கஹ்ஃப் சூராவை சிந்திப்போம் | Tamil Bayan - 1009
கஹ்ஃப் சூராவை சிந்திப்போம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : கஹ்ஃப் சூராவை சிந்திப்போம்
வரிசை : 1009
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 31-10-2025 | 09-05-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறும், தக்வாவை கடைப்பிடித்து வாழுமாறும், எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் ஏற்றுக்கொண்ட, அல்லாஹ் பொருந்திக் கொண்ட, அல்லாஹ் ஆசீர்வதித்த, அல்லாஹ் அருள் புரிந்த நல்லடியார்களோடு என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும், நமது பெற்றோரையும் அல்லாஹு தஆலா சேர்த்தருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! “சூரத்துல் கஹ்ஃபை சிந்திப்போம்” என்ற தலைப்பின் கீழ் பல செய்திகளை, இன் ஷா அல்லாஹ், நாம் பார்க்க இருக்கிறோம். இன்று நம்முடைய இந்த குத்பாவிற்காக, சூரத்துல் கஹ்ஃபிலிருந்து 28-ஆவது வசனத்தை நாம் எடுத்துக் கொள்வோம்.
அன்பு சகோதரர்களே! அல்குர்ஆன் சிந்தித்து ஓதுவதற்காகவே இறக்கப்பட்டது. அதிலிருந்து நாம் ஹிதாயத்தையும், நேர்வழியையும், நல்ல அறிவையும், நல்ல புத்தியையும், நல்ல சிந்தனைகளையும் பெறுவதற்காகவே அது இறக்கப்பட்டது.
இந்த குர்ஆன், அதன் பிரதிகளை உயர்ந்த விலையில் வாங்கி, உயர்ந்த துணிகளால் போர்த்தி, அலமாரிகளில் வைத்து, “வீட்டிற்கு பரகத் கிடைக்கும்” என்று நம்புவதற்காக மட்டும் இறக்கப்பட்டது அல்ல. அந்தோ கைசேதம்!
இன்று முஸ்லிம் உம்மா தங்களுடைய வாழ்க்கையில், ஒரு நாளின் 24 மணி நேரத்திலே கூட, தினமும் ஒரு வசனத்தையாவது அதன் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை என்றால், நாம் எந்த அளவுக்கு இந்த குர்ஆனிலிருந்து தூரமாகி விட்டோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு நாளும் அல்குர்ஆன் நம்மை அழைக்கிறது:
“என்னை ஓத மாட்டாயா? சிந்திக்க மாட்டாயா?” என்று.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நாம் எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த வசனம், எப்படிப்பட்ட மகத்தான உபதேசங்களை நமக்கு வழங்குகிறது என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
வசனம் என்ன? அல்லாஹு தஆலா சொல்கிறான்;
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது. (அல்குர்ஆன் 18:28)
யாருக்கு அல்லாஹு தஆலா சொல்கிறான்? முஹம்மது ﷺ. யார் மீது இந்த வஹீ இறக்கப்பட்டதோ, யாருடைய தொடர்பு அந்த அர்ஷுடைய இறைவனோடு எப்போதும் பரிசுத்தமாக இருந்ததோ, யார் வாழ்க்கையில் எந்த நிலையிலும் அல்லாஹ்வை மறக்கவில்லையோ, அல்லாஹ்வை சதா நினைத்து கொண்டே இருந்தார்களோ, அந்த ரசூலுக்கு அல்லாஹ் சொல்கிறான்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்லுகிறார்கள்;
كانَ النبيُّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَذْكُرُ اللَّهَ علَى كُلِّ أحْيَانِهِ
அல்லாஹ்வின் தூதர் தங்களது எல்லா சூழ்நிலைகளிலும், தங்களது எல்லா நேரங்களிலும், அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம் எண்: 373.
திக்ரு செய்து கொண்டே இருப்பார்கள். ரசூல் ﷺ தொழுகை, குர்ஆன் ஓதுவது, நீண்ட நேரம் தொழுகை, அதிலே நீண்ட ருகூகள், நீண்ட சுஜூதுகள், ஏன்? இரண்டு சுஜூதுகளுக்கு இடையில் உட்காரக் கூடிய அந்த சிறு இருப்பு கூட மிகப் பெரிய நீளமான இருப்பாக இருக்கும். எந்த அளவு தொழுகையில் நின்றார்களோ, அதற்கு சற்று நெருக்கமான அளவிற்கு அந்த இரண்டு சஜூதுகளுக்கு இடையிலே அமர்ந்து, அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டே இருப்பார்கள்.
தொழுது முடித்ததற்கு பிறகு திக்ரு. இப்படி எந்த நேரத்திலும் சதா திக்ரு செய்து கொண்டிருந்தவர்கள். தங்களது தோழர்களுக்கு எப்போதெல்லாம் அறிவுரை கூறக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அல்லாஹ்வுடைய திக்ரை செய்யுங்கள் என்று உபதேசம் செய்தவர்கள்.
தோழர் வருகிறார், அல்லாஹ்வின் தூதரே, எனக்கு ஒரு அறிவுரை வழங்குங்கள். எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்கள். ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
لا يزالُ لسانُك رطبًا من ذكرِ اللهِ
உன்னுடைய நாவு எப்போதும் அல்லாஹ்வுடைய நினைவால் நனைந்திருக்கட்டும். காய்ந்து விட வேண்டாம் உனது நாவு. அல்லாஹ்வுடைய திக்ரை கொண்டு நனைந்து கொண்டே இருக்க வேண்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா எண்: 3793, திர்மிதி எண்: 3375
இப்பேற்பட்ட ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ இன்று நம்மில் ஒருவரை போன்று அல்ல. பயந்தவர்கள், பணிந்தவர்கள், யாராவது நல்லதை சொல்லிவிட்டால் அப்படியே செவி மடுப்பார்கள்.
நாம் எப்படி? எனக்கு தெரியும் எனக்கே சொல்ல வந்துட்டியா. எனக்கே உபதேசமா? எனக்கு தெரியும் இதுக்கு விளக்கம் பெருசா சொல்ல வந்துட்டாரு. ரொம்ப படிச்சிட்டார் இவரு என்று பேசுவோம்.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை பற்றி ஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் பெரிய வியாபாரியாக இருந்தார்கள். ஒரு பக்கம் பெரிய கல்வியாளர், மார்க்க சட்ட வல்லுநர். வல்லுநர்களை உருவாக்கிய வல்லுநர்.
பேச்சு வார்த்தையிலே அபூ ஹனீஃபாவிடம் ஒருவர் சொன்னார்; இத்தக்கில்லாஹ் - அல்லாஹ்வை பயந்து கொள்! என்று.
இமாமின் முகம் மஞ்சலித்து பயந்து நடுங்கி அல்லாஹு அக்பர்! இப்படிப்பட்ட உபதேசத்தை செல்பவர்கள், இப்படிப்பட்ட அறிவுரையை சொல்பவர்கள் அதிகம் இருக்க வேண்டுமே! அல்லாஹ்வை நினைவூட்டி விட்டாயே என்று அப்படியே பணிந்து பயந்து விட்டார்கள்.
சகோதரர்களே, அதுதான் ஈமான். அல்லாஹ்வை ஒருவன் பயப்படுகிறான் என்றால், அல்லாஹ்வுடைய பயம் அவனுக்கு நினைவூட்டப்பட்டால், அல்லாஹ்வுடைய பெருமையின் வாசகங்கள் அவனது வாயிலிருந்து வர வேண்டுமே தவிர, தனது ஆணவத்தின் வாசகம், தன்னைப் பற்றிய பெருமையின் வாக்கியம் அவனது உள்ளத்திலிருந்து வந்து விடக்கூடாது.
அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கு சொல்கிறான். அல்லாஹ் அவர்களை உருவாக்குகிறான். மகத்தான அழைப்பாளர் அல்லவா! ரசூல்மார்களுக்கு இமாம் அல்லவா! நாளை மறுமையில் யாருக்கும் கொடுக்காத அந்த தகுதியை, கண்ணியத்தை அல்லாஹ் இந்த நபிக்காக ரிசர்வ் செய்து வைத்திருக்கிறான் அல்லவா! இவர் சொர்க்கத்திற்குள் செல்லாமல் எந்த நபியும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாதல்லவா! அப்பேர்ப்பட்ட ஒரு தகுதிக்கு இந்த நபியை அல்லாஹு தஆலா உருவாக்கி இருக்கின்றான்.
இந்த கஹ்ஃபை எடுத்துக் கொள்ளுங்கள்! தொடர்ந்து நேரடியாக ரசூலுல்லாஹ்வுக்கு உண்டான உபதேசமாகவே இருக்கும். நபியே இதை செய்! நபியே இதை செய்யாதே! நபியே இதை பேசு! இதை பேசாதே! இங்கே இரு! இங்கே இருக்காதே! இதை பார்! இதை பார்க்காதே! எப்பேர்ப்பட்ட உபதேசங்கள்!
நபியே! இறை மறுப்பாளர்கள், அல்லாஹ்வின் வேத சட்டங்களோடு முரண்படக்கூடியவர்கள், அல்லாஹ்வுடைய வேதத்திற்கு எதிராக பேசக்கூடியவர்கள், அவர்களோடு நீங்கள் தொடர்பே வைக்காதீர்கள் நபியே! அவர்களிடத்தில் பேசவே பேசாதீர்கள்! அல்லாஹ்வுக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுங்கள்.
رَّبِّىْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ
அல்லாஹ்வுக்கு தெரியும் அவ்வளவுதான். (அல்குர்ஆன் 18:22)
என் வேலை என்ன? அவன் சொன்னதை உனக்கு ஒப்படைப்பது. என் வேலை என்ன? அவன் சொன்னதை உனக்கு ஒப்படைப்பதை தவிர உனது மண்டையில் திணிப்பது என் வேலை அல்ல.
وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
(அல்குர்ஆன் 6:107)
நபியே, நீங்கள் எல்லாரையும் பிடித்துக் கொண்டு வந்து, இந்த மார்க்கத்திற்குள் திணிப்பதற்கு நீங்கள் அவர்களுக்கெல்லாம் ஏஜென்ட் அல்ல.
அல்லாஹு தஆலா அப்படி சொல்லிவிட்டு, நம்முடைய நபிக்கு சொல்கிறான்; நபியே, நீங்கள் யாரோடு பழக வேண்டும்? நீங்கள் யாரோட உட்கார வேண்டும்? யாரை நேசிக்க வேண்டும்? உங்களுடைய தோழர்களாக யார் இருக்க வேண்டும்? நீங்கள் யாருக்கு தோழராக இருக்க வேண்டும்?
அல்லாஹு அக்பர்! நபியின் தோழராக ஆகுவது, நபி ஒருவருக்கு தோழராக இருப்பது, நபியோடு அமர்வது, நபி ஒரு சபையில அமர்வது.
அல்லாஹ் இந்த 28 வது வசனத்திலே சொல்லிக் காட்டுகிறான்; அதுவும் எப்படி சொல்கிறான்? போய் உட்கார்ந்துட்டு வாங்கன்னு சொல்லல.
நம்மில் சில பேர் இருப்பாங்க, பயானுக்கு வருவாங்க. உட்காருவாங்க, கவர்ச்சியா, சிரிப்பா, கொஞ்சம் இன்ட்ரஸ்டா இருந்தா, உட்கார்ந்து இருப்பாங்க. இல்லனா, போர் அடிக்குதுன்னு எழுந்து போயிடுவாங்க.
சகோதரர்களே, யார் பேசினாலும், அல்லாஹ்வுடைய வேதத்தை பேசினால், அல்லாஹ்வுடைய வேதத்திற்காக, அந்த பயானில் உட்கார வேண்டுமே தவிர, பேசக்கூடியவருக்காக அல்ல. அவர் குர்ஆனிலிருந்து, ஸஹீஹான ஹதீஸிலிருந்து உபதேசம் செய்து கொண்டிருக்கின்ற வரை, அவர் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு செய்தியை சொல்கிறார்.
அவர் கருப்பா, சிவப்பா, அவர் பேச்சு வசனமாக இருக்கா, சிரிப்பா இருக்கா, அவர் பேச்சு, அவர் முகம் உங்களுக்கு பிடிக்குதா, பிடிக்கலையா, அவருக்கும் உங்களுக்கும் பிரச்சனையா, இது வேலை இல்லை. அவர் மார்க்கத்தை சொல்பவர். அவர் அல்லாஹ்வுடைய கட்டளையை செய்கிறார்.
உங்களுக்கு என்ன பொறுப்பு?
الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ
அவர்கள் உண்மையான பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர், அவற்றில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். (அல்குர்ஆன் 39:18)
உபதேசத்தைக் கேள். அதில் சிறந்ததை எடுத்து செயல்படு. முடிந்தது. பேச்சு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதுபோன்றுதான் இன்னும் சிலர் தொழுகையில் இமாம் ஓதுறது ரொம்ப ராகமா இருந்தா அங்க தொழுவாங்க. இல்லையென்றால் அங்கு தொழ மாட்டாங்க. இல்லை என்றால் தொழுகை அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
அன்பு சகோதரர்களே! இதுவும் ஒரு நோய். ரசூலுல்லாஹி ﷺ உடைய காலத்திலே, இமாம் என்ன ஓதுகிறார் என்று தூரத்தில் உள்ளவர்களுக்கு விளங்காது. மைக்கா இருந்தது? அது எப்படியோ ஒரு அஞ்சு பத்து ஸஃப்புக்கு கேட்டிருக்கும். அவர் பகராவை முடித்து விடுவார். ஆல இம்ரானை முடித்து விடுவார். தூரத்தில் உள்ளவர்கள் எல்லாம் நின்று கொண்டே இருப்பார்கள்.
ஏன்? அவர் நான் தொழுகையை அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறேன் என்று உணர்வோடு நின்றாரே தவிர, அழகாக ஓதக்கூடியவரின் குரலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நிற்கவில்லை.
நம்முடைய பிரச்சனைகள் பல இருக்கின்றன. அல்லாஹ் சொல்லுகின்றான்; நபியே! நீங்கள் செல்லுங்கள். யாரை தேடி செல்லுங்கள்? யார் மறுமைக்காக உலகத்தை மறந்தார்களோ அவர்களை தேடுங்கள். நாம் எப்படி? உலகத்துக்காக மறுமையை மறந்து விட்டோம். மறுமையை மறப்பது என்பது நமக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறிய பெரிய விஷயங்களுக்கும், ஒவ்வொரு சிறிய பெரிய வேலைகளிலும் மறுமையை மறந்து கொண்டே இருப்போம்.
அல்லாஹ் சொல்கிறான்; யார் தெரியுமா அவர்கள்? என்னுடைய அன்புக்காக ஏங்கக் கூடியவர்கள், என்னை நினைப்பதில் மூழ்கியவர்கள்.
நமக்கு ஏசி போட்டு, ஃபேன் போட்டு, கார்பெட் போட்டு, இவ்வளவு வசதியை செய்து கூட, தொழுகையில் இருக்கும் போது எங்கேயாவது சென்று விடுகிறோம். அவர்களுடைய மஸ்ஜிதுகளில் பேருக்கு ஒரு கூரை இருக்கும். அதுவும் உருப்படியான கூரையாக இருக்காது. மழை பெய்தால் ஒழுகும். வெயில் அடித்தால் சுடும். அந்த கூரையில், அந்த கற்களும் மணல்களும் நிறைந்த அந்த தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சுஜூது செய்து கொண்டிருந்தார்கள். அந்த சூட்டிலே, மணலில் அப்படியே கொதிக்கின்ற அந்த மணலில் ஸஜ்தா செய்து, ஸஜ்தா செய்து, அதுவும் நீண்ட ஸஜ்தா செய்து செய்து, அவர்களது நெற்றிகள் எல்லாம் கருத்துப் போயிருக்கும். தேய்க்கிறதுனால கிடையாது.
சில பேர் என்ன விளங்கிட்டாங்க; நெற்றியில் ஸஜ்தாவுடைய அடையாளம் என்று சொன்ன உடனே, வச்சு கார்பெட்டில் வைத்து தேய் தேய் என்று தேய்த்து, அடையாளத்தை உண்டாக்குகிறதுனு நினைச்சிட்டாங்க. அப்படி அல்ல.
உங்களுடைய நெற்றியை பூமியில் நீண்ட நேரம் வைத்திருப்பதால், அது காய வேண்டும். உங்களுடைய பூமி நெற்றியை தரையில் வைத்துவிட்டு, அப்படியே பத்து நிமிஷம், பதினைந்து நிமிஷம், இருபது நிமிஷம், அதனால் தழும்பு ஏற்பட வேண்டும். வச்சு தேய்க்கிறது கிடையாது.
அல்லாஹு தஆலா அந்த தோழர்களை சொல்கிறான், யார் அவர்கள் தெரியுமா? அவர்கள் சுபுஹு தொழுபவர்கள், அஸர் தொழுவார்கள் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகிரத்துக்காக துன்யாவை மறந்தவர்கள். அல்லாஹ்வுடைய திக்ருடைய இன்பத்தில் தங்களுடைய சுகத்தை மறந்தவர்கள்.
நபியே, அப்படிப்பட்டவர்களை தேடுங்கள். தேடி அவர்களோடு உங்களை உங்களது ஆன்மாவை அடக்கி அமர செய்யுங்கள். அல்லாஹ் அக்பர்!
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ
கருத்து : நபியே, உங்களது ஆன்மாவை அடக்குங்கள். யாரோடு சென்று அடக்கி உட்கார வையுங்கள்?
தங்களது ரப்பை தொழுகின்றார்களே, தங்களது ரப்பிடம் துஆ செய்கின்றார்களே, தங்களது ரப்பை திக்ரு செய்கின்றார்களே, அந்த நல்லடியார்களை தேடி, அவர்களோடு சென்று உங்களை அடக்கி அவர்களுடன் அமருங்கள். (அல்குர்ஆன் 18:28)
நஃப்ஸுக்கு கவர்ச்சி பிடிக்கும். கண் குளிர்ச்சி பிடிக்கும். இங்கும் அங்கும் சுற்றி திரிவது பிடிக்கும். ஏறி மிதிக்கணும். இப்படி துன்யாவில் இன்பத்தை தேடுகின்ற நீ அல்லாஹ்வுடைய குர்ஆனிலே எப்போது இன்பத்தை தேடுவாய்? திக்ரிலே எப்போது இன்பத்தை தேடுவாய்? உள்ளத்தை ஓரிடத்தில் உட்காரவை.
அல்லாஹ்வின் தூதர் ﷺ உடைய காலத்தில் வாழ்ந்த அந்த ஃபுகராவுல் முஹாஜிரீன் வல் அன்ஸார் - முஹாஜிர்களும் அன்சாரிகளும் கலந்த ஏழைகளுக்கு அல்லாஹு தஆலா நற்சான்று வழங்குகிறான். எதற்கு சான்று வழங்குகிறான்? அவர்களுடைய நிய்யத்துக்கு அல்லாஹ் நற்சான்று வழங்குகிறான்.
நாளைக்கு நமக்கெல்லாம் மஹ்ஷர்ல போய் நிற்கும்போது தான் நம்ம நிய்யத்துகள் தெரியும். நமக்கு எவ்வளவு ஓட்டை இருந்தது. இந்த நிய்யத்துல எவ்வளவு பிரச்சனை?. அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களுடைய நிய்யத்துக்கு சான்று வழங்கி விட்டான். அமல் ஒரு பக்கம். நிய்யத்து ஒரு பக்கம்.
கண்ணியத்திற்குரிய அந்த தோழர்களை குர்ஆனிலே நீங்கள் புகழ்வதை பார்த்தால் அவர்களுடைய அமலையும் அல்லாஹ் புகழ்வான். அவர்களுடைய நிய்யத்தையும் அல்லாஹ் புகழ்வான். யா ரப்பு! எப்பேர்ப்பட்ட பாக்கியம்! யோசித்துப் பாருங்கள்!
அல்லாஹ் சொல்கிறான்;
يُرِيْدُوْنَ وَجْهَهٗ
(அல்குர்ஆன் 18:28)
அந்த காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை தொழக்கூடியவர்கள், திக்ரு செய்யக்கூடியவர்கள், வணங்கக்கூடியவர்கள், அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக அதை செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய திரு முகத்துக்காக அதை செய்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பாக்கியம் பாருங்கள்.
அல்லாஹ் சொல்கிறான், நபியே! நீங்கள் அப்படி அவர்களோடு இருக்கும்போது நஃப்ஸுடைய ஊசலாட்டங்கள் வரும்.
وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ
அவர்களை விட்டுவிட்டு வேறு பக்கங்களில் வேறு பக்கம் உங்களது கண்கள் சென்று விட வேண்டாம்.
எப்பேர்பட்ட அழுத்தம் பாருங்கள்! அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கண்ணால் கூட பார்த்து விடாதீர்கள். அப்படி கவர்ச்சியை பார்த்து நீங்கள் அதை நோக்கி எழுந்து சென்றுவிடலாம் அல்லவா. அதனால் அவர்களோடு உட்கார்ந்து விட்டீர்களேயானால் பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள். நீங்கள் இங்கும் அங்கும் பார்த்து விடாதீர்கள்.
تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا
நீங்கள் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை, நீங்கள் உலக வாழ்க்கையின் ஆடம்பரத்தை தேடலாமா?
மறுமைக்காக அனுப்பப்பட்ட நபி அல்லவா. உலக மக்களுக்கெல்லாம் முன் உதாரணமாக அனுப்பப்பட்ட நபி அல்லவா.
யோசித்துப் பாருங்கள்! ஒரு சின்ன அளவு துன்யாவுடைய விருப்பத்தை கூட அல்லாஹு தஆலா தனது நபியிடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு சமயம் கொஞ்சம் திர்ஹம், தீனார் வந்தது. ரசூலுல்லாஹி ﷺ பெரும்பாலானதை தர்மம் செய்து விட்டார்கள். கொஞ்சம் மீதம் இருந்தது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிடத்திலே சொல்லி, வையுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்க சென்று விட்டார்கள். ரஸூலுல்லாஹி ﷺ அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. பதற்றப்பட்டார்கள். தனது படுக்கையிலே புரண்டார்கள். எழுந்து சென்று அந்த திர்ஹம், தீனாரை, சில திர்ஹம், தீனார் எடுத்துச் சென்று அதை வெளியிலே தேவை உள்ளவரை தேடி தர்மம் கொடுத்துவிட்டு வந்ததற்கு பிறகுதான் நிம்மதியானார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண்: 25492.
ما شبِع آلُ محمَّدٍ من خُبزِ الشَّعيرِ يومَيْن مُتتابعَيْن حتَّى قُبِض رسولُ اللهِ
ஒருவேளை சாப்பிட்டால் இன்னொரு வேளை பசியாக இருந்தவர்கள். தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறார சாப்பிட்டதில்லை.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 5416.
அப்பேர்ப்பட்ட நபியிடத்தில் என்ன துன்யா இருக்கும் யோசித்துப் பாருங்கள்! உமர் பார்த்துவிட்டு அழுகிறார். உமருக்கு அல்லாஹ்வுடைய தூதரின் மீது அப்பேற்பட்ட பாசம். ஒவ்வொரு சஹாபியும் நபியின் மேல் அப்படி ஒரு பாசம், அந்த பாசத்தை அவருடைய பாணியில் வெளிப்படுத்துவார். அதுல உமருடைய பாசம் வித்தியாசமானது. நபியை யாராவது முறைச்சாலே கழுத்தை வெட்டிடுவேன் என்பார். நபிய யாராவது முறைச்சிட்டாலே போதும் தாங்க முடியாது. நபிக்கு ஒரு சின்ன கஷ்டம்னா துடிச்சி போயிடுவார்.
ரசூலுல்லாஹ்க்கு உமர் மேல ரொம்ப பாசம். விடவே மாட்டாங்க. ஒரு பக்கம் அபூ பக்ரை வைத்துக் கொள்வார்கள், இன்னொரு பக்கம் உமரை வைத்துக் கொள்வார்கள். எப்ப பேசினாலும் நானும், அபூபக்கரும், உமரும் எப்ப பேசினாலும் நானும், அபூபக்கரும், உமரும் என்று மூன்று பேரையும் சேக்காமல் எதையும் சொல்லவே மாட்டாங்க. அப்பேர்ப்பட்ட பாசம் ரசூலுல்லாஹ்விற்கு.
குடும்பத்திலே ஒரு பிரச்சனை. பயந்து பயந்து வரார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. படுத்திருந்த ரசூலுல்லாஹ், உமரைப் பார்த்தவுடனே ரசூலுல்லாஹ் எந்திரிச்சு உட்கார்ந்தாங்க. கடந்த ஒரு மாசமா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழ வைப்பாங்க. மனைவிகள்லே யார்கிட்டயும் பேச மாட்டாங்க. நேரா போய் பரணியில போய் உச்சத்தில போய் உட்கார்ந்து இருப்பாங்க. எல்லா மனைவிக்கும் டென்ஷன். ரசூலுல்லாஹ் மனைவிகளை தலாக்கு விட்டுட்டாங்களோ ன்னு உமருக்கு பயம்.
ரசூலுல்லாஹ் ﷺ எந்திரிச்சு உட்கார்ந்த உடனே உமர் அப்படியே வீட்ல சுத்தி சுத்தி பார்க்கிறார். பரணியில ஒரு சாமானும் இல்லை. வீட்டில் ஒரு சாமானும் இல்லை. ரசூல் ﷺ படுத்த படுக்கையை பார்க்கிறாங்க. பேரித்த மர கீற்றினால் செய்யப்பட்ட பாய். பாய்க்கும் ரசூலுல்லாஹ் உடைய உடம்புக்கும் நடுவுல ஒரு விரிப்பு இல்லை. ரசூலுல்லாஹ் உடைய முதுகை பார்த்தால் அப்படியே கோடு கோடா ரசூலுல்லாஹ் உடைய முதுகு ஃபுல்லா அந்த பாயுடைய கோடு. அழுதுட்டாரு உமர்.
அல்லாஹ்வின் தூதரே! ரோமர்களும், பாரசீகர்களும் இன்பத்தில் சுகத்தில் வாழும் பொழுது நீங்கள் இப்படியா. அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய மாட்டீர்களா? ரசூலுல்லாஹ் சொன்னாங்க; உமரே! ஏன் கவலைப்படுறீங்க? அவர்களுக்கு அவர்களுடைய துன்யா உலகத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டது. நமக்கு நம்முடைய நன்மைகள், நம்முடைய சுகம் நமக்கு சொர்க்கத்தில் இருக்கிறது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 2468.
அப்படி வாழ்ந்த ரசூலை, ﷺ அந்த மஜ்லிஸ்ல நீங்க உட்காரணும். ரொம்ப நேரம் உட்காரணும். பொறுமையா உட்காரனும். அங்கு உட்காரும் போது இங்கு அங்க நீங்க திரும்பி பார்க்க கூடாது என்று சொல்லிவிட்டு, அல்லாஹு தஆலா, நபியே! நீங்கள் துன்யாவை விரும்பலாமான்னு கேட்கிறான். அந்த சபையை விட்டு எழுந்து செல்வது, அந்த சபையில் நீண்ட நேரம் அமராமல் உலக தேவைக்காக வேண்டி எழுந்து செல்வதை இந்த அளவு அல்லாஹ் நபிக்கு கண்டிக்கிறான் என்றால் நமக்கு எல்லாம் எப்பேர்பட்ட கண்டிப்பாக இருக்கும் யோசித்துப் பாருங்கள்!
تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا
கருத்து : நபியே! உங்களுக்கு பளப்பளப்பான உலகம் (துன்யாவுடைய லக்ஸரி) வேண்டுமா? (அல்குர்ஆன் 18:28)
وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا
கருத்து : நம்மை நினைக்காதவர் இருக்கின்றாரே, நம்முடைய திக்ரை மறந்த அவர் பின்னால் சென்று விடாதீர். அவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாதீர்! அவன் எவ்வளவு பணக்காரனாக இருக்கட்டும், எவ்வளவு இரத்த உறவாக இருக்கட்டும், அவன் பின்னால் செல்லாதீர்!
وَاتَّبَعَ هَوٰٮهُ
அவன் மன இச்சையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்ற அவனோடு செல்லாதீர்.
யாரோட பழக வேண்டும்? யாரோடு பழகக் கூடாது? என்று நபிக்கு அல்லாஹ் அறிவுரை சொல்கிறான்.
وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
அவன் மார்க்கத்தை மீறிக்கொண்டே இருக்கிறான். என் கட்டளையை மீறிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பின்னால் செல்லாதீர். அவனோடு அமராதீர். அவனோடு நட்பு வைக்காதீர்.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு சொல்வதின் மூலமாக நமக்கு இந்த வசனத்திலே 28 வது வசனத்திலே மிகப்பெரிய படிப்பினையை சொல்கிறான்.
இன்று நம்முடைய ஈமான் ஏன் அதிகரிப்பதில்லை? நம்முடைய உள்ளத்தில் ஏன் அல்லாஹ்வுடைய நினைவுகள் பசுமையாக இருப்பதில்லை? ஏன் நமக்கு அந்த உள்ளத்தின் தூய்மை கிடைப்பதில்லை என்று சொன்னால், நம்முடைய நண்பர்கள் அப்படி. நமக்கு துன்யாவை நினைவூட்டுவார்கள். மறுமையை மறக்க செய்து விடுவார்கள். நமக்கு உலக ஆசைகளை கொடுப்பார்கள். ஆகிரத்தின் ஆசையை, தேடலை, பயத்தை உள்ளத்திலிருந்து எடுத்து விடுவார்கள்.
துன்யாவை பற்றி பேசி பேசி அதன் மீது பேராசையை உள்ளத்திலே நிரப்பி விடுவார்கள். மறுமையை பற்றி கேட்க மாட்டார்கள். நம்மிடத்தில் யாராவது கேட்கின்றார்களா? இன்னைக்கு எத்தனை ஜுஸ்உ குர்ஆன் ஓதுனீங்க? இன்னைக்கு அஞ்சு வக்து தொழுகையை ஜமாத்தோடு தொழுதீங்களானு கேட்கிறார்களா? யாரைப் பாருங்க! எங்க படிச்சீங்க? என்ன படிச்சீங்க? என்ன டிகிரி? எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்? வீடு சொந்த வீடா? வாடகை வீடா? கார் வச்சிருக்கீங்களா? பங்களா வச்சிருக்கீங்களா? கையில இருக்கிற போன் என்ன போன்? ஐ போனா? சாம்சங் செல்போனா?
சகோதரர்களே! இந்த வசனத்தை வைத்து சொல்லுங்கள். நான் அல்லாஹ்வினுடைய மார்க்கத்தில் தான் இருக்கிறோமா? எந்த மார்க்கத்திற்கு இன்று குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டதோ அந்த மார்க்கத்தில் தான் நாம் இருக்கிறோமா?
அன்பு சகோதரர்களே! இன்று நம்முடைய முஸ்லிம் வாலிபர்கள் அது போன்று நம்முடைய வாலிப சகோதரிகள் ஏன் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு தூரம் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்? அவர்கள் யாருடன் நட்பு வைக்கிறார்களோ அவர்கள் மிக முக்கிய காரணம்.
ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
إِنِّما مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ ، وجَلِيسِ السُّوءِ ، كَحامِلِ المِسْكِ ، ونافِخِ الكِيرِ ، فَحامِلُ المِسْكِ ، إِمَّا أنْ يَحْذِيَكَ ، وإِمَّا أنْ تَبْتَاعَ مِنْهُ ، وإِمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً ، ونافِخُ الكِيرِ ، إِمَّا أنْ يَحْرِقَ ثَيابَكَ ، وإِمَّا أنْ تَجِدَ رِيحًا خَبيثَةً
நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரியை விற்பவனை போல. அவனிடத்திலே நீ அமர்ந்தால், நீ வாங்கலாம். அவன் உனக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம். இல்லையென்றால் அந்த வாசனையாவது உனக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். (கெட்ட நண்பர்களோடு சேராதே). கெட்ட நண்பனுக்கு உதாரணம் கொல்லனைப் போல. அவனுடைய நெருப்பு உன்னுடைய ஆடையை எரிக்கலாம். அல்லது அவனுடைய துர்வாடையால் நீ சிரமப்படலாம். கண்டிப்பாக ஏதாவது ஒன்று நடக்கும். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2101.
இன்று நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு யாரோடு நட்பு வைத்திருக்கிறோம், யாரோட பழகுகிறோம் அதை சொல்லித் தருவதில்லை. நாமும் நம்முடைய வாழ்க்கையிலே உணர்வதில்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று பல நல்லவர்கள் கெட்டதற்கு காரணம் அவர்களுடைய நண்பர்கள். அவர்களுடைய தோழர்கள். அவர்கள் யாருடன் அமருகிறார்கள், யாரோடு செல்கிறார்கள், அது அவர்களை மாற்றுகின்றது.
ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்;
الرجلُ على دينِ خليلِه فلينظرْ أحدُكم من يُخالِلُ
நீங்கள் யாரோடு நட்பு வைக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மனிதன் அவனுடைய நண்பனின் மார்க்கத்தில் தான் இருப்பான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி எண்: 2378, அபூதாவூத் எண்: 4833.
கண்ணியத்திற்குரியவர்களே! மிகப்பெரிய எச்சரிக்கையில் உபதேசங்கள் நிறைந்த வசனம்! சூரா கஹ்ஃப் உடைய முக்கியமான ஒரு உபதேசம். யாருக்கு அல்லாஹ் சொல்கிறான்? நபிக்கு சொல்வதின் மூலமாக அவர்களுடைய உம்மத்தாகிய நமக்கு சொல்கிறான்.
ஆகவே தான் குர்ஆனுடைய சபைகள், கல்வி சபைகள், பயானுடைய சபைகள், மார்க்க உரைகள், அதுபோன்று ஜுமுஆவுடைய தொழுகையில் நடக்கக்கூடிய குத்பா;
اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! (அல்குர்ஆன் 62:9)
அல்லாஹ்வுடைய உபதேசத்தை கேட்பதற்கு ஓடி வந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
கதீபுடைய உபதேசம் என்று சொல்லவில்லை. ஏன்? அவர் சொல்லுவது யாருடைய சொல்லை? அல்லாஹ்வுடைய சொல்லை.
அன்பிற்குரியவர்களே! எந்த ஒரு சிகிச்சையை அல்லாஹ் ரசூலுல்லாஹ்விற்கு சொன்னானோ அதே சிகிச்சை தான் நமக்கு. நம்முடைய ஈமான் கூட வேண்டுமா? நம்முடைய அல்லாஹ்வுடைய முஹப்பத் கூட வேண்டுமா? நம்முடைய ஆகிரத்துடைய தேடல் கூட வேண்டுமா? அதற்கு அல்லாஹ்வுடைய அச்சமிக்க நல்லோர்கள், இறைநேசர்கள், ஸாலிஹீன்களுடைய தொடர்பு அந்த அச்சத்தை பற்றி, நினைவை பற்றி, மறுமையை பற்றி, மார்க்கத்தை பற்றி பேசக்கூடிய அந்த சபைகள்.
அல்லாஹு தஆலா இதன் மூலமாக நம்முடைய யக்கீனை, நம்முடைய ஈமானை பரிசுத்தப்படுத்துகின்றான். அதிகப்படுத்துகின்றான்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும், உங்களுக்கும் அத்தகைய சபைகளிலே, அமர்வுகளிலே அதிகம் அதிகம் கலந்து கொள்வதற்கு அருள் புரிவானாக! நல்ல தோழர்களை அல்லாஹு தஆலா நமக்கு எளிதாக தருவானாக! கெட்ட நண்பர்களாக இருப்பதை விட்டும், கெட்ட நண்பர்களுக்கு தோழர்களாக இருப்பதை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
إِنِّما مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ ، وجَلِيسِ السُّوءِ ، كَحامِلِ المِسْكِ ، ونافِخِ الكِيرِ ، فَحامِلُ المِسْكِ ، إِمَّا أنْ يَحْذِيَكَ ، وإِمَّا أنْ تَبْتَاعَ مِنْهُ ، وإِمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً ، ونافِخُ الكِيرِ ، إِمَّا أنْ يَحْرِقَ ثَيابَكَ ، وإِمَّا أنْ تَجِدَ رِيحًا خَبيثَةً خلاصة حكم المحدث : صحيح الراوي : أبو موسى الأشعري | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 236 التخريج : أخرجه البخاري (2101)، ومسلم (2628) باختلاف يسير
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம், கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையும் ஆகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம். கொல்லனின் உலையானது, உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்துவிடும்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையையாவது நீர் அடைந்தே தீருவாய்.
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண்: 2101.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/