கஹ்ஃப் சூரா கூறும் அறிவுரைகள் | Tamil Bayan - 1007
கஹ்ஃப் சூரா கூறும் அறிவுரைகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : கஹ்ஃப் சூரா கூறும் அறிவுரைகள்
வரிசை : 1007
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 24-10-2025 | 02-05-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னிலையில் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, அவனிடத்தில் அவனுடைய அருளையும், அன்பையும், மன்னிப்பையும் வேண்டியவனாகவும், அல்லாஹ்வுடைய இறுதி இறைத் தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் நிலவட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் தக்வாவையும் பயத்தையும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா அவனுடைய நல்லடியார்களில் நம்மை சேர்த்துக் கொள்வானாக!
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய மறுமை வாழ்க்கையை, இம்மை வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையாகவும், சொர்க்கம் பெற்றவர்களாகவும், அல்லாஹ்வுடைய மன்னிப்பு பெற்றவர்களாகவும் நம்மை ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அன்பிற்குரிய சகோதரர்களே! ஜுமுஆ தினத்திற்கு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பல ஜுமுஆக்களில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றாக சூரத்துல் கஹ்ஃப் பற்றி எடுத்துரைக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஜுமுஆ நாளில் தொடர்ந்து இந்த சூராவை ஓதுவார்கள்; அதைப் போலவே நமக்கும் ஓதும்படி வழிகாட்டியுள்ளார்கள். இந்த சூரத்துல் கஹ்ஃபில் பல சிறப்புகள் இருப்பதை ஹதீஸ்களின் மூலம் நாம் பார்த்துள்ளோம்.
இந்த சூரத்துல் கஹ்ஃப், குறிப்பாக ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு பல உபதேசங்களை வழங்குகிறது. நபி ﷺ அவர்களுக்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு உபதேசமும், அவர்களுடைய உம்மத்தாகிய நமக்கே சொல்லப்பட்ட உபதேசமாகும்.
அன்பு சகோதரர்களே! அந்த அடிப்படையில், இன் ஷா அல்லாஹ், இந்த சூரத்துல் கஹ்ஃபில் உள்ள சில முக்கியமான உபதேசங்களை இன்றைய குத்பாவில் நாம் பார்க்க இருக்கிறோம். குகைவாசிகள் சம்பந்தமான அந்த நிகழ்வை அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா முடிக்கும்போது, ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு இரண்டு முக்கியமான உபதேசங்களை சுருக்கமாக கூறுகிறான்.
அதில் ஒன்று என்ன?
رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ
நபியே அல்லாஹு தஆலா மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 18:21)
எனவே, மறைவான கல்வியை அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹு தஆலா சொல்கின்றான்;
قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا يَعْلَمُهُمْ اِلَّا قَلِيْلٌ
(அல்குர்ஆன் 18:22)
குகைவாசிகள் எத்தனை பேர்? மேலும் அவர்கள் தொடர்பான விரிவான நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்விற்கு தான் தெரியும். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. ஆகவே அவர்களைப் பற்றிய உண்மை நிலவரங்கள் அல்லாஹ்விற்கு தான் தெரியும். மிகக் குறைவானவர்களை தவிர அவர்களைப் பற்றிய சரியான அறிவு யாருக்கும் தெரியாது. ஆகவே நீங்கள் அந்த வேதக்காரர்களோடு தர்க்கம் செய்யாதீர்கள்.
فَلَا تُمَارِ فِيْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا
வெளிப்படையான ஒரு குறுகிய சிறிய அளவு தர்க்கத்தை தவிர. குர்ஆனில் என்ன சொல்லப்பட்டதோ, ஹதீஸிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த விஷயங்களைக் கொண்டே தவிர நீங்கள் அவர்களிடத்தில் தர்க்கம் செய்யாதீர்கள்.
وَّلَا تَسْتَفْتِ فِيْهِمْ مِّنْهُمْ اَحَدًا
(அல்குர்ஆன் 18:22)
அவர்களிடத்திலே சென்று நீங்கள் விளக்கம் கேட்காதீர்கள்., தர்க்கம் செய்யாதீர்கள். உங்களுடைய மார்க்கத்தை பற்றி உங்களுக்கு அல்லாஹு தஆலா சொன்னதைப் பற்றி அவர்களிடத்திலே சென்று நீங்கள் முடிவு தேடாதீர்கள் என்று அழகிய உபதேசத்தை அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
அன்புச் சகோதரர்களே! இதை நாம் நமக்கு சொல்லப்பட்டுள்ள உபதேசமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மார்க்கத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ள அறிவுரை என்ன? அடுத்த வசனங்களிலும் அல்லாஹு தஆலா நமக்கு தொடர்ந்து அதை அறிவுறுத்துகிறான். அல்லாஹ்வுடைய வேதத்தில் என்ன இருக்கின்றதோ அதை நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் புறத்திலிருந்து நமக்கு ஸஹீஹான ஹதீஸுகளில் என்ன வந்திருக்கிறதோ, அதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். யார் ஏற்றுக் கொண்டார்களோ ஏற்றுக்கொள்ளட்டும். யார் மறுக்கின்றார்களோ மறுக்கட்டும். அதற்கு மேலாக அவர்களிடத்தில் நாம் தர்க்கம் செய்யக்கூடாது.
நம்முடைய வேலை என்ன? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை, அல்லாஹ் சொன்னதை நாம் மக்களுக்கு சொல்வது தான் நமக்கு கடமை. மக்களை எல்லாம் வலுக்கட்டாயம் செய்து அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை அல்லாஹு தஆலா நபியின் மீதும் வைக்கவில்லை. நபியின் அழைப்பு பணியை செய்யக்கூடிய மக்கள் மீதும் அல்லாஹு தஆலா வைக்கவில்லை. இதை ரப்புல் ஆலமீன் தெளிவாக சொல்லுகிறான் இந்தக் கஹ்ஃப் உடைய 29 ஆவது வசனத்தில்,
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ۙ
இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் (இதை) நிராகரித்து விடலாம். (அல்குர்ஆன் 18:29)
கருத்து : நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மை வந்து விட்டது. சத்தியம் வந்துவிட்டது. எது நிகழ்ந்ததோ, எது நடந்ததோ அது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. அல்லாஹு தஆலா அவனுக்கு மறைந்தது எதுவும் கிடையாது.
لَا يَخْفٰى عَلَيْهِ شَىْءٌ
அவனுக்கு மறைந்தது எதுவும் கிடையாது. (அல்குர்ஆன் 3:5)
لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ
வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் அவனை விட்டும் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் இல்லை, (அவை அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர!” (அல்குர்ஆன் 34:3)
இந்த பூமியில் ஒரு கடுகளவு கூட, ஒரு அணு அளவு கூட, ஒரு சிறிய எறும்பின் அளவு கூட அல்லது அதைவிட சிறியதோ பெரியதோ எதுவும் அல்லாஹ்வுடைய அறிவிலிருந்து தவற முடியாது. மறைய முடியாது.
அப்படிப்பட்ட ரப்பு அல்லாஹு தஆலா ஒன்றை சொல்லியதற்கு பிறகு யார் அதை ஏற்க மறுப்பார்களோ, அல்லது பொய்ப்பிப்பார்களோ, அல்லது புறக்கணிப்பார்களோ, அவர்கள் வழிகேடர்கள்.
ஆகவே, நபியே! நீங்கள் அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ நாம் மறுமையில் வைத்திருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனை நம்ப மறுப்பது, மார்க்கத்தை புறக்கணிப்பது, சாதாரணமான விஷயம் அல்ல. அல்லாஹு தஆலா பாதுகாப்பானாக! நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டும். அல்லாஹ்வின் எச்சரிக்கை கொண்டு அவர்களை எச்சரிக்க வேண்டும்.
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம், (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும், அவர்கள் இரட்சிப்பை தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திரவத்தைப் போன்ற நீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். அது மகா கெட்ட பானமாகும். இன்னும், அது ஒரு தீய ஓய்விடம் ஆகும். (அல்குர்ஆன் 18:29)
விளக்கம் : அல்லாஹு தஆலா எப்பேர்ப்பட்ட எச்சரிக்கையை சொல்லுகின்றான். ரப்பு சொல்கின்றான், நிச்சயமாக பாவிகளுக்கு நாம் நரகத்தை தயார் செய்து வைத்திருக்கின்றோம். அதனுடைய ஜுவாலைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். நரக நெருப்பினுடைய ஜுவாலைகள் அந்த நெருப்பின் கொழுந்துகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். அவர்கள் நரகத்தில் எரிந்தவர்களாக தாகம் தண்ணீர் என்று தவித்தவர்களாக அவர்கள் கதறுவார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான்;
وَاِنْ يَّسْتَغِيْثُوْا
அவர்கள் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு ரட்சிப்பை தேடினால்
يُغَاثُوْا بِمَآءٍ
கண்டிப்பாக அவர்களுக்கு தண்ணீர் தரப்படும். அந்தத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற மதுரமான தண்ணீராக இருக்காது.
لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۙ
(உடல்கள் மீது நரக நெருப்பின் சூட்டை தனிக்கிற) குளிர்ச்சியையோ (குடிப்பதற்கும் தாகம் தீர்ப்பதற்கும் நல்ல) ஒரு பானத்தையோ அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (அல்குர்ஆன் 78:24)
அல்லாஹ் சொல்லுகின்றான்;
يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ
(அல்குர்ஆன் 18:29)
கடினமாக எண்ணெய் கொதிக்க வைக்கப்பட்டால் அதனுடைய அந்த நிறம் மாறி இருக்கும் அந்த தண்ணீரைக் கொண்டுதான் அவர்களுக்கு குடிக்க கொடுக்கப்படும். அந்தத் தண்ணீருடைய கொதி நிலை எப்படி இருக்கும்!
அல்லாஹ் சொல்லுகின்றான்;
يَشْوِى الْوُجُوْهَ
(அல்குர்ஆன் 18:29)
மலக்குகள் அந்த தண்ணீரைக் கொண்டு வரும்போது, அதிலிருந்து வரக்கூடிய ஆவியும், உஷ்ணமும், வெப்பமும் அவர்களுடைய முகத்தை கருக வைத்து விடும். அவர்களுடைய தோல்களை உருக்கிவிடும்.
بِئْسَ الشَّرَابُ
மிக மோசமான குடிபானம் அது.
وَسَآءَتْ مُرْتَفَقًا
அவர்கள் அனுபவிக்க கூடியதில் மிகக் கெட்டதாக இருக்கும்.
இந்த உலகத்தில் நிராகரிப்பில் இருந்து கொண்டு பெருமை பேசினார்களே, முஃமின்களை கேலி செய்தார்களே!
ذُقْ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ
நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் (உலகில்) கண்ணியமானவன் ஆயிற்றே (உலகில்) மதிப்பிற்குரியவன் ஆயிற்றே. (அல்குர்ஆன் 44:49)
மலக்குகள் சம்மட்டிகளால் அடித்து இது போன்று கொதிக்கக்கூடிய கொதி நீர்களை அவர்களது வாய்களிலும், முகங்களிலும் ஊற்ற சொல்லுவார்கள்.
ذُقْ ,ذُقْ
அனுபவி! அனுபவி!
ரொம்ப கண்ணியமானவனாக, ரொம்ப மதிப்பு மிக்கவனாக இருந்தாய் அல்லவா, நீ அல்லவா அந்த தலைவன், நீ அல்லவா அந்த பெருந்தலைவர், நீ அல்லவா அவர், அனுபவி என்பதாக மலக்குகள் அவனை பரிகாசம் செய்தவர்களாக, கேலி செய்தவர்களாக, அந்த தண்டனையை அவர்களுக்கு கொடுப்பார்கள். எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்?
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று முஸ்லிம்களாகிய நாம் பலருடைய நிலையை பார்க்கிறோம். வருந்தத்தக்க பரிதாப நிலை. மார்க்க கல்வி இருக்காது, படித்திருக்க மாட்டார்கள், கல்வி தேடி இருக்க மாட்டார்கள், ஆனால் மார்க்க விஷயங்களில் உட்கார்ந்து கொண்டு இதுதான் சரி, இதுதான் சரியாக இருக்கும் என்று யூகங்களின் அடிப்படையிலே தர்க்கம் செய்து கொண்டிருப்பார்கள். விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தீன் என்பது நம்முடைய அறிவை கொண்டு யூகங்களை கொண்டு அல்ல.
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ
(அல்குர்ஆன் 18:29)
நம்முடைய ரப்பின் புறத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அதுதான் சத்தியம். அதை நாம் கற்க வேண்டும். அதை நாம் சொல்ல வேண்டுமே தவிர, கற்பனைகளை நாம் அங்கீகரிக்க முடியாது. கற்பனைகளை பிறருக்குச் சொல்ல முடியாது. நம்முடைய அறிவை வைத்துக்கொண்டு அல்லாஹ்வுடைய ஆதாரங்களிலே தர்க்கம் செய்ய முடியாது.
இன்று, பலருடைய பிரச்சனை இதுவாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தங்களுடைய அறிவை வைத்து ஆதாரங்களை மாற்றக்கூடியவர்களாக, (அல்லாஹ் பாதுகாப்பானாக!) ஆதாரங்களை திணிக்கக் கூடியவர்களாக, ஹதீஸ்களுக்கு மறுப்பு சொல்பவர்களாக இருப்பது; ஒரு மனிதன் நினைத்துக் கொள்கிறான். இது, என்னுடைய அறிவின் வெளிப்பாடு நான் சிந்தித்துப் புரிந்தது என்று.
அல்லாஹ்வின் அடியார்களே! ஈமானிலிருந்து வெளியே இழுத்துச் சென்று விடும். ஈமான் என்பது என்ன? அல்லாஹ்விற்கும், அல்லாஹ்வினுடைய ரசூலுக்கும் பணிந்து விடுவது தான். கட்டுப்பட்டு விடுவது தான்.
سمعنا وأطعنا
நாங்கள் செவியுறுவோம். கட்டுப்பட்டு விடுவோம். நாங்கள் செவியுறுவோம். காதால் கேட்போம். கேட்டுக் கொள்வோம். அதற்கு நாங்கள் மீறி கருத்துச் சொல்ல மாட்டோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு அல்லாஹு தஆலா கூறிய இந்த இரண்டு உபதேசங்கள், நபியே! அவர்களிடத்தில் நீங்கள் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களிடத்தில் நீங்கள் விளக்கம் கேட்டு செல்லாதீர்கள் என்று கூறிய இந்த இரண்டு அறிவுரைகள் இருக்கின்றனவே! ரப்புக்கு தான் தெரியும் என்ற அழகிய அந்த வார்த்தை இருக்கின்றதே! அல்லாஹ்வுடைய தீனை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையின் பக்கம் அழைக்க வேண்டும்.
இன்று, பலர் என்ன செய்கிறார்கள்; புரிய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு புரியாததை மறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் இதையெல்லாம் ஏற்பார்களா? காஃபிர்கள் ஏற்பதை நிராகரிப்பதை அளவுகோலாக ஒரு முஸ்லிம் எப்படி ஆக்க முடியும்?
அவன்தான் அல்லாஹ்வையே நிராகரிக்கின்றானே, அவன் தான் அல்லாஹ்வுடைய கூற்றையே நிராகரிக்கின்றானே, அன்பு சகோதரர்களே! ஈமானின் பக்கம் நம்மை அழைக்க அல்லாஹு தஆலா நமக்கு கட்டளை இட்டிருக்கின்றானே தவிர, அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள் என்று அல்லாஹ் நமக்கு சொல்லவில்லை. அது மட்டும் இல்லை.
وَّلَا تَسْتَفْتِ فِيْهِمْ مِّنْهُمْ اَحَدًا
உங்களுடைய மார்க்கத்தை அவர்களுடைய கூற்றை வைத்து முடிவு செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 18:22)
இன்று பலருடைய குழப்பம் அது. இன்றைய நவீன காலத்துடைய அறிவியலை வைத்து அல்லது இன்றைய நவீன காலத்தில் உள்ள சிந்தனையாளர்களின் சிந்தனைகளை வைத்து மார்க்க ஆதாரங்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். அதை சரி காணும் முயற்சி செய்கிறார்கள். அதில் அவர்களுக்கு பிரியமானதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய புத்திக்கு ஒத்து வராததை மறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தெளிவான விளக்கத்தை அல்லாஹ் சொல்கிறான். அவர்களிடத்தில் சென்று நீங்கள் எப்படி மார்க்கத்தை கேட்பீர்கள்? உங்களுக்கு மார்க்கத்திற்காக கொடுக்கப்பட்டது குர்ஆன். உங்களுக்கு மார்க்கத்திற்காக அனுப்பப்பட்டவர் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அதை விட்டுவிட்டு மாற்றார்களுடைய சிந்தனைக்கு ஏற்ப அவர்களுடைய புரிதலுக்கு ஏற்ப நீங்கள் மார்க்கத்தில் கருத்துக்களை தேடாதீர்கள்.
அடுத்து, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு அடுத்த உபதேசத்தை அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா 23 வது வசனத்தில் இருந்து ஆரம்பிக்கின்றான். ரசூலுல்லாஹி ﷺ அவர்களை மடக்க வேண்டும் என்பதற்காக குரைஷிகள் மதீனாவிற்கு சென்று யூதர்களிடத்திலே சில கேள்விகளை கேட்டு விட்டு வந்து நபி ﷺ அவர்களிடத்திலே தர்க்கம் செய்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் அந்த குரைஷிகளுடைய கேள்விக்கு நாளை பதில் சொல்கிறேன் என்று சொன்னார்கள். இன் ஷா அல்லாஹ் என்று சொல்ல மறந்து விட்டார்கள்.
அல்லாஹு தஆலா இந்த சூராவை இந்த கேள்விக்கு பிறகு பதிலாக இறக்குகிறான். ஏறக்குறைய முஃபஸ்ஸிர்களுடைய அறிவிப்பின்படி 15 நாட்களுக்குப் பிறகு பதில் வருகிறது. அல்லாஹு அக்பர்! வாழ்க்கையில் ஒரு முறை ஒரு வார்த்தையில் அல்லாஹ்வை மறந்ததால் அல்லாஹு தஆலா தன்னுடைய தூதர் ﷺ அவர்களுக்கு எப்படிப்பட்ட தர்பியத் வழங்கினான் பாருங்கள்? 15 நாள் வஹி தாமதமாகிவிட்டது. நபி சிரமப்பட்டார்கள்.? கேள்வி கேட்டு விட்டார்கள். பதில் சொல்ல முடியவில்லையே என்று அவர்கள் சிரமத்திலே, மனக்கவலையிலே இருந்தார்கள்.
அல்லாஹு தஆலா சூராவை 15 நாட்களுக்குப் பிறகு இறக்கி முதலாவதாக அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலை சொல்லி முடித்து விடுகின்றான்.
அதற்குப் பிறகு அந்த சாப்ட்டர் முடிந்ததற்கு பிறகு அல்லாஹு தஆலா நபி இடத்திலே பேசுகிறான். நபியே! உங்களிடத்தில் கேள்வி கேட்டார்கள் அல்லவா? நீங்கள் இன்ஷா அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா? நாளை பதில் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் எப்படி இன் ஷா அல்லாஹ் சொல்லாமல் நாளை பதில் தருகிறேன் என்று சொன்னீர்கள் என்று 22 வசனங்கள் கழித்து அல்லாஹு தஆலா நபிக்கு சொல்கிறான் என்றால் நம்முடைய நபியுடைய உள்ளத்தை அல்லாஹ் தஆலா எந்த அளவு பேணிணான், பாதுகாத்தான். அவர்கள் மீது பாசம் வைத்திருந்தான்!
அல்லாஹ் நாடியிருந்தால் இந்த சூராவின் எடுத்த எடுப்பிலேயே நபியே நீங்கள் எப்படி இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் நாளை பதில் சொல்கிறேன் என்று கூறினீர் என்று அல்லாஹ் கண்டித்து இருக்கலாம். ஆனால், அல்லாஹ் அப்படி செய்யவில்லை.
காழி இயாழ் ரஹிமுல்லாஹ் தங்களுடைய நூல் “ஷிஃபா” விலே சொல்கிறார்கள். அல்லாஹு தஆலா நம்முடைய ரசூல் ரசூலுல்லாஹி ﷺ அவர்களை குர்ஆனில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில இடங்களில் கண்டிக்க செய்கிறான்.
ஆனால் அந்த கண்டிப்பும் எப்படி என்றால் அவர்களுடைய மனம் கஷ்டப்படாது. அவர்களுடைய மனம் கஷ்டப்படாமல் எப்படி நம்மில் ஒருவர் ஒருவரை கண்டிப்பது போன்றல்ல. அல்லது அல்லாஹு தஆலா அவனுடைய மற்ற அடியார்களை கண்டிப்பது போன்று அல்ல. கண்டிக்கச் செய்வான். திருத்துவான். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீது தனக்கு இருக்கக்கூடிய அன்பையும் வெளிப்படுத்துவதோடு. தனக்கு இருக்கக்கூடிய அந்த கண்ணியத்தையும் வெளிப்படுத்துவதோடு அல்லாஹு தஆலா தன்னுடைய நபியை கண்டிப்பான். திருத்துவான்.
அல்லாஹு தஆலா அந்த குறைஷிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முதல் கேள்விக்கு விளக்கமாக பதில் சொல்லிவிட்டு அதிலே சில உபதேசங்களை செய்துவிட்டு அந்த உபதேசங்களை தொடர்ந்து ஒரு உபதேசமாக,
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا (23) إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَنْ يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا
(நபியே!) ஒரு காரியத்தைப் பற்றி, “நிச்சயம் நான் நாளை அதை செய்வேன்” என்று அறவே கூறாதீர்! அல்லாஹ் நாடினால் தவிர (என்று). இன்னும், நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூர்வீராக! இன்னும், என் இறைவன் இதைவிட மிக சரியான அறிவுக்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (அவன் மீது நம்பிக்கை வைத்து) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:23,24)
அன்பு சகோதரர்களே! ஒரு முஃமின் அல்லாஹ்வை மறக்க கூடாது. எந்த நிலையிலும் அல்லாஹ்வை மறக்க கூடாது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் அடுத்த நிமிடம், அடுத்த நேரத்தில், அடுத்த அந்த நாளில் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிந்தவன்.
ஒரு முஃமின் எந்த வகையில் தன்னிச்சையாக செயல்பட்டு விடக்கூடாது. ரப்பை நம்பிக்கை கொள்ள வேண்டும். ரப்பை சார்ந்து இருக்க வேண்டும். ரப்பை முன்னோக்கி இருக்க வேண்டும். ரப்பை கொண்டே தன்னுடைய நல்ல நோக்கங்களையும், செயல்களையும் அவன் தொடர்பு படுத்தியவனாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் சொன்னார்கள்:
واللَّهِ لَوْلَا اللَّهُ ما اهْتَدَيْنَا
அல்லாஹ் நாடியிருக்கவில்லை என்றால் நாம் நேர்வழி பெற்றிருக்க முடியாது. நாம் தொழுதிருக்க முடியாது. ஜிஹாத் செய்திருக்க முடியாது. தர்மம் கொடுத்திருக்க முடியாது என்று.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிஃப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6620.
وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ
அல்லாஹ்வைக் கொண்டே தவிர நான் நன்மை செய்வதற்குரிய வாய்ப்பு (எனக்கு) இல்லை. (அல்குர்ஆன் 11:88)
எந்த ஒரு நல்லதையும் அல்லாஹ் நாடாமல் என்னால் செய்ய முடியாது.
அன்பு சகோதரர்களே! (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக. பாதுகாப்பானாக.) சில நேரங்களிலே ஷைத்தான் தான் நமக்குள் வந்து விடுகின்றான். என்னால் முடியும்; நான் செய்வேன்; இந்த செயல் என்னுடைய திறமை, என்னுடைய அனுபவம், என்னுடைய அறிவு என்று அல்லாஹ்வை மறந்து விடுகின்றான் மனிதன். அல்லாஹ்வை மறப்பது இருக்கிறதே, இது ஒரு பாவம் என்பதை நாம் நினைவிலே வைக்க வேண்டும்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ
அல்லாஹ்வை மறந்தவர்களை போன்றாகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 59:19)
யார் அல்லாஹ்வை மறக்கின்றார்களோ அவர்கள் பாவிகள் என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஒரு மனிதன் தன்னைக் கொண்டு ஆகும். நான் பெரியவன் என்னுடைய திறமை, என்னுடைய அறிவு, என்னால் இதை செய்ய முடியும் என்று நினைப்பது அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லாமல் எப்படி முடியும்?
நீங்கள் நாட முடியாது அல்லாஹ் நாடினாலே தவிர. நன்மை, தீமை ஒவ்வொன்றும் அல்லாஹ்வுடைய நாட்டத்தை கொண்டு தான். நல்லது செய்வதற்கு அல்லாஹ்வுடைய நாட்டம் தேவை அந்த அடியானுக்கு. ஒரு மனிதனுடைய இபாதத்திற்கு, அவனுடைய நன்மைகளுக்கு அல்லாஹ்வுடைய அருள் தேவை அவனுக்கு. அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் நேர்வழி பெற முடியாது.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான், நபியே! நீங்கள் அவசரப்படாதீர்கள்! இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் எதையும் நீங்கள் செய்யாதீர்கள்.
பிறகு அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அந்தக் குகைவாசிகள் எவ்வளவு காலம் தங்கினார்கள் என்று பிறகு சொல்லுகின்றான்.
وَلَبِثُوْا فِىْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا
மேலும், (அவர்கள்) தங்கள் குகையில் முன்னூறு ஆண்டுகள் (உறங்கியவர்களாக) தங்கினர். இன்னும், (சிலர் அவர்கள் தங்கிய கால அளவில்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தி (கூறுகின்ற)னர். (அல்குர்ஆன் 18:25)
300 ஆண்டுகள் அவர்கள் தங்கினார்கள் சூரிய கணக்கின்படி.
وَازْدَادُوْا تِسْعًا
சந்திர ஆண்டுகளின் கணக்கின்படி 309 ஆண்டுகள் அவர்கள் தங்கினார்கள்.
அல்லாஹ்வுடைய மகத்தான ஆற்றலை அல்லாஹு தஆலா அந்த குகைவாசிகளின் மூலமாக வெளிப்படுத்தினான். அல்லாஹு தஆலா மரணத்திற்கு பிறகு அவன் எழுப்புவான் என்று கூறிய அந்த ஆற்றலை குர்ஆனிலே குறிப்பாக மூன்று இடங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
உஜைர் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் சம்பவத்தின் மூலமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கேட்ட அந்த சம்பாசனையின் மூலமாக, மூன்றாவது இந்த குகைவாசிகளின் மூலமாக. அல்லாஹ்விற்கு ஒரு மனிதனை தூங்க வைப்பதும், நீண்ட காலம் அவனை நித்திரையில் ஆழ்த்துவதும், பிறகு அவனை எழுப்புவதும் அல்லாஹ்விற்கு சிரமமான ஒரு காரியம் அல்ல.
மீண்டும் அல்லாஹ் இதை சொல்லிவிட்டு சொல்லுகிறான்.
قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا
அல்லாஹ்வுக்கு தெரியும் அவர்கள் எவ்வளவு காலம் தங்கினார்கள் என்று. (அல்குர்ஆன் 18:26)
لَهٗ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
வானங்கள் பூமியிலே மறைவான அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமானது.
اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْ مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ وَّلَا يُشْرِكُ فِىْ حُكْمِهٖۤ اَحَدًا
அல்லாஹ்தான் அனைத்தையும் நுணுக்கமாக பார்ப்பவன். அல்லாஹ்தான் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன். கேட்பவன். அல்லாஹ் சொல்கிறான், நபியே! அவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர பாதுகாப்பவர் யாருமில்லை. (அல்குர்ஆனை 18:26)
அல்லாஹு தஆலா தன்னுடைய ஆட்சியில் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டான். யாரையும் அல்லாஹு தஆலா இணைத்துக்கொள்ள மாட்டான். எனவே ரப்பிடத்திலே நீங்கள் பொறுப்பை சாட்டி விடுங்கள். ரப்புடைய இல்முக்கு முன்னால் நீங்கள் சரணடைந்து விடுங்கள்.
அதற்குப் பிறகு அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா 27 வது வசனத்திலே ஒரு முக்கியமான செய்தியை சொல்லுகின்றான். நபிக்கு அறிவுரை சொல்கின்றான்.
وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
(நபியே! ஒவ்வொரு நாளும்) உம் இறைவனின் வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! (அல்குர்ஆன் 18:27)
நாம் எப்படி புரிகிறோம்? நம்முடைய முன்னோர்கள், ஸலஃபுகள், ஸஹாபாக்கள் எப்படி புரிந்தார்கள்? என்பதற்கு இந்த வசனமும் ஒரு உதாரணம். நாம் என்ன படிப்போம்?
وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
நபியே வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருங்கள். இது நாம் படிக்கக்கூடிய தர்ஜமா, எழுதப்பட்டிருக்கக்கூடிய தர்ஜமா.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா இன்று நாம் செய்வதை போன்று இந்த குர்ஆன் ஓதுவதை அல்லாஹ் சொல்லவில்லை. அல்லாஹ் என்ன சொல்கிறான்?
وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
நபியே! உங்களுக்கு இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் செய்திகளை நீங்கள் பிற மக்களுக்கு ஓதி காட்டுங்கள். நீங்கள் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தாஃவா கொடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்று இமாம் தபரி, இமாம் இப்னு கஸீர் சொல்லுகின்றார்கள்.
நாம் என்ன செய்கிறோம்? திறப்போம், ஓதுவோம், மூடி வைத்துவிட்டு வேலை முடிந்து விட்டது என்று சொல்வோம். அல்லது பரக்கத்துக்காக. வீடு குடி போவது, கடைகள் விசேஷங்கள் எல்லாம் இந்த துன்யாவை கொண்டு காசு கிடைக்கிறதா? துட்டு கிடைக்குதா? இந்த குர்ஆனை கொண்டு காசு கிடைக்குதா? துட்டு கிடைக்குதா?
இந்த குர்ஆன் எவ்வளவு பெரிய ஹுதா, ஷிஃபா, நேர்வழி, பொக்கிஷம். இதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டோம்.
எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள். குர்ஆனை ஓதுவோம். எனக்கு காசு கொடு. ஓதுவோம் என் கடையில் பரக்கத் கொடு. ஓதுவோம் என் வீட்டில் பரக்கத் கொடு. அல்லாஹ் சொல்கிறான்; அடியானே! இந்த குர்ஆனில் பிற மக்களை அழைத்து ஓதி காட்டு. இந்த சம்பவத்தை சொல்லிக் காட்டு.
وَاتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
நபியே! உமக்கு இறக்கப்பட்ட இந்த வேதத்தை மக்களுக்கு சொல்லிக் காட்டுங்கள்!
لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ
அவனுடைய வேத சட்டங்களை யாராலும் மாற்ற முடியாது. (அல்குர்ஆன் 18:27)
ஏன்? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். யாருக்கும் பயந்து இந்த குர்ஆனை மறைத்து விடாதீர்கள். சில பேருக்கு தாஃவால பல விஷயங்களை சொல்றதுக்கு சந்தேகமாக இருக்க. குழப்பம். இதெல்லாம் நாம் சொல்லனுமா. குர்ஆனை உள்ளதை உள்ளபடி நாம் ஓதி காட்ட வேண்டும்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;
وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا
நீங்கள் இந்த குர்ஆனை மக்களுக்கு ஓதி காட்டவில்லை என்றால், இந்த குர்ஆனின் பக்கம் மக்களின் அழைக்கவில்லை என்றால், இதை மக்களுக்கு எடுத்து சொல்லவில்லை என்றால் உங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்க கூடிய ஒரு இடத்தை நீங்கள் பார்க்கவே அடையவே முடியாது. (அல்குர்ஆன் 18:27)
இது எச்சரிக்கை.
وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا
நபியே! நீங்கள் இந்த குர்ஆனை மக்களுக்கு ஓதி காட்டவில்லை என்றால் உங்களை அல்லாஹ்விடத்தில் இருந்து பாதுகாப்பவர் யாரும் இருக்க மாட்டார் என்று அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கிறான்.
அன்பு சகோதரர்களே! இது நமக்குரிய எச்சரிக்கை. அல்லாஹ்வுடைய வேதத்தை நாம் ஓதுவது கிடையாது. புரிவது கிடையாது. அதனுடைய தஃப்ஸீர்களுடைய பாடங்களை கற்பது கிடையாது. குர்ஆன் இறக்கப்பட்டது ஒன்றுக்காக. ஆனால், அதை பயன்படுத்திக் கொண்டிருப்பது வேறொன்றுக்காக.
அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்மை சீர்திருத்தம் செய்வானாக! அல்குர்ஆனை ஓதக்கூடியவர்களாக, சிந்திக்க கூடியவர்களாக, அதை கொண்டு அழகிய படிப்பினை பெறக் கூடியவர்களாக நம்மை அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக!
நமக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் அல்குர்ஆனுடைய தொடர்பை அல்லாஹு தஆலா உறுதிப்படுத்துவானாக! அல்குர்ஆனை கற்பவர்களாக பிற மக்களுக்கு அதன் பக்கம் அழைப்பு கொடுக்க கூடியவர்களாக அல்குர்ஆனை பரப்ப கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக! அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை, குற்றங்களை மன்னித்து அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/