HOME      Khutba      ஜுமுஆ நாளும் ஸூரா கஹ்ஃபும் | Tamil Bayan - 1000   
 

ஜுமுஆ நாளும் ஸூரா கஹ்ஃபும் | Tamil Bayan - 1000

        

ஜுமுஆ நாளும் ஸூரா கஹ்ஃபும் | Tamil Bayan - 1000


ஜுமுஆ நாளும் ஸூரா கஹ்ஃபும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜும்ஆ நாளும் ஸூரா கஹ்ஃபும்
 
வரிசை : 1000
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 26-09-2025 | 04-04-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய இறுதி தூதர் ﷺ அவர்கள் மீதும், அவர்களைத் தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்தார், மனைவிமார், சந்ததிகள் மற்றும் அவர்களுடைய நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் இறுதி நாள் வரை நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பையும் மன்னிப்பையும், மறுமையின் மகத்தான சொர்க்கத்தையும் வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தையும் தக்வாவையும் உபதேசம் செய்தவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்மை பொருந்திக் கொள்வானாக!  நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக! அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தில் உறுதியாக இருந்து, ஷைத்தானுடைய நஃப்ஸுடைய அனைத்து குழப்பங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
தவ்பா நஸீஹாவை பெறச் செய்து, ரசூலுல்லாஹ் ﷺ உடைய முழுமையான சுன்னாவில் வாழ்ந்து, அல்லாஹ்வை சந்திக்கக் கூடிய நற்பாக்கியத்தை நமக்கு தந்தருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய சுன்னாவை நாம் உயிர்ப்பிக்க வேண்டும். நபி ﷺ அவர்களுடைய வழிமுறைகள் ஒவ்வொரு விஷயத்திலும் என்ன என்பதை அறிந்து, அதை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். 
 
நம்முடைய ஈமான் எப்போது உயிரோட்டம் உள்ள ஈமானாக மாறும்? அதில் ஒரு குஷி, அதில் ஒரு ஈடுபாடு, அதில் ஒரு பற்று — இப்படிப்பட்ட ஈமானாக நம்முடைய ஈமான் எப்போது மாறும் என்றால், அந்த ஈமானோடு ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை பின்பற்றுவது இணையும் போதுதான்.
 
நபி ﷺ என்ன செய்தார்கள்? நபி ﷺ எப்படி அமல் செய்தார்கள்? எது நபி ﷺ அவர்களுக்கு பிடித்தது? இந்த நேரத்தில் நபி ﷺ என்ன அமல் செய்தார்கள்? தொழுகையை அவர்கள் எப்படி தொழுதார்கள்? அவர்களுடைய பேச்சு எப்படி இருந்தது? எந்த விஷயத்திற்கு அவர்கள் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?
 
இப்படியெல்லாம் தேடித் தேடி நாம் சுன்னாவை கற்றுக்கொண்டு, அதை வாழ்க்கையில் பின்பற்றும்போதுதான், நம்முடைய ஈமான் ஒரு உயிரோட்டம் உள்ள ஈமானாக, வளர்ச்சி அடையக்கூடிய ஈமானாக, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லாஹ்வால் அருளப்பட்ட ஈமானாக மாறும்.
 
அத்தகைய ஈமான்தான் நாளை மறுமையில் மகத்தான சொர்க்கத்திற்கான விலையாக அமையக்கூடிய ஈமானாக இருக்கும்.     
 
ஸஹாபாக்களுக்கு என்ன தனிச்சிறப்புகள் இருந்தன? ஏன் அவர்கள் குர்ஆனில் புகழப்பட்டார்கள்? அவர்களைப் பற்றி, “நான் உங்களையும் நீங்கள் செய்த பாவங்களையும், இனி செய்யப் போகிற பாவங்களையும் மன்னித்து விட்டேன்;” என்று ஏன் அல்லாஹ் சொன்னான்?
 
அல்லாஹு அக்பர்! மனிதன் பாவம் செய்வான், தவறு செய்து கொண்டே இருப்பான் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். இருந்தும், “இனி நீங்கள் பாவம் செய்தாலும் நான் மன்னித்து விடுவேன்” என்று சொல்லும் அளவிற்கு, ரப்புல் ஆலமீன் புறத்திலிருந்து ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு அந்தத் தோழர்கள் குறித்து செய்தி சொல்லப்பட்டது என்றால், அதன் ரகசியத்தை நாம் ஆராயும்போது, ஹதீஸ் நூல்களில் தேடும் போது, நமக்கு ஒரு வித்தியாசமான உணர்வும், ஒரு தனிச்சிறப்பும் தென்படுகிறது.
 
எது நம்மிடத்தில் இல்லையோ, எந்த உணர்வு, எந்த தன்மை நம்மிடத்தில் இல்லையோ, அதையே அங்கே நாம் ஒரு தனி அடையாளமாகப் பார்க்கிறோம்.
 
அது என்ன? தோழர்கள் நபி ﷺ அவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நபியுடைய அமல்களை தேடிக் கொண்டே இருப்பார்கள். நபியின் சுன்னாவை அறிந்து கொள்ள எப்போதும் ஆர்வமுடன் இருப்பார்கள்.
 
ஏன் என்றால், நபி ﷺ அவர்களின் உதடு அசைவதை கூட கவனித்து, “நீங்கள் இப்போது உதட்டை அசைத்தீர்களே, அதில் என்ன திக்ர் செய்தீர்கள்?” என்று கேட்கும் அளவிற்கு, அந்த ஸஹாபாக்களுடைய தேடல் இருந்தது.
 
ஒருமுறை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தொழ வைத்தார்கள். நபி ﷺ உடைய மஸ்ஜித் இன்றைய நம்முடைய மஸ்ஜிதை போன்று வசதியான மஸ்ஜித் அல்ல. ஆனால், கஅபாவிற்கு அடுத்து மஸ்ஜிதுகளிலேயே உயர்ந்த மஸ்ஜித் அந்த மஸ்ஜித் தான். 
 
அன்பு சகோதரர்களே! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். மஸ்ஜிதுகளை மிக உயர்வாக மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக நீங்கள் கட்டுவதால் அந்த மஸ்ஜித் அல்லாஹ்விடத்தில்  உயர்வு அடைந்து விடாது. அந்த மஸ்ஜிதுகளிலே நீங்கள் செய்யக்கூடிய அமல்களை வைத்து தான். இபாதத்தை வைத்து தான் அந்த மஸ்ஜித் எதற்காக உருவாக்கப்படுகிறது. அது உருவாக்கப்பட்ட நோக்கம் என்ன? என்பதை வைத்து தான் அல்லாஹ்விடத்தில் அது கண்ணியத்தை மதிப்பை பெறுகிறது. கட்டிடம் அல்லாஹ்விற்காக கட்டப்பட வேண்டும் அது மஸ்ஜித். அங்கே அல்லாஹ்வுடைய இபாதத் நடக்க வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கம் உயிர்பிக்கப்பட வேண்டும். மார்க்கப் பிரச்சாரம் நடக்க வேண்டும். 
 
ரஸூல் ﷺ அவர்களுடைய மஸ்ஜித் மண்ணாக இருந்தது. கூரையாக இருந்தது. மழை பெய்தால் அப்படியே ஈரமாக ஆகிவிடும். அதில் தான் அவர்கள் தொழுதார்கள். கடுமையான அந்த வெயிலில் மேலிருக்கக்கூடிய அந்த கூரை சூரியனின் வெப்பத்தை தடுக்க கூடியதாக இல்லை. சாதாரண ஒரு நிழலாக இருக்குமே தவிர, வெப்ப நேரத்தில் அந்த மணல் அப்படியே சுடுகின்ற நெருப்பை போல இருக்கும். அதில் தான் ஸுஜூது செய்தார்கள். அந்த ஸுஜூதே அவ்வளவு  நீண்ட நேரம் செய்து செய்து ஸஹாபாக்களுடைய நெற்றி எல்லாம் பழுத்திருக்கும். 
 
இன்று, நமக்கு கார்ப்பெட் போட்டு, ஏசி வைத்து, ஏசி இல்லையென்றால் ஃபேன் வைத்து, கரண்ட் போனால் பேட்டரி வரை ஏற்பாடு செய்து இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும், நம்மால் நீண்ட நேரம் தொழ முடியவில்லை. ஆனால் அவர்கள் எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில், எந்த வசதியும் இல்லாமல், அந்த வெயிலில் நீண்ட நேரம் தொழுவதில் இன்பத்தை கண்டார்கள். அந்த மழையில் தொழுவதிலும் இன்பம் கண்டார்கள். அந்தக் குளிரில் தொழுவதிலும் இன்பம் கண்டார்கள்.
 
சகோதரர்களே! யாருக்கு மறுமை தான் வாழ்க்கையின் இலக்காக ஆகிவிடுமோ—சொர்க்கத்திற்குச் சென்று இன்பம் அடைவோம், மறுமையில் சென்று நாம் ஓய்வெடுப்போம், சொர்க்கத்தில் நம்முடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று யார் உறுதியாக நம்பி விட்டார்களோ—அவர்களுக்கு இந்த துன்யாவுக்காக சிரமப்படுவது தான் சிரமமாக இருக்கும். இபாதத்துக்காக சிரமப்படுவது அவர்களுக்கு சிரமமாக இருக்காது.
 
யாரெல்லாம் ஆகிரத்தில் வாழ வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களோ, அவர்களுக்கு இந்த அற்பமான துன்யாவிற்காக சிரமப்படுவது தான் தேவையற்றதாக தோன்றும். “ஏன் இந்த அற்ப துன்யாவிற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்று அவர்கள் சிந்திப்பார்கள்.
 
ஆனால், துன்யாவில் இபாதத்துக்காக தங்களை வருத்திக் கொள்வது, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டிற்காக தங்களை சிரமப்படுத்திக் கொள்வது—அது அவர்களுக்கு இன்பமாக இருக்கும். எவ்வளவு உடல் வலிக்கிறதோ, அவ்வளவு இன்பமாக இருக்கும். எவ்வளவு கால் வலிக்கிறதோ, அவ்வளவு இன்பமாக இருக்கும்.
 
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு வசனம் இறக்கினான்:
 
مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ‏
 
(நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை, (அல்குர்ஆன் 20:2)
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ நீண்ட நேரம் குர்ஆன் ஓதி தொழுது தொழுது அவர்களுடைய கால்கள் வீங்கிவிடும். 
 
அல்லாஹு தஆலா வசனம் இறக்கினான். நபியே! இப்படி நீங்கள் சிரமப்படுவதற்காக குர்ஆனை இறக்கவில்லை. அல்லாஹு தஆலா நபிக்கு ஒரு சிலபஸ் போட்டுக் கொடுத்தான். 
 
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ (1) قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا (2) نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا (3) أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
 
போர்வை போர்த்தியவரே! (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!) அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!) அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73:1-4)
 
நபியே இந்த சிலபஸ் படி நீங்கள்  தொழுங்கள். இரவிலே பாதி இன்னும் அதிகப்படுத்த நினைத்தால், மூன்றில் இரண்டு போதும், மூன்றில் ஒன்று கட்டாயமாக ஓய்வெடுங்கள். உங்களுக்கு முடியவில்லையா மூன்றில் ஒன்று தொழுங்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! பலருக்கு இஷா தொழுகையும் ஃபஜ்ரு தொழுகையும் சிரமமாக இருக்கிறது என்றால், எந்த வகையான ஈமானை நாம் வைத்திருக்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! 
 
நான் எதற்காக இதை சொல்ல வருகிறேன் என்றால், இன்று நம்மிடத்தில் ரசூலுல்லாஹ் ﷺ உடைய ஈமான், அவர்களுடைய சுன்னா அமல்களைத் தேடும் மனப்பாங்கு குறைந்து விட்டது. அந்தத் தேடல் குறைந்ததின் விளைவாக, அமல்களில் குறைவு ஏற்பட்டுள்ளது. பல அமல்கள் நம்முடைய வாழ்க்கையில் இருந்து மறைந்து போய்விட்டன, மறக்கப்பட்டு விட்டன.
 
அதற்காகத்தான் இந்த ஜுமுஆ நாளில், ரசூலுல்லாஹ் ﷺ எப்படி அமல் செய்தார்கள்? இந்த ஜுமுஆ நாளுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறோம்.
 
இன்று ஜுமுஆ நாள் நமக்கெதற்கான நாளாக மாறி விட்டது. நம்முடைய வீடுகளில் விசேஷமான உணவுகளுக்கான நாளாக மாறி விட்டது. ஆனால் அமல்களுக்கான நாளாக இல்லை. ஆனால் ரசூலுல்லாஹ் ﷺ முஸ்லிம்களுக்கு ஜுமுஆ நாளை அமல்களுக்கான நாளாக,  இபாதத்துக்கான நாளாக , குர்ஆன் திலாவத்திற்கான நாளாக, மறுமையை சிந்திப்பதற்கான நாளாக, நபி ﷺ மீது அதிகமாக ஸலவாத்து ஓதுவதற்கான நாளாக கற்றுக் கொடுத்தார்கள். மறுமையை நினைத்து அச்சப்படுவதற்கான நாளாக இந்த ஜுமுஆ நாளை அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
 
ஜுமுஆ நாளில்தான் கியாமத் நிகழும். ஜுமுஆ நாள் வந்தால், “இது கடைசி ஜுமுஆவாக இருக்குமோ? இந்த ஜுமுஆவிலே உலக முடிவு நாள் நிகழுமோ?” என்று எல்லா உயிரினங்களும் பயப்படுகின்றன.
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ ஜுமுஆவுக்கான அந்த இரவிலிருந்தே, அதாவது வியாழக்கிழமை மாலையிலிருந்தே, ஜுமுஆவுக்கான தயாரிப்பிலும் அந்த விசேஷமான நாளை எதிர்பார்க்கும் நிலையிலும் இருப்பார்கள்.
 
முஸ்லிம்கள் தங்களுடைய உடலையும் உள்ளார்ந்த தூய்மையையும் சுத்தம் செய்வதற்காக, நகங்களை வெட்டுவதற்காக, தேவையற்ற முடிகளை அகற்றுவதற்காக, வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை முன்பே செய்வார்கள். ஏனெனில் அது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு மகத்தான நாள்.
 
அதேபோன்று, வியாழக்கிழமை இரவு — அதாவது வெள்ளிக்கிழமைக்கு முந்தைய அந்த மாலை — ஒரு மகத்தான இரவாகும். அந்த இரவுக்குப் பிறகு வரும் ஃபஜ்ர், மிக மகத்தான ஒரு நாளின் தொடக்கமாகும்.
 
யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவருடைய பிள்ளைகள் யாகூப் நபி இடத்திலே இறுதியாக கடைசியாக நாங்கள் தப்பு செய்துவிட்டோம்;
 
قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ‏
 
(யஅகூபிடம் அவரின் பிள்ளைகள்) கூறினார்கள்: “எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்.” (அல்குர்ஆன் 12:97)
 
விளக்கம் : எங்கள் தந்தையே! எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு தேடி எங்களை மன்னிக்கும்படி கேட்டு விடுங்கள் என்று சொன்னபோது யாகூப் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய அந்த பிள்ளைகளின் பாவ மன்னிப்பை தேடுவதற்காக தேர்ந்தெடுத்த  நேரம் எது தெரியுமா? வெள்ளிக்கிழமையுடைய இரவு தஹஜ்ஜத்தினுடைய நேரம்.
 
அப்பேர்ப்பட்ட மகத்தான நேரம் அது. பொதுவாகவே தஹஜத்துடைய நேரம் மகத்தான நேரம். அதிலும் இந்த வெள்ளிக்கிழமையினுடைய இரவு தஹஜத்தின் நேரம் இருக்கிறதே மகத்தான ஒரு நேரமாக இருக்கிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இந்த வெள்ளிக்கிழமை அன்று சில அமல்களை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஸூரத்துல் கஹ்ஃபை ஓதுவது.
 
இது ஒரு நடுத்தரமான ஸூரா தான். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஆகும்; அவ்வளவுதான். ஆனால் இந்த ஸூராவை ஓதுவது நமக்கு எவ்வளவு பெரிய ஈமானிய உணர்வுகளை வழங்குகிறது என்பதையும், அதனால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கக்கூடிய ஈமானிய பலன்கள் என்ன என்பதையும் ரஸூலுல்லாஹ் ﷺ விசேஷமாக நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
 
வெள்ளிக்கிழமைக்காக நமது உடலைத் தயார் செய்வது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, வியாழக்கிழமை மாலையிலிருந்தே ஸலவாத்து ஓதுவது, தஹஜ்ஜத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஃபஜ்ர் தொழுகைக்கு சிறப்பு கவனம் செலுத்துவது—இவை அனைத்தும் வெள்ளிக்கிழமைக்கு உரிய அமல்களாகும்.
 
பொதுவாகவே ஃபஜ்ர் தொழுகை மிக முக்கியமான தொழுகையாகும். அதிலும், வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகை மிக மிக முக்கியமான தொழுகையாகும். அதற்கென்று தனியான சிறப்பை ரஸூலுல்லாஹ் ﷺ விளக்கியிருக்கிறார்கள்.
 
மேலும், அந்த வெள்ளிக்கிழமைகளில் ஓதுவதற்காக விசேஷமாக ஒரு ஸூராவை குர்ஆனிலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் ﷺ நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். 
 
ஒரு சில ஹதீஸ்களை பாருங்கள்!
 
ஸூரத்துல் கஹ்ஃப் எவ்வளவு மகத்தான ஸூரா என்று. 
 
பொதுவாக அல்லாஹ்வுடைய கலாமே மகத்தானது தான். அதில் சில ஸூராக்களுக்கு விசேஷமான சிறப்பை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லுகின்றார்கள். அதிலே சில செய்திகள் இருக்கின்றது. நம்முடைய நோக்கம் சிறப்பை அறிவது; அந்த ஸூராவின் செய்திகளை அறிவது; அந்த ஸூராவின் படிப்பினைகள் அந்த ஸூரா என்ன ஈமானிய படிப்பினைகளை தருகிறது; அந்த ஸூராவைக் கொண்டு நம்மை எப்படி மாற்ற வேண்டும் என்பது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்:
 
ஒரு மனிதர் கஹ்ஃப் ஸூராவை ஓதினார். அப்போது அவருடைய வீட்டிலே குதிரை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அவர் ஓதிக்கொண்டே செல்கிறார். குதிரை மிரளுகிறது. குதிரை மிரளுகிறது. அவர், குதிரை மிரள்கிறது என்று ஓதுவதை நிறுத்திவிட்டு அன்னார்ந்து  பார்த்தால் அவரை அப்படியே மேகம் சூழ்ந்து இருக்கிறது. உடனே அந்தத் தோழர் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களை நோக்கி ஓடோடி வருகிறார். இந்த செய்தியை சொல்லுகின்றார்.
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்; ஓதுங்கள்! ஓதுங்கள்! நீங்கள் ஓதிய அந்த குர்ஆனுக்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸகீனா இறங்கியது. (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3614.
 
ஒன்று ஓதக்கூடியவருடைய ஈமான். இரண்டாவது அல்லாஹ்வுடைய கலாமில் அது  மகத்தான ஒன்று. 
 
அல்லாஹு தஆலா சில அற்புதங்களை ஸஹாபாக்களுக்கு காட்டி கொடுத்திருக்கின்றான். ஸஹாபாக்களுக்கு காட்டப்படுவதற்கு “கராமத்: என்று சொல்லப்படும். நபிமார்களுக்கு காட்டப்படுவது “முஃஜிஸா” என்று சொல்லப்படும். இரண்டுக்கு இடையிலே வித்தியாசம் உள்ளது.
 
அவர் அந்த மேகத்தை , அந்த ஸகீனாவை பார்க்கிறார். அல்லாஹு தஆலா அவருக்கு காண்பித்துக் கொடுத்தான். அந்தத் தோழர் பார்த்து பயந்து ஓதுவதை நிறுத்திவிட்டு ரஸூல் ﷺ இடத்திலே விளக்கம் தேடி வருகிறார்.  
 
அப்போது நபி ﷺ அவர்கள் சொல்கிறார்கள்; 
 
இன்னவரே ஓதுங்கள்! அது ஸகினா. நீங்கள் ஓதக்கூடிய அந்த குர்ஆனுக்காக இறங்கியது. 
 
இதை கண்ணியத்திற்குரிய ஹதீஸ் கலை அறிஞர்கள் குர்ஆனுடைய சிறப்பிலே கொண்டு வருகிறார்கள். காரணம் என்னவென்றால் இந்த இடத்திலே அல்குர்ஆன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அப்போது எந்த ஸூராவை ஓதினாரோ அதற்காக வேண்டி சொல்லப்பட்ட சிறப்பு என்பதற்காக. 
 
அடுத்து, மற்றும் ஒரு அறிவிப்பில் வருகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்:
 
مَن حَفِظَ عَشْرَ آياتٍ مِن أوَّلِ سُورَةِ الكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ
 
ஸூரா கஹ்ஃப் உடைய ஆரம்ப பத்து வசனங்களை யார் ஓதுவாரோ அவர் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்.
 
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 809.
 
எவ்வளவு முக்கியமான விஷயம். தஜ்ஜாலை பற்றி பேசுவது; அவனுடைய ஃபித்னாவை பற்றி பேசுவது; பயப்படுவது; இது ஈமானின் ஒரு அடையாளம். தஜ்ஜாலை பற்றி பேசாமல் இருப்பது; அந்த பேச்சை விடுவது; இது மறுமையின் அடையாளங்களிலே ஒன்று. மறுமை நெருங்கி விட்டது என்ற அடையாளங்களிலே ஒன்று. 
 
தஜ்ஜாலின் குழப்பம் ஷைத்தானின் குழப்பம் யூத நசராணிகளினுடைய குழப்பங்கள் இதைப் பற்றி முஸ்லிம்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இன்று, நம்முடைய வாதங்கள் ஒரே ஒரு திசையில் செல்கின்ற காரணத்தினால் இந்த குழப்பங்களை எல்லாம் அறியாதவர்களாக புரியாதவர்களாக பிறகு அதிலே விழுந்து விட்டவர்களாக நாம் ஆகி விட்டோம். 
 
அல்லாஹ்வுடைய குர்ஆனிலே அல்லாஹு தஆலா இப்லீஸை மட்டுமா எடுத்து சொல்லுகிறான் உங்களுடைய  எதிரி என்று, ஷைத்தானை மட்டுமா சொல்லுகிறான் அவனை உங்களுடைய நேசர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று ஷைத்தானை மட்டுமா சொல்லுகிறான். 
 
யூதர்களை நமக்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். நஸரானிகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். ஒரு வசனமா? இரண்டு வசனமா? எத்தனை வசனங்கள்? அதுவும் எப்படிப்பட்ட எச்சரிக்கை!
 
وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ
 
உங்களில் யார் அந்த யூத நசராணிகளோடு நேசம் கொள்வாரோ அவர்கள் அவர்களையே சேர்ந்தவர்கள் என்று. (அல்குர்ஆன் 5:51)
 
யாரைப் பார்த்து இறக்கப்பட்ட வசனம்? கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களுக்கு முன்னால் இறக்கப்பட்ட எச்சரிக்கை வசனம் இது. யோசித்துப் பாருங்கள்!
 
இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்  மிகப்பெரிய சீர்திருத்தவாதி. சொல்லுகின்றார்கள்; யூத நசராணிகள் இடத்திலிருந்து நமக்கு பயனுள்ள ஒரு கல்வியை எடுத்தால் கூட, அந்த கல்வியை எடுத்து அதை நம்முடைய இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, ஒழுக்கங்களுக்கு ஏற்ப மாற்றித்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, அதை அப்படியே அவர்கள் படித்துக் கொடுப்பதை போன்று நாம் படித்து கொடுக்க முடியாது. 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ மாறு செய்யுங்கள்! மாறு செய்யுங்கள்! யூத நஸ்ராணிகளுக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். 
 
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்  எழுதுகின்றார்கள்; 
 
இது தொழுகை இபாதத்துக்கு மட்டுமல்ல. உங்களுடைய வீடுகளும்  யூதர்களுடைய வீடுகள் போன்று இருக்கக் கூடாது. உங்களுடைய ஆடை யூதர்களுடைய ஆடைகள் போல இருக்கக் கூடாது. ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு மாறுபாடு செய்யவேண்டும். காரணம் என்ன? அவர்களோடு ஒத்துப் போக ஒத்துப் போக நெருங்க நெருங்க அவர்கள் இந்த உம்மத்தை குஃப்ரில் தள்ளுவார்கள். அதுதான் அவர்களுக்கு ஆசை. 
 
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ 
 
(நபியே!) யூதர்களும் கிறித்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்(றி அவர்களைப் போன்று நீர் மா)றும் வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:120)
 
நபியே! நீங்கள் இந்த யூத நஸராணிகளுக்கு எவ்வளவு இறங்கி சென்றாலும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் அவர்களுடைய கொள்கையில் செல்லாத வரை.
 
தெளிவான எச்சரிக்கை! அல்லாஹ்வை திருப்தி படுத்துவதை விட ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களை திருப்தி படுத்துவதை விட யூதர்களையும் கிறித்தவர்களையும் திருப்தி படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.  யாரை திருப்தி படுத்த வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டானோ அவர்களை புறக்கணிக்கின்றனர்
 
 وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ‏
 
அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள். (அல்குர்ஆன் 9:62)
 
நீங்கள் திருப்தி படுத்த வேண்டுமா? அல்லாஹ்வை திருப்தி படுத்துங்கள்! ரஸூலுல்லாஹ்வை திருப்தி படுத்துங்கள் என்று. 
 
ஆனால், நாம் அல்லாஹ்வையும் மறந்து விட்டோம்; ரஸூலுல்லாஹ்வையும் மறந்து விட்டோம். தற்காலத்தில் உள்ளவர்கள் நம்மை ஏற்பார்களா? ஏற்க மாட்டார்களா? நம்மை எப்படி பார்ப்பார்கள் என்பதற்கு ஏற்ப நம்முடைய மார்க்கத்தை மாற்றுவதற்கு துணிந்து விட்டோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! 
 
தஜ்ஜாலுடைய ஃபித்னா மிகப்பெரிய ஃபித்னா. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஒவ்வொரு தொழுகையிலும் பாதுகாப்பு தேடினார்கள். அந்த ஃபித்னாவில் இருந்து ஒருவர் பாதுகாக்கப்படுகிறார் என்றால் அது சூரா கஹ்ஃபினுடைய ஆரம்ப பத்து  வசனங்களை ஓதும் போது.
 
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்:
 
من قرأ سورةَ الكهفِ في يومِ الجمعةِ ، أضاء له من النورِ ما بين الجمُعتَينِ
 
யார் வெள்ளிக்கிழமையில் ஸூரா கஹ்ஃபை ஓதுவாரோ அவருக்கு எப்பேர்பட்ட ஒரு பிரகாசம் ஒரு ஒளி கிடைக்கும் என்றால், இரண்டு ஜுமுஆக்களுக்கு நடுவில் உள்ள அத்தனை நாட்களும் அவருக்கு பிரகாசமான  நாட்களாக இருக்கும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : பைஹகி, எண் : 6209.
 
அல்லாஹ்வின் அடியார்களே! சிலர் நினைக்கலாம்; ஃபர்ளை செய்தால் போதாதா என்று. ஏன் இதே கேள்வியை உங்களுடைய உலக வாழ்க்கைக்கு கொஞ்சம் கேட்டு பாருங்கள்! பசி ஆறக்கூடிய அளவிற்கு மட்டும் சாப்பாடு கிடைத்தால் போதாதா என்று. அவுரத்தை மறைப்பதற்கு மட்டும் ஒரு ஆடை கிடைத்தால் போதாதா? என்று கேட்டுப்பாருங்கள். படுப்பதற்கு ஆறடி இடத்திலே ஒரு இடம் மட்டும் போதாதா? என்று கேட்டுப்பாருங்கள். 
 
ஆஹிரத்தின் தேடல் உள்ளவர்களுக்கும் துன்யாவின் தேடல் உள்ளவர்களுக்கும் இடையே இதுதான் அங்கே வித்தியாசம்.. துன்யாவிற்கு பிள்ளைகள் இருப்பது போன்று ஆஹிரத்துக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஆஹிரத்துடைய பிள்ளைகளாக ஆகி விடுங்கள்.
 
அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு அமல்! எவ்வளவு சிறப்பு எவ்வளவு தியாகம்! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ஒப்புக்கொள்கிறார்கள். எல்லாரும் செய்த  தியாகங்களுக்கு கைமாறு செய்து விட்டேன். பதில் கொடுத்து விட்டேன். பதில் செய்து விட்டேன். ஆனால் அபூ பக்கரின் தியாகங்களுக்கு கைமாறு  இல்லை. அல்லாஹ் அவருக்கு கொடுப்பான். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3661.
 
அபூபக்ர் அழுகிறார். அந்த அபூபக்கருக்கு என்ன நடந்தது? ஒவ்வொரு அமலை தேடி அலைகிறார். ரஸூல் ﷺ அவர்கள் ஒருநாள் சுபுஹு தொழுகைக்குப் பிறகு தனது தோழர்களிடம் கேட்டார்கள்; 
 
فمَن تَبِعَ مِنْكُمُ اليومَ جِنازَةً؟ قالَ أبو بَكْرٍ رَضِيَ اللَّهُ عنْه: أنا، قالَ: فمَن أطْعَمَ مِنْكُمُ اليومَ مِسْكِينًا؟ قالَ أبو بَكْرٍ رَضِيَ اللَّهُ عنْه: أنا، قالَ: فمَن عادَ مِنْكُمُ اليومَ مَرِيضًا؟ قالَ أبو بَكْرٍ رَضِيَ اللَّهُ عنْه: أنا، فقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: ما اجْتَمَعْنَ في امْرِئٍ، إلَّا دَخَلَ الجَنَّةَ
 
யார் நோன்பு வைத்திருக்கிறார்? யார் ஜனாஸாவில் கலந்து கொண்டது? யார் ஸதக்கா கொடுத்தது? மூன்றிற்கும் பதில் அபூபக்கர் தான் சொல்கிறார். அல்லாஹ்வின் தூதரே நான் செய்தேன் என்று. 
 
ஃபஜ்ரு தொழுகைக்கு வருவதற்கு முன்பாக ஒரு ஏழையைப் பார்த்து ஸதக்கா கொடுத்து விட்டு வந்திருக்கிறார் என்றால்; ஒரு நோன்பை வைத்து விட்டு வந்திருக்கிறார் என்றால்; அது திங்கள் கிழமை வியாழக்கிழமையாக இருந்திருந்தால் பல ஸஹாபாக்கள் வைத்திருப்பார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1028.
 
கண்டிப்பாக ஒரு பொதுவான நாள் அந்த நாளிலே அவர் நோன்பு வைத்திருக்கிறார். ஒரு கடுமையான வெப்பமான நாளாக கூட இருந்திருக்கலாம். ஜனாஸா தொழுகை, எங்கே மதினாவின் கடைக்கோடியிலே ஒருவர் இறந்தார் என்று அந்த ஜனாஸாவிலும் கலந்து கொண்டு, ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் ஒரு கீராத் நன்மை. அடக்கம் செய்ய சென்றால் ஒரு கீராத் நன்மை மலையளவு நன்மை. அனைத்தையும் தேடி ஓடினார்கள் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு.
 
அறிவிப்பாளர் : உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21201.
 
சகோதரகளே! இவர்களைத்தான் அல்லாஹ் சொல்லுகின்றான்:
 
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ  ۙ‏
 
(அல்குர்ஆன் 56:10)
 
ஓடுவார்கள், ஓடுவார்கள், அமல்களிலே முந்திக் கொண்டே இருப்பார்கள்.
 
அப்படிப்பட்டவர்களுக்கு புரியவரும்; இந்த ஸூரா கஹ்ஃப் நாம் ஓதும்போது இரண்டு ஜும்ஆக்களுக்கு இடையிலே அல்லாஹ் வெளிச்சத்தை தருகிறானே. அந்த வெளிச்சம் எப்படி பட்ட ஈமானை தக்வாவை கொடுக்கும் என்பதாக. ஈமானிய வெளிச்சம் அது. 
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
من قرأ سورةَ الكهفِ يومَ الجمعةِ أضاء له النُّورُ ما بينَه و بين البيتِ العتيقِ
 
யார் சூரத்துல் கஹ்ஃபை ஓதுவாரோ வெள்ளிக்கிழமைகளில் அவருக்கு எப்படிப்பட்ட வெளிச்சம் கிடைக்கும் என்றால், அவருக்கும் கஅபாவுக்கும் இடையில் இருக்கக்கூடிய அத்தனை பகுதிகளும் வெளிச்சமாக ஆகிவிடும். அப்பேற்பட்ட ஒரு பெரிய வெளிச்சத்தை அல்லாஹுதஆலா அவருக்கு கொடுப்பான்.
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : பைஹகீ, எண் : 6209.
 
மேலும், ரஸூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
 
யார் ஸூரா கஹ்ஃப் அது இறக்கப்பட்டதை போன்று ஓதுவாரோ, அவசரமாக இல்லாமல் புரிந்து நிதானமாக ஓதுவாரோ அவரிடத்திலிருந்து மக்கா கஅபா வரை வெளிச்சமானால் எப்பேர்பட்ட வெளிச்சமாக இருக்குமோ அத்தகைய வெளிச்சத்தை அல்லாஹ் அவருக்கு மறுமையிலே அந்தக் கஹ்ஃபின் பொருட்டால் கொடுத்து விடுவான். 
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 2072.
 
நாளை மறுமை என்பது இருள்கள் சூழ்ந்ததாக இருக்கும். அமல்களைக் கொண்டுதான் வெளிச்சம். 
 
இதற்காகவே அல்லாஹ் ஒரு வசனத்தை இறக்கினான். நபியே நீங்கள் மறுமையில் பார்ப்பீர்கள். முஃமின்களை முந்திக்கொண்டு செல்லும் அவருடைய வெளிச்சம் என்பதாக அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள். 
 
يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ‌ قِيْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًا 
 
அந்நாளில் நயவஞ்சகர்களும் நயவஞ்சகிகளும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களுக்காக (கொஞ்சம்) காத்திருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் “உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆக, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம், அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம், அதற்கு முன்னால் தண்டனை இருக்கும். (அல்குர்ஆன் 57:13)
 
முனாஃபிக்குகள் அந்த இருளில் சிக்கித் தவிப்பார்கள். ஏனென்றால் அந்த முனாஃபிக்குகள் இருக்கிறார்களே பாதி அளவு முஸ்லிம்களோடு ஒட்டிக்கொண்டே வருவார்கள். காஃபிரும் முஷ்ரிக்கும் யஹூதி நஸராணிகள் எல்லாம் ஆரம்பத்திலே முடிந்து விட்டது. குளோஸ். 
 
இந்த முனாஃபிக்குக்கு மட்டும் அல்லாஹ் எப்படிப்பட்ட மன வேதனையை கொடுப்பான் என்று சொன்னால், பாதி தூரத்திற்கு நம்முடன் ஓடி வருவான். முஃமின்களோடு ஓடி வருவான். கடைசிலே அல்லாஹ் இவனை நரகத்தில் தள்ளுவான். நிராசை அடையவைப்பான். அவன் நினைத்து விடுவான்; நாம் மறுமையில் தப்பித்து விடுவோம் என்று. கடைசியிலே அல்லாஹு தஆலா அவனை படு குழியிலே தள்ளுவான். கடைசியில் நரகத்தின் அடித்தளத்திற்கு சென்று விடுவான். 
 
அந்த முனாஃபிக்கள் சொல்வார்கள்; எங்களுக்கு ஒளியை கொடுங்கள்! கொஞ்ச நேரம் நில்லுங்கள். நாங்களும் உங்களை தொடர்ந்து வருகிறோம் என்று. அல்லாஹு தஆலா இருவருக்கும் இடையிலே ஒரு பெரிய தடையை ஏற்படுத்தி விடுவான். முஃமின்களுக்கு அப்படிப்பட்ட பெரிய வெளிச்சத்தை அல்லாஹு தஆலா கொடுப்பான்.
 
 இரண்டு இடங்களில் அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
யார் சூரா கஹ்ஃபுடைய இறுதி பத்து வசனங்களை ஓதுவாரோ, பிறகு தஜ்ஜால் வருவானோ, தஜ்ஜால் அவர் மீது சாட்டப்பட மாட்டான். தஜ்ஜாலுடைய ஆதிக்கம் அவர் மீது ஏற்படாது. யார் உளூ செய்ததற்கு பிறகு,
 
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
 
என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்வார்களோ அவருக்கு அந்த துஆ அந்தப் பிரார்த்தனையின் சாட்சி ஒரு ஏட்டில் எழுதப்பட்டு முத்திரையிடப்படும். நாளை மறுநாள் வரை அல்லாஹ்விடத்தில் பாதுகாக்கப்படும் என்று. 
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 2072.
 
ஆக கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இப்படி ரஸூலுல்லாஹ் ﷺ வெள்ளிக்கிழமைக்கு கொடுத்த அந்த முக்கியத்துவத்திலே ஒரு தனி முக்கியத்துவம் குர்ஆன் ஓதுவதற்கு கொடுத்தது. அதில் அந்த குர்ஆனுடைய பகுதிகளிலிருந்து ஸூரத்துல் கஹ்ஃபை ஓதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தது. 
 
ரஸூல் ﷺ  உடைய சுன்னத்தை அறிவதற்கும், வாழ்க்கையில் அதை பின்பற்றுவதற்கும், மக்களுக்கு அதை எடுத்துச் சொல்வதற்கும் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா எனக்கும் உங்களுக்கும் நமது சந்ததிகளுக்கும் தவ்ஃபீக் தருவானாக!  நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்மீது அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
قَرَأَ رَجُلٌ الكَهْفَ وفي الدَّارِ الدَّابَّةُ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ -أوْ سَحَابَةٌ- غَشِيَتْهُ، فَذَكَرَهُ للنَّبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: اقْرَأْ فُلَانُ؛ فإنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ. أوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ. الراوي : البراء بن عازب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3614 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (3614)، ومسلم (795)
 
ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்) தமது வீட்டில் ஊர்திப் பிராணி (குதிரை) இருக்க, (திருக்குர்ஆனின்) “அல்கஹ்ஃப்' (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.
 
இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும்நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள்மீது) இறங்கிய அமைதி(யின் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3614.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/