ஜுமுஆ நாளும் ஸூரா ஸஜ்தாவும்! அமர்வு-3| Tamil Bayan - 963
ஜுமுஆ நாளும் சூரா ஸஜ்தாவும்!! அமர்வு 3
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ நாளும் சூரா ஸஜ்தாவும்!! அமர்வு 3
வரிசை : 963
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 02-05-2025 | 04-11-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் நேசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் எல்லா முஃமின்கள் முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அவனுடைய அருளையும் வேண்டியவனாக; மகத்தான சொர்க்கத்தின் வெற்றியை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நம் மீது அருள் புரிவானாக!
சென்ற இரண்டு குத்பாக்களிலே வெள்ளிக்கிழமை அதனுடைய மகத்துவம் அந்த வெள்ளிக்கிழமைக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்த முக்கியத்துவம், அந்த வெள்ளிக்கிழமையிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேணிய அமல்கள், ஓதிய சூராக்கள் அந்த செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்தோம்.
அதிலே குறிப்பாக சூரத்துஸ் ஸஜ்தாவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளிக்கிழமை ஃபஜ்ருடைய தொழுகையிலே தொடர்ந்து ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த சூரத்துஸ் ஸஜ்தா எத்தகைய மகத்தான ஒரு செய்தியை நமக்கு தருகிறது? இந்த சூராவை ஏன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளிக்கிழமையின் காலை தொழுகைக்காக தேர்ந்தெடுத்தார்கள்? இந்த சூராவிலே என்ன செய்தி நமக்கு இருக்கிறது? என்பதை நாம் பார்த்தோம். அதனுடைய தொடரை தான் இன் ஷா அல்லாஹ் இந்த அமர்விலும் நாம் பார்க்க இருக்கிறோம்.
இந்த சூரா ஒரு முஃமினை இந்த உலக வாழ்க்கையிலிருந்து அப்படியே ஒரு பக்கம் அவனுடைய பிறப்புக்கு முன் எப்படி இருந்தான் என்பதை அவனுக்கு உணர்த்தி, மரணத்தை நினைவூட்டி, பிறகு அப்படியே மறுமைக்கு கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.
சகோதரர்களே! இந்த மறுமையை நினைவூட்டுதல்; ஆகிரத்தை நினைத்து வாழுதல்; சொர்க்க நரகத்தை நினைத்து வாழுதல்; சொர்க்கத்தை ஆசைப்பட்டு நரகத்தை பயந்து விசாரணை நாளை பயந்து வாழுதல்; இதுதான் நம்முடைய இஸ்லாம் ஈமானுடைய அந்த ரூஹ் -உயிர்.
இது எந்த அளவு நம்முடைய உள்ளங்களில் வேரூன்றுமோ ஆழ பதியுமோ அல்ஹம்து லில்லாஹ் அவரிடத்தில் இஸ்லாம் முழுமையாகி கொண்டே போகும். அவரிடத்திலே ஈமான் முழுமையாகிக் கொண்டே போகும்.
ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்கள் கூடக்கூடிய முக்கியத்துவம் தரக்கூடிய இந்த வெள்ளிக்கிழமையின் அதிகாலை தொழுகையிலே இந்த சூரத்துல் ஸஜ்தாவை முதல் ரக்காத்தில் முழுமையாக ஓதினார்கள்.
இந்த சூரா எப்படி மனிதனை முஃமினை மறுமைக்கு கொண்டு சென்று அல்லாஹுவிற்கு முன்னால் நிறுத்தி காஃபிர்கள் வெட்கி தலைகுனியக்கூடிய கைசேதப்படக்கூடிய அந்த காட்சியை விவரித்துவிட்டு பிறகு அல்லாஹு தஆலா மக்களை பார்த்து கேட்கக்கூடிய ஒரு கேள்வியை இந்த சூரா கூறுகிறது.
அது என்ன கேள்வி? அல்லாஹு அக்பர்! நம்முடைய ரப் இருக்கிறானே அவன் ரஹ்மான், ரஹீம் -அளவற்ற அருளாளன், கருணையாளன். அதே நேரத்திலே நீதவான். தண்டிப்பதிலே கடுமையானவன்.
نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.” “இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!” (அல்குர்ஆன் 15:49,50)
வசனத்தின் கருத்து : நபியே என் அடியார்களுக்கு சொல்லி இந்த செய்தியை அவர்களுக்கு நினைவூட்டி வையுங்கள்! நான் மகா கருணையாளன்; மகா மன்னிப்பவன். அதே நேரத்தில் என்னுடைய தண்டனை மிகக் கடுமையானதாக வலிமிக்கதாக இருக்கும்.
அல்லாஹு தஆலா அந்த அடிப்படையில் தான் இந்த இடத்தில் சொல்கிறான்:
اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوٗنَؔ
ஆக, நம்பிக்கையாளராக இருப்பவர் பாவியாக இருப்பவரைப் போன்று ஆவாரா? அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 32:18)
வசனத்தின் கருத்து : யார் நம்பிக்கையாளராக முஃமினாக வாழ்ந்தார்களோ அவர் பாவியை போன்று பாவிக்கு சமமானவர்களாக ஆகிவிடுவார்களா? முஃமினும் பாவியும் சமம் ஆகி விடுவார்களா? அல்லாஹ்வுக்காக ரப்புக்காக மறுமையின் சொர்க்க வாழ்க்கைக்காக விசாரணையின் நாளை பயந்து ஹராமை விட்டு விலகி மன இச்சையிலிருந்து சரீர இச்சையில் இருந்து ஒருவன் தன்னை பாதுகாத்து தூயவனாக வாழ்ந்தானே அவனும் மறுமையை நிராகரித்து உலகத்துக்காகவே வாழ்ந்து அல்லாஹ்வை நிராகரித்து ஆகிரத்தை நம்பாமல் வாழ்ந்த ஒரு பாவியும் எப்படி சமமாவார்கள்?
இங்கே என்ன கவனிக்க வேண்டும் தெரியுமா? நல்லவனும் பாவியும் சமமாவார்களா? என்று அல்லாஹ் கேட்கவில்லை. , முஃமினும் பாவியும் சமமாவார்களா? என்று அல்லாஹ் கேட்கிறான். அல்லாஹ் என்ன உணர்த்த விரும்புகிறான்? முஃமின் நல்லவனாகவே இருக்க வேண்டும். யார் நல்லவராக இருக்கிறாரோ அவர்தான் முழுமையான முஃமின்.
ஈமான் என்பது அமல்களைக் கொண்டு கூடிக் கொண்டே இருக்கும். நாம் ஒவ்வொரு அமலை செய்ய செய்ய நம்முடைய ஈமான் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அடியான் பாவம் செய்ய செய்ய அவனுடைய ஈமான் பலவீனப்படும். குறைந்து கொண்டே போகும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒரு சாதாரண சூழ்நிலையில் ஒரு சிறிய பொய் ஒருவன் சொல்கிறான். அதை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதனால் அவனுடைய ஈமான் குறைகிறது. அவனுடைய ஈமான் டேமேஜ் ஆகிறது. ஒரு வாக்கு கொடுக்கிறான். அந்த வாக்கை நிறைவேற்ற தவறுகிறான். அதனால் அவனுடைய ஈமான் டேமேஜ் ஆகிறது.
ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு தவணையை குறிப்பிடுகிறான். ஆனால் அந்த தவணையில் கொடுப்பதில்லை. தவணையை நீட்டித் தரும்படி கேட்பதும் இல்லை இதனால் ஈமான் டேமேஜ் ஆகிறது.
இப்படி நூற்றுக்கணக்கான பாவங்கள். அன்றாட வாழ்க்கையிலே ஏன் உங்களது தாயிடம் நீங்கள் கடுமையாக பேசும் போது கூட உங்களது நண்பன் இடத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளும் போது கூட, ஒவ்வொரு வெறுக்கத்தக்க குணங்களாலும் செயல்களாலும் அல்லாஹ் தடுத்த சிறிய பெரிய பாவத்தாலும் நம்முடைய ஈமான் டேமேஜ் ஆகி கொண்டே போகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரர்களே! நாம் புரிய வேண்டும். ஈமான் என்பது ஏதோ ஒரு தனி சரக்கு. அதை அப்படியே கொண்டு வந்து உள்ளத்திலே எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடாதீர்கள். ஈமான் என்பது இந்த அமல்களால் நற்குணங்களால் நல்லொழுக்கங்களால் வணக்க வழிபாடுகளால் தக்வாவால் உள்ளத்தின் நற்பண்புகளால் கூடிய ஒரு அம்சம் அது.
ஒரு பாவி -காஃபிரை பொருத்தவரை அவன் குணங்களாலோ அல்லது வேறு சில செயல்களாலோ நல்லவனாக இருந்து எந்தப் பிரயோஜனம் இல்லை என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
ஏன்? எப்பொழுது அவன் அல்லாஹ்வை நிராகரித்து விட்டானோ மறுமையின் நம்பிக்கையை அவன் கொள்ளவில்லையோ அவன் பாவி.
இன்று, நாம் என்ன சொல்கிறோம்? ஒரு காஃபிரை பார்த்து ரொம்ப நல்லவர் என்று புகழ்கிறோம். இன்னும் சில பேரு காஃபிர்கள் இறந்ததற்கு ஃபாத்திஹா கூட ஓதுகிறார்கள். அவர்களுக்காக துஆ கூட செய்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தெளிவான எச்சரிக்கை. இணைவைத்த நிலையில் இறப்பவர்களுக்கு சொர்க்கம் ஹராமாகவிட்டது. யார் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் இறப்பார்களோ அவர்களுக்கு சொர்க்கம் கடமையாகி விட்டது.
ஆகவே, முஷ்ரிக்கிற்கும் காஃபிருக்கும் அல்லாஹ்விடத்திலே ரஹ்மத்துடைய மறுமையின் சொர்க்கத்துடைய துஆவை செய்ய முடியாது.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; முஃமினும் பாவியும் சமமாவார்களா? ஒருபோதும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வுக்காக மறுமைக்காக நஃப்சை அடக்கி இங்ஙனம் வாழ்ந்த இஸ்லாம் ஈமான் ஷரிஅத்தை முன்னிலைப்படுத்தி வாழ்ந்தவனும், அல்லாஹ்வின் சட்டங்களை அல்லாஹ்வுடைய தீனை புறக்கணித்தவனும் எப்படி சமமாவார்கள்?
ஈமானுக்காக இஸ்லாமுக்காக நல்ல அமல்களுக்காக வாழ்ந்தவர்களுக்கு அல்லாஹ் வெகுமதி சொல்கிறான்:
اَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰى نُزُلًا بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததன் காரணமாக “அல்மஃவா” என்னும் சொர்க்கங்கள் விருந்துபசரணையாக கிடைக்கும். (அல்குர்ஆன் 32:19)
எப்படி ஜன்னத்துல ஃபிர்தவ்ஸ் ஒரு விசேஷமான சொர்க்கமோ அதுபோன்று அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு ஸித்ரத்துள் முன்தஹாவிற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு மகத்தான சொர்க்கம் தான் ஜன்னத்துல் மஃவா என்பது.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: யார் ஈமானை முன்னிறுத்தி, நல்ல அமல்களை முன்னிறுத்தி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவர்கள் வரவேற்கப்படுவார்கள். விருந்தோம்பல் செய்யப்படுவார்கள். கண்ணியப்படுத்தப்படுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த அமல்களுக்காக.
இங்கு நம்முடைய அமல்களுக்கு ஏற்ப நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே கண்ணியம் கொடுக்கப்படும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ومَن أبطَأ به عمَلُه لَمْ يُسرِعْ به نسَبُه
உங்களுடைய வம்சமோ உங்களுடைய அழகோ செல்வமோ உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி விடாது. உங்களுடைய அமல் அதைத்தான் அல்லாஹ் பார்க்கிறான். (குறிப்பு-1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3643.
உங்களுடைய உள்ளங்களை அல்லாஹ் பார்க்கிறான். இந்த உள்ளத்தில் எத்தகைய தூய எண்ணங்களை நீங்கள் வைத்து வாழ்ந்தீர்கள்.
அல்லாஹ்வை தேடல், ஆகிரத்தை தேடல், மறுமையை தேடல், அல்லாஹ்வுடைய நேசம், நபியின் நேசம், குர்ஆன் உடைய நேசம், முஃமின்களுடைய நேசம் இவ்வாறு அந்த உள்ளங்களிலே என்ன இருக்கிறது என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
தக்வா இங்கே இருக்கிறது என்று உள்ளத்தை சுட்டிக் காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6064.
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான்:
وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَاْوٰٮهُمُ النَّارُ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِيْدُوْا فِيْهَا وَ قِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ
ஆக, எவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்களோ அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக தண்டனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும். (அல்குர்ஆன் 32:20)
கருத்து : யார் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்களோ அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறினார்களோ எல்லோரும் வருவார்கள். முற்றிலுமாக நிராகரித்து சென்ற காஃபிர்களும் வருவார்கள். அல்லாஹ்வுடைய ஷரியத்துடைய சட்டங்களை மீறிய அதை புறக்கணித்தவர்களும் வருவார்கள். அவர்கள் நிரந்தரமாக நரகத்தில் தங்குவார்கள். இவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு ஏற்ப நரகத்தில் தங்குவார்கள்.
தொழுதுவிட்டால் நமக்கு இஸ்லாம் கிடைத்துவிட்டது என்று. அல்லது நோன்பு நோற்றுவிட்டால் நமக்கு இஸ்லாம் ஈமான் முழுமையாகி விட்டது என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
தொழுகை, நோன்பு என்பது இஸ்லாமிய கடமை (அர்க்கான்) களில் சில (அர்க்கான்) கடமை களே தவிர எல்லா இஸ்லாமும் அதுவா? எல்லா ஈமானும் அதுவா?
இன்று எத்தனை முஸ்லிம்கள் சொத்து சட்டங்களிலே அல்லாஹ் சொல்லி இருக்கக்கூடிய ஷரியத்துடைய சட்டங்களை ஏற்றுக் கொள்வது கிடையாது. பெண்களுக்கு ஆண்களுக்கு இருப்பது போன்று சமபங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஒரு கணவன் இறந்து விட்டால் கணவனின் சொத்தை மனைவி முழுமையாக அபகரித்துக் கொள்கிறாள். இறந்து போனவருடைய தந்தை தாய்க்கு கொடுப்பதில்லை. பிள்ளைகள் இல்லை என்றால் சகோதரர்களும் அவருக்கு பங்குதாரர்கள் ஆகுவார்கள். சொத்திலே அவர்களுக்கு கொடுப்பதில்லை. அத்தனை சொத்தையும் மனைவி வாரி சுருட்டி கொள்கிறாள். மனைவியின் குடும்பத்தார்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இறந்துவிட்டவரின் மனைவிக்கு தான் அந்த எல்லா உரிமைகளும் என்பதாக சொத்தை முடக்கி கொள்கிறார்கள்.
அல்லது ஒருவர் இறந்து விடுகிறார். அவருக்கு சம்பாத்தியம் இருக்கிறது. அவருக்கு சொந்த செல்வங்கள் இருக்கின்றன. தந்தை நிர்வகிக்கிறார் என்றால் தந்தை அந்த சொத்தை எடுத்துக் கொள்கிறார். யாருக்கு கொடுப்பதில்லை? இறந்தவருடைய பிள்ளைகளுக்கு.
இப்படியாக எத்தனை சட்டங்களிலே மார்க்கம் மீறுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மார்க்கம் மீறுதல் எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்று நாம் ஒரு சில விஷயங்களை மட்டுமே குஃப்ராக பார்க்கிறோம். எத்தனை விஷயங்கள் குஃப்ரிலே கொண்டு போய் சேர்க்கக் கூடியவை இருக்கின்றன.
ஆகவேதான் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்; யார் எனக்கு கீழ்ப்படிவதை விட்டு வெளியேறுகிறார்களோ, ஃபுசூக் என்று சொன்னால் அல்லாஹ்விற்கு கீழ்படிவதில் இருந்து வெளியேறுவது. சைத்தானுக்கு அதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்:
தனது இறைவனின் கட்டளையை அவன் மீறினான். இறைவனின் கட்டளையிலிருந்து வெளியேறினான். ஃபுசூக் என்று சொன்னால் அல்லாஹ்வுடைய கட்டளையில் இருந்து வெளியேறி விடுவது. அவர்கள் தங்கக்கூடிய இடம் நரகம். அல்லாஹ் நரகத்தை கொஞ்சம் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான். அந்த கொடிய காட்சியை அல்லாஹ் நினைவூட்டுகின்றான். ரொம்ப விசாலமானது. பயங்கரமானது நரகம். அல்லாஹு அக்பர்!
يَوْمَ نَـقُوْلُ لِجَهَـنَّمَ هَلِ امْتَلَـئْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ
“நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற (அந்த) நாளில் (முற்றிலும் நீதமாக தீர்ப்புகள் இருக்கும்).” அந்த நரகம் (பதில்) கூறும்: “(நரகத்தில் போடுவதற்கு பாவிகள்) இன்னும் அதிகம் இருக்கிறார்களா?” என்று. (அல்குர்ஆன் 50:30)
வசனத்தின் கருத்து : இவ்வளவு படைப்பினங்களை போடப்பட்டு விட்டது. உனக்குள் ஆயிரம் நபர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கு செல்வார். 999 பேர் நரகத்திற்கு செல்வார்கள். இப்படியாக நரகத்தில் போடப்பட்டதற்கு பிறகு அந்த நரகத்தை பார்த்து அல்லாஹ் கேட்பான்; நரகமே நிரம்பி விட்டாயா? வயிறு நிரம்பி விட்டதா? என்று. அந்த நரகம் சொல்லும்; இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ் தனது பாதத்தை அதன் மீது வைத்து அழுத்துவான். அந்த நரகம் சொல்லும்; இறைவா! போதும்! போதும்! என்பதாக.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2848.
சகோதரர்களே! அவ்வளவு விசாலமான, பயங்கரமான, ஆழமான அந்த நரகத்திலிருந்து காஃபிர்கள் தப்பித்து ஓட முயற்சிப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை பயான் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பயங்கரமான சத்தத்தை சஹாபாக்கள் செவியுறும்படி அல்லாஹ் ஏற்பாடு செய்தான். கேட்டார்கள்; இந்த சத்தம் என்ன தெரியுமா? இப்பொழுது கேட்ட சத்தம் எதனுடைய சத்தம் தெரியுமா? எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக நரகத்தின் விளிம்பிலிருந்து போடப்பட்ட ஒரு பாறை இப்போதுதான் அதனுடைய அடித்தளத்தை ஒட்டி இருக்கிறது. அதனுடைய சத்தத்தை தான் நீங்கள் கேட்கிறீர்கள் என்று.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2844.
அவ்வளவு பெரிய ஆழமான விசாலமான பயங்கரமான நரகம். அல்லாஹ் சொல்கிறான்; இந்த காஃபிர்கள், பாவிகள் ஓங்கி அடித்து கடைசியிலே அதனுடைய விளிம்பிற்கு வந்து தப்பித்து விடலாம் என்று நினைக்கும் பொழுது, மீண்டும் அதனுடைய ஆழத்திற்கு கொண்டு போகப்படுவார்கள்.
அல்லாஹ் அக்பர் எப்படி இருக்கும் பாருங்கள்! அந்த நரகத்திலிருந்து தப்பித்து ஓடலாம் என்று அவர்கள் ஓடும் பொழுது எங்கே அவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கான வேதனையின் இடம் எதுவோ அங்கே திரும்பவும் கொண்டுவரப்படுவார்கள்.
சொல்லப்படும் அவர்களுக்கு; எந்த நரகத்தை நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் இருந்தீர்களோ, எந்த நரகத்துடைய பயமில்லாமல் நீங்கள் வாழ்ந்தீர்களோ, எந்த நரகத்தை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அதை இப்போது சுவைத்துக் கொள்ளுங்கள்! அனுபவித்துக் கொள்ளுங்கள்!
அல்லாஹ் சொல்கிறான்; இந்த காஃபிர்களுக்கு நரகத்தின் தண்டனை மட்டுமல்ல;
وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய தண்டனைக்கு முன்னர் சிறிய தண்டனையை நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம். (அல்குர்ஆன் 32:21)
கருத்து : இந்த உலகத்திலும் அவர்களுக்கு நாம் தண்டனையை சுவைக்க செய்வோம். அவர்கள் திருந்துவதற்காக. அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் ஈமானின் பக்கம் திரும்புவதற்காக பெரிய தண்டனைக்கு முன்பாக சிறிய தண்டனையையும் நாம் சுவைக்க செய்வோம் என்று.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மக்கள் பேசுகிறார்கள்; இயற்கை சீற்றம் என்று. பேராபத்து, இயற்கை பேரிடர் என்று. எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளையை கொண்டு படைத்தவனின் உத்தரவைக் கொண்டு நிகழ்கின்றனவே தவிர, எந்த ஒரு படைப்புக்கும் அல்லாஹ்வுடைய உத்தரவு இல்லாமல் இயங்குவதற்கு எந்த சக்தியும் இல்லை.
மழையாக இருக்கட்டும்; காற்றாக இருக்கட்டும்; வெயிலாக இருக்கட்டும்; குளிராக இருக்கட்டும்; பூமியின் பூகம்பமாக இருக்கட்டும்; இப்படி எதுவாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுடைய கட்டளையை கொண்டு அல்லாஹ்வுடைய உத்தரவைக் கொண்டு அது செயல்படுகிறது.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா இத்தகைய தண்டனைகள் மூலமாக உணர்த்துகின்றான். அல்லாஹு தஆலா அடுத்து கேட்கிறான்; இவ்வளவு தெளிவான உபதேசங்கள் உங்களுக்கு சொல்லப்படும் பொழுது;
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا اِنَّا مِنَ الْمُجْرِمِيْنَ مُنْتَقِمُوْنَ
தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளை பழிவாங்குவோம். (அல்குர்ஆன் 32:22)
கருத்து : அல்லாஹ்வுடைய வேத வசனங்களைக் கொண்டு தனது ரப்புடைய அத்தாட்சிகளை கொண்டு உபதேசம் செய்யப்பட்டதற்கு பிறகும் அதை கேட்காமல் செவி மடுக்காமல் அதற்கு கீழ்படியாமல் புறக்கணித்து செல்பவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்?!
அல்லாஹ் சொல்கிறான்; மனிதனே நீ என்ன செய்து விடுவாய்? பலருக்கு திமிரு அதிகமாகிவிடுகிறது. ஆட்சியினால் திமிரு; அதிகாரத்தால் திமிரு; செல்வத்தால் திமிரு. நாலு பேரு தன்னை சூழ்ந்து கொண்டால், நாலு பேரு தனக்கு பின்னால் வந்துவிட்டால், தன்னை பார்த்து நாலு பேரு மரியாதை செய்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம், கர்வம், தலைகனம் கூடி விடுகிறது.
குற்றவாளியாக பெருமைப்பிடித்தவனாக நடமாடுகிறான். எளியவர்கள் மீது அநியாயம் செய்கிறான். அல்லாஹ்வுடைய ஹக்குகளை நிறைவேற்றுவதில்லை. என்னை யார் கேட்க முடியும்! என்பதாக இறுமாப்பிலே இருக்கிறான்.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்; எங்கே போய் விடுவான்? குற்றவாளிகள் இடத்திலே பழி வாங்குவதற்கு நாம் இருக்கிறோம்.
பலவீனமானவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள், உரிமைகளை பறிகொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள் ஆதரவடையுங்கள்! உங்களுக்காக பழி தீர்ப்பதற்காக அல்லாஹ் இருக்கிறான்.
இன்று பழிவாங்குவான். இல்லை என்றால் நாளை அல்லாஹ்வுடைய அந்த சன்னிதானத்திலே மிகப்பெரிய பழிவாங்குதல் இருக்கும். அவர்களுடைய நன்மைகள் எல்லாம் உங்களுக்கு கொடுக்கப்படும். உங்களுடைய பாவங்கள் எல்லாம் அவர்கள் தலை மீது சுமத்தப்படும். கேவலப்பட்டவர்களாக நரகத்தில் வீசப்படுவார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுப்பது; ஆட்சியை கொடுப்பது; அதிகாரத்தை கொடுப்பது; சமூக அந்தஸ்தை கொடுப்பது; நாம் பெருமை அடிப்பதற்காக அல்ல. ஆணவம் கொள்வதற்காக அல்ல. நினைத்ததை செய்வதற்காக அல்ல. அடக்குவதற்காக அல்ல. பிறரின் உரிமைகளை பறிப்பதற்காக அல்ல. அல்லாஹ்வின் அடியார்களுக்கு சேவை செய்வதற்காக. அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்மைகளை சேர்ப்பிப்பதற்காக அல்லாஹுத்தஆலா இதை நமக்கு கொடுத்து கவுரவப்படுத்துகிறான் தவிர நாம் பெருமை அடிப்பதற்காக அல்ல.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: யார் குற்றவாளிகளாக திரிகிறார்களோ அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு குற்றவாளிகளாக இருக்கட்டும் அல்லது அல்லாஹ்வின் அடியார்களின் ஹக்கின் விஷயத்திலே குற்றம் செய்திருக்கட்டும் அத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்குவோம்.
அதற்குப் பிறகு அல்லாஹு தஆலா அப்படியே நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிஃராஜ் பயணத்திற்கு அழைத்து செல்கின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஃராஜ் உடைய பயணத்திலே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தார்கள். நபியே நீங்கள் மூஸாவை சந்திப்பீர்கள். அதற்குப் பிறகு அல்லாஹ் சொல்கிறான்; நீங்கள் மூஸாவை சந்தித்ததிலே சந்தேகப்படாதீர்கள்! நீங்கள் வானத்திலே மூஸாவைதான் சந்தித்தீர்கள். அல்லாஹு அக்பர்!
அல்லாஹ் சொல்கிறான்:
وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآٮِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ
திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைத் கொடுத்தோம். ஆகவே, அவரை (விண்ணுலகப் பயணத்தில்) சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 32:23)
அல்லாஹ் நாடினால் எதை வேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டுவான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபிமார்களை அல்லாஹு தஆலா சந்திக்க வைத்தான்.
இந்த நபிமார்கள் எப்படி உலகத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலையில் அந்த நபிமார்களை அல்லாஹு தஆலா சந்திக்க வைத்தான். மிஃராஜ் சம்பவத்திற்கு முன்பும் வானத்திலும் அல்லாஹு தஆலா பல நபிமார்களை சந்திக்க வைத்தான். அதில் குறிப்பாக மூஸா நபியை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். மூஸா நபியை சந்தித்ததிலே நீங்கள் சந்தேகப்படாதீர்கள்! அவரைத்தான் நீங்கள் சந்தித்தீர்கள்! அவரிடத்தில் தான் நீங்கள் எதார்த்தமாக நேரடியாக பேசினீர்கள்.
சகோதரர்களே! ஏன் அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா விசேஷமாக மூசா நபியை சொல்லிக் காட்டுகின்றான். இப்ராஹிம் நபியையும் அவர்கள் சந்தித்தார்கள். இன்னும் பல நபிமார்களை அவர்கள் சந்தித்தார்கள்.
சகோதரர்களே! இன்று இஸ்ரவேலர்களுக்கும் நமக்கும் இடையில் இருக்கக்கூடிய பிரச்சனை இருக்கிறதே இது தீராத பிரச்சனை. அல்லாஹு தஆலா மூஸா நபியை மூஃமின்களுக்கு சொந்தக்காரராக ஆக்கி இருக்கின்றானே தவிர, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொந்தக்காரராக அல்லாஹ் ஆக்கி இருக்கின்றானே தவிர, இஸ்ரவேலர்கள் என்று தங்களை பெருமை அடித்து கொள்பவர்களுக்கு அல்ல.
நபிமார்களுக்கு உரிமையாளர்கள் யார்? முஃமின்கள்!. அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இந்த நபியை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் (இன்னும், உதவியாளன்) ஆவான். (அல்குர்ஆன் 3:68)
கருத்து : இப்ராஹிமுக்கு உரிமை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு தகுதியானவர்கள் யார் தெரியுமா? அவரை அவருடைய காலத்திலே ஈமான் கொண்டவர்கள். அதற்கு பிறகு யார் தெரியுமா? இந்த நபியும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சொல்லி அவர்களை ஈமான் கொண்டவர்கள் இப்ராஹிம் நபிக்கு உரிமை உள்ளவர்கள்.
சகோதரர்களே அப்படித்தான் எல்லா நபிமார்களும். அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்:
وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ
மூஸா நபியை இஸ்ரவேலர்களுக்கு நாம் வழிகாட்டியாக ஆக்கினோம். மூஸா நபிக்கு கொடுத்த அந்த வேதத்தை இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 32:23)
அதற்குப் பிறகு அல்லாஹ் ஒரு செய்தியை சொல்கிறான்:
وَجَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ
அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகிற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்தத் தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 32:24)
இஸ்ரவேலர்களிலே எப்போதும் இரு சாரார்கள் இருந்தார்கள். ஒரு சாரார் குறைவானவர்களாக இருந்தாலும் சத்திய வேதத்தில் நிலைத்திருந்து மக்களுக்கு நேர்வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலே ஈமானை ஏற்றுக் கொண்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாமை போல. மிகப் பெரிய உயர்ந்த ஈமானிய தரஜாவை அடைந்தார்கள்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; இந்த இஸ்ரவேலர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய இமாம்களை நாம் ஏற்படுத்திக் கொடுத்தோம். அவர்களுடைய வேத சட்டங்களைக்கொண்டு அந்த மக்களை அவர்கள் வழிநடத்தினார்கள். அவர்கள் பொறுமையாக உறுதியாக இருந்தபோது ஸப்ரோடு இருந்தபோது. நம்முடைய வேத வசனங்களை நம்பிக்கை கொண்டிருந்தது போன்று.
இந்த செய்தியை அல்லாஹு தஆலா கூறி நமக்கு படிப்பினை சொல்கிறான்; முஃமின்களே! உங்களுக்கு இந்த நபியின் மூலமாக வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், இந்த நபியின் மூலமாக உலக சமுதாயத்தை நீங்கள் வென்று ஓங்கி உயர்ந்து நீங்கள் வாழ வேண்டும் என்றால் நீங்கள் வேதத்தைப் பற்றிப் பிடிக்க வேண்டும். அப்படி நீங்கள் இருந்தால் தான் அல்லாஹ்வின் வாக்கு உங்களுக்கு உண்மையாகும்.
அதற்குப் பிறகு அல்லாஹ் மீண்டும் மறுமைக்கு நம்மை அழைத்துச் செல்கிறான்.
إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ
நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். (அல்குர்ஆன் 32:25)
கருத்து : மக்கள் என்னென்ன கருத்து முரண்பாடுகளை கொண்டிருக்கிறார்களோ அனைத்திலும் நாளை மறுமையில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான். எது உண்மை? எது சத்தியம்? என்பதிலே அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.
பிறகு அல்லாஹ் கேட்கிறான்:
أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ
இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றித் திரிந்த எத்தனையோ பல தலைமுறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:26)
கருத்து : நீங்கள் ஊர்களை சுற்றிப்பார்க்க வேண்டாமா? எத்தனை ஊரார்களை நாம் அழித்திருக்கிறோம்? எத்தனை நாடுகளை நாம் அழித்திருக்கிறோம்? அங்கெல்லாம் நீங்கள் சென்று வருகிறீர்களே! நீங்கள் படிப்பினை பெற வேண்டாமா? அல்லாஹ்வின் அத்தாட்சிகள் தெளிவாக உள்ளது. நீங்கள் அதை செவிகொடுத்து கேட்க வேண்டாமா?
பிறகு, அல்லாஹ் தஆலா, மறுமை நிகழும் என்பதற்கு ஒரு அத்தாட்சியை சொல்லிக் காட்டுகின்றான்.
أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ
நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகிற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 32: 27)
இறந்த பூமியை யாரால் ஒரு மழைத்துளியைக் கொண்டு உயிர்ப்பிக்க முடியுமோ கண்டிப்பாக அவன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். இந்த செய்தியை இந்த சூராவின் இறுதியில் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான்.
பிறகு அல்லாஹ் கேட்கின்றான்:
وَيَقُولُونَ مَتَى هَذَا الْفَتْحُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?” (அல்குர்ஆன் 32:28)
மக்கா காஃபிர்கள் நபியைப் பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அல்லாஹ் பதில் அளிக்கிறான்.
قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِينَ كَفَرُوا إِيمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ
(நபியே!) கூறுவீராக! “தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 32: 29)
வெற்றியின் நாளையிலே காஃபிர்களுக்கு அவர்கள் ஈமான் கொண்டாலும் அந்த ஈமான் பலனளிக்காது. அவர்களுக்கு கால அவகாசமும் கொடுக்கப்படாது.
அல்லாஹு தஆலா அந்த பத்ரு உடைய போரிலே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ
ஆக! (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக (நீர் அவர்களுக்கு எச்சரித்ததை) அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். (அல்குர்ஆன் 32:30)
கருத்து : நபியே யார் மனம் முரண்டாக உங்களின் உபதேசங்களை புறக்கணிக்கிறார்களோ வேதத்தை புறக்கணிக்கிறார்களோ அவர்களை நீங்களும் புறக்கணித்து விடுங்கள்! நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அவர்களும் எதிர்பார்க்கட்டும்! யாருக்கு அல்லாஹ்வுடைய வெற்றி கிடைக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அவர்களுடைய காலத்தில் நாம் வாழவில்லை என்றால் என்ன? இந்த குர்ஆனோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ரசூலுல்லாஹ் உடைய சீரா -வாழ்க்கை வரலாறோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈமான் இஸ்லாம் என்பது இறந்து விடக்கூடிய அது காலாவதியாகி விடக்கூடிய ஒன்றல்ல.
அல்லாஹு தஆலா நிரந்தரமான ஒரு ஷரீஅத்தை நிரந்தரமான ஒரு மார்க்கத்தை ஓதப்படும் வேத வசனங்களை நமக்கு இறக்கி அருளியிருக்கிறான்.
எதைக் கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் வெற்றி பெற்றார்களோ கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் வெற்றி பெற்றார்களோ அதை கொண்டு தான் அல்லாஹ் நமக்குரிய வெற்றியை வைத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் திரும்ப வேண்டும். ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவின் பக்கம் திரும்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையை சரி செய்ய வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதாக அதன் பக்கம் அழைப்பதாக இருக்க வேண்டும். நம்முடைய உயிரும் பொருளும் செல்வமும் திறமையும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு அந்த மார்க்கத்தை கற்பதற்கு பரப்புவதற்கு என்று நாம் எப்போது அர்பணிப்போமோ கண்டிப்பாக அல்லாஹு தஆலா ஸஹாபாக்கள் சமுதாயத்திற்கு கொடுத்த வெற்றியை நமக்கும் அல்லாஹு தஆலா கொடுப்பான். அல்லாஹ் அத்தகைய சமுதாயமாக நாம் வாழ்வதற்கு நம்முடைய வருங்கால தலைமுறையும் அத்தகைய ஒரு சமுதாயமாக உருவாகுவதற்கு அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
ما من رجلٍ يَسلُكُ طرِيقًا ، يَطلُبُ فيه عِلْمًا إلَّا سَهَّلَ اللهُ لهُ طريقَ الجنةِ ، و مَنْ أبْطأَ بهِ عملُهُ لمْ يُسرِعْ بهِ نَسبُهُ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع الصفحة أو الرقم: 5715 | خلاصة حكم المحدث : صحيح التخريج : أخرجه أبو داود (3643)، والدارمي (344)، وابن حبان (84).
எவரொருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குச் செல்லும் ஒரு பாதையை எளிதாக்குகிறான்; மேலும், எவருடைய செயல்கள் அவரைப் பின்தங்கச் செய்கின்றனவோ, அவருடைய வம்சாவளி அவரை விரைவுபடுத்தாது. அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3643.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/