ஜுமுஆ தொழுகையும் ஸூரா அல்காஷியாவும் | Tamil Bayan - 998
ஜுமுஆ தொழுகையும் ஸூரா அல்காஷியாவும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜுமுஆ தொழுகையும் ஸூரா அல்காஷியாவும்
வரிசை : 998
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 19-09-2025 | 27-03-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீது, அந்த தூதரின் குடும்பத்தார், மனைவியார், சந்ததிகள் மற்றும் அவர்களுடைய தோழர்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய மகத்தான மன்னிப்பையும், அன்பையும், அருளையும் வேண்டியவனாக, சொர்க்கத்தின் மகத்தான வெற்றியை வேண்டியவனாக, இஸ்லாமிய மார்க்கத்தின் உறுதியான பற்றையும் பிடிப்பையும் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலாவுடைய பயத்தை எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக உபதேசம் செய்து கொள்கிறேன். அல்லாஹ்வை பயந்தவன் கண்டிப்பாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைவான். அவன் அல்லாஹ்விற்கு பிரியமானவனாகவும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் ஒருவனாகவும் ஆகிவிடுவான்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு உயிரினும் மேலான முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ வெள்ளிக்கிழமைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வந்தோம்.
வெள்ளிக்கிழமை என்பது இன்று நம்மைப் பொறுத்தவரை உயர்ந்த ஆடைகள் அணிவதற்காகவும், ருசியான உணவுகளை சாப்பிடுவதற்காகவும், சில அரபு நாடுகளில் விடுமுறை தினமாகக் கொண்டு கொண்டாடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பல அரபு நாடுகளில் எந்த நாளில் அதிகமாக பாவங்கள் நடைபெறுகின்றன என்றால், அது வெள்ளிக்கிழமைகளில்தான்.
வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதனால், வியாழக்கிழமை மாலையிலிருந்தே சிலர் ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த இரவு முழுவதும் கார் ஓட்டுவது, ரேஸ் ஓட்டுவது, கிளப்புகளில் ஆட்டம்–பாட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, கடைசியில் பலர் ஸுப்ஹ் தொழுகையைக்கூட வீணடித்து விடுகிறார்கள். அதன் பின்னர் ஜுமுஆ தொழுகைக்கு மட்டும் வருவார்கள்.
அந்த ஜுமுஆ தொழுகையும் எப்படி நடைபெறுகிறது என்றால், “சில நிமிடங்களில் முடித்துவிட வேண்டும்” என்ற அவசரத்தில் நடத்தப்படுகிறது. தொழுகை சில நிமிடங்களிலேயே முடிக்கப்பட வேண்டும் என்பதுபோல் நடக்கிறது. அது ஹரம் ஷரீஃபாக இருந்தாலும் சரி. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! நம்மை பாதுகாப்பானாக!
நம்முடைய சுகபோகத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், நம்முடைய ரப்பை திருப்திப்படுத்துவதற்காக, நம்முடைய மறுமைக்காக, நம்முடைய சொர்க்கத்திற்காக, நாளை மறுமையில் பலனை அனுபவிக்கப் போகும் அந்த அமல்களுக்காக நாம் எவ்வளவு சோம்பேறித்தனத்தையும், எவ்வளவு அலட்சியத்தையும் வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பாருங்கள். எத்தனை சாக்குப்போக்குகளை சொல்லிக்கொள்கிறோம் என்பதை கவனியுங்கள்.
இன்று இவ்வளவு வசதிகள் இருந்தும், ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய காலத்தில் இல்லாத அளவுக்கு வசதிகள் நமக்குக் கிடைத்தும், இபாதத்தை நாம் மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கிறோம்.
இன்று, நமக்கெல்லாம் அனைத்தும் உடனடியாக நிறைவேறுகிறது. தண்ணீர் வேண்டுமா? உடனே கிடைத்துவிடுகிறது. உணவு வேண்டுமா? அதுவும் உடனடியாக கிடைத்துவிடுகிறது. அதற்காக நாம் பெரிய உழைப்பை செலுத்த வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய காலத்தில் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள்! இன்று, நம்முடைய மஸ்ஜிதுகளில் இருக்கக்கூடிய வசதிகள் அவர்களிடம் இருந்ததா?
அப்படிப்பட்ட நிலையில் கூட, அந்த வெயிலிலும், அந்த குளிரிலும், அந்த மழையிலும், எந்த வசதியும் இல்லாமல் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த இரண்டு ஸூராக்களை ஏன் அல்லாஹு தஆலாவின் தூதர் ﷺ ஓதினார்கள் என்றால், நம்மைப் போல மறுமையை மறந்து, மறுமையைத் தேர்ந்தெடுக்காமல் உலகப் போகங்களில் மூழ்கியவர்களெல்லாம் இந்த இரண்டு ஸூராக்களின் மூலம் உபதேசம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் மக்கள் அதிகமாக கூடும் வெள்ளிக்கிழமைகளிலும், பெருநாள் தொழுகைகளிலும் ரசூலுல்லாஹ் ﷺ இந்த ஸூராக்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து ஓதுவார்கள்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுடைய எந்த அமலும் சாதாரணமாக ஆகிவிடுமா? அவர்கள் ஒரு முறை செய்தாலே கூட, அதில் மிகப் பெரிய முக்கியத்துவமும் ஆழ்ந்த கவனமும் இருக்க வேண்டும். அப்படியிருக்க, இந்த இரண்டு ஸூராக்களை தொடர்ந்து ஜுமுஆ தொழுகைகளிலும், பெருநாள் தொழுகைகளிலும் ரசூலுல்லாஹ் ﷺ ஓதியவர்களாக இருந்தார்கள் என்றால், ஏன் ஓதினார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்கிறோமா?
இன்று நாம் சுன்னாவைப் பற்றி பேசுகிறோம். “ரசூல் ﷺ அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறோம். ஆனால், தொழுகைகளிலே அந்த சுன்னாவை நாம் தானே கொலை செய்கிறோம். சுன்னாவைச் சார்ந்த அத்தனை பெயர்களையும், ஸஹாபாக்களைச் சார்ந்த அத்தனை பெயர்களையும் சூட்டிக்கொண்டு பெருமை அடிப்பதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். ஆனால் எந்தத் தொழுகையை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ பேணினார்களோ, எந்தத் தொழுகையை ஸஹாபாக்கள் பேணினார்களோ, அதே தொழுகையில் அந்த சுன்னாவை நாம் புறக்கணித்து விடுகிறோம்.
இதற்கு இன்னும் பெரிய விசேஷம் என்னவென்றால், பொய்யான சாக்குப்போக்குகளை நாம் சொல்லிக் கொள்கிறோம். ஒரு மனிதன் பாவம் செய்வது, அல்லது சுன்னாவை மீறுவது தவறு என்று சொன்னால், அந்த சுன்னாவை மீறுவதற்காக சாக்குப் போக்கு சொல்லுவது—அது அதைவிட மிகப் பெரிய தவறாகும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ இந்த ஸூராக்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? இந்த ஸூராக்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒற்றுமையை சிந்தித்துப் பார்த்தீர்களா? இந்த ஸூரத்துல் அஃலாவும் அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டளையிடுகின்றது.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰى
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்குர்ஆன் : 87:9)
கருத்து : நபியே மக்களுக்கு நினைவூட்டி கொண்டே இருங்கள். உபதேசம் செய்து கொண்டே இருங்கள். நாம் எல்லாம் மறக்கக் கூடியவர்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களின் காலத்தில் இருந்த ஸஹாபாக்கள், ரசூலுல்லாஹ் ﷺ அவர்களிடம் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதரே! உங்களை விட்டு பிரிந்து, மனைவி-மக்களோடு கலந்துவிட்டால், நாங்கள் மறந்து விடுகிறோமே” என்று.
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு அல்லாஹ் விசேஷமாக கட்டளையிட்டான்:
உபதேசம் செய்து கொண்டே இருங்கள். மறுமையை நினைவூட்டி கொண்டே இருங்கள். சொர்க்கத்தின் ஆசையை முஃமின்களுக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள். நரகத்தின் பயத்தை மக்களுக்கு நீங்கள் உணர்த்தி கொண்டே இருங்கள்.
அறிவிப்பாளர் : ஹன்ளலா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2750.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை நம்புவது மட்டும் ஒரு மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும், இறையச்சம் உள்ளவனாகவும் ஆக்கிவிடாது. அல்லாஹ்வை அவனுடைய வாக்குகளோடும் நம்ப வேண்டும். அல்லாஹ்வை அவனுடைய எச்சரிக்கைகளோடும் நம்ப வேண்டும்.
அல்லாஹ்வுடைய வாக்கு தான் சொர்க்கம். அல்லாஹ்வுடைய எச்சரிக்கை தான் நரகம்.
இன்று, பலருக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்றால், இருக்கிறது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால், அல்லாஹ்வுடைய வாக்குகளின் மீது இருந்த உறுதியான நம்பிக்கையினால் தான் ஸஹாபாக்கள் போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் முந்தி உயிரை கொடுப்பதற்கே போட்டி போட்டார்கள்.
இன்று நாம் எப்படி வாழ்வை நேசிக்கிறோமோ, அதுபோல் அவர்கள் ஷஹாதத்தை நேசித்தார்கள்.
பொதுவாக கலீஃபாவாக ஆன பிறகு, ஆட்சி வந்த பிறகு, அதிகாரம் கிடைத்த பிறகு, மனிதர்கள் அந்த சுகபோக வாழ்க்கையிலே வாழ விரும்புவார்கள். ஆனால் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆன பிறகும் ஜிஹாதுக்குப் போக ஆசைப்படுகின்றார். உமர் ரழியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆன பிறகும் ஜிஹாதுக்குப் போக ஆசைப்படுகின்றார். போக முடியாத சூழ்நிலை வந்த போது;
اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً في سَبيلِكَ، واجْعَلْ مَوْتي في بَلَدِ رَسولِكَ صَلَّى اللهُ عليه وسلَّمَ
“யா அல்லாஹ்! உன் பாதையில் நீ எனக்கு ஷஹாதத்தை கொடு! உனது ரசூலுடையை ஊரிலே என்னை மரணிக்க வை” என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்லம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1890.
இன்று நம்மில் யாராவது இப்படி கேட்கிறோமா?
“என் ரப்பே! எனக்கு ஷஹாதத்தை கொடு. உன்னுடைய பாதையிலே நான் மரணிக்க வேண்டும்” என்று துஆ செய்கிறோமா?
ஸஹாபாக்களுக்கு புரியவில்லை. ஸஹீஹுல் புஹாரியை எடுத்து படித்துப் பாருங்கள். கலிஃபா! உங்களை போருக்கு நாங்கள் அனுப்ப மாட்டோம். மதினாவிலே நீங்கள் ஷஹாதத்தை கேட்கின்றீர்களா? கலிஃபா உமர் பற்றி உமர் எத்தகைய உண்மையாளர் என்று அல்லாஹ்வின் தூதர் அறிந்திருந்தார்கள். அல்லாஹ் அறிந்திருந்தான். அவர் விரும்பியதை அல்லாஹ் அவருக்கு கொடுத்தான்.
இன்று, நமக்கு மார்க்கமும் வெறுப்பாக இருக்கிறது. மார்க்க சட்டங்களும் வெறுப்பாக இருக்கிறது. மார்க்கத்திற்காக உயிரை பொருளை செல்வத்தை நேரத்தை செலவு செய்வதும் வெறுப்பாக இருக்கிறது. கசப்பாக இருக்கிறது. இல்லையென்றால் சுமையாக இருக்கிறது.
அல்லாஹ்வின் அடியார்களே! ஸூரத்துல் அஃலாவிலும் அல்லாஹ் சொல்கிறான்:
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰى
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. (அல்குர்ஆன் 87:9)
நபியே உபதேசம் செய்யுங்கள். நினைவூட்டி கொண்டே இருங்கள். சொர்க்கத்தை சொல்லுங்கள் நரகத்தை சொல்லுங்கள். சொர்க்கத்தை சொல்வதும் நரகத்தை எச்சரிப்பதும் ஈமானுடைய உயிர் அது. தக்வா உடைய உயிர் அது. அல்லாஹ்வுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அது உள்ளது.
அடுத்த ஸூரா, ஸூரத்துல் காஷியாவிலும் அல்லாஹ் எப்படி சொல்கிறான்.
நபியே! நினைவூட்டுங்கள்; உபதேசம் செய்யுங்கள்.
فَذَكِّرْ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். (அல்குர்ஆன் 88:21)
ஸூரத்துல் அஃலாவிலும் அல்லாஹு தஆலா நம்மை எச்சரிக்கிறான்.
(அல்குர்ஆன் 87:16,17)
ஏன் இப்படி உலக மோகம் கொண்டு அலைகிறீர்கள். உலகம் தேவை!. எதற்காக? உலகம் மறுமைக்காக தேவை. ஒரு முஃமினுக்கும் ஒரு காஃபிருக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒரு முஃமின் உலகத்தை ஆஹிரத்துக்காக தேடுவான். ஒரு முஃமின் உலகத்தை சொர்க்கத்திற்காக தேடுவான். ஒரு முஃமின் உலகத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதற்காக தேடுவான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காக தேடுவான். ஒரு காஃபிரின் தேடல் அதை அனுபவிப்பதற்காக அதில் சுகபோகமாக வாழ்வதற்காக அதில் மனதை பறி கொடுப்பதற்காக இருக்கும்? என்று அல்லாஹு தஆலா வித்தியாசப் படுத்துகின்றான்.
وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (அல்குர்ஆன் 87:17)
ஸூரா காஷியாவில் அந்த மறுமையில் என்ன இருக்கும்? யார் எப்படி இருப்பார்கள்? என்ற விளக்கத்தை அல்லாஹ் வழங்குகின்றான்.
அல்லாஹு தஆலா ஸூரத்துல் அஃலாவில், நீங்கள் மறுமைக்காக வாழுங்கள், மறுமையின் தேடலோடு வாழுங்கள், மறுமையை முன்னிறுத்தி வாழுங்கள் என்று உபதேசிக்கின்றான்.
நம்முடைய வாழ்க்கை தொழுகையோடு மட்டும் முடிந்து விடவில்லை. குடும்ப வாழ்க்கையில் மனைவியோடு நீதியாக நடந்து கொண்டால், பிள்ளைகளை சரியான தர்பியத்துடன் வளர்த்தால், வியாபாரத்தில் நேர்மையாகவும் சுத்தமாகவும் ஒழுக்கமாகவும் நடந்தால், வாக்கு சுத்தமானவனாகவும் நாவு சுத்தமானவனாகவும் இருந்தால்—இவ்வெல்லாவற்றிற்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்குறுதி அளிக்கின்றான்.
அதே நேரத்தில், நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு தவறும், ஒவ்வொரு அலட்சியமும்—அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக—நரகத்திற்குத் தள்ளக்கூடியதாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இன்று பாவங்கள் ஏன் பரவி விட்டன? ஏன் அவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன? இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தப் பாவத்திற்கு என்ன தண்டனை? இந்தப் பாவத்தினால் நாளை மறுமையில் நரகத்தின் நெருப்பு நம்மை எவ்வாறு சுடும்? என்பதை நாம் மறந்து விடுகிறோம். அதனால்தான் பாவம் செய்ய துணிகிறோம்.
அல்லாஹு தஆலா இந்த காஷியாவிலே, முஸ்லிம்கள் ஒன்று கூடும் இந்த நாளில், ஜுமுஆ தொழுகையில் இந்த ஸூராவை ஓதச் செய்து, முஸ்லிம்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தியை அறிவிக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ ஒரு நாள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இந்த ஸூராவை ஓதிக் கொண்டிருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்.
அல்லாஹ் கேட்கிறான். நபியை பார்த்து பேசுகிறான். பிறகு நமக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். நபியே காஷியாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? சூழ்ந்து கொள்ளக்கூடிய எதையும் விட்டு விடாது.
உலக பிரபஞ்சத்தின் இந்த அனைத்து சிஸ்டங்களையும் அனைத்து அமைப்புகளையும் அல்லாஹுதஆலா அழித்து சின்னாபின்னமாக்கி விடுவான். அல்லாஹு தஆலாவின் அந்த அழிவிலிருந்து மலைகள் தப்பாது. கடல்கள் தப்பாது. மேகங்கள் எதுவும் தப்பாது.
அதுதான் அந்த கியாமத்துடைய நாள். படித்துப் பாருங்கள்! அல்லாஹு தஆலா இந்த கியாமத் உலக முடிவை பற்றி பேசக்கூடிய அந்த ஸூராக்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
என்னை நரைக்க வைத்துவிட்டது. என்னை பலவீனப்படுத்தி விட்டது.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3297.
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமையின் திடுக்கம் சாதாரணமானதல்ல.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். (அல்குர்ஆன் 22:1)
மறுமையின் அந்த நிலநடுக்கம் மறுமையின் பயம் திடுக்கம் இருக்கிறதே, மிக ஆபத்தான ஒன்று. அதைப் பார்க்கின்ற நிலையில் மனிதனுக்கு என்ன ஆகும், என்பதை அல்லாஹ் வர்ணித்து காட்டுகின்றான்.
ஸூரத்துல் ஹஜ் உடைய ஆரம்பத்தை படித்துப் பாருங்கள்! அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கிறான். காஷியா - அது அனைத்தையும் சூழ்ந்து கொள்ளக்கூடியது. யாரையும் விட்டு விடாது. எப்பேர்பட்ட பிரபஞ்சத்தையும் விட்டுவிடாது. வானங்கள் சுக்குநூறாக ஆகிவிடும்.
اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ
(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது, இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது, (அல்குர்ஆன் 82:1,2)
அப்படியே வானங்கள் அப்பளமாக நொறுங்கி விடும். நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் அப்படிப்பட்ட அதிர்ச்சியான செய்தி.
அல்லாஹ் சொல்கிறான்:
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (அல்குர்ஆன் 88:2)
சில மக்கள் வருவார்கள். பயந்து நடுநடுங்கி அவமானப்பட்டு கேவலப்பட்டு கொண்டிருப்பார்கள்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
(அல்குர்ஆன் : 88:3)
யார் அவர்கள்? இந்த உலகத்தில் நிறைய அமல் செய்திருப்பார்கள். அமல் செய்து செய்து களைத்து இருப்பார்கள்.
تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். (அல்குர்ஆன் 88:4)
நாளை மறுமையில் கொழுந்து விட்டு எரியக்கூடிய நரக நெருப்பிலே அவர்கள் நுழைவார்கள்.
تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். (அல்குர்ஆன் 88:5)
கடுமையாக இறுதிவரை கொதித்த அந்த நீர் அவர்களுக்கு குடிக்க கொடுக்கப்படும்.
لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. (அல்குர்ஆன் 88:6)
விஷமுற்கள் கலந்த கள்ளி மரம் தான் அவர்களுக்கு உணவாக இருக்கும்.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍ
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது. (அல்குர்ஆன் 88:7)
அவர்களை கொழுக்க வைக்கவும் செய்யாது. அவர்களை பசியையும் போக்காது.
எப்பேர்ப்பட்ட மக்கள் அவர்கள்! துன்யாவிலே அமல் செய்து களைத்தவர்கள். அமல் செய்திருப்பார்கள்.
இமாம் இப்னு கசீர் பதிவு செய்கின்றார்கள். உமருல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு வயது முதிர்ந்த தள்ளாடக் கூடிய வயதை அடைந்த ஒரு பாதிரியின் சர்ச்சை கடந்து செல்கிறார்கள்.; இங்கே ஒரு ஃபாதர்-பாதிரி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தள்ளாட கூடிய வயது முதிர்ந்த பாதிரி இறை வணக்கத்திலேயே அப்படியே தன்னை கழித்துக் கொண்டவர். அவரைப் பார்த்து அழுதுவிட்டு இந்த வசனத்தை ஓதுகின்றார்கள்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ
(அல்குர்ஆன் 88:3-4)
நீங்கள் கிறிஸ்தவர்களை பாருங்கள்! இரவிலே கத்த ஆரம்பித்தார்கள் என்றால், காலை வரை கத்திக் கொண்டிருப்பார்கள். காலையில் கத்த ஆரம்பித்தால் ஜெபம் செய்ய ஆரம்பித்தால் மாலை வரை கத்திக் கொண்டே இருப்பார்கள். இறை வணக்கத்திலேயே அப்படி மூழ்குவார்கள். என்ன பிரயோஜனம்?
இந்த இஸ்லாம் இல்லாத மார்க்கம் ஒன்றை இஸ்லாமாக அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது இஸ்லாம் தான். முஹம்மது ﷺ அனுப்பப்பட்டதை யார் கேள்விப்பட்டதற்கு பிறகு அவர் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவன் யஹூதியாக இருந்தாலும் நஸ்ரானியாக இருந்தாலும் எந்தக் கொள்கையை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் மறுமையில் நரகத்திற்குத் தான் செல்வான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இது அவர்களுக்கு மட்டும் எச்சரிக்கை அல்ல. நம்மில் பலருக்கும் இது எச்சரிக்கையாக இருக்கிறது. யார் இவர்கள்? அமல் செய்து இருப்பார்கள். அமல் செய்து களைத்திருப்பார்கள்.
ஆனால், அந்த அமலை ரஸூலுல்லாஹ் ﷺ சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். அந்த அமலை நபி ﷺ கற்று கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த அமல் குர்ஆனில் சொல்லப்பட்டதாக இருக்காது. ஹதீஸிலே சொல்லப்பட்டதாக இருக்காது.
எத்தனை ஸூஃபி கூட்டங்களை பாருங்கள். எவ்வளவு செயல்பாடுகள் அவர்களிடத்திலே இருக்கிறது. அவர்களுடைய செயல்பாடுகளை எல்லாம் பார்த்தால் வேடிக்கையாக நகைச்சுவையாக இருக்கும். இன்னொரு பக்கம் தங்களை அப்படியே வருத்திக் கொள்வார்கள். ஆடக்கூடிய ஆட்டமென்ன! என்னென்னமோ செய்வார்கள். கத்துவார்கள். கதறுவார்கள். என்ன பிரயோஜனம்?
مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ
ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களைப் பின்பற்றாமல் செய்யப்படக்கூடிய எந்த அமலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1718.
ரஸூலுல்லாஹ் ﷺ கட்டளையிடாத சொல்லிக் கொடுக்காத எதை செய்தாலும் அது அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டது.
சில அறிஞர்கள் இந்த வசனத்திற்கு வேறு ஒரு அர்த்தத்தை சொல்கின்றார்கள். பாவத்தில் செயல்பட்டவர்கள் பாவத்திலே மூழ்கியவர்கள் அவர்கள், எப்படி நல்லவர்கள் நல்லதை செய்வதில் களைப்புற்றார்களோ பாவிகள் பாவத்தை செய்வதிலே களைப்புற்றவர்கள். இதுதான் வித்தியாசம்.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான் மூஃமின்களைப் பற்றி;
اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ
அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். (அல்குர்ஆன் 4:76)
وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ
காஃபிர்கள் ஷைத்தானின் பாதையிலே போர் புரிவார்கள்.
மூஃமின்கள் அல்லாஹ்வின் பாதையிலே மக்களை அழைப்பதற்கு செலவு செய்வார்கள். காஃபிர்கள் அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களை தடுப்பதற்காக செலவு செய்வார்கள்.
சகோதரர்களே! நமக்கும் அவர்களுக்கும் இடையே போட்டி. பாவிகள் பாவத்தில் மூழ்குகிறார்கள்; ஈடுபடுகிறார்கள்; ஆர்வம் கொள்கிறார்கள் என்றால் ஒரு முஃமின் அவர்களுக்கு போட்டியாக நன்மையிலே ஈடுபட வேண்டும். நன்மையை அதிகரிக்க வேண்டும். பாவத்தில் களைத்தவர்கள், மறுமையிலே நாளை அவர்களுடைய நிலை என்ன? கொதிக்கக்கூடிய நரகத்திலே அவர்கள் சேர்ப்பிக்கப்படுவார்கள். எரிக்கப்படுவார்கள்.
அடுத்து, அல்லாஹு தஆலா யார் மறுமைக்காக வாழ்ந்தார்களோ, ஆஹிரத்துக்காக வாழ்ந்தார்களோ, சொர்க்கத்திற்காக வாழ்ந்தார்களோ, எவ்வளவுதான் சிரமங்கள் துன்பங்கள் வந்தாலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்தார்களோ;
சோதனை யாருக்கு வரவில்லை. யார் எதிரிகளிடமிருந்து தப்பித்தது. யூதர்களின் கரத்தால் நபிமார்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்ன நபிமார்களை; நீங்கள் அனாச்சாரங்கள் செய்யாதீர்கள் என்று சொன்ன நபிமார்களை கொலை செய்திருக்கின்றார்கள்.
இந்த காஸா மக்கள் படக்கூடிய துன்பத்தை பார்த்து அவர்களின் பாவத்தினால் என்றும் அவர்கள் இதைத் தாங்களாக தேடிக் கொண்டார்கள் என்றும் சிலர் விமர்சிக்கின்றார்களே, இன்னும் எப்படி எல்லாம் அவர்களை கேலி கிண்டல் பரிகாசம் செய்து யூதர்களுக்கு துணை செல்கின்றார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வசனம் எல்லாம் அவர்களுக்கு கண்களுக்கு தெரியாதா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். எத்தனையோ நபிமார்கள் அல்லாஹ்விற்காக தங்களை அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
இன்று நாம் என்ன பார்க்கிறோம்? ஆடையை வைத்து ஒருவர் நல்லவனா? கெட்டவனா? என்று பார்க்கிறோம். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டால் நல்லவர்களாகிவிடுவார்களா? அல்லாஹ்வின் நேசர்களாக ஆகிவிட முடியுமா? அல்லாஹ் சொல்கிறான்;
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவிழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 3:146)
இத்தகைய உறுதியான முஃமின்களை அல்லாஹ் நேசிக்கிறான். அத்தகைய நற்பாக்கியத்தை அல்லாஹ் நம்முடைய காலத்தில் அந்த காசா மக்களுக்கு கொடுத்திருக்கிறான் என்றால் அவர்களிடத்தில் நாம் இல்லையே! அவர்களுடன் நாம் இல்லையே! அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று கவலைப்பட்டு அவர்களுக்காக துஆ செய்ய வேண்டுமே ஒழிய அந்த மக்களை இழிவாக குறைவாக பேசலாமா?
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நபிமார்களின் காலத்தில் வாழ்ந்த சோதனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய மக்கள். அல்லாஹ்வுடைய குர்ஆன் அவர்களுடைய செயல்களை உண்மைப்படுத்துகின்றது.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; மறுமைக்காக வாழ்வோம்; அல்லாஹ்வுக்காக வாழ்வோம் என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள். யூதர்களோடு நஸ்ராணிகளோடு சமரசம் செய்து கொண்டால் இன்று பல நாடுகள் வாழ்வதைப் போன்று எவ்வளவோ சுகபோகமாக வாழ்க்கையை அவர்களும் வாழலாம்..
அல்லாஹ்விற்காக அல்லாஹுவின் எதிரிகளிடத்திலே நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்ற ஒரே காரணத்தினால், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன் என்ற ஒரே காரணத்தினால், அவர்கள் இவர்களை பழி வாங்குகிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான். அத்தகைய முஃமின்கள் யார்? அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிப்பார்கள்.
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ
(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்; (அல்குர்ஆன் 88:8)
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ
அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும். (அல்குர்ஆன் 88:9)
தங்களுடைய தியாகங்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய கூலிகளை பொருந்தி கொள்வார்கள்.
فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ
அவர்கள் உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 88:10)
لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً
வீணான பேச்சுகளை வீணான வார்த்தைகளை செவியுற மாட்டார்கள். (அல்குர்ஆன் 88:11)
فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ ۘ
எப்போதும் நிரந்தரமாக ஓடக்கூடிய நதிகள் அங்கு இருக்கும். ஊற்று கண்கள் அங்கு இருக்கும். (அல்குர்ஆன் 88:12)
فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ
உயரமான கட்டில்கள் இருக்கும். (அல்குர்ஆன் 88:13)
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ
அடுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய குவளைகள் அங்கே இருக்கும். (அல்குர்ஆன் 88:14)
என்ன பானம் வேண்டுமோ அந்த பானத்தை அங்கே கொண்டு வருவதற்கு அங்கே பணியாளர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ
இன்னும் (சிறுவர்களாகவே) நிரந்தரமாக இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அ(ந்த சிறு)வர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை நினைப்பீர். (அல்குர்ஆன் 76:19)
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ
அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகள் அங்கு இருக்கும். (அல்குர்ஆன் 88:15)
وَّزَرَابِىُّ مَبْثُوْثَةٌ
விரித்து வைக்கப்பட்டு இருக்கக்கூடிய போர்வைகள். உயர்ந்த போர்வைகள். உயர்ந்த அரியணைகள் அவர்களுக்காக அங்கே வைக்கப்பட்டு இருக்கும். (அல்குர்ஆன் 88:16)
அப்பேர்பட்ட முஃமின்களாக முஸ்லிம்களாக தக்வா உள்ளவர்களாக சொர்க்கத்தை ஆசைப்படக் கூடியவர்களாக நீங்கள் ஆகுங்கள் என்று அல்லாஹ் நமக்கு இந்த ஸூராவிலே அழைப்பு தருகின்றான்.
இது சடங்காக ஓதப்படும் ஸூரா அல்ல. ஒரு செய்தியை தனக்குள் கொண்டிருக்கக்கூடிய ஸூரா. நம்மை சொர்க்கவாசிகளாக மாற்றக்கூடிய ஸூரா. மறுமையின் பக்கம் நம்முடைய கவனத்தை திருப்புவதற்கான ஸூரா.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா, உங்களுடைய ரப்பு எத்தகைய வல்லமை உள்ளவன் என்று.
اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ
ஆக, எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் ஒட்டகத்தைப்பார்க்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 88:17)
وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
வானங்கள் எப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 88:18)
وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
மலைகள் எப்படி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88:19)
وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ
பூமி எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88:20)
அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்து அல்லாஹ்வின் வல்லமையை புரிய வேண்டாமா? மறுமையின் நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டாமா?
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான்;
فَذَكِّرْ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ
நீங்கள் உபதேசம் செய்து கொண்டே இருங்கள். நிறுத்தி விடாதீர்கள். உபதேசம் செய்வதை. நினைவூட்டுவதை நிறுத்தி விடாதீர்கள். உங்களது பணி நினைவூட்டுவது. நீங்கள் நினைவூட்டக்கூடியவர். நீங்கள் உபதேசம் செய்யக்கூடியவர். (அல்குர்ஆன் 88:21)
யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ யார் புறக்கணிக்கிறார்களோ நீங்கள் கவலைப்படாதீர்கள்.
لَـسْتَ عَلَيْهِمْ بِمُصَۜيْطِرٍۙ
அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை. (அல்குர்ஆன் 88:22)
அந்த மக்களை அடக்கக் கூடியவராக நிர்பந்திக்க கூடியவராக நாம் உங்களை அனுப்பவில்லை. உங்களது பணி என்ன? நீங்கள் மார்க்கத்தை அழகிய முறையில், அழகிய உபதேசத்தை கொண்டு சொல்லிக்காட்டுவது.
அல்லாஹ் கூறுகின்றான்.
اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ
எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ, (அல்குர்ஆன் 88:23)
யார் புறக்கணித்து செல்கிறானோ, யார் நிராகரிப்பில் செல்கிறானோ, அவன் இந்த உலகத்திலே எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் மறுமைக்கு அவன் வந்தே ஆக வேண்டும்.
சகோதரர்களே! அல்லாஹ்வின் இடத்திலே அங்கே எல்லோரும் ஒன்று கூடி தான் ஆக வேண்டும். அந்த நாளில் இருந்து யாரும் தப்ப முடியாது.
அல்லாஹ்விற்கு முன்னால் நின்றே ஆக வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் அல்லாஹ் நாளை மறுமையில் பேசுவான். உங்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலே மொழிபெயர்ப்பாளர் இருக்க மாட்டார். வலது பக்கம் சொர்க்கம் இருக்கும். அவருக்கு முன்னால் பின்னால் எல்லாம் அவர் செய்த அமல்கள் தான் இருக்கும். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512.
அமல்களை கொண்டு தான் நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே வெற்றி பெற முடியுமே தவிர, தன்னுடைய பெயரை சொல்லியோ பரம்பரையை சொல்லியோ, தங்களுடைய ஜமாஅத்தை சொல்லியோ எதைக் கொண்டும் வெற்றி பெற முடியாது. அல்லாஹு தஆலா அமல்களை கேட்பான். உன்னுடைய அமல் உன்னுடைய ஈமான் உன்னுடைய யக்கின் நீ எதை செய்தாய் என்று.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; இரண்டு நபர்களை சொல்லிக் காட்டுகின்றான். இரண்டு செயல்களை சொல்லிக் காட்டுகின்றான். இரண்டு செயல்களும் தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கான செயல்களாகவும் இருக்கலாம். அல்லது ஒரே நபருக்கான இரண்டு செயல்களாகவும் இருக்கலாம்.
اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ
எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ, (அல்குர்ஆன் 88:23)
இந்த புறக்கணிப்பாளர் என்பது பொதுவான வார்த்தை. முஸ்லிம்களிலும் புறக்கணிப்பவர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வுடைய உபதேசத்தை குர்ஆனுடைய உபதேசத்தை அல்லாஹ்வுடைய ஹலால் ஹராம் உடைய ஷரியா சட்டத்தை. முற்றிலுமாக புறக்கணிப்பவர் யார்? இஸ்லாமையே புறக்கணித்தவர். நிராகரிப்பிலே சென்று விட்டவர். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் சொல்கிறான்;
فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ
ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் தண்டிப்பான். (அல்குர்ஆன் 88:24)
நாளை மறுமையிலே மிகப்பெரிய துன்பத்தைக் கொண்டு அல்லாஹ் அவரை தண்டிப்பான்.
அல்லாஹ்வுடைய அதாப் சாதாரணமான அதாபாக இருக்காது. நரகத்தின் ஜக்கூமுடைய ஒரு சொட்டு இந்த பூமியிலே விழுந்துவிட்டால் உலக மக்களின் வாழ்க்கையை அது நாசமாக்கி விடும். அந்த ஜக்கூமையே ஒருவருக்கு உணவாக கொடுக்கப்பட்டால் அவருடைய நிலைமை எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்.
نَارُكُمْ جُزْءٌ مِن سَبْعِينَ جُزْءًا مِن نَارِ جَهَنَّمَ
இந்த உலக நெருப்பை விட 69 மடங்கு கடினமான உஷ்ணமானது நரகத்தின் நெருப்பு. (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3265.
அந்த நரக நெருப்பு அவ்வளவு பயங்கரமானது. தாங்கிக் கொள்ள முடியாது. இந்த உலகத்தில் இன்பத்தை அனுபவித்தவன் ஒரு நொடிக்கு நரகத்திலே முக்க வைக்கப்பட்டு கொண்டு வருவான். அவரிடத்திலே கேட்கப்படும் இன்பத்தை நீ பார்த்து இருக்கிறாயா? என்று. அவன் சொல்வான் இன்பத்தை நான் பார்த்ததே இல்லை என்று.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
ஒவ்வொரு முஃமினும் முஸ்லிமும் அல்லாஹ் இடத்திலே துஆ கேட்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.” (அல்குர்ஆன் 25:65)
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
இன்னும், “எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துவிடு’’ என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)
ஒரு நொடிக்கு கூட நம்மால் அதை தாங்க முடியாது. அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.
فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ
யார் புறக்கணிக்கின்றானோ நிராகரிக்கின்றானோ பெரிய தண்டனையை கொண்டு அந்த மனிதனை அல்லாஹ் தண்டிப்பான். (அல்குர்ஆன் 88:24)
அல்லாஹ் சொல்கிறான்; நபியே கவலைப்படாதீர்கள். இதைப் பார்த்தும் நீங்கள் பலவீனம் அடைந்து விடாதீர்கள்! சோர்ந்து விடாதீர்கள்! மறுமை இருக்கிறது.
اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ
(அல்குர்ஆன் 88:25)
சில நேரங்களில் ஆதிக்கங்கள் கிடைக்கலாம். சில நேரங்களில் ஆட்சி கிடைத்து விடலாம். அல்லாஹ்வின் எதிரிகள் அழிச்சாட்டியம் செய்வார்கள்.
ஃபிர்அவுனுக்கு அல்லாஹ் கொடுத்து சோதிக்க வில்லையா? காரூனுக்கும் நம்ரூத்துக்கும் ஷத்தாதுக்கும் கொடுத்து அல்லாஹ் சோதிக்கவில்லையா?
அல்லாஹு தஆலா காஃபிர்களுக்கு கொடுக்கக்கூடிய செல்வத்தை பார்த்து, ஆட்சி அதிகாரத்தை பார்த்து, நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். மயங்கி விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லுகின்றான்.
اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ
நிச்சயமாக நம்மிடம் தான் அவர்களுடைய மீட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 88:25)
ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
நிச்சயமாக நம் மீது அவர்களை விசாரிப்பது பொறுப்பாக இருக்கிறது. (அல்குர்ஆன் 88:26)
நபியே! நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்மிடத்திலே வரும்பொழுது எப்படி அவர்களை விசாரித்து எப்படி கணக்கு தீர்க்க வேண்டுமோ நாம் கணக்கு தீர்த்து விடுவோம் என்று அல்லாஹுதஆலா எச்சரிக்கை செய்கிறான்.
ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு மறுமை தான் மன உறுதி. அந்த மறுமை நம்பிக்கை தான் நம்முடைய ஈமானை சரிப்படுத்தும். அந்த மறுமையின் நம்பிக்கை கொண்டு தான் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்முடைய ஆதரவு அந்த மறுமையின் நம்பிக்கையில் இருக்கிறது.
ஆஹிரத்தை நினைத்தால் இந்த உலக துன்பங்கள் எல்லாம் நமக்கு இலகுவாக ஆகிவிடும். ஆஹிரத்தை நினைத்தால் எவ்வளவு சிரமமான அமலாக இருந்தாலும் சரி அது நமக்கு பிரியமானதாக, இலகுவானதாக ஆகிவிடும். எப்படி ஸஹாபாக்களுக்கு ஆனதோ அதேபோல. அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா எனக்கும் உங்களுக்கும் ஆஹிரத்துடைய நம்பிக்கையை தந்தருள்வானாக! அந்த நம்பிக்கையை அல்லாஹு தஆலா உறுதிப்படுத்துவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
7512 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "، قَالَ الأَعْمَشُ: وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، مِثْلَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ» صحيح البخاري (9/ 148)
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512.
குறிப்பு: (2)
أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: نَارُكُمْ جُزْءٌ مِن سَبْعِينَ جُزْءًا مِن نَارِ جَهَنَّمَ، قيلَ: يا رَسولَ اللَّهِ، إنْ كَانَتْ لَكَافِيَةً، قالَ: فُضِّلَتْ عليهنَّ بتِسْعَةٍ وسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3265.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/