HOME      Khutba      நன்மைகளில் முதன்மையானவர்! | Tamil Bayan - 955   
 

நன்மைகளில் முதன்மையானவர்! | Tamil Bayan - 955

           

நன்மைகளில் முதன்மையானவர்! | Tamil Bayan - 955


நன்மைகளில் முதன்மையானவர்!!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நன்மைகளில் முதன்மையானவர்!!
 
வரிசை : 955
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 14-03-2025 | 14-09-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத் தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய இறுதி தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக! உபதேசம் செய்தவனாக! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மறுமையின் மகத்தான நற்பாக்கியத்தை வேண்டியவனாக! இந்த உலக வாழ்க்கையில் மறுமைக்காக பயன்படுத்தக்கூடிய தவ்ஃபீக்கை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! அல்லாஹுத்தஆலா நம்மை பொருந்தி கொள்வானாக! நம்முடைய உயிராலும் பொருளாலும் அல்லாஹுவை நெருங்குவதற்குரிய வழிகளை தேடுவதற்கு, நன்மைகளை அதிகமதிகம் செய்வதற்கு அல்லாஹுத்தஆலா நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்! 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா அல்குர்ஆனுடைய 35 வது அத்தியாயம் சூரா ஃபாதிர் 32 வது வசனத்திலே ஒரு மகத்தான செய்தியை நமக்கு சொல்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! குறிப்பாக இந்த ரமழான் மாதம் குர்ஆனை சிந்திப்பதற்காக குர்ஆனுடைய நேர்வழியை பெறுவதற்காக அந்த நேர்வழியில் நம்மை நடத்துவதற்காக ஒரு பயிற்சிக்குரிய மாதம் தான் இந்த ரமழான் மாதம். 
 
வெறும் அதனுடைய வாசகங்களை மட்டும் ஓதி கடந்து சென்று விடாதீர்கள். தொழுகையில் ஓதப்படக்கூடிய வசனங்கள் பிறகு நீங்கள் உங்களுடைய ஓய்வு நேரங்களில் குர்ஆனை ஓதும் போதும் நீங்கள் கடந்து செல்கிற வசனங்கள் அங்கே கொஞ்சம் தாமதித்து நில்லுங்கள்! சிந்தியுங்கள்! 
 
அந்த வசனங்களின் பொருள்களை உங்களுக்கு இலகுவான தமிழாக்கத்திலே அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புகளிலே தேடுங்கள்! அதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்! 
 
அன்பான சகோதரர்களே! இன்று இந்த வசனத்தை நான் கொஞ்சம் பார்ப்போம். அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: நபிமார்களை கூறியதற்கு பிறகு; அந்த நபிமார்களின் சமுதாயத்தை சொன்னதற்கு பிறகு. 
 
அல்லாஹுத்தஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களுக்கு எல்லாம் இமாமாக நபிமார்களின் இறுதி முத்திரையாக நமக்கு அனுப்பப்பட்ட அந்த தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சமுதாய(உம்ம)த்தைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான். 
 
சகோதரர்களே! நாம் மூமினாக இருப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தில் ஒருவராக இருப்பது அல்லாஹுத்தஆலா நம் மீது அருளிய மிகப்பெரிய நற்பாக்கியங்களிலே ஒன்று. மாபெரும் நிஃமத் 
 
நமக்கு நபியாக அல்லாஹுத்தஆலா அவனுடைய இறுதி இறை தூதர், இந்த இறைத்தூதரை விட நெருக்கமானவர் பாசமானவர் அல்லாஹ்விடத்தில் வேறு யாருமில்லை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தூதரை நமக்கு தந்தான், அந்த தூதருடைய சமுதாய(உம்ம)த்திலே அல்லாஹுத்தஆலா நம்மை படைத்தான். 
 
அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்! 
 
ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
 
பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும். (அல்குர்ஆன் 35:32)
 
முந்திய வேதங்களில் இறக்கப்பட்ட ஞானங்கள் கல்விகள் அதில் சொல்லப்பட்ட அத்தனை தூய்மையான செய்திகளையும் இந்த குர்ஆனிலே நாம் இறக்கி இந்த குர்ஆனிலே நாம் அதை பூர்த்தி செய்தோம். இந்த வேதத்தையும் முந்திய வேதங்களையும் சொந்தம் கொண்டாடுவதற்கு அதை நம்பிக்கை கொள்வதற்கு நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை உரிமை உள்ளவர்களாக தகுதியுள்ளவர்களாக நாம் ஆக்கினோம். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா நபியின் சமுதாய(உம்ம)த்தை இங்கே குறிப்பிடுகிறான். முந்திய மக்கள் அந்த வேதங்கள் இறக்கப்பட்ட போது நிராகரித்தார்கள். அதில் குழப்பங்களை செய்தார்கள். மாற்றினார்கள். சிலவற்றை நம்பிக்கை கொண்டார்கள். சிலவற்றை பின்னால் தூக்கி எறிந்தார்கள். 
 
ஆனால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய உம்மத்தாகிய நாம் தவ்ராத்தை முழுமையாக நம்பிக்கை கொள்கிறோம். யூதர்கள் தவ்ராத்தை முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. மாற்றப்பட்ட குழப்பம் செய்யப்பட்ட ஏடுகளாக பிரிக்கப்பட்டதைத்தான் அவர்கள் ஏற்கிறார்களே தவிர முழு தவ்ராத்தை அல்ல. 
 
அது போன்று தான் நஸரானிகள் முழு இன்ஜீலை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. அவர்களுக்கு விருப்பமானதை ஏற்பார்கள். அவர்களுக்கு பாதகமானதை தூக்கி எறிந்து விடுவார்கள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய உம்மத்தாகிய நாம் முழு தவ்ராத்தையும் முழு இன்ஜீலையும் முழு ஃபுற்கானையும் அவையனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நேர்வழியாக ஒளியாக இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வேதங்கள் என்று நம்பிக்கை கொள்கிறோம். அந்த வேதங்களை நம்பிக்கை கொள்ளக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்தான். எத்தனை மகத்தான பாக்கியம் பாருங்கள்!
 
சொல்கிறான்: நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அந்த வேதங்களை நம்பிக்கை கொள்ளக்கூடிய பாக்கியத்தை கொடுத்தோம். 
 
அன்பான சகோதரர்களே! இந்த குர்ஆன் கொடுக்கப்பட்ட சமுதாய(உம்ம)த்தில் நாம் பிறந்திருப்பதே அல்லாஹ் நம் மீது விசேஷமான ஒரு அன்பை ஒரு அருளை வைத்திருக்கிறான் என்பதற்கான அடையாளம். 
 
உங்களுக்கு இருக்கக்கூடிய சமூக நிலையை கவனித்து பொருளாதாரத்தை வைத்து அல்லாஹ்வின் மீது உண்டான, அல்லாஹ்விற்கு உங்கள் மீது உண்டான அன்பை அளந்து விடாதீர்கள்! 
 
ஒரு அடியான் ஏழையாக இருப்பதால், சிரமத்தில் இருப்பதால், வறுமையில் இருப்பதால், பிரச்சனைகளில் இருப்பதால் அவன் அல்லாஹ்விடம் இருந்து தூரமாக இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்கள்! 
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா கொடுத்திருக்கக் கூடிய இந்த குர்ஆன் கொடுக்கப்பட்ட உம்மத்திலே நாம் பிறந்திருப்பது இந்த குர்ஆன் உண்மைப்படுத்தும் வேதங்களை எல்லாம் நம்பிக்கை கொள்ளக்கூடிய உண்மையான அந்த உம்மத்திலே நாம் பிறந்திருப்பது அல்லாஹ் நம் மீது வைத்திருக்கக்கூடிய அன்பின் வெளிப்பாடு. 
 
விசேஷமான ஒன்றை கொடுப்பதற்கு நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?  உங்களுக்கு ஒருவர் மீது அன்பு இல்லாமல் விசேஷமான ஒரு ஈடுபாடு இல்லாமல் ஒன்றை தேர்வு செய்து கொடுக்க மாட்டீர்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான் நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இந்த வேதங்களை நம்பிக்கை கொள்ளக் கூடிய பாக்கியத்தை கொடுத்தோம். 
 
இங்கே இன்னொரு செய்தியையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான அந்த உறுதியான ஈமான் யக்கீன் அல்லாஹ்வோடு அடியான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அந்த நெருக்கம், பாசம், அந்த ஈடுபாடு உள்ளம் சார்ந்த அந்த அல்லாஹ்வை முன்னோக்கி இருத்தல், இவை எல்லாம் அல்லாஹ்வுடைய வேதம் இல்லாமல் நிறைவேறாது. 
 
குர்ஆனை ஓதுவதில் அதை சிந்திப்பதில் அதை படிப்பதில் அதை பிரச்சாரம் செய்வதில் அந்த குர்ஆனை கொண்டு மகிழ்ச்சி அடைவதில் யார் எந்த அளவுக்கு ஈடுபாடு உடையவராக இருக்கிறாரோ குர்ஆனோடு தொடர்புடையவராக இருக்கிறாரோ அவர் அந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய நெருக்கம் பெற்றவராக ஆகுவார். 
 
அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹ்வுடைய ஃபழ்ல் அல்லாஹ்வுடைய விசேஷமான கிருபை விசேஷமான ரஹ்மத் அல்லாஹ்வுடைய குர்ஆனிலே இருக்கிறது. நீங்கள் குர்ஆனை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். 
 
மக்கள் சேர்க்கக்கூடிய சேமித்து வைக்கக்கூடிய செல்வங்களை விட அவர்கள் இந்த குர்ஆனை சேர்ப்பது இந்த குர்ஆனோடு அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஈமானிய உறவு அதுதான் மிகச் சிறந்தது என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ரமழான் மாதம் அதற்கு  மிகப் பெரிய ஒரு வாய்ப்பான மாதம். ஆனால், அந்தோ பரிதாபம்! நம்முடைய நிலைமை எப்படி மார்க்கத்தில் எல்லா விஷயங்களையும் சடங்குகளாக ஆக்கி வெறும் பெயர்களாக வைத்திருக்கிறோமோ அப்படித்தான் இந்த குர்ஆனுடைய தொடர்புக்காக நமக்கு கொடுக்கப்பட்ட இரவு தொழுகையையும் நாம் ஆக்கிவிட்டோம். 
 
இரவு தொழுகை எதற்காக கொடுக்கப்பட்டது? அது வெறும் தொழுகை மட்டுமல்ல, அந்தத் தொழுகையில் குர்ஆனோடு இந்த உம்மத்தை தொடர்புப்படுத்துவதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய வணக்கம் தான் அந்த இரவு தொழுகை. ஆனால் சடங்குகளாக ஓதப்பட்டு சிந்திக்கப்படாமல் கடந்து செல்லக்கூடிய அவசர அவசரமாக கேட்டுவிட்டு செல்லக்கூடிய குறைவான அளவோடு போதுமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு தொழுகையாக இரவு தொழுகை நாம் ஆக்கி வைத்திருக்கிறோம் என்றால் இது நம்முடைய துர்பாக்கியம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! 
 
சகோதரர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் முதல் மூன்று நாள்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழ வைத்தார்களே. எப்படிப்பட்ட இரவு தொழுகையை தொழ வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது முடித்ததற்குப் பிறகு சஹர் உணவை நோக்கி ஓடினார்கள். சஹர் சாப்பிட்டு முடித்தார்கள். அங்கே பஜருக்கு அதான் சொல்லப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண்: 1327.
 
அந்த அளவு அவர்களுடைய இரவு தொழுகை இருந்தது. கண்ணியத்திற்குரிய தோழர்கள் சொல்லுகிறார்கள்: எங்களுக்கு ஒருவர் இரண்டு ரக்அத்திலே சூரத்துல் பகராவோடு நிறுத்திக் கொள்வாரேயானால் அவர் எங்களுக்கு குறைவாக தொழ வைத்திருக்கிறார் என்று எங்களுக்கு பூரிப்பாக இருக்கும். 
 
இன்று சூரத்துல் பகராவை மூன்று நாள்கள் ஓதிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு நாளில் இரண்டு ரக்அத்தில் சூரத்துல் பகராவை அதாவது சூரத்துல் பகராவுக்கு மேல அதிகமாக ஆலு இம்ரானை இரண்டாவது ரக்அத்தில் ஆரம்பிக்காமல் அந்த இரண்டு ரக்அத்தை சூரத்துல் பகராவோடு நிறுத்திக் கொண்டால் இன்றைக்கு இமாம் கொஞ்சம் தொழுகையை லேசாக்கிட்டாரு; சுருக்கிட்டார் ;என்று சொல்லி சஹாபாக்கள் தாபியீன்கள் சொல்லுவார்கள். 
 
நம்முடைய நிலைமை என்ன? மூன்று நாள் ஆகிவிடுகிறது. சில நாடுகளிலே நான் சென்று வந்ததை சொல்கிறேன் 10 நாள் குறைந்தது சூரத்துல் பகராவை முடிப்பது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அன்பான சகோதரர்களே! விஷயத்திற்கு வருவோம். அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்  குர்ஆன் கொடுக்கப்பட்ட உம்மத் இந்த உம்மத் எப்படி இருக்கிறார்கள்? அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! இந்த உம்மத்திலே சிலர் பாவங்கள் செய்து அநியாயங்கள் செய்து குற்றங்கள் செய்து அல்லாஹ்வை மறந்து மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து அநியாயக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். குர்ஆன் கொடுக்கப்பட்ட பிறகு இப்பேற்பட்ட பாக்கியம் கொடுக்கப்பட்ட பிறகு இந்த முஹம்மதுடைய உம்மத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படைக்கப்பட்ட பிறகு மகத்தான நேர்வழியின் ஞானத்தின் வேதம் கொடுக்கப்பட்ட பிறகு கூட அவர்கள் பாவம் செய்கிறார்கள்; அல்லாஹ்வின் கட்டளைகளை அலட்சியம் செய்கிறார்கள்; நஃப்சை பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வின் கடமைகளை மறந்து விடுகிறார்கள். 
 
அடுத்து இரண்டாவது ஒரு கூட்டத்தை அல்லாஹ் சொல்கிறான். இரண்டாவது கூட்டம் அமல் செய்கிறார்கள். நன்மைகளை செய்கிறார்கள். மார்க்கத்தில் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள். நடுத்தரமானவர்கள் அவ்வளவுதான். 
 
மூன்றாவது ஒரு கூட்டத்தை அல்லாஹ் சொல்கிறான். அவர்களிலே மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறார்கள். அல்லாஹ்விற்கு பிடித்தமான நல்லறங்களில் புண்ணியங்களில்  வணக்க வழிபாடுகளில் தான தர்மங்களில் மறுமைக்கான அமல்களில் நன்மைகளில் ஒருவரை ஒருவர் முந்தி செல்பவர்.
 
ஓட்டப்பந்தயத்தில் ஓடக்கூடியவர் தனக்கு பின்னால் வருபவனை பார்த்து ஓடுவானா? தனக்கு முன்னால் செல்பவனை முந்த வேண்டும் என்று ஓடுவானா? ஓட்டப்பந்தயத்தில் ஓடக்கூடியவர் எப்படி ஓடுவார்? தனக்கு பின்னாடி வருபவனை விட நாம் முன்னாடி போறோம் அப்படின்னு நினைச்சு ஓடினால் அவன் முதலாவதாக வர முடியுமா? தனக்கு முன்னால் உள்ளவனை முந்த வேண்டும் என்று ஓடுவான் அல்லவா!. நான் முதலிலே செல்ல வேண்டும் நான் நீ என்று போட்டி போட்டிக் கொண்டு நான் உங்களை முந்த வேண்டுமென்று அமல்களிலே ஒருவர் ஒருவரை போட்டி போட்டிக் கொண்டு முந்த கூடியவர்கள். அல்லாஹ் சொல்கிறான் இதுவல்லவா அல்லாஹ்வின் மகத்தான அருள் இதுவல்லவா அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபை. 
 
வீடு கட்டிவைத்துக்கொண்டு هذا من فضل ربي  என்று   எழுதுவது அல்ல. நன்மை தக்குவா இது அல்லாஹ்வுடைய ஃபழ்ல் இது அல்லாஹ்வுடைய அருட்கொடை. 
 
ரப்பில் ஆலமீன் நம்ம நபி மேல வைத்திருக்கிற பாசத்தில் அந்த நபி மீது அல்லாஹ் வைத்திருக்கக் கூடிய அந்த கண்ணியத்தில் அவனுடைய அருள் என்ன தெரியுமா? அல்லாஹு அக்பர்! பாவிகளையும் சேர்த்து அல்லாஹ் மன்னித்து விடுகிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரொம்ப கவலையாக ரொம்ப வருத்தத்தோடு இருந்தார்கள். அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை அனுப்பினான். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும். ஆனால், தன்னுடைய நபியிடத்திலே அல்லாஹ் வைத்திருக்கக்கூடிய அந்த பாச உணர்வு அன்பின் உணர்வு இருக்கிறது அல்லவா அதற்கென்று ஒரு வழிமுறைகளை ஒரு ஃபார்மாலிட்டீஸ் ஒரு புரோட்டோகாலை அல்லாஹ் வைத்திருக்கிறான். 
 
அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களை அனுப்பி கேட்கிறான்; ஏன் என்னுடைய நபி இவ்வளவு கவலையாக இருக்கிறார்? நபியவர்கள் , என்னுடைய சமுதாய (உம்ம)த்தை பற்றி தான் நான் கவலையாக இருக்கிறேன் என அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள் அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் இடத்திலே வாக்கு கொடுத்தான். என்னுடைய நபியிடத்திலே சென்று சொல்லுங்கள் முஹம்மதே ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உங்களுடைய உம்மத்தின் விஷயத்திலே நீங்கள் மனம் வலிக்கும்படி வருந்தும்படி அல்லாஹ் செய்ய மாட்டான். உங்களது உம்மத்தின் விஷயத்திலே உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்க மாட்டான். நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அல்லாஹ் உங்களுக்கு கொடுப்பான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: யா அல்லாஹ்! என்னுடைய சமுதாயம் (உம்மத்) நரகத்தில் இருக்கும் போது நான் எனது சொர்க்கத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்கு ,  உங்களது உம்மத் எல்லோரையும் நரகத்தை விட்டு வெளியாக்குவேன் என்று அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் மூலம் வாக்கு கொடுத்தான்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண்: 202.
 
அன்பான சகோதரர்களே! இது ஒரு பொதுவான வாக்கு. கண்டிப்பாக இந்த உம்மத்தில் உள்ள எல்லோருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நற்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்! 
 
இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த வசனத்தை எழுதி விட்டு இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக ஒரு அழகான ஹதீஸை பதிவு செய்கிறார். நாளை மறுமையிலே வரும்போது வாழ்க்கையில் தங்களது அமல்களின் ஏடுகளை பாவங்களைக் கொண்டு கறை படிய வைக்காத அப்படியே ஏதாவது பாவத்தில் மன இச்சையினால் மறதியினால் விழுந்து விட்டாலும் அந்தப் பாவங்களை அழிக்கும்படி தவ்பா செய்து நன்மைகளை நிரப்பி இருப்பார்கள். பாவங்களே இல்லாதது போல் அவர்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி இருப்பான். இவர்கள் எல்லாம் விசாரணை இல்லாமல் சொர்க்கத்திற்கு சென்று விடுவார்கள். 
 
சகோதரர்களே! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த அற்பமான குறைவான நிரந்தரமற்ற ஒரு உலக வாழ்க்கை.
 
நன்மைகளிலே முந்தியவர்கள் அல்லாஹ்விடத்திலே விசாரணை இல்லாமல் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். எப்படி இருக்கும் அந்த பாக்கியம்! நினைத்துப் பாருங்கள்! இந்த உலகத்திலே ஒருவர் ஏழையாக இருந்தால் அவருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடப் போகிறது! படிக்காத பாமரனாக இருப்பதால் அல்லது கூலிக்கு வேலை செய்யும் சுமை தூக்கக் கூடிய ஒருவராக இருப்பதால் அற்பமான சொற்பமான சில கால சிரமங்களைத் தவிர அவருக்கு இந்த உலகத்திலே என்ன ஒரு நஷ்டம் ஏற்பட்டு விடப் போகிறது? 
 
இறைநம்பிக்கையோடு (ஈமானோடு) உளத்தூய்மையோடு (இக்லாஸோடு) நற்செயல்களோடு (அமலே சாலிஹோடு) இன்றைய நாள் எனது முந்திய நாளை விட அமல்களில் அதிகமாக இருக்கிறதா? என்னுடைய தொழுகை என்னுடைய திக்ரு என்னுடைய குர்ஆன் என்னுடைய (திலாவா)குர்ஆன் ஓதுதல் என்னுடைய தான தர்மங்கள் முந்திய நாளை விட அதிகமாக இருக்கிறதா? என்னுடைய ரப்பிடத்திலே கொண்டு செல்வதற்காக என்ன கட்டு சாதங்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன்?
 
இப்படியாக அமல்களை கொண்டு தனது வாழ்க்கையை அலங்கரித்து அமல்களால் தன்னுடைய வாழ்க்கையை நிரப்பி கொள்வானேயானால், யார் காலையிலே எழுந்ததிலிருந்து இரவு தூங்குகின்ற வரை என்னுடைய ரப்பை திருப்தி படுத்தக்கூடிய அமலை இன்று நான் அதிகமாக செய்துவிட வேண்டும்  என்று தேடலில் யார் இருக்கிறானோ, ஒரு இபாதத்திற்குப் பிறகு இன்னொரு இபாதத்தை சிந்திக்க கூடியவனாக இருக்கிறானோ. அவன் முஃமின்.
 
முஃமின். எப்படி இருக்க வேண்டும்? நமக்கும் அந்த நல்லவர்களுக்கும் இடையில் உண்டான வேறுபாடு என்ன? நாம் மறுமையை மறந்து உலகத்தை சிந்திக்கிறோம். பிரச்சனை என்ன? மறுமையை மறந்து விட்டு உலகத்தை சிந்திக்கிறோம் அல்லது மறுமையை புறக்கணித்துவிட்டு உலகத்தை சிந்திக்கிறோம் அல்லது உலகத்தில் இருக்கும் பொழுது மறுமை தொடர்புடைய ஏதும் வருமேயானால் உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். மறுமையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி விடுகிறோம். 
 
யாரைப் பற்றி அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே புகழ்கிறானோ அந்த நல்லவர்கள் யார்? வர்த்தகம் செய்வார்கள்; கொடுக்கல் வாங்கல் செய்வார்கள்; வியாபாரம் செய்வார்கள்; தொழில் செய்வார்கள். ஆனால் தொழுகையை மறக்க மாட்டார்கள். ஜகாத்தை மறக்க மாட்டார்கள்.
 
சிலர் கேள்வி கேட்டு வந்தார்கள். ஒரு கோடி ரூபாய் ஒருத்தர் கிட்ட இருக்கு. அந்த மாதிரி நூறு கோடி ரூபாய் இருக்கு. ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வளவு கொடுக்கணும்? ஜகாத்து ரெண்டரை லட்சம். 100 கோடி ரூபாய்க்கு எவ்வளவு கொடுக்கணும் எவ்வளவு கொடுக்கணும்? 25 லட்ச ரூபாய். இந்த 25 லட்ச ரூபாய நான் ஏன் உடனே எடுத்துக் கொடுக்கணும்? 
 
அட அறிவாளி அந்த 25 லட்சம் உனக்கு சொந்தமானதே இல்ல. அது ஏழைகளுக்கான ஹக்கு. ஏழைகளுக்குரியது அல்லாஹ் உன்னிடத்திலே வைத்திருக்கிறான். அவ்வளவுதான் அந்த அரபி மாச கணக்குப்படி அந்த 354 நாள்கள் 365 நாளில் 11 நாளை குறைத்து விட்டால் எவ்வளவு வரும் அதுவரைக்கும் தான் அது உன் காசா இருந்துச்சு. எப்ப அந்த ராத்திரி வந்துருச்சோ அது உனக்கு உள்ளது அல்ல. அந்த மக்களுக்கு உள்ளதா போயிடுச்சப்பா. உன் காசே கிடையாது. அது முடிஞ்சு போச்சு. அதை நீ உடனடியாக எடுத்து வைத்து விட வேண்டும். அந்த காச வச்சுக்கிட்டு நீ பிசினஸ் பண்ணா அதனுடைய லாபத்தையும் சேர்த்து நீ சதக்கா பண்ணனும். ஏன்னா அது பிறருடைய ஹக்கு. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! விஷயத்திற்கு வருவோம். நல்லடியார்கள் நாளைக்கு மறுமையில் கணக்கு வழக்கு (ஹிசாப்) இல்லாம சுவர்க்கம் போயிடுவாங்க. அல்லாஹு அக்பர்! எப்பேர்பட்ட பாக்கியம்! 
 
இரண்டாவது ஒரு கூட்டம் வருவார்கள். யார் அவர்கள்? நன்மை தீமை கொஞ்சம் கலந்து இருக்கும். நல்லதும் நிறைய செஞ்சு இருப்பாங்க. கொஞ்சம் பாவமும் செஞ்சி இருப்பாங்க. அல்லாஹுத்தஆலா மகத்தான அருளாளன். அவர்களுடைய நன்மைகளை அதிகப்படுத்தி பாவங்களை மன்னித்து நன்மைகளின் பொருட்டால் நீங்களும் சொர்க்கத்திற்கு போங்க என்று அனுப்பி வச்சிடுவான். அல்லாஹு அக்பர்! 
 
அடுத்து மூன்றாவது ஒரு கூட்டம் இந்த ளாலிம். இந்த கூட்டம் மாட்டிக்கொள்ளும். இந்த கூட்டம் நிற்கும். வானவர்களிடத்தில் அல்லாஹ் கேட்பான்: இவர்கள் எல்லாம் யார்? யா அல்லாஹ் இவர்களிடத்திலே நன்மைகள் மிகக் குறைவு. பாவங்கள் அதிகம். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பாருங்கள்! அல்லாஹ்வுடைய விசேஷமான அருளை பாருங்கள்! மலக்குகள் சொல்வார்கள்: யா அல்லாஹ் இவர்கள் பாவம் செய்தவர்கள் தான். குற்றம் இழைத்தவர்கள் தான். ஆனால் உனக்கு ஷிர்க்கு செய்யவில்லை. உனக்கு அவர்கள் இணை வைக்கவில்லை. அல்லாஹ் , அவர்களையும் நான் மன்னித்து விட்டேன் அவர்களையும் சொர்க்கத்திற்கு அனுப்புக என்று சொல்வான்:. 
 
தவ்ஹீதுடைய அருளை நினைத்துப் பாருங்கள்! பெயரளவில் முஸ்லிமாக இருப்பது பெரியது அல்ல. இஸ்லாமுடைய தவ்ஹீத் எங்கே? இன்றைய பல முஸ்லிம்கள் அல்லாஹுவை பெரிய கடவுளாகவும் அவுலியாக்களை அல்லாஹ்விடமிருந்து வாங்கித் தரக்கூடிய மினி கடவுளாகவும் நம்பி வைத்திருக்கிறார்கள். அல்லாஹ்வை இந்த அவுலியாக்களின்  துணை இல்லாமல் நெருங்கவோ அடையவோ முடியாது என்று நம்புகிறார்கள்
 
அல்லாஹ்வை மிகப்பெரிய கடவுளாகவும் அவ்லியாக்களை அல்லாஹ்வுடைய துணைக் கடவுளாகவும் இணை தெய்வங்களாகவும் நம்பி வைத்திருக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா ஹதீஸ் குதுசியிலே சொல்வதை பாருங்கள்! 
 
நாளை மறுமையிலே அடியான் வரும்போது அடியானே வானத்தின் மேகம் அளவிற்கு உனது பாவங்கள் எட்டி விட்டாலும் சரி, நீ எனக்கு இணை வைக்காமல் வந்தால் நான் உன்னை மன்னித்து விடுவேன். நான் யாரையும் புண்படுத்த மாட்டேன். அல்லாஹ் அக்பர்! 
 
சகோதரர்களே! இமாம் தஹபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த வசனத்தை எழுதி விட்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உடைய ஒரு அறிவிப்பை எழுதுகிறார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவி, நம்முடைய தாய், பரிசுத்தமான பெண், அல்லாஹ்வால் புகழப்பட்டவர்கள், அமல்களிலே அவ்வளவு ஆர்வம் மிக்கவர்கள். 
 
தொழுகையா? நஃபிலான நோன்பா? தான தர்மமா? முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் இருந்து தங்கம் வெள்ளியின் நாணயங்களின் குவியல் வரும். அன்றைய மாலைப் பொழுதுக்குள் தர்மம் செய்து முடித்து விடுவார்கள். இஃப்தாருக்கு அவர்களிடத்தில் எதுவும் வாங்குவதற்கும் நாணயம் இருக்காது. 
 
இரவு தொழுகை என்றால் இரவிலே தொழுது கொண்டே இருப்பார்கள். தனக்கு தொழ வைப்பதற்காகவே குர்ஆன் ஓதக்கூடிய ஒரு அடிமையை நியமித்திருந்தார்கள். 
 
நஃபிலான நோன்பு என்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணித்ததிலிருந்து தடுக்கப்பட்ட நாட்களைத் தவிர அவர்கள் வாழ்நாளெல்லாம் நோன்பு வைத்தார்கள். 
 
ஹஜ் உம்ரா என்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணித்ததற்கு பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியில் இருந்து ஒரு வருஷம் கூட அவர்கள் ஹஜ் செய்வதை விடவில்லை. 
 
அப்பேர்ப்பட்ட வணக்கசாலி! அவர்களுடைய மாணவர் அன்னை ஆயிஷா இடத்திலே இந்த வசனத்திற்கான விளக்கத்தை கேட்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள்! மகனே! அல்லாஹுத்தஆலா சாபிக்கும் பில் ஹைராத் என்று சொல்கிறானே? அவர்கள் யார் தெரியுமா?
 
அவர்கள்தான் நபியின் சஹாபாக்கள். அமல்கள் செய்து. அல்லாஹ் அவர்களை பொருந்தி கொண்ட நிலையிலே அவர்கள் முந்தி சென்று விட்டார்கள். 
 
முக்தசிதுன் என்று அல்லாஹ் சொல்கிறானே. அவர்கள் யார் தெரியுமா? அந்த சஹாபாக்களுடைய பாதையிலே அவர்களைப் பின்பற்றி அமல் செய்தவர்கள்; செய்து கொண்டிருப்பவர்கள். 
 
அடுத்து ளாலிமுன் லீ நஃப்சிஹி என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா. பாவம் செய்பவர்கள் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறானே அவர்கள் யார் தெரியுமா? அன்னை ஆயிஷா இடத்திலே இந்த வசனத்திற்கான விளக்கத்தை அவர்களுடைய மாணவர் கேட்கும்போது. அவர்கள் தான் நீயும் நானும் என்று அவர்கள் சொல்கிறார்கள். 
 
யோசித்துப் பாருங்கள்! இவ்வளவு மகத்தான அமல்களை செய்து கொண்டு தன்னை ஒரு பாவியாக ஒரு குற்றவாளியாக குறை உள்ளவராக எண்ணிக் கொண்டிருந்தார்கள். 
 
இன்று நாமோ செய்கிற அமலோ குறைவு. ஆனால் நாம் நமக்கு போடக்கூடிய மார்க்கோ 100 க்கு 100. அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! 
 
இந்த மாதம் நன்மைகளிலே போட்டி போடுவதற்கான மாதம். நன்மைகளிலே முந்துவதற்கான மாதம். அல்லாஹுத்தஆலா சென்ற ரமழானை விட இந்த ரமழானை நமக்கு அமல்களிலே முந்துவதற்கு காரணமாக இக்லாஸிலும் ஈமானிலும் தக்வாவிலும் நல்ல அமல்களிலும் தான தர்மங்களிலும் அதிகம் நாம் தேடிக்கொள்வதற்குரிய மாதமாக ஆக்கி தருவானாக! 
 
மூஃமின்கள் முஸ்லிம்களிலே இறந்துவிட்ட எல்லோருக்கும் ஷஹீதான எல்லோருக்கும் அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா பாவ மன்னிப்பு தருவானாக! அல்லாஹுத்தஆலா அவர்களைப் பொருந்தி கொள்வானாக! அவர்களுடைய கப்ரை விசாலமாக்குவானாக! யார் நோயிலே இறந்தார்களோ அவர்களும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் ஷஹீதுகளாக இருப்பார்கள். அல்லாஹுத்தஆலா மூமின்கள் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்வானாக! பொருந்தி கொள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/