மோசடி செய்யாதீர்கள்! | Tamil Bayan - 1023
மோசடி செய்யாதீர்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : மோசடி செய்யாதீர்கள்
வரிசை : 1023
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12-12-2025 | 21-06-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு தஆலா அவனை அதிகம் பயப்படக்கூடிய அவனுடைய மார்க்கத்தை அழகிய முறையில் பின்பற்றக்கூடிய அவனுடைய கட்டளைகளை எடுத்து நடக்கக்கூடிய அவன் தடுத்த ஒவ்வொரு சிறிய பெரிய பாவத்திலிருந்து விலகி இருக்கக்கூடிய உண்மையான முஃமின்களாக என்னையும் உங்களையும் நம்முடைய சந்ததிகளையும் நம்முடைய பெற்றோர்களையும் நம்முடைய குடும்பத்தார் முஸ்லிம்கள் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு முஸ்லிமுடைய அடிப்படை, நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் நிறுத்தப்படும்போது, விசாரணைக்காக கொண்டு வரப்படும்போது, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு துரோகம் செய்யாதவனாக, மோசடி செய்யாதவனாக, அவர்களுடைய உரிமைகளை பறிக்காதவனாக, அவர்களுடைய உரிமைகளை பாழாக்காதவனாக இருக்க வேண்டும். இதுவே ஒரு முஸ்லிமுடைய அடிப்படை பண்பாக இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா தனக்கும் தன்னுடைய அடியார்களுக்கும் இடையில் இருப்பவற்றில் மிக விசாலமான மன்னிப்புடையவன். அவன் தொடர்ந்து மன்னிப்பான், எல்லையில்லாமல் மன்னிப்பான், அளவில்லாமல் மன்னிப்பான்.
ஆனால், ஒரு அடியான் இன்னொரு அடியானுக்கு துரோகம் செய்துவிட்டால், அக்கிரமம் செய்துவிட்டால், அவனுடைய உரிமையை பாழாக்கி விட்டால் அல்லது பறித்து விட்டால், அல்லாஹு தஆலா அதைப் பற்றி துல்லியமாக விசாரிப்பான்.
அந்த அடியாரிடத்தில் மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும், அவனுடைய உரிமையை ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், நாளை மறுமையில் தப்பிக்க முடியாது —நிச்சயமாக தப்பிக்கவே முடியாது.
எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, நபியாக இருந்தாலும் சரி — அல்லாஹு தஆலா இதை தெளிவாக எடுத்துச் சொல்கிறான்.
وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
மோசடி செய்வது ஒரு நபிக்கு அழகல்ல. எவர் மோசடி செய்வாரோ அவர், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவார். பிறகு, ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் அது செய்ததை முழுமையாக (கணக்கிட்டு கூலி) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:161)
அல்லாஹு அக்பர்! அல்லாஹு தஆலா எப்பேர்பட்ட எச்சரிக்கை செய்கிறான் பாருங்கள்! இன்று தொழுகையில் பேணுதலாக இருக்கிறோம். நோன்பிலே பேணுதலாக இருக்கிறோம். யாராவது ஒரு அரை நிமிடத்திற்கு முன்பாக நோன்பு திறப்பார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம். ஹஜ் உம்ராவில் பேணுதலாக இருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த பேணுதல் இன்று எங்கே போய்விட்டது? நம்முடைய உறவுகள் விஷயத்தில், நண்பர்கள் விஷயத்தில், சகோதரர்கள் விஷயத்தில், பங்காளிகள் விஷயத்தில், கொடுக்கல்–வாங்கல் செய்து கொள்ளக்கூடிய நமது வியாபாரத் தோழர்கள் விஷயத்தில் —இந்த பேணுதல் எங்கே இருக்கிறது?
என்ன இது அநியாயமான பேணுதல்! தொழுகையில் பேணுதல் இருக்கிறது —ஆனால், வாக்குகளில் சொல்லில் பேணுதல் இல்லை. நோன்பில் பேணுதல் இருக்கிறது —ஆனால் கொடுக்கல் வாங்கலில் பேணுதல் இல்லை.
ஹஜ், உம்ராவில் பேணுதல் இருக்கிறது —ஆனால் ஒப்பந்தங்களில் பேணுதல் இல்லை. இப்படிப்பட்ட முரண்பாடான நிலை ஒரு முஸ்லிம் முஃமினுடைய நிலையாக இருக்க முடியாது.
அல்லாஹு தஆலா முஃமின்களை பக்குவப்படுத்தப்பட்ட, பண்படுத்தப்பட்ட, பரிசுத்தப்படுத்தப்பட்ட உயர்ந்த ஒழுக்கங்களாலும் சிறந்த பண்புகளாலும் அழகாக செதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
நமக்குள் குரோதங்கள், வெறுப்புகள், மோசடிகள், வஞ்சகம், சூழ்ச்சிகள் இருப்பதை அல்லாஹு தஆலா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டான். நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று தான் அல்லாஹ் விரும்புகிறான்.
நம்முடைய தூதர் ﷺ தங்களுடைய இறுதி ஹஜ்ஜிலே நமக்கு அதை தான் உபதேசம் செய்து விட்டு சென்றார்கள். எனக்கு பின்னால் நிராகரிப்பாளர்களாக மாறிவிடாதீர்கள். நிராகரிப்பு என்றால் அல்லாஹ் இல்லை என்று சொல்வதா? சொன்னார்கள்;
لا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ
உங்களில் சிலர் சிலருடைய பிடரிகளை வெட்டுவார்களே அந்த நிராகரிப்பாளர்களாக ஆகிவிடாதீர்கள்.
அறிவிப்பாளர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 121.
لا تَباغَضُوا، ولا تَحاسَدُوا، ولا تَدابَرُوا، وكُونُوا عِبادَ اللَّهِ إخْوانًا
ஒருவரைப் பார்த்து ஒருவர் முகம் திருப்பி செல்லாதீர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு வைக்காதீர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களாக சகோதரர்களாக வாழப் பழகுங்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6065.
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? நம்முடைய தொழுகை பலன் அளிக்கிறது என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோமா?
ஒரு அடியானுக்கு துரோகம் செய்துவிட்டு, ஒரு அடியாருடைய உரிமையை பறித்துக் கொண்டு, ஒரு அடியானோடு உறவை முறித்துக் கொண்டு வாழும் நிலையில் நம்முடைய தொழுகை பலன் அளிக்குமா? நம்முடைய நோன்பு பலன் அளிக்குமா?
அல்லாஹ்வின் அடியார்களே! அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய எல்லா இபாதத்துகளும் ஓரமாக சென்று நின்றுவிடும். அவை அல்லாஹ்வின் முன்னால் நின்று, “இவருக்கு கிடைக்க வேண்டுமா? அல்லது இவரால் பாதிக்கப்பட்டவனுக்கு கிடைக்க வேண்டுமா?” என்று தீர்ப்பு வழங்கப்படும் வரை காத்திருக்கும்.
இபாதத்து செய்தது நீங்கள். தொழுதது நீங்கள். நின்று வணங்கியது நீங்கள். நோன்பு வைத்தது நீங்கள். ஹஜ், உம்ராவிற்கு லட்சங்களை செலவு செய்து சென்றது நீங்கள்.
ஆனால் அது உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் —எப்போது கிடைக்கும்? நீங்கள் உறவுகளை துண்டித்திருக்கிறீர்களே, பிறருடைய சொத்துகளை பறித்திருக்கிறீர்களே, வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மோசடி செய்திருக்கிறீர்களே, மற்றவர்களின் உரிமைகளில் எல்லை மீறியிருக்கிறீர்களே!
அப்படி இருக்கும்போது, நீங்கள் செய்த இபாதத்துகள் உங்களுக்கு எப்படி கிடைக்கும்?
அல்லாஹ்வின் தூதர் ﷺ தோழர்களை பார்த்து சொன்னார்கள்:
أَتَدْرُونَ ما المُفْلِسُ؟
பரம ஏழை யார் தெரியுமா? தோழர்கள் பதில் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரிடத்திலே ஒரு நயா பைசா கூட இருக்காதோ, யாரிடத்தில் ஒரு திர்ஹம் தீனார் இருக்காதோ அவரைத்தான் நாங்கள் பரம ஏழை என்று சொல்வோம்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
إنَّ المُفْلِسَ مِن أُمَّتي يَأْتي يَومَ القِيامَةِ بصَلاةٍ، وصِيامٍ، وزَكاةٍ، ويَأْتي قدْ شَتَمَ هذا، وقَذَفَ هذا، وأَكَلَ مالَ هذا، وسَفَكَ دَمَ هذا، وضَرَبَ هذا، فيُعْطَى هذا مِن حَسَناتِهِ، وهذا مِن حَسَناتِهِ، فإنْ فَنِيَتْ حَسَناتُهُ قَبْلَ أنْ يُقْضَى ما عليه أُخِذَ مِن خَطاياهُمْ فَطُرِحَتْ عليه، ثُمَّ طُرِحَ في النَّارِ
இல்லை. எனது உம்மத்தில் பரம ஏழை யார் தெரியுமா? அவன் தொழுகையோடு வருவான். அவன் நோன்போடு வருவான். அவன் ஜக்காத்தோடு வருவான். இவன் ஒருவரை திட்டி இருப்பான். இவன் இன்னொருவனை ஏசி இருப்பான். இன்னொருவரின் உரிமையை பறித்திருப்பான். இன்னொருவரின் ரத்தத்தை ஓட்டியிருப்பான். ரத்தக்காயம் வருமளவு தாக்கி இருப்பான். இவனுடைய நன்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும். இவனிடத்தில் நன்மைகள் இல்லை என்றால் அவர்களுடைய பாவங்களை எடுத்து இவருக்கு கொடுக்கப்பட்டு முகம் குப்புற நரகத்தில் வீசி எறியப்படுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2581.
அல்லாஹு அக்பர்! நினைத்துப் பாருங்கள்! சகோதரர்களே.
ஆகவேதான், அல்லாஹு தஆலா நிறுவையில் அளவையில் மோசடி செய்கிறவர்களை எச்சரிக்கும் போது அல்லாஹ் கேட்கிறான்;
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ (4) لِيَوْمٍ عَظِيمٍ (5) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
மோசடிக்காரர்களுக்கு நாசம்தான். அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள். இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்). “நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா? மகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்). அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள். (அல்குர்ஆன் 83:1-6)
இந்த மோசடிக்காரர்கள் துரோகம் செய்பவர்கள் பிறருடைய உரிமையில் எல்லை மீறுபவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?. அல்லாஹ்விற்கு முன்னால் மகத்தான மறுமை நாளில் எழுப்பப்படுவோம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லையா?
அகிலங்களின் இறைவனுக்கு முன்னால் மகத்தான நாளில் மக்கள் எல்லாம் எழுப்பப்படுவார்களே அந்த நாளின் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?
எப்பேர்ப்பட்ட கோபத்தோடு கேட்கிறான் பாருங்கள்! நாம் தான் குர்ஆனையே அறிய மாட்டோமே. கோபத்தோடு கேட்டால் என்ன? மகிழ்ச்சியால் செய்தி சொன்னால் என்ன? எதுவுமே தெரியாமல் தானே குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறோம்.
அப்படி அர்த்தங்கள் தெரிந்தாலும் அந்த இடத்தில் நின்று தம்முடைய வாழ்க்கையை சுய பரிசோதனை செய்பவர்கள் எங்கே? இந்த வசனங்கள் கட்டளையின் இடத்தில் இருக்கிறதா? இந்த வசனங்கள் தடுக்கக்கூடிய பாவங்களில் இருக்கிறதா? வருத்தம் வேதனை உள்ளுக்குள் வருகிறதா? கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். நமக்கு மரணமே இல்லை என்ற நினைப்பில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ரப்புல் ஆலமீன் முஃமின்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். உண்மையான முஃமின்கள் யார்? என்று சொல்கிறான். உங்களுடைய தோற்றங்களைக் கொண்டு பெருமை பேசாதீர்கள்! உங்களுடைய தோற்றங்களை கொண்டு ஏமார்ந்து போகாதீர்கள்! யாருடைய தோற்றத்தையும் பார்த்து எடை போடாதீர்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே! செயல்களுக்கு முன்னால் குணங்களுக்கு முன்னால் பண்புகளுக்கு முன்னால் இந்த தோற்றங்கள் எல்லாம் எந்தப் பலனும் அளிக்காது. எத்தனையோ தோற்றக்காரர்கள் நாளை விசாரணையில் தோற்றுப் போவார்கள். அழகிய தோற்றம் கொண்டோர் அழுகிய உள்ளம் கொண்டோராக இருப்பார்.
அல்லாஹுதஆலா அமல்களை பார்க்கிறான். கல்பை பார்க்கிறான். உள்ளம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
இறைத்தூதர் ﷺ அவர்களை சொல்லும் போதெல்லாம் அவர் ஏன் உங்களிடத்தில் வந்தார்கள்? உங்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பதற்காக; உங்களுக்கு ஹிக்மத் ஞானத்தை கற்றுக் கொடுப்பதற்காக; இதை உங்களுக்கு ஓதி காட்டுவதற்காக; இதைக் கொண்டு உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக.
சிந்தித்து இருக்கிறோமா? இந்த குர்ஆனை என்னை பரிசுத்தப்படுத்தியதா? என் பார்வையை பரிசுத்தப்படுத்தியதா? என்னுடைய கொடுக்கல் வாங்கலை பரிசுத்தப்படுத்தியதா? என்னுடைய வாக்கை பரிசுத்தப்படுத்தியதா? என்னுடைய ஒப்பந்தத்தை பரிசுத்தப்படுத்தியதா? என் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையை பரிசுத்தப்படுத்தியதா?
அன்றாடம் குளிப்பதில் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், நம்முடைய உடலை சுத்தமாக வாசமாக வைத்திருப்பதற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், நம்முடைய சொல் செயல் ஈமான் நம்பிக்கை வாக்கு உடன்படிக்கை நம்முடைய உரிமைகள் சுத்தமாக இருக்கின்றனவா?
நம்மிடத்தில் இருக்கின்ற காசு பணம் எல்லாம் நமக்கு தான் சொந்தம் என்று சொல்ல முடியுமா? ஒருவரை வசதி உடையவனாக, செல்வந்தனாக பார்ப்பதால் அவரிடத்தில் இருக்கக்கூடிய காசு பணம் எல்லாம் அவனுக்கு சொந்தமானதா? அவன் யாரையும் ஏமாற்றி இருக்கின்றானா? உறவுகளின் உடைய வாரிசுகளின் சொத்துகளை கொடுக்காமல் இருக்கின்றானா?
இத்தனை ஹக்குகளை நிறைவேற்றியதற்கு பிறகு தான் ஒரு சொத்து ஒரு செல்வம் நமக்கு ஹலால் ஆகும் என்பதை மறந்து இருக்கிறோமே.
எப்பேர்பட்ட ஏமாற்றத்தில் இருக்கிறோம். எப்பேர்ப்பட்ட மயக்கத்தில் இருக்கிறோம். அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்; முஃமின்கள் யார்? யாரை அல்லாஹ் நேசிக்கிறானோ, யாரை வேதங்கள் புகழ்கின்றனவோ, யாரை அல்குர்ஆன் போற்றுகின்றதோ. அவர்கள் யார் தெரியுமா?
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
(-முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ஆகிய) இ(ந்த இரு)வர்களுக்கும் பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் (முஹாஜிர், அன்ஸாரி) சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.” (அல்குர்ஆன் 59:10)
இந்த துஆவை உணர்ந்து துஆச்செய்து இருக்கிறோமா? காசு வேணும், பணம் வேணும், வீடு வேணும், பங்களா வேணும், கார் வேணும், சொத்து வேணும், சுகம் வேணும், ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்றெல்லாம் எப்படி உருக்கமாக துஆ கேட்கின்றோம்.
இந்த துஆவுக்காக உருகி இருக்கின்றோமா? அழுது இருக்கின்றோமா? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். முஃமின்கள் யார் தெரியுமா? அவர்கள் எப்படி என்னிடத்தில் துஆ கேட்பார்கள் தெரியுமா?
யா அல்லாஹ்! என்னுடைய சகோதர முஸ்லிம்களைப் பற்றி என் உள்ளத்தில் பொறாமையை வைத்து விடாதே! குரோதத்தை வைத்து விடாதே! அவர்கள் மீது பொறாமை படக்கூடியவர்களாக ஆக்கி விடாதே! அவர்களுக்கு வஞ்சகம் குரோதம் செய்யக் கூடியவர்களாக என்னை ஆக்கி விடாதே! யாருடைய உரிமைகளையும் பாழாக்க கூடியவனாக என்னை ஆக்கி விடாதே!
யாருக்காக தொழுகிறோம்? நம்முடைய சொர்க்கத்திற்காகவா? நம்முடைய மறுமைக்காகவா? அல்லது மக்கள் நம்மை பார்க்க வேண்டும் என்பதற்காகவா? அல்லாஹு தஆலா முஃமின்களை சொல்கிறான்; அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் தங்களுடைய முஃமினான சகோதரர்களுக்கு.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த தன்மையிலிருந்து எங்கு இருக்கிறோம் யோசித்துப் பாருங்கள்! எவ்வளவு தூரத்தில் இருக்கு யோசித்துப் பார்க்கணும்! உள்ளங்கள் பொறாமைகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. உள்ளங்கள் காழ்புணர்ச்சிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. உள்ளங்கள் பழிவாங்கும் குரோதத்தால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. எப்படி நம்முடைய தொழுகை உயரும் யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹு தஆலா இது குறித்து குர்ஆனிலே அவ்வளவு உபதேசங்கள் செய்கிறான். ஒரு உபதேசமா இரண்டு உபதேசமா? எத்தனை உபதேசங்கள் நீங்கள் உங்களுக்குள் சத்தியம் செய்து கொண்டு ஏமாற்ற பார்க்கிறீர்களா? சத்தியம் எதற்காக செய்யப்படும்? நிறைவேற்றுவதற்காக. வாக்குகள் எதற்காக கொடுக்கப்படும்? அவற்றை நிறைவேற்றுவதற்காக.
ஆனால், இன்று தப்பித்துக் கொள்வதற்காக வாக்குகள் கொடுக்கப்படுகின்றன. ஏமாற்றுவதற்காக சத்தியங்கள் செய்யப்படுகின்றன.
அல்லாஹ் கேட்கிறான்; நீங்கள் உங்களது வாக்குகளை உங்களது சத்தியங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு சத்தியமாக ஆக்கி வைத்திருக்கிறீர்களா? அல்லாஹு தஆலா ஒன்றுக்கு மேற்பட்ட பல வசனங்களில் இது குறித்து பேசுகிறான்.
وَيٰقَوْمِ اَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ
என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். (அல்குர்ஆன் 11:85)
மக்களுக்கு அளக்கும் போது நிறுத்துக் கொடுக்கும் போது முழுமையாக நிறுத்துக் கொடுங்கள்! அவர்களில் பொருள்களிலே அவர்களுக்கு நீங்கள் மோசடி செய்யாதீர்கள்! அதை குறைத்து விடாதீர்கள்! என்று அல்லாஹு தஆலா அவனுடைய ஹக்கு-பங்குகளோடு சேர்த்து அடியார்களுடைய ஹக்கு-பங்கு களை சொல்லிக் காட்டுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய காலத்திலே மதீனாவாசிகள் மக்களுக்கு அளந்து கொடுப்பதற்காக ஒரு அளவையும், அளந்து வாங்குவதற்காக ஒரு அளவையும் வைத்திருப்பார்கள்.
ரஸூல் ﷺ ஹிஜ்ரத் செய்து வந்த போது அவர்கள் இஸ்லாமை அறியாதவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் அங்கே இஸ்லாம் உள்ளே வருகிறது. அப்போதான் ரஸூலுல்லாஹ் ﷺ ஹிஜ்ரத் செய்து வருகிறார்கள்.
அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். அல்லாஹு தஆலா வசனத்தை இறக்கினான்.
وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ
(அல்குர்ஆன் 83:1)
அத்தனை இந்த ஏமாற்று செயல்களையும் தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து மிக நேர்மையானவர்களாக மதினா வாசிகள் வியாபாரங்களை ஆரம்பித்தார்கள்.
ஒரு வசனம் அவர்களை மாற்றிவிட்டது. அல்லாஹ்வின் ஒரு எச்சரிக்கை அவர்களை மாற்றிவிட்டது. பிறகு அல்லாஹு தஆலா அவர்களை புகழ்கிறான், புகழ்கிறான், இன்று நாம் எவ்வளவு முறை நாம் கேட்டாலும் இப்படி செவியேற்றுவிட்டு இந்த பக்கமாக நாம் மறந்து விட்டு செல்கின்றோமே, காரணம் என்ன?
மறுமையுடைய பயமில்லை. ஆஹிரத்துடைய பயமில்லை. சிலருக்கு எவ்வளவு திமிர் தெரியுமா? அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம்; எனக்கு அல்லாஹ்வுக்கு பதில் சொல்லத் தெரியும்; நான் ஒன்றும் அவன் செய்வதை விட குறைத்து செயல்படவில்லை. எப்பேர்ப்பட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள். அங்கே அல்லாஹ்விடத்தில் என்ன பேசுவார்கள்?
الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
இன்று நாம் அவர்களின் வாய்கள் மீது முத்திரையிடுவோம். இன்னும், அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும். (அல்குர்ஆன் 36:65)
வாய்களுக்கு முத்திரை இட்டு விடுவான். உங்களிடத்திலே காரணம் சொல்லுங்கள் என்று கேட்கப்படாது. உங்களுடைய கைகள் பேசும். உங்களுடைய உடல்கள் பேசும். நம்முடைய தோல்கள் பேசும். சாட்சி சொல்லும் நமக்கு எதிராக.
அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வின் தூதர் ﷺ மதீனாவின் கடைவீதிகளின் பக்கம் வருவார்கள். மஸ்ஜிதில் மட்டும் அல்லாஹ்வின் தூதர் ﷺ மக்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர மாட்டார்கள். களத்தில் இறங்கி அந்த ஸஹாபாக்களை அல்லாஹ்வின் தூதர் ﷺ பண்படுத்தினார்கள். அவர்களுக்கு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, தக்வாவை, எதார்த்தத்தை வாழ்க்கையில் சொல்லித் தந்தார்கள்.
வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் ﷺ அந்த வியாபாரிகள் மத்தியிலே செல்கிறார்கள்.
அப்பொழுது ஒரு வியாபாரி தன்னுடைய தானியங்களை குவித்து வைத்திருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் ﷺ தன்னுடைய கையை அந்த குவியலுக்குள் நுழைத்தார்கள். பிறகு தனது கரத்தை வெளியே நீட்டியபோது கரம் நனைந்திருந்தது. ஈரத்தை உணர்ந்தார்கள். கேட்டார்கள்; தானிய வியாபாரியே! இது என்ன என்று.
அவர் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! மழை பொழிந்ததால் நனைந்து விட்டது. மழையால் நனைந்து விட்டது. தானியங்களை வாகனங்களின் மீது வைத்து வரும் பொழுது மழை பொழிகிறது. அப்பொழுது மேலே உள்ள தானியம் நனைகிறது. நான் அந்த மூட்டையை கவுக்கும் பொழுது என்ன ஆகிறது மேலே இருந்த தானியம் கீழே சென்றது. கீழே இருந்தது மேலே வந்தது நனைந்த தானியம்.
அதுதான் நடந்தது தவிர அதை நான் வேண்டுமென்றே மறைத்து செய்யவில்லை. கண்டிப்பாக அவர் அப்படி செய்திருக்கவும் மாட்டார். நல்லெண்ணம் வைத்து தான் ஆக வேண்டும். ரஸூலுல்லாஹ்வுக்கு முன்னால் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வார். வஹீ இறங்கிவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ இருப்பினும் சொன்னார்கள்; பிற்காலத்தில் வரக்கூடிய நம்மை போன்றவர்களுக்கெல்லாம் வெளிப்படையாக எச்சரிக்கையாக உணர்வூட்டும் உபதேசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னார்கள்.
مَن غَشَّ فليسَ مِنِّي
யார் நம்பிக்கைக்கு மோசடி செய்வார்களோ யார் தம்மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு துரோகம் செய்வார்களோ அவர் என்னை சேர்ந்தவர் இல்லை. என் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 102.
ஹாஜியாக இரு, ஆலிமாக இரு, நீ என்ன தரத்தில் வேண்டுமானாலும் மக்களுக்கு மத்தியிலே பேசப்பட்டுக் கொண்டிரு. உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மோசடிக்காரர்களுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் எந்த உறவும் இல்லை.
மற்றுமொரு ஹதீஸில் வருகிறது. எங்களது சமூகத்தை ஏமாற்றுபவர் எங்கள் சமூகத்தை சேர்ந்தவரே இல்லை.
من غشانا فليس منا
அல்லாஹ்வின் அடியார்களே! நம்முடன் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர் நம்மை சேர்ந்தவராக இருக்க மாட்டார்! ஏன்? இப்பேற்பட்ட மோசடிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் நிலையில் அது மட்டும் தான் எச்சரிக்கையிலே மிகப்பெரிய எச்சரிக்கை. ஒரு ஆட்சியாளன், ஒரு அரசன், ஒரு கலிஃபா, ஒரு மன்னர், ஒரு அதிகாரி சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
ما مِن عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً، يَمُوتُ يَومَ يَمُوتُ وهو غاشٌّ لِرَعِيَّتِهِ، إلَّا حَرَّمَ اللَّهُ عليه الجَنَّةَ.
அல்லாஹ் ஒரு ஆட்சியை கொடுக்க அதிகாரத்தை கொடுக்க அவர் தன்னுடைய மக்களுக்கு மோசடி செய்தவனாக இறப்பானேயானால் அல்லாஹ் அவர் மீது சொர்க்கத்தை ஹராம் ஆக்கி விடுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 142.
கலிஃபா அபூபக்கர், உமர், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களுடைய ஆட்சி, உமர் இப்னு அப்துல் அஜீஸ் உடைய ஆட்சி, சுல்தான் ஜலாலுத்தீன் அய்யூப் உடைய ஆட்சி, ஏனின்று இஸ்லாமின் எதிரிகளாலும் போற்றப்படுகிறது? ஏனென்றால் நாட்டின் சொத்துக்களை மக்களுடைய சொத்துக்களாக ஆக்கினார்களே தவிர, ஆட்சியாளர்களுக்கு அதில் எந்த பங்கும் இல்லை.
நாட்டின் சொத்துக்கள் யாருக்குரிய சொத்து? மக்களுக்குரிய சொத்து. பைத்துல் மால் மக்களுக்கு உரியது ஜக்காத் மக்களுக்குரியது. ஸதக்கா மக்களுக்குரியது. நாட்டில் இருந்து வரக்கூடிய வளர்ச்சிகள் வருமானங்கள் மக்களுக்குரியது.
ஆட்சியாளர்களுக்கோ ஒரு ஊழியனுக்கு என்ன சம்பளமோ அதைத்தான் எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, அதற்கு மேலே எந்த சலுகையும் ஆட்சியாளர் கலிஃபாகளுக்கு மக்கள் சொத்துக்களிலிருந்து அனுமதிக்க முடியாது.
யோசித்துப் பாருங்கள்! அது தான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஆட்சி, அதிகாரம். இதுதான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய நீதம்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்ன எச்சரிக்கை பாருங்கள்! படைப்புகளுக்கு மக்களுக்கு மோசடி செய்தவனாக இறக்கின்ற ஒரு ஆட்சியாளனுக்கு அல்லாஹுதஆலா சொர்க்கத்தை ஹரமாக்கி விடுவான்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தார்கள். நம்முடைய மார்க்க அறிஞர்கள். இந்த மோசடியை குறித்து, துரோகத்தை குறித்து, முஸ்லிம்களுக்கு வஞ்சகம் செய்வதை குறித்து அவ்வளவு உபதேசங்களை குர்ஆன் சுன்னாவுடைய வெளிச்சத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
அபுல் ஹைய் ரஹிமஹுல்லாஹ் சொல்லும் வார்த்தைகளை பாருங்கள். இதுவெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் எப்படி புரிந்து இருப்பார்கள்! சொல்கிறார்கள்;
உள்ளங்கள் ஒரு பாத்திரத்தை போல. எந்த உள்ளத்தில் ஈமான் நிறைந்திருக்குமோ அந்த உள்ளம் முஸ்லிம்களின் மீது கருணையை வெளிப்படுத்தும். முஃமின்கள் மீது முஸ்லிம்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். அவர்கள் பிரச்சனையை தன்னுடைய பிரச்சனைகளாக உணர்ந்து அந்தப் பிரச்சனைகளின் தீர்ப்பதற்காக முயற்சி செய்வார். முஸ்லிம்களின் நன்மைகளுக்காக பாடுபடுவார். எந்த உள்ளம் நயவஞ்சகத்தால் நிரம்பி இருக்குமோ அந்த உள்ளத்தில் அடையாளம் என்ன தெரியுமா? அவர்தான் முஸ்லிம்கள் மீது பொறாமை படுகிறவராக முஸ்லிம்களுக்கு வஞ்சகம் செய்பவராக முஸ்லிம்களுக்கு தீமை நாடக்கூடியவராக முஸ்லிம்கள் மீது குரோதம் உடையவராக இருப்பார்.
அலி இப்னு ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்; நீங்கள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசி விடாதீர்கள்! மோசடி செய்து விடாதீர்கள்! பொய் பேசுபவர்களோடு பழகவும் செய்யாதீர்கள்!
ஏனென்றால், அவர்களோடு பழகுவதே பாவம் தான். சொன்னார்கள் எந்த ஒரு முஃமினுக்கு மோசடி செய்து விடாதே. யாருக்கு துரோகம் செய்து விட்டானோ அவன் அல்லாஹ்விடம் துரோகம் செய்து விட்டான். அல்லாஹ்வுடைய தூதருக்கு துரோகம் செய்துவிட்டான்.
உள்ளம் சுத்தமாக இருக்கட்டும். உன்னுடைய பாவங்களை விட்டு சுத்தமாக இருக்கட்டும். உன்னுடைய இரண்டு கரங்களும் பிறருக்கு அநியாயம் செய்வதை விட்டு சுத்தமாக இருக்கட்டும். உன்னுடைய உள்ளம் மோசடி சூழ்ச்சி குரோதம் வஞ்சகம் அனைத்திலிருந்தும் சுத்தமாக இருக்கட்டும். உன்னுடைய வயிறு ஹராமிலிருந்து காலியாக இருக்கட்டும். ஏனென்றால், ஹராமினால் வளர்ந்த உடல், சதை இருக்கிறதே அது சொர்க்கத்திற்கு செல்லாது.
எவ்வளவு உபதேசங்களை முன்னோர்கள் செய்து இருக்கின்றார்கள்! அப்துல்லாஹ் இப்னு ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள்;
நல்லதை நாடக்கூடியவனாக இருந்தாலும் சரி ஒரு ஜாஹில் இடத்திலே அறிவீனனிடம் முட்டாளிடம் ஆலோசனை கேட்காதே! மோசடி செய்பவனாக இருந்தால் ஒரு அறிவுள்ள புத்திசாலி இடத்திலும் ஆலோசனை கேட்காதே! ஏன் தெரியுமா? இந்த இருவரும் உனக்கு கொடுக்கக்கூடிய ஆலோசனையால் உங்களை பிரச்சனையில் தள்ளி விடுவார்கள்.
புத்திசாலி இருக்கின்றானே, அவனுடைய அந்த மோசடி என்ற அந்த கெட்ட குணம் சூழ்ச்சி செய்து விடும். அறியாத கல்வி இல்லாத ஜாஹில் இருக்கின்றானே, அவன் நல்லது சொல்வதற்கு முயற்சி செய்தும் தவறானதை சொல்லிவிடலாம்.
இப்படி நிறைய உபதேசங்களை எச்சரிக்கைகளை செய்திருக்கின்றார்கள் நம்முடைய மார்க்க அறிஞர்கள்.
இப்னு ஹஜர் ஹைசமி ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றார்கள்; மிக முக்கியமான விஷயம். இவர்கள் எல்லாம் எந்த காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், மங்கோலியர்கள் முஸ்லிம்களின் நாடுகள் மீது படையெடுத்து தாத்தாரிகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இஸ்லாமிய உலகுக்கு சேதங்களை அழிவை தந்தார்கள் அல்லவா. அந்த காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள்.
சொல்கின்றார்கள்; எப்போது முஸ்லிம்கள் மீது இந்த எதிரிகள் சாட்டப்பட்டார்கள் தெரியுமா? முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்களே! அவர்கள் செல்வங்கள் சூறையாடப்பட்டனவே! அவர்களுடைய பெண்கள் கற்பழிக்கப்பட்டார்களே! இதுவெல்லாம் இந்த பிற்காலத்தில் ஏன் ஏற்பட்டது தெரியுமா?
எப்போது முஸ்லிம் வியாபாரிகள் மோசடி செய்தார்களோ. வாக்குகளை மீறினார்களோ. தந்திரங்களை செய்து சூழ்ச்சிகளை செய்து பிறருடைய சொத்துக்களை ஆகுமாக்கிக் கொள்ள முயற்சி செய்தார்களோ அல்லாஹுதஆலா அவர்களுடைய எதிரிகளைக் கொண்டு இவர்கள் மீது சாட்டி விட்டான்.
இன்று நாம் நம்முடைய நாட்டில் எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை இதோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! நம் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை இப்போது இருக்கிறதா? முஸ்லிம்கள் என்றால் ஒரு உயர்வான எண்ணம் இருந்ததோ? அந்த எண்ணம் இன்று முஸ்லிம்களால் பாதுகாக்கப்படுகின்றதா? எவ்வளவு ஒரு நம்பிக்கைகுரிய சமுதாயமாக இருந்த நாம் அந்த நம்பிக்கையை இன்று தொலைத்திருக்கின்றோம். யோசித்துப் பாருங்கள்!
நமக்கு எப்படி தொழுகை முக்கியமோ, நமக்கு எப்படி நோன்பு முக்கியமோ, மஸ்ஜித் முக்கியமோ, ஒப்பந்தம் முக்கியமோ, அது போன்று நம்முடைய கொடுக்கல் வாங்கலில் சுத்தம் நமக்கு முக்கியம். நேர்மை நமக்கு முக்கியம். வாக்குகளை பேணுவது முக்கியம். ஒப்பந்தங்களை பேணுவது முக்கியம். பிறருடைய ஹக்குகளை தேடிக் கொடுப்பது நமக்கு முக்கியம். யாருடைய ஹக்குகளையும் நாம் பாதுகாப்பவனாக பறிக்காதவனாக இருப்பது நமக்கு முக்கியம்.
ஏனென்றால், எப்படி அல்லாஹ்வுடைய தண்டனை தொழுகையை விடுவது கொண்டு வருமோ அதுபோன்று அடியார்களுடைய ஹக்குகளை பறிப்படுவதை கொண்டும் வரும். அது மட்டுமா? இன்னொரு பக்கம், மேலே சென்று தொழுகையை பாழாக்குபனுக்கு மறுமையில் தான் தண்டனை.
ஆனால், அநீதி இழைக்கப்பட்டவன் தனது கரத்தை அல்லாஹ்வை நோக்கி உயர்த்தி விட்டால், வானத்தை நோக்கி உயர்த்தி விட்டால், அநீதி இழைக்கப்பட்டவனுடைய பிரார்த்தனைக்கும் வானத்திற்கும் இடையிலே எந்த ஒரு திரையும் இல்லை.
அல்லாஹ் சொல்வான்;
وعزَّتي لأنصُرنَّك ولو بعد حينٍ
நான் சத்தியமாக உனக்கு உதவுவேன் சிறிது நேரத்திற்கு பிறகாவது. (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் 3598, இப்னு மாஜா எண் 1752.
ஆகவே, அன்பிற்குரியவர்களே! நாம் அல்லாஹு தஆலாவை அதிகமாக பயந்து கொள்வோமாக! நம்மீது செய்யப்பட்ட அநியாயங்கள் அக்கிரமங்கள் உரிமை மீறல்களுக்கு அல்லாஹ்விடத்தில் முறையிடுவோம். நம் புறத்திலிருந்து யார் மீதும் எந்த அக்கிரமமும் அநியாயமும் உரிமை பறிப்பும் நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போமாக!
யாருக்காவது யாராவது நம் மூலமாக சிரமங்கள் துன்பங்கள் ஏதாவது கஷ்டங்கள் நடந்திருந்தால் தேடி சென்று மன்னிப்பு கேட்டு, அந்த மறுமை நாளுக்கு முன்பாகவே நாம் அதை சீர்திருத்திக் கொண்டு அவருடைய உரிமைகளை அவர்களிடத்தில் சேர்ப்போம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் குடும்பத்தார்களையும் பெற்றோர்களையும் மன்னித்தருள்வனாக! நேர்வழியிலே உறுதிப்படுத்துவானாக!
அல்லாஹு தஆலா எந்த மார்க்கத்தை கொண்டு நமக்கு வெற்றியை முடிவு செய்து இருக்கின்றானோ அந்த மார்க்கத்திலே உறுதி உள்ளவர்களாக அந்த மார்க்கத்தில் வாழக்கூடியவர்களாக அந்த மார்க்கத்தை கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக அந்த மார்க்கத்தை பரப்பக் கூடியவர்களாக நம் பக்கம் அழைக்க கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக!
அல்லாஹு தஆலா எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹு தஆலா பாதுகாத்து அருள்வானாக! இஸ்லாமுக்கும் முஸ்லிமுக்கும் அல்லாஹு தஆலா மகத்தான வெற்றியை தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
ثلاثةٌ لا تُردُّ دعوتُهم الصَّائمُ حتَّى يُفطرَ والإمامُ العادلُ ودعوةُ المظلومِ يرفعُها اللهُ فوق الغمامِ وتُفتَّحُ لها أبوابُ السَّماءِ ويقولُ الرَّبُّ وعزَّتي لأنصُرنَّك ولو بعد حينٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.
1 . நோன்பாளி நோன்புத் துறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை.
2 . நீதமான அரசனின் பிரார்த்தனை.
3. அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. அல்லாஹ், அதை மேகத்திற்கு மேலாக உயர்த்தி அதற்காக வானத்தின் கதவுகளை திறக்கிறான். மேலும், “எனது கண்ணியத்தின் மீது ஆணையாக! சிறிது நேரத்திற்குள் உனக்கு உதவி செய்கிறேன்” என்று கூறுகிறான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி எண் 3598, இப்னு மாஜா எண் 1752.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/