HOME      Khutba      குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 1 | | Tamil Bayan - 1006   
 

குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 1 | | Tamil Bayan - 1006

           

குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 1 | | Tamil Bayan - 1006


குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 1
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 1
 
வரிசை : 1006
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 10-10-2025 | 18-04-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவனாகிய நமது வணக்க வழிபாட்டுக்கு உண்மையில் தகுதியுடைய ஏக இறைவனாகிய அல்லாஹ்  ஒருவனை போற்றிப் புகழ்ந்து அந்த அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய இறுதி தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும்; அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார், மனைவிமார், சந்ததிகள், மற்றும் அவர்களுடைய தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக; 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை உபதேசம் செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அருளையும் வேண்டியவனாக நேர்வழியை வேண்டியவனாக, மகத்தான சொர்க்கத்தை வேண்டியவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய பெற்றோரை மன்னிப்பானாக!
 
முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நேர்வழியில் நம்மை உறுதிப்படுத்துவானாக! ஆமீன். 
 
காசா மக்களுக்கு நிரந்தர மகத்தான வெற்றியையும் பாதுகாப்பையும் தந்தருள்வானாக! அல்லாஹ்வுடைய வேதத்தை, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை, அல்லாஹ்வுடைய அடியார்களை இழிவுபடுத்தக்கூடிய ஜியோனிச யஹூதிகளை அந்த புனித பூமியிலிருந்து அவமானப்படுத்தப்பட்டவர்களாக, கேவலப்பட்டவர்களாக அல்லாஹ் வெளியேற்றுவானாக! ஆமீன்.
 
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! வெள்ளிக்கிழமையில் நாம் ஓதக்கூடிய ஸூரத்துல் கஹ்ஃப் உடைய முக்கியமான சம்பவங்களையும், அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் மற்றும் ஈமானிய பாடங்களையும் பற்றித்தான், இன் ஷா அல்லாஹ், இந்த ஜுமுஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
 
ஸூரத்துல் கஹ்ஃப் என்ற இந்த அத்தியாயத்திற்கு, அதில் ஆரம்பத்திலேயே கூறப்படும் ஒரு மகத்தான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அல்-பகரா என்ற ஸூராவுக்கு அதில் கூறப்படும் மாடு சம்பந்தமான முக்கிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைக்கப்பட்டதுபோல, குகைவாசிகளைப் பற்றி அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா பேசுகின்ற காரணத்தினால் இந்த ஸூராவிற்கு ஸூரத்துல் கஹ்ஃப் என்று பெயர் வைக்கப்பட்டது.
 
மக்காவில் இருந்த காலம் முழுவதும் பல்வேறு துன்பங்களையும் இக்கட்டுகளையும் துயரங்களையும் சிரமங்களையும் சிக்கல்களையும் குரைஷிகள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு கொடுத்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து, “உங்களுடைய சகவாசமே வேண்டாம்” என்று அந்த நகரத்தை விட்டு வெளியேறிய பிறகும் கூட, குரைஷிகள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை மதீனாவில் நிம்மதியாக இருக்க விடவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களை குரைஷிகள் பல விதங்களில் வேதனைகள் தந்தார்கள். அது சாதாரணமான சோதனை வேதனைகள் அல்ல.
 
எதிரிகள் எப்போதும் எப்படி ஒன்று சேர்கிறார்களோ, அதுபோல நயவஞ்சகர்கள் நயவஞ்சகர்களோடு சேர்ந்து கொண்டார்கள். மேலும், எதிரிகளோடு யூதர்களும் இணைந்திருந்தார்கள். ஏனெனில் யூதர்களுக்கு நன்றாகத் தெரியும்—ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் உண்மையான நபி என்றும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்கள் இறுதி இறைத்தூதர் என்றும்.
 
இந்த இடத்தில், மதீனாவைச் சார்ந்த ஒரு முக்கிய வரலாற்றை நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். மதீனா யூதர்களின் சொந்த பூமி அல்ல. அப்படி இருக்க, யூதர்கள் மதீனாவில் ஏன் குடியேறினார்கள்?
 
அரபிய தீபகற்பத்தில் யூதர்கள் குடியேறியதற்கான காரணம் ஒன்றே—ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் வருகையை எதிர்பார்த்தது. இறுதிக் காலத்தில் அனுப்பப்படவுள்ள அந்த இறுதி இறை தூதர் மதீனாவில் தான் அடைக்கலம் புகுவார்; அங்கேயே தங்கி, உலகளாவிய அளவில் அழைப்புப் பணியையும் மார்க்கப் பிரச்சாரத்தையும் மேற்கொள்வார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
 
அதனால் தான், அந்த நபியை ஈமான் கொள்ளும் நோக்கத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தலைமுறை தலைமுறையாக அவர்கள் மதீனாவில் குடியேறி, அந்த நபியின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
 
அப்படி எதிர்பார்த்த அவர்கள், அந்த நபி அனுப்பப்பட்ட பிறகு ஏன் அவரை நிராகரித்தார்கள்? அல்லாஹ் இதற்குக் காரணமாக حسد—பொறாமையையும், بغي—குரோதத்தையும் சுட்டிக்காட்டுகின்றான். 
 
“இந்த முஹம்மது, நபி இஸ்ஹாக் عليه السلام அவர்களின் வம்சத்தில் அனுப்பப்படுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் பனு இஸ்மாயீல்—இஸ்மாயீல் عليه السلام அவர்களின் வம்சத்தில் அனுப்பப்பட்டுவிட்டார். ஆகவே, நாங்கள் அவரை ஒருபோதும் நம்ப மாட்டோம்” என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
 
அல்லாஹு தஆலா குர்ஆனில் சொல்கிறான்—இந்த குர்ஆன் உண்மையானது என்றும், ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் உண்மையான அல்லாஹ்வுடைய தூதர் என்றும், யூதர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளை அடையாளம் காண்பதைப் போலவே நன்றாக அறிந்திருந்தார்கள். 
 
இருந்தும், அவர்களுடைய உள்ளங்களில் இருந்த பொறாமையும் குரோதமும், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள விடாமல், அவர்களை நிராகரிப்பின் பாதையில் தள்ளிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
பொறாமை இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! ஒரு சகோதரனை தனது சொந்த சகோதரனை கொல்ல தூண்டிவிடும். ஒரு ஆலிமை சத்தியத்தை மறுக்க தூண்டிவிடும். இப்படி இந்த பொறாமையானது பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான ஒரு குணமாக தோன்றினாலும், இது மிக மோசமான குணம். இப்லீஸை காஃபிர் ஆக்கியது இந்த பொறாமை. அல்லாஹ்விடத்தில் ஒரு கண்ணியத்திற்குரியவனாக இருந்தான். 
 
மலக்குமார்களோடு வானத்தில் உயர்த்தப்பட்டு வணக்க வழிபாட்டில் இருந்த ஒருவனை ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் மீது அவன் கொண்ட அந்த பொறாமை அல்லாஹ்விடத்திலே ரப்பிடத்திலே ரப்புல் ஆலமீன் இடத்திலே அவன் தர்க்கம் செய்யும் அளவுக்கு அவனுக்கு தலை கனத்தை பெருமையை ஊட்டியது.
 
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
 
(அல்லாஹ்) கூறினான்: “நான் உனக்குக் கட்டளையிட்டபோது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து உன்னைத்) தடுத்தது எது?” (இப்லீஸ்) கூறினான்: “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்.” (அல்குர்ஆன் 7:12)
 
மேலும், அந்த இப்லீஸ் அல்லாஹ்விடம் இவ்வாறு தர்க்கம் செய்தான்.
 
قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
 
(இப்லீஸ்) கூறினான்: “என்னை விட நீ கண்ணியப்படுத்தியவர் இவர்தானா? இவரைப்பற்றி நீ அறிவிப்பாயா?” (என்று ஏளனம் செய்துவிட்டு கூறினான்:) “நீ என்னை மறுமை நாள் வரை  அவகாசம் தந்து பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். ஆனால், (நீ அருள் புரியும்) குறைவானவர்களைத் தவிர”. (அல்குர்ஆன் 17:62)
 
அவருடைய சந்ததிகளை நான் கண்டிப்பாக அழிப்பேன்; நாசப்படுத்துவேன்; வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடத்தில் திமிரு பேசினான். சவால் விடுத்துள்ளான். 
 
சகோதரர்களே! பெரிய வணக்கசாலியாக மலக்குகளுக்கு மத்தியில் இருந்த ஒருவனை இந்த பொறாமையானது எவ்வளவு கேவலப்படுத்தி விட்டது என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!  
 
இந்த யூதர்களும் அதே நிலைக்குத்தான் ஆளானார்கள். ரசூல் ﷺ அவர்கள் மீது கொண்ட பொறாமையினால் அவர்கள் நபியை நம்பிக்கை கொள்ளாமல் போனது மட்டுமல்ல. எப்படி முந்தைய நபிமார்களை கொன்றார்களோ? அதுபோன்று நமது நபியையும் கொல்வதற்கு ஒருமுறை அல்ல பலமுறை முயற்சி செய்தார்கள். அது மட்டுமல்ல எதிரியின் எதிரி நண்பனாவான், என்ற அடிப்படையில்  நபியின் எதிரிகளாக இருந்த குறைஷிகளை நபிக்கு எதிராக எப்போதும் தூண்டி தூபம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். பகைக்கு புகை போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
 
குரைஷிகள் போர் தொடுத்து அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களையும் அவர்களுடைய இனத்தையும் முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்பதற்காக தூது சென்றார்கள். மூட்டிவிட்டார்கள். பகைமையை குரோதத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். 
 
இன்னொரு பக்கம் நபியை வாயடைக்கச் செய்ய வேண்டும்; நபியை கருத்தியல் ரீதியாக இழிவுபடுத்த வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும்; அவர் ஒரு உம்மி என்று சமுதாய மக்களுக்கு மத்தியிலே அவரை கல்வி ரீதியாக அவமானப்படுத்துவதற்காக பல செய்திகளை குரைஷிகளுக்கு சொல்லி அதையெல்லாம் இந்த நபியிடத்தில் நீங்கள் கேளுங்கள்! அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர்கள் பெருமை பேசினார்கள்.
 
ஆம்! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு அத்தனை ரகசியங்களையும். அத்தனை அற்புதங்களையும் அல்லாஹு தஆலா கற்றுக் கொடுப்பான்.
 
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ
 
நபியே! நீங்கள் அறியாததை எல்லாம் அல்லாஹு தஆலா உங்களுக்கு கற்றுக் கொடுத்தான் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 4:113) 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ ரப்புல் ஆலமீனிடமிருந்து மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து இல்மை பெற்றார்கள். குரைஷிகளும் யூதர்களும் எவ்வாறு குதர்க்கம் செய்து, தர்க்கம் செய்து, மடக்குவதற்காக வாயடைப்பதற்காக நபி ﷺ அவர்களிடம் வாதம் செய்தார்களோ, அதற்கெல்லாம் தக்க பதில்களை அல்லாஹு தஆலா தொடர்ந்து இறக்கிக் கொண்டே இருந்தான்.
 
அப்படி இறக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகளிலும் வசனங்களிலும் ஒன்றுதான், இந்த குகைவாசிகள் சம்பவம். யூதர்கள் குரைஷிகளிடம் சொல்லிக் கொடுத்தார்கள்:
 
“அவரிடத்தில் சென்று கேட்டுப் பாருங்கள், எப்படி வாய் அடைக்கிறார் என்று பாருங்கள். முந்தைய காலத்தில் வாழ்ந்த விசுவாசிகளான குகைவாசிகளைப் பற்றி கேட்டுப் பாருங்கள். அவர்களைப் பற்றி இவருக்கு தெரியுமா? என்று பாருங்கள். கிழக்கையும் மேற்கையும் ஆட்சி செய்த அந்த அரசரைப் பற்றி கேட்டுப் பாருங்கள். ரூஹ் பற்றி கேட்டுப் பாருங்கள். அப்பொழுது தான் இவர் உண்மையான நபியா, இல்லை கற்பனையாக பேசுகிறாரா என்று தெரியும்” என்று.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த அத்தியாயம் இறங்குவதற்கு முன்பாகவே, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி விட்டார்கள். குரைஷிகள் கேட்டதற்கிணங்க சந்திரனையே பிளந்து காட்டினார்கள். கற்களை பேச வைத்தார்கள். இன்னும் எண்ணற்ற அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதியால் நிகழ்த்தினார்கள்.  
 
மேலும், குரைஷிகள் மறைத்து மறைத்து செய்த ரகசியங்களை எல்லாம் அல்லாஹ்வுடைய வஹீயின் மூலம் வெளிப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மகத்தான அற்புதங்கள் அனைத்தையும் அவர்கள் நேரில் பார்த்தும், கேட்டும் இருந்தும் கூட, அல்லாஹு தஆலா சொல்வதைப் போல, அவர்களுடைய உள்ளங்களில் இருந்த அகந்தையும் பொறாமையும் அவர்களை ஈமான் கொள்ள விடவில்லை.
 
وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ‏
 
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கிறார்கள்; இன்னும், (இது) இல்லாமல் போகும் மந்திரமாகும் என்றும் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 54:2)
 
அவர்கள் எத்தனை வசனங்களை, எத்தனை அத்தாட்சிகளை பார்த்தாலும் அவர்கள் புறக்கணிக்க தான் செய்வார்கள். ஏன்? அவர்களுக்கு நம்பிக்கை கொள்வதற்காக அந்த ஆதாரங்களைக் கேட்கவில்லை.
 
ஆதாரங்களைக் கேட்பது இரண்டு நோக்கங்களுக்காக இருக்கலாம். ஒன்று, தெரிந்து கொண்டு, புரிந்து, சிந்தித்து நம்பிக்கை கொள்வதற்காக. இன்னொன்று, வாதத்தில் குதர்க்கம் செய்து வாய் அடைக்க வைக்க வேண்டும், அவரை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக.
 
குரைஷிகள் கேட்ட ஆதாரங்கள் எல்லாம் அப்படித்தான். யூதர்கள் நபிமார்களிடத்தில் கேட்ட ஆதாரங்களும் அப்படித்தான். எத்தனை அற்புதங்களைப் பார்த்தாலும், எத்தனை அதிசயங்களை கண்டாலும், இந்த காஃபிர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
 
அதே நேரத்தில், சத்தியத்தை தேடிக் கொண்டிருந்த சூனியக்காரர்கள், மூஸா நபி عليه السلام அவர்களிடமிருந்து வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் பார்த்தார்கள். அதுவும் மூஸா நபி عليهم السلام அவர்கள் முதலில் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான்:
 
“நீங்கள் சத்தியத்தை எதிர்க்கவா வந்தீர்கள்? அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்” என்ற எச்சரிக்கை.
 
அதற்குப் பிறகு போட்டி ஆரம்பமானது. அவர்களும் தங்கள் தடிகளைப் போட்டார்கள்; அவை பாம்புகளாக மக்களுக்கு கற்பனையாக காட்டப்பட்டன.
 
மூஸா நபி عليه السلام அஞ்சவில்லை, அல்லாஹ்வின் கட்டளையின்படி தனது தடியை போட்டார். அந்த தடி ஒரு உண்மையான பாம்பாக மாறி, சூனியக்காரர்கள் மக்களுக்கு கற்பனை செய்து காட்டியிருந்த அந்த அனைத்து தடிகளையும் முழுங்கி விட்டது. 
 
அதற்குப் பிறகு மூஸா நபி عليه السلام அந்த சூனியக்காரர்களிடம் ஒரு பெரிய பயான் செய்யவில்லை. நீண்ட பிரசங்கமும் நிகழ்த்தவில்லை. இதை பார்த்த மாத்திரத்திலேயே, 
 
فَاُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
 
அவர்கள் அனைவரும் அப்படியே சுஜூதில் விழுந்தார்கள். “ரப்புல் ஆலமீனை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். மூஸாவின் இறைவனையும், ஹாரூனின் இறைவனையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 26:46-48)
 
இதுதான் ஈமான். சத்தியத்தை புரிந்தவுடன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தாமதித்தால், ஷைத்தான் உள்ளே வந்து விடுவான். இப்லீஸ் உள்ளே வந்து விடுவான்.
 
அன்பு சகோதரர்களே! யூதர்கள் ரசூலுல்லாஹி ﷺ அவர்களை வாய் அடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக குரைஷிகளுக்கு இப்படி தந்திரம் செய்தார்கள். அல்லாஹு தஆலா நீண்ட வசனங்களை அதற்காக ஒரு சூராவையே இறக்கி ஓதி காட்டும் படி செய்துவிட்டான். அதற்கு பிறகும் ஈமானை ஏற்றார்களா? இஸ்லாமை ஏற்றார்களா? இல்லை. 
 
அல்லாஹு தஆலா அந்த சம்பவத்தை நமக்கு படிப்பினைக்காக சொல்லிக் காட்டுகின்றான். 300 ஆண்டுகள் தூங்கிய ஒரு கூட்டம் அவர்களை அல்லாஹ் எழுப்பினான். நபியே! இந்த யூதர்கள் இதை என்ன ஆச்சரியமாக பார்க்கிறார்கள்? அல்லாஹ்வுக்கு இது சிரமமானதா? இதைவிட மிகப் பெரிய ஆச்சரியங்களை அல்லாஹு தஆலா படைத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய படைப்புகளில் இதைவிட மிகப்பெரிய ஆச்சரியமான படைப்பு இருக்கிறது. 
 
அல்லாஹு தஆலா நம்மிடத்திலே கேட்கும் பொழுது;
 
اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْـكَهْفِ وَالرَّقِيْمِۙ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا‏
 
நிச்சயமாக குகை வாசிகளும் கற்பலகையில் பெயர்கள் எழுதப்பட்டோரும் நம் அத்தாட்சிகளில் ஓர் அற்புதமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீரா? (அல்குர்ஆன் 18:9)
 
நபியே! அந்த குகைவாசிகள் குகைவாசிகள் எழுதப்பட்டிருந்த அந்த பலகை இவர்கள் நம்முடைய  அத்தாட்சிகளில் ஒரு ஆச்சரியமான அத்தாட்சி என்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? அல்லாஹு தஆலா உடைய வல்லமையை புரிய வேண்டும். ஆற்றலை புரிய வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய ஆற்றலை புரியும்போது அல்லாஹ்வுடைய சக்தியில் எதுவும் ஆச்சரியமானதல்ல. ஆச்சரியம் நமக்கு எப்போது வரும்? ஒருவரால் ஒரு காரியத்தை செய்ய முடியாமல் இருந்து செய்துவிட்டால் ஆச்சரியப்படலாம். ஒருவர் தன்னுடைய சக்திக்கு மீறி ஒரு காரியத்தை செய்யும் போது  அற்புதம் செய்து விட்டால் பெரிய ஆச்சரியமாய் இருக்கிறது. நீங்களா இப்படி செய்தீர்கள் என்று? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! உயிரே இல்லாத ஒன்றுக்கு உயிரை கொடுக்கக் கூடியவன் அல்லாஹ். எதுவுமே இல்லாமல் இருக்கின்ற நிலையில் எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் பெற்றவன் அல்லாஹு தஆலா. 
 
ஒரு துணி தண்ணீரில் இருந்து ஒரு பெரிய உருவத்தை உயிருள்ள ஒரு படைப்பை படைக்க கூடியவன் அல்லாஹுதஆலா, வானங்களை தூணில்லாமல் நிறுத்தியவன் அல்லாஹுதஆலா, கடலைப் படைத்தவன் அல்லாஹுதஆலா, மலைகளைப் படைத்தவன் அல்லாஹுதஆலா, வானத்திற்கும் பூமிக்கும் இடையிலே மேகங்களை நிறுத்தியவன் அல்லாஹு தஆலா. 
 
ஒரு சின்ன மேகத்தினுடைய கணம் எத்தனையோ லட்சம் டன்கள் ஒரு சிறிய ஒரு மேகம் வானத்திலே மிதந்து கொண்டிருக்கிறதே! 
 
 وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ 
 
வானத்திற்கும் பூமிக்கும் இடையில் வசப்படுத்தபட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றதே அந்த மேகத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சி இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:164)
 
பல லட்சம் டன்கள் தண்ணீரை சுமந்து இருக்கக்கூடிய மேகம் அதற்குள் சென்றால் தண்ணீரை பார்க்க முடியாது. அல்லாஹ் அதைப் பொழிகிறான். அல்லாஹு தஆலா மலக்குகளை கொண்டு அந்த மேகத்தை பிழியும்போது அந்த மேகம் அப்படியோ கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. 
 
ஒரு விதையை நீங்கள் பூமியிலே விதைக்கின்றீர்கள். அதிலிருந்து எத்தனை லட்சம் கனிகளை ஒவ்வொரு ஆண்டும் அல்லாஹு தஆலா உங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கின்றான்!  யாருடைய சக்தி இது? அதற்கு அந்த மரத்திற்கு சக்தி இருக்கிறதா? அல்லாஹ்வுடைய ஆற்றலால் அது வெளிப்படுகின்றது. 
 
அல்லாஹ் கேட்கிறான்; நபி ஆச்சரியப்படாதீர்கள்! அந்த வரலாறு உண்மை. அந்த வரலாறை நாம் உங்களுக்கு சொல்லிக் காட்டுவோம். ஏன் அந்த நிகழ்வு நடந்தது? என்பதை நாம் உங்களுக்கு கற்றுக் கொடுப்போம் என்ற அல்லாஹுதஆலா சொல்லிவிட்டு; 
 
اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْـكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏
 
அவ்வாலிபர்கள் குகையின் பக்கம் ஒதுங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! இன்னும், எங்கள் காரியத்தில் (நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று) எங்களுக்கு நல்லறிவை(யும் நல் வழியையும்) ஏற்படுத்திக் கொடு!” (அல்குர்ஆன் 18:10)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; அவர்கள் ஒரு வாலிபக் கூட்டம் ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் காலத்திற்குப் பிறகு சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த ரோமர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாய மக்களை கொடுமை செய்தார்கள். தங்களது ஆட்சியை விரிவுபடுத்த எங்கெல்லாம் போர் தொடுத்தார்களோ அங்கே இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்த ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்தக் கூட்டத்தாரை அவர்கள் கொடுமை செய்தார்கள். சிலை வணக்கத்தின் பக்கம் அழைத்தார்கள். யார் சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களைக் கொன்று குவித்தார்கள்.
 
அப்படி இருக்கும் போதுதான் அந்த வாலிபர்கள் அல்லாஹ்வை பயந்தவர்களாக, தங்களது உயிரை விட அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மதித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு ஆட்சி வேண்டாம், அதிகாரம் வேண்டாம். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் இருந்த மிகப்பெரிய செல்வந்தர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் பிள்ளைகளாக இருந்தார்கள்.
 
அவர்கள் நினைத்திருந்தால் அந்த ரோம பேரரசுடன் சேர்ந்து, ஷிர்கிலே மூழ்கி, தங்களுடைய ஆட்சியையும் பதவிகளையும் தக்க வைத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினார்கள்.
 
அந்த வாலிபர்கள் குகையில் ஒதுங்கிக் கொண்டார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்
 
அவர்கள் முதலாவதாக என்ன செய்தார்கள்? தாவா கொடுத்தார்கள். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: அவர்கள் மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள், அல்லாஹ்விடத்திலே சரணடைந்தார்கள்.
 
துஆ — அல்லாஹ்விடத்தில் முழு நம்பிக்கையோடு கேட்பது போல், மிகப்பெரிய ஆற்றலும், மிகப்பெரிய சக்தியும் வேறு எதுவுமில்லை.
 
இங்கே மனிதர்களுடைய உதவிகள் எல்லாம் நின்று விடும் இடத்தில்தான், அல்லாஹ்வுடைய உதவி ஆரம்பமாகிறது.
 
எங்கே நாம் “யாரும் இல்லை” என்று நினைக்கிறோமோ, அங்கே அல்லாஹு தஆலா நமக்காக இருக்கின்றான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அந்த யகீனோடு (உறுதியான நம்பிக்கையோடு) துஆ கேட்க வேண்டும்.
 
அல்லாஹ்விடத்தில் நம்பிக்கையோடு துஆ கேட்ட யாரையும் அல்லாஹ் ஒருபோதும் நிராசையாக்க மாட்டான். இந்த மகத்தான படிப்பினையை அல்லாஹு தஆலா இந்த இடத்தில் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
 
فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً 
 
அவர்கள் அல்லாஹ்விடத்திலே சொன்னார்கள். எங்கள் இறைவா! உன் புறத்திலிருந்து எங்களுக்கு ரஹ்மத் - கருணையை தா, எங்களுக்கு இரட்சிப்பை தா, எங்களை பாதுகாத்திடு! இந்த கொடிய அரசரிடமிருந்து. (அல்குர்ஆன் 18:10)
 
எங்களுக்கு பதவி வேண்டாம். செல்வம் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டோம். எங்களுக்கு எங்களது காரியத்திலே நேர்வழியை காட்டு. உண்மையை எங்களுக்கு புரியவை! எங்களுக்கு நல்லறிவை ஏற்படுத்தி கொடு!
 
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான்;
 
فَضَرَبْنَا عَلٰٓى اٰذَانِهِمْ فِى الْـكَهْفِ سِنِيْنَ عَدَدًا ۙ‏
 
அந்தக் குகையில் அவர்கள் ஒதுங்கிய போது அவர்களை நாம் தூங்க வைத்து விட்டோம் பல ஆண்டுகள் அந்த குகையிலே அவர்களை தூங்க வைத்தோம். (அல்குர்ஆன் 18:11)
 
ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَىُّ الْحِزْبَيْنِ اَحْصٰى لِمَا لَبِثُوْۤا اَمَدًا‏
 
பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை நாம் உயிர்ப்பித்தோம். இரு கருத்து வேற்றுமை கொண்ட இரண்டு கூட்டங்களில் அவர்கள் தங்கியிருந்த அந்த காலத்தை யார் சரியாக கணக்கிடுகிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக. (அல்குர்ஆன் 18:12)
 
இது அவர்களைப் பற்றிய ஒரு வரலாற்று சுருக்கம். பிறகு, அல்லாஹ் சொல்கின்றான்;
 
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌ 
 
நபியே! அவர்களின் வரலாற்றை உங்களுக்கு உண்மையோடு  நாம் உரைக்கிறோம். (அல்குர்ஆன் 18:13)
 
அல்லாஹு தஆலா ஒரு கூட்டத்தின் வரலாறை இவ்வளவு பெருமையாக பேசுகிறான் என்றால் இந்த பெருமை ஏனென்று? இந்த கண்ணியம் ஏனென்று ? சிந்தித்துப் பார்த்தீர்களா?
 
ஒரு நபிக்கு, ஒரு இறைத்தூதருக்கு, மகத்தான ஒரு இறைதூதருக்கு, அதிலும் இறைத்தூதர்களுக்கெல்லாம் இமாமாக அனுப்பப்பட்ட இறைத்தூதருக்கு, அல்லாஹ்விடத்திலே அர்ஷிலே கண்ணியப்படுத்தப்பட்ட அந்த இறைதூதருக்கு, குர்ஆனை கொண்டு கண்ணியப்படுத்தப்பட்ட அந்த இறைதூதருக்கு அல்லாஹ் சொல்லுகின்றான்; 
 
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌
 
நபியே! உங்களுக்கு நாம் இப்போது ஒரு வரலாறை சொல்லப் போகிறோம். அவர்களின் உண்மையான செய்தியை வரலாறாக உங்களுக்கு சொல்லப் போகிறோம். எந்த விதமான மாற்றமும் இல்லாமல் சத்தியமாக உண்மையாக.
 
அன்பு சகோதரர்களே! நீங்கள் சிந்தித்து பாருங்கள்! பல முறை உங்களுக்கு நினைவூட்டப்பட்ட ஒன்று. நாம் நமக்கு மட்டும் ஒரு முஃமினாக இறை அடியானாக வாழ்வது, அது அல்லாஹ்விடத்திலே பெரியதல்ல. அது ஒரு வகையில் மிகப்பெரிய ஒரு தவ்ஃபீக் தான். மாற்று கருத்து கிடையாது. 
 
நீங்கள் தொழுகையாளியாக இருப்பது, நீங்கள் ஷிர்க் செய்யாமல் இருப்பது, நீங்கள் ஒழுக்கமானவராக இருப்பது, நீங்கள் நியாயவானாக இருப்பது. அதே நேரத்தில் நீங்கள் ஷிர்க் செய்யாமல் இருப்பதோடு ஷிர்க் செய்பவர்களை தடுக்கின்றீர்கள் அல்லவா?
 
நீங்கள் ஒரு ஏகத்துவவாதியாக இருந்து கொண்டு ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள் அல்லவா? அது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது.
 
நீங்கள் இப்போது வரலாறாக மாற்றப்படுவீர்கள். நீங்கள் அல்லாஹ்வுக்காக தியாகம்‌ செய்யும்போது நீங்கள் வரலாறாக மாற்றப்படுவீர்கள். நீங்கள் இபாதத் செய்கிறீர்கள் என்றால் அதிலே ஒரு பக்கம் அல்லாஹ்வுக்காக என்றும் இருக்கும். இன்னொரு பக்கம், உங்களுக்காகவும் என்று இருக்கும். 
 
அன்பு சகோதரர்களே!  எப்போது நீங்கள் தாவாவிற்கு வருகிறீர்களோ, அழைப்பு பணிக்கு வருகின்றீர்களோ அல்லாஹ்வுக்காக, நான் நம்பிக்கை கொண்ட என் ரப்பின் பக்கம் நான் அவனுடைய அடியார்களை அழைப்பேன் என்று, அப்போது அல்லாஹுதஆலா உங்களை ஏற்றுக் கொள்கிறான். உங்களை உயர்த்துகின்றான். உங்களை கண்ணியப்படுத்துகின்றான்.
 
உங்கள் மீது உங்களுடைய இபாதத்தின் காரணமாக அவன் கொண்டிருந்த அன்புக்கு மேலாக விசேஷமான ஒரு அன்பை அல்லாஹு தஆலா போடுகின்றான். இபாதத்தின் மூலமாக உங்களுக்கு என்ன ஒரு அன்பு, அருள் அல்லாஹ்விடம் கிடைத்து கொண்டிருந்ததோ அந்த அன்புக்கு மேலாக ஒரு அன்பை விசேஷமான அல்லாஹ்வுடைய அருளை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கின்றான் நீங்கள் தாவா செய்யும்போது. 
 
அல்லாஹு தஆலா இவ்வளவு பெருமையாக அந்த முஃமின்களை சொல்கிறான் என்றால்;
 
اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى‌‏
 
அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு வாலிப கூட்டம் அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தோம். அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம். (அல்குர்ஆன் 18:13)
 
اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا‌ لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا‏
 
அவர்கள் (தங்கள் சமுதாயத்தின் முன்) நின்றவர்களாக, “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனே எங்கள் இறைவன். அவனையன்றி வேறு ஒரு கடவுளை அழைக்கவே மாட்டோம். (அவ்வாறு நாங்கள் வேறு கடவுளை வணங்கி விட்டால்) அப்போது, எல்லை மீறிய பொய்யை திட்டவட்டமாக கூறி விடுவோம்” என்று அவர்கள் கூறியபோது அவர்களுடைய உள்ளங்களை (இறை நம்பிக்கையில்) உறுதிபடுத்தினோம். (அல்குர்ஆன் 18:14)
 
தங்களது சமுதாய மக்கள், முஷிரிக்குகள்! ஷிர்க் செய்யவில்லை என்றால் கொன்று விடுவார்களோ அப்படிப்பட்ட கொடிய முஷ்ரிக்குகள். அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு அவர்கள் சொன்னார்கள்; 
 
எங்களது ரப்பு இந்த சிலைகள் அல்ல. எங்களது ரப்பு வானங்களுடைய ரப்பாக இருக்கின்றான்‌. எங்களுடைய ரப்பு பூமியின் ரப்பாக இருக்கின்றான். அவனைத் தவிர ஒரு தெய்வத்தை நாங்கள் அழைக்கவே மாட்டோம், வணங்கவே மாட்டோம். அப்படி நாங்கள் செய்துவிட்டால் மிகப்பெரிய அநியாயத்தை செய்துவிடுவோம் என்று அந்த மக்களுக்கு சொல்லிவிட்டு எங்கள் சமுதாய மக்களே!
 
هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً‌  
 
அவனை விட்டுவிட்டு பல தெய்வங்களை எடுத்து வணங்கிக் கொண்டிருக்கிறீர்களே? (அல்குர்ஆன் 18:15)  
 
هَؤُلَاءِ قَوْمُنَا اتَّخَذُوا مِنْ دُونِهِ آلِهَةً لَوْلَا يَأْتُونَ عَلَيْهِمْ بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا
 
“எங்கள் சமுதாயமாகிய இவர்கள், அவனையன்றி வேறு  பல கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் விஷயத்தில் (அவை எல்லாம் கடவுள்கள்தான் என்பதை நிரூபிக்க) தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மகா தீயவன் யார்?”
 
எப்பேர்ப்பட்ட தாவா கொடுத்தார்! சகோதரர்களே! இன்று நம்முடைய நிலையை நினைத்து பாருங்கள். அதிகார வர்க்கத்திற்கு முன்னால் தாவா கொடுத்தார்கள் மூஸா நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம். அதுவும் எப்படிப்பட்ட அதிகார வர்க்கம்! எதிர்ப்பவர்களை கொன்று விடுவார்கள்.
 
எதிர்ப்பவர்கள் என்றால் ஆட்சியில் எதிர்ப்பவர்களை அல்ல. எதிர் கருத்து உள்ளவர்களையே கொன்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளனக்கு முன்பாக நின்று கொண்டு தாவா செய்தார்கள். இன்று நாமோ தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு, நமது நண்பர்களுக்கு, நம்மோடு அறிமுகமானவர்களுக்கு கூட அல்லாஹ்வை சொல்வதிலே வெட்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்றால்! நாம் தொழுகையால் ஒரு பக்கம் அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கும் போது தாவா செய்யாததால் அல்லாஹ்விடமிருந்து எவ்வளவு தூரமாக இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்!
 
அடுத்து அல்லாஹு தஆலா அவர்களின் வரலாறுகளை அப்படியே தொடர்ந்து சொல்லிக் கொண்டு செல்கிறான். அவர்கள் சிலை வணக்கத்தை விட்டு சிலை வணக்கம் செய்யக்கூடிய மக்களை விட்டு விலகும் போது அல்லாஹு தஆலா அவர்களுக்கு மனதிலே போட்டான்;
 
நீங்கள் ஒதுங்கி விடுங்கள்; இனிமேல் இந்த மக்களுக்கு தாவா செய்து பலன் இல்லை என்று. அப்போது அந்த மக்கள் குகையை நோக்கி ஒதுங்கினார்கள். 
 
அதற்குப் பிறகுள்ள வரலாறை அல்லாஹு தஆலா சொல்கின்றான். இன் ஷா அல்லாஹ் அடுத்த ஜுமுஆவிலே பார்ப்போம். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் ஈமானை, யக்கீனை, தந்தருள்வானாக! அல்லாஹ்விற்காக வாழ்ந்து அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் உறுதியாக இருந்து அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூடியவர்களாக உலக மக்களுக்கு குர்ஆனின் ஏகத்துவ செய்தியை மறுமை செய்தியை சொர்க்க நரகத்தின் செய்திகளை எடுத்துச் சொல்லக்கூடிய அழைப்பாளர்களாக அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் ஏற்று அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/