உண்மையும் அதன் சிறப்புகளும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : உண்மையும் அதன் சிறப்புகளும்
வரிசை : 1019
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 28-11-2025 | 07-06-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை . காரியங்களில் மிக கெட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் நிலவ வேண்டும், நீடித்திருக்க வேண்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை, தக்வாவை, இறையச்சத்தை உபதேசம் செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அருளையும், அன்பையும், மறுமையின் மகத்தான வெற்றியையும் வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்மை மார்க்கத்தில் உறுதிப்படுத்துவானாக! நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹு தஆலா விரும்பக்கூடிய ஒவ்வொரு நற்குணத்தாலும் நம்மை அழகுபடுத்துவானாக! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற ஒவ்வொரு கெட்ட குணத்திலிருந்தும் அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும் சுத்தப்படுத்துவானாக! தூரமாக்குவானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா அவனது கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனிலே தன்னோடும் தன்னுடைய நபிமார்களோடும் பிறகு தான் விரும்புகின்ற நல்லடியார்களோடும் சேர்த்து வர்ணிக்கின்ற ஒரு அழகிய பண்புதான் உண்மை என்ற பண்பு.
அல்லாஹுதஆலா பெருமையாக சொல்கிறான்:
وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلًا
சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்? (அல்குர்ஆன் 4:122)
وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا
பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்? (அல்குர்ஆன் 4:87)
அல்லாஹ்வை விட உண்மையான பேச்சாளர் யார்? சொல்லில் அல்லாஹ்வை விட உண்மையாளர் யார் என்று அல்லாஹ் கேட்கிறான்.
அல்லாஹு தஆலா அவன் உண்மையையே வேதமாக இறக்கி இருக்கிறான். அவன் ஒருபோதும் அந்த வேதத்தில் பொய்யை கலக்கவே இல்லை. அவனுக்கு பொய்யின் தேவையும் அவசியமும் இல்லை. அவன் பரிசுத்தமானவன். அவன் அனுப்பிய நபிமார்களும் அப்படித்தான்—உண்மையாளர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எங்கும் பொய் வெளிப்பட்டதாக இல்லை.
நபிமார்கள் தங்களுடைய உம்மத்துக்கு வழங்கிய உபதேசங்களும் இந்த உண்மையைப் பற்றித்தான். ரசூலுல்லாஹ் ﷺ நமக்கு தூதராக அனுப்பப்பட்ட அந்த மகத்தான வழிகாட்டி. அல்லாஹு தஆலா அவர்களுக்கு இந்த உண்மையைப் பற்றி வேதத்தில் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டே இருந்தான்.
ரசூலுல்லாஹ் ﷺ தங்களுடைய தோழர்களை இந்த உண்மையும் நற்பண்புகளும் கொண்டு வளர்த்தார்கள். அந்த உண்மையை அவர்களுடைய உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்தார்கள். அவர்களுடைய சொற்கள், செயல்கள், எண்ணங்கள்—அனைத்தையும் இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் ﷺ பரிசுத்தப்படுத்தினார்கள்.
அன்பு சகோதரர்களே! இன்று நமது சமூகத்தில் தலைவரிலிருந்து தொண்டர் வரை, பெற்றோர்களிலிருந்து பிள்ளைகள் வரை, மேலும் பொதுவாக வியாபாரங்களில், தொழில்துறைகளில், கொடுக்கல்-வாங்கல்களில் என அனைத்துத் துறைகளிலும் இந்த உண்மையை கைவிட்ட காரணத்தினாலே நமது சமூகம் சீரழிந்து விட்டது
உண்மையை விட பொய் மிகைத்து போன காரணத்தினாலே, வாக்குகளில் உண்மை இல்லை, பேச்சுகளில் உண்மை இல்லை, குடும்ப உறவுகளில் உண்மை இல்லை. ஏன், அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையிலான உறவில்கூட உண்மை இல்லை.
பல நேரங்களில் நம்முடைய வணக்க வழிபாடுகளில்கூட உண்மை இல்லாமல் போய்விடுகிறது. நம்முடைய தர்மங்களில் உண்மை இல்லாமல் போய்விடுகிறது.
இப்படியாக பொய், பகட்டு, விளம்பர மனோபாவம், நயவஞ்சகம், நடிப்பு, மாற்றிப் பேசுதல், சத்தியத்தை மறுத்தல், சத்தியத்தை புறக்கணித்தல் போன்ற பல நோய்களில் நமது சமுதாயம் சிக்கி இருக்கிறது.
அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனை ஓதக்கூடிய நாவு பொய் பேசக்கூடாது. ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய ஹதீஸ்களை வாசிக்கின்ற நாவு பொய் பேசக்கூடாது—ஒருபோதும் பொய் பேசக்கூடாது.
நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தப்படுவோம்.
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர. (அல்குர்ஆன் 50:18)
மனிதனே! நீ பேசுகின்ற பேச்சுகளை எல்லாம் பதிவு செய்து கொள்ளக் கூடிய வானவர்கள் உன்னோடு இருக்கிறார்கள் என்பதை நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரு முஃமின் பொய் பேச மாட்டான்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (10) كِرَامًا كَاتِبِينَ (11) يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்கானித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். (அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.) (அல்குர்ஆன் 82:10-12)
நம் மீது இரண்டு மலக்குகள் பொறுப்பு ஒப்படைக்கபட்டு இருக்கின்றார்கள். நாம் செய்வதையெல்லாம் அவர்கள் அறிந்து எழுதிக் கொள்கிறார்கள் என்பதை நம்பக்கூடிய முஸ்லிம் பொய்யனாக இருக்க மாட்டான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று சமூகத்தில் பொய் மலிந்துவிட்டது; அது சாதாரணமாகிவிட்டது. பொய் பேசுவதை குற்றமாகக் கருதக்கூடிய நிலை முற்றிலும் மறைந்துவிட்டது. பொய் பேசிய பிறகு உள்ளத்தில் எந்தச் சங்கடமும் ஏற்படுவதில்லை. உண்மையை வெறுக்கிறார்கள்; பொய்யை நேசிக்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் அப்படியாக இருக்க முடியுமா? தொழுகையில் அல்லாஹ்வின் முன்னால் கைகட்டி நிற்கக்கூடிய மனிதன், அல்லாஹ்தான் தன்னுடைய ரப்பு என்று நம்பக்கூடியவன், “நான் உண்மை பேசினால் என் ரிஸ்க் போய்விடும்” என்று பயப்படுவானா?
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று தொழுகையில் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு, “நான் உண்மை பேசினால் எனது தொழில் போய்விடும், எனது வேலை போய்விடும், எனது வியாபாரம் நஷ்டமாகிவிடும்” என்று நம்புவானா?
நம்முடைய தொழுகைகளிலே உண்மை இல்லை. சுஜுதுகளிலே உண்மை இல்லை. நாம் ஓதக்கூடிய வசனங்களின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உண்மையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் ஒவ்வொரு நேரத்திலும் இந்த உண்மையைப் பற்றி நமக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
ஸஹீஹுல் புஹாரியிலே ஒரு ஹதீஸை பார்க்கிறோம். ஒரு கிராமவாசி வருகிறார்.
அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று வழிகாட்டலை கேட்கிறார். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தொழ வேண்டும், நோன்பு வைக்க வேண்டும், ஜக்காத் கொடுக்க வேண்டும், இவ்வளவு இவ்வளவு நீ செய்ய வேண்டும் என்று அதை விவரிக்கின்றார்கள்.
அதையெல்லாம் கேட்டுவிட்டு அந்த மனிதர் சரி, அல்லாஹ்வுடைய தூதரே! இந்த கடமைகளை நான் செய்து விடுகிறேன். என்னால் உபரியாக அதிகமாக செய்ய முடியாது. என்று சொல்லிவிட்டு நான் செல்கிறேன் என்று அவர் திரும்பச் செல்கிறார்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இவர் சொன்னது உண்மை என்றால், இவர் தன்னுடைய வாக்கில் உண்மையாளராக இருப்பாரேயானால் (இந்த ஃபர்ழுகளை நான் சரிவர செய்வேன் என்று சொன்னார் அல்லவா) இந்த வாக்கு உண்மையான வாக்காக இருந்தால் இவர் கண்டிப்பாக சொர்க்கம் செல்வார். (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1891.
உண்மை ஒரு மனிதனை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்த்தே தீரும். அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
إنَّ الصِّدْقَ يَهْدِي إلى البِرِّ ، وإنَّ البِرَّ يَهْدِي إلى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حتَّى يَكونَ صِدِّيقًا. وإنَّ الكَذِبَ يَهْدِي إلى الفُجُورِ، وإنَّ الفُجُورَ يَهْدِي إلى النَّارِ، وإنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا
அடியான் உண்மையை சொல்கிறான், உண்மை சொல்கிறான் அல்லாஹ்விடத்தில் உண்மையாளராக எழுதப்பட்டு விடுகிறார். ஸித்திக்காக எழுதப்பட்டு விடுகின்றான். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசுகிறான், பொய் பேசுகிறான் அல்லாஹ்விடத்தில் பொய்யனாக எழுதப்பட்டு விடுகிறார். பொய் பாவத்திற்கு வழிகாட்டும்! பாவம், நரகத்திற்கு வழிகாட்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.
மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
اضمَنوا لي ستًّا أضمَنْ لكم الجنَّةَ: اصدُقوا إذا حدَّثْتُم وأوفوا إذا وعَدْتُم وأدُّوا إذا ائتُمِنْتُم واحفَظوا فُروجَكم وغُضُّوا أبصارَكم وكُفُّوا أيديَكم
எனக்கு நீங்கள் ஆறு விஷயத்திற்கு உறுதி கொடுங்கள். நான் உங்களுக்கு சொர்க்கத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன்.
நீங்கள் பேசினால் உண்மைதான் பேசுவேன் என்று முடிவு செய்து விடுங்கள். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள்.
அன்பு சகோதரர்களே! உங்களுக்கு தெரியுமா? ஒரு முஸ்லிம் விளையாட்டுக்கு கூட பொய் சொல்லக்கூடாது. ஒருத்தரை சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்லக்கூடாது. அல்லாஹு அக்பர். எப்பேர்பட்ட மார்க்கம்! எப்பேர்ப்பட்ட வழிகாட்டுதல்! நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மனிதனை விளையாட்டாக சிரிக்க வைப்பதற்கு கூட பொய் சொல்லக்கூடாது என்றால் ஒரு முஸ்லிமை கவிழ்ப்பதற்கு, ஏமாற்றுவதற்கு, அவனை போண்டி ஆக்குவதற்கு, அவருடைய மானம் மரியாதைகளை வாங்குவதற்கு பொய் சொல்கிறார்களே! நாளை மறுமையில் என்ன பதில் சொல்வார்களோ!
மனைவி மக்களை சிரிக்க வைப்பதற்கு கூட பொய் சொல்லக்கூடாது என்று மார்க்கம் வழிகாட்டி இருக்க ஒருவனை ஒரு நிரபராதியை பழிவாங்குவதற்காக ஒரு குற்றமற்றவனின் மீது குற்றங்களை சுமத்துவதற்காக, ஒருவன் அநியாயமாக தண்டிக்கப்படுவதற்காக, ஒரு மனிதரின் ஒரு முஸ்லிமின் மான மரியாதைகளை விலை பேசுவதற்காக, அநியாயமாக எல்லை மீறி பொய் சொல்கிறார்களே. நாளை மறுமையில் என்ன செய்வார்கள் இவர்கள்?!
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
1. நீங்கள் உண்மை பேசுங்கள்.
2. நீங்கள் ஒப்பந்தம் செய்தால், உடன்படிக்கை செய்தால், வாக்குறுதி கொடுத்துக் கொண்டால், நிறைவேற்றுங்கள்.
நிறைவேற்றாத வாக்கை ஏன் கொடுக்கிறாய் முஸ்லிமே! நீ முறிக்கப் போகிறாய் என்று தெரிந்து கொண்டே அந்த உடன்படிக்கையை நீ ஏன் செய்கிறாய் முஸ்லிமே! இன்று சர்வசாதாரணமாகிவிட்டது உடன்படிக்கைகளை முறிப்பதும் ஒப்பந்தங்களை மீறுவதும்.
அல்குர்ஆனிலே எங்கெல்லாம் அல்லாஹு தஆலா ஓரிறை வணக்க வழிபாட்டை வலியுறுத்துகின்றானோ, ஷிர்கை கண்டிக்கின்றானோ அங்கே வாக்குகளை மீறுவதை ஒப்பந்தங்களை முறிப்பதை, ஒப்பந்தங்களை மீறுவதை, ஒப்பந்தங்களுக்கு மோசடி செய்வதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
முஷிரிக்குகள், காஃபிர்கள் மறுமையை நம்பாத பாவிகளை அல்லாஹு தஆலா பழிக்கும் போதெல்லாம் அவர்களின் கெட்ட குணங்களில் ஒன்றாக ஒப்பந்தங்களை மீறுவதை, துரோகம் செய்வதை, வாக்குகளை மீறுவதை அல்லாஹ் இடித்துரைக்கின்றான்.
கொடுங்கோளர்கள், காஃபிர்கள், முஷ்ரிக்குகள், அந்தக் குரைஷி மக்கள் அவர்களிடத்தில் கூட அல்லாஹு தஆலா நபியே! நீங்கள் ஒரு தவணை வரை ஒப்பந்தம் செய்திருந்தால் அந்த தவணை வரை அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறான்.
வெற்றிக் கொண்டதற்கு பிறகு. கையில் கிடைத்தவர்களையெல்லாம் கொல்வதற்கான ஆதிக்கம் கிடைத்ததற்கு பிறகு கூட ஒப்பந்தம் செய்தவர்களை நீங்கள் விட்டு விடுங்கள் அந்த ஒப்பந்தத்தின் காலம் முடிகின்ற வரை அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால் எப்பேர்பட்ட ஒரு நீதமான மார்க்கத்தை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்!
வாக்கின் போது, ஒரு முஸ்லிம் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ஹீம்” எனக்கு உனக்கும் செய்து கொள்ளப்படக்கூடிய ஒப்பந்தம் நான் இதை செய்வேன்; நீ இதை செய்ய வேண்டும் என்று எழுதிவிட்டால் அது அல்லாஹ்விற்கு கொடுக்கக் கூடிய வாக்கு. அல்லாஹ்விடத்தில் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம்.
ஆகவேதான், அல்லாஹு தஆலா, முஸ்லிம்கள் தங்களுக்குள் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை வாக்குகளை, அல்லாஹ்வுடைய வாக்குகளை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிறான்.
நீங்கள் உங்களது அண்ணன், தம்பி, சகோதரன், பங்காளி, கூட்டாளிகள், வியாபார தொழில் பார்ட்னர்களிடத்திலே, செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை அல்லாஹ் எப்படி சொல்கிறான்? அல்லாஹ்விடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்று கூறி நிறைவேற்றச் சொல்கிறான்.
ஏன் தெரியுமா? நீங்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்கிறீர்கள் அல்லவா! இன் ஷா அல்லாஹ் என்று எழுதுகிறீர்கள் அல்லவா! அல்லாஹ்வுடைய பெயர் எழுதப்பட்டதற்கு பிறகு அது அல்லாஹ்விடத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒப்பந்தம். இப்படி அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய உரிமைகளை மதிக்கின்றான். நாமோ நமது உரிமைகளை பாழாக்குகின்றோம்.
அடுத்து, ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்;
3. உங்களிடத்திலே நம்பி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டால், அமானிதங்கள் ஒப்படைக்கப்பட்டால், அதை நிறைவேற்றுங்கள். மோசடி செய்து விடாதீர்கள்!
4. உங்களுடைய கற்பொழுக்கங்களை, மர்மஸ்தானங்களை மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
5. ஒரு முஸ்லிம் தனது ஆசையை ஹராமிலே தீர்க்கக் கூடாது. மிகப்பெரிய பாவம் உங்களது மர்மஸ்தானங்களை மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
6. உங்களது பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்.
உங்களது கரங்களை தடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் அடித்து விடாதீர்கள். யாருக்கும் கெடுதி செய்து விடாதீர்கள்.
இந்த ஆறு விஷயங்களை நீங்கள் எனக்கு செய்வீர்கள் என்று பொறுப்பேற்றுக் கொண்டால் நான் உங்களுக்கு சொர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்வேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 271.
அன்பிற்குரியவர்களே! இந்த உண்மையால் நமக்கு உலகம் தவறிவிடுமா? உலகத்தை இழந்து விடுவோமா?
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்:
நான்கு குணங்கள் உன்னிடத்தில் இருந்தால் உனக்கு துன்யா தவறுவதை பற்றி நீ கவலையே படாதே! உனக்கு தவறிவிட்ட துன்யாவை பற்றி கவலைப்படாதே!
உண்மை சொன்னால் வேலை போகிறதா? பதவி போகிறதா? பிரச்சனையே இல்லை. கவலையே படாதே! அல்லாஹு தஆலாவுக்காக ஒன்றை யார் இழப்பானோ இதை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்.
அபூ பக்ர், அல்லாஹ்வின் மகத்தான ஊர் நபிமார்களின் ஊர். தான் பிறந்து வசித்து தான் தலைவராக இருந்த ஊர். மக்காவை யாருக்காக இழந்தார்? அல்லாஹ்வுக்காக இழந்தார். அல்லாஹுதஆலா முஸ்லிம்களின் கலிஃபாவாக ஆக்கினான். அல்லாஹ்வுக்காக யார் ஒன்றை இழப்பாரோ அவருக்கு அல்லாஹு தஆலா துன்யாவை வசப்படுத்திக் கொடுப்பனே தவிர, அவருக்கு இந்த துனியாவிலே இழப்பு என்பது கிடையாது.
வெளித்தோற்றத்தில் சில சோதனைகள் நிகழலாம். அதனால் இழப்பு என்பதைப் போன்று தோன்றலாம். சிலர் என்ன செய்கிறார்கள்; உனக்கு ஏன் சம்பாதிக்க தெரியவில்லை. அந்தப் பையன பாரு உன் வயசுல படிச்சு வீடு வாங்கிட்டான், கார் வாங்கிட்டான், வாழ்க்கையில டெவலப் ஆயிட்டான் பாரு! என்ன ஸ்மார்ட் பாரு?
செஞ்சது எல்லாம் ஃபிராடுத்தனம், ஏமாற்று வேலை கம்பெனில ஓனருக்கு கிடைக்கிற லாபத்தை ஃபிராபிட்ட விட மேனேஜருக்கு கிடைக்கிற ஃபிராபிட்தான் அதிகம். எப்படி? எல்லாத்துலயும் கமிஷன். எல்லாம் ஃபிராடு, எல்லாம் ரெண்டாம் நம்பர் கணக்கு. விக்கிறதுலயும் கமிஷன், வாங்கறதுலயும் கமிஷன். ஓனருக்கு ஒரு பொருளு.க்கு பத்து ரூபாய் கிடைச்சிச்சுனா அதே பொருளு.க்கு இவருக்கு நூறு ரூபாய் கிடைக்கும்.
எத்தனை பெரும் வியாபாரங்களிலே இப்பேர்பட்ட அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! முஸ்லிம்கள் செய்கிறார்கள். எந்த வகை முஸ்லிமோ தெரியவில்லை.
ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
أربعٌ إذا كُنَّ فيك فلا عليك ما فاتك من الدُّنيا حفظُ أمانةٍ وصدقُ حديثٍ وحسنُ خُلقٍ وعِفَّةٌ في طُعمةٍ
1. அமானிதம் பேணுதல்,
2. உண்மை பேசுதல்,
3. நல்ல குணம் அழகிய குணம்,
4. உன்னுடைய உணவு எளிமையாக இருக்கட்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத், எண் : 6652.
ஆடம்பரமான உணவுகளை சாப்பிடுவதற்காக ஹராமான தொழில்களை தேடக் கூடியவர்கள் எத்தனை பேர்?
ஹலாலாக இருந்தால் காய்ந்த ரொட்டி துண்டுகளும் சில பருப்பு தண்ணீரும் போதுமானது. சுவையான வகை வகையான உணவுகள் நாளை மறுமையிலே அவனுடைய நரக நெருப்புக்கு காரணமாகிவிடும்.
அது மட்டுமா, யார் உண்மையாக நடப்பார்களோ, பேசுவார்களோ, அல்லாஹு தஆலா அவர்களுக்கு வாழ்க்கையிலே பரக்கத் செய்கிறான். உண்மையைக் கொண்டு அல்லாஹு தஆலா பரக்கத் செய்கிறான்.
ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
البَيِّعانِ بالخِيارِ ما لَمْ يَتَفَرَّقا، فإنْ صَدَقا وبَيَّنا بُورِكَ لهما في بَيْعِهِما، وإنْ كَذَبا وكَتَما مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِما
விற்பவரும் வாங்கக் கூடியவர்களும் உண்மையை பேசினால், விற்பவரும் உண்மை சொல்லி விற்றால் அந்த பொருளிலே நிறை குறை இருந்தால் அதை உண்மையாக சொல்லி விற்றால் வாங்கக் கூடியவரும் உண்மையாக நடந்து கொண்டால் அவர்களுடைய தொழிலில் கொள்முதலில் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்கிறான்.
அவர்கள் பொய் பேசினால் மறைத்தால் குறைகளை மறைத்து தவறுகளை மறைத்து அவர்கள் வர்த்தகம் செய்தால், அவர்களுடைய வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டு விடும்.
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2110 .
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா, இந்த உண்மையைக் கொண்டு அவனுடைய அடியார்களை சிரமங்கள் இன்னல்கள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கின்றான்.
மூன்று நபர்கள் காட்டிலே செல்லும் பொழுது மழை பொழிந்தது. கடுமையான இடி மின்னலுக்கு அஞ்சி குகையை நோக்கி ஒதுங்குகிறார்கள் மேலிருந்து பாறை விழுந்து முழுமையாக வழியை குகை வாயிலை அடைத்துக் கொள்கிறது.
அந்த மூன்று பேரும் சொன்ன வார்த்தையை ரஸூல் ﷺ சொல்கிறார்கள். ஒரு காரியத்தில் அல்லாஹ்வோடு உண்மையாக தான் நடந்து கொண்டார் என்று அவர் அறிகிறாரே இந்த காரியத்தை அல்லாஹ்விடத்தில் சொல்லி துஆ கேட்கட்டும். அல்லாஹ் துஆவை கபூல் செய்வான்.
அவர் தன்னுடைய குடும்பத்தில், தொழிலில் நண்பர்களிடத்தில், வியாபாரிகளிடத்திலே உண்மையாக நடந்து கொண்டார் என்று அவருக்கு தெரியும் அல்லவா! நான் நேர்மையாக உண்மையாக நடந்துகொண்டேன் என்று அந்த செயலை அல்லாஹ்விடத்தில் சொல்லி துஆ கேட்கட்டும் அல்லாஹ் நமது கஷ்டத்தை நீக்குவான் என்று இந்த மூவரில் ஒருவர் சொல்ல மூவரும் அப்படியே யோசித்து யோசித்து எந்த ஒரு விஷயத்தில் அல்லாஹ்விடத்தில் உண்மையாக நடந்து கொண்டார்களோ, அதை அல்லாஹ்விடத்தில் சொல்லி துஆ கேட்கின்றார்கள்.
ஒவ்வொருவருடைய துஆக்கு பிறகும் அல்லாஹு தஆலா அந்த மலை வாசலை அடைத்துக் கொண்டிருந்த அந்த பாறையை அகற்றிக் கொண்டே இருக்கிறான். மூன்றாமானவர் துஆ கேட்க முற்றிலுமாக பாறை அகற்றப்படுகிறது.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3465.
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடைய உண்மையைக் கொண்டுதான் அல்லாஹு தஆலா பாதுகாக்கின்றான். இந்த உண்மை இருக்கிறதே, நமக்கு மன நிம்மதியை தருகிறது. பொய் பேசியவன், ஏமாற்றியவன், ஏமாத்துக்காரன் இருக்கிறானே வஞ்சகன் இருக்கிறானே ஒருபோதும் மனதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
உண்மை பேசி இழந்தவன் இருக்கின்றானே, உண்மை பேசியதால் அவனுக்கு நஷ்டமோ இழப்போ ஏதோ எது ஏற்பட்டிருந்தாலும் அவனை விட மனது ராகத்தானவன் யாரும் இருக்க முடியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்கின்றார்கள்;
دعْ ما يَريبُكَ إلى مَا لا يَريبُكَ فإنَّ الصدقَ طمَأْنِينَةُ والكذِبَ رِيبَةٌ
உனக்கு எதில் சந்தேகம் இருக்கிறதோ? அதை விட்டு விடு! சந்தேகம் குழப்பம் இல்லாததற்கு வந்துவிடு. உண்மை மனதுக்கு நிம்மதி. பொய் உன் மனதை அப்படியே நச்சரித்துக் கொண்டே இருக்கும். உன்னுடைய மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். உனது மனதிலே நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
அறிவிப்பாளர் : ஹசன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 256.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்; உண்மையாளர்கள் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள்.
நபி ﷺ இடத்தில் கேட்கப்பட்டது; அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்? நபி ﷺ சொன்னார்கள்.
(ரொம்ப கவனிக்க வேண்டிய ஹதீஸ். ரொம்ப சிந்திக்க வேண்டிய ஹதீஸ். இன்று நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டும் நம்மை விட பஞ்சத்தில் அடிபட்டவர்கள் யாரும் இல்லை என்பதை போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வசதி இருக்கிறது, வீடு இருக்கிறது, போதுமான செல்வம் வருவாய் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. ஆனால் நப்ஸ் எப்படி இருக்கிறது? பஞ்சத்தில் அடிபட்டு எல்லாவற்றையும் இழந்தவன் அலைவான் அல்லவா அதுபோன்று அலைந்து கொண்டிருக்கிறோம்.)
மக்களில் யார் சிறந்தவர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக சொன்னார்கள். யார் தெரியுமா? مخموم القلب -மஹ்மூமுல் கல்பு இதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதுக்கு அர்த்தம் சஹாபாக்களுக்கே தெரியல. ஆகவே, அவர்கள் ரசூலுல்லாஹ்விடம் விளக்கம் கேட்கிறார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடுத்து விளக்கம் சொல்கிறார்கள்; மக்களில் சிறந்தவர் யார் என்றால் மஹ்மூமுல் கல்பு.
இரண்டாவது சொன்னார்கள்; صدوق اللسان - ஸதூக்குள் லிஸான் - இந்த நாக்கு உண்மையானவர். பேச்சு உண்மையானவர். சஹாபாக்கள் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இந்த பேச்சு உண்மையானவர், நாவு சுத்தமானவர் என்பவர் யார் என்று எங்களுக்கு தெரியும்.
ஆனால் மஹ்மூமுல் கல்பு அவர் யார்?
(நம்முடைய மௌத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடியாவது இந்த குணத்துல வந்துட்டா எங்கேயா போயிடுவோம்.)
ரசூல் ﷺ சொன்னார்கள்:
هو التقيُّ النقيُّ لا إثمَ فيه ولا بغيَ ولا غِلَّ ولا حسدَ
மஹ்மூமுல் கல்பு என்றால் இறையச்சம் உடையவர், பக்தி உள்ளவர், சுத்தமானவர். அவரிடத்தில் பாவமோ வரம்பு மீறலோ ஏமாற்றுதலோ பொறாமையோ இராது
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3416.
இறையச்சம் என்றால் என்ன? சுத்தம் என்றால் என்ன? முதல் ஸஃப்ல தொழுரவங்கள் எல்லாம் தக்வா உள்ளவங்களா? ஹஜ்ஜுக்கு போயிட்டு வந்தவங்க எல்லாம் தக்வா உள்ளவங்களா? தாடி வச்சவங்க எல்லாம் தக்வா உள்ளவங்களா? நீ முஸ்லிமா இருந்தா இதை செஞ்சு தான் ஆகணும். முஸ்லிமா இருந்தா ஃபர்ஸ்ட் ஸஃப்ல தொழுது தான் ஆகணும். காசு இருந்தால் ஹஜ்ஜுக்கு போய் தான் ஆகணும். நீ ஒரு முஸ்லிமா தாடி வச்சு தான் ஆகணும். இதை வைத்து பெருமை அடிக்க முடியுமா? இது நம்முடைய கடமை. இது நம்முடைய அடையாளம்.
சொன்னார்கள்: இறையச்சம் உள்ளவன் சுத்தமானவன் யார் தெரியுமா? பிறர் மீது அக்கிரமம் அநியாயம் செய்யாதவன். பிறர் உரிமைகளை எடுத்துக் கொள்ளாதவன். பிறருடைய உடைமைக்கு, சொத்துக்கு ஆசைப்படாதவன்.
அல்லாஹு அக்பர்! யாரையும் பொல்லாது பேசாதவன். யாருக்கும் தீங்கு செய்தவன். அவனுடைய உள்ளத்தில் யார் மீதும் பொறாமையும் இருக்காது, கபடமும் இருக்காது, குரோதமும் இருக்காது. எப்பேர்ப்பட்ட தன்மை.
ஒரு சஹாபி வருகிறார். ரசூல் ﷺ சொன்னாங்க; கொஞ்ச நேரத்துல சொர்க்கவாசி வரப்போறாருன்னு. சொல்லிட்டு பேசிகிட்டு இருக்காங்க சஹாபாக்கள் எல்லாரும் பாத்தா ஒருத்தரு வராரு. ரொம்ப பெரிய எல்லாருக்கும் தெரிஞ்சவர் கூட கிடையாது. ஓரமா வந்தாரு தண்ணீர் சொட்டுது ஒழு செஞ்சிட்டு செருப்பு எடுத்து ஓரமா வச்சுட்டு இரண்டு ரக்அத் தொழுதாரு.. ஸலாம் சொல்லிட்டு போய்ட்டாரு.
இரண்டாவது நாள் ரசூல் ﷺ சொன்னாங்க; இப்போ ஒரு சொர்க்கவாசி வர போறாருன்னு. பார்த்தா அதே ஆளு வராரு. நேற்று வந்தவர் வராரு. அதே போல ஓரமா செருப்பு வச்சாரு. ரெண்டு ரக்ஆத்து தொழுதாரு. ஸலாம் சொல்லிட்டு போயிட்டாரு.
ரசூல் ﷺ மூன்றாவது நாளும் சொன்னார்கள்; சொர்க்கவாசி ஒருத்தர் வரப்போறாருன்னு. பார்த்தா அதே ஆளு வராரு. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் பார்த்தாங்க. என்ன இவர் அமல் செய்வாரோ தெரியலன்னு சொல்லி மஜ்லிஸ் முடிந்ததுக்கப்புறம் பின்னாடி ஓடிட்டாரு.
அந்த ஆளு பின்னாடியே ஓடி எங்க வீட்ல கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. மூன்று நாள் உங்கள் கூட தங்கிக்கட்டுமா? என்று கேட்கிறார். பரவாயில்லை. தங்கிக்கவும் சொல்றாங்க.
மூன்று நாள் இஷா தொழுதுட்டு நேரா அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் அந்த ஸஹாபி வீட்ல போய் தங்கிக்கிறாப்ல.
ராத்திரி ஃபுல்லா கண்ண மூடிட்டு இப்படியே பார்க்கிறார். இவர் என்ன இபாதத் செய்றாருன்னு. இவர் ராத்திரியில தூங்குறாரு. இடையில எந்திரிக்கும் போது சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் சொன்னார், திரும்பப்படுக்கிறார்.
சுபுஹுவுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி எந்திரிச்சு ரெடியாகி, வாங்க சுபுஹு தொழுகை போகலாம்னு கூப்பிடுறாங்க. இப்படி நடக்குது மூன்று நாளா.
நான்காவது நாளு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் சொல்றாங்க; சரி நான் எங்க வீட்டுக்கே போய் படுத்து கொள்கிறேன்னு. என்னப்பா வீட்ல பிரச்சனை என்ன சால்வ் ஆயிருச்சா? பிரச்சனை ஒன்னும் இல்லங்க.
ரசூல் ﷺ மூணு நாளும் சொன்னாங்க; சொர்க்கவாசி வராரு, வந்தது நீங்க தான். அப்படி என்ன ராத்திரியில் செய்றீங்கன்னு பார்க்கலாம் வந்தேன். நீங்க ஒன்னும் செய்யற மாதிரி தெரியலையே அப்படின்னு அவர் சொன்னாரு.
அப்படியா சொன்னார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி சொல்லி இருப்பார்களேயானால் எனக்கு தெரிஞ்சு நீ பார்க்காமல் என்ட இவ்வளவுதான். இதுக்கு மேல பெருசா அமல் செய்கிறவன் அல்ல.
ஆனால் ராத்திரியில் படுக்கும் பொழுது எந்த முஸ்லிமின் மீதும் எனது உள்ளத்தில் பொறாமையை வைக்காதவனாக, கள்ளம் கபடுகளை வைக்காதவனாக, எல்லோரையும் மன்னித்துவிட்டு நெஞ்சம் சுத்தமானவனாக நான் என் படுக்கைக்கு செல்கிறேன் என்று சொன்னார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் சொன்னார்கள்; இதுதான் இதுதான் காரணம் என்று சொன்னார்கள். அல்லாஹ்வுடைய தூதர் உனக்கு சொர்க்கத்திற்கு வாக்களித்ததற்கு இதுதான் காரணம், இதுதான் காரணம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத், எண் : 12720.
குறிப்பு : இந்த ஹதீஸ் உடைய தரம் பற்றி அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகள் தெரிவித்துள்ளார்கள். பல அறிஞர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறி இருக்கிறார்கள். சிலர் இதில் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்றும் தொடரில் இடைவெளி உள்ளது என்று கூறி இதை பலவீனம் என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன். பார்க்கவும்!
https://islamqa.info/ar/answers/147249
அல்லாஹ்வின் அடியார்களே! நினைத்துப் பாருங்கள்! நாமோ குரோதத்தால், பொறாமையால் அப்படியே குளித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தந்தையின் மீது பொறாமை படக்கூடியவன், தாயின் மீது பொறாமை படக்கூடியவன், சகோதரரின் மீது அண்டை வீட்டாரின் மீது, நண்பரின் மீது. யார் எதைக் கொண்டு போக போகிறார்கள் யோசித்துப் பாருங்கள்!
ரஸூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்;
இந்த உண்மை இருக்கிறதே அது உங்களுக்கு மிகத் தெளிவான சிந்தனைகளை கொடுக்கும். அதாவது கியாமத் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது முஃமின் உடைய கனவுகள் பொய்யாகாது. கனவுகள் நபித்துவத்தில் 46 பங்குகளிலே ஒன்று. அதிலே சொன்னார்கள்; உங்களிலே யாருடைய கனவு அதிகம் பலிக்கும் என்றால், யார் பேச்சில் உண்மையாளராக இருக்கின்றாரோ!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2263.
அன்பிற்குரியவர்களே! இந்த உண்மை என்பது ஒவ்வொரு முஸ்லிம், முஃமின் இடத்தில் இருக்க வேண்டிய குணம். அல்லாஹ்விடத்தில் நாம் கேட்க வேண்டிய குணம். இந்த பொய் என்பது அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டிய குணம்.
பொய் என்பது நமக்கு இழிவையும் அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய தாழ்வையும் கேவலத்தையும். கொடுத்து விடும். அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹு தலா உண்மையாளர்களில் நம்மை பதிவு செய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ أعْرَابِيًّا جَاءَ إلى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقالَ: يا رَسولَ اللَّهِ أخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ فَقالَ: الصَّلَوَاتِ الخَمْسَ إلَّا أنْ تَطَّوَّعَ شيئًا، فَقالَ: أخْبِرْنِي ما فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصِّيَامِ؟ فَقالَ: شَهْرَ رَمَضَانَ إلَّا أنْ تَطَّوَّعَ شيئًا، فَقالَ: أخْبِرْنِي بما فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الزَّكَاةِ؟ فَقالَ: فأخْبَرَهُ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ شَرَائِعَ الإسْلَامِ، قالَ: والذي أكْرَمَكَ، لا أتَطَوَّعُ شيئًا، ولَا أنْقُصُ ممَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ شيئًا، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أفْلَحَ إنْ صَدَقَ، أوْ دَخَلَ الجَنَّةَ إنْ صَدَقَ. خلاصة حكم المحدث : [صحيح] الراوي : طلحة بن عبيدالله | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 1891 التخريج : أخرجه مسلم (11)، وأبو داود (391)، والنسائي (458)
ஒரு கிராமவாசி தலைவிரி கோலத்துடன் (பயணம் முடித்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை எது என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஐந்து நேரத் தொழுகைகள்; (அவற்றைத் தவிர, கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; கூடுதலாக) எதையும் நீயாக விரும்பித் தொழுவதைத் தவிர!” என்று பதிலளித் தார்கள்.
அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள நோன்பைப் பற்றி எனக்குக் கூறுங்கள்!” என்றார். ‘‘ரமளான் மாத நோன்பு; (அதைத் தவிர கடமையான நோன்பு வேறெதுவுமில்லை; கூடுதலாக) ஏதேனும் நீயாக விரும்பி நோற்பதைத் தவிர!” என்று பதிலளித்தார்கள்.
அவர், ‘‘அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டவிதிகளை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘‘சத்தியத்தைக் கொண்டு உங்களைக் கண்ணியப்படுத்திய இறைவன் மீதாணையாக! நான் கூடுதலாக எதையும் செய்யமாட்டேன்; அல்லாஹ் என்மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்” என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” என்றோ, ‘‘இவர் (தாம் கூறுவதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைவார்” என்றோ கூறினார்கள்.
அறிவிப்பாளர் : தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1891.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/