வாழ்க்கை எதற்காக? | Tamil Bayan - 1010
வாழ்க்கை எதற்காக?
ஜுமுஆ குத்பா தலைப்பு : வாழ்க்கை எதற்காக?
வரிசை : 1010
இடம் : மஸ்ஜித் உஸ்மான் இப்னு அஃப்ஃபான், ராஜபாளையம்
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-11-2025 | 16-05-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வின் கண்ணியத்திற்குரிய இறுதி தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் நேசத்திற்குரிய தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும்;
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை, இறையச்சத்தை, தக்வாவை உபதேசம் செய்தவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அருளையும், மறுமையில் மகத்தான சொர்க்கத்தையும் வேண்டியவனாகவும், இந்த ஜுமுஆ குத்பா உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! நமது பெற்றோரை மன்னிப்பானாக! நமது முஃமினான முன்னோர்களை அல்லாஹு தஆலா மன்னித்து அருள்வானாக!
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உறுதியாகப் பிடித்தவர்களாகவும், அல்லாஹு தஆலா இந்த பூமியில் நம்மை எதற்காக படைத்தானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றியவர்களாகவும், அல்லாஹ்வை நினைத்தவர்களாகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களாகவும் வாழ்வதற்கு, அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக!
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா, அவனது கண்ணியத்திற்குரிய வேதமான அல்குர்ஆனில் சூரத்துல் முஃமினூன் என்ற அத்தியாயத்தின் 115-வது வசனத்தில் நம்மை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறான்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு நிராகரிப்பாளர்களையும், முஷ்ரிக்குகளையும் பார்த்து கேட்கப்பட்ட அந்த கேள்வி, இன்று முஸ்லிம்களாகிய நமக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
யாரைப் பார்த்து அல்லாஹ் இந்த கேள்வியை கேட்டான்? முஷ்ரிக்குகளை பார்த்து கேட்டான். மறுமை நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை பார்த்து கேட்டான்.
அல்லாஹ்வை அறியாமல் இருந்தார்களே, சிலைகளை கடவுள்களாக நம்பிக் கொண்டிருந்தார்களே, படைத்த இறைவன் யார் என்று தெரிந்திருந்தும் அவனை வணங்காமல் இருந்தார்களே, முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிந்திருந்தும், அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், நம்பிக்கை கொள்ளாமல், அவர்களின் வழியைப் பின்தொடராமல் இருந்தார்களே — அந்த முஷ்ரிக்குகளை பார்த்து தான் அல்லாஹு தஆலா இந்த கேள்வியை கேட்கிறான்.
அந்த கேள்வி 1400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் அதை வாசிக்கும்போது, அல்குர்ஆனில் முஸ்லிம்களாகிய நம்மிடமே கேட்கப்பட்டதைப் போல இருக்கிறது. காரணம் என்ன?
நம்மிடத்தில் இஸ்லாம் என்ற மார்க்கத்தின் பெயர் இருக்கிறது. ஆனால் அதனுடைய சட்டங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றனவா? அதனுடைய ஒழுக்கங்கள் நடைமுறையில் இருக்கின்றனவா?
“இஸ்லாம் தான் எனது வாழ்க்கை, எனது உயிர் மூச்சு இஸ்லாமில் தான் இருக்கிறது” என்ற சிந்தனையோடு காலையில் எழுபவர்கள் எத்தனை பேர்?
இரவில் தூங்கும் போது, “இன்று நான் இஸ்லாமுக்காக என்ன செய்தேன்? என் மறுமைக்காக என்ன செய்தேன்? என்னைப் படைத்த இறைவனை திருப்திப்படுத்துவதற்காக எதை நான் தியாகம் செய்தேன்?” என்ற சிந்தனையோடும், சுய பரிசோதனையோடும், நம்மை நாமே கேள்வி கேட்டு நமது இரவைத் தொடங்குகிறோமா?
நமக்குள் என்ன பெருமை! “நான்தான் தொழுது விட்டேனே, நான்தான் தாடி வைத்திருக்கிறேனே, நான்தான் புர்கா போட்டிருக்கிறேனே, நான்தான் இஸ்லாமிய பெயரை வைத்திருக்கிறேனே” என்ற நினைப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாம் என்னால் பரவுகிறதா? நான் இந்த மார்க்கத்திற்காக என்ன தியாகங்களை செய்தேன்? அல்லாஹ்வுடைய சொல்லை எத்தனை பேருக்கு கொண்டு போய் சேர்த்தேன்? அல்லாஹ்வுடைய வாக்கை நிலைநிறுத்தினேனா? அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தேனா? அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ்வுடைய அடியார்களிடம் பேசினேனா? இன்னொரு பக்கம், முதலில் நாம் தெரிந்து கொள்கிறோமா?
அல்லாஹ்வுடைய வல்லமை ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் புதுப்பிக்கப்படுகிறதா? நம்முடைய ஈமான் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதா? அல்லாஹ்வின் மீதான அன்பு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறதா?
அல்லாஹ்வின் மீது உள்ள பாசத்தால், ஒரு நாளிலாவது நாம் தனிமையில் அழுகின்றோமா? சுஜூதிலே இருக்கும்போது, அல்லாஹ்வுடைய நெருக்கத்தில் இருக்கும் போது,
நமது கல்பு —ஒரு பக்கம் அல்லாஹ்வின் அன்பினாலும், இன்னொரு பக்கம் அல்லாஹ்வின் பயத்தினாலும் —துடிக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்!
ஏதோ போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஏதோ ஒரு நினைப்பில் நாம் இருக்கிறோம். ஆனால் வாழ்க்கை இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது.
அல்லாஹு தஆலா கேட்கிறான்;
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (அல்குர்ஆன் 23:115)
வசனத்தின் கருத்து : மக்களே நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் உங்களை வீணாக படைத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டீர்களா? நீங்கள் படைக்கப்பட்டதற்கு நோக்கமில்லை என்ற எண்ணத்தில் வாழ்கிறீர்களா? நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்ற நினைப்பில் இருக்கின்றீர்களா? நீங்கள் சாக மாட்டீர்களா? செத்தால் எங்கே செல்வீர்கள்? உங்களை படைத்த உங்களது இறைவனிடத்தில் நீங்கள் சமர்ப்பிக்கப்பட மாட்டீர்களா? உங்களுக்கு மரணம் இல்லாத வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டீர்களா? மறுமை நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?
இறைவனுக்கு முன்னால் இந்த உலக வாழ்க்கையிலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நேரத்திற்கும், ஒவ்வொரு நிமிடத்திற்கும் நீங்கள் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு அருட்கொடைக்கும், நீங்கள் சுவாசித்த ஒவ்வொரு மூச்சுக்கும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைத்து பார்த்தீர்களா? எப்பேர்ப்பட்ட வசனம்!
اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
அன்பு சகோதரர்களே! இந்த வசனம் தான் அபூ பக்ரை மாற்றியது. உமரை மாற்றியது. அந்த சஹாபாக்களை இஸ்லாமின் அழைப்பாளர்களாக, உலக மக்களுக்கெல்லாம் இந்த மார்க்கத்தை சுமந்து செல்லக்கூடிய வீரர்களாக, தியாகிகளாக உருவாக்கியது.
இச்சைக்காக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சுகபோகத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரபுகள்! அவர்களுக்கு என்ன தெரியும்? சூதாடுவது தெரியும், கால்நடைகளை மேய்ப்பது தெரியும், கொள்ளையடிப்பது தெரியும், கவி பாடுவது தெரியும்.
இப்படி இருந்த மக்களை அல்லாஹு தஆலா மலக்குகளின் தரஜாவிற்கு உயர்த்தினானே! இப்படி இருந்த மக்களை பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே புகழ்ந்தானே! ஏன்? இந்த வசனங்கள் அவர்களுடைய காதுகளில் மட்டும் ஒலிக்கவில்லை. அவர்களுடைய உள்ளங்களை மாற்றின. அவர்களுடைய சிந்தனைகளை மாற்றின. அவர்களுடைய உடை, நடை, பாவனை, அவர்களுடைய வியாபாரம், தொழில், துறை, காலை, மாலை, இரவு என இஸ்லாம், இஸ்லாம், மார்க்கம், மார்க்கம், ஈமான், ஈமான், ஈமான் என்ற அதே கொள்கையிலே வாழ்ந்தார்கள். அந்த சொற்ப கூட்டம் உலகத்திற்கே வெளிச்சத்தை கொடுத்து விட்டுச் சென்றார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் தஆலா நமக்கு சொல்கிறான்;
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
ஏன் அல்லாஹு தஆலா நம்மை படைத்தான்? சிலர் சொல்வார்கள்; வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று. ஆம்! இந்த வாழ்க்கை வாழ்வதற்கு தான். எப்படி வாழ்வதற்கு? அல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்கு. படைத்த ரப்பை வணங்கி வாழ்வதற்கு.
அல்லாஹு தஆலா நமக்கு வாழ்க்கையை கொடுத்தானே தவிர, மன இச்சைக்காக அல்ல. ஆடம்பரங்களை தேடுவதற்காக அல்ல. சுகபோகமாக வாழ்ந்து விட்டு செல்வதற்காக அல்ல. இந்த உலகத்திலே மனிதன் சுகபோகத்தை தேடி என்ன சுகமான வாழ்க்கையை எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து கழித்து விடுவான் என்று யோசித்துப் பாருங்கள்!
மரணம் என்ற அந்தப் பிடியை அல்லாஹு தஆலா அவனுடைய கரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் தஆலா சுண்டி இழுத்து விடுவான். ரப்பிடத்திலே படைத்த அந்த வல்லோன் இடத்திலே யாரும் போட்டி போட முடியாது. யாரும் எதிர்க்க முடியாது. நம்முடைய சரீரமும், அந்த சரீரத்தின் அமைப்பும், அந்த ரப்புடைய கட்டளையிலே இருக்கிறது.
وَجَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ الْاَفْـــِٕدَةَ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (அல்குர்ஆன் 67:23)
பார்வை கொடுத்தவனுக்கு பார்வையை பறிக்கத் தெரியும். செவியை கொடுத்தவனுக்கு செவியை எடுக்கவும் தெரியும். அறிவை கொடுத்தவனுக்கு ஒருவனை பைத்தியமாகவும் ஆக்க முடியும். கை கால்களில் பிடிக்கின்ற, நடக்கின்ற ஆற்றலை கொடுத்தவனுக்கு அந்த கை கால்களை ஆற்றல் இல்லாமல் பலவீனப்படுத்தவும் முடியும். எங்கே தப்பித்து விடுவான் மனிதன்? அல்லாஹ்விடத்தில் போட்டி போட முடியுமா?
அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு எதற்காக இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம்?
அல்லாஹ் சொல்கிறான்;
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
என்னை வணங்குவதற்காக தவிர மனிதர்களை ஜின்களை நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
இந்த வாழ்விலே நாம் அனுப்பப்பட்டது நம்மை படைத்த இறைவனை, அல்லாஹ்வை வணங்குவதற்காக. நம்முடைய நோக்கமாக, நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையை என்ன குறிக்கோளோடு வாழ்கிறீர்கள் என்று கேட்டால், நம்மில் யாருக்காவது நான் அல்லாஹ்வை வணங்கி, அல்லாஹ்வுடைய ஒரு பரிபூரணமான ஒரு அடியானாக மாறி, அல்லாஹ்விடத்தில் செல்ல வேண்டும் அதுதான் என்னுடைய நோக்கம் என்று நம்மால் சொல்ல முடியுமா? அப்படி ஒரு பதில் நம்மிடத்திலே வருமா?
வாழ்க்கையிலே நோக்கம் என்று கேட்டால் பலருக்கு அவர்களுடைய படிப்பு நினைவிற்கு வரலாம், அவர்களுடைய தொழில் நினைவிற்கு வரலாம், அப்படித்தான் இருக்கின்றோம்.
உங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் என்ன? உங்களுடைய வாழ்க்கையுடைய குறிக்கோள் என்ன என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்? நம்முடைய வியாபாரம் தான் நமக்கு நினைவிற்கு வரும். நம்முடைய தொழில் நினைவிற்கு வரும். நாம் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்த்து விட்டு செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு நினைவிற்கு வரும்.
அல்லாஹ்வுடைய நபி நினைவிற்கு வந்தார்களா? எந்த நபி நின்றார்கள், நின்றார்கள், ஓடினார்கள் ஓடினார்கள், அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக இறுதிவரை இறுதி மூச்சு வரை தன்னுடைய வாலிபத்தை, தன்னுடைய ஆற்றலை, தன்னுடைய குடும்பத்தை, தனக்கு அல்லாஹ் கொடுத்த அத்தனை நிஃமத்துகளையும் இந்த தீன் ஒன்றுக்காகவே செலவழித்து, இறுதியாக மரணிக்கும் போது இந்த துன்யாவிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளாமல் இறந்தார்களே அந்த நபியை நினைத்துப் பார்த்தோமா!
அந்த நபி சிலருக்கு மவ்லிது மீலாதுகளில் மட்டும் நினைவிற்கு வருவார்கள். அந்த நபியின் தியாகங்கள் நினைவிற்கு வராது. அந்த நபியினுடைய இறைப்பணி அவர்களுக்கு நினைவிற்கு வராது. அவர்களுடைய பசி, பட்டினி நினைவிற்கு வராது. பத்ரும் உஹதும், ஹன்தக்கும் ஹுனைனும் அவர்களுக்கு நினைவிற்கு வராது.
அந்த நபியினுடைய பல் உடைந்ததே, முகம் உடைக்கப்பட்டதே, அந்த நபியின் தோழர்கள் கொல்லப்பட்டார்களே, படுகொலை செய்யப்பட்டார்களே, அந்த நபியின் மகள் இந்த தீனுக்காக காயப்படுத்தப்பட்டார்களே, இதையெல்லாம் நமக்கு நினைவிற்கு வருகின்றதா? நினைத்துப் பார்த்து அழுகின்றோமா? நம்முடைய கண் கலங்கி இருக்கிறதா?
ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய வரலாறை படித்துப் பாருங்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் அவரை ஒரு பேரரசனாக அனுப்பி இருக்கலாம். என்னுடைய அந்த இறைத்தூதர் அரேபிய பாலைவனம் தங்கமாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அல்லாஹ் ஆக்கி கொடுத்திருப்பானோ, அந்த இறைத் தூதர் இப்படி சிரமத்திலா வாழ்ந்தார்கள்? இப்படிப்பட்ட கஷ்டத்திலா வாழ்ந்தார்கள்? இவ்வளவு பசியிலா வாழ்ந்தார்கள்? இவ்வளவு சிரமத்துக்கு இவ்வளவு அச்சுறுத்தல்கள் இவ்வளவு நெருக்கடிக்கு இடையிலா வாழ்ந்தார்கள்? என்று யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? அந்த வரலாறுகளை படிக்கும் போது சிந்தித்துப் பார்த்து அழுதிருக்கின்றோமா? என்ன உணர்வோடு வாழ்கின்றோம்?
அல்லாஹு தஆலா நம்மை எதற்காக படைத்தான்? அவனை வணங்குவதற்காக படைத்தான். அல்லாஹ்வை வணங்க வேண்டும், வாழ்க்கையை வணக்கமாக ஆக்க வேண்டும். இபாதத் என்றால் என்ன? தொழுதால் முடிந்து விட்டதா? நோன்பினால் இபாதத்துக்கள் முடிந்து விட்டதா?
அன்புச் சகோதர்களே! இஸ்லாம் அல்லாஹ்வுடைய இந்த தீன் என்பது இபாதத்தை மஸ்ஜிதுக்குள் அடக்கவில்லை. தொழுகையில் அடக்கவில்லை. தொழுகை அல்லாஹ்வை வணங்குவதற்குரிய மிகப்பெரிய வெளிப்பாடு. அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான வணக்கம். அதே நேரத்தில் அந்த தொழுகையை சரியாக தொழும்படி கட்டளை இட்ட அல்லாஹு தஆலா, அந்த தொழுகையை நேரம் தவறாமல் சரியாக எதிர்பார்த்திருந்து தொழுங்கள் என்று கூறுகிறான்.
இன்று நாம் எப்படி தொழுகிறோம்? தொழுகை நம்மை எதிர்பார்க்கின்றது. எவ்வளவு நேரம் கழித்து ஜுமுஆ தொழுகிறோம்? எவ்வளவு நேரம் கழித்து நாம் தொழுகிறோம்? நாம் தொழுகையை எதிர்பார்த்தோமா? அல்லது தொழுகை நம்மை எதிர்பார்க்கிறதா?
இன்று நம்முடைய தொழுகைகள் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாம் தொழுகையை எதிர்பார்ப்பதில்லை . தொழுகைக்காக ஏங்குகிறோமா? ஓடி வருகிறோமா? என்ன ஒரு தக்வாவை தொழுகையில் உணர்கிறோம்.
ஒவ்வொரு தொழுகையும் ஏதோ ஒரு உப்பு போடாத சோறு மாதிரி. ஸ்வீட், ஆனால் இனிப்பில்லை. சுகர் பேசன்ட்க்கு செஞ்சமாரி.
தொழுகும் போது அப்பேற்பட்ட ஒரு தேடல், சொர்க்கத்தின் தேடல், கண்களில் கண்ணீர் கலந்த ஒரு பயம், ஒரு இறையச்சம் எங்கே?
எப்படா தொழுக முடியும்? எவ்வளவு சீக்கிரமாக தொழுகை முடிகின்றதோ அவ்வளவு சந்தோஷத்தோடு செல்வார்கள். மஸ்ஜிதிலே நம்மால் இருக்க முடிகிறதா? கொஞ்ச நேரம். அதான் - பாங்கு இப்பதான் சொல்கிறார்கள். இகாமத்துக்கு இன்னும் 15 நிமிடம் இருக்கு.
எவ்வளவு நாம் அல்லாஹ்விடம் இருந்து தூரமாக இருக்கிறோம் என்று யோசித்தீர்களா? நம்முடைய வேலைகளுக்கு, நம்முடைய தொழில்களுக்கு முன்கூட்டி சென்று விடுவோம். அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகள் என்றால் எவ்வளவு அதை கடத்த முடியுமோ, தள்ள முடியுமோ அவ்வளவு கடத்திவிட்டு கடைசியாக அதை சேர்வதற்கு முயற்சி செய்வோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! தொழுகையை கூறி அல்லாஹு தஆலா இதையும் சொல்கிறானே! எவ்வளவு பெரிய அருமையான மார்க்கம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது!
وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَ
மோசடிக்காரர்களுக்கு நாசம்தான். அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள். இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்). (அல்குர்ஆன் 83:1-3)
கருத்து : மக்களுக்கு அளந்து கொடுக்கும் போதோ, அல்லது நிறுத்து கொடுக்கும் போதோ, யார் மோசடி செய்கிறார்களோ அளவையில், நிறுவையில் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்! அவர்கள் அழிந்து போகட்டும்!
நம்முடைய மார்க்கத்தில் தொழுகை மட்டுமா இருக்கின்றது?
தொழுகையை நிலை நிறுத்தங்கள் என்று சொல்லக்கூடிய அல்லாஹு தஆலா,
وَاَوْفُوْا بِعَهْدِىْٓ
இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2:40)
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் செய்து கொடுக்கக்கூடிய வாக்கை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறானே!
இன்று நம்மிடத்தில் இருக்கின்றதா? அண்ணன் தம்பிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்றாரா? பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்றார்களா? ஒரு பங்காளி இன்னொரு பங்காளிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்றார்களா?
எந்த மார்க்கம் தஹஜ்ஜத் தொழுகையுடைய நன்மையை சொன்னதோ, அதே மார்க்கம் தானே அண்டை வீட்டார் பசித்திருக்க நீ வயிறு நிரம்ப உண்டு தூங்கினால் நீ முஃமின் இல்லை; விசுவாசி இல்லை என்று கூறுகிறது.
பிறருடைய பசியை போக்க நாம் என்ன செய்கிறோம்? நம்முடைய உறவுகளில் எத்தனை பேர் பசியோடு இருக்கிறார்கள்? அவர்களுடைய வலியை உணர்ந்தோமா? குர்ஆனிலே தொழுகை மட்டுமா சொல்லப்பட்டது? ஜக்காத் சொல்லப்படவில்லையா? அல்லாஹ்வுடைய வேதத்திலே தான தர்மங்கள் சொல்லப்படவில்லையா?
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11) وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12) فَكُّ رَقَبَةٍ (13) أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14) يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15) أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை. (நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல், அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல், (யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு, அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்). (அல்குர்ஆன் 90:11-16)
தர்மத்தை அல்லாஹ் சொல்லவில்லையா? நீ அல்லாஹ்வை நினைத்தால் போதும் என்று அல்லாஹ் சொன்னானா?
وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا
இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (அல்குர்ஆன் 17:23) (குறிப்பு:1)
நீ உன் பெற்றோரை மறந்து விடாதே! அவர்கள் உன்னை சிறு பருவத்தில் எப்படி வாழ வைத்தார்கள்? உன்னை வளர்த்தார்கள்? உனக்காக எவ்வளவு சிரமப்பட்டார்கள்? என்பதை மறந்து விடாதே! என்று அல்லாஹ் சொல்கின்றானே! நாம் நினைத்துப் பார்த்தோமா? பெற்றோர்களுக்காக துஆ செய் என்று அல்லாஹ் சொன்னானே, அதை நினைத்துப் பார்த்தோமா?
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மார்க்கத்தில் நாம் குழம்பி போய் இருக்கின்றோம். மார்க்கத்தை தவறாக புரிந்து வைத்திருக்கின்றோம். நம்மில் ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்தமான சில பகுதிகளை மார்க்கத்தில் வைத்துக் கொண்டு திருப்தி அடைந்து கொண்டிருக்கின்றோம்.
اَلْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ
இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். (அல்குர்ஆன் 5:3) (குறிப்பு:2)
முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நான் இருக்கின்றேனா? ரசூலுல்லாஹி ﷺ உடைய இறுதி ஹஜ்ஜிலே இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்தேன். உங்களுக்கு அருட்கொடையை முழுமைப்படுத்தினேன். உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக ஏற்று பொருந்தி கொண்டேன் என்று எந்த தீனை குறித்து அல்லாஹு தஆலா சொல்கிறானோ, அந்த முழுமையான மார்க்கம் இருக்கின்றதா?
சிலருக்கு தாடியிலே மார்க்கம் இருந்தால் வாக்கிலே நாக்கிலே மார்க்கம் இல்லை. சிலருக்கு பேசுவதில் மார்க்கம் இருக்கின்றது. செயல்களில் மார்க்கம் இல்லை. எங்கே இஸ்லாமிய ஒழுக்கங்கள்? எங்கே இஸ்லாமிய கட்டுப்பாடுகள்? நம்முடைய திருமணங்கள் எப்படி இருக்கின்றன?
நம்முடைய கொடுக்கல் வாங்கல் எப்படி இருக்கின்றது? நம்முடைய சமூக உறவு எப்படி இருக்கின்றது? இதையெல்லாம் கற்றுக் கொள்வதற்காக நமக்கு காலம் இருக்கின்றதா? தெரிந்து கொள்ள நேரம் இருக்கின்றதா?
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா நமக்கு ஒரு முழுமையான மார்க்கத்தை கொடுத்தான். நிறைவான மார்க்கத்தை கொடுத்தான். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கின்ற வரை உள்ள சட்டங்களின் மார்க்கத்தை கொடுத்தான்.
தொழுகையுடைய சட்டங்கள் மட்டுமா இந்த மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது? எப்படி தூங்க வேண்டும்? அதனுடைய ஒழுக்கங்கள், மனைவியுடைய ஒழுக்கங்கள், மனைவியோடு கணவன் எப்படி பேச வேண்டும்? ஆசையை தீர்த்துக் கொள்வதற்கு கூட வழிமுறைகள், ஹலால் இது, ஹராம் இது; ஹலாலான மனைவியிடத்திலே இது உனக்கு ஹலால், இது உனக்கு ஹராம் என்று அல்லாஹ்வுடைய தீன் நமக்கு கற்பிக்கின்றது.
ஒரு மனிதன் சுய தேவைக்கு சென்றால் கூட இப்படித்தான் செல்ல வேண்டும். இப்படித்தான் உட்கார வேண்டும். இந்த திசையில் தான் உட்கார வேண்டும். இப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கக்கூடிய அற்புதமான மார்க்கமாயிற்றே.
இந்த மார்க்கத்திலே எதற்கு நமக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நம்முடைய மார்க்கத்திலே எதற்கு கட்டுப்பாடுகள் சொல்லிக் கொடுக்கப்படவில்லை? எவ்வளவு அருமையான மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்தான்.
நம்முடைய குடும்ப வாழ்க்கை, நம்முடைய சமூக வாழ்க்கை, பிற மத மக்களோடு எப்படி வாழ வேண்டும்? பிற மத சகோதரர்களோடு நம்முடைய தொடர்புகள் எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய மஸ்ஜித் எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றுக்கும் உள்ள சட்டத்தை அல்லாஹு தஆலா அற்புதமான அல்குர்ஆனிலே கொடுத்தானே,
இதை படிக்கவாவது நமக்கு நேரம் இருக்கின்றதா? குர்ஆனை பொருளுணர்ந்து எத்தனை முறை படித்திருக்கிறோம்? சிந்தித்துப் பாருங்கள்! குர்ஆனுடைய தர்ஜமாவை எத்தனை முறை நாம் படித்திருக்கிறோம்? எத்தனை முறை வசனங்களில் நின்று சிந்தித்து படித்து இருக்கிறோம் என்று.
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ
ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? (அல்குர்ஆன் 47:24)
குர்ஆனை சிந்தித்து பார்க்க மாட்டீர்களா? குர்ஆனை ஆராய மாட்டீர்களா? புத்தியுள்ளவர்களே! குர்ஆனை நீங்கள் புரிய மாட்டீர்களா? அறிவுள்ளவர்களே! இந்த குர்ஆனை நீங்கள் யோசிக்க மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கின்றானே!
அந்த இடத்தில் நின்று இருக்கின்றோமா? ஒன்றுக்கு இரண்டு முறை, மூன்று முறை, ஐந்து முறை அதை திரும்ப படிக்கின்றோமா?
நாமெல்லாம் ரொம்ப பிஸி. நமக்கு எவ்வளவு வேலை இருக்கின்றது. எவ்வளவு நமக்கு கடமைகள் இருக்கின்றன. டீக்கடையில் நின்று அரை மணி நேரம் டீ குடிக்க வேண்டும். செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும். ஒருவரிடத்தில் வெட்டியாக போன் பேசி, என்ன பார்த்தாய்? எங்கே போனாய்? என்று பேசி, எவ்வளவு முக்கியமான வேலை.
ஒரு கல்யாணத்திற்கு சென்றால் என்ன பிரியாணி? எவ்வளவு செலவு? எத்தனை பேர்? எவ்வளவு கேள்வி கேட்க வேண்டியது இருக்கிறது. எவ்வளவு முக்கியமான வேலை இருக்கிறது.
நம்மை விட அதிகமான வேலை பெண்களுக்கு. ஊரில் என்ன நடக்கின்றதோ, ஊர் மஹல்லாவில் என்ன நடக்கின்றதோ எல்லாம் அவர்களுக்கு தெரிந்தாக வேண்டும். எவ்வளவு பேச்சுகள் முக்கியமான பேச்சுகள் நாம் பேச வேண்டி இருக்கின்றது. எவ்வளவு வீணர்களாக இருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எவ்வளவு அலட்சியக்காரர்களாக இருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
அல்லாஹ் தஆலா படி, படி, படி என்று சொன்னானே, அதை தொடர்ந்து படிக்க நேரமில்லை. அல்லாஹ்வின் வல்லமையை பற்றிய வசனங்களை நினைத்துப் பார்க்கின்றோமா? மறுமையை பற்றிய வசனங்களை நினைத்துப் பார்க்கின்றோமா?
அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ ஒரு வசனங்களை சொன்னார்கள். தூக்கம் போய்விட்டது அவர்களுக்கு.
وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
உங்களில் எல்லோரும் அதன் மீது கடந்து சென்றே ஆக வேண்டும். அது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட உறுதியான காரியமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 19:71)
நீங்கள் எல்லோரும் அந்த சிராத் பாலத்தை கடந்து தான் ஆக வேண்டும். இது அல்லாஹ் உங்களுக்காக தன் மீது விதித்து கொண்ட விதி.
நரகத்தின் மீது போடப்பட்ட அந்த பாலத்தை கடக்காமல் நீங்கள் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. அவருக்கு ராத்திரியில தூக்கம் வரல. பிறகு ரசூலுல்லாஹி ﷺ;
ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا
பிறகு, எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் (நரகத்தில் விழுந்துவிடாமல்) பாதுகாப்போம். இன்னும், அநியாயக்காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி) விட்டுவிடுவோம். (அல்குர்ஆன் : 19:72)
தக்வா உள்ளவர்களை நாம் பாதுகாப்போம் என்ற வசனத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஓதி காட்டியவுடன் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்கிறார்கள்.
குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்தை படிக்கும் போது இது அல்லாஹ் என்னை பார்த்து பேசுகிறான் என்ற உணர்வை கொண்டு வருகின்றோமா? அல்லாஹு தஆலா கண்டிக்கிறானே. இது, அல்லாஹ் என்னை கண்டிக்கிறான். அல்லாஹு தஆலா வாழ்த்துகின்றானே அந்த வாழ்த்துக்கு நான் தகுதியாக வேண்டுமே என்ற எண்ணத்தோடு இந்த குர்ஆனை படிக்கின்றோமா?
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் உடைய தூதர் ﷺ ஒரு சமூகத்தை உருவாக்கினார்கள். அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகம்?
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ لَا شَرِيْكَ لَهٗ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.”
“அவனுக்கு இணை அறவே இல்லை; இ(ந்த தூய்மையான ஏகத்துவத்)தையே நான் ஏவப்பட்டுள்ளேன். இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்) நான் முதலாமவன்.” (அல்குர்ஆன் 6:162,163)
இதை அவர்கள் தொழுகையில் மட்டும் சொல்லவில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் செய்த தியாகங்கள், இந்த வாழ்க்கையில் அவர்கள் முன்னெடுத்த படிகள், இந்த வாழ்க்கையில் உலக சமுதாய மக்களுக்கு மத்தியிலே அவர்கள் கொண்டு வந்த மாற்றங்கள், அவர்கள் தொழுகையில் சொன்ன இந்த வாக்கை உண்மைப்படுத்தின. நாம் இங்கு சொல்வோம், அங்க போய் நம்ம செயல்களை பொய்ப்பிப்போம்.
قُلْ اِنَّ صَلَاتِىْ
நபியே! நீங்கள் சொல்லுங்கள்; என்னுடைய தொழுகை,
وَنُسُكِىْ
என்னுடைய ஹஜ் வணக்க வழிபாடுகள், என்னுடைய எல்லா பழக்கங்களும்,
وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ
என்னுடைய வாழ்க்கையும், என்னுடைய மரணமும் , நான் வாழ்வதும் நான் மரணிப்பதும்,
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ
நபியே! நீங்கள் சொல்லியாக வேண்டும். நாவால் அல்ல. உங்களது நாவாலும், உங்களது செயலாலும் நீங்கள் சொல்ல வேண்டும். அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லாஹ்விடத்திலே.
எனது தொழுகை, எனது வணக்க வழிபாடுகள், என்னுடைய வாழ்வு, என்னுடைய சாவு, அகிலங்களை வளர்த்து பரிபாலிக்கக்கூடிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே. அவனுக்கு இணை இல்லை. இது தான் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. இந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்த முஸ்லிம்களில் நான் முதல் முஸ்லிமாக இருக்கின்றேன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள்.
இதை செய்து காட்டக் கூடிய ஒரு சமூகத்தை அல்லாஹ்வுடைய தூதர் உருவாக்கினார்கள். மார்க்கமா? உலகமா? என்றால் மார்க்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். மறுமையா! உலகமா? என்றால் மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். தீனுக்காக இழப்பா? அல்லது துன்யாவுடைய சேமிப்பா? என்றால் தீனுக்காக உள்ள துன்யாவுடைய இழப்பை தேர்ந்தெடுத்தார்கள். வாழ்வா? மரணமா? என்று இருக்கும் போது அல்லாஹ்வுக்காக மரணம் அடைவதை தேர்ந்தெடுத்தார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் இந்த துன்யாவை விற்று ஆகிரத்தை விலைக்கு வாங்கினார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை விலைக்கு வாங்கினார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஒரு சிறிதும் குறைபடுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மனைவியின் பசியை தாங்கிக் கொண்டார்கள். குடும்பத்தின் சிரமத்தை தாங்கிக் கொண்டார்கள். ஆனால் இந்த உம்மத்துடைய சிரமத்தை தாங்கவில்லை. அல்லாஹ்வுடைய இந்த தீனுக்கு ஏற்பட்ட இந்த இழிவை அவர்களால் தாங்க முடியவில்லை.
நாம் எப்படி வாழ்கின்றோம்? நமக்கென்ன? நம்ம குடும்பத்தில் மூணு வேளை சாப்பிட்டோமா, நம்ம பொண்டாட்டி பிள்ளைகளுக்கு சேர்த்து வச்சிருக்கோமா, சொத்து வச்சிருக்கிறோமா, நமக்கு லாபமா வியாபாரம் நடக்கிறதா, அதோட முடிஞ்சிடுச்சு என்னோட லைஃப்.
அல்லாஹ்வின் அடியார்களே! இதற்காகவா அல்லாஹ் நம்மை படைத்தான்? ஆகிரத்துக்காக படைக்கப்பட்டுள்ளோம். அல்லாஹ்விற்காக இந்த துன்யாவை இழந்து விட்டுச் சென்று சொர்க்கத்தை பெறுவதற்காக அல்லாஹ் நம்மை படைத்திருக்கின்றான். நம்முடைய உயிர்கள், பொருள்கள், இந்த உலக வாழ்க்கை சொர்க்கத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றது.
நம்முடைய தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தான தர்மம், நம்முடைய நற்குணம் ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்திருக்கிறான்.
அந்த சொர்க்கத்திற்காக வாழக்கூடியவர்கள் தான் உண்மையான முஸ்லிம். நான் சொர்க்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை உணர்ந்து நான் அல்லாஹ்விற்காக இந்த பூமியிலே அனுப்பப்பட்டிருக்கிறேன்; என்னுடைய நோக்கம் அல்லாஹ்வை திருப்திப்படுத்துவது; அல்லாஹ்வுடைய சட்டங்களை பின்பற்றுவது; அல்லாஹ்விற்கு தூதருக்கு கீழ்ப்படிவது என்ற நோக்கத்துடன் வாழக்கூடியவன் தான் வாழ்க்கையுடைய நோக்கத்தை புரிந்து கொண்டவன்.
அதற்கு இந்த மார்க்கத்தை கற்க வேண்டும். கற்றதை செயல்படுத்த வேண்டும். பிற மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்காக இழப்புகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். நம்முடைய நேரங்கள் செலவழிக்கப்பட வேண்டும். நம்முடைய செல்வங்கள் செலவழிக்கப்பட வேண்டும்.
நம்முடைய மண்டை, அறிவு, புத்தி, சிந்தனைகள் அனைத்திலும் அல்லாஹ்வுடைய மார்க்கம் அப்படியே ஊற வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கப் பற்று எரிய வேண்டும். நம்முடைய சிந்தனைகளில் உலக சிந்தனைகள் போய்; அல்லாஹ், அல்லாஹ், என்னுடைய ரப்பு அல்லாஹ், என்னுடைய மார்க்கம் இஸ்லாம், என்னுடைய நபி ﷺ, என்னுடைய வேதம் குர்ஆன்.
இதைப்பற்றி பேசுவது, இதற்காக வாழ்வது, இதன் பக்கம் மக்களை அழைப்பது, இதை எப்படி நான் உயிர்ப்பிப்பேன்? இதை எப்படி மக்களிடத்திலே கொண்டு சொல்வேன்? இதுதான் என்னுடைய வாழ்க்கை.
நம்முடைய உடலெல்லாம் அந்த பைத்தியம் பிடிக்க வேண்டும். நமக்கு என்ன பைத்தியம் பிடித்து இருக்கின்றது? துன்யா, துன்யா, துன்யா என்று. சிலர் சொல்லுவார்கள். சிலர் சொல்லாமல் உள்ளே மறைத்து வைத்திருப்பார்கள். அவ்வளவு தான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த நிலைமை இருக்கின்ற வரை அல்லாஹ் தஆலா வாக்களித்த கண்ணியத்தை பெற முடியாது. அல்லாஹ் தஆலா வாக்களித்த கண்ணியத்தை எப்போது பெற முடியும்? நான் அல்லாஹ்விற்காக என்று எப்போது நம்முடைய உயிரை, பொருளை, செல்வத்தை, வாழ்க்கையை அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்து கொள்வோமா அப்போது தான் அல்லாஹ் வாக்களித்த கண்ணியத்தை பெற முடியும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா எனக்கும், உங்களுக்கும், அல்லாஹ்விற்காக வாழக்கூடிய அந்த உயர்ந்த நற்பாக்கியத்தை, அந்த உயர்ந்த அர்ப்பணிப்பை தந்தருள்வானாக! நம்முடைய வாழ்க்கையில் நாம் தவறு செய்த ஒவ்வொரு தவறையும் அல்லாஹ் மன்னித்தருள்வானாக! நம்முடைய குறைகளை அல்லாஹ் மன்னிப்பானாக! நமது வரம்பு மீறுதல்களை அல்லாஹ் மன்னிப்பானாக!
அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழக்கூடிய, அல்லாஹ்வுடைய தீனை, வாழ்க்கையில் பின்பற்றி நடக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய தீனை கற்கக்கூடிய, கற்றதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அல்லாஹ்வின் அழைப்பாளர்களாக, மார்க்கத்தின் அழைப்பாளர்களாக நாமும், நம்முடைய சந்ததிகளும் மாறுவதற்கு அல்லாஹு தஆலா அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (23) وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது, அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று சொல்லாதே; இன்னும், அவ்விருவரையும் அதட்டாதே; இன்னும், அவ்விருவரிடமும் மிக கண்ணியமாக பேசு.
இன்னும், அவர்களுக்கு முன் கருணையுடன் பணிவாக நடந்துகொள்! இன்னும், “என் இறைவா! நான் சிறியவனாக இருக்கும்போது என்னை அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு! (அல்குர்ஆன் 17: 23,24)
குறிப்பு: (2)
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَلِكُمْ فِسْقٌ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِنْ دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக (சிலைகள், இறைநேசர்கள், போன்றவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு) அவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளால் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன. இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 5:3)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/