செல்வத்தால் சீரழியாதீர்! | Tamil Bayan - 928
செல்வத்தால் சீரழியாதீர்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : செல்வத்தால் சீரழியாதீர்!
வரிசை : 928
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 13-12-2024 | 12-06-1446
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றிப்பிடித்து, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக; உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பை அவனுடைய அருளை அன்பை சொர்க்கத்தை வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! ஏற்றுக் கொள்வானாக! எல்லா விதமான சோதனைகளில் இருந்தும் தீமைகளில் இருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரையும் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்.
அல்லாஹு தஆலா எதை சோதனை என்று சொல்கிறானோ அதை எந்த அளவு நாம் பயந்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ
உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ், - அவனிடம்தான் (உங்களுக்கு சொர்க்கம் எனும்) மகத்தான வெகுமதி இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (திருப்பி உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 63:9)
வசனத்தின் கருத்து : முஃமின்களே! உங்களுடைய செல்வங்கள் உங்களுடைய பிள்ளைகள் உங்களை மறதியில் தள்ளிவிட வேண்டாம். அல்லாஹ்வை நீங்கள் நினைப்பதில் இருந்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நீங்கள் பேணுவதில் இருந்து உங்களை அலட்சியமாக்கி விட வேண்டாம்! உங்களை மறதியில் பாவத்திலே தள்ளிவிட வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்துவிட்டு சொல்கிறான்;
யார் இந்த நிலைமைக்கு ஆளாகுவாரோ, யார் தன்னுடைய செல்வத்தால் அல்லாஹ்வை மறந்து விடுவாரோ, யார் தன்னுடைய செல்வத்தால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு விலகுவாரோ அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறுவாரோ, அதுபோன்று தன்னுடைய பிள்ளைகளால் குடும்பத்தால் யார் அல்லாஹ்விற்கு மாறு செய்வாரோ அவர்கள் மிகப்பெரிய நஷ்டவாளிகள் என்று அல்லாஹுத்தஆலா எச்சரிக்கை செய்கிறான்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லா அவர்கள் கூறிய ஒரு முக்கியமான கூற்று இந்த இடத்தில் நினைவில் வரவேண்டும். இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹு தஆலா நம்மை வறுமையை கொண்டு சிரமத்தை கொண்டு சோதித்தான். பொறுமையாக இருந்தோம். செல்வத்தை கொண்டு சோதித்தான். ஆனால் நாம் பொறுமையாக இருக்க முடியவில்லை.
இன்று வறுமையை விட நமக்கு மிகப்பெரிய ஃபித்னாவாக, நாம் தனி மனிதராக இருந்தாலும் சரி, அல்லது சமூகமாக அல்லது ஒரு முஸ்லிமான நாடாக இருந்தாலும் சரி, இந்த செல்வத்தால் ஏற்படக்கூடிய ஃபித்னா, இந்த பொருளாதார செழிப்பால் நமக்கு ஏற்படக்கூடிய அந்த குழப்பம் மார்க்க ரீதியான இருக்கிறதே அதாவது மார்க்கத்திலிருந்து நம்மை வழி தவற செய்யக்கூடிய மார்க்கத்தை மீறும்படி நம்மை தூண்டக்கூடிய அந்த குழப்பம் இது மிகப்பெரிய ஒரு சோதனையாக இன்று இருக்கிறது.
செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டிய அதே நேரத்தில் அந்த செல்வத்தை குறித்து அல்லாஹ்விடத்திலே நாம் பயப்படவும் வேண்டும். ஒன்று இந்த செல்வத்தை எப்படி சம்பாதிக்கிறோம்? இரண்டாவது இந்த செல்வத்தைக் கொண்டு எதை தேடுகிறோம்? இந்த செல்வத்தை எங்கு செலவு செய்கிறோம்? என்பதையும் கவனிக்க வேண்டும்.
எந்த செல்வம் அல்லாஹ்வுடைய இபாதத்துக்காக செலவு செய்யப்பட்டதோ, எந்த செல்வம் ரத்த உறவுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யப்பட்டதோ, எந்த செல்வம் ஏழைகளின் தேவைகளுக்காக தர்மமாக அளிக்கப்பட்டதோ, எந்த செல்வம் அனாதைகளுக்காக தர்மம் செய்யப்பட்டதோ, எந்த செல்வம் முஃமின்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செலவழிக்கப்பட்டதோ, எந்த செல்வம் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக செலவழிக்கப்பட்டதோ எந்த செல்வம் ஒரு மனிதனுடைய மறுமை வீட்டை கட்டி எழுப்புவதற்காக செலவழிக்கப்பட்டதோ அந்த செல்வம் தான் முஃமினுக்கு பாதுகாப்பான செல்வம். அந்த செல்வத்தை கொண்டு மூஃமின் மறுமையிலே சொர்க்கத்தை பெறுவான். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெறுவான். மகத்தான வெற்றியை பெறுவான்.
எந்த செல்வம் ஒரு மனிதனை முதலாவதாக, ஹலால் தானே! ஆகுமானது தானே! என்று உலக இன்பங்களை தேடுவதிலே அவனை மூழ்கடித்ததோ, பிறகு அந்த சுகங்களை இன்பங்களை தேடி அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறை செய்து, வணக்க வழிபாடுகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகி, முற்றிலுமாக பிறகு உலக இன்பத்தில் மூழ்கினானோ, பிறகு எந்த செல்வத்தைக் கொண்டு உறவுகளை முறித்தானோ, எந்த செல்வத்தைக் கொண்டு பெருமை அடித்தானோ, காரூனை போல இந்த செல்வம் எனது திறமையால் கிடைத்தது; எனது அறிவால் கிடைத்தது; எனது உழைப்பால் கிடைத்தது; நான் ஏன் இதை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்? நான் ஏன் இதை தர்மம் செய்ய வேண்டும்? என்று சிலர் சொல்கிறார்கள் அல்லவா? முஸ்லிம்கள் இப்படி பேசுவார்களா? என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மஸ்ஜிது கட்டுவதற்காக மஸ்ஜிதிலே வந்து கேட்கிறார்கள்.
மத்ரசா என்றால் என்ன? முஸ்லிம்களுடைய ஏழைகள் நடுத்தரமானவர்களுடைய பிள்ளைகள் படிக்கக்கூடிய மார்க்க கல்விக்கூடம். அவர்களைக் கொண்டுதான் இன்று இஸ்லாம் நிலை பெற்றிருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் உங்களுடைய மஸ்ஜிதுகளுக்கு இமாம்கள் கிடைக்க மாட்டார்கள்.
இன்று நிறுவப்படக்கூடிய பள்ளிக்கூடங்களிலே ஒரு இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒரு நாளைக்கு 20,000 15,000 30,000 பீஸ் கொடுத்து படிக்கின்ற மாணவர், ஒரு வருஷத்திற்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் பீஸ் கொடுத்து படிக்கின்ற மாணவர் இஸ்லாமை தெரிந்ததற்குப் பிறகு உங்களுடைய மஸ்ஜிதுகளிலே வந்து 15000 சம்பளத்திற்கு 24 மணி நேரம் வேலை பார்ப்பாரா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
அப்படி இதுவரை எந்த இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு மாணவன் ஒரு மஸ்ஜிதிலே ஒரு மதரசாவிலே ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக குர்ஆனை போதிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை கொடுத்திருக்கிறான்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒரு இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் ஒரு ஆண்டுக்கு 50,000 ஒரு லட்சம் பீஸ் வாங்குகிறார்கள். இஸ்லாமின் பெயரை சொல்லி பீஸ் வாங்கிக்கொண்டு அங்கே அந்த இஸ்லாமை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு கண்ணியம் இருக்காது. ஒரு அகாடமி பாடத்தை சொல்லிக் கொடுப்பவருக்கு என்ன சம்பளமோ அதைவிட மட்டமான சம்பளம் தான் அங்கே இஸ்லாமை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆசிரியருக்கு கொடுக்கப்படும். இஸ்லாமிய ஸ்கூல் என்று பெயர்கூறி மதரஸா உடைய பீஸை ஸ்கூல் உடைய பீஸ் என்று வாங்குவது .
சரி எப்படியோ, அதற்குப் பிறகு அந்தப் பள்ளிக்கூடத்திலே இத்தனை ஆயிரங்களை லட்சங்களை செலவு செய்து படித்த ஒருவர் ஒரு மஸ்ஜிதிலே வந்து 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
ஒரு இமாம் என்றால் யார்? 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எங்கேயும் போக முடியுமா? வாரத்திலே லீவு இருக்கிறதா? மாசத்திலே லீவு இருக்கிறதா? அவருக்கு ஏதாவது மருத்துவத் தேவை அந்த மஸ்ஜிதில் இருந்து கொடுக்கப்படுமா? அவருக்கு ஏதாவது பிள்ளைகளுடைய பீஸ் அந்த மஸ்ஜிதில் இருந்து கட்டப்படுமா? இப்படி எந்த உரிமையும் இல்லாமல் ஒரு அடிமையை விட ஒரு மோசமான நிலையில் வேலை செய்கின்றவர்தான் மஸ்ஜிதுடைய இமாம்.
பிரச்சனைக்கு வருவோம். இப்படி யாரிடத்திலே பொருளாதாரம் இல்லையோ அத்தகைய மாணவர்கள் படிக்கின்ற மதரசாவிற்கு மஸ்ஜிதிலே இருந்து முஸ்லிம்களிடத்தில் கேட்டு வந்தால் இன்று பல முஸ்லிம் செல்வந்தர்கள் சொல்கிறார்கள்; இப்படியே இவங்க பள்ளிவாசல் பள்ளிவாசலா போய் பிச்சை எடுப்பார்கள் என்று. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!)
மதரசவிற்கு சந்தா வாங்க கூடியவர்களை பார்த்து விட்டால் பிச்சை எடுப்பவர்கள் வருகிறார்கள்; இவர்களுக்கு வேலை இல்லை; ரமழான் வந்துவிட்டால் பிச்சை எடுக்க வந்து விடுவார்கள்; ரமழான் வந்து வட்டால் யாசகம் கேட்க வந்து விடுவார்கள். எப்படிப்பட்ட மார்க்க வெறுப்புப் பேச்சு.
முஸ்லிம்களே சிந்தித்துப் பார்த்தீர்களா? அவர்கள் யாருக்காக பிச்சை எடுக்கிறார்கள்? அவர்கள் யாருக்காக யாசகம் கேட்கிறார்கள்? இந்த தீனை இந்த இஸ்லாமை பாதுகாப்பதற்காக. உங்களுடைய மஸ்ஜிதுகளை பாதுகாப்பதற்காக. வருங்கால சமுதாயத்திற்கு குர்ஆனை சொல்லக் கொடுக்கக்கூடிய ஆலிம்களை ஹாஃபிழ்களை உருவாக்குவதற்காக.
இன்றைய தமிழ்நாட்டிலே இத்தனை இஸ்லாமிய புதிய அகாடமிக் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிறக்கின்றனவே! ஒரு வருஷத்திற்கு எத்தனை ஹாஃபிழ்கள் அந்தப் பள்ளிக்கூடங்களில் ஹிஃப்ழ் முடிக்கின்றார்கள்? அவர்களில் யாராவது ரமழான் மாதத்திலே உங்களது மஸ்ஜிதிலே 20 ஆயிரம் சம்பளத்திற்கு வந்து தராவீஹ் தொழ வைப்பதற்கு 30 நாள் தயாரா?
யார் அப்படி தொழ வைத்திருக்கிறார்? ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது. துன்யாவுக்காக படித்தார்கள். துன்யாவை சம்பாதிக்க ஓடி விடுவார்கள். யார் மார்க்கத்தை மார்க்கத்திற்காக படித்தார்களோ அவர்கள் தான் மஸ்ஜிதிலே வேலை செய்வார்கள். அவர்கள்தான் மதரஸாவிலே வேலை செய்வார்கள்.
ஒரு ஆலிம் உடைய சம்பளம் எப்போது உயர்த்தப்படுகிறது? என்று எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. பத்தாயிரம் ரூபாய் 15,000 சம்பளத்திலே அவர் சேர்ந்தால் அவர் ஒரு வாயில்லா ஜீவன். கூட்டி கேட்க முடியாது. கூட்டி கேட்டால் அவ்வளவுதான். இதை விட கம்மியான சம்பளத்திற்கு எங்களுக்கு பிஹாரிலிருந்து யுபியிலிருந்து ஆள் வருவார்கள். நீங்கள் செல்லுங்கள் என்று அனுப்பி விடுவார்கள். இந்த நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். நம்முடைய செல்வம் எதற்கு செலவழிக்கப்படுகிறது? உறவுகளை முறிப்பதற்கு செலவழிக்கப்பட்டால்? நம்முடைய ஆடம்பர தேவைகளுக்கு செலவழிக்கப்பட்டால் அல்லாஹ்வுடைய ஹக்கு புறக்கணிக்கப்பட்டால்? அதுவும் அடுத்ததாக ஹலால் ஆன தேவைகள் போக ஹராமிலே அந்த செல்வம் செலவழிக்கப்பட்டால்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
ஒரு மனிதன் ஏழ்மையால் அல்லது செல்வத்தால் மிக விரைவாக பாவியாகி விடுவான். அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்! இன்று ஒரு மனிதனை ஸினாவிலே எது தள்ளுகிறது? ஒரு மனிதனை மதுவிலே எது தள்ளுகிறது? ஒரு மனிதனை சூதாட்டத்திலே எது தள்ளுகிறது? இன்னும் கொஞ்சம் அப்படியே மேலே செல்லுங்கள்! இப்படி உலக ஆசைகளில் மூழ்கி அதிகமான ஆடம்பர வசதிகளை அனுபவித்து விட்டு பிறகு அதற்கு ஏற்ப தன்னுடைய ஹலாலான வியாபாரம் அதன் வருமானம் போதுமாகவில்லை என்றால் அடுத்து அவன் என்ன செய்வான்? யோசித்துப் பாருங்கள்!
அவன் பழகிவிட்ட ஆடம்பரத்தை அவனால் விட முடியுமா? அவன் பழகிவிட்ட சுகமான வாழ்க்கையை அவனால் விட முடியுமா? பிறகு ஹராமிலே செல்வத்தை தேடுவான். ஹலாலை கொண்டு தன்னுடைய ஆடம்பரம் தன்னுடைய உல்லாச வாழ்க்கை அவனுக்கு பூர்த்தியாகவில்லை என்றால் ஹராமிலே செல்வத்தை தேடுவான். ஏமாற்றுவான். மோசடி செய்வான். பிறருக்கு கொடுத்த வாக்கை மீறுவான் வியாபாரத்திலே கலப்படம் செய்வான்.
யாரும் சாதாரணமாக தங்களுடைய தொழுகையைக் கொண்டு தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்! தங்களுடைய நோன்பை கொண்டு தப்பித்து விடலாம் என்று நினைத்து விடாதீர்கள்! தங்களுடைய ஹஜ் உம்ராவை கொண்டு தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்!
எந்த அல்லாஹுத்தஆலா தொழுகையில் அலட்சியம் செய்து மோசடி செய்பவர்களுக்கு நரகத்தின் நாசத்தை எச்சரித்தானோ (அல்குர்ஆன் 107:4,5) யார் வியாபாரங்களில் மோசடி செய்கிறார்களோ மக்களை ஏமாற்றுகிறார்களோ அவர்களுக்கும் அதே நாசத்தை அல்லாஹு தஆலா எச்சரிக்கிறான்.
وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَ
மோசடிக்காரர்களுக்கு நாசம்தான். அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள். இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்). (அல்குர்ஆன் 83:1-3)
சகோதரர்களே! தொழுகையை அல்லாஹு தஆலா எந்த இடங்களில் எல்லாம் சொல்கிறானோ அங்கு உங்களது வியாபாரம் உங்களை ஹராமில் தள்ளிவிட வேண்டாம்; அல்லாஹ்வை மறக்க செய்துவிட வேண்டாம்; தொழுகையில் இருந்து உங்களை பராமுகமாக உங்களது கவனங்களை திருப்பி விட வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ
(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். (அல்குர்ஆன் 24:37)
அன்பான சகோதரர்களே! செல்வம் என்று நாம் மகிழ்ச்சி அடைந்து விட முடியாது. அல்லாஹ்வை பயப்பட வேண்டும். இந்த செல்வத்தை எப்படி சம்பாதிக்கிறோம்? இந்த செல்வத்தை எப்படி செலவு செய்கிறோம்? அல்லாஹ்விடத்திலே இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்தார்கள்; மேலும் எச்சரித்தார்கள்:
ஹக்கீம் இப்னு ஹிஸாம் மிகப்பெரிய ஒரு நபித்தோழர். அவருக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உபதேசம் செய்தார்கள்:
يا حكيم إن هذا المال خضرة حلوة، فمن أخذه بسخاوة نفس بورك له فيه، ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه، كالذي يأكل ولا يشبع
ஹகீமே! இந்த செல்வம் அப்படியே பச்சை பசுமையாக இருக்கும். ரொம்ப இனிப்பாக இருக்கும். கவர்ச்சியாக இருக்கும். உள்ளங்களை கவரக்கூடியதாக இருக்கும்.
செல்வம் வரும்பொழுது உள்ளத்தில் தாராளத்தன்மையும் கொடைத்தன்மையும் வரவேண்டும். போதும் என்ற தன்மையும் வரவேண்டும். அல்ஹம்துலில்லாஹ் என்ற அந்த ஈகைத்தன்மை திருப்தி வரவேண்டும். உள்ளம் திருப்தியோடு அல்ஹம்து லில்லாஹ் என்று யார் அந்த செல்வத்தை எடுத்துக் கொள்வாரோ அந்த செல்வத்தில் அவருக்கு பரக்கத் செய்யப்படும். யார் எவ்வளவு செல்வம் கிடைத்தாலும் இன்னும் ஆசையோடு இருக்கிறாரோ அந்த செல்வத்தை கொண்டு திருப்தி அடையவில்லையோ அவருக்கு அந்த செல்வத்திலே பரக்கத் இருக்காது. உதாரணமாக ஒருத்தன் சாப்பிடுகிறான்; ஆனால் வயிறே அவனுக்கு நிரம்புவதில்லை. (சிலர் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். சில நோயினால் அவர்களுக்கு வயிறே நிரம்பாது அப்படிப்பட்ட ஒரு நோயாளியை போன்று)
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1472.
மனிதன் செல்வத்திற்காக இப்படி அலைகிறானே! அந்த செல்வம் அவனோடு கப்ருக்கு வருமா? அவனோடு இந்த செல்வத்தை அவன் எடுத்துச் செல்ல முடியுமா?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
يتبع الميت ثلاثة، فيرجع اثنان ويبقى معه واحد، يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله، ويبقى عمله
ஒரு மைய்யத்தை அவருடைய குடும்பம், அவருடைய செல்வம், அவருடைய அமல் என மூன்று பின்தொடரும். அல்லது மூன்று பேர் பின் தொடர்கிறார்கள். குடும்பம் செல்வம் என்ற இரண்டு பேர் திரும்பி வந்து விடுவார்கள். ஆனால் அவருடைய அமல்தான் அவனோடு இருக்கும். அமல் என்ற ஒருவர் மட்டும்தான் அவரோடு இருப்பார்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 651.
அன்பான சகோதரர்களே! எந்த செல்வம் இந்த உலகத்தோடு நம்மை விட்டு விடுமோ அந்த செல்வத்தை நாம் எப்படி தேட வேண்டும்? எந்த அளவு அதை பயப்பட வேண்டும்! அது எதற்காக நமக்கு கொடுக்கப்பட்டது? என்ற நோக்கத்தை நாம் புரிய வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
أَلْهَاكُمُ التَّكَاثُرُ என்ற வசனத்தை ஓதியதற்கு பிறகு, மனிதர்களே! இன்னும் வேண்டும்! அதிகம் வேண்டும்! என்ற அந்த ஆசை அல்லாஹ்வுடைய நினைவை மறக்க செய்துவிட்டது.
இந்த வசனத்தை ஓதியதற்கு பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதன் சொல்கிறான். என் சொத்து! என் செல்வம்! என் சொத்து! என் செல்வம்! என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்;
(மனித சமூகத்தை பார்த்து; யாருக்கு இந்த பொருளாசை பேராசை பிடித்து விட்டதோ; பணமே வாழ்க்கை! செல்வமே வாழ்க்கை! என்று அதிலே மூழ்கி விட்டார்களோ; அவர்களுக்கு மனித உறவுகள் தெரியாது. மார்க்கம் என்றால் என்ன? என்று தெரியாது.)
அவர்களை பார்த்து சொன்னார்கள்: மனிதனே நீ இந்த செல்வத்தை கொண்டு என்ன அனுபவித்து விட முடியும்? நீ சாப்பிட்டு திண்டு அழித்ததை தவிர. அல்லது நீ உடுத்தி பழையதாக்கியதை தவிர. அல்லது நீ தர்மம் கொடுத்து மறுமைக்காக அனுப்பியதை தவிர. இந்த துன்யாவிலே உனக்கு எது ஒட்டப்போகிறது மனிதனே!
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அஷ்ஷிஹ்ஹீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2958.
யோசித்துப் பாருங்கள்! எந்த துனியாவுக்காக வேண்டி மனிதன் இன்று உறவை முறிக்கின்றானோ அல்லாஹ்வுடைய நினைவை மறக்கின்றானோ இந்த துன்யா அவனுக்கு வெற்றியாக அமையாது.
இந்த துன்யாவுடைய பொருளாசை அதாவது ஹராமை கொண்டு அந்த மனிதன் தேடும் பொழுது அவனை எப்படி அழிக்கிறது? அவனுடைய மார்க்கப்பற்றை இறைஅச்சத்தை எப்படி போக்குகிறது? அவனுடைய துஆக்கள் நிராகரிக்கப்படுவதற்கு எப்படி காரணமாக அமைகிறது? என்பது பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
يا أيها الناس، إنَّ الله طيبٌ، لا يقبل إلا طيِّبًا، وإن الله أمر المؤمنين بما أمر به المرسَلين
மக்களே! அல்லாஹ் சுத்தமானவன். சுத்தமானதை தான் அவன் விரும்புகிறான். ஏற்றுக் கொள்கின்றான். ரசூல்மார்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதே கட்டளையை அல்லாஹ் முஃமினான உங்களுக்கு கொடுக்கின்றான்.
(ரசூல்மார்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளை கொடுத்தான்?)
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். இன்னும், நல்லதை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன் ஆவேன். (அல்குர்ஆன் 23:51)
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால். (அல்குர்ஆன் 2:172)
இந்த இரண்டு வசனங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காண்பித்து விட்டு சொன்னார்கள்:
ثمَّ ذكر الرَّجُلَ يُطيلُ السَّفرَ، أشعثَ أغبر، يمد يديه إلى السماء: يا رب، يا رب، ومَطْعَمه حرامٌ، ومَشْرَبه حرامٌ، ومَلْبَسه حرامٌ، وغُذِيَ بالحرام، فأنَّى يُسْتَجَابُ لذلك
ஒரு மனிதன் நீண்டநெடிய பயணத்திலே செல்கிறான். களைத்து விடுகிறான். சோர்ந்து விடுகிறான். அவனுடைய ஆடையெல்லாம் புழுதி படிந்து விடுகிறது. தலைமுடியெல்லாம் பரட்டை ஆகிவிடுகிறது. மிகுந்த வேதனையோடு சிரமத்தோடு சென்ற அந்த பயணத்திலே தன்னுடைய இரண்டு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தியவனாக என் இறைவா! என் இறைவா! என்று மன்றாடுகின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அவன் உண்டது ஹராம். அவன் உடுத்தியது ஹராம். அவன் உடல் வளர்ந்தது ஹராமில். இப்படி இருக்கும்போது அவனுடைய பிரார்த்தனை எப்படி அங்கீகரிக்கப்படும்!?
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1015.
அல்லாஹ் பாதுகாப்பானாக! ஒரு மனிதன் ஹராமான வருமானத்தைக் கொண்டு வாழ்வானேயானால் அவன் தன்னுடைய மறுமையை நாசமாக்கி கொண்டான். அவனுடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்தார்கள்:
إنَّ لكلِّ أمَّةٍ فتنةً، وإنَّ فتنةَ أُمَّتي المالُ
ஒவ்வொரு உம்மத்துக்கும் அல்லாஹ் ஒரு சோதனையை கொடுத்திருக்கிறான். என்னுடைய உம்மத்துடைய சோதனை செல்வச் செழிப்பு.
அறிவிப்பாளர் : கஅப் இப்னு இயாழ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2336
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்த்துச் சொன்னார்கள்:
قد أفلح من أسلم، ورزق كفافاً وقنَّعه الله بما آتاه
அந்த மனிதர் வெற்றி பெற்று விட்டார். யார் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாரோ, முஸ்லிமாக இருக்கிறாரோ, தனக்கு போதுமான அளவு வாழ்வாதாரத்தை வைத்திருக்கிறாரோ, பசி இல்லாமல் உணவு அருந்துவதற்கு தன்னுடைய மறைவிடங்களை (அவுரத்தை) மறைப்பதற்கான ஒரு ஆடை, நிழலுக்கான ஒரு வீடு என்று போதுமான அளவுக்கு யாரிடத்தில் இருக்கிறதோ, அதை கொண்டு அவர் திருப்தி அடைந்து விட்டால் அல்ஹம்து லில்லாஹ் அந்த மனிதர் வெற்றி அடைந்து விட்டார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1054
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
اثنتان يكرههما ابن آدم: الموت، والموت خير للمؤمن من الفتنة، ويكره قلة المال، وقلة المال أقل للحساب
இரண்டு காரியங்கள்; இரண்டு விஷயங்கள். மனிதனுக்கு அது இரண்டும் பிடிப்பதில்லை. ஒன்று, அல்மௌத் -மரணம். குழப்பங்களில் விழுந்து விடுவதை விட மரணம் ஒரு முஃமினுக்கு சிறந்தது. மற்றொன்று, பொருளாதாரம் குறைந்து இருப்பதை வெறுக்கிறான். பொருளாதாரம் குறைந்திருப்பது, செல்வம் வசதி குறைந்திருப்பது நாளை மறுமையில் அவனுடைய விசாரணைக்கு மிக இலகுவாக இருக்கும். அதனால் அவனுக்கு விசாரணை மிகக் குறைவாக இருக்கும்.
அறிவிப்பாளர் : மஹமூது இப்னு ளபீது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23625.
அடுத்து அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மிகப்பெரிய ஒரு குழப்பம் என்ன? பிரச்சனை என்ன?. சில மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஹராமான வழியிலே சம்பாதித்து விட்டு பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு நாம் நம்மை மாற்றிக்கொள்வோம்; ஹலாலான வழிக்கு சென்று விடுவோம் என்று.
சுஃப்யான் ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள்; ஒரு மனிதன் சம்பாதித்தது ஹராமை கொண்டு. பிறகு அவன் எதைக்கொண்டு அந்த ஹராமை ஆகுமாக்கிக் கொள்ள பார்க்கிறான்? ஹலாலான வழிகளிலே ஹராமான செல்வதைக் கொண்டா?.
இதற்கு உதாரணம் எப்படி என்றால், (சுஃப்யான் ஸவ்ரி தபுத் தாபியீன்களுடைய மிகப்பெரிய ஒரு இமாம், ஹதீஸ் கலையின் ஃபிக்ஹ் சட்டக்கலையினுடைய பெரிய அறிஞர்) சொல்கிறார்கள்:
இதற்கு உதாரணம் என்னவென்றால் ஒரு மனிதன் தன்னுடைய அழுக்கான ஆடையையோ அல்லது அசுத்தமாகிவிட்ட ஆடையையோ சிறுநீரைக் கொண்டு சுத்தம் செய்ய நாடினால் அவனை எப்படி சொல்வீர்களோ அப்படித்தான். ஹராமிலே சம்பாதித்து விட்டு அதை ஹலாலிலே செலவு செய்வதின் மூலமாக அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க நினைத்த ஒரு மனிதனுக்கு உதாரணம்.
அன்பான சகோதரர்களே! ஹராமாக சம்பாதித்த செல்வம் அதை ஹலாலிலே செலவு செய்வதை கொண்டு ஒருபோதும் நமக்கு நன்மையாக ஆகிவிடாது! அல்லாஹ் பாதுகாப்பானாக!
உமருள் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை கொஞ்சம் கவனியுங்கள்! நாங்கள் ஹலால் உடைய பத்தில் ஒன்பதை விட்டு விலகுவோம். காரணம் என்னவென்றால் ஒரு ஹராமில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக. ஒரு ஹராமில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஹலாலுடைய 10 வழிகளில் 9 வழிகளை விட்டு நாங்கள் பயந்து ஒதுங்கி இருப்போம். ஏன்? அது எங்களை ஹராமில் தள்ளி விடுமோ! என்ற பயத்தின் காரணமாக.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்:
யார் எப்பொழுதும் அதே காசு காசு பணம் செல்வம் என்ற அதே சிந்தனையில் இருக்கிறார்களோ அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சபித்தார்கள்.
تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ
தீனாருக்கு அடிமையானவன், திர்ஹமுக்கு அடிமையானவன். அது போன்று தன்னை எப்போதும் ஆடை அலங்காரங்களை கொண்டு அழகுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த ஆடைகளுக்கு பின்னால் அலைகிறாரோ அவர்கள் நாசமாகட்டும்! அவர்கள் எப்படி என்றால் அவர்களுக்கு கிடைத்தால் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தங்களை நொந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்வார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2886.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள்:
مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ
கடுமையான பசியில் இருக்கக்கூடிய இரண்டு ஓநாய்கள், ஒரு ஆட்டு மந்தையில் சென்றால் அந்த ஆட்டு மந்தைக்கு எப்பேற்பட்ட ஒரு ஆபத்து ஏற்படுமோ அந்த ஆபத்தை விட பெரிய ஆபத்து என்ன தெரியுமா? ஒரு மனிதன் தன்னுடைய செல்வத்தின் மீது பேராசைப்படுவது ஒரு மனிதன் தன்னுடைய செல்வத்தின் மீது பேராசை கொள்வது.
அறிவிப்பாளர் : கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2376.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா எதை கொடுத்தானோ அதை கொண்டு திருப்தி அடைய வேண்டும். அல்லாஹு தஆலா நமக்கு கொடுக்கிற செல்வம் நாம் தேடுகிற செல்வம் அது ஹலாலான வழியில் தான் இருக்கிறதா? என்பதை ஒன்றுக்கு பலமுறை நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு சந்தேகம் இருக்குமேயானால் சந்தேகமானதை விட வேண்டும். மேலும் அதிலே நமக்கு விளக்கம் தேவை என்றால் மார்க்க அறிஞர்களை அணுகி, சட்டங்களை தெரிந்தவர்களை அணுகி தன்னுடைய வியாபாரத்தை எந்த கூச்சமும் இல்லாமல் நான் இப்படி செய்கிறேன்; இப்படி செய்கிறேன்; இது எனக்கு ஹலாலா? என்று நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மிகப் பெரிய முஹத்திஸ், மார்க்க சட்ட வல்லுநர், அதே நேரத்தில் மிகப்பெரிய வியாபாரி. அவர்கள் சொல்கிறார்கள்:
ஒரு ஹராமான திர்ஹமை விடுவது அதாவது ஒரு சம்பாத்தியம் இருக்கிறது. அதிலிருந்து எனக்கு ஒரு திர்ஹம் கிடைக்கும். அதை நான் விட்டு விடுவது லட்சக்கணக்கான திர்ஹங்களை நான் ஹலாலான வழியில் தர்மம் செய்வதை விட எனக்கு சிறந்தது.
எந்த அளவு பயந்தார்கள் பாருங்கள்! இந்த இமாமுடைய இன்னொரு வரலாறை கேளுங்கள்! படியுங்கள் இவர்களை பற்றி எல்லாம்.
இவர்கள் சிரியா தேசம் சென்றார்கள். இமாம் அபூ ஹனிபாவின் மாணவருடைய மாணவர், சிரியா தேசத்திற்கு கல்வி படிக்க சென்ற போது அருகிலே இருந்த மாணவர் இடத்திலே தன்னுடைய எழுதுகோல் உடைந்து விட்டதால் எழுதுகோலை வாங்கி எழுதுகிறார். அந்த வகுப்பு முடிகிறது. வகுப்பு முடிந்த உடனேயே வேகமாக மாணவர்கள் கிளம்பி விடுகிறார்கள்.
இந்த இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் மறந்து அந்த பேனாவை தன்னுடைய பையோடு வைத்துக் கொள்கிறார்கள். பிறகு அந்த ஹதீஸ் வகுப்பு அந்த மார்க்க அறிஞர் உடைய வகுப்பு முடிகிறது. அவர் திரும்ப இராக்கிற்கு வந்து விடுகிறார். சிரியா இடையே இன்றைய டமாஸ்கஸ் நகரத்திலிருந்து வந்து தன்னுடைய படிப்பு மூட்டையை தன்னுடைய புத்தகங்களை எழுதிய அந்த வஸ்துகளை எல்லாம் பிரிக்கும் பொழுது பார்த்தால் அந்த ஒரு பேனா வருகிறது. தன்னுடைய சக மாணவரிடத்திலே வாங்கிய பேனா.
அதே நேரத்தில் அப்படியே மூட்டையை முடித்துவிட்டு அந்த பேனாவை எடுத்துக்கொண்டு இராக்கில் இருந்து டமாஸ்கஸ் சென்று அந்த மஸ்ஜிதிலே தங்கி அந்த மாணவரை தேடி அவரிடத்திலே அந்த எழுதுகோலை ஒப்படைத்து விட்டு வருகிறார்.
சகோதரர்களே! இதுதான் முஸ்லிம்களுடைய பேணுதல். இதுதான் மறுமைக்காக வாழ்பவர்களுடைய பேணுதல். இதுதான் மறுமையின் அல்லாஹ்வுடைய விசாரணையை பயப்பட கூடியவர்களுடைய பேணுதல். அந்த பேணுதலை கொண்டு தான் அல்லாஹ்வுடைய நெருக்கம் அல்லாஹ்வுடைய மஹப்பத் அடைய முடியும்.
அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் ஹலாலான வருமானத்தை தருவானாக! ஹலாலான வாழ்க்கையை தருவானாக! ஒவ்வொரு ஹராமிலிருந்து சொல்லிலும் செயலிலும் பொருளாதாரத்திலும் இன்னும் அல்லாஹ் விரும்பாத ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/