ஜுமுஆ தொழுகையில் அஃலா | Tamil Bayan - 997
ஜுமுஆ தொழுகையில் அஃலா
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ தொழுகையில் அஃலா
வரிசை : 997
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12-09-2025 | 20-03-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவனாகிய, நமது ரப்பாகிய அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், மனைவிமார்கள், தோழர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா அவனுடைய அன்பையும் அருளையும் நமக்கு எழுதுவானாக! அல்லாஹ் நேசிக்கின்றவர்களாகவும், அல்லாஹ்வை நேசிக்கின்றவர்களாகவும் இருக்கும் நல்ல அடியார்களில் எங்களையும், உங்களையும், நமது பெற்றோர்களையும், நமது பிள்ளைகளையும், நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹி ﷺ இந்த ஜுமுஆ நாளுக்கு கொடுத்த முக்கியத்துவங்களில் ஒன்று, இந்த ஜும்ஆ தொழுகையில் ஓதுவதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த சூராக்களாகும். அந்த சூராக்களின் மூலம் ரசூலுல்லாஹி ﷺ நமக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை நினைவூட்ட விரும்புகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ தமது வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் அந்த சூராக்களையே தொடர்ந்து ஓதினார்கள். அதற்கு பின்னால் வந்த சஹாபாக்கள், இது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய நாம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னா என்று புரிந்து அதனை பின்பற்றி வந்தார்கள்.
அப்படி அவர்கள் முக்கியத்துவம் கொடுத்த அந்த அமல்களில் ஒன்றுதான்;
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يَقرأُ في الجُمُعة بـسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى، وهَلْ أَتَاكَ حَدِيثُ الغَاشِيَةِ
வெள்ளிக்கிழமை தொழுகையில் முதல் ரக்அத்தில் சூரத்துல் அஃலாவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் காஷியாவையும் ஓதுவது. இவை அல்குர்ஆனின் 87 மற்றும் 88 ஆகிய இரு அத்தியாயங்கள் ஆகும்.
அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1125.
நாமும் பல மஸ்ஜிதுகளில் இந்த சூராக்கள் ஓதப்படுவதை செவியுற்று இருப்போம். ஆனால் நம்மில் எத்தனை பேர், “ஏன் இந்த சூராக்களை பல மஸ்ஜிதுகளில் ஓதுகிறார்கள்? சில இமாம்கள் தவிர்த்தாலும், பெரும்பாலான இமாம்கள் ஏன் இதையே ஓதுகிறார்கள்? வேறு சூராக்கள் தெரியாததாலா? இந்த சூராக்கள் எந்த செய்தியை நமக்கு சொல்கின்றன?” என்று சிந்திக்கிறோமா?
இன்றும் பலருக்கு இந்த சூராக்கள் அல்குர்ஆனில் எந்த பகுதியில் இடம்பெறுகின்றன? எத்தனையாவது அத்தியாயங்களாக உள்ளன? என்பதையே கூட சிந்திப்பதற்கு நேரமில்லை. காரணம் என்னவென்றால், அந்த அளவுக்கு துன்யா நம்மை கவ்வி வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு துன்யாவில் நாம் மூழ்கி இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! நாம் சிந்திக்க வேண்டிய மிக சிறப்பான செய்தி. அல்லாஹ்வின் வேதம்.
هُوَ نَبَؤٌا عَظِيْمٌۙ
குர்ஆன் மிக மகத்தான செய்தி. (அல்குர்ஆன் 38:67)
اَفَبِهٰذَا الْحَـدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَۙ
குர்ஆனின் இந்த செய்த செய்தியையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 56:81)
مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ
அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை ஏதும் அவர்களுக்கு வந்தால் அவர்களோ விளையாண்டவர்களாக இருக்கும் நிலையில் அதை செவியுறுகிறார்கள். (அல்குர்ஆன் 21:2)
அல்குர்ஆன் நிரந்தரமான செய்தி, உண்மையான செய்தி, உள்ளங்களை மாற்றுவதற்காக அல்லாஹ் இறக்கிய செய்தி. இந்த செய்தியை இந்த குர்ஆனை நாம் சிந்திக்கவில்லை என்றால் வேறு உலக வஸ்துகளை சிந்தித்து, ஆராய்ந்து, புரிந்து என்ன பலன் இருக்கிறது?
அல்லாஹ் கொடுத்த அறிவிற்கு நாம் உண்மையில் நன்றி செலுத்துகிறோம் என்றால் அந்த அறிவைக் கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை சிந்திக்க வேண்டும். அந்த வேதத்தை உணர வேண்டும் அதற்கு தான் அல்லாஹு தஆலா அறிவு கொடுத்திருக்கின்றான்.
اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ
யார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. (அல்குர்ஆன் 50:37)
அல்குர்ஆனை சிந்திப்பவர்களை தான் அல்லாஹு தஆலா புத்திசாலிகள், அறிவாளிகள் என்று சொல்கிறான். அல்லாஹ்வின் அடியார்களே! அப்பேர்ப்பட்ட மகத்தான செய்திகள் இந்த சூரத்துல் அஃலாவிலே இடம்பெறுகின்றது. அல்லாஹு தஆலா இந்த சூராவை ஆரம்பம் செய்கிறான். நபியே மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீ புகழ்ந்து துதிப்பீராக!
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்தி தொழுவீராக! (அல்குர்ஆன் 87:1)
ஒரு அடியான், ஒரு முஃமின் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய மகத்துவம், அல்லாஹ்வுடைய கண்ணியம், அவர்களுடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். அவனது நாவில் இருக்க வேண்டும். அவனது சிந்தனையில் இருக்க வேண்டும். தஸ்பீஹ் அல்லாஹ்வை புகழ்வது, துதிப்பது, அல்லாஹ்வை பெருமைப்படுத்துவது. இது அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல்.
அல்லாஹு தஆலா வானவர்களில் ஒரு கூட்டத்தை (சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி) அல்லாஹ்வை புகழ்ந்து துதிப்பதற்காகவே, இந்த திக்ரை செய்வதற்காகவே படைத்திருக்கின்றான். அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் அவனை புகழ்ந்து குர்ஆனில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல வசனங்களில்,
سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 61:1)
يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 64:1)
வானங்கள், பூமிகளில் உள்ளவை எல்லாம் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன, செய்து கொண்டிருக்கின்றன என்று அல்லாஹ் சொல்கிறான். ஒரு முஃமினுடைய ஈமான் வலுப்பெறுவது, ஒரு முஃமினுடைய இறையன்பு உயர்வது, அதனுடைய தரம் உயர்வது, அவன் அல்லாஹ்வை துதிப்பதைக் கொண்டுதான்.
எந்த அளவு அல்லாஹ்வை உணர்ந்து புரிந்து உள்ளத்தில் எப்படி சொல்ல வேண்டும்? சொல்லும்போது ஒரு அன்பு, ஒரு பாசம் கலக்க வேண்டும். ஒரு நேசம் இருக்க வேண்டும். சில நேரங்களில் தனிமையிலே அதை சொல்லும்போது நம்முடைய கண்கள் அல்லாஹ்வுடைய அன்பால் அழ வேண்டும் .
அல்லாஹ்வை நினைத்து அழுகின்ற மனிதன் நாளை அல்லாஹ்வுடைய நிழலிலே இருப்பான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 600.
அல்லாஹ் தனக்கு செய்த பெரும் உபகாரங்களை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவனுக்கு தான் செய்த குறைபாடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு நிஃமத்துகளை கொடுத்தான். நான் அதற்கு நன்றி செலுத்தவில்லையே! என்று அந்த தன்னுடைய குறையை உணர்ந்தவனாக அல்லாஹ்வை புகழ்வது. அல்லாஹ்வின் மகத்துவத்தை உணர்ந்தவானாக அல்லாஹ்வை புகழ்வது.
யா அல்லாஹ்! உன்னை புகழ வேண்டிய அளவுக்கு, உன்னை கண்ணியப்படுத்தக்கூடிய அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே என்று அந்த ஏக்கத்தோடு அல்லாஹ்வை புகழ்வது. அல்லாஹ் சொல்கிறான்; நபியே உங்களுடைய வேலை என்ன?
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
(அல்குர்ஆன் 87:1)
உயர்ந்த உங்களது ரப்பை புகழ்ந்து கொண்டே இருங்கள். அவன் தான் மிக உயர்ந்தவன். அவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எந்த ஆட்சியும், எந்த அதிகாரமும், எந்த மனிதனும், எந்த சக்தியும் உலகத்தில் உயர்ந்தது கிடையாது. அல்லாஹ் தான் உயர்ந்தவன். அல்லாஹ்வுடைய வாக்கு தான் உயர்ந்தது .
அல்லாஹ் உயர்ந்தவன் அல்லாஹ்வோடு எது சேர்க்க சேர்க்கப்படுகிறதோ, அல்லாஹ்வோடு எது இணைக்கப்படுகிறதோ, அது அவனுடைய அன்பின் அடிப்படையிலே அதுதான் உயர்ந்தது. அதைத்தவிர எல்லாம் தாழ்ந்தது. அல்லாஹ் எதை விரும்புகின்றானோ அது உயர்ந்தது.
இந்த ஈமான் இந்த யகீனோடு தஸ்பீஹ் செய்ய வேண்டும். அல்லாஹு தஆலா, ஏன் நீங்கள் அல்லாஹ்வை துதிக்க வேண்டும்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் உங்களுக்கு என்ன செய்திருக்கிறான்? என்பதற்கான ஆதாரங்களை சொல்கிறான் பாருங்கள்.
الَّذِىْ خَلَقَ فَسَوّٰى ۙ
அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான். (அல்குர்ஆன் 87:2)
படைத்தானே, அனைத்தையும் சிறப்பாக உங்களுக்கு வழங்கி இருக்கின்றானே, அனைத்தையும் அமைத்து தந்திருக்கிறானே, அவன் எப்பேர்பட்ட மகத்தான இறைவன்!
وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى ۙ
இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான். (அல்குர்ஆன் 87:3)
விளக்கம் : அனைத்தையும் நிர்வகித்து விட்டான். அனைத்தையும் முடிவு செய்து விட்டான். அதை நீங்கள் அடைவதற்கு உண்டான வழிகளை உங்களுக்கு காட்டுகின்றான். நம்முடைய தேவைகளை நாம் எப்படி அடைய வேண்டும்? அந்தத் தேவைகளை நாம் எளிதாக்கக்கூடிய வழிகள் என்ன என்பதை எல்லாம் அல்லாஹ் முடிவு செய்து, ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப அதற்கு அல்லாஹ் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றான். தமது தேவையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று ஒவ்வொரு படைப்பும் வழிகாட்டப்பட்டது.
குழந்தைகளை எடுங்கள். பறவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மிருகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா படைப்பும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு இயல்பான அறிவு கொடுக்கப்பட்டு, தனது உணவை, தேவையை, இனப்பெருக்கத்தை எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள வேண்டும்? எங்கே வாழ வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? எதை உண்ண வேண்டும்? என்ற அறிவை எல்லாம் அதற்கு கொடுத்து அல்லாஹ் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றான். எவ்வளவு மகத்தான வசனம்!
அடுத்து, அல்லாஹு தஆலாசொல்கிறான்:
وَالَّذِىْۤ اَخْرَجَ الْمَرْعٰى ۙ
இன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்). (அல்குர்ஆன் 87:4)
உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடைய கால்நடைகளுக்கு விளை நிலங்களை, விவசாய நிலங்களை, உங்களுடைய கால்நடைகளுக்கு புற்பூண்டுகளை முளைத்து தரக்கூடிய பூமியை அல்லாஹ் தஆலா உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறானே! அவன் எப்பேர்பட்ட இறைவன்!
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰى
பிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான். (அல்குர்ஆன் 87:5)
அவன் நாடும் பொழுது அந்த செடி கொடிகளை எல்லாம் காய்ந்த சருகுகளாக ஆக்கி விடுகின்றான். உலர்ந்த சருகுகளாக ஆக்கி விடுகின்றான். பசுமையாக இருந்தாலும் உணவு, காய்ந்தாலும் உணவு என்று அல்லாஹு தஆலா சூழ்நிலைக்கு ஏற்ப கால்நடைகளுக்கு உணவை உற்பத்தி செய்து கொடுப்பவன். பிறகு நபி இடத்திலே அல்லாஹ் பேசுகின்றான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ
(நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர், (அல்குர்ஆன் 87:6)
இந்த குர்ஆனை உங்களுக்கு ஓத வைப்பது நாம். இந்தக் குர்ஆனை கற்றுக் கொடுப்பது நாம்.
فَلَا تَنْسٰٓىۙ
இந்த குர்ஆனை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள்.
اِلَّا مَا شَآءَ اللّٰهُ
அல்லாஹ் நாடியதைத் தவிர. (அல்குர்ஆன் 87:7)
எந்த வசனங்களை உங்களது உள்ளங்களில் இருந்து மறக்கடிக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதை தவிர இதில் ஒரு எழுத்தை கூட நீங்கள் மறக்க மாட்டீர்கள். இந்த குர்ஆனை நாம் இறக்கினோம். இந்தக் குர்ஆனை உங்கள் உள்ளத்திலே நாம் பாதுகாப்போம்.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம். (அல்குர்ஆன் 15:9)
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு அப்படி ஒரு அற்புதமான மனன சக்தியை அல்லாஹ் கொடுத்திருந்தான். அல்லாஹ் அடுத்து பேசுகின்றான்.
اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰى
நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான். (அல்குர்ஆன் 87:7)
உங்களது ரப்பு இருக்கின்றானே, அவனது தனித்தன்மை; அவன் வெளிப்படையானதையும் அறிவான். மறைவானதையும் அறிவான். ரப்புல் ஆலமீன் அனைத்தும் அவனுக்கு தெரியும். இது ஒரு மகத்தான செய்தி. என்னுடைய ரப்பு அனைத்தையும் அறிந்தவன் என்று ஒரு அடியான் நம்பிக்கை கொள்வது போதுமானது. அல்லாஹு தஆலா அப்பேர்ப்பட்ட யகீனை அவனுக்கு கொடுத்துவிடுவான்.
இன்று, பலர் அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்வை அறிகிறார்கள். அல்லாஹ்வுடைய தன்மையோடு அறிந்திருப்பது அதுதான் ஒரு நமக்குள் ஆழமான உறுதியான, அந்த ஈமானை கொண்டு வரும்.
அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று வெறும் அறிந்து வைத்திருப்பது அந்த யகீனை கொடுக்காது. அந்த ஈமானை கொடுக்காது. அல்லாஹ் அவனுடைய ஸிஃபத்துகளோடு, அவனது தன்மைகளோடு, எந்த புகழை கொண்டு அல்லாஹ் தன்னை புகழ்கின்றானோ அந்த புகழ்களைப் புரிந்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது. அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.
اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰى
(அல்குர்ஆன் 87:7)
நபியே! உங்களது ரப் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கின்றான். வெளிப்படையானதும் அறிவான். மறைவானதையும் அறிவான். அல்லாஹ்விடத்தில் எதையும் மறைக்க முடியாது. எந்த இரகசியமும் யாரும் அல்லாஹ்விற்கு மறைந்ததல்ல.
அடுத்த வசனத்தில் அல்லாஹ் சொல்கின்றான்;
وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰى
நபியே! சொர்க்க பாதையை உங்களுக்கு நாம் இலக்குவாக்கி தருவோம். (அல்குர்ஆன் 87:8)
அல்லாஹு தஆலா சொர்க்க பாதைக்குப் பெயர் சொல்கின்றான் “அல்யுஸ்ரா” என்று. இலகுவான பாதை. அல்லாஹ் எப்படி பெயர் வைக்கிறான் என்று பாருங்கள். அல் யுஸ்ரா என்றால் சொர்க்கப் பாதை. அதனுடைய பொருள் என்ன? மிக இலகுவானது. சொர்க்கத்தின் பாதை எப்போதும் இலகுவானது. நரகத்தின் பாதை கஷ்டமானது. ஆனால், மக்களை பாருங்கள். கஷ்டமான நரகத்தின் பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். இலகுவான சொர்க்கத்தின் பாதையை விட்டு விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இரண்டு ரக்அத் தொழுவது எவ்வளவு இலகுவான காரியம். அதை செய்பவர்கள் குறைவு. ஆனால் ஆடலிலும், பாடலிலும், இன்னும் அனாச்சாரங்களிலும் எவ்வளவு நேரங்களை சிரமப்பட்டு செலவு செய்து, பொருளாதாரத்தை செலவழித்து ஈடுபடுகிறார்கள். யோசித்துப் பாருங்கள்.
நரகத்தை விலைக்கு வாங்குவது; செல்வத்தை செலவழித்து, உடலை வீணடித்து, சுகாதாரத்தை வீணடித்து, அறிவை ஆரோக்கியத்தை வீணடித்து இலகுவாக இருக்கின்றது. ஆனால் அல்லாஹ்வை சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று திக்ரு செய்வதோ, குர்ஆனை ஓதுவதோ, தொழுவதோ அவர்களுக்கு சிரமமாக இருக்கின்றது.
அல்லாஹு தஆலா சொர்க்கத்தையும் நரகத்தையும், படைத்ததற்கு பின்பு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளை இட்டான். ஜிப்ரீலிலே சொர்க்கத்தை பார்த்து வாருங்கள். பார்த்து வந்தார்கள். எப்படி இருந்தது? என்று அல்லாஹு தஆலா கேட்டான்.
யா அல்லாஹ்! எப்பேர்ப்பட்ட மகத்தான இன்பங்கள் நிறைந்த இல்லம் இது. இதைப்பற்றி கேள்விப்படுபவர்கள் கண்டிப்பாக இதில் நுழைவார்கள்.
பிறகு, அல்லாஹு தஆலா நரகத்தைப் படைத்தான். பார்த்து வாருங்கள் என்று சொன்னான். யா அல்லாஹ்! எப்பேர்பட்ட அதாபுகள் நிறைந்த இடம் இது. இதை பற்றி கேள்விப்படுபவர்கள் பயந்து ஓடுவார்கள் என்று சொன்னார்கள்.
حُفَّتِ الجنَّةُ بالمكارِهِ وحُفَّتِ النَّارُ بالشَّهواتِ
அல்லாஹு தஆலா பிறகு சொர்க்கத்தை மனதிற்கு பிடிக்காத அமல்களை கொண்டுச் சூழ வைத்தான். நரகத்தை இச்சைகளை கொண்டு அல்லாஹ் சூழ வைத்தான். பிறகு பார்த்து வாருங்கள் என்று சொன்னான். பார்த்துவிட்டு யா அல்லாஹ் மக்கள் எப்படி சொர்க்கம் செல்வார்கள்? நரகத்திலிருந்து எப்படி தப்பிப்பார்கள்? என்று நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 716.
இந்த நஃப்ஸ் இருக்கின்றதே. இது ஷைத்தானுடன் ஒரு நட்பு வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஷைத்தானிற்கு எது பிடிக்குமோ அது இந்த நஃப்ஸுக்கு பிடிக்கும். இந்த ஷைத்தானுக்கு எது பிடிக்காதோ அதை இந்த நஃப்ஸ் வெறுக்கும்.
அதற்கு மேல் அல்லாஹ் ஒரு ஈமானை வைத்திருக்கிறான். ஒரு தக்வாவை வைத்திருக்கிறான். அந்த தக்வாவைக் கொண்டு இந்த நஃப்ஸை நாம் கட்டுப்படுத்தினால் தான், உண்மையை உண்மை என்றும், சத்தியத்தை சத்தியம் என்றும், எது உண்மையான இன்பமோ அதை உண்மையான இன்பம் என்று அறிந்து கொள்ள முடியும்.
நரகம் ஆசையான விஷயங்களைக் கொண்டு சூழப்பட்டுள்ளது. அல்லாஹு தஆலா சொர்க்கத்தின் பாதையை இலகுவாக வைத்திருக்கிறான். ஒவ்வொரு சிறிய, பெரிய அமலுக்கும் அல்லாஹு தஆலா சொர்க்கத்தை வாக்களித்து வைத்திருக்கிறான் என்றால் இதைவிட இலகுவான பாதை வேறு என்ன இருக்க முடியும்.
ஒரு உயிரினத்திற்கு தண்ணீர் கொடுத்தால் அல்லாஹ் உங்களை மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்புகிறான். பெற்றோருக்கு நீங்கள் நன்மை செய்தால் உங்களை அல்லாஹ் சொர்க்கத்தை தருகின்றான். பிள்ளைகளுக்கு தர்பியத் செய்தால் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தருகிறான்.
சுப்ஹுடைய தொழுகையை தொழுதால் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தருகிறான். அஸருடைய தொழுகையை தொழுதால் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தருகிறான். நீங்கள் ஒரு “சுப்ஹானல்லாஹ்”, ஒரு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்ல சொல்ல உங்களுக்கு சொர்க்கத்தில் வீடுகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்த சின்ன சின்ன அமல்களுக்கு மகத்தான சொர்க்கத்தை அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் என்றால் வேறு என்ன ஒரு பாதை இலகுவான பாதை இருக்க முடியும்?
மனிதன் நரகத்திற்கு கஷ்டப்பட வேண்டும். ஆனால், அந்த கஷ்டம் நஃப்ஸுக்கு இன்பமாக இருக்கக் கூடிய காரணத்தினால் அந்த கஷ்டமான பாதையை மனிதன் சகித்துக் கொள்கிறான். ஏற்றுக் கொள்கிறான். அதனுடைய கேவலத்தை கூட அவன் அனுபவிக்கத் தயாராக இருக்கின்றான்.
ஆனால், அந்த சொர்க்கத்தின் பாதை இந்த நஃப்ஸுக்கு பிடிக்காமல் இருக்கின்ற காரணத்தினால் அது அவனுக்கு சுலபமாக அதைப் பார்த்தால் ஒரு வெருட்சியாக தெரிகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அடுத்து, அல்லாஹ் சொல்கின்றான்.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰى
ஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன் 87:9)
உபதேசம் செய்து கொண்டே இருங்கள். நினைவூட்டி கொண்டே இருங்கள். நிச்சயமாக உபதேசம் யாருக்கு பலனளிக்குமோ அவர்கள் பலன் பெறுவார்கள். யாருக்கு உபதேசம் செய்தால் அவர்கள் செவி கொடுப்பார்களோ, ஏற்பார்களோ, பின்பற்றுவார்களோ அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு இருங்கள்.
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார். (அல்குர்ஆன் 87:10)
யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இருக்கிறதோ, அல்லாஹுவை சந்திக்க வேண்டும் என்று அச்சம் இருக்குமோ, அல்லாஹ் என்னை விசாரிப்பான், என்னுடைய ரப்புக்கு முன்னால் ஒரு நாள் நான் நிற்க வேண்டும், என்னுடைய எஜமானனுக்கு முன்னால் நான் ஒரு நாள் நிற்க வேண்டுமே இந்த பயம் யாருக்கு இருக்கிறதோ கண்டிப்பாக அவர்கள் நல்லறிவு பெறுவார்கள்.
ஒரே ஒரு தத்துவம் தான். ஒரே ஒரு மருந்து தான். நம்மை திருத்துவதற்கு, நம்மை சரி செய்வதற்கு, நம்மை அல்லாஹ்விற்கு பிரியமான நல்லடியார்களாக மாற்றுவதற்கு, அல்லாஹ்வுடைய நேசராக, வழிகாட்டியாக, அல்லாஹ்வுடைய ஹபீபாக, அல்லாஹ்வுடைய உண்மையான அப்தாக, நாம் நம்மை மாற்றுவதற்கு ஒரே ஒரு இரகசியம்தான். அல்லாஹ் சொல்கிறான்,
سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ
அல்லாஹ்வை பயப்படுங்கள். உங்களுக்கு எல்லாம் சரியாகிவிடும். உங்களது கல்பு சரியாகிவிடும். உங்கள் பார்வை சரியாகிவிடும். உங்களது செவி சரியாகிவிடும். உங்களது பொருளாதாரம் சரியாகிவிடும். உங்களது வாக்கு சுத்தமாகிவிடும் உங்களுடைய குடும்ப உறவுகள் சரியாகிவிடும். எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வுடைய பயம்.
மனைவியோடு உள்ள உறவு சரியாக வேண்டுமா? பிள்ளைகளோடு உள்ள உறவு சரியாக வேண்டுமா? பெற்றோர்களுடன் உறவு, கொடுக்கல் வாங்கல், எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வுடைய பயம் இருந்தால் சரியாகிவிடும்.
ஒவ்வொரு ஆட்சியாளரும் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும், எஜமானரும் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். பணியாளரும் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். இதை கொண்டு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருந்த, மிகப் பெரிய மோசக்காரர்களாக குடிகாரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த, அந்த அரேபிய சமுதாயத்தை அல்லாஹ்வுடைய பயத்தைக் கொண்டு உலக வரலாற்றிலேயே மிகப் புனிதர்களாக உருவாக்கினார்கள்.
நபி ﷺ முதலாவதாக அந்த சஹாபாக்களுக்கு தக்வாவை சொல்லிக் கொடுத்தார்கள். அல்லாஹ்வுடைய பயத்தை சொல்லிக் கொடுத்தார்கள்.
அங்கே இராணுவம் இல்லை. அங்கே போலீஸ் இல்லை. அங்கே காவலாளிகள் இல்லை. ஆனால் தப்பு செய்தவர்கள் யாரும் இல்லை. அப்படியே தப்பே செய்து விட்டாலும் அவர்களை கண்காணித்து சிறை பிடித்து கொண்டு வரக்கூடியவர்கள் யாரும் இல்லை.
அவர்களே தன்னை ரசூலுல்லாஹ் ﷺ முன்னால் வந்து நின்று கொண்டு (ஒரு பாவத்தை வாழ்நாளில் ஒருமுறை செய்ததால்) யா ரசூலுல்லாஹ்! நான் அழிந்து நாசமாகிவிட்டேன், என்று முறையிடுவார்கள்.
நாம் ஒவ்வொரு நாளும் பாவத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றுக்கு பலமுறை செய்கிறோம். செய்த பாவங்கள் இவ்வளவு நமக்குள் இருக்கிறதே என்ற பயமும் இல்லை. வெட்கமும் வருவதில்லை. அவ்வளவு துணிச்சலாக ஆகிவிட்டது நமக்கு.
அல்லாஹ் கேட்கிறான் அல்லவா:
فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ
நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்? (அல்குர்ஆன் 2:175)
காஃபிர்களை பார்த்து கேட்கக்கூடிய கேள்வி, இன்று நமக்குள்ள கேள்வியாக நாம் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் அடியார்களே!
அல்லாஹ்வை பயப்படக்கூடியவர் இந்த குர்ஆனை கொண்டு உபதேசம் பெறுவார். அல்லாஹ் சொல்கிறான்;
وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ
இன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான். (அல்குர்ஆன் 87:11)
கெட்டவன், துர்பாக்கியவான் அவனுக்கு உபதேசம் பிடிக்காது. அவனுக்கு நல்லுரைகள் பிடிக்காது விலகி ஓடுவான்.
الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى
(அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான். (அல்குர்ஆன் 87:12)
ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 87:13)
அந்த நரகத்திலே அவனுக்கு சாவதற்கும் வழி இருக்காது. வாழ்வதற்கும் வழி இருக்காது. அல்லாஹ் சொல்கிறான், உங்களுக்கு வெற்றி வேண்டுமா? நற்பாக்கியம் வேண்டுமா? இம்மையும் சீராக வேண்டுமா? மறுமையும் சீராக வேண்டுமா உங்களுடைய கப்ரு சீராக வேண்டுமா?
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ
(இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார். (அல்குர்ஆன் 87:14)
யார் பரிசுத்தவானாக ஆகிவிட்டானோ, யாருடைய உள்ளம் தூய்மை அடைந்து விட்டதோ அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவர் யாராகவும் இருக்கலாம். சாதாரண மனிதனாக இருக்கலாம், கல்வி இல்லாத பாமரனாக இருக்கலாம், கூலி வேலை செய்யக்கூடியவராக இருக்கலாம், பெரிய படித்த பட்டதாரியாக கூட இருக்கலாம், அரசனாக இருக்கலாம், குடிமகனாக இருக்கலாம். ஆனால், அங்கே அதுவெல்லாம் நோக்கமல்ல. உள்ளம் சுத்தமானவர் வெற்றி அடைவார்.
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى
இன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார். (அல்குர்ஆன் 87:15)
அவர் எப்படி? அந்த உள்ளம் சுத்தமடைந்த உடன் அவர் அல்லாஹ்வை நினைத்து தொழுவார்.
சகோதரர்களே! நாம் தொழுகின்றோம். அல்லாஹ்வுடைய நினைவை சொல்லிக்கொண்டு தொழுகின்றோம். ஆனால் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவு இருக்கின்றதா? எப்படி நம்முடைய திக்ருக்கும் நபிமார்களுடைய திக்ருக்கும் இறை நேசர்களுடைய திக்ருக்கும் என்ன வித்தியாசம்?
நம்முடைய திக்ரு நாவில் இருக்கின்றது. கல்பில் இருக்கிறதா? அவர்களுடைய திக்ரு நாவிலும் இருந்தது, உள்ளத்திலும் இருந்தது. அந்த திக்ருடைய வெளிப்பாடுகள் செயல்களிலும் வெளிப்பட்டன. அல்லாஹ்வை பற்றி சொல்லப்பட்டால்,
اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ
அல்லாஹ்வைப் பற்றி பேசப்பட்டால் நடுங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 8:2)
அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்பட்டால் பணிந்துவிட்டோம், கட்டுப்பட்டு விட்டோம் என்று சொல்வார்கள். இன்று, நம்மில் ஒருவருக்கு ஒரு சட்டம் சொல்லப்பட்டால், சொத்துரிமையிலே இப்படி இருக்கிறது. கொடுக்கல் வாங்கலிலே இப்படி இருக்கிறது. கடன் வாங்கினால் இப்படி சட்டம். இதெல்லாம் பாத்துக்கலாம் வைங்க. எனக்கு தெரியும். எந்த அளவுக்கு திமிராக பேசுகின்றார்கள். ஒரு முஃமினால் இப்படி பேச முடியுமா?
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அந்த உபதேசத்தை புறக்கணிக்கின்றானே அவன் நெருக நெருப்பிலே எரிந்து கொண்டிருப்பான். அவர்களுக்கு வாழவும் முடியாது. சாகவும் முடியாது. யாருடைய உள்ளம் சுத்தமானதோ அவர்கள் தான் வெற்றி அடைவார்கள். அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தொழுவார்கள். தொழுகையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அல்லாஹ்வை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ரசூல் ﷺ சொன்னார்கள்:
ஒரு மனிதன் உளூ செய்கிறான் உளூவை திருத்தமாக செய்கிறான்.
(நம்மில் பலருக்குக்கு உளூ செய்யவே தெரியவில்லை. முகத்தை, கைகளை, கால்களை கழுவுவது தெரியவில்லை. தலைக்கு மஸஹ் செய்வது எப்படி? என்று அதுவே தெரியவில்லை. அல்லாஹ் நாடிய சிலரை தவிர.
இந்த உளூவை என்றைக்காவது ஹதீஸோடு படித்து பார்த்திருக்கின்றீர்களா? உளூவை குறித்து நபி ﷺ சொன்ன ஹதீஸ்கள் என்ன என்பதை நீங்கள் தேடி இருக்கின்றீர்களா?)
சொன்னார்கள். உளூ செய்து விட்டு இரண்டு ரக்அத், உள்ளத்தில் ஊசலாட்டம் இல்லாமல், உள்ளத்தில் குழப்பம் இல்லாமல்.
அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அஃபான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 232.
எப்படி? இன்னைக்கு நம்முடைய நிலைமை என்ன? அல் ஹம்து சூரா ஓதிக் கொண்டிருப்போம். அல் ஹம்து சூரா தான் ஓதுகிறோமா என்று தெரியாது. எங்கேயோ போய் சுத்திக்கிட்டு அதுக்கப்புறம் எல்லாம், இதை உதாரணத்துக்கு சொல்லுகிறேன் தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த செக்குமாடு சுத்திக்கிட்டு இருக்கும் பாருங்கள். இல்லன்னா மன்னர் கழுதை போய்க்கிட்டே இருக்கும் பாருங்கள், அந்த மாதிரி ஒரு சூராவை ஓதிக் கொண்டு அப்படியே ருகூஃ, அப்படியே ஸுஜூது செய்துவிட்டு அப்படியே ஸலாம் முடிஞ்சு போச்சு கதை.
எத்தனை பேருக்கு இரண்டு ரக்அத் தொழுததற்கு பிறகு முதல் ரக்அத்தில் ஃபாத்திஹா உடன் எந்த சூரா ஓதினேன் என்று தெரியுமா? அல்லது இரண்டாவது ரக்அத்தில் என்ன சூரா ஓதினேன் என்று தெரியுமா? ஏன்?
நபி ﷺ ருகூவில், சுஜூதில் தஸ்பீஹை ஒற்றைப்படையில் செய்யுங்கள் என்று சொன்னார்களே, மூன்றாக, ஐந்தாக, ஏழாக. நான் இப்போ ருகூல 5 தஸ்பீஹ் ஓதுனேன் என்று யாராவது. சொல்ல முடியுமா? ஏன்? நம்முடைய உறுப்பு தொழுகையில் இருக்கிறது. நம்முடைய உள்ளம் எங்கேயோ சுத்திக் கொண்டிருக்கிறது. நமது நாவு குர்ஆனை ஓதுகின்றது. அல்லாஹ்வை திக்ருகளை சொல்லுகிறது. ஆனால், உள்ளம் அதோடு இணைவது கிடையாது.
அல்லாஹ் சொல்கின்றான்:
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى
அல்லாஹ்வை நினைத்து தொழுகின்றான். (அல்குர்ஆன் 87:15)
وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ
என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20:14)
மூசா நபிக்கு முதலாவதாக அல்லாஹ் தொழுகையை கற்றுக்கொடுக்கும் போது, மூசா என்னை நீங்கள் நினைப்பதற்காக தொழுகை நிலை நாட்டுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான். நீங்கள் தனியாக உட்கார்ந்து மணிக்கணக்காக மண்டையை ஆட்டி திக்ரு செய்ய என்ற அவசியம் இல்லை. நீ உன்னுடைய தொழுகை - ஒரு மகத்தான திக்ர். அல்லாஹ்வை நினைப்பதற்காக உள்ள இபாதத். ஆனால், இன்று பலருக்கு தொழுகை அல்லாஹ் மறந்த நிலையிலே தெரிகின்றது.
அடுத்து முக்கியமான செய்தியை பாருங்கள். இந்த சூராவிலே அனைத்து இரகசியங்களும் அல்லாஹ் இங்கே கொண்டு வருகின்றான். இந்த செய்தியை தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுக்கு கொடுக்க விரும்பினார்கள்.
மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16)
இவ்வளவு உபதேசம் செய்யப்பட்டு, இவ்வளவு அறிவுரை சொல்லப்பட்டு, இவ்வளவு அழகான உங்களுக்கு மறுமையைப் பற்றி, ஆகிரத்தைப் பற்றி, கப்ரை பற்றி, அல்லாஹ்வை பற்றி, நிலையான வாழ்க்கையை எல்லாம் உங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதற்கு பிறகும் கூட;
بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا
உலக வாழ்க்கை தானே உங்களுக்கு பிடிக்கின்றது. உலக வாழ்க்கையை தானே நீங்கள் தேர்ந்தெடுக்கின்றீர்கள். உலக வாழ்க்கைக்கு தானே நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள். மறுமையை விட்டு விட்டீர்களே. சொர்க்கத்தை மறந்து விட்டீர்களே.
وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى
மறுமைதான் சிறந்தது. அதுதான் நிரந்தரமானது. (அல்குர்ஆன் 87:17)
اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى
முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது, இப்ராஹீம் இன்னும் மூஸா ஆகியோரின் வேதங்களிலும் (கூறப்பட்டிருக்கிறது). (அல்குர்ஆன் 87:18,19)
இந்த உபதேசம் முஃமீன்களே! உங்களுக்கு குர்ஆனில் மட்டும் சொல்லப்படுவதில்லை. இதற்கு முன்னால் வாழ்ந்த எல்லா நபிமார்களுக்கும், இப்ராஹீம் உடைய ஏடுகளிலே, மூசா உடைய ஏடுகளிலே இந்த உபதேசம் சொல்லப்பட்டிருக்கின்றது என்று அல்லாஹ் இந்த சூராவை நிறைவு செய்கின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் தூதர் ﷺ இத்தகைய மகத்தான செய்தியை இந்த சூராவின் மூலமாக ஒவ்வொரு முஃமின்களுடைய உள்ளத்திலும், இந்த ஜுமுஆவுடைய நாளிலே தக்க வைக்க வேண்டும் என்று திருத்த வேண்டும் என்று விரும்பினார்கள்.
அல்லாஹ்வுக்காக வாழ வேண்டும். அல்லாஹ்வை நினைத்து அவனுடைய சட்டங்களை பேணி வாழ வேண்டும். உலகத்தை விட ஆகிரத்தை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும். இதுதான் உலக வாழ்க்கையுடைய இரகசியம்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அதை நினைவூட்டி கொண்டே இருந்தார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும், உங்களுக்கும் இந்த குர்ஆனை கொண்டு அதன் பலனை தருவானாக! அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, உணர்ந்து, புரிந்து அதன்படி செயல்பட்டு நம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய, நம்முடைய குடும்பங்களை மாற்றக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/