மறுமைக்காக வாழ்வோம்! மனோ இச்சையை தடுப்போம்! | Tamil Bayan - 921
மறுமைக்காக வாழ்வோம்! மனோ இச்சையை தடுப்போம்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : மறுமைக்காக வாழ்வோம்! மனோ இச்சையை தடுப்போம்!
வரிசை : 921
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 22-11-2024 | 20-05-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் பாசத்திற்குரிய நேசத்திற்குரிய உயர்ந்த வழிகாட்டிகளாகிய குடும்பத்தார் மீதும் நமக்கெல்லாம் நட்சத்திரமாக விளங்கக்கூடிய அந்த இறைத்தூதரின் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக;
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் அன்பையும் அருளையும் அவனுடைய பாதுகாப்பையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்முடைய உலக வாழ்க்கையை எளிதாக்கி தருவானாக! பாவங்களை விட்டும் ஒவ்வொரு கெட்ட கொள்கைகள் கெட்ட செயல்கள் கெட்ட எண்ணங்கள் தீமைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலாவை வணங்கி நன்மைகளை செய்து அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு உதவி உபகாரங்கள் செய்து அல்லாஹ் பொருந்தி கொண்ட படி இந்த வாழ்க்கையை கழிப்பதற்கு அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் அருள் புரிவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! உலகமே நமக்கு ஒரு சோதனை தான். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா மிகப்பெரிய சோதனையாக இந்த உலக வாழ்க்கையை வைத்திருக்கிறான். இந்த சோதனையில் வெற்றி பெற்றால்தான் சொர்க்கம். இந்த சோதனையில் யார் தோற்றுவிட்டார்களோ அவர்கள் நேரடியாக செல்லக்கூடிய இடம் நரகமாக இருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
சொர்க்கம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
மக்களே தெரிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய பொருள்தான் விலை உயர்ந்தது.
உங்களிடத்தில் இருக்கக்கூடிய சொத்து சுகம் பொருள்கள் அல்ல. அல்லாஹ்வுடைய பொருள் தான் விலை உயர்ந்தது. அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய அந்த வியாபார பொருள் என்றால் என்ன? அல்லாஹ்வுடைய இந்த வியாபார பொருள் என்பது அதுதான் சொர்க்கம். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2450.
அந்த சொர்க்கம் சாதாரணமானது அல்ல. இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இரண்டு ஹதீஸ்களை பதிவு செய்கிறார்கள். ஒரு ஹதீஸிலே வருகிறது;
ومَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وما عَلَيْهَا
நீங்கள் உங்கள் கால்நடைகளை அடக்குவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு சாட்டையின் அளவு உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தால் அது உலகத்தை விட இன்னும் உலகத்தில் உள்ள அத்தனை பாக்கியங்களை விட சிறந்தது. (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2892.
மற்றும் ஒரு ஹதீஸிலே இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். சொர்க்கத்தில் வெறும் ஒரு பாத அளவு (ஒரு ஸ்கொயர் பீட்) ஒரு பாதம் அளவு இடம் கிடைப்பது உங்களுக்கு உலகத்தை விட உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6567.
ஒவ்வொரு சொர்க்கமும் ஏழு வானங்களை விட ஏழு பூமிகளை விட விசாலமாக இருக்குமே; அப்பேற்பட்ட சொர்க்கத்தை நாம் அடைய வேண்டும் என்றால் இந்த உலகத்திலே எத்தகைய சோதனைகளிலே நாம் வெற்றி பெற வேண்டும் யோசித்துப் பாருங்கள்!
நமக்கு முன்னால் இரண்டே இரண்டு தான். அந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை வைத்து தான் நாம் சொர்க்கத்திற்கு போற கூட்டமா? அல்லது நரகத்திற்கு போற கூட்டமா? என்று அல்லாஹுத்தஆலா எழுதுவான்.
وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ
இவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அ(ந்த மறுமை நாள் நிகழப்போவ)தில் அறவே சந்தேகம் இல்லை. ஒரு பிரிவு சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு பிரிவு நரகத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 42:7)
சொர்க்கம் யாருக்கு? சொர்க்கத்திற்குரிய கட்சி யாருடைய கட்சி? நரகத்திற்குரியவர்கள் யார்? அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். இரண்டே இரண்டு தேர்வு தான் நமக்கு முன்னால். அந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து விட வேண்டும். அதை வைத்து முடிவு செய்யப்படும்.
உனக்கு முன்னால் உன்னுடைய ரப்புடைய கட்டளை இருக்கிறது. அல்லாஹு தஆலாவின் மார்க்கம், அல்லாஹ்வுடைய தீன் அல்லாஹ் விரும்பக் கூடியது. அல்லாஹ் நபியின் மூலமாக உனக்கு வழிகாட்டியது.
நான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; தொழுகை தான். அல்லது நோன்பு தான். இப்படியாக சிறு அமல்களை வைத்து அதை செய்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது. இனி பிரச்சனை இல்லை என்று நினைக்கிறோம்.
தொழுகை தீனில் ஒரு அம்சம் ஒரு பகுதி. நோன்பு தீனில் ஒரு பகுதி. ஜக்காத் ஹஜ் அது மார்க்கத்தில் ஒரு பகுதி. மார்க்கம் என்பது ஒரு முஸ்லிம் ஒரு முஃமினுடைய பிறப்பிலிருந்து அவன் கண்ணை மூடுகிற வரை உள்ள வாழ்க்கை அல்லாஹ்வின் கட்டளைக்குள் வரவேண்டும். அதுதான் மார்க்கம். அது தான் தீன்.
முஸ்லிம்களாக இருக்கும் நிலையிலேயே தவிர நீங்கள் மரணிக்க கூடாது. (அல்குர்ஆன் 3:102)
எப்படி தக்பீர் கட்டும்போது, யா அல்லாஹ்! உனக்கு முன்னால் நான் கட்டுப்பட்டு விட்டேன். அல்லாஹு அக்பர்! உனக்கு முன்னால் நான் சரண் அடைந்து விட்டேன். உலகம் எனது ஆசை எனது தேவை எனக்கு முன்னால் இருந்த அத்தனை தேடல்கள் அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு உன்னை முன்னோக்கி விட்டேன். உங்களுடைய முகங்களை அல்லாஹ்வுக்கு முன்னோக்குங்கள்.
அனைத்தையும் புறக்கணித்து விட்டேன். அல்லாஹ்! நீ தான் எனக்கு என்று அந்த தொழுகையிலேயே கொண்டு வருகிறோமே அந்த நிலை நம்முடைய ஒரு தர்பியத்துடைய நிலை. அதோடு முடிந்து விடவில்லை.
நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? பலருடைய நினைப்பு அப்படித்தான். தொழுதுவிட்டால் போதும். பிறகு எவ்வளவு ஹராம் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை. தாராளமாக மோசடி செய்யலாம். வாக்குகளை மீறலாம். கடனை வாங்கி கொடுக்காமல் இருக்கலாம். வியாபாரத்தில் கள்ளத்தனம் செய்யலாம். குடும்பத்திலே அத்துமீறலாம். உறவுகளை முறிக்கலாம்.
சகோதரர்களே! இதுதான் மன இச்சை. அல்லாஹு தஆலா சோதிக்கிறான். உன்னுடைய வாழ்க்கையை இந்த தொழுகையை கொண்டு நீ மாற்றினாயா? உன்னுடைய வாழ்க்கையை நோன்பை கொண்டு நீ மாற்றினாயா? ஜகாத்தை கொண்டு மாற்றினாயா? எந்த இபாதத்துகள் வாழ்க்கையை மாற்ற உதவ வில்லையோ அந்த இபாதத்துகளை கொண்டு நாம் அல்லாஹ்வை வணங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
ஏதோ நாம் ஒரு திருப்தி அடைந்திருக்கிறோம். நமக்கு நாமே ஒரு திருப்தி அவ்வளவுதான். எந்த வணக்க வழிபாடுகள் அந்த வணக்க வழிபாடுகளை செய்பவரை அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு வந்து நிறுத்துகிறதோ அல்லாஹ்வுடைய அச்சத்தை அவருடைய உள்ளத்தில் உருவாக்கி அவர் எங்கு திரும்பினாலும் என்னுடைய ரப் என்னை பார்க்கிறான்; என்னுடைய ரப்புக்கு முன்னால் நான் இருக்கிறேன்; இது எனது ரப்புடைய கட்டளை; இதை நான் செய்வேன்; இது எனது ரப்பு தடுத்தது; நான் செய்ய மாட்டேன் என்ற நிலைக்கு அந்த இபாதத்துகள் கொண்டு வர வேண்டும். அதுதான் இபாதத். அந்த இபாதத்துகள் தான் அல்லாஹ்வை வணங்குவதற்காக செய்யப்பட்ட இபாதத்துகள். இல்லை என்றால் அவை ஒரு சடங்குகள். அவ்வளவுதான்.
பல மதத்தவர்கள் சில சடங்குகளை செய்வதை போல நாமும் சில சடங்குகளை செய்து நம்மை நாமே திருப்தி படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! இரண்டாவது சோதனை என்ன? நாம் விரும்பியபடி நடப்பது. நம்முடைய மனம் விரும்பும் படி நடப்பது. அல்லது அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாற்றமாக நம்முடைய பெற்றோர் விரும்புகிறார்கள் அல்லவா; நம்முடைய குடும்பத்தார்கள் விரும்புகிறார்கள் அல்லவா; நம்முடைய ஊர்க்கலாச்சாரம் விரும்புகிறது அல்லவா அதற்கு ஏற்ப நடப்பது.
மன இச்சை, மன ஆசையை பின்பற்றுவது. அது தன்னுடைய ஆசையாக இருக்கட்டும்; மனைவியின் ஆசையாக இருக்கட்டும்; பிள்ளைகளின் ஆசையாக இருக்கட்டும்; அல்லாஹ்வுடைய கட்டளையை தவிர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளையை தவிர பிற மனிதர்களுடைய விருப்பங்களை ஆசைகளை பின்பற்றி ஒரு மனிதன் தன்னை படைத்த ரப்புக்கு தனக்கு வழிகாட்டியாக ரசூலாக அல்லாஹ்விடத்தில் நாம் நெருங்குவதற்கு நமக்கான இமாமாக நமக்கான வழிகாட்டியாக முன்மாதிரியாக அல்லாஹ் யாரை தேர்ந்தெடுத்தானோ அந்த நபிக்கு மாறு செய்தால், யாருடைய மனவிருப்பங்களையும் ஆசைகளையும் பின்பற்றி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அவருடைய தங்கும் இடம் நரகம் தான். இதுதான் டெஸ்ட். இந்த சோதனையை நாம் புரிய வேண்டும்.
ஏதோ தொழுதோம்; முடித்தோம்; சென்றோம்; என்று இல்லை. வாழ்க்கையை புரிய வேண்டும். மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் என்னவோ அலட்சியத்திலே இருப்பதால் அப்படியே ஒவ்வொன்றை கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு பல வசனங்களில் சொல்லக்கூடிய உத்தேசம்;
وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
அலட்சியக்காரர்களில், மறதியாளர்களில், அறியாதவர்களில், விவரமற்றவர்களில் நபியே நீங்கள் ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 7:205)
அல்காஃபில் என்றால் யார்? எதையும் பொருட்படுத்தாதவர். எதையும் கண்டு கொள்ளாதவர். எதைப் பற்றியும் உணர்வில்லாதவர். எதனுடைய நன்மையையும் அறிய மாட்டார். எதனுடைய விபரீதத்தையும் அறிய மாட்டார்.
اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
அல்லாஹ் சொல்கிறான் அல்லவா; இந்த மக்களை பற்றி கால்நடைகளை போல. இல்லை அதைவிட வழி கெட்டவர்கள். (அல்குர்ஆன் 7:179)
அதுவாவது தன்னுடைய எஜமானன் அழைத்தால் திரும்பி பார்க்கும். தன்னுடைய ரப்புடைய அழைப்பை தன்னுடைய நபியுடைய அழைப்பை திரும்பிப் பார்க்காதவர்கள் கால்நடைகளை விட மோசமானவர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த மன இச்சை இருக்கிறதே மோசமான ஒன்று. நம்முடைய நஃப்ஸ் ஹலாலை விரும்பும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஹராமுடைய ஓரத்திற்கு இழுத்துச் செல்லும். பிறகு அதிலே கொஞ்சம் பழக்கும். இது அனுமதிக்கப்பட்டது தானே. கொஞ்சம் தானே? இதில் என்ன தவறு இருக்கிறது? சிறிய பாவம் தானே? சிறிய தவறு தானே? நமது எண்ணம் நல்ல எண்ணம் தானே? இப்படியாக மனிதனை அப்படியே ஒரு மெஸ்மரைஸம் அவனை மயக்கி அவனை அலங்கரித்து அலங்கரித்து கடைசியிலே கொண்டு போய் அவனை பெரும் பாவத்திலே தள்ளி, அதிலே மூழ்கடித்து, ருசி காண வைத்து, அவனுடைய ஈமானை பறித்து, அவனுடைய இக்லாஸை பறித்து, அவனுடைய தக்வாவை பறித்து, இறுதியாக அவனுடைய இபாதத்துகளில் இருக்கக்கூடிய அத்தனை ருசிகளையும் ஈடுபாடுகளையும் பறித்து, அவனை ஒரு எம்டி மனிதனாக ஈமானை விட்டு இக்லாசை விட்டு தக்வாவை விட்டு காலியான ஒரு மனிதனாக ஆக்கிவிடும். பிறகு எந்த நேரத்தில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடிய அந்த நம்பிக்கையும் பறிபோகுமோ அல்லாஹ் அறிந்தவன்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் தஆலா இந்த மன இச்சை பற்றி எத்தனை வசனங்களிலே எச்சரிக்கிறான் பாருங்கள்!
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ فَاِنَّ الْجَـنَّةَ هِىَ الْمَاْوٰى
ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ, (அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும். (அல்குர்ஆன் 79:40,41)
சொர்க்கத்திற்கான பாதையை அல்லாஹ் சொல்கிறான். யார் தன்னுடைய ரப்புக்கு முன்னால் நிற்க வேண்டும் என்பதை பயப்படுகிறாரோ, தொழுகையினால் அந்த பயம் வர வேண்டும். நோன்பினால் அந்த பயம் வர வேண்டும். பிறகு அந்த பயம் நம்முடைய கொடுக்கல் வாங்கலிலே இருக்க வேண்டும். பிறகு அந்த பயம் நம்முடைய குடும்ப வாழ்க்கையிலே இருக்க வேண்டும். நம்முடைய தனிமையிலே இருக்க வேண்டும்.
மன இச்சையை விட்டு மன விருப்பத்தை விட்டு நஃப்ஸ் விரும்பும் வழிகளில் எல்லாம் செல்லாமல் இந்த நஃப்சை தடுக்கிறான். நஃப்ஸ் போன போக்கிலே போகாமல் அந்த நஃப்சை தடுக்கிறான். அல்லாஹ்வுடைய கட்டளைக்குள் கொண்டு வந்து அந்த நஃப்சை பக்குவப்படுத்துகிறான். நிறுத்துகிறான் என்றால் அல்லாஹ் சொல்கிறான்; அவருடைய தங்கும் இடம் சொர்க்கமாக இருக்கும்.
சகோதரர்களே! இதுதான் இபாதத். நம்முடைய நஃப்ஸுக்கு மாற்றம் செய்யும்போதெல்லாம் நாம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! நம்முடைய நஃப்ஸுக்கு மாற்றம் செய்யாமல் அது கொடுக்கக்கூடிய அந்த ஆசைகளின் பின்னால் அது தூண்டக்கூடிய ஆசைகளின் பின்னால் சென்றால் நாம் ரப்புக்கு மாறு செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த நஃப்ஸுக்கு இபாதத் பிடிக்காது. இந்த நஃப்ஸுக்கு நல்லது பிடிக்காது. இந்த நஃப்ஸுக்கு அல்லாஹ்விடம் நெருங்குவது பிடிக்காது. இந்த நஃப்ஸ் ஷைத்தானோடு தோழமைக் கொள்ளும்.
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் சொன்னார்கள்;
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ
“நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்).
கருத்து : நான் என்னையே எப்படி பரிசுத்தவான் நல்லவன் என்று பீத்திக் கொள்ள முடியும்?! ஒருபோதும் அப்படி செய்ய மாட்டேன். நிச்சயமாக நஃப்ஸ் தீமையை தான் தூண்டக்கூடியது. (அல்குர்ஆன் 12:53)
நஃப்ஸுக்கு கடிவாளம் இட்டு சாட்டையால் அடித்து அல்லாஹ்வுடைய கட்டளைக்குள் கொண்டு வந்து நிறுத்தவில்லை என்றால் அவ்வளவுதான் நம்மை நரகத்தில் தள்ளாமல் அது நிம்மதி அடையாது. இறுதியில் அதுவும் சேர்ந்து அந்த நரகத்திலே வேதனைப்படும்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களுக்கும் அல்லாஹு தஆலா இந்த கட்டளையை சொல்கிறான். மன விருப்பங்களை மனதின் ஆசைகளை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்!
தாவூத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உபதேசம் செய்கிறான். அவர்கள் எப்பேற்பட்ட வணக்கசாலி! அல்லாஹ் தாவூதை புகழ்கிறான்;
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ نِعْمَ الْعَبْدُ اِنَّـهٗۤ اَوَّابٌ
தாவூதுக்கு நாம் சுலைமானை (நல்ல சந்ததியாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவரும் தொழுபவரும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிந்து நடப்பவரும் ஆவார்.) (அல்குர்ஆன் 38:30)
அடியார்களிலேயே சிறந்த அடியார் தாவூத். அல்லாஹ்வை வணங்குவதிலே மூழ்கியவர் என்று அல்லாஹ் அவரை புகழ்கிறான்.
அப்பேற்பட்ட வணக்கசாலி! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்முடைய நபியவர்கள் நபி தாவூதை புகழ்கிறார்கள். நோன்பு வைக்க வேண்டுமா? நோன்புகளிலேயே சிறந்த நோன்பு நபி தாவூதுடைய நோன்பு. (குறிப்பு:3)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1976.
வாழ்நாள் எல்லாம் மன்னராக இருந்து மிகப்பெரிய ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் ஒரு நாள் நோன்பு வைப்பார்கள். ஒரு நாள் நோன்பு இல்லாமல் இருப்பார்கள். வாழ்நாள் எல்லாம் இதுதான் அவர்களுடைய (தர்த்திபாக) வழக்கமாக இருந்தது. வாரங்களில் சில பகல்கள் உட்பட இரவை மட்டுமல்ல பகல்கள் உட்பட தன்னுடைய ரப்பிடத்தில் பேசுவது. அவனை வணங்குவதற்கு மட்டுமே என்று ஒதுக்கி கொண்டவர்கள்.
இன்று ரப்பிடத்திலே பேசுவதற்காக நாம் ஒதுக்கிய தொழுகையில் கூட அல்லாஹ்விடத்திலே பேசுகிறோமா? என்று தெரியவில்லை. அங்கே கூட வேறு யாரிடத்திலோதான் பேசிக் கொண்டிருக்கிறோம். தொழுகை என்பது வெறும் நிற்பது குனிவது பூமியிலே நெற்றியை வைப்பது மட்டும் அல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
إنَّ أحَدَكُمْ إذَا قَامَ في صَلَاتِهِ فإنَّه يُنَاجِي رَبَّهُ
அடியான் தொழுகைக்கு நின்றால் தன்னுடைய ரப்பிடத்திலே ரகசியமாக க்ளோஸ் ஆக தனியாக பேச நின்று விடுகிறான். (குறிப்பு:4)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405.
முனாஜாத் என்றால் என்ன? நெருக்கமானவரோடு விருப்பமானவரோடு யாரிடத்தில் இன்னும் சிறிது நேரம் கழிக்கலாம்; பிரிந்து போக மனம் இல்லாமல் பிரிந்தாலும் பிரிந்து போக மனம் இல்லாமல் இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க மாட்டாரா? இவரிடத்திலே பேசுவதற்கு; இவரை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமா? நாலு வார்த்தை நாம் இவரிடத்திலே இன்னும் அதிகமாக பேச முடியாதா? இவர் நம்மிடத்திலே இன்னும் சில வார்த்தைகள் பேச மாட்டாரா? அப்படி சிலர் இருப்பார்கள் அல்லவா;
அவர்களிலேயே நமக்கு மிக உயர்ந்தவன் நம்முடைய ரப் அல்லாஹு தஆலா தான். அவனைவிட அழகானவன் யார்? அவனைவிட நமக்கு கொடை கொடுத்த கொடை வள்ளல் யார்? அவனை விட நம்மை மன்னித்தவர்கள் யார்?
சில நேரங்களில் மனைவி மன்னிப்பதில்லை. சில நேரங்களில் கணவன் மன்னிப்பதில்லை. பிள்ளைகளை பெற்றோர் மன்னிப்பதில்லை. பெற்றோரை பிள்ளைகள் மன்னிப்பதில்லை. நண்பனை நண்பன் மன்னிப்பதில்லை. எத்தனை முறை பாவம் செய்து வந்தாலும், யா அல்லாஹ்! நான் இனி செய்ய மாட்டேன்; மன்னித்துவிடு என்று சொன்னால் மன்னித்து விட்டேன். உனது பாவங்களை அழித்து விட்டேன் என்று சொல்லக்கூடிய தயாளன் அல்லவா!
அல்லாஹ் என்று சொல்ல சொல்ல என்றைக்காவது அலுப்பு தட்டி இருக்கிறதா? யா ரப்! என் இறைவா! என்று சொல்லும் பொழுது இந்த உள்ளம் நிரம்புகிறதே! நிரம்ப வேண்டும் மனப்பூர்வமாக! ரப்பி! யா ரஹ்மான்! என்று அழைக்கும் பொழுது இந்த உள்ளம் அப்படியே அல்லாஹ்வுடைய அன்பால் அல்லாஹ்வுடைய பாசத்தால் நேசத்தால் பொங்கி எழ வேண்டும். அப்போது கண்களில் இருந்து கண்ணீர் வரவேண்டும்.
உனக்கு அர்ஷிலே இடம் ரிசர்வ் செய்யப்பட்டு விட்டது. அல்லாஹ்வை நினைத்து உன்னுடைய கண்கள் கலங்கி விட்டால் உனக்கு அல்லாஹ்வுடைய அந்த மறுமை நாளிலே அல்லாஹ்வுடைய நிழலிலே உனக்கு இடம் ரிசர்வ் செய்யப்பட்டு விட்டது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660,1423.
அத்தகைய தாவூத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் ஒரு நாள் நோன்பு வைப்பார்கள். ஒரு நாள் நோன்பு இல்லாமல் இருப்பார்கள். வாழ்நாள் எல்லாம் மரணம் வரை இதுதான் அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அந்த நபிக்கு அல்லாஹ் சொல்கிறான்; தாவூதே! மன விருப்பத்தை பின்பற்றி விடாதீர்! மன ஆசையை பின்பற்றி விடாதீர்! அந்த நபியின் மனமே அவரைக் கெடுத்து விடும். அல்லாஹு அக்பர்!
يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ
தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! சுய விருப்பத்தை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து (மக்களை) வழிகெடுப்பார்களோ - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்த காரணத்தால். (அல்குர்ஆன் 38:26)
சகோதர்களே! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நம்முடைய நஃப்ஸுடைய பேச்சை எல்லாம் நாம் கேட்டால் உருப்படுவோமா? நம்முடைய நஃப்ஸ் விரும்புவதை எல்லாம் நாம் செய்தால் இந்த மார்க்கத்திலே நாம் எங்கேயாவது ஒரு ஓரத்திலாவது இருக்க முடியுமா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா கொடுக்கக்கூடிய கட்டளையை பாருங்கள்! நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகிலே, ஷைத்தான் நெருங்க முடியாது. சைத்தானுடைய தீண்டுதலிலிருந்து ஊசலாட்டங்களிலிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா அறிவுரை சொல்கிறான்;
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 18:28)
கருத்து : அல்லாஹு தஆலா நம்முடைய நபிக்கு உபதேசம் செய்கிறான். நபியே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்! உங்களை அடக்குங்கள்!
சகோதரர்களே! நாமாக நம்மை கட்டுப்படுத்தவில்லை என்றால் அடக்கவில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. நம்முடைய ஆசையின் மீது நம்முடைய பாதத்தை வைக்க வேண்டும். நம்முடைய விருப்பத்தின் மீது நம்முடைய பாதத்தை வைக்க வேண்டும்.
நபியே உங்களது நஃப்ஸை அடக்குங்கள் கட்டுப்படுத்துங்கள்! நீங்கள் யாரோடு சேர்ந்து இருக்க வேண்டும்? யார் காலையில் மாலையிலும் வழக்கமாக தொடர்ந்து அல்லாஹ்வை வணங்குகிறார்களோ; ஃபஜ்ருடைய தொழுகையை இஷா உடைய தொழுகையை சரியாகத் தொழுகிறார்களோ; யார் ஜமாஅத்தோடு தொழுகிறார்களோ; யார் அல்லாஹ்வை தியானிப்பதிலே ஈடுபடுகிறார்களோ அவர்களோடு நீங்கள் இருங்கள்! இவர்கள்தான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடியவர்கள்.
அதற்கு அடுத்து அல்லாஹ் சொல்கிறான்; நபியே இவர்களை விட்டும் உங்கள் கண்கள் திரும்பி விட வேண்டாம். இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரங்களை அலங்காரங்களை பார்த்து நீங்கள் இந்த நல்லவர்களை விட்டு எங்கும் சென்று விடாதீர்கள்! அது மட்டும் அல்ல; நபியே! யாருடைய உள்ளத்தை மறதியில் நாம் ஆக்கிவிட்டோமோ யாருடைய உள்ளம் மறதியில் விழுந்து விட்டதோ யார் தன்னுடைய மன விருப்பத்தின்படி செல்கிறார்களோ நபியே அவர்களுடைய வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்!
யார், மன இச்சையை பின்பற்றுகிறானோ அவனுடைய காரியம் எப்போதும் வரம்பு மீறியதாகவே இருக்கும். மார்க்கத்தில் நிலைத்திருக்க முடியாது.
சகோதரர்களே! ஒன்று தீன். அல்லது ஹவா.. அல்லாஹ்வுடைய மார்க்கம். அல்லாஹ்வுடைய கட்டளை. இல்லை என்றால் நஃப்ஸுடைய ஆசை. அல்லாஹ்வுடைய கட்டளையில் நிற்பது தான் நமக்கு வெற்றியாக இருக்கும்.
கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள்! அது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ்கள்! ஒன்றல்ல எத்தனை ஹதீஸ்களிலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கின்றார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 3045.
மூன்று காரியங்கள் ஒரு மனிதனை அழித்து நாசமாக்க கூடியது என்று சொல்கிறார்கள். மிகப்பெரிய கருமித்தனம். நஃப்ஸ் சொல்லக்கூடிய கஞ்சத்தனத்தை அப்படியே கேட்டு விடுவது.
எத்தனை செல்வந்தர்கள் இருக்கிறார்கள்! தங்களது பெற்றோருக்கு செலவு செய்வதில் கூட கருமித்தனம் காட்டுவார்கள். பெற்றோருக்கு கொடுப்பதில் கூட கணக்கு பார்ப்பார்கள். எவ்வளவு மோசமான அயோக்கியத்தனமான கஞ்சத்தனம்! கஞ்சத்தனத்திலே மிகப்பெரிய கஞ்சத்தனம் அந்த செல்வத்தை ஏழைகளுக்கு உறவுகளுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
அடுத்தது; பின்பற்றப்படும் மன இச்சை. தன் நஃப்ஸ் சொல்றதை கேட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பான். எதை நஃப்ஸ் செய்ய சொல்லுதோ; அது ஹராமா? ஹலாலா? மார்க்கமா? மார்க்கத்திற்கு உட்பட்டதா? என்று பார்க்காமல் நஃப்ஸ் விரும்பியதை செய்து கொண்டே இருப்பான். தன்னை தானே பெரிய ஆளாக கருதுவது. தன்னை தானே ஒரு பெரியவனாக கருதி கொள்வது. இந்த மூன்றும் ஒரு மனிதனை அழித்துவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அழகான மற்றும் ஒரு ஹதீஸிலே சொல்லுகிறார்கள்;
الكَيِّسُ مَن دان نفسَه وعمِل لما بعدَ الموتِ والعاجِزُ مَن أتبَع نفسَه هَواها وتمنَّى على اللهِ الأمانِيَّ
அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2459.
புத்திசாலி யார் தெரியுமா? யார் தன்னுடைய நஃப்ஸை கட்டுப்படுத்தினானோ அடக்கினானோ மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக அமல் செய்து கொண்டானோ அவன் தான் புத்திசாலி. அவன் தான் ஸ்மார்ட். பலவீனமானவன், வழி கெட்டவன், புத்தி இல்லாதவன், அரைகுறை புத்தியுள்ளவன் யார் தெரியுமா? தன்னுடைய நஃப்ஸ் சொல்லக்கூடிய ஆசைகளுக்கு பின்னால் யார் செல்கிறானோ; பிறகு அல்லாஹ்வின் மீது அவன் ஆசை கொள்கிறான்.
ஆடல் பாடல் களியாட்டம் என்று எல்லா ஹராமித்தனத்தையும் செய்து கொண்டு ஆபாசங்களின் உச்சத்தில் சென்று கொண்டு கேட்டால் ஒரு தஸ்பீஹ் மணியை சுத்திக் கொண்டு அல்லாஹ் கரீம் அல்லாஹ் கரீம் என்று சொல்வார்கள்.
இது, அல்லாஹ்வை பரிகாசம் செய்வது. ரப்புல் ஜலால் ரப்புல் அர்ஷை பரிகாசம் செய்வது. அல்லாஹ் கரீம் என்று நீ உணர்ந்திருந்தால் அல்லாஹ்விற்கு மாறு செய்திருக்க மாட்டாய்! அவன் மீது ஆசை உனக்கு வந்திருக்கும். உன்னுடைய பாவத்தால் அவன் கோபப்படுவான் என்பதை புரிந்திருப்பாய்.
அன்பான அடியார்களே! இந்த மன இச்சையை குறித்து நம்முடைய மார்க்க அறிஞர்கள் நிறைய எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். ஹசன் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே ஒருவர் கேட்டார்; போர் யுத்தங்களிலேயே சிறந்த யுத்தம் எது? என்று.
சொன்னார்கள்; உன்னுடைய மன இச்சை இடத்திலே முதலிலே நீ போராடு! உன்னுடைய மன இச்சையோடு நீ முதலிலே போராடு! அதை நீ அடக்க பழகிக்கொள்! அது ஜிஹாதுகளிலே சிறந்த ஒரு ஜிஹாதாகும்.
இன்னும் சில அறிஞர்கள் சொன்னார்கள்; உலகத்திலேயே சொர்க்கத்திற்கு நம்மை கொண்டு செல்லக்கூடிய வாகனங்களிலேயே விரைந்து செல்லக்கூடிய வாகனம் எது தெரியுமா? உலக ஆசை இல்லாமல் இருப்பது. உலகப்பற்று இல்லாமல் இருப்பது. நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாகனங்களிலேயே ரொம்ப விரைவாக நரகத்தில் கொண்டு போய் தள்ளக்கூடிய வாகனம் எது தெரியுமா? மன இச்சைகளை பின்பற்றுவது. யார் தன்னுடைய மன இச்சை என்ற வாகனத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டானோ அது அவனை விரைவாக கொண்டு போய் நரகத்திலே தள்ளிவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்; மக்களே நீங்கள் ஒரு காலத்தில் இருக்கிறீர்கள். இந்த காலத்தில் சத்தியம் மனிதர்களின் ஆசைகளை கட்டுப்படுத்துகிறது. இழுத்துச் செல்கிறது. இன்னொரு காலம் வரும். அந்தக் காலத்திலே மன இச்சை சத்தியத்தை இழுத்துச் செல்லும். அப்படிப்பட்ட காலத்திலே மக்கள் இருப்பார்கள்.
மார்க்க அறிஞர்களின் நிலைமைகள் மோசமாகி கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரட்டுகிறார்கள். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஃபத்வாக்கள் கொடுக்கப்படுகின்றன. மக்களுடைய ஆசைகளுக்கு ஏற்ப ஹலாலை ஹராம் ஆக்குவது. ஹராமை ஹலால் ஆக்குவது நடைபெறுகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வின் அடியார்களில் கெட்டவர்கள் யார் தெரியுமா? அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வுடைய ஹராமை ஹலால் ஆக்குவதற்காக வேண்டி சட்டங்களை தேடுகிறார்கள் அல்லவா அவர்கள் தான் என்று ஹசன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்லுகிறார்கள்.
இது மிகப்பெரிய நஃப்ஸுடைய ஹவா. ஒரு மனிதன் ஒரு பெரும் பாவத்தை அசிங்கத்தை செய்கிறான் என்றால் அதுவும் நஃப்ஸ்; அதுவும் ஹவா. அதைவிட பெரிய ஹவா என்ன தெரியுமா? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நம்முடைய நஃப்ஸுக்கு ஏற்ப வளைப்பது. பித்அத்துகள் செய்வது. ஹராமை ஹலால் என்று ஃபத்வா கொடுப்பது. ஹலாலை ஹராம் என்று ஃபத்வா கொடுப்பது. அல்லாஹ்வுடைய சட்டங்களை திரிப்பது. செல்வந்தர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு ஏற்ப ஃபத்வாக்களை மாற்றுவது. இது மிகப்பெரிய ஹவா. இஸ்ரவேலர்கள் இதைத்தான் செய்தார்கள். அதனால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்; நீங்கள் அந்த மனிதர்களில் ஆகிவிடாதீர்; யார், மார்க்கம் மன இச்சைக்கு ஏற்ப இருந்தால் அவர்கள் பின்பற்றுவார்கள். மார்க்கம் இவருடைய மன இச்சைக்கு மாற்றமாக இருந்தால் மார்க்கத்தை விட்டு விடுவார்களே அவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தீன் என்பது நம்முடைய முழு வாழ்க்ககுரிய தீன். அல்லாஹ்வுடைய பயம் என்பது நம்முடைய முழு வாழ்க்கையில் இருக்க வேண்டும். பெரும் பாவங்கள் மட்டுமல்ல; ஷிர்க்குகள் மட்டுமல்ல; அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சலுகைகளை தேடுவது; அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஹராமை ஹலால் ஆக்க முயற்சி செய்வது; அல்லாஹ்வுடைய கட்டளைகளை மறைப்பது; அல்லாஹ்வுடைய கட்டளைகளை மாற்றுவது; இதுவெல்லாம் மிகப்பெரிய ஹவா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோன்று நம்முடைய பொது வாழ்க்கையிலும் நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும் நம்முடைய பொருளாதார வாழ்க்கையிலும் இந்த நஃப்ஸுக்கு நாம் கடிவாளம் இட்டு அல்லாஹ் ஹலால் ஆக்கியதைக் கொண்டு திருப்தி அடைந்து, அதிலும் நமக்கு போதுமானதைக் கொண்டு திருப்தி அடைந்து, அதிலும் எல்லை மீறி விடாமல் ஹராமில் இருந்து முற்றிலுமாக விலகி நம்முடைய நஃப்ஸை தடுக்கும் போது தான் அல்லாஹ்விடத்திலே முழுமையான வெற்றிக்கு உரியவர்களாக நாம் ஆகுவோம்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த முழுமையான வெற்றியை தருவானாக! நம்முடைய நஃப்ஸ் நம்மை வழி கெடுப்பதிலிருந்து, சைத்தான் நம்மை வழி கெடுப்பதிலிருந்து, ஊசலாட்டங்களிலிலிருந்து, அதுபோன்று பாவத்தை நன்மையாக அலங்கரிப்பதிலிருந்து அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
من خافَ أدلَجَ ، ومن أدلَجَ بلغَ المنزلَ ، ألا إنَّ سلعةَ اللَّهِ غاليةٌ ، ألا إنَّ سلعةَ اللَّهِ الجنَّةُ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم: 2450 | خلاصة حكم المحدث : صحيح
எவர் அஞ்சுகிறாரோ, அவர் இரவிலேயே பயணம் செய்வார் - மேலும் எவர் இரவிலேயே பயணம் செய்கிறாரோ, அவர் தனது இலக்கை அடைந்துவிடுவார். அறிந்து கொள்க! அல்லாஹ்வின் சரக்கு மிகவும் விலை உயர்ந்தது, நிச்சயமாக அல்லாஹ்வின் சரக்கு சொர்க்கமே!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2450.
குறிப்பு: (2)
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: رِبَاطُ يَومٍ في سَبيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وما عَلَيْهَا، ومَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وما عَلَيْهَا، والرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ في سَبيلِ اللَّهِ، أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وما عَلَيْهَا. الراوي : سهل بن سعد الساعدي | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 2892 | خلاصة حكم المحدث : [صحيح]
இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில், ஒரு சாட்டை வைக்குமளவுக்கு இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும். ஓர் அடியார் இறைவழியில் (அறப்போரில்) செல்கின்ற மாலை நேரம், அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றைவிடவும் சிறந்ததாகும்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2892.
குறிப்பு: (3)
عن عبدِ اللهِ بنِ عَمرٍو رَضِيَ اللهُ عنهما قال: ((أُخبِرَ رَسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم أنِّي أقولُ: واللهِ لأصومَنَّ النَّهارَ، ولأقومَنَّ اللَّيلَ ما عِشْتُ، فقُلتُ له: قد قلْتُه بأبي أنت وأمي، قال: فإنَّك لا تستطيعُ ذلك، فصُمْ وأفطِرْ، وقُمْ ونَمْ، وصُمْ مِن الشَّهرِ ثلاثةَ أيَّامٍ؛ فإنَّ الحَسَنةَ بعَشْرِ أمثالِها، وذلك مِثلُ صِيامِ الدَّهرِ. قلتُ: إنِّي أطيقُ أفضَلَ من ذلك. قال: فصُمْ يومًا وأفطِرْ يَومَينِ. قلتُ: إنِّي أُطيقُ أفضَلَ من ذلك. قال: فصُمْ يومًا وأفطِرْ يومًا؛ فذلك صيامُ داودَ عليه السَّلامُ، وهو أفضَلُ الصِّيامِ. فقُلتُ: إنِّي أُطيقُ أفضَلَ من ذلك. فقال النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: لا أفضَلَ مِن ذلك ))
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘‘என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே” என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது உம்மால் முடியாது. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள்.
நான், ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்” என்றார்கள். நான் ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1976.
குறிப்பு: (4)
أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ رَأَى نُخَامَةً في القِبْلَةِ، فَشَقَّ ذلكَ عليه حتَّى رُئِيَ في وجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بيَدِهِ، فَقالَ: إنَّ أحَدَكُمْ إذَا قَامَ في صَلَاتِهِ فإنَّه يُنَاجِي رَبَّهُ، أوْ إنَّ رَبَّهُ بيْنَهُ وبيْنَ القِبْلَةِ، فلا يَبْزُقَنَّ أحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، ولَكِنْ عن يَسَارِهِ أوْ تَحْتَ قَدَمَيْهِ ثُمَّ أخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَصَقَ فيه ثُمَّ رَدَّ بَعْضَهُ علَى بَعْضٍ، فَقالَ: أوْ يَفْعَلُ هَكَذَا.
الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم: 405 | خلاصة حكم المحدث : [صحيح]
கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)னார்கள்.
பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது, ‘அவர் தம் இறைவனுடன் அந்தரங்கமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கிறான்’. ஆகவே, உங்களில் யாரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப் புறமோ அல்லது தம் பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறி விட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/