HOME      Khutba      ஆணவமும், அகந்தையும் | Tamil Bayan - 1025   
 

ஆணவமும், அகந்தையும் | Tamil Bayan - 1025

           

ஆணவமும், அகந்தையும் | Tamil Bayan - 1025


ஆணவமும், அகந்தையும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஆணவமும், அகந்தையும்
 
வரிசை : 1025
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 19-12-2025 | 28-06-1447
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை காரியங்களில் மிக கெட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் : 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு, தக்வாவையும் இறையச்சத்தையும் கடைப்பிடித்து வாழுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழுமாறும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கண்ணியப்படுத்துமாறும், அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணுமாறும், அல்லாஹ்வும் , அல்லாஹ்வுடைய தூதரும் ﷺ தடுத்த ஒவ்வொரு சிறிய பெரிய பாவத்திலிருந்தும், ஒவ்வொரு வெறுக்கத்தக்க குணத்திலிருந்தும் விலகி இருக்குமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு தஆலா நம்மையும், நமது பெற்றோரையும், முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவரையும் மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா நமது உள்ளங்களை தூய்மைப்படுத்துவானாக! நமது உள்ளங்களுக்கு நேர்வழியை தந்தருள்வானாக! அல்லாஹ்வை பயந்து, அவனை நேசித்து, அவனுடைய மார்க்கத்தை மதித்து நடக்கக்கூடிய அல்லாஹ்வின் அடியார்களுக்கு உதவி உபகாரங்கள் செய்யக்கூடிய, அல்லாஹ்வுடைய அடியார்களோடு பணிவோடும், அன்போடும் நடந்து கொள்ளக்கூடிய நன்மக்களில் என்னையும் உங்களையும், நமது சந்ததிகளையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அன்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சில அமர்வுகளில் நற்குணங்களை பற்றி நாம் நினைவூட்டி வருகின்றோம். நம்முடைய முக்கியமான தலைப்பு சூரத்துல் கஹ்ஃப் உடைய படிப்பினைகள் பாடங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய இடைவெளி எடுத்து நற்குணங்களை நினைவூட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சென்ற இரண்டு ஜுமுஆக்களிலும் நற்குணங்களில் சில முக்கியமான செய்திகளை நாம் பார்த்தோம்.
 
அந்தத் தொடரில் இன்றும் ஒரு முக்கியமான சட்டத்தை, மார்க்க ஒழுக்கத்தை, உயர்ந்த பண்பை நாம் அறிய இருக்கின்றோம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு முஸ்லிம் எப்போதும் பணிவு உள்ளவனாக இருக்க வேண்டும். அடக்கமானவனாக இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமிடத்தில் தற்பெருமை பேசுவதும், தன்னை புகழ்வதும், தன்னை தானே உயர்த்திக் கொள்வதும், தன்னைத் தானே பீற்றிக் கொள்வதும் இருக்கக் கூடாது. அல்லாஹு தஆலா இறையச்சம் யாரிடம் இருக்கிறது என்பதை அவன் அறிந்தவன்.
 
فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى
 
ஆகவே, (நீங்கள் தூய்மையானவர்கள் என்று) நீங்களே உங்களை உயர்வாக பேசிக்கொள்ளாதீர்கள்! இறையச்சமுள்ளவர்ளை அவன் மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 53:32)
 
எப்பேர்பட்ட நபி! ஆட்சி அதிகாரத்திலும் பணிவு. தீமைகளுக்கான, பாவங்களுக்கான சூழ்நிலைகள் இருந்தும் தன்னை பாதுகாத்துக் கொண்ட  யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்கிறார்கள்;
 
وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ
 
“நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்). (அல்குர்ஆன் 12:53)
 
அல்லாஹ்வின் அடியார்களே! மனிதன் தன்னை போற்றிக் கொள்வதற்கு, தன்னை பெருமைப்படுத்தி கொள்வதற்கு என்ன இருக்கிறது?
 
அஹ்னஃப் இப்னு கைஸ் ரஹிமுல்லாஹ் பெரிய தாபியீ. பெரிய அறிஞர். மார்க்கத்தை புரிந்த அவர்கள். என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.
 
இன்று மனிதர்கள் சர்வ சாதாரணமாக பெருமை அடிக்கின்றார்கள். தற்புகழ்ச்சி கொள்கிறார்கள். இரண்டு முறை சிறுநீர் வெளியேறக்கூடிய அந்த இடத்திலிருந்து வெளியேறிய ஒரு மனிதன் எப்படி பெருமை அடிக்க முடியும்? எதை வைத்து பெருமை கொள்வான் அவன்? 
 
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள்; பிறரிடம் இல்லாதது உன்னிடத்தில் இருக்கிறது என்று நினைத்தால் (அது அழகோ, அறிவோ, படிப்போ, கல்வியோ, ஆடையோ, செல்வமோ) அது தற்புகழ்ச்சி, தற்பெருமை.
 
தன்னைத்தானே பார்த்து ஆஹா இது என்னிடத்திலே இருக்கிறது. அவனிடத்திலே அது இல்லை. அவனை விட நான் உயர்ந்தவன் என்று நினைப்பது. 
 
கலீஃபா உமருல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்; இந்த பெருமை அடைகிறவர்கள் மனதால் பலவீனமானவர்கள். அவர்கள் தங்களது உள்ளத்திலே, தங்களுடைய இழித்தன்மையை, தங்களுடைய கேவலத்தை, தங்களுடைய பலவீனத்தை உணருகிறார்கள். மட்டமான நிலையை  புரிகிறார்கள். பிறகு, பயந்து கொண்டு மக்கள் தன்னை மட்டமாக நினைத்து விடுவார்களோ என்பதற்காக அவர்கள் தங்களை பெருமைப்படுத்தி காட்டுகின்றார்கள்.
 
என்ன அர்த்தம்? யாரிடத்திலே நிறைவும், உயர்வும் இருக்கிறதோ அவர்கள் பெருமை அடிக்க மாட்டார்கள். பெருமை அடிக்கின்றார்கள் என்றால் அவர்கள் மட்டமானவர்கள். தங்களுடைய மட்டமான அந்த தன்மையை மறைப்பதற்கு பெருமையை வெளிப்படுத்தி தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுக்கு பிடிக்காத மிக கெட்ட குணம் இந்த பெருமை. அல்லாஹு தஆலா வெறுக்கின்ற ஒரு குணம். நபிமார்கள் வெறுத்த குணம். நல்லோர் வெறுத்த குணம். 
 
அல்லாஹு தஆலா நபிமார்களை இந்த குணத்திலிருந்து பரிசுத்தப்படுத்தி இருந்தான். நபிமார்களின் வழித்தோன்றார்களை அல்லாஹு தஆலா இந்த குணத்தில் இருந்து பரிசுத்தப்படுத்தி இருக்கின்றான்.
 
இந்தப் பெருமை என்ன செய்யும்? ஒரு மனிதன் பாவம் செய்தால் அவனிடத்திலே பணிவும், அவனிடத்திலே தன்னடக்கமும் இருக்குமேயானால் அவன் தவ்பாவின் பக்கம் விரைவான்.
 
ஒரு மனிதனிடத்திலே பெருமை இருக்குமேயானால், ஆணவம் இருக்குமேயானால் அவன் ஒருபோதும் தனது தவறை திருத்திக் கொள்ள மாட்டான்.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களை  வழி கெடுத்த இப்லீஸ் உதாரணத்தைப் போன்று. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தவறு செய்தார்கள். பயம் இருந்தது, பணிவு இருந்தது. அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து மீண்டு விட்டார்கள். இப்லீசும் தவறு செய்தான். இப்லீஸும் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறினான். ஆனால், அவனிடத்திலே பெருமை இருந்தது. நிராகரிப்பாளனாக ஆகிவிட்டான். சபிக்கப்பட்டவனாக ஆகிவிட்டான். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹு தஆலா அவனுடைய திருக்குர்ஆனிலே கூறுகிறான்.
 
سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ 
 
நியாயமின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை என் அத்தாட்சி(களை விட்டும் என் வசனங்)களை விட்டும் திருப்புவேன். (அல்குர்ஆன் 7:146)
 
யார் பெருமை அடிக்கின்றார்களோ, இந்த பூமியில் அநியாயமாக நடந்து கொள்கிறார்களோ அவர்களை என்னுடைய வசனங்களில் இருந்து நான் திருப்பி விடுவேன். ஒரு பக்கம் பெருமையும், அந்த  பெருமை இருக்கும்பொழுது, அந்த பெருமை சேரும் போது, அதோடு பிற மக்கள் மீது அக்கிரமும் அநியாயம் செய்வதும் சேர்ந்துவிடும்.
 
அல்லாஹு தஆலா ஃபிர்அவ்ன் பற்றி சொல்லும்போது, அவன் பெருமை அடிப்பவனாக இருந்தான். அத்தோடு அக்கிரமம், அநியாயம், எல்லை மீறக் கூடியவனாக இருந்தான் என்று குறிப்பிடுகின்றான்.
 
ஒரு அரசனிடத்திலே பெருமை குடி கொள்ளும்போதுதான் அவன் சர்வாதிகாரம் உடையவனாக, அக்கிரமக்காரனாக, அநியாயக்காரனாக, அழிச்சாட்டியகாரனாக மாறுகின்றான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த பெருமை ஒரு மனிதனை சொர்க்கத்தில் இருந்து தடுத்து விடுகிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்; 
 
لا يَدْخُلُ الجَنَّةَ مَن كانَ في قَلْبِهِ مِثْقالُ ذَرَّةٍ مِن كِبْرٍ قالَ رَجُلٌ: إنَّ الرَّجُلَ يُحِبُّ أنْ يَكونَ ثَوْبُهُ حَسَنًا ونَعْلُهُ حَسَنَةً، قالَ: إنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الجَمالَ، الكِبْرُ بَطَرُ الحَقِّ، وغَمْطُ النَّاسِ
 
பெருமை அடிப்பவன் சொர்க்கத்திற்குள் செல்ல மாட்டான்.
 
பெருமை என்பது ஆடை அழகாக இருப்பதோ, தன்னுடைய பொருட்கள் அழகாக இருப்பதோ அல்ல. பெருமை என்பது என்ன? பிறரை மட்டமாக பார்ப்பது. சத்தியத்தை மறுப்பது. மக்களை கேவலமாக பார்ப்பது. 
 
அல்லாஹ்வின் தூதர் ﷺ சொன்னார்கள்;
 
பெருமை உள்ளவர் என்றால் அதற்குரிய அளவையும் சொல்கின்றார்கள். ஒரு சிறிய கருப்பு எறும்பு, ரொம்ப சின்ன எறும்பு, கண்ணால பார்த்தா தூரத்தில் இருந்து பார்த்தா தெரியாது. அந்த எறும்பினுடைய அளவுக்கு ஒருவருடைய உள்ளத்திலே பெருமை இருந்தாலும் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான்.
 
உடனே தோழர் ஒருவர் பயந்து கேட்டார். அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன்னுடைய ஆடை அழகாக இருக்க வேண்டும், தன்னுடைய காலணி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரே, இதுவும் பெருமையில் வருமா? 
 
ரசூலுல்லாஹி ﷺ சொன்னார்கள்; அல்லாஹ் அழகானவன். அழகானதை விரும்புகிறான். அழகாக இருப்பதை விரும்புகின்றான். பெருமை என்றால் என்ன? சொன்னார்கள், சத்தியத்தை நிராகரிப்பது. உண்மையை புறக்கணிப்பது.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 91.
 
உங்களுக்கு ஒருவர் உபதேசம் செய்தால், உங்களுக்கு ஒருவர் இது ஹராம் என்று உங்களை தடுத்தால் உடனே கேட்டுக் கொள்ள வேண்டும். இது ஒரு ஃப்ர்ள். நீங்கள் இதை பாழாக்குகிறீர்கள். இதை நீங்கள் விடுகிறீர்கள். இதை வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், உடனே கட்டுப்பட வேண்டும். உங்களுடைய செயலில் இது ஹராம் இதை விட்டு விடுங்கள் என்று சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
மார்க்கத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டு உபதேசம் செய்யும்போது யார் மறுக்கிறார்களோ அது பெருமையின் அடையாளம்.  பார்ப்பவர்களை எல்லாம் மட்டமாக பார்ப்பது. 
 
இன்று பலருக்கு இது ஒரு பெரிய மன நோயாக ஆகிவிட்டது. கொஞ்சம் காசு பணம் வந்துவிட்டால், கொஞ்சம் டிகிரி கூடிவிட்டால், கொஞ்சம் வீடு பெரிய வீடாக வந்துவிட்டால், இப்படி ஏதாவது ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொண்டால் மனிதனுடைய அஹ்லாக் அவனுடைய குணமே மாறிவிடுகிறது. பார்ப்பவர்களை எல்லாம் அப்படியே ஏளனமாக தன்னைவிட குறைவானவர்களாக பார்ப்பது, பேசுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது, அவர்களை இழிவு படுத்தும் விதமாக பேசுவது, அவர்களை ஏளனமாக பேசுவது, அவர்களுடைய மரியாதை கெடும்படியாக அவர்களை பரிகாசம் செய்வது.
 
பொதுவாக நண்பர்களுக்குள் பரிகாசம் செய்வது ஒரு ஹலாலான தமாஷ். அது வெறுக்கப்பட்டது அல்ல. ஆனால், ஒருவருடைய கண்ணியத்தை சிதைக்கும் விதமாக, ஒருவருடைய மரியாதையை போக்கும் விதமாக ஒருவரை மட்டப்படுத்தும் விதமாக தமாசு செய்வது இது பெருமையின் அடையாளம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
இந்த உலகத்தில் பெருமை அடித்து கொண்டிருந்தவர்கள் மறுமையிலே எவ்வளவு மட்டமாக இருப்பார்கள். எவ்வளவு அல்லாஹ்விடத்திலே கேவலப்படுத்தபடுவார்கள் என்பதை அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லிக் காட்டினார்கள்.
 
பார்க்க மனிதர்களாக தான் இருப்பார்கள். ஆனால் நரகத்திலே தள்ளுவதற்கு முன்பாக இந்த உலகத்திலே பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை மஹ்ஷர் மைதானத்திலே அவ்வளவு குறுகிய ஒரு சிறிய எறும்பை போன்ற  சின்ன ஒரு உருவத்தில் அல்லாஹு தஆலா ஆக்கி விடுவான். மக்கள் எல்லாம் அவர்களை மிதிப்பார்கள். பொருட்படுத்த மாட்டார்கள். (குறிப்பு:1)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2492.
 
எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! இது ஒரு மிகப்பெரிய கேவலம். யாருக்கு? பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு. மஹ்ஷர் மைதானத்திலேயே ஆரம்பமாகிவிடும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அல்லாஹ் கூறுவதாக சொன்னார்கள்; 
 
قالَ اللَّهُ عزَّ وجلَّ : الكبرياءُ ردائي ، والعظمةُ إزاري ، فمَن نازعَني واحدًا منهُما ، قذفتُهُ في النَّارِ
 
பெருமை என்னுடைய போர்வை. மகத்துவம் என்னுடைய ஆடை. யார் இந்த இரண்டில் ஒன்றை என்னிடத்திலிருந்து பறிக்க போட்டி போடுகின்றார்களோ அவர்களை நரகத்தில் நான் வீசி எறிந்து விடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக ரசூலுல்லாஹி ﷺ கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4090. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா கொடுத்து இருக்கக்கூடிய நிஃமத்துகளை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்தலாம். உங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிகிறீர்கள். விருப்பமான பொருட்களை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால், இதை வைத்துக் கொண்டு பிறரை நீங்கள் மட்டமாக கருதக்கூடாது.
 
உங்களிடத்தில் இருப்பது பிறரிடத்தில் இல்லாததால் அவர் உங்களை விட தகுதியால் குறைந்தவர் என்று கருதக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை, உயர்வான பொருளை, சிறந்த பொருளை, விலை அதிகமான பொருளை பயன்படுத்தலாம். உங்களுக்கு அது பிடித்திருக்கின்றது அல்லது உங்களுக்கு அது தேவை அல்லாஹ்வுடைய நிஃமத் என்ற விதத்தில். 
 
ஆனால், அதை வைத்து பெருமை அடிப்பதற்காக, பெருமை பேசுவதற்காக, பிறரை மட்டமாக கருதுவதற்காக அதை நீங்கள் வைத்திருக்கிறீர்களேயானால் இது தண்டனைக்குரிய ஒன்றாக ஆகிவிடும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொல்லிக் காட்டினார்கள்;
 
بيْنَما رَجُلٌ يَجُرُّ إزارَهُ مِنَ الخُيَلاءِ، خُسِفَ به، فَهو يَتَجَلْجَلُ في الأرْضِ إلى يَومِ القِيامَةِ.
 
ஒரு மனிதன் ஒரு முழு ஆடையில், ரொம்ப அழகான உயர்ந்த ஆடையிலே வெளியே வருகிறான். அவனுடைய அந்த ஆடைகளை பார்த்து அவனுடைய நஃப்ஸ் அப்படியே பெருமிதம் படுகிறது. 
 
(ஆஹா எவ்வளவு உயர்ந்த ஆடை! எவ்வளவு காஸ்ட்லியான ஆடை! மக்களிடத்தில் இல்லாத இப்பேற்பட்ட ஆடை என்னிடத்தில் இருக்கிறது என்று பெருமைப்படுகின்றான். தலைகளை எல்லாம் நன்கு வாரிக் கொண்டு வெளியே வருகிறான். இந்த பெருமையினால் அவனுடைய நடை மாறிவிடுகிறது. அகம்பாவத்தின் நடை, ஆணவத்தின் நடை, தற்பெருமை கலந்த நடை.)
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள், இப்படி அவர் நடந்து செல்கையில் அல்லாஹ் அவனை அப்படியே பூமியிலே சொருகி கொண்டான். இன்று வரை அவன் பூமியிலே  அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3485.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இவையெல்லாம் சாதாரணமான பாவம் அல்ல.. தற்புகழ்ச்சி செய்து கொள்வதை, பெருமை பேசுவதை, மக்களை மட்டமாக கருதுவதை  மக்கள் இன்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் இது ஒரு ஆபத்தான குற்றம்.
 
நம்முடைய உள்ளங்களில் ஈமானுடைய சுவைகளை போக்கக்கூடியது. நம்முடைய இறையச்சத்தை கெடுக்கக் கூடியது. அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்க கூடியது. அல்லாஹ்வுடைய அன்பை நம்முடைய உள்ளத்தில் இருந்து எடுக்கக்கூடியது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
"ثلاث مهلكات: شح مطاع، وهوى متبع، وإعجاب المرء بنفسه" 
 
மூன்று குணங்கள் மனிதனை நாசமாக்கிவிடும். மூன்று குணங்கள் மனிதனை அழிவில் தள்ளிவிடும். 1. மனிதனுடைய நஃப்ஸில் இருக்கக்கூடிய கருமித்தனம், கஞ்சத்தனம். அலைபாயும் ஆசை, தன்னை உயர்வாக கருதுதல்
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 3861.
 
ஹதீஸின் விளக்கம் : அவன் விரும்புகிறான், நல்லது செய்ய வேண்டும், தர்மம் கொடுக்க வேண்டும், எதையாவது புண்ணியம் செய்ய வேண்டும் என்று. அவனது நஃப்ஸ் அவனை தடுக்கின்றது.
 
இப்போது என்ன செய்கின்றான்? நஃப்ஸுடைய பேச்சை கேட்டுக்கொள்கிறான். தன்னுடைய கையை மடக்கி கொள்கிறான். தன்னுடைய கையை சுருக்கி கொள்கிறான்.  தர்மம் செய்வதில்லை. அவனுடைய நஃப்ஸில் இருக்கக்கூடிய உலோபித்தனம், கருமித்தனம், கஞ்சத்தனத்திற்கு அவன் கட்டுப்பட்டு விடுகின்றான்.
 
இது மிகப்பெரிய கெட்ட குணம். எல்லாருடைய உள்ளத்திலும் கண்டிப்பாக கொஞ்சம் கருமித்தனம் இருக்கும். கருமித்தனம் என்பது அது உள்ளத்திலே இருக்கக்கூடிய ஒன்று. நாம் அந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய கருமித்தனத்தை வெற்றி கொள்ள வேண்டும். அதை வெல்ல வேண்டும்.
 
நஃப்ஸ் விரும்பாது, நம்முடைய உறவுகளுக்கு கொடுப்பதற்கு, ஏழைகளுக்கு கொடுப்பதற்கு, நாம் சிரமப்பட்டு சம்பாதித்த செல்வத்தில் ஏழைகளை கூட்டாக்கிக் கொள்வதற்கு. நம்மிடத்திலே வேலை செய்யக்கூடிய பணியாளர்களுக்கு தாராளமான செலவு செய்வதற்கு நஃப்ஸ் அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ளாது.
 
ஆனால், கல்பு சொல்லும்; கொடுக்கலாம் அல்லவா? செய்யலாம் அல்லவா? நம்முடைய அறிவு புத்தி சொல்லும்; அவனும் உன்னை போன்று சிரமப்படக்கூடியவன் தானே, உன்னிடத்திலே இருக்கிறதே நீ கொடுத்தால் என்ன? கொடுத்தால் அல்லாஹ் கொடுப்பான் என்று வருகிறதே, கொடு என்று நம்முடைய ஈமான் அறிவு சொல்லும்.
 
நஃப்ஸ் சொல்லும்; எதற்கு தேவை? எதற்கு கொடுக்கணும்? ஏன் இவ்வளவு கொடுக்கணும்? இந்த நஃப்ஸானது அவனை அப்படியே பின்னுக்கு இழுக்கும். அந்த நேரத்திலே மனிதன் நஃப்ஸுக்கு கீழ்ப்படிந்து விடுவானேயானால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்.
 
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் அல்லாஹ்விடத்தில் உயர்ந்ததற்கு காரணம் என்ன? அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக அவர்கள் அனைத்தையும் கொடுத்தார்கள். நஃப்ஸுடைய கருமித்தனத்தை வென்றார்கள். முனாஃபிக்குகள் அவர்கள் தங்களுடைய நஃப்ஸுடைய கருமித்தனத்துக்கு கீழ்ப்படிந்தார்கள்.
 
அல்லாஹ்வின் பாதையிலே செலவழிப்பதிலிருந்து கைகளை மடக்கி கொண்டார்கள். அல்லாஹ் அவர்களை சபித்தான். நீங்கள் அல்குர்ஆனிலே சஹாபாக்களுடைய குணங்கள், முனாஃபிக்குகள் உடைய குணங்களைப் பட்டியல் போட்டால் இகலாஸ், ஈமான், தியாகங்கள், அதிலே முக்கியமான இடம் பிடிப்பது சஹாபாக்கள். 
 
அல்லாஹ்வுடைய செல்வத்தை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும், கருமித்தனம் இல்லாமல் செலவு செய்தார்கள். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு இன்னும் இருந்தாலும் கொடுப்போமே! , நாங்கள் மிச்சப்படுத்துவதை விட அல்லாஹ்வுடைய பாதையில் கொடுத்தது எங்களுக்கு  மிகப்பிரியமானது என்று அவர்கள் ஏங்கினார்கள்.
 
முனாஃபிக்குகள் கொடுக்கவும் மாட்டார்கள். கொடுத்தாலும் அற்பமாக கொடுப்பார்கள். பிறகு அதை சொல்லியும் காட்டுவார்கள். அல்லாஹு தஆலா முஃமினான சஹாபாக்களை அடையாளப்படுத்துகின்றான். முனாஃபிக்கானவர்களை அல்லாஹு தஆலா அடையாளப்படுத்துகின்றான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! சஹாபாக்கள் இடத்திலே நஃப்ஸை வென்ற கொடைத்தன்மை இருந்தது.  முனாஃபிக்குகள் இடத்திலே இந்த நயவஞ்சகத்தோடு கருமித்தனம் இருந்தது. 
 
ஹதீஸின் தொடர் : மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
2. மன இச்சை, நஃப்ஸ் எதை கேட்டு  ஆசைப்படுகின்றதோ உடனே அதை செய்து விடுவது. 
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 3861.
 
நம்முடைய நஃப்ஸ் அது விரும்பத்தான் செய்யும். அது ஆசைப்படத்தான் செய்யும். அதை நாம் எச்சரிக்க வேண்டும். அதை நாம் அடக்க வேண்டும். நஃப்ஸ் என்பது எப்படி என்று சொன்னால், அது ஒரு கால்நடையை போல. கால்நடையை பொருத்தவரை அது எப்படி? அதற்கு பசுமையாக  தெரிவதில் மேய வேண்டும். அவ்வளவுதான். அது நம்முடைய ஓனருடைய நிலமா? அல்லது இன்னொருத்தருடைய நிலமா? அல்லது பொதுவான நிலமா என்றெல்லாம் அதற்கு தெரியுமா? அதையெல்லாம் அது பார்க்காது. 
 
அந்த கால்நடையின் உரிமையாளன் தான் அதை கட்டுப்படுத்த வேண்டும். இது என் நிலம். இதுல மேஞ்சுக்க. அடுத்தவன் நிலத்தில போய் மேஞ்சா அடி உனக்கும் விழும்,  எனக்கும் விழும். இது பொது நிலம் யார் வேணாலும் மேயலாம் மேஞ்சுக்க என்று.
 
அன்பு சகோதரர்களே! நம்முடைய நஃப்ஸ் அப்படித்தான். அது ஒன்றைப் பார்த்து அதற்கு கவர்ச்சி வந்துவிட்டால் உடனே அதை அடைய ஆசைப்படும். நம்முடைய கல்பு, நம்முடைய ஈமான், நம்முடைய யகீன் அதற்கு புத்திமதி சொல்ல வேண்டும். இது உனக்கு ஹலால் அனுபவித்துக் கொள். இந்த அளவு ஹலால் அனுபவித்துக் கொள். இது உனக்கு ஹராம் வேண்டாம் என்று அந்த நஃப்ஸை அவர் தடுக்க வேண்டும்.
 
ஹதீஸின் தொடர் : மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்;
 
3. மனிதன் தன்னைத்தானே பார்த்து பெருமிதம் கொள்வது. 
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 3861.
 
நான் பெரிய படிப்பு படித்தவன், நான் ரோம்ப அழகானவன், நான் பெரிய பணக்காரன், எனக்கு நிறைய அறிவு இருக்கிறது, எனக்கு நிறைய மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று தன்னைத்தானே பார்த்து பெருமிதம் கொள்வது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ சொன்னார்கள்; 
 
அற்புதமான ஹதீஸ். சொர்க்கமும் அல்லாஹ் உடைய படைப்புதான். நரகமும் அல்லாஹ்வுடைய படைப்புதான். சொர்க்கம் நரகத்திடம் சண்டை போட்டது. நரகம் சொர்க்கத்திடத்தில் சண்டை போட்டது. வாக்குவாதம் செய்தது. அல்லாஹ்வுடைய படைப்பில் நான் சிறந்தவனா? நீ சிறந்தவனா என்று. 
 
சொர்க்கம் சொன்னது; என்னிடத்திலே பணிவானவர்களும், முஃமின்களும் இருக்கிறார்கள் என்று. நரகம் என்ன சொன்னது தெரியுமா? பெருமை அடிப்பவர்களும், அக்கிரமம், அநியாயம் செய்பவர்களும், பிறருடைய உரிமையிலே எல்லை மீறுபவர்களும் என்னிடத்தில் இருக்கின்றார்கள் என்று. (குறிப்பு:2)
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2846.
 
அநியாயம் செய்பவர்களுக்கு, பெருமை அடிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இல்லை. சொர்க்கத்தில் இடம் யாருக்கு இருக்கிறது? பணிவு உள்ளவர்களுக்கு பயந்தவர்களுக்கு.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ﷺ தங்களது சஹாபா சமுதாயத்தை அப்படித்தான் உருவாக்கினார்கள். அவர்களிடத்திலிருந்த குலப் பெருமையை, மொழிப் பெருமையை, நிறப்பெருமையை, தேச பெருமையை அனைத்தையும் காலுக்கு கீழே குழி தோண்டி புதைத்தார்கள். 
 
தங்களுடைய இறுதி பேருரையிலே அரேபிய குலத்தவர்கள் உயர்ந்த வம்சங்கள் எல்லாம் ஒன்று கூடி இருக்கும் பொழுது இத்தனை நூறு ஆண்டுகளாக பின்பற்று வந்த குலப்பெருமையை ஒரே வார்த்தையிலே காலுக்கு கீழே போட்டு புதைத்தார்கள்.
 
أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى
 
ஒரு அரபிக்கு அரபி அல்லாதவன் மீது எந்த தனி சிறப்பும் இல்லை. ரோமர்கள், பாரசீகர்கள் அவர்களுக்கு ஒரு பெருமை இருந்தது. சொன்னார்கள், அஜமிகளுக்கும் அரபிகளுக்கும் மேலாக தனி சிறப்பும் இல்லை.
 
வெள்ளையருக்கு கருப்பர் மீது தனி சிறப்பும் இல்லை. கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் மீது தனி சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. அல்லாஹ்வுடைய பயம், ஒழுக்கம், தக்வா, ஈமான் இதுதான் ஒரு மனிதனை கண்ணியப்படுத்தக் கூடியது.
 
அறிவிப்பாளர் : அபூ நழ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23489.
 
அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களின் சமூகத்தில் குறைஷி வம்சத்தை சேர்ந்த அபூபக்ரும் இருந்தார்கள். எத்தியோப்பிய அடிமையாக இருந்த பிலாலும் இருந்தார்கள். எல்லா தோழர்களையும் சமமாக அல்லாஹ்வுடைய தூதர் ﷺ நடத்தினார்கள்.
 
ஒவ்வொருத்தரும் இந்த இஸ்லாமுக்காக, தீனுக்காக செய்த தியாகத்தை கொண்டுதான் அல்லாஹ்விடத்திலே கண்ணியத்தை, மதிப்பை பெற்றார்கள் தவிர யாரும் தங்களுடைய வம்சத்தை கொண்டோ, தங்களுடைய செல்வத்தை கொண்டோ அல்ல. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்முடைய சமூகம் மிகப் பெரிய ஒரு இழிவான நிலைக்கு அல்லது ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு இந்த பெருமை ஒரு காரணம். இந்த பெருமையினால் தான்  நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தினுடைய ஏழைகளிடமிருந்து செல்வந்தர்கள் தூரம் ஆகிவிட்டார்கள். வீடுகளால் தூரமாகி விட்டார்கள். தெருக்களால் தூரம் ஆகிவிட்டார்கள். செல்வந்தர்கள் வசிப்பதற்கு என்று தனி தெருக்கள், அவர்களுக்காக தனி வீடுகள், ஏழைகள் அவர்களை அணுக முடியாது, ஏழைகள் அவர்களை பார்க்க முடியாது, ஏன் தெரியுமா? இன்னொரு மோசமான செயல், பள்ளியையும் பிரித்துக் கொண்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளையும் பிரித்துக் கொண்டார்கள். ஏழை முஹல்லாக்களில் இருக்கக்கூடிய பள்ளிவாசலுக்கு செல்வந்தர்கள் தொழ செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய மனநிலை வந்துவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
சமூகத்திலே சபைகளிலே கலந்து உட்கார மாட்டார்கள். அல்லாஹு தஆலா எப்பேர்ப்பட்ட ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டான். யோசித்துப் பாருங்கள்! இந்த செல்வம் இருக்கிறதே இதோடு சேர்த்து பணிவும், அடக்கமும் வரவில்லை என்றால் இது ஒரு மனிதனை மோசமாக்கிவிடும். 
 
கிப்ர், ஆணவம், அகந்தை, தற்பெருமை ஏன் தனது மனைவி மக்களிடத்தில் கூட நிம்மதியாக வாழ முடியாது. தன்னுடைய சொந்த அண்ணன் தம்பிகளிடத்திலே கூட அவனால் மனம் விட்டு பேச முடியாது. அவர்களோடு அந்யோன்யமாக, பிரியமாக, செல்லமாக, அன்பாக, பாசமாக, உறவாட முடியாது.
 
அந்த பெருமை அவர்களை அப்படி தள்ளிவிடும். எத்தனை சகோதரர்கள் செல்வம் வந்ததற்கு பின்னால் கொஞ்சம் வசதி வந்ததற்கு பின்னால் தங்களுடைய சகோதரர்களை புறக்கணிக்கின்றார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! பெருமை என்பது அவ்வளவு மோசமான குணம். தற்புகழ்ச்சி செய்து கொள்வது. தன்னை தானே உயர்வாக கருதி மக்களை மட்டமாக பார்ப்பது, இது அல்லாஹ்வுடைய பார்வையிலே வெறுக்கப்பட்ட அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் சபிக்கப்பட்ட ஒரு மோசமான குணம். 
 
அல்லாஹு தஆலா இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! பரிசுத்தப்படுத்துவானாக! நமது பிள்ளைகளுக்கு இதை நாம் சொல்லித் தர வேண்டும். அவர்களுக்கு பணிவை பழக்கப்படுத்த வேண்டும். தற்பெருமை புகழ்ச்சி பேசுவதில் இருந்து அவர்களை நாம் கண்டிக்க வேண்டும். எச்சரிக்க வேண்டும். எல்லா மக்களிடத்திலிருந்தும் மனிதர்கள் என்ற அடிப்படையில் சமமாக, அன்பாக, பாசமாக, கருணையாக, பணிவாக பழகுவதற்கு அவர்களுக்கு நாம் போதிக்க வேண்டும். பழக்கப்படுத்த வேண்டும் .அவர்களுக்கு முன்னால் நாமும் அப்படி நடந்து காட்டவேண்டும்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! பயிற்சி இல்லாமல், அதற்கான ஒரு பிரச்சாரம் இல்லாமல், அதற்கான ஒரு சீர்திருத்தம் இல்லாமல் எந்த ஒரு நற்குணமும் நமது சமுதாயத்தில் வராது. எந்த கெட்ட குணமும் சமுதாயத்தில் இருந்து தூரமாகாது. 
 
அல்லாஹு சுப்ஹானஹு வ தஆலா நம்மை நற்குணங்களை கொண்டு அலங்கரிப்பானாக! ஒவ்வொரு கெட்ட, தீய குணத்திலிருந்து அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது சந்ததிகளையும், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹு தஆலா பாதுகாப்பானாக! பரிசுத்தப்படுத்துவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு: (1)
 
يُحشَرُ المتَكَبِّرونَ يومَ القيامةِ أمثالَ الذَّرِّ في صُوَرِ الرِّجالِ يغشاهمُ الذُّلُّ من كلِّ مَكانٍ ، يُساقونَ إلى سجنٍ في جَهَنَّمَ يسمَّى بولُسَ تعلوهُم نارُ الأَنْيارِ يُسقونَ من عُصارةِ أَهْلِ النَّارِ طينةَ الخبالِ الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي الصفحة أو الرقم: 2492 | خلاصة حكم المحدث : حسن التخريج : أخرجه الترمذي (2492) واللفظ له، وأحمد (6677)
 
"பெருமைக்காரர்கள் மறுமை நாளில் மனிதர்களின் தோற்றத்தில், சிற்றெறும்புகளைப் போன்று ஒன்றுதிரட்டப்படுவார்கள். எல்லா இடங்களிலிருந்தும் இழிவு அவர்களைச் சூழ்ந்திருக்கும். 'பூலஸ்' என்றழைக்கப்படும் நரகத்திலுள்ள ஒரு சிறைச்சாலைக்கு அவர்கள் ஓட்டிச் செல்லப்படுவார்கள். நெருப்புகளுக்கெல்லாம் மேலான நெருப்பு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளின் பிழிவான சீழ் அவர்களுக்குப் புகட்டப்படும்."
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2492.
 
குறிப்பு: (2)
 
عن أبي سعيد الخدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ((احتَجَّتِ الجنةُ والنار، فقالت النار: فيَّ الجبَّارون والمتكبِّرون، وقالت الجنة: فيَّ ضُعفاءُ الناس ومساكينهم، فقضى الله بينهما: إنك الجنة رحْمتي أرحمُ بك من أشاء، وإنك النار عذابي أُعذِّب بك من أشاء، ولكليكما عليَّ مِلؤُها))؛ رواه مسلم - 2846
 
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது.
 
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்" என்றும், சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்" என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்" என்று சொன்னான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2846.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/