HOME      Khutba      ஹஜ் ஏன்? எப்படி? | Tamil Bayan - 965   
 

ஹஜ் ஏன்? எப்படி? | Tamil Bayan - 965

           

ஹஜ் ஏன்? எப்படி? | Tamil Bayan - 965


ஹஜ் ஏன்? எப்படி?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் ஏன்? எப்படி?
 
வரிசை : 965
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-05-2025 | 11-11-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து அவனிடத்தில் உதவி தேடி அவனுடைய தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ்வின் மீதும், அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக உங்களுக்கும் எனக்கும்  அல்லாஹ்வுடைய உபதேசத்தை தக்வாவை நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ்வை யார் பயந்து கொண்டார்களோ அவர்கள் வெற்றி அடைந்தார்கள். அல்லாஹ்வின் பயம்தான் ஈமானுடைய உயிராக இருக்கிறது. இம்மை, மறுமையின் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம் அனைவரையும் அல்லாஹ்வை பயந்தவர்களாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணக் கூடியவர்களாக, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு  அல்லாஹ்விற்காகவே வாழ்ந்து, அல்லாஹ்விற்காகவே மரணிக்கக் கூடிய நற்பாக்கியம் பெற்றவர்களாக ஆக்கி அருள்வானாக! ஆமீன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! புனித மாதங்களில் முதலாவது மாதம் துல்கஃதா பிறந்துவிட்டது. ஹாஜிகளெல்லாம் இஹ்ராம் அணிந்தவர்களாக, அல்லாஹ்வின் அடியார்களாக அல்லாஹ்வின் நேசத்தால் உள்ளம் துடிதுடித்தவர்களாக;
 
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
 
என்ற அந்த தல்பியாவை ஈமானின் அந்த ஒளியை ஒலித்தவர்களாக அல்லாஹ்வுடைய வீட்டை நோக்கி புறப்படுகின்றார்கள். 
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க அழைத்த அந்த அழைப்பு. 
 
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ
 
இப்ராஹீமே! மக்களுக்கு ஹஜ்ஜுடைய அறிவிப்பை செய்யுங்கள். (அல்குர்ஆன் 22:27) 
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு அந்த அறிவிப்பை செய்தார்கள். அல்லாஹு தஆலா இந்த பூமியில் அவனுக்காக ஒரு  இல்லத்தை ஏற்பாடு செய்தான். 
 
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏
 
நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 3:96)
 
அவனுக்காக ஒரு கட்டிடத்தை, ஒரு இல்லத்தை ஒரு ஆலயத்தை, ஒரு வழிப்பாட்டு தலத்தை உருவாக்கி, அங்கே மற்ற இறை வழிப்பாட்டு தலங்களில் அல்லாஹ்வுடைய ஏனைய மஸ்ஜிதுகளில் செய்யப்படாத ஒரு விசேஷமான இபாதத்தைக் கொண்டு அதை விசேஷப்படுத்தினான், சிறப்பித்தான். 
 
தொழுகை, இஃத்திகாஃப், திக்ர், குர்ஆன் ஓதுவது போன்ற அமல்கள் அல்லாஹ்வுடைய எல்லா மஸ்ஜித்களிலும் செய்யப்படும். ஆனால், அல் மஸ்ஜிதுல் ஹராம், அல்லாஹ்வுடைய கஅபாவில் மட்டும்தான் அல்லாஹ்வுடைய அந்த வீட்டை அடியார்கள் தவாஃப் செய்ய முடியும், சுற்ற முடியும்.
 
ஒரு முஸ்லிம் ஒரு கட்டிடத்தை சுற்றி ஒரு இபாதத்தை அல்லாஹ்விற்காக நிய்யத்து வைத்து ஆரம்பித்து அல்லாஹ்வை திக்ர் செய்தவனாக, போற்றிப் புகழ்ந்து சுற்றுகிறான் என்றால் அது அல்லாஹ்வுடைய கஅபா வாக மட்டும்தான் இருக்க முடியும். 
 
அதற்கு மட்டும்தான் அந்த விசேஷமான சிறப்பு. நபிமார்கள் எல்லோரும் அல்லாஹ்வுடைய அந்த வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள், ஏங்கி இருக்கிறார்கள், அல்லாஹ்விடத்தில் துஆ செய்து இருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஹஜ்-உம்ரா வணக்கம், மக்காவிற்கு செல்வது, அங்கே தங்குவது, அல் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது, கஅபாவை தவாஃப் செய்வது, ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையிலே ஓடுவது; அல்லாஹ்விற்காக வேண்டி தன்னுடைய தலைமுடியை சிரைத்து தனது பணிவை வெளிப்படுத்துவது; பிறகு மீண்டும் மினாவிற்கு ஓடுவது; அங்கிருந்து அரஃபா, அங்கிருந்து முஸ்தலிஃபா, பிறகு அங்கிருந்து மினா, பிறகு அங்கிருந்து அல் மஸ்ஜிதுல் ஹராம், பிறகு மீண்டும் மினா, பிறகு மீண்டும் அல் மஸ்ஜிதுல் ஹராம். 
 
இப்படியாக ஒரு அற்புதமான வித்தியாசமான சூழ்நிலையில் அல்லாஹு தஆலா இந்த முஃமினை பல நாட்கள் அங்கே தங்க வைத்து, அவனுடைய உடலுக்கு. அவனுடைய உயிருக்கு அவனுடைய ஈமானுக்கு அல்லாஹு தஆலா உற்சாகத்தை தருகிறான். அவருடைய தக்வாவிற்கு அல்லாஹுதஆலா ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறான். 
 
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லது அவற்றில் சிறந்ததாக ஈமான் என்பது எந்த முஹப்பத் இல்லாமல் முழுமை அடையாதோ, அல்லாஹ்வுடைய நேசம், நபியின் நேசம், அல்லாஹ் புனிதப்படுத்திய புனிதங்களின் நேசம், நேசம் இல்லாமல் எந்த ஈமான் முழுமை அடையாதோ, அந்த முஹப்பத்தை அல்லாஹு தஆலா தனது அடியார்களின் உள்ளத்திலே அங்கே வரவழைத்து சந்தோஷப்படுகின்றான். 
 
அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்பது அவன் மீது முஹப்பத்தோடு இருக்க வேண்டும். அவன் தண்டிப்பான் என்ற பயம் இருக்க வேண்டும் என்பதை போன்று அவன் மீது ஒரு காதல், அவன் மீது ஒரு நேசம் ,ரஹ்பத், ஷௌக், முஹப்பத் -நான் அல்லாஹ்விற்காக எதையும் செய்வேன்; என்னை எப்படியும் மாற்றிக் கொள்வேன்; எங்கும் நான் தங்குவேன்; அல்லாஹ்விற்காக எத்தனை அசௌகரியங்களையும் நான் சௌகரியங்களாக சுகமாக எடுத்துக் கொள்வேன் என்ற ஒரு அந்த முஹப்பத்தின் வெளிப்பாட்டை அடியானின் உள்ளத்தில் இருந்து உடலின் செயல்களிலிருந்து அவன் வெளிப்படுத்த வேண்டும். அதை அல்லாஹ் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். 
 
சகோதரர்களே! இன்றும் நாம் ஹஜ் செய்கிறோம். அன்றும் நம்முடைய முன்னோர்கள் ஹஜ் செய்தார்கள். வித்தியாசம் என்ன? நம்முடைய ஹஜ்ஜுகள் சுகங்கள் நிறைந்ததாக, வசதிகள் நிறைந்ததாக, ஆடம்பரங்கள் நிறைந்ததாக ஆகிவிட்டன. எந்த அளவு வசதிகளும், சவுகரியங்களும் இன்னும் பல விதமான ஆடம்பரங்களும் ஒரு பயணத்தில் நிகழுமோ அது ஹஜ்ஜிலே நிகழ்வதை பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு செல்வந்தன் தன்னுடைய வசதிக்கு ஏற்ப, தன்னுடைய பழக்கத்திற்கு ஏற்ப செலவுகளை செய்வதை மார்க்கம் குறை சொல்லவில்லை. அவன் அதற்கு ஜக்காத்  கொடுத்திருப்பானேயானால். 
 
ஆனால், அதே நேரத்தில்; 
 
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
 
அல்லாஹ்விற்காக என்று ஹஜ் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவாக முழுமையாக செய்யுங்கள். அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை, உம்ராவை முழுமைப்படுத்துங்கள், நிறைவு படுத்துங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே! (அல்குர்ஆன் 2:196)
 
அனைத்தும் அல்லாஹ்விற்காக என்று இருக்க வேண்டும்.  உனது ஆசைக்கு, உனது அற்ப சுகங்களுக்கு, உனது நப்ஸுக்கு என்று எந்த பங்கும் அதில் இருக்கக்கூடாது. 
 
ஆகவேதான், ஹஜ்ஜுக்கு செல்லும்போதே; 
 
 ‌ؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏
 
(பயணத்திற்கு இடையில் வழியில் உண்பதற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை- பயண உணவை  (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் பயண உணவில் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 2:197)
 
ஹாஜிகளே தக்வாவோடு ஹஜ்ஜுக்குப் புறப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்று எப்படி?  கடலை மிட்டாயிலிருந்து மிக்சரில் இருந்து என்னென்ன வாங்கி பெட்டிகளை கட்ட முடியுமோ? எல்லாம் கட்டப்பட்டு விடும். சின்ன சின்ன துணியிலிருந்து பெரிய துணியில் இருந்து எல்லா ஏற்பாடும் ஹஜ்ஜுக்கு செய்யப்பட்டு விடுகிறது. 
 
செய்யப்படாத ஒரு ஏற்பாடு என்றால் அது ஈமானிய தக்வா உடைய, உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவதுனுடைய, தர்பியா உடைய, தஸ்கியா உடைய, அந்த இறைநினைவுடைய, அந்த இறை முஹப்பத்தினுடைய ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. 
 
கடைசி நேரம் வரை விமானத்தில் உள்ளே புகுந்து அவன் போனை சுவிட்ச் ஆப் செய் என்று கத்துகிறவரை வியாபார பேச்சுகள், நண்பர்களோடு பேச்சுகள், செல்ஃபி அனுப்புவது, இப்படி என்னென்ன செய்ய முடியுமோ அல்லாஹ்வின் நினைவைத் தவிர அத்தனை நினைவுகளையும் ஒருங்கே கொண்டு வந்து விடுகிறார்கள். சாதாரணமான ஒரு பயணமா இது? லப்பைக் சாதாரணமான ஒரு வார்த்தையா இது? பயம் வேண்டமா?.
 
ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு லப்பைக் சொல்லுவதற்கு முன்பே அழ ஆரம்பித்து விடுவார்கள். முகம் (மஞ்சளித்து விடும்) மஞ்சளாக மாறிவிடும். பயந்து விடுவார்கள். ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? சொல்கிறார்கள்; சிலருடைய தல்பியாவுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான், ஏற்றுக்கொள்வான். சிலருடைய தல்பியாவுக்கு உனது தல்பியா நிராகரிக்கப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்வான். அவர்களின் ஒருவனாக நான் ஆகி விடுவேனோ! என்று பயப்படுகிறேன். 
 
நூல் : தஹ்தீபுல் கமால் 20/390
 
ஹுசைன் யார்? மிகப்பெரிய வணக்கசாலி. சொர்க்கத்தின் வாலிபத் தலைவர்களில் ஒருவர். அவர்கள் தனது ஹஜ் தனது தல்பியா நிராகரிக்கப்படுமோ என்று பயப்படுகிறார்கள்.  
 
சகோதரர்களே! இபாதத்திலே இந்த பயம் இருக்க வேண்டும். அல்லாஹ் எனக்கு இந்த இபாதத்தை செய்ய தௌஃபிக் செய்தான். வாய்ப்பை வழங்கினான், என்ற மகிழ்ச்சி இருப்பதோடு, அந்த மகிழ்ச்சி பெருமையாக ஆகிவிடக்கூடாது. ஆணவமாக ஆகிவிடக்கூடாது.
 
அதே நேரத்தில் என்னுடைய இந்த வணக்கம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற பயம் இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ  ۙ‏
 
இன்னும், எவர்கள் தாங்கள் கொடுக்கும் தர்மத்தை கொடுப்பார்களோ, அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் அவர்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்புவோம் என்று பயந்தவையாக இருக்கும் நிலையில். (அல்குர்ஆன் 23:60)
 
உள்ளம் பயந்த நிலையில் நல்லவர்கள் வணக்க வழிபாடுகளை செய்வார்கள். சகோதரர்களே! இந்த ஹஜ் உடைய வணக்கம் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த வணக்கம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்பட்டது; அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறப்பான அமலை சொல்லுங்கள். 
 
(நாமும் ஆலிம் இடத்தில் சென்று கேட்போம். மார்க்கத்தை அறிந்தவர்களிடத்தில் கேட்போம்.‌ என்ன கேள்வி கேட்போம்? வியாபாரத்தில் பரக்கத்துக்கு துஆ என்ன? சுத்தி சுத்தி எங்க போனாலும் நம்முடைய மையப் புள்ளி எதுவா இருக்கும்? காசு, பணம் தான். துன்யாவுல பரக்கத்துன்னு சொல்லிட்டா அந்த அமலை அப்படியே கெட்டியா புடிச்சுப்போம். அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸின் மூலமாக வந்திருந்தாலும் சரி, மிக பலவீனமான ஹதீஸின் மூலம் வந்திருந்தாலும் சரி. ஆனால், ஸஹீஹான ஹதீஸிலே ஒரு அமல் சொல்லப்பட்டிருக்கும், அது மறுமை சார்ந்ததாக இருக்கும் கண்டுகொள்ளாமல் சென்று விடுவார்கள்.)
 
سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «جِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேட்கப்பட்டது. அமல்களில் சிறந்த அமல் எது?  சொன்னார்கள்; அல்லாஹ்வை ஈமான் கொள்வது, அவனுடைய ரசூலை ஈமான் கொள்வது. ஈமான் என்பது ஒரு அமல். பிறகு கேள்வி கேட்டவர் நின்றுவிடவில்லை. 
 
அல்லாஹ்வின் தூதரே! அடுத்து ஒரு அமலை சொல்லித் தாருங்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அல்லாஹ்வின் பாதையிலே போரிடுவது. பிறகு அவர் கேட்டார்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; நன்மைகள் நிறைந்த ஹஜ் நன்மையோடு செய்யப்பட்ட ஹஜ். அவர் அதில் யாரையும் திட்டவில்லை, ஏசவில்லை, மனைவியிடத்திலே ஆபாசமாக பேசவில்லை, சண்டை சச்சரவுகள் செய்யவில்லை, இறை நினைவோடு செய்யப்பட்ட ஹஜ். அதுதான் ஹஜ்ஜுல் மப்ரூர் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1519.
 
இவ்வளவு பெரிய மகத்தான நன்மைகளை கொண்டஇந்த வணக்கம். இன்று பல செல்வந்தர்கள் உப்பு சப்பில்லாத காரணத்திற்காக இந்த ஹஜ்ஜை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 
நாமெல்லாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். சில நாடுகள் இருக்கின்றன. அங்கிருந்து ஹஜ் செல்வதற்கு இந்த ஆண்டு பதிவு செய்தால் குறைந்தது 50 ஆண்டுக்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்பு வரும். இந்த ஆண்டு அவர் ஹஜ் செய்வதற்கு அப்ளிகேஷன் பெயர் பதிவு செய்தால் அவருடைய பெயர் எப்போது வரும்? 50 வருஷம் கழிச்சுதான். 
 
உனக்கு ஹஜ் செய்யணுங்குற நிய்யத்து 50 வயசுல தான் வருது. எனக்குத் தெரிந்ததை, நான் கேட்டதை, நான் பார்த்ததை, என்னோடு இந்த சோதனையில் சிக்கியவர்கள் சொன்னதை உறுதி செய்து நான் சொல்கிறேன். 50 வயசுல ஹஜ் செய்றதுக்கு பதிவு செஞ்சு 50 வருஷம் கழிச்சு உங்களுக்கு போற வாய்ப்பு எப்படி கிடைக்கும்
 
அல்லாஹ்வின் அடியார்களே! எவ்வளவு பெரிய கொடுப்பினையிலே நாம் இருக்கிறோம். நம்முடைய செல்வந்தர்களுக்கு தெரியவில்லை. கட்டடம் கட்ட  வேண்டும்; ஆடம்பர கல்யாணங்கள் நடத்த வேண்டும்; சொத்து சுகங்கள் வாங்க வேண்டும், பிறகு பார்க்கலாம் என்பதாக இருக்கிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியது மட்டுமல்ல இந்த ஹஜ். எச்சரிக்கையும் செய்தார்கள்.‌ 
 
நம்முடைய தாய் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ரசூலுல்லாஹ் உடைய மனைவிமார்கள், முஃமின்களின் அந்த தாய்மார்கள், சஹாபாக்களின் அந்த பெண்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் சிந்தித்துப் பாருங்கள்! 
 
வறுமையிலே, பசியிலே, பட்டினியிலே இருக்கக்கூடிய பெண் நபியிடம் வந்து கேட்கிறார்கள்; 
 
அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் தான் ஒரு சிறந்த அமல் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே நாங்களும் ஜிஹாது செய்ய வேண்டும்‌. ஏன் நாங்கள் ஜிஹாத் செய்யக்கூடாது? 
 
யார் கேட்கிறார்கள் இந்த கேள்வியை?  ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பெண் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கும் போதே அவர்களுக்கு 20 வயதுக்கு கீழ் தான் இருந்தது என்றால் அந்த ஒரு இளம் பெண் வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இல்லை. 
 
அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீதாக வேண்டுமென்று ஆசை இருந்தது. அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக என்னை இழக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அல்லாஹ்வுடைய தீனுக்காக என் கை வெட்டப்படாதா? கால் வெட்டப்படாதா? என்னுடைய உயிர் பறிக்கப்படாதா? எத்தகைய அந்த ஈமானிய தேடல் பாருங்கள். 
 
நாம் எப்படி தெரியுமா? நம்முடைய சுகம், நம்முடைய அந்த தேடல், நம்முடைய விருப்பம் இதில் எதையும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள தயார் இல்லை.  இதற்கெல்லாம் ஒத்து இபாதத் வருமா? அந்த இபாதத்தை செய்வோம். நாங்கள் எப்படி இபாதத் செய்தாலும் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஜன்னத்துல் பிர்தௌஸை கொடுத்து விட வேண்டும். இப்படி நம்முடைய கண்டிஷன் உள்ளன.
 
நீ செய்ற இபாதத் சுன்னத்தின் படி இருக்கிறதா? ஹதீஸின் படி இருக்கிறதா? அதெல்லாம் பார்க்க மாட்டார்கள். இதில் எத்தனை சடங்குகள் இருக்கின்றன? எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன? நம்முடைய இபாதத்தில் இருக்கின்ற ஓட்டைகளை அடைப்பதற்கே தனியாக இபாதத் செய்ய வேண்டும். 
 
பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மட்டுமல்ல, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கே ஏராளமான இபாதத்துகளை நாம் செய்தாக வேண்டும். அவ்வளவு பாவங்களை சேர்த்து வைத்திருக்கிறோம். 
 
ஆனால், இன்னொரு பிரச்சனை என்ன? செய்கின்ற இபாதத்துகளில் உள்ள குறைகளை ஃபர்ள்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் எத்தனை நஃபில் செய்ய வேண்டுமோ?!
 
இரண்டு ரக்அத் சுபுஹ் உடைய தொழுகையை நிதானமா, உள்ளச்சத்தோடு, அமைதியோடு தொழுது முடிக்க முடிகிறதா? துன்யாகுள்ள போறதுக்கு முன்னாடி உள்ள தொழுகை ஃபஜ்ருடைய தொழுகை. லுஹர், அஸர் அல்ல. அதிகாலை தொழுகை ஃபஜ்ர். அதிலேயே துன்யாவை தலையில் சுமந்து கொண்டுதான் அங்கே நிற்கிறான் என்றால் என்ன மறுமையின் தேடல்? சொர்க்கத்தின் தேடல், அல்லாஹ்வின் மீது உண்டான ஆசை, மஹ்ஷரினுடைய  நினைவு அந்த அடியானுடைய உள்ளத்திலே இருக்கப் போகிறதா யோசித்துப் பாருங்கள்! 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்; 
 
عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لاَ، لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ»
 
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஜிஹாது செய்ய வேண்டும். நாங்கள் ஏன் ஜிஹாது செய்யக்கூடாது? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். மொத்த பெண்களை அங்கே முன்னிறுத்தினார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சொல்வதின் மூலமாக. உங்களுக்கு ஜிஹாத் இருக்கிறது. ஜிஹாதிலே உங்களுக்கு சிறந்தது நீங்கள் ஹஜ் செய்யுங்கள்.  
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1520.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ்விடமிருந்து இந்த ஹதீஸை கேட்டதற்கு பிறகு கலிஃபா உமர் உடைய காலத்திலிருந்து ஏறக்குறைய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்து நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் மரணிக்கின்ற வரை ஹஜ் உடைய வணக்கத்தை விடவே இல்லை. எத்தனை சிரமங்களை தாங்கினார்கள்!
 
அவர்களை எது தாங்க வைத்தது? அல்லாஹ்வின் மீது உண்டான அந்த அன்பு பாசம், அமல்களின் மீது உண்டான அந்த தேடல். 
 
எத்தனை வலிகளை சுமந்து இருப்பார்கள் யோசித்துப் பாருங்கள்! கலீஃபா உமருல் ஃபாரூக் ரலியல்லாஹு  அன்ஹு அவர்கள் ஹஜ் செய்வார்கள். வருஷம் வருஷம் ஹஜ் செய்வார்கள். எவ்ளோ பெரிய கலிஃபா அவருக்கு இல்லாத வேலையா? 
 
இன்று பல செல்வந்தர்கள் சொல்கிறார்கள்; எப்படியோ தப்பிச்சோம், பொழச்சோம்னு கழுத்தை புடிச்சு இழுத்து யாராவது தள்ளியோ, யாராவது இழுத்துட்டு போய் ஹஜ் செய்ய வச்சுட்டா, அப்புறம் தலை வைத்து கூட அந்த பக்கம் படுக்க மாட்டார்கள். 
 
ஒரு ஸஹீஹான ஹதீஸிலே வருகிறது.
 
إنَّ عبدًا أصحَحتُ لهُ جسمَهُ ، ووسَّعتُ عليهِ في مَعيشتِهِ ، تمضي عليهِ خمسةُ أعوامٍ لا يَفِدُ إليَّ لمَحرومٌ
 
ஒருவன் ஹஜ் செய்கிறான். வசதி அல்லாஹ் அவனுக்கு கொடுத்திருக்கிறான். ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் அவன் என்னுடைய வீட்டுக்கு வரவில்லை என்றால் அவன் என்னோடு உண்டான முஹப்பத்திலே வறட்சி அடைகிறான் என்று அல்லாஹ் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 1909.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:  
 
تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ
 
ஹஜ் உம்ராவை தொடர்ந்து செய்யுங்கள்! (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
ஹஜ் செய்வதால் செல்வம் குறைகிறது, செலவழிக்க வேண்டி இருக்கிறது என்று இப்படி ஒரு சிந்தனை யாருக்காவது வருமேயானால் 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய பொருத்தத்துக்காக இந்த ஹஜ்ஜுக்கு நீங்கள் செலவழித்துப் பாருங்கள். பிறகு அதில் அல்லாஹ் செய்யக்கூடிய பரக்கத்தை உணர்வீர்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: யார் ஹஜ் செய்வார்களோ அவர்கள் ஒருபோதும் ஏழைகளாக ஆக மாட்டார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
எவ்வளவு நற்செய்திகளை சொன்னார்கள்! ஒரு பக்கம் ஈமான், ஒரு பக்கம் மறுமை, இன்னொரு பக்கம் எந்த துன்யாவை தேடுகிறோமோ அதற்கும் நமக்கு கேரண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
مَنْ أَتَى هَذَا الْبَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ 
 
யார் அல்லாஹ்விற்காக ஹஜ் செய்வார்களோ, அதிலே ஆபாசமாக நடந்து கொள்ளவில்லையோ, பாவங்கள் செய்யவில்லையோ, அவருடைய தாய் அவரைப் பெற்ற தினத்தில் எப்படி இருந்தாரோ அதேபோன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக வருவார். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1350.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ: الْغَازِي، وَالْحَاجُّ، وَالْمُعْتَمِرُ
 
அல்லாஹ்வுடைய விசேஷமான சிறப்பு குழு மூன்று பேர்கள் என்று சொன்னார்கள். முதலாவது,  அல்லாஹ்வின் பாதையிலே போர் செய்யும் போராளி. இரண்டாவது, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்ய வந்தவர், மூன்றாவது அல்லாஹ்வுடைய வீட்டை உம்ரா செய்வதற்காக வந்தவர். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 2625.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஹஜ் என்பது நம்முடைய ஈமானுக்கான ஒரு தர்பியா, நம்முடைய மார்க்கப்பற்றுக்கான தர்பியா, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அல்லாஹு தஆலா ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மகத்தான வணக்கம். 
 
இந்த ஹஜ்ஜை தஸ்கியாவோடு செய்ய வேண்டும். தர்பியாவோடு செய்ய வேண்டும். சொல்லக்கூடிய ஒவ்வொரு திக்ரையும் உணர்ந்து புரிந்து செய்ய வேண்டும். தல்பியாவில் ஆரம்பித்து இறுதி வரை சொல்லக்கூடிய ஒவ்வொரு திக்ரையும் மனனம் செய்து அதனுடைய பொருளை உணர்ந்து ஒவ்வொரு இபாதத்துடைய தாத்பரியத்தை உணர்ந்து அந்த இபாதத்தில் உள்ளத்தை ஓர்மைப்படுத்தி அல்லாஹ்வுக்காக, என் ரப்புடைய பொருத்தத்திற்காக, என்னுடைய மறுமைக்காக, என்னுடைய நஃப்ஸை அடக்குவதற்காக, என்னுடைய மன இச்சையை அடக்குவதற்காக, என்னுடைய கண்ணியத்தை, மதிப்பை அல்லாஹ்வுக்காக நான் துறப்பதற்காக; நான் அல்லாஹ்வுடைய அப்து, நான் அல்லாஹ்வுடைய அடியான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, வெளிப்படுத்துவதற்காக இந்த உலகம் முஸ்லிம்கள் எல்லாம் என்னுடைய சகோதரர்கள் என்ற அந்த ஈமானிய சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதற்காக அந்த ஹஜ்ஜை செய்ய வேண்டும் என்ற ஈமானிய உணர்வு வர வேண்டும். 
 
அங்கே பலவிதமான மக்கள் வருவார்கள். எல்லா நாடுகளிலும் இருந்து வருவார்கள். எப்படிப்பட்ட  ஒன்று படுவதை சந்திப்பை அல்லாஹ் அங்கே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்! அவர்கள் எல்லாம் பார்த்து இவர்கள் என்னுடைய சகோதரர்கள் என்ற அந்த (உஹுவ்வத்) சகோதரத்துவத்தை கொண்டு வர வேண்டும். 
 
ஆனால், இதில் கூட ஒரு மிகப்பெரிய பலவீனமான ஒரு நிலையை பார்க்கிறோம். இந்த ஈமானிய உஹுவ்வத்தை உணராதவர்கள் தங்களுடைய நிறத்தால், மொழியால், தேசத்தால், மக்களை அங்கும் பாகுபாடு காட்டி வெறுப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் மன்னிப்பானாக! 
 
கலீஃபா உமர் உடைய அந்த வரலாறை கூறி இன் ஷா அல்லாஹ் நிறைவு செய்வோம். கலிஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜுக்கு வருவார்கள். எப்படிப்பட்ட ஒரு பணிவான ஹஜ் பாருங்கள்! எப்பேற்பட்ட ஒரு பெரிய ஜனாதிபதி! அவர்கள் நாடி இருந்தால் மக்காவிலே மிகப்பெரிய ஒரு சொகுசு வில்லாவிலே பங்களாவை ஏற்பாடு செய்து அவர்கள் தங்கி இருக்கலாம். 
 
மக்காவின் ஒரு சட்டம் எப்படி என்று சொன்னால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலும், அதற்கு முன்னுள்ள அறியாமைக்காலம் என வர்ணிக்கப்படும் அய்யாமுல் ஜாஹிலிய்யா உடைய காலத்திலும், அதற்குப் பிறகு கலீஃபாக்கள் உடைய காலத்திலும் ஹஜ் காலம் வந்து விட்டால், ஊர்வாசிகள் எல்லாம் தங்களுடைய வீடுகளை காலி செய்துவிட்டு மலைகளின் ஓரங்களிலே கூடாரங்கள் அமைத்து அங்கு குறிப்பிட்ட காலம் சென்று விட வேண்டும். அந்த வீடுகளை ஹாஜிகளுக்காக கொடுத்து விட வேண்டும். வாடகை எதுவும் வாங்கக்கூடாது. 
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு இதில் ரொம்ப கவனமாக இருந்தார்கள். எல்லோருக்கும் வீடுகளை கொடுத்துவிட்டு கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு மரத்தின் நிழலில் தான் அவர்கள் முழு ஹஜ்ஜையும் கழிப்பார்கள். மக்காவிலே அவர் தங்கி இருக்கக்கூடிய காலத்திலும் சரி, பிறகு மினா, அரஃபா, முஸ்தலிஃபா எல்லோருக்கும் அந்த காலத்தில் என்ன வசதி இருந்ததோ, எந்த டென்டை கொடுத்தாலும் சாதாரணமான ஒரு கூடாரத்தில்தான் உமர் அவர்கள் தங்குவார்கள். 
 
ஹஜ் முடித்து விட்டு செல்லும் பொழுது தன்னுடைய அந்த கணக்கரிடம் கேப்பாங்க; ஹஜ்ஜுக்கு நம்ம எவ்வளவு செலவு பண்ணினோம்னு. கலீஃபாவோடு கூட யாரெல்லாம் வந்திருப்பார்கள். அவர்கள் சொல்லுவார்கள்; இந்த ஹஜ்ல 18 தினார் செலவு ஆகியிருக்கு. 
 
இன்னைக்கு ஒரு தினார் அதிகப்படியா 270 ரூ. அப்ப 18 தினார் எவ்வளவு இருந்திருக்கும்? 5000 குள்ளார ஒரு கலீஃபா அத்தனை பேரோட ஹஜ் செய்துவிட்டு போய்ட்டாரு.
 
சகோதரர்களே! இங்கே ஹஜ் வசதியாக செய்யப்படுகிறதா? ஹஜ் என்னுடைய சௌகரியங்கள் எதுவும் அசௌகரிங்களாக மாறாமல், எனக்கு உடல் வலிக்காமல், என் தேவைகள் எதுவும் முன்பின் ஆக்காமல், அதற்கான ஏற்பாடுகள் ஹஜ்ஜில் இருக்கின்றதா? எந்த அளவுக்கு என்றால் என் நாவின் ருசியில் கூட நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை.
 
மினாவிலே ரசம் கிடைக்கவில்லை என்று சண்டை போட்ட ஹாஜிகள் எல்லாம்  இருக்கிறார்கள். மினாவில்  ரசம் கிடைக்கவில்லை என்று இட்லி காலையில் கொடுக்கவில்லை என்று ( இட்லிக்கும் சட்னிக்கும்) சண்டை போட்ட ஹாஜிகள் எல்லாம் இருக்கின்றார்கள். எப்படிப்பட்ட ஒரு நிலை பாருங்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதுவா ஹஜ்? ஹஜ் என்பது ஈமானோடு, அல்லாஹ்வுடைய முஹப்பத்தோடு, தேடலோடு, பயத்தோடு ஏதோ ஒன்று எனக்கு அங்கே இருக்கிறது அதை தேடிச் செல்கிறேன். அதைப் பெற்று வர வேண்டும். அந்த ஈமானை, இஹ்லாஸை, அந்த தக்வாவை அந்த முஹப்பத்தை,  அல்லாஹ்வுடைய அன்பை ஒவ்வொரு முறை செல்லும் போதும் இந்த முறை எனக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. அடுத்த முறை நான் வருவேன் மீண்டும் எனக்கு எந்த முஹப்பத் கிடைப்பதற்காக அல்லாஹ்விடத்திலே மன்றாடுவேன், அழுவேன் என்று அந்த ஈமானிய உணர்வோடு திரும்ப வேண்டும். 
 
அதற்கு தான் அல்லாஹ் பெயர் வைத்தான் கஅபா என்று. கஅபா என்பது எப்படி என்றால் திரும்பத் திரும்ப அங்கே செல்வதற்கு ஆசைப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீடு. அப்படிப்பட்ட இல்லம் என் இல்லம் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! நாமும் ஹஜ்ஜுக்கு செல்வோமாக! அல்லாஹ் கொடுத்த செல்வத்தை, அல்லாஹ்வுடைய இபாதத்துக்காக செலவழித்து மகிழ்வோமாக! நம்முடைய குடும்பத்தில் யாருக்கு ஹஜ் கடமையாகி விட்டதோ அவர்களை நாம் ஹஜ்ஜுக்கு ஆர்வமூட்டுவமாக! தீவிரப்படுத்துவோமாக! 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ  தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்முடைய குறைகளை மன்னிப்பானாக! நம்மை பொருந்தி கொள்வானாக! காசா மக்களுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை தருவானாக! இஸ்ரேல் யஹூதிகளுக்கு கேவலமான இழிவை, கேவலமான தோல்வியை அல்லாஹ் தருவானாக! எல்லா உலக மக்களுடைய உள்ளங்களிலும் அவர்கள் மீது வெறுப்பை அல்லாஹ் ஏற்படுத்துவானாக! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா முஃமின்கள் முஸ்லிம்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்து கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ» سنن الترمذي 810 [حكم الألباني] : حسن صحيح
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹஜ்ஜையும் உம்ராவையும் தொடர்ந்து செய்யுங்கள்; ஏனெனில், உலைத்துருத்தியானது இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளியிலுள்ள கசடை நீக்குவதைப் போல, அவ்விரண்டும் வறுமையையும் பாவங்களையும் நீக்கிவிடுகின்றன - மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு (அல்-ஹஜ் அல்-மப்ரூருக்கு) சுவர்க்கத்தைத் தவிர வேறு நற்கூலி இல்லை.”
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/