குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 2 | Tamil Bayan - 1006
குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 2
ஜுமுஆ குத்பா தலைப்பு : குகைவாசிகளின் வரலாறு பாடங்கள் படிப்பினைகள் அமர்வு 2
வரிசை : 1006
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 17-10-2025 | 25-04-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவைப் போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் அவர்களுடைய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்;
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பையும் நேர்வழியையும் வேண்டியவனாகவும், உளத்தூய்மை இஹ்லாஸையும் பரிசுத்தமான பாவமன்னிப்பை தவ்பாவையும் வேண்டியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை (தக்வாவை) உபதேசம் செய்தவனாகவும் இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு தஆலா நம்மை மன்னித்து அருள்வானாக! நம்முடைய மீளும் இடத்தை சொர்க்கமாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் இந்த ஜுமுஆ தினத்திற்கு கொடுத்த முக்கியத்துவங்களில் ஒன்றாக, இந்த ஜுமுஆ நாளில் ஸூரத்துல் கஹ்ஃபை ஓதுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
இந்த ஸூரத்துல் கஹ்ஃப், பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டுவதன் மூலம், அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையையும், மறுமை நாளின் மீது உள்ள நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள ஈமான், மறுமை நாளில் நடைபெறவிருக்கும் விசாரணை நாளின் மீதுள்ள நம்பிக்கை—இவை ஈமானின் மிக முக்கியமான அம்சங்களாகும்.
மறுமை நாளின் நம்பிக்கை உள்ளத்தில் எந்த அளவு உறுதியாகவும் ஆழமாகவும் பதியுமோ, அந்த அளவிற்கு தான் நாம் அல்லாஹ்வுடைய கட்டளைகளைப் பின்பற்றக் கூடியவர்களாக இருப்போம். அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகிக் கொள்பவர்களாக இருப்போம். சோதனைகளின் போது உறுதியுடன் நிலைத்திருக்கக் கூடியவர்களாக இருப்போம்.
ஆனால், மறுமை நம்பிக்கை பலவீனமாக இருக்கும் ஒரு அடியான் சோதனைகளைப் பார்த்து பயந்து விடுவான். யாருடைய உள்ளத்தில் மறுமை நம்பிக்கை உறுதியில்லையோ, அவர்கள் சிரமங்களையும் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அல்லாஹ்வை குறை கூறுவார்கள், விதியை பழி சொல்லக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள். தடுமாறி விடுவார்கள்.
மேலும், அந்த நம்பிக்கை தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டே சென்றால், சிலர் தற்கொலை வரை செல்வார்கள்; அல்லது ஈமானை விட்டு, இஸ்லாமை விட்டு வெளியேறிவிடும் நிலைக்கும் சென்று விடுவார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!
அல்லாஹ்வின் அடியார்களே! ஆகவேதான் அல்குர்ஆன் மறுமை நம்பிக்கையை ஸஹாபாக்களின் உள்ளத்திலே உறுதிப்படுத்தியது. அத்தகைய மகத்தான சம்பவங்களில் ஒன்றுதான் ஸூரத்துல் கஹ்ஃபிலே அல்லாஹு தஆலா கூறி இருக்கக்கூடிய அந்த குகைவாசிகளின் சம்பவம். அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட வாலிபர்களாக இருந்தார்கள்.
اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى
நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்கள். இன்னும், அவர்களுக்கு (நம்பிக்கை என்னும்) நேர்வழியை அதிகப்படுத்தினோம். (அல்குர்ஆன் 18:13)
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! அவர்களுக்கு தங்களைப் பற்றி அல்லாஹு தஆலா இப்படி மகத்தான ஒரு வேதத்தில் நினைவு கூர்வான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவோ நினைத்து பார்த்திருக்கவோ மாட்டார்கள்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். நம்மை அல்லாஹ் அறிந்தால் போதும் என்று இருங்கள். மக்கள் உங்களை அறிய வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். உங்களின் அமல்களை உங்களின் தர்மத்தை உங்களுடைய நோன்பை உங்களுடைய மனத்தூய்மையை நல்ல எண்ணங்களை அல்லாஹ் அறிந்தால் போதும். கூலிக் கொடுப்பவனும் ஏற்றுக்கொள்பவனும் அல்லாஹு தஆலா மட்டுமே.
அந்த ரப்பு நம்மை தக்வா உள்ளவர்களாக நல்ல இறையச்சம் உள்ளவர்களாக நன்மை உள்ளவர்களாக ஏற்றுக்கொண்டால் போதும். மக்கள் நம்மை ஏற்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் முயற்சி செய்யக் கூடாது. அந்த முயற்சி வீணான முயற்சி.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
من التمس رِضا اللهِ بسخَطِ الناسِ ؛ رضِيَ اللهُ عنه ، وأرْضى عنه الناسَ ، ومن التَمس رضا الناسِ بسخَطِ اللهِ ، سخِط اللهُ عليه ، وأسخَط عليه الناسَ
யார் அல்லாஹ்வுடைய திருப்திக்காக மக்களை அதிருப்தி அடையச் செய்வாரோ அல்லாஹ் அந்த அடியாரைக் கொண்டு திருப்தி அடைவான். அல்லாஹ் மக்களையும் அவர்களை கொண்டு திருப்தி அடைய செய்வான். (இன்று இல்லை என்றாலும் நாளை நல்லவர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள்)
யார் அல்லாஹ்வை அதிருப்தி அடையச் செய்து அல்லாஹ்வை கோபப்பட செய்து, மக்களை திருப்திப்படுத்துவாரோ அல்லாஹ்வும் அந்த அடியார் மீது வெறுப்படைந்து விடுவான். கோபப்பட்டு விடுவான். மக்களையும் அல்லாஹு தஆலா கோபப்படுத்தி விடுவான். அல்லாஹ்வுடைய திருப்திக்காக மக்களை அதிருப்தி அடைய செய்தவர்கள் மக்களால் ஏற்படும் சிரமங்களை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாக்க போதுமானவன்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 2414.
இதுதான் குர்ஆன் சொல்லி கொடுக்கக்கூடிய பாடம், இஹ்லாஸ் - மனத்தூய்மை. இந்த மனத்தூய்மை இந்த வாலிபர்களிடத்திலே இருந்தது. எங்கோ ஒரு பகுதியிலே வாழ்ந்த இந்த ஈமான் உள்ளவர்கள் அல்லாஹ்வுக்காக செய்த அந்த தியாகம்.
தங்களுடைய சமூக மக்களே ஷிர்க்கிலே சென்று கொண்டிருக்கும்போது அவர்களை விட்டு விலகினார்கள். ஒதுங்கினார்கள். அவர்களுக்கு தாவா கொடுத்தார்கள். அல்லாஹ்வின் உடைய தவ்ஹீதின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், அந்த மக்கள் ஏற்க மறுத்தார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களுடைய அரசன் அந்த தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்களை துன்புறுத்தினான். அந்தத் துன்புறுத்தலையும் சகித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இனி இவர்களுக்கு இந்த தாவாவினால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அறிந்தபோது அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க்கையை விட்டு அரசர்கள் அரசரின் மந்திரிகளின் பிள்ளைகளாக இருந்தவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த தலைவர்களாக மதிக்கப்பட்டவர்கள், இந்த ஈமானுக்காக இஸ்லாமுக்காக தவ்ஹீதுக்காக அவர்கள் தங்களது சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார்கள்.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்;
وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا
(அவர்களில் சிலர் மற்றவர்களை நோக்கி கூறினார்கள்:) “(சிலைகளை வணங்குகின்ற) அவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நீங்கள் விலகி செல்லும்போது (உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக) குகையின் பக்கம் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு தன் அருளிலிருந்து (தேவையான வாழ்வாதாரத்தை) விரிவாக்கிக் கொடுப்பான். இன்னும் உங்கள் காரியத்தில் இலகுவை உங்களுக்கு ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 18:16)
அன்பு சகோதரர்களே! இவர்களுடைய ஆரம்ப துஆவை அல்லாஹு தஆலா நமக்கு முதலாவதாக நினைவு படுத்தினான். ஒரு முஃமின் - ஒரு இறை நம்பிக்கையாளருடைய மிகப்பெரிய ஆயுதம் அவனுடைய துஆ.
இந்த துஆ என்பது அல்லாஹ்வோடு நம்மை பிணைத்து வைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய உறுதியான ஒரு சங்கிலி, கயிறு. அல்லாஹ்வுடைய நம்பிக்கை ஒரு அடியானுடைய உள்ளத்தில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்குமோ அந்த அளவு துஆ கேட்டுக் கொண்டே இருப்பான். அல்லாஹ் நம்மை அறிந்திருந்தால் போதும். நாம் என்ன அவனிடத்திலே கேட்பது என்று சிலர் நினைப்பார்கள்; நாம் ஏன் அல்லாஹ்விடத்திலே கேட்க வேண்டும். அல்லாஹ்விற்கு தெரியாதா? நமக்கு எதை கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்க கூடாது? என்று இப்படியும் சிலர் நினைப்பார்கள்.
இவர்கள் முட்டாள்கள். ஜாஹில்கள் - மார்க்கத்தை அறியாதவர்கள். அல்லாஹு தஆலா அவனுடைய அடியான் அவனிடத்திலே கேட்க வேண்டும்; அழ வேண்டும்; மன்றாட வேண்டும்; கெஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுகிறான். சொர்க்கத்தைக் கேட்டு மன்றாட வேண்டும். நன்மைகளைக் கேட்டு மன்றாட வேண்டும். நம்முடைய ரிஸ்கை அல்லாஹ்விடத்தில் கேட்டு மன்றாட வேண்டும். ஹலால் ஆன வாழ்வை ஹலாலான ரிஸ்க்கை அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும். சிரமத்தில் இருந்து தீர்வை ஆஃபியத்தை அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும். துஆ இது நபிமார்களின் வழிமுறை. துஆ இது நல்லவர்களின் வழிமுறை.
அல்லாஹு தஆலா அந்த குகைவாசிகள் அஸ்ஹாபுல் கஹ்ஃபை ஏன் நேசித்தான்? எந்த அன்பை நபிமார்கள் மீது ரஸூல்மார்களின் மீது அல்லாஹ் வெளிப்படுத்துவானோ, அப்பேர்ப்பட்ட ஒரு அன்பை, நம்மை போன்ற சாதாரணமான அடியார்கள் மீதும் அல்லாஹ் வெளிப்படுத்துவான் என்பதற்குரிய மாபெரும் அத்தாட்சி தான் இந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் உடைய சம்பவம்.
அவர்களும் நம்மைப் போன்ற வாலிபர்கள்தான். ஆனால் அவர்கள் அல்லாஹ்வுடைய தொடர்பில் உறுதியாக இருந்தார்கள் என்பதை அல்லாஹ் நினைவு படுத்துகிறான். அவர்களுடைய துஆவை நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான். தங்களுடைய பிரச்சனை இப்போது முத்தப் போகிறது; நாம் மிகப்பெரிய ஓர் எதிர்ப்பை சம்பாதிக்க போகிறோம்; மிகப்பெரிய ஒரு சோதனை நமக்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நல்லடியார்கள். முதலாவதாக அல்லாஹ்விடத்தில் தங்களை ஒப்படைத்தார்கள்.
رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! இன்னும், எங்கள் காரியத்தில் (நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று) எங்களுக்கு நல்லறிவை(யும் நல் வழியையும்) ஏற்படுத்திக் கொடு!” (அல்குர்ஆன் 18:10)
எத்தகைய மகத்தான துஆ பாருங்கள்! யா அல்லாஹ்! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ரஹ்மத்தை கொடுப்பாயாக! அருளை கருணையை கொடுப்பாயாக! எங்களுக்கு எங்கள் காரியத்தில் ஒரு நல்ல வழியை ஒரு தெளிவான பாதையை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பாயாக! என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள்.
இந்த துஆ அல்லாஹ்விடத்திலே ஏற்கப்படுகிறது. அல்லாஹு தஆலா அவர்களை ஒதுங்க வைத்தான். ரப்புல் ஆலமின் பிரியப்பட்டான். மறுமை நாள் நிகழப்போவது உண்மை; இறந்தவர்களை அல்லாஹ் உயிர்பிப்பான் என்பதை கண்கூடாக காட்டுவதற்காக அத்தாட்சியாக அல்லாஹு தஆலா அவர்களை தேர்ந்தெடுத்தான். எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம் பாருங்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு அடியான் அல்லாஹ்விற்காக தன்னை மாற்றிக்கொள்ளும் போது அல்லாஹ் மட்டுமே அவனுக்கு நோக்கமாக ஆகிவிடும்போது மறுமை நம்பிக்கை அவனுக்கு உறுதியாகி விடும்போது தன்னை இழப்பதையே தன்னை தியாகம் செய்வதையே அவன் தன்னை தியாகம் செய்வதற்கே துணிந்து விடும்போது ரப்புல் ஆலமீன் அவனுக்கு எப்பேர்பட்ட அங்கீகாரத்தை கொடுக்கிறான்.
அங்கீகாரம் என்பது அல்லாஹ் கொடுக்கக்கூடியது. நாளை மறுமையில் அல்லாஹ் அங்கீகரிக்க கூடிய ஒரு மனிதன், நற்பேறு பெற்றவனாகிறான். மனிதர்கள் ஒருவரை அங்கீகரிப்பதால் புறக்கணிப்பதால் அது அல்லாஹ்வுடைய அங்கீகாரமாக ஆகிவிடாது.
சில நேரங்களில் மனிதர்கள் தங்களுடைய ஆசைகளுக்காக ஒருவரை அங்கீகரிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம். நாம் அல்லாஹுவுக்காக சோதிக்கப்படுகிறோமா? ரப்புக்காக அவமானத்தை தாங்கிக் கொள்கிறோமா? உண்மைக்காக ஈமானுக்காக இந்த சோதனையை எதிர்கொள்கிறோமா? அல்லது நம்முடைய நஃப்ஸுக்காகவா?
நபிமார்கள் பரிகாசிக்கப்படவில்லையா? எத்தனை குர்ஆன் வசனங்கள்! நபியைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான்.
وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டுள்ளனர். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். (அல்குர்ஆன் 35:4)
அவர்கள் உங்களை பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னால் வந்த தூதர்கள் பொய்ப்பிக்க படவில்லையா? இவர்கள் உங்களை பரிகாசம் செய்தால் உங்களுக்கு முன்னால் வந்த தூதர்களை கேலி கிண்டல் பரிகாசம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா இந்த மக்களுடைய வரலாற்றை நமக்கு எடுத்துச் சொல்கிறான். அவர்களை அல்லாஹு தஆலா ஒதுங்க வைத்தான். அவர்கள் இனி இந்த மக்களோடு இருந்தால் நம்மை ஈமானில் இருந்து தடம் புரளச் செய்வார்கள் என்பதற்காக இந்த வாழ்க்கை சுகபோகமான வாழ்வை உதறி தள்ளுகின்றனர். ஒரு அரச குடும்பத்தில் ஒரு மந்திரி குடும்பத்தில் வாழுகின்றவர்கள் எப்படிப்பட்ட வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்!
அதை எல்லாம் விட்டுவிட்டு அல்லாஹ்விற்காக வேண்டி ஒரு குகையை நோக்கி ஓடினார்கள். அல்லாஹு தஆலா அவர்களை தூங்க வைத்தான். பிறகு நீண்ட காலம் சென்று அல்லாஹு தஆலா அவர்களை விழிக்க வைத்தான். அதற்கிடையிலே ஒரு நிகழ்வு வருகிறது.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அல்குர்ஆனிலே அந்த வரலாற்றின் ஒரு சம்பவத்தை நமக்கு கூறாவிட்டால் நாம் அதையும் அறிந்திருக்க மாட்டோம்.
وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا
இன்னும், அவர்களோ உறங்குபவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை விழித்திருப்பவர்களாக கருதுவீர். மேலும், (அவர்களின் உடல்களை மண் தின்றுவிடாமல் இருக்க) அவர்களை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் புரட்டுகிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு குடங்கைகளையும் முற்றத்தில் விரித்து (உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்களை எட்டிப்பார்த்தால் அவர்களை விட்டுத் திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும், உமது உள்ளம் அவர்களின் பயத்தால் நிரப்பப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 18:18)
வசனத்தின் விளக்கம் : நபியே! அவர்களுடைய நாய், அது தன்னுடைய இரண்டு குட்டிகளை பிரித்ததாக அந்த குகையின் முற்றத்திலே இருந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அவர்களுடைய நாய் ஒரு நாய் இது அல்குர்ஆனிலே எப்படி சொல்லப்படுகிறது. இதே அத்தியாயத்தில் இரண்டு இடத்தில் அல்லாஹு தஆலா சொல்கிறான். அந்த குகைவாசிகள் 7 நபர்களும் எட்டாவது அவர்களுடைய நாய் என்று.
குர்ஆனின் விரிவுரையாளர்கள் இதுகுறித்து பல விளக்கங்களை கூறுகின்றார்கள்; இந்த குகைவாசிகள், தங்களுடைய ஊரிலிருந்து எங்கேயாவது தப்பித்து விடலாம் என்று எண்ணி, மலையை நோக்கி ஓடியபோது, அந்த வழியில் ஒரு நாய் அவர்களைப் பார்த்து குரைக்கிறது.
நாயின் குரைப்பிலும் பலவகையான அர்த்தங்கள் உள்ளன. அது அவர்களைப் பார்த்து ஆரவாரம் செய்வது போலவும், அவர்களோடு சேர்ந்து கொள்ள விரும்புவது போலவும் குரைக்கிறது. அவர்களுடன் சேர்ந்து வருவதற்காகவே அது குரைத்தது போல் தெரிகிறது.
ஆனால், அவர்கள் பயந்து கொண்டு அந்த நாயை விரட்டுகின்றார்கள். அப்போது அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அந்த நாயை பேச வைக்கிறான்.
“என்னைப் பயப்படாதீர்கள். நான் உங்களை அச்சுறுத்த மாட்டேன். நான் அல்லாஹ்வுடைய நல்லடியார்களை விரும்புகிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அல்லாஹு தஆலா அந்த நாயை பேச வைத்தான்.
இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அலைஹி பதிவு செய்கின்றார்கள்.
பிறகு அந்த நாயையும் அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அல்லாஹு தஆலா அந்த நாயைத்தான் சொல்லிக் காட்டுகின்றான். அந்த நாய். அந்த குகைவாசிகளுக்கு எப்படிப்பட்ட ஒரு தூக்கத்தை கொடுத்தானோ அப்பேற்பட்ட தூக்கத்தை அந்த நாய்க்கும் கொடுத்து அவர்களோடு சேர்த்து பாதுகாத்தான்.
அறிஞர்கள் சொல்லுகிறார்கள்; யார் நல்லவர்களை நேசிப்பார்களோ அந்த நல்லவர்கள் மீது அல்லாஹ் பொழியக்கூடிய பரக்கத்தை அவர்களும் அடைவார்கள். ஒரு நாய் நல்லவர்களை விரும்பியது; நேசித்தது. அவர்களோடு தாமும் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டது அதை அல்லாஹு தஆலா அவனுடைய குர்ஆனிலே நினைவு கூர்ந்தான்.
இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அலைஹி அவர்கள் இதிலிருந்து சில படிப்பினைகளை சொல்லுகின்றார்கள்; இப்பேற்பட்ட மகத்தான குர்ஆனிலே நல்லதைக் கொண்டு நினைவு கூரப்படக்கூடிய பாக்கியத்தை நாய்க்கு கொடுத்தான் என்றால், அதன் நல்லவர்களோடு சேர்ந்ததால் அல்லாஹ்வுடைய நேசர்களோடு சேர்ந்ததால் கிடைத்தது.
பிறகு சொல்கிறார்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமின்களை, இறை நேசர்களை நல்லவர்களை நேசிக்கும் போது அல்லாஹு தஆலா நமக்கும் அவர்களுடைய நற்ப்பாக்கியங்களை கொடுப்பான் என்ற ஆதரவு இதில் நமக்கு உள்ளது.
அவர்களைப் போன்று அமல் செய்ய முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய பரக்கத்துக்களை நன்மைகளை அல்லாஹு தஆலா நமக்கும் கொடுப்பான் என்று கூறிவிட்டு, ஸஹீஹுல் புகாரியில் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹூ அன்ஹு அவர்கள் மூலமாக வரக்கூடிய ஒரு ஹதீஸை இமாம் குர்துபி பதிவு செய்கிறார்கள்.
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு சொல்லுகின்றார்கள். நானும் ரஸூலுல்லாஹி ﷺ பள்ளியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது நிகழும் என்று.
ரஸூலுல்லாஹி ﷺ கேட்டார்கள். அந்த மறுமை நாளுக்காக நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்? என்று. கேள்வியை கேட்டவுடன் அந்த மனிதர் அப்படியே சோர்ந்து விட்டார். பலவீனம் அடைந்து விட்டார். வெட்கப்பட்டு விட்டார். கூனி குறிகிவிட்டார்.
பிறகு சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! நான் மறுமை நாளுக்காக நிறைய அமல்களை சேர்த்து வைக்கவில்லை நிறைய தொழுகைகளையோ நோன்புகளையோ சதக்காக்களையோ சேர்த்து வைக்கவில்லை. என்றாலும் நான் நிச்சயமாக அல்லாஹ்வை நேசிக்கிறேன். அல்லாஹ்வுடைய ரஸூலை நேசிக்கிறேன் என்று சொன்னார்.
உடனே ரஸூலுல்லாஹி ﷺ அந்த மனிதரைப் பார்த்து, நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களோடு இருப்பாய் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கின்ற அனஸ் சொல்லுகின்றார்கள். இஸ்லாம் எங்களுக்கு கிடைத்ததற்கு பிறகு அல்லாஹ்வுடைய தூதரின் இந்த கூற்றினால் எந்த கூற்று நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களோடு மறுமையில் இருப்பாய் என்ற இந்த சொல்லினால் எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை போன்று வேறு எதற்கும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்ததில்லை என்று சொல்லிவிட்டு அனஸ் சொல்லுகின்றார்கள். (சுப்ஹானல்லாஹ்! யோசித்துப் பாருங்கள்!)
நான் அல்லாஹ்வை நேசிக்கின்றேன். அல்லாஹ்வுடைய ரஸூலை நேசிக்கின்றேன். அபூ பக்ரை நேசிக்கின்றேன். உமரை நேசிக்கின்றேன். நான் ஆசைப்படுகின்றேன்; ஆதரவுவைக்கின்றேன். அவர்களுடன் நானும் இருப்பேன் என்று, நானோ அவர்களுடைய அமல்களைப் போன்று செய்யாமல் இருந்த போதும். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3688.
எப்பேர்ப்பட்ட தோழர் பத்தாண்டுகள் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு பணிவிடை செய்து பெரும்பாலான போர்களிலே கலந்து கொண்டு, ரஸூலுல்லாஹ்விற்கு பணிவிடை செய்வதே வாழ்க்கையின் நோக்கமாக ஆக்கிக் கொண்டு, தங்களை எப்படி சிறுமைப்படுத்தி கொள்கிறார்கள் பாருங்கள். நானும் அவர்களுடைய அமல்களைப் போன்று அமல் செய்யவில்லை என்றாலும், நான் ஆசைப்படுகிறேன். இவர்களை நேசிப்பதால் நானும் இவர்களோடு இருப்பேன் என்று.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இது மிகப்பெரிய ஒரு படிப்பினை. நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்லவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ
முஃமின்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நல்லவர்களோடு இருங்கள் என்று அல்லாஹுதஆலா நமக்கு கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன் 9:119)
நல்லவர்களுடைய நட்பு நமக்கு நன்மையை கொடுத்துக் கொண்டே இருக்கும். நன்மையில் நம்மை பாதுகாத்துக் கொண்டே இருக்கும். கெட்டவர்களுடைய நட்பு நம்மை நமது நன்மையை அழித்துக் கொண்டே இருக்கும். பாவிகளோடு இருக்கக்கூடிய நம்முடைய நட்பு பாவத்தின் மீது நமக்கு உண்டான வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
உங்களுக்கு நன்றாகத் தெரியும். 99 கொலைகளை செய்து, பின்னர் நூறாவது கொலையையும் செய்த ஒரு மனிதர், பெரும் பாவியாக இருந்தபோதும், அல்லாஹ்விடத்தில் தவ்பா கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு பனூ இஸ்ராயீலின் மார்க்க அறிஞர்கள் அளித்த வழிகாட்டல் என்ன?
“நீ இருக்கக்கூடிய இந்த ஊர் பாவிகளின் ஊராக இருக்கிறது. அதிலிருந்து நீ வெளியேறு. வேறு ஒரு ஊரில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அங்கே நீ குடிபெயர்ந்து விடு. அங்கே நீ சென்று தங்கி விடு” என்று அவருக்கு வழிகாட்டினார்.
உடனே அவர் தவ்பா செய்து, அந்த நல்லவர்களின் ஊரை நோக்கி பயணமானார். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்து விட்டார்.
இப்போது ஒருபுறம் இறையருளை பொழியும் ரஹ்மத்துடைய மலக்குகளும் மற்றொரு புறம்; வேதனையை கொண்டுவரும் அதாபுடைய மலக்குகளும் வந்தார்கள். இவருடைய உயிரை யார் கைப்பற்றுவது ? என்று அவர்கள் வாதிட்டார்கள். அப்போது அல்லாஹு தஆலா மூன்றாவது ஒரு மலக்கை நீதிபதியாக அனுப்பினான்.
“அளந்து பாருங்கள். எந்த ஊர் இவருக்கு அருகில் இருக்கிறது?” என்று கட்டளையிட்டான். உண்மையில், நல்லவர்களின் நகரம் தூரமாகவும், பாவிகளின் பூமி அருகிலும் இருந்தது.
ஆனால், நல்லவர்களோடு சேர வேண்டும், அவர்களோடு இணைந்து அல்லாஹ்வை வணங்க வேண்டும், பாவத்திலிருந்து விலக வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவர் நல்லவர்களின் நகர் நோக்கி நடந்ததால், அல்லாஹு தஆலா நல்லவர்களின் பூமிக்கு, “நீ அருகில் வந்து விடு” என்று கட்டளையிட்டான். பாவிகளின் பூமிக்கு, “நீ தூரமாகி விடு” என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அப்போது நல்லவர்களின் பூமியே அருகில் வந்து விட்டது. அதனால் ரஹ்மத்துடைய மலக்குகள் அவருடைய உயிரை எடுத்துச் சென்றார்கள். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3470.
அன்பு சகோதரர்களே! இதுதான் நாமும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களோடு நாமும் சேர வேண்டும். அல்லாஹூ ஸுப்ஹானஹூ வ தஆலா அவர்களுடைய வரலாறை தொடர்ந்து சொல்லும் போது அவர்களுக்கு அல்லாஹு தஆலா விழிப்பை கொடுக்கின்றான். அவர்கள் எழுந்ததற்குப் பிறகு தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا
(நீண்ட காலமாகியும் எவ்வித மாற்றமும் அவர்களில் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாத்த) அவ்வாறே, அவர்கள் தங்களுக்கு மத்தியில் (தாங்கள் தூங்கிய கால அளவைப் பற்றி அவர்களுக்குள்) வினவிக்கேட்டுக் கொள்வதற்காக அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம். “எத்தனை(க் காலம்) தங்கினீர்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். (மற்றவர்கள்) கூறினார்கள்: “ஒரு நாள்; அல்லது, ஒரு நாளின் சில பகுதி தங்கினோம்.”“உங்கள் இறைவன் நீங்கள் தங்கியதை மிக அறிந்தவன். ஆகவே, உங்களில் ஒருவரை உங்கள் வெள்ளி நாணயமாகிய இதைக் கொண்டு பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர் அதில் மிக சுத்தமான (-ஹலாலான) உணவை விற்பவர் யார் என்று கவனித்து அவரிடமிருந்து உங்களுக்கு ஓர் உணவைக் கொண்டு வரட்டும். இன்னும், அவர் மதிநுட்பமாக நடக்கட்டும். மேலும், உங்களைப் பற்றி (நகரத்தில் எவர்) ஒருவருக்கும் உணர்த்திவிட வேண்டாம்” என்று(ம்) அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 18:19)
கருத்து : இறந்ததற்குப் பிறகு கேட்கிறார்கள்; நீங்கள் எவ்வளவு காலம் தூங்கி இருப்பீர்கள்? என்று சிலர் கேட்க, என்ன? நாம் ஒருநாள் அல்லது நாளின் ஒரு பகுதி தூங்கி இருப்போம் என்று சொன்னார்கள் பிறகு சொன்னார்கள்; நிலைமை என்னவோ மாறி இருக்கிறது. நாம் எவ்வளவு தூங்கி இருப்போம் என்பதை அல்லாஹ் அறிந்தவன் என்று சொன்னார்கள். சரி பசிக்கிறது உணவு வாங்குவதற்காக யாரையாவது ஒருவரை அனுப்புங்கள் என்று சொன்னார்கள்
அன்பு சகோதரர்களே! அந்த இடத்திலே அவர்கள் சொல்லிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِىْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا
நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களை ஏசுவார்கள்; (அல்லது, கொன்று விடுவார்கள்;) அல்லது, உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் ஒருபோதும் நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள். (அல்குர்ஆன் 18:20)
இந்த இரண்டு வசனங்களும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய வசனங்கள். உணவு வாங்குவதற்காக அனுப்பும்போது சொல்லி அனுப்புகின்றார்கள். ஹலாலான உணவை தேடி நீங்கள் வாங்கி வாருங்கள் என்று. எவ்வளவு பயந்து இருப்பார்கள் பாருங்கள்.
அங்கே நீங்கள் சொல்லும்போது கவனமாக சொல்லுங்கள்! யாரும் உங்களை பார்த்து விடாமல் இருக்க வேண்டும். உங்களை பார்த்து விட்டால் உங்களை கைது செய்து விடுவார்கள். உங்களை மீண்டும் சிலை வணக்கத்தில் சேர்த்து விடுவார்கள். உங்களை தங்களுடைய குஃப்ரின் ஷிர்க்கிலே தள்ளி விடுவார்கள். அப்படி நீங்கள் அவர்களுடைய அடிகளுக்கு அவர்களுடைய அந்த கொடுமைகளுக்கு பயந்து ஷிர்க்கிலே சென்றுவிட்டால்,
وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا
ஒரு போதும் நீங்கள் வெற்றி அடைய முடியாது என்று அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உபதேசம் செய்து உணவு வாங்குவதற்காக தங்களில் ஒரு தோழரை அனுப்புகின்றார்கள் .
அன்பு சகோதரர்களே! இவர்களுடைய முழு சம்பவமும் அல்லாஹு தஆலா அவர்களுடைய உள்ளத்தில் தவ்ஹீதுக்கு இருந்த முக்கியத்துவத்தை மறுமையில் இருந்த நம்பிக்கை அல்லாஹ்விற்காக இந்த தவ்ஹீதிலே நிலைத்திருக்க வேண்டும்; ஒருபோதும் இந்த ஈமானை விட்டு தடுமாறி விடக்கூடாது; என்பதில் எவ்வளவு கருத்தாக உறுதியாக இருந்தார்கள் என்பதை அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
அல்லாஹு தஆலா அவர்களுடைய வரலாறை மட்டும் சொல்லவில்லை. அவர்கள் இந்த ஈமானை குறித்து பேசிய உரையாடல்களை நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். ஒரு முஃமினுடைய உள்ளத்தில் எந்த அளவு ஈமான் யக்கின் இருக்க வேண்டும்; அந்த ஈமான் யக்கீனை எப்படி பரிசுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்; அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்; அந்த ஈமானுக்காக அல்லாஹ்வுடைய பாதையில் இழப்புகளை சந்திக்க தயாராக வேண்டும்; துணிவுள்ளவனாக இருக்க வேண்டும்;
முஷ்ரிக்குகளின் அச்சுறுத்தல்களை அல்லாஹ்வின் எதிரிகளின் அச்சுறுத்தல்களை ஒருநாளும் நாம் பயந்து விடக்கூடாது. அல்லாஹு தஆலா நம்மை முஃமினாக அறிந்து ஈமான் இஸ்லாமுடைய நிலையில் இறப்பது நமக்கு போதுமானது.
இம்மையுடைய வெற்றிக்கும், மறுமையுடைய வெற்றிக்கும் அல்லாஹு ஸுப்ஹானஹூ வ தஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்துக்கு ஆரம்ப காலத்தில் இந்த வரலாறை கூறுவதன் மூலமாக ஈமான் யக்கினுடைய பாடங்களை அவர்களுக்கு வழங்கினான்.
அதே பாடம் தான் இன்றும் நமக்கு பசுமையாக அல்குர்ஆனிலே ஓதப்பட்டு கொண்டு வருகிறது. காலங்கள் மாறினாலும் அல்லாஹ்வுடைய அடியார்களின் அந்த வரலாறுகள் படிப்பினையாக அழகிய பாடமாக இருக்கிறது.
அல்லாஹ் இத்தகைய ஈமானை நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் தந்தருள்வானாக! ஈமானில் ஏற்படக்கூடிய தடுமாற்றங்கள் குழப்பங்களில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாத்து அருள்வானாக! உறுதிமிக்க ஈமான் உடையவர்களாக இஹ்லாஸுடையவர்களாக அல்லாஹ்வையே மட்டுமே முன்னோக்கியவர்களாக நம்மை ஏற்று அல்லாஹு தஆலா அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ رَجُلًا سَأَلَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: ومَاذَا أعْدَدْتَ لَهَا. قَالَ: لا شيءَ، إلَّا أنِّي أُحِبُّ اللَّهَ ورَسوله صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَقَالَ: أنْتَ مع مَن أحْبَبْتَ. قَالَ أنَسٌ: فَما فَرِحْنَا بشيءٍ، فَرَحَنَا بقَوْلِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أنْتَ مع مَن أحْبَبْتَ قَالَ أنَسٌ: فأنَا أُحِبُّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ وأَبَا بَكْرٍ، وعُمَرَ، وأَرْجُو أنْ أكُونَ معهُمْ بحُبِّي إيَّاهُمْ، وإنْ لَمْ أعْمَلْ بمِثْلِ أعْمَالِهِمْ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 3688 التخريج : أخرجه مسلم (2639)، والترمذي (2385)، والنسائي في ((السنن الكبرى)) (5842)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், “எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர” என்று பதிலளித்தார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3638.
குறிப்பு: (2)
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ: هَلْ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لاَ، فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ المَوْتُ، فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ العَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي، وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي، وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا، فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ "
இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்த படி, ‘‘(எனக்குப்) பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார்.
பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், ‘‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார்.
அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக்கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்தரவிட்டான். இதை நோக்கி, ‘‘நீ தூரப் போ!” என்று (அவர் வசித்துவந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, ‘‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான்.
(அவ்வாறே கணக்கெடுத்தபோது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்துவந்த ஊரைவிட ஒரே) ஒரு சாண் அளவுக்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3470.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/