மனிதனை மிருகமாக்கும் மன இச்சை!! | Tamil Bayan - 924
மனிதனை மிருகமாக்கும் மன இச்சை!!
ஜுமுஆ குத்பா தலைப்பு : மனிதனை மிருகமாக்கும் மன இச்சை!!
வரிசை : 924
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-11-2024 | 27-05-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பை வேண்டியவனாக; பாதுகாப்பை வேண்டியவனாக; மறுமையின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் தஆலா ஏற்றுக்கொள்வானாக! பொருந்தி கொள்வானாக! நம்மை மன்னிப்பானாக!
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! சென்ற ஜுமுஆவிலே பேசிய உரையின் தொடராக, நமக்கு மிகப்பெரிய ஒரு சோதனையாக இருக்கக்கூடிய மன இச்சை என்ற அந்த தீமையை பற்றி தான் இன்ஷா அல்லாஹ் இந்த குத்பாவிலும் நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலாவதாக அல்குர்ஆனுடைய வசனத்தை பார்ப்போம். நம் மீது கருணை உள்ள, பாசமுள்ள, இரக்கம் உள்ள, நாமெல்லாம் சொர்க்கவாசிகளாக ஆக வேண்டும் என்று அந்த ஆசை, நம்மில் யாரும் நரகத்தில் சென்று விடக்கூடாது என்ற ஒரு அடிப்படையிலே அல்லாஹு தஆலா இந்த குர்ஆனிலே நமக்கு பல உண்மைகளை விளக்கித் தருகிறான்.
ஏமாந்து விடாதீர்கள்! மயங்கி விடாதீர்கள்! ஷைத்தானின் வலைகளிலே விழுந்து விடாதீர்கள்! ஆபாசங்கள் அசிங்கங்களிலே நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வுடைய உபதேசங்கள். எவ்வளவு கருணையானது பாருங்கள்! நம்மை படைத்தான். பரிபாலிக்கிறான். நமக்கு எது நல்லது கெட்டது என்பதை அவன் விளக்கிக் கொடுக்கிறான். நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகுங்கள் நரகவாசிகளாக ஆகிவிடாதீர்கள் என்று அந்த பாசக்காரன், கருணையாளன், அந்த ரஹ்மான், வதூத் நமக்கு உபதேசம் செய்து சொல்கிறான் பாருங்கள்!
நம்மை எதுவெல்லாம் அல்லாஹ்வுடைய நேரான பாதையில் இருந்து வழி தவற செய்யும்? எது நம்மை அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாக்கி விடும்? எதனால் நம்முடைய உள்ளங்கள் இருள் அடைந்து விடும்? இறுகிவிடும்? உள்ளத்திலே ஈமானிய பிரகாசம் எடுபட்டு விடும்?
அல்லாஹு தஆலா சொல்கிறான்;
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. (அல்குர்ஆன் 3:14)
வசனத்தின் விளக்கம் : மக்களே! உங்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அழகாக்கப்பட்டுள்ளது. மனதினுடைய இச்சைகள், அற்பமான சில ஆசைகள் அவற்றை மோகம் கொள்வது; அவற்றைத் தேடி ஓடுவது; அவற்றை நோக்கி விரைவது; அவற்றிலே விழுவது உங்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதில் முதலாவதாக சொல்கிறான்; பெண்கள். அடுத்து, ஆண் பிள்ளைகள். அடுத்து, தங்கம் வெள்ளியின் குவியல்கள். பிறகு; அடையாளம் இடப்பட்ட குதிரைகள், கால்நடைகள், விவசாயங்கள். இவை எல்லாம் இந்த அற்பமான உலகத்தினுடைய இன்பங்கள் தான். அல்லாஹ்விடத்தில் அழகிய மீளும் இடம் இருக்கிறது.
அடுத்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்;
قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰ لِكُمْ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ وَاللّٰهُ بَصِيْرٌ بِالْعِبَادِ
(நபியே!) கூறுவீராக: “இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. இன்னும் அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3:15)
விளக்கம் : உங்களுக்கு இதை விட சிறந்ததை நான் சொல்லித் தரட்டுமா? யார் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோ, அஞ்சிகொள்கிறார்களோ, பாவங்களை விட்டு தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் இருக்கின்றன. அந்த சொர்க்கங்கள்., எப்படி அங்கே பெரிய தோட்டங்கள் பல வகையான மரங்கள் அவற்றின் கீழே நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த சொர்க்கத்திற்கு வந்தவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பரிசுத்தமான மனைவிகள் அங்கே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தம் அவர்களுக்கு கிடைக்கும்.
அல்லாஹு தஆலா தனது அடியார்களை உற்று நோக்கி கொண்டிருக்கிறான். யாருடைய அமல் எப்படி இருக்கிறது? யார் எதை யோசிக்கிறார்? எதை சிந்திக்கிறார்? எதை பார்க்கிறார்? எதை நோக்கி விரைகிறார்? என்பதை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
இந்த வசனத்தை நாம் புரிய வேண்டும். இந்த நஃப்ஸ் இருக்கிறதே அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நஃப்ஸுடைய தீங்கிலிருந்து ஒவ்வொரு குத்பாவின் துஆவிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்பு தேடினார்கள்;
என்னுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடத்திலே பாதுகாப்பு தேடுகிறேன்.
மேலும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடினார்கள்;
اللَّهمَّ إنِّي أعوذُ بِكَ مِن شرِّ سمعي، ومِن شرِّ بصَري، ومِن شرِّ لِساني، ومِن شرِّ قلبي، ومن شرِّ مَنيِّي يَعني فرجَهُ
யா அல்லாஹ்! என்னுடைய செவியின் தீமையிலிருந்து, என்னுடைய பார்வையின் தீமையிலிருந்து, என்னுடைய நாவின் தீமையிலிருந்து என்னுடைய உள்ளத்தின் தீமையிலிருந்து என்னுடைய இந்திரியத்தின் தீமையிலிருந்து அதாவது (பாலுறுப்பு) மர்மஸ்தானத்தின் தீமையிலிருந்து, நான் உன்னிடத்திலே பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பாளர் : ஷக்ல் இப்னு ஹுமைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 3492, அபூ தாவூத் 1551
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பயமே இப்படி என்றால் நாம் எல்லாம் எந்த அளவு பயப்பட வேண்டும்! ஷைத்தானிடமிருந்தும் நஃப்ஸிடமிருந்தும் பாதுகாக்கப்பட்ட ஒரு மகத்தான தூதர்! அல்லாஹ்வின் நேரடி அருளிலே ஆசீர்வதிக்கப்பட்ட அந்த தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நஃப்ஸை குறித்து இப்படி பயந்தார்கள். ஷஹ்வத் -மன இச்சையைக் குறித்து உள்ளக்கிளர்ச்சி குறித்து இப்படி பயந்தார்கள்.
ஆகவேதான் அவர்களுடைய மனைவியார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்;
وَما مَسَّتْ كَفُّ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ كَفَّ امْرَأَةٍ قَطُّ
அல்லாஹ்வுடைய தூதரின் கரம் அவர்களுக்கு ஹலால் இல்லாத ஒரு பெண்ணின் கரத்தை தொட்டதில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5288.
அல்லாஹு அக்பர்! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரம் அவர்களுக்கு ஹலால் இல்லாத ஒரு பெண்ணின் கரத்தை தொட்டதில்லை.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பைஅத் வாங்குவார்கள். சத்திய வாக்கு பிரமாணம் வாங்குவார்கள். ஆண்களிடத்தில் கை கொடுப்பார்கள். சத்திய வாக்குகளை சொல்லிக் கொடுப்பார்கள்; நான் ஷிர்க் செய்ய மாட்டேன்; ஸினா செய்ய மாட்டேன்; திருட மாட்டேன்; அல்லாஹ்விற்கு இணை வைக்க மாட்டேன் என்றெல்லாம் கை பிடித்து சொல்லிக் கொடுப்பார்கள். பெண்கள் வந்தால் அவர்களுக்கு வெறும் வாயால் சொல்லி மட்டுமே கொடுப்பார்களே தவிர அவர்களுடைய கரங்களை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிடிக்க மாட்டார்கள்.
அன்பானவர்களே! ஒரு மனிதன் உடலின் அற்ப ஆசைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பான் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அதில் முழுமையானவர் யார் இருக்க முடியும்?!
அவர்களே அந்த அளவு பயந்தார்கள்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எப்படி எல்லாம் உபதேசம் செய்தார்கள் பாருங்கள்!
நம்முடைய மன இச்சை, உள்ளக்கிளர்ச்சி நம்முடைய ஈமானை கலங்கப்படுத்த கூடியது. நம்முடைய ஈமானின் பிரகாசம் உள்ளத்திலிருந்து, அல்லாஹ்வின் மீது இருக்கக்கூடிய அந்த அன்பு இவற்றையெல்லாம் அடியோடு அப்படியே துடைத்தெறியக்கூடிய ஒன்றுதான் ஹராமான பெண்களுடைய தொடர்பு.
ஹராமான பெண்கள் என்றால் யார்? எந்த பெண்ணை நாம் திருமணம் முடிக்கவில்லையோ அந்த பெண் மீது இச்சை கொள்வது. எந்த பெண்ணை நமக்கு திருமணம் முடிப்பது ஹலால் இல்லையோ அல்லது திருமணம் முடித்திருக்கவில்லையோ அந்த பெண்கள் மீது இச்சை கொள்வது. நம்முடைய மனைவி மட்டும் தான் நம்முடைய இச்சையை நிறைவேற்றுவதற்கு தகுதியான இடம்.
இதை தவிர வேறு எந்த ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம் தனது ஆசையை உடல் இச்சையை நிறைவேற்ற நினைக்கிறானோ நிறைவேற்ற செல்கிறானோ அவன் இந்த மன இச்சையில் சென்று விட்டானோ நரகத்தின் படு குழியிலே அவன் விழப் போகிறான்! அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா முஃமின்களை போற்றுவான். முஃமின்களை புகழ்வான். அல்லாஹுத்தஆலா எங்கெல்லாம் அப்படி புகழ்கிறானோ அங்கு அல்லாஹ் கூறுவான்;
وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ
தங்களது மறைவிடங்களை பாதுகாக்கக் கூடிய ஆண்கள்; பாதுகாக்கக் கூடிய பெண்கள். (அல்குர்ஆன் 33:35)
(அல்குர்ஆன் 70:29,30) (அல்குர்ஆன் 23:5)
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ
தங்கள் மனைவியரிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அடிமை பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்த்து கொள்வார்கள். (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர். (அல்குர்ஆன் 23:6) (மனைவியாக இருந்தால் தங்கள் கணவனிடத்திலேயே தங்கள் ஆசையை தீர்த்து கொள்வார்கள். மற்ற ஆண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.)
இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா எங்கெல்லாம் சொல்கிறான் கவனியுங்கள்!
சூரா முஃமினுடைய ஆரம்பத்தை சூரா அஹ்ஸாபுடைய 35 வது வசனத்தை சூரத்துல் மஆரிஜை படித்துப் பாருங்கள்!
மேலும், அல்லாஹு தஆலா சூரா அல் முஃமினிலே சொல்லும்பொழுது ரொம்பவும் தெளிவாக சொல்கிறான்; யார் தன்னுடைய உடல் ஆசையை தனது மனைவியிடத்திலே தீர்த்துக் கொள்கிறானோ அவன் பழிக்கப்பட்டவன் அல்லன். ஆனால், தன்னுடைய சரீர இச்சையை உடலாசையை மனைவி அல்லாதவரிடத்திலே தீர்க்க ஒருவர் முயற்சி செய்வானேயானால் அவர்கள் மிகப்பெரிய வரம்பு மீறியவன். எல்லை மீறியவன். அவர்களை அக்கிரமக்காரர்கள் என்று அல்லாஹு தஆலா சொல்கிறான். (அல்குர்ஆன் 23:7)
சூரா இஸ்ராவிலே அல்லாஹு தஆலா சொல்கிறான்;
وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَسَآءَ سَبِيْلًا
(மனிதர்களே!) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது கெட்ட வழியாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)
கருத்து : ஸினாவை முறை தவறிய பாலியல்ரீதியான செயல்கள், வன்முறை, குற்றங்கள் எதையும் நெருங்கி விடாதீர்கள். அதன் அருகில் சென்று விடாதீர்கள். அது அசிங்கமான ஒன்று. கேடுகெட்ட ஒன்று. மனிதன் தனது இச்சையை நிறைவேற்றுவதற்கு தேடக்கூடிய வழிகளிலேயே அருவருக்கத்தக்கது மோசமானது.
சூரத்துல் ஃபுர்கானின் இறுதிப் பகுதியிலே உயர்ந்த முஃமின்கள், இபாதுர் ரஹ்மான் - ரஹ்மானுடைய அடியார்கள் என்று பல புகழ் மாலைகளை அல்லாஹுத்தஆலா சூட்டுகிறான். ரஹ்மானுடைய அடியார்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி அல்லாஹ் பெருமையாக பேசும் பொழுது அல்லாஹ் சொல்கிறான்;
وَلَا يَزْنُوْنَ
அவர்கள் ஸினா -விபச்சாரம் செய்யமாட்டார்கள். (அல்குர்ஆன் 25:68) (குறிப்பு:1)
என்று அவர்களுடைய ஒழுக்கத்திற்கு அல்லாஹு தஆலா உறுதி கொடுக்கின்றான்.
அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக! இன்று ஒரு பலத்த ஃபித்னா உடைய காலத்திலே இருக்கிறோம். குழப்பத்தின் காலத்திலே இருக்கிறோம். நமது காலம் நன்மை செய்வது சிரமமாகவும் பாவத்தை நோக்கி செல்வது பாவத்தில் வீழ்வது இலகுவாகவும் இருக்கின்ற ஒரு காலம்.
நன்மையை பற்றி பேசுபவர்கள், நன்மையை பரப்புபவர்கள், தீமையை தடுப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்கள். புத்திசாலிகள் இல்லை. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம். இதுதான் வாழ்க்கை ஒரு லைஃப். கிடைக்கும்போது அனுபவியுங்கள் என்று முஸ்லிம்களாலேயே பேசப்படக்கூடிய ஒரு காலத்திலே நாம் இருக்கிறோம். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)
எந்த ஒரு பாவத்தை நினைத்து நடுங்க வேண்டுமோ அச்சம் வேண்டுமோ அந்த பாவம் இன்று சர்வ சாதாரணமாக மலிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே அதுபோன்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ்களிலே சில பாவங்களுக்கு மட்டும் தான் உலகத்திலேயே ஹத்து அரசு தரப்பு தண்டனையை நிர்ணயம் செய்தார்கள். எல்லா பாவத்திற்கும் அல்ல.
பொய் பேசுவது ஒரு பாவம். அதற்கு ஏதாவது தண்டனை இருக்கிறதா? இல்லை. தவ்பா இஸ்திக்ஃபார் தான். புறம் பேசுவது, கோள் சொல்வது இவை பெரும் பாவங்கள் தான். ஆனால், இதற்கு உலகத்திலே ஹத்து அரசு தரப்பு தண்டனை இருக்கிறதா? இல்லை. தவ்பா இஸ்திஃபார் தான்.
ஆனால், இந்த விபச்சாரம் , அன்னிய பெண்ணோடு ஹலால் இல்லாத பெண்ணோடு ஆசையை தீர்ப்பது, அவர்களுக்கான தண்டனை அல்லாஹுத்தஆலா ஏனைய குற்றங்களுக்கு சொன்ன தண்டனையை விட கடுமையானது; பயங்கரமானது.
ஒரு மனிதன் (முர்த்தத்) மார்க்கத்தை விட்டு வெளியே சென்று விட்டால் அவனுக்கும் அரசு தரப்பு தண்டனை ஹத்து இருக்கிறது., ஒரே வெட்டில் கழுத்தை வெட்டி விடுவதுதான் அதன் தண்டனை. ஆனால் ஸினா செய்த அதுவும் திருமணம் ஆனதற்கு பிறகு ஸினா செய்த ஆண் , திருமணமானதற்குப் பிறகு ஸினா செய்த பெண் அந்த மனிதர்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பொது வீதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு முஸ்லிம்களால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.
அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் பொது இடத்திலே நிறுத்தி வைக்கப் பட்டு நூறு கசையடிகள் அடிக்கப்பட வேண்டும்.
اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍوَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ
விபச்சாரி; இன்னும், விபச்சாரன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு பிரம்படி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் (அதன் சட்டத்தை நிறைவேற்றும்போது) அந்த இருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் வந்துவிட வேண்டாம், நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். இன்னும், நம்பிக்கையாளர்களில் ஒரு பெரும் கூட்டம் அவ்விருவரின் தண்டனை (நிறைவேறுகின்ற இடத்து)க்கு ஆஜராகட்டும். (அல்குர்ஆன் 24:2)
அல்லாஹ்வுடைய தீனை நிலை நிறுத்துவதிலே அல்லாஹ்வுடைய தீனின் குற்றத்திற்கு உரிய தண்டனைகளை நிறைவேற்றுவதிலே இரக்கம் காட்டாதீர்கள் என்று ஒரு தண்டனையை குறித்து அல்லாஹ் எச்சரிக்கிறான்.
திருமணம் ஆகாதவனாக இருந்தால் திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால் மக்களுக்கு மத்தியிலே நிறுத்தி வைக்கப்பட்டு நூறு சாட்டை அடிகள் அவர்களுக்கு அடிக்கப்பட வேண்டும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
சகோதரர்களே! இந்த துன்யாவிலேயே இப்படிப்பட்ட ஒரு அவமானம் இப்படிப்பட்ட ஒரு தண்டனை இருக்குமேயானால் மறுமையை நினைத்துப் பாருங்கள்! விபச்சாரம் செய்தவர்களுக்கு ஸினாவிலே சென்ற ஆண்களுக்கு பெண்களுக்கு எத்தகைய தண்டனை இருக்கும் என்று ஆஃகிரத்தை நினைத்துப் பாருங்கள்!!
இரண்டு ஹதீஸ்களை பாருங்கள்! இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். இஸ்ரா உடைய இரவிலே அங்கே மலக்குகள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள். நரகத்திலே வேதனை =அதாபு செய்யப்படக்கூடிய பலரை காட்டுகிறார்கள். ஒவ்வொரு வகையான கூட்டமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அழைத்து காட்டப்படுகிறது.
அங்கே பார்த்தால் ஒரு பெரிய தன்னூர் அடுப்பு (தந்தூரி ரொட்டி செய்யக்கூடிய அந்த தன்னூர் அடுப்பு அதனுடைய வயிறு பெரியதாக இருக்கும்; வாய் சிறியதாக இருக்கும்) அப்படிப்பட்ட ஒரு பெரிய அடுப்பு. அதனுடைய மேல் புறத்திலே ஒரு ஓட்டை இருக்கிறது. அதிலே நெருப்பு எரிகிறது. எவ்வளவு ஆழம் அல்லாஹ் அறிந்தவன்! அந்த நெருப்பிலே எரிந்து கொண்டிருக்கக் கூடிய அம்மணமான ஆண்கள் பெண்களை அப்படியே மேலே தூக்கிக் கொண்டு வருகிறது. மேலே வந்தவுடன் வெளியேறலாம் என்று அவர்கள் நினைக்கும் பொழுது அப்படியே அந்த நெருப்பு உள்வாங்கிக் கொள்கிறது. இப்படியாக அவர்களுக்கு அதாபு அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரிய தன்னூர் நெருப்பிலே நிர்வாணமான நிலையில் ஆண்கள் பெண்கள் அதாப் செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதை பார்த்து பயந்த ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்திலே கேட்கிறார்கள்; இவர்கள் யார்? என்பதாக. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இன்னும் பல அதாபுகளை நரகவாசிகள் படக்கூடிய அதாபுகளை எல்லாம் காண்பித்து விட்டு இறுதியாக சொல்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! நிர்வாணமாக அதோ அந்த தன்னூர் அடுப்பிலே நெருப்பிலே எரிந்து கொண்டிருந்தார்களே. அவர்கள் யார் தெரியுமா? அவர்கள் தான் உங்களது உம்மத்தில் ஸினா செய்த ஆண்கள்; பெண்கள்.
அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1386.
சகோதரர்களே! சினிமா கலாச்சாரத்தால், சீரியல் கலாச்சாரத்தால், ஹிஜாபுடைய ஒழுக்கங்கள் மீறப்படுவதால் என்ன ஒரு வரைமுறையை அல்லாஹுவும் நபியும் ஆண்கள் பெண்கள் பழகும் பொழுது அல்லது பொது இடங்களிலே பின்பற்ற பட வேண்டும் என்று சொன்னார்களோ அந்த ஒழுக்கங்கள் எல்லாம் காலிலே போட்டு மிதிக்கப்படுகிறது. தூக்கி எறியப்படுகிறது. அதற்கு எந்தவிதமான மதிப்பும் இல்லை. அதை யாராவது சொன்னால் போதித்தால் நீ என்னை சந்தேகப்படுகிறாயா? நீ என்ன ரொம்ப கடுமையாக இருக்கிறாய்? உனக்கு புத்தி கோணலாக இருக்கிறது. உன் பார்வை கெட்ட பார்வையாக இருக்கிறது. இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.
அடியார்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா நம் மீது அக்கறை உள்ளவர்கள் நல்ல எண்ணம் உள்ளவர்கள் இருக்க முடியும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
لا يَخْلُوَنَّ رجُلٌ بامرأةٍ لا تَحِلُّ له
ஒரு ஆண் அந்நிய பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம் மூன்றாவது நபராக ஷைத்தான் அங்கே வந்து விடுவான்.
அறிவிப்பாளர் : ஆமிர் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15696.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
ஒரு வீட்டிலே ஒரு ஆண் வெளியிலே சென்றிருந்தால் பயணத்திலே சென்றிருந்தால் அந்த வீட்டில் தனியாக இருக்கக்கூடிய பெண்களிடத்திலே நீங்கள் செல்லாதீர்கள். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2173.
ஒரு முறை சாதாரண பேச்சாக இருக்கலாம். அடுத்த முறை சாதாரணமாக இருக்கலாம். பிறகு அது சில நெருக்கத்தை உண்டாக்கலாம். அடுத்து இன்னும் அதிகமான நெருக்கத்தை உண்டாக்கலாம். இறுதியாக எந்த பாவத்தை அல்லாஹு தஆலா எச்சரித்து இருக்கிறானோ அது நடந்து விடலாம்.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
நாளை மறுமையிலே இந்த நரகத்திலே ஸினா செய்த ஆண்கள் பெண்கள்; அவர்களிலிருந்து வீசக்கூடிய அந்த துர்நாற்றம் அவர்களுடைய வயிறுகள் எல்லாம் உடைத்து வீங்கி போய் அவர்களுடைய மர்மஸ்தானங்களில் இருந்து துர்நாற்றம் பயங்கரமான நாற்றம் (நஜீஸ்கள் மல ஜலங்கள் இருக்கின்றன அல்லவா; ஓரிடத்திலே மல ஜலங்கள் குவிக்கப்பட்டால் உதாரணத்திற்கு செப்டிக் டேங்க்)
கக்கூசுகளில் இருந்து வரக்கூடிய துர்நாற்றம் போன்று அவர்களிடமிருந்து துர்நாற்றம் அடிக்கும். இவர்கள் யார்? என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள். இவர்கள்தான் விபச்சாரம் செய்த ஆண்கள் விபச்சாரம் செய்த பெண்கள் என்று சொல்லப்பட்டது.
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹ் அத்தர்கீப், எண் : 2393.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எச்சரிக்கை செய்தார்கள்.
இன்றைய சமூகத்திலே சினிமா அது ஒரு கலை என்று கூறுகிறார்கள். எப்போதுமே பாவத்திற்கு இந்த வெள்ளைக்காரர்கள் ஒரு மாடர்ன் பெயரை வைப்பார்கள். ஒரு ஹராமை ஒரு பாவத்தை முஸ்லிம்களுக்கு மத்தியிலே மக்களுக்கு மத்தியிலே மலிவாக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெயர் என்டர்டைன்மென்ட் -பொழுதுபோக்கு, ஒரு கலாச்சாரம், ஒரு கேளிக்கை என்று பெயர் வைத்து அந்த பாவத்தினுடைய விபரீதத்தை மண்டைகளிலிருந்து மழுங்கச் செய்து மக்களுக்கு மத்தியிலே எளிதாக்கி விடுவார்கள். பரப்பி விடுவார்கள்.
அப்படித்தான் முழுக்க முழுக்க விபச்சாரத் தொழிலாகிய சினிமாவையும் சீரியல்களையும் அவர்கள் இன்று அதற்கு வைத்திருக்கக் கூடிய பெயர் கலை, பொழுதுபோக்கு, அது ஒரு சமூக கலை நிகழ்ச்சிகள்.
முஸ்லிம்களும் ஓடுகிறார்கள். அதிலே இருக்கக்கூடிய முஸ்லிம் பெயர் தாங்கிகளோடு உறவு வைத்துக் கொள்வதிலேயும், அவர்கள் எல்லாம் இஸ்லாமியத்திற்கு மார்க்கத்திற்கு இஸ்லாமிய சமூகத்திற்கு என்னமோ தியாகம் செய்தவர்கள் போல அவர்கள் சமூகத்திலே சமுதாயத்திலே அந்தஸ்து கொடுக்கப்படுகிறார்கள்; சமுதாயத்தில் முன்னிறுத்தப்படுகிறார்கள்; அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
إنَّ مِن أشْرَاطِ السَّاعَةِ أنْ يُرْفَعَ العِلْمُ، ويَكْثُرَ الجَهْلُ، ويَكْثُرَ الزِّنَا، ويَكْثُرَ شُرْبُ الخَمْرِ
மறுமையின் அடையாளங்களிலே ஒன்று; கல்விகள் உயர்த்தப்பட்டுவிடும். மக்களுக்கு மத்தியிலே அறியாமை பரவி விடும். விபச்சாரம் அதிகரிக்கும். மது சர்வசாதாரணமாக குடிக்கப்படும்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5231.
لا يَشْرَبُ الخمرَ رجلٌ من أُمَّتِي ، فيَقْبَلُ اللهُ منه صلاةً أربعينَ يومًا
ஒருவன் மது குடித்தால் 40 நாள் அவனுடைய தொழுகை அங்கீகரிக்கப்படாது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 5664.
குறைந்தது 80 க்கும் குறைவான கசையடிகள் அவனுக்கு அடிக்கப்பட வேண்டும். செருப்பாலம் மட்டையாலும் அவன் அடிக்கப்பட வேண்டும்.
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஹர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4489.
இன்று, முஸ்லிம்கள் மதுக்களை விற்பதை கொண்டும் வாங்குவதை கொண்டும். அதை தங்களுக்கு மத்தியிலே பரப்புவதைக் கொண்டும் பெருமை கொள்கிறார்கள்.
ஹதீஸின் தொடர் : அடுத்து சொன்னார்கள்; விபச்சாரம் பரவிவிடும். ஸினா பரவி விடும்.
ஸினா பரவுவது என்றால் என்ன? ஒரு மனிதன் இது போன்ற இந்த விபச்சாரத்தின் வழிகளை எல்லாம் ஒரு கலையாக அது ஒரு சாதாரணமாக பார்ப்பது. அதை பற்றி பேசுவது. அதிலே ஈடுபடுவது தொழிலாக ஆக்கப்பட்டு விட்டது. எப்படி ஹலாலான தொழில்களைப் போன்று அந்த ஹராம் முழுக்க முழுக்க ஹராமான ஒன்று அனுமதிக்கப்பட்ட ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது.
காஃபிர்களை பொறுத்தவர்களை அவர்களுக்கு மார்க்கம் இல்லை. அவர்களுக்கு சட்டம் இல்லை. முஸ்லிம்கள் மார்க்கம் கொடுக்கப்பட்டவர்கள்; சட்டம் வரையறுக்கப்பட்டவர்கள்; அவர்களே அதை அங்கீகரிக்க கூடியவர்களாக ஆகிவிட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
மேலும், ரசூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
لَيَكونَنَّ مِن أُمَّتي أقْوامٌ يَسْتَحِلُّونَ الحِرَ والحَرِيرَ، والخَمْرَ والمَعازِفَ
வருங்காலத்திலே ஒரு சமுதாயம் வரும். அவர்கள் பட்டாடைகளையும் விபச்சாரத்தையும் மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் ஆக்கி கொண்டு இந்த மார்க்கத்தை விட்டு விலகி இருப்பார்கள். (குறிப்பு:3)
அறிவிப்பாளர் : அபூ மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ, எண் : 5590.
ஒன்று, பாவத்தை பயந்து பயந்து செய்வது; தனிமையிலே பாவத்தை பயந்து செய்வது; தனிமையிலே மறைந்து செய்வது. இவர்களுக்காவது அல்லாஹ்விடத்திலே ஒரு தவ்பா இருக்கும். இவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இன்னொன்று, துணிந்து செய்வது. சவால் விட்டு செய்வது. இன்று முஸ்லிம் சமூகத்திலே நடப்பதை போன்று. அல்லாஹ்விற்கு சவால் விடுகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கு சவால் விடுகிறார்கள். துணிந்து செய்கிறார்கள். சட்டப்பூர்வமாக்க முயற்சி செய்கிறார்கள். ஆக்கிவிட்டார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: என்னுடைய உம்மத்திலே ஒரு கூட்டம் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தை ஹலால் ஆக்கி விடுவார்கள். பட்டை ஹலால் ஆக்கிவிடுவார்கள். மதுவை ஹலால் ஆக்கி விடுவார்கள். இசை கருவிகளை ஹலால் ஆக்கி விடுவார்கள். இத்தகைய மக்கள் எல்லாம் பன்றிகளாக மாற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
மேலும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி காலத்திலே வரக்கூடிய உம்மத்தின் ஒரு கேடுகெட்ட நிலையை சொன்னார்கள்:
கடைசி காலங்களிலே நல்ல முஃமின்கள் எல்லாம் சென்று விட, கடைசியிலே மக்களில் கெட்டவர்கள் இருப்பார்கள். எப்படி கழுதைகள் வீதிகளிலே ஒன்று கொன்று உடலுறவு வைத்துக் கொள்ளுமோ அது போன்று அவர்கள் வீதிகளிலே மக்கள் பார்க்கின்ற நிலையிலே அவர்கள் உறவு வைத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பாளர் : நவ்வாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2937.
இன்று, இசை நிகழ்ச்சிகள் ஆபாச நிகழ்ச்சிகள் இதுவெல்லாம் மக்களுக்கு மத்தியில் ஒரு வேடிக்கையாக ஒரு பொழுதுபோக்காக மக்களுக்கு மத்தியிலே அடையாளம் காணப்பட்டு முஸ்லிம்களும் அதிலே கலந்து கொண்டு ஒரு முஸ்லிமான ஆண் இன்னொரு முஸ்லிமான அந்நிய பெண்ணோடு அல்லது ஒரு காஃபிரான அந்நிய பெண்ணோடு அவன் ஆடுகிறான் பாடுகிறான். அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ அல்லாஹ் அறிந்தவன்.
இதெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக் காட்டிய எச்சரிக்கை
இறுதியாக ஒரு ஹதீஸை கூறி இதை நிறைவு செய்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ஒரு மனிதன் ஸினாவிலே சென்றால் அவன் முஃமினான நிலையில் ஸினாவிலே இருக்க மாட்டான். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹுமா அவர்களிடத்திலே மாணவர் கேட்கிறார்; என்ன ஆகும் அவனுடைய ஈமான்? அவனை விட்டு கழன்று மேலே சென்று விடும். மீண்டும் அவன் தவ்பா செய்வானேயானால் திருந்துவானேயானால் அந்த ஸினாவை விட்டு விலகினால் அவனுக்கு அந்த ஈமான் வரும் என்பதாக.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2475.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இன்று இந்த பெண்களுடைய ஃபித்னா மிகப்பெரிய ஃபித்னா. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நாம் வேலை செய்யக்கூடிய இடங்களிலே, நாம் படிக்கக் கூடிய இடங்களிலே, நாம் பழகக்கூடிய இடங்களிலே ஏன் நாம் பயணம் செய்யும் போது கூட இந்த ஃபித்னா வரலாம். இப்படியாக அது நம்மை சூழ்ந்து இருக்கிறது.
காரணம் என்ன? முறையாக மார்க்க ஒழுக்கத்தை தெரியாத மார்க்க வரம்புகளை தெரியாத பெண்கள், அது போன்று சுதந்திரம் என்ற பெயரிலே எல்லா ஒழுக்கங்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு யாரும் யாரோடும் பேசலாம். தனிமையில் இருக்கலாம். யாரும் யாரோடும் எங்கும் செல்லலாம் என்பதெல்லாம் தனி மனித சுதந்திரமாக எப்படி ஒரு மனிதன் மிருகமாக இருப்பது ஒரு சமுதாயத்தை கெடுக்கக்கூடிய கேவலமான ஒரு அங்கத்தினராக இருப்பது ஒழுக்கத்தை மாண்பை மரியாதையை சமூகத்தை குலத்தை இப்படி அனைத்தையும் கெடுக்கக்கூடிய இதுவெல்லாம் தனிமனித சுதந்திரமாக ஆக்கப்பட்டு விட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆகவே நாமும் இந்த குற்றங்கள் மற்றும் பாவங்களிலிருந்து விலகி அல்லாஹ்வுடைய பயத்தோடு இருப்பதோடு நமது வளரக்கூடிய பிள்ளைகள் நமது வாலிப சமுதாயம் வாலிப ஆண்கள் பெண்களுக்கும் இதை குறித்து நாம் எச்சரித்து இந்த ஈமானிய இஸ்லாமிய ஒழுக்கத்தோடு நாம் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அவன் பொருந்திக் கொண்ட நிலையிலே வாழ்ந்து அவனை சந்திக்கக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ
இன்னும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (-வணங்க மாட்டார்கள்), (கொல்லக்கூடாது என்று) அல்லாஹ் தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமை இருந்தாலே தவிர. இன்னும், விபச்சாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் (மறுமையில்) தண்டனையை சந்திப்பார். (அல்குர்ஆன் 25:68)
குறிப்பு: (2)
أنَّ نَفَرًا مِن بَنِي هَاشِمٍ دَخَلُوا علَى أسْماءَ بنْتِ عُمَيْسٍ، فَدَخَلَ أبو بَكْرٍ الصِّدِّيقُ -وهي تَحْتَهُ يومَئذٍ- فَرَآهُمْ، فكَرِهَ ذلكَ، فذَكَرَ ذلكَ لرَسولِ اللهِ صلَّى اللَّهُ عليه وسلَّمَ، وقالَ: لَمْ أَرَ إلَّا خَيْرًا، فقالَ رَسولُ اللهِ صلَّى اللَّهُ عليه وسلَّمَ: إنَّ اللَّهَ قدْ بَرَّأَهَا مِن ذلكَ، ثُمَّ قامَ رَسولُ اللهِ صلَّى اللَّهُ عليه وسلَّمَ علَى المِنْبَرِ فقالَ: لا يَدْخُلَنَّ رَجُلٌ بَعْدَ يَومِي هذا علَى مُغِيبَةٍ، إلَّا ومعَه رَجُلٌ أوِ اثْنَانِ.
الراوي : عبدالله بن عمرو | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 2173 |
குறிப்பு: (3)
لَيَكونَنَّ مِن أُمَّتي أقْوامٌ يَسْتَحِلُّونَ الحِرَ والحَرِيرَ، والخَمْرَ والمَعازِفَ، ولَيَنْزِلَنَّ أقْوامٌ إلى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عليهم بسارِحَةٍ لهمْ، يَأْتِيهِمْ -يَعْنِي الفقِيرَ- لِحاجَةٍ، فيَقولونَ: ارْجِعْ إلَيْنا غَدًا، فيُبَيِّتُهُمُ اللَّهُ، ويَضَعُ العَلَمَ، ويَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وخَنازِيرَ إلى يَومِ القِيامَةِ.
الراوي : أبو مالك الأشعري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 5590 | خلاصة حكم المحدث : [صحيح]
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘‘நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள்.
(ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள்மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள்வரை உருமாற்றிவிடுவான்.
அறிவிப்பாளர் : அபூ மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ, எண் : 5590.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/