கஹ்ஃப் ஸூராவின் தத்துவங்கள் அமர்வு 1 | Tamil Bayan - 1004
கஹ்ஃப் ஸூராவின் தத்துவங்கள் அமர்வு 1
ஜுமுஆ குத்பா தலைப்பு : கஹ்ஃப் ஸூராவின் தத்துவங்கள் அமர்வு 1
வரிசை : 1004
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 03-10-2025 | 11-04-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னிலையில், அகிலங்களின் இறைவனாகிய நம்முடைய ரப்பு அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் சந்ததிகள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை — தக்வாவை — உபதேசம் செய்தவனாக;
உங்களுக்கும் எனக்கும், நம்முடைய பெற்றோருக்கும், நமது சந்ததியருக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், மறுமையின் மகத்தான சொர்க்கத்தையும் வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹூ வ தஆலா நமது தவறுகளை பொறுத்தருள்வானாக! நம்மை அல்லாஹு தஆலா நேர் வழியிலும், சத்தியப் பாதையிலும் உண்மையோடு நிலைத்திருக்கச் செய்வானாக!
சிறிய பெரிய அனைத்துப் பாவங்களிலிருந்தும், எல்லா வகையான வழிதவறல்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும், அல்லாஹு தஆலா நம்மை இறுதி மூச்சு வரை பாதுகாப்பானாக! ஆமீன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! தொடர்ந்து பல ஜுமுஆக்களில் நாம் கவனித்து வருகிறோம். இந்த வெள்ளிக்கிழமைக்கு ரஸூலுல்லாஹ் ﷺ வணக்க வழிபாடுகள் மூலம் கொடுத்த முக்கியத்துவமும், இன்று நாம் இந்த வெள்ளிக்கிழமைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவமும் ஒன்றல்ல.
ரஸூல் ﷺ இபாதத்தைக் கொண்டு இந்த நாளை சிறப்பித்தார்கள்.
அப்படி அவர்கள் சிறப்பித்த இபாதத்துகளில் ஒன்றை கடந்த குத்பாக்களில் நாம் பார்த்தோம். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஸூரத்துல் கஹ்ஃபை ஓதுவார்கள். தொடர்ந்து அதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்; அதன் சிறப்புகளையும் நமக்கு எடுத்துச் சொன்னார்கள். இதனை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஒரு குறிப்பிட்ட ஸூராவை, “இந்த நாளில் இதை ஓதுங்கள்” என்று தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கிறார்கள். “அதை ஓதுவதால் உங்களுக்கு ஒரு மகத்தான ஒளி ஏற்படும்; அதன் சில வசனங்களை மனப்பாடம் செய்து ஓதுவதால், தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கிடைக்கும்” என்று கூறி இருக்கிறார்கள் என்றால், அந்த ஸூரா நிச்சயமாக நமக்கு பல ஈமானிய படிப்பினைகளையும், ஈமானிய பாடங்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.
குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அப்படித்தான். அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வசனமும் நமக்கு அறிவை அளிக்கிறது; நினைவூட்டலை வழங்குகிறது; நல்ல உபதேசமாக அமைகிறது; மறந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு விழிப்பைத் தருகிறது; அலட்சியத்தில் மூழ்கி இருக்கும் உள்ளங்களை தட்டி எழுப்புகிறது.
ஒரு முஃமின் குர்ஆனை இப்படித்தான் அணுக வேண்டும். தன்னைத் திருத்திக் கொள்வதற்காக, தன்னை நேரான வழியின் பக்கம் இழுத்து வருவதற்காக, அல்லாஹ்வை அறிவதற்காக, மறுமையை அறிவதற்காக, சொர்க்கத்தின் மீது உள்ள ஆர்வத்தை தன்னுள் உருவாக்குவதற்காக, நரகத்தின் மீது உள்ள பயத்தை அதிகப்படுத்துவதற்காக — அந்த எண்ணத்தோடுதான் குர்ஆனை ஓத வேண்டும்.குர்ஆனை நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த ஸூரத்துல் கஹ்ஃப் ஏன் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்றால், அல்லாஹு தஆலா இந்த ஸூராவில் பல சிறப்பம்சங்களை வைத்திருக்கிறான்.
முதலாவதாக, அல்லாஹு தஆலா இந்த ஸூரத்துல் கஹ்ஃபில் குர்ஆனைப் பற்றி பேசுகின்றான். இந்த ஸூராவின் ஆரம்பத்திலே அல்லாஹு தஆலா மகத்தான சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறான்; அதே நேரத்தில் நரகத்தைப் பற்றிய அச்சுறுத்தலையும் வழங்குகின்றான்.
அதற்குப் பிறகு, அல்லாஹு தஆலா மூன்று மகத்தான சம்பவங்களை இங்கே எடுத்துரைக்கின்றான். அவற்றில் முதன்மையானது ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்’ அவர்களின் சம்பவம். இந்த ஸூராவில் குகைவாசிகளின் வரலாறு நினைவு கூரப்படுவதால்தான் இந்த ஸூராவிற்கு “அல்கஹ்ஃப்” என்று பெயர் வந்தது. அந்த குகைவாசிகளைப் பற்றி அல்லாஹு தஆலா விரிவாக பேசுகின்றான்.
பிறகு அல்லாஹு தஆலா மூஸா عليه السلام அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை எடுத்துச் சொல்கிறான். அதன் பின்னர், அல்லாஹு தஆலா துல்கர்னைன் அவர்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கின்றான்.
இதற்கிடையில், இன்னும் ஒரு மிக முக்கியமான வரலாறையும் அல்லாஹ் நினைவுகூரச் செய்கிறான். அதாவது, நம்முடைய தந்தை ஆதம் عليه السلام அவர்களுக்கும் இப்லீஸுக்கும் இடையில் நடந்த ஒரு மகத்தான, வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிகழ்வை அல்லாஹு தஆலா நமக்கு எடுத்துக் காட்டுகின்றான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இவ்வாறு பல சம்பவங்களை இந்த ஸூரா உள்ளடக்கியுள்ளது. அவை அனைத்தும் மிகப்பெரிய உபதேசங்களை தன்னுள் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த முதல் பகுதியைப் பார்க்கும்போது, அல்லாஹு தஆலா குர்ஆனை அறியாதவர்களுக்கும், குர்ஆனை உணராதவர்களுக்கும், குர்ஆனின் மகத்துவத்தின் பக்கம் கவனம் செலுத்தாத குறை அறிவுள்ளவர்களுக்கும் நேரடியாக எடுத்துச் சொல்லிக் கற்றுத்தருகிறான்.
اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ
தன் அடியார் (முஹம்மது நபி) மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், அ(ந்த வேதத்)தில் அவன் ஒரு குறையையும் ஆக்கவில்லை. (அல்குர்ஆன் 18:1)
அல்லாஹு தஆலா தன்னுடைய தூதர் நபியுல்லாஹ் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களை ரொம்ப நேசித்து சொல்வதாக இருக்கும்போது, தன்னுடைய அன்பை பிரியத்தை வெளிப்படுத்தி சொல்லும் போது தன்னுடைய அடிமை என்று சொல்வான்.
அல்லாஹு தஆலா ஒருவரை தன்னுடைய அடிமை தன்னுடைய அடியார் என்று சொல்வதை அவன் ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது அவ்வளவு ஒரு பெரிய அன்பை பொழிகிறான் என்பதற்கான அடையாளம் இதற்கு முந்திய ஸூராக்களை நீங்கள் பாருங்கள்.
ஸூரா இஸ்ரா அல்லது பனீ இஸ்ராயிலில்;
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மத் நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 17:1)
தன்னுடைய அடியாரை இரவிலே அழைத்துச் சென்றானே கஅபத்துல்லாஹ்விலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அந்த அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்.
எப்படி சொல்கிறான் பாருங்கள். தன் பக்கம் அவரை அழைத்து செல்கின்றான். தன்னிடம் பேசுவதற்காக சொர்க்கத்தை காட்டுவதற்காக எந்த நபிக்குமே இந்த உலகத்தில் கொடுத்திருக்காத அந்தஸ்தை, கண்ணியத்தை, மதிப்பை, தரஜாவை வழங்குவதற்காக அவர்களை அழைத்துச் செல்கின்றான் அப்போது சொல்கின்றான்.
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ
அந்த இறைவன் தன்னுடைய அடியாரை இரவிலே அழைத்துச் சென்றான். ஏன்?
لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا
ஏன்? அவருக்கு நாம் காண்பிக்க விரும்புகிறோம். கண்கூடாக நமது அத்தாட்சிகளை எல்லாம். சொர்க்கத்தை அல்லாஹ் காட்டினான். ஏழு வானங்களின் ரகசியங்களை அல்லாஹ் காட்டினான். அர்ஷை காட்டினான். சித்ரத்துல் முன்தஹாவை காட்டினான். ஜிப்ரீலை பார்த்தார்கள். வானவர்களை பார்த்தார்கள். அல்லாஹு அக்பர்! எப்பேர்பட்ட அத்தாட்சிகளை அல்லாஹுதஆலா நம்முடைய நபிக்கு கண்கூடாக காட்டிக் கொடுத்தான். அந்த நேரத்தில் சொல்கிறான். என்னுடைய அடியார் என்று.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா தன்னை புகழ்கிறான். அல்லாஹ் தான் இந்த வேதத்தை இறக்கினான். இந்த வேதம் இதனுடைய ஒவ்வொரு எழுத்தும் அதன் பொருளும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்டது இந்த வேதம் எப்படிப்பட்டது!
وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ
எந்த குறையையும், எந்த கோணலையும், எந்த குளறுபடிகளையும், எந்த கோளாறுகளையும் அல்லாஹ் இதில் ஆக்கவில்லை.
உலக அறிவாளிகளுக்கு எல்லாம் இன்று வரை அல்லாஹ்வுடைய இந்த வேதம் சவாலாக இருக்கிறது.
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்). (அல்குர்ஆன் 2:23)
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வின் புறத்திலிருந்து இது இறக்கப்பட்டது என்பதில் சந்தேகம் இருக்குமேயானால், இது போன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்.
உங்களுடைய உதவியாளர்கள் எல்லோரையும் அழைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியவே முடியாது என்று அல்லாஹு தஆலா சவால் விடுகின்றான்.
அல்லாஹு தஆலா இந்த ஸூராவின் ஆரம்பத்தில் மொத்த குர்ஆனின் மீதுள்ள மகத்துவத்தை சொல்கின்றான்.
இந்த குர்ஆனை ஓதக்கூடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் அல்லாஹு தஆலா குர்ஆனின் கண்ணியத்தை மகத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருப்பான். குர்ஆனை ஓதுவது ஒரு சிறப்பு. அதே நேரத்தில் அந்த குர்ஆனை அதனுடைய மகத்துவத்தை அதனுடைய மகத்தான கண்ணியத்தை மனதில் நிறுத்தியவர்களாக ஓதுவது. அப்படி ஓதும் போது தான் அந்த பயம் வரும். உள்ளத்திலே அச்சம் வரும். கண்களில் இருந்து நீர் வடியும்.
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ
நபியே இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கி இருந்தால் அந்த மலை அச்சமுற்று பயந்து நடுங்கி வெடித்து சிதறுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 59:21)
யோசித்துப் பாருங்கள்! நாமெல்லாம் நம்மை பரம்பரை முஸ்லிம்களாக, காலம் காலங்களாக முஸ்லிம்களாக, பெரிய தொழுகையாளிகளாக, நோன்பாளிகளாக, ஹஜ் உம்ரா செய்த ஹாஜிகளாக நமக்கு நாமே ஒரு மார்க் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
குர்ஆனை ஓதி அழுபவர்கள் நம்மில் எத்தனை பேர்? குர்ஆனுடைய வசனங்களை ஓதும்போது உள்ளத்திலே பயம் வந்து நடுங்கக் கூடியவர்கள் எத்தனை பேர்? நம்மிடத்திலே ஒரு நேரம் இருக்கிறதா? குர்ஆனோடு நாம் தனிமையில் அமர்வதற்கு, குர்ஆனை சிந்திப்பதற்கு, குர்ஆனிலே அல்லாஹ்வின் வல்லமை ,சொர்க்கம், நரகம் சொல்லப்பட்டு இருக்கிறதே! இதைப் படித்து நடுங்குவதற்கு நம்மிடத்திலே நேரம் இருக்கிறதா?
இன்று, இந்த குர்ஆன் பரக்கத்துக்கு தான் நம்மிடத்தில் இருக்கிறதே தவிர, அல்லாஹ்விடத்தில் நெருங்குவதற்காக இல்லை. எப்படி செய்கிறோம்; நமக்கும் ஸஹாபாக்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் மார்க்கத்தை கொண்டு மறுமையை தேடினார்கள். சொர்க்கத்தை தேடினார்கள். நாமும் மார்க்கத்தை பின்பற்றினாலும் உலகத்துக்காக தான் பின்பற்றுகின்றோம்.
தொழுதால் சொர்க்கம் அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்று தொழுபவர்களை விட தொழுதால் பிசினஸ் நல்லா நடக்கும்; பரக்கத் கிடைக்கும்; தொழுதால் என்னுடைய காரியங்கள் சௌகரியமாகும் என்று அந்த தொழுகையின் இரண்டு நன்மைகள் மகத்தான மறுமை நன்மையை மறந்து விட்டு தற்காலிகமான உலகத்தின் நன்மையை மட்டுமே குறிக்கோளாக வைத்து செய்பவர்கள் தான் அதிகம்.
தொழுகையினால் உலகத்தில் நன்மை இல்லை என்பதல்ல; தொழுகையினால் உலகத்திலும் நன்மை இருக்கிறது, ஒவ்வொரு இபாதத்தால் உலகத்திலும் நமக்கு நன்மை இருக்கிறது. ஆனால், அது தற்காலிகமானது. எது நிரந்தரமானது? ஆஹிரத்துடைய நன்மை நிரந்தரமானது. அதற்காக செய்பவர்கள் எத்தனை பேர்?
அல்லாஹ் இந்த வசனத்தில் முஃமின்களுக்கும் சொல்கின்றான். குர்ஆனை குறை சொல்லக்கூடிய காஃபிர்களுக்கும் அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கிறான். இந்த குர்ஆன் கோணலற்றது; அநீதமற்றது; குழப்பமற்றது. இந்த குர்ஆன் முரண்பாடற்றது. நேரான, நீதமான, ஒழுக்கமான, மனித குலத்திற்கு எல்லாம் பொருத்தமான சட்டங்களை கொண்ட வேதம்.
இந்த முஸ்லிம்களுக்கு குர்ஆனுடைய சட்டங்கள் மீது நம்பிக்கை இல்லை. எத்தனையோ முஸ்லிம் நாடுகள் குர்ஆனுடைய சட்டங்களுக்கு எதிராக திரும்பி விட்டன. குர்ஆனுடைய சட்டங்களை இன்று முஸ்லிமல்லாதோர் (இறைமறுப்போர் இறை நிராகரிப்போர்) புரிந்து கொண்டு குர்ஆனுடைய நீதத்தை புரிந்து கொண்டு இஸ்லாமை நோக்கி வருகிறார்கள்.
அந்தோ பரிதாபம் சில முஸ்லிம்கள் உலக மோகத்தில் மூழ்கி செக்குலரிசம் என்ற பொய்யான சித்தாந்தத்தில் மூழ்கி குர்ஆனுக்கு எதிராக பேசுகிறார்கள். இவர்களைப் பார்த்து தான் அல்லாஹ் சொல்லுகின்றான்:
وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
நீங்கள் இந்த மார்க்கத்தை விட்டு விலகினால் அல்லாஹ் வேறு ஒரு சமுதாயத்தை கொண்டு வருவான் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்கள் மீது அன்பு வைப்பான்; அவர்களும் அவன் மீது அன்பு வைப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இன்னும், பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5:54)
கருத்து : உங்களில் யாராவது தனது மார்க்கத்தில் இருந்து விலகினால் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து யாராவது விலகினால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தை முஸ்லிம்களாக்கி கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்கள் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்பவர்களின் பழிப்பை பயப்பட மாட்டார்கள்.
முஸ்லிம் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் எல்லாம் தாடியை கேவலமாக கருதி குறைத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் இஸ்லாமை ஏற்றவர்கள் தாடியோடு அவ்வளவு அழகான தோற்றத்தோடு இஸ்லாமிய ஆடை கலாச்சாரத்தோடு அங்கே வாழ்வதில் பெருமை கொள்கிறார்கள்.
இன்று பலருக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் முஸ்லிம்களாக வாழ்வது வெட்கமாக இருக்கிறது. ஆனால், இஸ்லாமை ஏற்று வந்த அந்த மக்களோ காஃபிர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களாக வாழ்வதில் பெருமையாக இருக்கிறார்கள். முஸ்லிம் நாடுகளிலே எங்களால் வட்டி இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் உருவாகி விட்டார்கள்.
ஆனால், காஃபிர்களுடைய நாடுகளிலே எங்கே வாழ்நாள் முழுதும் வட்டியே வட்டி என்று இருக்கிறதோ அங்கே எங்களால் வட்டி இல்லாமல் வாழ முடியும் என்று இஸ்லாமை ஏற்ற மக்களின் உறுதியை பார்க்கிறோம். எங்களுக்கு மார்க்கக் கல்வி படிக்க நேரமில்லை என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் உருவாகி வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், எங்களது பிள்ளைகளை மார்க்க கல்விதான் படிக்க வைப்போம் என்று, நம்முடைய மத்ரஸாக்களை நோக்கி நம்முடைய பல்கலைக்கழகங்களை நோக்கி ஓடி வரக்கூடிய புடை சூழ்ந்து வரக்கூடிய புதிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளை பார்க்கிறோம்.
சில அரேபிய கூட்டம் இந்த அரேபிய நாட்டிலே கட்டுப்பாடுகள் அதிகம் என்பதாக, அந்த நாட்டை துறந்து மேலை நாடுகளுக்கு சென்று அங்கே குடியுரிமை வழங்கக்கூடிய நேரத்தில், மேலை நாட்டுடைய மக்கள் அந்த மேற்கத்திய மக்கள் இஸ்லாமை ஏற்று எங்களுக்கு ஒரு இஸ்லாமிய சூழ்நிலை தேவை; எங்களுக்கு மஸ்ஜிதுடைய சூழ்நிலை தேவை; மதரஸாவினுடைய சூழ்நிலை தேவை; மஸ்ஜித் நபியுடைய சூழ்நிலை தேவை; கஅபாவின் சூழ்நிலை தேவை என்று இங்கே வந்து குடியேரக்கூடிய நிலையை பார்க்கிறோம்.
சகோதரர்களே! ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைய வேண்டிய அதே நேரத்தில் இன்னொரு பக்கம் பயப்பட வேண்டும். அல்லாஹ் எங்கே நமது உம்மத்தை மாற்றுகின்றானோ! நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதற்காக நம்மை அல்லாஹ் தூரப் படுத்துகிறானோ என்று பயப்பட வேண்டும்.
அல்லாஹு தஆலா இந்த வேதத்தை சொல்கின்றான்;
قَيِّمًا لِّيُنْذِرَ بَاْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۙ
அது (முரண்பாடுகள் அற்ற) நேரானதும் நீதமானதுமாகும். (நிராகரிப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான தண்டனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி(யாகிய சொர்க்கம்) உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்). (அல்குர்ஆன் 18:2)
இதனுடைய சட்டங்கள் நிலையானது; நீதமானது; நேர்மையானது; ஒரு குறையை கண்டுபிடிக்க முடியுமா? எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் ஒரு அநியாயமான ஒரு பக்கச் சார்புடைய ஒரு சட்டம் குர்ஆனில் இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியுமா?
அல்லாஹு தஆலா இந்த குர்ஆன் ஏன் இறக்கப்பட்டது? என்று நமக்கு விளக்கம் தருகிறான். தாயத்துகளாக தகடுகளாக மாற்றுவதற்கு அல்ல. வீடுகள் குடி போகும் போது ஓதப்படுவதற்காக அல்ல. விசேஷங்களில் பரக்கத் ஏற்படுவதற்காக அல்ல. கடைகளில் பரக்கத்துக்காக அல்ல. ஏன் இந்த குர்ஆன் இறக்கப்பட்டது?
قَيِّمًا لِّيُنْذِرَ بَاْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ
அல்லாஹ்வின் புறத்திலிருந்து கடுமையான தண்டனையை குறித்து எச்சரிப்பதற்காக. யார் இந்த குர்ஆனை நம்பவில்லையோ, யார் இந்த குர்ஆனை செயல்படுத்தவில்லையோ, இதன் பக்கம் மக்களை அழைக்கவில்லையோ அவர்களை எச்சரிக்கை செய்வதற்காக.
وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ
முஃமின்களுக்கு நற்செய்தி சொல்வதற்காக. யார் நம்பிக்கை கொண்டார்களோ, இந்த குர்ஆனை எடுத்து நடந்தார்களோ.
الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ
அவர்களது சொல், அவர்களது செயல், அவர்களது தொழில், அவருடைய கொடுக்கல் வாங்கல், அவருடைய திருமண வாழ்க்கை குர்ஆனின் படி, குர்ஆனின் படி குர்ஆன் எந்த சட்டத்தை சொன்னதோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கை. குர்ஆன் ஹலால் ஆக்கியதை ஹலால் ஆக்கிக் கொண்டார்கள். குர்ஆன் ஹராமாக்கியதை ஹராமாக்கி கொண்டார்கள். அவர்களுக்கு நற்செய்தி சொல்வதற்காக.
مّٰكِثِيْنَ فِيْهِ اَبَدًا ۙ
அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான அழகிய நற்கூலி இருக்கிறது. அதிலே அவர்கள் நிரந்தரமாக தங்கப் போகிறார்கள். (அல்குர்ஆன் 18:3)
அடுத்து அல்லாஹ் சொல்கிறான். இன்னும் ஒரு மகத்தான எச்சரிக்கை. கடுமையான எச்சரிக்கை. யாருக்கு?
وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا
இன்னும், அல்லாஹ், (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (அதை இறக்கினான்). (அல்குர்ஆன் 18:4)
யார் அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது. அல்லாஹ் தனக்கு ஒரு குழந்தை எடுத்துக் கொண்டான் என்று சொல்கிறார்களோ, அவர்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் சொல்லுகின்றான்.
مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا
அவனைப் பற்றி (-அல்லாஹ்வைப் பற்றி) எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாக இருக்கிறது. அவர்கள் பொய்யைத் தவிர ( வேறெதையும் ) கூறுவதில்லை. (இறைவனைப் பற்றி இணைவைப்பாளர்கள் பேசுவதெல்லாம் பொய்யாகும்.) (அல்குர்ஆன் 18:5)
வசனத்தின் கருத்து : இந்த முட்டாள்களுக்கு இதைப்பற்றி எந்த அறிவும் இல்லை.
وَّلَا لِاٰبَآٮِٕهِمْ
அவர்களுடைய முன்னோர்களுக்கும் எந்த அறிவும் இல்லை. (அவனுக்கும் புத்தி இல்லை; அவனுடைய அப்பனுக்கும் புத்தி இல்லை)
كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْ
அவர்களின் வாயிலிருந்து வரக்கூடிய இந்த சொல் அபாண்டமானது மிக பயங்கரமான சொல். யாருக்கு மனைவி இல்லையோ அவனுக்கு குழந்தை இருக்கிறது என்று இவர்கள் இட்டு கட்டுகின்றார்கள். அந்த பரிசுத்தமான ஒப்பற்ற நிகரற்ற இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று சொல்கிறார்கள் அவர்களை எச்சரிப்பதற்காக, இன்றைய சூழ்நிலை எப்படி ஆகிவிட்டது? நஸரானிகளுக்காக யஹூதிகளுக்காக குர்ஆனையே விட்டுக் கொடுத்து விடுவார்கள் போலும். குர்ஆனுடைய வசனங்களையே மறைத்து விடுவார்கள் போலும். இஸ்லாமுடைய எதிரிகளாக இருக்கும் நஸராணிகளை யஹூதிகளை திருப்திப்படுத்துவதற்காக இஸ்லாமிய பாடத்திட்டங்களில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்து விட்டார்கள்.. அல்லாஹு அக்பர். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:
اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا
அவர்கள் சொல்வதெல்லாம் பொய்யைத் தவிர வேறு எதுவும் அவர்கள் பேசுவதில்லை.
பிறகு, அல்லாஹு தஆலா நம்முடைய நபிக்கு சொல்கின்றான்;
நபியே! நீங்கள் தாவா செய்ய வேண்டும். மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும். வழி கெடக்கூடிய மக்களின் மீது கவலைப்பட்டு, வருத்தப்பட்டு அவர்களை நேர்வழிக்கு கொண்டு வர வேண்டும்.
ஆனால், அதற்காக நீங்கள் உங்களையே மாய்த்துக் கொள்ளாதீர்கள். தாவா செய்ய வேண்டும்; அழைக்க வேண்டும்; உழைக்க வேண்டும்; அதற்காக அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். ஆனால், உங்களையே நீங்கள் அழித்துக் கொள்கின்ற அளவுக்கு அல்ல.
ரஸூலுல்லாஹ் ﷺ எந்த அளவு இந்த மக்களை குறித்து வருந்தி இருப்பார்கள் பாருங்கள்! அல்லாஹ் சொல்லுகிறான்;
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
ஆக, (நபியே!) அவர்கள் இந்த குர்ஆனை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக (அவர்கள் மீது) துக்கப்பட்டு (விலகி சென்ற) அவர்களுடைய (காலடி) சுவடுகள் மீதே உம் உயிரை நீர் அழித்துக் கொள்வீரோ! (அல்குர்ஆன் 18:6)
அல்லாஹு தஆலா ஸூரா கஹ்ஃபுடைய அஸ்ஹாபுல் கஹ்ஃபை ஆரம்பிப்பதற்கு முன்பு முஃமின்களான, நமக்கு நம்ப கூடிய இந்த வேதத்தை சொல்லி, ஒரு அழகான உபதேசத்தை சொல்லி இந்தப் பகுதியை நிறைவு செய்கிறான். ரப்பு சொல்கிறான்;
اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَ يُّهُمْ اَحْسَنُ عَمَلًا
நிச்சயமாக நாம், பூமியின் மேலுள்ளதை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம், அவர்களில் யார் செயலால் மிக அழகியவர் (அழகிய செயல் கொண்டவர் யார்) என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக. (அல்குர்ஆன் 18:7)
இந்த துன்யாவிற்கு மேல் உள்ள அனைத்தையும் நாம் ஒரு தற்காலிக அலங்காரமாக ஆக்கி வைத்திருக்கிறோம். அவ்வளவுதான் இது ஒரு தற்காலிகமான அலங்காரம். உண்மையில் அலங்காரம் அல்ல. அல்லாஹ் அலங்காரமாக ஆக்கி வைத்திருக்கிறான்.
ஏன்? சோதிப்பதற்காக. யார் அமல்களில் அழகானவர்கள்? நல்ல அமல்களை செய்யக்கூடியவர்கள்? யார் என்பதை சோதிப்பதற்காக.
وَاِنَّا لَجٰعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًا
இன்னும், நிச்சயமாக நாம் அதன் மேலுள்ளவற்றை (காய்ந்துபோன) செடிகொடியற்ற சமமான தரையாக (மண்ணாக) ஆக்கிவிடுவோம். (அல்குர்ஆன் 18:8)
இந்த பூமிக்கு மேல் உள்ள அத்தனையையும், ஒன்று விடாமல் மாடமாளிகைகள், தோட்டங்கள், இதன் மேல் இருக்கக்கூடிய தங்கம் வெள்ளி மாணிக்கம் அத்துனை அழகுகளையும் காய்ந்த சருகுகளாக குப்பைகளாக கண்டிப்பாக நாம் மாற்றியே தீருவோம் என்று அல்லாஹ் சொல்கிறான்.
ஆகவே, அன்பிற்குரியவர்களே! இந்த ஸூரா நமக்கு மகத்தான செய்தியை தருகிறது. மறுமையின் பக்கம் நம்முடைய கவனம் இருக்க வேண்டும். மறுமைக்கான வெற்றி குர்ஆனை பற்றி பிடிப்பதிலே இருக்கிறது. மறுமைக்கான வெற்றி குர்ஆனை கொண்டு, அல்லாஹ்வுடைய அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதில் இருக்கிறது.
குர்ஆனின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். குர்ஆனின் மீது பற்று இருக்க வேண்டும். நேசம் இருக்க வேண்டும். அதை ஓதுவதைக் கொண்டும். அதை கற்பதைக் கொண்டும், அதனுடைய சட்டங்களை அறிவதைக் கொண்டும், அதை வாழ்க்கையிலே பின்பற்றுவதைக் கொண்டும், அதைப் பற்றி மக்களுக்கு பிரச்சாரம் செய்வதைக் கொண்டும்.
இன்று ரமழான் வந்தால்தான் குர்ஆன். வெறும் வசனங்களை ஓதுவதற்கு மட்டும்தான் குர்ஆன். எப்பேற்பட்ட அற்பமான மோசமான பலவீனமான சமுதாயமாக நாம் மாறிவிட்டோம் யோசித்துப் பாருங்கள்!
நம்மில் எத்தனை பேருக்கு குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள்? இருக்கிறது என்று கேட்டால் தெரியுமா? ஒரு பத்து அத்தியாயங்கள் உடைய பெயர்களை சொல்லுங்கள் என்று சொன்னால் சொல்லத் தெரியுமா? முதல் அத்தியாயத்திலே எத்தனை வசனம் இருக்கிறது? இரண்டாவது அத்தியாயத்தில் எத்தனை வசனம் இருக்கிறது?
மக்கி என்றால் என்ன? மதனி என்றால் என்ன? என்று கேட்டால் சொல்லத் தெரியுமா? எத்தனை ஸூராக்கள் இருக்கு? குர்ஆனிலே மிகப்பெரிய ஸூராக்கள் இருக்கின்றன. பெரிய ஸூரா இருக்கிறது நடுத்தரமான ஸூரா இருக்கிறது. சிறிய சூரா இருக்கிறது. ஒரு பத்து சிறிய ஸூராக்களுக்கு முழுமையாக அர்த்தம் தெரிந்து வைத்திருக்கிறோமா? எப்படிப்பட்ட பலவீனத்தில் இருக்கிறோம் பாருங்கள்!
நமது பிள்ளைகளையோ அவர்களுக்கு மூன்று நான்கு வயதிலிருந்து 20 வரை இந்த உலக பொருளாதாரத்தை படிப்பதற்கே நாம் அவர்களை ஒதுக்கி விட்டோம். நமக்கோ நம்முடைய வாழ்க்கை துன்யாவை தேடுவதற்கே செல்கிறது என்று சொன்னால், பிறகு இந்த குர்ஆனை கப்ரிலா சென்று கேட்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்!
சகோதரர்களே! நம்முடைய நேரங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்மை மன்னிப்பானாக! வீணாக கழிக்க கூடிய நேரங்களை நீங்கள் ஒதுக்கினாலே அல்ஹம்து லில்லாஹ் குர்ஆனுடைய அடிப்படையான கல்வியை கற்றுக் கொள்ளலாம்.
பிறகு தேவையில்லாமல் கழிக்கின்ற நேரங்கள். பிறகு அவசியம் இல்லாமல் கழிகின்றோமே நேரம். அந்த நேரங்களை எல்லாம் இந்த குர்ஆனுக்காக ஒதுக்கினால், நம்மில் ஒவ்வொருவரும் குர்ஆனை அறிந்தவராக குர்ஆனின் அழைப்பாளராக ஆகிவிடலாம் அல்லாஹு தஆலா அத்தகைய ஒரு சமுதாயமாக மாறுவதற்கு, நம்முடைய தலைமுறையை மாற்றுவதற்கு அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/