HOME      Khutba      குகை ஸூரா கூறும் அறிவுரைகள் | Tamil Bayan - 1016   
 

குகை ஸூரா கூறும் அறிவுரைகள் | Tamil Bayan - 1016

           

குகை ஸூரா கூறும் அறிவுரைகள் | Tamil Bayan - 1016


குகை ஸூரா கூறும் அறிவுரைகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : குகை ஸூரா கூறும் அறிவுரைகள்
 
வரிசை : 1016
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 21-11-2025 | 30-05-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் : 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் ரப்புல் ஆலமீன் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள்மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை, தக்வாவை உபதேசம் செய்தவனாகவும், உங்களுக்கும் எனக்கும், நம்முடைய பெற்றோருக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும், அருளையும், மறுமையின் மகத்தான சொர்க்கத்தையும் வேண்டியவனாகவும், இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! வழிகேடுகள், சீர்கேடுகள், கெட்டவை, தீயவை மற்றும் அல்லாஹ்வுக்கு பிடிக்காத எந்த ஒரு செயலும் நம்முள் நுழைந்து விடுவதிலிருந்தும், நம்மோடு சேர்ந்து விடுவதிலிருந்தும், அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன். அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தில், சத்திய கொள்கையில், சத்திய பாதையில் என்னையும் உங்களையும், அல்லாஹு தஆலா இறுதி மூச்சு வரை நிலைநிறுத்தி வைப்பானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வெள்ளிக்கிழமையின் முக்கியமான அமல்களில் ஒன்றாகிய ஸூரத்துல் கஹ்ஃபை ஓதுவது பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த குகை அத்தியாயம் கூறக்கூடிய படிப்பினைகள், உபதேசங்கள், ஞான அறிவுரைகள் என்ன என்பதை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தத் தொடரில், இன் ஷா அல்லாஹ், இன்று 45-வது வசனத்திலிருந்து சில முக்கியமான அறிவுரைகளை நாம் பார்க்க இருக்கிறோம்.
 
முன்பு பலமுறை நினைவூட்டப்பட்டதுபோன்று, அல்லாஹு தஆலா தன்னுடைய தூதர் ﷺ அவர்களுக்கு உபதேசம் செய்கிறான். யார் உலக மக்களுக்கெல்லாம் உபதேசியாகவும், ஆசிரியராகவும், அழைப்பாளராகவும் அனுப்பப்பட்டாரோ, அத்தகைய தூதர் ﷺ அவர்களையே அல்லாஹு தஆலா உபதேசம் செய்து உருவாக்குகிறான்.
 
ரஸூலுல்லாஹி ﷺ அவர்களுடைய உள்ளத்தை அல்லாஹு தஆலா பக்குவப்படுத்தினான். அவர்களுடைய குணங்களை அல்லாஹ் சீர்படுத்தினான். அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹு தஆலா தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப, உயர்ந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டு செதுக்கிக் கொண்டிருந்தான். சிறிய-பெரிய ஒவ்வொரு வெறுக்கத்தக்க கெட்ட குணத்திலிருந்தும் தன்னுடைய தூதரை அல்லாஹு தஆலா பரிசுத்தப்படுத்திக் கொண்டே இருந்தான். 
 
உலக மக்களை பரிசுத்தப்படுத்த வேண்டிய தூதர் ﷺ அவர்களையே அல்லாஹு தஆலா முதலில் பரிசுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அவர்களுக்குள் உயர்ந்த சிந்தனையை உருவாக்குவதின் மூலமாக, ஈமானின் உயர்ந்த நிலைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, யக்கீனின் உச்ச நிலைக்கு அவர்களை கொண்டு செல்வதன் மூலமாக, தவக்குலின் உயர்ந்த நிலைக்கு அவர்களை உயர்த்துவதன் மூலமாக, மறுமையின் நினைவில் எப்போதும் அவர்கள் திளைத்திருப்பதற்காக, உலக மோகம் அவர்களிடம் அறவே இருக்கக் கூடாது, உலக ஆசை அவர்களிடம் நுழையவே கூடாது என்பதற்காக, அல்லாஹு தஆலா அவர்களை தொடர்ந்து பக்குவப்படுத்திக் கொண்டே இருந்தான்.
 
அவ்வாறு பக்குவப்படுத்துவதற்காக அல்லாஹு தஆலா செய்த உபதேசங்கள் நிறைந்த ஸூராவாகத்தான் இந்த ஸூரத்துல் கஹ்ஃப் இருக்கிறது. இந்த ஸூராவில் அல்லாஹு தஆலா நபியவர்களிடம் நேரடியாக பேசுகிறான்.
 
நபியே! யார் செல்வத்தை கொண்டு பெருமை பேசினார்களோ, ஏழைகளை எல்லாம் மட்டமாக ஒதுக்கினார்களோ தாங்கள் வரும்போது இந்த ஏழைகள் உங்களை சுற்றி இருக்கக் கூடாது என்று இந்த ஏழைகளை விரட்ட வேண்டும் என்று உங்களிடம் சொன்னார்களோ யாருக்கு  தங்களது செல்வத்தால் தங்களது பதவியால் தங்களது குடும்பத்தால் பெருமை இருக்கிறதோ அவர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்; எந்த உலகத்தை கொண்டு நீங்கள் பெருமை அடைகிறீர்களோ எந்த உலகத்தால் உங்களுக்கு ஆணவம், செருக்கு, கர்வம், மமதை பிறரை விட தான் உயர்ந்தவன் என்ற அந்த இருமாப்பு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் நபியே நீங்கள் விளக்கிச் சொல்லுங்கள்.
 
وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا
 
மேலும், (நபியே!) அவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மை மழை நீரைப் போன்றது என்று விவரிப்பீராக! (அதாவது,) அதை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். பூமியின் தாவரம் அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது மாறி விட்டது. (இது போன்றுதான் இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) மேலும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 18:45)
 
வசனத்தின் கருத்து : இந்த உலக வாழ்க்கை இருக்கிறதே அதற்கு உதாரணம் என்னவென்றால் வானத்திலிருந்து நாம் மழையை இறக்க அதன் மூலமாக பூமியின் புற்பூண்டுகள் செடி கொடிகள் முளைத்து வளர பிறகு அந்த மழை நின்றவுடன் வெயிலை வெப்பத்தை அதிகப்படுத்தும் போது அது காய்ந்து சருகுகளாக குப்பைகளாக மாறிவிடுகிறது. காற்றுகள் அங்கும் இங்கும் அசைத்து செல்கின்ற சருகுகளாக மாறிவிடுகின்றது. அப்படித்தான் அவர்களிடம் இருக்கக்கூடிய துன்யா. 
 
இந்த துன்யா யாருக்கும் நிலையற்றது. பாசாங்குடையது. இன்று உங்களைப் பார்த்து சிரிக்கின்ற இந்த துன்யா நாளை இன்னொருவரை பார்த்து சிரிக்கும். நீங்கள் கட்டிய வீட்டை இன்னொருவர் இருப்பார். ஒரு தலைமுறை கட்டி பெருமை அடித்த ஒரு மாளிகை அடுத்த தலைமுறையில் இன்னொருவரால் சொந்தம் கொண்டாடப்பட்டு அது இடிக்கப்படும் நமது முன்னோர்கள் குடியேறிய வீட்டிலா நாம் இருக்கிறோம். அவர்கள் கட்டிய மாளிகைகளிலா இன்று அவர்களின் குடும்பத்தார்கள் தலைமுறைகள் இருக்கின்றார்கள் மன்னர்கள் கட்டிய மாளிகைகளே புறா கூண்டுகளாக ஆகிவிட்டன. வௌவ்வால்களின் வீடுகளாக ஆகிவிட்டன மக்கள் வந்து போகின்ற சுற்றுலா தலங்களாக ஆகிவிட்டன. 
 
இந்த துன்யா யாருக்கும் நிலையற்றது. யாரிடத்திலும் நிலையாக இருக்காது. இது நம் உள்ளத்தை பறி கொடுப்பதற்கான ஒரு இல்லம் அல்ல. இதனுடைய சுகம் நாம் நம்முடைய மனதை இதில் ஈடுபடுத்துவதற்கான சுகம் அல்ல. நபியே பெருமை இதைக் கொண்டு அல்ல. கண்ணியம் இதைக் கொண்டு அல்ல. 
 
(அல்குர்ஆன் 18:46) 
 
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏
 
செல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். ஆனால், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உம் இறைவனிடம் (உங்களுக்கு) நன்மையாலும் சிறந்தவை; இன்னும், ஆசையாலும் சிறந்தவையாகும். (அல்குர்ஆன் 18:46)
 
இந்த உலக வாழ்க்கை ஒரு அழகு அவ்வளவுதான். உங்களது செல்வம் உங்களது குடும்பம் உங்களது பிள்ளைகள் எல்லாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அழகு அவ்வளவுதான். இந்த உலகம் என்பது நீங்கள் உங்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உண்டான அந்த ஒரு விஷயம் அல்ல. 
 
எந்த முஸ்லிம்களை பார்த்து எந்த ஏழை மூஃமின்களை பார்த்து இவர்களோடு நாம் அமர மாட்டோம் என்று சொன்னார்களே! அந்த திமிர் பிடித்த செல்வந்தர்கள். அவர்களைப் பற்றி இவர்களுக்கு தெரியுமா? அவர்களிடத்திலே இருக்கக்கூடிய அமல்களை பற்றி இவர்களுக்கு தெரியுமா? 
 
அல்லாஹ் சொல்கின்றான்; நிரந்தரமான நல்ல அமல்கள். எந்த அமல்களை நீங்கள் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்கிறீர்களோ, இந்த துன்யாவில் நீங்க தொழக்கூடிய தொழுகை; நீங்கள் செய்யக்கூடிய திக்ருகள்; நீங்கள் ஓதக்கூடிய குர்ஆன்; நீங்கள் செய்த ஹஜ்; நீங்கள் செய்த தான தர்மங்கள்; உறவுகளுக்கு கொடுத்தது, ஏழைகளுக்கு கொடுத்தது, அனாதைகளுக்கு கொடுத்தது, அல்லாஹ்வின் பாதையிலே மார்க்கத்திற்காக கொடுத்தது இப்படி நீங்கள் தேடி கொள்கின்ற புண்ணியங்கள் இருக்கின்றன. இதுதான் உங்கள் ரப்பு இடத்திலே சிறந்தது. 
 
நீங்கள் எவ்வளவு பெரிய உயரமான கோபுரத்தில் வாழ்கிறீர்கள் என்பதை வைத்து அல்லாஹ் உங்களை திருப்தி பட மாட்டான். நீங்கள் வாழக்கூடிய வீடு உங்களைக் கொண்டு அல்லாஹ்வை மகிழ்ச்சி அடையச் செய்யாது. நீங்கள் அனுபவிக்க கூடிய வசதிகள் உங்களைக் கொண்டு அல்லாஹ்வை திருப்தி அடைய செய்யாது. உங்களிடத்திலே இருக்கக்கூடிய சொத்து, சுகம், செல்வம், குடும்பம் இதைக் கொண்டு அல்லாஹ் திருப்தி அடைய மாட்டான். 
 
இதுவெல்லாம் அல்லாஹு தஆலா இந்த துன்யாவிலே அவனுடைய ஒரு திட்டத்தின் அடிப்படையில் விதியின் அடிப்படையில் கொடுக்கின்றான். அல்லாஹ் கொடுத்ததில் நாடியவருக்கு விசாலமாக கொடுப்பான். நாடியவர்க்கு சுருக்கி கொடுப்பான். 
 
ஒரு செல்வந்தரின் செல்வம் அவனுக்கு அல்லாஹ்விடத்திலே சிறந்த தகுதி இருப்பது என்பதால் கொடுக்கப்பட்டது அல்ல. ஒரு ஏழையின் ஏழ்மை அவனுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த தகுதியும் இல்லை என்பதால் அந்த ஏழ்மையில் இருக்கிறான் என்பது அர்த்தம் அல்ல. 
 
செல்வம் ஏழ்மை என்பது இது உலகத்தில் ஒரு நியதி. அந்த அந்தரங்க ரகசியங்களை நாம் அறிய முடியாது. தடுப்பவனும் அவனே. விசாலமாக விரிப்பவனும் அவனே. சுருக்குப்பவனும் அவனே. இந்த செல்வம் இந்த வசதி இது அல்லாஹ்விடத்தில் அளவுகோலே இல்லை. அவனுடைய அளவுகோல் என்ன?
 
وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏
 
நீங்கள் செய்ய கூடிய அமல்கள், நீங்கள் செய்யக்கூடிய தொழுகை, நோன்பு, அல்லாஹ்வை திருப்தி படுத்த நீங்கள் வணங்கக்கூடிய வணக்க வழிபாடுகள், நீங்கள் செய்கிற தான தர்மங்கள் இதுதான் உங்களுக்கு சிறந்தது. 
 
உங்கள் இறைவனிடத்திலே நீங்கள் எவ்வளவு இந்த துன்யாவில் விட்டுவிட்டு வந்தீர்கள் என்பதைக் கொண்டு அல்லாஹ் உங்களை சொர்க்கவாசியாக ஆக்க மாட்டான். உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் எதை முற்படுத்தி விட்டு வந்தீர்களோ அதை கொண்டுதான் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை அவனுடைய அன்பை பொருத்தத்தை கொடுப்பான்.
 
மிக அருமையான வசனம் இது. ஏழைகள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நெருக்கடிகளில் வாழ்பவர் யாரும் குறைபட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமல்கள் இருக்கின்றன. அல்லாஹ்விடத்தில் புண்ணியங்கள் இருக்கின்றன. அதுதான் நம்முடைய மனதை பறி கொடுப்பதற்கான இந்த உலகத்தில் உள்ள அமல்கள். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; எந்த காஃபிர்கள் மறுமையை நம்பாதவர்கள் செல்வத்தை பெருமை கொண்டு இந்த ஏழை மூஃமின்களை ஒதுக்க சொல்கின்றார்களோ, நபியே அந்த காஃபிர்களுக்கு சொல்லுங்கள். அந்த மறுமையை நம்பாத பாவிகளுக்கு சொல்லுங்கள். உங்களிடத்தில் இருக்கக்கூடிய இந்த துன்யா அழிந்து போகக்கூடியது. ஒன்றுமில்லாமல் போகக்கூடியது. இந்த மூஃமின்களிடத்தில் இருக்கக்கூடிய நல்ல அமல்கள் அல்லாஹ்விடத்தில் நன்மையால் மிகச் சிறந்தது. இதுதான் ஆசைப்படுவதற்கு சிறந்த ஒன்று. 
 
நாம் ஒன்றை ஆசைப்பட வேண்டும் என்றால், அதற்கு மிக தகுதியானது எது? நல்ல அமல்கள்.  அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இவர்களுக்கு இப்போது புரியாது. எப்போது புரிய வரும்?
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; அல்லாஹ்வுடைய இந்த உண்மைகள் இந்த உலகத்தில் அல்லாஹ்வுடைய தண்டனைகள் தாமதமாகுவதால் அல்லாஹ்வுடைய வாக்குகள்  தாமதமாகுவதால் அல்லாஹ் மூஃமின்களை கைவிட்டு விட்டான் என்று காஃபிர்கள் எண்ணிக் கொண்டார்கள். 
 
காஃபிர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்; நாங்கள் தான் சரியான பாதையில் இருக்கிறோம் என்று. இதையும் அல்லாஹு தஆலா அடுத்த வசனங்களிலே இந்த ஸூராவிலே 58 வது வசனத்திலே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்..
 
وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَلْ لَهُمْ مَوْعِدٌ لَنْ يَجِدُوا مِنْ دُونِهِ مَوْئِلًا
 
இன்னும், உம் இறைவன் மகா மன்னிப்பாளன், (நிறைவான) கருணையுடையவன் ஆவான். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை தண்டித்தால் தண்டனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) அறவே பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 18:58)
 
அல்லாஹு தஆலாவிடத்திலே ஒரு வாக்களிக்க பட்ட முடிவு செய்யப்பட்ட நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த நேரம் வந்தவுடன் யாரும் அதில் இருந்து தப்பிக்க முடியாது.
 
وَتِلْكَ الْقُرٰٓى اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا‏
 
அந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களின் அழிவிற்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:59)
 
அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறக்கூடிய பாவம் செய்யக்கூடிய எந்த ஊர் மக்களும் எல்லை மீறக்கூடிய எந்த ஊரார்களும் அவர்களை அழிப்பதற்கு அல்லாஹு தஆலா ஒரு கால அவகாசத்தை முடிவு செய்து இருக்கிறான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமையை நினைத்துப் பாருங்கள்! நபியே ஆஹிரத்தை நினைவூட்டுங்கள்! அந்த மறுமை சாதாரணமானதல்ல.  நிலையாக இருக்கக்கூடிய இந்த மலைகளை நாம் ஆகாயத்திலே நடக்க வைத்து விடுவோம். பறக்க வைத்து விடுவோம். அவ்வளவு பெரிய மலை ஆகாயத்தில் அப்படியே சுக்கு நூறாக ஆக்கப்பட்டு இருப்பிடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு தூள் தூளாக ஆக்கப்பட்டு காற்றிலே பஞ்சுகள் பறப்பதை போல நூல்கள் பறப்பது போல பறந்து செல்லும்.
 
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّىْ نَسْفًا ۙ فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ‏
 
அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.” ஆக, அவற்றை சமமான பூமியாக (ஆக்கி) விட்டுவிடுவான். (அல்குர்ஆன் 20:105-106)
 
நபியே! இவ்வளவு பெரிய மலைகள் எல்லாம் என்ன ஆகும்? என்று கேட்கிறார்கள். சொல்லுங்கள் நபியே, இவற்றையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கி விடுவோம். சமமான பூமியாக ஆக்கிவிடுவோம். அல்லாஹு தஆலா சொல்லுகின்றான்;
 
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۙ‏
 
56:5. இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால், (அல்குர்ஆன் 56:5)
 
وَحُمِلَتِ الْاَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۙ‏
 
பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால், (அல்குர்ஆன் 69:14)
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; அந்த நாளில் பூமி முற்றிலுமாக ஒரு மைதானமாக மாறிவிடும். 
 
وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا‌ ‏
 
எல்லோரையும் கொண்டு சேர்த்து விடுவோம். யாரையும் விட்டுவிட மாட்டோம். (அல்குர்ஆன் 18:48)
 
அத்தனை கோடி மக்கள், ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து உலக முடிவு நாள் வரை உலகத்தின் மேற்பரப்பிலே வசிக்கக்கூடிய மக்கள் எங்கு வசித்து இருப்பார்கள்? எந்த காலத்தில் இருப்பார்கள்? எல்லாரையும் அல்லாஹு தஆலா அந்த மறுமையிலே கொண்டு வந்து நிறுத்துவான். 
 
அன்பு சகோதரர்களே! ஆஹிரத்தை அல்லாஹ் நினைவூட்டுகின்றான். மறுமையை நினைவூட்டுகின்றான். 
 
وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّنْ نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا
 
இன்னும், உம் இறைவன் முன், வரிசையாக (எல்லோரும்) சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது அவன் கூறுவான்:) “நாம் உங்களை (தாயின் வயிற்றிலிருந்து) முதல் முறைப் படைத்தது போன்றே (இப்போது) எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாறாக, (உங்களை உயிர்ப்பிப்பதற்கு) வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் (உலகில் வாழும்போது) பிதற்றினீர்கள்.” (அல்குர்ஆன் 18:48)
 
கருத்து : நபியே! அவர்களெல்லாம் வரிசை வரிசையாக அவர்களுடைய ரப்புக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அப்போது அந்த மறுமையை நம்பாதவர்களை பார்த்து அல்லாஹு தஆலா சொல்வான்.
 
 لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ
 
உங்களை ஆரம்பமாக நாம் படைத்தோமே தாயின் வயிற்றிலிருந்து இந்த பூமியில் விழுந்தீர்களே அப்படியே இப்போதும் வந்திருக்கிறீர்களே. 
 
மேலே ஆடை இருக்காது. கத்னா செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். செருப்பணிந்து இருக்க மாட்டார்கள். அப்படியே அல்லாஹு தஆலா அவர்களை கொண்டு வந்து சேர்த்து விடுவான்.
 
   بَلْ زَعَمْتُمْ اَ لَّنْ نَّجْعَلَ لَـكُمْ مَّوْعِدًا‏
 
இப்படிப்பட்ட ஒரு நாள் உங்களுக்கு ஏற்படாது. நாம் அதை ஏற்படுத்த மாட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களா? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமையின் நம்பிக்கை ஒரு முஃமினை காஃபிரிடமிருந்து பிரிக்கக் கூடியது. ஒரு முஃமினுக்கு அல்லாஹ்விடத்தில் ஆதரவை தரக்கூடியது. ஒரு மூஃமினுக்கு அவனுடைய ஈமானை பலப்படுத்தக் கூடியது. ஒரு முஃமினுக்கு அவனுடைய யக்கீனை உறுதி படுத்தக் கூடியது. ஒரு முஃமினுக்கு எந்த இழப்பும் இல்லை என்ற மகத்தான நம்பிக்கை ஆஹிரத்துடைய நம்பிக்கை அவனுக்கு தரக்கூடியது 
 
அன்பு சகோதரர்களே! முஃமின்களுக்கு இந்த உலகத்தில் எதுவும் இழப்பில்லை. அவன் இந்த உலகத்தில் எந்த இன்பத்தையும் அனுபவத்திருகவில்லை என்றாலும் எந்த சுகத்தையும் அவன் கண்டிருக்கவில்லை என்றாலும்; எந்த செல்வ வசதியையும் அவன் பார்த்திருக்கவில்லை என்றாலும்; அவனுக்கு குடும்பமே இல்லை என்றாலும், இந்த உலகத்தில் ஒரு முஃமினுக்கு எதுவுமே இழப்பில்லை. 
 
அவன் ஈமானோடு இருந்துவிட்டால் அவன் அல்லாஹ்விற்காக வாழ்ந்து அல்லாஹ்விடத்திலே சென்றுவிட்டால், ஒரு முஃமினுக்கு இழப்பே இல்லை. 
 
ஈமான் இல்லாதவர்களுக்கு அவர்கள் இந்த உலகத்தில் எவ்வளவு அனுபவித்து இருந்தாலும் மிகப்பெரிய வளமான ஒரு வசதியான நாட்டில் மன்னராக இருந்து உலகத்தில் அத்தனை வசதிகளையும் இன்பங்களையும் சுகங்களையும் அவன் அனுபவித்தாலும் சரி அவன் குஃப்ரிலே இருந்தால் அவனைவிட ஒரு இழப்பாளி கிடையாது;  அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; தன்னுடைய நபியை நம்பக் கூடியவர்களை மறுமையின் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு சென்று விடுகிறான். அப்படித்தான் அல்லாஹு தஆலா இந்த வசனத்தை சொல்லுகிறான் பாருங்கள்.
 
وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى 
 
நாளை மறுமையில் மனிதர்கள் செய்த அந்த செயல்கள் பதிவு செய்யப்பட்ட ஏடுகள் விரிக்கப்பட்டு விடும். 
 
அப்படியே கொஞ்சம் அந்த சிந்தனைக்கு சென்று பார்ப்போம். யோசித்துப் பாருங்கள்! இறந்துவிட்டோம். மீண்டும் கப்ரிலே உயிரிப்பிக்கப்படுகின்றோம். அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தப்படுகின்றோம். நம்முடைய ஏடுகள் அப்படியே விரிக்கப்படுகின்றன. 
 
எந்த பாவிகள் எந்த செல்வந்தர்கள் தங்களுடைய செல்வ மமதையால் பாவம் செய்தார்களோ, பெருமை அடித்தார்களோ, முஃமின்களை பழி தீர்த்தார்களோ, முஃமின்களுக்கு தொந்தரவு தந்தார்களோ, குறிப்பாக அந்த பாவிகளை பார்த்து அல்லாஹு தஆலா சொல்கின்றான். 
 
எல்லா காஃபிர்களுக்கும் தண்டனை இருக்கிறது.‌ மறுமையிலே எந்த காஃபிரும் தப்பிக்க முடியாது. மறுமையிலே அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அபூ தாலிபுக்கே தண்டனை இருக்கிறது. அவரை விடவா அல்லாஹ்வின் தூதரை ஆதரித்தவர்? முஸ்லிம்களை ஆதரித்தவர்? ஆனால், குஃப்ரில் இறந்து விட்டார். 
 
يَا رَسولَ اللَّهِ، هلْ نَفَعْتَ أبَا طَالِبٍ بشَيءٍ؟ فإنَّه كانَ يَحُوطُكَ ويَغْضَبُ لَكَ، قالَ: نَعَمْ، هو في ضَحْضَاحٍ مِن نَارٍ، لَوْلَا أنَا لَكانَ في الدَّرَكِ الأسْفَلِ مِنَ النَّارِ.
 
அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கேட்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய தந்தையின் சகோதரர் அபுதாலிப் உங்களை பாதுகாத்தாரே! உங்களை அரவணைத்தாரே! நாளை மறுமையில் அவருக்கு நீங்கள் ஏதாவது சிபாரிசு செய்ய முடியுமா? 
 
எப்பேர்ப்பட்ட கேள்வி! ஒரு பக்கம் தனக்கும் சகோதரர். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ என்னுடைய சிபாரிசு மட்டுமில்லை என்றால் நாளை மறுமையில் நரகத்தின் ஆழத்திலே அவர் இருந்திருப்பார். என்னுடைய சிபாரிசினால் நரகத்தின் விளிம்பிலே அல்லாஹு தஆலா அவரை வைத்திருப்பான். 
 
அவருடைய காலை மட்டும் தீண்டும் அந்த நரக நெருப்பு அதனுடைய வெப்பத்தால் அவருடைய மூளை வெந்து கொண்டிருக்கும். அந்த நெருப்பினால் அவருடைய உடல் வெந்து மூளை அப்படியே பாத்திரத்திலே தண்ணீர் கொதிப்பது போன்று மூளை கொதித்துக் கொண்டிருக்கும். 
 
அறிவிப்பாளர் : அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6208. 
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
 
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَاوَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
 
இன்னும், (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். ஆக, குற்றவாளிகளோ அ(ந்த புத்தகத்)தில் உள்ளவற்றினால் பயந்தவர்களாக இருப்பதைப் பார்ப்பீர். இன்னும், எங்கள் நாசமே! இந்த புத்தகத்திற்கு என்ன? (குற்றங்களில்) சிறியதையும் பெரியதையும் அவற்றைக் கணக்கிட்டே தவிர (-அவற்றைப் பதிவு செய்து வைக்காமல்) அது விடவில்லையே! எனக் கூறுவார்கள். அவர்கள் செய்ததை (எல்லாம் அவர்கள் தங்கள் கண்களுக்கு) முன்னால் காண்பார்கள். இன்னும், உம் இறைவன் (யார்) ஒருவருக்கும் (அவரின் நன்மையை குறைத்தோ, பாவத்தை கூட்டியோ) தீங்கிழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)
 
அறிஞர்கள் சொல்லுகின்றார்கள்; ஒரு சாதாரண மனிதனை பார்த்து ஏளனமாக ஒரு நகைப்பு சிரிப்பு சிரித்திருப்பான் அல்லவா. அது கூட அங்கே பதிவு செய்யப்பட்டு இருக்கும். 
 
அல்லாஹு அக்பர்! ஒரு துளி செயல் கூட விடுபட்டு இருக்காது. அல்லாஹ் சொல்லுகிறான். அவர்கள் செய்த அனைத்தையும் அவர்கள் அங்கே கண்டு கொள்வார்கள்.
 
 وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏
 
நபியே உங்களது ரப்பு யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். 
 
அல்லாஹுதஆலா நன்மை செய்தவர்களின் நன்மையை குறைக்க மாட்டான். ஒருவர் ஒருவருடைய குற்றத்தை இன்னொருவர் மீது  சுமத்த மாட்டான். ஒருவர் செய்யாததைக் கொண்டு அல்லாஹ் அவரை தண்டிக்க மாட்டான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுபஹானஹூ வ தஆலா இந்த 45 ஆவது வசனத்திலிருந்து இந்த 49 வது வசனம் வரை சொல்லக்கூடிய இந்த வசனங்கள் இருக்கின்றனவே. இந்த ஸூராவிலே மிக மிக நாம் நினைவு கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். 
 
இதனுடைய படிப்பினைகள் என்ன? நாம் இந்த உலகத்தில் நம்முடைய மனதை பறி கொடுத்து விடக்கூடாது. நம்முடைய உள்ளத்தில் உயர்வாக இந்த துன்யாவின் செல்வங்களை ஆக்கிவிடக்கூடாது. இரண்டாவதாக அல்லாஹு தஆலா நமக்கு இந்த செல்வங்களை கொடுக்கும்போது, அல்லாஹுதஆலா வசதியை கொடுக்கும் போது, அல்லாஹ் அவனுடைய அருளை நமக்கு விரிக்கும் பொழுது, அந்த செல்வம் நம்முடைய மறுமையை தேடுவதற்காக கொடுக்கப்படுகிறது. தவிர, அல்லாஹ்வின் அடியார்களை மட்டமாக பார்ப்பதற்காக நம்மை உயர்த்தி கொள்வதற்காக அல்ல. 
 
அல்லாஹ்வின் பாதையிலே ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதற்காகத்தானே தவிர அதைக் கொண்டு நாம் பெருமை அடிப்பதற்காக அல்ல. 
 
இந்த உலகத்தில் நம்முடைய நேரங்கள், நம்முடைய உடல் உழைப்புகள், உடல் ஆற்றல்கள் அதிகமாக அல்லாஹ்வுடைய இபாதத்துக்காக செலவு செய்யப்படுகின்றனவா? என்று யார் சுய பரிசோதனை செய்கின்றானோ, அவனுடைய முயற்சி தான் வெற்றி பெற்ற முயற்சி. 
 
இந்த துன்யாவில் எவ்வளவு தான் நாம் சேர்த்தாலும், எவ்வளவுதான் நாம் பாதுகாத்தாலும் கண்டிப்பாக ஒரு நேரத்தில் இதை விட்டு நாம் பிரிவோம் பிரிக்கப்படுவோம். நம்மிடம் இருந்து பிரியாதது பிரிக்கப்பட முடியாத, நம்மை விட்டு விலகாத நமக்கு கப்ரிலே துணை இருக்க கூடிய, நாளை மறுமையிலே மஹ்ஷரிலே துணை இருக்க கூடிய, நமக்கு உயர்ந்த சொர்க்கத்தை அல்லாஹ்விடத்தில் தேடித் தரக்கூடிய, நிலையான மறுமை இன்பத்தை தேடி தரக்கூடியது நம்முடைய அமல்கள் தான் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். 
 
அது மட்டுமல்ல, மஹ்ஷருடைய மைதானத்தில் அந்த விசாரணை நாளை அந்த விசாரணை நேரத்தை பயந்து கொண்டே இருக்க வேண்டும். யாரும் நம்மை பார்க்கவில்லை, யாரும் நம்மை கண்டு கொள்ளவில்லை அல்லது நம்மை யார் கேள்வி கேட்க முடியும்? 
 
அப்படியும் சிலர். என்னை யாராவது கேள்வி கேட்க முடியுமா? என்னை யாராவது எதிர்க்க முடியுமா?  என்ற ஆணவ திமிரு. யாரும் நாளை மறுமையிலே அங்கே தப்பிக்க முடியாது. 
 
அல்லாஹு தஆலா அடக்கி ஆளக் கூடியவனாக அரசனாக இருப்பான். குற்றவாளிகள் எல்லாம் அங்கே விலங்கிடப்பட்டு கொண்டு வரப்படுவார்கள். அவர்களின் செயல்களுக்கு தகுந்த கூலி கொடுக்கப்படும். 
 
நாளை மறுமையிலே அல்லாஹு தஆலா அளிக்கக்கூடிய தீர்ப்புகளிலே மிகப்பெரிய தீர்ப்பு முதலாவது தீர்ப்பு கொல்லப்பட்டவர்களுக்காக அல்லாஹ் கொடுக்கக்கூடிய நீதி. 
 
இந்த உலகத்தில் ஒருவன் ஒரு அப்பாவியை கொன்று விட்டு தன்னுடைய செல்வத்தால் தன்னுடைய ஆட்சியால் அதிகாரத்தால் தப்பித்துக் கொள்ளலாம். நாளை மறுமையில் தப்பிக்க முடியாது. 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
 
أَوَّلُ ما يُقْضَى بيْنَ النَّاسِ بالدِّماءِ
 
நாளை மறுமையில் அல்லாஹு தஆலா முதலாவதாக பழித்தீர்ப்பது ரத்தங்களுக்காக. 
 
அறிவிப்பாளர்  : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, 6533, முஸ்லிம் எண் 1678.
 
அடுத்து, அல்லாஹ்வின் அடியார்களே! அது போக ஒவ்வொரு சிறிய பெரிய பாவத்திற்காக மனிதன் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவான். அவனுடைய ஏடுகள் விரிக்கப்பட்டு அவனையே படிக்க சொல்லப்படும்.
 
اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
 
“உன் (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை நீ படி! இன்று உன்னை விசாரிக்க நீயே போதுமானவன். (அல்குர்ஆன் 17:14)
 
நீயே படித்து நீ சொர்க்கத்திற்கு தகுதியானவனா? நரகத்திற்கு தகுதியானவா? என்று நீயே முடிவு செய் என்று அவனையே அவனுக்கு சாட்சியாக ஆக்கப்படும். அல்லாஹுதஆலா நம்மை பாதுகாப்பானாக!
 
அன்பிற்குரியவர்களே! இப்படிபட்ட அழகிய அற்புதமான உள்ளங்களை மென்மை படுத்தக்கூடிய, உபதேசங்கள் நிறைந்த இந்த கஹ்ஃப் ஸூராவை நாம் அதிகம் ஓதி இதனுடைய படிப்பினைகளை பெறுவோமாக! நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய வளரும் தலைமுறைகளுக்கு அறிவுரைகளை வழங்குவோமாக! அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா நாளை மறுமையில் வெற்றி பெற்ற மகத்தான அல்லாஹ்வின் அருளை பெற்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் நம்முடைய பெற்றோர்களையும் நம்முடைய சந்ததிகளையும் ஆக்கி அருள்வாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/