அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் வரலாறு தரும் படிப்பினைகள்! | Tamil Bayan - 1015
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் வரலாறு தரும் படிப்பினைகள்!
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் வரலாறு தரும் படிப்பினைகள்!
வரிசை : 1015
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 14-11-2025 | 23-05-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம் அனைவரையும் மன்னிப்பானாக! நம்மை அல்லாஹு தஆலா பொருந்திக் கொள்வானாக! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, எனக்கும் உங்களுக்கும் இறையச்சத்தை (தக்வாவை) உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆனுடைய அத்தியாயங்களில் சூரத்துல் கஹ்ஃபை பற்றி நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம். அந்த தொடரிலே, இந்த சூரத்துல் கஹ்ஃப் அத்தியாயம் தரக்கூடிய படிப்பினைகள் நிறைந்த வரலாறுகளில் ஒன்றை, இன்று இன்ஷா அல்லாஹ், நாம் இந்த குத்பாவிலே பார்க்க இருக்கிறோம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா, சூரத்துல் கஹ்ஃப் உடைய 32-வது வசனத்திலிருந்து 43-வது வசனம் வரை ஒரு வரலாற்று நிகழ்வை கூறுகின்றான். அந்த வரலாற்று நிகழ்வு, ஒரு முஃமினுக்கும் ஒரு காஃபிருக்கும் இடையில் நடந்த ஒரு பேச்சுவார்த்தை, ஒரு சம்பாஷனை ஆகும்.
இந்த சம்பவத்தை அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா கூறுகின்ற அந்த வசனத் தொடரை நீங்கள் கவனித்தால், இதற்கு முந்திய வசனங்களில் அல்லாஹு தஆலா ஏழையான முஃமின்களைப் பற்றி குறிப்பிடுகிறான்.
செல்வம், அதுபோன்ற உலகியலான வசதிகள், பெயர், புகழ் ஆகியவற்றில் உயர்ந்து இருந்த பல தலைவர்கள் ஈமான் கொள்ளவில்லை. அவர்கள் முஃமின்களாகாமல், முஷ்ரிக்குகளாகவும் காஃபிர்களாகவும் இருந்தார்கள்.
அந்த தலைவர்கள், ரசூலுல்லாஹி ﷺ அவர்களுடைய சபையில் வந்து அமர்வதை ஒரு கேவலமாகவும், தங்களுடைய தகுதிக்கு குறைவானதாகவும் நினைத்தார்கள்.
“இந்த ஏழைகள், ஃபக்கீர்கள் இருக்கக்கூடிய சபையில் நாம் எப்படி வந்து அமர முடியும்?” என்று அவர்கள் எண்ணினார்கள். நாங்கள் உங்களது சபையில் உட்கார்ந்து கேட்போம். பிடித்தால் ஏற்றுக்கொள்வோம்; இல்லையென்றால் விட்டுவிடுவோம்” — என்ற நிலையில் இருந்தார்கள்.
அப்போது அல்லாஹு தஆலா, தன்னுடைய தூதர் ﷺ அவர்களுக்கு வழிகாட்டினான்.
“நபியே! ஒருபோதும் நீங்கள் என்னை ஈமான் கொண்ட அடியார்களை, என்னை நேசிக்கின்ற அடியார்களை, என்னை வணங்குகின்ற அடியார்களை, என்னை நிராகரிப்பவர்களுக்காக விரட்டி விடாதீர்கள். “நபியே! நீங்கள் அவர்களை ஒதுக்குங்கள். அவர்கள் ‘இஸ்லாமை ஏற்போம்’ என்று சொன்னாலும் சரி, அல்லது ‘நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்போம்’ என்று சொன்னாலும் சரி; இந்த மக்களோடு சேர்ந்து அமர்ந்து கேட்க விருப்பப்பட்டால் கேட்கட்டும். இல்லையென்றால் அவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்.
அவர்களை எல்லாம் நீங்கள் கட்டாயமாக நேர்வழியில் கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை நாம் உங்கள் மீது வைக்கவில்லை.”
அல்லாஹு தஆலா, எல்லா அடியார்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று போதிக்கிறான். ஒரு மனிதன், தனது செல்வம், வசதி, பதவி ஆகியவற்றின் காரணமாக, மற்றொரு மனிதனுடன் அவனுடைய ஏழ்மையினால் அல்லது வெளித் தோற்றத்தினால் சேர்ந்து அமர்வதை தரக்குறைவாக நினைப்பவனாக இருந்தால், அப்படிப்பட்டவனை நீங்கள் உங்கள் அருகில் சேர்க்க வேண்டாம் என்று அல்லாஹு தஆலா ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கு வழிகாட்டினான்.
“என்னை நேசிக்கிற, என்னை வணங்குகிற, என்னுடைய அன்பிற்காக ஏங்குகிற முஃமின்களோடு நீங்கள் இருங்கள். ஒருபோதும் அவர்களை விட்டு உங்கள் பார்வைகளை திருப்ப வேண்டாம்” என்று அல்லாஹு தஆலா வழிகாட்டி, இந்த சம்பவத்தை முடிக்கிறான்.
ரப்பு சொல்கிறான்;
وَاضْرِبْ لَهُمْ مَثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا
மேலும், ஓர் உதாரணத்தை அவர்களுக்கு விவரிப்பீராக! இரு ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு திராட்சைகளினால் நிரம்பிய இரு தோட்டங்களை ஆக்கினோம். இன்னும், அவ்விரண்டை சுற்றியும் (அதிகமான) பேரிச்ச மரங்களை ஏற்படுத்தினோம். மேலும், அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:32)
வசனத்தின் விளக்கம் : நபியே! நீங்கள் ஒரு உதாரணத்தை ஒரு வரலாற்று சம்பவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். பணக்கார காஃபிர்களை பெரியவர்களாகவும், ஏழையான முஃமின்களை மட்டமாகவும் பார்க்கின்றார்களோ அவர்களுக்கு நீங்கள் இந்த சம்பவத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு நாம் இரண்டு தோட்டங்களை கொடுத்திருந்தோம். திராட்சை பழங்களால், திராட்சை கொடிகளால் நிறைந்த தோட்டங்கள். அந்த இரண்டு தோட்டங்களையும் சுற்றி நாம் பேரித்த மரங்களை அவர்களுக்கு கொடுத்திருந்தோம்.
அதுபோக அந்த தோட்டங்களுக்கு நடுவிலே நிறைய விவசாயங்களை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்திருந்தோம்.
كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِنْهُ شَيْئًا وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا
அவ்விரு தோட்டங்களும் தத்தமது கனிகளை (நிறைவாக)த் தந்தன. அவற்றில் எதையும் அவை குறைக்கவில்லை. இன்னும், அவ்விரண்டுக்கும் இடையில் ஓர் ஆற்றை பிளந்தோடச் செய்தோம். (அல்குர்ஆன் 18:33)
அந்த இரண்டு தோட்டங்களுக்கு மத்தியில் நடுவே ஒரு பெரிய ஆற்றையும் நாம் அந்த நபருக்கு உருவாக்கி கொடுத்தோம். அந்த ஆறு எப்படி என்றால் அந்த ஆற்றுக்கு கீழேயே ஊற்றுக் கண்கள் இருந்தன. எங்கிருந்தோ மழை பொழிந்து பிறகு அந்த தண்ணீர் ஓடி வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஆற்றில் இருக்கக்கூடிய ஊற்றுக் கண்களே பீறிட்டு ஓடிக்கொண்டிருந்தன.
அடுத்து, அல்லாஹ் சொல்கிறான்;
وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا
மேலும், அவனுக்கு (இவ்விரண்டிலிருந்தும்) கனிகள் (பல வகை இவை தவிர வேறு பல செல்வங்களும்) இருந்தன. ஆக, அவனோ தன் நண்பனை நோக்கி, - அவனிடம் பேசியவனாக – (அல்லாஹ்வை மறுக்கின்ற) நான் உன்னை விட செல்வத்தால் மிக அதிகமானவன், குடும்பத்தால் மிக கண்ணியமுள்ளவன் என்று கூறினான். (அல்குர்ஆன் 18:34)
கருத்து : நான் பணபலமும் படைபலமும் ஒருங்கே கொண்டவன் என்று அவன் தன்னுடைய ஏழை தோழனை பார்த்து அவனிடத்திலே அவன் பெருமை பேசியவனாக சொன்னான். நான் உன்னை விட செல்வச்செழிப்பில் மிதப்பவன். உன்னை விட ஆள்பலம் கொண்டவன் எனக்கு பணபலம் ஒருபக்கம் இருக்கிறது பார்த்தாயா? என்னை சுற்றி எனக்கு படைபலம் மக்கள் பலம் ஒருபக்கம் இருக்கிறது பார்த்தாயா?
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا
அவனோ (இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் (பெருமையோடு) நுழைந்தான். இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை என்று கூறினான். (அல்குர்ஆன் 18:35)
கருத்து : அந்தத் தோட்டத்தை செழிப்பாக இருக்கும் பொழுது, காய்த்து குலுங்கும்போது, அவன் அந்த தோட்டத்திற்கு பெருமையாக சொல்கிறான். அவனும் அல்லாஹ்விற்கு இணை வைத்தவனாக இருந்தான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவில்லை. தனது தோட்டத்தை பார்த்து சொன்னான்;
قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖۤ اَبَدًا ۙ
இவ்வளவு செழிமையான செழிப்பான இந்த தோட்டமா அழியப் போகிறது? கண்டிப்பாக ஒரு போதும் என்னுடைய இந்த செல்வம் அழியாது. இன்னும் சொன்னான்;
وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا
இன்னும், “மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த (இடத்)தை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் நான் பெறுவேன்.” (அல்குர்ஆன் 18:36)
கருத்து : அது மட்டுமா? நீ எந்த மறுமையை குறித்து என்னை நீ எச்சரிக்கின்றாயோ, ஒரு மரணத்திற்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை கூறி என்னை பயமுறுத்துகிறாய் அல்லவா அதெல்லாம் நடக்கப் போவது கிடையாது. மறுமை ஒன்று இல்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை. அப்படி ஒரு வாழ்க்கை இருப்பதை நான் நம்பவில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு அடுத்து உச்சகட்ட திமிரை பாருங்கள். சொல்கிறான்;
وَّلَٮِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّىْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا
கருத்து : ஒருக்கால் நீ சொல்வதைப் போன்று மறுமை இருக்குமானால், இங்கு எனக்கு இவ்வளவு பெரிய செல்வத்தை கொடுத்தவன், எனக்கு நான் மறுமையில் வரும் பொழுது அங்கும் எனக்கு செல்வம் கொடுக்கப்படும். இந்த உலகத்தில் நான் செல்வந்தனாக இருக்கின்றேன் அல்லவா. நீர் சொல்வதைப் போன்று மறுமை இருக்குமேயானால் அங்கேயும் நான் செல்வந்தனாக தான் இருப்பேன். நீ இந்த உலகத்தில் ஏழையாக ஒரு சாதாரணமானவனாக இருப்பதைப் போன்று, மறுமை இருந்தால் அங்கேயும் இப்படித்தான் இருப்பாய்.
எவ்வளவு பெரிய திமிரு பாருங்கள்!
அப்போது அந்த ஏழையான மற்ற தோழர் சொல்கிறார்;
قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا
அவரது தோழர், - அவரோ அவனிடம் பேசியவராக - அவனுக்கு கூறினார்: “உன்னை (உன் மூல தந்தை ஆதமை) மண்ணிலிருந்தும், பிறகு (உன்னை) இந்திரியத்திலிருந்தும் படைத்து; பிறகு, உன்னை ஓர் ஆடவராக சீரமைத்தானே அப்படிப்பட்ட (இறை)வனை நீ நிராகரிக்கிறாயா? (அல்குர்ஆன் 18:37)
கருத்து : தனது சக தோழரிடத்திலே அவர் சொல்கிறார்;
உன்னை எந்த இறைவன் படைத்தானோ, அவனை நீ நிராகரிக்கிறாயா? உன்னை மண்ணில் இருந்து படைத்தானே! பிறகு உன்னை இந்திரியத்தில் இருந்து உருவாக்கினானே! பிறகு உன்னை ஒரு திடாகரத்தமான ஒரு ஆடவனாக உன்னை சமப்படுத்தினானே, முழுமைப்படுத்தினானே. அந்த ரப்பையா நீ மறுக்கின்றாய்?
அந்த அடியான் ருபூபியத்தை குறித்து, அல்லாஹ்வுடைய வல்லமையை குறித்து பேசிய அந்த பேச்சை சுருக்கமாக ரப்புல் ஆலமீன் விவரித்து காட்டுகின்றான். படைத்த இறைவனையா மறுக்கின்றாய்?
ஒன்றுமில்லாமல் இருந்தாயே! சாதாரணமான ஒரு இந்திரியத் துளியாக இருந்த உன்னை இவ்வளவு திடகாத்திரமான ஒரு வாலிபனாக உருவாக்கி, உனக்கு இந்த செல்வங்களை எல்லாம் கொடுத்தானே! அப்படி கொடுத்த ரப்பை மறந்து பேசுகிறாயா?
لَكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا
எனினும், நான் அவ்வாறு செய்யமாட்டேன். அல்லாஹ்வாகிய அவன்தான் என் இறைவன். என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 18:38)
அடுத்து, அந்த மனிதர் சொல்கிறார்;
وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ تَرَنِ أَنَا أَقَلَّ مِنْكَ مَالًا وَوَلَدًا
மேலும், உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது, “இது அல்லாஹ் நாடி (எனக்கு) கிடைத்தது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர (நமக்கு) அறவே ஆற்றல் இல்லை” என்று நீ கூறியிருக்க வேண்டாமா? நான் உன்னைவிட செல்வத்திலும் சந்ததியிலும் குறைந்தவனாக இருப்பதாக என்னை நீ பார்த்தால். (அல்குர்ஆன் 18:39)
கருத்து : உன்னை விட செல்வத்தால், குடும்பத்தால் குறைவானவனாக நீ என்னை பார்த்தாலும். உன்னோட இந்த தோட்த்திற்குள் நுழைந்தபோது நீ பணிந்து இறைவனுடைய அருளால் எனக்கு இது கிடைத்தது. அல்லாஹ்வுடைய அருள் இல்லாமல் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. என்று நீ சொல்லி இருக்க வேண்டாமா?
فَعَسَى رَبِّي أَنْ يُؤْتِيَنِ خَيْرًا مِنْ جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا
ஆக, உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தரக்கூடும். இன்னும் அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது வானத்திலிருந்து அழிவை (இரவில்) அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக காலையில் ஆகிவிடும். (அல்குர்ஆன் 18:40)
நீ எந்த தோட்டத்தை கொண்டு பெருமையடிக்கின்றாயோ உலகத்தில் உனக்கு கொடுத்த தோட்டம், துறவுகளை விட சிறந்ததை மறுமையில் அல்லாஹு த ஆலா எனக்கு கொடுப்பான்..
பசுமையாக, செடிகளாலும், கொடிகளாலும் மரங்களாலும் இப்போது நீ பார்க்கின்றாயே அந்தத் தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஒரு அழிவை ஒரு தண்டனையை அல்லாஹு த ஆலா இறக்கி விடுவான். அந்தத் தோட்டம், அழிந்து பொட்டல் பூமியாக வழுவழுப்பான ஒரு பூமியாக மாறிவிடும்.
أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيعَ لَهُ طَلَبًا
“அல்லது, அதன் தண்ணீர் (பூமியின்) உள்வாங்கி ஆழத்தில் சென்று விடக் கூடும். (வறண்டு போகலாம் ) ஆகவே, அதைத் தேடி (மேலே) கொண்டு வருவதற்கு அறவே நீ இயலாது போவாய்.” (அல்குர்ஆன் 18:41)
எந்த நீரோடையில் ஆற்றிலே தண்ணீர் பீறிட்டு ஓடுவதை பார்க்கிறாயோ அந்தத் தண்ணீர் வற்றி விடும்.
உனக்கு உதவி செய்யக்கூடிய யாரையும் நீ காண மாட்டாய். இவற்றையெல்லாம் உனக்கு மீட்டுத் தரக்கூடிய எந்த ஒரு உதவியாளரையும் நீ பெறமுடியாது என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.
இவ்வளவு அறிவுரை சொன்னதற்கு பிறகும் அவனுக்கு புத்தி வரவில்லை. தொடர்ந்து உபதேசம் நடக்கின்றது, தொடர்ந்து நிராகரிக்கின்றான். ஒரு கட்டத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய இறுதி முடிவை காட்டி, இந்த இருவருடைய வரலாறை கியாம நாள் வரை வரக்கூடிய முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் பாடமாக படிப்பினையாக ஆக்க விரும்பினான்.
وَاُحِيْطَ بِثَمَرِهٖ
அவனுடைய அத்தனை செல்வங்களும் அடியோடு தகர்த்தப்பட்டன, அழிக்கப்பட்டன.
فَاَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ
அதைப் பார்த்துவிட்டு அவன் தன்னுடைய இரு கரங்களையும் புரட்ட ஆரம்பித்தான்.
عَلَىٰ مَاۤ اَنْفَقَ فِيْهَا
இந்த தோட்டங்களுக்காக நான் இவ்வளவு செலவு செய்தேனே.
وَهِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا
முற்றிலுமாக அழிந்து நாசமாகி விட்டனவே.
وَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُشْرِكْ بِرَبِّىْۤ اَحَدًا
நாளை மறுமையில் அவன் எழுப்பப்படும் பொழுது சொல்லுவான், நான் என் ரப்புக்கு இணை வைத்திருக்கக் கூடாதே! என்று. (அல்குர்ஆன் 18:42)
وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًا
அவனுக்கு உதவக்கூடிய எந்தக் கூட்டமும் இல்லை. அவனாலும் உதவி செய்து கொள்ள முடியாது. அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. (அல்குர்ஆன் 18:43)
هُنَالِكَ الْوَلَايَةُ لِلّٰهِ الْحَـقِّ هُوَ خَيْرٌ ثَوَابًا وَّخَيْرٌ عُقْبًا
உண்மையான அல்லாஹ்விற்கு தான் மறுமையில் எல்லா அதிகாரங்களும் உண்டு. அவன் தான் நற்கூலி கொடுப்பதிலே சிறந்தவன். முடிவுகளை சிறந்த முடிவாக ஆக்கிக் கொடுப்பதிலே அவன் தான் சிறந்தவன். (அல்குர்ஆன் 18:44)
அன்புச் சகோதரர்களே! இது ஒரு மகத்தான வரலாறு. இந்த வரலாறு நமக்கு தரக்கூடிய படிப்பினைகள், பாடங்கள் என்ன? பெருமை, ஆணவம். ஒரு மனிதனுக்கு இந்த உலகத்திலே செல்வம் கிடைத்தால், பதவி கிடைத்தால், வாழ்க்கை வசதிகள் கிடைத்தால், அவனுக்கு ஆதரவாளர்கள் அதிகமானால், அவன் பணிய வேண்டும், பயப்பட வேண்டும். அந்த பணிவுகளிலேயே பயத்திலேயே மிகப்பெரிய பணிவு பயம் தன்னை படைத்தவனுக்கு பணிதல்.
இவற்றையெல்லாம் கொடுத்தானே, அவனுக்கு பயப்படுவது. யார் அல்லாஹ்விற்கு உண்மையில் பணிகின்றானோ, யார் அல்லாஹ்விற்கு உண்மையில் பயப்படுகின்றானோ, அவன் அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு முன்பும் பணிவாகத்தான் நடப்பான்.
எவன் அல்லாஹ்விற்கு முன்னால் பெருமை அடிக்கின்றானோ, அவன் அல்லாஹ்வுடைய அடியானுக்கு முன்னாலும் பெருமை அடிப்பான். இந்த பெருமை, ஆணவம் அது எதைக் கொண்டு இருந்தாலும் சரி. பெருமையும், ஆணவமும், தற்புகழ்ச்சியும், எதை கொண்டு இருந்தாலும் சரி. அதனுடைய முடிவு அழிவும் நாசமும் தான்.
பெருமை என்பது அல்லாஹ்வை நிராகரிக்கக் கூடிய மறுமையை நம்பாத காஃபிர்களுடைய குணம். பணிவு என்பது அடக்கமாக இருப்பது, அல்லாஹ்வை புகழ்ந்து தன்னை தாழ்த்திக் கொள்வது. அல்லாஹ்வின் அடியார்களுக்கு முன்னால் பணிந்து செல்வது என்பது முஃமின்களுடைய குணம் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகின்றது.
அடுத்ததாக அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா ஒருவருக்கு செல்வத்தை கொடுப்பதால், அவர் விரும்பியதெல்லாம் நடந்து விடுவதால், அவருடைய வியாபாரங்கள் எல்லாம் லாபமாக நிறைவேறி விடுவதால், அவனுடைய செல்வம் செழித்துக் கொண்டே செல்வதால், அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்கு நிஃமத்தாக கொடுக்கப்படுகின்றது என்று எண்ணி விட முடியாது, முடிவு செய்து விட முடியாது. அது இஸ்தித்ராஜ் அல்லாஹ் சொல்கிறான் அல்லவா;
سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَ
அவர்கள் அறியாத புறத்திலிருந்து அவர்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்போம். (அல்குர்ஆன் 7:182)
எப்படி நீங்கள் ஒரு எலியை பிடிக்க வேண்டும் என்றால் அல்லது ஒரு மிருகத்தை வேட்டையாட வேண்டும் என்றால் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சில இரைகளை வைத்து, அதை பொறியிலே வலையிலே சிக்க வைக்கின்றீர்களோ, அதுபோன்று அல்லாஹு தஆலா சிக்க வைப்பதற்காகவும், பாவிகளுக்கு அல்லாஹு தஆலா விரிக்கக்கூடிய வலையாகவும் இருக்கலாம்.
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ
ஆக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்(து கொடுத்)தோம். முடிவாக, அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட (செல்வத்)தினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் துக்கப்பட்டு துயரப்பட்டார்கள். (அல்குர்ஆன் 6:44)
கருத்து : அவர்களுக்கு செய்யப்பட்ட உபதேசங்களை எல்லாம் அவர்கள் மறந்து புறக்கணித்த போது, செல்வத்தின் வாசல்களை அவர்களுக்கு திறந்து கொடுத்து விட்டோம். பெருமை அடித்தபோது, மமதை கொண்டபோது அவர்களை முற்றிலுமாக பிடித்து அவர்களுடைய வேரை அறுத்துவிட்டோம் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! செல்வம் அதிகமாக கிடைப்பது என்பது அது நம்மை பரிசோதிப்பதற்காக உள்ள ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. நான் அல்லாஹ்வை பயப்படுகிறேனா? ஹலாலாக சம்பாதிக்கின்றனா? அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறாமல் இருக்கின்றேனா? சம்பாதிப்பதை ஹலாலான முறையிலே செலவு செய்கின்றேனா? என்றெல்லாம் சோதிப்பதற்காக அல்லாஹ் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய இஸ்தித்ராஜ் - வலையாக இருக்கலாம்.
அதுபோன்று, இந்த சம்பவம் கொடுக்கக்கூடிய படிப்பினைகளிலே ஒன்று. அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா ஒருத்தருக்கு துன்யாவை கொடுப்பதால் அவர் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர். ஒருவர் பணக்காரர், செல்வந்தர். இன்னொருவர் ஏழையாக இருக்கிறார். வசதி இல்லை, வசதி இல்லாதவர். அல்லாஹ்விற்கு பிரியமற்றவர். வசதியில் இருப்பவர், செல்வம் கொடுக்கப்பட்டவர் அல்லாஹ்விற்கு பிரியமானவர் என்பதாக மனிதர்கள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள் அல்லவா. அது உண்மையான கணக்கு அல்ல.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இந்த செல்வத்தை பொதுவாக வைத்திருக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு கொடுப்பான். அவன் வெறுப்பவர்களுக்கும் அல்லாஹ் கொடுப்பான்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம், தாவூத் அலைஹிஸ்ஸலாம், அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா செல்வத்தை கொடுத்தான். இன்னும் பல நபிமார்களுக்கு அல்லாஹு தஆலா செல்வத்தை கொடுத்தான்.
காரூனுக்கும், ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், நம்ரூதுக்கும், ஷத்தாதுக்கும் அல்லாஹ் செல்வத்தை கொடுத்தான்.
இந்த உலகத்திலும், முஃமின்களிலும் செல்வந்தர்கள் வசதி படைத்தவர்கள் இருக்கின்றார்கள். முஃமின்களிலும் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். காஃபிர்களிலும் செல்வந்தர்கள், ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
அன்பு சகோதரர்களே! நல்லா கவனித்துக் கொள்ளுங்கள், பதிய வைத்து கொள்ளுங்கள். உலக செல்வம் கிடைப்பதை துன்யா ஒருவருக்கு கிடைப்பதை வைத்து அல்லாஹ் என் மீது திருப்தியோடு இருக்கிறான்; அல்லாஹ் என் மீது பிரியமாக இருக்கின்றான் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள்.
உங்களுடைய அமல்களை பாருங்கள்! உங்களுடைய எண்ணங்களை பாருங்கள்! உங்களுடைய அஹ்லாக்குகளை பாருங்கள். இந்த ஈமான் இந்த அஹ்லாக் இதுதான் அல்லாஹ்விடத்திலே பிரியத்திற்குரியதே தவிர செல்வமல்ல. செல்வம் என்பது துன்யாவிலே அல்லாஹு தஆலா விதித்த ஒரு விதி. அதை அல்லாஹு தஆலா ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ
அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். (அல்குர்ஆன் 13:26)
நாடியவருக்கு விசாலமாக கொடுத்துக் கொண்டே இருப்பான். நாடியவருக்கு சுருக்கி கொண்டு இருப்பான். நெருக்கடியை கொடுத்துக் கொண்டே இருப்பான். அதே நெருக்கடியில் அவர் மரணித்தும் விடலாம். அல்லாஹ் சொல்கிறான், இதில் ஈமான் உள்ளவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன என்று.
காசு பணம் என்பது இந்த துன்யாவிலே நாம் நேர் வழியிலே இருக்கின்றோம் என்பதற்கான அடையாளம் அல்ல. காசு பணம் செல்வம் என்பது இந்த துன்யாவிலே நாம் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதற்கான அடையாளம் அல்ல. காசு பணம் என்பது இந்த துன்யாவிலே நாம் அல்லாஹ்வுடைய பொருத்தத்தில் இருக்கின்றோம் என்பதற்கு அடையாளம் அல்ல.
நம்முடைய ஈமான், நம்முடைய அமல், நம்முடைய கொள்கை, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இருக்கிறதா? சத்திய பாதையில் இருக்கிறதா? நபிமார்களின் வழியிலே போகிறோமா? அதுதான் அடிப்படை. அல்லாஹு தஆலா திருப்தி கொண்டிருக்கிறான்.
அல்லாஹு தஆலா உடைய நிஃமத் என்பது என்ன?
இஸ்லாம் கிடைக்கப்பெறுவது அல்லாஹ்வுடைய நிஃமத். முழுமையான இஸ்லாம் ஒருவருக்கு கிடைப்பது முழுமையான நிஃமத். அல்லாஹ் சொல்கிறான்,
كُلًّا نُمِدُّ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا
(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்து உதவுவோம். மேலும், உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை. (அல்குர்ஆன் 17:20)
நபியே இந்த காசு, பணம், செல்வங்களை இவர்களுக்கும் நாம் அள்ளிக் கொடுப்போம். இவர்களுக்கும் நாம் அள்ளி கொடுப்போம். இந்த துன்யாவிலே செல்வம் என்பது எந்த சாராருக்கும் தடுக்கப்பட்டது அல்ல.
மேலும், முஃமின்களுக்கு பொறுமை இருக்குமேயானால், காஃபிர்களுடைய மாடிப்படிகளை எல்லாம் தங்கத்திலே நாம் செய்து கொடுத்து இருப்போம் என்றும். அவர்களுக்கு நகைகளையும், தங்கங்களையும், வெள்ளிகளையும், நாம் அள்ளி கொடுத்திருப்போம் என்றும் அல்லாஹ் சொல்கிறான்,.
அல்லாஹுவின் அடியார்களே, அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
لو كانتِ الدُّنيا تعدلُ عندَ اللهِ جناحَ بعوضةٍ ما سقى كافرًا منها شربةَ ماءٍ
இந்த துன்யா அல்லாஹ்விடத்திலே ஒரு கொசுவின் இறக்கைக்கு சமமாக இருந்திருக்குமேயானால், (இதில் இருக்கக்கூடிய தங்கம், வெள்ளி என்னென்ன சொத்துக்கள், செல்வங்கள் இருக்கின்றனவோ, எதைப் பார்த்தல்லாம் மனிதன் ஏங்குகிறானோ, மொத்த செல்வம் இந்த துன்யாவிற்கு மேல் உள்ளது, கீழ் உள்ளது எல்லாம் சேர்ந்து இதனுடைய பூமிகள் இதனுடைய சொத்துக்கள் எல்லாம் சேர்ந்து அல்லாஹ்விடத்திலே ஒரு கொசுவின் இறக்கைக்கு சமமாக இருந்திருக்குமேயானால்) காஃபிருக்கு அல்லாஹ் குடிக்க கூட தண்ணீர் கொடுத்திருக்க மாட்டான்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் 2320.
அல்லாஹ்வின் தூதர் ﷺ மதீனாவின் கடைத்தெருவிலே செல்கிறார்கள். செத்துப்போன ஒரு ஆடு அதுவும் ஒரு நோயுற்ற ஒரு செத்துப்போன ஆடு. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ கேட்டார்கள். இந்த ஆட்டை யாராவது அதன் உரிமையாளரிடம் இருந்து ஒரு திர்ஹம், இரண்டு திர்ஹம் கொடுத்து வாங்கிட்டு போங்களேன் அப்படிங்கிறாங்க.
சஹாபாக்கள் சொல்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! எதற்கும் பயனற்றது, துர்நாற்றம் வீசிவிட்டது என்றுதானே அதனுடைய உரிமையாளரே அதை தூக்கிக்கொண்டு வந்து எறிந்து விட்டு சென்றுவிட்டார். அந்த செத்து தூக்கி எறியப்பட்ட குப்பையில் இருக்கக்கூடிய ஆட்டை ஒரு திர்ஹம், இரண்டு திர்ஹம் கொடுத்து யார் வாங்குவார்கள் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
தோழர்களே! இந்த ஆடு இதனுடைய உரிமையாளிடத்திலே எவ்வளவு மட்டமானதோ, பயனற்றதோ அதுபோன்றுதான் இந்த துன்யாவை படைத்த அல்லாஹ்விடத்திலே இந்த துன்யா அவ்வளவு மட்டமானது, கேவலமானது. (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 962.
சொல்லுங்கள். ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக, தற்காலிக நாற்காலிக்காக, சண்டை போட்டவர்கள் எங்கே? சொத்துகளை குவித்தவர்கள் எங்கே? ஆடம்பர வாழ்க்கைக்காக அலைந்தவர்கள் எங்கே? தங்கங்களையும் வெள்ளிகளையும் வாங்கி மறைத்தவர்கள் எங்கே? நான் தான் பணக்காரன், நான்தான் உலக கோடீஸ்வரர்களில் முதலானவன் என்றெல்லாம் பெருமை பேசியவர்கள் எங்கே? எதை இந்த உலகத்தில் இருந்து கொண்டு செல்ல முடியும்?
இந்த துன்யா கிடைப்பதை அல்லாஹ்வுடைய அன்புக்கு அடையாளமாக ஆக்கிவிடாதீர்கள். இந்த துன்யாவில் நாம் சிரமப்படுவதை அல்லாஹ்வின் கோபத்திற்கு அடையாளமாக ஆக்கி விடாதீர்கள். இந்த வரலாறு கொடுக்கக்கூடிய மிக முக்கியமான படிப்பினை.
அது போன்று தான் இந்த சூராவின் படிப்பினையிலே ஒன்று செல்வங்கள் அதிகமாக கிடைப்பது, அது அல்லாஹ் ஒருவரை கண்ணியப்படுத்துகிறான் என்பதற்கு அடையாளம் அல்ல. செல்வம் அதிகமாக கொடுக்கப்படுவது ஒருவரை அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான் என்பதோ, செல்வத்தை அல்லாஹ் குறைத்துக் கொடுப்பது ஒருவரை அல்லாஹ் இழிவு படுத்துகிறான் என்பதற்கோ அடையாளம் அல்ல. அல்லாஹுவுடைய சூழ்ச்சியாக இருக்கலாம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் முஃமினுடைய தரஜாவை உயர்த்துவதற்காக இருக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
الأنبياءُ ثمَّ الأمثلُ فالأمثَلُ، فيُبتلى الرَّجلُ على حسْبِ دينِه
இந்த துன்யாவிலேயே அதிகம் கஷ்டப்படக் கூடியவர்கள் நபிமார்கள். பிறகு அவர்களுடைய பாதையிலே அவர்களுக்கு நெருக்கமாக செல்பவர்கள். பிறகு அவர்களுடைய பாதையிலே அவர்களுக்கு நெருக்கமாக செல்பவர்கள்.
ஒரு முஃமினை அல்லாஹ் நேசித்தால் அவனுடைய ஈமானுக்கு ஏற்ப அல்லாஹ் அவனை சோதிக்கிறான். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுத் தர்ஹுப்: 3402, திர்மிதி எண்: 2398.
கண்ணியத்திற்குரியவர்களே! நாளை மறுமையிலே வரும் பொழுது தன்னுடைய சோதனைகள், தான் பட்ட சிரமங்கள், தன்னுடைய துன்பங்கள், இந்த உலக வாழ்க்கையிலே தான் அனுபவித்ததை எல்லாம் ஒரு முஃமின் மறுமையிலே பார்க்கும் பொழுது அவன் நினைத்துப் பார்ப்பானாம். எனக்கு உலக வாழ்க்கையில் எந்த இன்பமுமே ஏற்பட்டிருக்கக் கூடாதே, எந்த சுகத்தையும் நான் அனுபவித்திருக்கக் கூடாதே, ஏனென்றால் தான் பட்ட கஷ்டங்களுக்கு, துன்பங்களுக்கு, சோதனைகளுக்கு அல்லாஹ் மறுமையில் கொடுக்கக்கூடிய அந்த பெரிய அருட்கொடைகளை நினைத்து அந்த முஃமின் அப்படி ஆசைப்படுவானாம்.
அதுபோன்று அல்லாஹ்வின் அடியார்களே, இந்த சம்பவம் கொடுக்கக்கூடிய முக்கியமான படிப்பினைகளிலே ஒன்று செல்வம் என்பது, வசதி என்பது அது ஒரு சாதனம் அவ்வளவுதான். அது ஒரு வழி.
அது நம்முடைய இலக்கு அல்ல. அது நம்முடைய குறிக்கோள் அல்ல. நம்முடைய குறிக்கோள் என்ன? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பெறுவது. அல்லாஹ்வுடைய கட்டளைகளை பெறுவது. அல்லாஹ்வுடைய தீனை தன்னால் முடிந்த அளவு வாழ்க்கையில் செயல்படுத்துவது, அதன் பக்கம் மக்களை அழைப்பது அதுதான் நம்முடைய வாழ்க்கையின் இலக்கு. வாழ்க்கையின் குறிக்கோள்.
இன்று அப்படியே தலைகீழாக மாற்றி வைத்து விட்டோம். துன்யாவிலே பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் என்ன நோக்கம்? குறைந்தபட்சம் நம்ம தெருவுல உள்ளவங்களிலேயே நான் தான் பெரிய பணக்காரனா இருக்கணும். அதற்குப் பிறகு அந்த ஏரியாவிலே என் வீடு பெரிய வீடா இருக்கணும். அதற்கு பிறகு அந்த ஊரிலேயே நான் பெரிய பணக்காரனாகனும், பிறகு ஸ்டேட், பிறகு கண்ட்ரி, பிறகு இன்டர்நேஷனல்.
அதிகம் அதிகம், இன்னும் இன்னும் என்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, கடைசியிலே எங்கே செல்ல போகிறீர்கள்? கப்ருக்கு தானே செல்ல போகிறீர்கள்.
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான், இந்த சம்பவத்திலிருந்து நாம் பெற வேண்டிய மிக முக்கியமான படிப்பினை, செல்வத்தை அடிப்படையாக லட்சியமாக ஆக்கக்கூடாது. காசுக்காக உழைப்பது அல்ல. உழைப்பது ஹலாலான ரிஸ்குக்காக, நம்முடைய ஈமானுக்காக, நம்முடைய இஸ்லாமுக்குக்காக. அல்லாஹ் கொடுத்தால் அல்ஹம்து லில்லாஹ். கிடைப்பது ஹலாலான வழியில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இன்று பெரும்பாலான வாலிபர்கள், பெரும்பாலான வியாபாரிகள், முஸ்லிம் செல்வந்தர்கள் உட்பட, முஸ்லிம்கள் உட்பட. காஃபிர்கள் அல்ல. காபிர்களை பொறுத்தவரை அவர்களின் ஒரு சிலர் இருக்கலாம் மனசாட்சிக்கு பயந்தவர்கள். எப்படியோ இரண்டாம் நம்பர் பிசினஸ், கமிஷன், லஞ்சம், ஊழல், வட்டி எந்த வழியில் எல்லாம் செல்வத்தை குவிக்க முடியுமோ சேர்க்க முடியுமோ சேர்ப்பார்கள். அந்த வழியிலே முஸ்லிம்களும் அவர்களுக்கும் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
எத்தனை முஸ்லிம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். எத்தனை முஸ்லிம் வியாபாரிகள் வாக்கை மீறுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறுகிறார்கள். கடன் வாங்கியவர்களிடத்திலே அந்த கடனை திருப்பிக் கொடுப்பதில்லை. சாமான்களை சப்ளை செய்தவர்களுக்கு அதற்குரிய தொகையை கொடுப்பதில்லை. அந்த சாமானை விற்று இவர் வீடு கட்டிடுவார். அந்த சாமானை விற்று இவர் கார் வாங்கிருவார். இவர் பங்களா வாங்கிருவார். சாமானைக் கொடுத்தவன், சரக்குகளை சப்ளை செய்தவன் வந்து அலைந்து கொண்டிருப்பான். சரக்குகளை கொடுத்தவன் அவன் ஆட்டோவில் வந்து தன்னுடைய சரக்குக்கு காசு கேட்பான். இவருடைய கடையின் வாசலிலே BMW மெர்சிடிஸ் கார் இருக்கும்.
யாருடைய காசு இது? இவருக்கு வியாபாரம் செய்வதற்காக முதலை கொடுத்தான் அல்லவா அவனுடைய காசு. அந்த முதலை வைத்து இவர் பணக்காரராக இருக்கிறார். கொடுத்தவன் அவன் போண்டியாக, ஏழையாக நின்று கொண்டிருக்கிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே, இதெல்லாம் எதற்காக? மனிதனுடைய கெட்ட எண்ணம், கெட்ட ஆசை. இந்த கெட்ட ஆசை, கெட்ட எண்ணம் வந்துவிட்டால் அந்த மனிதனை காதால் செவிடனாக, கண்ணால் குருடனாக, அவனுடைய மனசாட்சியால் செத்தவனாக, அவனை ஆக்கிவிடும். கண்ணிருந்தும் குருடனாக , காதிருந்தும் செவிடனாக உயிர் இருந்தும் பிணமாக அவனை ஆக்கிவிடும்.
இதற்குக் காரணம் என்ன? செல்வத்தை குறிக்கோளாக ஆக்கும் பொழுது. இந்த சம்பவம் நமக்கு கொடுக்கக்கூடிய மிக முக்கியமான படிப்பினை, செல்வத்தை குறிக்கோளாக ஆக்கக்கூடாது, செல்வத்தை லட்சியமாக கருதக்கூடாது. அதுதான் வாழ்க்கை. அது கிடைத்தால் திருப்தியாக, மகிழ்ச்சியாக இருப்பது. கிடைக்கவில்லை என்றால் கவலைப்படுவது. எப்படியாவது செல்வத்தை பெருக்க வேண்டுமே. செல்வந்தனாக ஆக வேண்டுமே என்று தலை வலி பிடித்தவனை போன்று பைத்தியமாக இருப்பது. அது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. காஃபிர்களுடைய பண்பு இது.
இப்படியாக கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் பல படிப்பினைகள், பாடங்கள் இருக்கின்றன. அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே சொல்லக்கூடிய எந்த ஒரு வரலாறும், எந்த ஒரு சம்பவமும், ஏதோ நாம் படித்துவிட்டு, முந்திய காலத்தில் நடந்ததை அல்லாஹ் சொல்கிறான் என்று கடந்து சென்று விடுவதற்காக அல்ல.
அல்லாஹ் இந்த சம்பவத்திலிருந்து எனக்கு என்ன உபதேசம் செய்கிறான்? அல்லாஹ் புகழக்கூடிய நல்லவர்களை படிக்கும் போது அப்படிப்பட்ட குணம் என்னிடத்திலே வர வேண்டுமே. அந்த ஈமான் வர வேண்டுமே. அந்த பண்பு வர வேண்டுமே. அந்த நல்ல செயல் என்னிடத்திலே வர வேண்டுமே என்று ஏங்கி அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும்.
அல்லாஹ் எச்சரித்த, அல்லாஹ் கோபித்த, அல்லாஹ் சபித்த நிராகரிப்பாளர்கள், முஷ்ரிக்குகள், கெட்ட குணமுடைய பாவிகளைப் பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது, "யா அல்லாஹ்! அந்த கெட்ட குணத்தில் இருந்து, அந்த கெட்ட பாவத்திலிருந்து, அந்த கெட்ட செயலில் இருந்து, அந்த கெட்ட குணத்தில் இருந்து என்னை பாதுகாத்து விடு! அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கி விடாதே" என்று அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேட வேண்டும். அதற்கு தான் வரலாறுகள், சம்பவங்கள், நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா என்னையும், உங்களையும் அல்குர்ஆனை ஓதக்கூடியவர்களாக, அதனுடைய உபதேசங்களை கொண்டு படிப்பினை பெறக் கூடியவர்களாக, அதனுடைய சட்டங்களை மதித்து நடக்கக் கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ مرَّ بالسوقِ داخلًا من بعضِ العاليةِ فمرَّ بجَديٍ أَسَكٍّ ميتٍ فتناوله فأخذ بأُذُنِه ثم قال أيكم يحبُّ هذا له بدرهمٍ ؟ فقالوا ما نحبُّ أنه لنا بشيءٍ وما نصنعُ به قال أتحبّون أنه لكم قالوا لا قال ذلك لهم ثلاثًا فقالوا لا واللهِ لو كان حيًّا لكان عيبًا فيه أنه أَسَكٌّ ( والأسَكُّ الذي ليس له أُذُنانِ ) فكيف وهو ميتٌ قال فواللهِ ، لَلدُّنيا أهونُ على اللهِ من هذا عليكم
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?" என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 962.
குறிப்பு: (2)
قلتُ: يا رسولَ اللَّهِ، أيُّ النَّاسِ أشدُّ بلاءً؟ قال: الأنبياءُ ثمَّ الأمثلُ فالأمثَلُ، فيُبتلى الرَّجلُ على حسْبِ دينِه، فإن كانَ في دينهِ صلبًا اشتدَّ بلاؤُهُ، وإن كانَ في دينِهِ رقَّةٌ ابتليَ على حسْبِ دينِه، فما يبرحُ البلاءُ بالعبدِ حتَّى يترُكَهُ يمشي على الأرضِ ما عليْهِ خطيئةٌ الراوي : سعد بن أبي وقاص | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم: 2398 | خلاصة حكم المحدث : حسن صحيح
ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பற்று உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பற்று உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுத் தர்ஹுப்: 3402, திர்மிதி எண்: 2398.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/