பார்த்து ரமழானின் நோன்பை ஆரம்பம் செய்யுங்கள். பிறையை பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிறையை பார்க்காத வரை நோன்பை ஆரம்பிக்காதீர்கள். பிறையை பார்க்காத வரை அல்லது மாதத்தை பூர்த்தி செய்யாதவரை நோன்பை முடிக்காதீர்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1909.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இமாம்கள், ரமழான் மாதம் என்று ஆரம்பிக்கும் போதே அத்தனை ஹதீஸ் கிதாபுகளிலும் முதலாவதாக இந்த ஹதீஸை தான் பதிவு செய்வார்கள். அதற்கு பிறகு தான் மற்ற ஹதீஸ் காலண்டரிலே முடிவு செய்யப்பட்ட அந்த தேதிகளைக் கொண்டு நோன்பை ஆரம்பிக்க முடியாது.
பிறையை பார்க்க வேண்டும். அல்லது பார்த்தவர்களின் சாட்சி நமக்கு வேண்டுமே தவிர முடிவு செய்யப்பட்ட தேதிகளைக் கொண்டு நாம் நம்முடைய பெருநாளை கொண்டாட முடியாது. நம்முடைய நோன்பை ஆரம்பிக்க முடியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழானுக்காக அப்பேற்பட்ட ஒரு ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். ரமழானுடைய வருகையை பற்றி அது பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய மாதம் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய தோழர்களுக்கு ஆர்வமூட்டுவார்கள்.
அல்லாஹு தஆலா நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறான் இந்த ரமழானை அடைவதற்கு. இதிலும் கூட நாம் சொல்ல முடியாது இன்றைய பிறையை பார்க்கின்ற வரை நோன்பு நோற்கின்ற வரை எத்தனை பேர் இருப்போம் என்பதாக. ஏனென்றால் திடீர் மரணங்கள் மறுமையின் அடையாளங்களிலே ஒன்று. அது அதிகமாகிவிட்ட காலத்திலே இருக்கிறோம்.
ஒரு ஆலிம் அவர்கள் ஒரு குறிப்பிலே சொன்னார்கள். முந்தைய காலங்களில் எல்லாம் வயதானவர்கள் வயதாகி விட்டால் அப்போதுதான் மரணம் வரும் என்பதாக பேசிக்கொள்வார்கள்.
ஆனால், இன்று வயதானவர்களை விட வாலிபர்களின் மரணம் அதிகமாகிவிட்டதை பார்க்கிறோம். வயதாகி விட்டது. அதற்கு பிறகு கண்டிப்பாக மரணம் என்பதே வேறு ஒரு பேச்சு கிடையாது. ஆனால், வாலிபர்களின் மரணம் அதிகமாகி விட்டதை பார்க்கிறோம். இது மறுமையின் அடையாளங்களிலே ஒன்று.
அல்லாஹ்வுடைய அடியார்களே! இந்த ரமழான் நமக்கு ஒரு சிறப்பான ரமழான் ஆக அமைய வேண்டும். இந்த ரமழான் அல்லாஹ்வின் பக்கம் முந்தைய ரமழானை விட அதிக நன்மைகளைக் கொண்டு நாம் நெருங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்.
எதுவரை நாம் நமக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்ய மாட்டோமோ அதுவரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு மாற்றங்கள் வராது.
அடியான் உறுதி கொள்ள வேண்டும். அதற்கு தான் நிய்யத் அவசியம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு அழகாக சொன்னார்கள்:
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
அமல்கள் எல்லாம் எண்ணங்களை கொண்டு தான்.
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1.
உன்னுடைய எண்ணத்தை தூய்மைப்படுத்து. வெறும் அதாவது தொழும் பொழுது நான் அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் என்ற நிய்யத்து வைப்பது மட்டுமல்ல. முதலாவது நான் தொழ வேண்டும் என்ற நிய்யத் வேண்டும். அந்த தொழுகை சிறப்பாக நான் தொழ வேண்டும் என்று நிய்யத் வேண்டும். அது தொழுகைக்கு வெளியிலே தொழுகையுடைய நேரம் வருவதற்கு முன்பு.
ஆகவேதான் நீங்கள் பாருங்கள்; யார் தொழுகையிலே அலட்சியம் செய்கிறார்களோ யார் தொழுகையை கவனம் இல்லாமல் இருக்கிறார்களோ அதற்கு என்ன காரணம் அவர்களுக்கு தொழுகையை பற்றிய அந்த நிய்யத்தே இருப்பதில்லை.
எப்படி நேரம் வந்தால் சாப்பிட வேண்டும்; நேரம் வந்தால் தூங்க வேண்டும் என்ற அந்த ஒரு நிய்யத்து இருப்பதைப் போன்று இப்போது ஜுமுஆ தொழும் பொழுதே அடுத்து நான் அஸர் எங்கே தொழுவேன்? எனக்கு வெளியில் வேலை இருக்கிறதா? அடுத்த அஸருடைய தொழுகை எப்போது? அது வருவதற்கு முன் கூட்டியே நான் என்ன பிளானிங் என்ன ஏற்பாடு செய்ய வேண்டும்? அந்தத் தேடல் இருக்க வேண்டும். அவர்கள் தான் தொழுகையாளிகள். அதுதான் தொழுகையை நிலை நிறுத்துவது.
ஏன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். எத்தனை ஹதீஸ்கள்! ஒரு தொழுகைக்குப் பிறகு இன்னொரு தொழுகையை எதிர்பார்த்து இருப்பது என்று சொன்னார்கள்.
இன்று ஜுமுஆவுடைய தொழுகையை கூட எதிர்பார்க்காதவர்கள் இருக்கிறார்கள். ஜும்ஆவுடைய தொழுகையை கூட அந்த தொழுகையை எதிர்பார்க்காமல் ஜுமுஆவுடைய தொழுகைக்கு தாமதமாக வரக்கூடியவர்கள்.
எப்படி எல்லாம் தாமதமாக வருவார்கள். இந்த பள்ளியில அரை மணி நேரம் இமாம் சாப் குத்பா ஓதுவார். இந்தப் பள்ளியில இத்தனை மணிக்கு தொழுகை ஆரம்பிப்பாங்க. அதை கணக்கு பண்ணி எவ்வளவு குறைவான நேரம் அதுக்குள்ளார செலவு பண்ண முடியுமோ அந்த ரெண்டு ரக்அத் கிடைக்கிற அளவுக்கு அது போதுமுங்க நமக்கு. அந்த ரெண்டு ரக்அத் கிடைச்சுச்சுனா போதும். கடைசியில் ஒரு அஞ்சு நிமிஷம் வந்து உட்கார்ந்தோம் என்றால் குத்துபா கிடைச்சிடுச்சு. இப்படி எல்லாம் திட்டமிடக் கூடியவர்கள்.
ஒரு முஸ்லிம் ஒரு மஸ்ஜிதுக்கு வரும் பொழுது அவன் அவமானப்படக்கூடாது. ஏதோ ஒரு ஜும்ஆவுக்கு லேட்டாக குத்பா ஆரம்பித்ததற்குப் பிறகு வந்து விட்டான். ஒவ்வொரு ஜும்மாவுக்கும் ஒரு மனிதன் குத்பா ஆரம்பித்ததற்குப் பிறகு உள்ளே வருகிறான் என்றால் அவன் என்ன வகையான ஈமானை உணர்ந்திருக்கிறான்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய வழிகாட்டுதல் என்ன? குர்ஆனுடைய வழிகாட்டுதல் என்ன?
اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
நீங்கள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதற்கு முன்பே உங்கள் வியாபாரத்தை விட்டுவிட்டு குத்பாவுக்காக வாருங்கள் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. (அல்குர்ஆன் 62:9)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த அதானுக்குப் பிறகு வியாபாரத்தில் ஈடுபடுவதை வேறு வேலைகளில் ஈடுபடுவதை ஹராம் ஆக்கினார்கள்.
பலருக்கு ஜுமுஆ குத்பா பயான் அந்த பிரசங்கம் என்பது ஒரு பொருட்டே கிடையாது. நேரத்தை கணக்கு பண்ணி உள்ளே வருவது. இது எப்படி ஜும்ஆவாக ஏற்றுக் கொள்ளப்படும்!
அதற்கு தான் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு குத்பா தவறி விடக்கூடாது என்று முதலாவது ஒரு பாங்கை ஏற்படுத்தினார்கள்,.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள். ஜும்ஆவுக்கு விரைந்து செல்லுங்கள். எப்பொழுது இமாம் மிம்பரிலே ஏறி விடுவார்களோ மலக்குகள் தங்களுடைய பதிவேட்டை மூடி வைத்துவிட்டு குத்துபா கேட்பதற்காக உட்கார்ந்து விடுவார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 929.
புரிய முடியவில்லை. எந்த வகையான முஸ்லிம்கள்? குழந்தைகளா? சிறுவர்களா? வயதுக்கு வராதவர்களா? பருவ வயதை அடையாதவர்களா? விளையாட்டுப் பிள்ளைகளா? எப்படி தொடர்ந்து ஒவ்வொரு குத்பாவுக்கும் இமாம் குத்பாவிலே ஏறியதற்கு பிறகு ஒரு முஸ்லிமால் பள்ளிக்கு வர முடிகிறது? அப்ப இந்த அலட்சியம் இருக்குமேயானால் அவர் உள்ளத்திலே மற்ற ஐந்து நேர தொழுகைகளை எப்படி அவர் நிறைவேற்றுவார்?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ
அந்த முஸ்லிம் மறுமையிலே அல்லாஹ்வுடைய நிழலிலே இருப்பார். அவருடைய கல்பு அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே தொங்கவிடப்பட்டிருக்கும். எங்கே சென்றாலும் மஸ்ஜித்திற்கு செல்ல வேண்டும், தொழ வேண்டும், தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்த கவனத்திலே ஒட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருக்கும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.
அல்லாஹ்வின் அடியார்களே! ரமழானை பயன்படுத்துவது என்பது இதற்காக நமது வீடுகளை அலங்கரிப்பதோ, அதிகப்படியான உணவுகளை வாங்கி குமிப்பதோ, ஆடம்பரமான உணவுகளை வாங்குவதோ அல்லது விளக்குகளை கொண்டு ஆபரணங்களை கொண்டு வீடுகளையும் மஸ்ஜிதுகளையும் அலங்கரிப்பதைக் கொண்டோ அல்ல.
சகோதரர்களே! இதெல்லாம் நம்முடைய சந்தோஷத்திற்கு. அல்லாஹு தஆலா இதை கொண்டு சந்தோஷப்படவே மாட்டான். இதற்கும் அல்லாஹ்விற்கும் நம்முடைய மார்க்கத்திற்கும் சம்பந்தமே இல்லை.
அல்லாஹு தஆலா எதை கொண்டு சந்தோஷப்படுவான்? என்னுடைய நபி ரமழானை எப்படி நோற்றார்கள்? அவர்களுடைய தொழுகையை பார்! அவர்களுடைய நோன்பை பார்! அவர்களுடைய தர்மத்தை பார்!
நம்முடைய உறவுகளுக்கு கொடுத்து மகிழ்வதற்காக உள்ள மாதம் இந்த மாதம். நம்மை சுற்றியுள்ள ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களை அதிகப்படுத்தி அவர்களுடைய கடன்களை அடைப்பதற்கு அவர்களுடைய சிரமங்களை போக்குவதற்கு இந்த உம்மத்திலே அவர்கள் தனியாக கைவிடப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர்த்துவதற்கு. அல்லாஹ் கொடுத்த செல்வத்தை எனக்கு மட்டும் பதுக்கிக் கொள்ளக்கூடிய கருமி இல்லை நான்.
யா அல்லாஹ் இந்த செல்வத்தைக் கொண்டு உன்னை எப்படி திருப்திப்படுத்துகிறேன் பார் என்று அல்லாஹ்விற்கு முன்னால் நம்முடைய ஈமானை வெளிப்படுத்தக் கூடிய மாதம் இது. யா அல்லாஹ் இந்த செல்வத்தின் மீது எனக்கு இருக்கக்கூடிய அன்பை விட நீ என்னை நேசிக்க வேண்டும் என்ற அந்த அன்பின் தேடல் எனக்கு அதிகமானது.
எத்தனை இடங்களில் அல்லாஹ் சொல்கிறான்! ஈமானுடைய மூமின்களுடைய தர்மத்தை அல்லாஹ் சொல்லும் பொழுது, அவர்கள் தர்மம் செய்வார்கள் எப்படி தெரியுமா?
وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ
அந்த காசு அந்த பணம் அந்த செல்வத்தின் மீது அவர்களுக்கு ஆசை இருந்தும் கூட, அதை அவர்கள் கொடுப்பார்கள். (அல்குர்ஆன் 2:177)
அல்லாஹ்வுடைய , ரஹ்மானுடைய அன்புக்காக வேண்டி. நாளை மறுமையிலே கொழுந்துவிட்டு எரியக்கூடிய நரக நெருப்பின் ஜுவாலையை அணைக்க கூடியது தர்மத்தை விட சிறந்தது ஒன்றுமில்லை.
எவ்வளவு தூரம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தர்மத்தை கொண்டு சென்றார்கள் பாருங்கள்!
இங்கு நாம் எப்படி ஒரு லட்சம் இருந்தால் கூட, அதிலிருந்து நூறை ஆயிரத்தை கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கோடி இருந்தால் ஒரு லட்சத்தை கொடுப்பதற்கு நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தர்மத்தை எந்த அளவு கொண்டு சென்றார்கள்!
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
உங்களிடத்திலே ஒரே ஒரு பேரித்த பழம் இருந்தாலும் அதில் பாதியை தர்மம் செய்துவிட்டு உண்ணுங்கள். நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1417.
إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ
ரப்புடைய கோபத்தை இந்த சதக்கா அணைத்து விடுகிறது என்ற அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 664.
அன்பான சகோதரர்களே! ரமழானை சிறப்பிப்பது என்பது ஈதுக்காக ஆடைகளை வாங்குவதை கொண்டு அல்ல. பல வகையான உணவுகளை வைத்து இஃப்தார் பார்ட்டி நடத்துவதை கொண்டு அல்ல. இஃப்தார் விருந்து ஸஹர் விருந்து என்று சுற்றுவதற்காக அல்ல. ஆடம்பரங்கள் செய்வதற்காக அல்ல. பெருமை பேசுவதற்காக அல்ல. அல்லாஹ்வுடைய அடியார்களை அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காக. அல்லாஹ்வுடைய ஏழையான தேவையுள்ள அடியார்களை மகிழ்விப்பதற்காக கொடுக்கப்பட்ட மாதம் இது.
அல்லாஹ்வை மகிழ்விப்பது எதைக் கொண்டு? அல்லாஹ் எந்த மாதத்தில் இந்த குர்ஆனை இறக்கினானோ அதுபற்றி பெருமையாக சொல்கிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ
(அல்குர்ஆன் 2:185)
வசனத்தின் கருத்து : இந்த ரமழானில் குர்ஆன் இறக்கப்பட்டது. சாதாரணமாக சொல்லவில்லை உங்களுக்கு நேர்வழி காட்டியான குர்ஆன் நீங்கள் தேடக்கூடிய சத்தியத்திற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய குர்ஆன் நீங்கள் தேடக்கூடிய நேர்வழிக்கான அத்தாட்சிகளை உள்ளடக்கிய குர்ஆன் இந்த மாதத்தில் தான் உங்களுக்கு கொடுக்கப்பட்டது. நீங்கள் இதற்கு நன்றி செலுத்த இந்த ரமழான் மாதத்திலே நோன்பு வையுங்கள்.
இந்த குர்ஆனை கொண்டு என்னை மாற்ற வேண்டும். அதற்கு குர்ஆனை திருத்தமாக ஓதுவது. அதனுடைய கருத்துக்களை படிப்பது. இரவு நேரங்கள் கண்டிப்பாக நமக்கு எப்படி சிரமம் இல்லாமல் இருக்கும்? பகலெல்லாம் வேலை செய்கிறோம். ஓய்வெடுப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றையும் அல்லாஹ்வுடைய அந்த அன்புக்காக மறுமைக்காக என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அல்லாஹ்வுடைய என்னுடைய ரப்பை விட்டு தூரமாக இருக்கிற நான் என்னுடைய ரப்பிடத்திலே நெருங்குவதற்காக இந்த சிரமங்களை தாங்கிக்கொள்கிறேன்.
சகோதரர்களே! குறைந்தது மூன்று நாள் சிரமப்பட்டு அந்த கியாமுல் லைலை உங்களுடைய நஃப்ஸை கட்டுப்படுத்தி தொழுது பாருங்கள்! நான்காவது நாள் உங்களுக்கு சிரமமே தெரியாது.
நாம் எப்படி? முதல் நாளே எந்தப் பள்ளியில் ரொம்பவும் குறைவான நேரத்துல தொழுகை நடத்துவாங்க என்று கணக்கு போட்டு, பார்த்து அதுலயும் கூட இஷா தொழுகைக்கு போகாம, அதுலயும் கூட அந்த தராவிஹ்ல முதல் ரெண்டு ரக்அத்துல இரண்டாவது ரக்அத்துல போக முடியுமா என்று கணக்குப் போட்டுக்கிட்டு போறது.
இப்படி இருந்தால் எப்படி அந்த கியாமுல் லைல் உடைய ருசி எப்படி தெரியும்? யோசித்துப் பாருங்கள்! இபாதத்துடைய ருசி யாருக்கு தெரியும்?
என்னுடைய ரப்புக்காக நான் சிரமப்பட போகிறேன். என்னுடைய ரப்புக்காக இன்று என் கால் வலியை நான் உணரப் போகிறேன். என்னுடைய ரபுக்காக என்னுடைய முதுகு வலியை நான் உணர போகிறேன். பசியோடு வலியோடு தாகத்தோடு நான் நிற்பதை என்னுடைய ரப் பார்த்து மகிழ வேண்டும். இதன் பொருட்டால் எனது பாவங்களை அவன் மன்னிக்க வேண்டும். அந்தத் தேடலோடு யார் நிற்பார்களோ அவர்களுக்கு கியாமுல் லைல் லேசாக இருக்கும்.
அல்லாஹ்வுடைய தூதர் கால் கடுக்க கால் வலிக்க கால் வலியால் நின்று விட்டு காலையிலே தன்னுடைய மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவை சந்திக்கும்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதறிப் போய் கேட்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதரே இப்படி கால் வீங்கி விட்டதே இந்த அளவு நீங்கள் இருக்க வேண்டுமா? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்கும் போது, ஒரே ஒரு வார்த்தை சொன்னார்கள்:
أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا
முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் தான். நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 81.
யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே! நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கே நாம் எவ்வளவு இபாதத்துகள் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அல்லாஹ்வுடைய நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துவதை பற்றி யோசித்துப் பாருங்கள்!
ஆகவே, வரக்கூடிய இந்த ரமழானை முந்தைய ரமழானை விட சிறப்பாக்க வேண்டும். அதற்கான அமல்களுக்கு அல்லாஹ்விடத்திலே துஆ செய்ய வேண்டும். நிய்யத் வைக்க வேண்டும். இந்த ரமழானிலே என்னுடைய சஹர் இஃப்தாருக்காக நான் அதிகம் சிரமப்பட மாட்டேன். கிடைத்த உணவுகளைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வேன். அளவான உணவைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வேன். எளிமையான உணவை கொண்டு போதுமாக்கிக் கொள்வேன்.
பிறகு என்னுடைய அதிகமான நேரங்களை குர்ஆன் ஓதுவதிலே ஈடுபடுவேன். நஃபிலான தொழுகையிலே ஈடுபடுவேன். இரவுத் தொழுகையை தவறாமல் தொழுவேன். முழுமையாக தொழுவேன்.
அதுபோன்று என்னால் முடிந்த அளவு ஜகாத் போக அதிகப்படியான தான தர்மங்களை செய்வேன் என்று நிய்யத் வைக்க வேண்டும். அதற்காக அல்லாஹ்விடத்திலே துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் எனக்கு இந்த இபாதத்துக்களை எளிதாக்கி கொடு! என்று அல்லாஹ்விடத்தில் வேண்ட வேண்டும். கண்டிப்பாக அல்லாஹு தஆலா யார் அல்லாஹ்வை முன்னோக்குகிறார்களோ அவர்களை அவன் அணைத்துக் கொள்கிறான். யார் அல்லாஹ்விடத்திலே நன்மைகளை கேட்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹு தஆலா நன்மைகளை கொடுக்கின்றான்.
அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது பாவங்களை மன்னித்து, இந்த ரமழானை மிக சிறப்பான முறையில் அல்லாஹ்வை வணங்குவதற்கு அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வழிகளில் அல்லாஹ்வை நெருங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/