HOME      Khutba      அல்குர்ஆனுடன் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 954   
 

அல்குர்ஆனுடன் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 954

           

அல்குர்ஆனுடன் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 954


அல்குர்ஆனுடன் ஒதுங்குவோம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆனுடன் ஒதுங்குவோம்!
 
வரிசை : 954
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 07-03-2025 | 28-08-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிகக் கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழி-கட்டுப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று துஆ செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் மறுமையின் மகத்தான வெற்றியையும் சொர்க்கத்தையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ  தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய பெற்றோரை நம்முடைய குடும்பத்தார்களை நம்முடைய நண்பர்கள் மூமின்கள் முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா மன்னித்தருள்வானாக! அல்லாஹ் நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹ்வை நோக்கி முன்னேறுவதற்கு அமல்களில் ஆர்வம் கொள்வதற்கு அல்லாஹு தஆலா நமக்கு தௌஃபீக் செய்வானாக! ஆமீன்.
 
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் மாதம் நோன்புக்காகவும் குர்ஆனுக்காகவும், தொழுகைக்காகவும், தர்மத்திற்காகவும் கொடுக்கப்பட்ட மாதம். இப்படி ரமழான் வந்து சென்று கொண்டே இருக்கிறது. நாம் எந்த அளவு இந்த ரமழானால் பயனடைந்தோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அந்த மறுமையின் பயணத்தை ஆரம்பிக்கும் போது தான் நமக்கு தெரியும். அந்த மறுமையின் பயணம் யாருக்கு எப்போது வரும் என்று சொல்லிக் கொண்டு வராது. திடீரென்று வரக்கூடிய அந்த அழைப்பாளர் அனுமதி கேட்காமல் வருவார். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வருவார். 
 
சகோதரர்களே! அதற்காகத்தான் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தக்வா என்றால் என்ன? என்று தக்வா உடைய விளக்கத்தை. கேட்கப்பட்டது;. மிக அழகாக சொன்னார்கள்: 
 
குர்ஆனை கொண்டு அமல் செய்வது; பயண நாளுக்காக தயாரிப்போடு இருப்பது. 
 
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடத்தில் இஸ்திஃபார் செய்வ.து. காலையில் எழும்போது அல்லாஹ்வை புகழ்ந்து, அன்றைய தினம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுடைய தூதருக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு துஆ செய்து, அமல்களை சரியாக செய்வதற்கு துஆ செய்து அந்த நாளை ஆரம்பிப்பது. 
 
ஒவ்வொரு நாளும் இப்படி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு, தவ்பா, இஸ்திஃபார், துஆ, அமல்களிலே தேடல், அமல்களிலே ஆர்வம் என்று யார் இருக்கின்றார்களோ (அல்ஹம்து லில்லாஹ்) அவர்கள் ரொம்ப பாக்கியம் பெற்றவர்கள். 
 
செல்வம் கூடுவதால் இன்று சந்தோஷம் அடைகிறோம். அமல்கள் கூடுவதால் தான் நமக்கு உண்மையான சந்தோஷம் இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய நெருக்கம் கூடுவதால் நமக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். நம்முடைய வணக்க வழிபாட்டிலே நமக்கு எந்த அளவுக்கு மனம் ஓர்மையாகிறது; நாம் எந்த அளவுக்கு அந்த மன ஓர்மையோடு இறையச்சத்தோடு ஆர்வத்தோடு அந்த இபாதத்துகளிலே ஈடுபடுகிறோம் என்பதைக் கொண்டு நமக்கு மனமகிழ்ச்சி இருக்க வேண்டும்.
 
சகோதரர்களே! எத்தனை முறை நாம் கேள்விப்படுகிறோம். என்றைக்காவது இதற்காக நாம் ஒரு சுய பரிசோதனை செய்தோமா? அல்லது ஒரு முயற்சி செய்தோமா? அல்லாஹ்விடத்திலே இதற்காக உட்கார்ந்து அழுது துஆ கேட்டோமா? 
 
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே வருகிறார்கள். ஒரு மாணவராக அமர்கிறார்கள். தன்னுடைய முட்டுக் கால்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முட்டுக் காலோடு சேர்த்து வைத்து, கைகளை தொடையிலே அமைதியாக வைத்துக்கொண்டு, அடக்கமாக மார்க்கத்தைப் பற்றி எனக்கு சொல்லித் தாருங்கள்! ஈமானை பற்றி சொல்லித் தாருங்கள்! இஸ்லாமை பற்றி சொல்லித் தாருங்கள்! இஹ்சானை பற்றி சொல்லித் தாருங்கள் என்று கேட்கிறார்கள். 
 
(இஹ்சான் என்றால் மனதை சுத்தப்படுத்துவது. உனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இருக்கக்கூடிய அந்த உறவை நீ அழகுப்படுத்திக் கொள்வது. சரி செய்து கொள்வது.) 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ
 
நீ அவனுக்கு முன்னால் இபாதத்திலே நின்று விட்டால்  நீ அவனை பார்ப்பது போன்று ஈமானிய உணர்வு உனக்குள் வர வேண்டும். நீ அவனை பார்க்கவில்லை என்றாலும் கூட அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 50.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான், அல்லாஹ்வோடு, அல்குர்ஆனோடு, மார்க்கம் சொல்லக்கூடிய ஈமானிய பண்புகள் உள்ளத்தை பக்குவப்படுத்துகின்ற நற்குணங்களோடு ஒதுங்குவதற்கு அதைப்பற்றி சிந்திப்பதற்கு நமக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும். 
 
உண்ணல் பருகுதலை விட்டும் நாம் நீங்கி இருக்கின்ற காரணத்தால் நம்முடைய உள்ளம் இறையச்சத்தை கொண்டு பக்குவப்படுத்துவதற்கு மிகவும் மிருதுவானதாக இலகுவானதாக இருக்கும். 
 
சைத்தான்கள் விலங்கிடப்படுவதால் நம்முடைய தொழுகையில் நம்முடைய கவனத்தைக் கொண்டு வருவதற்கு உள்ளத்தால் ஈமானிய உணர்வுகளோடு ஒதுங்குவதற்கு அல்குர்ஆனிய சிந்தனைகளோடு அல்குர்ஆனுடைய போதனைகளோடு ஒதுங்குவதற்கு, அல்லாஹ்வுடைய விசேஷமான ரஹ்மத்துக்கள் இறங்குகின்ற இந்த ரமழான் மிக பொருத்தமான மாதம். 
 
ஆனால், சகோதரர்களே! இதற்கு நமக்குள் ஒரு தேடல் இருக்க வேண்டும். நாம் எத்தனை நாள் தொழுது கொண்டே இருக்கிறோம். ஒரு  தொழுகையில் இப்படிப்பட்ட ஈமானிய உணர்வு, அல்லாஹ் என்னை பார்ப்பதை போன்று ஒரு பயம் ஏற்பட்டு ஒரு நடுக்கம் வருகிறதா?
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 
 
إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ
 
நீ தொழும்போது உன்னை உனது குடும்பத்தினர் வழி அனுப்பி வைக்கிறார்கள், உனது குடும்பத்தினர் அனைவருக்கும் பயணம் சொல்லிவிட்டு மறுமையின் பயணத்துக்கு நீ செல்கிறாயே அப்படிப்பட்ட தொழுகையாக உனது தொழுகையை ஆக்கிக் கொள் என்று சொன்னார்களே. 
 
அறிவிப்பாளர் : அபூ ஐயூப் அல் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4171.
 
அந்த ஈமானிய தக்வா உடைய உணர்வு நமக்கு பிறக்கிறதா? இப்படி ஒவ்வொரு சிந்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையின் மூலமாக ஐந்து நேரம் ஃபர்ளான தொழுகைகள் போக, ரமழானுடைய மாதத்திலே இரவுத் தொழுகையை நமக்கு ஆர்வமூட்டினான். 
 
இந்த இரவு தொழுகை என்பது ஒரு சடங்கு அல்ல. எந்த ஒரு இபாதத்தும் அர்த்தம் புரியாமல் ஈமானிய தக்குவா உடைய உணர்வுகளைக் கொண்டு வராமல் செய்யப்பட கூடிய சடங்காகி விடக்கூடாது. 
 
நம்முடைய மார்க்கத்திற்கும் மனிதர்கள் உருவாக்கிய ஏனைய மதங்களுக்கும் சமயங்களுக்கும் மத்தியிலே வித்தியாசம் என்ன? அவர்களிடத்தில் எல்லாம் சடங்குகள், சம்பிரதாயங்கள். நம்மிடத்திலே எல்லாம் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஞானத்தின் அடிப்படையில் ஈமானுக்காக, தக்வாவுக்காக, நல்லொழுக்கத்திற்காக, இறை நெருக்கதிற்காக, உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்காக, பாவமன்னிப்புக்காக, நம்மை நாமே திருத்திக் கொள்வதற்காக செய்யப்படக்கூடிய உண்மையான இறை வழிபாடுகள். உண்மையான ஆன்மீகம். 
 
அதாவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்தக்கூடிய முறையில் கண்ணியப்படுத்தப்படக்கூடிய வணக்க வழிபாடுகள். அல்லாஹ்விற்கும் பிடித்தமான வணக்கங்கள். யாரை வணங்குகிறோமோ அந்த ரப் சொல்லிக் கொடுத்த வணக்கங்கள் நம்முடைய வணக்க வழிபாடுகள். 
 
மனிதர்களின் சிந்தனையில் உருவானது அல்ல. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுத்து கற்பனைகளால் சடங்குகளால் மூடநம்பிக்கைகளால் உருவாக்கப்பட்ட சடங்குகள் அல்ல. சம்பிரதாயங்கள் அல்ல. 
 
ரப்புல் ஆலமீன் அர்ஷுடைய இறைவன் லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்கிறோம் அல்லவா, அந்த அல்லாஹ்வை அடியார்கள் வணங்குவதற்காக வகுத்து கொடுத்த, வழிகாட்டிய, வேதங்களை இறக்கி கொடுத்த வழிபாடுகள் அற்புதமானவை. ஒவ்வொன்றும் சுத்தமானவை. ஆரோக்கியமானவை. கண்ணியமானவை. புனிதமானவை. நேர்மையானவை மனிதனை பக்குவப்படுத்தக் கூடியவை. 
 
ஆனால், சகோதரர்களே! நாம் அதை பற்றி சிந்திப்பது இல்லை. உணர்வதில்லை. அதற்கு நம்மிடத்திலே நேரமில்லை. நம்முடைய நேரமெல்லாம் பொருளாதார வாழ்க்கையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இரவு தொழுகை, இன்று சடங்காக பல இடங்களில் ஆக்கப்பட்டு விட்டது. ஏதோ இவ்வளவு ஓத வேண்டும்; நாம் அங்கே கைகட்டி இருக்க வேண்டும்; அதற்கு பிறகு ஏதாவது ஒரு பயான்; அதற்குப் பிறகு அவ்வளவு தான் முடிந்தது. 
 
இல்லை சகோதரர்களே! தொழுகையிலே ஓதப்படக் கூடிய குர்ஆன் வசனங்கள் சிந்திப்பதற்காக உணர்வதற்காக. இன்று இமாம் என்ன ஓதுகிறார் என்பதை தெரிந்து கொண்டு அந்த மஸ்ஜிதிற்கு செல்ல வேண்டும். அதனுடைய வாக்கியங்களை படித்து அதனுடைய பொருள்களை உணர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். இமாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலின் பொருளோடு நம்முடைய மனதை அப்படியே தொடர்பு படுத்த வேண்டும். அந்த குர்ஆனோடு நாம் அப்படியே ஒதுங்கி விட வேண்டும். 
 
அல்லாஹ்வைப் பற்றி, சொர்க்கத்தைப் பற்றி, மறுமையை பற்றி, நரகத்தைப் பற்றி, மூமின்களை பற்றி, குஃப்பார்களை பற்றி, நபிமார்களை பற்றி, அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய அந்த செய்திகள் எவ்வளவு மகத்தான செய்திகள்! அந்த செய்திகளை காதால் கேட்க கேட்க நாம் படித்த அந்த அர்த்தங்களோடு நம்முடைய உள்ளத்தை தொடர்பு படுத்த அதன் மூலமாக உள்ளத்திலே மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டது இந்த கியாமுல்லைல் இரவுத்தொழுகை. 
 
இந்த ரமழானுடைய பகலிலே நோன்பு இருந்து நஃப்சை அடக்கி, இச்சையை அடக்கி, உணவின் தேவையை குறைத்து இந்த நஃப்சை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருப்பது. பிறகு, அந்த பரிசுத்தமான நஃப்ஸோடு நோன்பு நோற்று துஆ செய்து இஸ்திஃபார் செய்து பரிசுத்தமாகி விட்டு அந்த நஃப்ஸோடு வந்து நிற்பது. 
 
பலருடைய சிந்தனை எப்படி இருக்கிறது? சில நிர்பந்தங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஈமான் அந்த நிர்பந்தங்களை மிகைக்க வேண்டும். 
 
இன்று, பொதுவாக முஸ்லிம் அல்லாத ஊர்களில் நாடுகளிலே வசிக்கக்கூடிய நாம் பல இடங்களிலே வேலை செய்பவர்களாக பணி செய்பவர்களாக. வேலை அழுத்தங்கள் பணி சுமைகள். இன்னும் பல விதமான நிர்பந்தங்கள். அதனால் ஏற்படக்கூடிய களைப்புகள். சோர்வுகள் எல்லாம் இருக்கலாம். 
 
ஆனால், இவை அனைத்தையும் ஈமானிய சக்தியை கொண்டு ஈமானிய உணர்வை கொண்டு அதற்கான ஒரு திட்டத்தை வகுத்து நாம் இந்த நஃப்ஸின் மீது கண்ட்ரோல் செய்து அந்த ஈமானிய உணர்வுகளைக் கொண்டு வருவதற்கு அந்த ஈமானிய தேடல்களை நமக்குள் கொண்டு வருவதற்கு அந்த நஃப்ஸை ஆயத்தப்படுத்த வேண்டும். 
 
எந்த ஒன்றுமே நாம் திட்டமிடவில்லை என்றால் அது நடக்காது. அதை நோக்கி அதை இலக்காக வைத்து நாம் பயணிக்கவில்லை என்றால் அதை நாம் அடைய முடியாது. போனது போறபடி போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றால் எதுவும் கை கூடாது. அதை குறிக்கோளாக வைக்க வேண்டும். 
 
அல்லாஹு தஆலா கண்ணியத்திற்குரிய தோழர்கள் சஹாபாக்களை பற்றி சொல்லும் பொழுது;
 
يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا
 
(அல்குர்ஆன் 48:29)
 
அல்லாஹுத்தஆலா நபித்தோழர்களை எங்கெல்லாம் வர்ணிக்கிறானோ அவர்களுடைய நிய்யத், அவர்களுடைய தேடல், அவர்களுடைய ஆசை, அவர்களுடைய தீரா பற்று, அவர்களுடைய கொள்கை, அவர்களுடைய நோக்கத்தை பற்றி சொல்கிறான். அல்லாஹ்வுடைய பொருத்தம் அல்லாஹ்வுடைய மன்னிப்பு அல்லாஹ்வுடைய அருள் அதையே அவர்கள் தேடிக் கொண்டிருப்பார்கள். 
 
சகோதரர்களே! சஹாபாக்களில் ஒரு சாதாரண சிறுவனுடைய உள்ளத்தில் இருந்த தேடல் அந்த ஈமான் ஆசை அல்லாஹ்வை முன்னோக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வு அவர்களை அல்லாஹ்விடத்திலே கொண்டு போய் சேர்த்தது. இபாதத்தை லேசாக்கி கொடுத்தது. ஜிஹாதை லேசாக்கி கொடுத்தது. 
 
கை துண்டிக்கப்பட்ட, கால்கள் துண்டிக்கப்பட்ட, முடமான நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போக வேண்டும்; ஷஹீதாக வேண்டும். அதாவது மனிதர்கள் இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை பார்த்திருக்க முடியாது. ரப்புக்காக மறுமைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து இயங்கிய ஒரு கூட்டம். அவர்களுடைய உள்ளத்தில் இருந்த தேடலோடு அவர்கள் ஒன்றியது. 
 
இந்த இரவுத் தொழுகை என்பதும் குர்ஆன் என்பதும் ஏதோ ரமழான் மாதத்தில் செய்யப்படக்கூடிய சடங்காக நினைத்து விடாதீர்கள்! இந்த தொழுகையோடு நாம் ஒதுங்க வேண்டும். அதில் ஓதப்படக்கூடிய குர்ஆனோடு ஒதுங்க வேண்டும். 
 
அழகாக ஓதுவதை கேட்டு ரசித்து விட்டு காதுக்கு மட்டும் இனிமையாக இருந்தது செவிக்கு இனிமையாக இருந்தது ஆஹா கேட்டோம் நல்ல அமைதியாக இருந்தது என்று பாராட்டுவதற்காக அல்ல. 
 
கண்டிப்பாக குர்ஆன் அழகிய குரலோடு ஓதப்படுவது அது நமக்கு இனிமையை தரும். செவிக்கு இன்பத்தை தரும். ஆனால், அதற்கெல்லாம் மேலாக அது நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும். ஹிதாயத்தை கொண்டு வர வேண்டும். தக்வாவை கொண்டு வர வேண்டும். 
 
அல்லாஹு தஆலா இந்த சூரா அர்ரஃது 19 ஆவது வசனத்திலிருந்து 25 ஆவது வசனம் வரை சொல்லக்கூடிய அந்த செய்தியை படித்து பாருங்கள். சுருக்கமாக உங்களுக்கு சொல்கிறேன் அல்லாஹு தஆலா கேட்கிறான். 
 
நம்பிக்கை கொண்ட மூமின்கள் யார்? இந்த குர்ஆனை நம்பிக்கை கொண்டவர்கள். நபியே உங்களுக்கு இறக்கப்பட்ட இந்த குர்ஆனை உண்மை என்று புரிந்தவர்களும் குருடர்களும் சமமாவார்களா? 
 
அல்லாஹ் கேட்கிறான்; யார் இந்த வேதத்தை அல்குர்ஆனை நம்பவில்லையோ அல்குர்ஆனை படிக்கவில்லையோ சிந்திக்கவில்லையோ அவர்களை அல்லாஹ் குருடர்கள் என்று சொல்கிறான். யார் இந்த வேதத்தை நம்பினார்களோ அவர்களைப் பார்வை உள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ كَمَنْ هُوَ اَعْمٰى اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ‏
 
(அல்குர்ஆன் 13:19)
 
குருடர்கள் மட்டும் அல்ல, செவிடர்களும் கூட, அவர்கள் ஊமைகளும் கூட. 
 
அல்லாஹு தஆலா கொடுத்த இந்த அற்புதமான சக்தியை கொண்டு அல்லாஹ்வுடைய வேதத்தை படிக்காதவர்கள் உணராதவர்கள். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சக்திகளைக் கொண்டு என்ன பலன் அடைந்தார்கள்? இந்த உலகத்திலே அல்லாஹுவை அறியாமல் அல்லாஹ்வுடைய வேதத்தை அறியாமல் ஒருவன் இறந்து விட்டால் அவன் இந்த உலகத்திலே எவ்வளவுதான் சாதித்து இருந்தாலும், எத்தனை கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருந்தாலும், அவனுடைய அறிவை திறமையை கண்டுபிடிப்பை உலகமெல்லாம் மெச்சினாலும் சரி, நாளை கப்ருக்கு சென்ற உடனேயே மலக்குகளுடைய சம்மட்டி அடிகளுக்கு அவள் ஆளாக வேண்டும். கப்ர் அவனை நெருக்கிவிடும். நரக நெருப்பின் குண்டமாக அந்த கப்ர் அவனுக்கு ஆகிவிடும். 
 
சாதாரண பாமரனாக எளியவனாக வாழ்ந்த ஒரு மூஃமின் மறுமைக்கு சென்றால் கப்ருக்கு சென்றால் அங்கே வானவர்கள் வரவேற்பார்கள். சொர்க்கத்தின் விரிப்புகள் விரிக்கப்படும். கப்ர் விசாலமாக்கப்பட்டுவிடும். சொர்க்கப் பூங்காவாக ஆக்கப்பட்டுவிடும். சிந்தித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ் கேட்கிறான்; குருடனும் இந்த குர்ஆனை நம்பியவரும் சமமாவாரா? புத்தி உள்ளவர்களே சிந்திக்க மாட்டீர்களா?
 
اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَـقُّ كَمَنْ هُوَ اَعْمٰى اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ‏
 
(அல்குர்ஆன் 13:19)
 
அறிவு இருந்தால் சிந்திப்பீர்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்: அந்த மூமின்கள் யார் தெரியுமா? அவர்களுடைய பண்பை அல்லாஹ் சொல்கிறான். 
 
الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ‏
 
(அல்குர்ஆன் 13:20)
 
அல்லாஹ்வுடைய வாக்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். 
 
பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வுடைய பெயரைக் கூறி தங்களுக்கு மத்தியிலே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள் தங்களுக்கு மத்தியிலே ஒருவர் மற்றவருக்கு கொடுக்கக்கூடிய வாக்குகளை நிறைவேற்றுவார்கள். ஒப்பந்தத்தை மீற மாட்டார்கள். வாக்குகளை மீற மாட்டார்கள். 
 
மூமின்கள் குர்ஆனை நம்பிக்கை கொண்ட சமுதாயம் எப்படி இருக்கும் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
 
இன்று சகோதரர் சகோதரனுக்கு கொடுத்த வாக்கை மீறி விடுகிறான். சகோதரன் சகோதரனிடத்திலே செய்த ஒப்பந்தத்தை மீறி விடுகிறான். தந்தைக்கு கொடுத்த வாக்கை மீறி விடுகிறான். தாய்க்கு கொடுத்த வாக்கை மீறி விடுகிறான். இந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ்வுடைய ரஹ்மத்து எப்படி இறங்கும்? 
 
முஸ்லிம்கள் தொழுகையைக் கொண்டு மட்டும் அடையாளம் காணப்பட மாட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுடைய ஒப்பந்த பேணுதலை கொண்டு அடையாளம் காணப்படுவார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَ يَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِ‏
 
ரத்த உறவுகளை சொந்த பந்தங்களை சேர்த்து வாழ்வார்கள். (அல்குர்ஆன் 13:21)
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு மகன் தனது தாய் தந்தையின் உறவை முறிக்கக் கூடிய சமூகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ் பாதுகாப்பானாக! தாயின் வெறுப்பை தந்தையின் வெறுப்பை சம்பாதிக்க கூடிய பிள்ளைகள் அதிகமாகி விட்டார்கள். சகோதரனை எதிரியாக பார்க்கக்கூடிய சமூகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்கும்? எப்படி அல்லாஹ்வுடைய உதவி நமக்கு வரும்? எப்படி நம்முடைய துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இந்தக் குர்ஆனை கேட்பவர்களாக உணர்பவர்களாக இதை நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்கிறோம் என்று எப்படி சொல்ல முடியும்? அதனுடைய அடையாளங்கள் நம்மிடத்திலே இல்லையே! 
 
அல்லாஹ் சொல்கிறான்; மூமின்கள் யார்? ஒவ்வொரு விஷயத்திலும் ரப்பை பயப்படுவார்கள். அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் இடையிலும் அல்லாஹ்வை பயப்படுவார்கள். அடியானுக்கும் அடியானுக்கும் இடையில் உள்ள உறவுகளிலும் அல்லாஹ்வை பயப்படுவார்கள். தனது சொல்லால் தனது பார்வையால் கூட பிறரை காயப்படுத்தி விடக் கூடாது என்று பயப்படுவார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
. بحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أنْ يَحْقِرَ أخاهُ المُسْلِمَ
 
ஒரு மனிதன் கெட்டவன் தீயவன் என்பதற்கு போதும் அவன் தனது சகோதரனை கேவலமாக அற்பமாக பார்ப்பது. அல்லாஹ் பாதுகாப்பானாக இன்று சிலருக்கு செல்வம் வந்துவிட்டால் கல்வி கூடிவிட்டால் பதவி கிடைத்து விட்டால் பிறரை கேவலமாக அற்பமாக பார்க்கிறார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.
 
ஆடைகளைக் கொண்டு, தொழில்களை கொண்டு, சமூகத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த தகுதியைக் கொண்டு மக்களை மதிப்பவர்கள் ஏளனமாக பார்ப்பவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள். 
 
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அப்படி இருந்ததில்லை. ஈமானை கொண்டு தக்வாவை கொண்டு மார்க்கப்பற்றை கொண்டு அவர்கள் கண்ணியப்படுத்தப்பட்டார்கள். இன்று செல்வந்தர்களுக்கு சமூகத்திலே சபைகளிலே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மார்க்கப்பற்றுள்ள ஏழைகள் மார்க்கத்தை பேணக்கூடிய முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்; அவர்கள் அல்லாஹ்வுடைய கடினமான விசாரணையை பயந்து கொண்டு இருப்பார்கள்.
 
وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ 
 
அவர்கள் யார் மார்க்கத்தில் உறுதியாக இருப்பார்கள். பொறுமையாக இருப்பார்கள். சகித்துக் கொள்வார்கள். எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்தவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 13:22)
 
அல்லாஹ் சொல்கிறான்; அவர்கள்  தங்களுடைய ரப்புடைய முகத்தை மட்டுமே தேடிக் கொண்டிருப்பார்கள். 
 
அல்லாஹு அக்பர்! இன்று சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அழகிய முகம் அவனுடைய பொருத்தம், யா அல்லாஹ் நீ என்னை பொருந்தி கொள்ள வேண்டும் என்று அந்த ஈமானிய உணர்வுகளே நமக்குள் வருவதற்கு வெகு தொலைவில் நாம் இருக்கிறோம்.
 
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌‏ وَلَسَوْفَ يَرْضٰى‏
 
(அல்குர்ஆன் 92:19-21)
 
அபூ பக்ரை பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அள்ளி அள்ளி கொடுத்தார்கள். எதிர்பார்க்காமல் கொடுத்தார்கள். கேட்கப்பட்டது இப்படி பலவீனமான அடிமைகளை உரிமை இடுகிறாயே? அப்படியே உரிமை இடுவதாக இருந்தாலும் நல்ல திடகாத்திரமான பலமான சமூக அந்தஸ்துள்ள அடிமைகளை உரிமை இட்டால் அவர்கள் நாளை உனக்கு ஒரு பிரச்சனை என்றால் துணை நிற்பார்கள் என்று சொன்னார்கள். 
 
அபூபக்கர், நான் இவர்களிடத்தில் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்து நான் உரிமை இடவில்லை அல்லாஹ் என்னுடைய ரப்புடைய திருமுகத்திற்காக உரிமை இடுகிறேன் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு அபூபக்கருடைய வாசகம் அவ்வளவு பிடித்தம் ஆகிவிட்டது அல்குர்ஆனிலே சொல்லிக் காட்டுகின்றான். 
 
இன்று, நம்முடைய தர்மங்களிலும் அல்லாஹ்வுடைய திருமுகம் காணப்படுவதில்லை. நம்முடைய தொழுகையிலும் அல்லாஹ்வுடைய திருமுகங்கள் நாடப்படுவதில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக! முகஸ்துதிகளின் காலத்திலே நாம் இருக்கிறோம். வெளிப்படுத்துவதின் காலத்திலே நாம் இருக்கிறோம். அமல்களை மறைத்து மனத்தூய்மையோடு அல்லாஹுக்காக செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும். 
 
அல்லாஹ் சொல்கிறான்; அந்த மூமின்கள் யார் தெரியுமா? அந்த புத்தி உள்ளவர்கள் யார் தெரியுமா? குர்ஆனோடு ஒதுங்கியவர்கள் குர்ஆனோடு வாழக்கூடியவர்கள் யார் தெரியுமா? 
 
وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤٮِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ‏
 
(அல்குர்ஆன் 13:22)
 
அல்லாஹ் எப்படி அமைக்கிறான் பாருங்கள்! நாம் அவர்களுக்கு கொடுத்ததிலிருந்து வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள். ரகசியமாகவும் தர்மம் செய்வார்கள். நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பார்கள். 
 
ஒருவன் கெட்ட வார்த்தையை பேசியதால் அதே கெட்ட வார்த்தையை திருப்பி சொல்ல மாட்டார்கள். هداك الله -அல்லாஹ் உனக்கு நேர் வழி காட்டுவானாக! عفا الله عنك -அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக என்று அழகிய துஆக்களை அழகிய வார்த்தைகளை சொல்லி கடந்து செல்வார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்; இவர்கள் அல்லவா மூமின்கள். இவர்களுக்கு அல்லவா மறுமையின் வெற்றி இருக்கிறது. அல்லாஹ் சொல்கிறான்; அந்த மறுமையின் மகத்தான வெற்றி என்ன தெரியுமா? எந்த சொர்க்கத்தை அல்லாஹ் தனது வலது கரத்தால் படைத்தானோ அந்த அதன் என்ற சொர்க்கம் அவர்களுக்காக உண்டு. அதிலே ஒரு சொர்க்கம் அல்ல, ஒரு தோட்டம் அல்ல. 
 
جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ‌ وَالْمَلٰٓٮِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ‌‏
 
(அல்குர்ஆன் 13:23)
 
அதிலே பல தோட்டங்கள் அவர்களுக்கு கிடைக்கும். இலகுவாக அந்த சொர்க்கத்திலே அவர்கள் செல்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, தங்களுடைய மூமினான மூதாதைகளையும் கொண்டு செல்வார்கள். தங்களுடைய மூமினான மனைவி மக்களை கொண்டு செல்வார்கள். தங்களுடைய சந்ததிகளையும் கொண்டு செல்வார்கள். 
 
அவர்களுக்காக சொர்க்கத்திலே வெயிட்டர்கள் இருப்பார்கள். யார் அவர்கள்? அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத அல்லாஹ்வை சதா துதித்து கொண்டு இருக்க கூடிய மலக்குகள் வருவார்கள். அவர்களை வரவேற்பதற்காக வாழ்த்து சொல்வதற்காக. 
 
سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ‌ فَنِعْمَ عُقْبَى الدَّارِ‏
 
(அல்குர்ஆன் 13:24)
 
உங்களுடைய உறுதியின் காரணமாக உங்களுடைய பொறுமையின் காரணமாக அல்லாஹ்வுடைய சாந்தி சமாதானம் ஈடேற்றம் உங்களுக்கு கிடைக்கட்டும்!
 
மக்கள் எல்லாம் மார்க்கத்தை விட்டு விலகிக் கொண்டிருக்கும்போது நீங்கள் மார்க்கத்தை பற்றிப்பிடித்தீர்கள். மக்கள் எல்லாம் இபாதத்துகளை புறக்கணித்து விட்டு கேளிக்கைகளில் வேடிக்கைகளில் ஆபாசங்களின் மூழ்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹுவே கதி என்று அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். மக்கள் எல்லாம் தங்களது துன்யாவுக்காக ஆடம்பர வாழ்க்கைக்காக செலவு செய்து கொண்டிருந்தபோது நீங்கள் மார்க்கத்தை பின்பற்றுவதற்காக மார்க்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக செலவு செய்தீர்கள். நீங்கள் வந்திருக்கக்கூடிய சொர்க்கத்தின் வீடு இந்த முடிவு உங்களுக்கு சிறந்த முடிவு. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனோடு சிந்திக்க வேண்டும். ஓதப்படக்கூடிய குர்ஆனுடைய வசனங்கள் செவியை மட்டும் நமக்கு இனிமையாக்கினால் போதாது. நம்முடைய கல்பை தக்வாவை கொண்டு நிரப்ப வேண்டும். நம்முடைய கல்வி ஈமானிய உணர்வுகளை கொண்டு வர வேண்டும். அல்லாஹ்வோடு நம்மை நெருக்கமாக வேண்டும். மறுமையின் உலகத்திற்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். 
 
அதனால் தான் கண்ணியத்திற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சஹாபாக்கள் குர்ஆனை தொழுகையிலே ஓதி விட்டால் வெளியிலே என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது. அப்படியே அதோடு ஒதுங்கி விடுவார்கள். 
 
இன்று குர்ஆனின் வார்த்தை ஒரு பக்கம் அதனுடைய சொல் ஒரு பக்கம் அதனுடைய கருத்து ஒரு பக்கம் மொழியை தெரியாமல் நாம் ஒரு பக்கம் இருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மை சீர்திருத்தம் செய்வானாக! 
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! நோன்பை கொண்டு நம்முடைய நஃப்ஸை பக்குவப்படுத்துகின்ற அதே நேரத்தில் இந்த குர்ஆனை சிந்திப்பதைக் கொண்டு, தொழுகையிலே நம்முடைய மனதை ஒருமைப்படுத்துவதைக் கொண்டு, இந்த குர்ஆனுடைய போதனைகளை நம்முடைய வாழ்க்கையிலே எடுத்து நடப்பதைக் கொண்டு, இந்த குர்ஆனுடைய உண்மையான பரக்கத்துகளை ரஹ்மத்துகளை நாம் அடைய பெறுவோமாக! அல்லாஹு தஆலா நமக்கு அதற்கு எளிதாக்கி தருவானாக! அல்லாஹு தஆலா நம்மை பொருந்தி கொள்வானாக! ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/