பொய் - ஓர் எச்சரிக்கை! | Tamil Bayan - 1021
பொய் - ஓர் எச்சரிக்கை
ஜுமுஆ குத்பா தலைப்பு : பொய் - ஓர் எச்சரிக்கை
வரிசை : 1021
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 05-12-2025 | 14-06-1447
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாகவும், உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை (தக்வாவை) உபதேசம் செய்தவனாகவும், மார்க்கச் சட்டங்களை முறையாகப் பின்பற்றி வாழ வேண்டும் என்று உபதேசம் செய்தவனாகவும்;
அல்லாஹு தஆலாவுடைய மார்க்கத்தை பேணுவதிலும், அவனுடைய மார்க்கச் சட்டங்களை மதித்து நடப்பதிலுமே நம்முடைய இவ்வுலக வாழ்க்கையின் வெற்றியும், மறுமையின் மகத்தான வெற்றியும் இருக்கிறது என்பதை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாகவும், இந்த குத்பா உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம் அனைவரையும், நம்முடைய பெற்றோர்களையும், நம்முடைய குடும்பத்தாரையும் மன்னித்தருள்வானாக! நமக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் அல்லாஹு தஆலா நேர்வழியை தந்தருள்வானாக! நம்முடைய சந்ததிகளை நமக்கு சீர்திருத்தி அருள்வானாக! ஆமீன்.
அல்லாஹ்வின் அடியார்களே! சூரத்துல் கஹ்ஃபுடைய அறிவுரைகள், உபதேசங்கள், பாடங்கள், படிப்பினைகளை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த தொடருக்கிடையில், சில நற்குணங்களை நினைவூட்டிக் கொள்வதற்காக சென்ற குத்பாவில் உண்மையைப் பற்றி சில முக்கியமான உபதேசங்களை பார்த்தோம்.
இன்ஷா அல்லாஹ், , இந்த ஜுமுஆ குத்பாவிலும் , உண்மைக்கு முற்றிலும் எதிரான, மிகவும் இழிவான, கேவலமான, மட்டமான, மோசமான, அருவருப்பான, அசிங்கமான, வெறுக்கத்தக்க ஒரு குணத்தைப் பற்றியே நாம் பார்க்க இருக்கிறோம்.
அது என்ன குணம்? உண்மைக்கு எதிரான பொய் என்ற குணம். அல்லாஹ் நம்மை அதிலிருந்து பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா, “என் சாபம் உண்டாகுக” என்று கூறும் கூட்டங்களில், ஒரு கூட்டம் பொய்யர்கள் தான். ஆம், அல்லாஹு தஆலாவின் சாபம் உண்டாகுக என்று அல்லாஹ் கூறும் கூட்டங்களில், ஒரு கூட்டம் பொய்யர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொய் என்பது மிகுந்த அருவருக்கத்தக்க ஒரு குணம். ஒரு முஸ்லிம் தன்னுடைய நாவை பேண வேண்டும், பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனுடைய எண்ணங்களில்கூட பொய் இருக்கக் கூடாது. அவனுடைய சொல்லிலும், செயலிலும் பொய் இருக்கக் கூடாது.
ஒருவருக்கு கொடுக்கக் கூடிய வாக்கில் பொய் இருக்கக் கூடாது. ஒரு செய்தியைச் சொல்வதிலும் பொய் இருக்கக் கூடாது. விரும்பியும் சரி, விரும்பாமலும் சரி, விளையாட்டாகவும் சரி, கோபத்திலும் சரி, எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் பொய்யின் பக்கம் நெருங்கக்கூடாது.
அல்லாஹ் அந்த குணத்தை வெறுக்கிறான். அந்த குணத்தை அல்லாஹு தஆலா வெறுக்கப்பட்ட குணமாக தனது வேதத்தில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் கூட அந்த குணத்தை வெறுத்தார்கள். அருவருக்கத்தக்க, இழிவான குணமாக அந்த குணத்தை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ நமக்கு ஒவ்வொரு அமைதியிலும், அசைவிலும் வழிகாட்டுகிறார்கள். அவர்களை விட அற்புதமான ஒரு வழிகாட்டியை நாம் பார்க்க முடியாது. நன்மையை நாடி நமக்கு வழிகாட்டியவர். அவருக்கு அதில் எந்த சுயநலமும் இல்லை.
அவர்கள் நம்முடைய வெற்றிக்காக நமக்கு வழி காட்டியவர். மறுமையின் மகத்தான சொர்க்க வாழ்க்கைக்காக நமக்கு வழிகாட்டியவர். நம்முடைய ரப்பு நம்மை கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக வழி காட்டியவர். அந்த தூதரை எவ்வளவு நற்புகழ்ச்சிகளைக் கொண்டு புகழ்ந்தாலும், வாழ்த்தினாலும் அவர் அதைவிட மேலானவர். அவர்கள் சொல்லக்கூடிய அற்புதமான வழிகாட்டல் பாருங்கள்!
யாருக்கு அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை இருக்குமோ,
எப்படி ஆரம்பிக்கிறார்கள்? எனக்கு முன்னால் இருக்கக்கூடிய எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை செயல்வடிவிலே வெளிப்படுத்துங்கள்.
உங்களது உள்ளத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கையை உங்களது செயல்தான் உண்மைப்படுத்தும். உங்களுடைய நல்ல சொற்கள் தான் உண்மைப்படுத்தும். உங்களுடைய அழகிய குணங்கள் தான் அதை உண்மைப்படுத்தும்.
இன்று, நம்மில் பலர் என்ன சொல்கிறார்கள்? என் எண்ணம் சுத்தமா இருக்கு. என் செயலை பார்க்காதீங்க, என் சொல்லை பார்க்காதீங்க, என் கல்பு சுத்தமா இருக்கு, என் மனசுல ஒன்னும் இல்லை. இது முட்டாள்கள் பேசக்கூடிய பேச்சு, அறிவிலிகள் பேசக்கூடிய பேச்சு.
தமிழில் சொல்வார்கள்; ஒவ்வொரு பாத்திரமும் அதில் உள்ளதைத்தான் கொட்டும். பாத்திரத்தில் உள்ளது தான் ஆப்பையில் வரும். ((சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும்)) உனது உள்ளத்தில் நல்லது இருந்தால்தான் உனது செயலிலே நல்லது வெளிப்பட்டிருக்கும். உன்னுடைய உள்ளத்திலே நல்லது இருந்தால் தான் உன்னுடைய சொல்லிலே நல்லது வெளிப்பட்டிருக்கும்.
என் உள்ளத்தில் நல்லது இருக்கிறது என்று செயல் கெட்டதாக இருக்குமேயானால் அவர்கள் பொய் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தராதீர்கள். அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? தனது விருந்தாளியை கண்ணியமாக நடத்துங்கள். அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? பேசினால் நல்லதை பேசுங்கள் இல்லை என்றால் வாய்மூடி இருங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6018.
ஒவ்வொரு கட்டளையை சொல்லும் பொழுதும் அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? என்று கேட்டு கேட்டு சொல்கிறார்கள். ஒரு முறை கேட்டுவிட்டு மூன்று ஒழுக்கங்களை அதோடு சேர்த்து சொல்லவில்லை. ஒவ்வொரு ஒழுக்கத்தை வலியுறுத்தும் போதும் அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? அண்டை வீட்டார் தொந்தரவு தராதீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமை நம்புகிறீர்களா? விருந்தாளியை கண்ணியமாக நடத்துங்கள். அல்லாஹ்வை நம்புகிறீர்களா? மறுமையை நம்புகிறீர்களா? நல்லதை பேசுங்கள் இல்லை என்றால் வாய் மூடி இருங்கள்.
எது நல்லது? உண்மை நல்லது. நேர்மை நல்லது. நீதம் நல்லது. ஒருவர் உண்மையை புரட்டுவார், பொய் கூறி வதந்திகளை பரப்பி, உறவுகளை துண்டிக்க வைப்பார். உள்ளங்களிலே குரோதங்களை உண்டு பண்ணுவார். நண்பர்களை பிரிப்பார். பங்காளிகளுக்கு இடையே சண்டைகளை மூட்டுவார். காட்டுத் தீயை விட பயங்கரமானது.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ பொய்யை வெறுத்தார்கள். பொய் குறித்து எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார்கள். மனிதன் எப்படி என்றால் ஒரு செயலை ஒருமுறை செய்யும்போது, அதாவது ஒரு தப்பான செயலை அவன் முதல் முறையாக தப்பு செய்யும் போது தயங்குவான், கொஞ்சம் யோசிப்பான். அல்லது ரொம்பவும் யோசிப்பான். பிறகு துணிந்து விட்டானேயானால் இரண்டாவது முறை செய்யும்போது லேசான தயக்கம் தான் இருக்கும். அந்த முதல் முறை இருந்த தயக்கம் வராது. இரண்டாவது முறையும் செய்துவிட்டால் மூன்றாவது முறை செய்வதற்கு அவனை அவனது நஃப்ஸ் தூண்டும். அப்படியே இறுக்கும். ஆசையூட்டும், கவர்ச்சியை உண்டாக்கும்.
மூன்றாவது முறையும் செய்து விட்டால் அவ்வளவுதான். பாவம் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தை விட்டு, அது தப்பான செயல் என்ற அதனுடைய அசிங்கம் அவனுடைய உள்ளத்தை விட்டு எடுக்கப்பட்டுவிடும். அல்லாஹ் நம்மைபாதுகாப்பானாக!
அவனுக்கு ஒருவர் அறிவுரை கூறி, அந்த அறிவுரை அவனுடைய உள்ளத்தை தைக்கும் படி இருந்து, அவன் பிறகு வருந்தினால்தான் மீண்டும் அவருடைய உள்ளம் அந்த உண்மையான மனசாட்சிக்கு ஆன்மாவிற்கு திரும்பும்.
அல்லாஹ்வின் தூதர் அப்படியே இதை தங்களது சொல்லால் எவ்வளவு நயமாக சொல்கிறார்கள் கவனியுங்கள்.
وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا
பொய் இருக்கிறதே பாவத்திற்கு வழிகாட்டுகிறது. பொய் ஒருபோதும் நன்மைக்கு வழி காட்டாது. பாவம் நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய் பேசுகிறான், பொய்யே பேசுகிறான் இறுதியில் என்ன ஆகிறது? அல்லாஹ்விடத்தில் பொய்யனாக பதியப்பட்டு விடுகிறான். ரப்பிடத்திலே இவன் ஒரு பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6094.
அவ்வளவுதான் அவனுடைய வாழ்க்கை அப்படியே அந்த பொய்யிலேயே சென்றுவிடும். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டு தூரம் ஆகி விடுவான்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு இப்போது நாம் பேசிய அந்த கருத்தை அவர்களுடைய பொன்னான சொற்களால் சொல்கிறார்கள் கவனியுங்கள். அடியான் பொய் பேசுகிறான்.
இன்று பொய் என்பது சாதாரணமாகிவிட்டது. எந்த ஒரு செய்தியிலும் பொய் கலக்கவில்லை என்றால் அதில் ருசி இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. எல்லா விஷயங்களிலும் தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய கொடுக்கல், வாங்கல், விற்பனை, பழக்கம், உறவுகள் எல்லாவற்றிலும் சர்வ சாதாரணமாக மக்கள் பொய்யை கலக்கின்றார்கள்.
இதிலே பெரும்பாலும் எதில் தெரியுமா நடக்கின்றது. இந்த பெருமை பேசுகிறார்கள் பாருங்கள், தற்பெருமை அடிக்கின்றார்கள் பாருங்கள், தன்னுடைய வரட்டு கௌரவத்திற்காக பேசுகின்றார்கள் பாருங்கள், இல்லாததை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ இதை எவ்வளவு அழகாக ஒரு ஹதீஸிலே எச்சரிக்கை செய்கின்றார்கள்.
ஒன்று தன்னிடத்திலே இல்லை, தன்னிடத்தில் இல்லாததை இது என்னிடத்திலே இருக்கிறது என்று போட்டிக்கு பேசுகிறார்கள் அல்லவா. ஒருவருடத்தில் ஒரு பொருளை பார்த்தால் இந்த மாதிரி என்கிட்ட இரண்டு வீட்ல இருக்கிறது என்று பெருமைக்கு பேசுகின்றார்களே. இல்லாததை தன்னிடத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள். அவர்கள் ரெண்டு பொய்யான ஆடையை அணிந்தவர்களை போல. அது என்ன ஆடையில ரெண்டு பொய்யான ஆடை? ஆடையே அணியாதவர்களை போல, அம்பலமானவர்களை போல.
அதைத்தான் அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு நாசுக்காக சொல்லுகின்றார்கள். இரண்டு பொய்யான ஆடையை அணிந்தவனை போல. அவனோ அம்பலமாக இருக்கின்றான். ஆனால் தன்னை அலங்காரப்படுத்திக் கொள்கிறான் இல்லாததைக் கொண்டு. (குறிப்பு:1)
அறிவிப்பாளர் : அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5219.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் சொல்கின்றார்கள்,
لَا يَزَالُ الْعَبْدُ يَكْذِبُ، وَتُنْكَتُ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ حَتَّى يَسْوَدَّ قَلْبُهُ كُلُّهُ، فَيُكْتَب عِنْدَ اللهِ مِنَ الْكَاذِبِينَ
அடியான் பொய் பேசுகிறான், பேசுகிறான், பேசுகிறான். ஒவ்வொரு முறை பேசும்போதும் அவனது உள்ளத்திலே ஒரு கருப்புப் புள்ளி வைக்கப்படுகிறது. மறுமுறை பொய் பேசி விட்டால் உடனே அவனுடைய உள்ளத்திலே மறுமுறை ஒரு கருப்பு புள்ளி வைக்கப்படுகிறது. இப்படியாக அவன் பொய் பேச பேச அவனுடைய உள்ளத்தில் கருப்பு புள்ளிகள் வைக்கப்பட்டு அவனுடைய உள்ளம் எல்லாம் கருப்பாகிவிடுகிறது. அல்லாஹ்விடத்திலே அவன் பொய்யனாக பதியப்பட்டு விடுகின்றான்.
நூல் : முவத்தா மாலிக்.
சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். நாம் பெரும்பாலும் ஒரு தவறை செய்யும்போது ஒன்று என்ன? இந்த பாவத்திற்கு அல்லாஹ்விடத்தில் என்ன தண்டனை? என்று அறிந்திருப்பதில்லை. நாம் இன்று பாவம் செய்வதற்கு உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. இரண்டாவது, அந்தப் பாவத்தால் எனக்குள் ஏற்படுகிற கெட்ட மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் அறியாமல் இருக்கிறோம்.
நெருப்பை தொட்டால் சுடும் என்று தெரிகின்ற காரணத்தால் தான் அதில் விளையாட நமக்கு மனம் வருவதில்லை. நெருப்போடு யாரும் விளையாடுவார்களா? ஒரு பாம்போடு யாரும் விளையாடுவார்களா? ஒரு கொடிய மிருகத்தோடு யாரும் விளையாடுவார்களா? தெரியும்.
இன்று, நாம் ஹதீஸ்களை படிக்காததால், குர்ஆனின் அறிவுரைகளைப் படிக்காததால் நமக்கு பாவங்களைப் பற்றிய ஆபத்துகள் தெரிவதில்லை. பாவங்கள் எப்பேர்ப்பட்ட தண்டனைக்குரியவை, சாபத்திற்குரியவை, அல்லாஹ்வின் கோபத்திற்குரியவை என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம்.
இந்த பொய்யினால் அவனுடைய உள்ளத்திலே அந்த கருப்பு புள்ளி அப்படியே பதியப்பட்டு பதியப்பட்டு அவருடைய உள்ளத்தின் வெளிச்சத்தை போக்கிவிடுகிறது. அவனுடைய உள்ளத்தில் வெண்மையை போக்கி விடுகிறது.
இன்று நாம் பல நேரங்களிலே நினைத்துப் பார்ப்பதுண்டு. நானும் தானே குர்ஆன் ஓதுகிறேன், எனக்கு அந்த குர்ஆன் ஓதுவதிலே ஒரு ருசி வருவதில்லையே, ஒரு ஈடுபாடு வருவதில்லையே. குர்ஆனை ஓதும் போது அந்த வசனங்களில் ரசனை எனக்கு வருவதில்லை. நானும் தானே தொழுகிறேன், அந்த தொழுகையில் எனக்கு ஒரு மன ஓர்மை கிடைப்பதில்லையே. சுஜூதிலே எனக்கு ஒரு இன்பம் வருவதில்லையே. ருக்கூவிலே எனக்கு ஒரு ஆன்மீக உணர்வு வருவதில்லையே!. எப்படி வரும்?
இப்படி பொய் பேசிக்கொண்டு, புறம் பேசிக்கொண்டு, கோள் சொல்லிக்கொண்டு, உள்ளங்களை எல்லாம் கருமை அடைய செய்து விட்டால் எப்படி இபாதத்துகளில் இன்பம் வரும்!
ஒவ்வொரு பாவமும் அதனுடைய ஆபத்துகள். அதனால் நமக்குள் ஏற்படக்கூடிய கெட்ட மாற்றங்கள் அது ஒரு அக்டோபஸை போல. அப்படியே உடலுக்குள் பரவி பலவிதமான தீமைகளை உண்டாக்கும். பலவிதமான கெடுதிகளை உண்டாக்கும்.
எந்தளவுக்கென்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் உடைய ருசியை அடையாமல் போய் விடுவான். இன்று ஏன் ஷிர்க்கை பார்த்தால் நம்முடைய ரோமங்கள் சிலிர்ப்பதில்லை? ஷிர்க் -இணை வைத்தல், அல்லாஹுவுக்கு குழந்தை இருக்கிறது என்று சொல்லக்கூடிய மக்களை பார்க்கும் பொழுது நம்முடைய உள்ளங்கள் ஏன் நடுங்குவதில்லை? சிலுவைகளையும், சிலைகளையும் பார்க்கும்போது நம்முடைய உள்ளத்திலே ஏன் ஒரு ஈமானிய வெறுப்பு அவற்றின் மீது வருவதில்லை? காரணம் நம்முடைய ஈமான் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது.
இந்த பொய் இருக்கிறதே சாதாரண சின்ன பாவமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்மை பரிசுத்தப்படுத்துவானாக!
அல்லாஹ்வின் தூதர் ﷺ மிஃராஜ் உடைய அந்த இரவிலே, அவர்களுக்கு காண்பிக்கப்பட்ட நரகவாசிகளின் தண்டனைகளிலே ஒன்று, அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
என்னை அழைத்துச் சென்ற வானவர்கள் ஒரு மனிதனுக்கு அருகிலே சென்றார்கள். அவன் மல்லாக்க படுக்க வைக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய தலைக்கு அருகிலே ஒருவர் இரும்பு கொக்கியைக் கொண்டு, (இந்த கறிக்கடையிலே ஆட்டுக்கறி கடையில் மாட்டி வைத்திருப்பார்கள் அல்லவா) அந்த கொக்கியை வைத்துக் கொண்டு நிற்கிறார்.
என்ன செய்கிறார்? அவருடைய வாயில் ஒரு பக்கத்தில் அந்த கொக்கியை விட்டு அதை அப்படியே கிழிக்கிறார். அவனுடைய பின் தாடை வரை கிழித்து விடுகிறார். பிறகு அவர் என்ன செய்கிறார்? அவருடைய மூக்கிலே அந்த கொக்கியை விடுகின்றார். இந்த மூக்குல விட்டு திரும்ப இதுவரைக்கும் கிழிக்கிறார். பிறகு அவனுடைய கண்ணிலே அந்த கொக்கியை விட்டு கிழிக்கின்றார். ஒரு பக்கம் கிழித்ததற்கு பிறகு அடுத்த பக்கம் வந்து அதேபோன்று செய்கிறார். இந்தப் பக்கம் செய்து முடிக்கும் போது இந்த பக்கம் சரியாக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் இந்த பக்கம் வருகிறார். இங்கே செய்து முடியும் போது இது சரியாக்கப்பட்டு விடுகின்றது. இப்படியாக அவருக்கு அதாபு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் மன்னிப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக! உலகத்துல கொடிய சிறைச்சாலைகளை நீங்கள் கற்பனை செய்தால் அப்படி நூறல்ல, ஆயிரம் அல்ல, கோடி கணக்கான சிறைச்சாலைகளை கற்பனை செய்தாலும், நரகத்துடைய தண்டனைக்கு சமமாகாது. அப்பேற்பட்ட கொடிய தண்டனை நரகத்தின் தண்டனை.
அல்லாஹ்வின் தூதர் ﷺ பயந்து போய் கேட்கிறார்கள்; சுப்ஹானல்லாஹ் யார் இவர் என்று?. வானவர்கள் சொன்னார்கள், இவன் யார் தெரியுமா?
இவன் வீட்டிலிருந்து வெளியேறுவான். ஒரு பொய்யை அவிழ்த்து விடுவான். அந்த பொய் பரவி பரவி உலகமெல்லாம் பரவி விடுகிறது. நபியே! அப்பேர்ப்பட்டவனுக்கு தான் இந்த தண்டனை என்று அந்த வானவர்கள் சொல்லுகிறார்கள். (குறிப்பு:2)
அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1386.
சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
இந்த பொய் ஒரு மோசமான குணம். யாரிடத்திலும் இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக நீங்கள் வசதி உள்ளவர்களாக, ஆட்சி அதிகாரம் உள்ளவர்களாக இருக்கும் பொழுது அறவே நீங்கள் பொய் சொல்ல கூடாது. பயத்தில் ஒருவன் பொய் சொல்லுகிறான் என்றால் அவனுக்கு அது ஒரு ஆகுமான காரணமாக தெரியலாம். நீங்கள் அதிகாரம் உடையவர்களாக இருக்கும்போது நீங்கள் பொய் சொன்னால் யாரை பயந்து பொய் சொல்கிறீர்கள்? உயிருக்கு பயந்தா? உங்களுடைய உடைமைகளுக்கு பயந்தா?
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ
மூன்று மனிதர்களை அல்லாஹ் மறுமையில் பார்க்கவே மாட்டான். அவர்களை சுத்தப்படுத்த மாட்டான். அவர்களோடு அல்லாஹ் பேச மாட்டான். அவர்களுக்கு கொடிய நரக தண்டனை உண்டு. அவர்கள் யார் தெரியுமா?
1. வயோதிகத்திலே விபச்சாரம் செய்தவன். பாலியல் குற்றம் புரியும் கிழவன்.
2. இரண்டாவது, பொய் பேசக்கூடிய அரசன்.
3. மூன்றாவது, பெருமை அடிக்கக்கூடிய ஏழை.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 107.
அல்லாஹ்வின் அடியார்களே, இந்த பொய்யை எல்லா நிலைகளிலும் தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் சொல்லிக் கொடுக்கக்கூடிய வழிகாட்டுதல் என்ன? விளையாட்டுக்கு கூட, வேடிக்கைக்கு கூட பொய் பேசக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூற அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் அபூ தாவூத் பதிவு செய்கின்றார்கள்.
أنا زعيمٌ ببيت في ربض الجَنَّة لمن ترَك المراء وإنْ كان مُحقًّا، وببيتٍ في وسط الجنة لمن ترَك الكذب وإنْ كان مازحًا، وببيتٍ في أعلى الجنة لمن حسَّن خُلُقَه
நான் சொர்க்கத்தினுடைய தோட்டத்திலே, சொர்க்கத்தினுடைய ஓரத்திலே, நான் ஒரு வீட்டுக்கு உங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
விதண்டாவாதம் செய்யாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். நீங்கள் சத்தியத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் உண்மையில் இருந்தாலும் சரி. ஒருவர் உங்களிடத்திலே விதண்டாவாதத்திற்கு வந்தால் ஒதுங்கி விடுங்கள்.
நான் உங்களுக்காக சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். யாருக்கு தெரியுமா? யார் விளையாட்டுக்கு கூட, வேடிக்கைக்கு கூட, தமாஷுக்கு கூட பொய் பேசாமல் இருக்கிறாரே அவருக்கு நான் சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
நான் சொர்க்கத்தில் உயர்ந்த இடத்திலே வீட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். யாருக்கு? யாருடைய குணம் எல்லாம் அழகிய குணம் ஆகிவிட்டதோ அவருக்கு.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4800.
எப்பேர்ப்பட்ட ஒரு அழகிய அந்த நற்சான்றிதழை அல்லாஹ்வுடைய தூதர் வழங்குகிறார்கள். ஒருவர் உண்மையாளர் தான். ஆனால் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. எதிரில் இருப்பவன் பொய்யன் என்று தெரிகிறது, மாற்றி பேசுகிறான் என்று தெரிகிறது. அவனை விட்டு அழகிய முறையில் விலகிக் கொள்கிறார். சொர்க்கத்தின் ஓரத்திலே அவருக்கு ஒரு வீடு.
ஒருவர் விளையாட்டுக்கு கூட பொய் பேசுவதில்லை அந்த அளவுக்கு பேணுதலோடு இருக்கிறார். அவருக்கு சொர்க்கத்தின் நடுவிலே.
ஒருவரோ தன்னுடைய குணத்தை எல்லாம் நற்குணமாக அழகிய குணமாக ஆக்கிக் கொள்கிறார் அவருக்கு சொர்க்கத்தின் உயர்ந்த இடத்திலே அல்லாஹ்வின் தூதர் ﷺ வீட்டுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அந்த மனிதர்களை குறித்து எச்சரிக்கை செய்தார்கள். யார் அவர்கள்? விளையாட்டுக்காக பொய் பேசி மக்களை சிரிக்க வைக்கின்றார்கள் அல்லவா, சிரிப்புக்காக பொய் பேசுகிறார்கள் அல்லவா.
ரசூலுல்லாஹ் ﷺ சொன்னார்கள்:
وَيْلٌ للذِي يُحَدِّثُ بِالحَدِيثِ لِيُضْحِكَ بِهِ القَوْمَ، فَيَكْذِبُ، وَيْلٌ لَهُ، وَيْلٌ لَهُ
நாசம் உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், அந்த மனிதனுக்கு. அவன் மக்களிடத்திலே பேசுகிறான், செய்திகளை சொல்கிறான், மக்களை சிரிக்க வைப்பதற்காக. அதற்காக அவன் பொய் பேசுகிறான். அவனுக்கு நாசம், அவனுக்கு நாசம் உண்டாகட்டும் என்று ஒன்றுக்கு மூன்று முறை அல்லாஹ்வின் தூதர் ﷺ எச்சரிக்கை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2315.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே, இந்த பொய் என்பது அல்லாஹ்வின் மீது பலர் துணிந்து மார்க்கத்திலே பொய் சொல்லி விடுகின்றார்கள். அல்லாஹ்வுடைய சட்டத்தில் இல்லாததை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீது பொய் சொல்லி விடுகின்றார்கள். அவர்கள் சொல்லாததை எல்லாம்.
இன்று மக்கள் இந்த பித்அத்துகள், அனாச்சாரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்கின்றார்களே, அவர்களிலே பெரும்பாலானவர்களை பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய அந்த பித்அத்துகளுக்கு, அனாச்சாரங்களுக்கு அவர்கள் பயன்படுத்தக் கூடியவை எல்லாம் கால ரசூலல்லாஹ் என்று சொல்லுவார்கள். கால அபூபக்கர் என்று சொல்லுவார்கள்.
எதற்கு? அவர்கள் செய்யக்கூடிய அந்த சடங்குகளை மக்களுக்கு மத்தியிலே பரப்புவதற்கு. அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள் என்று சொல்வார்கள். எந்த ஹதீஸ் கிதாபுகளிலும் இருக்காது. பொய்யை அவ்வளவு துணிவாக கலந்து பேசுவார்கள்.
அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு மௌலூது ஓதினார்கள் என்று சொல்லுவார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு மீலாத் நபி நடத்தினார்கள் என்று சொல்லுவார்கள். ஹசன் பசரி மௌலூது ஓதினார்கள் என்று சொல்வார்கள். எவ்வளவு துணிவாக பொய் பேச முடியுமோ அவ்வளவு துணிவாக பொய் பேசுவார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே, இந்த பொய் என்பது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒரு அருவருக்கத்தக்க குணம். அல்லாஹ்வுடைய சாபத்திற்குரிய குணம். நம்முடைய உள்ளத்தின் முகத்தின் ஒளியை போக்கக்கூடிய குணம். நம்முடைய ரிஸ்குடைய பரக்கத்துகளை எடுத்து விடும். நம்முடைய வாழ்க்கையின் பரக்கத்தை எடுத்து விடும்.
ஒரு மனிதன் பொய் பேசி அல்லாஹ்விடத்திலே மதிப்பை இழந்து விட்டால் பிறகு அந்த மனிதனுக்கு அல்லாஹ்வின் நல்லடியார்களிடத்திலே எப்படி அழகிய நிரந்தரமான கண்ணியம் கிடைக்கும்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இருக்கிறதே, பொய்யை அவ்வளவு ஒரு அருவருப்பான குற்றமாக கருதுகிறது.
இமாம் அஹ்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி வருகிறது. ஒரு முஸ்லிமிடத்திலே எவ்வளவோ கெட்ட குணங்கள் இருக்கலாம். ஆனால் அவன் பொய்ப்புறம் பேசக்கூடியவனாக இருக்க மாட்டான். அவன் பொய் பேசக் கூடியவனாக மோசடிக்காரனாக துரோகியாக இருக்க மாட்டான்.
அல்லாஹ்வின் அடியார்களே, இந்த பொய் என்ற இந்த குணத்தை குறித்து நாமும் எச்சரிக்கையாக அச்ச உணர்வோடு இருக்க வேண்டும். நாம் பேசிய பேச்சுகளிலே பொய் கலந்ததற்காக தனியாக அல்லாஹ்விடத்திலே தவ்பா செய்ய வேண்டும். இஸ்திஃபார் செய்ய வேண்டும். இது பெரும் பாவம். குறிப்பாக இதற்காக நாம் தவ்பா இஸ்திக்ஃபார் செய்ய வேண்டும். அது போன்று நம்முடைய வளரும் தலைமுறை நம்முடைய சந்ததிகள் நம்முடைய பிள்ளைகளுக்கு இந்த குணம் இந்த அருவருப்பான குணத்தை பற்றிய எச்சரிக்கையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு கூட்டத்தை நாம் வெறுத்தால் கூட அவர்களுடைய கொள்கையால் அல்லது அவர்களால் நமக்கு ஏற்படக்கூடிய தீமையினால், அவர்கள் மீது கூட அவதூறு சொல்வதற்கு, அவர்கள் மீது கூட பொய் சொல்வதற்கு, அவர்கள் மீது கூட அவர்களிடம் இல்லாததை இட்டு கட்டுவதற்கு நமக்கு அல்லாஹ்வுடைய மார்க்கம் அனுமதிக்கவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு உண்மையான நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது.
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா என்னையும், உங்களையும் சத்தியவான்களோடு சேர்த்து வைப்பானாக! பொய் என்ற இந்த கெட்ட குணத்திலிருந்து அல்லாஹு தஆலா நம்மை சுத்தப்படுத்துவானாக! அல்லாஹ் விரும்பிய ஒவ்வொரு நற்குணத்தை கொண்டு அல்லாஹ் நம்மை அலங்கரிப்பானாக! அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் வெறுத்த ஒவ்வொரு கெட்ட குணத்திலிருந்தும் கெட்ட செயலிலிருந்தும் அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும் தூரமாக்குவானாக! பரிசுத்தப்படுத்துவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு: (1)
أنَّ امْرَأَةً قالَتْ: يا رَسولَ اللَّهِ، إنَّ لي ضَرَّةً، فَهلْ عَلَيَّ جُناحٌ إنْ تَشَبَّعْتُ مِن زَوْجِي غيرَ الذي يُعْطِينِي؟ فقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: المُتَشَبِّعُ بما لَمْ يُعْطَ كَلابِسِ ثَوْبَيْ زُورٍ. الراوي : أسماء بنت أبي بكر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 5219 | خلاصة حكم المحدث : [صحيح]
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொண்டால், அது குற்றமாகுமா?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5219.
குறிப்பு: (2)
وروى البخاري عن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم في حديث الرؤيا: ((انْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ، ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الجَانِبِ الآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الجَانِبُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ المَرَّةَ الأُولَى))، قَالَ: ((قُلْتُ: سُبْحَانَ اللهِ مَا هَذَانِ؟))، قَالَا: ((إِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ، فَيَكْذِبُ الكَذْبَةَ تَبْلُغُ الآفَاقَ الراوي : سمرة بن جندب | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1386 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه مسلم (2275) مختصراً
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/